Pages

Wednesday, November 16, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி3

பகுதி-3 கூடங்குளமும் சேதுக்கால்வாயும்

நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு
முன்னர் சேதுக்கால்வாய் வெட்டி அதன்வழியே
கப்பல் போக்குவரத்தைப் பெருக்க அன்றைய
தமிழக அரசு முனைந்தது.

அதனை ஏற்றவர் உண்டு. ஏற்காதவரும் உண்டு.
ஏற்றவர்கள் தமிழ்நாட்டின் வளம் பெருகும் அதனாற்
செய்யலாம் என்றனர். எனக்குக் கூட ஆரம்பத்தில்
அத்திட்டத்தின்பால் ஈர்ப்பு இருந்தது; விரைவில் மறைந்தது.

ஏற்காதவர்களிடம் இரண்டு விதமான முக்கிய
காரணங்கள் இருந்தன. ஒன்று, ஈழத்திற்கும்
தமிழகத்திற்கும் குறுக்கே இராமர் கட்டியதாக
நம்பப்படுகிற பாலத்தின் ஒரு பகுதி,
இத்திட்டத்தினால் உடைபடும் என்பதால்,
சமய நம்பிக்கை அடிப்படையில் மறுப்பாளர்கள்
எழுந்தனர்.

இன்னொன்று, சுற்றுப்புறச் சூழல் கெட்டுப்
போய்விடும் என்றும், மீனவர்களின்
வாழ்வாதரம் கெடும் என்றும்,
அரணப் பாதுகாப்பு பெரிய சரவலாகி விடும்
என்றும் எழுந்தனர் பலர்.

சேதுக்கால்வாய்த் திட்டத்தினால், சூழற்சமன்
கெட்டுவிடும் என்று எழுந்தவர்கள்
என்ன சொன்னார்கள்?

அப்பகுதியில் வளரும் பவளக்கொடிகள்(Coral reef)
அழிந்து விடும்; அவை அழியலாமா? என்று
வருந்தினர்.

அரியவகை மீன்கள் அழிந்துவிடும்; அதொடு
மீன்வளம் அருகிக் குறைந்துவிடும். அது
மீனவர்களின் நலனைப் பாதிக்கும் என்று
கவலைப்பட்டனர்.

அங்கே வாழும் கடற்குதிரைகள் (Seahorses)
இல்லாமல் போய்விடும் என்றனர்.
குதிரைகளோடு கடற்பசுக்களும் காணாமற்
போய்விடும் என்று உருகினர்.

இவற்றொடு, இக்கால்வாய் வெட்டப்பட்டால்
இந்தியாவின் எதிரிக் கப்பல்கள் எளிதாக உள்ளே
வந்துவிடத் தோதாகும் என்றும், அதற்கு இடம்
கொடுக்கலாமா? தேசக்காவற்கு ஆபத்தான
விதயத்தை நாம் தொடலாமா? நமக்கு தேசப்பற்று
வேண்டாமா? என்று தேசியகீதம் பாடினர்.

சேதுக்கால்வாயை மறுத்துப் பேசிய அதே
வாய்கள் இன்று கூடங்குளத்தை ஆதரித்துப்
பேசுகின்றன என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.

தற்போது கூடங்குளத்தில் அணு உலை
மறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த உலை இயங்கினால் அப்பகுதியில்
உள்ள கடற்புறச் சூழல், கதிர்வீச்சு, பாதுகாப்பு
ஏற்பாடுகள், போக்குவரத்து
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
பாதிக்கப்பட்டு மீன்வளம் கெட்டு,
மீனவர் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும்
என்கின்றனர்.

சேதுக்கால்வாயால் மீன்வளம் கெட்டு
மீனவர் வாழ்வாதாரம் கெடும் என்றவர்கள்
கூடங்குளத்தால் மீனவர் வாழ்வாதாரம்
கெடும் என்பதை ஏன் ஏற்கமறுக்கிறார்கள்?

கூடங்குள, கல்பாக்கம் உலைகள்
எதிரிநாடுகளால் தாக்கப்படக்கூடும்
என்ற அச்சத்தில் அவற்றிற்கு அதிகப்படியான
அரணச் செலவும் காப்பு ஏற்பாடுகளும்
செய்யப்படுகின்றன.

சேதுக்கால்வாய் வெட்டினால் அது
எதிரிக்கப்பல்களை எளிதில் ஈர்க்கும்
என்று கவலைப்பட்டவர்கள், இவ்விரு
உலைகளும் எதிரிகளின் இலக்காக
ஆகிவிடுமே என்று ஏன் கவலைப்படுவதில்லை?
அப்படி இலக்கானால் எதிரியால்
மட்டுமல்லாமல் உலையாலும்
தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று
ஏன் அவர்கள் கவலைப்படவில்லை?

பரந்து விரிந்த அரபிக்கடல், வங்கத்திலிருந்து
விரியும் வங்கக் கடல் எல்லைகள் கடந்த
இந்தியப் பெருங்கடல் வழியாகவெல்லாம்
எதிரிகள் வருவதை விட, இந்தச் சிறிய
கால்வாய் வழியாக வந்துவிட்டால் என்ன
செய்வது என்று கவலைப்பட்ட தேசப்பற்றாளர்கள்
கூடங்குள உலையின் அரண முக்கியத்துவத்தை
ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள்?

பவளப்பாறைகள், பவளக்கொடிகள் என்று
கடலுக்குள் இருக்கின்ற சூழலுக்கும் கண்ணீர்
விட்டவர்கள் கதிரியக்கத்தால் மக்களுக்கு
வழிவழியாகப் பெரும் நோய்கள் ஏற்படும்
என்பதை ஏன் காதுகொடுத்தும் கேட்பதில்லை?

கடலுக்குள் வாழும் பவள சாதிக்குப் பரிந்து
வந்தவர்கள், தமிழ் நாட்டில் வாழும்
மனித சாதிக்கு ஏன் பவளக் கண்களைக்
காட்டுகிறார்கள்?

கடல்மீன்களுக்கும் வருந்தியவர்களின்
நல்லிதயங்கள் மனித உயிர்கள் என்று
வரும்போது அதை விட அதிகமாகவல்லவா
வருந்தியிருக்க வேண்டும்?

கடற்குதிரைகள், கடற்பசுக்கள்
போன்றவற்றிற்கு உருகிய நெஞ்சங்கள்
கூடங்குள மக்களுக்கு மட்டும்
கல்லாக இறுகிப் போன காரணம் என்ன?

கடலடிச் சூழற்கும் வருந்தியவர்கள்
நிலத்தின் மேலும் வாழ்கின்ற மக்களை
நீண்டகாலமும் பாதிக்கக் கூடிய
அணுசக்தியை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஆமை, நண்டு, நத்தை, மீன், பவளம்,
புழு, பூச்சிகளுக்கும் உருகியவர்களுக்கு,
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அவலங்களை
எண்ணி உருகமுடியவில்லை.

அப்படியென்றால் அவர்களின் மனதும்
நெஞ்சும் எந்திரப் பொறிதானா?
தேவைப்படும்போது பொத்தானை
அமுக்கினால் நெஞ்சு ஈரமாகி மாந்தநேயம்
பெற்று உருகுவார்கள் போல!

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, October 25, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2

கூடங்குள அணு உலை வேண்டாம் என்றால்
மின்சாரத்திற்கு மாற்று என்ன? என்ற கேள்வி
ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது இயற்கை.
அதே வேளையில் மாற்று பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல.

உயர்சக்தி துறையில் பணி புரியும் எல்லாப்
பொறிஞர்களும் அறிஞர்களும் அணு உலைகளுக்கு
மாற்று பற்றி மிகநன்றாஅறிவர்.
அவர்களால் மட்டுமே மிகத் துல்லியமாக, சிறப்பாக
மாற்றுக்களைக் கூறமுடியும்.

அப்துல் கலாமுக்கு அணுமின்னுக்கு மாற்று தெரியாதா?
கலாமைப் போன்ற புகழ்பெற்ற தமிழக அறிஞர்,
பொறிஞர் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாததா?

அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை
நிறுவச் சொன்னால் அருமையான மாற்றுத்திட்டங்களைச்
செய்யக் கூடியவர்கள்.

ஆனால் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும்
கூடங்குளம் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.
அரசாங்கப் பணி செய்து கொண்டு அரசாங்கத்தின் அரசியல்
விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்
குடியரசு நாட்டில் சொல்ல முடியாது.

அணு உலைக்கு மாற்றாகப் பலரும் கூறுவது,
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியையே. அது கதிரொளி,
காற்று, கழிவு, கடலலை போன்றவற்றைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவிடம்
மிக நீண்ட கடற்கரை உள்ளது. அதில் தமிழகத்தின்
கடற்கரை நீளம்தான் மிக அதிகம் (1076 கி.மீ).
மண்டலம் மண்டலமாகப் பிரித்து அந்தந்த மண்டலத்திற்குத்
தேவையான மின்சாரத்தைச் சிறிய சிறிய காற்றாலைகளில்
பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு/இந்தியா முழுவதும்
மின்சாரத்தை அனுப்புவதால் உண்டாகும் வழிஇழப்பையும்
தவிர்க்கலாம்.

ஒரு மெகாவாட்டு மின்சாரம் தயாரிக்கும் முனையலுக்கு
ஆகும் செலவென்ன தெரியுமா? 5 கோடி உரூவாய்.
இது ஒன்றும் ஆதாரமில்லாத வெற்றுத் தரவல்ல.
தமிழக அரசாங்கத்தின் காற்றாலைத் திட்டத்திற்கான
ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் தரவு.
(படிக்க வேண்டிய ஆவணம்)
http://www.tn.gov.in/citizen/teda.pdf

அப்படியென்றால், 2000 மெவா காற்றாலை
மின்சாரத்திற்கு ஆகக்கூடிய செலவு 10,000 கோடி
உரூவாய்.

கூடங்குளத்தில் 2000 மெவா அணு மின்சாரம் உற்பத்தி
செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் 1000 மெவா
அளவுக்கு மட்டுமே வேலை முடிந்திருக்கிறது.

அதற்குள் ஆகியிருக்கும் செலவு என்ன தெரியுமா?
யாருக்கும் தெரியாது. ஆனால், 2007ஆம்
ஆண்டுக்குள்ளாக 17,000 கோடி உரூவாய்
செலவாகிவிட்டது என்பது எல்லோருக்கும்
தெரியும்.

10,000 கோடி உரூவாயில் யாருக்கும் இன்னல்
இல்லாமல், ஒரே இடத்தில் என்று இல்லாமல்
பரவலாக அமைக்கக் கூடிய எளிமையான,
மாசுக்கேடு இல்லாத காற்றாலை மின்சாரத்தை
விட்டுவிட்டு, குறைந்தது 25,000 கோடி உரூவாய்
செலவாகக் கூடிய இன்னலும் இடரும் மிகுந்த
அணு உலைத் திட்டம் எதற்கு?

கடற்கரையில் மட்டும்தானா காற்று? தமிழ்நாட்டில்
மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் உள்ளன.
அதுவன்றி பல குன்றுகள் உள்ளன. இவையெல்லாம்
காற்றாலைக்கு மிகப் பொருத்தமான சூழல்கள்.

வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள்
என்றும் வளமையானவை காற்றாலைக்கு.

உள்ளூர் ஆதாரங்களைக் கணக்கில் கொன்டு
திட்டங்கள் செய்ய வேண்டும். கடனுக்குக்
கிடைக்கிறதே என்றும், பகட்டாக இருக்கிறதே என்றும்
வெளிநாட்டுக்கு ஓடி ஓடி இந்தியர்களின் பணம்
வீணடிக்கப் படுகிறது.

உலகிலேயே பெரிய காற்றாலை நிறுவனங்களில்
இந்தியாவின் சுசலான் நிறுவனமும் ஆகும்.
துவங்கி பன்னிரண்டாண்டு காலத்துக்குள் இந்தியா முழுதும்
5000 மெகாவாட்டு மின் உற்பத்தியை அவர்களின்
காற்றாலைகள் செய்கின்றன. கூடங்குளத்திலும்
ஒரு சுசலான் காற்றாலை உண்டு. உலகின்
ஆறாவது பெரிய காற்றாலை நிறுவனம் சுசலான்.
http://www.suzlon.com/images/Media_Center_News/185_SEL%20-%20SE%20Press%20Release%20%205%20GW%2024.9.2010.pdf

இந்தியா வருங்காலத்தில் 31,000 மெவா
உற்பத்தியை 30 அணு உலைகளைக் கொண்டு
செய்யவிருக்கிறது. 2,000 மெகாவாட்டுக்கே 25,000 கோடி
என்றால் இந்த 31,000மெகாவாட்டுக்கு எவ்வளவு
செலவு? எவ்வளவு காலம் பிடிக்கும் என்று
எண்ணிப் பார்க்க வேண்டாமா?

காற்றாலை நிறுவனங்களை மேலும்
வளர்த்துத் தேவையான மின்சாரத்தில்
கணிசமான பகுதியை காற்றாலைகளின்
மூலம் விரைவில் பெறலாமன்றோ?

காற்றாலை மட்டும் போதுமா? என்றால்
போதாதுதான். கதிரொளி, கழிவுகள் என்று
வேறும் வழிகள் எவ்வளவோ உண்டே!

அரசாங்கங்கள் மேலும் பொறுப்புடன்
செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்தான்.

இலவசங்களை வாரி வாரி வழங்கும்
அரசாங்கங்கள் அவைகளை எல்லாம்
கதிரொளியில் இயங்கும் அரவைகள்,
கதிரொளியில் இயங்கும் தொலைக்காட்சிகளாக
இலவசமாகக் கொடுக்கலாமே?

பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு காலை,
மதியம் என்று இரண்டு வேளை சோறுபோட்டு,
வீட்டுக்கும் இலவசமாக அரிசி கொடுக்கும் மடத்தனம்
இந்த நாட்டு அரசுகளுக்கு மட்டுமே உண்டு.

நன்கு சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பிள்ளைகள்
படிக்கிற 4 பேர் குடும்பம் என்றால், பிள்ளைகளுக்கு
இருவேளைச் சோறு பள்ளிக்கூடத்தில்.
அவர்களுக்கும் சேர்த்து வீட்டிற்குத் தேவைக்கு மேல்
இலவச அரிசி. தேவைக்கு மேலே உள்ள அரிசி
எங்கே போகும்?

பொருளாதார மேதைகள் ஆளும் நாட்டில் மட்டும்தான்
இந்தப் பொருளியல் கொள்கைகளுக்கு வாய்ப்பு உண்டு.

அரிசி இலவசம் கவர்ச்சியாக இல்லையென்றால்
கணி இலவசம்!

இப்படியெல்லாம் செய்வதற்குப் பதில்,
கதிரொளியில் இயங்கும் மின்விளக்குகள்,
மின்விசிறிகள் போன்றவற்றைப் பள்ளிப்
பிள்ளைகளுக்கு இலவசமாய்க் கொடுக்கலாமே?

மக்களுக்கு அந்தவகையில் மின்சாரம்
தரவேண்டிய கடப்பாடு குறைந்துவிடுகிறதல்லவா?

அணு உலைக்குக் கொட்டும் காசை
கதிரொளி மின்வளர்ப்பிற்குத் திருப்பலாமே?

குசராத்தில் சுடுகாட்டையே
கதிர்-மின்-சுடுகாடாக்கியிருக்கையில்
கதிர்-மின் ஆற்றலை எப்படியெல்லாம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்
என்று எண்ணிப் பார்க்க நிறைய இருக்கிறதே!

வெளிநாட்டு நிறுவனங்கள் என்றால் கையைக்
கட்டி வாயைப் பொத்தி மின்சாரத்தைத்
தடையின்றி தரும் தமிழக இந்திய
அரசாங்கங்கள் காற்றாலை வழியாக,
பெரிய இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்
அவரவர் மின்சாரத்தை அவரவர்
பார்த்துக் கொள்ளவேண்டும் என்று
சொல்லலாமே?

1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்
எந்த நிறுவனமாயினும் அவரவர் மின்சாரத்தை
அவரவரே தயாரித்துக் கொள்ள முடியுமே?

சிறிய நடுத்தர நிறுவனங்களை விட்டுவிட்டு
1000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு
மின்சாரத்தில் சிறு பகுதியை மட்டும்
கொடுத்து, பெரும் பகுதியை அவர்களையே
மரபுசாரா முறையில் தயாரித்துக் கொள்ளச்
செய்ய முடியுமே.

அதை விடுத்து அப்பாவி பொதுமக்களை
நாளைக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை இழந்து
வாடவைத்துத்தான் வல்லரசு ஆக முடியுமா?

பல்வேறு வகையானும் அறிவுக்கூர்மையுடன்
அரசாங்கங்கள் செயல்படாமல், மக்களை
வாட்டி வதைப்பதோடு அணு உலைகள்
போன்ற ஆபத்துகளையும் அருகே
குடியேற்றுவதில் ஞாயம் இல்லை!

ஒருங்கிணைந்த பன்முகத்திட்டத்தைச்
செய்யவேண்டுமேயன்றி, மக்களை
வாட்டி வதைத்து நாட்டை முன்னேற்றுவோம்
என்பது அரசுகளின் கையாலாகாத நிலையையே
காட்டுகிறது.

கடந்த 8/10 ஆண்டுகளாக அரசியலைக்
கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு பாராளுமன்ற, சட்டமன்றக்
கூட்டத் தொடராவது அடிதடியில்லாமல்
அசிங்கமில்லாமல் நடந்திருக்கின்றனவா?

இவர்களா அணு உலைகள் போன்றவற்றை
முறையாகப் பாதுகாக்கத் தக்கவர்கள்?

போபாலில் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம்
விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளியை
தனிப் பறனையில் இரகசியமாகத் தப்ப வைத்த
அரசாங்கங்களா நீண்ட நாளைக்கு அணு உலையில்
பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் நிற்கும்?

அம்மக்களுக்கு நீதி கிடைக்க 24 ஆண்டுகள் ஆயின.
24 ஆண்டுகள் கழித்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையை விட
சிறு கோயில் வாசலில் பிச்சையெடுத்து வாழும் பிச்சைக்காரன்
பன்மடங்கு சம்பாதித்திருப்பான்.

மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களை
எல்லாம் சமாதான ஏற்பாட்டிற்கு அனுப்புகிறார்களாம்.

கலாம் உள்ளிட்ட எந்தப் பெரிய அரசுப் பணி செய்த
பொறிஞராயினும், அறிவியல் அறிஞராயினும்
"போபால் விசவாயு விதயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது
சரியில்லை; அம்மக்களுக்கு 24 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கப்
பட்ட மிகச்சிறு பணம் ஞாயமற்றது", என்று அறிக்கை விடுக்க
துணிவு உடையவர்களா? அது போலச் செய்திருக்கிறார்களா?

கண்டுபிடிப்புகள், அல்லது கட்டி அமைத்தல் ஆகியவற்றை
மட்டும்தான் அரசாங்கப் பொறிஞர்கள் அறிஞர்கள் செய்ய முடியும்.
அதைத்தாண்டி குமுகத்தில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பேசமாட்டார்கள்.
அதற்குத் துணிவும் அவர்களுக்குக் கிடையாது.
ஆழ்ந்த அனுதாபங்களைக் கூட உயர் அரசுப்பணியாளர்களால்
சொல்ல முடியாது.

அப்படியென்றால், மக்களின் மனநிலைக்கு
எதிராக இவர்கள் சமாதானம் சொன்னால்,
இவர்கள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்
மக்கள் ஏன் கேட்கவேண்டும்?

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, October 21, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை!

மின்தடையால் நான்கு வருடங்களாகத் தவித்துக்
கொண்டிருக்கும் அதே தமிழகம் மின்சார உற்பத்திக்காக
கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள
கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்துக்
குரல் கொடுக்கிறது.

மின்விசிறி, மின்விளக்கின் பயனை கடந்த 60/70
ஆண்டுகளில் துய்த்திருக்கும் தமிழகம், அதனை
உற்பத்தி செய்யும் விதங்களைத் தற்போது
ஊன்றிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது
மிக நல்ல மாற்றம்.

பொறியியல், அறிவியல் வயப்பட்ட தமிழகம்
அதில் தனது வாழ்வாதாரங்களையும், தனது
சந்ததிகளையும் தொலைக்கக் கூடிய ஒன்றை,
அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத் தயாராகியிருப்பது மிக நல்ல
மாற்றம்.

1986ல் உருசியாவின் செர்னோபில் அணு உலை
வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆகப்பெரிய
அறிவியலைக் கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்தாலும்,
அவசர அவசரமாக 1988ல், அதே உருசியாவிடம்
சென்று கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக்
கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது.

அதுவும் 4% வட்டி கட்டுகிறோம், இரண்டரை பில்லியன்
வெள்ளி கடனுக்கு அதைக் கொடுங்கள் என்று
ஒரு கடன்கார ஒப்பந்தம் போட்டது இந்தியா.
அன்றைய நிலையில், உருசியாவுடன் இவ்வளவு பெரிய
ஒப்பந்தங்களைக் கண்ட அமெரிக்காவிற்குக்
கண்கள் சிவக்காமல் இருந்திருக்குமா? என்பது தனிக்கதை.

1986ல் வெடித்த உருசிய அணு உலை, உடனடியாகவும்,
கதிரியக்கத்தால் ஏற்பட்ட பல படு பயங்கர நோய்களாலும்,
1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் கொன்றுள்ளது.

http://www.redfortyeight.com/2011/05/01/chernobyl-death-toll/
http://richardbrenneman.wordpress.com/2011/03/25/the-chernobyl-death-toll-1000000-not-4000/

இன்னும் செர்னோபில் அணு உலையால் தொடர்ந்து
கொண்டிருக்கும் சாவுகளையும், எதிர்காலத்தில்
தொடரக்கூடிய சாவுகளையும் கணக்கிடும் அறிஞர்களின்
கூற்றுகள் நடுங்க வைக்கின்றன.

அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும்,
"செர்னோபில் அணு உலையில் இருந்த குறைபாடுகளைக்
கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு
ஏற்படாதவாறு செய்யப்பட்டு விட்டது" என்று சொல்வது,
"கூடங்குளம் அணு உலை ஒருவேளை வெடித்துச் சிதறினால்,
அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்பின்
கட்டப்படும் அணு உலைகளைச் சரி செய்துவிடுவோம்"

என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளமுடிகிறதே தவிர
பெரிதாக அணு உலை நுட்பத்தின்பால் பற்று
ஏற்படுத்துவதாக இல்லை.

"எந்த ஆலையானாலும், எந்திரங்களானாலும்
ஆபத்துகள் நிறைந்தே இருக்கின்றன - அதற்காக
நாம் அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -
என்று சில அரசியல், அறிவியல் துறைகள்
பரப்புரை செய்தாலும், "ஒரு தடவை வெடித்தால் -
நூறு தலைமுறை சாவும்" என்ற உண்மையை
செர்னோபில் நிறுவியிருக்கையில்,
தமிழகத்தில் அணு உலை தேவையா என்று
எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதசாதியின்
கடமை அல்லவா?


"கட்டத் தொடங்கும் போது என்ன செய்தீர்கள்? -
இப்பொழுது வந்து எதிர்க்கிறீர்களே" என்று
கேட்கும் அரசியல் பீடங்களும், அறிவியல் பீடங்களும்
ஒன்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.

"கற்றலும் பட்டறிவு என்பதும் வாழ்வியலின்
தொடர் கல்வி" என்பதை அவர்கள் தங்கள்
வசதிக்காக மறந்து விடுகிறார்கள். தாங்கள்
செய்ததை ஞாயம் என்று நிறுவ இயற்கையையும்
சந்ததிகளையும் காவு கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

நாசகார அறிவியலோடு அரசியலும் சேர்ந்து
கொள்ளும்போது அது மாபெரும் அழிவு
சக்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பற்கள்
நீண்டு வெளியே தெரிகின்றன.

இந்தச் சக்தியை கேள்வி கேட்க சாதாரண
மக்களுக்கு எந்தநாளும் துணிவு ஏற்படுவதில்லை
தமிழகத்தில்.

அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,
"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"

"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?"


"நாங்களாகக் கற்ற கல்வி! எங்கள் கல்வி
உலகில் நடந்த பேரழிவுகளை அலசிப்
பார்க்கச் செய்திருக்கிறது". அதன்
அடிப்படையிலேதான் இந்த அணு உலைகளை
மறுக்கிறோம் - என்று கூடங்குளத்திலே
மக்கள் எழுந்து, நாசகார அறிவியலின்
முகத்திலே கரிபூச நிற்பதிலே ஒரு
பெரிய அறிவு எழுச்சியை காணமுடிகிறது.

ஆனால், அரசும் அறிவியலும் தமது
கல்வியால் ஆணவத்தையே பெற்றிருக்கின்றன.
அந்த ஆணவத்தை கோடிக் கணக்கான
மக்கள் முன்னர் கொடியேற்றி வைக்கின்றனர்.

1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை
ஏப்பமிட்டுள்ளது. அரணவ இரகசியங்கள் போல,
இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.
2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே
17,000 கோடி உரூவாய்.

உருசியாவின் நட்பிற்கு விலை கூடங்குளம்.
அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல
20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை
இந்தியா போட்டிருக்கிறது. நீண்ட காலம் எடுக்கும்
அணு உலைத் திட்டங்களுக்கு நீண்ட கால நோக்கில்
போடப்பட்டிருக்கும் பொக்கீடு (budget)
20 இலட்சம் கோடிகள். இவ்வளவிற்கும் பின்னர்
இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.

அதாவது, இன்றைய கூடங்குளத்திலே 2000 மெகாவாட்
மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள்

20 இலட்சம் கோடிகள், 20,000 மெகாவாட்டிற்கு
திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட்
மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகள்
திட்டமிடப்பட்டிருக்கிறது.

அறிவியல் அறிஞர்கள் சிலர், அணு உலையை
மறுப்பவர்களை "சாணியுகத்துக் காரர்கள்" என்று
சொல்கிறார்கள். அந்தச் சாணியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய
முறையை கிராமந் தோறும் நிறுவினால்
பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.

தமிழகத்திலே 17,000 கிராமங்கள் இருப்பதாகப்
புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும்
தேவையான அடிப்படை மின்சாரத்தை 20-30 கோடி உரூவாய்
செலவில் செய்துவிட முடியும். அதாவது இரண்டு
2ஞீ அலைக்கற்றைப் பணத்திலேயே மிக எளிதாகச்
செய்ய முடிந்த ஒன்று.

கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு
வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்
அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து
பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்
வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.
அதுவும் உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டும்
என்று வேண்டுகோளோடு வந்த விளம்பரமாம்!

சாணியுகம் என்று தாழ்வாகக் கருதக் கூடாது.
அந்தச் சாணியை வைத்து கிராமந்தோறும்
மின்சாரம் தயாரித்தால் பல்லாயிரக்கணக்கான
பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைக்கும்
என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அணு உலைகளுக்கு ஆபத்து தானாகவும் வரும்;
இயற்கையின் சீற்றத்தாலும் வரும்.
அதாவது,
ஆபத்து வரும் என்றால் அது எப்படி வேண்டுமானாலும்
வரும் என்பதுதான் அணு உலைகளின் நிலையாமை.
உருசியாவின் செர்னோபில் விபத்து தானாக வந்தது.
சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.

"தானாக வந்த விபத்தா?
இப்போது சரி செய்து விட்டோம்!

பூகம்பத்தால் விபத்து வருமா?
இந்தப் பக்கம் பூகம்பமே வராதுங்க! "

இப்படித்தான் சொல்கிறார்கள் கூடங்குள உலை
ஆதரவாளர்கள்.

அணுத்துறையில் இந்தியாவிலும் கனடாவிலும்
பல்லாண்டு காலம் பணிபுரிந்த முதிர்ந்த தமிழ்
அறிஞர் திரு.சி.செயபாரதன் அவர்கள்
கூடங்குளம் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
குறிப்பிடுகையில் அது கடல்மட்டத்தில் இருந்து 25 அடி
உயரத்தில் முன்னேற்பாடாகச் செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறார்.

http://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/

இது பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், சப்பானில்
அண்மையில் வந்த பேரலை 50 அடி உயரத்திற்கு
எழுந்தது. 3 மீட்டரில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை
பொதுவாக சுனாமி அலைகள் எழும். ஆனால்,
சப்பான் அலை 14 மீட்டர் (50 அடி) உயர்ந்தது.

இதைவிட, சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்
அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை
32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.


கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்
ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.
அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என
பதிவாகியிருக்கிறது.


http://geology.com/records/biggest-tsunami.shtml

இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரலைகளின்
உயரத்தை முன்கூட்டி அளந்துவிட முடியாது. வந்தபின்
அளப்பதைத்தான் அறிவியல் செய்துவருகிறது.

அவ்வளவு ஏன்?

2004 சுனாமி பேரலைகளால் தமிழகமும் தமிழீமும்
பேரழிவைச் சந்தித்தன. அப்போது தமிழர் கடற்கரைகளில்
எழுந்த அலைகளின் உயரம் 10.4 மீட்டர் (35அடி).
அதன்பின்னர் கடற்கரைகள் அப்படியேதான் இருக்கின்றன.
மூழ்கிவிடவில்லை.

ஆனால், தமிழக வரலாற்றில்
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

என்று சிலப்பதிகாரம் சொல்லவில்லையா?

சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?

சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி இழக்கவில்லையா?

மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை நாம் கண்டு
கொன்டுதானே இருக்கிறோம்?

கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப் போகவில்லையா?

1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?

இப்படித் தமிழகத்தின் கடலோரம் இயற்கைச் சீற்றத்தினால்
குறுகிப் போய்க் கொண்டிருப்பதை வரலாற்றிலும்,
நம் காலத்திலும் கண்டிருந்தும், போன நூற்றாண்டில்
1720 அடி உயர சுனாமி அலையை அலாசுகாவில்
பார்த்திருந்தும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியின்
கொடுமையை நாம் பட்டிருந்தும், வெறும் 25 அடி உயரத்தில்,
கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம்
உலை பாதுகாப்பற்றது என்று மறுப்பதில்
தமிழ் மக்களிடம் என்ன குறையை யார் காண முடியும்?

அணு அறிஞர் செயபாரதன் கூறுவது போல, சில
பாதுகாப்புக் கருவிகளை கூடங்குள உலையில்
நிறுவியிருக்கலாம். ஆனால், கால காலமாக
கடற்கரையை மூழ்கடிக்கும் அலைகளைப் பார்த்து
வரும் தமிழகத்தின் முன் இந்த அணு உலைகள்,
"நிறுவப்பட்டிருக்கும் அணுகுண்டாகத்" தெரிவதில்
வியப்பென்ன?

மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும்
சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்

தற்போது நிறுவத்தில் இருக்கும் 7 உலைகளை
தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது. உலகில்
பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை
மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

அணுத்துறை அறிஞராக சி.செயபாரதன்,
அணு உலையை ஆதரித்தாலும், அவருக்கும் இருக்கும்
அச்சத்தினால்தான் அவர் அணு உலைகளை
"நாட்டுக்குத் தேவையான தீங்குகள்" என்று வருணிக்கிறார்.

அவருக்கும் கூடங்குள மறுப்பாளர்களுக்கும் இருக்கின்ற
ஒரே வேறுபாடு "நாட்டுக்குத் தேவையற்ற தீங்கு" என்பது
மறுப்பாளர் கருத்தாகவும், "நாட்டுக்குத் தேவையான தீங்கு"
என்பது அணு அறிஞர் செயபாரதனொடு அவரைப் போன்ற
ஆதரவாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

ஆக, யாருமே இதனை "நல்லது" என்று சொல்லவில்லை.
மாறாக "தீங்கு" என்றே சொல்கிறார்கள்.

அமெரிக்காவில், 104 உலைகள் உள்ளன. 77% அமெரிக்க மக்கள்
1977ல் அணு உலை ஆதரவாளராக இருந்துள்ளனர் என்றும்
திரிமைல் விபத்து, செர்னோபில் விபத்து, புகுசிமா விபத்து
ஆகியவற்றிற்குப் பின்னர் அமெரிக்கர்களின் அணு உலை
ஆதரவு என்பது மிகக் குறைந்து 43% ஆகி விட்டது
என்று திரு.செயபாரதன் கூறுவது கவனிக்கத் தக்கது.

http://jayabarathan.wordpress.com/2011/10/18/nuclear-power-status-2011/

அது மட்டுமல்ல, அணு உலைகளையும் அணுவியலையும்
முழுமையாக ஆதரிக்கும் செயபாரதன் அவர்களே,
"இந்த அணு உலைகள் பூமிக்கடியிலே, பாதாளத்திலேதான்
கட்டப்படவேண்டும்; அதுவே சிறந்த பாதுகாப்பு" என்று
கூறுகிறார்.


http://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/

"கரணம் தப்பினால் மரணம்" என்ற அறிவியலின்
அணு உலைகளை தமிழத்தில் அமைப்பதை
முழுமையாக நிறுத்த வேண்டும்.

நமது கடற்கரைகள் வரலாற்றுக் காலந்தொட்டு
பேரலைகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்
உட்பட்ட பகுதியாகும்.

இதை மறுத்து செய்யப்படும் கூடங்குள முயற்சி
தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பொருத்தப்படும்
"2000 மெகாவாட் அணுகுண்டன்றி வேறல்ல".

1977ல் அணு உலைகளை ஆதரித்த அமெரிக்கர்கள்
இன்று அதனைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.

1988ல் அணு உலையைப் பற்றிக் கவலை கொண்டிராத,
அல்லது அறியாதிருந்த தமிழர்கள் இன்று
மறுத்தெழுந்திருக்கிறார்கள்.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" அன்றோ?

இப்பொழுது கட்டிவிட்டார்களே என்ன செய்யலாம்?

தமிழகம் நெற்களஞ்சியம்தானே!
தென்னைமர உயர அண்டாக்களையும்
கும்பாக்களையும் கட்டியிருக்கும் கூடங்குள அணு உலையை
உலகத்திலேயே ஆகப்பெரிய அரிசி ஆலையாக மாற்றலாம்.
அதைத்தவிர வேறேதும் செய்ய முடியுமா என்பதை
அப்துல்கலாம், செயபாரதன் போன்ற தமிழக அறிவியல்
அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுத்தலாம்.

அணு மின்சாரத்திற்கு மாற்று பற்றியும் பிறவற்றையும்
தொடர்ச்சியில் காணுவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
Sunday, July 31, 2011

கணேச கிளியம் - தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்

நூற்பெயர்: கணேச கிளியம்
வகை: இலக்கணம் - 23ஆம் நூற்றாண்டு
"தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்" பற்றியது,
நூலாசிரியர்: நாக.இளங்கோவன்
பதிப்பாசிரியர்: தமிழ்ப்பூட்டன் கு.கே.இராமநாத சேர்வை

நூற்குறிப்பு:


இந்நூல் 23 ஆம் நூற்றாண்டில் விளங்கிய உயர்ந்த
தமிழாராய்ச்சி மரபுகளைத் தொகுக்கும் தமிழாராய்ச்சி
மரபு இலக்கண நூலாம். மெல்ல மெல்ல உருவாகி
வந்த இந்தத் தமிழாராய்ச்சி மரபு கணேசபுலவர் என்ற
தொல்பெரும் புலவரால் பெரிதும் ஓம்பப்பட்டதாகும்.
அதனாலேயே இவ்விலக்கண நூல்
கணேச கிளியம் என்று பெயர்பெற்றிருக்கிறது.

"கணேச புலவர்க்கு ஒப்பாரும் மிக்காரும்
இப்புவியிற் காண்டலரிது" என்று
புகழப்பட்ட கணேச புலவர் அடங்கோட்டு
ஆசானிடம் தமிழ் பயின்றவர். எல்லாவற்றையும்
தப்புத் தப்பாய்ச் சொல்லி அடம்பிடிக்கும்
கலையைக் கசடறக் கற்றுத் தந்த அடங்கோட்டாசாற்குக்
கடமைப்பட்டுள்ளேன் என்று
கணேசகவியில் குறிப்பிட்டுள்ளமை காண்க.

கணேசபுலவர் 23ஆம் நூற்றாண்டில் உலகில்
விளங்கிய அத்தனை மொழிகளின்
இலக்கணங்களையும் இலக்கியங்களையும்
கற்றுத் துறைபோகிய ஒரே புலவர்
என்பதால் இவரை ஊழிப்புலவர் என்றும் வழங்குவர்.

இவரிடம் எந்த மொழி இலக்கிய/இலக்கணக்
கேள்வியைக் கேட்டாலும் இமைப்பொழுதில்
அதற்குத் துல்லியமான விடையையும் அந்த
மொழி வழங்கும் நாட்டைச்
சுற்றியுள்ள 30 நாடுகளின் இலக்கியச்
சான்றுகளையும் வழங்குவார் என்பதே
இவரின் திறத்தினைப் பறைசாற்றுகின்றது.

அஃதோடு ஒவ்வொரு நாட்டிலும் அலையும்
பேய்கள் அடுத்த நாட்டில் போய்ப்பேச முடியாமை
கண்டு இரங்கி அதற்கு ஏதுவாக பேய்மொழிச் செந்தரம்
ஏற்படுத்த அயராத் உழைத்தார் என்று சொல்வார்கள்.

இதற்குத் தோதாக அம்மொழி எழுத்துக்களுக்கெல்லாம்
சீர்திருத்தம் வேண்டி மொட்டை போட்டு
முக்காடிடும் முறையைக் கண்டுபிடித்ததால்
ஆவிஎழுத்தச்சன் என்றும் பெரியோர் புகழ்கின்றனர்.

மேலும் குறிப்புகள் பாகம்-2ல் காண்க.

பதிப்பாசிரியர் குறிப்பு:

காண்டற்கரிய இவ் இலக்கண நூலின்
முதற்பாகத்தைத் தமது கடுமையான
உழைப்பினாற்றேடி இத்தமிழ் உலகிற்கு
நல்கியவர் தமிழ்ப்பூட்டன் என்று
அன்போடு அழைக்கப்படும் கு.கே.இராமநாத சேர்வை
அவர்களாவார். இவர் 25ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
பேரறிஞர்களுள் ஒருவராவார்.
அப்பெருந்தகை காலமாகிவிட்டபின்
பாகம்-2 முதல் 27வரை எங்கிருக்கென்று
கவலைப் பட்டுத் தேடியே தமிழுலகம்
இளைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

நூலாசிரியர் குறிப்பு:

நாக.இளங்கோவன், 24 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர் என்று ஒரு சாராரும், கணேசபுலவர்க்குச்
சமகாலத்தவர் என்று ஒரு சாராரும்
சொல்கின்றனர். எது எப்படியெனினும்
கணேசபுலவரும் நாக.இளங்கோவரும்
ஒருவருக்கொருவர் மாறாத அன்பு பூண்டவர்
என்பதை மட்டும் அவர்களின் பல்வேறு
மின்னஞ்சல்களில் காணக் கிடைக்கிறதென்கிறார்
அறிஞர் கெ.தோ.மீ. (மின்னஞ்சல்
என்ற சொல் "மினஞ்சா" என்ற
சமசுக்கிருதச் சொல்லில் இருந்து தமிழ் கெஞ்சி
வாங்கியது என்று தூய தமிழ்ப்புலவர்
கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது;
மினஞ்சா > மின்னஞ்சா > மின்னஞ்சல்).

இளங்கோவன், கணேசபுலவர் ஆகியோர்
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள
நகுளாச்சி என்ற பகுதியில் வாழ்ந்து
தமிழ்த் தொண்டாற்றியவர்கள் என்று ஒரு
சில பகுதிகளில் புராணக் கதை கட்டி
விடுவார்களுமுண்டு.

இளங்கோவன் என்ற பெயர் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்ற வடசொல்லில் இருந்து தமிழுக்குக்
கள்ளத்தோணியில் வந்திறங்கியது என்று
கணேசகிளிய மரபினர் மிகத்தெளிவாக
நிறுவியிருக்கின்றனர் என்பதே
இம்மரபின் புகழைச் சொல்லா நிற்கும். இந்த
நூலுக்கு உரை வகுக்க எந்த அறிஞராலும்
எந்தக் காலத்திலும் முடியவில்லை என்பதால் நூலாசிரியரின்
வழித்தோன்றலான ஆறாம் இ72ள43ங்108கோ99வ17ன்33
என்பவர் வேறுவழியின்றி எழுதியிருக்கின்றார் என்று
அறியமுடிகிறது. மேலும் குறிப்புகளை
பிற பாகங்களில் கண்டுகொள்க.

பாயிரம்:

இவ் இலக்கணத்தின் பெருமையறிந்த
தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக
வாழ்த்தி பன்னூறு பாயிரம் தந்ததால்
எந்தப் பாயிரத்தை முன்னே வைப்பது
என்று குழம்பியும், இலக்கணத்தை விட
பாயிரங்கள் நீண்டுவிட்டதாலும்
அடக்கம் கருதி பாயிரத்தை ஆசிரியர்
நூலோடு சேர்க்கவில்லை என்றும் அறிக.

கடவுள் வாழ்த்து:

ஆங்கிலர் பார்க்கையில் அவர் சிலுவை போற்றி!
ஆதாயம் கிடைக்கையில் பிறையே போற்றி!
அம்மை பார்த்தால் அம்பாள் போற்றி!
அக்கைக் கண்டால் சிவனே போற்றி!
தெரியாவிட்டால் சமணன் போற்றி!
தெளிவைத் துறந்தால் புத்தன் போற்றி!
தேவைப் படுகையில் பெரியார் போற்றி!
தமிழைக் கெடுக்கெனின் பேயே போற்றி போற்றி!!

தந்திரம்-1 - கணேசகுடுக்கு


நூற்பா-1:
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
குடாக்குடு குடுகுடாக் குடகுட

உரை:

கணேசகிளிய மரபினர் தமிழ் ஆராய்ச்சிக்குள்
பாயும்போது தமிழர்களின் பின்யாம
இசைக்கருவியான குடுகுடுப்பையின் ஓசை இயல்பாக
எழும். "அது ஒன்றே போதும் இந்த ஆராய்ச்சிமரபு தெய்வத்தன்மை
வாய்ந்தது என்று சொல்வதற்கு" என்று பேரறிஞர் கொ.மு.செ
கூறியிருப்பது காணத்தக்கது.

ஈற்றுச் சீரான "குடகுட" என்று நூற்பாவில்
சொல்வது குடுகுடுப்பைக்காரர்
அன்றோ மறுநாளோ பகற்பொழுதில்
வீட்டுக்கு வந்து "கழிப்புக் கழித்தல்"
செய்வதையே குறிக்கிறது என்றும், அதன்படி
தமிழாராய்ச்சியில் தப்பித் தவறி யாரும்
"இது தமிழ்ச்சொல்" என்று சொல்லிவிட்டால்
அச்சொல்லுக்கும் அவருக்கும் கழிப்புக் கழிக்கும்
மரபையே இது குறிக்கிறதென்பதை நிறுவுகிறது என்று
சீலசிறீஆர்ப்பொலா கூறியிருப்பதை அனைவரும்
ஏற்றுக்கொள்கின்றனர். இதன் இலக்கணச் சிறப்பை,
ஈற்றடியில் மெல்ல மெல்ல மெலியும் டகரத்தில்
இருந்து அறிக.

தந்திரம்-2 - க'சிகாமணி

நூற்பா-2:

அள்ளி வீசுதலா யிரமாந் தலை
யாயிரம் வீசுதற் போல!

நூற்பா-3:

அள்ளி கிள்ளி உள்ளி நள்ளி!

உரை:

நூ-2ல் அள்ளி வீசுதல் என்பது யார் என்ன
எழுதுகிறார்கள் என்பது பற்றி
அக்கறை கொள்ளாமல், குறிப்பாக 247க்குட்பட்ட
தமிழைப் பற்றிப் பேசும்போது அதைத் தாண்டி
உலகில் இருக்கும் எல்லா எழுத்துக்களைப்
பற்றியும் ஆயிரம் மின்னஞ்சல்களுக்கு அள்ளி
வீசுவதாகும்.

கோட்டை மதிலில் அம்புகள் அள்ளி வீசுதற்கு
வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை ஆழ்ந்து கவனிக்க.
அத்தன்மையது ஈதென புலவர் கூறுவர். ஆயினும்,
வலைநாட்டு வெண்ணாப்புலவர் ஒரு நுண்ணிய
வேறுபாட்டைக் குறிப்பிடுவர்.

அஃதாவது, கோட்டை மதிற்சுவரில் இருந்து எறியப்படும்
பன்மை அம்புகள் கோட்டைக்குப் புறத்தே உள்ள
எதிரிகளைப் போய்ச் சேரும் எனவும்,
கிளியமரபினர் அள்ளி வீசும் அம்புகள் கோட்டைக்கு
உள்ளுக்கே அம்புகள்எய்தும் தன்மையன என்பதுதான்
அவ்வேறுபாடு என்று கூறுவர்.

தலையாயிரம் என்று சொன்னது தமிழுலகின்
மிகத் தொன்மமான ஆயிரந்
தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்ற
கதையைக் குறிப்பதாகும். அப்படியான
வியக்கத் தக்க மரபுகளைக் கொண்ட கிளிய மரபு
தமிழாராய்ச்சியில் உயர்ந்தோங்கி நின்ற காலம்
23ஆம் நூற்றாண்டாகும். 23 என்றாலே அக்காலக்
கட்டத்தில் சிரிப்புக்குப் பெயர்போன திரைப்படங்கள்
ஓடின என்பது உள்ளுறை உவமமாக இந்நூற்பாவில்
தொக்கி நிற்கிறதென்பர் பெரும்புலவர்.

நூ-3 ஒரு சிறந்த சூத்திரம் என்று காகசாமி அவர்கள்,
நிலவில் தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த
குறிப்பில் எழுதியிருக்கிறார். அஃதாவது, அள்ளி
என்ற சொல்லுக்கு நூ-2 விளக்கம் கூற, அப்படி
அள்ளி வீசும் அஞ்சல்களில் ஏதேனும் தமிழுக்கு
இனியது என்று கண்டால், கண்டமாத்திரம் கிள்ளி விட்டுப்
பின் எறிவது என்ற உயர்ந்த மரபை தமிழ்க்குலம் போற்றியது வியக்கத்தக்கதாகும்.

இங்கே கிள்ளி என்ற சொல்லாட்சியை
இலக்கண ஆசிரியர் உருது மொழியில்
இருந்து ஒத்திக்கு வாங்கி வந்து
பயன்படுத்தியிருக்கிறார் என்று நக்கீரர்
பரம்பரையில் வந்த அத்தனைப் புலவர்களும்
பண்ணோடு புகலுவதைக் கவனிக்க.

