Pages

Wednesday, February 20, 2008

சரோசாதேவியின் நடிப்பை.........

சிவாசிகணேசனின் நடிப்பை ஆசாரி சாதிக்கு
மட்டும் பிடிக்கும், ஊரில் உள்ள வேறு யாருக்கும்
பிடிக்காது (நல்ல ஊருப்பா அது :-) ),
ம.கோ.இரா வின் "பைப்பு" "பம்பு" வசனங்களில்
உள்ள ஆழ்ந்த பொருள்கள்,
அப்புறம் ஒரு மட்டமான படக்காட்சியை
மேற்கோள் காட்டி 'மர்லின் பிராண்டோவாக்கும்'
என்று கலாய்க்கும் சிந்தனைக்களச் சிற்பிகள்
அதே பாணியில் நடிகை சரோசாதேவியை
அங்கத விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணிப் பார்த்தேன். புல்லரிக்கவே
செய்கின்றது.

பழைய காலத்திலேயே இருந்தால் எப்படி?
தற்கால புதிய நமீதா, பழைய சகீலா போன்றோரை அங்கத
விமர்சனம் செய்யக்கூடாதா என்ற ஆதங்கமும்
நமக்கு இல்லாமல் இல்லை ;-)

அப்படிச் செய்தால், சிவாசி, ம.கோ.இரா
விமர்சனங்களுக்காக சுவரொட்டி அளவுக்குப்
போயிருக்கும் இதழ் போன்ற பொறுப்புள்ள
அனைத்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுத்
தளங்களும், பூரண கும்ப மரியாதையோடு அங்கத
விமர்சனங்களை போட்டி போட்டுக் கொண்டு
நிச்சயம் வெளியிட்டுத் தமிழ் சேவை செய்வார்கள்.

வரலாறு இதையெல்லாம் செய்யும் என்ற திடமான
நம்பிக்கையுடன்,

நாக.இளங்கோவன்

சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?

வரலாற்றில் இடம் பிடித்து விட்டதாகக் கருதிக் கொள்பவர்கள்
வரலாற்றை அங்கதம் செய்து இடம் பிடித்து விட முடியுமா என்று தெரியவில்லை.

அங்கதங்கள் அடிப்படை அறிவை மறைக்காமல்
இருந்து விட்டால் மனிதன் அங்கதமாகாமல்
தப்பி விடலாம்.

சிவாசிகணேசன் பற்றிய பலரின் பாமர
விமர்சனங்கள் முற்போக்கு என்ற மூடியைப்
போட்டு வரும்போதும் உண்மைகள்
ஒழிந்து போய்விடுவதில்லை.

ஒரு எழுத்தாளரைப் பற்றிப் படம் எடுக்க
வேண்டுமானால், அவர் கக்கத்தைக் காட்டிக்
கொண்டு, நெஞ்சு வரை பூவேட்டியைக்
(பூப்போட்ட வேட்டி) கட்டிக் கொண்டு,
மேசையைப் பார்ப்பதும் மேலே பார்ப்பதுமாய்
ஒரு மூனு மணிநேரம் உட்கார்ந்திருப்பதையே
படமா எடுத்துக் காண்பித்தால் அதுதான்
இயல்பான நடிப்பு என்று கொஞ்சுவார்கள் போலிருக்கிறது
விமர்சனக் காரர்கள் :-))

கடந்த சூலை மாதம் சிவாசியின் நடிப்பு பற்றி ஒரு
மடற்குழுவில் செய்த உரையாட்டு கீழே.
----------------------------------------------------------

திருமால் பெருமை என்று ஒரு படம்.
அந்தப் படத்தில் குறுநில அரசனாக ஒரு வேடம்.
அதில் அவர் ஒரு காட்சியில் நடந்து போன
அழகு கண்டு கட்டபொம்மன், இராசராச சோழன்
ோன்ற படங்களை
எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதை உணர்ந்தேன்.

எனது இளவயதில் "என்னடி மீனாட்சி...சொன்னது
என்னாச்சு" என்ற பாடலுக்குக் கமல் ஆடிய ஆட்டமும்,
சகலகலாவல்லவனில் அவர் ஆடிய ஆட்டமும் என்னையும்
ஈர்த்திருந்தன. ஆனால் கொஞ்சகாலத்திலேயே அது மிகை என்று பட்டது,

சலங்கை ஒலியை இரசித்த பிறகு என்னால்
மற்றவற்றை இரசிக்க முடியவில்லை. அவை மிகையாகத்
தோன்றுகின்றன.

அதற்கும் சற்று முந்திய சோலே படத்தில்
அமிதாப்பின் சில நடன அசைவுகள்
என்னக் கவர்ந்ததுண்டு.

ஆயினும் சகலகலாவல்லவன் நடனத்தை, என்னை
விட வயதில் முதிர்ந்தவர்கள் இன்றைக்கும் இரசிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஆகையால் வயதும் இதில் காரணமல்ல என்று
தோன்றுகிறது,

அந்தக் காலத்தில் அப்படித் தேவைப்பட்டது
என்றும் பொத்தாம் பொதுவிலும்
என்னால் சொல்லி விடமுடியவில்லை.

பாட்சா, தளபதி இரசினிகாந்த் என்னைக் கவர்ந்த
அளவிற்கு பரட்டை இரசினியோ பில்லா
இரசினியோ கவர்ந்ததில்லை.

ஆனால் பாட்சா இரசினியிலும் சரி பரட்டை
இரசினியிலும் சரி மிகையான நடிப்பு என்பது நிறையவே இருக்கும்.
நாயகன் கமலும், ஆளவந்தான் கமலும்

அப்படியே. படையப்பாவும், நீலாம்பரியும் காலை முகத்திற்கு
நேரே தூக்கித் தூக்கிக் காண்பித்தது மிகை என்ற வகையிலேயே
சொல்லப்படக் கூடிய ஒன்று,
(அது ஒரு கலாச்சாரக் கேடு என்பது வெறு விதயம்)

எப்படியிருப்பினும் அந்த மிகையான நடிப்பு
(சிவாசி, கமல், இரசினி) என்பது
அந்தந்தக் கலைக்கால கட்டத்தில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியே இருக்கிறது,

என்னைப் பொறுத்த வரையில் சிவாசியின் கன்ன
அசைவும், இரசினியின் துடிப்பும்,
கமலின் நளினமும் நடிப்பின் மிகையானவையாகத்
தெரியவில்லை.

ஆனால், இந்த மிகை என்பதன் பொருள் மிகை
என்பது அல்ல என்று உணர்கிறேன்.

இரசினி படம் எடுக்க வேண்டுமானால் அதற்கு
ஒரு சில தன்மைகள் மட்டுமே
வைத்து எடுப்பார்கள். இது நாமறிந்த உண்மை.

ஏன் இரசினியை வைத்து அழகி அல்லது தவமாய் தவமிருந்து போன்ற
படங்கள் எடுக்கப் படுவதில்லை?

ஏனெனில் அது அவருக்கு அவ்வளவாகப்
பொருந்தாது என்ற ஒரு படிமத்தை
ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதே போலத்தான் சிவாசி கணேசனுக்குப்
பொருந்தாத பல குப்பைப் படங்களை
அதுவும் 70களின் பிற்பகுதியில் இருந்து எடுத்து
அவரின் பெயரை சற்றுக் கெடுத்து விட்டார்கள்.

அதை விட மூத்த வயதில் முதல்மரியாதை படத்தின் சிறப்பை
அவரின் திறமைக்கு நான் சான்றாகச் சொல்வேன். தேவர் மகனையும் கூட,
ஏன் தாவணிக் கனவுகளையும் எண்ணிப் பார்த்தால்
அவையும் பின்னாளைய சிறந்த படம் நடிகர் திலகத்திற்கு என்று சொல்லலாம்,

ஆகவே, மிகை நடிப்பு என்ற எண்ணம்
"பொருந்தா நடிப்பினால்" வந்தது,
சிவாசிக்கு மட்டுமல்ல ஏனைய நடிகர்களுக்கும்
இந்தப் பொருந்தா நடிப்பு உண்டு.
அது பொருந்தாத பொழுதெல்லாம் அது
overacting என்று சொல்லப்படுவதாக
நான் கருதுகிறேன்.

அந்த வகையில் சிவாசிக்கு மிகையான நடிப்பு
ஒரு சரவல் இல்லை. ஆனால்
பொருந்தா நடிப்பு அமைந்தது என்று சொல்லலாம்.
ம.கோ.இரா ஏழைகளைக் கட்டிப் பிடித்தது
முதற்கொண்டு பல விதயங்களில்
அவரின் மிகை என்று சொல்லப் படுகின்ற
நடிப்பைக் காணலாம்.

உச்சமாக நான் கருதுவது என்னவென்றால் ஒரு
படத்தில் பதுமினியின் நடனத்தோடு போட்டி நடனம் ஆடி,
அந்தப் போட்டியில் அவர் வெல்வார். மன்னாதி மன்னன் என்ற படம்.

நான் அந்த நடனப் போட்டிக் காட்சியை பார்த்து
இளவயதிலெயே கதிகலங்கிப் போயிருக்கிறேன்.

நாட்டியப் பேரொளி ஒரு சிறந்த கலைமாமணி.
அவரால் தமிழகத்தில் பரதம் மேலும் தழைத்தது
என்று சொல்லலாம்.

ஆணானப்பட்ட நடிகர் திலகமே நாயனத்தைக்
கையில் வைத்துக் கொண்டு தில்லானாவுக்கு
வாசித்து அப்படியே அமர்ந்து
கொண்டார். அந்தப் புகழ் பெற்ற
போட்டியில் வெற்றி இருவருக்குமே. அது மிகப்
பொருந்திய நடிப்பு,
இயல்பான கலையை இருவருக்கும் தக்கவாறு
பொருத்திக் கொண்டதால்
அது அவ்வளவு சிறப்புப் பெற்றது.

ஆனால், இந்த மா.கோ.இரா அவருடனே
போட்டி நடனம் ஆடி, அதில் வெற்றி வேறு பெறுவார். அதைப்
பார்க்கும் போதெல்லாம் பதுமினிக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு
விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் :-)

பதுமினியின் 13 நடனங்கள் கொண்ட நெருவட்டு
கிடைத்தது. அற்புதமான தரவுகள் கொண்ட தொகுப்பு அது.

சொக்கவைக்கும் நடனங்களில்
மா.கோ.இரா மற்றும் பதுமினியின் போட்டி நடனமும் ஒன்று.

என்னைப் பொறுத்தவரை அதுவும் மிகையான
நடிப்பு என்று சொல்வதை விட
பொருந்தா நடிப்பு என்று சொல்லலாம். இதே
போல இன்னும் ஒரு பத்துப் படத்தில்
அவர் ஆடியிருந்தால் ம.கோ.இரா கதி
என்னவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது :)

எத்தனையோ அரச வேடப் படத்தில் ம.கோ.இரா
நடித்திருந்தும், பிறர் நடித்திருந்தும்
தமிழகத்தில் அரசன் என்றால் நினைவில் வருவது
எல்லாமே சிவாசியின் நடிப்பே.

அதில் மிகை யிருந்தால் அந்த மிகையே அவரின் சிறப்பு.

இன்னொரு கோணத்தில் பார்த்தோமானால்,

1975க்கு முன் , பின் என்று படங்களைப்
பார்க்கலாம். பழைய படங்களுக்கும் புதிய படங்களுக்கும்
உள்ள வேறுபாடுகள் மிகக் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியன.

செறிவான பாடல், அளவான இசை, வலுவான
உரையாடல், அரங்க அமைப்பு,
நெறியாளல், ஒலி/ஒளி அமைப்பு என்ற

எல்லாவற்றிலும் கலைஞர்களின் "மிகையான"
ஆழ்ந்த சிந்தனை மற்றும் கலையுணர்வு
பங்களிப்பாக இருக்கும். அதாவது முதிர்ந்த
கலைஞர்களின் செவ்விய கூட்டாகப் படம்
வெளிவரும். அம்மாதிரியாக வந்த படங்களும்
காட்சிகளும்தான் அழியாமல் இருக்கின்றன.

இங்கே நான் "மிகையான" என்று சொல்வது
"வலுவான" என்ற பொருளில்.
பராசக்தியின் உரையாட்டிற்கு இன்றைய நடிகர்கள்
எத்தனை பேரால் நடித்து விட முடியும்?
கெளரவம் படத்திலே சிவாசியின் தான்மைக்குப்
(ego) பொருத்தமாக உரையாடல்
எழுத எத்தனை பேரால் முடியும் என்று எனக்குத்
தெரியவில்லை.

பதுமினிக்குப் பிறகு, வைசெயந்திமாலாவிற்குப்
பிறகு தமிழில் எத்தனையோ
படங்கள் பரதத்தோடு வந்துவிட்டன சலங்கை ஒலி
உட்பட. ஆயினும், பதுமினியே இன்றைக்கும் நாட்டியப் பேரொளியாக
இருக்கிறார்.

மன்னவன் வந்தானடி பாடலைப் பார்க்கும்போது
ஒவ்வொரு மெல்லிய விதயத்திலும்
பதுமினியின் நடனத்தையும் தாண்டி, காட்சி
அமைப்பு, இசை, நடனம், நெறியாளல்,
ஒளிஓவியம், நடன அரங்கு, நடிப்பு, கதை, சூழல்,
பாடல், பாடலின் சந்தம், பாடலின் செறிவு
என்று ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்
கொள்ளும்.

அப்படியான சிறந்த கலைஞர்கள்.
எல்லாத்துறையிலும் சிறந்த கலைஞர்கள் ஒன்று
சேர்ந்து தரும் அந்த மிகையான(வலுவான)
கலைக்கூட்டை நடிப்பில் காட்டும்போது சில
விதயங்கள் சிலபேருக்கு சற்று மிகையாகத்
தோன்றக்கூடும்.

ஆனால், அவை மிகையல்ல! உண்மையில் வலு!

அது ஒரு சவால்.

உரையாடல், சூழல், கதை, இசை, பாடல் போன்ற
பல கலைஞர்களின் சிறந்த ஆற்றலுக்கு
ஒருங்கே ஈடு கொடுக்க வேண்டியிருந்தது
சிவாசிக்கும் அவர் கால மற்ற நடிகர்களுக்கும்.

அந்தச் சூழல் இன்று இல்லை. கலை,
கலைஞர்களின் ஆற்றலின் சங்கமம்
என்பதற்கு ஈடு கொடுக்க நடிப்பைத் தவிர
மற்றவை பெருத்துவிட்டன.

மீண்டும் சொல்கிறேன் - அன்று இருந்த நடிப்புக்
கலைஞர்கள் யாவருமே, கலையிலும் திறனிலும்
உயர்ந்திருந்தனர். நடிப்போடு கூடிய பிற
கலைஞர்களின் உயர்ந்த திறனுக்கு ஈடு கொடுக்க
வேண்டிய கட்டாயம் நடிக நடிகையருக்கு
இருந்தது.

இன்றைக்கு திரையில் நடிப்பிற்கு
அவசியம் இல்லாமலே போய்விட்டது.
ஆனால் அன்று இருந்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/2007

Sunday, February 17, 2008

சிலம்பு மடல் 37

காப்பிய ஆசிரியரின் துறப்பு/துறவு!

காப்பிய ஆசிரியர் அரசு துறந்தார் என்றும்
அகல் இடப் பாரம் நீக்கினார் என்றும்
காப்பியம் சொல்கிறது.

"வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கிக்
கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்இடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்து
அந்தம்இல் இன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி"
...சிலம்பு:வரம்தரு காதை:173-183

தேவந்திமேல் கண்ணகி தெய்வம் எழுந்தருளிக்
காப்பிய ஆசிரியரின் சிறப்பை சொன்ன இடம் அது.

"குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு...."
...சிலம்பு:பதிகம்:1-2

காப்பிய முடிவிலும் முகப்பிலும் இருக்கும் இந்த
இரண்டு குறிப்புகள் ஆசிரியரின் துறவு/துறப்பைப்
பற்றிப் பேசுகின்றன.

பல்வேறு நூலாசிரியர்களும் செங்குட்டுவன்
அரசனாகும் பொருட்டு இளங்கோ துறவியானார்
என்றும், பெரிய ஈகையைச் செய்தார் என்றும்
சொல்கிறார்கள் இந்தக் குறிப்புகளின்
அடிப்படையில். இன்னும் சிலர் அண்ணனுக்கு
வழி விட்டு தம்பி துறவியானார் என்று கூடச்
சொல்லத் தலைப்படுகிறார்கள்.

சிலம்பாசியர் துறந்தது உண்மை. அதை மறுக்க
வாய்ப்பில்லை.

எதைத் துறந்தார்? என்றால், அரசைத் துறந்தார்
என்று தெளிவாகத் தெரிகிறது.

ஆனால்,
எந்த அரசைத் துறந்தார்?
துறவின் தன்மை எத்தகையது?
என்ற இரு வினாக்களும் முக்கியமானவை.

சிலப்பதிகாரத்தைப் படிக்கும் யாவர்க்கும்
இளங்கோ முற்றும் துறந்த சாமியார்
என்ற எண்ணத்தைத் தருகிறது. அதுவும்
சிலர் சமணர் என்று சொல்வதையும் கேட்டு
அவர் சமணச் சாமியார் அல்லது சமணத் துறவி
என்று கூறுகின்றனர். அவர் எந்த நெறியைப்
பின்பற்றினார் என்பதெல்லாம் வேறு விதயம்.

இமயவரம்பன் சேரக் கொடியை இமயத்தில்
பொறித்த சேரப் பேரரசன். அவனுக்கு
இரண்டு பிள்ளைகள்; செங்குட்டுவன் மற்றும்
அவன் தம்பி.

இந்த இரண்டு பேருமே இமயவரம்பன் அரசின்
இளவரசர்கள். ஆட்சிப் பொறுப்பில்
இமயவரம்பன். "நுந்தை தாள்நிழல் இருந்தோய்"
என்று சொல்லப்படுவதைக் காண்க.

இவர்களோடு அமர்ந்திருக்கும் போது நிமித்திகன்
என்று உரைக்காரர்களால் சொல்லப்படும் ஒருவர்
சில திருச்சொற்களைச் சொல்கிறார்.

"...அரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டு..."

இந்தச் சூழலை நன்கு கவனிக்க வேண்டும்.
இமயவரம்பன் ஆட்சியில் இருக்கிறான்.
அவனுக்குப் பிறகு பட்டத்துக்கு யார்
வரவேண்டும் என்றால் - யாரையும் அவன்
கேட்கவேண்டியதில்லை. மரபுப்படி மூத்தவன்தான்
பதவிக்கு வரவேண்டும். அவன்தான்
பட்டத்தரசனாகப் பட்டம் கட்டப் படுவான்.
இதுதான் மரபு.

இதில் இமயவரம்பன் எதற்கு நிமித்திகனைக்
கேட்க வேண்டும்? அப்படியே கேட்டிருந்தால்
என்ன கேட்டிருப்பான்?

எப்பொழுது "குட்டுவனுக்குப் பட்டம் கட்டலாம்"
என்று கேட்டிருப்பான்; கூடவே எங்கே எப்படி
என்றும் கேட்டிருக்கலாம்.

இமயவரம்பன் கேட்கும் போது கூடவே
"துறப்பது" என்பதை அறிந்த வளர்ந்த
சின்ன மகனும் அவனுக்கு மூத்தவனான
பட்டத்துக்குரிய அண்ணனையும் வைத்துக்
கொண்டு கேட்கின்றான் என்றால்
அண்ணன் தம்பிக்குள் மன இடர் வரக்கூடிய
ஒன்றைக் கேட்க மாட்டான். அந்த முதிர்ச்சி
இல்லாதவன் இமயம் வரை வெற்றி கண்ட
பேரரசனாக இருக்க மாட்டான். (ஒரு ஏழைத்
தகப்பனுக்குக் கூட இந்த முதிர்ச்சி இருக்கும்.)

அது மட்டும் அல்லாது, அரண்மனையில்
அரசனின் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை
சோதிடம் அல்லது நிமித்தம் பார்க்காமல்
இருந்திருப்பார்கள் என்று எண்ண வாய்ப்பில்லை.

அந்த அவையில் "உரை செய்தவன்" என்றுதான்
காப்பியம் கூறுகிறது. உரை செய்பவன் என்றால் யார்?

எதிர்காலம் பற்றிக் குறிப்புகள் சொல்வதில் பல
வகை உண்டு. சோதிடம், கைரேகை போன்று
பல வகைகள்.

அருள் வாக்கில் பல வகையுண்டு.

சிலம்பில் பல இடங்களில் இப்படியான இடங்கள்
உண்டு. வேட்டுவ வரியில் சாலினியாட்டம்
சொல்லப் பட்டிருக்கிறது. கொற்றவை (அம்மன்)
ஒரு பெண்ணின் மீது ஏறி ஆடி அருள்வாக்கு
சொல்வது (ஏறத்தாழ வேப்பிலையாட்டம் போல
இருக்கும்). குன்றக்குரவையில் வேலன் ஆட்டம்
(வெறியாட்டு) சொல்லப்படுகிறது. (காவடியாட்டம்
போல இருந்திருக்கக் கூடும்) வேலன் ஆட்டம்
ஆடக்கூடிய ஆடவன் மேல் முருகன் ஏறி அருள்
வாக்கு/உரை சொல்வது.

இதுவன்றி சிலம்பில் அருவுரை பேசப்படுகிறது
(அருவ உரை << அருவுரை: அருவம் << அரு;
அருவம் = அசரீரி). அதற்கும் மேலே
எல்லாவற்றுக்கும் மேலாக மீனாட்சி அம்மன்
தெய்வமே பேசுகிறது. வரம் தரு காதையில்
கண்ணகி அம்மை பேசுகிறது.

அரண்மனையில் இமயவரம்பன் முன்னிலையில்
எவ்விதமான உரைசெய்வார் இருந்திருக்க
வேண்டும்?

வேலனாட்டமும் சாலினியாட்டமும்
இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால்
காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும். அது
மட்டுமல்ல இந்த இரு ஆட்டத்திற்கும் பம்பை
உடுக்கு முதலான இன்னியக் கருவிகளை வாசித்து
வேலனையோ சாலினியையோ அழைக்க
வேண்டும். அந்தச் சூழல் இருந்ததாகத்
தெரியவில்லை.

சோதிடம் என்பது காலக் கணிதம். காலக் கணிதர்
சொல்லியிருந்தால் ஏதாவது இராசி, நட்சத்திரம்
போன்றவற்றைச் சொல்லித்தான்
சொல்லியிருப்பார். அப்படிச் சொல்லப்படவில்லை
காப்பியத்தில்.

"திருப்பொறி" என்றால் ஒரு வேளை ஏதாவது
உடம்பில் அல்லது உள்ளங்கையில் உள்ள குறியா
என்றால்? - இருக்கலாமோ என்ற எண்ணம்
வருவது இயல்பு. அந்த அடிப்படையில் கூட
பலரும் உரை எழுதியிருக்கலாம்.

ஆனால் அதுவும் இல்லை என்று ஆதரவு
தருகிறார், அப்பர் திருமூலர். 'அரைசு
வீற்றிருக்கும் திருப்பொறி'
உண்டு என்பது மந்திர முடிச்சு! அதைத்
திருமூலரால் மட்டும்தான் அவிழ்க்க முடிகிறது.

அரண்மனையிலே அரசகுரு போன்றோர்
இருப்பர். ஆன்ம, சமய நிலைகளில் அரசனுக்கு
வழிகாட்டும் நிலையில் ஞானமும் அருளும்
நிறைந்த பெரியார் இருப்பர். அப்படியான
பெரியார் ஒருவர், இமயவரம்பன் அரண்மனையில்
இருந்திருக்க வேண்டும்.

ஞானமும் அருளும் நிறைந்த அருளாளராகவே
அவர் இருந்திருக்க வேண்டும்.

இப்படியானவர்கள், பேரரசிற்கு ஞானகுருவாகவும்,
சமயகுருவாகவும், அரசகுருவாகவும் இருப்பது உண்டு.

அவரிடம் அரசியல் மற்றும் பட்டம் கட்டுவது
பற்றிய அரச ஆலோசனையின் போது அந்த
அருள் நிறைப் பெரியார், செங்குட்டுவன்
பேரரசனாக்குவது பற்றி பேசிவிட்டு,
இளங்கோவுக்கு "திருப்பொறி அரைசு
வீற்றிருக்கிறது" என்று சொல்லியிருக்க வேண்டும்.

பல நூல்கள் சொல்வது போல அது அரசாளும்
அங்க இலக்கணம் காட்டும் பொறி அல்ல.

அந்தப் பொறியானது திருப்பொறி; அது
இளங்கோவிடம் அமைந்திருக்கிறது; எப்படி
என்றால் அரைசு வீற்றிருப்பது போல.

ஓங்கிச் சிறந்த ஞானப் புலன் இளங்கோவிடம்
அமைந்திருக்கிறது என்று அவர் சொல்கிறார்.

"அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு"
என்பதை ஆழ்ந்து படித்தால் அது தரும்
பொருள் "திருப்பொறி அரைசு வீற்றிருக்கிறது"
என்றுதான் வருகிறது. அதாவது
அந்தத் திருப்புலன் என்ற ஞானப் புலன்

நாட்டையெல்லாம் ஆளும் அரசனைப் போல
ஓங்கி உயர்ந்து இவனிடம் குடி கொண்டிருக்கிறது
என்று அது சொல்கிறது.

ஐம்பொறிகள் என்றால் மெய், வாய், கண், மூக்கு,
செவி என்ற ஐந்தினைக் குறிக்கும்.

எல்லா மனிதருக்கும் இருக்கும் மேலும் ஒரு
பொறி, மனம் அல்லது சிந்தை. ஒரு சிலருக்கே
அந்த சிந்தையில் இறைவன் அருளால் பெருஞ்ஞானப்
பெருஞ்சுடராய் ஞானப்புலன் விளங்குகிறது. அந்தப்
பெருஞ்சுடரை, பெருஞ்ஞானத்தைக் கொண்ட
சிந்தையைத்தான் "திருப்பொறி" என்று கூறுகிறது
காப்பியம். அந்தத் திருப்பொறி குட்டுவன் தம்பி
இளங்கோவிடம் வீற்றிருக்கிறது, குடி
கொண்டிருக்கிறது என்பதையும், அது ஓங்கி
உயர்ந்து நிறைந்து ஆளுமை செய்கிறது
என்பதைச் சுட்டவே "அரைசு வீற்றிருக்கிறது"
என்றும் சொல்கிறார் அந்தப் பெரியார்.

பொறி என்ற புலனில், திருவைக் கூட்டி
அதை சிம்மாசனம் போட்டு இளங்கோ மேல்
அமர வைக்கிறது காப்பியம்.

இப்பொழுது பாருங்கள் எங்கப்பன் மூலன் எப்படி
பல முடிச்சுகளை அவிழ்த்து விடுகிறான் என்று!

"கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே"
...திருமந்திரம்:த1-கல்வி-பாடல்291
(பழனியப்பா பதிப்பு, யி.வரதராசனார் உரை)

விளக்கம்: "உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப்
பார்க்கும்போது, அவர்கள் கருத்தில் ஞானக்கண்
புலனாகிறது. அவர்கள் அவ்வாறு புலனாகும்
உண்மையைச் சிந்தித்து, பிறர்க்கு உரைப்பர்.
கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறருக்கு
உணர்த்தி அவர்களது ஞானக்கண்ணை
விளங்கும்படி செய்வர்".

கற்றறிவாளர் கருத்தில் ஞானக்கண் புலனாகிறது
என்று சொன்னவிடத்து, அதுதான்
கற்றறிந்த இளங்கோவின் மேல் அரைசு
வீற்றிருக்கும் திருப்பொறி என்பது
அறியப்படுகிறது.

"கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்"
என்றவிடத்து இமயவரம்பனின் அரசவைப்
பெரியாரும் ஞானக்கண் பெற்றவர் என்பதும்
தனது ஞானத்தினால் இளங்கோவின் ஞானத்தை
அறிகிறான். அந்த ஞானம் பெருஞ்சுடர்
என்று அறிகிறான். அதை உரை செய்கிறான்
என்றும் அறியப்படுகிறது. அந்த ஞானக்கண்ணை
அந்தப் பெரியார் விளங்கவும் வைத்திருப்பார்.

ஒரு பெரியாரை "உரைசெய்தவன்" என்று
காப்பியம் சொல்லுமா? என்ற கேள்விக்கு,
சொன்னவள் கண்ணகி என்ற தெய்வம். அவள்
தேவந்தி மேல் வந்து சொன்னாள். தெய்வம்
அப்படித்தான் பேசும் என்று புரிந்து கொள்ள
முடிகிறது.

"உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி"
என்று சிலம்பு சொல்லுமிடத்து, இளங்கோ
வெகுண்டான் என்று பொருள் சொல்கிறார்கள்.
உருத்து என்பதற்கு சினந்து, வெகுண்டு என்ற
பொருள் உண்டாயினும், அச்சம் என்ற ஒரு
பொருளும் உண்டு. இளங்கோ அஞ்சினான்.
அல்லது மிரட்சியாய்ப் பார்த்தான் என்று
பொருள் கொள்வதுதான் சரி. ஏனென்றால்
அவன் இளைஞன்; இளவரசன். அவனைப்போய்,
உன்னிடம் பெருஞ்சுடர் வீற்றிருக்கிறது என்று
சொன்னால் அவன் பேந்தப் பேந்த விழிப்பான்
முதலில். அந்த விழியில் வெகுளியும் மிரட்சியும்
அச்சமும்தான் இருக்கும். ஆகவே அவன்
வெகுண்டு அரசு துறந்தான் என்பது மிகத் தவறு
என்பது அறியப்படுகிறது.

"செங்குட்டுவன்தன் செல்லல் நீங்க" என்று
சொல்கிறார்களே "செல்லல்" என்றால்
மனவருத்தம் என்று பொருள் கூறுகிறார்களே
என்பதற்கு விளக்கமாக,

"செங்குட்டுவன் தன்செல் அல் நீங்க" என்று
படித்துப் பார்த்தால் விளக்கம் கிடைக்கும் என்று
சொல்ல முடிகிறது,

"செங்குட்டுவன் வழியில், அவன் அரசாளும்
வாழ்க்கையில், அவனை இருள் அண்டாதிருக்கும்
ஞான ஒளியை அவனுக்குக் காட்டி உதவும்
பொருட்டு" (அல் = இருள் எல் = ஒளி) என்று
பொருள் வருவதை அறிய முடிகிறது.

"பகல் செல் வாயில் படியோர் தம்முன்
அகல் இடப் பாரம் அகல நீக்கி"

என்ற இடத்து:

பகல்செல் வாயில் என்றால் அது குணக்
கோட்டம் என்று முந்தைய கட்டுரைகள்
விளக்குகின்றன.

"படியோர்" என்றால் பலநூல்களிலும்
அங்கிருந்த துறவிகள் என்று சொல்லப்படுகிறது.

படி என்றால் படிவம் என்ற பொருளில்
"குணவாயில் கோயில்" என்ற பழைய
கருதுகோளில் அங்கிருந்த தெய்வச் சிலைகளின்
முன்னர் "அரசு துறந்து" துறவியானார்
என்றும் சில நூல்களில் சொல்லப் படுகிறது.

ஆனால் படியோர் என்றால் அதற்குப் பொருள்
முறையானவர் என்பதே. படிவது என்பது
முறைப்படுவது. "அடியாத மாடு படியாது" என்று
சொல்வது காண்க.

அது மட்டுமல்ல,

"அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமகனார் மகளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே"
...திருமந்திரம்:த2-இலிங்கபுராணம்-பா347

"ஆதிபராசக்தியான அன்னை, மலையன் மகளாகி
முக்கணனை முறையாக அர்ச்சித்து பத்தி செலுத்தி
வழிபட்டாள்" என்பது குறுகிய விளக்கம்.
இங்கே படியார என்பது முறையாக என்று
பொருள் தருவது அறியக் கிடைக்கிறது.

"அகல்இடப் பாரம் அகல நீக்கி" என்றால்,
ஆமாம் இளங்கோ அரசைத் துறந்தான்.

இமயவரம்பனின் முடியரசின் கீழ்
அவனது இளைய மகன் இளங்கோ
குணக்கோட்டம் என்ற கிழக்கு வாசல்
நிலப்பரப்பின் மாதண்ட நாயகனாக
இருந்தான்; அந்தப் பதவியை துறந்தான்!
அந்தப் பதவியைத் துறந்து, தன் அண்ணனுக்கும்
அண்ணனின் பேரரசிற்கும் இருள் நெருங்காமல்,
இருக்க தன் ஞானப் பேரரசால் உதவ
இந்த 'இடப் பதவியை" துறந்தான்.

அதனை அவன் தந்தை, அண்ணன், ஆசான்
மற்றும் சான்றோர் போன்ற முறையானவர்கள்
(படியோர்) முன் துறந்தான்.

இளங்கோ குணக்கோட்ட மாதண்ட நாயகன்
என்றால், செங்குட்டுவன் வஞ்சி அல்லது
பிற பகுதிகளுக்கு மாதண்ட நாயகனாக
இருந்திருக்க வேண்டும்.

அரசன் ஆட்சியில் இருக்கும் போது,
தலையெடுக்கும் அவன் பிள்ளை, ஆட்சிப்
பரப்பின் முக்கிய பகுதிகளில் உள்-ஆளுமை
செலுத்துவது பழக்கம்; மரபு.

அப்படித்தான் இமயவரம்பன் ஆட்சியிலே
இருக்கும் போது, அவனின் தலையெடுத்த
பிள்ளைகளான குட்டுவனும் இளங்கோவும்
ஆளுக்கொரு முக்கிய பகுதிக்கு மாதண்ட
நாயகர்களாக இருந்திருக்க வேண்டும்.

பகல்செல் வாயிலில் அப்பதவியினைத் துறப்பதால்
அந்த உள்-அரசைத் துறப்பதனால் இளங்கோ
குணக்கோட்ட மாதண்டநாயகனாக இருந்து
பின்னர் அதைத் துறக்கின்றான், ஞானப்பேரரசை
ஆளுதற்காக.

வரலாற்றில் இதற்கு நிறைய சான்றுகள் உண்டு.
இராசராசப் பேரரசன் தன் மகன் இராசேந்திரனை
கங்க நாட்டில் அதாவது கொங்கு நாட்டிற்கு
வடக்குப் பகுதிகளின் மாதண்ட நாயகனாக்கி,
அரசைப் பாதுகாத்தான் என்பது வரலாறு.

அவன் காலத்திலேயே, சேரநாட்டை ஆண்ட
பாசுகர இரவிவர்மன்(1), அவன் மகன் இரண்டாம்
பாசுகர இரவிவர்மனை உதகையில் மாதண்ட
நாயகனாக பதவியில் வைத்திருந்தான்.

