Pages

Monday, November 09, 2015

தமிழோற்பலம்::மடல் 1 - பாலும் தெளிதேனும்!


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா."

பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனை புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று.

அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம்விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச்சொல்லி படையலிட்டு வணங்கி, நாம் நமது வேண்டலை அவனிடம் வைப்பதுதான் நமது வழக்கம். ஆனால், ஔவையாரோ, பாலையும் தேனையும் பாகையும் பருப்பையும் கலந்து "நான் தருவேன்" என்று கூறுகிறார். நீயெனக்கு மூன்றுதமிழைக்கொடுத்தால் உனக்கு இதனை நான் தருவேன் என்றுதான் கூறுகிறாரே தவிர, "நான் தந்தேன்" என்றோ, "இதோ தந்திருக்கிறேன்" என்றோ பாடவில்லை.

ஆனைமுகத்தனை வழிபட்டு பாடுகின்ற பாடலில் அவனுக்கு இந்த நான்கு பொருள்களை கலந்து படைக்காமல், பாடலைமட்டும் சொல்லிப்போகிறாரே ஔவையார். ஔவையாருக்கு தமிழையும் அறிவையும் ஏற்கனவே அள்ளித்தந்தவர் ஆனைமுகக்கடவுள்தானல்லவா? அப்புறம் இவருக்கு இன்னும் என்னதமிழ் வேண்டும்? அதற்கு ஏன் இவர், பால்,தேன்,பருப்பு, பாகு என்ற நான்கைத்தருவதாக சொல்கிறார்? இறைவனுக்கே ஆசை காட்டுகிறாரா? மாந்தகுலத்தின் படையல் வழிபாட்டை ஔவையும் செய்கிறாரே என்று நமக்கும் தோன்றி நம்மில் பலரும் அப்படித்தான் வழிபாடு செய்கிறோமோ?

பசுதருகின்ற பாலின் சுவையறியாதார் மண்ணில் இல்லை. தூயதேனின் சுவையையும் அறியாதார் இருக்க முடியாது. பாகு என்பது கருப்பஞ்சாற்றில் செய்யப்பட்ட வெல்லத்தை
காய்ச்சி எடுப்பது. அதன் சுவையையும் சொல்லி முடியாது. பருப்பு என்பது என்ன? சாதாரணமாக நாம் உணவில் பயன்படுத்தும் துவரம்பருப்பா? அதை காரமான உணவுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம். பாசிப்பயிறு அல்லது பச்சைப்பயிறைக்கொண்டு, கஞ்சி அல்லது பாயசமாக செய்வோம். அதை இனிப்புணவாக செய்வோம். இதுவும் தமிழ்மண்ணின்  தொன்மையான உணவு. ஆகையால் அதைத்தான் ஔவையார் பருப்பு என்கிறார். பாற்பாயசம் என்பது இன்றும் நாம் உண்ணும் இனிப்புணவு. ஆகவே, பாசிப்பயிற்றை மசித்து, பால் கலந்து, அதனுடன் தேனையும், வெல்லப்பாகினையும் சேர்த்துக்காய்ச்சிய பாற்பாயசம் எத்தனை சுவைமிகுந்ததாக இருக்கும்?

இங்கே சட்டென்று ஏனோ நமக்கு வள்ளல் பெருமான் நினைவுக்கு வந்துவிடுகிறார். வள்ளலாருக்கு  மாணிக்கவாசகர் நினைவுக்குவர, அவர் பாடுகிறார்:

"வான்கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை
 நான் பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து  பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே".

நற்கருப்பஞ்சாற்றில் இருந்துதான் பாகு எடுக்கிறார் ஔவையார். ஆக இருவருமே கருப்பஞ்சாற்றை கலந்துவிடுகின்றனர். தேன், பால், பாகு இவற்றை பருப்போடு கலக்கிறார் ஔவையார். வள்ளலாரோ, தேன், பால், கருப்பஞ்சாறு இவற்றை செழுமையான கனிகளுடன் கலக்கிறார்.

ஔவையாருக்கு பாற்பாயசம் சுவையாயிருக்கிறது. வள்ளலாருக்கோ பாற்கனி
சுவையாயிருக்கிறது. வள்ளலார் என்ன சொல்கிறார்!  "மாணிக்கவாசகப்பெருமானே, நீ எழுதிய திருவாசகத்தை நான் பாடும்பொழுது எப்படியிருக்கிறது தெரியுமா! கரும்புச்சாறு, தேன், பால் இவற்றை இனிக்கின்ற கனிகளோடு கலந்தால் எத்தனைச்சுவையாக, இனிப்பாக இருக்குமோ அப்படி இனிப்போ இனிப்பெனெ இனிக்கும் உன் திருவாசகப்பாடல்கள் என் உடலோடும் உயிரோடும் நான் பாடப்பாட கலந்து கொண்டேயிருந்தாலும், திகட்டாமல் இனிக்கின்றதையா! இத்தனைச்சுவையை எங்கிருந்து தந்தனை நீ? திகட்டாத இனிப்பாயவற்றை எப்படிப்படைத்தனை நீ? இந்தத்தமிழை எங்கிருந்து பெற்றனை நீ?" என்ற வியப்பையும் திகைப்பையும்  வெளிப்படுத்துகிறார், இறைவனிடம் இருந்து பெற்ற தமிழை, இறைவனிடம் இருந்து பெற்ற தமிழால் படித்த வள்ளலார். வள்ளலாரின் வரிகள், திருவாசக பாடல்களின் சுவை  பால்,தேன்,கரும்பு,கனி கலந்த இனிப்பை, சுவையைப்போன்றது என்று இயம்புகின்றன.

இறைவனுக்கு என்ன தேவை? அப்பரடிகள் பாடுகிறார்:

"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்,
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்.."

"குளிர்ந்த நீரிலாட்டி தூய்மை செய்வேன், ஆங்கு மணம் கமழ மலர்தூவுவேன், யாதுமுனையறிய விளக்கம் ஏற்றுவேன்; ஏற்றி, தமிழால் உன்னை போற்றிப்பாடுவேன்.
இவற்றை என்றைக்குமே நான் மறந்ததில்லையே அப்பா!"  என்று அப்பரடிகள் சொல்லும்போது, இறைவனுக்கு உண்ணத்தந்தது ஒன்றுமில்லையல்லவா?
தூய்மையும், இயற்கை மணமும், விளக்கமும், தமிழுமே அவனுக்கு தந்தாரல்லவா?
அப்பரடிகள்தான் தரவில்லை; ஆண்டவன்தான் கேட்டானா? அதற்குப்பதிற்சொல்லுவார் சுந்தரமூர்த்திகள்:

"எம்மைப்பெற்றால் ஏதும்வேண்டீர்; ஏதும் தாரீர், ஏதும் ஓதீர்...."

என்னையா இது? எம்மை படைத்தீர்; ஆட்கொண்டீர்; உம்மடியாராக அருளினீர்; எமக்கு யாவுமாய் நிற்பீர்; ஆனால், எம்மிடம் இருந்து ஒன்றும் பெற்றுக்கொள்வீர் இல்லை. உமக்குத்தேவை என்பதொன்றில்லையாதலால் யாம் உமக்குச்செய்ய எண்ணும் எவற்றுக்கும் நீர் எதனையும் தருவதுமில்லையோ?. "உனக்கு இதுதான், இப்படித்தான், இன்ன நாளில்தான்" என்று ஏதும் சொல்லவும் மாட்டீரே! என்று சுந்தரர் அன்புமீதூர, அதேவேளையில் "நம்மை ஆக்கிய நந்தலைவன் நம்மிடம் இருந்து எந்தச்சிறிய ஒன்றையும் கேட்கவேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறானே - இது இவன் தன்மை" என்று வியந்தும் வருந்தியும் சொல்வார்.

"செய்வகை அறியேன்....இது செய்க என்று அருளாய்" என்று வாதவூரர் புலம்பித்தவித்ததெல்லாம் சுந்தரரின் "ஏதும் ஓதீர்" என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கமாக அமைவதைக்காணமுடியும்.

இறைவனுக்கு, தான்படைத்த மனிதரிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏதும் இல்லை. சொல்லப்போனால், "உன்னால் எனக்குத்தர என்ன இருக்கிறது?" என்று  இறைவன் கேட்பதுபோல் தோன்றுகிறது. அப்படியே தந்தாலும், "தூய்மையையும், நறுமணத்தையும், நல்லொளியையும் தந்து தமிழால் என்னைப்பாடு - யாவருக்குமது பயனாய் அமையும்" என்றே உணர்த்துகிறான் இறைவன். தமிழாற்பாடுவது, தேனும், பாலும், கருப்பஞ்சாறும்,கனியும் கலந்த சுவையாகிறது; அல்லது தேனும், பாலும், பாகும், பருப்பும் கலந்த பாற்பாயசம் போன்ற சுவையாகிறது. தெவிட்டாத அல்லது திகட்டாத பாடல்களால் ஆனைமுகனை மேலும் பாடத்தான், இயலும் இசையும் கூத்தும் என்ற மூன்று தமிழறிவையும் செறிவையும் ஆழ ஆழ அள்ளித்தர வேண்டுகிறார் ஔவையார். அந்தப்பாடலை வரிசை மாற்றிப்படித்தால் அவரின் வேண்டல் ஒரு "ஞானவேட்கை" என்பது புரியும்.

"கோலஞ்செய்  துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
                        சங்கத்தமிழ் மூன்றும் தா;  (அவற்றைக்கொண்டு)
 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துனக்கு (அச்சுவை பொருந்திய பாடல்களாய்)
  நான் தருவேன்."

