Pages

Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

Thursday, January 04, 2018

ஆன்மீகமும் புற-ஆன்மீகமும்

:ஆன்மீகத்தை உங்களுக்கு சொல்லித்தாரேன் என்று ஒரு மராட்டிய நடிகன் கிளம்பியதும், துள்ளியெழுந்து, இது "பெரியார் மண்", "பெருங்காய மண்" என்று உளறித்தவிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் ஆன்மீக மறுப்பு என்பது நாத்திகக்களத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்பு. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றவாறே போனால் எப்படி?
எந்த ஆயுதத்துக்கு எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தி வேண்டாம்?
தமிழ்நெடுவரலாற்றில், அறியப்பட்ட நூல்களில் முதனூலான தொல்காப்பியமே ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன தெய்வம் என்ற பதிவை தாங்கியிருக்கிறது. அதன்பின்னர் முழுநூலாக நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இறைப்பாட்டாக காணக்கிடைக்கிறது. பரிபாடல், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரு நூல்களில் ஆன்மீகத்தை காணமுடியும்.
அதன்பின்னர், கண்ணப்பர், காரைக்காலம்மை, திருமூலர், நால்வர், 63 நாயன்மார்கள், ஆண்டாள் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் என பல்கிப்பெருகி, சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி என விரிந்து, பட்டினத்தடிகள், தாயுமானவர், அருணகிரி, குமரகுருபரர் என தொடர்ந்து, வள்ளலார் வரை கால நெடுகிலும் ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழகத்திற்கு இணையாக வேறொரு மாநிலத்தை மொழியை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது எனுமளவிற்கு ஆன்மீகம் இங்கே பரந்து விரிந்துதான் கிடக்கிறது.
செயினமும் பௌத்தமும் சீண்டிப்பார்த்த போது, யானை சிறு தேங்காயை இடறுவதுபோல, இடறித்தள்ளிய ஆன்மக்கோட்டை இந்த மண்.
இவை எல்லாவற்றையும் கெட்டியான போர்வையை போட்டு மூடிவிட்டு, இது பெரியார் மண், பெரியார் மண் என்று கூவுவது எவ்வளவு பெரிய அறியாமை?
இப்படி, தன்னிலையால், தமிழ்நிலையை புறந்தள்ளி பேசுவதால்தான் மாற்றானும் ஆன்மீகம் என்ற பெயரில் இங்கே கடைபோட கிளம்புகிறான்.
கெயிக்குவாடின் ஆன்மீகத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரே கேள்வி:
ஊரிலும் வீட்டிலும் குலதெய்வம் உள்ளிட்ட எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டே, வரலாற்றில் இருக்கும் முழுமையான தமிழ் ஆன்மீக அடித்தளத்தை நீங்கள் புறந்தள்ளினாலும், நீங்களே ஏற்கிற வள்ளலாருடைய மண் இந்த மண் என்பதை ஓங்கிச்சொல்வீர்களா? வள்ளலாரால் காக்கப்பட்ட மண்ணான இம்மண்ணுக்கு மராட்டியத்திலிருந்து இறக்குமதியாகும் புற-ஆன்மீகம் தேவையில்லை - போடா போ! என்று சொல்வீர்களா?
உங்கள் குறிக்கோள் நேர்மையானது என்றால், தமிழ் ஆன்மீகத்தை மறைக்காமல், புறத்தேயிருந்து உள்நுழையும் புற-ஆன்மீகத்தை தமிழ்-ஆன்மீகத்தால் மறுத்து குரல் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழ்-எதிர்-பிற என்று இருக்க முடியும். அந்தத்தமிழ், வடக்கேயிருந்து வரும் பிற பித்தலாட்ட ஆன்மீகத்தை துடைத்து எறிந்துவிடும்.
இல்லாவிடில், நீங்களும் கெட்டு, இம்மண்ணும் கெட்டு எல்லாமே நாறிப்போக வழிகாட்டிக்கொண்டே இருக்கும்.
வேண்டுமானால், உங்களுக்காக சிறிய இளக்கம் சொல்கிறேன்.
மற்ற யாரையும் உங்கள் பகுத்தறிவின்பாற்பட்டு முதன்மையாக கூறவேண்டாம்; தொன்மையை போற்றுபவரானால், முருகாற்றுப்படை செய்த நக்கீரரின் மண் இது என்று கூறுங்கள். அல்லது அண்மையை மதிப்பவரானால், "வள்ளலாரின் மண்" என்று சொல்லுங்கள். புற-ஆன்மீகரை பார்த்து நீ இதில் யாரடா? என்று கேளுங்கள்.
எது அகம், எது புறம்? என்ற வேறுபாடுகூட தெரியவில்லையெனில் எப்படி
வெல்ல முடியும்?
கூடவே இது பெரியாருடைய மண் என்று வேண்டுமானால் உங்கள் ஆசைக்கு போட்டுக்கொள்ளுங்கள். நான் குறுக்கே வரமாட்டேன்.
ஆனால் மண்ணின் ஆன்ம வரலாற்றை மொத்தமாக மண்ணால் மூட விடமாட்டேன்.
The war between "Nothing vs Everything" is absurd. So the Nothings have to learn to take up Something to fight Everything, and let them take Tamilthing.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4/1/18

Wednesday, September 20, 2017

பெரியபுராணம்::எறிபத்த நாயனார்::பகுதி1 - மாநவமி

கருவூர். புகழ்ச்சோழநாயனார் என்று எதிர்காலம் போற்றிய புகழ்ச்சோழனின் தலைநகரம். ஆனிலையப்பரும் அலங்காரவல்லியும் எழுந்தருளியிருக்கும் திருப்பதி. இராசராசனுக்கு தோளோடு தோணின்ற கருவூரார் வாழுமிடம். எறிபத்த பூமியது.

மேகங்கள் உலாப்போகும் உயர்ந்த மதில்களும், அம்மதில்களைவிட பலவடுக்கு உயர்ந்து விண்ணை முட்டிப்பார்க்கும் மாடமாளிகைகளும், அவற்றை அரணிக்கும் கோட்டை வாயில்களில், நிறைந்த ஓசையை தரும்பொருட்டு நீதிக்கு விளக்கமாய் நெடிதுயர்ந்து நிலம் பார்த்து நிற்கும் வலிய பெரிய மணிகளும், இவற்றால் சூழப்பட்ட சோலைகள் தமது மலர்களால் ஊரெங்கும் நறுமணம் வீசுதலும், அந்நறுமணங்கமழும் தேன்சொரி மலர்கள், பெண்களின் அழகிய நெற்றியில் சுருண்டு தவழும் கூந்தலையும் சூழ்ந்துகொள்ள, அம்மமலர்களைச்சூடிய சிலபெண்டிர் தெருக்களிலே நடந்து வரும்போது விண்ணின்று இறங்கி நடந்துவரும் முழுநிலவைப்போல வருதலும், கருவூரை தேவ உலகத்தின் அழகையும் செல்வத்தையும் விட உயர்வாக காட்டிக்கொண்டிருந்தன.

இயற்கையை சூறையாடும் மணற்கொள்ளையின் தலைநகரமாய் இன்று நாம் ஆக்கிவைத்திருக்கும் அம்மாநகரத்தை, இயற்கையும் சிவமும் தமிழுமாய் எறிபத்தரொடு ஒப்பற்று விளங்கிய அந்த 11-12 நூற்றாண்டு கருவூரின் உயர்வை, சேக்கிழார் பெருமான் தீட்டி வைத்த சித்திரந்தான் இப்பாடல்.

மாமதில் மஞ்சு சூழும்
...மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
...சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
...சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும்
...சதமகன் நகரம் தாழ.
.......பெரியபுராணம்:எறிபத்தநாயனார்::3

இறைவனுக்கு பூச்சாற்றுதல் மாலைசாற்றுதல் எனும் வழக்க, காலத்தால் என்று தொடங்கியதென்று தெரியவில்லை; ஆனால், மனிதன், தான் அணிந்து மகிழும் உயர்வானவற்றை இறைவர்க்கும் இறைவிக்கும் அணிவித்தான் என்பது உண்மைதானே. அரசர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சூடிக்கொள்ளும் மாலையிலும் அடையாளப்பூ இருந்ததுதானே. "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..." என்று அப்பரடிகள் சொன்னதில், பூவிற்கு இறைவன் தருமிடம் எவ்வளவு உயர்ந்தது என்பது நாம் அறிந்ததுதானே.

இன்றெல்லாம், என்றோ பூத்த பூக்களையும் பூச்சரங்களையும் தெருவோரத்தில் வாங்கிவந்து நாட்கணக்காய் தணுப்பியில் வைத்து பாதுகாத்து நாடோறும் இறைக்கு சாற்றுவதுதான் பல வீடுகளிலும் நடப்பன. இறைவர்க்கு எப்படிப்பட்ட பூவை சாற்றவேண்டும்?

அன்றலர்ந்த புது மலர்களை சாற்ற வேண்டும் என்பர்.

அலர்ந்த மலர்களையா சூடவேண்டும்?

மலரவிருக்கும் மொட்டை,
மலர்வதற்கு முன்னர் பறித்து,
மாலையாக்கி, இறைமார்பில் சூடியதும்
அம்மொட்டு மலரவேண்டும்!

இதுதான் மலர்சூட்டும் கணக்கு. அம் மலர்மொட்டு அவிழும்போது அதுதரும் வாசம் இறைவனை சேரவேண்டும். அவனுக்கு அது பிடிக்கும்.

அதற்காகத்தான் சிவகாமியாண்டார் வைகறையில் துயிலெழுந்து அமராவதி (ஆம்பிராவதி) ஆற்றிலே நீராடி, சோலையில் இறைவனுக்கு சாற்றவேண்டிய அலங்கலுக்கு (அலங்கல் = மாலை) தேவையான மலர்களை பறித்துக்கொண்டிருந்தார். இறைவனுக்கு மட்டுமா? அலங்கல் ஆர்த்த வல்லியான அலங்காரவல்லிக்குந்தான்.

நித்தலும் அது அவர் கடன். இம்மியும் பிசகாது செய்துவரும் நெடுநாள்-தொண்டு.

கையிலே ஒரு கோல் அல்லது தண்டு. அதன் முனையிலே ஒரு வளைவு. துரட்டி என்போமில்லையா? அதைப்போல. உயரமான செடிகளிலே பூவிருந்தால் செடியை சற்று வளைத்து பூப்பறிக்கவும், பறித்த பூவை கூடையில் போட்டு, அக்கூடையை அக்கோலிலே மாட்டிவிட்டு தோலிலே சுமந்து கோயிலுக்கு செல்லவும் அக்கோல் அவருக்கு துணையாயிருந்தது.

வைகறை யுணர்ந்து போந்து
...புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
...நந்தவனத்து முன்னி
..............பெ.பு:எ.ப::9

கோலப்பூங்கூடை தன்னை
...நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங்கொண்டு
....மலர்க்கையில் தண்டுங் கொண்டங்கு
ஆலயம் அதனை நோக்கி
..............பெ.பு:எ.ப::10

இறைவனுக்கு நித்தலும் இந்த மலர்த்தொண்டினை தவறாது செய்து வந்த சிவாச்சாரிய மரபில் தோன்றிய தமிழ் அந்தணரான சிவகாமி ஆண்டார் என்ற அந்த முனிவர், பூக்கூடையை கோலில் மாட்டி தோளில் தூக்கிக்கொண்டு செல்கிறார் அலங்காரவல்லி உடனுறைகின்ற ஆன் நிலையப்பரின் திருக்கோயிலுக்கு. பொழுது புலர்வதற்குள் அதனை அலங்கல் அல்லது மாலையை ஆக்குநரிடம் கொடுத்து தானும் உதவி, மாலையாக்க வேண்டும்; இறைவர்க்கு சாற்ற வேண்டும். அம்மலர் மொட்டுகள் மலர்ந்து வாசம் போய்விடக்கூடாது; விரைகிறார்.

சோழ-வளநாட்டரசனான புகழ்ச்சோழனின் பட்டத்து யானை! பட்டத்து யானைக்கென்றே இருக்கும் தனிச்சிறப்புகளான வீரமும் வேகமும் அதற்கும் உண்டு. அதே வைகறையில் அமராவதியில் நீராடுகிறது. அரசமங்கல யானைக்கு சூட்டவேண்டிய மங்கல அணிகளையெல்லாம் சூடிவிடுகிறார்கள் பாகர்கள். அதற்குப்பூசவேண்டிய மங்கலப்பூச்சுகளும் திலகங்களும் இடப்படுகின்றன. உயர்ந்த உடுப்புகளும், விரிப்புகளும் அரசயானையை அலங்கரிக்கின்றன.
சிறிது மதநீர் அதன் கண்களில் வருகிறது. பாகர்கள் சற்று கவனத்தை அதிகரிக்கின்றனர்.

புரட்டாசி அமையுவாவை (அமாவாசை) அடுத்தநாள், சத்தி வழிபாடான ஒன்பான்
திருநாளின் தொடக்கம். சத்தியின் மூன்றுவடிவங்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவருக்கும் மும்மூன்று நாள்கள் சிறப்பு செய்ததும் பெருவிழா நடப்பது வழமை. ஒன்பதாவது திதிக்கு நவமி என்று பெயர். சத்திவிழவின் நிறைவுநாளை மாநவமி என்று பெரியபுராணம் சொல்கிறது. மாநவமியை அடுத்த நாளான பத்தாந்திதியன்று இக்காலத்தைப்போன்றே அக்காலமும் பெருவிழாக்கொண்டாட்டம் இருந்தது. அதற்காக நகரமே இருநாள்கள் முன்பே, அதாவது எட்டாந்திதியான அட்டமி அன்றே திருவிழாக்கோலம் பூணத்தொடங்கியது என்றே சொல்லவேண்டும். ஒன்பான்விழவு நமது தொன்மையான சத்திவழிபாட்டின் தொடர்ச்சி என்பதுதான் பெரியபுராணத்தின் பாடல்வரிகளில் பதிவாகியிருக்கிறது.

மற்றவர் அணைய இப்பால்
...வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
...குலப்புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
...பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்ற  வெங்களிறு கோலம்
...பெருகு  மாநவமி முன்னாள்.
..............பெ.பு:எ.ப::11
(மாநவமி முன்னாள் = நவமிக்கு முந்தைய நாளான அட்டமி)

யானையும் அன்று திருநாளுக்கு தயாராகியது போல. சிவகாமியாண்டாரும் அதிகாலை பூசைக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

சற்றே மதநீர் சொரிய நடந்து வந்த யானைக்கு திணவும் குறும்பும் கூடியதால்
தெருக்களை யானை கடக்கும்போது சில இடங்களை முட்டியும் தட்டியும் வந்து கொண்டிருந்தது.

கோயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டாரின் பூக்கூடையை
பறித்து நிலத்தில் வீசிவிட்டு நகர்ந்தது. மலர்கள் மண்மேல் சிதறின.

நெடுங்காலமாக தவறாமல், சிந்தாமல், சிதறாமல் செய்துவந்த அவரின் மலர்த்தொண்டு ஒன்பான்விழவின் எட்டாம் நாளான அட்டமியன்று தடங்கிப்போனது.

இறைமேல் இருந்த அவரின் காதல் தூய்மையானது. மனம் மயங்கியது; கண்கள் கலங்கின;  நெஞ்சம் கொதித்தது அந்த எளியவரான கிழமுனிக்கு.

கையறுநிலையில் அடக்கமுடியாத அழுகையோடு, மூப்பில் துவண்ட உடலினரான அந்த முனிவர் தன்னிடம் இருந்த கோலை உயர்த்திக்கொண்டு அந்த யானையை அடிக்க ஓடியது, மழலையொன்று பிரம்பெடுத்து மலையை அடிக்க ஓடியது போல இருந்தது.

ஓடமுடியவில்லை; குழந்தை தடுக்கி கீழே விழுவது போல விழுந்தார். வல்லான் முன்னர் வாடி நிற்கும் எளியரின் கையறு நிலையில் சிவகாமியாண்டார். பொறுத்தாரில்லை; நிலத்தை அடிக்கத்தான் முடிந்தது;  அடித்தார். நிலமகளை சாட்சியாக வைத்து இறைவனிடம் முறையிட்டார்;

களியானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா சிவதா!
அளியார் அடியார் அறிவே சிவதா!
தெளிவார் அமுதே சிவதா சிவதா!
..............பெ.பு:எ.ப::16

களிப்பின் மிகையால் ஆணவம் கொண்ட ஒரு யானையின் தோலை உரித்து போர்த்தியவன்தானே சிவன்! அதை எண்ணி சிவனை அழைத்தார் போல!
சிவபெருமானின் காதில் விழுந்ததால்தான் எறிபத்தருக்கும் அது கேட்டது போல.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, December 18, 2015

தமிழோற்பலம்::மடல் 2 - ஏல் ஓர் எம்பாவாய்!

மார்கழி மாதம். வருடமுழுதும் வெய்யில், மழை என பருவங்கள்
வேறுபட்டு வருகையில், பனிக்காலத்தின் தொடக்கமான மார்கழி
மனதுக்கும் உடலுக்கும் இனிமையான மாதம் என்பது
இந்நிலவமைப்பின் இயல்பு.

ஆண்டுமுழுதும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்,
நோன்புகள் எனப்பல கொண்டாட்டங்களையும் சிறப்புகளையும் கொண்ட
குமுகம்தான் தமிழ்க்குமுகமும். அது, பத்திக்கென்று ஒதுக்கிக்கொண்
ஒருதிங்கள் மார்கழி.தமிழ்ச்சைவமும் தமிழ்வைணவமும் கொஞ்சிமகிழும்
மாதம் மார்கழி.

பத்தி எனும்போது, இல்லத்தில் வழிபாடும், கோயிலுக்குச்சென்று
இறைதெரிசன வழிபாடும் செய்வதுமே பொதுமக்களின் மரபு.

கோயிலுக்குச்சென்று செய்யும் வழிபாடுகளில், தொலைவில் இருக்கும்
கோயில்களுக்குச்செல்வதற்கு மார்கழி மாதமும், தைமாதமும்தான்
மிக உகந்த மாதங்கள். மெல்லிய இதமான குளிரடிக்கும்
இரவுகளும், உடலை வருத்தாத வெயிலடிக்கும் பகல்களும் மார்கழியில்
தொடங்குகின்றன.

இன்றைய போக்குவரத்து வளர்ச்சியில், தமிழ்நாட்டின் எந்த ஓரிடத்திற்கும்
ஒருபகற்பொழுது அல்லது இரவுப்பொழுதில் சென்றுவிடலாம். ஆனால்
பழையகாலங்களில் அப்படியில்லை. நடைப்பயணமாகவும்,
மாட்டுவண்டிப்பயணமாகவும் சில நாள்களேனும் பயணிக்கவேண்டும்.
சென்னையிலிருந்து பழனி செல்லவேண்டுமானால்,
திருச்செந்தூர் செல்லவேண்டுமானால், அல்லது அங்கிருந்து திருமலைக்கோ
காளத்திக்கோ,தணிகைமலைக்கோ வரவேண்டுமானால் ஒருவார பயணமாகிவிடும்.
ஆக, நெடுந்தொலைவு செல்லும் திருத்தலப்பயணத்திற்கு உகந்த மாதம்
மார்கழியில் தொடங்குகிறது. மாசியிலும் பங்குனியிலும் சிறிது தொடர்கிறது.

ஆகவேதான் இயல்பாகவே மார்கழி சிறப்புப்பெற்று பத்திமாதமாகிவிடுகிறது.
இன்றைக்கும் சபரிமலை செல்பவர்கள் மார்கழி,தையில்தான் நோன்பிருக்கிறார்கள்.
தைப்பூச விழாவுக்கு முருகனைக்காண தைமாதத்தில்தான் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வடக்கேயும் மார்கழிக்கு
மார்கசீசம் என்றும், தையிற்கு தைசம் என்றும் வடமொழிப்பெயர்கள் உண்டு. இந்தமாதங்களைதான் அவர்களும் திருத்தலப்பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக கருதுவதை அருத்தசாற்றத்தில் காணமுடிகிறது. அவர்களின் மார்கழியும் தையும் சிலநாள்களின் முன்னரே தொடங்கிவிடும். பத்திக்காலத்துக்கும் பருவகாலத்துக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது. கயிலாயப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அக்தோபர் முதல் மார்ச்சு மாதம்வரை
பயணம் போவதில்லை. மழை, பனிக்கடுமைகளை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, பருவகாலம்தான் மார்கழியின் சிறப்பா? அல்ல.

"இறைவனை அண்டும் ஓர் ஆன்மா, இறையின் அருமையை துய்ப்பதற்கு
இன்னொரு ஆன்மாவையும் தூண்டி தன்னோடு இறைவனைக்காண
கூட்டணி கொள்ளும் அருமையான மாதம்தான் மார்கழி". இதுதான் அதன் சிறப்பு.
இதனாலேயே மார்கழி சிறப்புப்பெறுகிறது.

ஆமாம் - மனிதகுலம், தான் இன்பமாகக்கருதுவதை தன்னோடு சேர்ந்து
பிறரும் துயக்கவேண்டி ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டுறவே மார்கழி நோன்பு.

தமிழ்ச்சிவநெறி தமிழ்க்குமுகத்தை சாதிவேறுபாடின்றி ஏற்றத்தாழ்வின்றி
கட்டியமைக்க முற்பட்டதன் பதிவுகள்தான் மார்கழிப்பத்திமை.

வைதீக நெறியைப்போல சனாதன,வருணாசிரம கருத்துகளால் இறைவழிபாட்டில்
தீண்டாமையை நுழைக்கவில்லை. வைதீகம் ஒரேக்குமுக மக்களில் ஒருபகுதியை
கோயிலுக்குள்ளே வராதே என்றது. தமிழ்ச்சிவ நெறியோ அனைவரையும்
வா வா என்றது. வந்தவர்களை கைகூப்பி அடியாராக அணைத்துக்கொண்டது.
வைதீக நெறியின் ஊடாட்டத்தால் சிவநெறியினர் சிலபல வேளைகளில்
தவறுகளைச்செய்திருக்கிறார்களன்றி, "தமிழ்ச்சிவ நெறியில்" பிழையில்லை. 

தமிழ்ச்சிவநெறியில் "அடியார்க்கூட்டு","அடியார்க்குத்தொண்டு" என்பதற்கு உயர்ந்த மதிப்புண்டு. இதில் உணரவேண்டிய ஒன்றே ஒன்று - "அடியாரும் மக்களும்" வேறு வேறு அல்ல என்பதுதான். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் பாடியதெல்லாம் இறையடியாரை ஒன்று சேர்த்து சிறந்த குகத்தை கட்டியமைக்க வேண்டித்தான்.

மார்கழியில் நாம் பாடுகின்ற திரு எம்பாவையை மாணிக்கவாசகர் அருளியது அதற்காகத்தான்.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக்கேட்டேயும்,

வாள் தடங்கண் மாதே, வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்! கிடந்தாள்! என்னே! என்னே!!

ஈதே எந்தோழி பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்!

"....திருவெம்பாவை-1

பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் ஏது? அடியையும்
முடியையும் அறியமுடியாத நீள் நெடுஞ்சோதியாய் இவ்வுலகினரின்
அகத்துக்கும் புறத்துக்கும் ஒளியாய்த்திகழும் ஈசனை, போற்றி, நாங்களெல்லாம்
பாடி மகிழ்ந்து வருகையிலேயும், மாதே, உன் மனத்தின் உறக்கம் இன்னும்
கலையாமலிருப்பது என்ன விந்தையோ? இறைவன் என்ற உண்மையையும்
உன் செவிக்கு எட்டவிடாமல் உன்னை அழுத்தியிருக்கும் மாயை என்னவோ?

ஆங்கோர் வீதியில், எமது போற்றிகளோடும் புகழ்ச்சிகளோடும், நாங்கள்
நுழைகையிலேயே, அங்கொருத்தியின் கண் மட்டுமல்ல, உள்ளமும்
ஒருங்கே விழித்துக்கொண்ட வேகத்தை எப்படி எம்மால் விவரிக்கமுடியும்?
உள்ளம் விழித்துக்கொண்டதும், அவளின் நெஞ்சில் நிறைந்த சிவனன்பு,
விழித்த கண்களில் நீராய் ததும்பியதோடு, அன்பின் மிகையால்
தொண்டையையும் அடைத்ததோ அறியோம் - ஆனால் அவள் கண்களிலும்
நெஞ்சிலும், கம்மிய குரலிலும்  சிவமே நிறைந்திருக்க, என்ன செய்கிறோம்
என்று தெரியாமலேயே புரண்டு கீழே விழுந்தாள்.விழுந்தாளெனினும், அதுவும் அவளிடமிருந்து சிவத்தை கலைக்க முடியவில்லை.

தன்னை அண்டினோரை அன்பில் கரைத்து ஆட்கொண்டுவிடுவான்  இறைன். இது அவன் தன்மை. அப்படியிருக்க, அவனை அண்டாமல் உன்னைத்தடுக்கும் மாயை என்னவென்று யாமறியோம்?

அவன் கழல்களையும் கருணையையும் ஆழ்ந்து சிந்தித்துப்பார் என் தோழி!
அம் மாமாயையில் இருந்து விடுபட்டு நீ எழுந்தோடி வந்துவிடுவாய் என் தோழி!! நாமனைவரும் ஒன்றாகிவிடுவோம் என் தோழி!!

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும்
மற்றொரு ஆன்மாவை அன்போடு தூண்டி ஈர்த்துக்கொள்ளும் குமுக
ஒற்றுமைப்பாட்டு இஃது. இறையை முன்வைத்து குமுகத்தை கட்டியெழுப்பும்
பெருநெறியாகுமிது. குலதெய்வ வழிபாடுகள் உறவுகளை உறவுசேர்க்கிறது;
சைவப்பெருநெறி குமுக மக்கள் யாவரையும் உறவு சேர்க்கிறது.

சமயநெறிகள் மக்களை  வேறுபாடின்றி வா வா என்று அழைக்கும்போது, ஒற்றுமை பெருகி ஏற்றத்தாழ்வு குறைகிறது. வாசலிலேயே நில், உள்ளே வராதே என்றபோது குமுகம் பாழ்பட்டுப்போனது.

