Pages

Sunday, March 30, 2008

சிலம்பு மடல் 38

முக்கிய நகர்வுகள்:

சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் எரியுண்டதைத் தொடர்ந்து
நிகழ்ந்த சில நகர்வுகள் மிக முக்கியமானவை.
கண்ணகி பாண்டிய மன்னனை வெல்கிறாள்.
பாண்டியனும் அவன் தேவியும் வரலாற்றிலும்பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கிற மரணத்தை எய்துகிறார்கள். அதைக் கண்டபோதும் கூடகண்ணகிக்கு ஆற்றாமை தாழவில்லை. அதற்குக்காரணம் பாண்டிய அரசன் மற்றும் அரசியின்உயிர் அவளுடைய குறிக்கோள் அல்ல. தன்னுடையஉற்ற துணையின் உயிர் பிரிந்ததை அவளால்தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


கோவலன் கொலை செய்யப்பட்டதை ஒரு மாலையில்
(வியாழன் மாலை என்று சொல்லலாம்) அறிகிறாள்.
இரவில் அவன் கொலையுண்டு கிடந்ததைக் கண்டு
துடிக்கிறாள். மறுநாள் பகலில் பாண்டியனிடம்
முறையிடுகிறாள். அரசனும் அரசியும் அந்தப் பகற்போதில்
மாள்கின்றனர். அதன் பின்னரும் துயரம் தாளாமல்
மதுரையை மும்முறை வலம் வருகிறாள்.
இரவில் மதுரை தீக்கிரையாகிறது, அந்தப் பகற்போதிற்கும்
தீக்கிரையான யாமத்திற்கும் இடையேமதுரையைச்
சுற்றி மும்முறை வலம் செய்தது நடந்திருக்கக்
கூடியதே. மதுரை நகரின் இன்றையப் பரப்பு அன்றையப்
பரப்பை விட மிக அதிகமானதாகவே இருக்க முடியும்.
மதுரை எரிந்து கொண்டிருக்கும் போது நடந்த முக்கியமான
விதயங்களில் மூன்றுவிதயங்கள் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியவை.அதில் ஒன்று, மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் பேசியது. கண்ணகியிடம் சில விதயங்களைச் சொல்லி,
அவளை ஆற்றி, மதுரைத் தீயையும் அவிக்கிறது மதுராபதி அம்மன்.

"....அலமந்து
ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறை என......

.....மாபெருங் கூடல் மதுரா பதி என்பேன்;"

மற்றொன்று, பதிகத்தில் சொல்லியபடி,
சாத்தனார்அந்தக் காட்சியைக் கண்டது. மூன்றாவது விதயத்தைப்
பின்னர்க் காணலாம்.

"....மதுரை மூதூர்க்கொன்றையஞ்சடைமுடி மன்றப்பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி...."

...சிலம்பு:பதிகம்:39-43

கண்ணகியை மதுரை அம்மன் ஆற்றிய பின்னர், தீ
கோவலனின் உடலையும் உலகில் இருந்து நீக்கியிருக்கும்
என்று எண்ணியிருக்க வேண்டும். வளையல்களை
உடைத்து விட்டு, கால் போன போக்கில் மேற்திசையில்
இரண்டு வாரங்களாக நடக்கிறாள். செங்குன்றத்தில்
தெய்வமாகிறாள்.

மதுரையில் இருந்து குணக்கோட்டம் 120 கி.மீட்டர்
தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை வாடி வருந்தி,
இழந்த கணவனின் நினைவிலேயே நலிவுற்றிருந்த
நிலையில் கடக்கிறாள். மலை, புதர், பள்ளம் என்றெல்லாம்
அவள் பார்த்து நடக்கவில்லை. அதற்கு 14 நாள்கள்
ஆகியது இயல்பாகவேத் தெரிகிறது. இஃது ஒரு நகர்வு.


ஏறத்தாழ திருச்சிக்குத் தெற்கே கிடந்த தமிழகத்தை
ஆண்ட பாண்டிய அரசன் அரசியோடு இறந்து
போகிறான். இந்தச் செய்தி காற்றினும் விரைந்துபல
திசைகளையும் சென்று சேர்ந்திருக்கும் என்பது
எளிதில் நம்பக்கூடிய ஒன்று. முக்கியமாக
அந்தச்செய்தி எங்கெல்லாம் போயிருக்கும்?

நீர்ப்படைக்காதையிலும் நடுகற்காதையிலும் வெற்றிவேற்
செழியன் பற்றிய செய்தி வருகிறது. அவன் பாண்டியன்
நெடுஞ்செழியனின் வாரிசு என்றும், கொற்கையில் இருந்து
தென்பாண்டி நாட்டைக் காத்தவன் என்றும் வரலாற்று
ஆசிரியர் சொல்கின்றனர். நீர்ப்படைக் காதையில் சில
செய்திகள் முரணாக இருப்பினும், இருக்கும் செய்திகளில்
பாண்டியன் நெடுஞ்செழியன் மாள்விற்குப் பின்னர்
மதுரையை ஆட்சி செய்தவன் இவன் என்று அறிஞர்கள்
கருதுகிறார்கள்.

உரைபெறு கட்டுரையில் வெற்றிவேற்செழியன்
பற்றிசெய்தி இருந்தாலும், உரைபெறு கட்டுரை ஒரு செருகல்என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். அஃது ஒரு பதிப்புரையாக
இருந்திருக்கக் கூடும்.

கண்ணகி மதுரையை விட்டு நீங்கிச் செங்குன்றில்
தெய்வமாகியவரைக்குமான 14 நாள்களுக்குள், பாண்டியன்
மாள்வு பற்றிய செய்தி கொற்கைக்கும், வஞ்சிக்கும்,
தஞ்சைக்கும் சென்று சேர்ந்து இருக்கும். மதுரையில்
இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் இருக்கும்
கொற்கைக்குச் செய்தி ஒரு நாளில் சென்று சேர்ந்து,
அடுத்த ஓரிரு நாள்களில் வெற்றிவேல் செழியன்
மதுரைக்கு வந்திருக்க வேண்டும். அஃது ஒரு நகர்வு.

இந்த நகர்வு ஏன் முக்கியம் பெறுகிறதென்றால், செழியன்
மதுரை நோக்கி நகரவில்லை என்றால், மற்ற அரசர்கள்
அல்லது குறுநில மன்னர்கள் நகர்ந்திருப்பார்கள்!

மதுரையில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சைக்கும், சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளவஞ்சிக்கும் செய்தி போய், சோழனும் சேரனும்தலையிடுவதற்கு முன்னரே கொற்கையில் இருந்துசெழியன் மதுரைக்குச் சென்று விட்டிருக்க வேண்டும்.

சிலப்பதிகார காலம் சேரர்கள் வலுவோடு இருந்த காலம்.
காப்பியத்தின் பிற்பகுதியில் நடுகற்காதையில் பாண்டியனும்
சோழனும் செங்குட்டுவன் சீற்றமுறு வகை
நகையடிக்கின்றனர். சேர வல்லரசின் வல்லாண்மைக்கு
அஞ்சி அவர்கள் அடங்கியிருந்ததைக் காட்டும் அதே
வேளையில், அந்த அடக்கம் அதனால் மட்டும்தான்என்பதை உணர்த்துவதாகவே அஃது இருக்கிறது.

"வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று' என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை..."

"தவப் பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது' என்றனன் போர் வேல் செழியன்' என்று..."

.....சிலம்பு:நடுகற்காதை:91-95, 104-107

(சோழனும் பாண்டியனும் சொன்ன மேற்கண்ட செய்திகள்,
கங்கைப் பகுதியில் மறம் செய்தவர்கள் தவ வேயம் இட்டிருந்ததாகச்சொல்கின்றன. இன்றைய நாள்களிலும் கங்கைப் பகுதிஅரசியலில் இருந்து நாக்கை அறு, கழுத்தை வெட்டு என்று மறம் பேசுபவர்கள் தவ வேயம் பூண்டிருப்பதுக்கவனிக்கத்தக்கது!)

ஆக, மூவேந்தர்களும் ஒருவர் அயர்விற்கு மற்றவர்
காத்தே இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில்,
கண்ணகியின் மதுரையில் இருந்து
குணக்கோட்டத்தில் உள்ள செங்குன்றத்திற்கான நகர்வு,
அதன்பின்னர் செழியனின் கொற்கையில் இருந்து
மதுரைக்கான நகர்வு என்ற இரண்டையும் அடுத்த
மிக முக்கிய மூன்றாவது நகர்வு சேரன் செங்குட்டுவன்
வஞ்சியில் இருந்து குணக்கோட்டத்திற்கு நகர்ந்தது.

"மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு
ஈண்டிவஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்....."

....சிலம்பு:காட்சிக்காதை:1-9

வஞ்சி அரண்மனையிலே பட்டத்தரசி வேண்மாளுடனும்,
அவன் இளவலுடனும் இருக்கும் பொழுது, மலை காணச்
செல்வோம் என்கிறான் செங்குட்டுவன்.

"மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்..." என்று
(மஞ்சு = மேகம்) அரசன் சொல்ல அப்பொழுது என்ன தேவை?

"மலை காண்குவம்..." என்று சேரன் சொன்னது
எப்படிச் சில ஆசிரியர்களால் மலை வளம் காணப்புறப்பட்டான்
என்று சொல்லப்பட்டது?

மலை காண்குவம் என்பதும் மலை வளம் காண்குவம்
என்பதும் வேறுபடுத்திக் காட்ட முடிந்தவை.

மதுரை எரிந்த காலம் வேனிற்காலம். வெயில் தாங்காமல்
தற்போது உதகை, கோடை போன்ற இடத்திற்குச் செல்வது போல,
ஓய்வு எடுக்கச் சேரன் கிளம்பினானா?
அப்படி என்றால் அதுஒத்து வரக் கூடியதே.

ஆனால், அது ஆடிமாதம். ஆடிமாதம்; முதுவேனிற்காலம்.
சித்திரை வைகாசி இளவேனில்; ஆனி ஆடி முதுவேனில்.
வெயில் காய்ந்து ஓயும் வேளையில் இவன் தேக்கடிப் பக்கம் போய் ஓய்வெடுக்கச் சென்றான் என்பது நம்பத்தக்கது இல்லை.
மலைஇன்பம் வேண்டுமெனில் அவன் அதற்குச் சென்றிருக்க வேண்டிய காலம் சித்திரை வைகாசி. சேரன் வஞ்சியில் இருந்து புறப்பட்டுக் குணக் கோட்டம்வந்து அமைவது வரையிலான காப்பிய வருணனைகள் மயக்கம் தருபவை.

"விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம் பூங்காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்கு நீர்த்துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை
நாகந் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப"

....சிலம்பு:காட்சிக்காதை:11-23

இந்திரன் தான் மகிழ்வுற்று இருக்க 140 யோசனைகள்
பரப்பிற்கு பல வசதிகள் கொண்ட அரங்கம் அமைத்து
இயற்கையோடு தங்கியது போல செங்குட்டுவன் வந்து
இருந்தான் என்று சொல்லிப் படிப்போரை மயக்கி
விடுகிறார் அடிகளார். இந்த மயக்கத்திலே நாமும்
செங்குட்டுவன் வந்தது மலைவளம் கண்டு, குணக்கோட்ட
மக்களுக்குக் காட்சி அருளிச் செல்லவே என்று
எண்ணுகிறோம்.

ஆனால், ஒரு பேரரசன், தனது பக்கத்து நாட்டு அரசன்
தனது அரசியோடு, வியத்தகு மரணம் அடைந்து, அவனது
தலைநகரமும் தீக்கிரையாகிப் போய்க் கிடக்கையில்,
மலைவளம் கண்டு சுவைக்கவந்திருப்பானா?

மதுரையில் இருந்து வஞ்சி 260-270 கி.மீ தொலைவு.
அன்றையப் பகலில் பாண்டியன் மறைந்ததும்,
உளவுச் செய்தி காற்றெனப் பரிமிசை அதிக பக்கம்
இரண்டு நாள்களில் சேரனைச் சென்றடைந்திருக்கும்.

அன்றைய யாமத்தில் மதுரைத் தீக்கிரையாகி
அலமந்தசெய்தி அதற்கு அடுத்த நாளிற்குள்
சேரனுக்குச் சென்று சேர்ந்திருக்கும்.

இப்படி இருக்க ஒன்றுமேதெரியாதப் பச்சைக் குழந்தையாய்ச் சேரன் கிழக்குவாசலுக்கு மகிழ்வுலா வருவானா?

அத்தோடு, வஞ்சிக்குச் செய்தி கொண்டு போன
உளவாளிகளுக்குக் கண்ணகியின் வஞ்சினமும் கதையும்
அவள் உயர்வும் தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆகையால்
வஞ்சியில் இருந்து புறப்படு முன்னர்,
கண்ணகியைப் பற்றிக் குட்டுவனுக்கு எதுவுமே தெரியாது.

ஆனால், அவன் புறப்படும் முன் மதுரையில் அரசன்இறந்ததும் தீக்கிரையானதும் தெரியும். கண்ணகி தெய்வமான பின்னரே சேரன் குணக்கோட்டம் வந்திருக்கிறான் என்பது அங்கே மக்கள் அவனிடம் இந்தச்
செய்தியைச் சொல்வதை சிலம்பே சொல்கிறது.

கண்ணகியின் மறைவு மதுரை அழிவிற்குப் பதினான்கு
நாள்கள் கழித்தே. இந்தப் பதினான்கு நாள்களுக்குள்
சேரன் விதயம் அறிந்து, வஞ்சியில் இருந்து 150/160 கி,மீ
தொலைவில் இருக்கிறக் கிழக்கு வாசலுக்குப்
புறப்பட்டிருப்பான் என்பது எளிதில் நம்பக்கூடியதே.

மதுரை நேய அரசாகத்தான் இருந்திருக்கிறது.
அதனால்மாற்றார் யாரும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விடக்
கூடாது என்று கருதி வந்திருக்கலாம்!

இயல்பாகவே பக்கத்து நாட்டில் சரவல் இருக்கும் போது
அரணக் காவலை மேம்படுத்த வேண்டி வந்திருக்கலாம்!

வாய்ப்பிருந்தால், மதுரையை தனது நேரடி ஆட்சிக்குக்கொண்டு வந்துவிடலாம் என்று வந்திருக்கலாம்!

அல்லது பாண்டியர்களுக்கு உதவ வந்திருக்கலாம்!
செங்குட்டுவனின் சீற்றமிகு மறத்தினை அவனது பல்வேறு
போர்களில் சிலம்பும் பதிற்றுப் பத்தும் காட்டும்
பாடல்களில் இருந்து பார்க்கும் போது, செங்குட்டுவனின்
குணக்கோட்ட வரவு அரண வரவுதானே தவிர
மகிழ்வுலாவாக இருக்கவே முடியாது.

அப்படி இருப்பினும், அடிகளாரின் சேரனின் குணக்கோட்ட
வரவை வருணிக்கும் வரிகள் ஒரு இன்பச்சூழலைக்
காட்டுகிறதென்றால், அதுதான் காப்பியப் பண்பாடு!

காப்பியம் காட்டும் உயர் பண்பாடுகளில் இஃது ஒன்று! சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளுவதற்கானக்கரணியங்களில் இஃதும் ஒன்று என்றுதான்
சொல்லவேண்டும். அடிகளார் உயர்ந்து நிற்பது
இதனாலும்தான்.

மதுரையின் நிலை அறிந்து அவசர அவசரமாகச்
செங்குட்டுவன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றப்
படைதிரட்டி நின்றான் என்று காப்பியம்
சொல்லியிருக்குமானால், அல்லது பாண்டியன் மாள்வைத்
தொடர்ந்து மதுரையில் ஏற்பட்டப்
பெருங்கலகத்தை அடக்க சேரன் புறப்பட்டான் என்று காப்பியம் சொல்லியிருக்குமானால், சிலப்பதிகாரம், அரசியலும் போரும் மறமும் பெருத்த காப்பியமாக ஆகியிருக்கும்.

போர் முரசுகளின் ஒலியில் ஒப்பற்றப் பாண்டிய அரசனும் அரசியும்
உலகுக்கு உணர்த்திய பண்பாட்டொளியும், ஒப்பற்றக் கண்ணகியின் ஒளியும் சற்றேனும் மறைக்கப்பட்டிருக்கும். அதனாலேயே அடிகளார் அப்படிச் சொல்லவில்லை.

இந்த உயர்ந்த இலக்கியப் பண்பாடு உயர்ந்த
படைப்பாளிகளிடம் இன்றைக்கும் இருக்கிறது.
நமது குமுகத்தில் அதற்குச் சான்றாக இரண்டு
படைப்பாளர்களை/படைப்புகளைச் சொல்லலாம்.

அமரர் கல்கி தனது புகழ்பெற்ற பொன்னியின் செல்வன்
புதினத்தில் கடைசிவரை ஆதித்த கரிகாலனைக்
கொன்றவர் யார் என்று சொல்லவேயில்லை. அது ஒரு
நல்ல பண்பாட்டுக் காரணம்.

இன்னொன்றை, வீரபாண்டி கட்டபொம்மன்
திரைப்படத்திலேக் காணலாம். வெள்ளையத்
தேவன்போரில் சுடப்பட்டு மாள்வது போலக் காட்டியிருப்பார்கள்.
ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி.

வெள்ளையத் தேவன் கட்டபொம்மனைப் போல மறைந்து வாழ்கையில்,
1000 பொன் பரிசுக்கு ஆசைப்பட்ட அவனது
தாய்மாமனாலேயே வெள்ளையர்களிடம் காட்டிக்
கொடுக்கப் பட்டான்.

வரலாற்றைத் திரிப்பதுபடைப்புகளின் நோக்கம் அல்ல.
ஒரு வரலாற்றில் இருந்து எத்தனையோ படைப்புகள் வரலாம்.
ஆனால், எடுத்துக் கொள்ளப்படும் குறிக்கோள்களை மட்டும் உயர்த்தி
வைப்பதாக இருக்கும்.

அப்படித்தான் அடிகளார் காப்பியத்தை அமைத்திருக்கிறார்.

மலை காண்குவம் என்று வரும் குட்டுவன்வருகை,
வரும் அழகைப் பற்றி மட்டும் சொல்லப்படுவதால்,
அது அவன் மலை "வளம்" காணு வருகையாக நமக்குத் தெரிகிறது.

ஆயினும் அடிகளார் ஒரு குறிப்பை மட்டும் அழற்படு
காதையிலேயே கொடுத்திருக்கிறார் என்பது, மதுரை
தீக்கிரையான போது கவனிக்க வேண்டிய முக்கியமான
விதயங்களில் மூன்றாவது.

"ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக்கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந் தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப..."

"காழோர் வாதுவர் கடுந் தேர் ஊருநர்
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள.."
....சிலம்பு:அழல்:8-15

பாண்டியன் அரண்மனையில் அலுவலர்கள்
அனைவரும் செயல் நடப்பு ஏதும் அறியாது
இருக்கின்றனர்.

பல்வேறு காவற்படையினரும் தீமுகம் கண்டு
கோட்டையை விட்டு அகன்று போகின்றனர்.

குமுகத்திற்கு எந்தத் தீங்கு ஏற்பட்டாலும் அதில்
இருந்து மக்களைக் காப்பது காவலர்/படையினர்கடமை. அவர்களே வெளியேறி விடுகிறார்கள்என்றால் தலைநகரம் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றுதானே பொருள்?

அரசியலில் பிற நாட்டிற்கு இது ஏது அல்லவா?
ஆகவே, குட்டுவனின் குணக்கோட்ட வருகை
என்பது அரண வருகை. அது இன்ப உலா அல்ல.

பாண்டிய நாடு அல்லல் பட்டு இருக்கிற போது
சேர நாட்டின் கிழக்குப் பாசறையான குணக்கோட்டத்தில்
வந்து அமர்ந்த சேரன், பின்னர்ப் பாண்டிய நாட்டில்
அரசியல் குழப்பம் ஏதுமில்லை என்பதை உறுதிசெய்த பிறகே,
மதுரை அழிந்ததால் சேரநாட்டுக்கும்
பகைவரால் சரவல் வர வாய்ப்பில்லை என்று உறுதி
செய்த பின்னரே அவன் நீண்ட காலம் பிடிக்கக் கூடிய
வடநாட்டுப் படையெடுப்பு என்று முடிவை
குணக்கோட்டத்தில் எடுக்கிறான்.

வெறும் மலைவளம் காணு வருகையாக அது இருந்திருந்தால்
அங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்காது.

பதிற்றுப்பத்துக் கூறும், குட்டுவனின் மோகூர் வெற்றி உள்ளிட்ட பல வெற்றிகளில் குட்டுவனின் சீற்றமிகு போர் மற்றும் அரசியல் திறனைக்
காணும்போது செங்குட்டுவனின் குணக்கோட்ட வருகை
இன்ப உலா வருகை என்று எண்ணுவது தவறு.

முந்தைய கட்டுரைகளில் விளக்கியது போல,
அப்பேர்ப்பட்ட மறம் மிகுந்த திறன் மிகுந்த
மூத்தவன் குட்டுவன் இருக்கும் போது,
அவனுக்காக இளையவன் இளங்கோ
அரசைத் துறந்து ஈகை அல்லது தியாகம் செய்தான்
என்பது பெரும் தவறு.

அன்புடன்
நாக.இளங்கோவன்