Pages

Saturday, July 24, 1999

சிலம்பு மடல் 14

சிலம்பு மடல் - 14 மாதவி மறந்து கண்ணகி சேர்தல்
புகார்:
வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை:

வடவேங்கட மலைக்கும் தென்குமரிக் கடலுக்கும் இடைப்பட்டது தமிழ்நாடு என்றுரைக்கும், இந்த இரண்டு அடிகளையும் தவிர்த்து எழுதப்பட்ட தமிழ், தமிழர்,தமிழக வரலாறு தமிழுழகில் இருக்க முடியாது.
அப்படியிருந்தால் அது தமிழர் வரலாற்றிற்காக எழுதப்பட்டதாக இருக்கமுடியாது.

"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு.."

சிலம்பு குறிக்கும் இவ்வடிகள், கரிகாலன் பற்றிய குறிப்புகள், குமரி மற்றும் பகறுளி ஆறு பற்றிய குறிப்புகள் தமிழ்நில வரலாற்றிற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. நாவலர்.சோமசுந்தர பாரதியார்
அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவர் இக்குறிப்புக்களை கையாண்டிருக்கும் விதம் வியக்க வைத்ததென்னை. வேனில் காதையிலே தமிழர் நாடுகளில் சிறப்புற்று விளங்கிய நகரங்களை விளக்குமிடத்து எழுதப்பட்ட அடிகள் இவை.

கோவலனை இழந்து வாடிய மாதவி காதலெனும் அருநட்புக் கருகியதை எண்ணி எண்ணி தவிக்கிறாள்!
கோவலனுக்கு மடலனுப்புகிறாள் தோழி வாயிலாக.

அதைப் படிக்கவும் மறுக்கிறான் கோவலன்;

நாட்டிய மடந்தையின் நாடகமென்கிறான் அவன்! சந்தேக வெறியும் ஆணாதிக்க வெறியும் அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டன! அவள் பழகிய அனைத்தும் நாடகமே என்று சாதிக்கிறான் திருமுகம்
கொண்டு வந்த மாதவியின் தோழியிடம். மாதவியின் பலசெய்கைகளை அவன் கூறினாலும், உச்சமாக, "தேவைப்படும் போதெல்லாம் வா என்றால் வருவாள், போ என்றாள் போவாள்" அந்த நாடகக்காரி;
அவளிடம் இனியும் மயங்கமாட்டேன் என்கிறான்.

"நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்".....

கண்ணகியின் கற்பு வாழ்க்கையையும் கனலிட்டுவிட்டு,மாதவியின் இன்பவாழ்க்கைக்கும் இருளிட்டுவிட்டான்
கோவலன். காரணம் சபலம், சந்தேகம், சலனம்:

பிரிந்து போன ஆண்மை பிரிந்தே நிற்க, பெண்மையோ காதலால் கதறுகிறது! மாலை வாராராயினும் காலை காண்குவம் என்று காத்திருப்பதைக் கற்றுக் கொள்கிறது!

"மாலை வாரார் ஆயினும் மாண்இழை
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்".

மாதவியின் நிலை அப்படி இருக்க, கண்ணகிக்குத் துணையாக வந்த/இருந்த தேவந்தி என்ற பெண்மணி 'உன் கணவனை அடைவாய்' என்று வாக்குதிர்க்க கண்ணகி அவளிடம் தான் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்கிறாள்!

தேவந்தியே கனவொன்று கண்டேன்!

"கணவரோடு கைகோர்க்கின்றேன்; இருவரும் பெரிய ஊரொன்றுக்குப் போக, ஆங்கு தகாத பழியை "இடு தேளிட்டது போல்" (தேளில்லாததை தேள் என மேலே போடுதல்) என் கணவர் மேல் போட்டனர்; அது கண்டு பொறுக்காத நான் அந்நாட்டு மன்னன் முன் சென்று முறையிட்டேன்; மன்னனுக்கும் அவ்வூருக்கும்
தீங்கு நேர்ந்தது! தீங்கு தீயினால் ஏற்பட்டதாய் உணர்கிறேன்;

இக்கனவு என்னை வாட்டுகிறது; என் கணவரொடு சேரினும் எப்படி உயர் நிலையை அடையப் போகிறேன் என்று நினைத்தால் நகைப்பு வருகிறது!"

"கடுக்கும்என் நெஞ்சம் கனவினால்; என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்;
பட்ட பதியுள் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தலைமேல்;
கோவலர்க்கு உற்றதோர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனோடு
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்!
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ!"......