ஞானக்கடவுளான ஆனைமுகனுக்கு, ஔவைப்பிராட்டியார் நான்கு உணவுப்பொருள்களை கலந்து படையல் போடவில்லை; படையல் போட்டு பேரம் பேசவில்லை. ஆனைமுகனால் ஞானமும் தமிழும் அருளப்பெற்ற ஞானி அவர். மேலும் ஆழ்ந்த அறிவையும் செறிவையும் முத்தமிழில் தேடுகிறார்; அத்தேடலை இறைவனிடம் வைத்து வேண்டுகிறார். பருப்பொடு, பால், தேன், பாகு இவற்றை கலந்து சமைத்தால் கிட்டுகின்ற இனிப்பான சுவைதரும் "பொருள்நிறைந்த" தமிழ்ப்பாடல்களால் இறைவனைப்பாட; ஞாலம் பயனுற.

அன்புடன்
நாக.இளங்கோவன்
10/11/2015

Wednesday, November 04, 2015

நாயன்மார்களின் புடைப்புச்சிற்பங்கள் - மணற்கேணி ஆய்வுக்கட்டுரை

நாயன்மார்களின் சிற்பங்களில் உள்ள சித்திரிப்புகள்
பற்றிஅருமையானதோர் கட்டுரையை, கடந்த மணற்கேணி
இதழில் (ஆக/15) தேன்மொழி எழுதியிருக்கிறார்.
("வரலாற்றில் சைவ நாயன்மார்கள் புடைப்புச்சிற்ப சித்திரிப்புகள்:
ஒரு ஆய்வு" என்பது தலைப்பு.)

சைவம், நாயன்மார்கள், பெரியபுராணம் பற்றி பல்வேறு
கருத்துகளை சொல்லியிருந்தாலும், சித்திரிப்புகளின்
வேறுபாடுகளை  நுணுகிப்பார்த்திருக்கும் கட்டுரையாளரின் திறன்
பாராட்டுக்குரியது. பெரியபுராணத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நாயன்மார்களின் வரிசையிலேயே அமைக்கப்பட்ட
சித்திரிப்புகளை, பெரியபுராணத்தின் காலத்திற்கு
சற்றுமுன்னரும், பின்னருமாக உருவாகிய கோயில்களை
எடுத்துக்கொண்டு, அவர் ஆற்றியிருக்கும் ஆய்வு சிறப்பானது.
இதற்காகவே ஒருமுறை திருப்பனந்தாள், புரிசை, மேலக்கடம்பூர்,
தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களுக்கும் செல்லவேண்டும்
என்ற எண்ணத்தை கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பெரியபுராணத்தின் காலம் பற்றிய கேள்விக்குறியும்
சிந்திக்கவைக்கிறது.

புடைப்புச்சிற்பங்களை ஆக்கிய சிற்பிகளின் திறனை
எடுத்துக்காட்டுகிறது கட்டுரை. வாய்வழியாகவும், திருத்தொண்டர்
தொகையின் வழியாகவும் நாயன்மார்களைப்பற்றி மக்கள்
அறிந்திருந்த செய்திகளை நன்குணர்ந்து, இலக்கிய அறிவுமிக்க
சிற்பிகள் சிற்பங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பதை
கட்டுரை நுணுகிப்பார்த்து சொல்கிறது.

ஒவ்வொரு கோயிலிலுமுள்ள சிற்பங்கள் வெவ்வெறு காலத்தில்
வெவ்வெறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்
என்பதுதான் இயல்பு. அப்படிப்பார்க்கும்போது நாயன்மார்களின்
சிற்ப வடிவங்களுக்கு யாரோ  "முதன்மை வடிவம்" கொடுத்திருக்க
வேண்டும். அது யார்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இதற்கான விடையை கட்டுரையில் காணமுடியவில்லை.
எல்லா சிற்பிகளுக்கும் ஒரேமாதிரியான அடவு மனதில்
உருவாகியிருக்கும் என்று சொல்லமுடியாது. பெரும்பாலும்,
சித்திரிப்புகள் ஒன்றாக இருக்கையில், யாரோவொரு
சைவப்பெரியவரோ அல்லது மடமோ, ஒரு பெரிய சிற்பியை
வைத்து முதன்முதலில் நாயன்மார்கள் சிற்பங்களுக்கு வடிவம்
கொடுத்திருக்க வேண்டும் என்று கருத இருக்கிறது. சிற்பங்களை
ஆழ்ந்து ஆய்ந்திருக்கும் தேன்மொழி அவர்களிடம் "முதற்சிற்பி
யார்" என்பது பற்றிய கருத்துகள் இருப்பின் அறியவிழைகிறேன்.

அதேவேளையில், சிற்பங்களில் உள்ள காட்சிகளுக்கும்
பெரியபுராணம் சொல்லும் செய்திக்கும் உள்ள  முரண் பற்றியும்
இங்கே குறிப்பிடவேண்டும். கட்டுரையில், புரிசையில் உள்ள
எறிபத்த நாயனாரின் சிற்பக்காட்சியில் (படம் 10/3), இறைவன்
விடைவாகனராய் உமையோடு தெரிசனம் தருவதாக
அமைந்திருக்கிறது. ஆனால், பெரியபுராணத்தின்படி, எறிபத்த
நாயனார் புராணத்தில் "ஒளிவிசும்பில் எழுந்த ஒலியாக"
இறைவனின் காட்சி அல்லது அருள் அமைகிறது.

"கண்ணுதலருளால் வாக்குக்கிளரொளி விசும்பின்மேல்
 வந்தெழுந்தது பலருங்கேட்ப...." (47)
"இருவருமெழுந்து வானிலெழுந்தபேரொலியைப்போற்ற..." (50)
(இங்கு இருவரும் என்றது எறிபத்தரையும், புகழ்ச்சோழரையுமாம்)

பெரியபுராணத்தில் உமையொடும் விடைவாகனராய் இறுதியில்
தெரிசனந்தருவது அதிகமெனினும் மற்றும்பல வடிவங்களில்
இறைவன் எழுந்தருளுகிறான்.

ஆகவே, புரிசைச்சிற்பம், என்னுடைய சிற்றறிவுக்கு தவறான
சித்திரிப்பாகவே தென்படுகிறது. இது தவறா, சரியா என்பது
வேறுவிதயம். ஆனால், அது பெரியபுராணத்திற்கும் சிற்பங்களில்
நாயன்மார் சித்திரிப்புக்கும் உள்ள இடைவெளியை
தெளிவாகக்காட்டுகிறது.

அப்படியென்றால், பெரியபுராணத்திற்கு படிகள்/வேற்றங்கள்
(versions)உண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்றெனில், சித்திரிப்புகளில் சிற்பிகளின் புரிதல்கள், அல்லது
ஆலயமெழுப்பியவர்களின் புரிதல்களில் வேறுபாடு உண்டென
அறியமுடிகிறது.

சிவகாமியாண்டாரை பெண்மணியாக சில சித்திரிப்புகள்
காட்டுவதாக தேன்மொழி குறிப்பிடுவதொடு, மேற்சொன்ன
கருத்தையும் ஒட்டிப்பார்க்கவேண்டும். உண்மையில்,
கட்டுரைவாயிலாக, சிவகாமியாண்டாரை சித்திரித்தது பற்றி
அறிந்தது, மீண்டும் மீண்டும் சிவகாமியாண்டாரை
படிக்கத்தூண்டுகிறது.

"அரச ஆதரவு பெற்றிருந்த சைவமதத்தை மக்கள் ஆதரவு பெற்ற
மதமாக மாற்றும் முயற்சியில் இந்த நாயன்மார்கள்கதை
சித்திரிப்புகள் பங்காற்றியுள்ளன" என்ற கட்டுரையாளரின்
பார்வையும் எழுத்தும் சுருக்கமும் அழகும் நிறைந்தன. அதற்கு
அவர்  அளித்திருக்கும் சில விளக்கங்களும் ஏற்கத்தக்கவை.
குமுகத்தின் பலபிரிவுகளையும், வாழ்வியல் வேறுபாடுகளையும்
அரவனைத்தெழுந்ததாற்றான் அது  இயக்கம் எனப்பட்டது
எனக்கருதலாம். சைவத்தைப்பொறுத்தமட்டில், இந்தக்குமுக
அரவனைப்பு என்பது சேக்கிழார் காலத்திலோ, அல்லது பிற்கால
சோழ அரச ஆதரவிலோ மட்டும் நிகழ்ந்ததல்ல. சம்பந்தராலும்,
அப்பராலும் இடப்பட்டு அருமையான வித்துதான் அது.
சேக்கிழாருக்கு ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரே
விதைக்கப்பட்ட குமுகக்கட்டியல் அது என்றால் மிகையல்ல.
இதைச்சரியாக புரிந்துகொள்ள, ஞானசம்பந்தரின்
திருவானைக்கா பதிகம் (வானைக்காவில் வெண்மதி),
நமச்சிவாய பதிகம், பவனமாய்ச்சோடையாய் என்று தொடங்கும்
திருவாரூர்ப்பதிகம்போன்றவை கூர்ந்து நோக்கத்தக்கன.
அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரின் பல பாடல்களும்
குமுகக்கட்டியல் நோக்கில் பார்க்கத்தக்கன, நீள எழுதத்தக்கன.
அருமையானதொரு கட்டுரைக்கு மீண்டும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும் தேன்மொழி அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்