Pages

Sunday, March 30, 2014

தமிழ்க் கணிமைச் சிந்தனைகள் - மடல் 1

கணி(னி)த்தமிழ் வளர்ச்சி மாநாடு (இரண்டாம்) , 30-03-14 அன்று சென்னை-மாநிலக்கல்லூரியில் நடந்தது. திசம்பர்-2012ல் முதல் மாநாட்டை நடத்திய பேரா.தெய்வசுந்தரம் அவர்கள்  தொடர்ந்து நடத்தும் இரண்டாம் மாநாடு இது.
இம்மாநாட்டில், தமிழ்க் கணிமை வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள்-திட்டம் பற்றிய ஆய்வரங்கு முனைவர் இராம.கி அவர்களின் தலைமையில் நடந்தது. தமிழியல், மொழியியல், கணியியல், பிற துறைகளைச் சார்ந்த பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.


தமிழ்க் கணிமை சார்ந்த, இரண்டு அரசுத் துறைகளின்  செயலர்களும், துறை இயக்குநர்களோடு கலந்து கொண்டு, "இம்மாநாட்டின் தீர்மானங்களை, திட்டமாக ஆக்கிக் கொடுங்கள், செயல்படுத்துகிறோம்" என்று உறுதி அளித்து
உரையாற்றினர்.

கீழ்க்கண்டவை அம்மூன்று தீர்மானங்கள்:

1.   கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்மொழித்தொழில்நுட்ப மையம் ஒன்று தமிழகத்தில் தமிழக அரசால் நிறுவப்படவேண்டும். நடுவண் அரசின் நிதிநல்கையும் அதற்குப் பெறவேண்டும்.

2.   மேற்குறிப்பிட்ட தமிழ்மொழித்தொழில்நுட்ப மையமானது தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வுநிறுவனங்களில் இயங்கும் தமிழ்மொழித்துறைகள், மொழியியல் துறைகள், கணினியியல் துறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.   மின்-வணிகம், மின்-ஆளுமை, மின்-கல்வி, மின்-நூலகம் போன்ற பல துறைகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். கணினித்தமிழின் பயன்பாட்டு எல்லை விரிவாக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையும் தகவல்தொழில்நுட்பத்துறையும் இணைந்து,  வகுத்துச் செயலாற்றவேண்டும்,

இது இம்மாநாட்டின் முக்கிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. இம்மாநாட்டை நடத்த பேரா.தெய்வசுந்தரம் கடுமையாக உழைத்து, பெருமுயற்சிகளைச் செய்திருந்தார்.

இந்த மாநாட்டின் "தமிழ்க் கணிமைக் கொள்கைகள், திட்டங்கள்" பற்றிய ஆய்வரங்கில் நான் ஆற்றிய உரை, தமிழ் அறிதியியல் (Thamizh Informatics) என்ற கணிமைத் துறை பற்றியது. அவ்வுரை அல்லது அதன் கருவை கீழே காணலாம்.

இத்தலைப்பில் ஏற்கனவே மிக விரிவாக 2 கட்டுரைகளை வேறு வேறு கருத்தரங்கங்களில் படைத்திருக்கிறேன். அவற்றின் "மிகச் சுருக்கம்", என்று இதனைக் கருதலாம்.

====================================================================

            “தரவு என்பது சொத்து” (Data is an Asset) என்ற கருத்தியல் உலகில் நிறுவப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு நிறுவனத்திற்குச் சொத்துகள் என்றால், நிலங்கள், கட்டடங்கள், பணம், மனித வளம் போன்றவை என்ற காலம் போய், தரவுகள் மிக முகன்மையான “சொத்து” என்ற நிலையைக் கணி-ஊழி வலுவாக நிறுவிவிட்டது.

            தமிழ்மொழி, “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றும் “எண்ணென்ப எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்றும் சொல்லியிருக்கிறது. உலகம், எண்ணையும் எழுத்தையும் கண்ணாக மதிக்கிறது. உலகெங்கும், அவரவர் மொழியில், சொல்லாகிய, பொருளாகிய  எண்ணும் எழுத்தும்தான் தரவாகி(data) அதில் இருந்து  தகவல்களாகப் பரவி, சொத்தாக மதிக்கப்படுகிறது.

            தமிழ்த் தரவுகள்(Thamizh Data) எனும்போது, அவை யாவை? அவற்றின் பரப்பு என்ன? – என்று பார்த்தால், அது மிகப் பெருமாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழ் மொழியின் பண்டைய, இன்றைய “ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும்” தரவாகக் கருதி அவற்றை ஏழு கூறுகளாகப் பிரிக்கலாம்.

·         மரபு இலக்கியங்கள்
o   சங்க காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான செவ்வியல் மரபு இலக்கியங்கள்
o   தொல்காப்பியம் முதல் அனைத்து இலக்கணங்கள்
o   பழந்தமிழ் உரைகள் தொடங்கி20ஆம் நூற்றாண்டு வரையிலான உரை இலக்கியங்கள்
·         தொல்பொருட் தரவுகள்
o   கல்வெட்டுகள்
o   செப்பேடுகள்
o   மண்ணேடுகள்
o   நாணயங்கள்
o   ஓவியங்கள்
o   கலங்கள் போன்ற பிற
·         ஓலைச்சுவடிகள்
o   தமிழக அரசு நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   பல்கலைக் கழக நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   பிற மாநில நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   இலண்டன், பிரான்சு போன்ற வெளிநாட்டு நூலகங்களில் உள்ள ஓலைகள்
o   திருக்கோயில் மடங்களில் உள்ள ஓலைகள்
·         அகராதிகள்
o   தமிழ்-தமிழ் அகராதிகள்
o   தமிழ்-பிறமொழி அகராதிகள்
o   கலைச்சொற் களஞ்சியங்கள்
o   வேர்ச்சொல் அகராதிகள்
o   துறைசார் தமிழகராதிகள்
·         ஆய்வுத் தரவுகள்
o   தாட்சுவடிகள்
o   ஆராய்ச்சி இதழ்கள் (இலக்கிய, தொல்பொருள், வரலாறு)
o   ஆராய்ச்சிப் பட்டப்  படிப்புத் தாட்கள்
o   ஆராய்ச்சி நூல்கள், மலர்கள் (இலக்கிய, தொல்பொருள், வரலாறு)
·         துறைசார் அறிவியற் தரவுகள்
o   தமிழ் அறிவியல் நூல்கள்
o    தமிழ்க் கலை நூல்கள், இலக்கியங்கள்
o   தமிழ்ப் பொறியியல் நூல்கள்,
o   சட்டம், நீதி, ஆட்சியியல் நூல்கள்
o   மருத்துவ நூல்கள், படைப்புகள்
o   தமிழ்க் கணிமை சார்ந்த படைப்புகள்
o   பிற மொழிகளில் இருந்து தமிழுக்குப் பெயர்த்த பல்துறைப் படைப்புகள்
·         பிற தரவுகள்
o   தற்காலத் தமிழ்ப் படைப்புகள் (கதை, கவிதை, பேச்சு முதலியன)
o   தற்காலக் கலைப் படைப்புகள்(திரை, நாடகம் முதலியன)
o   இணையக் குமுகத் தரவுகள் (Social network data)

இப்படித் தமிழ்த் தரவுகளின் பரப்பு மிகப் பெரியதாக குவிந்து கிடக்கிறது.
        

அவற்றின் இன்றைய நிலை என்ன?