இதற்கு தேவந்தி, காவிரிச் சங்கம இடத்திலே இருக்கும் பொய்கைகளான சூரிய குண்டம், சோம குண்டம் இவற்றில் நீராடி எழுந்தால் உன் முற்பிறவிப் பாவம் தொலைந்து கணவரொடு சேர்ந்து இன்பமாக இருப்பாய் என்று சொல்ல அதற்குக் கண்ணகி 'அது பெருமையன்று' என்று கூறுகிறாள்!

"கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்து தையலார்
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் யாம் ஒரு நாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
'பீடுஅன்று ' என இருந்த பின்"..

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு பெருமை சேர்ப்பவை எவ்வளவோ இருந்தாலும் அவற்றிலெல்லாம் சிறந்தது 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்தது!

முளைவிட்ட ஆரியக் கருத்துக்களின் வேர் வெட்ட வந்த மாதர் குல மாணிக்கம் அவள்!

அவளின் சிலையைக் காணும்போதெல்லாம், காற்சிலம்பைச் சிதறடித்துக் கற்பால் கனலிட்டது தெரியவில்லை!

மூடக்கருத்தொன்றை முனைமழுங்கச் செய்த, பெரியாரினும் பெருந்தாய் எனப்படுகிறது இவ்விடத்து நோக்கின்.

பெருமையன்று என்று உதிர்த்து முடித்தாள் கண்ணகி!

ஓடி வந்தாள் பணிப்பெண்; "வந்து நிற்கிறார் ஒருவர் வாசலிலே!
நம் கோவலர் போல் தெரிகிறார்;" சொல்லி முடிக்குமுன்னர் கோவலன் கண்ணகி முன் வந்து நிற்கிறான்;

வந்து நின்றான் வாடி மெலிந்து வருந்தி வாழ்ந்தவள் முன்!
வருந்தி நின்றான்! வருந்தியவளின் வாழ்வை நினைத்து!

சொல்லி நின்றான் வஞ்சம் நிறைந்த பொய்மையுடன் கூடிக்களித்ததாக!

வறுமையில் நின்றான் செல்வம் அத்தனையும் இழந்ததனால்!

வெட்கி நின்றான் இளமை வெள்ளத்தை எங்கோ தொலைத்ததற்கு!

" 'பீடு அன்று' எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள்; கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடியமேனி வருத்தம்கண்டு, யாவும்
'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன,".........

கண்ணகியோ கடுகளவும் முகம் சுளித்தாளில்லை! கட்டியணைத்தாள் இல்லை! கண்ணீர் சொரிந்தாளும் இல்லை!

சிறு முறுவல் பூத்தாள்!

ஆடி ஓடி அழுக்காக வந்து நிற்கும் மகனைத் தாய் பார்த்தல் போல!
முகமெங்கும் இன்பம் ஓங்க அன்பைப் பொழிந்தாள் அந்த ஒரு சிறு நகையில்.

நாலடியார் விவரிக்கும் தலைவியொருத்தியின் நிலையிலேயே கண்ணகியும் இங்கு!

'முன்பு என் தலைவன் முன்பு 'ஈ' பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இன்று, பரத்தையுடன், தீப்பொறி எழும் அளவுக்கு முலைகள் மோத இன்பம் துய்த்ததால் சந்தனம் கலைந்து வந்த தலைவனின் மார்பைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பவளும் யானே!'

என்ற நாலடிகளுக்கு உதாரணமாய் கோவலன் முன் நின்றிருந்தாள் கண்ணகி!

"சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்-தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்."
(நாலடியார்)

கண்ணகியின் அந்தச் சிறுநகையிலும் இழப்பு இழையோடாமல் இல்லை!

உதிர்த்தாள் இதழ் திறந்து!

சிலம்புகள் உள்ளன! எடுத்துக் கொள்ளுங்கள்!
ஈட்டுங்கள் என்று சொன்னாள் கண்ணகி,
இழந்த செல்வத்தை எடுக்கத்தூண்டினாற்போல!

சேயிழையே! வணிக முதலளித்தாய் சிலம்புகள் தந்து! ஈட்டுவேன் மதுரை சென்று! இன்பம் வாழ்வோம்! புறப்படு நீயும் என்னொடு என்றான்;

பதிலெதும் உரைத்தாளில்லை! புறப்பட்டனர் கதிரவன் காரிருள் கழட்டுமுன்னர்!

"நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
'சிலம்புஉள கொண்ம்' எனச் சேயிழை! கேள்இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலர்ந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென்று; என்னொடுஇங்கு
ஏடு அலர் கோதாய்' எழுக என்று நீடி"...........


அன்புடன்
நாக.இளங்கோவன்
24-சூலை-1999

No comments: