Pages

Sunday, January 31, 1999

சிலம்பு மடல் 3

சிலம்பு மடல் - 3: கண்ணகி கோவலன் காதல் வாழ்வு!
புகார்:
மனையறம் படுத்த காதை:

மணம் முடிந்ததும் பள்ளியறையில் இருத்தி வைக்கப் பட்டாள் கண்ணகி!

"கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி"

செல்வம் பூத்துக் குலுங்கிய புகாரில், குவளைமலர் போன்ற கண்களையுடைய கண்ணகியும், அவளுடைய
காதற் கணவனும், அடுக்குமாடிகள் கொண்ட வீட்டின் நடுமாடியில் (இடைநிலம்) தேவதச்சனால் ( மயன்,
சிற்பி) செய்யப்பட்ட, மணிகளால் இழைக்கப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மீது மகிழ்ந்திருந்தனர்.

இயற்கையின் பரிசாக இவர்களுக்குக் கிடைத்த தென்றலும் தென்றலோடு கலந்த நறுமலர் வாசனையும்
இருவரையும் நிலா முற்றத்திற்குக் கொண்டு செல்கிறது. ஆங்கு பேசிமகிழ்கின்றனர்; கோவலன் கண்ணகி
யைப் பலவாறு பாராட்டுகிறான். அப்பாராட்டு மொழிகளில், மயங்காதப் பெண்மையும் மயங்கிவிடும்!
அவற்றுள் சில;

"மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ ?
தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்று...."

குற்றமற்ற பொன் போன்று ஒளிர்பவளே! வலம்புரிச் சங்கு ஈன்ற முத்துப் போல் மென்மையானவளே!
குற்றமற்ற மணப் பொருள் போல மணப்பவளே! கரும்பினும் இனிய சுவையானவளே தேன் மொழியாளே!
எனதரிய உயிரை நிலைக்கச் செய்யும் அமுதம் போன்றவளே, பெருமைமிகு வாணிகனின் இளம்மகளே!
உன்னை மலையில் தோன்றா மணியென்பேனா ? கடலில் தோன்றாத அமுதம் என்பேனா ? யாழிலே பி
றவாத இசையென்பேனா ?
என்றும் பாராட்டுகிறான்.

"வேறுபடு திருவின் வீறுபெறக்காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இல்பெருங் கிழமையின்!
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்."

உயர்ந்த பண்புகளைக் கொண்ட கோவலனின் தாயாரால், இல் வாழ்க்கையைக் கண்ணகி, தனியே சிறப்பாக
நடத்துவதைக் காணத் தனிக் குடித்தனம் வைக்கப் பட, இருவரின் வாழ்க்கையும் மிகுந்த இன்பமும் காத
லும் கொண்டதாய் இனிதே சில ஆண்டுகள் கழிகிறது!

அந்த இன்பக்காதல் வாழ்க்கையை நன்கு அனுபவித் திருக்கிறார்கள் கண்ணகியும் கோவலனும். இவர்கள்
இல்லற இன்பத்தை அனுபவித்து எப்படி இன்புற்றிருந்தனர் என்பதை இளங்கோவடிகள் கீழ்க்காணும்
வெண்பாவில் தெரிவிக்கிறார்.

"தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று."

மனித வாழ்க்கையில் செல்வம், இளமை, யாக்கை ஆகியவை நில்லாதவை! நிலைக்காதவை! மண்மேல் நி
லையான அந்த நிலையாமையை நன்கு உணர்ந்தவர் போல, இளமை இருக்கும் போதே, இந்த உலகம்
இருக்கும் போதே இளமை இன்பம் முழுவதையும் அனுபவித்து விடவேண்டும் என்ற வேகத்தில், வேட்ந
கயில், கோவலனும் கண்ணகியும் பிணையல் பாம்புகள் எப்படி ஒன்றி காம இன்பம் துய்க்குமோ அப்படி
ஒருவரோடு ஒருவர் பிணைந்து இணைந்து, எல்லையில்லாக் கலவி இன்பத்தினைத் துய்த்து இன்புற்றிருந்த
னர்!

செல்வத்தின் நிலையாமையை உணர்த்த வள்ளுவப் பெருமகனார்,

"அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப வாங்கே செயல்"

என்ற குறள் மூலமாக,

"நில்லா இயல்புடைய செல்வத்தைப் பெற்றால் அதனால் செய்யப் படவேண்டிய அறங்களை அங்கே
அப்பொழுதே செய்துவிடு" என்று சொல்கிறார். காரணம், ஒருவேளை தாமதித்தால் அச் செல்வத்தினால்
ஆகக் கூடிய அறங்கள் நிலையாமையால் ஆகாமல் போகலாம்!