1.        பல கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், பல்துறைகள், உள்நாடு, வெளிநாடு எனப் பலவாகப் பிரிந்து கிடக்கின்றன.
2.        தாள், ஓலை, கல்வெட்டுகள், செப்பேடுகள், படங்கள், பல்லூடகம் போன்ற பல வடிவங்களில் இருக்கின்றன.
3.        ஆங்காங்கு, சிறு சிறு திட்டுகளாக இருப்பதால் மாணவர், ஆய்வாளர், மக்கள் அணுக முடியாமலும், பயன் பெற முடியாமலும் உள்ளனர்.
4.        மின்மயமாக்கப் பட்டு இணையத்தில் கிடைக்கும் இலக்கியங்களில் பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. அது துல்லியமான படிப்புக்கும் ஆய்வுக்கும் பயன்படுவதில்லை.
5.        கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள் போன்ற தொல்பொருள்களின் மின் தடயமே காணப்படவில்லை.
6.        பழம் ஓலைச் சுவடிகளில் 25% எண்ணிக்கை, நூலகங்களில் மீட்க முடியா நிலைக்கு அழிந்து போயிருக்கின்றன.
7.        மாணவர்களின் ஆய்வுத் தாள்களும், ஆய்வாளர்களின் தாள்களும் ஒருங்கிணைப்பற்று அனைவரும் எளிதில் அணுகமுடியாமல் இருக்கின்றன.
8.        தரவுகளுக்குள் உள் தேடல், ஆய்வு செய்வதோ, ஓர் இலக்கியச் செய்திக்கும் கல்வெட்டுச் செய்திக்கும் உறவு காணுதலோ இன்று முடியவில்லை.
9.        அகராதிகளில் சிலவே இணையவழி கிடைக்கின்றன. பெரும்பாலானோர் பயன்படுத்தும் தமிழகராதி வெளிநாட்டவராலேயே மின்மயமாக்கப் பட்டிருக்கிறது. அவையும் இற்றை நிலையில் இல்லை.
10.     பிறமொழிகளுக்கு இருப்பது போன்ற அடிப்படையான எழுத்து, சொல், குறிகளுக்கான இணவு (Letter, Word & Sign Concordance)   என்ற மிக அடிப்படைத் தேவை கூட இன்னுந் தமிழுக்கு இல்லை.
11.     பிறமொழிகளுக்கு இருப்பது போன்ற மொழியியல் ஆய்வுத் தளம் இன்னும் ஏற்படவே இல்லை.
12.     கணிவழியே சொடுக்கில் எடுக்கக் கூடிய இணவு, அடைவு, எழுத்து சொல் ஆய்வுகளை எல்லாம் தமிழறிஞர்கள் இனியும் ஏன் எண்ணி எண்ணித் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

         தமிழின் இந்தச் சூழல், தமிழ்க் கல்வி, தமிழ் ஆய்வு, தமிழ்ப் பயன்பாடு, தமிழ்ப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் வளர்ச்சியின் மேல் பெருந் தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பரந்த தொன்மையும், தொடர்ந்த வளர்ச்சியும் இருக்கின்ற காரணத்தால் இவற்றிற்குத் திறன் வாய்ந்த ஒருங்கிணைப்பும் பாதுகாப்பும் அவசியமாகிறது.

            கணித்துறையில், அறிதியியல்(Informatics) என்ற உயர் கணிமை நுட்பம், பல்வேறு பொதின/வணிகத்(Business) தரவுகளையும் ஒருங்கிணைத்து, பாதுகாத்து, ஒரு நிறுவனத்தின் தொடர்ந்த கணிமைப் பயன்பாட்டுக்கும், ஆய்வு வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. அந்நுட்பத்தைத் தமிழுக்கு  உள்வாங்கி  “தமிழ் அறிதியியல்” துறையாகச் செயல்படுத்துவது தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலும்.

"தரவுகள் தகவலாக மாறுகின்றன. அத்தகவல்கள் மீண்டும் தரவாக உருவெடுக்கின்றன". இதுதான் தகவல் நுட்ப ஆளுகையின் (Information Management) அடிப்படை.

இந்த அடிப்படையில், தமிழ் மொழி சார்ந்த ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும் தரவாகக் கருதி, அவற்றை ஒருங்கிணைத்து, பாதுகாத்து, அதில் இருந்து பல செய்திகள்/தகவல்கள் பெற்று, தமிழ்க் குமுகமும், கல்வியும், ஆராய்ச்சியும் நிலைத்த பயனைப் பெறச்செய்யத் தேவையான உயர்கணிமை நுட்பம்(High-end-computing) பற்றிய பொறியியலே “தமிழ் அறிதியியல்” (Thamizh Informatics) ஆகும். இது தமிழ்க்கணிமைத் துறையில் நான்காவது துறையாக உருவெடுத்து வருகிறது.

ஒரே இலக்கியத்தைப் பத்து இணையத் தளங்கள் பத்து விதமாக, பத்துக்கணக்கான பிழைகளுடன் வெளியிடுவதால் என்ன பயன்?

இலக்கியங்களில் இருந்து பெரிதும் வேறுபட்ட அடிப்படைகளைக் கொண்ட, ஆனால், சமகால கல்வெட்டுச் செய்திகளையும் இலக்கியங்களில் வரும் செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாமல் செய்யப்படும் இணையத் தமிழ்க் கணிமையால் என்ன பயன்?

வெவ்வேறு வகையான தமிழ்த் தரவுகள் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டவை. அவற்றை நெடும்பயன் கருதி, ஒருங்கிணைத்துப் பயன்படுத்த வேண்டுமானால் “தமிழ்த் தரவொழுகு” தேவை.

தமிழ்க் கணிமை உலகில் இலக்கியம், கல்வெட்டு, சுவடிகள், அகராதிகள் போன்றவை, சிறு சிறு உதிரித் திட்டங்களாகச் செய்யப்பட்டு, திட்டுத் திட்டாக ஆங்காங்கு தேங்கிப்போய், எண்ணிய பயனை முழுமையாக விளைவிக்காமல் இருக்கிறது. அதில் இருந்து மாறி, தமிழ் அறிதியியல் அடிப்படையில் உருவாக்கப்படும் மாபெரும் தரவகமாக, தரவுக் களஞ்சியமாக, ஒருங்கிணைக்கப்பட்டால் அது பல நூற்றாண்டுகளுக்கு மின் ஊழியில் தமிழுக்குத் தேவையான அடித்தளத்தை ஏற்படுத்தும்.

தமிழ்மொழிக்கு எவ்வளவோ சிறப்புகள் இருந்தும், தொன்மை இருந்தும் உலகில் மொழிநிலையில் பின்தள்ளப்படுவதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றென்றால், அது,  மேனாடுகளில் இருக்கும் தர அளவில் நம்முடைய தரவுகளை நெறிப்படுத்தி வைக்காமையாகும்.

இதனை ஏதோ சாதாரண தரவகம் போடும் சிறுகணிமை (infant computing) முயற்சி என்று 
எண்ணிவிடவேண்டாம். பொதினக் கணிமை உலகில் திகழும், Enterprise Information Warehouse, Business Intelligence, Enterprise Content Management எனப்படும் மூன்று மிகப்பெரும் கணிமைத் துறைகளின் சங்கமம் "தமிழ் அறிதியியல்" என்ற புதிய துறையாகும்.
இம்மூன்று துறைகளின் அகண்ட, ஆழமான பல்வேறு அடிப்படைகள், தேற்றங்கள், அடவுமுறைகள், கட்டுமான விதிகளை தமிழிற்கு உள்வாங்கிச் செய்யக்கூடிய கணித்துறை ஆகும். துக்கடாத் தரவகங்களே தமிழ்க்கணிமைக்கு அதிசெயம் ஆகும். அவ்வழியிலே தொடர்ந்து கொண்டிருப்பது தமிழ்க்கணிமையில் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்தராது.

உலகக் கணிமையின் உயர்ந்த பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதே, மேற்சொன்ன தமிழ்த்தரவுகளின் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, பேணல் யாவற்றுக்கும் பொருத்தமானதாகும்.  தமிழ்த்தரவுகளை ஒருங்கிணைக்கும் முதற்படி நிலையிலேயே 50-60 டெராபைட்டுத் தரவகமாக தமிழ்த் தரவுக்களஞ்சியம் உருவெடுக்கும். அதன் வளர்ச்சி - குறைந்தது 100-200 தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து நிலைத்த தமிழ்ச் சந்தையை உருவாக்கும்.

ஆகவே, தமிழ்த் தரவுகளை, உலகியல் கணிமை முறைமைகளைக் கொண்டு, நேரிய முறையில் நெறிப் படுத்த வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது. அப்படி ஒரு முறை செய்து விட்டால், காலத்துக்கும் கவலைப் படவேண்டியதில்லை. இந்தத் தரவுக் களஞ்சியத்தின் மேல் எண்ணற்ற செயலிகளும், இணைப்புகளும் உருவாகும். கல்வியும், தமிழும் செழிக்கும் என்பதொடு, மாபெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வளமான சந்தையை ஏற்படுத்தும் திறன்வாய்ந்தது இந்தத் தமிழ் அறிதியியல் துறையாகும் என்று மீண்டும் எடுத்துக் கூறுகிறேன்.


உதிரித் திட்டங்கள் உறவு சேர்க்காது. உலகியல் நடைமுறைகளைக் கைக்கோண்டு செய்யப்படும் உயர்ந்த திட்டங்கள்தான் இன்று நமது மொழிக்கும், நமக்கும் பயனளிக்கும்.


