Pages

Tuesday, December 28, 1999

சிலம்பு மடல் 20

சிலம்பு மடல் - 20 மதுரை மாநகர்!
மதுரை:
ஊர்காண் காதை:

காவிரிக்கரையில் மாதவியைப் பிரிந்து, பின்னர் அக்காவிரி வாழ் சோழ நாட்டையும் பிரிந்து, தற்போது கண்ணகியையும், இவ்வையத்தையும் தன் கரையில் பிரியப் போகும் கோவலனை நினைத்துத்தான் வையை அழுதிருக்க வேண்டும்! அவ் வையை நதியைக் கடந்து மதுரை சேர்ந்ததும் கோவலன், காவுந்தி அடிகளிடம் தன் மனைவியைப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு நகர வாணிகம் பற்றியறிய புறப்படுகிறான்;

அதன்முன் கண்ணகிக்கு துன்பம் நேருமாறு நடந்து கொண்டதை எண்ணி கலங்குகிறான். ஊர் பெயர்ந்தாலே துன்பம்தான். ஆனால் இவனோ முன் பின் அறியா நாட்டுக்குள் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஏழ்மையாய் வந்து நிற்கிறான். முதன் முதலாய் வேற்று நாட்டுக்கு வாழப்போகும் மனிதன் இந்நாளும் அடையும் துன்பங்களைத்தான், அச்சங்களைத்தான் அன்று கோவலனும் பெற்றிருந்தான்.

வாழ இடம் இல்லை; பொருளீட்ட வகையில்லை! சுற்றி நிற்க சுற்றம் இல்லை!.

ஒரே ஒரு ஆறுதல் அவனுக்கு! அங்கும் அவன் பேசிய அதே மொழி.அதுவும் அன்னைத் தமிழ் நாடே! தமிழ் மட்டுமே அவனை அரவனைத்துக் கொண்டது.

இன்று, புலம் பெயர்ந்த தமிழர்களால், போய்வர தமிழருக்கு நாடிருப்பது போல!.

கோவல-கண்ணகி சோழ நாடு நீங்கி பாண்டிய நாடு சேர்ந்தபோதும் பின்னர் கண்ணகி மட்டும் மதுரை நீங்கி சேர நாடு சேர்ந்தபோதும் எங்கும் குடியுரிமைத் தேவைகள்(Passport, Visa, Immigraion ) இருந்திருக்கவில்லை!

இன்று அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் மற்றும் சில தூர கிழக்கு நாடுகள் கொண்டுள்ள புரிந்துணர்வைப்போல!

சேரமாயும், சோழமாயும் பாண்டியமாயும் இன்ன பிறவாயும் தமிழகம் அந்த காலத்தைய குறைந்த போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றவாறு பிரிந்திருந்தாலும் தமிழ்த்தேயமாய் இணைந்திருந்ததின் பயனே அது!

ஒரு நாள் நேரத்தில் உலகையே சுற்ற முடிந்த இந்த காலத்தில் உலகுவாழ் தமிழர்களை எங்கும் காணமுடிவது அதே தமிழ்த் தேயத்தை சிந்தையில் மலரச் செய்கிறது.

"காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத் தேயத்து ஆர்இடைஉழந்து
சிறுமை உற்றேன்! செய்தவத் தீர்!யான்
தொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்நிலை உணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி ஆகலின்
ஏதம் உண்டோ அடிகள்ஈங்கு' என்றலும் ......"

(அறியாத் தேயத்து=முன் பின் அறியா நாட்டில்)

என்று மேற்கண்டவாறு கோவலன் அடிகளிடம் வேண்ட; தீவினை ஊட்டும் (மற) செயல்களை நீக்கி அறச் செயல்களைச் செய்வீர் என்று "நாவென்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அறைந்து" அறத்துறை மாக்களாகிய நாங்கள் எவ்வளவு சொன்னாலும் உறுதியான அறிவில்லா மனிதர்கள் அதன்படி நடக்காமல் பின்னர் தீவினை வந்து சேர்ந்ததும் வருந்துகின்றனர் என்று அடிகளும் வருத்தப்படுகிறார்.

"கவுந்தி கூறும்; 'காதலி தன்னொடு
தவம்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்!
மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்
யாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்"

மேலும் அடிகள், "நீ மட்டும் அல்ல; உன் போல் பலர் தீச்செயல் காரணமாக மனைவியுடன் நாட்டை விட்டு வெளிப்போந்து துயருற்றனர்; நீ நாடு மாறி உறும் துன்பங்கள் போலவே இராமன் சீதையுடனும், நளன் தமயந்தியுடனும் நாடு நீங்கித் துயருற்றனர்! " என்று உரைத்தார்;

"தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்..."
(தயரதன் ஏவலால் சீதையுடன் காடு போன இராமன் )

"வல்லாடு ஆயத்து மண்அரசு இழந்து
மெல்இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்...."

(வல்=சூது; நளன் சூதாடி நாட்டைத் தோற்று
தமயந்தியுடன் காடு போனது )

ஒருபுறம் வருத்தம்; மறுபுறம் உற்சாகத்தோடு மதுரை மூதூரை உலாவிப் பார்க்கிறான் கோவலன். காண்கிறான் முதலில் பரத்தையர் வீதியை;

இக்காதையின் பாதிக்கு பரத்தையர் காதை என்று இளங்கோவடிகள் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பரத்தையரை ஆராய்வோர்க்கு திரளாகச் செய்திகள் உண்டு; புகார் பரத்தையரை மதுரை பரத்தையரோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.

காலை முதல் இரவு வரை பரத்தையரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கார், கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் அவர்களின் உடைகள் மற்றும் ஒப்பனை வேறுபாடுகளின் விளக்கம் பல செய்திகளைத் தருவதாக அமைந்திருக்கிறது.

மதுரை மாநகரில், பரத்தையர் வீதி, அரசப் பரத்தையர் வீதி, கலைஞர்கள் வாழ்ந்த இரு பெரும் வீதிகள், அங்காடி வீதி,மணிக்கல் வீதி, பொன் கடை வீதி, அறுவை வீதி (பருத்தி, எலி மயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட துணிகள் விற்கப்படும் வீதி), கூலவீதி (தானியங்கள், பாக்கு, மிளகு போன்றவை விற்கப்படும் வீதி), இவை யாவையையும் கோவலன் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் கண்ணகியும் காவுந்தியும் இருந்த புறஞ்சேரிக்கு மீள்கிறான்!

அனைத்து வீதிகளிலும், இந்த மணிக்கல் வீதியில் விற்கப்பட்ட ஒன்பது வகை மணிகள் பற்றிய குறிப்புக்கள் சிறப்புவாய்ந்தவை.

வயிரம்:

காகபாதம், களங்கம், விந்து, இரேகை என்ற நான்கு குற்றங்களும்
இன்றி, நுட்பமான முனைகளையும், நால்வகை நிறத்தையும், நிறை ஒளியையும் கொண்டவை வயிர மணிகள். வயிரத்தில் வகைகள் வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என நான்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.

"காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும்...."

மரகதம்:

கீற்று, மாலை, இருள் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பசுமையான நிறத்தையும், இளங்கதிரின் ஒளியை உடையது.

"ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்..."

மானிக்கம்:

பதுமம்(சிவப்புக்கல்) , நீலம், விந்தம்(குன்றுமணி நிறம்), படிதம்(கோவைப்பழ நிறம்) என்று நால்வகையான, விதிமுறை மாறாத மாணிக்க மணிகள்:

"பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்...."

புருடராகம்:

பூச மீனின் வடிவமும், பொன்னைத் தெளிய வைத்தைப் போன்ற நிறமும் கொண்டது:

"பூச உருவின் பொலம் தெளித்தனையும்"

வைடூரியம்:

குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி போலவும் தெளிந்த தேன்துளி போன்ற நிறத்தையும் கொண்டது:

"தீதுஅறு கதிர்ஒளித் தென்மட்டு உருவவும்"

நீலம்:

இருளைத் தெளிய வைத்தாற் போன்ற நீலமணிகள்.

"இருள் தெளித்தனையவும்....."

கோமேதகம்:

மஞ்சள் சிவப்பு என்ற இரு நிறங்கள் கலந்தது.

"இருவேறுரு உருவவும்......."

மேற்கண்ட மானிக்கம், புருடராகம்,வைடூரியம்,நீலம்,கோமேதகம் ஆகிய ஐமணிகளும், ஒரே பிறப்புடையது/தோற்றத்துடையது ஆனால் ஐந்து வேறுபட்டவனப்பினை உடையவை.

"ஒருமைதோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும்"

முத்து:

காற்று, மண், கல், நீர் என்பவற்றால் ஏற்பட்ட குற்றங்கள் சிறிதும் இல்லாமல், தெளிந்த ஒளியுடையனவும், வெள்ளியையும் செவ்வாயையும் (கோள்கள்) போல வெண்மையும் செம்மையும் உடையனவும், திரட்சியுடையவவுமான முத்துக்கள்.

"காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகன்என
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்.."

பவளம்:

நடுவே துளையுடையனவும், கல்லிடுக்கிற்பட்டு வளைந்தனவும், திருகுதல் பெற்றனவும் என்னும் குற்றங்கள் நீங்கிய கொடிப்பவளங்கள்.

"கருப்பத் துளைவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்..."

இப்படியான ஒன்பது வகை மணிகளும் ஆங்கு விற்கப்படுதலை கோவலன் கண்டான்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
28-திசம்பர்-1999

Wednesday, December 15, 1999

சிலம்பு மடல் 19

சிலம்பு மடல் - 19 மாதவியைப் புரிதல்! சுற்றம் உணர்தல்!
மதுரை:
புறஞ்சேரி இறுத்த காதை:

வேட்டுவக் குமரியின் கொற்றவைக் கோலம் நீங்கிய பின்னர் மதுரைசேர் நடையைத் தொடர்ந்தனர் கோவல-கண்ணகி-காவுந்தி அய்யை. கதிரவன் கடுமை அதிகம் ஆதலால் இரவின் மென்மையைக் கண்ணகியின் காலடிகளுக்குக் கொடுக்கும் பொருட்டு, கடந்தனர் காதங்களை இரவுகளில்; ஒரு காலை, சேர்ந்தனர் முப்புரிநூலோர் மட்டும் வாழ்ந்த ஊர்தனை.

பாதுகாப்பான இடமொன்றில் பெண்மணிகளை இருத்தி நீர் பெற்றுத் திரும்பச் செல்கிறான் கோவலன்! கண்டனன் தன்னைத் தேடித் திரிந்த கோசிகன் என்பானை!

கோசிகன் சொல்வான் கோவலனிடம்;

கோவல!

அரிய மாணிக்கத்தை இழந்து விட்ட பெரிய நாகம் சுருங்கிப்போய் கிடப்பது போல, உன் பெருஞ்செல்வத் தந்தையும் தாயும் முடங்கிப் போய்விட்டனர் உன்னைக் காணாமல்; அறிவாய்!

"இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்...."

உயிர் பிரிந்த உடலென்றாகிப்போயினர் உன் சுற்றத்தார்; உணர்வாய்!

"இன்உயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்...."

இராமனைப் பிரிந்து வாடிய அயோத்தி மக்களைப் போல புகார்வாழ் மக்கள் யாவரும் நின் பிரிவால் வருத்தமுற்றிருக்கின்றனர்;

"அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்....."

தான்தந்த திருமுகத்தை நீ வாங்கவும் மறுத்ததால் வாடிக்கிடக்கிறாள் மாதவி; வெறுத்தாளில்லை!

"என் கண்ணின் கருமணியான கோவலற்குக்" காட்டென மீண்டும் ஒரு முடங்கலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறாள்!

"கண்மணி அணையாற்குக் காட்டுக என்றே
மண்உடை முடங்கல் மாதவி ஈந்ததும்....."

என்று சொல்லி கோவலனிடம் மாதவியின் மடல்தனைத் தருகிறான் கோசிகன்!

மாதவிபால் அளவுகடந்த அன்பு வைத்திருந்த கோவலனுக்கு அவளின் சிறு துளி வார்த்தைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், சந்தேகத்தால் ஏற்பட்ட விளைவுகளினால்,

கோவலனைச் சுற்றிய தாய், தந்தை, காதலி, சுற்றம், மக்கள் என அனைவருக்கும் கோவலன் பால் இருந்த அன்பினால், அவன் பிரிவினால் ஏமாற்றமும் துன்பமும் நிகழ்ந்து விட்டிருக்கிறது.

அன்பிருந்தால்தானே ஒருவரின் பிரிவின்பால் பிறருக்குத் துன்பம் தரும்! அது இல்லாவிடில் பிரியும்வரை வாழ்ந்த வாழ்க்கை வண்டிப்பயண நட்புபோன்றதுதானே!

கண்ணகியைப் பிரிந்த, மாதவியையும் பிரிந்த இரு குற்றத்தை இவன் செய்தான். ஆனால் காதலியர் இருவரையும் சேர்த்து அவனை அறிந்தோர் யாவரும் அவன் பால் அன்பு காட்டுமளவிற்கு பண்பாளன்தான் கோவலன்!

பிரிந்து போன போழ்தும் பழைய தொடர்பை நினைத்துப் பேணுதல் நல்ல சுற்றத்தார் பண்பு என்பதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார்.

"பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள"
--குறள்

அந்த நல்ல சுற்றத்தைப் பெற்ற கோவலன் நல்ல பண்பாளனாகத்தான் இருந்திருக்கிறான்.

பொருள் கொடுத்து உதவல், இனியவை கூறல் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்ன இலக்கணத்தின்படி கோவலன் வாழ்ந்துதான் இருந்திருக்க வேண்டும்!

"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்,"
-- குறள்

இல்லையேல் அவன் பிரிவால் பெருஞ்சுற்றம் முழுமையும் ஏன் துயருற வேண்டும் ?

பெருஞ்செல்வப் பெற்றோர்கள் மற்றும் அன்பு காட்ட அடுக்கிய சுற்றத்தார் ஆயிரம் இருந்தும், தான் நொடித்துப் போனதும் உடுத்த உடுக்கையுடன் பொருள்தேட பிற நாடு சென்ற தன்மானம் படைத்தவன் கோவலன்!

பிறர் பொருள் நாடா பேராண்மையான்!

கோவலனின் மனம் இளகுகிறது! மாதவியின் மடலைப் படிக்குமளவிற்கு அவன் உறுதி தளர்கிறது!

தாம் ஏமாந்துவிட்டோ ம், பொருளிழந்து விட்டோ ம் என்று தாழ்வடைந்திருந்த மனத்திற்கு, தன் சுற்றம் பற்றி கோசிகன் சொன்னது இதமாக இருந்திருக்க வேண்டும்!

உறவுகளின் ஏக்கங்கள் உணர்வுகளை ஆட்கொள்கிறது! ஆறுதல் தருகிறது! ஆறுதல்கள் மனித வாழ்வின் தேவைகள்தானே!

ஆறுதல்கள் அவன் மனத்தில் தெளிவுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! தன் தவறால் குறையாத உறவுகளின் அன்பு அவன் மனதில் அமைதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

மாதவி அனுப்பிய மடலில் மண்ணால் இலச்சினை வைத்திருந்தாள்! அதில் அவள் ஒற்றைக் கரு மயிர் ஒன்றையும் ஒட்டி வைத்திருந்தாள்! அதைத் தொட்டுப்பார்த்த போது, காற்றிலே அது அசைந்து அவன் கைகளிலே பட்டபோது, அவளே அவன் மேல் அன்பினாற் பரவினாற்போன்ற இன்பம்!

அம்மயிரில் மணந்த புனுகு அவனை மாதவியோடு இருந்த இன்ப காலத்திற்கு இழுத்துச் சென்று மடலைப் படிக்க விடாமல் பழைய நினைவுகளில் உறையச் செய்தது!

மடலுள் இருந்தது மாதவியின் குரல்! தான் தவறேதும் செய்யாதபோது தனைப்பிரிந்த அன்பரிடம் காரணத்தை அறிந்து கொள்ளத்துடிக்கும் நல்லன்புள்ளத்தின் தவிப்பே அது!

கேட்கிறாள் துடித்துப்போய்!

"நும் தந்தை தாயும் அறியாமல், அவர்களுக்குப் பணிவிடைசெய்யாமல், உயர்குடிப்பிறந்த கண்ணகியோடு இரவோடு இரவாக ஊரை விட்டே செல்லுமளவிற்கு நான் செய்த தீங்கென்ன என் உயிரே ?"

"அடிகள்! முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி....."

அன்பால் கட்டுண்டவளின் கெஞ்சு மொழி அந்த மடலில்!

அன்பும், உறவும், காதலும், காதலியின் மடலும் அவன் மனத்தில் ஆழ்ந்த அமைதியையும் சிந்தனையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

மாதவியின் மடலுக்குள் நேர்மையைக் காண்கிறான்!

தழும்பும் குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி நிறைத்தாற்போன்ற நிலையில் அவன் மனம்!

தான் செய்த இரண்டாவது தவறையும் உணர்கிறான்!

மாதவியிடம் இருந்து பிரிந்ததும் 'தன் குற்றமே' என்று தெளிகிறான் கோவலன்;

பரத்தையர் குலத்தில் சித்திராபதி என்ற பெரும்பரத்தைக்கு மகளாகப் பிறந்த மாதவி, கோவலன் பிரிந்ததும் மாற்றானுடன் போகவில்லை! கோவலன் மட்டுமே அவளின் காதலன்! அந்த உண்மையான நட்பும் அன்பும் அவளைக் குற்றமற்றவள் என்று கோவலனை உணரச் செய்து விட்டது.

பரத்தையர் குலம் என்பது பரிதாபத்துக்குரிய குலம்; மணிமேகலையில் சாத்தனார் "வருணக் காவலும் இல்லா பரத்தையர் குலம்" என்று அதை விவரிக்கும் போது கண்கள் கசியத்தான் செய்கிறது;

யார் இவர்கள்? அனைத்து வருணத்திற்கும் வடிகாலான பரத்தையர்கள் வருணத்துக்குள்ளேயே சேர்க்கப்படாத அளவிற்குத் தள்ளிவைக்கப்பட்டவர்கள்;

ஆனால் வருணம் என்ற கழிநீரில் சேராததால் இந்த வடிகால் உயர்ந்தது என்பேன் நான்!

அந்த குலத்தில் பிறந்த மாதவி தன் நேர்மையைக் கோவலனுக்கு
உணரவைத்துவிட்டது பெரிய வெற்றியல்லவா ?

தன் பிரிவால் நடுக்குற்றிருக்கும் அனைவரின் துயர் களைய, விரைந்து செல்லச் சொல்கிறான் கோசிகனை! மாதவியின் மடலையும் தன் பெற்றோரிடம் சேர்க்க சொல்கிறான்!

பின்னர் நடையைத் தொடர்ந்து வைகை நதியின் வடகரையைச் சேர்கின்றனர் அனைவரும்.

கன்னியும் பொன்னியும் கோவலனை மாதவியிடம் இருந்து பிரிக்க, கண்ணகி சேர்ந்து, வைகை அடைந்த, இவர்களைப் பார்த்து இவர்களுக்கு நேர இருக்கும் துன்பத்தை முன்னரே உணர்ந்தவள் போல் வையை அழுதாளாம்! எப்படியென்றால், வைநயை நதியின் இருகரை வளர்ந்த நறுமலர் மரங்களும் சோலைகளும் கணக்கிலடங்கா தங்கள் பூக்களை வையை ஆற்றில் உதிர்த்து விட, கோவல-கண்ணகிக்கு ஏற்படப் போகும் தீங்கை ஏற்கனவே அறிந்ததால், அம்மலர்களை ஆடையாக்கி, ஓடும் கண்ணீரை (தண்ணீரை) முழுதாக மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுதாளாம் வையை நதி!

கோவல-கண்ணகியோ இது நீரோடும் ஆறல்ல பூவோடும் ஆறு என்று புகழ்ந்துரைத்துக் கொண்டே மரத்தெப்பமொன்றில் ஏறி தென்கரை சேர்ந்தனர்!

"புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யாறு அன்றுஇது பூம்புனல் யாறுஎன...."


அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-1999

Saturday, October 02, 1999

சிலம்பு மடல் 18

சிலம்பு மடல் - 18 பழங்குடிகள்!
மதுரை:
வேட்டுவ வரி:

மாரியில்லா பாலைநிலங்களில் வாழும் வேட்டுவர் என்பார் தமிழ்ப் பழங்குடியினர்: இவர்களின் முக்கிய தொழில் வழிப்பறி செய்து பொருளீட்டுதல்; கொற்றவை என்னும் தெய்வத்தை வழிபடும் இவர்களின் இரண்டாவது தொழில் மது உண்டு மயங்கிக் கிடப்பது!

சாமியாடும் பெண்ணுக்கு சாலினி என்று பெயர். இன்றும் தமிழகத்தில் சாமியாடுதல், அதாவது தெய்வ அருள் ஏறி ஆடி, குறி சொல்தல் என்பது மிகப் பரவலாகக் காணப்படும் ஒன்று. யாருக்காவது துன்பம்/இன்பம் என்றால் சாமியாடியை அழைத்து வந்து, அவருக்கு உடுக்கடித்தால் உடனே சாமி வந்து விடும்; அந்த சாமியாடி சமயத்தில் கள்ளருந்திவிட்டு ஆடுதலும் உண்டு!

பெரும்பாலும் சாமி வந்தவுடன் முதலில் அந்த சாமி கேட்பது/சொல்வது, "துணி இல்லாம இருக்கேண்டா! எப்ர்றா வருவேன் ?" உடனே, "சரி சாமி, உனக்கு என்ன துணி வேணும் கேளு! எடுத்துக் கட்றேன்;" என்று சொல்வார் அந்த குறிகேட்பவர்.

சாமியே மனிதனிடம் துணி கேட்டு வாங்கி உடுத்தும் நிலையில், மனிதனுக்கு என்ன உதவி செய்யும் என்று நினைத்தாலே போதும் அது தெய்வ குற்றம் என்பதை விட சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது இச்சமுதாயத்தில்.

"ஆஅய்! அது மட்டுமாடாஅ கோழியறுத்து பொங்க வைக்கிறேனியே, ஏ, ஏ, ஏண்டா வைக்கல ?"

"சாமீஇ, நீதான் மழையே பேய வைக்காம சோதிச்சு புட்டியே ?
எப்டி வைப்பேன் ?"

"சர்றா, வர்ற அமாவாசைல, எனக்கு செவப்புத் துணி கட்டி, நல்ல சாவக் கோழிய அறுத்து, பொங்க வை! அதுலேர்ந்து மூனு நா, மூனு வாரம்; இல்லாட்டி முப்பது நாள்ல ஒனக்கு நல்ல வழி காட்றேன்" என்று சொல்லி விட்டு சாமி குளிர்ந்து விடும்.

குறி கேட்டவரோ சேவலைத் தேடிக் கொண்டு புறப்பட்டு விடுவார். குறி சொன்னவரோ அமாவாசை அன்று மறக்காமல் மொந்தை ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வார்;

இதேதான்! இந்த மாதிரியேதான், அந்த வேட்டுவ குமரியின் மேலேறி கொற்றவை எனும் தெய்வம் ஆட்டுகிறாள் அப்பாவையை!

சுற்றி நிற்கிறது அந்த வேட்டுவ சமூகம்! கூட நிற்கின்றனர், கோவல கண்ணகியர் காவுந்தி அய்யையுடன்.

கொற்றவை ஆடும் குமரி சொல்வாள்(சாலினி)! அல்ல அல்ல; குமரி மேலேறி கொற்றவை சொல்வாள்!

வேட்டுவர்களே! நீங்களெல்லாம் மறக்குடியில் பிறந்தவர்தானா ? ஊரில் உள்ளவர்களின் பசுக்களை எல்லாம் கொள்ளையிடாமல் வைத்திருக்கிறீர்களே? அவர்கள் பொருட்களையெல்லாம் களவிடாமல் உள்ளீர்களே? உங்கள் குலத்தொழிலை செய்வதிலிருந்து சோம்பிக் கிடக்கிறீர்களா?

பகைவர்களுடன் (ஊரில் அமைதியாக வாழ்பவரிடம்) சண்டையிட்டு வெற்றியன்றி தோல்வியே கண்டிராத நீங்கள் மறக்குடியினர் என்பதை மறந்து அறக்குடியினர் போல் சினம் அவிந்து அடங்கிக் கிடக்கிறீர்களே ?

என்று கொற்றவைத் தெய்வம் வேட்டுவர்கள் பால் குற்றம் கண்டது!

"கல்என் பேர்ஊர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது
அறக்குடி போல்அவிந்து அடங்கினர் எயினரும்"

அதுமட்டுமல்ல; கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை கேட்கிறாள்; 'வழிப்போவோர் வளன் பறித்து உண்ணும் மறவர்களே!' நீங்கள் அதை மறந்ததும் ஏனோ ?

நீங்கள் கள்ளுண்டு மயங்கி வாழும் இன்ப வாழ்க்கையை வேண்டுவோராயின் எனக்கு செலுத்தவேண்டிய கடனை செலுத்துங்கள்!' என்று.

"கலைஅமர் செல்வி கடன்உணின் அல்லது
சிலைஅமர் வென்றி கொடுப்போள் அல்லள்
மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டுஉண் மாக்கள் கடந்தரும்; என அங்கு, "

கள்ளனுக்கும் தெய்வம்; நல்லோனுக்கும் தெய்வம்;

கள்ளனின் தெய்வம் பிறர் பொருளைக் கொள்ளையடிக்க உதவுகிறது; பிறரின் தெய்வம், அதை பாதுகாக்க உதவுகிறது;

தெய்வம் என்பது ஒன்றுதானா ?

இது மனித குல முரண்பாடா அல்லது தெய்வ குல முரண்பாடா ?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது பிதற்றலா ?

பாவம் என்றால் என்ன ?

பிறகுலத்தினர் கொள்ளையடிப்பது பாவம் என்றால், வேட்டுவ குலத்தினர் கொள்ளையடிக்காவிட்டால் பாவமா ? இதற்கும் ஊழ்வினையும் வந்து உறுத்துமா?

முரண்பாடுகள்!

வேட்டுவ வரியில் மறத்தின் கடவுள், "மறம் போற்றுக" என்கிறது; இதையும் காவுந்தி அடிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதே காவுந்தியடிகள் ஊர்காண் காதையில், நா என்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அடித்து 'தீணவினை ஊட்டும் மறத்துறை நீங்குங்கள்' என்று அறத்துறை மாக்கள் எவ்வளவு சொன்னாலும் அறிவு முதிர்ச்சி இல்லா மாக்கள் ஏற்றுக் கொள்வதில்லை,என்று வருத்தப்படுகிறார்.

"மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்
யாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்"

மறத்துறையை நாடுவேனா அல்லது அறத்துறையை நாடுவேனா? இரண்டுக்கும் கடவுள் உள்ளதால் ஒரு பாமரக்குழப்பத்தில் எழும் கேள்வி!

அடிப்படையில், பிறர் பொருளில் உயிர் வாழும் மாக்களே அந்த வேட்டுவப் பழங்குடியினர். இன்றும் கடவுளைக் கும்பிட்டுவிட்டு கையூட்டு பெறுவோர், குறை கூலி கொடுப்போர், பிறர் உழைப்பில் வாழ்வோர், கடவுள் பெயரில் சமுதாயக் குற்றம் செய்வோர், மதவெறியர், வஞ்சகர்கள் இவர் யாவரும், அறிவு முதிர்ச்சி அடையாத அந்த வேட்டுவப் பழங்குடிகள் போல் இன்றும் சமுதாயத்தைப் "பாழ்குடியாக்கும் பழங்குடிகள்தானே"!


அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, September 05, 1999

சிலம்பு மடல் 17

சிலம்பு மடல் - 17 காடுகள் கடந்து மதுரை செல்தல்!
மதுரை:
காடுகாண் காதை:

எழில் மிகுந்த புகாரை, இன்பம் வாழ்ந்த புகாரை நீங்கி கோழி சென்று அங்கிருந்து பாண்டி நாட்டை நோக்கிப் பயணம் செய்கின்றனர் கோவலன், கண்ணகி மற்றும் காவுந்தி அய்யை;

பாண்டியன் கடலை வெறுத்து வேலெறிய, அதனால் வெகுண்ட கடல் பொங்கி, தமிழகம் ஓடிய பகறுளி என்ற பேராற்றையும், பல அடுக்குக்களைக் கொண்ட பெரும் குமரி மலையையும் விழுங்கிக் கொடுமை செய்ததால், அதை ஈடு செய்யும் பொருட்டு வடக்கே கங்கையையும், இமயத்தையும் தன்வசப்படுத்தி வாழ்ந்தானாம் பாண்டிய மன்னன்.

"வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பகறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"

பாண்டியனை சிறப்பு செய்யும் இச் செய்யுள் அடிகள், கடல் கொண்ட தமிழகத்தின் கதை விரிப்பது, நம் கண்களைத் தெற்கு நோக்கித் திரும்பச் செய்கிறது!

நடக்க எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கோவலன் இழந்த சொத்துக்களின் கணக்கைக் கூட்டிச்சொல்கிறது; செல்வக் கோவலன் பயணம் போக ஒரு வண்டிகூட இன்றி மனையுடன் நடக்கிறான்; நல்லது தேடி!

நடந்த வழி, கண்டனர் மறையோன் ஒருவனை! கேட்டனர் அவனிடம் மதுரை மாநகர் சேரும் வழி! மறையோன் சொன்னது பலவழிகள்! அதிலொரு வழியில் நிற்கும் புண்ணிய பொய்கைகள் மூன்று; (சரவணம், இட்டசித்தி,பவகாரணி)

கோவல-கண்ணகி-அய்யை மூவரையும், அப்பொய்கைகளில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலையும் என்பதோடு அதன் பலன்களை விளக்கி அறிவுரைக்கிறான், அந்த வேதம் கற்ற அந்தண மறையோன்!

இன்றும் குளத்தில் முழுகி எழுந்தால் புண்ணியம் கிடைக்கும், சொர்க்கம் கிடைக்கும் என்ற கதைகள் வில்லுப்பாட்டு முதல் இதிகாசங்கள் வரை இருப்பதையும், அக்குளங்கள் அல்லது பொய்கைகளில் குளித்து மகிழ்வதற்கு அரசு முதல் ஆண்டி வரை அலைபாய்வதையும், அதில் பல பேர் சாவதையும், அதேநேரத்தில் அவ்வாறு குளம் மூழ்குவதை சிறுமை என்று பகுத்துரைப்போரையும், பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்;

அப்படி பகுத்துரைப்போரை எள்ளி நகையாடும் மறையோர்களும் அடியார்களும் சிலப்பதிகாரக்கதையையே மாற்றி விட முயன்று தோற்றதும் உண்டு!

மறையோன் கூறிய அறிவுறுத்தலுக்கு மறுமொழியாக காவுந்தி என்ற அந்தப் பெண்முனிவர்,

"நான்மறை கற்ற நல்லோனே!முற்பிறப்பில் செய்தவற்றின் பயனை எல்லாம் இப்பிறப்பிலே நேரில் நிகழக் கண்டு கொள்கிறோமே! ஆதலால் பவகாரணியில் நீராட வேண்டிய அவசியமில்லை!

அய்ந்திர மொழியை அருகதேவனின் பரமாகமத்தில் காணலாம் எனும்போது சரவணத்தில் நீராட வேண்டிய அவசியமில்லை!

உண்மை நெறியில் இருந்து பிறழாது, பிற உயிர்களைப் பேணி வருவோர்க்கு அடைய முடியாத அரிய பொருள் உண்டா ? ஆதலால் இட்ட சித்தியிலும் இறங்க வேண்டியதில்லை!

உன்செயல் முடிக்க உன்வழி போ! யாம் எம்வழி செல்வோம்! "

என்று பதில்மொழி உரைக்கிறார்!

முற்பிறப்பு போன்ற சில கருத்துக்கள் ஒருபுறமிருக்க, பொய்கையில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் கிடைக்கும் என்று மூடக் கொள்கை பரப்பிய மறையோனின் கருத்துக்களைக் காதில் கொள்ளாமல் அவனின் கருத்துக்களை முடக்கி வைத்து விட்டு மூவரும் நகர்வது அறிவுசார் பெருமை அல்லவா?

"கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்!

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பிற் காணாயோ நீ ?

வாய்மையின் வழாது மன்உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் ?

காமுறு தெய்வம் கண்டுஅடி பணிய
நீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்...... "

மேலும் மூடக்கருத்துக்கள் இந்நாள் வாழ்ந்ததுபோல் அந்நாளும் வாழ்ந்திருக்கின்றன! அதேபோல் அதை அலட்சியப்படுத்தி பீடுநடைபோட்டோ ரும் இந்நாளும் அந்நாளும் நிறைந்தே இருந்து உள்ளனர்:

இதேபோல்தான் கடுமையில் வாழ்ந்த போதும் கண்ணகி, தேவந்தி என்ற அந்தணப் பெண்மணிக்கு பதிலிறுத்ததும்!

அந்நாளும் சரி, 1800 ஆண்டுகள் கழிந்த இந்நாளும் சரி ஆரியக் கொள்கைகள் வாதத்துட்பட்டே வந்துள்ளன!

தொடர்ந்து நடந்தனர் அனைவரும்! மழைவளம் இல்லா பாலை நில வழி மதுரை நோக்கி!

மாரிபொய்த்த பாதை நடப்பவர் பொருள் பறித்து அதனால் வயிறு பிழைத்த கொடிய வேட்டுவர்கள் தாம் கொள்ளையில் பெருவெற்றி பெற்றால் தம் தலையை அரிந்து கொற்றவைக்கு படைக்கும் குணத்தவர்; (கழிபேராண்மைக்கடன்)

அப்பலியிடலை விரும்பும் அந்தக் கொற்றவை, விண்ணாள்பவள்! வானோர் தொழும் நெற்றிக்கண்ணுடைய குமரி!

அக் கொற்றவைக் கோட்டத்தை (கோயிலை) அடைகின்றனர் அம்மூவரும்!

"மாரி வளம்பெறா வில்ஏர் உழவர்
கூற்றுஉறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றம் கொடுத்துக்
காழிபேர் ஆண்மைக் கடன்பார்த்து இருக்கும்
விழிநுதல் குமரி விண்ணோர் பாவை
மைஅறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்குஎன்."

அன்புடன்
நாக.இளங்கோவன்
05-செப்டம்பர்-1999

Sunday, August 22, 1999

சிலம்பு மடல் 16

பத்துடன் ஆறு!
பத்தைப் பெற்றெடுத்த அறுபதும் காமுறும் பதினாறு!

இளந்தென்றல் வீசும் இராக்காலம்;
மீதி நிலாவை மறைத்துவிட்டு,
பாதிநிலா பார்த்து இரசிக்க
கள்ளஒளி காட்டுகின்றது காதலர்பால்:.

ஒளியுமில்லை இருளுமில்லை முற்றத்தில்;

மறைவை மறந்தவரை மறக்கடிக்கும் நிலவொளி!
நிலாவின் கள்ள விழி!

புத்தம் புது மங்கை அவள்!
காதலைக் காதலனிடம் காட்டிவிடத் துடிக்கும் மனம்;
உடலோடு ஒன்றாகத் துடிக்கும் உள்ளம்;
உள்ளத்தின் வாசலிலே நாணத்தின் காவல்,
எட்டிப்போன கால்களைக் கட்டிப்போட,
நாணிநிற்கும் நங்கை!

நாணத்திற்குதான் எத்தனை வேலை!!
தூதுபோனது தலைவனுக்கு;
"தொட்டுத் தீண்ட மாட்டாயா? "
சொன்னது அவனிடம்!

தொட்டு விடப்போகின்றேன்!
தொட மட்டுமா வந்தேன்?

அவளில் நிலைகுத்தி நிற்கும் என் கண்களின்
கட்டளைக்கு நான் காத்து நிற்பது அவளுக்குத் தெரியவேண்டாம்!
தொட்டு விடும் தூரத்தில் அவளை அள்ளி விழுங்க என் கண்களுக்கு
இயலாது போகும்;

முகத்தின் ஒவ்வொரு இடமும் அசைவது
அவள் நாணத்தால்; நானறிவேன்;
அச்சுவையை நான் பருகிவிட்டுத்தான் பக்கம் போவேன்!

கால்கள் இடும் நாணக்கோலத்தில்
என்னை எழுதுகிறாளே;

என் உடலெங்கும் குறுகுறுக்கும் அந்த இன்பத்தில்
மெல்ல மெல்ல நனைகிறேன்;

அவள் கைவிரல்கள் ஒன்றையொன்று
கட்டிப் பிடிக்கின்றன; பார்க்கிறேன் நான்!

தொடவேண்டி நின்றதால் இருந்த இன்பம்
தொட்டுவிட்டால் எனக்குக் குறைந்திடுமோ ?
இந்த இன்பத்திலேயே இருந்துவிடலாமா?
முதலின்பம் காணப்போனவள் இன்பத்தின் எல்லை
அதுவென்றே நினைக்கிறாள்.

அவளின் மனதிற்குள்
அச்சம் தோன்றியதை அவனன்றி ஆரறிவார் ?

இன்பப் பிச்சைக் கேட்டுக் கரங்களை நீட்டினான்!
பற்றிக்கொள்ள கொம்பின்றி தத்தளித்தக் காமக் கொழுந்து,
கரங்களைப் பற்றி முழுமாரில் மறைத்துக் கொண்டது முகமதனை!

முகத்தின் வியர்வை அரும்புகள் மட்டுமே
இடைவெளி கொடுத்தன அவளுக்கும் அவனுக்கும்!

முதன்முதலில் தொட்டவுடன்
அவன் நெஞ்சிற்குப் பொட்டிட்டது அவள் நெற்றி!

அக்கணமே,
அழுந்தப் பதித்தும் இன்ப அசைவுகளால்
இழுத்துக் கொண்டன குங்குமக் கோடுகள்!

இன்பம்தான் அவனுக்கு!
நெற்றிச் சுட்டியும் அழுந்திப் பதிந்தபோது;

மங்கையின் பற்குறி படுமுன்னே அவள் சூடாமணிக்கு அவசரம்
அவனைத் தீண்டிவிட!

உற்றவனின் நெஞ்சத்தில் குறிவைத்த சுட்டிமேல்
பொறாமை கொண்டாள்!

உள்ளத்தில் தோன்றும் பொறாமையை மறைத்துச்
செயலாற்றி வெற்றி கொள்வதில்தான் பெண்மைக்கு ஈடு ஏது?

மெல்ல முகத்தைத் தூக்கி மன்னவனைப் பார்த்துக் கொண்டே
தன்னைப் புனைந்திருந்தவற்றில்
சுட்டியைக் கழற்றி எட்டிப் போட்டாள்!

அவள் அவிழ்த்த முதல் ஆடை அது.
அவனுக்கு என்ன புரிந்ததோ?

சுட்டியை நீக்கியதும் ஒற்றைக் கரும்பட்டு மயிரொன்று
தென்றலின் குறும்பால் காதலன் முகத்தில் முத்தமிட்டது;

மூக்கிலும், வாயிலும், குழிவிழுந்த கன்னத்திலும், கண்களிலும்
நெருடி விட்ட அவளின் ஒற்றை மயிர், அவன் காதுக்குள்ளும்
காமக் கதை சொன்னது!

தன் காதலனை தான் முத்தமிடுமுன் இந்த மயிரும்
முந்திக் கொண்டதே? சூடாமணியைத் தூர எறிந்தது
போல் இம்மயிரை எறிய முடியாதே!
சிறிதாக சிரித்துக் கொள்கிறாள்!

அந்த மென்மையில் மதிமயங்கியவன் முனகியதைத் தவிர
வேறென்ன செய்ய முடியும்.

ஒற்றை மயிரில் மயங்கியவன் அவளின் கால் வரை கரு நதியாய்
அலைபாயும் அவள் கூந்தலை முகர, கருமேகவிளிம்புக் கதிரவன்போல்
முல்லையும் மல்லியும் அடர்ந்து கிடந்தன அவள் தலையில்.

இதே மலர்களைக் கடவுளர் சூடின் ஒரு வாசமும்,
மங்கையர் சூடின் வேறு வாசமும் வருவதேன்?
கடவுளைக் கட்டிப் பிடித்தாலும்
இத்தனை இன்பம் கிடைக்குமா?

விடைகாண முடியவில்லை அவனால்!
மயிருக்கு வாசம் உண்டோ அறியான்; ஆனால்
பெண்மையின் வாசத்தை அவனால் மறுக்க முடியுமா?

பெண்மனம் அவனுள் புதைந்து கிடக்க,
பெண்மணத்தை முகர்வதில்தான் எத்தனை இன்பம்;

எவர்தான் அதை வெறுப்பார்! தூய பெண்ணில் காமம்
உண்டாகும் போது வரும் மணத்தை அல்லது நாற்றத்தை
எந்த ஆடவன் வெறுத்திருக்கக் கூடும்; அவ்வாசமும்
மலர்களின் வாசமும் இணைந்த காதல்மேடையொன்று
களியாட்டத்துக்கு காத்திருந்தது;

கூந்தலுக்குள் விரல்கள் துளையிட்டு பின்னங்கழுத்தை
வருடி விட, தலையை மேலும் நிமிர்த்தி,கண்கள் சொருகி,
நிறத்தில் செம்பருத்திப் பூவொத்த மென் பட்டு இதழ்களை
மெல்லப் பிரித்தாள் அவளையும் அறியாமல்; இதழ்கள்
பிளந்தது இதழுக்காகத்தான்;

சீச்சீ! இது என்ன வேதனை!
என் இதழ்கள் சுவைக்கவும் வேண்டும்!
சுவைக்கப் படுதலும் வேண்டும்;
எது எனக்கு முதலில் கிடைக்கும்? இது சொர்க்கமா? நரகமா?
இத்தனைச் சிக்கலா காம வேள்வியில்?;
வெப்பப் பெருமூச்சொன்று வெளியான விநாடி
'சிவபெருமானின் பிறையை ஒட்டியது உன் நெற்றியின் அழகு!'

"பெரியோன் தருக திருநுதல் ஆகஎன;"

என்று காதலன் சொல்ல, அணைக்க வேண்டிய இதழ்கள்
உதிர்த்தவையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியபடியே இருக்க
காதலன் அவள் இதழ்களில் ஓடிய வரிகளில் காம வெள்ளத்தை
பருகுதல் வேண்டி ஆங்கு இணைகிறான்; மென்மைக்கு
வன்மைதான் பிடிக்கும் போலும்;

இவனின் கீழுதடு அவளின் மேலுதட்டைப் பருக, அவளின்
கீழுதடு அவனின் கீழுதட்டுடன் ஏதெதோ செய்ய முயன்று
தோற்றுக் கொண்டு இருந்தது;

இவனை அவள் பருக அவனை இவள் பருக நாழிகைகள்
நகர்ந்து கொண்டிருக்க, குங்குமம் மெழுகிய கொங்கைகள்
வெண்பட்டுக் கச்சையிடம் கெஞ்சிக் கிடந்தன; விடுதலை வேண்டி!

வியர்வை மொட்டுக்களால் கொங்கை விலகிய குங்குமமும்
சந்தனமும் கச்சையை நனைத்து கொங்கையின் அசைவுக்கெல்லாம்
அழகு சேர்த்துக் கொண்டிருந்தது; இருப்பினும், கொங்கையின்
இச்சைக்கு, கச்சையின் இடைஞ்சலைக் கண்ட காதலன், உதவிக்கு
தன் கரங்களைக் கொடுத்தான்; கச்சை நகர்ந்ததும் தாங்கிப் பிடித்துக்
கொண்டான் தன் கைகளினாலே!

தாங்கிப் பிடித்த கைகள் நங்கை முலைமேல் படர்ந்திருந்த
ஒற்றை வட முத்து மாலையால் தடைகளை உணர, தவித்துப் போனான்.

"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் ?"

திருமுலைகள் மேலே தொய்யில் எழுதியதோடல்லாமல்
இந்த மாலைகளையும் அணிவிப்பதுவும் ஏனோ என்று அலுத்துக்
கொள்கிறான்; என் கரங்கள் கொள்ளும் இனிமைக்கு இன்னல்
விளைவிக்கும் மாலைகளே அகன்று போங்கள் என்று அகற்றி விட்டு
முழு முலைகளிடை முகம் புதைத்தான்; கெஞ்சிய கொங்கைகள்
கொஞ்சின அவன் முகத்தோடு; கொங்கையின் கண்களும் அவனது
கண்களும் பார்த்துக் கொள்ளும் அவ்வப்போது; பார்த்தது தீர
அவனின் கண்கள் கொங்கையின் கண்களைப் பொத்தி விட்டு
விளையாடி மகிழ்ந்ததால் கொங்கைகளுக்குக் கொண்டாட்டம்!

இருகனிச்சுவையில் முக்கனிச்சுவையை இகழ்ந்து நகைத்தான்
இதயத்துள்: இருகரம் கொண்டு இருகனி மறைக்க முயன்று
தோற்றுத் துவண்டு போனான்;இருகரம் கொண்டு ஒருகனி
மறைக்கவும் இயலவில்லை அவனால்;வென்று விட்ட ஆணவம் அந்த
முலைகளுக்கு! வெற்றிக் களிப்பில் கொங்கைகள் கொஞ்சம்
இளகிவிட இருவரின் மூச்சின் வெப்பமும் வேகமும் இன்ப வேதனையின்
எல்லைகளை அகற்றிக்கொண்டே இருந்தன!

பற்களுக்கும் நகங்களுக்கும் பெருவிருந்து செய்தனர் இருவரும்;
அவள் நகங்கள் அவன் முதுகில் கோலம் போட்டபோதெல்லாம்
அவளின் வளையல்கள் இசையோடு ஆடி மகிழ்ந்தன;

மெல்லிடையாளின் இடை நோகாதிருத்தல் வேண்டி
சிரம் தூக்கி இதழோடு இதழ் பெய்து,
ஒருகரம் முலைதாங்க
மறுகரம் அவள் புறம் தீண்ட,
அரைச்சக்கரமாய் ஆகிப்போனாள் பின்னோக்கி வளைந்து;
மயிலின் முதுகைத் தடவியது போல அவளின் புறத்தை தடவியதும்
மறந்துபோயினர் அவர்களை அவர்கள்;

இடையோடு உறவாட உள்ளங்கைகள் முனைய
மேகலைதான் மெல்ல மறுத்துப் பார்த்தது:
புறத்தை பிடித்த கரம் சற்றே இறுகியதால் மேலும்
வளைந்தனள் மங்கை; மேகலையோ தெறித்துச் சிதறிட
மேகலை தாங்கிய ஆடைகளோ அகன்று போயின:
அகன்று கிடந்தாள் அகன்ற அல்குல் காட்டி!
சிரித்துக் கிடந்த பெண்மையை
வெறித்துப் பார்த்தது ஆண்மை!
வாழையொத்த தொடைகள் கொண்டாள்
வாரிவழங்கினாள் வஞ்சனையின்றி,
மாவின் சுவையையும், பலவின் சுவையையும், வாழின் சுவையையும்;
சின்னச் சின்ன அசைவுகளும் சிக்கலை ஏற்றிவிட
கால்களோடு கால்கள் பிணைந்தனர்;
கரங்களோடு கரங்கள் பிணைந்தனர்:
அப்படியே முதுகுகளிலும் கோலமிட்டன அந்த நான்கு கரங்கள்;
வியர்வை ஆறாகப் பெருகிட அதில் வழுக்கிய கரங்களும் கால்களும்
சீறிச்சினந்து பிணைந்து விழுந்தன; பிணையல் பாம்புகள் போல!!

நின்றுவிடப் போகுதுயிர், தின்று விடு இப்போதே!
கூனிவிடப் போகுமிளமைக்கு தீனியிடு இப்போதே!
வற்றிவிடும் செல்வத்தை வெட்டியெடு இப்போதே!
சுற்றிவரும் பூமி நின்று விடுமுன்னே, வற்றிவிடட்டும் காமம்!
என்றதோர் வேகம்!

அவளின் வளையின் ஓசையுடன்,
சிலம்பின் இசை சேர்ந்து,
இருவரின் முனகல் இராகத்தோடு,
இன்பத்தின் எல்லையை சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருந்தனர்
கோவலனும் கண்ணகியும்!

"தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்
22-ஆகத்து-1999
பி.கு:
...........................................................................................................................................
( புகார்க்காண்டம் முடிவுற்ற வேளை,
கம்பரசம், காமரசம் பற்றி இணையத்தில் பேச்சுவர,
சிலம்பு ரசம் பற்றியும் கருத்தெழுந்தது!
அறிஞர் அண்ணாவின் கம்பரசத்தின் நோக்கம் வேறு;
இம்மடலில் காணும் சிலம்பு ரசம் வேறு!
சிலம்புரசமாக இம்மடலை எழுதத்தூண்டிய
இணைய நண்பர்களுக்காக,
புகாரை மீண்டும் ஒருமுறை நோக்கி இம்மடலை எழுதுகிறேன்: )

அதுமட்டுமல்ல, கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும்
பற்றிப் பொய் புரட்டுகளை எழுதிப் பரப்பும் எழுத்தாளர்கள்
கண்ணகி கோவலனுடன் மனை வாழ்க்கை நடத்தவில்லை என்றும்
அதற்கு சான்றாக மாதவிக்குக் குழந்தை இருந்தது ஆனால் கண்ணகிக்கு
இல்லாததை அவர்களின் அடத்திற்கு சான்றாகக் கொள்கிறார்கள்.
சிலம்பிலேயே கண்ணகி, கோவலனின் இன்பவாழ்க்கையை
இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாவிற்கான
விளக்கவுரைதான் இது.
..........................................................................................................................................

Sunday, August 01, 1999

சிலம்பு மடல் 15

சிலம்பு மடல் - 15 சோழநாடு நீங்கி பிழைக்கப் போதல்!
புகார்:
நாடுகாண் காதை:

"பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டுமோ? பேசுதல்தான் கூடுமோ?" என்ற சொற்கள் பொய்த்திருந்தன; அங்கே கோவலனும் கண்ணகியும் சந்தித்தபோது! உணர்வுகளில் காலம் கழிக்கவில்லை;

செல்வத்தில் நடந்து, இன்பத்தில் திளைத்து, காமத்தில் புரண்டு வாழ்ந்த கோவலனுக்கு மாதவிபால் ஏற்பட்ட சந்தேகம், எத்தனை பாடத்தைக் கற்றுக் கொடுத்ததோ! வியக்க வைக்கிறது, கண்ணகியை மீண்டதும் பிழைப்பை மட்டும் அவன் நினைத்தது!