திருவெம்பாவையின் முதற்பாடலே மனதைக்கரைத்துவிடுகின்றது. சாமிப்பாட்டு
சாமிப்பாட்டு என்றளவிலேயே பலரும் புரிந்து கொள்கின்ற திருவாசகப்பாடல்கள்
ஆழ்ந்த அகப்பாடல்கள்.அந்த அகத்தின் அளவிற்கும் அடியுமில்லை முடியுமில்லை.

குறிப்பு: ஏல் = மீள்தல், (Reviving from a state)
                ஓர் = சிந்தி, ஆய், ஆராய்
 அன்புடன்
நாக.இளங்கோவன்
19/12/2015

Wednesday, November 04, 2015

நாயன்மார்களின் புடைப்புச்சிற்பங்கள் - மணற்கேணி ஆய்வுக்கட்டுரை

நாயன்மார்களின் சிற்பங்களில் உள்ள சித்திரிப்புகள்
பற்றிஅருமையானதோர் கட்டுரையை, கடந்த மணற்கேணி
இதழில் (ஆக/15) தேன்மொழி எழுதியிருக்கிறார்.
("வரலாற்றில் சைவ நாயன்மார்கள் புடைப்புச்சிற்ப சித்திரிப்புகள்:
ஒரு ஆய்வு" என்பது தலைப்பு.)

சைவம், நாயன்மார்கள், பெரியபுராணம் பற்றி பல்வேறு
கருத்துகளை சொல்லியிருந்தாலும், சித்திரிப்புகளின்
வேறுபாடுகளை  நுணுகிப்பார்த்திருக்கும் கட்டுரையாளரின் திறன்
பாராட்டுக்குரியது. பெரியபுராணத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நாயன்மார்களின் வரிசையிலேயே அமைக்கப்பட்ட
சித்திரிப்புகளை, பெரியபுராணத்தின் காலத்திற்கு
சற்றுமுன்னரும், பின்னருமாக உருவாகிய கோயில்களை
எடுத்துக்கொண்டு, அவர் ஆற்றியிருக்கும் ஆய்வு சிறப்பானது.
இதற்காகவே ஒருமுறை திருப்பனந்தாள், புரிசை, மேலக்கடம்பூர்,
தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களுக்கும் செல்லவேண்டும்
என்ற எண்ணத்தை கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பெரியபுராணத்தின் காலம் பற்றிய கேள்விக்குறியும்
சிந்திக்கவைக்கிறது.

புடைப்புச்சிற்பங்களை ஆக்கிய சிற்பிகளின் திறனை
எடுத்துக்காட்டுகிறது கட்டுரை. வாய்வழியாகவும், திருத்தொண்டர்
தொகையின் வழியாகவும் நாயன்மார்களைப்பற்றி மக்கள்
அறிந்திருந்த செய்திகளை நன்குணர்ந்து, இலக்கிய அறிவுமிக்க
சிற்பிகள் சிற்பங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பதை
கட்டுரை நுணுகிப்பார்த்து சொல்கிறது.

ஒவ்வொரு கோயிலிலுமுள்ள சிற்பங்கள் வெவ்வெறு காலத்தில்
வெவ்வெறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்
என்பதுதான் இயல்பு. அப்படிப்பார்க்கும்போது நாயன்மார்களின்
சிற்ப வடிவங்களுக்கு யாரோ  "முதன்மை வடிவம்" கொடுத்திருக்க
வேண்டும். அது யார்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இதற்கான விடையை கட்டுரையில் காணமுடியவில்லை.
எல்லா சிற்பிகளுக்கும் ஒரேமாதிரியான அடவு மனதில்
உருவாகியிருக்கும் என்று சொல்லமுடியாது. பெரும்பாலும்,
சித்திரிப்புகள் ஒன்றாக இருக்கையில், யாரோவொரு
சைவப்பெரியவரோ அல்லது மடமோ, ஒரு பெரிய சிற்பியை
வைத்து முதன்முதலில் நாயன்மார்கள் சிற்பங்களுக்கு வடிவம்
கொடுத்திருக்க வேண்டும் என்று கருத இருக்கிறது. சிற்பங்களை
ஆழ்ந்து ஆய்ந்திருக்கும் தேன்மொழி அவர்களிடம் "முதற்சிற்பி
யார்" என்பது பற்றிய கருத்துகள் இருப்பின் அறியவிழைகிறேன்.

