Pages

Tuesday, December 28, 1999

சிலம்பு மடல் 20

சிலம்பு மடல் - 20 மதுரை மாநகர்!
மதுரை:
ஊர்காண் காதை:

காவிரிக்கரையில் மாதவியைப் பிரிந்து, பின்னர் அக்காவிரி வாழ் சோழ நாட்டையும் பிரிந்து, தற்போது கண்ணகியையும், இவ்வையத்தையும் தன் கரையில் பிரியப் போகும் கோவலனை நினைத்துத்தான் வையை அழுதிருக்க வேண்டும்! அவ் வையை நதியைக் கடந்து மதுரை சேர்ந்ததும் கோவலன், காவுந்தி அடிகளிடம் தன் மனைவியைப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு நகர வாணிகம் பற்றியறிய புறப்படுகிறான்;

அதன்முன் கண்ணகிக்கு துன்பம் நேருமாறு நடந்து கொண்டதை எண்ணி கலங்குகிறான். ஊர் பெயர்ந்தாலே துன்பம்தான். ஆனால் இவனோ முன் பின் அறியா நாட்டுக்குள் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஏழ்மையாய் வந்து நிற்கிறான். முதன் முதலாய் வேற்று நாட்டுக்கு வாழப்போகும் மனிதன் இந்நாளும் அடையும் துன்பங்களைத்தான், அச்சங்களைத்தான் அன்று கோவலனும் பெற்றிருந்தான்.

வாழ இடம் இல்லை; பொருளீட்ட வகையில்லை! சுற்றி நிற்க சுற்றம் இல்லை!.

ஒரே ஒரு ஆறுதல் அவனுக்கு! அங்கும் அவன் பேசிய அதே மொழி.அதுவும் அன்னைத் தமிழ் நாடே! தமிழ் மட்டுமே அவனை அரவனைத்துக் கொண்டது.

இன்று, புலம் பெயர்ந்த தமிழர்களால், போய்வர தமிழருக்கு நாடிருப்பது போல!.

கோவல-கண்ணகி சோழ நாடு நீங்கி பாண்டிய நாடு சேர்ந்தபோதும் பின்னர் கண்ணகி மட்டும் மதுரை நீங்கி சேர நாடு சேர்ந்தபோதும் எங்கும் குடியுரிமைத் தேவைகள்(Passport, Visa, Immigraion ) இருந்திருக்கவில்லை!

இன்று அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் மற்றும் சில தூர கிழக்கு நாடுகள் கொண்டுள்ள புரிந்துணர்வைப்போல!

சேரமாயும், சோழமாயும் பாண்டியமாயும் இன்ன பிறவாயும் தமிழகம் அந்த காலத்தைய குறைந்த போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றவாறு பிரிந்திருந்தாலும் தமிழ்த்தேயமாய் இணைந்திருந்ததின் பயனே அது!

ஒரு நாள் நேரத்தில் உலகையே சுற்ற முடிந்த இந்த காலத்தில் உலகுவாழ் தமிழர்களை எங்கும் காணமுடிவது அதே தமிழ்த் தேயத்தை சிந்தையில் மலரச் செய்கிறது.

"காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத் தேயத்து ஆர்இடைஉழந்து
சிறுமை உற்றேன்! செய்தவத் தீர்!யான்
தொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்நிலை உணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி ஆகலின்
ஏதம் உண்டோ அடிகள்ஈங்கு' என்றலும் ......"

(அறியாத் தேயத்து=முன் பின் அறியா நாட்டில்)

என்று மேற்கண்டவாறு கோவலன் அடிகளிடம் வேண்ட; தீவினை ஊட்டும் (மற) செயல்களை நீக்கி அறச் செயல்களைச் செய்வீர் என்று "நாவென்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அறைந்து" அறத்துறை மாக்களாகிய நாங்கள் எவ்வளவு சொன்னாலும் உறுதியான அறிவில்லா மனிதர்கள் அதன்படி நடக்காமல் பின்னர் தீவினை வந்து சேர்ந்ததும் வருந்துகின்றனர் என்று அடிகளும் வருத்தப்படுகிறார்.

"கவுந்தி கூறும்; 'காதலி தன்னொடு
தவம்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்!
மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்
யாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்"

மேலும் அடிகள், "நீ மட்டும் அல்ல; உன் போல் பலர் தீச்செயல் காரணமாக மனைவியுடன் நாட்டை விட்டு வெளிப்போந்து துயருற்றனர்; நீ நாடு மாறி உறும் துன்பங்கள் போலவே இராமன் சீதையுடனும், நளன் தமயந்தியுடனும் நாடு நீங்கித் துயருற்றனர்! " என்று உரைத்தார்;

"தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்..."
(தயரதன் ஏவலால் சீதையுடன் காடு போன இராமன் )

"வல்லாடு ஆயத்து மண்அரசு இழந்து
மெல்இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்...."

(வல்=சூது; நளன் சூதாடி நாட்டைத் தோற்று
தமயந்தியுடன் காடு போனது )

ஒருபுறம் வருத்தம்; மறுபுறம் உற்சாகத்தோடு மதுரை மூதூரை உலாவிப் பார்க்கிறான் கோவலன். காண்கிறான் முதலில் பரத்தையர் வீதியை;

இக்காதையின் பாதிக்கு பரத்தையர் காதை என்று இளங்கோவடிகள் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பரத்தையரை ஆராய்வோர்க்கு திரளாகச் செய்திகள் உண்டு; புகார் பரத்தையரை மதுரை பரத்தையரோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.

காலை முதல் இரவு வரை பரத்தையரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கார், கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் அவர்களின் உடைகள் மற்றும் ஒப்பனை வேறுபாடுகளின் விளக்கம் பல செய்திகளைத் தருவதாக அமைந்திருக்கிறது.

மதுரை மாநகரில், பரத்தையர் வீதி, அரசப் பரத்தையர் வீதி, கலைஞர்கள் வாழ்ந்த இரு பெரும் வீதிகள், அங்காடி வீதி,மணிக்கல் வீதி, பொன் கடை வீதி, அறுவை வீதி (பருத்தி, எலி மயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட துணிகள் விற்கப்படும் வீதி), கூலவீதி (தானியங்கள், பாக்கு, மிளகு போன்றவை விற்கப்படும் வீதி), இவை யாவையையும் கோவலன் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் கண்ணகியும் காவுந்தியும் இருந்த புறஞ்சேரிக்கு மீள்கிறான்!

அனைத்து வீதிகளிலும், இந்த மணிக்கல் வீதியில் விற்கப்பட்ட ஒன்பது வகை மணிகள் பற்றிய குறிப்புக்கள் சிறப்புவாய்ந்தவை.

வயிரம்:

காகபாதம், களங்கம், விந்து, இரேகை என்ற நான்கு குற்றங்களும்
இன்றி, நுட்பமான முனைகளையும், நால்வகை நிறத்தையும், நிறை ஒளியையும் கொண்டவை வயிர மணிகள். வயிரத்தில் வகைகள் வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என நான்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.

"காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும்...."

மரகதம்:

கீற்று, மாலை, இருள் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பசுமையான நிறத்தையும், இளங்கதிரின் ஒளியை உடையது.

"ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்..."

மானிக்கம்:

பதுமம்(சிவப்புக்கல்) , நீலம், விந்தம்(குன்றுமணி நிறம்), படிதம்(கோவைப்பழ நிறம்) என்று நால்வகையான, விதிமுறை மாறாத மாணிக்க மணிகள்:

"பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்...."

புருடராகம்:

பூச மீனின் வடிவமும், பொன்னைத் தெளிய வைத்தைப் போன்ற நிறமும் கொண்டது:

"பூச உருவின் பொலம் தெளித்தனையும்"

வைடூரியம்:

குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி போலவும் தெளிந்த தேன்துளி போன்ற நிறத்தையும் கொண்டது:

"தீதுஅறு கதிர்ஒளித் தென்மட்டு உருவவும்"

நீலம்:

இருளைத் தெளிய வைத்தாற் போன்ற நீலமணிகள்.

"இருள் தெளித்தனையவும்....."

கோமேதகம்:

மஞ்சள் சிவப்பு என்ற இரு நிறங்கள் கலந்தது.

"இருவேறுரு உருவவும்......."

மேற்கண்ட மானிக்கம், புருடராகம்,வைடூரியம்,நீலம்,கோமேதகம் ஆகிய ஐமணிகளும், ஒரே பிறப்புடையது/தோற்றத்துடையது ஆனால் ஐந்து வேறுபட்டவனப்பினை உடையவை.

"ஒருமைதோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும்"

முத்து:

காற்று, மண், கல், நீர் என்பவற்றால் ஏற்பட்ட குற்றங்கள் சிறிதும் இல்லாமல், தெளிந்த ஒளியுடையனவும், வெள்ளியையும் செவ்வாயையும் (கோள்கள்) போல வெண்மையும் செம்மையும் உடையனவும், திரட்சியுடையவவுமான முத்துக்கள்.

"காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகன்என
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்.."

பவளம்:

நடுவே துளையுடையனவும், கல்லிடுக்கிற்பட்டு வளைந்தனவும், திருகுதல் பெற்றனவும் என்னும் குற்றங்கள் நீங்கிய கொடிப்பவளங்கள்.

"கருப்பத் துளைவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்..."

இப்படியான ஒன்பது வகை மணிகளும் ஆங்கு விற்கப்படுதலை கோவலன் கண்டான்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
28-திசம்பர்-1999

Wednesday, December 15, 1999

சிலம்பு மடல் 19

சிலம்பு மடல் - 19 மாதவியைப் புரிதல்! சுற்றம் உணர்தல்!
மதுரை:
புறஞ்சேரி இறுத்த காதை:

வேட்டுவக் குமரியின் கொற்றவைக் கோலம் நீங்கிய பின்னர் மதுரைசேர் நடையைத் தொடர்ந்தனர் கோவல-கண்ணகி-காவுந்தி அய்யை. கதிரவன் கடுமை அதிகம் ஆதலால் இரவின் மென்மையைக் கண்ணகியின் காலடிகளுக்குக் கொடுக்கும் பொருட்டு, கடந்தனர் காதங்களை இரவுகளில்; ஒரு காலை, சேர்ந்தனர் முப்புரிநூலோர் மட்டும் வாழ்ந்த ஊர்தனை.

பாதுகாப்பான இடமொன்றில் பெண்மணிகளை இருத்தி நீர் பெற்றுத் திரும்பச் செல்கிறான் கோவலன்! கண்டனன் தன்னைத் தேடித் திரிந்த கோசிகன் என்பானை!

கோசிகன் சொல்வான் கோவலனிடம்;

கோவல!

அரிய மாணிக்கத்தை இழந்து விட்ட பெரிய நாகம் சுருங்கிப்போய் கிடப்பது போல, உன் பெருஞ்செல்வத் தந்தையும் தாயும் முடங்கிப் போய்விட்டனர் உன்னைக் காணாமல்; அறிவாய்!

"இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்...."

உயிர் பிரிந்த உடலென்றாகிப்போயினர் உன் சுற்றத்தார்; உணர்வாய்!

"இன்உயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்...."

இராமனைப் பிரிந்து வாடிய அயோத்தி மக்களைப் போல புகார்வாழ் மக்கள் யாவரும் நின் பிரிவால் வருத்தமுற்றிருக்கின்றனர்;

"அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்....."

தான்தந்த திருமுகத்தை நீ வாங்கவும் மறுத்ததால் வாடிக்கிடக்கிறாள் மாதவி; வெறுத்தாளில்லை!

"என் கண்ணின் கருமணியான கோவலற்குக்" காட்டென மீண்டும் ஒரு முடங்கலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறாள்!

"கண்மணி அணையாற்குக் காட்டுக என்றே
மண்உடை முடங்கல் மாதவி ஈந்ததும்....."

என்று சொல்லி கோவலனிடம் மாதவியின் மடல்தனைத் தருகிறான் கோசிகன்!

மாதவிபால் அளவுகடந்த அன்பு வைத்திருந்த கோவலனுக்கு அவளின் சிறு துளி வார்த்தைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், சந்தேகத்தால் ஏற்பட்ட விளைவுகளினால்,

கோவலனைச் சுற்றிய தாய், தந்தை, காதலி, சுற்றம், மக்கள் என அனைவருக்கும் கோவலன் பால் இருந்த அன்பினால், அவன் பிரிவினால் ஏமாற்றமும் துன்பமும் நிகழ்ந்து விட்டிருக்கிறது.

அன்பிருந்தால்தானே ஒருவரின் பிரிவின்பால் பிறருக்குத் துன்பம் தரும்! அது இல்லாவிடில் பிரியும்வரை வாழ்ந்த வாழ்க்கை வண்டிப்பயண நட்புபோன்றதுதானே!

கண்ணகியைப் பிரிந்த, மாதவியையும் பிரிந்த இரு குற்றத்தை இவன் செய்தான். ஆனால் காதலியர் இருவரையும் சேர்த்து அவனை அறிந்தோர் யாவரும் அவன் பால் அன்பு காட்டுமளவிற்கு பண்பாளன்தான் கோவலன்!

பிரிந்து போன போழ்தும் பழைய தொடர்பை நினைத்துப் பேணுதல் நல்ல சுற்றத்தார் பண்பு என்பதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார்.

"பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள"
--குறள்

அந்த நல்ல சுற்றத்தைப் பெற்ற கோவலன் நல்ல பண்பாளனாகத்தான் இருந்திருக்கிறான்.

பொருள் கொடுத்து உதவல், இனியவை கூறல் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்ன இலக்கணத்தின்படி கோவலன் வாழ்ந்துதான் இருந்திருக்க வேண்டும்!

"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்,"
-- குறள்

இல்லையேல் அவன் பிரிவால் பெருஞ்சுற்றம் முழுமையும் ஏன் துயருற வேண்டும் ?

பெருஞ்செல்வப் பெற்றோர்கள் மற்றும் அன்பு காட்ட அடுக்கிய சுற்றத்தார் ஆயிரம் இருந்தும், தான் நொடித்துப் போனதும் உடுத்த உடுக்கையுடன் பொருள்தேட பிற நாடு சென்ற தன்மானம் படைத்தவன் கோவலன்!

பிறர் பொருள் நாடா பேராண்மையான்!

கோவலனின் மனம் இளகுகிறது! மாதவியின் மடலைப் படிக்குமளவிற்கு அவன் உறுதி தளர்கிறது!

தாம் ஏமாந்துவிட்டோ ம், பொருளிழந்து விட்டோ ம் என்று தாழ்வடைந்திருந்த மனத்திற்கு, தன் சுற்றம் பற்றி கோசிகன் சொன்னது இதமாக இருந்திருக்க வேண்டும்!

உறவுகளின் ஏக்கங்கள் உணர்வுகளை ஆட்கொள்கிறது! ஆறுதல் தருகிறது! ஆறுதல்கள் மனித வாழ்வின் தேவைகள்தானே!

ஆறுதல்கள் அவன் மனத்தில் தெளிவுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! தன் தவறால் குறையாத உறவுகளின் அன்பு அவன் மனதில் அமைதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

மாதவி அனுப்பிய மடலில் மண்ணால் இலச்சினை வைத்திருந்தாள்! அதில் அவள் ஒற்றைக் கரு மயிர் ஒன்றையும் ஒட்டி வைத்திருந்தாள்! அதைத் தொட்டுப்பார்த்த போது, காற்றிலே அது அசைந்து அவன் கைகளிலே பட்டபோது, அவளே அவன் மேல் அன்பினாற் பரவினாற்போன்ற இன்பம்!

அம்மயிரில் மணந்த புனுகு அவனை மாதவியோடு இருந்த இன்ப காலத்திற்கு இழுத்துச் சென்று மடலைப் படிக்க விடாமல் பழைய நினைவுகளில் உறையச் செய்தது!

மடலுள் இருந்தது மாதவியின் குரல்! தான் தவறேதும் செய்யாதபோது தனைப்பிரிந்த அன்பரிடம் காரணத்தை அறிந்து கொள்ளத்துடிக்கும் நல்லன்புள்ளத்தின் தவிப்பே அது!

கேட்கிறாள் துடித்துப்போய்!

"நும் தந்தை தாயும் அறியாமல், அவர்களுக்குப் பணிவிடைசெய்யாமல், உயர்குடிப்பிறந்த கண்ணகியோடு இரவோடு இரவாக ஊரை விட்டே செல்லுமளவிற்கு நான் செய்த தீங்கென்ன என் உயிரே ?"

"அடிகள்! முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி....."

அன்பால் கட்டுண்டவளின் கெஞ்சு மொழி அந்த மடலில்!

அன்பும், உறவும், காதலும், காதலியின் மடலும் அவன் மனத்தில் ஆழ்ந்த அமைதியையும் சிந்தனையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

மாதவியின் மடலுக்குள் நேர்மையைக் காண்கிறான்!

தழும்பும் குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி நிறைத்தாற்போன்ற நிலையில் அவன் மனம்!

தான் செய்த இரண்டாவது தவறையும் உணர்கிறான்!

மாதவியிடம் இருந்து பிரிந்ததும் 'தன் குற்றமே' என்று தெளிகிறான் கோவலன்;

பரத்தையர் குலத்தில் சித்திராபதி என்ற பெரும்பரத்தைக்கு மகளாகப் பிறந்த மாதவி, கோவலன் பிரிந்ததும் மாற்றானுடன் போகவில்லை! கோவலன் மட்டுமே அவளின் காதலன்! அந்த உண்மையான நட்பும் அன்பும் அவளைக் குற்றமற்றவள் என்று கோவலனை உணரச் செய்து விட்டது.

பரத்தையர் குலம் என்பது பரிதாபத்துக்குரிய குலம்; மணிமேகலையில் சாத்தனார் "வருணக் காவலும் இல்லா பரத்தையர் குலம்" என்று அதை விவரிக்கும் போது கண்கள் கசியத்தான் செய்கிறது;

யார் இவர்கள்? அனைத்து வருணத்திற்கும் வடிகாலான பரத்தையர்கள் வருணத்துக்குள்ளேயே சேர்க்கப்படாத அளவிற்குத் தள்ளிவைக்கப்பட்டவர்கள்;

ஆனால் வருணம் என்ற கழிநீரில் சேராததால் இந்த வடிகால் உயர்ந்தது என்பேன் நான்!

அந்த குலத்தில் பிறந்த மாதவி தன் நேர்மையைக் கோவலனுக்கு
உணரவைத்துவிட்டது பெரிய வெற்றியல்லவா ?

தன் பிரிவால் நடுக்குற்றிருக்கும் அனைவரின் துயர் களைய, விரைந்து செல்லச் சொல்கிறான் கோசிகனை! மாதவியின் மடலையும் தன் பெற்றோரிடம் சேர்க்க சொல்கிறான்!

பின்னர் நடையைத் தொடர்ந்து வைகை நதியின் வடகரையைச் சேர்கின்றனர் அனைவரும்.

கன்னியும் பொன்னியும் கோவலனை மாதவியிடம் இருந்து பிரிக்க, கண்ணகி சேர்ந்து, வைகை அடைந்த, இவர்களைப் பார்த்து இவர்களுக்கு நேர இருக்கும் துன்பத்தை முன்னரே உணர்ந்தவள் போல் வையை அழுதாளாம்! எப்படியென்றால், வைநயை நதியின் இருகரை வளர்ந்த நறுமலர் மரங்களும் சோலைகளும் கணக்கிலடங்கா தங்கள் பூக்களை வையை ஆற்றில் உதிர்த்து விட, கோவல-கண்ணகிக்கு ஏற்படப் போகும் தீங்கை ஏற்கனவே அறிந்ததால், அம்மலர்களை ஆடையாக்கி, ஓடும் கண்ணீரை (தண்ணீரை) முழுதாக மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுதாளாம் வையை நதி!

கோவல-கண்ணகியோ இது நீரோடும் ஆறல்ல பூவோடும் ஆறு என்று புகழ்ந்துரைத்துக் கொண்டே மரத்தெப்பமொன்றில் ஏறி தென்கரை சேர்ந்தனர்!

"புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யாறு அன்றுஇது பூம்புனல் யாறுஎன...."


அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-1999