வான்நிலவும் வெப்பமாகப் பட, கணவனுடன் கலவியின்றி நலிந்து கிடந்த கண்ணகியும் அவனைக் கட்டிலுக்கு இழுத்தாளில்லை! ஒருகாற்சிலம்பெடுத்து கணவன் கை கொடுத்து உழைப்பைத் தொடங்கி வைக்கிறாள் கண்ணகி!

"வா என வந்து, இன்பம் அளித்ததும்
போ எனப் போனாள் மாதவி!"
அங்ஙனமே கண்ணகியும்
"வா என, நடந்தாள் கோவலனுடன்
வைகறையில், மதுரை தேடி!"

வா என்று சொல்லும் ஆடவன் போ என்று சொன்னாலும் போற்றி நிற்கும் பெண்களை என்ன சொல்ல?

அப் பெண்மையின் மென்மையையும் உண்மையையும் வியக்கிறேன்!

நெடுமால் வணங்கி, புத்தன் போற்றி, அத்தனைக் கோயிலையும் அவனுடன் சுற்றி புகார் நீங்குகின்றாள் கணவனுடன்! அத்தெய்வங்களை வணங்க மதங்கள் குறுக்கே நிற்கவில்லை!

அத்தனை தெய்வங்களும் "போ எனச் சொன்னதோ" !
"போய் வா என்று சொன்னதோ" ! யாருக்குத் தெரியும் ?

உற்றுப் பார்த்தனரோ புகார் வாயிலை? தெரியவில்லை! இனி பார்ப்போம் என்று நம்பித்தான் தம் மாளிகையை அந்நகரில் விட்டு விட்டு நீங்கினர்!

புகாரை நீங்கி, காவிரியின் வடகரையோடு மேற்கு நோக்கி நடக்கின்றனர்!

"குடதிசை கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்பொழில் நுழைந்து
காவதம் கடந்து கவுந்திப் பள்ளி.."

காததூரம் நடந்ததும், மதுரைக்கு இன்னும் "ஆறைங்காதம்" (முப்பது காதம்) நடக்கவேண்டியுள்ளதை எண்ணி மலைக்கிறாள் கண்ணகி! நடந்தறியா செல்வ மடந்தையின் வேதனை கண்டு துன்பச்சிரிப்பை சிந்துகிறான் கோவலன்.

ஆங்கு காவுந்தி அய்யையைக் கண்டு அடி தொழுது, அவ்வடிகளும் அவர்களுடன் புறப்பட மூவருமாய் மேற்கு நோக்கி நடக்கின்றனர்!

நாளுக்கொரு காதமாய் நடந்தனர்! நடந்தனர்! அடைந்தனர் "இருகரைப்பட்ட திருவரங்கத்தை"!

அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும், ஒரு சீரென செதுக்கிவைத்தானோ புலவன் என்று திகைக்கவைக்கும் அளவிற்கு, காவிரி வழி நெடுக இயற்கையைப் பாடி மகிழ்ச்சியூட்டுகின்றார் இளங்கோவடிகள்;

கரிகால் பெருவளத்தான் காலத்திற் பின்னான சிலப்பதிகாரத்தில் அவன் ஆக்கி வைத்த கல்லணை பற்றிய குறிப்பேதும் இவ்விடத்து இல்லாதது சிந்தனையைத் தூண்டுகிறது! காப்பிய நாயகர்கள் நடந்து வந்த காவிரியின் வடகரைப் பாதை முழுதையும் பாடி வைத்த புலவர், அரங்கத்துக்குக் கிழக்கே 15/20 மைல் தொந
லவில் காவிரியை மறித்து நிற்கும், தமிழர் பெருமை கூறும் கல்லணையை இவ்விடத்துக் குறித்து வைக்காதது சிந்திக்கச் செய்கிறது.

அரங்கம் சேர்ந்தவர் அரங்கத்தானை போற்றி அங்கிருந்த சாரணர்களைத் (முனிவர்கள்/அடிகள்) தொழுது காவிரியின் தென்கரைக்கு பரிசல்/படகு மூலம் செல்கின்றனர்.

இன்று கூட அரங்கத்துக்கு மேற்கு உள்ள ஊர்கள் பரிசல் மூலமாய் தென்கரை சேர்வதைக் காணமுடியும். (அப்பரிசல்களில் பல தடவை நான் பயணித்ததும் உண்டு!)

திருவரங்கக் காவிரிக்கரையில் அம்மா மண்டபம் என்று ஒரு இடம்
உண்டென்பதை அறியாதார் இருக்க மாட்டார் அப்பகுதி மக்கள்!
அவ்விடத்து நேர் எதிர்புறத்தில், சற்றே மேற்புறத்தில் குடமுருட்டி என்ற ஒரு ஆறு வந்து காவிரியில் கலக்கும்! அவ்வாற்றின் கீழ்க்கரை, நேரே கோழி (உறையூர்) சென்று சேர்க்கும்!

சிலம்பின் குறிப்புகள் கொண்டு பார்க்கின் கோவல, கண்ணகி, காவுந்தி ஐயை மூவரும் அவ்வழியே உறையூர் சென்று சேர்கின்றனர்.

(சாண்டில்யனின் யவனராணியிலே, கரூரில் தீயால் கால் கருகி குணம் பெற்று, உறையூர் திரும்பிய கரிகாலனும் இவ்வழியேதான் உறையூர் சென்று தன் காதலி அல்லியைச் சந்திக்கிறான்; அவன் குடமுருட்டி வரை காவிரியின் தென்கரையில் வருகிறான். என் மண் வழியே இவர்களும் போயிருக்கின்றனர் என்று நிந
னக்கும் போதெல்லாம் சிலிர்ப்பதுண்டு! அவ்வழி போகும் போதெல்லாம் இவர்களை நினைப்பதுண்டு!)

கோழி சேரும் முன்னே, காவிரி தென்கரையில் கோவல-கண்ணகியரைப் பழித்த வம்பரை காவுந்தியடிகள் நரிகளாக்குகின்றார். அது கண்டு வருந்திய கோவல-கண்ணகியர்

"நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்.."

என்று கூறுதல் சிறப்பான ஒன்றாகும். காவுந்தி அடிகள் என்ற பெண்முனிக்கு சினம் வர, சாதாரன மாந்தரான கோவல-கண்ணகி
அறம் குறிப்பிடுவது படிக்கவே அழகான ஒன்றாகும்;

அம்மையே! நெறியில் நீங்கிய அவர்கள் எங்களைப் பழிப்பது அறியாமைதான்!! அவர்களுக்கு சாபவிடை தாருங்கள் என்று இறைஞ்சுகின்றனர் அய்யையை.

பின்னர் தொடர்ந்தனர் நடையை! சேர்ந்தனர் கோழி (உறையூர்)!

சோழரின் அறனும், மறனும், ஆற்றலும், புகாரின் பண்பு மேம்பாடும், விழாச் சிறப்புக்களும் இன்பமிக்கு வாழ்ந்த சோழக் குடிமக்களின் வாழ்க்கையும், அவரின் மாண்பும், சோற்று வளமும், காவிரியின் அழகும் சிறப்பும், கலைகளில் அரங்கின் இயல்பு முதற்கொண்டு ஆடல், பாடல், கூத்து கானல்வரிகள், இசை, பண்
முதலான அனைத்தின் சிறப்பும் அமைப்பும், ஊரழகும் சிறப்பும் இங்கு சொல்லாத பலவின் தன்மைகளையும் சொல்லும் "புகார்க் காண்டம் முற்றிற்று!".

".....தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒருபரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று."

( வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

கடல் என்ற அகழியால் சூழப்பட்ட இப்பூமிக்கு மாலை போல அமைந்த காவிரிப்பூம்பட்டினம், ஞாயிறும் (கதிரவன்), திங்களும் (நிலவு) நிலைபெற்று வாழ்வதுபோல் என்றென்றும் புகழ்பெற்று நிலைப்பதாகுக!; என்றியம்பிய இளங்கோவடிகளுடன் நாமும் சேர்ந்து புகாரை, சோழமண்ணைப் போற்றுவோம்!
வாழ்த்துவோம்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
01-ஆகத்து-1999

Saturday, July 24, 1999

சிலம்பு மடல் 14

சிலம்பு மடல் - 14 மாதவி மறந்து கண்ணகி சேர்தல்
புகார்:
வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை:

வடவேங்கட மலைக்கும் தென்குமரிக் கடலுக்கும் இடைப்பட்டது தமிழ்நாடு என்றுரைக்கும், இந்த இரண்டு அடிகளையும் தவிர்த்து எழுதப்பட்ட தமிழ், தமிழர்,தமிழக வரலாறு தமிழுழகில் இருக்க முடியாது.
அப்படியிருந்தால் அது தமிழர் வரலாற்றிற்காக எழுதப்பட்டதாக இருக்கமுடியாது.

"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு.."

சிலம்பு குறிக்கும் இவ்வடிகள், கரிகாலன் பற்றிய குறிப்புகள், குமரி மற்றும் பகறுளி ஆறு பற்றிய குறிப்புகள் தமிழ்நில வரலாற்றிற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. நாவலர்.சோமசுந்தர பாரதியார்
அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவர் இக்குறிப்புக்களை கையாண்டிருக்கும் விதம் வியக்க வைத்ததென்னை. வேனில் காதையிலே தமிழர் நாடுகளில் சிறப்புற்று விளங்கிய நகரங்களை விளக்குமிடத்து எழுதப்பட்ட அடிகள் இவை.

கோவலனை இழந்து வாடிய மாதவி காதலெனும் அருநட்புக் கருகியதை எண்ணி எண்ணி தவிக்கிறாள்!
கோவலனுக்கு மடலனுப்புகிறாள் தோழி வாயிலாக.

அதைப் படிக்கவும் மறுக்கிறான் கோவலன்;

நாட்டிய மடந்தையின் நாடகமென்கிறான் அவன்! சந்தேக வெறியும் ஆணாதிக்க வெறியும் அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டன! அவள் பழகிய அனைத்தும் நாடகமே என்று சாதிக்கிறான் திருமுகம்
கொண்டு வந்த மாதவியின் தோழியிடம். மாதவியின் பலசெய்கைகளை அவன் கூறினாலும், உச்சமாக, "தேவைப்படும் போதெல்லாம் வா என்றால் வருவாள், போ என்றாள் போவாள்" அந்த நாடகக்காரி;
அவளிடம் இனியும் மயங்கமாட்டேன் என்கிறான்.

"நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்".....

கண்ணகியின் கற்பு வாழ்க்கையையும் கனலிட்டுவிட்டு,மாதவியின் இன்பவாழ்க்கைக்கும் இருளிட்டுவிட்டான்
கோவலன். காரணம் சபலம், சந்தேகம், சலனம்:

பிரிந்து போன ஆண்மை பிரிந்தே நிற்க, பெண்மையோ காதலால் கதறுகிறது! மாலை வாராராயினும் காலை காண்குவம் என்று காத்திருப்பதைக் கற்றுக் கொள்கிறது!

"மாலை வாரார் ஆயினும் மாண்இழை
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்".

மாதவியின் நிலை அப்படி இருக்க, கண்ணகிக்குத் துணையாக வந்த/இருந்த தேவந்தி என்ற பெண்மணி 'உன் கணவனை அடைவாய்' என்று வாக்குதிர்க்க கண்ணகி அவளிடம் தான் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்கிறாள்!

தேவந்தியே கனவொன்று கண்டேன்!

"கணவரோடு கைகோர்க்கின்றேன்; இருவரும் பெரிய ஊரொன்றுக்குப் போக, ஆங்கு தகாத பழியை "இடு தேளிட்டது போல்" (தேளில்லாததை தேள் என மேலே போடுதல்) என் கணவர் மேல் போட்டனர்; அது கண்டு பொறுக்காத நான் அந்நாட்டு மன்னன் முன் சென்று முறையிட்டேன்; மன்னனுக்கும் அவ்வூருக்கும்
தீங்கு நேர்ந்தது! தீங்கு தீயினால் ஏற்பட்டதாய் உணர்கிறேன்;

இக்கனவு என்னை வாட்டுகிறது; என் கணவரொடு சேரினும் எப்படி உயர் நிலையை அடையப் போகிறேன் என்று நினைத்தால் நகைப்பு வருகிறது!"

"கடுக்கும்என் நெஞ்சம் கனவினால்; என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்;
பட்ட பதியுள் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தலைமேல்;
கோவலர்க்கு உற்றதோர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனோடு
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்!
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ!"......

இதற்கு தேவந்தி, காவிரிச் சங்கம இடத்திலே இருக்கும் பொய்கைகளான சூரிய குண்டம், சோம குண்டம் இவற்றில் நீராடி எழுந்தால் உன் முற்பிறவிப் பாவம் தொலைந்து கணவரொடு சேர்ந்து இன்பமாக இருப்பாய் என்று சொல்ல அதற்குக் கண்ணகி 'அது பெருமையன்று' என்று கூறுகிறாள்!

"கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்து தையலார்
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் யாம் ஒரு நாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
'பீடுஅன்று ' என இருந்த பின்"..

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு பெருமை சேர்ப்பவை எவ்வளவோ இருந்தாலும் அவற்றிலெல்லாம் சிறந்தது 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்தது!

முளைவிட்ட ஆரியக் கருத்துக்களின் வேர் வெட்ட வந்த மாதர் குல மாணிக்கம் அவள்!

அவளின் சிலையைக் காணும்போதெல்லாம், காற்சிலம்பைச் சிதறடித்துக் கற்பால் கனலிட்டது தெரியவில்லை!

மூடக்கருத்தொன்றை முனைமழுங்கச் செய்த, பெரியாரினும் பெருந்தாய் எனப்படுகிறது இவ்விடத்து நோக்கின்.

பெருமையன்று என்று உதிர்த்து முடித்தாள் கண்ணகி!

ஓடி வந்தாள் பணிப்பெண்; "வந்து நிற்கிறார் ஒருவர் வாசலிலே!
நம் கோவலர் போல் தெரிகிறார்;" சொல்லி முடிக்குமுன்னர் கோவலன் கண்ணகி முன் வந்து நிற்கிறான்;

வந்து நின்றான் வாடி மெலிந்து வருந்தி வாழ்ந்தவள் முன்!
வருந்தி நின்றான்! வருந்தியவளின் வாழ்வை நினைத்து!

சொல்லி நின்றான் வஞ்சம் நிறைந்த பொய்மையுடன் கூடிக்களித்ததாக!

வறுமையில் நின்றான் செல்வம் அத்தனையும் இழந்ததனால்!

வெட்கி நின்றான் இளமை வெள்ளத்தை எங்கோ தொலைத்ததற்கு!

" 'பீடு அன்று' எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள்; கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடியமேனி வருத்தம்கண்டு, யாவும்
'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன,".........

கண்ணகியோ கடுகளவும் முகம் சுளித்தாளில்லை! கட்டியணைத்தாள் இல்லை! கண்ணீர் சொரிந்தாளும் இல்லை!

சிறு முறுவல் பூத்தாள்!

ஆடி ஓடி அழுக்காக வந்து நிற்கும் மகனைத் தாய் பார்த்தல் போல!
முகமெங்கும் இன்பம் ஓங்க அன்பைப் பொழிந்தாள் அந்த ஒரு சிறு நகையில்.

நாலடியார் விவரிக்கும் தலைவியொருத்தியின் நிலையிலேயே கண்ணகியும் இங்கு!

'முன்பு என் தலைவன் முன்பு 'ஈ' பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இன்று, பரத்தையுடன், தீப்பொறி எழும் அளவுக்கு முலைகள் மோத இன்பம் துய்த்ததால் சந்தனம் கலைந்து வந்த தலைவனின் மார்பைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பவளும் யானே!'

என்ற நாலடிகளுக்கு உதாரணமாய் கோவலன் முன் நின்றிருந்தாள் கண்ணகி!

"சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்-தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்."
(நாலடியார்)

கண்ணகியின் அந்தச் சிறுநகையிலும் இழப்பு இழையோடாமல் இல்லை!

உதிர்த்தாள் இதழ் திறந்து!

சிலம்புகள் உள்ளன! எடுத்துக் கொள்ளுங்கள்!
ஈட்டுங்கள் என்று சொன்னாள் கண்ணகி,
இழந்த செல்வத்தை எடுக்கத்தூண்டினாற்போல!

சேயிழையே! வணிக முதலளித்தாய் சிலம்புகள் தந்து! ஈட்டுவேன் மதுரை சென்று! இன்பம் வாழ்வோம்! புறப்படு நீயும் என்னொடு என்றான்;

பதிலெதும் உரைத்தாளில்லை! புறப்பட்டனர் கதிரவன் காரிருள் கழட்டுமுன்னர்!

"நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
'சிலம்புஉள கொண்ம்' எனச் சேயிழை! கேள்இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலர்ந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென்று; என்னொடுஇங்கு
ஏடு அலர் கோதாய்' எழுக என்று நீடி"...........


