Pages

Monday, January 17, 2000

சிலம்பு மடல் 21

சிலம்பு மடல் - 21 அடைக்கலமாய்த் தந்த கொடை!
மதுரை:
அடைக்கலக்காதை:

பொதிகை வலம் வந்து, குமரியில் நீராடி ஊர் திரும்பும் வழியில் மாடலன் கோவலனைக் காண்கிறான். கோவலன் அவனை வணங்குகிறான்; இருவரும் உரையாடுகின்றனர், மாதவியின் மகப்பேறு குறித்து; மாடலன் சொல்வான்;

தலைக்கோலி என்ற பட்டம் பெற்ற மாந்தளிர் மேனியாள் மாதவி, பால்வாய்க் குழந்தையைப் பெற்றெடுத்தாள்! வாலாமை நாள்கள் (தூய்மையின்மை நாட்கள் அல்லது தீட்டு நாட்கள்) நீங்கிய பின்னர் உன் எண்ணப்படியே, மணிமேகலா என்ற உன் குல தெய்வத்தின் பெயரையே உன் மகளுக்கு ஆயிரம் கணிகையர் வாழ்த்துக் கூற வைத்தனள் மாதவி!

"வேந்துஉறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து.
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று....

எம்குல தெய்வப் பெயர்ஈங்கு இடுகஎன
அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று....."

கோவலனோ, கனவொன்று கண்டேன் மாடல, நள்ளிருள் யாமத்தில்!. கருத்துற்றேன்! தீங்கொன்று தேடி வருகுது போல் தெரிகிறது! கவலை கொண்டேன்; உரைப்பேன் கேள்!

"மதுரை மண்ணில் கீழ்மகன் ஒருவனால் கண்ணகி நடுக்குற்றாள்! என் ஆடையைப் பிறர் பறித்துக் கொள்ள எருமையின்மேல் ஏறிப் பயணித்தேன்! கண்ணகியோடு சேர்ந்து நானும் பெரியோர் பெறும் பேறுற்றேன்!

காமன் தன் மலரம்புகளை எறிந்து விட்டு வருந்துமாறு, போதிமரத்தடி புத்ததேவன் முன் மணிமேகலையைத் துறவி ஆக்கினாள் மாதவி! " என்றான்;

"கோவலன் கூறும்:'ஓர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்,
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்புஅறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்,
நனவு போல நள்இருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்'என,...... "

புறஞ்சேரி என்பது அறவோர் வாழும் எளிமையான இடம்; அது இல்லறத்தார் தங்க ஏற்ற இடம் அன்று! "மாசாத்துவான்மகன்" என்று உரைத்தால் போதும் அரசர்க்கு அடுத்தநிலையில் உள்ள வணிகர் யாவரும் உன்னைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்வர்; அப்படியான ஒருவரின் இடத்தில் நீயும் கண்ணகியும் தங்குக என்று காவுந்தியாரும் மாடலனும் கோவலனிடம் உரைத்தனர்;

"....இங்கு ஒழிகநின் இருப்பு
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுக'என
மாதவத்து ஆட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் தனக்குக் கூறுங் காலை.."

அவ்வேளை, இயக்கி (இசக்கி?)எனும் தெய்வத்துக்குப் பால்சோறு படைத்துத்திரும்பின மாதரி என்ற இடையர் குல மூதாட்டி காவுந்தி ஐயையைக் கண்டதும் அடி தொழுதனள்;

மாதரியின் முதுமையையும் , நேர்மைச் சிறப்பையும் அறிந்திருந்த அடிகள் மாதரியிடம் கண்ணகியைத் தங்க வைப்பதில் தவறிருக்காது என்று கருதி,

மாதரி கேள்!

"ஊருக்கும் நாட்டிற்கும் புதியவர்களான இப் பெருஞ்செல்வ மடந்தைதன் கணவனின் தந்தையின் பெயரைக் கூறினால் போதும், இந்நகர்ப் பெருஞ்செல்வர் இவர்களைத் தன் விருந்தினராக ஏற்றுக் கொண்டுப் பெருமை கொள்வர்; அப்படி அவள் செல்லும் வரை இக்கண்ணகி நல்லாளை உன்னிடம் அடைக்கலமாகத் தருகிறேன்! காத்திருப்பாய்! மேன்மைச் சிறப்பு பெற்ற அவளுக்குத் தாயும் நீயேயாகி தாங்கிடுக! என்றார் மாதரியிடம்;"

பெரும் பேறாய் ஏற்றுக் கொண்டனள் மாதரி!

"புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழுது....

"மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றுஎன எண்ணினள் ஆகி
மாதரி கேள்! .. ..

உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்;.. ..
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு;"

ஊரறிந்த நாடறிந்த பெருஞ்செல்வன் மாநாய்கன்தன் மகள் கண்ணகி நல்லாள், நல்லுலகம் எல்லாம் அறிந்த அருஞ்செல்வ மாசத்துவான் மகனின் மனைவியானாள்!

செல்வச் சிறப்பில் சீருடன் வாழ்ந்து வந்த மெல்லியலாள்!

'அவளின் மென்மைக்கும் அவள் பாதங்களின் மென்மைக்கும் இலக்கணமாய்த்தான், இன்பம் பாடிய அய்யன் வள்ளுவ நாயனார்

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்"

என்று கூறிப்போனாரோ?' என்று எண்ணக்கூடிய அளவிற்கு மென்மையானவள் கண்ணகி!

ஆதலின், காவுந்தியார் கண்ணகியை அடைக்கலம் கொடுத்து, மாதரியிடம், "காலடிகளை நிலமகளும் அறிந்திரா அளவிற்கு செல்வச் செழிப்பால் மேன்மையானவள் கண்ணகி" என்று உரைக்கிறார்!

".......ஈங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்!"

பெண்மையின் அடிகளை அளந்து ஈரடியில் பெருங்கோ சொன்னதை, ஓரடியில் இளங்கோ செய்தான் "வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்" என்று, கண்ணகிக்காக!

அத்தகைய மென்மையாள், தாம் நடந்து வருகையில் கணவனுக்குக் கதிர்வெம்மையால் ஏற்பட்ட துன்பம் கண்டு வருந்தினாளன்றி தம் துயரம் வெளிப்படுத்தாத் தகுதியினள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணரசியை நான் கண்டதில்லை! என்று அய்யை கூறினார்;

"தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;.."

பிறரின் துன்பத்திற்காக வருந்துபவர்களை, ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், குடும்ப வாழ்விலாயினும் சரி, பொது வாழ்விலாயினும் சரி, அறவாழ்விலாயினும் சரி உயர்ந்த நோக்கமுடையவராகத்தான் சமுதாயம் போற்றி வருகிறது;

அந்த உயர்நோக்கோடு, ஒழுக்கமும் ஒருவரிடம் இருக்குமானால் சமுதாயத்திற்கு நேர்மையான வழிகாட்டியாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்!

இங்கே, கண்ணகியின் துயரங்களுக்காக கோவலனும் கோவலனின் துயரங்களுக்காக கண்ணகியும் வருந்துகின்ற நட்பின் பாங்கு ஒரு சராசரி நிகழ்ச்சிதான்;

'இணைந்துவிட்ட இதயங்களின் துடிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்தடம் கொடுக்கும் உயிர் வாழ்க்கை அது!'

ஆயினும் கண்ணகியின் பல்வேறு சிறப்புக்களும் ஒருங்கே பார்க்கப்படும் போது அவள் மிக உயர்ந்து தெரிகிறாள்! அதைத்தான் "பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலமால்" என்று காவுந்தியார் கூறுகிறார்;

மெல்ல மெல்ல கதிரவன் மறையத் தொடங்குகிறான்; அவன் ஒளியையும் வெப்பத்தையும் கொண்டு ஆக்கம் செய்துவிட்டு அந்திப் பொழுதில் இல்லம் கூட ஓடிவருகின்றன ஆடுகளும் மாடுகளும்; ஆய்ச்சியரும் இடையர்களும்! உழவரும் இருந்திருக்க வேண்டும்?

அதே நேரத்தில் பெண்மைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற கண்ணகி நல்லாள், தாயும் ஆகித் தாங்கும் மாதரியின் மனைக்கு அடைக்கலம் செல்கிறாள்;

அதிவிரைவில் கோவலன் கொலைக்களம் போகப்போவதை அறவே அறியாதவளாய்!.

அன்புடன்
நாக.இளங்கோவன்
17-சனவரி-2000