Pages

Sunday, March 26, 2000

சிலம்பு மடல் 26

சிலம்பு மடல் - 26 வழக்காடலும்! வஞ்சினமும்!!
மதுரை:
ஊர்சூழ் வரி, வழக்குரை காதை:

கணவனைக் கட்டித்தழுவி கையில் சிலம்பைக் கொடுத்தனுப்பி கண் நிறைய பார்த்தனுப்பிய கண்ணகியின் கண்கள், கணவனின் வெட்டுண்டு கிடந்த உடலில் உறைந்து போனது!

கணவனின் பூமாலையில் ஓர் பூவை உருவி தன் தலையின் கருமயிரில் சூடிக் கொண்டு கைகூப்பி அனுப்பி வைத்தவள், அதன்பின் குருதிச் சேற்றில் தலையில்லா உடலாய்க் குளிர்ந்து போய்க் கிடந்த கோவலனின் மார்பை தன் மார்பில் தேக்கி வைத்து கண்ணீர் சிந்தினாள்!

'கட்டிய கணவனின் துன்பம் பொறுத்துக் கொள்ள பெண்னால் இயலுமா? கடவுளே உனக்கு கண்ணில்லையா?' என்று, இயலா நிலையின் கண்ணீர் கொப்பளிக்க, புலம்புகிறாள்!

"பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?

என்ற இவை சொல்லி அழுவாள் கணவன்தன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள..."

இணைந்திருந்த நெஞ்சங்கள் இரண்டும் பிரிவின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கவேண்டும்.

உலகமே எனைக் கள்வனென்று கூறினும் உனக்குத் தெரியும் கண்ணகி, நான் கள்வனல்ல என்று! என்று கோவலன் நெஞ்சம் அவளின் நெஞ்சத்திடம் நீதி கேட்டிருக்க வேண்டும்!

உனைச் சேர்ந்து, வாழாத வாழ்வையெல்லாம் வாழ வந்தபோது என் கழுத்தை அறுத்து விட்டார்களேஎ......!, என் செய்வேன் என்று அவன் நெஞ்சம் அழுதிருக்க வேண்டும்!

காதலன் தவறு செய்யவில்லை! வாழத்துடித்த காதலனின் தலையைக் கொய்தவன் அரசன்! தலையைக் கொய்தவன் சிலம்பையும் பறித்துக் கொண்டான்! அவன் கழுத்தரிந்த களிமகனையும், கொல்லக் கயவனையும் கண்ணகி அறியாள்!

இறந்த கணவனைக் கடைசியாக மெய்தழுவிக் கொண்டிருந்தவளின் சோகம் சினமாக வலுவெடுக்க, கண்ணகியின் நெஞ்சத்து நீதிமன்றம், காதலனுடன் தானும் சாவதைத் தள்ளிப்போட்டது!

அப்படிச் செத்தால் கோவலன் கள்வனென்றே ஆகிப் போவானே என்று நினைக்கையில் சினம் கடுஞ்சினமாக மாறியது!

காதலன் பிரிந்த பின்னர் வாழ நினைக்கவில்லை! அப்படி சாக நினைத்த போதும் பழி நீக்கிட வேண்டிய கடமை சுமையாய் சேர்ந்து கொள்ள கடுஞ்சினம் செஞ்சினமாய் மாற

"காய்சினம் தணிந்துஅன்றிக் கணவனைக் கைகூடேன்"

என்றாள்; எழுந்தாள்! சூளுரைத்தாள்!
நின்றாள்; நினைந்தாள்!
நெடுங்கயல் கண் நீர் துடையாச் சென்றாள்;
பாண்டியன் அரன்மனை வாயில் முன்!

கொடுஞ்சினம் கொண்டு பாண்டியனைக் காண கண்ணகி செல்ல, தான் கண்ட தீக்கனாவைப் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி கலக்கத்துடன்.

கண்ணகி:
வாயிற்காப்போனே! வாயிற்காப்போனே........!

வாயிற்காப்போன் திரும்பிப் பார்க்கிறான்; கூப்பிட்ட குரலின் அதிர்வைக் கண்டு சற்று திகைக்கிறான்!

அறிவு முற்றுமாய் அகன்று போய், அறம் என்ற உள்ளம் அற்றுப் போன அரச நீதி தவறிய மன்னனின் வாயிற்காப்போனே......!

எடுத்த எடுப்பில் நாடாளும் மன்னனை எறும்பின் கீழாய் ஆக்கி சொல்லால் அடிக்கும் சினம் சுமந்த கண்ணகியைக் கண்டு நடுக்குற்றான் வாயிலோன்!

செம்பொன் சிலம்பொன்றை ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் நிற்கிறாள்...! என்று மன்னனிடம் சென்று சொல்வாய்! சொல்வாய்!

"வாயி லோயே! வாயி லோயே!
அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!

இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள்என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே!

ஆணையிட்டுச் சொன்னவளின் அகங்கண்டு திகைத்து அரசன்முன் ஓடிச் சென்றான் வாயிற்காப்போன்!

"வாழி எம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி......"

வணங்கிவிட்டுச் சொன்னான் வாயிலோன்;

மன்னவா!,

கொற்றவை போல் நிற்கிறாள்! ஆனால் கொற்றவை அல்ல! கோலமோ காளி! ஆனால் காளியும் அல்ல!

பெரும்பகையோடு வந்திருக்கிறாள் வாயில்முன்னொருத்தி! கையில் ஒரு சிலம்பேந்தி நிற்கிறாள்!

கலக்கம் தரும் கடுஞ்சினம் கொண்டாள்!
கணவனை இழந்தவளாம்!

அழைத்து வா என்றான் அரசன்! அழைத்து வந்தான் வாயிலோன் கண்ணகியைக் காவலன் முன்!

"வருக மற்றுஅவள் தருக ஈங்குஎன,
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-

கண்ணீர் பெருக வந்து நிற்கும் இளங்கொடியே, "நீ யார் ?"; கேட்டவன் மன்னன்!

"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்என; "

அகன்று உயர்ந்த அரச மண்டபம்; பொன்னும் மணியும் பதித்த தூண்கள். உயர்ந்த மேடை; அரியாசனம் ஆங்கு!

கவரி வீசும் காற்றின் சுகத்திலே அரசியோடு அரசனும் ஆங்கு!

அவர்க்குக் கீழே அமைச்சர்கள் வரிசை!

சுற்றி நிற்கும் பட்டுக் கட்டிய பணிவிடைக் கூட்டம்!

கண்ணகியின்
கலைந்து கிடக்கும் நீண்ட நெடுமயிர்கள்!
விரிந்து வெறித்த பார்வை!
ஆறு பொங்கும் கண்கள்!
புழுதி படிந்த உடைகள்!
உயிரற்ற கூடாய்த் தெரியும் உடல்!

சுற்றியிருந்த அத்தனைக் கண்களும் அவளின் மேல்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!

ஆனால் சிறுதுரும்பாய்த் தெரிந்தனர் அத்தனை பேரும் அவளுக்கு!

நிமிர்ந்து பார்த்தாள்! நெஞ்சத்து உறுதி அகலாமல்; கண்ணகியின் வெறித்த கண்கள் வெறித்தபடியே நிலைத்து நின்றன மன்னனின் கண்களில்!

நிலைத்த பார்வையின் திண்மை கண்டு மண்டபம் முழுவதும் அமைதியானது!

'அறிவிலா மன்னா!' - விளித்தாள் மன்னனை!

நாடாளும் மன்னவன் இடத்திலே அவன் முன் நின்று அவனை விளித்த அந்த வார்த்தைகள் பாண்டியனை மருளச் செய்தது!

கூடல் வேந்தன் கூடு போன்றவன் ஆயினன்! சுற்றியிருந்தோரையும் கலங்கச் செய்தது!

உன்னிடம் கூற வேண்டியது உளது; அதற்கு முன் யாரெனக் கேட்டாய்; கூறுவேன் கேள்!

பறக்கும் புறாவிற்கு இட்ட துன்பத்திற்காக புறாவிற்கும் நீதி வழங்கினான் சிபி என்ற அரசன்!

கண்ணீருடன் பசு ஒன்று ஆராய்ச்சி மணி ஒலிக்க, அதன் குறை அறிந்தான் மனுநீதிச் சோழன்!

அதன் கன்றைக் கொன்ற அவன் மகனை அதேத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் அச்சோழன்.

மனித இனமற்ற பறவைக்கும், பசுவுக்கும் அரசநெறி கொண்டு நீதி வழங்கிய நெறிதவறா அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என் ஊர்....!

பழியில்லாப் பெருஞ்செல்வ வணிகக் குடியிலே பிறந்த மாசாத்துவான் மகனான கோவலனை மணந்து,
அவனுடன் செல்வம் தேடி உன் நாடு வந்து,
என் காற்சிலம்பை விற்க வந்தபோது,
உன்னால் கொலை செய்யப்பட்டானேஎ கோவலன்ன்...
அவன் மனைவி நான்! கண்ணகி என் பெயர்!

சொல்லி முடித்த அவளின் கண்களில் நீர் மட்டும் இன்னும் வற்றவில்லை!

"தேரா மன்னா! செப்புவது உடையேன்
எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என்பதியே; -

அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச்

சூழ்கழல் மன்னாநின்நகர்ப் புகுந்துஈங்கு
என்கால் சிலம்புபகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பதுஎன் பெயரே........"

கள்வனைக் கொன்றேன்; குறை கூறி நிற்கிறாளே இவள்! சிந்தித்தான் பாண்டியன்;

கள்வனைக் கொல்வது தானே அரச நீதி! எடுத்துரைத்தான் வேந்தன்.

"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என..."

எடுத்துரைத்த வேந்தனை சொல்லால் அறைந்தாள் அணங்கு! 'நல்திறம் கொண்டு ஆராயாக் கொற்கை வேந்தேஎ...!' என் கால் சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது!

சினத்துடன் சற்று இகழ்ச்சி அவள் உதடுகளில்!

"நல்திறம் படராக் கொற்கை வேந்தே!
என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே..."

இப்பொழுது ஆராய்கிறான் மன்னன்!

அம்மை சொன்னது அறிந்தோம்! எம் அரசியின் சிலம்பது முத்துப் பரல்கள் உடைத்தது.

கொண்டுவா என்றான் அரசியின் சிலம்புகளை! அவையில் வைத்தான்;

"தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி
யாம் உடைச் சிலம்பு முத்துஉடை அரியே;
'தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப!

முத்தென்று சொன்னான்! முத்தைக் காட்டினான்!
பிரிதொன்றைப் பார்த்தான் மாணிக்கம் கண்டான்!

மாணிக்கத்தைக் காட்டென்று சொன்னான் கண்ணகியிடம்!

ஒற்றைச் சிலம்பை பெருவாழ்வு வாழ கணவனிடம் கொடுத்து மற்றைச் சிலம்பை தன் செல்வக் குடி சிறப்பின் நினைவாய் வைத்திருந்த கண்ணகி, காதலன் கள்வனல்ல என்ற சான்று பகர புறப்படும்போது கழற்றிக் கையில் பிடித்த அச் சிலம்பை அடித்தாள் மண்மேல்! உடைந்து தெறித்தன மாணிக்கப் பரல்கள்;
அவை முழுதும்!

மன்னனின் சிந்தனையை செயலாக்கிய உதட்டிலும் ஒன்று!

நீதி தவறிய அரசனே! பார் இந்த மாணிக்கப் பரல்களை! என்றாள் வெறுப்புடன்;

உடைத்த மாத்திரம் உண்மையை ஓங்கச் செய்துவிட்ட நேர்மையின் ஆணவம் அவள் குரலில்!

ஒரு சிலம்பால் ஒப்பற்ற காதலன் உயிரை சாவுக்கு அனுப்பிவிட்ட ஏமாற்றப் பார்வை!

ஆறுதல் கொள்ளாத இதயத்தின் குமுறல் நெஞ்சை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.

மருண்டான் பாண்டியன் மாணிக்கம் கண்டு; உணர்ந்தான் உண்மை இணை அதுவென்று!

நடந்து முடிந்த செயல்கள் ஓர் நொடியில் சிந்தையில் தோன்றி மறைய நடுங்கிப் போனான். சிந்தித்தான்!

பிழைசெய்தேனே நான்! என் காவல் பிழை போனதே!

மதியின் வாழும் மனித வாழ்க்கையில்
மந்திரம் மயங்கி மதி இழந்தேனே!

மந்திரப் பித்தத்தால் என் மதி மயங்குங்கால்
என் மக்களின் மதி என்னவோ ?

அறிவால் ஆராயாமல் மந்திரம் கேட்டு
கோழையாகிப் போனேனே யான்!

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பகறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கோள் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வழி வந்தவன் நான்!

மலையையும் கடலையும் பகையையும் ஆண்ட
கல்வியும் செல்வமும் வீரமும்,
மந்திரம் என்ற சிறு நரிமுன் தோற்றுப் போனதே!

பாண்டியநாடு மடமையில் மூழ்க விட்டேனே!
பாண்டியநாட்டில் மடமை வளர விட்டேனே!
என் வெண்கொற்றக் குடை தாழ்ந்து போனதே!
என் செங்கோல் கொடுங்கோல் ஆனதே!
அறமும் நெறியும் அகன்று போனதே!
என் வாழ்வு முடியட்டும்!
மனிதருள் ஒருவர் தனியொருவராக வந்து
இன்னமும் நீதிகேட்க முடியும் பாண்டியநாட்டில்!
ஆதலின் பாண்டிய நாட்டில் மடமை அழிந்து
நல்அறமும் திறமும் வளரட்டும்!
உயிர்வாழேன் நான்; கெடுக என் ஆயுள்!

என்றனன் மன்னன்; மயங்கி வீழ்ந்தான் மண்மேல்! பாண்டியன் உயிர் பிரிந்தது!

உலகின் இயற்கை (ஊழ்) மதியின் மாறுபட்டு பித்தம் கொண்டபோது, நீதி தோற்ற முதற்காலை வாழ்வைப் பிரிந்து வழிவிட்டான் வளத்துக்கு பாண்டிய நெடுஞ்செழிய மன்னன்!

"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!என
மன்னவன் மயங்கி வீழ்ந் தனனே...."

காதல் வாழ்க்கை கண்ணகிக்கு மட்டுமா சொந்தம் ? அன்பு அவளுக்கு மட்டுமா சொந்தம்? காதலனுடன் அருமந்த நட்பு அவளுக்கு மட்டுமா வாய்த்தது?

குலைந்தனள்! நடுங்கினள்!; கோப்பெருந்தேவி.

என் இதயத்தின் மன்னவன் போன பின் யான் வாழ்வேனா? யான் வாழ்ந்துதான் என்ன? எங்கே கணவனைக் காண்பேன் நான்? தேம்பினாள் பாண்டிமாதேவி!

தவறை உணர்ந்த உடன் உயிர் விட்ட என் காதலனுக்குத் துணை செல்வேன் யான்! கோவலக் கொலைப்பழியை ஏற்று உயிர் விட்ட என் மன்னவனின் இதயத்தில் இடம் பெற்ற நானும் வாழேன்!

என் சிலம்பை எவரோ பறிக்க,
உயிர்விட்டான் கண்ணகியின் கணவன்!

கண்ணகி சிலம்பை காவலன் பறிக்க
உயிர்விட்டான் என் கணவன்!

அறம் பிழைக்கப் பழியை
ஏற்றுக் கொண்டான் என் கணவன்!

என் சிலம்பால் நேர்ந்த பிரிவிற்கு
ஆறுதல் சொல்ல அவனொடு சேர்வேன்!
என்று கோப்பெருந்தேவி நினைத்திருக்க வேண்டும்!
வீழ்ந்தனள் பாண்டியன் மேலே! மாண்டனள் தேவி!

உயிர்..!

யார் சொன்னார் கைகளில் இல்லை என்று ?

வாழ வேண்டியபோது வாழ்ந்தும், வீழ நினைத்த போது காற்றைப் பிடுங்கி விட்டாற்போல் உயிரைத் தூக்கி எறிந்த இந்த மனித சக்தி ஒழுக்கம் நிறைந்தது! நேரிட்ட வாழ்வையும் மனஉறுதியையும் கொண்டது!

கற்பென்ற இந்த மனத்தின் உறுதி கோப்பெருந்தேவிக்கு மட்டுமல்ல வழுவிய போது உயிர் விலகிய பாண்டியனுக்கும் தான்!

மென்மையாள் கண்ணகி, கணவன் துயர் அறிந்து
வன்மையாள் ஆகி தன் மனத்
திண்மையால் வென்றாள் மன்னனை!

சில வினாடிகளுக்குள் அரசனை வென்றாள்! அரச மன்றத்தை வென்றாள்! நீதியை வென்றாள்!

இறந்து கிடந்த பாண்டியனையும் பாண்டிமாதேவியையும் நின்று நிலைத்துப் பார்த்தாள் கண்ணகி!

பாண்டியன் மேல் பிணமாய் பாண்டிமாதேவி!

சாவிலே ஒன்று சேர்ந்து விட்ட அவர்களின் காதல் வாழ்க்கை கண்ணகியையும் ஆட்கொண்டிருக்க வேண்டும்.

'மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!....
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!....'

என்று, அவளில் இதயத்தில், கோவலன் தன்னைப் போற்றியதெல்லாம் அன்பு மழையாய்ப் பொழிந்து கொண்டேயிருந்தது!

இனி அவளின் காதோடு காதாக அவன் பேசுவானா? காதலில்லா வாழ்க்கை உயிரில்லா உடலல்லவா ? மனிதவாழ்வின் மையமே அதுதானே! மையம் இல்லாது எது வாழும் மண்ணில்!
அதுதானே உணர்வின் உந்து சக்தி! உறவின் பாலம்!

அந்த பாலம் அறுந்துபோனதை சிறிதும் பொறுத்தாள் இல்லை!

பாண்டியன் உயிர் விலகியும்
அவன் தேவி உயிர் விலக்கியும்
அவள் சினம் எள்ளளவும் குறையவில்லை!

மாறாக, திடமாகச் சொன்னாள்!
தீங்கு செய்த பாண்டியனின் மனைவியே, 'கடுமையான தீங்கிற்கு ஆளாகியிருக்கும் நான் இனிச் செய்யப் போவதையும் காண்பாய்!'

என்று மேலும் கடிந்து, அனைவரும் நடுநடுங்க, வஞ்சினச் சீற்றத்துடன் அரசவையில் களிநடம் புரிந்த கண்ணகி அரன்மனை நீங்கினாள்!

"அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம்என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதுஅன்றே-பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி!
கடுவினையேன் செய்வதூஉம் காண்."

அன்புடன்
நாக.இளங்கோவன்
26-மார்ச்-2000