Pages

Saturday, February 13, 1999

சிலம்பு மடல் 5

சிலம்பு மடல் - 5 நாட்டியக் கலை!
புகார்:
அரங்கேற்று காதை:

ஆடலை அரங்கேற்ற வந்த ஆடலரசி மாதவி தன் நாட்டியத்துக்கு
ஆடலாசிரியன், பாடலாசிரியன் இசையாசிரியன், தண்ணுமை முதல்வன் (மத்தள ஆசிரியன்), குழலாசிரியன் மற்றும் யாழாசிரியன் என்ற ஆறு முக்கிய வல்லுநர்களையும் ஏனைய உதவியாளர்களையும் துணையாகக் கொண்டிருக்கிறாள்.

இதன்மூலம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே, மூத்த தமிழான கூத்துத்தமிழ் சிறந்திருந்த நிலை, அது நடந்தவிதம், அதற்கு ஆதாரமாக இருந்த கலைமுதிர்ச்சியை அறியமுடிகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடக்கும் நாடகம், திரைப்படம் முதலியவற்றில், தொழில் நுட்ப வேறுபாடுகளைத் தவிர்த்து ஏனைய, கலைஞர்கள், சிறப்பியல்புகள் இவற்றை நோக்குங்கால் சிலம்புக்கால நாடகக் கலைக்கும் இன்றைய நிலைக்கும் வேறுபாடு ஏதும் பெரிய நிலையில் இருப்பதாகக் கருத முடியாது. அல்லது 1800 ஆண்டுகளுக்கு முன்னரே முதிர்ந்து விட்டிருந்த கலை நிலையே இன்றும் தொடர்வதாகக் கருதலாம். மூத்தக் குடியினர் என்று கூறப்படுவது இதனால்தானே!

இந்தக் காலகட்டத்தின் கூத்து முறை சிலம்புக்காலத்திலிருந்து வேறுபடாமல் இருக்கும் போது, முதிர்வு நிலை சமமாக இருக்கும் போது, அச்சிலம்புக் காலத்தைய கலை முதிர்வுக்கு முன் எத்தனைத் தமிழ் ஆண்டுகள் ஓடியிருக்கக் கூடும்? அச் சிறப்பு நிலைத் தமிழுக்கு இருக்கும்போது, தமிழின் தொன்மை கி.மு 300 அல்லது கி.பி 1 முதல் 500க்குட்பட்டது என்று நிறுவ முனைவதும் அதைப் பரப்பமுயல்வதும் சரியா
னது அல்ல அல்லவா?

இளங்கோவடிகள் இயற்றிச் சென்ற இந்தக் காப்பியம் வெறும் கதைமட்டும் கூறுவதல்ல. அந்நாள் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவையோடு, கல்விநிலையையும் கலைநிலையும் அறிவிக்கிறது.
கலைஎன்றால் அந்தக் கலையின் கூறுகள் அதன் காரணங்கள் இவற்றையும் விளக்குகிறது சிலம்பு. இசை, இயல், நாட்டியம் என்ற ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு கருவிக்கும் இலக்கணம் காட்டுவதாய் அமைகிறது
இந்தக்கவிதைகள். மாதவி தன் துணைக் கலைஞர்களோடு நாட்டிய மாடினாள் என்று கூறிவிட்டுப் போகாமல் அக்கலையின் கூறுகள் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் வரையறுத்திருப்பது சிலம்பின் சிறப்புக்களில்
ஒன்றாகும். பல கலைகளையும் கலைஞர்களையும் விவரித்திருக்கிறார்; அதில் நிகழ்ச்சியின் மூலமான ஆடல் ஆசிரியனின் சிறப்புக்கள் மட்டும் இங்கே.

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்.... "

ஆடற்கலை ஆசான் அகக் கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்துக்களையும் நன்கு அறிந்தவன்; இந்த இருகூத்துக்கள் உள்ளடக்கிய பல பகுதிகளாகிய பலகூத்துக்களை இணைக்க வல்லவன். பதினோர்
கூத்துக்களையும் (அல்லியக் கூத்து முதல் கொடுகட்டிக் கூத்து வரை என்று அறிஞர் உரைக்கிறார்), இந்தக் கூத்துக்களுக்கு உரிய பாடல்களையும், அவற்றிற்கமைந்த இசைக்கருவிகளின் கூறுகளையும், அவற்றைப் பற்றிக் கூறியுள்ள சிறந்த நூல்களின் படி விளக்கமாகத் தெரிந்தவன்(விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு..).

1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆடப்பட்ட நாட்டியம், கூத்து, இசை, கருவிகள் இவற்றிற்கு இடப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் நடந்ததென்றால், அந்த இலக்கணங்கள் தோன்ற எவ்வளவு காலம் ஆகியிருக்கக் கூடும்?

ஆடலாசிரியன் ஆடலையும் பாடலையும் தாளத்தையும் அந்த தாளவழி வரும்' தூக்குகளையும் ( இசை அல்லது தாளவகை ) இணைப்பதில் வல்லவன்! அப்படி இணைத்து ஆட்டுவிக்கு மிடத்து ( கொளுத்துங் காலை ), ஒற்றைக்கை (பிண்டி), இரட்டைக்கை (பிணையல்), எழிற்கை, தொழிற்கை என்று சொல்லப்பட்ட
நான்கு அவிநய ( அபிநயம் ) வகைகளையும் திறமையாகக் கையாளக்கூடியவன்.

கூத்து நடக்கும்போது , கூடை(ஒற்றை) க்கதியாகச் செய்த கை வார(இரட்டை)க் கதியுள் புகாமலும் வாரக்கதியாகச் செய்த கை கூடைக் கதியுள் புகாமலும், ஆடல் நிகழும்போது அவிநயம் நடக்காமலும் அவிநயம் நடக்கும்போது ஆடல் நிகழாமலும் தவிர்ப்பதில் வல்லமையும், குரவை மற்றும் வரிக் கூத்துக்கள் ஒன்றோடொன்று கலவாதவாறு பயில்விப்பவனுமே அந்த ஆடல் ஆசிரியன் ஆவான் !

அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-1999

No comments: