Pages

Saturday, October 02, 1999

சிலம்பு மடல் 18

சிலம்பு மடல் - 18 பழங்குடிகள்!
மதுரை:
வேட்டுவ வரி:

மாரியில்லா பாலைநிலங்களில் வாழும் வேட்டுவர் என்பார் தமிழ்ப் பழங்குடியினர்: இவர்களின் முக்கிய தொழில் வழிப்பறி செய்து பொருளீட்டுதல்; கொற்றவை என்னும் தெய்வத்தை வழிபடும் இவர்களின் இரண்டாவது தொழில் மது உண்டு மயங்கிக் கிடப்பது!

சாமியாடும் பெண்ணுக்கு சாலினி என்று பெயர். இன்றும் தமிழகத்தில் சாமியாடுதல், அதாவது தெய்வ அருள் ஏறி ஆடி, குறி சொல்தல் என்பது மிகப் பரவலாகக் காணப்படும் ஒன்று. யாருக்காவது துன்பம்/இன்பம் என்றால் சாமியாடியை அழைத்து வந்து, அவருக்கு உடுக்கடித்தால் உடனே சாமி வந்து விடும்; அந்த சாமியாடி சமயத்தில் கள்ளருந்திவிட்டு ஆடுதலும் உண்டு!

பெரும்பாலும் சாமி வந்தவுடன் முதலில் அந்த சாமி கேட்பது/சொல்வது, "துணி இல்லாம இருக்கேண்டா! எப்ர்றா வருவேன் ?" உடனே, "சரி சாமி, உனக்கு என்ன துணி வேணும் கேளு! எடுத்துக் கட்றேன்;" என்று சொல்வார் அந்த குறிகேட்பவர்.

சாமியே மனிதனிடம் துணி கேட்டு வாங்கி உடுத்தும் நிலையில், மனிதனுக்கு என்ன உதவி செய்யும் என்று நினைத்தாலே போதும் அது தெய்வ குற்றம் என்பதை விட சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது இச்சமுதாயத்தில்.

"ஆஅய்! அது மட்டுமாடாஅ கோழியறுத்து பொங்க வைக்கிறேனியே, ஏ, ஏ, ஏண்டா வைக்கல ?"

"சாமீஇ, நீதான் மழையே பேய வைக்காம சோதிச்சு புட்டியே ?
எப்டி வைப்பேன் ?"

"சர்றா, வர்ற அமாவாசைல, எனக்கு செவப்புத் துணி கட்டி, நல்ல சாவக் கோழிய அறுத்து, பொங்க வை! அதுலேர்ந்து மூனு நா, மூனு வாரம்; இல்லாட்டி முப்பது நாள்ல ஒனக்கு நல்ல வழி காட்றேன்" என்று சொல்லி விட்டு சாமி குளிர்ந்து விடும்.

குறி கேட்டவரோ சேவலைத் தேடிக் கொண்டு புறப்பட்டு விடுவார். குறி சொன்னவரோ அமாவாசை அன்று மறக்காமல் மொந்தை ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வார்;

இதேதான்! இந்த மாதிரியேதான், அந்த வேட்டுவ குமரியின் மேலேறி கொற்றவை எனும் தெய்வம் ஆட்டுகிறாள் அப்பாவையை!

சுற்றி நிற்கிறது அந்த வேட்டுவ சமூகம்! கூட நிற்கின்றனர், கோவல கண்ணகியர் காவுந்தி அய்யையுடன்.

கொற்றவை ஆடும் குமரி சொல்வாள்(சாலினி)! அல்ல அல்ல; குமரி மேலேறி கொற்றவை சொல்வாள்!

வேட்டுவர்களே! நீங்களெல்லாம் மறக்குடியில் பிறந்தவர்தானா ? ஊரில் உள்ளவர்களின் பசுக்களை எல்லாம் கொள்ளையிடாமல் வைத்திருக்கிறீர்களே? அவர்கள் பொருட்களையெல்லாம் களவிடாமல் உள்ளீர்களே? உங்கள் குலத்தொழிலை செய்வதிலிருந்து சோம்பிக் கிடக்கிறீர்களா?

பகைவர்களுடன் (ஊரில் அமைதியாக வாழ்பவரிடம்) சண்டையிட்டு வெற்றியன்றி தோல்வியே கண்டிராத நீங்கள் மறக்குடியினர் என்பதை மறந்து அறக்குடியினர் போல் சினம் அவிந்து அடங்கிக் கிடக்கிறீர்களே ?

என்று கொற்றவைத் தெய்வம் வேட்டுவர்கள் பால் குற்றம் கண்டது!

"கல்என் பேர்ஊர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது
அறக்குடி போல்அவிந்து அடங்கினர் எயினரும்"

அதுமட்டுமல்ல; கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை கேட்கிறாள்; 'வழிப்போவோர் வளன் பறித்து உண்ணும் மறவர்களே!' நீங்கள் அதை மறந்ததும் ஏனோ ?

நீங்கள் கள்ளுண்டு மயங்கி வாழும் இன்ப வாழ்க்கையை வேண்டுவோராயின் எனக்கு செலுத்தவேண்டிய கடனை செலுத்துங்கள்!' என்று.

"கலைஅமர் செல்வி கடன்உணின் அல்லது
சிலைஅமர் வென்றி கொடுப்போள் அல்லள்
மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டுஉண் மாக்கள் கடந்தரும்; என அங்கு, "

கள்ளனுக்கும் தெய்வம்; நல்லோனுக்கும் தெய்வம்;

கள்ளனின் தெய்வம் பிறர் பொருளைக் கொள்ளையடிக்க உதவுகிறது; பிறரின் தெய்வம், அதை பாதுகாக்க உதவுகிறது;

தெய்வம் என்பது ஒன்றுதானா ?

இது மனித குல முரண்பாடா அல்லது தெய்வ குல முரண்பாடா ?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது பிதற்றலா ?

பாவம் என்றால் என்ன ?

பிறகுலத்தினர் கொள்ளையடிப்பது பாவம் என்றால், வேட்டுவ குலத்தினர் கொள்ளையடிக்காவிட்டால் பாவமா ? இதற்கும் ஊழ்வினையும் வந்து உறுத்துமா?

முரண்பாடுகள்!

வேட்டுவ வரியில் மறத்தின் கடவுள், "மறம் போற்றுக" என்கிறது; இதையும் காவுந்தி அடிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதே காவுந்தியடிகள் ஊர்காண் காதையில், நா என்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அடித்து 'தீணவினை ஊட்டும் மறத்துறை நீங்குங்கள்' என்று அறத்துறை மாக்கள் எவ்வளவு சொன்னாலும் அறிவு முதிர்ச்சி இல்லா மாக்கள் ஏற்றுக் கொள்வதில்லை,என்று வருத்தப்படுகிறார்.

"மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்
யாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்"

மறத்துறையை நாடுவேனா அல்லது அறத்துறையை நாடுவேனா? இரண்டுக்கும் கடவுள் உள்ளதால் ஒரு பாமரக்குழப்பத்தில் எழும் கேள்வி!

அடிப்படையில், பிறர் பொருளில் உயிர் வாழும் மாக்களே அந்த வேட்டுவப் பழங்குடியினர். இன்றும் கடவுளைக் கும்பிட்டுவிட்டு கையூட்டு பெறுவோர், குறை கூலி கொடுப்போர், பிறர் உழைப்பில் வாழ்வோர், கடவுள் பெயரில் சமுதாயக் குற்றம் செய்வோர், மதவெறியர், வஞ்சகர்கள் இவர் யாவரும், அறிவு முதிர்ச்சி அடையாத அந்த வேட்டுவப் பழங்குடிகள் போல் இன்றும் சமுதாயத்தைப் "பாழ்குடியாக்கும் பழங்குடிகள்தானே"!


அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: