Pages

Sunday, March 05, 2006

கனவிலிது கண்டேன்!

சந்தவசந்தக் கவியரங்கில் கனவில் இது கண்டேன் என்ற தலைப்பில்
பங்கு கொண்ட கவிதை. தன் கனவில், மங்கை ஒருத்தி கனவு, காண்பதான
கற்பனையில் எழுதியது. அய்ந்தாம் பாடல் மட்டும் கற்பனை அல்ல. பொங்கல் காலத்தில்
ஈழ மகளிர் இராணுவம் அணி வகுத்து நிற்க, அதில் ஒரு மகள் கரண்டியால் பொங்கலைப் பொங்குவது போன்று
படம் ஒன்று ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. அதையொட்டி எழுந்தது அய்ந்தாம் பாட்டு.
- நயனன்.


கனவிலிது கண்டேன்
-----------------
நித்திரையில் நினைந்திருந்து, வஞ்சமிலா
நெஞ்சில் விளைந்தன வெல்லாம்
சித்திரை முழுநிலவுத் திரையதனில்
செழுக்கமல முகநல்லாள் முறுவலித்து
எத்திரையும் கண்டிராக் காட்சியெலாம்
எழுதியோடல் கண்டாள்; கனவெனவே!
முத்திரையாய்ப் பதிந்ததுவே மனதிலிணை
மற்றிலாதென் கனவிலிது கண்டேன். (1)


கார்முகிலின் கன்னத்தில் முத்தமிட்டுக்
கூந்தலையும் கோதிவிட்டு மலையன்னை
கூர்முகடு பேறுபார்த்துக் கொட்டிவிட்டத்
தூய்வெள்ளித் துளியெல்லாம் கூட்டாகி
ஊர்முழுக்க ஓடிடினும் ஆறெல்லாம்
ஓர்கறையும் ஏறாமல் வெள்ளியேபோல்
ஆர்கடலில் அப்படியே அடைக்கலமே!
ஆரணங்கின் கனவிலிது கண்டேன். (2)


ஆழிபோன பாதையெலாம் குன்றுகுழி;
ஆடியாடி, கழுத்தெலாம் உறுத்திடவே
ஊழிஊழி வண்டியிழுத் தமாடெல்லாம்
ஓர்வலியும் இலாமலே, செந்தரையில்
வாழிவாழி சொல்லியே பார்முழுக்க
ஓடினபல் உந்துகளை முந்தியே!
தாழிநிறைத் தண்ணீர்போல் தழும்பாதத்
தாமரையாள் கனவிலிது கண்டேன். (3)


காளையவன் வந்துவிட்டான்; விழிக்கடைக்
காட்சியதில் தெரிகின்றான்; விழுங்கினள்
வேளையது வந்ததனை கால்விரலால்
வேல்விழியாள் கோலமிட்டுச் சுட்டுகிறாள்;
பாளையது பிரிந்துபூ வந்ததுபோல்
பூமகளும் கசிந்துநீர் பூக்கின்றாள்!
மூளையது மும்மழைக்கு முத்தமிட
மாமகளின் கனவிலிது கண்டேன். (4)


கண்டனன் என்கனவில் அவள்கனவை
கலங்கமிலாப் பொன்னொத்த மேனியையும்;
பெண்ஒருத்தி, தன்னைப்போல் தானிருந்தாள்;
பசுங்கொடியாள், நல்லாள்; கரமொன்றில்
விண்திரும்பு வாளொன்றை வைத்திருந்தாள்
விடுக்கென்று உறையிலே குத்திட்டு
மண்திரும்பி, பொங்கலே பொங்கினாள்!
மங்கலத்தின் கனவிலிது கண்டேன். (5)


கண்ணகிக்கும் மாதவிக்கும் பன்னிரண்டில்
கல்யாணம்; காப்பியமும் ஆனதுவே;
பெண்குலமே பகையறுக்கப் போர்முனையில்
பிறவியெலாம் நிற்கிறதே, கவலையின்றி
மண்மகிழும் மங்கையராய் அணிமணியும்
மனைமகிழ்வும் கல்வியும் துறந்துவிட்ட
திண்மனவர் திசைனோக்கித் தேம்புகிறாள்;
தாயிவளோ? கனவிலிது கண்டேன்! (6)


சாதிமத பேதமெலாம் தரித்திரமே
சோதிவந்து சொன்னதுவோ யாரறிவார்?
ஊதிவிட்டு ஒன்றுகூடி உழைக்கிறது
ஓர்குமுகம்; வஞ்சம்பொய் மதுவில்லை;
தேதிஒன்றும் தெரிகிறது தளையறுக்க!
தீதெல்லாம் திரள்திரளாய்த் தொலைகிறது;
மேதினியில் தலைநிமிர்ந்து நிற்கிறது!
மாதவத்தாள் கனவிலிது கண்டேன். (7)


எண்திசையும் எங்கேயும் எல்லாமும்
இன்தமிழே எழுதிக் கிடக்கிறது
விண்திசையில் ஒருகருடன் வியாழம்
வெள்ளிசனி கடந்து இனுமுயர
'அண்டப் பகுதியின் உண்டை'என்ற
அழகுமொழி அட்டையில் எழுதிநின்றார்;
பண்ணொப்ப சிரித்தார் மணிவாசகர்!
பண்மொழியாள் கனவிலிது கண்டேன். (8)


பணங்காய்ச்சிப் பொறியெல்லாம் எங்குமிலை
பாலோடு சோறோ தேனோ
மணமோடு கலந்துதர பரிப்பொறிகள் (பரி=free)
மண்ணெங்கும் முளைத்திருக்கும்; மாந்தர்
குணமோடு குடியிருப்பர் பொன்கூரைக்
குடிலுக்குள்; பச்சைவயல் பக்கத்தில்
கிணம்கிணமாத் தண்ணீரும் எண்ணெயும்!
குமரியவள் கனவிலிது கண்டேன். (9)


ஆதவனின் அகங்கண்டு அடங்கிப்போய்
அடைந்துகொள் வெண்மதித் திரைமறைய
மாதவளின் இமைகளுக்குள் நெளிந்து
மெதுவே உதிக்கின்ற விழிகள்;
போதவளும் எழுகின்றாள்; நிறைநீறு,
பெருந்திலகம்; போற்றி என்றேன்!
ஈதவளோ, தமிழன்னை நானென்றாள்;
யானும் மலர்ந்தேன்; வாழிஎன்றேன். (10)


- நயனன்
01-பிப்ரவரி-2006