Pages

Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts

Wednesday, February 14, 2018

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாக உலவுகின்றது.
மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லிலிருந்து கிளைப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மன்றுதல், மன்றித்தல் என்ற சொற்களை ஊன்றிக்காண இருக்கிறது.
மன்றுதல் என்றால், கடுமையான தண்டனை தராமல், தண்டம் கட்டச்சொல்லி விடுதல்.
பார்க்க: http://dsalsrv02.uchicago.edu/cgi-…/philologic/getobject.pl…
"மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்......"
(திருமுறை-4, பூந்துருத்தி பதிகம் - 88)
மன்றியுந் நின்ற மதிலர் என்றால் "போய்த்தொலை என்று கண்டித்து விடப்பட்ட மதிலர் போகாமல் நின்றார்" என்று பொருள். அப்படி போய்த்தொலைக என்று விட்டும் போகாமல், மல்லுக்கட்டிய மதிலரை, மாய்த்தே விடவேண்டும் என்று சினந்து மாய்த்த சிவபெருமான்" .... என்பது இங்கு பொருளாகும்.
அதேபோல,
"கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன்மலையை யோடி
வென்றித்தன் கைத்தலத்தாலெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்;
மன்றித்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே"
(திருமுறை-4, கயிலாயம் - 47 - 5)
இராவணன், பேராசை கொண்டு கயிலை மலையை பெயர்க்க, உமை அஞ்ச,
சிவபெருமான் தண்டிக்கிறார். எப்படியென்றால், தனது கால் விரலால் இராவணனை
மெல்லியதாய் ஊன்றுகிறார். அதற்கே அவன் அலறி கதறுகிறான். அதோடு போய்த்தொலை என்று விட்டுவிடுகிறார் சிவன். அப்படியில்லாமல், கடுமையாக மன்றித்தே ஆகவேண்டும் என்று கருதியிருந்தால், இராவணன் பிழைத்தே இருக்கமாட்டான் என்பது பாடலின் பொருள். இங்கு கடுமையாக என்ற மறைவுப்பொருள், பதிகத்தின் பிற பாடல்களால் பெறப்படும்.
அதாவது, கடுமையாக வெறுத்து ஒதுக்காமல், அல்லது கடுமையான தண்டனையை தராமல், மன் (=பெருமையுடைய, வலிமை மிகுந்த) என்ற அந்த உயர்ந்த பண்புடைய பெரியோராய் நின்று குறைவான தண்டனை தருதல் என்பதற்கு மன்றுதல் என்று பொருள். "கடிது ஓச்சி, மெல்ல எறிக" என்ற வள்ளுவம் இங்கே ஒத்துப்பார்க்கத்தக்கது.
மன்றாடி கேட்டுக்கொள்ளுதல் என்றால், மன்றில் (மன்றத்தில்) பொதுவில் நின்று இறைஞ்சி கேட்டு மன்றி பெறுதல்.
10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள், 5 ஆண்டாக தண்டனை குறைக்கப்படுதலுக்கும்
மன்றிப்பு, அல்லது பொதுமன்றிப்பு என்றுதானே பெயர். 5 ஆண்டாக குறைக்கப்பட்டாலும் தண்டனை தண்டனைதானே. மன்னிப்பு கொடுத்தல் என்பது குற்றத்திற்கான குறைந்த தண்டனைதானே.
ஆகவே, மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது.
மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.
வழக்கில் றி-கரம் னி-கரமாக திரிவதுண்டு. காட்டாக பன்றி = பன்னி என்று பேச்சுவழக்கில் வருவதை சொல்லலாம். என்ன பன்றான் என்ற பேச்சு வழக்கு,
என்ன பன்னான் என்று வருவதை ற-கரம் ன-கரமாக திரிவதற்கு சொல்லலாம்.
ஆகவே மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே.
மீண்டும், மன் என்று தொடங்கும் பல உயர்ந்த சொற்களை வைத்துக்கொண்டு, மன்னிப்பு அயற்சொல் என்று சொல்லவே முடியாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, January 29, 2018

ஆண்டாள் - மடல் 3. வைரமுத்தின் 10 பிழைகள்.



"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு" என்பது வள்ளுவ மரபு.  "கடிது ஓச்சி,  மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் "  என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. "சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா", என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கை சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. "நீயே முக்கண் முதல்வனும் ஆகுக" - ஆனால் உன் பாட்டு பைசாவுக்கு தேறாது என்றது நக்கீர மரபு.

இந்த தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாக காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில் தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பதற்கு, மூன்று வாரங்கள் பொறுத்திருந்தது தேவைதான்.

1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு(fiction), வருணனை(commentary), மிகையான புகழ்ச்சி  ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பது போன்றே மிகுந்து கிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.

2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்று, ஆண்டாளை புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.

3) "சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.....மக்களை நோக்கி இறங்கி வந்தது."   ---வைரமுத்து.

இது அப்பட்டமான வரலாற்று திரிப்பு.

சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றை திரிக்கிறது. இது சைவ,வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையை காட்டுகிறதா? அல்லது காழ்ப்பை காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)

4) ஆண்டாளை "கண்டெடுக்கப்பட்ட கனகம்" என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதை பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்து நின்றன என்றுதான் சொல்ல வேண்டும். "அறியாக்குலம்" என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

5)  "பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? " ------ வைரமுத்து.

வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில்,
மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளை செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையார் திலகவதியாரே, அப்பரடிகளை சமணத்திலிருந்து மீட்டு சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார். மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள் முந்திப்பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மை, திலகவதியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. 400 ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது.1300 ஆண்டுகளில் இருவரை மட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில் விழாவில் தேவையில்லாதவற்றை பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.

6) "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" --- வைரமுத்து

சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, "அம்மையே" என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால் அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார். அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர். அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள். "தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்" என்று சத்தியை பாடி, அடுத்த வரியிலேயே, "அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்....." என்பார் அபிராமி பட்டர்.

சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கி கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான்.
இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையை தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளை தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.

இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.

ஓர் உயர்ந்த உறவை பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது "என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்" என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டை காற்றில் பறக்கவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

7) "திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" --- வைரமுத்து

இதுதான் கட்டுரையில் மட்டமான இடம் என்றால் மிகையல்ல.

"பாலியல்" என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில் வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.

8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:

ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், "ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து,  ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்." (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணைய சத்தியை அழைப்பதாக சிவநெறி சொல்லும். இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள் பிறரை இறையை நோக்கிஅழைக்கின்றார்.

இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர். அந்த ஆணிவேரை வருணமும், சாதி ஏற்றத்தாழ்வும் பிடுங்கி எறிந்தன பின்னாளில். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் விடும் அழைப்புகள் (Prayer Calls) மிக உயர்ந்த நெறியினதாகும். வெறும் பெண்டிரை நோன்புக்கு அழைக்கும் பதிகங்களை இருவரும் இயற்றவில்லை. அந்த அழைப்பு வெறும் விளையாட்டல்ல. குமுகத்தை (குமுகம் = சமூகம் = Society) கட்டியமைக்க அவர்கள் பட்ட பாடு. பத்திமரபு என்பது பொதுமரபு என்று எனது முதல்மடலில் சொல்லியிருப்பதை ஒத்துக்காண்க.

எம்பாவை பாடி இறைவனைக்கூட பக்குவம் பெறவேண்டிய ஆன்மாக்களை அழைத்த மாணிக்கவாசகர், ஆத்மநாதராகவே ஆவுடையார் கோயிலில் வீற்றிருக்கிறார். அதே பணியை விண்ணவத்தில் செய்த ஆண்டாள் இறைவியாக ஆகி, வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கிறார்.

இருவருமே உருகி உருகி இறைவனை காதலித்தவர்கள். இருவருமே, இறைவனிடம் முழுச்சரணகதி அடைந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனை குருவாகக் கருதி ஐக்கியமானார். ஆண்டாள் கணவனாகவே இறைவனை வரித்துக்கொண்டார்.

திருப்பாவையின் அந்த 19ஆம் பாட்டு சொல்வது இதுதான்:

"உன் கழலடைய, உன்னோடு கலக்க உன்னை கணவனாகவே வரித்து தவமிருக்கும் எனக்கு அருள் செய்யாதிருப்பது, உன் அடியார்களையும் மறக்குமளவிற்கு, நப்பின்னை பிராட்டியார் உன்னிடம் காட்டும் அன்பிலும் காதலிலும் கரைந்து போனதனாலோ? இது சரியா?". இதுதான் அதன் பொருள். அதை பாலியல் கொச்சையாக பேசினால் எப்படி?

"கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே..." என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்வது மெய்யியலை பேசும்போது மிகவும் பொருந்தும். ஆண்டாளின் இலக்கியத்தை உணர கூர்த்த மெய்நோக்கு தேவை.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் படிக்கும் கண்கள், தங்கள் ஆராய்ச்சிகளை தாறுமாறாக அவிழ்த்துவிடுகின்றன. வைரமுத்தும் அதையே செய்திருக்கிறார். ஆண்டாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் இறைவனோடு கலக்க வேண்டும் என்ற ஒரே தவிப்புதான். அந்தத்தவிப்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், ஆண்டாளை பருவமடைந்த பெண்னாக பார்ப்பதுதான் அவர்களின் கோளாறு.
நாச்சியார் திருமொழியில் 5ஆம் பதிகத்தில் குயிலோடு பேசும் ஆண்டாளை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனின், மாணிக்கவாசகரின் குயிற்பத்தை படிக்கவேண்டும். இருவரும் குயிலை வைத்து பேசுகின்ற பேச்சு, கெஞ்சல், மிரட்டல் என்ற பலஉணர்வுகளும் ஆன்மவிடுதலைக்கு அவர்களின் தவிப்பை சொல்லும் பேரரும் பதிகங்களாகும்.

நாச்சியார் திருமொழியின் 13ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டில் ஆண்டாள் இப்படி பாடுவார்.

"கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவந்தானென்?
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே."

மானுடவாழ்வின் அல்லல்களில் இருந்து விட்டுவிடுதலையாகி முத்திபெற தவிக்கின்ற தவிப்புதான் ஆண்டாளின் தவம். இதையே, மாணிக்கவாசகர் எப்படிப்பாடுகிறார் பாருங்கள்!

"பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர் திரைபொர காமச்சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே!"

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மானுட அல்லலில் இருந்து விடுபட தவமிருக்கும் மாணிக்கவாசகர், உன்னைப்பற்றி நின்ற அன்பர்கள் எல்லாம் வானேறிவிட, நான்மட்டும்
இங்கு சுறாமீன் போன்று தாக்குகின்ற காமத்தால் அழிந்துகொண்டிருக்கிறேனே என்று கதறுகிறார். இதைத்தான் ஆண்டாளும் "கொம்மை முலைகள் இடர்தீர" என்று குறிப்பிடுகிறார். இன்னொரு பாட்டில், "......என்னை கூவிடுவாய்! கும்பிக்கே இடுவாய்! நின் குறிப்பறியேன்" என்று அலறுவார்; இன்னொரு பாட்டில் "....நம்பி இனித்தான் நல்குதியே!' என்று அழுவார்.  அதைத்தான் ஆண்டாளும், "விடைதான் தருமேல் மிகநன்றே" என்று உருகுகிறார்.

ஆண்டாளை வெறும் தெய்வமாக புரிந்து கொண்டு போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள்தான் பெரும்பான்மை. திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் மட்டும் படித்தவர்கள் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாணிக்கவாசகரின், அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, வாழாப்பத்து, ஆனந்தமாலை, நீத்தல்விண்ணப்பம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன். அதையும் சித்பவானந்தாவின் உரையோடு சுருக்கிக்கொள்ளக்கூடாது. அவ்வுரையை தாண்டி நல்ல உரைகள் உண்டு. இவற்றோடு குறுந்தொகையையும், திருக்குறளின் இன்பத்துப்பாலையும்  ஒப்பிட்டு படிக்க வேண்டும்.  அகப்பாடல்களை படிக்க வேண்டிய முறையே இதுதான்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்காணும் வாரணமாயிரம் என்ற பதிகத்தை போன்ற ஒப்பற்ற மங்கல பதிகத்தை நான் எங்கும் படித்ததில்லை. அதில் "தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது" என்கிறார் வைரமுத்து. திருப்பித்திருப்பி படிக்கிறேன் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக அதன் 14 பதிகங்களை பார்த்தால் நாச்சியார் திருமொழி என்பது ஆண்டவனின் கழல்சேர, ஒன்றிப்போக, இம்மையின் அல்லல் நீங்கி "சும்மா இருக்கும் சுகம்" என்பாரே வள்ளலார் அதனை அடைய ஆண்டாள் என்ற 13/14 வயது மங்கையின் பரிதவிப்பு, வேண்டல், தவம், அலறல், கதறல் ஆகியவைதான் அவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்று வள்ளுவம் சொல்லவில்லையா? அவர் சொன்ன அந்த பிறவிப்பெருங்கடலின் அல்லல்களில் இருந்து தம்மை விடுதலை செய்ய வேண்டி நின்ற ஞானந்தான் ஆண்டாளின் தவம்.

ஆனால், இலக்கிய வித்துவான்களும் காலஞ்சென்ற ஞாநி உள்ளிட்ட தயார்-எழுத்தாளர்களும் (fast food writers) எங்கெங்கெல்லாம் முலை, கொங்கை, அல்குல் என்ற சொற்கள் வருகிறது என்று பார்த்து அந்த வரியை மட்டும் பிடித்துக்கொண்டு காமம், கொடூரம், கொக்கோகம் என்றெல்லாம் கருத்தெழுதி கொச்சைப்படுத்திய நாள்கள் தமிழ் அறிவுலகத்தின் அவமானமான காலம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஞாநி 15 ஆண்டுக்கு முன்பு கண்ணகியை ஏளனப்படுத்தினார். பின்பு, மாணிக்க வாசகர்; அண்மையில் ஆண்டாளை கேலிசெய்தார்.

ஏன் இந்த எழுத்துலகிற்கும், அறிவுலகிற்கும் கொங்கை, முலை, அல்குல் என்ற மூன்று சொற்களை படித்தாலே கைகால் வியர்த்து நடுங்குகின்றன என்று எனக்கு புரியவில்லை.
இந்த முறை சற்று கூடுதலாகவே இதழ்களுக்கும் நடுங்கியிருக்கின்றன. இந்த நடுக்கம் தமிழ் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்த நடுக்கம் வந்தபின்னர்தான் மருத்துவரிடம் கூட, ஆங்கிலத்தில் அதற்கான பெயர்களை சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது.

இயல்பான இம்மைவாழ்வின் அல்லல்களை நீங்கி ஆண்டவனை அடையவேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளம்மையை வைரமுத்து பார்த்தது பார்வைப்பிழை; அறிவின் குறை; ஆண்-அவம், புலமைச்செருக்கு என்ற மாயை.

அன்றைய சூழலில் பெண்களுக்கு கொடுங்கோடு என்ற ஒன்றெல்லாம் தென்படவேயில்லை.

9) "பாலியல் சொல் விடுதலை" - இந்தச்சொற்கள் வைரமுத்தின் வக்கிரத்தின் உச்சம். அதுவும் ஔவையார், வெள்ளிவீதியாரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இதைப்பேசுவது அறியாமையா?ஆணவமா? என்பது புரியவில்லை. இன்னும் எழுத எவ்வளவோ இருந்தாலும் நீளம் கருதி, பத்தோடு நிறுத்துகிறேன்.

10) தேவதாசி:

தனது முன்முடிவை நேரடியாக கூறாமல், வேறொருவரை மேற்கோள் காட்டி ஆண்டாளை அப்படி குறிப்பிடுகிறார். எத்தனை பெரிய தவறென்று தமிழ்நாடு அவருக்கு எடுத்துக்காட்டியது. பலர் கூறியவற்றை தவிர்த்து இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அ) தேவதாசி மரபு அன்றைய சூழலில் உயர்வாக கருதப்பட்டது என்று சொன்னாலும், எத்தனை தேவதாசிகளை தமிழ்நாடு வணங்கிக்கொண்டிருக்கிறது? எண்ணிப்பார்க்க வேண்டாவா? இறைவியாகக்கூட இல்லை, பரிவார தேவதைகளாகவேனும் எத்தனை தேவதாசிகள் வழிபாடு பெறுகிறார்கள்? அப்படியென்றால் அன்றைய சூழலை இழுத்து குழப்புவது சமாளிப்புதானே?

ஆ) தேவதாசி யார்?: சமயநெறிகளுக்குட்பட்ட கோயில்கள், கோயில் மண்டிலங்களில் மானகை/மேலாண்மை (Management) இருக்கத்தானே செய்யும். தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு இருக்கிற மேலாண்மைக்கூறுகளை கோயில்களிலும் காணமுடியும். நிருவாகம் (Administration), அன்றாடப்பணிகள் (Operations), மனிதவளம் (HR), நிதி (Finance), விற்பனை/வணிகம் (Sales/Rental) போன்ற அடிப்படைத்துறைகளை இன்றைக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

அதோடு, இந்தக்கோயிலுக்கு போய் வழிபட்டால் இன்ன குறை நீங்கும்; இன்னது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கேட்கிறோமே அதெல்லாம் கோயில்கள் சந்தைப்படுத்தப்பட்டதன் அடையாளங்கள். சூரிய பகவானை வழிபட இங்கே செல்க, சனிபகவானை வழிபட அங்கே செல்க, தலைவலி நீங்க இங்குமங்கும் செல்க என்றெல்லாம் இன்றும் நாம் நிறைய கேட்கிறோம். All these are nothing but Temple-Marketing-Network-Activities.  கோயில் புகழ்பெற செய்யப்பட்ட விளம்பர உத்திகளாகவே பெருமளவும் காட்சியளிக்கின்றன.

இதை ஏன் உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கலாம். திருநள்ளாறை எடுத்துக்கொள்வோம். அங்கே சனிபகவானை கும்பிட்டால் குறைகள் தீரும் என்பது நமது நம்பிக்கை. ஆனால், திருநள்ளாற்றின் பச்சைப்பதிகம் உள்ளிட்ட மூவர் பாடிய பாடல்களிலும் அப்படியொரு வழிபாட்டை தேவார முதலிகள் எழுதவேயில்லை.

மூவர் தேவாரமும் ஒவ்வொரு தலத்தின் இறைவனையும், அந்த ஊரின் இயற்கையையும் சிறப்பையும் பாடி, இந்தப்பாட்டை படி; போதும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்வார்களிடையேயும் நான் அப்படித்தான் காண்கிறேன்.

ஆனால், நிகழ்வு என்ன என்றால் அவர்கள் பாடிய பாட்டை கோயில் நிருவாகமே பாடுவதில்லை. மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்துவிட்டு அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட்டு உத்திகளைத்தான் கோயில்களில் காணமுடிகிறது.

அந்த சந்தை (Marketing) உத்திகளின் ஒருபகுதியாக கலைஞர்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டு Dedicated Event Performers ஆக ஆக்கப்பட்டார்கள். இது மனிதவள (HR) உத்தியாகவும் இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. இந்த மனிதவளத்தின் மற்றொரு பகுதியாக Operations - அதாவது அன்றாடப்பணிகளுக்கு தேவைப்பட்ட ஆள்களை சொல்லலாம். வேலைகள் செய்ய தேவைப்பட்ட ஆள்களாகவும்(Labours) தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கின்றனர்.

ஆக, தேவதாசிகள் கலைஞர்கள் ஒருவகையாகவும், பணியாள்கள் ஒருவகையாகவும் இருந்திருக்கிறார்கள். (There existed both artists and labours as devadasis. As always marketing people are paid high in the industry it is possible the artist-devdasis could have been kept in better esteem/wealth) இப்படியிருக்கையில், இறைப்பணி என்று ஒரெ முத்திரையிட்டு தேவதாசிகளை பேசுவது சரியாயிருக்காது.

இதில், ஆண்டாளை ஏப்படி தேவதாசி என்று கூறமுடியும்? மாபெரும் பிழையல்லவா? கடுஞ்சினம் வருமா இல்லையா?

Temple Marketing என்பதைப்பற்றி இறுதியாக ஒரு குறிப்பை அனைவரின் சிந்தனைக்கு எழுதி நிறைவு செய்கிறேன்.

நேர்த்திக்கடன், வேண்டிக்கொள்வது, நோன்பு/விரதம் போன்றவை தொன்மமான நாட்டார் மரபுகளிலேயே உண்டு. முருக மரபில் உண்டு. ஆனால், எங்காவது, சின்ன கருப்பு கோயிலுக்கு போனால் சுக்கிர தோசம் போகும், சுடலை மாடன் கோயிலுக்கு போனால் செவ்வாய் தோசம் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை.

இடைக்காலத்தில் எழுந்த பத்தி இயக்கமும் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப்போனால், வழிபாட்டை மிக எளிமையாக்கியது. "சும்மா இந்த பதிகத்தை படித்துவிட்டு போப்பா" என்று படிக்கச்சொல்லியது. சான்றாக தேவாரத்தை சொல்வேன்.

ஆனால் பிற்காலந்தான் அப்படியான வழக்கங்களை உருவாக்கின. குறிப்பாக, நாயக்கர் காலத்திற்குப்பின்னர், தமிழ் கோயில்களை விட்டு அதிகம் வெளியாகி, இந்த வழக்கங்கள் உருவாகின.

இது தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் அவரவர் விருப்பு. ஆனால், Temple Marketing என்பது எல்லை மீறிப்போவது கவனிக்கத்தக்கது. இதை ஆழ்ந்து பார்க்காமல், எல்லா மரபு வழிபாடுகளையும் தூற்றிக்கொண்டு, ஆன்மீகம் தொடர்பான அனைத்தையும் கேலி பேசிக்கொண்டே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்?
படிக்கச்சொல்லி நமக்குத்தந்த தூயதமிழ் இறைப்பாடல்களை படிக்க மறுத்து, ஆரியம் பூரியம் என்று தேவாரம் திருவாசகம் போன்றவைகளையும் தள்ளிவைத்துவிட்டு, காது, ஈயம் கதைகளை எத்தனை நாள் பேசிக்கொண்டிருப்போம்?

எனது முந்தைய மடலில் சுட்டிக்காட்டிய மரபின் திரிவுகளை ஒத்துப்பார்க்க வேண்டுகிறேன்.

வைரமுத்தின் அறமற்ற பத்துப்பிழைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வேறுபிற செய்திகளோடு அடுத்த மடலில் நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/2.html


Friday, December 18, 2015

தமிழோற்பலம்::மடல் 2 - ஏல் ஓர் எம்பாவாய்!

மார்கழி மாதம். வருடமுழுதும் வெய்யில், மழை என பருவங்கள்
வேறுபட்டு வருகையில், பனிக்காலத்தின் தொடக்கமான மார்கழி
மனதுக்கும் உடலுக்கும் இனிமையான மாதம் என்பது
இந்நிலவமைப்பின் இயல்பு.

ஆண்டுமுழுதும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்,
நோன்புகள் எனப்பல கொண்டாட்டங்களையும் சிறப்புகளையும் கொண்ட
குமுகம்தான் தமிழ்க்குமுகமும். அது, பத்திக்கென்று ஒதுக்கிக்கொண்
ஒருதிங்கள் மார்கழி.தமிழ்ச்சைவமும் தமிழ்வைணவமும் கொஞ்சிமகிழும்
மாதம் மார்கழி.

பத்தி எனும்போது, இல்லத்தில் வழிபாடும், கோயிலுக்குச்சென்று
இறைதெரிசன வழிபாடும் செய்வதுமே பொதுமக்களின் மரபு.

கோயிலுக்குச்சென்று செய்யும் வழிபாடுகளில், தொலைவில் இருக்கும்
கோயில்களுக்குச்செல்வதற்கு மார்கழி மாதமும், தைமாதமும்தான்
மிக உகந்த மாதங்கள். மெல்லிய இதமான குளிரடிக்கும்
இரவுகளும், உடலை வருத்தாத வெயிலடிக்கும் பகல்களும் மார்கழியில்
தொடங்குகின்றன.

இன்றைய போக்குவரத்து வளர்ச்சியில், தமிழ்நாட்டின் எந்த ஓரிடத்திற்கும்
ஒருபகற்பொழுது அல்லது இரவுப்பொழுதில் சென்றுவிடலாம். ஆனால்
பழையகாலங்களில் அப்படியில்லை. நடைப்பயணமாகவும்,
மாட்டுவண்டிப்பயணமாகவும் சில நாள்களேனும் பயணிக்கவேண்டும்.
சென்னையிலிருந்து பழனி செல்லவேண்டுமானால்,
திருச்செந்தூர் செல்லவேண்டுமானால், அல்லது அங்கிருந்து திருமலைக்கோ
காளத்திக்கோ,தணிகைமலைக்கோ வரவேண்டுமானால் ஒருவார பயணமாகிவிடும்.
ஆக, நெடுந்தொலைவு செல்லும் திருத்தலப்பயணத்திற்கு உகந்த மாதம்
மார்கழியில் தொடங்குகிறது. மாசியிலும் பங்குனியிலும் சிறிது தொடர்கிறது.

ஆகவேதான் இயல்பாகவே மார்கழி சிறப்புப்பெற்று பத்திமாதமாகிவிடுகிறது.
இன்றைக்கும் சபரிமலை செல்பவர்கள் மார்கழி,தையில்தான் நோன்பிருக்கிறார்கள்.
தைப்பூச விழாவுக்கு முருகனைக்காண தைமாதத்தில்தான் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வடக்கேயும் மார்கழிக்கு
மார்கசீசம் என்றும், தையிற்கு தைசம் என்றும் வடமொழிப்பெயர்கள் உண்டு. இந்தமாதங்களைதான் அவர்களும் திருத்தலப்பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக கருதுவதை அருத்தசாற்றத்தில் காணமுடிகிறது. அவர்களின் மார்கழியும் தையும் சிலநாள்களின் முன்னரே தொடங்கிவிடும். பத்திக்காலத்துக்கும் பருவகாலத்துக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது. கயிலாயப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அக்தோபர் முதல் மார்ச்சு மாதம்வரை
பயணம் போவதில்லை. மழை, பனிக்கடுமைகளை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, பருவகாலம்தான் மார்கழியின் சிறப்பா? அல்ல.

"இறைவனை அண்டும் ஓர் ஆன்மா, இறையின் அருமையை துய்ப்பதற்கு
இன்னொரு ஆன்மாவையும் தூண்டி தன்னோடு இறைவனைக்காண
கூட்டணி கொள்ளும் அருமையான மாதம்தான் மார்கழி". இதுதான் அதன் சிறப்பு.
இதனாலேயே மார்கழி சிறப்புப்பெறுகிறது.

ஆமாம் - மனிதகுலம், தான் இன்பமாகக்கருதுவதை தன்னோடு சேர்ந்து
பிறரும் துயக்கவேண்டி ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டுறவே மார்கழி நோன்பு.

தமிழ்ச்சிவநெறி தமிழ்க்குமுகத்தை சாதிவேறுபாடின்றி ஏற்றத்தாழ்வின்றி
கட்டியமைக்க முற்பட்டதன் பதிவுகள்தான் மார்கழிப்பத்திமை.

வைதீக நெறியைப்போல சனாதன,வருணாசிரம கருத்துகளால் இறைவழிபாட்டில்
தீண்டாமையை நுழைக்கவில்லை. வைதீகம் ஒரேக்குமுக மக்களில் ஒருபகுதியை
கோயிலுக்குள்ளே வராதே என்றது. தமிழ்ச்சிவ நெறியோ அனைவரையும்
வா வா என்றது. வந்தவர்களை கைகூப்பி அடியாராக அணைத்துக்கொண்டது.
வைதீக நெறியின் ஊடாட்டத்தால் சிவநெறியினர் சிலபல வேளைகளில்
தவறுகளைச்செய்திருக்கிறார்களன்றி, "தமிழ்ச்சிவ நெறியில்" பிழையில்லை. 