அவ்வளவு ஏன், சிலப்பதிகாரத்திலேயே,
மதுரையை ஆண்டு மடிந்த பாண்டியன்
நெடுஞ்செழியன், அவன் மகனான வெற்றி வேல்
செழியனை கொற்கையிலே அமர்த்தி
தென்பாண்டி நாட்டின் காவலனாக
வைத்திருந்தான்.

இன்றைய காலத்தில் கூட இப்படியான பழக்கம்
இருக்கிறது என்று சொல்வாரை நான் துளியும்
மறுக்க மாட்டேன்!!!

ஆகையால் காப்பியத்தின் பதிகத்தில்
சொல்லப்படுகிற "குணவாயில் கோட்டத்து அரசு
துறந்த" என்ற வரியும், வரந்தரு காதையின்
"அகல் இடப் பாரம் அகல நீக்கி" என்று
சொல்லப் படுகிற வரியும் ஒன்றாகப் பார்க்கப் பட
வேண்டியவை. அவை இளங்கோ
குனக்கோட்டத்தின் காவலனாக, மாதண்ட
நாயகனாக இருந்த பதவியைத் துறந்ததை
சொன்ன வரிகள்.

உரைசெய்த பெரியார் சொன்ன
"அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு"
என்று சொன்னது அவனை ஞானி என்று
கண்டறிந்தது.

இரண்டையும் ஒரே பார்வையில் பார்த்து துறவு குறித்து
பல நூல்களும் வேறு பொருள்களைத் தருகின்றன.
ஆகவே, காப்பிய ஆசிரியரின் துறப்பு என்பது
இதுதான்; இத்தன்மையதுதான்.

இளங்கோ ஒரு சோகத் துறவியும் அல்ல, ஈகைத்
துறவியும் அல்ல.

குட்டுவன் நாட்டு வேந்தன்.
இளங்கோ ஞானவேந்தன்.

இருவரின் சுவடுகளும் தமிழ் உலகின் அழியாப் பதிவுகள்.

இவர்கள் இரண்டு பேருமே பெரும் பேறு
பெற்றவர்கள்தான்; ஆனால் இவர்களை மகனாகப்
பெற்ற இமயவரம்பன்தான் இவர்களை விட
பெரும் பேறு பெற்றவன். பெற்றவனுக்கு
இதை விடப் பெரும் பேறு கிடைக்க முடியாது.

"சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்து
அந்தம்இல் இன்பத்து அரசுஆள் வேந்துஎன்று"

என்று சொல்லும் சிலப்பதிகார வரிகளை
மிக மேலேத்திப் பிடிக்கிறது திருமந்திரம்.
அதையும் சேர்த்தால் கட்டுரை இன்னும்
நீண்டு விடும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, February 15, 2008

சிலம்பு மடல் 36

குடமலை நாட்டிற்குக் கிழக்கே இயற்கை அன்னை
அள்ளிக் கொடுத்த செல்வம் மலைத் தொடர்கள்.
பாலக்காட்டிற்கு வடக்கேயும், பாலக்காட்டிற்குத்
தெற்கேயும் தொடரும் இந்த மலைத் தொடர்கள்
சேர மண்ணின் மேல் அனைவரும் காணக்
குவியலாய் கிடக்கும் மரகதப் புதையல்கள்.

மேகங்கள் வந்து முத்தமிட, அங்கேயே அவற்றை
இளகி வழிய வைக்கும் மரகதப் பேரழகிகள். இந்த
அழகிகளிடம் சிக்கிக் கொண்டவன் நிலத்தை
நோக்குவதேயில்லை. "சித்தர்களும் அப்படிச்
சிக்கிக் கொண்டவர்கள்தான்; முனிவர்களின்
மோனங்களும் மரகத மோகம்தான்!!". ஞானிகளும்
சொல்லித்தர மறுக்கும் இரகசியம் அது.

சேரநாட்டின் இந்தப் பேரழகிகள் ஆணவம்
மிக்கவர்கள். ஆதிக்கப் பேரழகிகளின் முன்னால்
பேரரசனும் ஒரு தூசு. மறுப்போர் உண்டு?

ஓரழகியின் ஒற்றை அசைவிற்கே ஒடுங்கிப்
போய்விடும் மாந்தருக்கு முன்னால், அணிவகுத்து
நிற்கும் அழகிகளின் ஆர்ப்பரிப்பு!

நீலவானையும் மஞ்சத்துக்கிழுக்கும் நிமிர்ந்த
முகடுகள் திமிர் பிடித்தவை. அம் முலைகளில்
சிக்கிச் சீரழிந்த மேகங்கள் எனக்குச் சொன்ன
சேதியிவை!

மேகத்தின் சோகங்கள் அத்தோடு நின்றதில்லை.

ஊருலகு எங்கேயும்
காரிருளைப் போக்குகின்ற கதிரவனை
யாரேனும் காணாமல் செய்கின்ற
மாயம் விளை மேகங்கள்,
"தாம் விடுத்தும்"
எல் செய்வானை சேரத்துள் சேர்க்காமல்
சிறைவைக்கும் பாவைகளை
செய்ய ஒன்றும் ஏலாது
வானெங்கும் ஓடோடி முறையிட்டே
வாழ்கின்ற சோகத்தைக்
காண்கின்றார் கண்பனிக்கும்.

கண்டெடுக்கச் சென்ற என்னைக்
காமுற வைத்தப் பேரழகி
சொல்பேச்சில் சொக்கிப்போய்
நானேதோ பிதற்றிடினும்
சிக்கித்தான் நிற்கின்றான் சிவந்த சூரியனும்;
சேர பூமியினை அவன் எட்டிப் பார்க்கவும்
மலைப்பாவை மனம் வைக்க வேண்டும்!

சேரநிலத்திற்கு அரணாக இருக்கும் இந்த மலைத்
தொடர்களில் இடுக்கி மாவட்டக்
கிழக்கெல்லையில் மட்டுமே 13 மலைகள்
சுமார் 2000 மீட்டர் உயரத்திற்கும்
மேலானவைகள் என்று புள்ளியியல் சொல்கிறது.

கதிரவ எழுச்சி நமக்கெல்லாம் கடலின் மேல்
என்றால் சேரநாட்டிற்கு இம்மலைகளின் மேல்தான்
உதயசூரியன். "மிக்கிளஞ் சூரியனை"
வெகு அதிகாலைக் காண வேண்டுமானால்
சேரநாட்டான் இந்த மலைகளின் இடுக்குகளைத்
தேடத்தான் வேண்டும் என்பேன்.

தேடவில்லையானால் சில நொடிகளேனும்
இந்த மலைகளின் மறைப்பு சேரனைக் காக்கத்தான்
வைக்கும்.

உயர்ந்த மலைகளுக்கு அஞ்சி, குறைவான உயரம்
உடைய அல்லது சமவெளி இடுக்குகள் வழியே
வரும் மிக்கிளஞ் சூரியனுக்கு வழியாக நிற்பதாகக்
கவிஞர் எண்ணியதால்தான்
"குணவாயில்" என்று சொல்லாட்சியைப்
பயன்படுத்தியிருக்க வேண்டும்.

கிழக்குதிக்கும் கதிரவன் குடமலை நாட்டுக்குள்
நுழையும் வாசல் "கிழக்கு வாசல்" என்ற
குணவாயில். கிழக்கு வாசலை நிலப்படங்களைப்
பார்க்கும் போது அப்படியான கருத்து
வலுப்படவே செய்கிறது.

இதை மேலும் வலுப்படுத்துவது போல்தான்
வரம்தரு காதை இப்படிச் சொல்கிறது.

"பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்இடப் பாரம் அகல நீக்கி......"
...சிலம்பு:வரம்தரு காதை:179,180

காப்பியத்தின் முகப்பு, "குணவாயில்" என்று
சொல்கிறதென்றால் காப்பியத்தின் கடைசிக்
காதையில் ஏறத்தாழ காப்பியம் நிறைவு ஆகும்
போது கண்ணகி தேவந்தி மேல் எழுந்தருளி
காப்பிய ஆசிரியரின் முந்தைக் கால நிகழ்வை
(அதாவது அவர் துறவைப் பற்றிச் சொல்லிய
இடம். இதுபற்றி மிக ஆழ்ந்து பார்க்கப்
போகிறோம்) சொன்ன இடம்.

"பகல்செல் வாயில்" என்று காப்பியம் குறிப்பது
இலக்கியச் செறிவு மிகுந்த மேலும் ஒரு
சொல்லாடல். இருள் நீக்கும் இளஞ்சூரியன்,
அதாவது பகலைச் செய்யும் இளஞ்சூரியனை
பகல் என்றே சொல்லி அந்தப் பகல்
சேரநாட்டிற்குள் செல்லும் இடத்தில் துறந்தாய்
என்று சொல்வது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

குணவாயில் என்பது நாட்டிற்குள்
எளிதில் நுழையக் கூடிய பகுதி.
இது பகல் செய்வானுக்கும் பொருந்தும்.
பகை செய்வானுக்கும் பொருந்தும்.
பகலை வரவேற்று, பகைக்கு அரணாக
இருந்ததுதான் குணவாயில் கோட்டம்.

