Pages

Tuesday, December 30, 2008

புலம்பெயர்வு இலக்கியங்களில் சிங்கையில் தோன்றிய காப்பியம் 'சங்கமம்'.

சொல் நேர்மை, பொருள் நேர்மை,
மொழி நேர்மை, குமுக நேர்மை,
என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
இழிவான படைப்புகளை எழுதித் தள்ளும்
எழுத்தாளர்களே அதிகமாக இருக்கின்ற
தமிழ்ச் சூழலிலே, பிறமொழி முக்கால்
தமிழ் மொழி கால் என்ற அளவிலே
அருவெறுக்கத்தக்க நடையில் வெளிவரும்
படைப்புகளுக்கு இடையே,
சிறந்த பாக்களால் சிங்கைக் கவிஞர்
பாத்தென்றல் முருகடியான்
(pathenralmurugadiyan.blogspot.com)
அவர்களால் யாக்கப்பட்ட
செந்தமிழ்க் காப்பியமான சங்கமத்தைப்
படித்த போது எல்லையில்லா
மகிழ்ச்சி அடைந்தேன்.

புலம்பெயர் தமிழரின் இலக்கியங்களில்
ஒரு சிறந்த காப்பியம் உருவாகியிருப்பது
தமிழ்க் குமுகத்திற்கு
நம்பிக்கையையும் உணர்வையும்
அளிப்பதாக இருக்கிறது.

தமிழ்க்குடியின் புலம்பெயர் வாழ்வு
பல்வகையது; அதிலே சிங்கப்பூருக்குப்
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகளின்
அமைவை, ஒரு எளிய தமிழனின்
இன்னல் மிகுந்த
வாழ்வை கருவாகக் கொண்டு
காப்பியமாக யாத்திருக்கிறார் பாத்தென்றல்.

சிங்கப்பூரில் தமிழர் வாழ்வியலை அறிய வேண்டுமா?
"இந்தாப்பிடி சங்கமம் என்ற இந்த நூலை" என்று
தமிழ் படிக்கத் தெரிந்த எந்தத் தமிழரிடமும் எடுத்துக்
கொடுத்து விடலாம். வரலாறு, அரசியல், வாழ்வியல்
என்று கோர்க்கப் பட்ட இந்த நூல் சிங்கைத் தமிழர்
வளர்த்த தமிழுக்கு மணிமகுடம்.

மாபெரும் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம்
எங்கு தொடங்கியதோ அங்கேயே சங்கமமும் தொடங்கி,
மதுரைப் பக்கம் போகாமல் மலாயா சிங்கப்பூர் பக்கம்
வந்துவிடுகிறது. ஆம் - புகாரில் தொடங்கி, சிங்கையை
நடுவமாக வைத்து மலாயாவையும் அணைத்து எழுதப்
பட்டிருக்கிறது.

செல்வமும் கல்வியும் சிறிதாகவேக் கொண்டு ஆனால்
உணர்வுகளிலும் பழைமைகளிலும் ஊறிய பெற்றோரையும்
உற்றாரையும் கொண்ட எளியனின் பிழைப்பு தேடிப் புலம்
பெயர்ந்த வாழ்வில் களிப்பும் துயரும் மாறி மாறி வந்து
இறுதியில் படிப்பவரை ஆழ்ந்த சிந்தனைக்கும் புரிதலுக்கும்
தள்ளிவிடுவது இக்காப்பியத்தின் வெற்றி!

எளிய மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய காப்பியம்
என்பதால் பல முறை காப்பிய ஆசிரியரைப்
பாராட்டத் தோன்றுகிறது. எளியரைப் பாடும்
இந்நூலால் பெருவாரியான
மக்களின் வாழ்வியலை எளிதாகப் புரிய வைக்க முடிகிறது.
புலம் பெயர்ந்த குமுகத்தின் போக்கைப் பெரிதும்
புரிந்து கொள்ள முடிகிறது.

சிறந்த தமிழ் தேனருவியாக காப்பியம் முழுமையும்
பல்வேறு பாக்களாக பல்வேறு பாவகைகளாக சீராக
ஓடி இன்பம் சேர்க்கிறது. கவிஞரின் ஆழ்ந்த நெடுங்கால
பாப்புலமையை எண்ணி வியக்க வைக்கிறது ஒவ்வொரு
பாட்டும்.

சிங்கை வரலாறு, புகார் சிறப்பு, மலாயாக் குறிப்புகள்,
சிங்கை அரசியல், தமிழ் நாட்டின் குமுக மாற்றங்கள்,
சிங்கையில் தமிழர்கள் குமுகமாக ஆகித் தமிழ்
வளர்த்தது, தமிழ் விழாக்கள் செய்தது,
சிங்கைத் தமிழரின் ஒற்றுமை வேற்றுமைகள்,
பிற இன மக்களோடு ஒப்புவித்து
தம் மக்கள் பெற வேண்டிய திறன்கள்,
சீன மலாய் மக்களின்
பழக்க வழக்கங்கள், சிங்கை வளர்ச்சியில்
தமிழர்களின் பங்களிப்பு, அளித்த பங்கிற்கேற்ப அளித்த
தமிழர்கள் பெற்றதன் அளவீடு, சிங்கையில்
தமிழ் வளர்த்த பெரியார்களின் அரும்பணிகள்,
சிங்கையைக் கட்டி வளர்த்த பெரியார்கள்,
அவர்தம் சீரிய தொண்டு,
சிங்கையின் சமய நல்லிணக்கமும்,
சட்ட/காவற் சிறப்பு, தமிழ் மொழியின்
ஏற்றமும் தாழ்வும், தத்துவம், ஆன்மீகம்,
தமிழ்ச் சமய நெறிகள், என்ற இவற்றோடு
தமிழனாய்ப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்த
ஒரு தமிழனின் தனிமனித வாழ்க்கையையும் அவன்
தமிழ்க் குமுகத்தோடு ஆற்றிய பணிகளையும், அடைந்த
சரவல்களையும் வாழ்க்கையாக கதையாகக் குழைத்துக்
கொடுத்துள்ள பாங்கு மிகப் பாராட்டத் தக்கது.

தமிழவேள் கோ.சாரங்கபாணியார் தமிழ் மக்களை
அரவணைத்து ஆற்றிய தமிழ்த் தொண்டோடு
அவர் ஆற்றிய பாங்கு, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்
ஊன்றிக் கற்க வேண்டிய ஒன்று.
அதற்கு இந்நூல் பெரும்
உதவியாக இருக்கும். அது தமிழ்ச் சங்கங்கள்
என்ற பெயரில் தமிழ்ப்பணிகள் செய்ய முனையும்
புலம் பெயர்ந்து வாழ்வோர்க்கு கூடுதல்
கல்வியாக இருக்கும்.

காப்பியத்தின் பகுதி-4 பகுதி-5 (இயற்கும்மி, ஒயிற்கும்மி)
சிங்கையில் தமிழையும் குமுகத்தையும்
வளர்த்த பாங்கினை அழகுறச் சொல்கிறது.
பிற பகுதிகளும் இயம்புகின்றன.
பாக்களின் சந்தங்கள் மதி மயக்க வைக்கின்றன.

"அள்ளிக் கொடுத்தனர் பள்ளிக்கென மக்கள்,
ஆர்வம் மிகுந்தது கல்விக்கென
அமுதத் தமிழ் அறிவைப் பெற
குமுகக் குரல் குரவையிடத்
துள்ளிக் குதித்தனர் தொல்தமிழால்"

தமிழரைப் பிடித்த பெருஞ்சழக்கான
சாதீயமும் புலம் பெயர்ந்த சான்றுகளும் நூலில்
மிகச்சரியாகப் பதிந்திருக்கிறது. கீழே ஒரு சான்று:

"பாழை விளைத்திட்ட சாதியைப் பாய்மரக் கப்பலேற்றிக்
கீழை திசைக்கெலாம் கொண்டுவந்தாரந்தக் கீழ்மையாலே
வாழை மரத்துக்குத் தாரீன்ற காய்களே கூற்றமாப் போல்
மோழை மனங்களும் ஏழை நிறங்களும் மூண்டதிங்கே!
"
(பகுதி-9)

சுவையான காதல் பாட்டுகள், வாழ்க்கை பாட்டுகளுக்கிடையே
தமிழுக்கு ஏற்பட்ட சோதனைகளை அடுக்கடுக்காய்
செருகிய பாங்கு கவிஞரின் ஆழ்ந்த புலமைக்கு
எடுத்துக் காட்டு மட்டுமல்ல, கல்வி கற்ற நேர்மையான
தமிழருக்கு இருக்கும் நேர்மையான எதிர்காலக் கவலையும்
அக்கறையும் ஆம்.

"தென் புலத்தாரைப் பெண்கள்
திருடராய்க் குரங்காய்த் தீய
வன்புலனரக்கர் போன்ற..."

"மறைகளை ஆற்றில் போட்டோம்
மண்டிய சாதித் தீயின்
குறைகளைக் களைய மாட்டோம்
*குலத்தையே குலத்தார் வெட்டும்*
பறைகளைத் தட்டிக் கொட்டிப்
பார்ப்பனர் வேதங் கேட்டோம்
உறைகளில் வைத்த வாள் போல்
உறங்கினோம் தமிழா மீட்டோம்?"

ஆழ்ந்த குமுக அக்கறையில் காப்பியத்தின்
வரிகளில் பாத்தென்றல் புயலை எழுப்புகிறார்.

"சீனரின் கோவில் சென்றால்
சீனமே வழிபாட்டோசை
ஆனதோ அரபி மண்ணில்
அதுகேட்கும் பள்ளிவாசல்
ஊனமுற்றழிந்த பாடைக்கு
உயிர்தர உழைக்குஞ் சூதர்
ஆணையில் அடங்கும் நம்மை
அடிமையாய் நினைக்கின்றாரே!.."

பகுதி-17ல் கவிஞர் புயலாகச் சுழல்கிறார். தெறிக்கிறது
அவரின் வேதனைகள்.

தமிழ்நாட்டிலே கோயில்களில் தமிழ் இல்லை;
அதற்குக் காரணமாக திராவிட தமிழ் இயக்கங்கள்
எத்தனைக் காரணங்கள் சொன்னாலும், அத்தனைக்
காரணங்களையும் தமிழ் மக்கள்
புலம் பெயர்ந்து போகையிலும் கட்டித் தூக்கிப்
போகவேண்டியதில்லையே? என்ற வினாவை இவர்தம்
கவிதை எழுப்புகிறது.

ஆம் - சிங்கையிலே 1824ல் சுமார் 500, 600 தமிழர்களே
இருந்துள்ளனர் நூலின் படி. 1860ல் சுமார் 10000 தமிழர்களே
இருந்துள்ளனர்.

இவர்கள்தான் பெருகி இன்றைக்கு
சில இலக்கங்கள் அளவில் இருக்கிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் சமைத்த
இவர்கள் ஏன் சாதிக்குள் அமிழ வேண்டும்?

இவர்கள் வேர்வை சிந்தி உழைத்து ஏன்
நஞ்சான சமற்கிருதத்தைக் கோயிலுக்குள்
கூட்டிப் போக வேண்டும்?

ஒரு புதுக் குமுகத்தைக் கட்டி எழுப்பிய தமிழர்களின்
உழைப்போடும் வேர்வையோடும் முக்கியமான மடமையும்
சேர்ந்து கொண்டதைக் காப்பியம் பண்புடன் விளக்குகிறது.
இதற்கு முற்றும் தமிழ் மக்களே காரணம் என்று தெள்ளென
விளங்க வைக்கிறது.

இப்படிக் கட்டப்படும் புதுத் தமிழ்க் குமுகங்கள் எப்படி
எதிர்காலத்தில் சரவல் படும் என்பதனையும் சிங்கையில்
தமிழர் வரலாறு கூறுகிறது.

தமிழர் விழாக்களுக்கான விடுமுறைகள் என்றால்
அது தீபாவளிக்கு ஒருநாளும் விசாக நாள் என்ற நாளுக்கும்
ஆகிப் போனதை காப்பியம் காட்டுகிறது. விசாக நாள்
என்றால் தமிழர் விழாவா என்பதனை தமிழர்கள்தான்
சிந்தித்து விடை காண வேண்டும்!

"பாதகந் தமிழுக்கென்றால் பல்லிளித்து இருந்திடாதே!
நீ தவம் செய்க நாளை நிமிர்ந்தெழும் தமிழர் வாழ்வே!"

என்ற இவ்வரிகளும் இன்ன பிற வரிகளிலும் பாவேந்தரே
நிமிர்ந்து நிற்கிறார்!

"உலவுந்தன் மதத்தை மட்டும் உயிராக நினைப்பாருண்டு
கலகத்தார் இவரே தங்கள் கட்சிக்கே மேன்மை செய்வார்"
என்ற இவ்வடிகள்,

"அவரவர் தத்தம் மதங்களே அமைவதாக
அரற்றி மலைந்தனர்..." என்று
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
அடிகளை ஒட்டி வருகின்றன.

காப்பியத்தில் காதலைப் பாடும்போதும்,
கவலையைப் பாடும் போதும், துயரைப் பாடும் போதும்,
ஏற்றத்தைப் பாடும் போதும்,
தெருவீதியைப் பாடும் போதும் எங்கும் பாத்தென்றலொடு
தமிழர் கவலையும் அவர்தம் மொழிக் கவலையும்
சூறாவளியாய் சுழன்று கொண்டே இருக்கின்றன.

தமிழ் மொழிபால் தூய அக்கறை கொண்ட
தூய தமிழ்ச் சிந்தை பாத்தென்றலுடையது.

"தெருப்பக்கம் குரைக்கின்ற நாயாகப் பேயாக
திரிகிறோம் எச்சில் உண்டு!
தென்னாட்டுச் சிவன் தந்த தென்மொழி வழிபாடு
திருக்கோவில் வாழவிலையே!"

"தேய்பிறையாக்குவார் தேன்மொழியை - மொழித்
திருடர்கள் மாற்றிடார் தம் வழியை"

"சாதிக் கலப்பை வெறுப்பவர்கள் - மொழி
பாதிக்குப் பாதிக் கலப்பவர்கள்..."

தென்றலா கவிஞர்? என என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

மறைமலையாரும் நீலாம்பிகை அம்மையாரும்
தேவநேயரும் சித்திரனாரும் பாவேந்தரும் பாரதியாரும்
அண்ணாவும் திரு.வி.கவும், பிற பெரியார்களும்
நீங்காமல் நிறைந்திருக்கிறார்கள் இந்நூலில்.
நாயன்மார்களும் அறவோர்களும் தமிழ்நெறியும்
சிறப்பிடம் பெருகிறது நூலில்.

"அருட்கவி அருணகிரியார்
அருந்தமிழ்க் குமர குருபரர்
மருட்புவி மயக்கந் தீர்த்த
மாமுனி தாயுமானார்...."

பகுதி-40ல் கற்றுணை பூட்டிய பெருமான்
கடலில் மிதந்ததை ஏத்தி செய்திருக்கும் வாதம் அருமை.

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார்
ஒரு சமணர் என்று விளம்பரம் செய்வோரை
கண்டிக்கிறார் சங்கமக் காப்பிய
ஆசிரியர். இதற்காகவே அவரைப் பல முறை
பாராட்ட வேண்டும்.

"சிலப்பதி காரத் துக்குள்
சென்றவர் பலபேர்! அந்த
அளப்பரும் அமுதம் உண்ட
அறிஞரோ சில பேர்! இன்னும்
களப்பிரர் பின்னே செல்லும்
கயமைகள் கண்கள் மூடிக்
குழப்புவார் அதையே நம்பிக்
குலக்குணம் விட்டார் கோடி!"

காப்பியமெங்கும் தமிழர்களிலே இருக்கும்
சிறுமதியாளர் வளைந்து நெளிந்து நத்திப் பிழைத்து,
எப்படித் தமிழுக்கும் இனத்திற்கும்
தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதனை ஆங்காங்கு
பல காட்டுகளோடு விவரிக்கிறார்.
எல்லா தமிழ் நிலங்களுக்கும் இது மிகப் பொருந்தும்.

"நல்ல தமிழில் பெயரிருந்தாலும்
கொல்ல நினைப்பது உன் குலத்தானே"

"அன்று வந்தவர் அருந்தமிழ் காத்தனர்
இன்று வந்து அவர் இனம் மொழி கொல்கின்றனர்"

"சீனர்களின் கடை முகப்பில் செழுந்தமிழும் எழுதுகிறார்
மானமில்லாத் தமிழர் பலர் மருந்தளவும் தமிழ் எழுதார்"

காப்பிய நாயகனான செந்தில் என்ற தமிழுணர்வு குன்றாத
ஒரு எளிய தமிழனின் வாழ்வு இன்னல் மேல் இன்னலுறும்;
வளர்ச்சியும் தளர்ச்சியும் காணும்; அவன் சிங்கை வருவது
முதல் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் காட்டிக் காட்டிக்
கடைசியில் கண்ணையும் மூடிவைக்கும் காப்பியத்தில் தொட்ட
இடமெல்லாம் தென்றலும் புயலுமாய் தமிழ் நடம் புரிகிறது.

மொழிப்பற்று உடையவருக்குத்தான் சிறந்த நாட்டுப்பற்று
இருக்கும். தமிழ் மொழிப் பற்றோடு சிங்கப்பூர் என்ற தனது
தாய்நாட்டின் மீதும், தாய்த்தமிழ் நாட்டின் மீதும் கவிஞர்
பேரன்பு பொழிந்து உறவுகள், காதல், மணம், படிப்பு,
வேலை, மகிழ்ச்சி, துயர், தொண்டு, அறம்,
தத்துவம், இறை, தமிழ், அரசு, நாடு, இனம்,
சட்டம் என்ற பலவற்றையும் பாடி, கீழ்பட்டிருக்கும்
உலக வாழ் தமிழ்க் குமுகத்தை நோக்கி அடிப்படை
வினாக்களை வைத்துக் குமுறுகிறார் இறுதியில்.

"சீரிலங்கை நாட்டில் எங்கள்
செந்தமிழர் கொல்லப் பட்டால்
ஓரிரங்கல் உரை ஏன் இல்லை?...."

"ஒரு பத்துக் கோடி மக்கள்
உலகத்தில் இருந்தும் கூட
ஒரு பற்றும் இல்லார் போன்றும்
உணர்வற்றும் எழுச்சியற்றும்
மறுவுற்ற மந்தையாக மாய்வதுமேன்...?"

தமிழறியாரும், தரங்கெட்ட தமிழரும் குமுகத்தின்
முன்னணியில் இருந்தால் அந்தக் குமுகத்தின்
மொழியுணர்வும், இனவுணர்வும் நீர்த்துப் போகும்;
அதுவே தமிழ்க்குடிகளுக்கு உலகெங்கும் நடந்து
வருகிறது. காப்பிய நாயகனோடு கவலையோடும்
இந்தக் கவலையோடும் காப்பியம் நிறைவுறுகிறது.

ஒவ்வொரு தமிழரும் இந்த உயர்ந்த படைப்பினைப்
படிக்க வேண்டும்; தமிழ் உணர்வூட்டும் இந்நூலை
பலருக்கும் அளிக்கவும் வேண்டும். புலம் பெயர்ந்த
மக்களின் நூலகங்கள் இதனை ஏற்றி வைக்க வேண்டும்.

பொத்தகத்தில் காணும் நூல் கிடைக்குமிடங்கள்:
தென்றல் பதிப்பகம், சிங்கப்பூர். தொ.பேசி 68996319
தமிழ்நிலம், சென்னை. தொ.பேசி 94444 40449
திரு.அருகோ, சென்னை. தொ.பேசி 2472 1009

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, November 23, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #3/3)

நாம் செய்ய வேண்டியதென்ன?

நாமெல்லாம் எழுந்து போய் இரயில் மறியல்
செய்யப் போகிறோமா?
நாமெல்லாம் பட்டினிப் போராட்டம்
செய்ய வேண்டுமா?
நாமெல்லாம் தார்ச்சட்டியைத் தூக்கிக் கொண்டு
தெருத்தெருவாகச் சென்று தமிழ் அல்லாதவைகளை
அழிக்க வேண்டுமா?

அதெல்லாம் எதுவும் தேவையில்லை.

1) பிழைப்பிற்காக கற்ற கல்வி ஆங்கிலம்.
பிழைப்பதும் ஆங்கிலத்தால்தான்.
ஆனால் அந்த ஆங்கிலத்தை அலுவலகத்தோடு
வைத்துக் கொள்ள நம்மால் முடியாதா?

2) அலுவகம் சார்ந்த பணிகளில் தமிழுக்கு
எதிர்காலத்தில் இடம் முழுக்க இருக்கும் என்றாலும்,
தற்காலத்திலே முடியாத சூழல் தனியார் துறைகளிலும்
வெளிநாடுகளிலும் இருந்தாலும் தனிப்பட்ட
எழுத்துக்களை தமிழில் எழுத முடியாதா?

3) நமது நண்பர்கள், உறவுகளிடம்
தமிழில் பேச முடியாதா?

4) நம்மால் செய்ய முடிந்த இவற்றை நாம்
செய்யாததற்கு அரசியல்வாதிகளைத் திட்டித்
தீர்க்க வேண்டுமா? நமக்கு நேர்மை வேண்டாமா?

5) மிடையங்கள் தமிழைக் கொலை செய்கின்றன
என்பதால் நாமும் கொலை செய்ய வேண்டுமா?

6) எந்தத் தொலைக்காட்சிகளோ கேடு கெட்ட
தமிழைப் பேசினால் நமக்கென்ன?
நாம் என்ன அந்தத் தொலைக்காட்சியோடு
திரும்பப் பேசுகிறோமா? இல்லையே!!
அப்புறம் ஏன் அதைத் தடைக்கல்லாக
எடுத்துக் கொள்ள வேண்டும்?

7) எழுத்தாளர்கள் எல்லாம் செய்யும்
கலப்புத் தவறுகளை, கவிஞர்கள் செய்யும் தவறுகளை
நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

8) தமிழ் பேச சில பேருக்கு நாணமாக இருக்கிறது
இன்றையச் சூழலில். அந்த நாணத்தை அவர்கள் போக்கிக் கொள்வது எளிது.

9) கலப்புத் தமிழுக்கு ஞாயம்
கற்பிக்கிற ஆள்களையும்,
ஆங்கிலம் சரளமாகப் பேசுபவர்களையும்
நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

அவர்களிடம் சேக்சுபியரைக் கொண்டு கொடுங்கள்.
தாகூரைக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
தவிப்பார்கள் படிப்பதற்கே!

அவ்வளவு ஏன் கணித்துறையிலே இருக்கிற
சில பகட்டுப் பேர்வழிகளிடம் கொண்டு போய்
சி.யே.டேட் நூலைக் கொடுங்கள்!
பூச்சின் நூலைக் கொடுங்கள்!
எத்தனை பேரால் வேகமாகப் படிக்க முடிகிறது
பாருங்கள்? வேடிக்கையாக இருக்கும்.

ஆங்கிலத்திலும் அடிப்படைப் புலமை இல்லாமல்,
தமிழிலும் அடிப்படை இல்லாமல்
ஒரு வித பித்துக்குளித்தனத்தில்
இந்தக் குமுகம் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் மாறுவதற்கும், உணருவதற்கும்
தக்க வேளை தற்காலமே!

அதைத்தான் போரற்ற குமுக நிலையும்,
முன்னேறிய கல்வி நிலையும் காட்டுகின்றன.

"தமிழ் என்ன செய்தது என்று கேட்காதே!
தமிழுக்கு என்ன செய்தோம்? என்று எண்ணிப்பார்"!

விடையாக, நல்ல தமிழ் எழுதினேன்
என்று உள்ளம் சொல்லுமானால்
அதுவே உயர்ந்த தமிழ்ப்பணி.
அதுவே தேவையான பணியும் கூட.

நிறைவு.
நன்றி: பண்புடன் விழாக்குழுவினர் மற்றும் நண்பர் ஆசிப்

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, November 22, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி # 2


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம். கல்வி என்ற வகையிலே, கோணத்திலே பார்த்தோமானால், 1906-07ன் கணக்குப் படி இந்தியாவில் படித்தவர்கள் 2.2% பேர். ஆதாரம் நீயூயார்க் டைம்சு நாளேடு.

http://query.nytimes.com/gst/abstract.html?res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF

http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF&oref=slogin

இந்திய சராசரி புள்ளி விவரத்தையே தமிழகத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்.

2001ல் எடுக்கப் பட்ட புள்ளிக் கணக்குப் படி தமிழகத்திலே 76% பேர்.
அது தற்போதைக்கு 80% ஆகியிருக்கும்.

ஆக சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால் 2.2% ஆகவும்
தற்போது 80+ விழு. ஆகவும் இருக்கும் இந்த நிலை மிகவும்
வியத்தகு நிலை. (படம் - 2).


மொத்தம் படித்தவர்களில் 1900த்தில் 3%தான் பெண்கள். ஆனால்
இன்றைக்கெல்லாம் பள்ளித் தேர்வுகளில் பெண்களே அதிகம் தேர்வாகிறார்கள்.

1300க்கும் 1947க்கும் இடைப்பட்ட 650 ஆண்டு காலம்
மிகக் கொடுமையானது.

8 அயல்நாடுகள் அயல்மொழிகள் நம்மைத் தாக்கியிருக்கின்றன.
இப்படி அமைதியில்லா அந்தக் காலங்களில்தான்
நிலப் பண்னைத்துவம் என்று சொல்லப் படுகின்ற கிழாரியம் (feudalism),
வருணப் பிரிவினை செய்யும் சாதீயம் என்ற இரண்டும் இராகுவும் கேதுவுமாக தமிழ் நிலத்தையும் தமிழையும் இழி நிலைக்குத் தள்ளின.

ஆகவே, அந்த 2.2% விழுக்காடு கல்வி என்பது,
சாதிச் செழிப்பின், செல்வச் செழிப்பின்
கல்விச் செழிப்புதானே ஒழிய
குமுகச் செழிப்பின் வெளிப்பாடு அல்ல.

தற்போது பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு விட்டபோதிலும்,
பல குமுகத் தடைகள் உடைபட்டுப் போய், பீறிட்டுக் கிளம்பும்
மனித சக்தியின் வெளிப்பாடாய்த்தான் இன்றைய 80+% கல்வி நிலை
நமக்குத் தெரிகிறது.

2.2% படித்தவர்கள் இருந்த சூழலை விட, 80+% படித்தவர்கள்
இருக்கையில் மொழி வளம் என்பது சிறப்புற்றிருக்கத்தானே
வேண்டும்! படிப்பிற்கு தகுதி அதுவாகத்தானே இருக்க முடியும்?
படித்த குமுகாயத்திற்கு தாய்மொழியை செழிக்கச் செய்வதில்தான்
மதிப்பும், பெருமையும் கிடைக்கும், நிலைக்கும்.
(2.2% இருந்த பொழுதே நாம் 30-40 விழுக்காடு கலந்தோம்; இப்பொழுது
80% இருக்கையில் எங்களால் அதை விட அதிகமாகக் கலக்க முடியும் என்ற நிலை இருக்கிறதா? அல்லது தற்போது நிறைய பேர் பண்பட்டிருக்கிறோம்; ஆகையால் கலப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்ற நிலை இருக்கிறதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

3) மூன்றாவதாக, விடுதலைக்கு முன்னரும் பின்னரும்
மொழி நிலையைக் காண்போம்.

1714ல் அச்சில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் எனப்படும்
கிறித்துவ வேத நூல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

"சுதனாகிய சறுவேசுரனாயிருக்கிற ஏசுக்கிறீஷ்த்து
நாதரானவர் இந்தப் பூலோகத்திலே மனுஷனாய்ப் பிறந்த
விசேஷங்களையும் போதிவிச்ச ஞான உபதேசங்களையும்
செய்த அற்புதங்களையும் மனுஷருக்கு வேண்டி பாடுபட்டு
எல்லாரையும் மூண்டு ரெஷ்சித்தவத்த வானங்களையும்
உயிரோடே எழுந்திருந்து பரலோகத்திலே மகிமையாக
ஏறினத்தையும் அவருடைய சீஷர்களாகிற அப்போஷ்த்தல மார்கள் லோகமெங்கும்போய் இப்படிக்கொத்தச் சுவிவிசேஷங்களைச் சகலச்சனங்களுக்கும் பிறசங்கம் பண்ணினதையும் வெளிப்படுத்துகிறபுது
ஏற்பாட்டினுடைய முதலாம் வகுப்பாகிற அஞ்சுவேதபொஷ்தகம்
"
(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இதில் 10 வரிகளிலே 13 கலப்புச் சொற்கள்.
13/42 சொற்கள் கலப்பு: அதாவது 30%

1924ல் எழுதப்பட்ட வேதாந்த தீபிகை என்ற நூலிலே ஒரு
16வரிகளில் 31 கலப்புச் சொற்கள் இருக்கின்றன.
அதாவது, 32/72 சொற்கள் கலப்பு. இது 44.5% கலப்பு ஆகும்.

(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இந்த நூல்கள் மணிப் பிரவாளத்திலே எழுதப் பட்ட நூல்கள் அல்ல.
தமிழிலே எழுதப் பட்ட நூல்கள். மணிப்பிரவாள நூல்கள் என்றால்
இன்னும் கொடுமை - ஏறத்தாழ 70 விழுக்காடு கலப்பு.

தமிழும் சமற்கிருதமும் கலந்து எழுதுவதே உயர்ந்த செயல்
என்ற போக்கு அந்தக் கொடுங்காலத்தில் ஏற்பட்டது.
சமற்கிருத இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு
தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை எல்லாம்
சமற்கிருதம் கலந்து எழுதுவதே உயர்ந்த படிப்புக்கு அடையாளம்
என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதில் முன்னோடியாக இருந்தவர்கள்
நம்பூதிரிகள். அவர்களின் இந்தத் தீச்செயலுக்கு இரையானதுதான்
அன்றைய தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியான சேரநாடென்ற
இன்றைய கேரளம்.

மொழிக் கலப்பால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும்
ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக ஆகப்பெரிய இழப்பாக
வரலாறு வரைந்து வைத்திருப்பதெல்லாம் இந்த மலைநாடு
அந்நியமாகப் போய், ஏறத்தாழ எதிரியாகவும் போனதைத்தான்.

1440ல்தான் அவர்களின் முதல் இலக்கிய நூலான இலீலா திலகம்
வெளிவந்தது.

குறிப்பாக 1800களில் 1900களில் தமிழில் பேசுவது
நாகரிகக் குறைவாகவும், கீழ்ச்சாதியினரின் பேச்சாகவும்
கல்லாதவரின் மொழியாகவும் ஆக்கப் பட்டது.

சங்ககாலத்திலே கலப்பற்ற தூயதமிழ் இருந்த நாட்டிலே,
அதேமொழி கீழ்மொழியாக ஆக்கப் பட்ட கொடுமையை
நாம் உணர்ந்து கொள்ள நிறையவே இருக்கிறது.


மொழி மாறினால் முகவரி மாறிவிடும்! என்பதற்கு
கண்ணுக்கு முன்னே அங்கை நெல்லியாக கேரளம்
இருந்து கொண்டிருக்கையிலே, நாம் மேலும் மொழிக்கலப்பைச்
செய்வது படித்தவர்களின் செயலாக இருக்க முடியாது.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 80+% ஆகியிருக்கையில்
எழுத்தின் நிலை எப்படியுள்ளது. படித்தவர்கள் நேசிக்கும்
எழுத்தாளர் சுசாதாவின் எழுத்தில் மொழிக்கலப்பு எப்பொழுதும்
விரவியிருக்கும்.

1976ல் சுசாதாவின் கட்டுரை ஒன்றில் கமலகாசன் பற்றிய அவரின் எழுத்தைப் படித்த போது அதில் 24% விழுக்காடு ஆங்கில, சமக்கக் கலப்பு இருக்கிறதையும் காணமுடிகிறது. இதை விட அவரின் சில கதைகளில் ஆங்கிலம் கரை புரண்டு கலக்கும்.

விடுதலைக்கு முந்தைய விவிலிய, வேதாந்த நூல்களில் இரண்டு
மொழிகள் கலந்து கிடந்தன என்றால் விடுதலைக்குப் பின்னரான
தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் மும்மொழிக் கலப்பு
இருக்கிறது. தமிழ் எழுத்துக்களோடு, ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும்
வடமொழியை வடமொழியாகவும் கலக்கிற பாங்கினை அவர்
கடை பிடித்தார்.

இரு மொழிக் கலப்பு மும்மொழிக் கலப்பாக விடுதலைக்குப் பின்னர்
ஆகியிருக்கிறது என்பது உண்மை.


(சுசாதாவின் 76ஆம் ஆண்டு எழுத்து. ஆங்கிலமும், வடமொழியும்,
தமிழும் கலக்கப்படுவதைக் காண்க. சுசாதா மட்டுமல்ல
பலரும் இப்படித்தான்)

எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள், எழுத்தை ஆளாமல்
கருத்தை மற்றும் ஆண்டால் போதும் என்ற மாயையில்
விழுந்ததோடு அவர்களை வாசிக்கும் மற்றும் நேசிக்கும்
மக்களையும் அந்த மாயையில் சிக்க வைத்தது ஒரு
வருத்தமான உண்மை.

விடுதலைக்கு முன்னரும் பின்னருமான தமிழ்ச் சூழலை
குமுக அமைதி, கல்வி நிலை, மொழி நிலை என்ற மூன்று
தளங்களில் பார்க்கின்ற போது நமக்குக் காண கிடைப்பதெல்லாம்
"2300 ஆண்டுகள் வரலாற்றில் தமிழகம் சிறந்திருந்த காலத்தில்
இருந்ததைப் போன்ற ஒரு குமுக அமைதியை தற்போது
தமிழ்க் குமுகம் பெற்றிருக்கிறது. கல்வி நிலையில் மிகுந்த
ஏற்றம் பெற்றிருக்கிறது. கட்டற்ற கல்வி மற்றும் எழுத்து
சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மொழிச்
செழுமை, வளமை, தூய்மை ஆகியவற்றை இன்னும் தேடிக்
கொண்டே இருக்கிறோம்; சில நேரங்களில் அவற்றை
சாடிக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணும்படியாகவும்
சில அறிவுசீவர்களின் கருத்துக்கள் அமைகின்றன."

நாம் செய்ய வேண்டியதென்ன?

(தொடரும்)

Friday, November 21, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #1)


ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.

அதையே வெள்ளையன் எழுத்தில்
"If it is not Measured, it is not Managed" என்று
சொல்லப்படும்போது பல்வேறு துறைகளில் பணி புரியும்
நமக்கு இந்த "Manage by Metrics" என்ற சொல்லாடல்
கிளுகிளுப்பைத் தருவதாய் இருக்கும்.

"ஆகா, என்னமாச் சொன்னான்யா" என்று
நாமெல்லாம் பல தடவைகள் மெய்புளகம்
அரும்பித் ததும்பியது உண்டு!

"இந்திய விடுதலைக்கு முன்னரும்
அதற்குப் பின்னரும் தமிழ்" என்ற இந்த உரையும்
நமது நிலையை சற்று அளந்து பார்க்க உதவுமானால்
நானும் நாமும் மகிழ்ச்சியடையலாம்.

அண்மையில் கூட தமிழக முதல்வர் கலைஞர்
இந்த அளவைக்குக் காட்டாக ஒரு செய்தியைச் சொன்னார்.
"சிங்கம் ஒரு தொலைவு நடந்து போனதும்,
தான் எவ்வளவு தொலைவு
வந்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்குமாம்!"
விலங்குக்குக் கூட இந்த அளந்து பார்க்கும் குணம் இருக்கிறது
என்ற ஒரு செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.
இன்னொரு பார்வையில் சொன்னால்,
"அப்படி அளந்து பார்க்குந் தன்மை
இருப்பதால்தான் அது அரசராக,
ஆளுமையுடன் இருக்கிறது!".

அப்படியென்றால் அளந்து பார்த்தால்தான் ஆளமுடியும்
என்ற ஒரு உண்மை நமக்குப் புலப்படத்தான் செய்கிறது.
அதுமட்டுமல்ல, அண்மையில் நண்பர் எசென்.இராசா ஒரு
கூட்டத்தில் கென்யாவில் சிங்கங்களைப் பற்றித் தான்
அறிந்த செய்திகளைச் சொன்னார்.
அதில் ஒன்று சிங்கங்களுக்குத் தன்மானம்
அதிகம் உண்டு என்ற செய்தி.

ஆக, அளந்து பார்க்கும் தன்மையும், தன்மானமும்
பெருமையோடு வாழ அவசியம் என்று நாம் உறுதியாக
நம்பலாம்.

இந்தத் தலைப்பை ஒரு சிற்றுரை/கட்டுரை மூலமாக
நிறைவாகச் செய்து விட முடியுமா? என்றால்
வாய்ப்பேயில்லை என்பது உண்மை.

ஏனென்றால் அதற்கு மிகப் பல பரிமாணங்கள் உண்டு.
அத்தனையும் முடியாதெனினும் சிலவற்றை மட்டும்
இங்கே நான் எடுத்து வைக்கிறேன் நமது சிந்தனைக்காக.

1) கால, குமுகச் சூழல்
2) கல்விச் சூழல்
3) பிறமொழிகள்

என்ற இந்த மூன்று நிலைகளிலே நாம்
விடுதலைக்கு முன் காலத்தையும்
பின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்
ஆனால் நமக்கு அது
ஒரு தொடர்ச் சிந்தனையை
ஏற்படுத்தக் கூடும்.

விடுதலைக்கு முந்தைய காலத்தை பலவாறாகப்
பிரிக்கலாம். வரலாறு, இலக்கிய, அரசியல் ஆசிரியர்கள்
பலவாகப் பிரித்திருக்கிறார்கள்.

இங்கே நான் 5 போர்க் காலங்களாகப்
பிரித்துக் காட்டுகிறேன்.

போர்கள் குமுகத்தில் ஏற்படுத்தும்
தாக்கம் மிக முக்கியமானது.

சங்ககாலம் என்பது கி.மு 300க்கும் கி.பி 100க்கும்
இடைப்பட்ட காலம். என்ன இது ஆங்கிலேயர்
காலத்தைப் பேசச் சொன்னால் சங்ககாலத்திற்கு
ஓடுகிறானே என்று நீங்கள் எண்ணக் கூடும்.

இந்த 400 ஆண்டு காலம் வரலாற்றில்
நன்கு பதியப்பட்ட தமிழ் தமிழரின்
இயல்பு மாறாத உயர்ந்த
காலமாகும். அக்காலத்தை விடுத்து
தமிழ் என்று எதையும் பேசுவது
காற்றில் கத்தி வீசுவது போலவாகும்!

அந்த 400 ஆண்டுகளிலே தமிழகத்திலும்
தமிழகத்திற்காகவும் நடந்த போர்கள்,
வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆழப்
பதிவாகியிருக்கிற போர்கள் சுமார் 40.

(குறிப்பு: போர்கள் பற்றி செய்திகளுக்கு
ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டிருப்பது 
பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரின் 
"தென்னாட்டுப் போர்க்களங்கள்" என்ற
நூலை. சில போர்கள் மற்றும் செய்திகள் 
விடுபட்டுப் போயிருக்கக் கூடும் )

ஆக, கணித்துப் பார்த்தால் 400 ஆண்டுகளிலே
40 போர்கள் என்றால், 10 ஆண்டுக்கு ஒரு போர் வீதம்
நடந்திருப்பது தெரிகிறது அல்லவா?

அடுத்ததாக, கி.பி 101க்கும் கி.பி 900க்கும் இடையேயான
800 ஆண்டு காலம். 

இந்தக் காலத்தை இரண்டாவது
 போர்க்காலமாகப் பிரிக்கிறேன். 
இப்படி ஏன் நான் பிரிக்கிறேன் என்றால், 
இது சங்கம் மருவியகாலமும், 300 ஆண்டு இருண்ட
காலம் என்று சொல்லப்பட்ட 
களப்பிரர் காலமும், சோழப் பேரரசிற்கு
அடிகோலிட்ட அந்த 9 ஆம் நூற்றாண்டின் 
மத்தியப் பகுதியையும்
உள்ளிட்டதாகும். இவை முக்கியமான காலங்கள்.

இக்காலத்திலே 80 போர்கள் வரலாற்றிலே 
ஆழப் பதிந்திருக்கிறது. அதாவது 800/80 = மீண்டும் 10
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் நடந்திருக்கின்றது.

சோழப்பேரரசு 850களில் தழைக்கத் தொடங்கி 
ஏறத்தாழ 130 ஆண்டுகள் தழைப்பிற்குப் பின் பேரரசாக 
விரிந்து 300 ஆண்டுகாலம் நமக்குப் புகழ்
சேர்க்கிறது. 

ஆகவே கி.பி 901க்கும் சோழன் நலிந்த 1300க்கும்
இடைப்பட்ட காலமான அந்த 400 ஆண்டுகளை 
மூன்றாவது போர்க்காலமாகப் பிரித்துப் பார்த்தால் 
அங்கே அந்த 400 ஆண்டுகளிலே 
166 போர்கள் நிகழ்ந்துள்ளமை நமக்குக் காணக் கிடைக்கிறது. 
இது தமிழகத்தில் கொஞ்சமும், 
தமிழ் அரசு வடக்கே கங்கை, கிழக்கே கடாரம், 
மேற்கே சேரம், தெற்கே மாலத்தீவுகள் வரை 
எல்லை விரிப்பிற்கும் செய்யப் பட்டப்
போர்களின் எண்ணிக்கையாகவும் கிடக்கிறது. 
இவை தமிழர்களுக்கு
வலு சேர்த்த போர்கள் என்று எண்ணலாம்.

ஆக இந்தக் கால கட்டத்தில் 
400/160 = 2.5 ஆண்டுகளுக்கு ஒரு
போர் வீதம் நடந்திருப்பது ஒரு இன்றியமையாத 
புள்ளிவிவரம் அல்லவா?

நிரவலாக சராசரியாக 10 ஆண்டுகளுக்கு 1 போர்
என்று இருந்த போர்வீதம் திடீரென்று 2.5 ஆகக் 
குறையும் போது அதனால் குமுக கவனங்களின் 
மேல் தாக்கம் இருக்கும் அல்லவா?

நான்காவதாக, கி.பி.1301க்கும் 1750க்கும் 
இடைப்பட்ட 450 ஆண்டு காலம். 
தமிழகம் இந்தக் காலத்தைப் போல 
என்றைக்கும் அலைக்கழிக்கப் பட்டதில்லை 
என்று சொல்லக் கூடிய காலம்.

இக்காலத்தில்தான் மொகலாயர், மராட்டியர், 
தெலுங்கர், கன்னடர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், 
பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர் என்ற 8 வகையான 
கூட்டத்தின் தாக்கம் ஏற்பட்ட காலம். தமிழரசு
என்பது இல்லவே இல்லை. போதாதற்கு 
ஒய்சளர்கள் என்ற பிரிவினரும் வந்தனர்.

இக்காலத்தில் நடைபெற்ற போர்கள் 120.
சராசரியாக 3.75 ஆண்டுகளுக்கு ஒரு போர். 
இந்தப் போர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்லாது, 
இக்கூட்டங்களுக்கு இடையே நிகழ்ந்ததாகவும் 
நிறைய அமைந்திருக்கின்றன.

ஐந்தாவது போர்க்காலமாக,
1750க்குப் பின் ஏறத்தாழ இந்தியா 
பிரித்தானியரின் கீழ் அடங்கிவிட்டது;
1750க்கும் 1850க்கும் இடையேயான 
100 ஆண்டுகளில் மட்டும்
தமிழகம் 50 போர்களைக் காணுகிறது.

அதாவது 2 ஆண்டுகளுக்கு ஒரு போர் என்ற அளவில்.

1850க்குப் பின்னர் இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஓங்க
ஆரம்பித்து 1947 வரைக்கும் நீண்டது வேறு வகையினது.
அக்காலத்தினை இவ்வாய்வில் நான் விட்டு விடுகிறேன்.

ஆகவே மேற்சொன்ன இந்த 5 போர்க்காலங்களை 
ஓர்ந்து பார்க்க.

இப்பொழுது, 1947க்குப் பின்னர் தமிழகத்தை 
உள்ளிட்ட இந்தியா செய்துள்ள 
போர்கள் எத்தனை ?

பாக்கித்தானுடன் நான்கு போர்கள்,

48-49 - காசுமீரப் போர்
65 - கட்ச் போர்
71 - கிழக்கு வங்கப் போர்
99 - கார்கில் போர்

சீனாவுடன் 1 போர்
62 - இமயப் போர் / அருணாச்சலப் போர் - சீனாவுடன்

ஈழத்துடன் 1 போர்

87 - சிங்களச்சார்புப் போர்

தமிழ்நாடு இந்திய மாநிலங்களுள் ஒன்று என்பதால் இந்தியா
செய்கின்ற போர்களால் தமிழ்நாட்டு அரசியலுக்கும் பொருளியலுக்கும்
குமுகத்திற்கும் தாக்கம் உண்டு.

ஆக, விடுதலை அடைந்து இந்த 61 ஆண்டுகளிலே 
மொத்தம் 6 போர்களில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.

இங்கே சராசரிப் போர் வீதம் பார்த்தால் அது 10 என்கிறது!
Italic
கி.மு.300 இல் இருந்து இன்று வரை யில் நிகழ்ந்த 
போர்களின் வீதங்களை உற்றுப் பார்த்தால் 
அது 10-10-2.5-3.75-2-10 என்று இருக்கிறது. படம்-1 ஐக் காண்க.

இப்படத்தைப் பார்த்தால் குமுக அமைதியின் தன்மை விளங்கும்.
குமுக அமைதி என்பது ஒரு நாட்டின் பொருளியல்,
கலை, பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதது
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமக்குப் பல தரவுகள் அல்லது
செய்திகள் கிடைக்கின்றன.

அ) சங்ககாலத்தில் மொழிக் கலப்பு இல்லாமல் 
தமிழ் செழித்துச் சிறந்திருந்தது என்று சொன்னால், 
அதற்கு அப்போதிருந்த குமுக அமைதியும் ஒரு முக்கிய காரணம்

ஆ) சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த இரண்டாம் போர்க்காலத்தில்
தமிழ்நாடு சில இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த போதிலும்
மொழிச் சிதைவு திகைக்க வைக்கும் வகையில் ஏற்படவில்லை.
நன்றாகவே இருந்திருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் தமிழாகவே இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெருமை குன்றி விடவில்லை. 
அதற்குச் சான்றாக தேவார, பிரபந்த
இலக்கியங்களில் உள்ள தமிழின் செழுமையைச் சொல்லலாம்.

இ) சோழர்களின் காலத்தில் போர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருந்தது அரசியல் வலுவைக் கூட்டவே. ஆயினும்
மொழிச் சிதைவும் கலப்பும் இக்காலத்தில் ஏற்பட்டது
என்று சொல்லப்படுவதற்கு,
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம்
நடந்த குமுக அமைதியின் தன்மையும் ஒரு காரணம் என்பதைப்
புறம் தள்ளிவிடல் ஆகாது.

ஈ) 1300க்குப் பின்னரான கால கட்டங்களில் நடந்த போர்களின் வீதம்
நமக்கு சொல்வதெல்லாம் மொழியின் பேரழிவையே. இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் தமிழகத்திலும் தமிழகத்தைச் சுற்றியும்
நிகழ்ந்த போர்கள் தமிழ் மொழிச் சிதைவை, தமிழர் குமுக வேறுபாடுகளை அதிகப் படுத்திச் சீரழித்திருக்கிறதைக் காண முடிகிறது.
குன்றிய குமுக அமைதி தொடர்ந்து தமிழும் தமிழரும் கெட்டதையே
காட்டுகிறது.

இன்னொரு காரணம் என்னவென்றால் இக்கால கட்டங்களில் வலுவான தமிழ் அரசர் இல்லை. ஆளுகை முற்றிலுமாக தமிழர் அல்லாதவர்களிடம் சென்று விட்டது.

உ) சொல்ல வந்த கருத்தாக நான் இங்கு சுட்டிக் காண்பிக்க விழைவது
என்னவென்றால், "தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்த அதே
குமுக அமைதி, போரமைதி இந்திய விடுதலைக்குப் பின்னரான
தற்போதைய காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
படத்திலே, சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்களின் எண்ணிக்கையை
ஒட்டியே தற்போதைய போர்களும் எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன.
விடுதலைக்கு முன்னர் ஏறத்தாழ 1050 ஆண்டுகளில் இல்லாத
குமுக அமைதி தற்போது தமிழருக்குக் கிடைத்திருக்கிறது.

குறிப்பாக கி.பி 1300க்குப் பின்னர் போர் ஓலங்கள் 
குறைந்த அமைதியான குமுகச் செழிப்பைக் 
காண வேண்டுமானால் அதைத் தற்போதுதான் காண முடிகிறது."

பொருளியல் மற்றும் குமுகச் சூழலில் பல்வேறு சவால்களைச்
சந்திக்க வேண்டி இருந்தாலும், இந்த அமைதியான சூழலில்
நமது மொழியையும் பண்பாட்டையும் முழுமையாக மீட்டெடுக்க
வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. கடந்த பல நூறு
ஆண்டுகளில் சந்தித்த சறுக்கல்களை எல்லாம் இன்று செப்பனிட
வேண்டி உள்ளது.

அதற்குக் காலமும் துணையாயிருக்கிறது.

அதனால்தான் தமிழ்ச் சான்றோர்கள் மொழித் 
தூய்மையின் அவசியத்தையும், அதைச் செய்யவேண்டிய 
அவசரத்தையும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய தேசியத்தில் இணைந்திருக்கிற தமிழ்நாடு 
இந்தச் சூழலை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை 
என்றால், வறட்டு வாதங்களில் ஈர்க்கப் பட்டுப் 
போய்க் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் 
இக்குமுகம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத்
தேவையான வலுவை அறவே 
இழந்து போய் விடும். 

சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு சிறிய 
குமுகம் சேற்றில் புதைந்து மறைந்து போனது போல், 
தமிழ்நாட்டுக் குமுகமும் எதிர்காலத்தில்
தனது அடையாளத்தை காலமாற்றம் 
என்ற பெயரிலும், உலக மாற்றம்
என்ற பெயரிலும் புதைத்துவிட்டு 
ஏதோ ஒரு மொழியைப் பேசி
சார்புக் குமுகமாகிவிடக்கூடும்.

ஆகவே, குமுக அமைதி என்பது தமிழ் மக்களுக்கு
நிறையவே கிடைத்திருக்கிறது. அதில் ஆற்ற வேண்டிய
கடமைகள் எவ்வளவோ இருப்பினும், மொழியைக் காக்க
வேண்டிய அவசியமும் மீட்க வேண்டிய அவசியமும்
நிறையவே இருக்கிறது।


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம்।


(தொடரும்)

(15/08/2008 அன்று விடுதலை நாள் விழா ஒன்றில் 
ஆற்றிய உரையின் சாரம்/சில பகுதிகள். எழுத விட்டவையும் உண்டு.)

Monday, May 05, 2008

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்
அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது
என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.
ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.
சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்
வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது
தவறில்லை என்பது சில அறிஞர்களின்
கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்
"அய்" என்றே எழுதவேண்டும்
என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்
இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்
படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று
போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை
செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்
"ஐ" எனவே புழங்குகிறேன்.  "அய்" என்று நிறைய
புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை
நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.
ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான
சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்
என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை
நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"
................சிலப்பதிகாரம்:27:174-175


வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"
..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சியர் குரவை

மெல்ல/பைய:

பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ""யெனக் கழிய......
...................அகநானூறு:305

இந்த மூன்று பொருள்களில் இவ்வெழுத்து இலக்கியங்களில்
விரவிக் கிடக்கிறது. இதை மாற்றினால் அதன் தன்மை
எப்படி யிருக்கும் என்று பார்த்தால் ஐயம் வருகிறது.

மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று
போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்
ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்
காணமுடிகிறது.

இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில்
சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை
பெறும் (ஐகாரக் குறுக்கம்).

ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில்
அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக்
கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.

குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப்
படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை
உணரமுடியும்.

அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்
இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதை
ஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,
அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது.

ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.
உரையிலும் சரி கவிதையிலும் சரி.

2) தமிழில் பிறமொழிகளை விட ஓரெழுத்து, ஈரெழுத்து மற்றும்
மூவெழுத்துச் சொற்கள் அதிகம் என்று அறிஞர் கூறுவர்.
ஆ, ஈ, ஓ, மா, மீ, கூ, கோ,சீ, தீ, தா, தூ, நீ,
ஐ, நை, மை, கை, வை, தை
போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் தனித்தோ, சொல்
விகாரமடைந்தோ பொருள் கொடுப்பவை இருக்கின்றன.
அதோடு பிற எழுத்துக்களோடு இவை புணர்ந்து
கொடுக்கும் சொற்கள் ஏராளம். அதில் "ஐ" மிக
முக்கியமானது. இதைச் சார்ந்து இருக்கும்
சொற்கள் மிக அதிகம். ஆகவே தமிழில்
இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை

இழக்கக் கூடாது. இது ஒளகாரத்திற்கும் பொருந்தும்.

3) இது வெறும் வரி வடிவம்தானே இதனை
மாற்றினால் என்ன என்று கருத இடம் இருக்கிறது
(சொல், ஒலிப்பு என்ற நிலையைத் தாண்டி)

ஆனால், இதை மாற்றுவதால் என்ன பயன்? என்று பார்த்தால்
ஒன்றுமேயில்லை. எனது சிற்றறிவினால் நிச்சயமாக எந்தப்
பயனையும் காணமுடியவில்லை.

"ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய
இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"
என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான்
போடவேண்டி உள்ளது.

4) ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால்
இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள்
கணக்கிடப் படுவதில்லை. ஆனால் எழுதினால் அது ஒரு இடத்தை
அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும்,
கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை
நாம் பெருக்குகிறோம்.

ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)

5) "ஐ" என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல்
எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின்
இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.

"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான் :-).
நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே :-) )

இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.

6) கீழ்க்கண்ட தேவாரத்தைப் படிக்க:

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
....அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.....எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.....பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.....எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
.............. ஆறாம் திருமுறை: பாடல் 95: அப்பர் பெருமான்

இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை
அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை. தேவார திருவாசக
நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்
படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால்
அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
இதை வேறு ஆதரவில் என்னால் நிறுவ முடியாது. எனினும் இதை
விட்டு விட முடியவே முடியாது.

7) "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி.

இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,
போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற
பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப்
பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்
ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டிய
அவசியத்தை நோக்குக.)

8) செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.

"யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.
இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி
அமைகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அணி-இலாஅய் அடிகள் காண்குவம்... " என்று வருமானால்

இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம்
வரும். இந்தக் கருத்தின் இலக்கணச் சுத்தியை நான் நன்கு
ஆய்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டுக்காக
ழகரத்தை லகரமாக மாற்றி எழுதியிருக்கிறேன்; பிழையிருப்பின் அறிஞர் பொறுக்க.

9) ஐ, ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற
சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே
போற்ற வேண்டும். (சொல்லோடு ஐ சேர்ந்து வரும்போது
இலக்கணப் படி சரியேயாயினும்).

10) இந்த "அய்" போக்கு சொல்லில் முன்னால் வருவதால்,
நடுவிலும் பின்னாலும் இப்படிச் செய்கிறார்கள். மலை
என்பதை மலய் என்று எழுதுகிறார்கள். சிலை = சிலய்,
கலை = கலய் என்று பயில்கிறார்கள்.
பழமலை என்பவர் பழமலய் என்றே எழுதுகிறார் இதழ்களில்.
இது ஆபத்தான போக்கு என்றே படுகிறது. இதை நுணுகி ஆராய்ந்தால்
இதன் சரவல்கள் வெளிவரக்கூடும். இது மிக சிக்கலான சிக்கல்
தரும் விதயமாகவே படுகிறது. எழுத்து, சொல், யாப்பு இலக்கனங்களை
நுணுகிப் பார்க்கவேண்டும். குறிப்பாக இப்பயன்பாடு மலய் என்று பழகி,
அது செய்யுளில் மருவி அல்லது விகாரமடைந்து பயன்படுத்தினால்
எப்படி இருக்கும் என்று எண்ணினால் ஐயமாக இருக்கிறது.

இக்காரணங்களால், நான் "அய்" என்ற பயன்பாட்டை அறவே தவிர்த்து
விட்டேன். சொல்லோடு சேர்ந்து வரும்போது அது பிழையில்லை
என்பதால் அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த
ஏற்பு, தனித்த ஐ என்ற சொல்லையும் பலரின் பயன்பாட்டால்
பாதிக்கிறது. ஆகவே "அய்" என்ற பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து.

(தொடர்புடைய திரு.குமரனின் கருத்துக்கள்:
http://koodal1.blogspot.com/2008/05/blog-post.html )

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, April 26, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 4 (FAQs part 4)

22) தமிழ்மொழியின் சரிவைச் சுருக்கமாக
எப்படிப் புரிந்து கொள்வது?
எப்படிச் சரி செய்வது?

இதனை நான் சொல்வதை விடப்
பேரறிஞர் பாவாணர் அவர்களின் வாயால்
கேட்பது சிறப்புடையதாகும்.

கீழே உள்ள அவரின் உரை 07/பிப்ரவரி/2001
திகதியிட்ட தமிழியக்கம் என்ற ஏட்டில்
இடம் பெற்றிருந்தது.

பாவாணர் உரை:

அறிஞர்காள்! அறிஞையர்காள்!
உடன்பிறப்பாளர்காள்!
உடன் பிறப்பாட்டியர்காள்!
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

தமிழ்மொழி, தொன்மையும், முன்மையும்,
எண்மையும், ஒண்மையும், தனிமையும்,
இனிமையும், தாய்மையும், தூய்மையும்,
செம்மையும், மும்மையும், கலைமையும்,
தலைமையும், இளமையும், வளமையும்,
முதுமையும், புதுமையும்
ஒருங்கே கொண்ட உயர்தனிச் செம்மொழியாகும்.

உலகில் முதன்முதற் பட்டாங்கு
நூன்முறையிற் பண்படுத்தப் பட்டதும்,
நல்லிசைப் புலவராற் பல்வேறு துறையில்
இலக்கியஞ் செய்யப்பெற்றுப் பல கலையும்
நிரம்பியதும், முத்தமிழ் என வழங்கியதும்
ஆன சித்தர் மொழியாம் செந்தமிழ்;
இன்று கலையிழந்தும் நூலிழந்தும், சொல்லிழந்தும்
இருப்பதுடன், இறவாது எஞ்சியிருக்கின்றனவும்
ஏனை மொழிகளினின்று கொண்ட இரவல்
என இழித்தும் பழித்தும் கூறப்படுவது,
இடைக்காலத் தமிழன் மடமையின் விளைவே.

மொழித்துறையில் ஆரியத்தினும் சீரியதென
அரியணையில் வீற்றிருந்த தமிழ், பின்பு
வடமொழிக்குச் சமம் எனக் கொள்ளப்பட்டு,
அதன்பின் அதுவுமின்றி
வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாததெனத்
தள்ளப்பட்டதினால் முறையே,
அது வடமொழியால் வளம் பெற்றதென்றும்,
வடமொழித் துணையின்றித் தனித்தியங்காததென்றும்,
வடமொழிக் கிளையென்றும்,
பிற திரவிட மொழிகட்குச் சமமென்றும்,
அவற்றினின்று தோன்றியதென்றும்
கருத்துக்கள் எழுந்து,

இன்று
மக்கட்குப் பெயரிடுதற்கும்

உயர்ந்தோரோடு பேசுவதற்கும்,
அச்சுப் பிழைதிருத்தற்கும்,
அலுவலகங்களில் வினவி விடை பெறுதற்கும்,
ஏற்காத தாழ்த்தப்பட்ட மொழியாகத்

தமிழ் வழங்கி வருகிறது.

இதனால், அது புலவர் வாயிலும்
கலப்பு மொழியாகவும்,
கொச்சை மொழியாகவும் இருந்து வருகின்றது.

இது பற்றி, அது இறந்தமொழியென்றும்,
இற்றைக்கு ஏலா மொழியென்றும்,
பலர் கொக்கரித்துக் கூவுகின்றனர்.

ஒரு நாட்டு மக்கட்கு *உரிமையாவணம்* போன்றது,
அந்நாட்டு வரலாறு.

1) தமிழ்மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றின் வரலாறு
மறைக்கப் பட்டிருப்பதால்,
அவற்றின் உண்மையான வரலாற்றை
முதற்கண் வரைந்து வெளியிடல் வேண்டும்.

2) மொழிப்புரட்சி போன்ற ஒரு தமிழியக்கம்
தோன்றல் வேண்டும்.

3) தமிழியக்கத்தின் பயனாய் அயன்மொழிச்
சொல்லாயிருக்கும் ஆட்பெயர்,
ஊர்ப்பெயர் அறிவிப்புச் சொல் அனைத்தும்,
இயன்றவரை *தனித்தமிழாக்கப் பெறல் வேண்டும்*.

4) தமிழ் மீண்டும் பெருமை பெறவேண்டுமெனின்
அது ஆட்சி மொழியாவதினும்,
கல்வி மொழியாவதினும் *கோயில் வழிபாட்டு*

மொழியாவதே முதன்மையாக வேண்டப்படுவதாகும்.

வடமொழி தேவமொழியன்று.
உலகில் தேவமொழி என்று ஒன்றில்லை.
ஒன்றிருப்பின் அது தமிழே.

சிவநெறியும் மால்நெறியும் தமிழர் மதங்களே!
மந்திர வலிமையும் மன்றாட்டு வலிமையும்
உள்ளத்தின் உரத்தைப் பொறுத்ததே
அல்லாமல் **ஒலியைப் பொறுத்தது அல்ல**.

வடமொழி வழிபாடே வலியுற்றதெனின்,
அதில் நடைபெறாத பிற நாட்டு
வழிபாடெல்லாம் பயனற்றவாதல் வேண்டும்.

அங்ஙனமாகாமை அறிக.

தமிழ் கெட்டதற்கும் தமிழர் தாழ்ந்ததற்கும்
தமிழனே காரணம்.

தன்மானமும் பகுத்தறிவும்
*நெஞ்சுரமும்* உள்ளவனே நிறைமகன்.

தமிழ் நலமும் தமிழர் நலமுங் கருதாது,
தன்னலமே கருதிக் கோடரிக் காம்புகளும்
இருதலைமணியன்களும் சுவர்ப்பூனைகளுமாயிருந்து
பாழ்செய்யும் முத்திற உட்பகைகளை, விலக்கல் வேண்டும்.

"எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருக்கும்
உணர்ச்சியற்ற மரக்கட்டைகளைத் திருத்தல் வேண்டும்.

பெரும்பதவிகளில் இருந்து பெருஞ்சம்பளம் பெறும்
பேராசிரியர்கள் எல்லாம் பேரறிஞரல்லர்.


**உண்மையுரைக்கும் ஆராய்ச்சியாளர்க்கு
இன்றியமையாத இயல்பு அஞ்சாமை**.

அஃதுள்ளாரைத்
திராவிடர் கழகத்தாரென்றும்,
மொழி(தமிழ்) வெறியரென்றும்,
நெறிதிறம்பிய ஆராய்ச்சியாளரென்றும்,
பிராமணப் பகைவரென்றும்,
வடமொழி வெறுப்பாளரென்றும்,
கூறுவது பேணத்தக்கதன்று.

தமிழன் பரந்த நோக்குடையவன்.
தமிழைப் பேணுவார் அனைவருந் தமிழரே!
தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க.
தமிழ்த் தொண்டர் படை திரள்க!

- ஞா.தேவநேயன்


தேவநேயப் பாவாணர் அவர்கள் எதனை
முதலில் மீட்டெடுக்க வேண்டும்
என்று சொல்வதும், இணைய உலகில்
பலருக்கும் உள்ள கவலைகளையும்
அவர் எடுத்துச் சொல்லும் விதமும்
நமக்குப் படிப்பினையாக இருக்கும்.

(தொடரும்)

இதன் முந்தையப் பகுதி :
http://nayanam.blogspot.com/2008/04/3-faqs-part-3.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 3 (FAQs part 3)

பிற நாடுகளில் மொழித்தூய்மை பற்றிய செய்திகள்:

20) உருசியாவில் இலெனின் போன்ற பிற
உருசியச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்:

நம்மிடையே பலரும் தூய தமிழ் எழுதுவது
பேசுவது என்பது ஏதோ அரசியல்க் கட்சிக்காரர்களின்
செயல் என்றும், பிழையானது என்றும், தமிழ்நாட்டில்
மட்டும்தான் இப்படியான செய்கைகளைச்
செய்கிறார்கள் என்றும் பரப்புரை செய்கிறார்கள்.
மொழிச்சரவல் பல நாடுகளுக்கும் இந்தியாவில்
உள்ள பல மாநிலங்களுக்கும் ஏறத்தாழ ஒன்றுதான்
என்பதனையும் பல நாடுகளிலும் இந்தச் சிந்தனை
நமக்கு முன்னரே முகிழ்த்து இருக்கிறது என்பதனை
அவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகவே இவற்றை
எடுத்து இங்கு சேர்க்கிறேன்.

எ.எசு.சுமரகோவ்:

"பிறமொழிச் சொற்களைக் கலப்பது
மொழியைக் கெடுத்து சீர்குலையச் செய்வதாகும்!"

நிகலாய் இலேசுகா:

"தூய உருசியச் சொற்கள் இருக்கும் போது
அவற்றையே பயன்படுத்தவேண்டும். கலத்தல்
கூடாது. கலத்தல், வளமான மொழியை
அழிப்பதாகும். இக்கலக்கல் தேசிய
முன்னேற்றத்திற்காகவும், நம் தேசிய
கோரிக்கைகளுக்காகவும் பாடுபடுவதாகக் கூறிக்
கொள்ளும் வெளியீடுகளிலேயே கேட்டுச் சூழலை
ஏற்படுத்துகிறது."

(தமிழ் தமிழ் என்று குரல் கொடுக்கும்
அரசியல்வாதிகளும்
ஏடுகள், எழுத்துக்கள், தொலைக்காட்சிகள்
பொன்றவற்றில் செய்கின்ற கேடுகளைத்தான்
உருசியாவிலும் நிகலாய் கண்டிருக்கிறார்.)

விசாரின் பெலின்சுகி:

"உருசிய மொழியின் தூய சொற்களை
விடுத்து பிற மொழிகளைக் கலத்தல் *பொது
அறிவையும், நல்ல பழக்கத்தையும்
அவமதித்தலாகும்*. உருசிய மொழியில்
சொற்பொழிவாற்றும் போது பிற மொழிச் சொற்களை
அள்ளி வீசுவது **அறிவுக்கும் நல்ல பழக்கத்திற்கும்
புறம்பானதாகும்*."

21) தனிப் பிரெஞ்ச் இயக்கம் பற்றிய சிறு குறிப்பு:

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏனாதி டீகால்
என்பவர் பிரெஞ்சுநாட்டை தாம்
ஆண்டுகொண்டிருந்த காலத்தில்
"தனிப்பிரெஞ்சு இயக்கம்" கண்டார்.

அன்று அவர் தொடங்கிய இயக்கம்தான் பின்னாளில்
வளர்ந்து, அதாவது 1971 ஆம் ஆண்டில் பிரெஞ்சு
அரசு "பிரெஞ்சு மொழியில் நடைமுறையில் கலந்துள்ள
பிற மொழிச் சொற்களைக் களைந்து

அவற்றுக்குண்டான தனிப்பிரெஞ்சுச்
சொற்களை உருவாக்குங்கள்" என்று கட்டளை
இட்டு சட்டம் செய்தது.

தங்கிலீசு என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளும்
மொழியைப் போல "பிராங்லெய்சு" என்ற ஆங்கிலக்
கலப்பு மிகுந்த பிரெஞ்சின் அந்தக்காலப் புழக்கம்
ஒழிக்கப் படல் வேண்டும் எனலாயிற்று.

மொழியின் தூய்மையைப் பேணுவதற்கு 19-12-76 ல்
சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரான்சில்
அறிவிக்கப்பட்டது.

விளம்பரங்கள், அலுவலகக் கோப்புகள்,
வர்த்தக ஆவணங்கள் போன்றவற்றில்
பிரெஞ்சுமொழியே இருக்க வேண்டும். அவை
தூய்மையாக இல்லாமல் பிறமொழிச் சொற்களைக்
கலப்படம் செய்யப்பட்டிருந்தான் அதைச்
செய்தவருக்கு 160 பிராங்குகள் தண்டம்
விதிக்கப்படும் என்று சட்டம் செய்யப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பற்றிய குறிப்புகளை க.தமிழமல்லனார்
தர, பேராசிரியர் வையாபுரி அவர்கள் ஈரானியர்
பாரசீக மொழியில் இருந்து துருக்கி, அராபியச்
சொற்களை விலக்கி வருவதையும்
செருமானியர் மொழியைக் கலக்காமல்
பிற மொழிச் சொற்களை மொழிபெயர்த்து/ஆக்கி
பயன்படுத்துதலையும் குறிப்பிடுகிறார்.

(தொடரும்)

இதன் முந்தைய பகுதி இங்கே:
http://nayanam.blogspot.com/2008/04/2-faqs-part-2.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, April 25, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 2 (FAQs part 2)

முந்தைய கட்டுரையின் ( http://nayanam.blogspot.com/2008/04/1-faqs-part-1.html ) தொடர்ச்சி ....

13) தனித்தமிழ், தூயதமிழ் என்று நாம் பேசுவது
அரசியல் சார்புடையதா?


இல்லை. அரசியலுக்கும் இதற்கும் எப்படித் தொடர்பு
இருக்க முடியும்?

மக்களிடம் இதை விளக்குவதைப் போல அரசிலார்க்கும்
இதனை விளக்க வேண்டிய நிலையில்தான் அரசியல்
இருக்கிறது; இருக்கும்.

14) தமிழ்நாட்டில் மட்டும்தான் மொழியின் தனித்தன்மை
காக்கப் படல் வேண்டும் என்ற சிந்தனை தோன்றிற்றா?

இல்லை. இந்தியாவிலும் இவ்வாறு அவரவர் மொழிகளின்
தனித்தன்மை காக்கப் படல் வேண்டும் என்று
முனைந்திருக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும்
தனித்தமிழ் இயக்கம் போல பல இயக்கங்கள்
தோன்றியிருக்கின்றன.

உண்மையில் தமிழர்கள் மிகவும் காலத்தாழ்வாகவே
இதனைச் செய்தனர்!!


15) மொழியின் தனித்தன்மை பற்றி காந்தியாரின் கருத்து
யாது? (இந்தி மொழி பற்றி)

"கூடியமட்டும் இந்திமொழி அம்மொழியின் மூலச்
சொல்வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்வதே
அம்மொழி வளர்ச்சிக்கு உகந்தது;

பிறமொழிச் சொற்கள் புகுந்து விட்ட இடங்களிலும்,
இன்றியமையாது மேற்கொள்ளப்படவேண்டிய இடங்களிலும்
*இயைவித்தே* அவை மேற்கொள்ளல் வேண்டும்".
இக்கருத்தை 'வளரும்தமிழ்' என்ற நூலில் இருந்து
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் எடுத்துக்
கொடுக்கிறார்.

காந்தியாரின் அக்கருத்து எம்மொழிக்கும்
பொருந்துமல்லவா?

காந்தியாரின் இந்த எளிமையான அடிப்படையே
பல குமுகச் சிந்தனையாளர்களும் மொழியறிஞர்களும்
வரலாற்றாசிரியர்களும் பல நாடுகளிலும் சொல்கிறார்கள்.

16) தெலுங்கின் தனித்தன்மைக்காக எழுந்த இயக்கம் யாது?

தெலுங்கு தேசத்தில் "அச்சதெனுகு" எனப்படும் தூய
தெலுங்கு இயக்கம் 17 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி
விட்டது. தமிழருக்கும் முன்னால் சுமார் 200 ஆண்டுகளுக்கு
முன்னரே தூய தெலுங்கு போற்ற தெலுங்கர்கள் முனைந்து
எழுந்தனர்.

17) ஆங்கிலத்தில் மொழித் தூய்மை காக்க சிந்தனைகளும்
இயக்கங்களும் எழுந்தனவா?

ஆமாம்; ஆமாம். நிறைய செய்திருக்கிறார்கள்
வெள்ளையர்கள். தனி ஆங்கிலம், தூய ஆங்கிலம் பற்றிய
வெள்ளையர் குமுகத்தின் சிந்தனையாளர்கள் பலரும்
கூற்றும் சிறந்தவை.

முனைவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின்
தூய ஆங்கில இயக்கம் பற்றிய மேற்கோள்களை
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன் அவர்கள்
அழகுற விளக்குகிறார்.

ஆங்கிலன் நாட்டில் 1913ல் "Society for Pure English"
என்ற மொழித்தூய்மை இயக்கம் துவங்கப்பட்டது. இதைத்
தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அரசவைப்புலவர்.

அதற்கும் முன்னரே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே, வேற்றுமொழி, சொல் கலப்பினை
வெறுக்கும் கொள்கை தோன்ற ஆரம்பித்து விட்டது.
தெஃபோ (Defoe), திரைடன் (Dryden), அடிசன் போன்ற
அப்போதைய பெரும்புலவர்கள் பிறமொழிக் கலப்பை
வன்மையாகக் கண்டித்தனர்.

1711ல் அடிசன் தம் இதழில்
"நம்முடைய சட்ட அமைப்பில் சட்டங்கள் உரிமைகள்
வாணிகங்கள் முதலியவற்றைக் காக்க மேற்பார்வையாளர்
நியமிக்கும் விதி இருக்கின்றது. அங்ஙனமே வேற்று மொழிச்
சொற்கள் நம் மொழியில் வந்து கலவாமல் இருக்குமாறு
காக்க மேற்பார்வையாளர் நியமிக்கவும் விதி வேண்டும்"
என்று முழங்குகிறார்.

கேம்பெல் (Campbell) என்பார், "பிற துறைகளால் அழிவதை
விட, வேற்று மொழிச் சொற்களால் அழிவது நம்
மொழிக்குள்ள பெரிய அபாயம்" என்கிறார்.

சோமலே என்பார், அமெரிக்க ஆங்கிலத்தை மாசுற்ற மொழி
என்கிறார். அமெரிக்க ஆங்கில உச்சரிப்பிலும் பொருளிலும்
உள்ள மாற்றங்கள் அதிகம் வாதிக்கப் பட்டிருக்கின்றன.

18) ஆங்கிலர் மட்டும்தான் தம் மொழி போற்றினரா?
வேறு யாரும் இல்லையா?

ஏன் இல்லை. உருசியா, பிரான்சு போன்ற நாடுகளில்
தூய மொழி இயக்கங்கள் இருந்திருக்கின்றன.

அதைவிட பல நாடுகளில் அப்படி ஒரு தேவையே
எழாத அளவிற்கு தம் மொழிகளைப் பேணுகிறார்கள்.

செருமனி, ஆலந்து, அரேபியா போன்ற நாடுகளில்
மொழியின் மேன்மையும் தொன்மையும் பேணிக் காக்கப்
படுகின்றன. தம் மொழியை அவர்கள் சிதைக்கும்
பண்பாடே இல்லை.

அவ்வளவு ஏன், சமற்கிருதமே இதற்குச் சிறந்த சான்று.
சமற்கிருத மொழியை சமற்கிருதம் பேணுவோர்
சிதைத்திருக்கிறார்களா?

மாறாக, அவர்கள் அதனை தேவ மொழி என்றெல்லாம்
உயர்வான இடத்தைக் கொடுத்துப் பேணுவது நோக்கிக்
காணத் தக்கது.

சமற்கிருதம் என்றொரு மொழி தோன்றிய பின்னர்,
சமற்கிருதத்தில் ஆங்கிலச் சொல் அல்லது எழுத்து
கலந்து எழுதுவதோ, அல்லது அந்த மொழியை சிதைத்து
இன்புறுவதோ உண்டா?

அவர்களின் மொழி என்ற வகையில், சமற்கிருத
மொழியரின் இந்தப் பண்பு பாராட்டத் தக்கது.

அது போலத்தான் தமிழர், உருசியர், பிரெஞ்சுக்காரர்,
டச்சுக்காரர், அரேபியர், ஆங்கிலர், இந்திக்காரர், தெலுங்கர்
போன்று ஒவ்வொரு மொழியினரும் அவரவர்
மொழியினைக் காத்துக் கொள்வதற்கான முயற்சிகளைச்
செய்து அதன் தனித்தன்மையைக் காத்துக் கொள்கிறார்கள்.

ஆகையால் அப்படியான முயற்சிகளை எண்ணி
தமிழர்கள் நாணம் கொள்ளக் கூடாது.

கலப்புத் தமிழ் எழுதுவதைப் பெருமிதம் என்று
எண்ணும் தமிழர்கள் அப்படிச் செய்வது
ஒரு வகை கூச்சத்தினாலும் ஐயத்தினாலும்தான்.
அவற்றைக் களைந்து நமது முன்னோர்களின் சொற்களில்
இருந்து திடம் பெற வேண்டும்.

19) உருசியாவில் உருசிய மொழித் தூய்மை பற்றி
உருசியச் சிந்தனையாளர்கள் என்ன சிந்தனை
கொண்டிருந்தனர்?


உருசியாவைப் புரட்டிப் போட்ட தோழர் இலெனின்:

"நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டு
வருகிறோம். வேற்று மொழிச் சொற்களுக்கு
இணையாக உருசியத்தில் சொற்கள் வளமுடன்
இருப்பினும் அதை நாம் பயன்படுத்துவதில்லை.

செய்தித் தாள்களைப் படிக்கும் ஒருவன்,
அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
அவர்கள் பயன்படுத்தும் சொல்லையும் நடையையுமே
பழக வேண்டியதாகிறது!

வேற்று மொழிச் சொற்களால் செய்தி ஏடுகள்
மொழியைக் கெடுக்கின்றன.

செய்தி ஏடுகள் தரும் புதுச் சொற்களால்
ஒருவன் மகிழ்ச்சி கொண்டு அதையே நாட்டு

முன்னேற்றத்திற்கு ஏற்றது என்று சொல்லலாம்!

ஆனால் அது அவன் பிழையல்ல! பொறுப்பற்று
எழுதும் எழுத்தாளனின் பிழை!
அந்த எழுத்தாளனை மன்னிக்க முடியாது!.

இப்படி வேற்று மொழிச் சொற்களைப்
பயன்படுத்துவோரை எதிர்த்து நாம்
போராடவேண்டும்.

மொழிக்கலப்பைக் கண்டு நான் மிகவும்
மனம் நோகிறேன்.

சில ஏடுகள் முறையற்று செய்வதைக்
கண்டு நான் சீற்றம் கொள்கிறேன்.

இப்படிச் செய்வதால் உருசிய மொழி
சிதைவடைகிறது.

இப்படிச் செய்பவர்கள் மேல் போர்
தொடுக்கும் நேரம் வந்து விட்டது"

உருசியாவில் தோழர் இலெனின்,
இந்தியாவில் காந்தியார்,
ஆங்கிலர் நாட்டில் அடிசன்
தமிழ்நாட்டில் மறைமலையடிகளார்
என்ற
இந்த நான்கு சிந்தனையாளர்கள் மற்றும் குமுக
அக்கறையாளர்கள் சொற்களில் ஏதேனும்
அடிப்படை வேறுபாடுகளைக் காண முடிகிறதா?

இதழ்கள்/ஏடுகள் பற்றி இலெனினார்
கூறியவற்றைக் கூறாத, அக்கறைப்படாதவர்கள்
வலைப்பதிவு உலகிலும் இணைய உலகிலும் உண்டா?

அனைவரின் மொழி பற்றிய சிந்தனைகளின்
அடிநாதம் ஒன்றாக அல்லவா இருக்கிறது?

பிறகு என்ன தயக்கம்?

தெரிந்த தமிழில் தெரிந்த தமிழை எழுதுவது
எளிமைதானே!

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: தனித்தமிழ் இயக்கம் என்ற புலவர் இரா.இளங்குமரன் அவர்களின்
நூல் மிக அருமையான செய்திகளைக் கொண்டிருக்கிறது. அந்நூலுக்காக
அவருக்குப் பல நன்றிகளைச் சொல்லவேண்டும். அனைவரும் பயில வேண்டிய நூல்.

Thursday, April 24, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 1 (FAQs part 1)

இணைய/வலைப்பதிவுலகில் தமிழின் குறைகள் பற்றி
நிறைய பேசப்படுவது உந்துதல் அளிப்பதாக இருக்கிறது,
அதே நேரத்தில் ஆங்காங்கு சவலையான
மொழியில் எழுதப் படுகின்ற பதிவுகளைப் பார்க்கும்
போது கவலையும் பிறக்கிறது. தனித்தமிழ் பற்றிய புரிதலுக்காகவே இத்தொடர்.

1) தனித்தமிழ் என்றால் என்ன?

பிறமொழிக்கலப்பு தமிழ் மொழியில் ஏற்பட்டு
மொழியும் பேச்சும் சிதைந்து போகின்ற சூழல்
ஏற்பட்டுவிடாமல், மொழியின் தனித்தன்மை
குன்றாது தமது எழுத்தைக் காத்துக்
கொள்ளும் பண்புகள் தமிழுக்கு உண்டு. பிறமொழி துணயின்றி தனித்தியங்கும் வல்லமை உள்ள நமது தமிழ்மொழியை தனித்தமிழ்  என்று சிறப்பித்து கூறுகின்றனர்.


2) தமிழ் என்பதும் தனித்தமிழ் என்பதும் வேறு வேறா?

இல்லை. தனித்தமிழே தமிழ். தமிழ் என்றால் அது பிறமொழிக்கலப்பில்லா தமிழையே குறிக்கும். பிறமொழி, எழுத்துகள் கலந்திருப்பின் அவை தமிழ் ஆகா.

3) தமிழின் தனித்தன்மை குன்றினால் என்ன ஆகும்?


அ) செந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில்,
தொல்காப்பியம் தோன்றியசேரநாட்டில்,
திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ள
சேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றி
ஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்த
அப்போதைக்கு ஏலாததாலும், அரசியல்
மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும்
தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது,
அதன்விளைவு மலையாளம் என்ற மொழி
தோன்றியது 1100 ஆண்டுகளுக்கு
முன்னர். அது தனி நாடாகவும்
ஆகிப்போனது ஏறத்தாழ கி.பி 1300க்குப்
பின்னர். இந்த வரலாற்றை அறிந்திருந்தும்
அறியாததுபோல வாழ்ந்தால்
பிழை நம்மதுதானே?


ஆ) தனித்தன்மை குன்றினால் எந்த ஒன்றிற்கும்
பிற மொழிகளைச் சார்ந்தே வாழ வேண்டி இருக்கும்.
மனிதனுக்கு அடிமை புத்தி வருவதற்கு மூலமே இதுதான். காட்டாக, விபத்தில் சிக்கி கை கால் ஊனமுற்றவர்கள் வாழ்க்கை முழுதும் சரவல் பட்டு சார்ந்து வாழ்வதைப்போல, மொழியைக் குன்ற விட்ட குமுகமும் ஆகிவிடும். மூச்சு இருக்கும் வரை வாழ்விருக்கும்தான்.
ஆனால் ஊனத்துடன் வாழ்வது எவ்வளவு பேருக்கு இன்பம்?
4) தனித்தமிழ் என்றால் அகராதியில் இருக்கும்
சொற்களைப் பார்த்துப் பார்த்து,
வேர்ச் சொல் ஆய்ந்து ஆய்ந்து,
கலைச்சொல் கண்டு பிடித்துக்
கண்டு பிடித்து எழுதுவதா?

இல்லை.

அ) எளிமையாக இருக்கும் தமிழை எல்லோரும் அறிந்த
தமிழை நேர்த்தியாக எழுதுவதுதான் அடிப்படை.

ஆ) ஆங்கிலம், சமற்கிருதம் போன்ற அயல் மொழிகள்,
மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற, தமிழ்கெட்டு பிறவாக கிளைத்த கிளை மொழிகள் போன்றவற்றின் சொல்லும், எழுத்துக்களும்
தமிழில் பாவாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஆங்கிலம் சமற்கிருதம்
போன்றவை செய்யும் தீங்கு போதாதென்று,
மலையாளம், தெலுங்கு போன்றவற்றை அறிந்த
எழுத்தாளர்கள் அதனையும் சேர்த்துக்
குழப்பியடித்துத் தீங்கு செய்கிறார்கள்.


5) மலையாளம் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் பாதிப்பேதும் இல்லையே; பிறகு ஏன் கவலைப்படவேண்டும்?

மலையாளம் தோன்ற ஆரம்பித்துப்
பின்னர் நாடாக, தமிழ்த் தொடர்பை
அறுத்துக் கொண்ட 1300/1400க்கு
பின்னரான கால கட்டத்தில்
குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டிற்கும்
20 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலத்தில் மலையாளத்தைப் பின்பற்றி
தமிழகத்தில் மணிப்பிரவாளம்
என்ற மொழி ஏற்பட்டிருந்தது.

சமற்கிருதப் புலமையே புலமை, பண்டிதம்,
அறிஞம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மணிப்பிரவாள இலக்கியங்கள்
மிகுந்தன. சமற்கிருதமும் தமிழும் கலந்த
கலவையான மணிப்பிரவாளம்
பேசுவது எழுதுவது நாகரிகமாக ஆகி
சென்னை மாநிலம் மணிப்பிரவாள
மாநிலமாக இருந்தது.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால்
தமிழ்நாடு என்பது வரலாற்றில்
கரைந்து இருக்கும். இன்றைக்கு இந்த
அளவு கூட தமிழ் இருந்திருக்காது;
இன்றைய தமிழ்நாட்டுக்குள்
மணிப்பிரவாள மாநிலம் தோன்றியிருக்கும்.

தற்போது உலகில் ஓங்கி நிற்கும் ஆங்கிலத்தால் நமக்கு வேறுவழியில்லாததால் தீவினன ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதற்கு ஆங்கிலத்தைக் குற்றம் சொல்லமுடியாது.
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


6) தனித்தமிழ் இயக்கம்தான் தமிழ்நாட்டை
மற்றொரு பிரிவில் இருந்து காப்பாற்றியதா?
ஆமாம்.


7) காப்பாற்றுதல் என்றால் என்ன?

காப்பாற்றுதல் என்பதை இரு வகைப் படுத்துகிறார்
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன்.
அவரின் "தனித்தமிழ் இயக்கம்" என்ற நூலில்
இப்படிச் சொல்கிறார்:

காவற்கடமை:

"ஒன்று, வளர்ந்து செழிப்படைவதற்கு
வேண்டிய ஆக்கச் செயல் வகைகளையெல்லாம்
செய்தல். மற்றொன்று. பிறவற்றின் தாக்கம்,
அழிப்புகளில் இருந்து காத்தல்.


முன்னது அகக்காவல். பின்னது புறக்காவல்.
இருவகைக் காவலும் மேற்கொண்டால்

அல்லாமல் மக்கள் வாழ்வு சிறப்படையாது. "

அவ்வாறே மொழிவாழ்வும். அகக்காவலும் புறக்காவலும் இல்லாமல்
எடுப்பார் கை பிள்ளையாய் ஆகிப்போனது தமிழ்.

"மக்கள் இனக்கலப்பு தவிர்க்க இயலாமை போல,
மொழிக்கலப்பும் தவிர்க்க முடியாததே. ஆனால்,
தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில்
எப்படி ஓரினம் மாற்றம் ஆகிவிடக்கூடாதோ,
அப்படியே ஒருமொழியும் மாற்றம் ஆகிவிட
விட்டு விடக் கூடாது"

8) தனித்தமிழ் இயக்கம் என்பது என்ன? அது யாரால்
தோற்றுவிக்கப் பட்டது?

பெருகிவந்த மணிப்பிரவாளம் ஏறத்தாழ
தமிழின் குரல்வளையை
இறுக்கியபோது, அதன் கேடுகளையும்
வரலாற்றையும் உணர்ந்த
நமது முன்னோர்கள், தமிழை மீட்கவும்,
அதன் தனித்தன்மையை
நிலை நிறுத்தவும், தமிழர்கள் அடையாளம்
நிலைக்கவும் தோற்றுவித்த
இயக்கம் தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் இயக்கம்
தவத்திரு மறைமலை அடிகளாரால்
தோற்றுவிக்கப் பட்டது.

9) தனித்தமிழ் இயக்கம் தோன்ற முன்னோடியாக
இருந்தது யாது?

திருவிடர் கழகம் என்ற அமைப்பு.
இது குறித்து செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் கூறுவதாவது:

//
19-11-1908 இல் "திருவிடர் கழகம்" என்னும் அமைப்பு
தோற்றுவிக்கப்பட்டது. அதனை அமைத்தவர்
"மறைத்திருவன் விருதை சிவஞான யோகிகள்"
என்பவர் ஆவார். (திராவிடர் கழகம் வேறு,
திருவிடர் கழகம் வேறு). 99 யாண்டுகள்
உயிர்வாழ்ந்த அந்தப் பெருமகனார் பன்மொழிப் புலவர்.

குற்றாலத் தென்றலாய் தமிழுக்கு அமைந்த
இவ்வமைப்பு தோன்றியதும் குற்றாலத்தில்தான்.

இதன் தலைவராக திருவன் சீர்காழி கே.சிதம்பர
முதலியார் இருந்தார். துணைத்தலைவர்களாக இருந்த
மூவர் வருமாறு.

திருவன் பூவை.கலியாண சுந்தர முதலியார்
திருவன் ஏ.பால்வண்ண முதலியார்
திருவன் மு.ரா.கந்தசாமிக் கவிராயர்


இக்கழக உறுப்பினர்களாக 59 பேர் கொண்ட
பட்டியல் உள்ளது.

அவர்களில்
திருவன் இராவ்பகதூர் தியாகராச செட்டியார்,
திருவன் வெ.ப.சுப்பிரமணிய முதலியார்
திருவன் அரசஞ் சண்முகனார்
திருவன் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை
மறைத்திருவன் சுவாமி வேதாச்சலம்
(மறைமலை அடிகளார்)
திருவன் மு.கதிரேசச் செட்டியார்
திருவன் சோமசுந்தர பாரதியார் (நாவலர்)
ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடத்தக்கவையாக
குறிக்கப் பட்டுள்ளது.
//

திருவிடரின்(திராவிடர்கள்) பழைய
வரலாறுகளையும் மொழியையும்
(தமிழ்) ஆய்ந்து உண்மைச் சேதிகளை
வெளிக் கொணருதலை
இன்றியமையா குறிக்கோள்களில் ஒன்றாகக்
கொண்ட இந்தக் கழகத்தின்
குறிக்கோள்கள், கட்டளைகள், செயல்பாடுகள்
குறித்த பதிவுகளில்
காணப்படும் தமிழ்ச் சொற்கள்
அருஞ்சிறப்பு வாய்ந்தவை.

10) தனித்தமிழ் இயக்கத் தந்தை
தவத்திரு மறைமலை அடிகளாரைப்
பற்றிச் சிறிது அறிய முடியுமா?

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்,
பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆகியோரது
கீழ்க்கண்ட உரைகள் நமக்கு நிறைய அறியத்தருகின்றன.

அடிகளார் இளந்தைப் பருவத்தில்
நாகையில் வெசிலி கல்லூரியில் உயர்
பள்ளியில் கற்று வந்தார். பள்ளியில் தமிழ்
பயின்றதோடு, பொத்தகக் கடை
வாணிகராகவும் இருந்தார்.

பெரும் தமிழ்ப் புலமையாளர்
திருவன் நாராயணசாமி அவர்களிடம்
செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச்
செவ்வையாகக் கற்றார்.

ஒழுக்கத்துக்கு எவர்நடையைப் பின்பற்ற வேண்டும்? ஒழுங்கர்
நடையைத்தானே
?

மாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும்
எவ்வளவு இன்றியமையாததோ
அவ்வளவு இன்றியமையாதது,
மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.

அக்கட்டுப்பாட்டைக் கட்டாயம்
உண்டாக்க வேண்டும் என்ற அடிகளாரின்
பேருள்ளத்தில் உருவானதே தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் கண்ட அடிகளார்
உடலோம்பலில் தலை நின்றவர்;
உணவு, உடை,உழைப்பு, ஓய்வு, உறக்கம், உலாவல்
இன்னவற்றெல்லாம்
ஓர் ஒழுங்கர். இருப்பிடம் அலுவலகம்
தோட்டம் சூழல் இன்னவெல்லாம்
தூசு தும்பு மாசு மறுவின்றித் திகழத்
திட்டப்படுத்தி ஒழுங்குபடுத்திக்
கொண்ட கடமையர்.

எழுதும் எழுத்து, பேசும் பேச்சு, நடக்கும் நடை,
எடுக்கும் நூல், தொடுக்கும் மிதியடி இவற்றிலெல்லாம்
ஒழுங்குமுறை கடைப்பிடியர். அந்த
ஒழுங்குள்ளத்தில் தோன்றியதே தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறார் புலவர் இரா.இளங்குமரன்.
வ.சுப.மாணிக்கனார்
அவர்கள்,
"அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்
தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும்,
தமிழர் அறைபோகாதும் காத்தது.
தமிழின் வயிற்றிலிருந்து முன்பு பல
திராவிட மொழிகள் கிளைத்து
அதன் பரப்பைச் சுருக்கியது போல

மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய
திராவிட மொழி பிறந்து தமிழைக் குன்றிக்
குலையாதவாறு தடுத்தது"
என்று உரைக்கிறார்.

11) மறைமலை அடிகளார் தூயதமிழ்
போற்றுபவர்களிடம் இருந்து
"தமிழ் விடுதலை ஆகவேண்டும்" என்று

சொல்பவர்களையும், நல்ல தமிழ் செய்பவர்களைக்
கேலி பேசுபவர்களையும் பற்றி என்ன சொல்கிறார்?
மறைமலை அடிகளாரை அவர்காலத்தில் கிடுக்காத,
தாக்காத கீழ்மொழி தாசர்கள் குறைவு.
அவர் சந்திக்காத கிடுக்கல்கள்
கிடையாது. அது இன்றும் பொருந்தும்.

மறைமலை அடிகளார், தம் தமிழ்ப்பணியை
"கலிகாலக் கொடுமை"
என்று நகைத்தார்க்கு பதிலிறுக்கிறார்;

"பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும்
நம் தனித் தமிழ்த்தாயைப் பிறமொழிச் சொற்கள்
என்னும் கோடாரியினுள் நுழைந்து கொண்டு,
இத்தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க

முயல்வதுதான் *கலிகாலக் கொடுமை*!
இத்தீவினை புரியும் இவர் தம்மைத் தடுத்து,
எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க
முன்நிற்கும் எம்போல்வாரது நல்வினைச்

செயல் ஒருகாலும் கலிகாலக்
கொடுமை ஆகாது என்று

உணர்மின்கள், நடுநிலையுடையீர்"!

12) தமிழின் தனித்தன்மை பேணாமையால்
எய்திய கேடு என்ன என்று
அடிகளார் கூறுகிறார்?

மறைமலையடிகள் கூறுகிறார்:

"மக்களை விட்டு மொழியும், மொழியை விட்டு
மக்களும் உயிர்வாழ்தல் சிறிதும் இயலாது.

எனது விருப்பப்படிதான் யான் பேசும்
மொழியைத் திரித்தும், அயல்மொழிச் சொற்களோடு கலந்து
மாசு படுத்தியும் வழங்குவேன்;


அம்மொழியின் அமைப்பின்படி யான்
நடக்கக் கடவேன் அல்லன்' என்று
ஒவ்வொருவனும் தனது மொழியைத்
தன் விருப்பப்படி எல்லாம் திரித்துக் கொண்டு
போவானாயின் சிறிது காலத்தில்
ஒரு மக்கட் கூட்டத்தாரிலேயே ஒருவரை
ஒருவர் அறிந்து கொள்ள முடியாத
வகையாய் ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும்
ஒவ்வொரு புதுமொழி காலந்தோறும்
உண்டாகி அம்மக்களை ஒன்று சேரவிடாமல்
அவர்களைப் பல சிறு கூட்டங்களாகப் பிரித்து விடும்"
(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, April 22, 2008

கிச்சுக் கிச்சுத் தாம்பாலம்!

இருபதாம் நூற்றாண்டு பெற்றெடுத்த மாபெரும்
மாணிக்கங்களில் ஒரு மாணிக்கமான பாவாணர்,
தமிழரின் துறைகளில் ஆய்வு செய்து அடுக்கி வைக்காதத்
துறை எது என்று தேடத்தான் வேண்டும்.

நாம் குழந்தைப் பருவத்தில் ஆடிக்களித்த நாட்கள்
எத்தனையோ உண்டு! ஆடிய ஆட்டங்கள் எத்தனை,
எத்தனை? குழந்தைகள் மட்டுமா?
அரும்பு மீசைகள், மடந்தையர் மங்கையர்,
பெரியோர், முதியோர் ஆடிய விளையாட்டுகள்
எத்தனை எத்தனை?

"குலை குலையாய் முந்திரிக்காய்" என்று பாடாத பிஞ்சு
வாய்கள் இருந்திருக்குமா?

"கல்லா மண்ணா?", சில்லாக்கு, பல்லாங்குழி,
பச்சைக் குதிரை, பம்பரக்குத்து, கிட்டிப்புள், கோலி
என்று எவ்வளவோ ஆட்டத்தை நாம்
ஆடியிருக்கிறோமல்லவா?.

"தமிழ்நாட்டு விளையாட்டுகள்" என்ற, பாவாணரின்
நூல் அத்தனை விளையாட்டுகளையும், பதித்து
வைத்திருக்கிறது. அதைப் படிக்கும்போது என் உள்ளம்
மீண்டும் ஆடத் துடிக்கிறது
(நாம் எவ்வளவோ "டமில்ப் பனி" செய்து
கொண்டிருக்கிறோம். அதனாலேயே
பாவாணரின் பணி வியக்க வைப்பதாக இருக்கிறது.
ஊர் ஊராய் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்
என்று தேடித் தேடி அவர் எழுதியிருப்பது சிந்தனையை
வளர்ப்பதாக இருக்கிறது. )

அந்த ஆட்டங்களில் எவ்வளவோ ஆட்டங்களை நாம்
ஆடியிருக்கிறோமே என்று எண்ணும்போது மலரும்
நினைவுகளால் இறையம்(இதயம்) நிறைகிறது.

நகர்ப்புறங்களிலும் வெளிநாடுகளிலும்(!) காணமுடியாத/ஆடமுடியாத
இந்த விளையாட்டை எண்ணும்போது என் கண்கள் செருகுகின்றன.

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்":

ஓடி ஓடிக் களைத்த காவிரி சற்று ஓய்வு கொண்ட
வேனில் காலம்!

இரு கரைகளையும் அச்சுறுத்திய காவிரி சற்று அயர்ந்து
போய் ஆற்று மணலை எமக்கு ஆடுதற்குத் தந்த காலம்!