======================================================================

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/03/14

Monday, March 10, 2014

2012-கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டின் தீர்மானங்கள்!

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
சென்னை

சென்னையில்  
2012 டிசம்பர் 16 ஆம் நாள் ஞாயிறன்று நடைபெற்ற கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் பின்வருமாறு.

1. அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்வதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறையில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பிரிவை அமைத்து கணினித் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தி மின்-ஆளுகைமின்கல்விமின்வணிகம் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கவும் அம்மென்பொருள்களைச் சந்தைப்படுத்திட வகை செய்யும் அரசாணைகளை வெளியிடவும் தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.

2. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு செய்ய ஒருங்குகுறி எழுத்துருக்களையே பயன்படுத்த வெளியிட்டுள்ள அரசாணைநடைமுறைப் படுத்தப்படவேண்டும். ஒருங்குகுறி சேர்த்தியத்தால் (UNICODE CONSORTIUM) தமிழுக்கு அளிக்கப்பட்டுள்ள 128 இடங்கள் போதாதுதமிழின் அனைத்து எழுத்துகளுக்கும் இப்போது இடம் கிடைக்கும்வகையில்  வல்லுநர் குழுவினரால் உருவாக்கி அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள TACE (TAMIL ALL CHARACTER ENCODING) குறியீட்டுமுறையை  ஒருங்குகுறி சேர்த்தியம் ஏற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது. .

3. தமிழகத்தில் இயங்கும் அனைத்து வணிக நிறுவனங்களும் தாங்கள் விற்கும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய கையேடுகளை (USER MANUAL) தமிழிலும் உருவாக்கவேண்டும். விற்பனையில் அளிக்கப்படும் பெறுதிச்சீட்டு (RECEIPT) உள்ளிட்ட அனைத்துக் குறிப்புச் சீட்டுகளையும் தமிழிலேயே அளிக்கவேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்துச் செல்பேசிகள்கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மென்பொருளை உள்ளீடு செய்தே விற்பனை செய்யவேண்டும்இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குச் சில வரிவிலக்குகளை அளித்து அவற்றை ஊக்குவிக்கத் தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது. 

4. கணினித் தமிழ் வளர்ச்சிக்கான மனிதவளத்தைப் (HUMAN RESOURCE) பெருக்கவும்மென்பொருள் (SOFTWARE) நிறுவனங்கள் தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ் ஆய்வை மேற்கொள்ளவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்தமிழ்க்கணினிமொழியியல் புலங்களை நிறுவவேண்டும். பிற பல்கலைக்கழகங்களிலும் இதற்கான படிப்புஆய்வுகளைத் தொடங்க வழிவகுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.

5. சொல்லாளர் (WORD PROCESSORமென்பொருளிலிருந்து தானியங்கு மொழிபெயர்ப்பு மென்பொருள் (MACHINE TRANSLATION SOFTWAREவரை அனைத்து வகை மென்பொருள்களும் தமிழில் விரைந்து உருவாக்கப்படவேண்டும்.  தமிழ் மென்பொருள்களை உருவாக்கி அளிப்பதற்கு மென்பொருள் நிறுவனங்களுக்குத் தேவையான ஊக்கமளிக்குமாறு தமிழ் நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.

6. தமிழகத்தில் மட்டுமன்றிசிங்கப்பூர்மலேசியாஇலங்கை ஆகிய நாடுகளிலும் பிற வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் கணினி உட்பட அனைத்து  மின்னணுக் கருவிகளிலும் கணிப்பொறிகளிலும்  தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும். இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஒன்று என்று கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவை வலியுறுத்துகிறது.

7. தமிழை முழுமையாகவும் பிழையின்றியும் பயன்படுத்தும் வகையில் சொற்பிழைதிருத்தி (SPELL CHECKER) , தமிழக அரசின் ஆட்சிச் சொல்லகரமுதலி /  மாதிரி வரைவுகள் (MODEL DRAFTS) ஒருங்குகுறி (UNICODE) எழுத்துரு மாற்றி (FONT CONVERTER) ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளைத் தேர்ந்து தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கணிப்பொறிகளிலும்தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிகணினிகளிலும் உள்ளீடு செய்வதற்கு வகைசெய்ய, தக்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு   தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது,


மாநாட்டுக்குழு சார்பாக
பேரா.தெய்வசுந்தரம்