காப்பிய முகப்பு "குணவாயில் கோட்டத்து
அரசுதுறந்து" என்று சொல்கிறது. காப்பிய முடிவு
"பகல்செல் வாயில்" அகலிடப் பாரம் நீங்கினாய்!
என்று சொல்கிறது.

இந்த இரண்டு செறிவு மிக்க வரிகள்
குணவாயில் என்பதனை கிழக்கு வாசல் என்று
உறுதி கூறுவதோடு இலக்கிய நயத்தையும் ஏத்தி
நிற்கின்றன.

"இரண்டு வரிகளும் காப்பியத்தின் இரு
முனைகளில் பொருளொத்து நிற்கின்றன."

குணவாயில், கோட்டம், என்ற இரண்டு
சொற்களும்(சீர்கள்) நாம் எடுத்துக் கொண்ட
மூன்றாவது சொல்லான (பதிகத்தின் மூன்றாவது
சொல் அல்லது காப்பியத்தின் மூன்றாவது சொல்)
"அரசுதுறந்து" என்பதன் பொருளை,
தொடர்ச்சியில் விளக்க மிக்க ஏதுவாகின்றன.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Wednesday, February 13, 2008

சிலம்பு மடல் 35

சிலம்பு மடல் - 35:

குணவாயில் கோட்டம் என்பது கிழக்கு வாசல் கோட்டை அல்லது பாசறை என்பதற்கு ஆதரவாகக் கிடைக்கும் சான்றுகளும்
ஏரணங்களுமாக நான் காண்பவை:

35.1) சேர மாநிலத்திற்கு அரண வாசல்கள் நான்கு.
ஆய்நாட்டுக்குட்பட்ட காந்தளூர்ச் சாலை தெற்கு வாசல்.
குடமலை நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் இருக்கும் உதகை மண்டலம் வடக்கு வாசல். (திசை வட கிழக்கு என்ற போதிலும்).
அதனை "முதன்மை வடக்கு வாசல்" என்றும் கூறலாம்.
மேற்கு வாசல்கள் நீண்ட அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளன. அது வஞ்சி, விழிஞம் போன்ற துறைமுக நகர்களாக அமைந்திருக்கின்றன.

இந்த மூன்று வாசல்களும் இப்படியிருக்க,
பாண்டிய சேர நாட்டு எல்லையில் மதுரைக்கு
அண்மையில் இருக்கும் இந்தக் "குணவாயில்"
கிழக்கு வாசலாக அமைகிறது.

காந்தளூர்ச்சாலை சேர நிலத்திற்கு தென்பாண்டி
நாட்டுப் பகைக்கு அரணாக அமைகிறது.

உதகை கொங்கு நாட்டு வழிப் பகைக்கு
அரணாக அமைகிறது.

கடல் வழிப் பகைக்கு மேற்கு வாசல்கள்
அரணாக அமைகின்றன.

அது போல மதுரை வழிப் பகைக்கு
அரணாக அமைவது குணவாயில் என்கின்ற
கிழக்கு வாசற் கோட்டம்.

35.2) சேர மாநில அரண் அமைப்பு 35.1ல் கண்டது போல் இருக்க, சேர மாநிலத்திற்கு உட்பட்ட குடமலை நாட்டைப் பார்த்தோமானால் வஞ்சிக்குத் தெற்கே கோட்டயம் உள்ளது. இது ஒரு கோட்டை நகரம். அரண நிலம்.

இந்தக் கோட்டையம் குடமலை நாட்டின்
தெற்கு எல்லை அரண நிலமாக இருந்திருக்க
வாய்ப்புள்ளது.

அதேபோல வஞ்சிக்கு வடக்கே மலைப்புரத்திற்கு
அருகே கோட்டக்கல் (வைத்திய சாலை புகழ்)
என்ற சிற்றூர் உள்ளது. இந்தக் கோட்டக்கல்
வெள்ளையர் காலங்களில் அரண நிலமாக
இருந்துள்ளது. இது பழங்காலத்திலும் இப்படி
இருந்திருக்கும் என்ற கருதுகோள் கொண்டால்
இது குடமலை நாட்டிற்கு வடக்கு அரண நிலமாக
அமைகிறது. கோட்டக்கல் மலைப்புரம் பழைய வள்ளுவ நாட்டுத் தலைநகராக இருந்துள்ளதால் அதற்கு ஒரு 10 கல் தொலைவில் உள்ள கோட்டக்கல் (இதற்கு வெங்காளிக் கோட்டை என்ற பெயர் இருப்பதாக அறிகிறோம்)
அரண நிலமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இன்னொரு சேதி
என்னவென்றால் இந்தக் கோட்டக்கல்லுக்கு
நேர் கிழக்கே உதகை இருக்கிறது.
ஆகவே இந்த அடிப்படையில் இது குடமலை
நாட்டின் வடக்கு வாசலாகக் கருத இடமுண்டு.

கொங்கு நாடு குடமலைநாட்டோடு சேராது குடமலை நாடு தனித்து இருக்கையில், மேற்கு வாசல் வஞ்சியாகவும், வடக்கு வாசல்
கோட்டக்கல்லாகவும், தெற்கு வாசல் கோட்டயமாகவும் இருந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், குணவாயில் என்பது கிழக்குக் கோட்டயம் ஆக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் ஏரணங்களில் ஒன்றாகப் பார்க்க வேண்டும். கோட்டயம் என்றால் கோட்டைப் பகுதி என்ற பொருளில் இந்த ஏரணத்தை ஆதரவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சேரப் பேரரசு என்பது வேறு, குடமலை நாடு
என்பது வேறு. சேரப் பேரரசு பல நாடுகளை
உள் கொண்ட பரந்த மாநிலம். குடமலை நாடு
என்பது சேரத்தின் ஆணிவேர் போன்ற நாடு.
இந்த அச்சாணியின் மேல்தான் சேரப் பேரரசு
அமைகிறது. அந்தக் குடமலை நாட்டு அரசர்கள்தான் இமயவரம்பன், செங்குட்டுவன் போன்றோர். இவர்கள் இப்பகுதியில் இருந்து சேரமாநிலத்தை ஆண்டனர் என்பது வரலாறு. அந்த அடிப்படையில் குடமலை நாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் அரண்களையும் பார்க்கவேண்டும்.

அதோடு, கோட்டக்கல், கோட்டயத்திற்கு நேர் வடக்காகவும், குணவாயிலுக்கு நேர் மேற்காகவும் இருப்பது கவனிக்கத் தக்க ஒன்று.

ஆக, குடமலை நாட்டரணாகப் பார்த்தால், மேற்குக் கடல், வடக்குக் கோட்டக்கல், தெற்குக் கோட்டயம் என்ற இவற்றோடு குணக் கோட்டமும் அமைகிறது. (இவற்றை மூன்று கோட்டயங்கள் என்று நான் சொல்வேன்).

அதுதான் "குணவாயில் கோட்டம்".

35.3) அடுத்ததாக இந்த அரண வாசல்களின்
சில முக்கிய நிகழ்வுகளைச் சான்றாகச் சொல்லவேண்டும். அது இந்த அரணக் கோட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரியச் செய்யும்.

இராசராசச் சோழன் மாநிலம் கட்டுவதற்குத் துவங்கியது எங்கே? எப்படி? என்று பார்த்தால் அந்த சூக்குமம் புரியும்.

மதுரையையும் ஆய் நாட்டுக் காந்தளூர்ச் சாலையையும் ஏறத்தாழ சம காலத்தில்
பிடிக்கிறான். காந்தளூர் அரணத்திற்கு விழிஞம் வழியே கடல்வழி சென்று தாக்கிப் பிடிக்கிறான். இப்போது சேரத்தின் தெற்குப் பகுதியும் குடமலை நாட்டின் கிழக்குப் பகுதியான மதுரையும் சோழன் கையில்.

பின்னர் உதகையில் தன் தூதனைச் சிறை செய்துவிட்டான் என்று உதகையைப் பிடிக்கிறான். உதகையைப் பிடித்ததால் கொங்கு மண்டலம்
சோழன் கையில் விழுந்து விடுகிறது. கொங்கு நாடும் கொல்லி நாடும் தம்வயமானால்தான் தொண்டை நாட்டை செம்மையாகப் பிடித்து வைத்திருக்க முடியும்.

சேரத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு என்ற இந்த மூன்று வாசற் பரப்பையும் தன்னகப் படுத்திக் கொண்ட பின்னரே இராசராசன் வஞ்சி மீது
பாய்ந்து அதனைக் கைப்பற்றி மும்முடிச் சோழனாகிறான். வடக்கே மேலும் முன்னேறி கங்க நாடு, வய நாடு, துளுநாடு போன்ற நாடுகளையும் கைப்பற்றிப் பேரரசாக்குகிறான்.