ஆடைகளில் கறையேறாதிருக்க, காவிரித்தாய்
தோய்த்துத் தோய்த்து தூய்மையாய்த் தந்த
ஆற்றுமணல் கருப்பஞ் சக்கரையாய் எம் கண்களுக்கு!

உள்ளங்கைகளில் அள்ளி உற்று நோக்கி மெல்ல
வியந்திருந்தோம்!

அப்படியே அமர்ந்து, அருமை மணலில்
கிச்சுக் கிச்சு தாம்பாலம் ஆடிய நாட்களை இன்றைக்குப்
பிள்ளைகளோடும் ஆர்வமுள்ளோரும் பகிர்ந்து
கொள்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி!
அதுவும் பாவாணரின் எழுத்துக்களை அடிப்படையாகச்
கொள்ளும்போது மகிழ்ச்சிப் பொங்கத்தான் செய்கிறது.

கிச்சுக் கிச்சுத் தம்பலத்தை இரண்டு பேர் மட்டுமே
ஆடமுடியும். சிறுமியர் சிறுவர் யார் வேண்டுமானாலும்
ஆடலாம். பெரும்பாலும் சிறுமியர் ஆடுவர்.
ஆடும் இருவருக்கும் தோழர்கள்/தோழியர்கள் உண்டு.

திறந்த வெளிகளில் ஆடப்படும் ஆட்டம்.
இதை ஆட, ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமுள்ள
மணற்கரை அமைப்பர்; அது ஒரு 4 அல்லது 5 அங்குல
உயரம் உள்ளதாக இருக்கும். அதில், அரை அல்லது ஒரு
அங்குல நீளம் உடைய மெல்லிய குச்சியை (சிறு
கிளிஞ்சல்/சங்கு/புளியங்கொட்டை/சிறு ஓடு/விலக்குமார்
குச்சி போன்றவற்றையும் பயன்படுத்துவர்)
போன்றவற்றை ஒருவர் மறைத்து வைக்க, மற்றவர் அதைக் கண்டு
பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பலம்.

மணற்கரையை ஆக்கி வைத்து, முதலில் யார் ஆடுவது
என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். யார் முதலில்
மறைத்து வைப்பது என்பதில் முடிவு ஏற்படாவிடில்,
காசெடுத்து பூவா தலையா போடுவதைப் போல,
ஓட்டாஞ்சில்லை எடுத்து, ஒரு புறத்தை ஈரமாக்கி
(நக்கி :) ) , "எச்சா மானமா" என்று கேட்டு,
வெல்பவர் முதலில் ஆட ஆரம்பிப்பார்.

ஆடு கருவியான குச்சியை, எதாவது ஒரு கையின்
இருவிரல்களில் பிடித்து (கட்டை விரல், ஆள்காட்டிவிரல்),
மணற்கரையின் ஒரு முனையில் அவ்விரல்களை நுழைத்து
வைத்திருப்பார். மற்றொரு கையில் அந்த இரு
விரல்களையும் மறுபுறத்தில் நுழைத்து வைத்திருப்பார்.

குறிப்பு: "தம்பலம்" என்று ஒலிக்காமல் "தாம்பாலம்"
என்று நீட்டி ஒலிப்பது வழக்கம். பாவாணர் தம்பலம்
என்று சொல்கிறார்.

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்
கீயாக் கீயாத் தம்பலம்
மச்சு மச்சுத் தம்பலம்
மாயா மாயாத் தம்பலம்"

என்று பாடிக் கொண்டே, திரும்பத் திரும்பப்
பாடிக் கொண்டே குச்சியை இரு கைகளுக்கிடையே
மாற்றியோ, மாற்றாமலோ, அந்த மணற்கரையின்
முழுநீளத்திற்கும்,முன்னும் பின்னுமாய் போயும் வந்தும்,
எதிரே அமர்ந்திருப்பவர் பார்த்துக்
கொண்டேயிருந்தாலும், மணலுக்குள் தெரியாதாதலால்,
ஏதோ ஒரு இடத்தில் குச்சியை மறைத்து வைப்பார்.
மறைத்து வைத்தும், முன்னும் பின்னும் போய் வந்து
போக்க்குக் காட்டுவது உண்டு; முன்னர் மறைத்த இடத்தில்
இருந்து திறமையாக மாற்றி வைப்பதும் உண்டு.

இப்படி மணலுக்குள் மறைத்து வைத்தபின், அடுத்தவர்
எந்த இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அந்த
இடத்தில், தன் இரண்டு கரங்களையும் பிணைத்து,
குச்சி இருக்கும் மணற்கரையின் இடத்தைப் பொத்த
வேண்டும்.

மறைத்து வைத்தவர், பாடிக் கொண்டே, முன்னும் பின்னும்
போய் வந்து கொண்டிருந்தபோது,
அவரின் கர அசைவுகள், உடல் அசைவுகள்,
முக அசைவுகள் இவற்றைக் கூர்மையாகக்
கவனித்தால்தான், மற்றவர் அதை எளிதில்
கண்டுபிடிக்க ஏதுவாகும்.

கரங்கள் பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால்,
எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர் வென்றார்.

வென்றவர் மீண்டும் மறைத்து வைப்பார்.
இப்படியாக ந்து அல்லது பத்து தடவை வென்றவர்,
ஆட்டத்தை வென்றவர் ஆகிறார்.

தற்போது, தோற்றவரின் கையைக் கூட்டி,
(ஏந்துமாறு வைத்து) அதில் மணலை அள்ளி வைத்து,
நடுவிலே அந்த சிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர்,
அவரின் கண்களைப் பொத்தி, அம்மணலை ஏந்தியவாறு,

நடந்து கொண்டே, "அம்மாயி வீடு எங்க இருக்கு?"
என்று கேட்க, வென்றவர், "ஆற்றுக்கு அங்கிட்டு" என்று
சொல்வார்;

இப்படியே, இடம் குறித்த சில கேள்விகளை திருப்பி,
திருப்பிக் கேட்டு, சிறிது தூரம் சென்றதும், அந்த ஏந்து
கை மணலையும், குச்சியையும் ஒரு இடத்தில் வைக்கச்
சொல்வார்; கண்கள் இன்னும் பொத்தப் பட்டிருக்கும்.

மேலும் சிறிது தூரம் சென்று, கண்களைப் பொத்தியபடியே,
இரண்டு மூன்று முறை, மணல் வைத்த இடம் தெரியாமல்
இருக்க, கண் பொத்தப் பட்டுள்ளவரை சுற்றி விடுவர்.

பின்னர் கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டு பி
டிக்க வேண்டும். அப்போது, தோழர் தோழியரின்
மகிழ்ச்சி பொங்கிப் பாயும்.

இப்படி ஆடுவதுதான் கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாட்டு.

யாருக்கும் இன்னல் இன்றி, குழுவினரோடு ஆடும் இந்த
விளையாட்டு, நகரத்தில் மற்றும் நாடுகள் தாண்டி
வாழ்பவர்க்கு ஏலவில்லை. அப்படியே இயன்றாலும்
அவ்விளையாட்டை நாம்/நம் பிள்ளைகள் ஆடுவதில்லை.

இது ஒரு சில்லறை விளையாட்டு - ஏழைகளின்
விளையாட்டு, என்ற கருத்தே நமக்குப் பெரும்பாலும்
தோன்றும். ஆனால் மிகவும் பொருள் பொதிந்த
விளையாட்டு.

1) மணற்கரையில் மறைத்த குச்சியை கண்டு பிடிக்கும்போது,
மறைத்து வைக்கும் சூக்குமத்தை மறைப்பவருக்கு
வளர்க்கிறது!

2) எடுக்க வேண்டியவருக்கோ, மறைத்து வைப்பவரின்
உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றை வைத்தே,
மறைத்து வைக்கும் இடத்தை உணரும் திறன் வளர்கிறது.

3)அதன் பின், விளையாட்டின் இறுதியில், கண் பொத்தி
சுற்றி விடப்பட்ட பின்,அம்மணலைத் தேடும்போது,
"திசையறியும்" திறன் வளர்கிறது.

இருவர் ஆடினும், மகிழ்ச்சி, கூடியுள்ளோர்
அனைவருக்கும்தான்.

திருச்சி பகுதியில் இப்படித்தான் விளையாடுவோம்;
விளையாடினோம். பாவாணர் அவர்களும்,
சோழ கொங்கு நாடுகளில் இப்படி பழக்கம்
என்கிறார்.

அதோடு பாண்டி நாட்டில், ஆடப்படும் விதம் நோக்கம்
எல்லாம் ஒன்றாகினும், பாடும் பாடலும், மறைக்கும்
கருவியும் வேறுபடுகிறதைச் சுட்டுகிறார்.
பாண்டி நாட்டில் சிறு குச்சிக்கு பதில் சிறு
துணித் திரியை பயன்படுத்துகிறார்களாம்.

பாண்டி நாட்டில் பாடப் படும் பாடல்:

"திரித் திரி பொம்முதிரி
திரிகாலடி பொம்முதிரி
காசுகொண்டு பொம்முதிரி
கடையிலே கொண்டும் பொம்முதிரி
நாலுகரண்டி நல்லெண்ணெய்
நாற்பத்தோரு தீவட்டி
கள்ளன் வாறான் கதவடை
வெள்ளச்சி வாறாள் விளக்கேற்று
வாறார் அய்யா சுப்பையா
வழிவிடம்மா மீனாட்சி."

(பாண்டி நாட்டுக் காரங்கதான் இதுபற்றிச் சொல்ல
வேண்டும்)

சோழ, கொங்கு, பாண்டி நாடுகளில் கண்ட
இந்த ஆட்டம் இன்றும் கிராமங்களில் சிறாரால்
விளையாடப்படுகிறது. கிராமம் விட்டு நகரம் வந்தோரும்,
நாடை விட்டு நாடு போனோர்களும்
இதனை மறந்து விட்டனர். மேலும் நகரங்களிலும் வெளிநாடுகளிலும் இம்மாதிரி விளையாடவியலாது.
தூய்மைக் காரணங்கள், திறந்த வெளிகளில் மணல்
கிடைக்காமை, அடுக்கு மாடி வீடுகளில் வாழ்க்கை
என்று பலகாரணங்கள் உள்ளன. தமிழர் தமிழரின்

பலவற்றை மறந்து வருகையில் இதையும்
மறக்க மாட்டார்களா என்ன? என்று இப்படியாக
சிந்தனைகள் போனபோது ஏன் இதனை விளையாட
முடியாது நகர்களில் என்றும் தோன்றியது.

தூய்மைக் குறைவான மணலை வைத்து விளையாடுவது
சரியல்ல! ஆனால் தூய்மையான மணலை வைத்து,
பிறருக்கு இன்னல் வராமல் இந்த விளையாட்டை
விளையாட ஏலும்.

ஒரு ஒன்னறை அடி/இரண்டடி நீளப் பெட்டியில் மணல்
பை வைத் திருக்க வேண்டும். அதில் சிறு குச்சி அல்லது
கிளிஞ்சல்,சோழி போன்றவற்றில் ஒன்றை வைத்திருக்கலாம்.
விளையாடும்போது, தரையில் கொட்டாமல் அந்தக்
கச்சிதமான சிறு மடிப்புப் பெட்டிக்குள்ளே கொட்டிக்
கொண்டு ஆசை தீர கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாடலாம் :-))))))

வீட்டில் மட்டுமல்ல, வெளியே பூங்காக்களில்
விளையாடலாம். கடற்கரைகளிலும் தூய்மை குன்றி
வருவதால் அங்கு கூட எடுத்துச் சென்று
இதை விளையாடலாம்.

பிள்ளைகளுக்கு, அறிவுத்திறனை வளர்க்கும் ஆட்டம்
இது; நினைவாற்றல் மற்றும் திசையறியும் ஆட்டம் இது;
முக்கியமாக ஓசையுடன் கூடிய பாடலோடு கூடிய
ஆட்டம் இது;

சொல்லையும் மொழியையும் நாவில் வளர்க்கும் ஆட்டம்
என்பதோடு மீட்டெடுக்கப் படக்கூடிய,
தக்க வைக்கக் கூடிய ஆட்டமாகத்தான் தோன்றுகிறது.

என்ன எப்படி இது.... என்று சிரிப்பு
வருகிறதா? :-)) இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி
ஒரு பேத்தலா? அதுவும் கணியுகத்தில் இப்படி ஒரு
கிறுக்கலா....! என்று நக்கலடிக்கத் தோன்றுகிறதா? :-))

ஏங்க, கடைகளிலே, "சைனாக்களிமண்" கிடைக்கிறதே
அதைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து
பொம்மைகள் செய்து விளையாடக் கொடுக்கிறோமே!?
அது மண்தானே!

நாம், களிமண்ணில் செய்து விளையாடியதைத்தானே
கடையில் தூய்மையான களியாய் வைத்திருக்கிறார்கள்!

அந்த மண்ணை நாம் தொட்டு விளையாடும்போது,
வேதிப் பொருள்கள் கலந்து ஒருவித முடையடிக்கும்.
அந்த மண்ணைத் தொட்டு விளையாடும்போது, ஒட்டிக்

கொள்ளாத தூய்மையான ஆற்று மணலில் சிறு மடிப்புப்
பெட்டிக்குள் வைத்து விளையாடலாம்தானே!

கடைகளிலும் கிச்சுக் கிச்சுத் தம்பல விளையாட்டுப்
பொருள்கள், சிறு பெட்டிக்குள் போட்டு விற்கப்
படலாம்தானே!

நமது விளையாட்டுகள் அத்தனையையும் நகர,
வெளிநாடுகளுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி அமைத்து
நாம் அதை விளையாடலாம்தானே!

மெய்யாலுஞ் சொல்கிறேன் - சீனாக்காரன் நம்ம
கிராமத்துப் பக்கம் போய்ப் பார்த்தான்னா
அழகான பெட்டி செய்து, அதுக்குள்ள மூனு படி ஆற்று
மண்ணைப் போட்டு, இரண்டு மின்கலன்கள் போட்டு,
வண்ண வண்ண விளக்குகள் போட்டு, கூடவே 'கிச்சுக்
கிச்சுத் தாம்பாலம்..." என்ற பாட்டையும் ஓடவிட்டு
49.95$ க்கு விற்று விடுவான் :-)) நம்ம ஊர்க்காரன்
அதுக்கு முகவர் ஆக அலைவான் ;-))))

அன்புடன்
நாக.இளங்கோவன்