உள்ளி என்பது, இப்படி அள்ளி கிள்ளியவற்றை
உள்ளிடுதல் என்ற வினையைக்
குறிக்கிறது. நள்ளி என்பது இப்படிச் செய்ததால்தான்
தமிழ் ஆராய்ச்சியின் தரத்தை அழிவுக்குக் கொண்டு
செல்ல ஏதுவாக பல நட்புகளை இந்த மரபு ஈட்டித்
தந்ததை விவரிப்பதாக அமைகிறது. இந்தத் தந்திரத்தின்
பயனைக் குறிக்கும் சொல்லாக நள்ளி என்ற
சொல்லை அறிஞர் கருதுவர்.

இந்த "அள்ளி கிள்ளி"யை க'சிகாமணி
தந்திரத்தின் ஒரு உத்தியாக ஆசிரியர்
நாட்டியிருக்கிறார் என்று சிலரும்,
இல்லை இல்லை ஆசிரியர் இதனைத் தனியே
ஒரு தந்திரமாக வைத்தது நாளடைவில்
ஒரு தந்திரத்தின் உள் அமையுமாறு
ஆகிவிட்டது என்று சிலரும் ஆதாரங்
காட்டுதற் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

தந்திரம்-3: கணேசமெய்

நூற்பா-4:

மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய்
மெய் மெய்
பொய்

உரை:
ஒரு பொய்யை மெய் என்று சொல்வதற்கு
கணேசகிளிய மரபினர் கையாளும் தந்திரத்தை
எடுத்தியம்புமாறு இந்நூற்பா அமைந்திருக்கிறது.
இது நூற்பாவா சித்திரகவியா என்ற பட்டிமன்றம்
இன்னும் தமிழாராய்ச்சி உலகில் ஓய்ந்தபாடில்லை.

இதைச் சித்திரகவி என்போர் மெய் என்று 27 முறை
எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இது
தமிழ் சோதிட/வானியலில் சொல்லப்பட்டிருக்கும்
27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்று அறுதியிட்டுச்
சொல்வர்.

என்னையெனின், ஒரு பொய்யை
மெய் என்று சொல்ல 27 நட்சத்திரங்களையும்
சாட்சிக்கு அழைக்கும் மெய்யியல் சார்ந்த
தெய்வீக நூற்பா என்று எல்லாச் சமயப் புலவரும்
சமயக் குரவரும் ஒத்துக் கொண்டிருப்பதே இதன்
திறன் சொல்கின்றதறிக.

27 மெய் அடுக்கினது பொய்யை மெய்யாக்கப்
புனைய வேண்டிய அழுத்தங்களக் கோடிட்டுக்
காட்டலன்றி வேறியாதுமிலை என்று
சிலர் பகுத்தறிவின் துய்ப்போடு
இயம்புதலையும் ஒப்புநோக்கல் தகுமென்க.

ஆயினும், இந்த நூற்பாவை கலைமகள் திருநாளில்
வழிபட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள்
கிளியமரபினர் என்று ஒன்பான் விழாக்குறிப்பில்
காணப்படுவதையும் உற்றுநோக்குக.

நூற்பா-5:

எழுதற்க மெய் பொய் யுரேனசுக்கு!

உரை:
எந்தக் காலத்திலும் எப்படிப் பட்ட
இடர் நேரினும் மெய்யை எழுதாதீர்கள்.
பொய் என்றால் அதனை ஆவணமாகப்
புனைந்து புதன் தொடங்கி யுரேனசு
வரை எல்லாக் கோள்களுக்கும் அனுப்பி வைக்க.

மிக எளிமையான இந்த நூற்பாவை
தமிழாராய்ச்சி மரபினர் உயிரின் மேலாகப்
போற்றிக் கடைப்பிடித்தனர் என்பது வரலாறாய்
ஓங்கி நிற்கிறது.

யுரேனசு வரை பொய் ஆவணத்தைக்
கணேசகிளிய மரபினர் தமிழைத் தொலைக்க
ஆவணங்கள், கடிதங்கள் வழியே அனுப்பிய அந்தக் காலம்
தமிழின் பொற்காலம் மட்டுமல்ல தமிழாராய்ச்சி உலகம்
கொடிகட்டிப் பறந்த காலமாகும்.

அந்நாளை, தமிழர்கள் மறக்காமல் இருக்க
யு.மு, யு.பி (யுரேனசுக்கு முன், பின்) என்ற ஆண்டுக்
கணக்கைத் தொடங்கி இருப்பது தமிழாராய்ச்சி
மரபின் புகழைக் கூறா நிற்கும்.

தந்திரம்-4 - கணேசநகை

நூற்பா-6:

பொய்யில கேட்கின் பொய்யில கேட்டோய்
பொய்யில சொல்வான் முனைவன் அல்லன்
முனைவனுமாயின் தமிழினில் அல்லன்
தமிழினில் ஆயின் அவன் தமிழ் பொய்யேஎ!

உரை:

கணேசகிளிய மரபினரின் தமிழாராய்ச்சி
நேரத்தில் யாராவது வந்து "ஐயா, இது இப்படி
இருக்கலாங்களா" என்று சொன்னால்
"யாரது, நீ ஒரு முனைவரா?" என்று எள்ளி
நகையாட வேண்டும். அஃதாவது முனைவர்
பட்டம் பெற்றவரா? இல்லையெனில்
தள்ளிப்போ என்று சொல்லவேண்டும்.
இதுவே தமிழாராய்ச்சி தருமம் ஆகும்.

அப்படியும் ஆமாம் ஐயா நானும்
ஒரு முனைவன் என்று சொன்னால்
கானா நாட்டு பானா அறிஞர் என்ன
சொல்லியிருக்கிறார் தெரியுமா?
என்று கேட்பார்கள். தெரியும் ஐயா
என்று சொன்னால் - ஏ-ஏ-ஏ-ஏ
கானா தெரியும்னா -
உன்க்குச் சீனா நாட்டு மூனா அறிஞர்
தெரியுமா? என்று பாடிச்
சிரிப்பார்கள் கிளியமரபினர்.

அதையும் தாண்டி தெரியும் என்பதை நிறுவினால் -
"நீ தமிழில் முனைவர் பட்டம் வாங்கினியா?"
என்று முறைப்பார்கள். அரசாங்கத் தமிழ் வேலை
பார்த்தியா என்பார்கள்!

அதையும் தாண்டி ஆமாம் தமிழில்
வாங்கியிருக்கின்றேன் என்று
யாருஞ் சொன்னால் ஏற இறங்கக்
கண்ணைப் பார்ப்பார்கள். இதற்கு
நிறைய பட்டறிவும் துய்ப்பறிவும் தேவை.
(இந்தக் கண்பார்க்கும் வித்தையைக்
கற்றுக் கொள்வது கடினம். அரைகுறையாகக்
கற்றுக் கொண்டு அல்லாடும்
கிளியமரபினரைக் கண்டால் புரியும்)

கண்கள் கெஞ்சின என்றால்
ஏற்றுக்கொள்வர். மாறாக கண்களில்
தமிழோ அறிவோ தெரிந்தால்
"சீ போ - நீ பொய்" என்ற கவிதையைப்
பாடி அனுப்பிவிடுவார்கள்.

இஃது தமிழாராய்ச்சி மரபின் மிக முதிர்ந்த
நிலையைக் காட்டுகிறது என்பர் அறிஞர்.

தமிழ்நாட்டிலே தமிழ் முனைவர் பட்டம்
வாங்கியிருந்தாலும், பட்டம்
வாங்கினவருக்குத் தமிழ் தெரிந்தால்
அவரை இந்த ஆராய்ச்சி மரபு
ஏற்றுக் கொள்ளாது என்பதுதான்
இந்நூற்பாவின் உட்கருத்தாகும்.

ஏனென்றால் கிளியமரபினருக்குத் தெரியும்,
தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம்
பெறுதற்குத் தமிழே படிக்க வேண்டியதில்லை என்பது.
அதையும் மீறி தமிழ் கற்று முனைவரானவர்
உளர் என்பதும் அவர்கள் பாடு திண்டாட்டம் என்பதும்
அவரறிவர். இந்த அரிய கருத்து இந்நூற்பாவில்
இறைச்சியாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்த
புலவர்கள் இதனை எல்லாப் பல்கலைக்
கழகங்களின் பாடத்திட்டத்திலும்
சேர்த்திருக்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தியாம்.

தந்திரம்-5 - கணேசகிளியம்

நூற்பா-7:

கிளி பிடி கிளி பிடித்தக் கிளி

நூற்பா-8:

பிடிகிளிச் சொறிவளர்ச் செறிகிளி
எறியிரு தருமொரு வழி

உரை:

கிட்டற்கரிய இந்த இலக்கண நூலுக்குப்
பெயரைத் தந்த தந்திரம் இஃதென்பது
இத்தந்திரத்தின் சிறப்பு. இதில் தமிழாராய்ச்சி
செய்து எடுக்கும் முடிவுகளைப்
பற்றிய ஒரு முறை விளக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் பல முறைகள் பிற
பாகங்களில் காணப்பெறலாம்.

தமிழரின் தொன்மையான வழக்கங்களில்
ஒன்று கிளியிடம் சீட்டெடுக்கச்
சொல்லுதலாகும். இந்த முறையை ஒரு சொல்
தமிழா அல்லது சமசுக்கிருதமா
என்று கண்டறியப் பயன்படுத்தி
வெற்றி கண்டவர் கிளியமரபினர்.

"கிளி பிடி கிளி பிடித்தக் கிளி" என்றது
கிளியைத் தேர்ந்தேடுக்கும் முறையைப்
பற்றியதாகும். கொஞ்சம் விரைப்பான கிளியைப்
பிடிக்கக் கூடாதென்றும் அஞ்சும் தன்மை
கொண்ட கிளியே தமிழாராய்ச்சிக்கு
உகந்ததாகும் என்பது முக்கியமானதாகும்.

நூ-8ல் பிடிகிளி என்றது பிடித்த கிளியைக்
கூண்டுக்குள் வைத்துப் பேணுவதைச் சொன்னது.

சொறிவளர் என்றது அந்தக் கிளி
சற்று நோய்வாய்ப்பட்டுச் சொறி சிரங்கோடு
இருந்தால் சொல்லுகின்ற வினையாற்றும்
என்ற நம்பிக்கை பற்றியதாகும்.

செறிகிளி என்றது, அப்படியான கிளிக்கு,
சீட்டு எடுக்கும் கல்வியைக் கிளியமரபினர்
கற்றுத்தருவதைச் சொன்னதாகும்.

எறியிரு என்றது, கிளியின் முன்னர்
இரண்டு சீட்டுக்களை எடுத்துப் போடுவதாகும்.

தருமொரு வழி என்றது, அந்தக் கிளி
அந்த இரண்டில் ஒன்றை எடுத்துத்
தருவதைச் சொல்லியதாகும்.

முக்கியச் செயலாக, வடசொல்லா
தமிழ்ச்சொல்லா என்றறியவேண்டுமானால்
அந்தக் கிளிக்கு முன்னால் கிளிய
மரபினர் இரண்டு சீட்டுக்களைப் போடுவார்கள்.

அந்தக் கிளி எடுத்துத் தரும் சீட்டை
அப்படியே தமிழாராய்ச்சி மன்றத்தில்
படிப்பார்கள். இதுவே "கணேசகிளியம்"
எனப்படுவதாகும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய
விதயம் என்னவென்றால் அந்த இரண்டு
சீட்டுகளிலும் "வடசொல்" என்றே
எழுதிப் போட்டிருப்பார்கள்.

மேலும், ஒரு இலக்கியம் முந்தியதா
பிந்தியதா என்று கண்டுபிடிக்கவும்
இம்முறையைக் கையாளுவார்கள்.
அதற்குத் தனியே இரண்டு சீட்டுகள்
வைத்திருப்பார்கள். அந்த இரண்டு
சீட்டுகளிலும் "பிந்தியது" என்றே
எழுதித் தயாராக வைத்திருப்பார்கள்.

கணேச கிளியம் - பாகம்-1 முற்றிற்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, April 26, 2011

பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2011: திராவிடந் தீது, தீய்க!

ஏமாந்தாய் பாவேந்தே! உன்னாலே யானுந்தான்!
ஏமாந்தோம் வீழ்ந்தோம்; எழுந்ததெலாந் துயரந்தான்!

ஆரியத்தை ஈதறுக்கும் பாரென்றாய்! அன்னார்
தேரிலதை ஏற்றிவிட்டுத் தானுமது வேயானார்!

மாயைதனை வேரறுத்து மூடுமென்றாய்; அதற்கோர்
நோயைத்தான் தூக்கிவிட்டுத் தோற்றே போனோம்!

கோட்டை நாற்காலி கொண்டுபோன காளையெலாம்
பேட்டைக் கொசுபோல பீடறுந்த பிணிகளப்பா!

திருடவந்த கூட்டத்தைத் தேரிலுலா விட்டதுதான்
பெருகிவந்த தமிழரையேப் போரிட்டுச் சாய்த்ததப்பா!

திறலற்ற திராவிடத்தைத் திருவென்றே பேசியதால்
திருவெல்லாந் தீர்ந்தின்று தரித்திரந்தான் தமிழப்பா!

மறமறுந்த மந்தைதனை மாண்பென்றே நம்பியதால்
உறவறுந்து தமிழழிந்து வேரழிந்து போனதப்பா!

வேரழியும் வேளையிலே வெந்நீரும் ஊற்றென்று
ஊரறிய முந்நாழி நோன்பிருந்த வஞ்சனைத்தான்,

இனமென்றும் தமிழென்றும் இன்னபிற என்றெல்லாம்
மனங்குளிரக் கூறுநிலை மருளத்தான் வைக்குதப்பா!

பணமென்றால் பிணங்கூட வாய்திறக்கும்; திறக்காமல்
பிணம்போன்றே பணங்கூட திராவிடந்தான் நடிக்குதப்பா!

பிணக்குவியல் காட்டியங்கே தில்லித்தெரு நாயிடமும்
தனக்குவியல் ஈட்டியிங்கே திராவிடந்தான் வாழுதப்பா!

ஓலமிட்டார் குருதிகொண்டு ஒருதில்லி வாசலிலே
கோலமிட்டுப் பல்லிளித்துத் திராவிடந்தாங் களிக்குதப்பா!

ஏட்டுக்குள் எழுதயின்னும் எத்தனையோ யிருந்துமுன்
பாட்டுப் பரம்பரைக்குப் பல்லுடைந்து போனதப்பா!

பல்லுடைந்து போனதனால் தமிழுடைந்து போகுமன்றோ?
தமிழுடைந்து போகுமெனின் திராவிடந்தான் இனியெதற்கு?
திராவிடந்தான் தீய்ந்திடவே தமிழியக்கம் இனிக்கிளர்க!
தமிழியக்கங் கிளர்க்கிலையேல் தமிழர்க்கிப் புவியிலையே!

அன்புடன்
நாக.இளங்கோவன்
26/04/2011

Saturday, January 29, 2011

தமிழ் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடக்கும் தமிழ் மொழிப்படுகொலை!

உலக வரலாற்றில், மனித இனம் மொத்தமும்
சுற்றி நின்று, நித்தம் பல்லாயிரம் தமிழர்கள்
கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க,
தமிழ் இனப்படுகொலையைப் பற்றிய அக்கறையே
இல்லாமல் இருந்த தமிழ்க் குமுகம்,
நடந்து கொண்டிருக்கும் தமிழ்
மொழிப்படுகொலையையும்
அதைவிட நிதானமாக வேடிக்கை பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல
வேண்டும்.

இனப்படுகொலை முடிந்த கையோடு
ஒன்றன்பின் ஒன்றாகத் தமிழ் மொழியைச் சிதைக்க
நடக்கும் அடுத்தடுத்த முயற்சிகளை எண்ணுங்கால்,
"இனப்படுகொலைக்கே இந்தக்குமுகம்
தூங்கிக்கொண்டிருந்தது; மொழிக்காக எங்கே
எழப்போகிறது?" என்ற ஊக்கமே காரணமாக
இருக்கக் கூடும் என்று சொன்னால் மிகையல்ல.