இராசராசனின் இந்தப் போர்த் தந்திரமே, குறிப்பாக காந்தளூர்ச் சாலைப் போரே அதற்குப் பின்னரான 300 ஆண்டுகால சோழப் பெரும் பேரரசிற்கு அடிகோலியது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வது கவனிக்கத் தக்கது.

இராசராசன் அரண உத்தி மேற்கண்ட நான்கு
வாசல்களையுமே முறை வைத்து திட்டமிட்டு
பதம் பார்க்கிறது என்றால், அந்த நான்கு சேர வாசல்களும் முக்கியமானவை என்றும் அரணக் கோட்டங்கள் என்பதும் அறியக் கிடைக்கிறது.
அப்படி இருக்கையில் "குணவாயில் கோட்டம்"
என்பது கீழ்த்திசைக் கோயில் என்று சொல்வது
பொருந்தவில்லை.

இந்தக் கட்டுரை குணவாயில் கோட்டம்
என்பது குடநாட்டின் "கீழரண வாசல்" என்பதனை நிறுவுகிறது; "குணவாயில் கோட்டம்" என்ற இந்தச் சொற்களின் ஆட்சி எவ்வளவு இலக்கிய அழகு மிளிற அமைக்கப் பட்டிருக்கிறது என்பதனைச் சொல்வதாகவும் மேலும் சில அரணச் சான்றுகளோடும், தொடரும் மடல் அமையும். அதோடு முக்கியமான முடிச்சொன்றை அவிழ்க்கவும் அது ஏதுவாகும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சிலம்பு மடல் 34

சிலம்பு மடல் - 34
பதிகத்தின் மேல் ஒரு பார்வை:

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்
பேருலகிற்கு சிலப்பதிகாரம் தமிழை அள்ளி
அள்ளிக் கொடுத்து வரினும் துளி கூட வற்றாமல்
அறிவுச் சுரபியாக அது பொங்கி வழிந்து
கொண்டே இருக்கிறது. இச்செந்தமிழ்க்
காப்பியத்தை ஆக்கிய அடிகள் தமிழ்
நெஞ்சங்களில் அழியா அரசோச்சி வருகிறார்.

அவர் வாழி!

பதிகம் காப்பியத்தின் முகப்பில் வைக்கப்
பட்ட காப்பியத்தின் தொகுப்பு. இலக்கண மரபு.
அதில்தான் எத்தனை மாற்றுக் கருத்துகளை
அறிஞர்கள் கூறியிருக்கின்றனர் என்று பார்க்கும்
போது வியப்பாக இருக்கிறது.

பதிகம் பிற்சேர்க்கையா?, அல்லது முரண்
கொண்ட மூலமா?, அல்லது மூலத்தில் சில
அடிகள் செருகப் பட்டனவா? என்ற மூன்று
நிலைகளிலும் நடந்திருக்கும் ஆய்வுகள் நம்மை
திகைக்க வைக்கின்றன.

பேரறிஞர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களோ
தம் ஆய்வில் பதிகம் காப்பிய ஆசிரியரால்
இயற்றப்பட்டதே இல்லை என்று பேருறுதி
காட்டுகிறார். அவர் கருத்துகளை அவ்வளவு
எளிதாக யாரும் மறுத்து விட முடியும் என்று
தோன்றவில்லை. பதிகம் குறித்த அந்த
மூன்று ஆய்வு நிலைகளிலும், ஆய்வுக்
கோணங்களிலும் தெளிவு நிலையும் உறுதி
நிலையும் இருப்பதாகத் தோன்றினாலும் பதிகம்
குறித்த மேலதிக ஆய்வுகள் ம.பொ.சி அவர்கள்
எடுத்துக் காட்டும் மூன்று வரிகளின் போக்கில்
மட்டுமே போய்க் கொண்டிருப்பது தெளிவு. அது
சரியில்லை என்ற சொல்ல முடியாது என்ற
போதிலும் பதிகத்தின் மற்ற பகுதிகள் ஆய்வு
செய்யப்படுவது குறைவாக இருக்கிறது என்று
சொல்ல முடிகிறது. அப்படியான பகுதிகள்
சிலவற்றையும் நோக்கிக் காண்பதில் இன்பம்
இருக்கவே செய்கிறது.

"குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்குக்...."
...சிலம்பு:பதிகம்:1-2

என்று துவங்கும் பதிகத்தின் முதல் அடியின் முதல்
மூன்று சீர்கள், உரையாசிரியர்களின் காப்பிய
ஆர்வத்தில் அதிகம் கவனிக்கப் படாமல்
போய்விட்டதோ என்று எண்ணத்தை
ஏற்படுத்துகிறது. ஏனெனில் அனைவருமே
"குணவாயில் கோட்டம்" என்பது
ஒரு கோயில் என்றே எண்ணி பொருள்
கொள்கின்றனர். அதற்கு உரையாசிரியர்களின்
உரையே காரணமாக இருக்கக் கூடும்.

குணவாயில் கோட்டம் என்பது குணவாயில்
என்று ஒரு கோயில் என்றும், கீழ்த்திசையில்
இருந்த ஒரு கோயில் என்றும், கிழக்கு வாசல்
என்ற கோயில் என்றும் கருத்துப் பட உள்ள
எழுத்துகளையே பல நூல்களிலும் காணமுடிகிறது.
கீழ்த்திசையில் இருந்த ஒரு கோயிலில் அரசைத்
துறந்து துறவியானார் இளங்கோவடிகள் என்றே
பொருள் எங்கனும் காணக்கிடைக்கிறது.

இதோடு சில நூலாசிரியர்கள் "கோட்டம்" என்பது
சமணர் கோயில்களுக்கான பெயர்; அதனால்
அவர் அங்கு துறவியானதால் இளங்கோவடிகள்
சமண சமயத்தைத் தழுவிய துறவிகள் என்றும்

எழுதும்போது அங்கே அவர்களின் ஆய்வினைக்
காண முடியவில்லை. இளங்கோவடிகள் எந்த
சமயத்தைச் சேர்ந்தவர் என்பது வேறு விதயம்.
ஆனால் கோட்டம் என்ற சொல் இருப்பதால்
அது சமணக் கோயில் என்று சொல்வதும் அதற்கு
மேலும் ஒரு படி சென்று அதனாலும் அவர்
சமணர் என்று சொல்வதும் முற்றிலும்
பொருத்தமற்றதாக இருக்கிறது,

கோட்டம் என்றால் என்ன? குணவாயில் என்றால்
என்ன? என்று பகுத்துப் பார்த்தோமானால்
"குணவாயில் கோட்டம்" என்றால் என்ன
என்பதற்கான விடை கிடைத்து, அது
"அரசுதுறந்து" என்பதற்கான பொருளுக்கும்
பொருள் கூட்டும்.

34.1) கோட்டம் என்றால் என்ன?

கோட்டம் என்றால் கோயில் என்று பொருள்
உண்டு. ஆனால் அது மட்டுமே பொருள் இல்லை.
கோட்டம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
"வள்ளுவர் கோட்டம்" என்று சொல்கிறோம்;
சென்னையில் உள்ள "வள்ளுவர் கோட்டம்"
என்பது வள்ளுவர் கோயிலா? இல்லையே!
திருவள்ளுவரை ஏத்தும் சிறப்பிடம். அவ்வளவே.

"கண்ணகிக் கோட்டம்" என்று சொன்னால்
அது கண்ணகிக் கோயில்!

"பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து"
சிலம்பு:நடுகல்காதை-225
என்று சிலம்பு சொல்கிறது. அங்கே பத்தினிக்
கோட்டம் என்றால் "பத்தினிக் கோயில்" என்ற
பொருள் சரியே. அதுபோல கந்த கோட்டம்
என்றால் கந்தன் கோயில்.

கோட்டம் என்பதற்கு வளைவு, சாய்வு, பகைமை
என்ற பொருள்களும் உண்டு.

"கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது"
என்பார் அப்பர் பெருமான். அரசன் தன்னைச்
சுற்றிப் பகைகள் இல்லாதிருப்பது அவனுக்குச்
சிறப்பு என்றும், அரசன் என்பவன்
சாய்ந்த/வளைந்த கோலனாக இல்லாதிருப்பது
என்றும் பொருள்கள் கூறுவர்.
அண்மையிலே அடிக்கடி அரசியலில் "சேலம்
கோட்டம்" என்று செய்திகள் வந்தன.
"சேலம் கோட்டம்", "பாலக்காடு கோட்டம்"
என்றால் என்ன?

தொடரிச் சேவையில் இந்தியப் பரப்பின்
ஒரு பிரிவு சேலத்தை தலமையாகக்
கொண்டுள்ளது. சில அல்லது பல நிலையங்களின்
தொகுப்பு அது. மண்டலங்களின் உட்பிரிவே
கோட்டம். Zone, Division என்று ஆங்கிலத்திலே
எழுதும் போது தமிழர்களுக்குத் தெளிவாகப்
புரிகின்ற உட்பிரிவுகள் அவை.

இப்பொருளை நாட்டுக்கு பொருத்திப் பார்க்க
வேண்டும். நாட்டிலும், மண்டலம், கோட்டம்,
என்ற பிரிவுகள் உண்டு.

அது மட்டுமல்ல, கோட்டம் என்பது கோட்டை
என்ற பொருளையும் அண்டி நிற்கும். அதோடு
பாசறை எண்ற பொருளும் அதற்கு உண்டு.

கோட்டம் என்பதனை இங்கே விட்டு விட்டு,
"குணவாயில்" என்றால் என்ன, எது என்று
அறியவேண்டியுள்ளது.

34.2) குணவாயில் என்றால் என்ன?

குணவாயில் என்றால் கிழக்கு வாசல். "குண"
என்பது கிழக்கு திசையைக் குறிக்கும் சொல்.
"குணவாயில்" என்றால் என்ன என்பதனை
எல்லோருமே மிகச் சரியாகச்
சொல்லியிருக்கிறார்கள். நமக்கு அதில்
மறுப்பிருக்க முடியாது. ஆனால், அது எது?
எதற்குக் கிழக்கு? எங்கே? என்பதைக்
காண்பதுதான் அவசியமாகிறது.

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் சீர் குறிக்கின்ற
"குணவாயில்" என்பது குடமலைநாட்டின் கிழக்கு
வாசல் பகுதியை. அது வெறும் திசையைக்
குறிக்கவில்லை. வஞ்சியைத் தலைநகராகக்
கொண்ட சேரப்பேரரசின் நடுப்பகுதி குடமலை
நாடு. வஞ்சி மாநகரம் மகோதை என்றும்
திருவஞ்சைக்களம் என்றும் சுந்தரமூர்த்தி
பெருமானால் திருவஞ்சைக்களப் பதிகத்தில்
(ஏழாம் திருமுறை) சொல்லப்படும் இடம்.
வரலாறு மற்றும் ஆன்மிக முக்கியம் நிறைந்த
இடம் அது.

வஞ்சி நகரப் பரப்பில் தான் கொடுங்களூர்
இருக்கிறது (புகழ்பெற்ற பகவதி அம்மன்
கோயில்). இன்றைய கொச்சியில் இருந்து
வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில்

கொடுங்களூரை உள்ளிட்ட வஞ்சிப் பரப்பு
இருக்கிறது, இங்குதான் முல்லைப் பெரியாற்றின்
கழிமுகமும் இருக்கிறது,
தேக்கடியில் உருவாகி 300 கி.மீ பாய்ந்து
வரும் பெரியாறு கடலில் கலப்பது வஞ்சி
மாநகரத்தில். சோழன் தலைநகரான புகாரில்
காவிரி கடலில் கலப்பது போல,
சேரன் தலைநகர் வஞ்சியில் அரபிக்கடலில்
பெரியாறு கலக்கிறது.

தற்போது வஞ்சியில் (தற்போதைய கொடுங்களூர்)
இருந்து தென்கிழக்காக நோக்கினால் 120-130
கி.மீ தொலைவில் தேக்கடி தெரியும். வடகிழக்காக
நோக்கினால் ஏறத்தாழ 170-180 கி.மீ தொலைவில்
உதகை தெரியும்.

கொடுங்களூரில் இருந்து கிழக்காக நேர்கோடு
போட்டால், சில திகிரிகள் வேறுபாட்டில்
மதுரை இருக்கிறது. (கொச்சியில் இருந்து நேர்
கோடு போட்டால் அது மதுரை வழியே
யாழ்ப்பானத் தீவுகளோடு போய்ச் சேரும்.)

உதகையில் இருந்து வஞ்சிக்கு நேர்கோடு வரைந்து
வஞ்சியில் இருந்து தேக்கடிக்கு கோடுபோட்டால்
இடைப்பட்ட கோணம் ஏறத்தாழ செங்கோணமாக
இருக்கின்றது.

அந்தக் கால சேரநாடு என்பது தென்கோடியில்
அனந்தபுரத்தை உள்ளிட்டு, தெற்கே நாகர்கோயில்
வரை இருந்த ஆய்வேள் நாட்டையும்
உள்ளிட்டதாகும். ஆய்நாடு சேர பாண்டிய
ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருந்திருக்கிறது.

தேக்கடி சுற்றிய பகுதி, குடமலைநாட்டின்
தலைநகரான வஞ்சியில் இருந்து தென்கிழக்காக
இருந்தாலும், குடமலை நாட்டின் தென் எல்லை
வரை இருக்கும் குடநாட்டைப் பொருத்தவரை,

தேக்கடியைச் சுற்றிய பகுதி "சரி கிழக்கு".

மேற்கு மலைத்தொடரில் இடுக்கி மாவட்டத்தில்
பல உயரமான மலை முகடுகள் உள. இதில்
வடபகுதியில் ஆனைமுடி மிக அதிக உயரம்
கொண்டது; சுமார் 2695 மீட்டர், இதுதான்
தென்னிந்தியாவின் உயரமான மலை என்று
சொல்கிறார்கள். தேக்கடிக்கு அருகில் உள்ள
செங்குன்றம் 1700 மீட்டருக்கும் மேலே உயரம்
கொண்டது.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட
மலைப்பகுதிகள் ஏற்றமும் இறக்கமும்
கொண்டவை. மதுரையில் இருந்து குடநாட்டுக்கு
வர வேண்டுமானால், இரண்டு பாதைகள் உள்ளன.

ஒன்று மதுரை-கொச்சி சாலை, இன்னொன்று
கம்பம் வழியாக வரும் மதுரை-கோட்டயம்
சாலை. இந்த இரண்டு சாலையுமே தமிழகத்து
எல்லக்குள் கம்பத்திற்கு சற்று தொலைவு வரை
ஒரே சாலையாக இருந்து பிரிந்து சிறிய
கோணத்தில் குடமலைச் சேர நாட்டுக்குள்
நுழைகின்றன.

இந்த இரு பாதைகள் சேர, பாண்டிய
நாடுகளுக்கு மிக முக்கியமானவை.

இன்றைய கேரள-தமிழக எல்லையில் இருந்து
தெற்கே தேக்கடி, வண்டிப்பெரியார், வடக்கே
தேவிகுளம், மேற்கே பேரியாறு (பெரியாறு) என்ற
கேரளப்பகுதிகளை நாம் கூர்ந்து பார்த்தால்,
அந்தப் பரப்பு குடமலை நாட்டின் "கிழக்கு வாசல்"
என்பது புரியும்.

இந்தக் கிழக்கு வாசல் அரண முக்கியத்துவம்
வாய்ந்தது.

இதைத்தான் "குணவாயில்" என்று சிலம்பின்
பதிகம் கூறுகிறது. இந்த அரண முக்கியத்துவம்
வாய்ந்த கிழக்கு வாசல் அன்றைய நாட்டுப்
பிரிப்பின் படி தனிக் கோட்டமாக (அல்லது
மண்டலமாக அல்லது வட்டமாக அல்லது
மாவட்டமாக அல்லது சிற்றரசாக) இருந்திருக்க
வேண்டும். அரண சூக்குமம் நிறைந்த பகுதி
என்பதால் இது சிறப்பு பெற்றும் இருந்திருக்க
வேண்டும். சேரப் பெரும் பாசறை இருந்திருக்க
வேண்டும்,

அதுதான் "குணவாயில் கோட்டம்".

நாம் அது ஒரு கீழ்த்திசை கோயில் என்று
எண்ணிவிட்டோம்.

தொகுப்பு:

+ குணவாயில் என்பது குடமலைச் சேர நாட்டின்
அரண முக்கியம் நிறைந்த கிழக்குப் பகுதி
+ இது குடமலைச் சேரநாட்டின் கிழக்குப் பகுதி.
சேர-பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதி.
+ இப்பகுதி, இன்றைய கேரள தமிழக எல்லைப்
பகுதியில் இருக்கும் குமுளி, செங்குன்றம்,
தேக்கடி பகுதிகளை உள்ளிட்டு, மேற்கே
வண்டிப் பெரியார் போன்ற ஆற்றங்கரை
நகரத்தைக் கொண்டதாகவும் வடக்கே
தேவிகுளம் அல்லது ஆனைமுடி
மலைத்தொடர் வரை உள்ள பகுதிகளைக்
கொண்டதாகவும் இர்ருந்திருக்க வேண்டும்.

அடுத்த கட்டுரை இவற்றிற்கு மேலும்
சான்றுகள்/ஏரணங்கள் கூட்டுவதாக அமையும் என்று கருதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
13/பிப்/2008