அன்புடன்
நாக.இளங்கோவன்
24-சூலை-1999

Sunday, July 11, 1999

சிலம்பு மடல் 13

சிலம்பு மடல் - 13 நெஞ்சில் வாழும் கானல்வரிகள்!

புகார்:
கடலாடுகாதை, கானல்வரி:

இந்திரவிழா உச்சத்திலே கயற்கண்களைத் துடிக்கவிட்டு அறிய இயலா கற்பனைகளை அம்மங்கையருக்கு அளித்துவிட்ட கவிஞர், கடலாடுகாதையிலும் அவ்விழா பொருட்டு மாந்தர் கடலாடுவதையும், நகரச் சி
றப்பையும், மாதவி வனப்பையும், கூத்துகளையும் அளவிடற்கரிய சொல்லில் விளக்குகிறார்; புகார் சிறப்புக்களைக் காலத்தினார் பின்னோர் நமக்கு சிலம்பென்ற பேழையில் செதுக்கி வைத்து சென்றிருக்கிறார்.
இந்திரவிழாவின் சிறப்பிலொன்றாம் கடலாடு கலைகளை காதையொன்றில் நிரப்பி வைத்திருக்கிறார்.

போதும் இந்த இன்பம்; போவோம் வரிகளுக்குள்!

தேனடையாம்! இந்த கவிக்கோ "படியுங்கள் பாடுங்கள்" என்று தந்த இவை, கவிஞர்களுக்கும் தமிழறிந்தோர்க்கும்!

இக்கவிதைகளின் பால் ஏற்பட்ட பொறாமையால் ஊமையாகின்றேன்!
வரிகளை வரிக்கும் வகையறியேன்!
வரித்தால் விரிக்கும்!
நான் விரித்தால் வெறிக்கும்!
ஆதலின் பருகுவோம் சிலவரிகளை அப்படியே!

பருகிடின்,
உணர்ச்சி மிக்கு உதிர்ப்பார் உண்மைக் கவிஞர்!
உதிர்த்தவராயிரம் உலகில்! இங்கே ஆரோ ?

நிலைவரி: தன்னெதிரே தனிமையில் எதிர்ப்பட்ட தலைவியைப் பார்த்து "வானில் இருக்கும் பாம்புகட்கு(இராகு, கேது) பயந்து, வெண்நிலவு பரதவர் வாழும் இந்தப் புகார் நகரத்தில் வாழ்கிறதோ? புகாரில் இறங்கிய முழுநிலவு தன்மேல் கயலொத்த கண்ணெழுதி, அதைச் சுற்றி வில்லெனப் புருவம் தீட்டி, கார்மேகக் கூந்தலையும் எழுதி விண்வாழ் பாம்புகளுக்கு மறைந்து பூமியில் வாழ்வது போல் தோன்றும் தலைமகளே" என வியந்து கூறுகிறான் அவளின் அழகில் மயங்கி!

"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர்! திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே."

முரிவரி: தலைமகன் தனக்கு வருத்தம் எதனால் உண்டானதென்று கேட்கப்பட, தன் காதலியின் இசையொத்த இனிய மொழியாலும், பூம்பொழில் தரும் நறுமணம் நிறைந்த மலர்களாலும், வார்த்தைகளால் எழுத இயலாத வனப்பு கொண்ட மின்னலொத்த அவளின் இடையாலும், வில்லையொத்த புருவத்தாலும், அழகிய
இணைந்த இளம் கொங்கைகளாலும், சுருண்ட கூந்தலாலும், வெண்பொன் பற்களாலும் தான் ஆட்கொள்ளப்பட்டு அந்த அழகின் அதிர்வுகளில் இருந்த மீள இயலாத இன்ப இடரை எடுத்துரைக்கிறான்.

"பொழில்தரு நறுமலரே, புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே, பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனைஇடர் செய்தவையே!"

"திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே, மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே!"

"வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே
தளையவிழ் நறுமலரே, தனியவள் திரியிடமே
முளைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே!"

தலைவியைக் கூடிவிட்டு நீங்க இயலாமல் நீங்கிவருகின்ற தலைவன் அவளருமை குறித்து தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்;

'செம்பவள உலக்கை கொண்டு வெண்முத்துக்களை குற்றும் இவளின் என்னைப் பார்க்கும் கண்கள், செவ்வரி ஓடிய குவளை மலரை ஒத்திருந்தாலும், பார்வையில் தெரியும் காதல், குவளை மலரின் மென்மை
போன்றதல்ல! மிகவும் கொடியது கொடியது!!

புலால் மணம் வீசும் கடலின் ஓரத்திலே, புன்னை மரங்களின் நிழலிலே, அன்னம் போல் நடை நடந்து அழகாய்ச் செல்லும் இவளின் கண்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கண்களாய்த் தெரியவில்லை. செவ்வரி ஓடிய அவை என் மேல் கொண்ட காதலால் என்னையே கொல்ல வரும் கூற்றே
அது! கூற்றே அது!.

மீன்வற்றல் திண்ண வரும் பறவைகளை, கையிலே தேன்சிந்தும் நீலமலரேந்தி கடிந்து விரட்டும் இவள் என்னைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம், இவளின் கண்கள் வெள்ளிய வேல்களாகக் கூட குற்றவில்லை!
குற்றுமந்த செவ்வரிப் பார்வை அதனினும் கொடியது! கொடியது!!

அழகு ததும்பும் அழகிய அன்னமே!, அன்ன நடையழகே நல்ல பெண்ணழகு! ஆயினும் அவளுடன் கடலோரம் நீ நடக்காதே! அவளின் நடையழகில் உன் அன்ன நடை குறுகிப்போகும்! கடல் சூழ்ந்த உலகில் அனைவரையும் தன் அழகால் கொன்று குவிக்கும் அவளின் அழகு நடைக்கு ஒப்பாய் உன்னால் நடக்க
இயலாது! இயலாது!!'

"பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல! கொடிய கொடிய!

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய! கூற்றம் கூற்றம்!

கள்வாய் நீலம் கையில் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல! வெய்ய வெய்ய!

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்!
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!"

காமம் மிக்க கழிபடர் கிளவி:காதலனைக் காணாமல் காமம் மிகுதலால் உண்டான துன்பத்தில் காதலி தான் கண்டவற்றுடன் பேசுகிறாள்;

"அன்னங்களே!, அடுப்பங்கொடிகளே! குதிரை பூட்டிய தேரில் வந்த நமை குளிர்வித்த தலைவர் என்னையும் நம்மையும் மறந்து விட்டார்; ஆயினும் நாம் அவரை மறவாதிருப்போம்!

நெய்தல் மலரே, அவரைக் கண்டு நாளானதால், கனவிலாவது காண்போம் என்றால், காமம் மிகுபட கண்கள் உறங்க மறுக்கிறதே! என் செய்வேன்?. நீயாவது நிம்மதியாய் உறங்குகிறாய்; உன் கனவிலாவது வந்து ஏதும் சொன்னாரா என் தலைவர்?

கடலே, கடலே! என் தலைவன் வந்து போன தேரின் சக்கரங்கள் சென்ற தடமெல்லாம் உன் அலைகளைக் கொண்டு அழித்துவிட்டாய்! என் ஆறுதலுக்கு அவையும் இல்லாமல் போக துடிக்கின்றேன் நான்! என் நிலை கண்டு தூற்றும் அயலாருடன் நீயும் சேர்ந்து எனைத் துன்புறுத்துகிறாயே! என் செய்வேன் நான்!.

"புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று என்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று என்செய்கோ?

நேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே!
பூந்தண் பொழிலே! புணர்ந்துஆடும் அன்னமே!
ஈர்ந்தன் துறையே! இதுதகாது என்னீரே!

நேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்!
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்று எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்!"

மயங்கு திணை நிலை வரி: தன் தலைவனின் துணையில்லாததால் மாலைப் பொழுது கண்டு தலைவி துன்புற்று, தோழியிடம் சொல்கிறாள் இரவின் இன்னலை!

"பகல் செய்யும் கதிரவன் மறைகிறானே, கருமையான இருள் சூழ்கிறதே! காவி மலரொத்த என் கண்கள் காமநோயால் கண்ணீர் சொரிகின்றனவே! என் காமத்தைத் தீர்க்கும் என் தலைவன் எப்போது வருவான்?
அவனுக்கு மட்டும் இந்த துன்பம் இருக்காதா? என் துன்பத்தை உணரமாட்டானா? என் இடத்தில் மறையும் கதிரவனும், சூழும் இருளும் அவனிருக்கும் இடத்திலும் இருக்காதா? அவனுக்கும் காமநோயைக் கொடுத்து
அவனை என்னிடம் வரச் செய்யாதா?"

"இளைஇருள் பரந்ததுவே! எல்செய்வான் மறைந்தனனே!
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே!
தளைஅவிழ் மலர்க்குழலாய்! தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை ?

கதிரவன் மறைந்தனனே! காரிருள் பரந்ததுவே!
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே!
புதுமதி புரைமுகத்தாய்! போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை ?

பறவைபாட்டுஅடங்கினவே! பகல்செய்வான் மறைந்தனனே!
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே!
துறுமலர் அவிழ்குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்த இம் மருள்மாலை ?


நண்பர்களே! நண்பர்களே!

இவ்வரிப்பாடல்களை ஒருமுறை படித்ததும், மீண்டும் படியுங்கள்! சத்தமிட்டுச் சொல்லிப் படியுங்கள்! கொட்டிக் கிடக்கும் கவிதை இன்பத்துக்காக மட்டுமே இவைகளை எடுத்து எழுதியிருக்கிறேன்!

ஒருமுறைக்கு சிலமுறைகள் படிப்பின் காதல் அலைகளால்,

கொதித்தார் காதலர்! கொதித்திலார் தீதுளர்!!
கொதித்தவர் பதிப்பர் கொஞ்சும் கவிதைகளை!
கொஞ்சல் அஞ்சுவர் நெஞ்சில் வஞ்சமுளர்!

கவிதையின்பத்தை, தலைவன் தலைவி காதலின்பத்தை இம்மடலில் முதலில் வைத்தது, கதையின்பம் சற்றுமாறி, துன்பத்திற்குத் தூது போவதால்!

கண்ணகியிடம் இருந்து கோவலன் கழன்று வந்ததொரு திருப்பமென்றால், மாதவியை மறப்பதுவும் திருப்பமாகிறது. காவிரிக்கரையில் கானல்வரியில் ஏற்படும் திருப்பமே பின்னால் கங்கைக்கரை தாண்டி இமயம் வரைச் செல்கிறது.

தூய்மையும் அமைதியும் நிறைந்த வேளையில் தோழி கொண்டுவந்து தந்த யாழைத் தொழுது அதை கோவலனிடம் கொடுக்கிறாள் மாதவி! மாதவி மனம் மகிழும் நோக்கோடு ஆற்றுவரி, கானல்வரிப்பாடல்களை
யாழிசைத்துப் பாடுகின்றான் கோவலன்.

"கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்."

மக்களைப் போற்றும் மன்னனைப் போற்றுவதே மண்ணைப் போற்றுதலாம்! நதியைப் பெண்ணாக்கி அப்பெண்ணை இறைவனோடு சேர்த்து வணங்குதலைக் கண்டிருக்கிறோம்; இங்கு கோவலக் கவிஞன் காவேரி, கங்கை, கன்னி (கன்னி=கடலால் கொள்ளப்பட்ட குமரியாறு) ஆறுகளைப் பெண்களாக்கி அவற்றை சோழமன்னனின் காதலிக- ளாக்குகிறான்.

காவேரி வாழ் சோழன் எல்லைகள் பல கடந்து வடக்கே கங்கையையும் எல்லையாக்கி, ஆட்சி செய்கிறான் என்ற கருத்தில், காவேரியே உன் கணவன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ வெறுத்து அவனை கைவிடாத பெருங்கற்புடைய மாதரசி என்கிறான்!

தெற்கே குமரியாற்றை எல்லையாக்கி சோழன் ஆட்சி செய்தாலும், காவேரியே நீமட்டும் அவனை மறுப்பதில்லை; அதற்கும் மாதரின் கற்பு நிலையே காரணமென்கிறான்!

"திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்!
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி!

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி!

உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி!
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி!"

கண்ணகியை மறந்து தன்னிடம் ஓடி வந்த கோவலன், மாதரார் கற்பு நெறிப் பேசுதலைக் கேட்டு ஐயுற்ற மாதவி, தனக்கும் கற்பை மட்டும் சொத்தாக்கி விட்டு வேறொரு மலருக்கும் தாவுகின்றானோ என்று சந்தேகிக்கிறாள்! அல்லது சிந்தித்தாளோ ?

ஆறுகளும் அவன் பாடல்களும் அந்த பாடல்வளங்களும் அவள் மனத்தை மகிழ்விக்கவில்லை!

கண்ணகி வாழ்வை மாதவி இடற, கங்கையும், கன்னியும், பொன்னியும் மாதவியின் மனத்தை இடறுகின்றனர்!

இடறும் மனத்துடன் இருந்தாளில்லை!

கற்பென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று இந்நூற்றாண்டில் பாரதி சொன்னது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிந்தித்த மாதவியைப் படித்ததினாலோ ?

எத்தனை மலர்கள் தாவுவான் இவன்? கற்பு பேசுபவன் பெண்ணுக்கு மட்டும் அதை விற்கிறானே? சிந்திக்கிறாள்! மனங்கொள்ளாமல் சினங்கொள்கிறாள் ?

பாரதிக்கும் முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கற்பைப் பொதுவென்று சிந்தித்த புரட்சிக்காரி மாதவி என்பேன் நான்!

அவள் கொண்டது சந்தேகம் என்கிறார் மாந்தர்; ஆசிரியரோ ஊழ்வினையில் உருத்ததென்று நழுவிப் போகிறார்; ஒப்பவில்லை நான்!

பெண்ணின் சிந்தனையைப் பொடியதென்று ஒதுக்கி விட்டுப் பாடியிருக்கிறார் கவிஞர்! ஒப்புக் கொண்டனர் அறிஞர், புலவர்! ஒப்ப மாட்டேன் நான்!

சினத்தை சிந்தையில் மட்டும் கொண்டு, செயலாக யாழைக் கோவலனிடம் இருந்து வாங்கி, தானும் ஒரு குறிப்பு கொண்டு, அதாவது தான் வேற்றொரு ஆடவனை மனதில் கொண்டு பாடுவதாக கோவலன் நினைக்க வேண்டும் என்ற வகையில் யாழ்மீட்டிப் பாடுகிறாள்! அதே காவேரியை நோக்கி!

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர்மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி!
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி!"

காவேரியே!, அழகான, இன்பமான இருகரைகளுட்பட்டு, நீ அழகாக நடந்து செல்வதெல்லாம், உன் தலைவனான சோழ மன்னனின் திருந்திய செங்கோல் வளையாதிருப்பதால்தான்! அங்கனம் நீ செல்வது அவன் ஆற்றலினால்தான்! நீ அவன் தலைவியாகி, நாட்டு மக்களுக்குத் தாய் ஆகி வளம் செய்வதெல்லாம்
அம் மன்னவனின் நடுவு நிலைமை பிறழாத தன்மையே!

என்று, மாதவி காவேரியின் சிறப்புக்கெல்லாம் காரணம் அவளைக் கட்டியவனின் சிறப்பும், ஆற்றலும், நேர்மையும் என்று பொருள் படப் பாட, கோவலன் கொதித்துப் போகின்றான்!

நான் நல்லவன் அல்லேன் என்கிறாளே!
என் ஆற்றலைக் குறை காண்கிறாளே!

ஆடும் பரத்தையர் குலத்தில் பிறந்த பாவை,
பாடும் பாடல்களில் நஞ்சம் வைக்கிறாளே!

என் பொருள் உண்டவள், பிறன் திறன் வியக்கிறாளே!
பிறன் பொருள், திறன் வேண்டி என்னை நீங்கிட நினைக்கிறாளோ ?

அய்யம் கொண்டான்! ஆண்மை என்றதன் அர்த்தம் தெரியாதவன் பெண்மை மேல் வெம்மை கொண்டான்!

சந்தேக அரவம் கழுத்தைச் சுற்ற, மாதவியின் கரங்களாக அதை நினைக்கிறான்!

பெண்ணாகப் பிறந்தவளின் சந்தேகம் பாட்டோ டு நின்று விட ஆணாகப் பிறந்தவனின் சந்தேகம் அவளுடன் அறுத்துக் கொள்கிறது!

கோவலன் மட்டுமா இப்படி ?

இதைத்தானே இராமனும் செய்தான் !

அந்நாளில் மட்டும்தானா ஆணின் சந்தேகம் அளவுகடந்தது ?

அந்நாளில் மட்டும்தானா ஆணுக்கு சந்தேகம் அனுமதிக்கப் பட்டது?

இந்நாளிலும்தான்!
"கள்ளோ காவியமோ" என்ற ஒப்பற்ற காவியம் அல்லது கதையிலே பேரறிஞரும் சான்றோருமான மு.வரதராசனாரும், அருளப்பர் என்ற தன் ஆண் நாயகனுக்கு மட்டும், மங்கை என்ற மனைவியை அவர் பிரிந்து சேர்கையில் சந்தேகத்தை அனுமதித்திருக்கிறார்!

இவள் நம்மைப் பிரிந்திருந்தபொழுது வேறொருவரை நினைத்திருப்பாளா என்று எண்ண வைத்து அதை மங்கையைக் குறிப்பால் அறிய வைத்து பதில் சொல்ல வைத்த, ஆணாதிக்க அசம்பாவிதத்தை மு.வரதராசனாரும் செய்திருக்கிறார்!

மங்கைக்கு அந்த அனுமதியை அவர் அளிக்காதது, அல்லது அருளப்பருக்கு மட்டும் அனுமதியை அளித்தது அவரும் ஆணணியே என்று அறிவித்துப் போயிருக்கிறார் அந்த மாபெரும் தமிழறிஞர்!

பிரிகிறான் மாதவியை! மருள்கிறாள் மாதவி! மாறுவான் என்று காத்திருக்கிறாள்!

கோவலன் உள்மனதில் வேறொரு பெண்ணை எண்ணிப் பாடியதாகத் தெரியவில்லை! அப்படியென்றால் அவள் பாடின பதிலில் தவறில்லை!

அவள் பாடினது தவறென்றால், இருவரின் நட்பும் ஆங்கு இருள்நட்பன்றோ ?

அவளும் குற்றம் பார்த்தாள்! அவனும்தான்!

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீராத இடும்பை தரும்"

சொல்லிப்போனாரே குறளப்பர்! தெரிந்திலார் இருவருமே!

இன்னும் அவன் படப்போகும் இடும்பைகளுக்காகத்தான்

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்"

என்ற குறளைக் கூட்டி வைத்தாரோ குறளப்பர்!?

நாட்டோ ர் நலம் வாழ நடந்த காவேரி, கோவலன், மாதவி இருவராலும் போற்றப்பட்ட காவேரி, இருவராலும் சோழனுடன் இணைக்கப் பட்ட கா
வேரி இருவரையும் பிரித்து வைத்தது சோகம் தானே!

கண்ணகியுடன் காவேரி கைகோர்த்துக் கொண்டதா?

எல்லோருக்கும் தண்ணீரைக் கொடுத்து விட்டு, மாதவிக்கு மட்டும் மண்ணைப் போட்டு விட்டதா காவேரி!

அறம் பிழைக்க இவரைப் பிரித்தாளா காவேரி ?

ஒட்டு மொத்த சமுதாயமும் பரத்தையர் நட்பு 'அறம் பிறழ்தல்' என்று ஆக்காமல் இருந்த போழ்து காவேரிக்கு மட்டும் அறம் பற்றி யாது தெரியும் ?

அல்லது, மனித அறம் வற்றிப்போனதால், ஆறு அறம் வளர்த்ததா ?

எந்த சிந்தனையும் இன்றி
ஒய்யார நடைபோட்டு காவேரி மட்டும்
கரைகளிடையே தான் போக,
கறைகள் படிந்த மனங் கொண்டு கோவலனும் மாதவியும்
கரைகள் மாறுகின்றனர்!

மனித வாழ்க்கையில் பழிச்சொல் இன்றி வாழ்ந்தவர் யார் ?
தொழிலின்றி வாழ்ந்தவர் யார் ?
வாழ்நாளில் துன்பமிடைத் துவளாதார் யார்?
வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார் ?

நாலடிகளில் கேட்கிறார் நாலடியார்!

"யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் ? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்?-யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார் ? யாஅர்
கடைபோக செல்வம்உய்த் தார்?"

கோவலனுக்கும் மாதவிக்கும் இது பொருந்துமன்றோ?


அன்புடன்
நாக.இளங்கோவன்
11-சூலை-1999

Sunday, July 04, 1999

சிலம்பு மடல் 12

சிலம்பு மடல் - 12 இந்திரவிழா!
புகார்:
இந்திரவிழவூரெடுத்த காதை:

மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், இவற்றிற் கிடைப்பட்ட நாளங்காடி, ஆங்கோர் பூதம், மறமகளிரின் பூதவழிபாடு, வீரர்களின் பலிக்கொடை, சமுதாயத் தேவைகளுக்கான ஐவகை மன்றங்கள், அம்மன்றங்களில் உயிர்ப்பலிகள்;

புகாரின் முக்கிய அமைப்புகளில் நடைபெற்ற சடங்குகள் இந்திர விழாத் தொடக்கத்திற்கான ஆரம்ப நிகழ்ச்சிகளாக அமைய, விழாவோ யானைமேல் ஏற்றப்பட்ட மங்கலமுரசு, (இந்திரனின்) அய்ராவதம் (வெண்யாணை) நின்ற கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விழாத் தொடக்கமும் இறுதியும் முரசறைந்து தெரிவிக்கப்பட, அய்ராவதம் வரையப்பட்ட நெடுங்கொடி பறக்கவிடப்படுவதோடு விழா தொடங்குகிறது:
நகரம் விழாக் கோலம் பூணுகிறது!

"வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து:"

அய்ம்பெருங்குழு, எண்பேராயம், அரசச் சுற்றங்கள், பெருவணிக மாந்தர் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் வந்துகுழும, பரந்த இவ்வுலகத்தின் உயிர்களைக் காக்கும் தலைவர்களில் ஆயிரத்தெட்டு பேர் காவிரியின் பூந்தாது பொலிந்து கிடக்கும் சங்கமத்துறையிலிருந்து, பொற்குடங்களிலே குளிர்ந்த நீரை நிந
றத்து வந்து நிலவுலகோர் மருளவும், விண்ணுலகோர் வியக்கவும் இந்திரனைத் திருமுழுக்காட்டுகின்றனர்; எதற்கென்றால் "மாண்புமிக்க தம் மன்னன் எந்நாளும் வெற்றி கொள்வதற்காக"!

"ஐம்பெரும் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித் தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி;

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி,

மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி:"

இந்திரனுக்கு மட்டும் விழா செய்யப் படவில்லை!
அவ்வமயம் சிவன், முருகன், திருமால், வெள்ளையன் மற்றும்
'தனித்தனி தோற்றமுடைய வேறுவேறு கடவுளர்களுக்கும்
விழா ஆரவாரமாகச் செய்யப்பட்டன:

அத்துடன் வேதவழி தவறாது வேள்விகள் நடத்தப் பட்டன!

"நான்மறை மரபின் தீமுறை ஒருபால்"....

பிறசமயச் சாலைகள் (புத்த), மற்றும் இதர பிற அறச் சாலைகளிலும் திறமைசால் பெரியோர் கூறும் அறிவுரை நிகழ்ச்சிகள் (கிருபானந்த வாரியார் உரைகள் போல! ) நடக்க, இக்காலத்தில் சுதந்திர நாள் அல்லது முக்கிய விழாக்காலம் சிறைக்கைதிகள் வெளிவிடப்படுவது போல, அந்நாளில் இந்திர விழாக் காலத்தில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

(அரசனுக்கு எதிராக செயல்பட்ட வேற்றுநாட்டு அரசரின் அடிமைகள்/ஆட்கள் விடுவிக்கப் பட்டனர் )

"கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்".........

கூத்தும், பாட்டும், இசையும், முழவும் நிழச்சிகளாக நகரமெங்கும்
நடந்துகொண்டிருக்க, விழாக் களிப்பில் மக்கள் தம் சுற்றம் சூழ
மகிழ்ந்திருந்தனர். ஆங்கு பல்வேறு மணம் கமழும் மலர்களொடும், சுகமானவைகளாகக் கருதப்பட்ட யாவற்றுடனும், காமமொழிகள் கூறும் பெண்களொடும், இசை கூறும் பாணரொடும், நகரப் பரத்தொரொடும்
களித்துத் திரியும் கோவலனைப் போல பொதிகை புறப்பட்ட தென்றலும் இசை பாடும் வண்டுகளோடும், இனிய இளவேனிற் பருவத்தொடும் புகார் நகரவீதிகள் யாவையும்சுற்றி வந்தன. கவிஞர் இங்கே தென்றலின் சுகமான போக்கை கோவலப் போக்கென்று உவமையிட்டுக் காட்டுவது கவிஞர்களின் மனத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

"குரல்வாய்ப் பாணரொடு நகரப்பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்"

எங்கும் இன்பமும், இனிய விழாச் சூழலும், களிவெறியும் கரைபுரண்டு ஓடும் வேளைதானே கண்டவரை மயக்கும் பரத்தையர்க்கும் உகந்த நேரம்! மனையிருக்க, பார்வையில் மயக்கிடும் பரத்தையரைத் தொட்டுத்
தொய்ந்து போய் இல்லம் திரும்பிய கணவனை ஊடிச் சினந்த மனைவியர் முன் அவ்விதம் போன ஆடவர் நடுங்கிப் போய் நிற்பதுவும் ஆங்காங்கே!

இந்திரவிழாக் களிப்பின் உச்சத்தில் மாந்தர் களித்து மகிழ்ந்திருக்க, கோவலனைப் பிரிந்து அவனுடன் கூட்டம் இல்லாமையால் ஒளி இழந்த கண்ணகியின் கருங் கண்களில், இடக்கண் மட்டும் ஏனோ துடித்திட அவள் மனம், பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நலம் பயக்கும் என்ற நம்பிக்கையிலே சற்று புத்து
ணர்வு ஏற்படுகிறது;

கோவலனுடன் கூடிக் குதூகலித்தலால் பூரித்து வாழும் மாதவியின் ஒளி மிகுந்த செங்கண்களில், வலக்கண் துடிக்க, உள்ளம் பதைக்கிறாள் மாதவி! இன்னதென்று புரியவில்லை அவளுக்கு!

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்."

இந்திரவிழாவின் உச்சக் களிப்பில், கோவலனில் உறைந்து கிடந்த காலமே அவளின் இன்ப வாழ்வின் கடைசிக் காலம் என்பதை அந்த சிறு மங்கை நல்லாள் எப்படி எண்ணியிருக்க முடியும் ?

இதோ, இன்னும் சிறிது காலத்தில் இன்பம் அனைத்தையும் இழக்கப் போகிறோம் என்று ஒரு வேளை அவள் அறிந்திருந்தால் அவளின் மனித உள்ளத்தின் மானுடச் சுழல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
04-சூலை-1999

Tuesday, June 22, 1999

சிலம்பு மடல் 11

சிலம்பு மடல் - 11 கரிகாலனும் சித்திரமண்டபமும்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

சோழப்பேரரசை ஒருகாலத்தில் ஆண்ட கரிகாற்சோழன் எனப்பட்ட திருமாவளவன், தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் பகை கிட்டாமல் வருந்தி பகைதேடி வடக்கு செல்கிறான்; வடக்கிலனைவரையும் வென்றவனை
மேலும் வடக்கு நோக்கி செல்லமுடியாமல் இமயமலை தடுக்கிறது. அதனாற் சினந்து அவன் இமயத்தில் புலிக்கொடியை ஏற்றி விட்டு நாடு திரும்புகிறான்.

"இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் (நண்ணார்=பகைவர்)

மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்என"...........

அப்படித் திரும்பும் வழியிலே வடபுலத்து வச்சிர, மகத, அவந்தி நாட்டு அரசர்கள் முறையே முத்துப் பந்தல், பட்டி மண்டபம், தோரண வாயில் முதலியவைகளைத் திறையாக சோழனுக்குத் தருகின்றனர். வெவ்வெறு நாட்டினதாகிய இம்மூன்றையும் சோழன் புகாரிலே ஒரே இடத்தில் சேர்த்து அமைத்துக் கட்டிய மண்டபம் 'சித்திரமண்டபம்' எனப்பட்டது.

"மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்".........

உயர்ந்தோர் போற்றும் இந்த சித்திர மண்டபம் செய்யப் பெற்ற புகாரிலே வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் என்ற அய்ந்து வகை யான மன்றங்கள் இருந்தன.

வெள்ளிடை மன்றம் என்பது பொருள்களை சேமித்து அல்லது
பாதுகாத்து வைப்பதற்கான ஒரு இடம் அல்லது பண்டக சாலை. அதற்குக் காப்போர் இல்லை; கதவுகளும் இல்லை.

பொருள்களை அல்லது பண்டங்களைக் கள்வனிடம் இருந்து காக்கும் அவசியம் இல்லை; காரணம் இந்தக் கவர்வார் இல்லாத செல்வநிலையாகவே இருந்திருக்க வேண்டும். தற்போதும் வெளிநாடுகளில் வேந
லநேரம் முடிந்த பின் கடைகள் திறந்தோ, காவலில்லாமலோ அதிகப் படியான பாதுகாப்பு இல்லாமலோ இருக்கக் காண்கிறோம்.

அப்படித்தான் இந்தத் தமிழகமும் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ஒரு வேளை யாரும் கவர்ந்தால் அப்பண்டத்தை அவர்கள் தலையில் கடுமையாக சுமத்தி ஊரைச் சுற்றி வரச்செய்து கடுமையாக தண்டித்தனர்; (வெளிநாடுகளில் சிலவற்றில் குப்பையைக் கீழே போட்டால் ஊரைக் கூட்டச்
செய்யும் தண்டனை போல) ஆதலின் களவாட நினைப்போரை நடுங்கச் செய்யும் இந்த 'வெள்ளிடை மன்றம்'.

"வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்"........

(உள்ளுநர்=நினைப்போர்;கட்போர்=திருடர்)

'இலஞ்சி மன்றம்' என்பது ஒரு பொய்கையைக் கொண்டது. இப்பொய்கையில் முழுகி எழும், கூனர், குள்ளர், ஊமையர், தொழுநோயாளர் போன்றவர்களுக்கு உடற்குறைகள் உடன் மறைந்திடுமாம்!

'நெடுங்கல் மன்றம்' என்ற மன்றத்தில் நெடிய கல் ஒன்று நடப்பட்டிருக்க அக்கல்லைத் தொழுது சுற்றி வரும், பிறரால் வஞ்சனை மருந்து ஊட்டப்பட்டதால் வாடுவோர், (செய்வினை, முட்டை மந்திரித்தல்,
ஏவல் போன்ற செய்திகளை கிராமங்களில் கேட்கலாம்) அரவத்தால் தீண்டப்பட்டோ ர், பேயினால் பெருந்துன்பமுற்றோர் அனைவருக்கும் உடன் துயர்கள் நீங்குமாம்.

போலிச் சாமியார்கள், கணவனுக்கு துரோகம் செய்து பிற ஆடவருடன் கூடும் பெண்டிர், அரசனைக் காட்டிக் கொடுக்கும் அமைச்சர், பிறன் மனை விழைவோன், பொய்ச்சாட்சி சொல்வோர், புறங்கூறுவோர் போன்றவர்கள் "என் கையில் உள்ள
கயிற்றில் அகப்படுவர்" எனக் கடுங்குரலில் கூறி அவ்வாறு அகப்படுவோரை நிலத்தில் அடித்துக் கொன்று தின்னும் பூதம் இருந்த இடம் 'பூதச் சதுக்கம்' எனப்பட்டது! இந்த வகையான தீயவர்களை ஆசிரியர் அழகுபெயர்களால் அழைப்பது கற்கத் தக்கது!

"தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்"

(கரி=சாட்சி; பாசம்=கயிறு)

அரசின் கோல் தவறினாலும் அல்லது அறவோர் சபை வழுவினாலும் அதனால் பாதிக்கப்பட்ட மாந்தர் தம் துன்பத்தை வாயால் உரைக்காது கண்ணீரால் வெளிப்படுத்த ஒரு மன்றம்; அது பாவை மன்றம்; அய்ந்து வகை மன்றத்திலும் சிந்தனையைக் கவருவது இந்த பாவை மன்றம் என்றால் அது மிகையாகாது.

"அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழூஉம் பாவை மன்றமும்"...........

நாடெங்கும் அழுகுரலாகவே இருக்கும் என்பதால்தான் இந்நாள் இந்நாட்டில் பாவை மன்றங்கள் இல்லையோ ?

எங்கும் அழுவோர்க்கு எதற்குப் பாவைமன்றம் என்ற நிகழ்வா ?

அரசமன்றம் பாவமன்றமானபின் பாவைமன்றம்தான் எதற்கு ?

நீதிதேவதையின் நாவையும் வாங்கும் மாந்தர்முன் பாவைதான் எதற்கு ?

இந்த ஐவகை மன்றங்களிலும் இந்திரவிழாத் தொக்கத்தில் உயிர்ப்பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது!

அன்புடன்
நாக.இளங்கோவன்
22-சூன்-1999

Monday, June 14, 1999

சிலம்பு மடல் 10

சிலம்பு மடல் - 10 இந்திரவிழாவும் பலிக்கொடையும்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

மருவூர்ப்பாக்கத்தையும், பட்டினப்பாக்கத்தையும் பிரித்து அல்லது சேர்த்து வைத்த பகுதியிலே பேரங்காடி ஒன்று இருந்தது; நாட்பொழுதில் இயங்குவதால் அது நாளங்காடி எனப்பட்டது.

"இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்"........

(ஓதை = ஒலி)

அந்த நாளங்காடியிலே பூதம் ஒன்றின் கோயில் இருந்தது: இந்த பூதமானது சோழமன்னனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக, தேவர் தலைவன் இந்திரனால் (தேவர் கோமான்) அனுப்பப்பட்டதாம்.

"வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதம்"

இந்த பூதத்தை மறக்குல மகளிர், சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று (சித்திரைப் பெளர்ணமி ) வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.

"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென".......

மகளிர், ஊன்தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து (இருகைகளையும் மடக்கி அடித்து ஆடும் கூத்து), குரவைக் கூத்து (கைகோர்த்தாடுவது) போன்றவற்றை ஆடி "எம்மன்னனின் ஆட்சி முழுதும் பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் பெருகுக" என வா
ழ்த்தி வழிபடுகின்றனர்!

"பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"...........

மறக்குல மகளிர் தன் அரசனின் ஆட்சி நலம் பெற வாழ்த்தி வழிபட, வீரர்களின் வீரத்துக்கு வரம்பு அல்லது எல்லை என்றால் "தன் தலையைத் தான் அரிந்து, தம் மன்னனுக்குத் துன்பம் நேர்ந்தால், அதிலிருந்து அவனைக் காப்பதன் பொருட்டு பூதத்திற்குப் பலியிடலே" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வீரமிக்க மருவூர் மறவரும், பட்டினப் பாக்கப் படைவீரரும் பலிபீடம் சென்று, "எம்மன்னனுக்கு ஏற்படும் இன்னல்களை ஒழிப்பாயாக" என்று வேண்டி, ஆரவாரித்து, பலபோர்களிலே வெற்றிவாகை சூடிய வீரர்திலகங்கள், கண்டோ ரை அச்சுறுத்தும் சுடுகொள்ளி போன்ற கண்கள் பொருந்திய தம் வலிமையான
தலையைத் தம் கரங்களாலேயே அரிந்து, அரிந்த கரங்களினாலேயே அத்தலையை பலிபீடத்தில் வைக்க(பலிக்கொடை!!), அதை ஏற்றுக்கொண்ட பூதம் நடுக்கம் தருமளவிற்கு இடிமுழக்கம் போன்ற குரல் ஒலிக்க,
தலைதந்த வீரரோ/வீரர்களோ, தம் தலை அகன்றபின்னும் தங்கள் உடலோடு கட்டிச் சென்ற "மயிர்க்கண் முரசை" தம் கரங்களால் தட்டி ஒலி எழுப்புகின்றனர்:

"மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுபலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகென
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்யுறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி; ".......

படிக்கும்போது, நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கச் செய்யும் காட்சி கண்முன் விரிவது, கட்டுப் படுத்த இயலாதது.

சிலம்பின் காலம் சுமார்1800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கரிகால் பெருவளத்தான் காலத்துக்குச் சற்றுப் பிந்தையது என்றும் அறிவோம். அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம்.

அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமும் என்று நாம் அறிவோம். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன் என்று பெயரிடப்பட்டு வழிபட்டது, காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை நகரமென்ற போதும் வேளான்மையால் சிறந்த சோழநாட்டின் பகுதியென்பதால் இந்திரவிழா மிகப் பொருத்தமான ஒன்றுதான்.

ஆனால் "தேவர்கோமான்" எனப்படும் போது "வானில் வாழும் தேவர்களின் தலைவன்" என்ற ஆரியக் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியக் காலத்துக்கும் சிலம்பின் காலத்துக்கும் இடையில்
கொள்கைகள் மாறி வலுப்பெற்றுவிட்டன என்று கருத முடிகிறது.

சோழமன்னனைக் காக்க பூதத்தை இந்திரன் அனுப்பினான் என்ற
கருத்தையும், அந்த பூதம் முழங்கியது என்ற கருத்தையும் பார்த்தால் இந்திரவிழா என்பது மூடவிழாவாகத் தோன்றுவதைத் தடுக்க இயலாது!

வானுறையும் தேவர்கள் மற்றும் அவர்கள் தலைவன் இந்திரன் என்றால் சோழநாட்டைக் காக்க அனுப்பிய பூதம் போல் பாண்டி நாட்டையோ, சேர நாட்டையோ காக்க ஏதாவது பூதம் அனுப்பப் பட்டிருக்க஧
வண்டும்! ஏன், இதர நாடுகளுக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும்! ஆனால் தமிழ் இலக்கியங்கள் வேறெங்கும் அவ்வாறு காட்டவில்லை!

ஆக, இந்திரன் என்பவன் தமிழர் கடவுளாகப் படைக்கப் பெற்றிருக்கிறான்; ஆனால் இடைக்காலத்தில் அவன் திரிக்கப் பட்டு தமிழரிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறான் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

அடுத்து, தன் தலையைத் தான் அரிந்து தம் மன்னன் நலத்திற்காகப் "பலிக்கொடை" செய்வது என்பது வீரத்தின் உச்சமாகக் கருதப் படலாம்!

அச்செயலுக்கும், இற்றைய மன்னர்கள் அல்லது தலைவர்களுக்காகத் தமிழகத்தில் "தீயாடிச் சாதலுக்கும்" (தீக்குளிப்பு) யாதொரு வேறுபாடும் இல்லை!

மன்னர் அல்லது தலைவருக்காகத் தீயாடிச் சாதல் முட்டாள்தனமென்றால், அற்றைய நாளில் தலைஅரிந்து செத்ததும் முட்டாள்தனமே!

ஈராயிரம்/பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் இத்தமிழ்ச் சமுதாயம் உணர்வின் உந்தல்களிலும், வீரவழிபாட்டிலும் வாழ்ந்து வதங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

ஒருபுறம் பகையின் கையில் கிட்டாதிருக்க விடமுண்டு சாகிறார் தமிழர்! தமிழினத்துக்காக சமுதாயத்துக்காக புறம் படைக்கிறார்!

அப்புறத்தை வாழ்த்தித் திரும்புகையில் இப்புறம் தனி மனிதருக்காக, அரைகுறை மனிதருக்காகத் தீயாடிச் சாகிறார் தமிழர்! இப்புறத்தை எண்ணி நாணுதல் வேண்டும்!!

மகளிரும் வழிபடுகிறார்; வீரரும் வழிபட்டு, பலிக்கொடை செய்கிறார்! எதற்காக என்று பார்த்தால் 'மன்னன் நலத்திற்காக' !

அக்காலமானது "மன்னவன் எவ்வழி; மன்னுயிர் அவ்வழி" என்று புறம் சொன்ன அறத்தை அடிப்படையைக் கொண்டது!

கடவுள், அரசு என்ற இரண்டும் தனித்தனியாக இயங்கின; மக்களைக் காப்பவன் அரசனாகவே இருந்தான்; அரசன் அறவழி நடப்பவனாக இருந்தான்; இக்கதையில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியனே எடுத்துக்காட்டு. அவன் அறவழி நடந்தால் குடிகளுக்குக் கவலையில்லை என்று மக்கள் நம்பினர். அதைத்தான்,

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்ற புறப்பாடல் அடிகளும் சொல்கிறது!

ஆதலால் குடிகளைக் காக்கும் அரசனைக் காக்க, குடிகள் தாம் நம்பிய கடவுளை வேண்டுகிறார்கள்; தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில்!

காக்கும் பொருளைவிட காக்கப்படும் பொருளே முதன்மை பெறுகிறது!

அரசனோ குடிகளையும் காத்து, பின்னர் பல நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட கடவுள்களையும், மதங்களையும் போற்றிக் காக்கின்றான்!

தற்காலம் வேறு; இந்த மாண்புகள் மாறிவிட்டன!

மதமும், கடவுளரும் மனிதரை ஆட்டிவைக்க, மனிதர் பிரிந்து நின்று, முதலில் மதத்தையும் கடவுளையும் காக்க மன்னரை வேண்டி நிற்கின்றனர்! மதத்தைக் காக்கவே அரசுகள் நடக்கின்றன.

தன் மன்னனைக் காக்க வேண்டி தன்னைக் கொடுத்த தத்துவம் மாறி, தன் மதத்தைக் காக்க மக்களைப் பலிகொடுக்கும் பண்பாடு வளர்ந்து விட்டது!

தேவைகளை மாற்றிக் கொண்டு தேம்பி நிற்கிறதோ தற்போதைய
சமுதாயம்?


அன்புடன்
நாக.இளங்கோவன்
14-சூன்-1999

சிலம்பு மடல் 9

சிலம்பு மடல் - 9 காவிரிப்பூம்பட்டினம்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

அலைநீராடை மலைமுலையாகத்து
ஆரப்பேரியாற்று மாரிக்கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை....

நிலமகளுக்கு, அலைமோதும் கடலை ஆடையாக்கி, ஓங்கி உயர்ந்த மலைகளை முலைகளாக்கி, அம்மலை வழிவரும் ஆறுகளை கழுத்தில் அணியும் மாலைகளாக்கி, அம்மலைமுடி மோதும் மேகங்களைக் கூந்தலா
க்கி, நிலமகளை அழகுபார்த்திருக்கும் சிலம்புக் கவிஞனின் கற்பனையில் கரைந்து கொண்டே, பூபாகத்தின் ஒருபகுதியாம் பூம்புகாரின் இரு பகுதிளான மருவூர்ப் பாக்கத்தையும், பட்டினப் பாக்கத்தையும் கவிநதஅடிகளில் விவரிக்கும் ஆசிரியரின் பாங்கை படிப்போர்க்குக் கவிஇன்பத்தை அள்ளி அள்ளி அளிப்ப஧
தாடு, சொல்லவரும் கருத்தை அணு அணுவாக ஆராய்ந்து அதன் முழுமையை வெளிப்படுத்தும் வழிமுறையை கற்பிப்பதாகவும் இருக்கிறது.

நீளம் அதிகம் எனினும், கவிச்சுவைக்காக, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த பலதரப்பட்ட மக்களை கவிஞர் விவரிப்பதை படித்தல், மகிழ்தல்!

மருவூர்ப்பாக்கம்.
--------------------

வேயாமாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்;

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;

காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழழினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்; ......

பட்டினப்பாக்கம்:
--------------------

கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்;

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்;
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்;

கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாண் இருக்கையும்;

பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்; ..

மருவூர்ப்பாக்கத்திலே தொழில் செய்வோர், வணிகம் செய்வோர், பிறர் இடு பணிகள் செய்வோர் சேர்ந்து வாழ்ந்ததாகவும்.

(சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கம் )

பட்டினப்பாக்கத்திலே அரசர், அரசுப்பணி செய்வோர், போர்ப்பணி செய்வோர், அவர்களுக்கு சுகம் அளிப்போர் மற்றும் ஏவல் செய்வோர் வாழ்ந்துவந்ததாயும் அறிய முடிகிறது.

(பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கம்)

அன்புடன்
நாக.இளங்கோவன்
14-சூன்1999

Sunday, February 28, 1999

சிலம்பு மடல் 8

சிலம்பு மடல் - 8 பரத்தையின்கண் பிரிதல்!

புகார்:
அந்திமாலை:

பெண்மையை வியாபாரம் செய்யும் பரத்தையர் மரபில் பிறந்திருந்தாலும் தான் பெற்றவைகளையாவது
அதைவிடச் சிறந்த வாழ்க்கையில் வாழவைக்கவேண்டும் என்ற எண்ணம் எதுவும் தோன்றிடாமல் குலக்க
ல்வி யையே மாதவிக்கும் ஊட்டிய மாதவியின் தாயாருக்கும் ஒழுக்கமில்லை.

தான்பெற்ற அரசப்பரிசை விலை கொடுத்து வாங்கிய கோவலன் கண்ணகியின் காவலன் என்று தெரிந்தபி
றகும், அவனை நீங்கிட மாதவியும், மனதிலும் நினைத்தாளில்லை! அந்த ஒழுக்கத்தைச் சமுதாயமும்
அவளுக்கு போதித்திருக்கவில்லை!

பெருஞ்செல்வத்தின் மெத்தையில் மனைவியுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையுடன் நின்றுவிட அருமந்த க
ல்வியை அவன் கற்றான் இல்லை. அவனுக்குக் கசடறக் கற்பித்தாரும் இருந்திருக்க வில்லை!

கண்ணகியுடனான உறவில் உண்டான வாழ்க்கையெனும் நட்பிற்கு நயவஞ்சகம் செய்திடாப் பண்பையும்
அறிந்தானில்லை;

"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று" என்று வள்ளுவம் சொல்வதுபோல் பெருஞ்செல்வக் கோவலனின் பண்பில்லாக்
குற்றத்தால் அச்செல்வமும் தீவினையே விளைவித்ததன்றி நற்பயன் அளிக்கவில்லை!

கற்பின் பொருட்டாலல்லாவிடிலும் நட்பின் பொருட்டாலாவது "மிகுதிக்கண் மேற்சென்றிடிக்க" கண்ணகியும்
கோவலச்சேதி உடன் அறிந்தாளில்லை! பின்னாள் மாதவியுடன் முறிந்த பின்னர் அவனைச் சேர்த்துக் கெ
஡ண்ட கண்ணகி, முன்னாள் கோவலச்சேதி அறிந்தஉடன் அழைத்துக் கொள்ள முயன்றா ளில்லை!

தனிக்குடித்தனம் வைத்ததோடு மாசாத்துவானும், மாநாய்கனும் எம்கடமை தீர்ந்ததென்று எங்கோ போ
ய்விட்டது போல் தெரிகிறதே! நற்குடித்தனம் கோவலன் செய்திருந்தால் தனிக்குடித்தனத்தில் நுழையாப்
பெருந்தன்மையாளராக அவர்களைப் பார்த்திருக்கலாம்! ஆனால் கோவலமாதவி வாழ்விலும் இடை
ப்புகுந்து இடிக்காமையால் அறம்கற்றோராய் அவர்கள் தெரியவில்லை.

களவுக்கும் கற்புக்கும் வழி அமைத்து வகையிட்ட பெருமக்கள், பிரிவுக்கும் வகையிட்டது தமிழுக்குச் சி
றப்பெனினும், பிரிவில் ஒன்றாம் "பரத்தையின்கண் பிரிதல்", என்று தலைவன் தலைவியைப் பிரிதலுக்குப்
பெயர் சூட்டிவிட்டது பரத்தையர் குலத்தை ஏற்புடையதாக்கி, ஆணின் அதிகப்படியான தேவைக்கு நியா
யமும் கற்பித்துவிட்டார்கள்!

ஒழுக்க மீறல்களுக்கும் இலக்கணமிட்டுச் சென்றிருக்கிறார்கள்!

"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான" ( தொல்காப்பியம்)

பெண்ணுக்கு (தலைவிக்கு) மாதவிடாய்( பூப்பு) முடிந்த உடன் முதல் பன்னிரண்டு நாட்களில் தலைவன்
அவளை நீங்குதல் கூடாது! கரு உண்டாவதன் பொருட்டு!

இந்தப் பன்னிரண்டு நாட்கள் தவிர ஏனைய நாட்களில் கலந்தால் கரு ஏற்பட வாய்ப்பு இல்லை அல்லது
குறைவு என்று உடற்கூறு வழிநின்று இது எழுதப்பட்டிருக்கிறது.

மற்ற நாட்களில் பரத்தையுடன் புரள கட்டுப்பாடேதும் சொல்லப்படவில்லை.

சுயநலத்திற்காக, கற்பென்னும் சொத்தை மட்டும் பெண்ணுக்கே உரிமையாக்கிய ஆணாதிக்க சமுதாயத்
தின் ஆண்மை நீர்த்துத்தான் போயிருக்கிறது!

இரவுகளில் இணையோடு இருப்பதே இன்பம்! துணையில்லை என்றால் துன்பமே!

"கூடினார் பால்நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதவிழ்க்கும் கங்குல் பொழுது."

கூடிய நண்பரிடம் குளுமையையும், கூடாப் பகைவரிடம் கடுமையையும் காட்டும் அரசனைப்போல், இ
ரவிலே கண்ணகிக்கு வெப்பத்தையும், கோவலனைக் கூடிய மாதவிக்கு குளிர்ச்சியையும் கொடுத்தது வானி
லே முழுநிலவின் ஆட்சி!

"அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி ............"

மனிதவாழ்க்கையில் மனிதரோடு மட்டுமல்ல, மரம் செடியோடும், விலங்குகளோடும் மண்ணோடும் மண்ண
஡லான மாளிகையோடும் குச்சியாலான குடிசையோடும் உறவுகள் உண்டாகிவிடுகிறது! இதயம் இவற்றில்
இணைந்து விடுகிறது! சொந்த மண்ணை மறக்க முடிவதில்லை! சிறிது நாள் வாழ்ந்த மண்ணைப் பிரி
யமுடிவதில்லை! பழகிய மரம் செடிகொடி பூக்களையும் நினைக்கும் போது ஏங்காமல் இருக்க முடிவதில்ந
ல! வாழ்ந்த வீட்டை இழக்க முடிவதில்லை! மனிதனைச் சுற்றி இருக்கும் அசையும் அசையாப் பொருட்க
ளோடும் அதற்கு மேலாக நெருக்கத்தில் இருக்கும் மனிதரோடும் ஏற்படக் கூடிய உறவுகள் நட்பென்னும்
நல்லுணர்வை, அன்பென்னும் அருமந்த உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன! பிரிவில், துயருற்று வாடலே
நட்பையும், நேர்மையான அன்பையும், மென்மையான உணர்வுகளையும் வெளிக்காண்பிக்கிறது!

கோவலனைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணரசி, எண்ணெய் மறந்த கூந்தலுடன், அழகு நெற்றியில் திலகம் எ
ழுத மறந்து, அழகிய விழிகளில் அஞ்சனம் தீட்டாது, காதணி துறந்து, இடையில் அணியும் மேகலை நீங்கி,
காற்சிலம்பு அணியாது, அழகிய முலைகளில் குங்குமச் சாந்து பூசாமல், சுருங்கச் சொன்னால் மங்கல
அணி தவிர மற்றைய அணிகள் எதுவும் அணியாமல் வாடியிருக்கிறாள்.

நிலையாமையை அறிந்தவராய் பிணையல் பாம்புகள் போல் பின்னிப் பிணைந்துவாழ்ந்த காதல் வாழ்க்கை
மாறி 'காமத்தாலோ கலவியாலோ ஏற்படக்கூடிய சிறு வியர்வைத்துளிகள் எதுவும் இன்றி வாழ்கிறாள்'
என்று சொல்லப்படும்போது தலைவன் தலைவி பிரிதலினால் ஏற்படும் துயரத்தின் ஆழம் அளவற்றதாய்த்
தெரிகிறது.

கண்ணகி இப்படியிருக்க, மாதவி, 'கோவலன்பால் மிகுந்த ஆர்வத்துடன், விருப்பமிக்க நெஞ்சோடு
அவனுடன் இணைந்து இன்பமளித்தாள். அப்படி இன்பம் அளித்ததும் கலைந்துபோன ஆடைகளைத் தி
ருத்திக் கொண்டு மீண்டும் இன்பமளித்தாள்';

"இல்வளர் முல்லையொடு, மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி........."

கற்பு வாழ்க்கையில் கண்ணகியுடன் கோவலன் இன்பம் துய்த்த போது, அவர்களிருவரும் நிலையாமையை
உணர்ந்து, பின்னிப் பிணைந்ததாய் இளங்கோவடிகள் சொல்லும் போது இருமனம் கலந்த இன்ப வாழ்க்கை
கண்முன் விரிகிறது!

ஆனால் மாதவியோடு இன்பம் துய்த்தபோது 'மாதவி இன்பம் அளித்தாள்; ஆடை திருத்தி மீண்டும்
அளித்தாள்' என்று இளங்கோவடிகள் சொல்லி, Publish Postபொருள்கொடுத்து பெறும் பரத்தையின்பத்தை, கற்பில் கி
டைத்த இன்பத்தில் இருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டிப்போயிருக்கிறார்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
28-பிப்ரவரி-1999

Wednesday, February 24, 1999

சிலம்பு மடல் 7

சிலம்பு மடல் - 7: தலைக்கோலி மாதவி!
புகார்:
அரங்கேற்றுக்காதை:

ஆடலுக்குத் தயார் செய்யப்பட்ட அரங்கத்தினுள் மாதவி தன் வலக்காலை முதலில் வைத்து
வருகிறதாக சிலம்பு சொல்கிறது.

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி"

அரசர் உள்ளிட்ட அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அளிக்கப்பட்டிருந்த/ஒதுக்கப்பட்டிருந்த
இடத்தில் அமர்ந்திருக்க இசைக்கருவியாளர் (குயிலுவமாக்கள்) முறைப்படி நிற்க மாதவி
தன்வலக்காலை முன்வைத்து மேடையேறி வலத்தூண் அருகில் சென்று நிற்கிறாள்.

இசைக்கு இலக்கணம், ஆடும் அரங்கத்திற்கு ஒரு தரம் மற்றும் முறை, இவையெல்லாம் இருக்கையிலே ந
஡ட்டியமாடப் போகிறவர் நடந்து செல்வதற்கும் ஒரு முறை (வலக்கால் முன்வைத்து) இருப்பது தவறில்லை;
ஆயினும் சிந்தித்துப் பார்க்குங்கால் தொன்று தொட்டு தமிழ் மண்ணில் வாழும் 'வலது காலை எடுத்து ந
வத்து வா, வா' என்ற மூடநம்பிக்கையாக இருக்குமோ என்றும் எண்ண வாய்ப்பிருக்கிறது.

இடத்தூண் சேரவேண்டிய ஆடி முதிர்ந்த மகளிர்க்கும் இந்நெறி பொருந்தும்; அதாவது வலக்கால்
முன்வைத்தேறி இடத்தூண் சேர்தல்;

"இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

ஆகமொத்தம் மேடையில் ஏறினால் வலக்காலை வைத்து ஏறுதல் என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்
திருக்கிறது.
(பிறந்தவுடன் மனிதனுக்கு நம் மண்ணில் போதிக்கப்படும் சில பழக்க வழக்கங்களில் வலக்கை,
இடக்கை உபயோகங்கள் மிக முக்கியமானவை. இடக்கையால் யாரிடமாவது எதையா
வது வாங்குவது அல்லது கொடுப்பது பெரும் அவமதிப்புகளில் ஒன்றாக இன்றைக்கும் கருத
ப்பட்டு வருகிறது. பிறந்தவுடனேயே கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுவிடு
கிறது!)

ஆடுகிறாள் மாதவி! அரசன் மகிழ்ந்துவிட்டான்! ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னும் பரிசாய்
பெற்றுவிட்டாள் மாதவி!; தலைக்கோலி என்ற பட்டத்தோடு சேர்த்து!

"தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள்"

மாதவியின் தாய், கூனி என்பவள் மூலமாக "ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னை விலை கொடுத்து வா
ங்குபவர் மாதவியை மணக்கலாம்" என்று அறிவிக்கிறாள்! எங்கு என்றால், பணம் படைத்த இளைஞர்
வரும் வீதியில்!

"மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு"

பல நற்குணங்களைக் கொண்ட மாதவி ஒருவேளை பன்னிரண்டு வயதில்லாமல் மேலும் அதிக வயதினள
஡க இருந்திருந்தால் தான் வியாபாரம் செய்யப்பட்டதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொ
ண்டிருப்பாளோ !?

அந்த அறிவிப்பைக் கேட்ட கோவலன் அம்மாலையை வாங்கி மாதவியொடு, கண்ணகியை மறந்து காத
ல்வாழ்க்கையின் இரண்டாவது பகுதியை ஆரம்பிக்கிறான்!

அக்காலக்கட்டத்தில் தலைவன் தலைவியைப் பிரிவதற்கு சொல்லப்பட்ட/ஏற்கப்பட்டக் காரணங்
களில் 'பரத்தையைச் சேர தலைவியைப் பிரிதல்' என்ற காரணமும் உண்டு. பொருளதிகாரத்தில்
இச்செய்தி விளக்கமாகக் காணப்படுகிறது.

ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்று இருந்த காலத்தில் இருந்து நாம் இன்று வெகுதூரம் முன்
னேறியிருக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைப் போற்றும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24-பிப்ரவரி-1999

சிலம்பு மடல் 6

சிலம்பு மடல் - 6 நாட்டிய அரங்கம்!
புகார்:
அரங்கேற்றுக்காதை:

சிறப்புடைய நாட்டியக் குழுவுடன், மாதவி நாட்டியமாடப் போகும் ஆடல் அரங்கத்தின் அமைப்பிற்கும்
இன்றைய அரங்கத்தின் அமைப்புக்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்றுசொல்லலாம். சாதாரண ந
஡டக மேடை போன்றே அமைக்கப் பட்டிருக்கிறது.

ஆயினும், இளங்கோவடிகள் இதை எடுத்துக் கூறியிருக்கும் விதம் மிக அருமை. கலை நூலாசிரியர் கூறி
யுள்ள இயல்புகளிலிருந்து வேறுபடாமல், ஏற்ற ஒரு இடத்தை அரங்கம் அமைக்கத் தேர்ந்தெடுத்து, புண்
ணிய மலைகளில் (பொதிய) ஓங்கி வளர்ந்த ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையே ஒருசாண்
நீளம்
கொண்ட மூங்கில்களைக் கொணர்ந்து, அரங்கம் அளக்கும் அளவுகோல் செய்யப்பட்டிருக்கிறது

"எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு"

அந்த அளவுகோலானது நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் பெருவிரலில் இருபத்திநான்கு அளவுகள் ந
ணளம் கொண்டது.

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக",

பெருவிரலின் நீளம் மூன்று அங்குலம் என்று கொண்டால், அளவுகோலின் நீளம் ஆறு அடி ஆகிறது.
அந்தக் கோலால் அளந்து 42 அடி அகலம் (எழுகோல்), 48அடி நீளம்(எண்கோல்), ஆடும் அரங்கத்தின்
அடிப்பலகை தரையிலிருந்து 6 அடி உயரத்தில் இருக்க, அதற்கும் உத்தரப் பலகைக்கும் இடைவெளி 24
அடி ஆக,
நாட்டிய மேடை அமைக்கப் பட்டிருக்கிறது.

"எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக"

உள்ளே வெளியே செல்ல இரண்டு வாயில்களுடனும், அனைவரும் வணங்குமாறு பூதங்களை எழுதி ஧
மல்நிலத்தில் அமைத் திருக்கின்றனர். அதோடு அரங்கத்தைத் தாங்கிநிற்கும் தூண்களின் நிழல் அரங்கி
லும், அவையிலும் விழாதவாறு நிலைவிளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

நாடக மேடையில் இன்று காண்பது போலவே திரைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேடையின் ஒ
ருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட ஒருமுகத்திரை ( எழினி = திரை), இரண்டு பக்க
மிருந்தும் நடுவை நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட இருமுகத்திரை, மேலிருந்து கீழ்வரும் கரந்துவரல்த்
திரை என்ற இம்மூவகைத் திரையும் ஆங்கு அமைக்கப் பட்டிருந்தது.

"ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்தாங்கு"

அரங்கம் அமைக்கப் பட்டது என்பதைச் சொல்ல, இடத்தேர்வு, மரம் எடுக்கப்பட்ட இடம், அளவுகோல்
செய்யப்படும்முறை நீள அகல அளவுகள், பொருத்தப்பட்ட இதர அமைப்புகள் இவைகளுடன் விளக்கியி
ருப்பது எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு எந்நாளும் விளங்குமாறு அமைத்திருப்பது, கவிஞர்க
ள், புலவர்கள் அல்லது வரலாற்றை எழுத்தில் அமைப்போர் போன்றவர்களுக்கு "காலத்தில் சிதையாத"
எழுத்துக்களை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று சொன்னால் அது
மிகையாகாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24-பிப்ரவரி-1999

Saturday, February 13, 1999

சிலம்பு மடல் 5

சிலம்பு மடல் - 5 நாட்டியக் கலை!
புகார்:
அரங்கேற்று காதை:

ஆடலை அரங்கேற்ற வந்த ஆடலரசி மாதவி தன் நாட்டியத்துக்கு
ஆடலாசிரியன், பாடலாசிரியன் இசையாசிரியன், தண்ணுமை முதல்வன் (மத்தள ஆசிரியன்), குழலாசிரியன் மற்றும் யாழாசிரியன் என்ற ஆறு முக்கிய வல்லுநர்களையும் ஏனைய உதவியாளர்களையும் துணையாகக் கொண்டிருக்கிறாள்.

இதன்மூலம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே, மூத்த தமிழான கூத்துத்தமிழ் சிறந்திருந்த நிலை, அது நடந்தவிதம், அதற்கு ஆதாரமாக இருந்த கலைமுதிர்ச்சியை அறியமுடிகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடக்கும் நாடகம், திரைப்படம் முதலியவற்றில், தொழில் நுட்ப வேறுபாடுகளைத் தவிர்த்து ஏனைய, கலைஞர்கள், சிறப்பியல்புகள் இவற்றை நோக்குங்கால் சிலம்புக்கால நாடகக் கலைக்கும் இன்றைய நிலைக்கும் வேறுபாடு ஏதும் பெரிய நிலையில் இருப்பதாகக் கருத முடியாது. அல்லது 1800 ஆண்டுகளுக்கு முன்னரே முதிர்ந்து விட்டிருந்த கலை நிலையே இன்றும் தொடர்வதாகக் கருதலாம். மூத்தக் குடியினர் என்று கூறப்படுவது இதனால்தானே!

இந்தக் காலகட்டத்தின் கூத்து முறை சிலம்புக்காலத்திலிருந்து வேறுபடாமல் இருக்கும் போது, முதிர்வு நிலை சமமாக இருக்கும் போது, அச்சிலம்புக் காலத்தைய கலை முதிர்வுக்கு முன் எத்தனைத் தமிழ் ஆண்டுகள் ஓடியிருக்கக் கூடும்? அச் சிறப்பு நிலைத் தமிழுக்கு இருக்கும்போது, தமிழின் தொன்மை கி.மு 300 அல்லது கி.பி 1 முதல் 500க்குட்பட்டது என்று நிறுவ முனைவதும் அதைப் பரப்பமுயல்வதும் சரியா
னது அல்ல அல்லவா?

இளங்கோவடிகள் இயற்றிச் சென்ற இந்தக் காப்பியம் வெறும் கதைமட்டும் கூறுவதல்ல. அந்நாள் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவையோடு, கல்விநிலையையும் கலைநிலையும் அறிவிக்கிறது.
கலைஎன்றால் அந்தக் கலையின் கூறுகள் அதன் காரணங்கள் இவற்றையும் விளக்குகிறது சிலம்பு. இசை, இயல், நாட்டியம் என்ற ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு கருவிக்கும் இலக்கணம் காட்டுவதாய் அமைகிறது
இந்தக்கவிதைகள். மாதவி தன் துணைக் கலைஞர்களோடு நாட்டிய மாடினாள் என்று கூறிவிட்டுப் போகாமல் அக்கலையின் கூறுகள் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் வரையறுத்திருப்பது சிலம்பின் சிறப்புக்களில்
ஒன்றாகும். பல கலைகளையும் கலைஞர்களையும் விவரித்திருக்கிறார்; அதில் நிகழ்ச்சியின் மூலமான ஆடல் ஆசிரியனின் சிறப்புக்கள் மட்டும் இங்கே.

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்.... "

ஆடற்கலை ஆசான் அகக் கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்துக்களையும் நன்கு அறிந்தவன்; இந்த இருகூத்துக்கள் உள்ளடக்கிய பல பகுதிகளாகிய பலகூத்துக்களை இணைக்க வல்லவன். பதினோர்
கூத்துக்களையும் (அல்லியக் கூத்து முதல் கொடுகட்டிக் கூத்து வரை என்று அறிஞர் உரைக்கிறார்), இந்தக் கூத்துக்களுக்கு உரிய பாடல்களையும், அவற்றிற்கமைந்த இசைக்கருவிகளின் கூறுகளையும், அவற்றைப் பற்றிக் கூறியுள்ள சிறந்த நூல்களின் படி விளக்கமாகத் தெரிந்தவன்(விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு..).

1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆடப்பட்ட நாட்டியம், கூத்து, இசை, கருவிகள் இவற்றிற்கு இடப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் நடந்ததென்றால், அந்த இலக்கணங்கள் தோன்ற எவ்வளவு காலம் ஆகியிருக்கக் கூடும்?

ஆடலாசிரியன் ஆடலையும் பாடலையும் தாளத்தையும் அந்த தாளவழி வரும்' தூக்குகளையும் ( இசை அல்லது தாளவகை ) இணைப்பதில் வல்லவன்! அப்படி இணைத்து ஆட்டுவிக்கு மிடத்து ( கொளுத்துங் காலை ), ஒற்றைக்கை (பிண்டி), இரட்டைக்கை (பிணையல்), எழிற்கை, தொழிற்கை என்று சொல்லப்பட்ட
நான்கு அவிநய ( அபிநயம் ) வகைகளையும் திறமையாகக் கையாளக்கூடியவன்.

கூத்து நடக்கும்போது , கூடை(ஒற்றை) க்கதியாகச் செய்த கை வார(இரட்டை)க் கதியுள் புகாமலும் வாரக்கதியாகச் செய்த கை கூடைக் கதியுள் புகாமலும், ஆடல் நிகழும்போது அவிநயம் நடக்காமலும் அவிநயம் நடக்கும்போது ஆடல் நிகழாமலும் தவிர்ப்பதில் வல்லமையும், குரவை மற்றும் வரிக் கூத்துக்கள் ஒன்றோடொன்று கலவாதவாறு பயில்விப்பவனுமே அந்த ஆடல் ஆசிரியன் ஆவான் !

அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-1999