தமிழ்ச்சிவநெறியில் "அடியார்க்கூட்டு","அடியார்க்குத்தொண்டு" என்பதற்கு உயர்ந்த மதிப்புண்டு. இதில் உணரவேண்டிய ஒன்றே ஒன்று - "அடியாரும் மக்களும்" வேறு வேறு அல்ல என்பதுதான். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் பாடியதெல்லாம் இறையடியாரை ஒன்று சேர்த்து சிறந்த குகத்தை கட்டியமைக்க வேண்டித்தான்.

மார்கழியில் நாம் பாடுகின்ற திரு எம்பாவையை மாணிக்கவாசகர் அருளியது அதற்காகத்தான்.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக்கேட்டேயும்,

வாள் தடங்கண் மாதே, வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்! கிடந்தாள்! என்னே! என்னே!!

ஈதே எந்தோழி பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்!

"....திருவெம்பாவை-1

பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் ஏது? அடியையும்
முடியையும் அறியமுடியாத நீள் நெடுஞ்சோதியாய் இவ்வுலகினரின்
அகத்துக்கும் புறத்துக்கும் ஒளியாய்த்திகழும் ஈசனை, போற்றி, நாங்களெல்லாம்
பாடி மகிழ்ந்து வருகையிலேயும், மாதே, உன் மனத்தின் உறக்கம் இன்னும்
கலையாமலிருப்பது என்ன விந்தையோ? இறைவன் என்ற உண்மையையும்
உன் செவிக்கு எட்டவிடாமல் உன்னை அழுத்தியிருக்கும் மாயை என்னவோ?

ஆங்கோர் வீதியில், எமது போற்றிகளோடும் புகழ்ச்சிகளோடும், நாங்கள்
நுழைகையிலேயே, அங்கொருத்தியின் கண் மட்டுமல்ல, உள்ளமும்
ஒருங்கே விழித்துக்கொண்ட வேகத்தை எப்படி எம்மால் விவரிக்கமுடியும்?
உள்ளம் விழித்துக்கொண்டதும், அவளின் நெஞ்சில் நிறைந்த சிவனன்பு,
விழித்த கண்களில் நீராய் ததும்பியதோடு, அன்பின் மிகையால்
தொண்டையையும் அடைத்ததோ அறியோம் - ஆனால் அவள் கண்களிலும்
நெஞ்சிலும், கம்மிய குரலிலும்  சிவமே நிறைந்திருக்க, என்ன செய்கிறோம்
என்று தெரியாமலேயே புரண்டு கீழே விழுந்தாள்.விழுந்தாளெனினும், அதுவும் அவளிடமிருந்து சிவத்தை கலைக்க முடியவில்லை.

தன்னை அண்டினோரை அன்பில் கரைத்து ஆட்கொண்டுவிடுவான்  இறைன். இது அவன் தன்மை. அப்படியிருக்க, அவனை அண்டாமல் உன்னைத்தடுக்கும் மாயை என்னவென்று யாமறியோம்?

அவன் கழல்களையும் கருணையையும் ஆழ்ந்து சிந்தித்துப்பார் என் தோழி!
அம் மாமாயையில் இருந்து விடுபட்டு நீ எழுந்தோடி வந்துவிடுவாய் என் தோழி!! நாமனைவரும் ஒன்றாகிவிடுவோம் என் தோழி!!

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும்
மற்றொரு ஆன்மாவை அன்போடு தூண்டி ஈர்த்துக்கொள்ளும் குமுக
ஒற்றுமைப்பாட்டு இஃது. இறையை முன்வைத்து குமுகத்தை கட்டியெழுப்பும்
பெருநெறியாகுமிது. குலதெய்வ வழிபாடுகள் உறவுகளை உறவுசேர்க்கிறது;
சைவப்பெருநெறி குமுக மக்கள் யாவரையும் உறவு சேர்க்கிறது.

சமயநெறிகள் மக்களை  வேறுபாடின்றி வா வா என்று அழைக்கும்போது, ஒற்றுமை பெருகி ஏற்றத்தாழ்வு குறைகிறது. வாசலிலேயே நில், உள்ளே வராதே என்றபோது குமுகம் பாழ்பட்டுப்போனது.

திருவெம்பாவையின் முதற்பாடலே மனதைக்கரைத்துவிடுகின்றது. சாமிப்பாட்டு
சாமிப்பாட்டு என்றளவிலேயே பலரும் புரிந்து கொள்கின்ற திருவாசகப்பாடல்கள்
ஆழ்ந்த அகப்பாடல்கள்.அந்த அகத்தின் அளவிற்கும் அடியுமில்லை முடியுமில்லை.

குறிப்பு: ஏல் = மீள்தல், (Reviving from a state)
                ஓர் = சிந்தி, ஆய், ஆராய்
 அன்புடன்
நாக.இளங்கோவன்
19/12/2015

Monday, November 09, 2015

தமிழோற்பலம்::மடல் 1 - பாலும் தெளிதேனும்!


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா."

பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனை புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று.

அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம்விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச்சொல்லி படையலிட்டு வணங்கி, நாம் நமது வேண்டலை அவனிடம் வைப்பதுதான் நமது வழக்கம். ஆனால், ஔவையாரோ, பாலையும் தேனையும் பாகையும் பருப்பையும் கலந்து "நான் தருவேன்" என்று கூறுகிறார். நீயெனக்கு மூன்றுதமிழைக்கொடுத்தால் உனக்கு இதனை நான் தருவேன் என்றுதான் கூறுகிறாரே தவிர, "நான் தந்தேன்" என்றோ, "இதோ தந்திருக்கிறேன்" என்றோ பாடவில்லை.

ஆனைமுகத்தனை வழிபட்டு பாடுகின்ற பாடலில் அவனுக்கு இந்த நான்கு பொருள்களை கலந்து படைக்காமல், பாடலைமட்டும் சொல்லிப்போகிறாரே ஔவையார். ஔவையாருக்கு தமிழையும் அறிவையும் ஏற்கனவே அள்ளித்தந்தவர் ஆனைமுகக்கடவுள்தானல்லவா? அப்புறம் இவருக்கு இன்னும் என்னதமிழ் வேண்டும்? அதற்கு ஏன் இவர், பால்,தேன்,பருப்பு, பாகு என்ற நான்கைத்தருவதாக சொல்கிறார்? இறைவனுக்கே ஆசை காட்டுகிறாரா? மாந்தகுலத்தின் படையல் வழிபாட்டை ஔவையும் செய்கிறாரே என்று நமக்கும் தோன்றி நம்மில் பலரும் அப்படித்தான் வழிபாடு செய்கிறோமோ?

பசுதருகின்ற பாலின் சுவையறியாதார் மண்ணில் இல்லை. தூயதேனின் சுவையையும் அறியாதார் இருக்க முடியாது. பாகு என்பது கருப்பஞ்சாற்றில் செய்யப்பட்ட வெல்லத்தை
காய்ச்சி எடுப்பது. அதன் சுவையையும் சொல்லி முடியாது. பருப்பு என்பது என்ன? சாதாரணமாக நாம் உணவில் பயன்படுத்தும் துவரம்பருப்பா? அதை காரமான உணவுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம். பாசிப்பயிறு அல்லது பச்சைப்பயிறைக்கொண்டு, கஞ்சி அல்லது பாயசமாக செய்வோம். அதை இனிப்புணவாக செய்வோம். இதுவும் தமிழ்மண்ணின்  தொன்மையான உணவு. ஆகையால் அதைத்தான் ஔவையார் பருப்பு என்கிறார். பாற்பாயசம் என்பது இன்றும் நாம் உண்ணும் இனிப்புணவு. ஆகவே, பாசிப்பயிற்றை மசித்து, பால் கலந்து, அதனுடன் தேனையும், வெல்லப்பாகினையும் சேர்த்துக்காய்ச்சிய பாற்பாயசம் எத்தனை சுவைமிகுந்ததாக இருக்கும்?

இங்கே சட்டென்று ஏனோ நமக்கு வள்ளல் பெருமான் நினைவுக்கு வந்துவிடுகிறார். வள்ளலாருக்கு  மாணிக்கவாசகர் நினைவுக்குவர, அவர் பாடுகிறார்:

"வான்கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை
 நான் பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து  பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே".

நற்கருப்பஞ்சாற்றில் இருந்துதான் பாகு எடுக்கிறார் ஔவையார். ஆக இருவருமே கருப்பஞ்சாற்றை கலந்துவிடுகின்றனர். தேன், பால், பாகு இவற்றை பருப்போடு கலக்கிறார் ஔவையார். வள்ளலாரோ, தேன், பால், கருப்பஞ்சாறு இவற்றை செழுமையான கனிகளுடன் கலக்கிறார்.

ஔவையாருக்கு பாற்பாயசம் சுவையாயிருக்கிறது. வள்ளலாருக்கோ பாற்கனி
சுவையாயிருக்கிறது. வள்ளலார் என்ன சொல்கிறார்!  "மாணிக்கவாசகப்பெருமானே, நீ எழுதிய திருவாசகத்தை நான் பாடும்பொழுது எப்படியிருக்கிறது தெரியுமா! கரும்புச்சாறு, தேன், பால் இவற்றை இனிக்கின்ற கனிகளோடு கலந்தால் எத்தனைச்சுவையாக, இனிப்பாக இருக்குமோ அப்படி இனிப்போ இனிப்பெனெ இனிக்கும் உன் திருவாசகப்பாடல்கள் என் உடலோடும் உயிரோடும் நான் பாடப்பாட கலந்து கொண்டேயிருந்தாலும், திகட்டாமல் இனிக்கின்றதையா! இத்தனைச்சுவையை எங்கிருந்து தந்தனை நீ? திகட்டாத இனிப்பாயவற்றை எப்படிப்படைத்தனை நீ? இந்தத்தமிழை எங்கிருந்து பெற்றனை நீ?" என்ற வியப்பையும் திகைப்பையும்  வெளிப்படுத்துகிறார், இறைவனிடம் இருந்து பெற்ற தமிழை, இறைவனிடம் இருந்து பெற்ற தமிழால் படித்த வள்ளலார். வள்ளலாரின் வரிகள், திருவாசக பாடல்களின் சுவை  பால்,தேன்,கரும்பு,கனி கலந்த இனிப்பை, சுவையைப்போன்றது என்று இயம்புகின்றன.

இறைவனுக்கு என்ன தேவை? அப்பரடிகள் பாடுகிறார்:

"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்,
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்.."

"குளிர்ந்த நீரிலாட்டி தூய்மை செய்வேன், ஆங்கு மணம் கமழ மலர்தூவுவேன், யாதுமுனையறிய விளக்கம் ஏற்றுவேன்; ஏற்றி, தமிழால் உன்னை போற்றிப்பாடுவேன்.
இவற்றை என்றைக்குமே நான் மறந்ததில்லையே அப்பா!"  என்று அப்பரடிகள் சொல்லும்போது, இறைவனுக்கு உண்ணத்தந்தது ஒன்றுமில்லையல்லவா?
தூய்மையும், இயற்கை மணமும், விளக்கமும், தமிழுமே அவனுக்கு தந்தாரல்லவா?
அப்பரடிகள்தான் தரவில்லை; ஆண்டவன்தான் கேட்டானா? அதற்குப்பதிற்சொல்லுவார் சுந்தரமூர்த்திகள்:

"எம்மைப்பெற்றால் ஏதும்வேண்டீர்; ஏதும் தாரீர், ஏதும் ஓதீர்...."

என்னையா இது? எம்மை படைத்தீர்; ஆட்கொண்டீர்; உம்மடியாராக அருளினீர்; எமக்கு யாவுமாய் நிற்பீர்; ஆனால், எம்மிடம் இருந்து ஒன்றும் பெற்றுக்கொள்வீர் இல்லை. உமக்குத்தேவை என்பதொன்றில்லையாதலால் யாம் உமக்குச்செய்ய எண்ணும் எவற்றுக்கும் நீர் எதனையும் தருவதுமில்லையோ?. "உனக்கு இதுதான், இப்படித்தான், இன்ன நாளில்தான்" என்று ஏதும் சொல்லவும் மாட்டீரே! என்று சுந்தரர் அன்புமீதூர, அதேவேளையில் "நம்மை ஆக்கிய நந்தலைவன் நம்மிடம் இருந்து எந்தச்சிறிய ஒன்றையும் கேட்கவேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறானே - இது இவன் தன்மை" என்று வியந்தும் வருந்தியும் சொல்வார்.

"செய்வகை அறியேன்....இது செய்க என்று அருளாய்" என்று வாதவூரர் புலம்பித்தவித்ததெல்லாம் சுந்தரரின் "ஏதும் ஓதீர்" என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கமாக அமைவதைக்காணமுடியும்.

இறைவனுக்கு, தான்படைத்த மனிதரிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏதும் இல்லை. சொல்லப்போனால், "உன்னால் எனக்குத்தர என்ன இருக்கிறது?" என்று  இறைவன் கேட்பதுபோல் தோன்றுகிறது. அப்படியே தந்தாலும், "தூய்மையையும், நறுமணத்தையும், நல்லொளியையும் தந்து தமிழால் என்னைப்பாடு - யாவருக்குமது பயனாய் அமையும்" என்றே உணர்த்துகிறான் இறைவன். தமிழாற்பாடுவது, தேனும், பாலும், கருப்பஞ்சாறும்,கனியும் கலந்த சுவையாகிறது; அல்லது தேனும், பாலும், பாகும், பருப்பும் கலந்த பாற்பாயசம் போன்ற சுவையாகிறது. தெவிட்டாத அல்லது திகட்டாத பாடல்களால் ஆனைமுகனை மேலும் பாடத்தான், இயலும் இசையும் கூத்தும் என்ற மூன்று தமிழறிவையும் செறிவையும் ஆழ ஆழ அள்ளித்தர வேண்டுகிறார் ஔவையார். அந்தப்பாடலை வரிசை மாற்றிப்படித்தால் அவரின் வேண்டல் ஒரு "ஞானவேட்கை" என்பது புரியும்.

"கோலஞ்செய்  துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
                        சங்கத்தமிழ் மூன்றும் தா;  (அவற்றைக்கொண்டு)
 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துனக்கு (அச்சுவை பொருந்திய பாடல்களாய்)
  நான் தருவேன்."

ஞானக்கடவுளான ஆனைமுகனுக்கு, ஔவைப்பிராட்டியார் நான்கு உணவுப்பொருள்களை கலந்து படையல் போடவில்லை; படையல் போட்டு பேரம் பேசவில்லை. ஆனைமுகனால் ஞானமும் தமிழும் அருளப்பெற்ற ஞானி அவர். மேலும் ஆழ்ந்த அறிவையும் செறிவையும் முத்தமிழில் தேடுகிறார்; அத்தேடலை இறைவனிடம் வைத்து வேண்டுகிறார். பருப்பொடு, பால், தேன், பாகு இவற்றை கலந்து சமைத்தால் கிட்டுகின்ற இனிப்பான சுவைதரும் "பொருள்நிறைந்த" தமிழ்ப்பாடல்களால் இறைவனைப்பாட; ஞாலம் பயனுற.

அன்புடன்
நாக.இளங்கோவன்
10/11/2015

Sunday, September 21, 2014

இந்திரா பார்த்தசாரதியின் 'சிலப்பதிகாரச் சிக்கல்கள்' கட்டுரை - ஒரு பார்வை

சிலப்பதிகாரச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை - நாக.இளங்கோவன்
வெளியீடு - மணற்கேணி ஆய்விதழ் (மே-சூன் 2014)

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற கட்டுரையை 2001ல் படித்ததன் பின்னர், “சிலப்பதிகாரச்  சிக்கல்கள்” என்ற அவரின்  கட்டுரை, பகிர்தலில் படிக்கக் கிட்டியது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவரின் சிலப்பதிகாரக் கட்டுரையைப் படிக்கும்போது, அதில் பரந்து கிடக்கும் அவரின் சிந்தனைப் பரிமாணங்கள் என்னைப் போன்ற சிலப்பதிகார வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற அந்தக் கட்டுரைக்கு அப்போது நான் எழுதியிருந்த கருத்துகள், மறுப்புகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்களிடம் இருந்து மிகப்பண்பாடுடைய மறுமொழிகளும், ஏற்பும் அஞ்சலில் வந்தன. அவரின் அந்தப் பண்பாடும், சிலப்பதிகாரத்தைப் போற்றுகின்ற சிந்தனையும், பகிர்வில் வந்த இந்தக் கட்டுரையின்பால் கருத்துரை எழுத ஆர்வத்தைத் தூண்டின.

இக்கட்டுரை வெளிப்படுத்தும் உரத்த சிந்தனைகள் அகலத்திலும் ஆழத்திலும் எண்ணிக்கையிலும் மிகுந்துள்ளன என்பேன். இச்சிந்தனைகளில் சிலபலவற்றைத் தமிழகச் சிலப்பதிகார ஆய்வு உலகம் சிந்தித்தும் வருகையில், ஆசிரியர் இ.பா அவர்களும் மிகச் செழுமையான வினாக்களாக அவற்றை எழுப்புவது வரவேற்புக்குள்ளாகிறது.

“சிலப்பதிகாரம் சமற்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று” என்ற ஆசிரியரின் அழுத்தமான சிந்தனை, 2012ல் தமிழ்த் தொல்லியற்றுறையின் மேனாள் இயக்குநர் திரு.நாகசாமி, “வடமொழியின் பஞ்சதந்திரக் கதைகளை மூலமாகக் கொண்டது சிலப்பதிகாரம்” என்று கூறியதை அடிப்படையிலேயே மறுக்கிறது. ஆசிரியரைப் போன்றே, அக்கருத்தியலை ஆதாரங்களை அடுக்கி மறுத்தது, “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற முனைவர் இராம.கியின் கட்டுரை.(http://valavu.blogspot.in/2013/02/1.html).

“பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரம் பிரபலமாக இருந்திருக்கவில்லை –அதற்கு அதன் சமணச் சார்வு காரணமாக இருந்திருக்கூடும்” – என்ற இ.பாவின் கருத்து ஆழச்சிந்திக்க வைக்கிறது. 18-19 நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக்கூடிய “கோவலன் கதை” என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலில் உள்ள செய்திகள், சிலப்பதிகாரப் பெருவழக்குத் தமிழ்நாட்டில் மிக நெடுங்காலமாக இருந்திருக்க வேண்டும் என்றே கருத வைக்கிறது. (கோவலன் கதை – சுவடிப்பதிப்பு – முனைவர் சூ.நிர்மலாதேவி – உ.த.ஆ.நி பதிப்பு). கரிகாலன் கல்லணை கட்ட மாசாத்தன் நிதி அளித்தது, பாண்டிய நாட்டில் கொடுங்கோலாட்சி நடந்தது, மாதே(த)வி கோவலனைக் கொல்ல ஆற்றில் தள்ளியது, சிவச்சார்புக்காக சொக்கர்-மீனாட்சியை முன்னிலைப் படுத்தியது போன்ற செய்திகளை அதிற்காணமுடிகிறது. “தென்னவன் மகள் கண்ணகி” என்று சிலம்பு சொல்வதை, பாண்டிமாதேவியின் ஆற்றில் விடப்பட்ட மகள் கண்ணகி என்று “கோவலன் கதை” என்ற இந்த நாட்டுப்புறக் கதை சொல்கிறது. இதுபோல, கோவலன் கர்ணகி என்ற நாட்டுப்புறக் கதையும் காணத்தக்கது. இக்கதைகளின் தன்மைகளைப் பார்க்கும் போது, செவ்விலக்கியமாக இளங்கோவடிகள் தோற்றிய சிலப்பதிகாரம், கூத்துக்கலையாக, தமிழ்நாட்டின் உள்வழக்குகளில் பலவாகத் திரிந்து நெடுங்காலம் இருந்திருக்கும் வாய்ப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. (இதனை இ.பா அவர்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.)

சிலப்பதிகார ஆசிரியர் பெயர் பற்றிய கட்டுரை ஆசிரியரின் வினாக்கள் மிக அவசியமானவை. “ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்?” என்று வினவி, சிவனின் இடப்பக்கத்துறை பெண்மையோ என்று ஐயுறும் ஆசிரியரிடம் இருந்து, “வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பெருமாளையும் தாயாரையும் வைணவர்கள் வணங்குவது பற்றிய சிந்தனையையும் நான் எதிர்பார்ப்பேன். இடப்பக்கம் உள்ள இதயத்தின் குமுறலை, அனலை ஆற்றும்பொருட்டு, பொதுவாகவே வலப்பக்க/வலக்கர எழுச்சி கொண்ட தமிழர்களின் இயல்பான செயற்பாடு இடமுலையைத் திருகியது என்ற கருத்து (சிலம்பு மடல்-27 http://nayanam.blogspot.in/2000/06/27.html ) எனக்கு இருக்கும் போதிலும், வள்ளுவம் சொல்லும் உவமமான “முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று” என்பதை ஆழ்ந்து நோக்கவும் சொல்கிறது.

“பத்தினி வழிபாடு, சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்குதல்” பற்றிய ஆசிரியரின் சிந்தனை, விரிவாக விரும்பும் எனது மற்றொரு எதிர்பார்ப்பாகும். சிலப்பதிகாரத்தின் காலம் என்ன? என்ற வினா எனக்குப் பிடித்த முக்கிய வினாவாகும்.  சிலம்பின் காலம் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 2ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு, தற்போது 2ஆம் நூற்றாண்டு என பலராலும் கருதப்படுகிறது. இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், சிலம்பின் காலத்தை தமிழக, இலங்கை வரலாறுகளை மட்டும் வைத்து அதை 2ஆம் நூற்றாண்டு என்று சொல்கையில், தமிழகத்திற்கு வடக்கே சென்று, சாதவாகன்னர்(நூற்றுவர் கன்னர்) அரசியல், மகத ஆட்சி, தக்கணப்பாதை என்ற அடிப்படைகளை ஆழமாக வைத்து “கி.மு75 என்பதே சிலப்பதிகாரத்தின் காலம்” என்று சொல்லும் “சிலம்பின் காலம்” என்ற முனைவர் இராம.கியின் நூல் இன்று பலரால் கருதப்படுகிறது. “கனகவிசயர்” என்பது கனகன் விசயன் என்ற இருவரல்ல – கனகவிசயன் என்ற ஒருவரே என்று அந்நூல் நிறுவுவது கவனிக்கத்தக்கது. இதற்கு நேர் மாறாக, முனைவர் செ.கோவிந்தன் அவர்களின் “சிலம்பின்  காலம்” என்ற நூல், காலத்தை 9ஆம் நூற்றாண்டையும் கடந்து கி.பி11ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளிவிடுகிறது. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப்பேரரசு சேரநாட்டை அழித்ததால் மனம் நொந்த இளங்கோ, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேகனையும் அவன் மனைவியையும் வைத்துக் காவியத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் செ.கோ. அதோடு, செங்குட்டுவன் இளங்கோவின் தம்பி என்கிறார் செ.கோ. இதிலிருந்து சிலப்பதிகார ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் கருதுகோள்களும், ஆதாரங்களும் நுண்ணியமாக, வலுவாக இருக்கும்போது, அதன் காலம் கி.பி2ஆம் நூற்றாண்டை முந்திச் செல்வதும், வலுவற்ற கருதுகோள்களும் ஆதாரங்களும் சிலம்பின் காலத்தை மிகப் பிந்தியதாக்குவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஆசிரியர் இ.பா அவர்களின் விரிவான காலக்கணிப்பிற்கு அவர் எடுத்துக் கொள்ளும் கருதுகோள்களும் ஆதாரங்களும் தமிழக எல்லையைக் கடந்தும் செல்ல வேண்டுமே என்பதும் எனது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

பிற்சேர்க்கைகள் பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் கருதுகோள்களும் வாசகர்களையும் ஆய்வாளர்களையும் ஈர்ப்பதாக அமைகிறது. பதிகமும், வரந்தருகாதையும் பிற்சேர்க்கை என்றாலும், அவை கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து ஆய்வுக்குட்பட்டே வருகின்றன. இளங்கோவடிகள் எப்படிச் சமணராகக் கருதப்படுகிறார் என்ற வியப்பு எனக்கு உண்டு. மிக அவசர அவசரமாக அவருக்கு மொட்டை போட்டு சிலையாகவும் மெரீனா கடற்கரையில் வைத்துவிட்டார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. 

குணவாயிற்கோட்டம் என்பது சமணக் கோயில்; அங்கு இளங்கோஅரசு துறந்தார் என்ற உரைக்காரர்களின் கருத்தே நிலைத்துவிட்டது போல. குடநாட்டுக்குக் கிழக்குக் கோட்டையாக, அரணாக, வாயிலாக இருந்ததுதான் குணவாயிற்கோட்டம். சேரத்தின் மையநாடான குடநாட்டுக்குத் தெற்கெல்லையாக கோட்டயமும், கிழக்கெல்லயாக குணவாய்க்கோட்டமும், வடக்கெல்லையாக கோட்டக்கல்லும், மேற்கெல்லையாக கடற்கரையும் இருந்திருக்கின்றன; கோட்டம்=கோட்டை/அரண் என்ற பொருளில் அரணவாயிலாக  இருந்திருக்கின்றன என்பது எனது கருத்து. குணவாயிற் கோட்டத்தை குணவாயிற்கோயிலாகக் கொண்டால், கோட்டக்கல்லை கோயிற்கல்லாகவும், கோட்டயத்தைக் கோயிலையம் என்றும் கொள்வார்களா? ஆகவே, இளங்கோ சமணத்திற்கு வலிந்து தள்ளப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. 

ஆசிரியர் இ.பா அவர்களும் இளங்கோ சமணர்தானா என்று ஐயுறுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கோட்டம், இளங்கோவின் சமணம், பிற்சேர்க்கைகள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னப்படுவது இந்தக் கோட்டம்=கோயில் என்ற கருதுகோளினாற்றான். அதொடு, அரசு துறப்பு என்பது, அரசைத் துறந்து துறவியானார் என்று ஏன் கொள்ளப்படவேண்டும்? இமயவரம்பனின் மகனான இளங்கோ, கிழக்கு வாசலின் மாதண்டநாயகனாக இருந்திருக்கிறான். பின்னர் அண்ணன் பட்டத்துக்கு வர அப்பணியை அண்ணணிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று கருத இடம் இருக்கிறது என்று நான் சொல்வேன்.

இன்னும் நிறைய கருத்துகளை, வினாக்களை உரக்கவே எழுப்புகிறார் ஆசிரியர். அவை மேலும் வாசகர்களுக்குத் தூண்டலாக அமைவது சிறப்பு. மேலும் எழுதினால் நீளும் என்பதால்,  ஒரு கருத்தோடு இக்கருத்துரையை நிறைவு செய்கிறேன். மதுரைக்காண்டம் முடிந்தவுடன் காவியத்தின் தன்மை, உணர்வு நெறி வெகுவாக மாறுவதை வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகிறது என்ற ஆசிரியரின் கருத்தோடு ஐயத்தோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. ஆசிரியர் கூறுவது போல, சிலம்பு நாடகம் மதுரையோடு முடிகிறதோ என்ற ஐயம் தோன்றினாலும், சேர அரசியலை, நாட்டை முன்னிலைப்படுத்தும் முகமாக வஞ்சிக்காண்டம் காவியத்தில் முதலில் தோன்றி அதற்குப் பின்புலமாக புகாரும், மதுரையும் வைக்கப்பட்டதோ(as flash back) என்ற சிந்தனை எனக்குண்டு. ஆசிரியர் இக்கட்டுரையில் எழுப்பியிருக்கும் வினாக்களை ஐயங்களை விரிவாக விளக்குமுகமாக நூல் இயற்றினால் அந்நூலில் அதிக ஆவலோடு நான் எதிர்பார்க்கும் கருத்து இதுவாகவே இருக்கும். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கருத்துகள், ஆய்வுகள் நூலாக மலர வாழ்த்துகள்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

Sunday, May 25, 2014

திருவாசகம் - கோகழி பற்றிய உரையாடல்

இது தமிழ்மன்றம் மடற்குழுவில், திரு.நூ.த.லோகசுந்தரம் அவர்கள் "கோகழி" என்பது கருநாடகத்தின் ஊர் என்று கருத்துச் சொன்னபோது எழுந்த உரையாடல். இதேப் போல வேறு சிலரும் சொல்கிறார்கள் என்பதாலும், இந்த உரையாட்டு மேலும் தொடரும் என்பதாலும், இங்கே இதைப் பதிவு செய்து வைக்கிறேன்,
====================================================================
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,
வணக்கம்.
தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.

1)    “கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )
 2)    தாங்கள் மேற்காட்டிய http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search
இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன்.
3)     ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது?திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!
ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத   ஊரை  சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றதுஎன்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

4)   முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.
(பார்க்க :- http://valavu.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D   )
 பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும். 

திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.] 

கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.


5)    திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும் திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.
திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.
            கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),
            கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)
            கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)
            கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை) 
            கோகழிக்கரசை (பண்டாய நான்மறை) 
இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின் திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின் திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன.  இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.
ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.  
6)    தங்களின் கூற்று:
குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ  புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில் 
குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”

எனது கருத்து:
 எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?

ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும்  இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.

7)    தங்கள் கூற்று:
"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை  " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “

எனது கருத்து:
இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”

இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)
 “சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும்.  (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)
குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.
பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே. 
குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.

8)    தங்கள் கூற்று:
"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர் 
எனது கருத்து:
தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:

61....புவனியிற்  சேவடி  தீண்டினன்  காண்க             
62....சிவனென  யானுந்  தேறினன்  காண்க             
63....அவனெனை  ஆட்கொண்  டருளினன்  காண்க             
64....குவளைக்  கண்ணி  கூறன்  காண்க             
65....அவளுந்  தானும்  உடனே  காண்க             
66....பரமா  னந்தப்  பழங்கட  லதுவே             
67....கருமா  முகிலின்  தோன்றித்               
68....திருவார்  பெருந்துறை  வரையி  லேறித்              
69....திருத்தகு  மின்னொளி  திசைதிசை  விரிய             
70....ஐம்புலப்  பந்தனை  வாளர  விரிய             
71....வெந்துயர்க்  கோடை  மாத்தலை  கரப்ப             
72....நீடெழில்  தோன்றி  வாலொளி  மிளிர       

இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள்.  இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.
மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.
இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார்.  “கருமா முகிலின் தோன்றி  - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.
 வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,
நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.
ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.

9)    தங்கள் கூற்று:
மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி
     எனது கருத்து:

            மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?


ஐயா, அடியேனுக்குத் தோன்றிய மேற்கண்ட விளக்கங்களை அளித்துள்ளேன். ஓர்ந்து பார்க்க.
திருவாசகத்தை ஆய்பவர்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று, உள்ளார்ந்து உண்மையைத் தேடுநர். இரண்டு - உங்களுக்கே தெரியும்.
இரண்டாவது வகையரின் குழப்படிகள் சிக்கல்களிலேயே போய்முடியும். முதல் வகையரின் தேடல் மெல்லச் சென்றாலும் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும். தாங்கள் அறியாததல்ல. தங்களின் அன்பான மடலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மடல்-2:

அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

1)   கல்வெட்டைப் பார்த்ததில்லை.
     அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
     அதன் ஆங்கிலக் குறிபெயர்ப்பையும் பார்த்ததில்லை.
     எனது ழகர வினாவுக்கும் விடை இல்லை.

    ஆனால் அந்த ஊர்தான் கோகழி என்று தீர்ப்பை மட்டும் எழுதிவிடுகிறீர்கள். 

    இது எந்த விதத்தில் ஏற்கத் தக்கது? நான் ஏற்கமாட்டேன்.
    

2)  தங்கள் கூற்று: 
   //எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள் 
வாய் வழி ழங்கும் மொழி //

    எனது மறுமொழி:
    இது என் வினாக்களுக்குத் தொடர்பில்லாத செய்தி.

  
3) தங்கள் கூற்று:
 // கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது 
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும்  ழகரம் உண்டு
//

எனது மறுமொழி:
கன்னடத்தில் ஒரு காலம் வரை ழகர, றகரங்கள் இருந்து பின்னர் மறைந்தன. தெலுங்கில் நானறிந்தவரை ழகரம் இல்லை.
கடம்ப எழுத்துகள், அல்லே-கன்னடம், தற்காலக் கன்னடம், அல்லே-கன்னடத்தில் இராட்டிர கூடர்களின் தாக்கங்கள்,
பழங்கன்னடமான அல்லே-கன்னடம் ஏன் கன்னட-தெலுங்கு வரிவடிவமாகச் சொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஆயாமல்
வெறுமே கோகலி/ளி யை அங்கே சுட்டிக் கொண்டிருப்பதில் எந்த ஆய்வும் இருக்கமுடியாது.
4) தங்கள் கூற்று:

// கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார் //

  எனது மறுமொழி:

ஐயா, இங்கே இரண்டு செய்திகளை நான் கூறவேண்டும்.
ஒன்று - பெல்லாரிக் கோகலியைத் தாங்கள் மறுக்கவொண்ணாத ஆதாரங்களுடன் நிறுவினாற்றான் இவ் அடி பற்றி மேலும் பேச முடியும்.
அதுவரை இதைப் பேசிப்பயனில்லை.
இரண்டு - கோகலி நாட்டை ஆட்சி செய்த ஒருவரைக் குருவாகக் கொண்டவரை மாணிக்கவாசகர் குறிக்கிறார்
என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு ஐயா.
மாணிக்கவாசகரின் குரு, ஆட்சி செய்த மனிதனல்ல.
"அரு பரத்தொருவன் அவனியில் வந்து
 குரு பரனாகி அருளிய பெருமை...."   
என்று போற்றித் திருவகவலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவதைக் காண்க.
"நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன்!
 தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவபெருமான்
 தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்...."
 என்று வேசறவில் அறிவிப்பதைக் காணக.
  "அன்பராகி மற்று அருந்தவம் முயல்வார்,
  அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகாம்,
  என்பராய் நினைவார்,
     எனைப் பலர் நிற்க, "இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்?"  "
  என்று உருகி உருகி இந்தக் கேள்வியைக் கேட்பார் செத்திலாப்பத்தில். இன்னும் இது போலப் பல இடங்கள் உண்டு.
குரு, சீட உறவையும், தன்மையையும் ஆழச் சொல்லித்தருவது திருவாசகமும் தேவாரமும்.
என்னால் இப்படியான நேரடி அறிவிப்புகள் அல்லாத பல நுண்மையான குரு-சீடர் பண்புகளையும்
திருமுறைகளில் எடுத்துக் காட்ட முடியும்.
ஆகவே, மாணிக்கவாசகரைப் பற்றியும் அவரின் குரு பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல்
திருவாசக ஆய்வுகளில் புகுவார்க்கு எண்ணியது கிடைக்காது என்பதை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும்.
அருள்கூர்ந்து இப்பொருளையேனும் தாங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
5) தங்கள் கூற்று:

//

தூரம் பார்க்கவேண்டாம் என்றால் உலகம் முழும் பார்க்க எனக் கொள்வது ஏற்புடையதல்ல 
madras என்று அமெரிக்காவில் 6 இடங்கள் உள்ளன அவற்றை நாம் எப்போதாவது நாம் பேசும் madras  கொள்வோமா ? 

மேலும் அவையெல்லாம் பழங்கால( எட்டாம் நூற்றாண்டு)  ஊர்கள்  என சொல்ல நினைகின்றீர் களா?
//

எனது மறுமொழி:
 ஏன் என்பதுதான் எனது கேள்வி. மதிரையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கோகலிக்கு எந்த ஓர் ஏரணமும்
இன்றிச் செல்கையில், இன்னும் கொஞ்ச தூரம் போய் மாராட்டியத்தில் ஆயலாமே?

மாராட்டியத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. கருநாடகத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. மாராட்டியத்தில் இருந்து
வந்த இராட்டிரகூடர்கள்தான் கருநாடக-பெல்லாரியை ஆண்டார்கள் என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரச் சுட்டிகளே
சொல்கின்றன?
நான் ஏன் "இந்த இரண்டு கோகலிக்கும் தொடர்புண்டு என்று கருதக் கூடாது?" - அப்படியென்றால், கருநாடகக் கோகலியை 
பரிந்துரைப்பவர்கள் இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை என்று சொல்ல வேண்டுமல்லவா? அதுபோல மற்ற கோகலிகளுக்கும்
தொடர்பில்லை என்றும் அவற்றின் காலக்கட்டம் என்ன என்றும் அவர்கள்தான் சொல்லி நிறுவவேண்டுமே அன்று அடியேனின்
வேலை இல்லை. வெறும் ஒன்னரைப் பக்கத்தில், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று யாரும் ஆராய்ச்சி செய்து
சொல்லி விடவில்லை. அதனால் இந்தக் கருத்தைப் பரப்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டியது இது.
6) தங்கள் கருத்து:

//

மன்ன னின்  அமைச்சர் குதிரை வாங்க அனுப்ப ப பட்டார் பின்வரும் கோயில் கட்டினார் குதிரை நரியகியது 
 என்பதெல்லாம் கற்பனையில் விளைந்த புராணக்கதை அய்யா எங்காவது அவர் அமைச்சர் என திரு  வாசகத்தில் உள்சான்று உள்ளதா? 
நரி பரியாகியது  அப்பர் கூட ப்பா டுகிர்ரர் ஏனோ அவரை இனத்து புராணம் ஏதும் பாடப்படவில்லை 
வி வேக முள்ள ஆய்வாளர்   வெறும் கட்டுக்கதைகலான  புராணங்களில் நம் புவதில்லை
//
 எனது மறுமொழி:
  புராணம் என்றால் என்ன?
  புராண, நய/நயா என்பர் வடக்கே. உருதிலும், இந்தியிலும் இந்தச் சொல்லாட்சியை நிறைய கேட்டிருக்கிறேன்.
  புராண என்றால் பழையது. நயா என்றால் புதியது.
  புராணக்கதை என்றால் பழங்கதை. புராணம் என்றால் பழமை. இவ்வளவுதானே!
  மாணிக்கவாசகரே "புராண காரண!" என்பார்.
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால் - பழமை எல்லாமே கட்டுக்கதைகள் என்று கருதுகிறீர்களா?
  பழையன எலலாம் கட்டுக்கதை என்றால், வரலாறு, தொன்மம் என்ற ஒன்றையுமே ஆராய்ச்சி செய்யத் தேவையில்லையே?
  கோகழி எங்கிருக்கிறது என்று கூட நோக்க வேண்டியதில்லையே?
  பழைமை எல்லாம் கட்டுக்கதை என்றால் விவேக-ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் "புதுமைகள்" மட்டும் கட்டாத கதைகளா?
  என்ன ஐயா - ஞாயமே இல்லாமற் சொன்னால் எப்படி :-)
  
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால், இராமாயணம், மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகளா?
  ஏன் சிலப்பதிகாரத்தில் எத்தனையோ புராணக் கதைகள் உண்டு. அவற்றையெல்லாம் விட்டெறிந்து விடலாமா?
  மன்னிக்க - தங்களின் இந்த வாதம் ஏற்புடையது அல்ல.
  சிலப்பதிகாரத்தில் "வியன்நிலம்  ஆண்ட  ஒருதனிச்  செங்கோல்  ஒருமகன்  ஆணையின்..." 
  என்று இளங்கோவடிகள் சொல்வார். வியன்நிலம் என்பதற்கு ஒலிப்பின் அடிப்படையில்,
  வியன்னா என்றும் வரும்.

  வியன்னாவை ஆண்ட சிறந்த அரசன் ஒருவனை இளங்கோவடிகள் இங்கே குறிப்பிடுகிறார் என்று சொன்னால்
  எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கருநாடக-கோகலி ஆய்வு.
7)   தங்கள் கூற்று:
//

இங்கும் பெருந்துறை மையமாகக் கொண்ட புரானக்கதையிளிருந்து தானே பேசுகிறீர் 
நா ன்  முன்பு ஓர் மடலில் காட்டிய வரி இப்போது நினைவிற்கு வருகின்றது 
பாண்டியன் தனக்கு பரிமா விற்று 
ஈண்டுகனகம்  இசையப்பெராது 39கீ ர்த்தித் திருவகவல் 
பாண்டியனுக்கு  பரிமா விற்றார் வாங்கப்போகவில்லை 
//
    எனது மறுமொழி:
 இங்கே திருவாசகம் பற்றிய மிகத்தவறான புரிதலை தங்கள் எழுத்துகள் காட்டுகின்றன.
 மன்னன் ஆணையால் குதிரை வாங்கப் பெருந்துறை சென்றவர் மாணிக்கவாசகர். 
 மாணிக்கவாசகர் குதிரைகளை வாங்காமல் பணத்தையெல்லாம் கோயில் கட்டவும், சிவமயக்கத்திலும்
 கழித்துவிட, மதிரைக்கு அழைக்கப்பட்டு அரசனால் தண்டனைக்குள்ளாகிறார். அப்போது,
 மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டு, குதிரை வாணிகன் வேடமணிந்து, சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி
 அந்தப் பரிகளை மன்னனிடம் கொண்டுசென்று அணிவகுத்து நிற்க வைக்கிறார்.
 ஆகவே,
 பாண்டியனுக்காக பரிமா வாங்கப்போனவர் மாணிக்கவாசகர். அவர் வாங்கவில்லையதனால்
 பாண்டியனிடம் பரிமா விற்றவர் சிவபெருமான்.
 இதுதான் திருவாசகம் முழுதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 மேலும், "ஈண்டு கனகம் இசையப் பெறாது" என்றது, 
சாத்தாய் வந்த சிவனிடம் குதிரைகளைப் பெற்றுக் கொண்ட பாண்டியன்,
குதிரைகளுக்கான பணத்தைச் சிவனிடம் கொடுக்க (சிலர் அதிகப்படியான குதிரைகளுக்கு என்று சொல்வர்)
 சிவன் அதை வாங்க மறுத்து விடுகிறார். இதைத்தான் அவ்வரி சொல்கிறது.
  எப்படி வாங்குவார்?. இவர் நரிகளைத்தானே பரிகளாக்கி நாடகம் நடத்தினார் :-)
  அதுதானே அந்தத் திருவிளையாடல்? மறுநாள் எல்லாப் பரிகளும் நரியாகி ஊளையிட வைக்க இருந்தவர் பணம் வாங்குவாரா?
  அப்புறம் மதிரை மக்களுக்கெல்லாம் அடி வாங்கிக் கொடுத்தத் திருவிளையாடலுக்கும் இதுதானே அடிப்படை! 

  8) தங்கள் கூற்று:

    //   ஏறி எனும் சொல் இருக்கும் போது எப்படி எல்லையாகும்  //
   //   குடநாடு என்றால் குடகு (கர்நாடகம்) அல்ல என்கிறீர்களே மிசை என்பது உயரத்தில் உள்ள இடத்தை அல்லவே குறிக்கும்  //
  எனது மறுமொழி:

   என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஐயா,
   குட என்பதைப் பற்றி நான் விளக்கி விட்டேன். அதற்கு மேல் சொல்ல வேறொன்றுமில்லை.
   கழி, மிசை, வரை, ஏறி போன்ற சொற்கள் தங்களை வாட்டுகின்றன. கழி என்ற சொல்லை சங்க இலக்கியங்களில்
   இருங்கழி, பெருங்கழி, கொடுங்கழி, வாங்குகழி போன்ற எத்தனையோ சொல்லாட்சிகளில் "துறை" என்ற பொருளில் காணலாம்.
   அதை விரித்தல் தேவையில்லை என்றே விடுக்கிறேன்.
   வரை என்பதற்கு "இடம்" என்ற பொருளுமுண்டு. வரை என்றால் மலை என்று கருதவேண்டாம்.
   இன்னுஞ் சொல்லப்போனால் - நீங்கள் சொன்ன பொருள்களில் "மூங்கில்" என்ற பொருளைக் குறித்தீர்கள்.
   இறைவன் பெருந்துறையில் உள்ள ஒரு மூங்கிலில் ஏறி நின்று மின்னொளி காட்டினான் என்று கூடப் பொருள் கொள்ளலாமே!
   வரை என்றால் மலைதான் என்ற நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிச் சிந்தித்தால் நான் சொல்லவருவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
   இங்கே ஏறுதல் என்பது எழுதல், எழுந்தருளுதல் என்பதாகும். பத்தி இலக்கியம், மாந்தக் காதல் இலக்கியம், புற இலக்கியம் போன்ற 
   ஒவ்வொன்றிலும் பொருளின் தன்மைகளில் மாற்றம் உண்டு என்பதை நீங்கள் அறியதாவரல்ல.
   ஒருத்தன் மேல் வேலன் வந்து ஏற, வேலனாட்டம் ஆடினார் என்றால், அந்த ஆள் மேல் முருகன் ஏறியா நிற்கிறான்.
   ஏறி விளையாடு என்ற வழக்கில் பேசுகிறோமே - அங்கெல்லாம் உயரம் வருவதில்லை என்பதையும் காணவேண்டும்.

   "குடநாடதன் மிசை" என்பதை குடகு மலைக்கு மேலே என்று நீங்கள் படிக்கிறீர்கள்.
   அது அல்ல என்பதும் குட என்பதும் திசையைக் குறித்தது என்பதும், மிசை என்பது "அந்த இடத்தில்"
   என்றும் பொருளாகும்  என்பது என் கருத்து. நிலத்தில் நடக்கிறோம். நிலமிசை நடக்கிறோம் என்று சொல்வதன்
   தன்மையே அங்குப் பொருந்தும்.   "சிந்துநதியின்மிசை நிலவினிலே"  என்ற பாரதியாரின் சொற்களையும் காண்க.
   
    
   9)

 //
கொங்கு நட்டு பெருந்துறை குடாநாட்டிலிருந்து வரும் குதிரைகளின் இறக்குமதியாகும் வழியில் உள்ள ஓர் ஊர் எனல்லம் 
//
கோகழி - கருநாடக நாடு, பெருந்துறை-கொங்கு நாடு என்ற நிலையில் இருந்து நீங்கள் மாறமாட்டீர்கள். தமிழ்நாட்டில்
ஆராய்ச்சியாளர்கள் பெருகி, நல்ல ஆராய்ச்சி மன்றங்கள் உருவாகி நமக்கு நல்வழி காட்டுதல் வேண்டும்.

//

கட ல் வழி  வந்த குதிரை என எங்காவது உள்ளதா
கிடைத்தால் உள்நாட்டுக் குதிரைகளை வங்கக் கூடாதா? 
//
ம்ம்ம்ம்... நான் போய், கோச்சடையான் படம் பார்க்கப் போகிறேன். அதில் கூட குதிரைகள் அரேபியா/பெர்சியா பகுதியில் இருந்து
பெருவாரியாகக் கப்பலில் இறக்குமதியானதை ஒத்துக்கிட்டாங்களாம் :-))

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
========================================================================