அதேவேளையில், சிற்பங்களில் உள்ள காட்சிகளுக்கும்
பெரியபுராணம் சொல்லும் செய்திக்கும் உள்ள  முரண் பற்றியும்
இங்கே குறிப்பிடவேண்டும். கட்டுரையில், புரிசையில் உள்ள
எறிபத்த நாயனாரின் சிற்பக்காட்சியில் (படம் 10/3), இறைவன்
விடைவாகனராய் உமையோடு தெரிசனம் தருவதாக
அமைந்திருக்கிறது. ஆனால், பெரியபுராணத்தின்படி, எறிபத்த
நாயனார் புராணத்தில் "ஒளிவிசும்பில் எழுந்த ஒலியாக"
இறைவனின் காட்சி அல்லது அருள் அமைகிறது.

"கண்ணுதலருளால் வாக்குக்கிளரொளி விசும்பின்மேல்
 வந்தெழுந்தது பலருங்கேட்ப...." (47)
"இருவருமெழுந்து வானிலெழுந்தபேரொலியைப்போற்ற..." (50)
(இங்கு இருவரும் என்றது எறிபத்தரையும், புகழ்ச்சோழரையுமாம்)

பெரியபுராணத்தில் உமையொடும் விடைவாகனராய் இறுதியில்
தெரிசனந்தருவது அதிகமெனினும் மற்றும்பல வடிவங்களில்
இறைவன் எழுந்தருளுகிறான்.

ஆகவே, புரிசைச்சிற்பம், என்னுடைய சிற்றறிவுக்கு தவறான
சித்திரிப்பாகவே தென்படுகிறது. இது தவறா, சரியா என்பது
வேறுவிதயம். ஆனால், அது பெரியபுராணத்திற்கும் சிற்பங்களில்
நாயன்மார் சித்திரிப்புக்கும் உள்ள இடைவெளியை
தெளிவாகக்காட்டுகிறது.

அப்படியென்றால், பெரியபுராணத்திற்கு படிகள்/வேற்றங்கள்
(versions)உண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்றெனில், சித்திரிப்புகளில் சிற்பிகளின் புரிதல்கள், அல்லது
ஆலயமெழுப்பியவர்களின் புரிதல்களில் வேறுபாடு உண்டென
அறியமுடிகிறது.

சிவகாமியாண்டாரை பெண்மணியாக சில சித்திரிப்புகள்
காட்டுவதாக தேன்மொழி குறிப்பிடுவதொடு, மேற்சொன்ன
கருத்தையும் ஒட்டிப்பார்க்கவேண்டும். உண்மையில்,
கட்டுரைவாயிலாக, சிவகாமியாண்டாரை சித்திரித்தது பற்றி
அறிந்தது, மீண்டும் மீண்டும் சிவகாமியாண்டாரை
படிக்கத்தூண்டுகிறது.

"அரச ஆதரவு பெற்றிருந்த சைவமதத்தை மக்கள் ஆதரவு பெற்ற
மதமாக மாற்றும் முயற்சியில் இந்த நாயன்மார்கள்கதை
சித்திரிப்புகள் பங்காற்றியுள்ளன" என்ற கட்டுரையாளரின்
பார்வையும் எழுத்தும் சுருக்கமும் அழகும் நிறைந்தன. அதற்கு
அவர்  அளித்திருக்கும் சில விளக்கங்களும் ஏற்கத்தக்கவை.
குமுகத்தின் பலபிரிவுகளையும், வாழ்வியல் வேறுபாடுகளையும்
அரவனைத்தெழுந்ததாற்றான் அது  இயக்கம் எனப்பட்டது
எனக்கருதலாம். சைவத்தைப்பொறுத்தமட்டில், இந்தக்குமுக
அரவனைப்பு என்பது சேக்கிழார் காலத்திலோ, அல்லது பிற்கால
சோழ அரச ஆதரவிலோ மட்டும் நிகழ்ந்ததல்ல. சம்பந்தராலும்,
அப்பராலும் இடப்பட்டு அருமையான வித்துதான் அது.
சேக்கிழாருக்கு ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரே
விதைக்கப்பட்ட குமுகக்கட்டியல் அது என்றால் மிகையல்ல.
இதைச்சரியாக புரிந்துகொள்ள, ஞானசம்பந்தரின்
திருவானைக்கா பதிகம் (வானைக்காவில் வெண்மதி),
நமச்சிவாய பதிகம், பவனமாய்ச்சோடையாய் என்று தொடங்கும்
திருவாரூர்ப்பதிகம்போன்றவை கூர்ந்து நோக்கத்தக்கன.
அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரின் பல பாடல்களும்
குமுகக்கட்டியல் நோக்கில் பார்க்கத்தக்கன, நீள எழுதத்தக்கன.
அருமையானதொரு கட்டுரைக்கு மீண்டும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும் தேன்மொழி அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்