5 அல்லது 6 நூறாண்டுகளாக வடமொழியை
நுழைத்து, தமிழைக் குற்றுயிரும் குலையுயிருமாய்
ஆக்கிச் சீரழித்து, அதற்கு "மணிப்பிரவாளம்"
என்று பெயர் கொடுத்து "மலையாளம்" போல
தமிழை ஆக்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

பின்னர் மறைமலையடிகளாரின் தனித்தமிழ்
இயக்கம் வீறுகொண்டு எழுந்து குற்றுயிராய்க்
கிடந்த தமிழுக்கு மருந்து போட்டு அதன்
சீரிளமையைத் தூக்கி நிறுத்தியது.

இந்த அழகில், "தமிழை யாராலும் அழிக்க முடியாது!"
என்ற வீரவசனத்திற்கு மட்டும் மேடைகளில்
குறைவேயிருக்காது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்,
மணிப்பிரவாளத்தை முறித்துப் போட்டு, தனித்தமிழ்
இயக்கம் தந்த தாங்கலை வேரறுக்கத் தருணம் பார்த்தது
போலவே இருக்கிறது இந்தியாவை ஆளுகின்ற
காங்கிரசு அரசு இன்றைக்கு அதே மணிப்பிரவாளத்தை
உருவாக்கத் தமிழர்க்கெதிரான பேராயுதமாகக்
கையில் எடுத்திருப்பது.

வடமொழியை எழுத 68 கிரந்த எழுத்துக் குறியீடு போதும்
என்ற நிலையிலும், கிரந்த ஆவணங்களை அதைக் கொண்டு
படிக்க முடியும் என்ற போதிலும், வேண்டும் என்றே
கிரந்தத்தில் தமிழைக் கலந்த மணிப்பிரவாள-ஒருங்குறியை
உருவாக்க முனைகிறது காங்கிரசு அரசு.

கிரந்தம் படிப்பதற்காக, ஒருங்குறியில்
உருவாக்கப்பட ஒருங்குறிச் சேர்த்தியத்தில்
முன்வைக்கப்பட்ட தனி-கிரந்த-ஒருங்குறியீட்டை
கவிழ்த்து விட்டு, தமிழை அழிக்கு முகத்தான்
அந்தத் தனி-கிரந்த-ஒருங்குறியில் தமிழெழுத்துக்களைக்
கலந்து சமற்கிருதமும் மணிப்பிரவாளமும் உருவாக்க
வகைசெய்யும் தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு தருக
என்று ஒருங்குறிச் சேர்த்தியத்தை இந்தியாவின்
காங்கிரசு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரசு அரசின் முன்மொழிவில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காண்க:

"The context of use for the proposed characters (type of use; common or rare)

Used for writing Sanskrit (including Vedic) both independently and as part of Tamil
Manipravalam.
"
தமிழ் இனப்படுகொலையைச் செய்த நாடுகள்
எப்படி ஈழக்கருணாவை உருவாக்கினார்களோ
அதே போல தமிழ் மொழிப்படுகொலைக்காக
கணேசன் என்பவர் உருவாக்கப் பட்டிருக்கிறார்.

கணேசன் என்பாரின் முன்மொழிவை அடியொற்றி,
காங்கிரசு அரசு இந்த மொழிப்படுகொலை
முன்மொழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கணேசன் இதனை இணைய உலகு முழுதும்
பெருமையாக உறுதி செய்திருக்கிறார்.
ஒரு குழுவில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"I am personally worried about safety of Grantha IT
followers including myself. Government of India and
UTC will implement my core design for Grantha Unicode,
so I don't have to write to draw attention."

இந்தியாவின் காங்கிரசு அரசின் பின்புலம்
இருக்கின்றதென்பதால் கணேசன்
இணையம் எங்கும் கிரந்தப் பரப்புரை செய்வதும்
தமிழை இழித்தும் பழித்தும் கீழறுப்பு வேலைகளைச் செய்தும்
வருகிறார் என்பதை இணைய மடற்குழுக்கள் பலவும் அறியும்.

இதற்கு எழும் எதிர்ப்புக்களை மங்கச் செய்யும்
வகையில், சிலர் "தமிழ் எழுத்துக்களை
பிற மொழிகள் எடுத்துக் கொள்வது தமிழுக்குப்
பெருமைதானே!", "நமது எழுத்துக்களைப்
பிற மொழிகள் கடன் வாங்குவது தமிழின்
பெருமையைத்தானே சொல்கிறது?" என்றெல்லாம்
திசை திருப்பி வரவிருக்கும் ஆபத்துகளை
எண்ணிப் பார்க்க விடாமல் பரப்புரை
செய்து வருகின்றனர்.

ஒரு புறம் கணி வல்லுநரும், தமிழ் வல்லுநரும்
இதனை எதிர்த்துக் குரல்தருகின்ற வேளையில்,
தமிழ்நாடெங்கும் உழவர் இயக்கங்களும்
இதனை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்ற காட்சியைக்
காணமுடிகிறது.

மொழிப்படுகொலையை தி.மு.க அரசு தடுத்து நிறுத்துமா?

தி.மு.க அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு ஆழச்
சிந்தித்துத் தடுக்குமா? இல்லை காணாநெறியில் நிற்குமா?

காங்கிரசுக்கு ஏன் தமிழர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு?

1965ல் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கப்
பலரைச் சுட்டுப் படுகொலை செய்தது காங்கிரசு அரசு.

இன்றைக்கு மணிப்பிரவாளத்தை மீண்டும்
திணிக்கிறது காங்கிரசு அரசு.

மணிப்பிரவாளத்தை எதிர்க்கப் போகும் தமிழ்நாட்டில்
என்ன செய்யக் காத்திருக்கிறது காங்கிரசு?

அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, January 10, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - பகுதி 11/11 நிறைவு

தொகுதி-5: பிற செய்திகளும் மேற்கொண்டு செய்ய வேண்டியனவும்

தற்காலக் கணிச் சூழலில் தமிழில் கிரந்த நுழைவு
என்பது ஒரு புதிய வழி. இப்படி ஒரு வழியும் சூழலும்
இருக்கிறது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க
வேண்டிய முக்கியமான பல விதயங்களில் இதுவும்
முகன்மையான ஒன்று என்பதையும் உணர வைப்பதாக
இந்த ஒருங்குறிச் சூழல் அமைகிறது. அதேபோல
இந்தக் கிரந்த நுழைவைத் தடுத்து விட்டால் இனி
இன்னலே வராது என்று சொல்லமுடியுமா என்றால்,
உறுதியாக,
“இல்லை; இன்னல்கள் பல வடிவங்களில் தொடரும்”
என்றே சொல்லலாம்.

கணி நுட்பத்தின் பல்வேறு வளர்வுகளும் பிற
அறிவியல், நுட்ப வளர்வுகளும் தொடர்ந்து
இன்னல்களைச் செய்து கொண்டே இருக்கும்
என்பதால் அதற்குத் தமிழ் உலகம் தன்னை
தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற
விழிப்புணர்வை இது ஏற்படுத்துவதாகக் கருதல் தகும்.

விழிப்பு என்பது எங்கேயாவது செய்தியைப்
படித்து விட்டு ”தமிழ் வாழ்க, கிரந்தம் ஒழிக”
என்ற அளவிலேயே அமைந்துவிடக் கூடாது.
இருக்கும் சூழலை பன்முகப் பார்வையுடன்
ஆய்ந்து முறையான அரண்களை அமைப்பதே
அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

• ஏழு கோடி பேர்கள் பேசும் மொழியின்
எழுத்துக்கள் எங்கே இருக்க வேண்டும்,
எங்கே கலக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்களில்
ஒருவர் அமெரிக்காவிலே பணி செய்யும் பொறிஞர்;
இன்னொருவர் தமிழ்நாட்டிலே முதுகலை படித்த மாணவர்.
இவர்கள் இருவரின் செயற்பாடுகளை மறுத்துப் பேச
தமிழ் ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும்,
அரசாங்கத்தாலும் எத்தனை நேரம்
வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று
எண்ணிப் பார்த்தல் தகும்.

• யாரோ ஒருவர் அவரின் விருப்பப்படி
தமிழ் எழுத்துக்களோடு கிரந்தத்தைக்
கலந்துவிடலாம்; என்ன வேண்டுமானாலும்
செய்து விடலாம் என்ற நிலை,
தமிழக அரசாங்கத்திலும் தமிழ்மக்களின்
பொதுமன்றங்களிலும் போதுமான
அரண்கள் இல்லாமையையே காட்டுகிறது.

• தமிழ் நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகம்,
செம்மொழி ஆய்வு நிறுவனம், மற்றும்
பல்வேறு மொழி, வரலாறு ஆராய்ச்சி
அமைப்புகள், ஆர்வலர் மன்றங்கள்
அனைத்துமே ஒருங்குறிச் சேர்த்தியத்துடனான
தொடர்பில் அற்றுப் போய் இருப்பதையே
காட்டுகிறது. இது, ஒருங்குறியில் உள்ள
தமிழ் எழுத்துக்களுக்கு யார் பொறுப்பாளர்?
என்ற வினாவினை ஓசையுடன் எழுப்புகிறது.

• அதேபோல, ஒருங்குறிச் சேர்த்தியம்
என்ற பன்னாட்டு அமைப்பும், தமிழ்
எழுத்துக்குறிகளில் ஏதேனும் மாற்றம் செய்யவோ
அல்லது புதியன புகுத்தவோ முன்மொழிவுகள் வந்தால்,

o “ஏன் அவர்கள் தமிழக அரசுக்குத் தெரிவிப்பதில்லை?
o தமிழுக்கென்று இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு
அவர்கள் ஏன் தெரிவிப்பதில்லை?
o இந்திய நடுவணரசாலும் தமிழக அரசாலும்
நடத்தப்படுகிற செம்மொழி ஆய்வு மையத்திற்கு
ஏன் தெரிவிப்பதில்லை?
o இந்தியாவில் இருக்கின்ற இரண்டு
செம்மொழிகளில் ஒன்றான தமிழ்
மொழியைப் பற்றிய விதயங்களை
ஏன் ஒருங்குறிச் சேர்த்தியம்
தமிழ்நாட்டு மன்றங்களுக்குத் தெரிவிப்பதில்லை?
என்ற வினாக்களுக்கு விடை காண வேண்டிய
முக்கியமான வேளை இது. இவற்றிற்கு
விடை காண்பதே நீண்டகாலத் தீர்வாக இருக்கும்.
இல்லாவிடில் இது யாரோ சில ஆர்வலர்களின்
“தமிழ் வாழ்க!” என்ற முழக்கம் என்றளவில்
கருதப்பட்டு தீர்விழந்து போகும்.

• தமிழ் நெடுங்கணக்கு வரைவு, தமிழ் எழுத்து,
மொழி பயன்படுத்தப் பட வேண்டிய முறை பற்றிய
செந்தரம் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கும்,
நடுவணரசுக்கும் தெரிவிக்கப்பட்டு என்ன
மாற்றமெனினும் அது தமிழக அரசுக்குத்
தெரியாமல் நடக்கக் கூடாது என்ற உறுதி
நிலை ஏற்படுத்த வேண்டும்.

• கணித்தமிழ்ப் பணிகளைச் செய்கின்ற
உத்தமம் (http://infitt.org) என்ற அமைப்பின்
பேச்சைக் கேட்டுத் தமிழ்நாட்டில் பல தமிழ்
இணைய மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்த உத்தமம் அமைப்பே ஒரு கிரந்த
எழுத்தைத் தமிழில் கலந்து வழிகாட்டியுள்ளது.

மேலே பகுதி-4ல் சொல்லப்பட்ட இடர்கள்
ஐந்தனையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே
பார்த்திருக்கிறது. இக்குழு கணியில் தமிழைப்
பாதுகாக்குமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

• தனியாரால் தமிழ் தொடர்புடைய
எந்த முன்மொழிவு சேர்த்தியத்துக்கு
அனுப்பப்பட்டாலும் அது தமிழக அரசின்
ஒப்புதலோடு மட்டுமே செல்லவேண்டும்
என்றும், அதுவல்லாத தமிழ் சார்ந்த
முன்மொழிவுகள் சேர்த்தியத்தால்
ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது என்றும்
முறைமை ஏற்படுத்தப்படவேண்டும்

• நிரந்தரமான, அரசு மற்றும் தனி அறிஞர்,
கல்வியாளர் உள்ளிட்ட குழுவை இணையத்
தமிழ் மற்றும் ஒருங்குறிக் கண்காணிப்பிற்குப்
பணிக்க வேண்டும்.

• பலரும் ஒருங்குறி, கிரந்தக் கலப்பு பற்றிப்
பேசிக் கொண்டிருக்க, ஆங்காங்கு இருக்கின்ற
சிலரோ தங்களுக்கு இருக்கும் ஒருங்குறியைப்
பற்றிய ஏட்டறிவு மட்டுமே கொண்டு அரசிற்கு
ஆலோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிற் பட்டறிவு கொண்டார் மிக மிகக் குறைவு.
இந்தச் சிக்கல் கிரந்தத்தால் மட்டுமன்றி வருங்காலத்தில்
எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால்,
ஒருங்குறி அறிந்த கணிஞர்கள் சிலரை அரசோ,
பல்கலக்கழகங்களோ மேற்கண்ட குழுவோடு
தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குப்
பணிக்க வேண்டும்.

• தமிழ்நாட்டின் கல்வெட்டு, வரலாறு, தொல்லியல்
போன்ற துறையினரோடு ஒருங்குறிக் கணிஞர்கள்
ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை
புழக்கத்தில் உள்ள மற்றும் பழஞ் சின்னங்கள் குறிகள்
எல்லாம் துறைவாரியாகச் சேர்க்கப்பட்டு
அவற்றை ஒருங்குறியில் கொண்டு சேர்க்கும்
முக்கியமான பணியைச் செய்யவேண்டும்.
இதுவே தமிழ் உரிமையாளர்களின் கடமையாக
இருக்க முடியும்.

• “ஒருங்குறித் தரத்தில் இன்ன திருத்தங்கள்
செய்ய வேண்டும்; இன்ன எழுத்துக்கள் மட்டும்
இருக்க வேண்டும். இந்த வரையில் உள்ள
எழுத்துக்களில் ஏதேனும் மாற்றமோ,
புது வடிவங்களோ கொண்ட கணிச் சொவ்வறைகள்,
செயலிகள், நிரலிகள் ஆகியன தமிழ்நாட்டில்
விற்கப்பட அனுமதி கிடையாது; என்ற தெளிவான
சட்ட அறிவிப்பே கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும்.

அதுவே ஒருங்குறிச் சேர்த்தியத்தையும்
தமிழக அரசைக் கண்டுகொள்ளச் செய்யும்.
சீனா இப்படித்தான் முறை வைத்திருக்கிறது.
மிகத் தெளிவாக சீன அரசு “GB18030” என்ற
தனது 2000மாம் ஆண்டின் அரசாணை வழியே
கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
(பார்க்க: http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm ).

இதை மீற எந்தக் கணிநிறுவனமும் முயலுவதில்லை.
இல்லாவிடில் பன்னாட்டு நிறுவனங்களைக்
கட்டுப்படுத்தவும் முடியாது; தனியார் செய்யும்
இடர்களுக்கும் அளவிருக்காது வருங்காலங்களில்.


நிறைவு:

தமிழ் வரலாற்றில் புதிய கிரந்த இன்னலான
இதனைப் பற்றிப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும்
அடிப்படையைத் தெளிவாக்க என்னால் இயன்றவரை
முயற்சித்திருக்கிறேன். புதிய இன்னலான இதன்
அடிப்படைகளை அறிய வாய்ப்பு குறைந்தோர்க்கு
இன்னல்களின் வேர்களையும் அதன் தன்மைகளையும்
எடுத்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.

இந்த ஆவணத்தில்
“கிரந்தத்தினால் விளையக் கூடிய தீமைகள்” என்ற
பகுதியை மட்டுமே தவிர்த்திருக்கிறேன்.

தமிழறிந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு
நூறு தீமைகளைப் பட்டியலிட முடியும்
என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள
வெள்ளையர் உள்ளிட்ட கல்வியாளர்
மன்றங்களுக்கு எல்லாம் சென்று
“இதோ பாருங்கள் – இந்தக் கலப்பினால்
எங்களுக்கு இப்படித் தீமைகள் வண்டி
வண்டியாக வந்துடுமுங்க” என்று
ஆதாரங்களை அடுக்கி,
தயவு செய்து தடுத்துவிடுங்கள்
என்று கெஞ்சும் நிலையில் நானில்லை;

எம்மக்களும் அப்படி இருக்க ஒட்டார்.
தமிழ் மொழி என் தாய்மொழி.
இதனை யாரிடமும் போய் கையேந்திக்
காக்கும் இழிநிலைக்குத் தமிழர் ஒட்டார்.

“தாய் பிறன் கைபட நாயென வாழேன்”
என்று ஆணையிட்டுக் கலப்புகளைத் துரத்துவோம்.

அதே நேரத்தில் இடர்களின் வேர்களை
அறிவார்ந்த முறையில் தெளிந்து
வலுவான அரண்களை அமைத்துக் கொள்வதுவே
அறிவார்ந்த செயலாகும்.

சீனன் ஒரு முறை பட்டான். அந்தப் பட்டறிவு
அவனுக்குத் திடம் அளித்திருக்கிறது.

தமிழன் அவனை விட அதிகமாகப் பட்டான்.
அவனுக்கு எந்த அளவு திடம் வந்திருக்கிறது
என்பதை அறியமுடியவில்லை.

இந்த ஆவணத்தில் எங்கேனும் விளக்கம்
வேண்டியிருப்பின் எனது nelango5@gmail.com என்ற
என் மின்வரிக்கு அஞ்சல் அனுப்பக் கேட்டுக்கொள்கிறேன்.

தாய்மொழி உணர்வோடு, கேடுகளைத் தடுக்கும்
அறிவார்ந்த அரண்களை வகுப்போம்; இணைவோம்;
வெல்வோம். நன்றி.

ஆதாரங்களும் மேலும் படிக்கத்தக்கனவும்:

• http://unicode.org
• http://www.unicode.org/charts/
• http://www.unicode.org/consortium/memblist.html
• http://valavu.blogspot.com/2010/11/1.html
• http://infitt.org
• http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm
• http://nayanam.blogspot.com/2010/12/13.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

இக்கட்டுரையின் பிற பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html
பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html
பகுதி 10: http://nayanam.blogspot.com/2011/01/10.html
.

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 10

தொகுதி-4: ஒருங்குறியின் பிற இன்னல்கள்

ஒருங்குறியில் தமிழுக்கு ஊறு தரும்
கிரந்தக் கலப்பை மட்டும் தற்போது கவனித்து
வருகிறோம். ஆனால் அதில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும்
அடிப்படைப் பிசகுகள் களையப்பட வேண்டும்.

ஒருங்குறியில் வைக்கப்படும் ஒவ்வொரு
எழுத்துக்கும் ஒரு குறியெண் கொடுக்கப்படும்
என்று பார்த்தோம். கூடவே அதற்கு ஒரு பெயரும்
உண்டு. ஒரு எழுத்துக் குறியை வரையறுத்துச்
சொல்வதற்கு, குறிப்பெயரையும் (Code Name),
குறிஎண்ணையும் (Code Point) சேர்த்துச் சொல்வது
ஒருங்குறி மரபு.

ஒருங்குறி சார்ந்த எல்லா ஆவணங்களிலும்
இப்படித்தான் எழுதுவார்கள். காட்டாக,
“U+0B95 TAMIL LETTER KA “ என்பது “க”
என்ற தமிழ் எழுத்துக் குறிக்கான அடையாளம் ஆகும்.


33) இடர்-1:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில் தற்போது
இடம் பெற்றிருக்கும் 5 கிரந்த எழுத்துக்களுக்கு
கொடுக்கப் பட்டிருக்கும் பெயர்களைப் படத்தில் காண்க.

கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்கள் என்று அடையாளமிட்டிருப்பதை ஏற்க முடியுமா?

அரசாணையில் வந்துவிட்டதால் அதனை யாராவது தமிழ் எழுத்துக்கள் என்று சொன்னால் அது சரியா?

எதிர்காலத்தில் தமிழக, நடுவ, பன்னாட்டுப் பிற மன்றங்களில் இவ்வெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று சொல்லமுடியுமா?

ஒரு புறம் கிரந்த எழுத்துக்கள் என்று
சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம்
தமிழ் எழுத்துக்கள் என்று ஆவணமாக்கி
விடுதல் பிழையல்லவா? மேலும்,
நடுவணரசு முன்மொழிந்திருக்கும்
கலவைக் குறியீட்டில் அதே கிரந்த
எழுத்துக்களை கிரந்த எழுத்துக்கள்
என்றே குறிப்பிட்டிருப்பதைக் கீழே காண்க.
34) இடர்-2:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில் பல்வேறு
குறிகள் என்ற தலைப்பிலே ஏற்படுத்தப்
பட்டிருக்கும் குறிகளைக் காண்க.

அனுசுவரா என்று, தமிழ் எழுத்துக் குறி
எதற்கும் பெயருண்டா?

இல்லை என்றால் இது எப்படி ஏற்பட்டது?

அந்தக் குறிக்குக் கீழே
“இது தமிழில் பயனாவது இல்லை”
என்று எழுதப் பட்டிருக்கிறது.
தமிழில் பயனாகாத குறியை தமிழ்
அட்டவனையில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?

அதே போல தமிழ் ஆய்தக் குறிக்குப் பெயர்
விசாருகாவா?

இல்லை என்றால் TAMIL SIGN AYTHAM
என்று எழுதாமல் ஏன் TAMIL SIGN VISARGA
என்று ஆவணப்படுத்தப் பட்டுள்ளது?

இவற்றை நாம் இப்படியே விட்டால்
ஒரு காலத்தில் எது தமிழ் எது கிரந்தம்
என்று தெரியாமற்போவது மட்டுமல்ல
நம்முடையதையெல்லாம் தவற விட்டுவிட்டுப்
பின்னர் சிந்திப்பவர்களாக மாட்டோமா?


35) இடர்-3:
விராமா எனறால் என்ன? விராமா என்பது
தமிழ் மெய்ப்புள்ளிக்கு இருக்கும் தமிழ்ப் பெயரா?
விராமா என்பது தமிழா?

இல்லாவிடில் அது எப்படி TAMIL SIGN VIRAMA
என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது?

தமிழின் அடிப்படைக் குறிகளுக்கு இப்படிப்
பெயரிடுவதால் வடமொழியில் இருந்துதான்
தமிழ் வந்தது, கிரந்தத்தில் இருந்துதான்
தமிழ் எழுத்துக்கள் வந்தன என்று யாரும்
சொன்னால் எப்படி மறுக்க முடியும்?

36) இடர்-4:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில்
காலியிடமாக வைப்பில் இருக்கும்
இரண்டு இடங்கள் எதற்காக
வைக்கப்பட்டிருக்கின்றன என்று படத்தில் காண்க.

தேவநாகரி தண்டாக் குறிக்கும்,
இரட்டைத் தண்டாவுக்கும் ஏன் தமிழ்ப் பாத்தியில்
இடம் வைப்பில் இருக்கிறது?

கிரந்தம் மட்டுமல்ல தேவநாகரியையும்
கலக்க ஏதுவாகாதா?

37) இடர்-5:

ஒருங்குறிச் சேர்த்தியம், உலகின் பல
மொழிகளையும் தொகுத்து அவற்றின்
வகைகளைக் கூறுகிறது.
அதன்படி எழுத்துக்களைக் கணியிலும்
அச்சிலும் தோற்றுவிக்கிறது.
அகரமுதலி வகை, அபுகிடா வகை,
அபுசாட வகை, படவகை என்று பலவகைகளில்
மொழிகளைப் பிரிக்கிறது.

பெரும்பிழையாக, தமிழை அபுகிடா வகையென்று
வகைப்படுத்தி இருக்கிறது. ஒருங்குறிப் பிழைகளில்
எல்லாம் ஆகப்பெரிய அடிப்படைப் பிழை இதுவேயாம்.

“சிங்களம் உள்ளிட்ட இந்திய எழுத்து
முறைகள் எல்லாமே தேவநாகரி
அடிப்படையிலான அபுகிடா எழுத்துமுறை”
என்று வகைப்படுத்தியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய இலக்கணப் பிழை,
மரபுப் பிழை என்பதைப் பற்றி
முனைவர் இராம.கி தனது வலைப்பதிவிலே
(http://valavu.blogspot.com) குறியேற்றங்கள் பற்றிய
கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.

பேராசிரியர் செல்வக்குமார்,
தமிழ் அபுகிடா வகையல்ல என்பது பற்றி
செம்மொழி மாநாட்டிலே வழங்கிய
தனது ஆய்வுக் கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.

தமிழ் எழுத்துக்கள் தோன்றும் முறையையே
தவறாகச் சொல்லியிருக்கும் ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு யார் சொல்லி சரி செய்வது?

மேற்கண்ட இடர்களால் அடிப்படைத்
துல்லியம் மறைந்து விடுகின்றது.
இது நாளடைவில் மொழிக்கு ஊறாக மாறும்.
அவற்றையும் களைய நாம் ஆவண செய்யவேண்டும்.

தற்போது முகன்மையான கிரந்தக் கலப்பை
மறுத்த கையோடு விட்டுவிடாது, ஏற்கனவே
ஏற்பட்டிருக்கும் கேள்வி கேட்பாரின்றி
ஏற்படுத்தப்பட்ட பிசகுகளைக் களைய வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html
பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html

அன்புடன்
நாக.இளங்கோவன்
யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 9

31) மேற்சொன்ன ஒருங்குறிக் கிரந்தச் சிக்கல்களின் சுருக்கம்:32) கிரந்தக் கலப்பு பற்றி நிலவுகின்ற தவறான புரிதல்:

கிரந்த நுழைவு பற்றிய ஒரு முக்கியமான புரிதல்
இங்கே அவசியமாகிறது. உலகில் உள்ள பல
இலக்கக் குறிகளை ஒருங்கு சேர்க்கும்
ஒருங்குறியில், தனியாக, “தமிழ் மொழியில்
கலக்காமல் கிரந்தக் குறிகளை தனிப்பாத்தியாக
துணைப்பன்மொழித் தளத்தில்” ஒருங்குறிச்
சேர்த்தியம் வைக்குமானால் அது பற்றி நாம்
கவலைப்பட ஒன்றுமேயில்லை.

தமிழ் எழுத்துக்களில் கிரந்தத்தை நுழைப்பதுவும்,
அதேபோல கிரந்தத்தில் தமிழைக் கொண்டு
போய் நுழைப்பதுவும் தான் மொழிப்படுகொலையாகும்.

ஒருங்குறியில் கிரந்தம் தனியாகக் குறியேற்றம்
செய்யப்பட்டால், அதையே தமிழிற்கு இருக்கும்
பாத்திகளில் கலப்பதாக எண்ணிச் சிலர்
கவலையுறுவதைக் காண முடிகிறது.
அந்தக் கவலை கைவிடப்பட வேண்டிய ஒன்று.

சீட்டுக்கட்டுக் குறிகள், இசைக்குறிகள்,
பழஞ்சின்னங்கள் போன்றவை தேடித் தேடிச்
சேர்க்கப்படும் இடத்தில் கிரந்தத்துக்கோ
வேறு எழுத்துக்களுக்கோ இடம்
ஒதுக்குவார்களெனின் அது தமிழ்நாட்டின்
கவலையாக இருக்க முடியாது.

அதைச் செய்யக் கூடாது என்று நாம்
மறுத்தால் அது அறியாமை என்று கருதப்பட்டு
நமது கருத்துக்கள் எதுவுமே செல்லுபடியாகாமல்
போய்விடும் பேராபத்து இருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவது ஒருபுறம்
தேவையெனினும் சூழ்க்குமாகவும்
அறிவுப்பூர்வமாகவும் அணுகவேண்டிய இடம் இது
என்று சொல்லவேண்டிய கடமையிருக்கிறது.

அதுமட்டுமல்ல நமது தமிழ்ப் பழஞ்சின்னங்கள்,
குறிகள் போன்றவற்றை வரும் காலங்களில்
ஒருங்குறியில் கொண்டுவரக் கோரும்
தார்மீகத் தகுதியை நாம் இழந்தவர்களாவோம்.
(17-தள சட்டகம் மற்றும் தளம் பற்றிய விளக்கங்களைக்
மீண்டும் காண்க)

அப்படியும் உணர்ச்சி மிகுதியால் யாரேனும்,
“தமிழில் கிரந்தம் கலக்கக் கூடாது;
கிரந்தம் தமிழில் கலக்கக் கூடாது” என்பது மட்டுமல்ல,
“கிரந்தமே ஒருங்குறித் தரப்பாட்டுக்குள் கொண்டு
செல்லப் படக் கூடாது” என்று போர்க்கொடி
தூக்குவார்களெனின்,

• அது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது
• தமிழர்கள் கிரந்தத்திற்கு உரிமையாளரா?

என்ற வினா வரும்! ஆம் என்று பதில் சொல்வோமெனின்
அது வெட்கக் கேடு; இல்லை என்று சொல்வோமெனின்
“உரிமை இல்லாதவர்களுக்கு இது பற்றிப்
பேச இடம் இல்லை” என்று சேர்த்தியம்
சொல்லிவிடும். இதுதான் நிலை.

ஆகவே, தமிழ்நாட்டரசும்,
“கிரந்தம் தமிழில் வந்து கலக்கக் கூடாது”,
“தமிழும் கிரந்தத்திற்குப் போய் கலக்கக் கூடாது”
என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கவேண்டுமே தவிர,
“ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்ளேயே
கிரந்தத்தை விடக்கூடாது” என்ற நிலை எடுக்கக் கூடாது.

(தொடரும்)

பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 8

27) கிரந்தத்திற்கென தனிக்குறியீடு முன்மொழிவு வைக்கப்பட்டதா?

ஆம்; தமிழைக் கிரந்தத்திற்காக நீட்ட வேண்டும்
என்று சொன்ன திரு.சிறீரமணசர்மா,
அம்முன்மொழிவின், தாராள நீளல் பகுதியைக் காட்டி
68 கிரந்தக் குறியீடுகளுக்கு ஒரு தனிப்பாத்தி கேட்கும்
இன்னொரு முன்மொழிவைத் தனியாக ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு அனுப்பினார்.

ஆக, தமிழ் வடிவொத்து மீயெண்கள் போட்ட
26 கிரந்தங்களுக்கு (படம் 3.1) தமிழ் நீட்சி
முன்மொழிவாகவும், கிரந்தக் குறிகள்
அனைத்தையும் (68) அதன் இயல்வடிவத்தில்
உள்ளடக்கிய கிரந்த எழுத்துக்களுக்கு
(படம் 3.2ல் ET-L வரிசை) தனி கிரந்த ஒருங்குறி
ஒதுக்கீடும் கேட்கும் முன்மொழிவாகவும்
இரண்டு முன்மொழிவுகளை சிறீரமணசர்மா
அனுப்பியிருக்கிறார்.

இது இப்படி வரட்டும்; அது அப்படி வரட்டும்
என்ற இரட்டை உத்தி போலும்.

கிரந்தக் குறிகள் 68ற்கு தனி ஒருங்குறி கேட்ட
விதயத்தில் ஊன்றிக் கவனிக்க வேண்டியன:

1) இதனை, திரு.சிறீரமணசர்மா, வாழ்மொழி
எழுத்துக் குறிகளை வைக்கின்ற முதன்மைப்
பன்மொழித் தளத்தில் கேட்கவில்லை.
பழம் மொழிகள், வழக்கொழிந்த மொழிகள்,
அதிகம் பயன்படாத சின்னங்கள் குறிகள்
பெருமளவும் வைக்கப் படுகின்ற துணைப்
பன்மொழித் தளத்தில் வைக்கக் கேட்டிருக்கிறார்.

2) உலகில் உள்ள குறிகள் சின்னங்களையெல்லாம்
ஒருங்கக் கூட்டுகிற ஒருங்குறித் தரப்பாட்டில்
கிரந்தக் குறிகளுக்கும் இடம்பிடிப்பது என்பது வேறு;

அந்த ஒருங்குறித் தரப்பாட்டில்
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இருக்கும்
நமது தமிழ்மொழிக் குறியீட்டில்
கிரந்த எழுத்துக்களைப் புகுத்துவதும் நீட்டிப்பதும் வேறு.படத்தில், ஆபத்தைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்தில்
இருப்பது கிரந்தக்குறிகளை தமிழின் பெயரில்
நீட்டிக்க, சேர்க்கப்படக் கோரிய பாத்தி.

“68 கிரந்தக்குறிப் பாத்தி” என்பது ஒருங்குறியில்
கிரந்தக்குறிகளை சேர்க்கும் பாத்தி.
திரு.சிறீரமணசர்மாவின் இரண்டாவது
முன்மொழிவு ஒருங்குறியில் கிரந்தக்
குறிகளுக்குத் தனி இடம் பிடிக்க மட்டுமே
கோருகிறது. தமிழில் கலப்படம் செய்யக்
கோரவில்லை.

பின்னர் எங்கிருந்து கிரந்தக் கலப்பு வருகிறது?
அதனை அடுத்து பார்ப்போம்.

28) கிரந்தத் தனிக்குறியீட்டின் நிலை என்ன?

கிரந்தத்துக்கென்று இதுவரைத் தனிக்குறியீடு
ஒருங்குறியில் இல்லை. கிரந்தத்துக்கென்று
68 குறிகள் உள்ளன என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.
அந்த 68 குறிகளைக் கொண்டு எந்தத்
தமிழாவணத்தையும் உருவாக்க முடியாது.
அந்த 68 கிரந்தக் குறிகளுக்குத் தனிக்குறியீடு
கேட்ட திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு
தள்ளி வைக்கப் பட்டது.

29) கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவு ஏன் தள்ளி வைக்கப்பட்டது?

திரு நா.கணேசன், 68 கிரந்தக் குறிகளோடு,
தமிழ் எழுத்துக்களான “எ”, “ஒ”, “ழ”, “ற”, “ன”
என்ற ஐந்தனையும், தமிழ் உயிர்மெய்க் குறிகளான
“எகர உயிர்மெய்க் குறி”, “ஒகர உயிர்மெய்க் குறி”
என்ற இரண்டனையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை
கிரந்தத்துக்குள் நுழைத்து, 75 குறிகளைக் கொண்ட
தமிழ்-கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்க
வேண்டும் என்று முன்மொழிவு வைத்திருந்தார்.

நா.கணேசனுக்கும், சிறீரமணசர்மாவுக்கும்
இடையில் ஏற்பட்ட விவாதத்தால்
குழம்பிப் போன ஒருங்குறிச் சேர்த்தியம்
கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவைத்
தள்ளி வைத்தது.

இரண்டு வேறுபட்ட வாதங்களுக்கு நடுவில்
ஓர் பொதுமையை யார் கொண்டுவர முடியும்
என்று அது தேட முனைந்தது. அதோடு,
திரு.சிறீரமணசர்மா வேண்டியது போல
வழக்கொழிந்த அல்லது குறைந்த குறிகள்
வைக்கப் படும் துணைப் பன்மொழித் தளத்தில்
வைக்கக் கூடாது என்றும்,
75 கிரந்தக் குறிப்பாத்தியை வாழ்மொழிகள்
வைக்கப்படும் முதன்மைப் பன்மொழித்
தளத்திலேயே வைக்க வேண்டும் என்ற
திரு.கணேசனின் முன்மொழிவு ஒருங்குறிச்
சேர்த்தியத்தை வியப்படையவேச் செய்தது.

30) நடுவணரசு ஏன் தமிழ் கலந்த கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவை வைத்தது?


திரு.சிறீரமணசர்மாவுக்கும் திரு.நா.கணேசனுக்கும்
இடையே கிரந்தத்துக்குத் தொண்டு செய்ய நடந்த
போட்டியில் ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்,
திரு.சிறீரமணசர்மா கேட்கும் 68 குறிகள் கொண்ட
தனிக் கிரந்தக் குறியீடை ஏற்படுத்துவதா?
அல்லது திரு.நா.கணேசன் கேட்கும்
தமிழைக் கலந்த 75 கிரந்தத் தனிக் குறியீடை
வைப்பதா? என்ற குழப்பம் ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு ஏற்பட, அவர்கள் அது பற்றி
இந்திய நடுவணரசின் உதவியை நாடினார்கள்.

“கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவை விட,
“தமிழைத் தாரை வார்த்துக்
கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவே
நடுவணரசை ஈர்க்க, திரு.நா.கணேசன்
முன்மொழிவில் சிறு சிறு மாற்றங்கள்
செய்து “மணிப்பிரவாள மொழிக்காகவும்,
சமற்கிருத மொழிக்காகவும்”
தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை
ஏற்படுத்துங்கள் என்று நடுவணரசே
தனது முன்மொழிவாக ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது.

நடுவணரசின் முன்மொழிவானது மேற்சொன்ன
75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் வைத்து
மொத்தம் 89 குறிகள் கொண்ட
"தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு" ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் கேட்கப் பட்டுள்ளது.

இந்த முன்மொழிவில், “இந்தக் குறியீடுகள்
வழக்கொழிநது வரலாறு ஆனவை அல்ல;
அவை முதன்மைப் பன்மொழித் தளத்திலேயே
வைக்கத் தக்கவை என்றபோதிலும்
முதன்மைப் பன்மொழித் தளத்தில்
போதிய இடமில்லாததால் துணைப்
பன்மொழித் தளத்தில் வையுங்கள்”
என்று நடுவணரசால் சொல்லப் பட்டிருக்கின்றது.
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம்
இருந்திருந்தால் அங்கேயே வைக்கச்
சொல்லி நடுவணரசு கேட்டிருக்கும்
என்பதையே இது காட்டுகிறது.

இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க
2010 நவம்பர் மாதம் முதல்வாரத்தில்
ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த
போதுதான், தமிழ் ஆர்வலர்களும்
அறிஞர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

சிக்கல்கள் நிறைந்த இவ்விதயத்தை
முனைவர் இராம.கி, பேராசிரியர் இ.மறைமலை,
திரு.திருவள்ளுவன் ஆகியோர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து
எடுத்துக் கூறினார்கள். ஆசிரியரின்
முயற்சியால் தமிழக அரசாங்கமும்
இவ்விதயத்தை ஆழ்ந்து கவனித்து
அவசரக் கூட்டம் நடத்தி அறிஞர்களின்
கருத்துக்களைக் கேட்டது.

அதன்படி, தமிழக அரசு நடுவணரசிடம்
கிரந்தக் குறியீடு குறித்து உடனடியாக
முடிவெடுக்கக் கூடாது என்றும்
தமிழக அரசு ஆராய்ந்து கருத்துச்
சொல்ல 3 மாத காலம் வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டதன் பேரில்
2011 பிப்பிரவரி 7 வரை
தமிழறிஞர்களுக்கும் யுனிக்கோடு அறிஞர்களுக்கும்
ஆராய நேரம் கிடைத்திருக்கிறது.

தமிழைக் கிரந்தத்துக்குத்
தாரை வார்த்துக் கொடுக்கும்
இதுவே மூன்றாவது இன்னல் ஆகும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 7

23) ஒருங்குறிக்கு வந்த இரண்டாவது இன்னல் என்ன?

முதல் கிரந்த எழுத்து தமிழ் ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் நுழைந்து வழியேற்படுத்திக்
கொடுத்து, கிரந்த நேயர்களுக்கு ஊக்கமளிப்பதாக
அமைந்தது என்று சொல்லலாம். ஒருங்குறிச்
சேர்த்தியத்தின் மற்றொரு உறுப்பினரான
திரு.சிறீரமணசர்மா 26 கிரந்தக் குறிகளை
“ஒருங்குறித் தரப்பாட்டிற்குள் கொண்டு வந்து”
அதனை “தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்”
(Extended Tamil) என்று வழங்கவேண்டுமென
ஒரு முன்மொழிவை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு
அனுப்பினார். இதன் தேவை என்ன என்பதற்கான
விளக்கங்களில் மூன்றை திரு.சிறீரமணசர்மாவின்
மொழியிலேயே படித்தல் அவசியம்.

• “It is well known that the Tamil script has an insufficient character repertoire to represent the Sanskrit language. Sanskrit can be and is written and printed quite naturally in most other (major and some minor) Indian scripts, which have the required number of characters. However, it cannot be written in plain Tamil script….

• Finally I should say that I must also not forget the Saurashtra language, which also is written with Extended Tamil……….

• Therefore, an encoding of Extended Tamil as described above should also be able to support the writing of the Saurashtra language using Tamil characters.

மேலே திரு.இரமணசர்மா கூறுகின்ற கருத்துக்கள்
அவரின் தமிழ் நீட்டுக் குறிக்கோள்களை மேனிலையில்
புரியத் தருகிறது அல்லவா? சமற்கிருத, செளராட்டிர
மொழிகளுக்குத் தோதாகத் தமிழை நீட்டவேண்டும்
என்பதுதான் அவரின் வாதம்.

24) நீட்டித்த தமிழ் முன்மொழிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 26 கிரந்த எழுத்துக்களின் வடிவம் யாவை?


படம் 3.1 – 26 கிரந்த வடிவம்

பல கிரந்த ஓசைகளுக்கு இந்தப் படத்தில்
காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் போல
வடிவத்துடன் ஒருங்குறியில் இடம் கொடுத்து,
தமிழுக்கும் இவற்றுக்கும் தொடர்பே இல்லாத
நிலையில் இவற்றிற்கு நீட்டித்த தமிழ்
அல்லது தமிழ் நீட்சி என்று சொல்லவேண்டும்
என்பது அவர் பரிந்துரை. இந்த வகையான
எழுத்துக்கள் கிரந்தத்தில் முன்னர் பயனில்
இருந்ததாக அறிஞர் சொல்வர்.


25) நீட்டித்த தமிழை ஒருங்குறிச் சட்டகத்தில் எந்தத் தளத்தில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது?

(பகுதி-3 படம் 2.1 ஐயும் ஒருங்குறியின் உள்ளமைப்பில்
உள்ள தளங்களுக்கான விளக்கங்களையும் ஒத்து படிக்க.)

இன்ன தளத்தில் வைக்க வேண்டும் என்று
திரு.சிறீரமணசர்மா தன் முன்மொழிவிற்
பரிந்துரைக்கவில்லை. ஒருங்குறிச் சேர்த்தியத்தின்
வினவல் ஒன்று இப்படி வருகிறது:

“நீங்கள் பரிந்துரைக்கும் எழுத்துக்களை முழுமையாக
முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) வைக்கக்
கோருகிறீர்களா?”.

இந்த வினாவிற்கு “இல்லை” என்று பதிலளிக்கிறார்
திரு.சிறீரமணசர்மா. அந்த வினா-விடையை
அப்படியே கீழே காண்க:

After giving due considerations to the principles in the P&P document must the proposed characters be entirely in the BMP?
No.

முதன்மைப் பன்மொழித் தளம் (BMP) என்பது
வாழ்மொழிகளுக்கான இடம் என்று பார்த்தோம்.
துணைப் பன்மொழித் தளம் (SMP) என்பது
வழக்கொழிந்த அல்லது குறைந்த மொழி/ குறிகளுக்கான
இடம் என்றும் பார்த்தோம்.

அவரின் முன்மொழிவில் மூன்று கேடுகள்
அல்லது நெருடல்களை திரு.சிறீரமணசர்மா
ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

1) தமிழில் இல்லாத ஓசைகளுக்கு, தமிழல்லாத
குறிகளை(ஆனால் தமிழ் வரிவடிவத்தை ஒட்டியுள்ள
குறிகளை ) ஒருங்குறியில் சேர்க்கச் சொல்லி
அதற்குத் தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ் என்று
பெயர் கேட்பதே அடிப்படைக் கேடு.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று.
அடுத்தவர் முதலெழுத்தை ஒருவர் போட்டுக்
கொண்டு திரிவது போன்றதாகும்.

2) ஒருங்குறிச் சேர்த்தியத்தின் வினாவானது
வழுக்கலான வினா எனக் கருத இடம் இருக்கிறது.

அவர்கள் “இந்தக் குறியீடுகள் *முழுமையையும்*
முதன்மைத் தளத்தில் வைக்கக் கோருகிறீர்களா?
என்றவிடத்து, தேவைப்படுவனவற்றை விடுத்தோ
எடுத்தோ முதன்மைத் தளத்தில் வைக்கலாம் என்று
சேர்த்தியம் கருதினால் அதனைத் தடுக்குமாறு
யாதொன்றும் முன்மொழிவில் இல்லை.

அதுதவிர, திரு.இரமணசர்மா எங்கும் இன்ன
தளத்தில்தான் வைக்க வேண்டும்
என்று கூறவில்லை. அப்படியே கூறுவாரெனினும்
அதனைத் தமிழின் நீட்சி என்று சொல்வது புனைவாகும்.

3) மேற்சொன்ன கருத்து கருதப்படல் எதனாலெனின்,
நீட்டித்த தமிழை ஞாயப்படுத்த திரு.இரமணசர்மா
கையாண்டிருக்கும் அணுகுமுறையாகும்.
முதலிலே கிரந்தத்தோடு தமிழ்க்குறிகளை ஒப்பிட்டு,
பின்னர் நீட்டித்த தமிழ் எப்படி வேண்டும் என்று
இரண்டுவகையாகக் காட்டுகிறார்.

Extended Tamil – Liberal (ET-L),
Extended Tamil – Conservative (ET-C) என்று இரண்டு
வகையாகப் பிரித்து உரையாடலைச் செய்கிறார்
திரு.இரமணசர்மா. இவற்றை முறையே
இளகிய தமிழ் நீட்சி, இறுகிய தமிழ் நீட்சி என்று
சொல்லலாம். இளகிய என்பதற்குப் பதிலாகத்
தாராளத் தமிழ் நீட்சி என்றும் சொல்லலாம்.
இங்கே தாராளம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன்.

அதாவது கிரந்தக் குறிகளின் வடிவங்களை
அப்படியே எடுத்துக் கொண்டால் அதனைத்
தாராளத் தமிழ் நீட்சி என்றும், அப்படியில்லாமல்
தமிழ் எழுத்துக்கள் மேலே மீயெண்களைப் போட்டு
எடுத்துக் கொண்டால் அதனை இறுகிய-தமிழ் நீட்சி
என்றும் விளக்கம் தருகிறார் திரு.சிறீரமணசர்மா.
அந்த முன்மொழிவில் காணப்படுகிற தாராள,
இறுகிய நீட்சிகள் உள்ளடக்கியிருக்கும் அட்டவனைப்
படத்தினை இங்குக் காண்போம்.

படம் – 3.2: திரு.சிறீரமணசர்மாவின் தாராளத் தமிழ் நீட்சியும் இறுகிய தமிழ் நீட்சியும்

படம் 3.2ல் கிரந்தக் குறிகளின் பட்டியும், அவற்றைத்
தமிழ் நெடுங்கணக்கில் நீட்சியாக ஆக்கக் கோரி
தாராளத் தமிழ் நீட்சி (ET-L) பட்டியையும்,
இறுகிய தமிழ் நீட்சி (ET-C) பட்டியையும்
அளித்துள்ளமை காண்க.

இந்த அட்டவனை சொல்வது என்ன?
கிரந்தக் குறிகள் அப்படியே தாராள நீட்சியாக
வேண்டும் என்றாலும் கிரந்த வடிவங்களைப்
பிடிக்காதவர்கள் மறுக்கக் கூடும் என்பதால்
இறுகிய நீட்சியை இப்போது வழங்குக” என்பதே
திரு.சிறீரமணசர்மாவின் உளக்கிடக்கையாகும்.
அதனை அவர் மொழியாலேயே தெரிந்து கொள்தல்
அவசியமாகும்.

திரு.சிறீரமணசர்மா அவர்களின் கூற்று:
“This choice of ET-C-style glyphs would also avoid any problems
with those disliking Grantha-style glyphs being used in Tamil.”

மீயெண்களைப் போட்டு எழுதும் வடிவத்தைக்
காண்பித்து இது தமிழ் வடிவங்கள் போலவே
இருப்பதால் தமிழ் உலகம் தமிழின் நீட்சி
என்று ஏற்றுக் கொள்ளும் என்பதே
திரு.சிறீரமணசர்மாவின் எண்ணமாகும்.

படம் 3.1ல் இருக்கும் வடிவங்கள்தான் இவர்
சேர்க்க விரும்புவன என்றால் நீட்சியை
ஏன் தாராளம், இறுகல் என்று இரண்டாகப்
பிரிக்க வேண்டும் என்ற வினா எழுகிறதல்லவா?

அதுதான் திரு.சிறீரமணசர்மாவின் இருவழி உத்தியாக
இருக்கக் கூடும் என்று நமக்குத் தெரிகிறது.

அதாவது, இறுகல் நீட்சியை இந்த முன்மொழிவு
வழியாக அடையவேண்டும். அப்படி அடைந்து விட்டால்,
எழுத்துரு முறையில் கிரந்தக் குறிகளை அப்படியே
காட்டவும் முடியும்.

ஒரு வேளை இந்த முன்மொழிவு மறுக்கப்
பட்டுவிட்டால், மறுக்கப் பட்ட காரணத்தைக்
கொண்டே, ஒருங்குறிச் சேர்ந்த்தியத்திடம்
“இதோ பார் நான் இறுகிய நீட்சியைக் கேட்டேன்;
நீங்கள் தரவில்லை; அதனால் இந்தத் தாராள நீட்சியில்
இருப்பனவற்றைத் நீட்சியாகவோ அல்லது
தனிக் குறியீடுகளாகவோ தரவேண்டும்”
என்று பின் தொடரும் உத்தியையே
கையாண்டிருக்கிறார் என்பது திண்ணம்.

இதைத்தான் அவர் செய்திருக்கிறார்
என்று அறுதியிட்டுச் சொல்வது போலவே அமைகிறது
அடுத்த இன்னல். அதனைப் பின் வரும் பக்கங்களில் காண்போம்.

26) ஒருங்குறியில் தமிழ் நீட்டல் என்ற முயற்சியின் தற்போதைய நிலை என்ன?

2010 சூலை மாதம் 10 ஆம் தேதியிட்ட
திரு.சிறீரமணசர்மாவின் ”நீட்டித்த தமிழ்”
முன்மொழிவும் பிற இன்னல்களும்
கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார்
மற்றும் சிலரின் முயற்சியாலும் பலருக்கும்
தெரிய ஆரம்பித்து பொதுவிற்கு வந்தபோது
அகுதோபர் மாதத்தின் பிற்பகுதி ஆகியிருந்தது.

இந்த முன்மொழிவு பற்றிய கருத்துக்களை
தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் 25-10-2010
என்று அறியப்பட்ட போது அது பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியது. ஒருபுறம் தமிழ் ஆர்வலர்களும்
அறிஞர்களும் காலந்தாழ்ந்து எழுந்த போதிலும்
சடுதியில் தங்கள் கருத்துக்களையும்
மறுப்புக்களையும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு
அனுப்பினார்கள்.

மறுபுறம், யுனிக்கோடு அறிஞர்களான
மலேசியாவைச் சேர்ந்த திரு.முத்து நெடுமாறனும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.மணி.மு.மணிவண்ணனும்
நுட்ப வழியாக இதனை மறுக்க நுணுக்கமான
பணிகளைச் செய்தனர்.

திரு.முத்து நெடுமாறன், திரு.சிறீரமணசர்மா
வேண்டுவனவற்றை ஒருங்குறியில்
தமிழின் பெயரால் குறிகளை நீட்டாமலேயே
திரு.சிறீரமணசர்மா வேண்டுவனவற்றை
எப்படிச் செய்து கொள்ளலாம் என்று செய்து
காட்டினார்.

இப்படி, இவ்வளவு எளிதாகச் செய்யக் கூடுகையில்
எதற்குத் தமிழின் பெயரில் நீட்ட வேண்டும் என்று
விடுக்கப்பட்ட மறுப்பினை அடிப்படையாக வைத்து
ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் நீட்டல் என்ற அந்த
முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. இன்னும்
அது உறுதியான அலுவமுறையில் ஆவணப்
படுத்தப்படாவிட்டாலும் சேர்த்தியத்தை
அறிந்தவர்கள் இதனை நம்பலாம் என்றே
கூறுகிறார்கள்.

”தமிழ் நீட்டல்” என்ற சூழலை அறிந்த
விடுதலை ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள்
உடனடியாகச் செயல்பட்டு அரசினர்க்கு
விழிப்பை ஏற்படுத்தி அறிக்கையும் வேண்டுகோளும்
விடுத்திருந்தார். விடுதலை இதழிலும் அவரின்
அக்கறையும் உணர்வும் மிக்க அறிக்கை
வெளியாகி அனைவரையும் விழிப்படையச் செய்தது
காலத்தாற் செய்த ஒன்று. கிரந்த விதயத்தில்
அவரின் செயற்பாடு போற்றத்தக்கதாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 6

தொகுதி-3: கிரந்த இன்னல்கள்

17) தற்காலக் கிரந்த இன்னல் எப்பொழுது தொடங்கியது?

தற்காலக் கிரந்த இன்னல், ஒருங்குறி அல்லது
பிறவற்றில் தொடங்கியது என்று சொல்வதைவிட
எப்பொழுது தமிழக அரசாணை வழியே கிரந்த
எழுத்துக்களையும் தமிழ் நெடுங்கணக்கில்
சேர்த்தார்களோ அப்பொழுதே கிரந்த இன்னல்
கொஞ்சங் கொஞ்சமாய்த் தொடங்கிவிட்டது
என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
தமிழகத்தின் அறிவுலகமும் கல்வியுலகமும்
இதனைத் தடுக்க மறந்தது என்றே சொல்லவேண்டும்.

18) கணி எழுத்துருக்களிலும் தரப்பாடுகளிலும் கிரந்தம் எப்போது வந்தது?

HA, SA, JA, SSHA என்ற 4 கிரந்த எழுத்துக்களும்
ஒருங்குறி தோன்றியபோதே சேர்க்கப்பட்டு விட்டன.
அதேபொழுது, ஒருங்குறி பயனுக்கு வந்தது 2000மாம்
ஆண்டிற்குப் பின்னரேயாகும். ஒருவேளை, ஒருங்குறி
தோன்றிய போதே கிரந்தத்துடன் தோன்றியதற்குக்
காரணமாய் தமிழக அரசின் அரசாணை
இருந்திருக்கக் கூடும்.

ஒருங்குறிக்கு முன்னர் பயனில் இருந்த பிற
தரப்பாடுகளான தகுதரம் (TSCII), தாபு (TAB), தாம்(TAM)
என்ற எல்லாத் தரப்பாடுகளிலும் இந்த 4 எழுத்துக்கள்
இருந்தன. யாரும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்
என்று எண்ணியதாய்க் கூடத் தெரியவில்லை.

19) தமிழ்நாட்டில் அந்த 4 கிரந்த எழுத்துக்களின் புழக்கம்
அதிகமாக இருக்கிறதே – அதை எப்படித் தவிர்க்க முடியும்?

உண்மை. அவற்றை மெதுவேதான் நம் புழக்கத்தில்
தவிர்க்க முடியும். அப்படியே முடியாவிட்டாலும்,
அவற்றைத் தமிழக அரசு தன் அரசாணைக்குள்
கொண்டுவரவேண்டிய கட்டாயம் எதுவுமே இல்லை.
அரசின் அவ்வேற்பினால் இன்றைக்கு என்ன
சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று பார்த்தால்
ஒன்றும் இல்லை.

அரசாணையிலும் போட்டு பள்ளிக்கூடத்திலும்
சொல்லிக் கொடுத்துவிட்டு கிரந்தம் ஒழிக என்று
பாடிக்கொண்டு இருக்கும் நிலை புதிய
தலைமுறைக்குச் சற்றும் புரிவதில்லை.

ஆங்கிலத்தை அப்படியே எழுத மட்டுமே
அந்த எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றன.
வணிகப் பலகைகளைப் பார்த்தாலே இது புரியும்.
ஆக, கிரந்தத்தின் மூலக்கேடு அரசின் ஏற்பாகவே
இருக்க முடியும்.

20) ஒருங்குறியில் நிகழ்ந்த முதல் இன்னல் என்ன?

படத்தில் உள்ளது போன்ற
SHHHA என்ற ஓசையுடைய கிரந்த எழுத்து வலிந்து
நுழைக்கப் பட்டது. படத்தில் உள்ள இந்த வடிவத்தை
தமிழ்நாட்டு மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்
என்று தெரியவில்லை. ஒருங்குறியில்
வந்தபின்னர்தான், இப்படி ஒரு வடிவம் இருப்பதே
பலருக்கும் தெரிய வந்தது.

21) ஒருங்குறியில் இந்த முதல் இன்னல் எப்படி நிகழ்ந்தது?

கிரந்தத்தைத் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்;
அதனால் இந்த எழுத்து தமிழ் எழுத்துக்களோடு
அவசியம் சேர்க்கப்பட வேண்டும்” என்று ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு முன்மொழிவை அனுப்பியது
உத்தமம் அமைப்பாகும்.

இதற்குப் பெரிதும் தூண்டுதலாக இருந்தவர்களில்
முக்கியமானவர் திரு.நா.கணேசன் ஆகும்.
அப்படி முன்வைத்ததற்கு ஏதும் பெரிதாக மாற்றுக்
கருத்துக்கள் இல்லாததால் ஒருங்குறிச் சேர்த்தியமும்
ஏற்றுக் கொண்டு அதற்கு “TAMIL LETTER SHA”
என்று பெயரும் கொடுத்து U+0BB6 என்ற
குறியெண்ணையும் கொடுத்து, திருத்திய
தமிழ்த் தரப்பாட்டை வெளியிட்டு விட்டது.

22) இந்த “SHA அல்லது SHHHA” என்ற எழுத்தை யாரும் இணையத்தில் பயன்படுத்துகிறார்களா?

திரு.நா.கணேசன் பல நாள்களாக அரும்பாடு
பட்டு இதனை இணைய மடற்குழுக்களில்
பரப்புரை செய்ததன் பலனாக, அவரோடு மேலும்
ஒருவர் சேர்ந்து இவ்வெழுத்தை இணையத்தில்
அகமகிழ்வோடு பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

இந்த இருவரின் பயன்பாட்டுக்க்காக 7 கோடி
மக்களின் நெடுங்கணக்கு, ஒருங்குறியில்
மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த எழுத்தைப் புகுத்தி விட்ட பெருமையோடு,
மேலும் பலரைப் பயன்படுத்தச் சொல்லி
தொடர் பரப்புரைகளை திரு.நா.கணேசன்
செய்துவருகிறார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html

அன்புடன்
நாக.இளங்கோவன்Saturday, January 08, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 5

(பகுதி-3 ல் உள்ள படங்கள் 2.1. 2.2 ஆகியவற்றை ஒத்துப் படிக்கவும்)

13) துணைப் படமொழித் தளம் (Supplementary Ideographic Plane - SIP) – தளம்-2:

படவெழுத்துக்கள் கொண்ட மொழிகளின்
நீட்சிக்கென்றே ஒரு தளத்தினை சேர்த்தியம்
ஒதுக்கியிருக்கிறது.

முதன்மைத் தளத்தில் சீன, கொரிய, யப்பானிய
மொழிகளுக்குத் தேவையான பன்னூறு
(5,6 ஆயிரம் இடங்கள் இருக்கும்) குறிகளுக்கான
இடங்களை, பாத்திகளை ஒதுக்கியது போக
மேலும் தேவைப்படுகின்ற முதன்மைக் குறிகளுக்கும்,
அவ்வப்போது சிறுபயன் அளிக்கும் குறிகளுக்கும்,
பழங்காலச் சீன-யப்பானிய-கொரியக் குறிகளைச்
சேர்ப்பதற்கென்றும் இத்தளம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

14) தளம்-3 முதல் தளம்-13 வரை:

இத்தளங்கள் எதிர்காலப் பயன்களுக்காகத்
திட்டமிடப்பட்டிருக்கின்றன. தளம்-3 ஐப் பற்றி
ஓரளவு செய்திகள் இருக்கின்றன. ஆனால்
அவை வழக்கிற்கு இன்னும் வரவில்லை.
ஒருங்குறியின் வளர்ச்சியில் இத்தளங்கள்
மெல்லப் பயனுக்கு வருவன ஆகும்.
நிரப்பப்படாத இடங்களில் பெரும்பான்மையும்
இங்கே இருக்கின்றன.

15) துணைச் சிறப்புக் குறித்தளம் ( Supplementary Special Purpose Plane - SSP) – தளம்-14:

சிறப்புக் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்
தளம் இது. சிறிய எண்ணிக்கையிலான
சில மொழிக்குறிகள் இருக்கின்றன.
இதன் பயன் பற்றி மேலும் ஆழமாக அறிய
வேண்டியிருக்கிறது. தற்போதைக்கு
இத்தளம் எவ்வகையானும் பயன் இல்லை
என்பதால் அதிக விளக்கம் இங்கு தரப்படவில்லை
என்றறிக.

16) தனிப்பயன் தளங்கள் 1 & 2 (Private Use Planes (1 & 2) – தளங்கள் 15 & 16:

இந்தத் தளங்கள் இரண்டும் ஒருங்குறிகளின்
முறைமை மற்றும் நெறிகளுக்கு அப்பாற்பட்ட
தேவைகளுக்காக, உலகில் உள்ள பிற முறைகள்
மற்றும் தனிப்பட்டத் தேவைகள் உடையோரின்
பயனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனவாகும்.

ஒருங்குறியைப் பயன்படுத்துகிற சொவ்வறைகள்,
நிரலிகள், செயலிகள் இந்தத் தனிப்பயன் தளங்களில்
பயனர் போட்டுக் கொள்ளும் குறிகளைச் சரியாகக்
காட்டும் என்ற உறுதியை ஒருங்குறிச் சேர்த்தியம்
தரவில்லை. இவற்றை ஒருங்குறிச் சேர்த்தியம்
நெறிப்படுத்தாது.

இங்குள்ள குறிகள் பிற கணிச் செயல்களோடு
ஒத்தியங்குவதாக இருக்காது என்றே சேர்த்தியம்
சொல்கிறது. இந்த இரு தளங்கள் போக
6400 இடங்களை முதன்மைத் தளத்திலும்
தனிப்பயனுக்காக சேர்த்தியம் ஒதுக்கியிருக்கிறது.
இவ்விடங்களை அரக்கு வண்ணத்தில் படம் 2.1 காட்டுகிறது.

இதுவரை ஒருங்குறியின் 17-தள கட்டமைப்பைப் பார்த்தோம். இனி அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html

அன்புடன்
நாக.இளங்கோவன்