செல்வத்தின் நிலையாமையை வள்ளுவர் உணர்த்தி, அறம் செய்ய அவசரம் வேண்டும், அப்பொழுதே
செய்யப்படல் வேண்டும் என்று கூறுவதைப் போலவே, கண்ணகியும் கோவலனும் இளமையின் நிலையாந
மயை, இவ்வுலகின் நிலையாமையை உணர்ந்தவராக, பெரும் செல்வக் காதலர் இவர், இளமையையும்
அழகையும் ஒருங்கே கொண்டவர், இன்ப வேள்வியில் பிண்ணிப் பிணைந்து காமம் களித்தனர். காலம்
கழித்தனர் இன்பமாக சில ஆண்டுகள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
31-சனவரி-1999

Saturday, January 23, 1999

சிலம்பு மடல் 2

சிலம்பு மடல் - 2: கோவல கண்ணகி மணம்
புகார்:
மங்கல வாழ்த்துப் பாடல்:

முரசுகள் ஒலித்தன; மத்தளங்கள் அதிர்ந்தன; சங்குகள் முழங்கின; அரசன் உலாச் சென்றது போல
வெண்குடைகள் எழுந்தன; மங்கல நாண் ஊரை வலம் வந்தது.

முரசியம்பின முருடுஅதிர்ந்தன முறைஎழுந்தன
பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர்
படியெழுந்தன, அகலுள்மங்கல் அணிஎழுந்தது;

திருமண மண்டபம்;

உச்சியிலிருந்து (சென்னி) கீழாகத் தொங்கவிடப் பட்ட மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த மண்ட
பத்தை வயிர மணித் தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அம்மண்டபத்தில், முத்துப் (நித்திலம்) பந்தலில்(பந்தர்) மேற்கட்டியாக(விதானம்) நீலப்பட்டு கட்ட
ப்பட்டிருந்தது. அப்பந்தலிலே, அருந்ததி(சாலி) போன்ற கற்புடைய கண்ணகிக்கும், கோவலனுக்கும் வ
஡ன் தவழ் நிலா உரோகினியைச் சேர்கின்ற நல்ல வேளையிலே, முதிய பார்ப்பனர் ஒருவர் மறைவழிச்
சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்திவைக்கும் காட்சியைக் காண்கின்ற கண்கள் செய்த தவம் எ
த்துனையோ ?

மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியம் சகடுஅணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக், கோவலன்,
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கள் நோன்புஎன்னை ?

மணம் இப்படி முடிய, வாழ்த்துகின்ற மங்கையர்தாம் எத்துனைபேர்; நறுமணப் பொருள்களுடன் சிலர் (வி
ரையினர்), மலர்களுடன் சிலர், அழகிய புனைவால் ஒளிவீசும் மேனியராய்ச் சிலர் (விளங்கு மேனியர்), ப
஡ராட்டுமொழிகளுடன் சிலர் (உரையினர்), பாடிக்கொண்டு சிலர், ஓரக்கண் நாணப் பார்வையுடன் சிலர் (ஒ
சிந்த நோக்கினர்), சந்தனம் தெளித்துச் சிலர், நறுமணப் புகையுடன் சிலர், அசையும் மாலைகளை ஏந்திச்
சிலர், அண்ணாந்துயர்ந்த முலைகளைக் கொண்ட ஆரணங்குகள் சிலர், (ஏந்திள முலையினர்), நறுமணப்
பொடியுடன் (இடித்த சுண்ணம்) சிலர், விளக்குகளைச் சுமந்தபடி சிலர், அணிகலன் சுமந்த சிலர், முளைந
ன்கு விடுத்த முளைப்பாலிகையைச் சுமந்தவர் சிலர், (இன்றும் ஊர்களில் முளைப்பாரி என்று சொல்லப்
படுவது) என்று இப்படி பல மங்கையர் சூழ்ந்து "தீமை இல்லாமலும்/செய்யாமலும், இணைபிரியாமலும்" வ
஡ழ்க என்று வாழ்த்தி, பள்ளியறைப் படுக்கையில் இருத்தினர்: (மங்கல நல் அமளி )

விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்து இள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர், முகிழ்த்த மூரலர்
போதொடு, விரிகூந்தல் பொலன்நறுங் கொடி
அன்னார்,

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச், சின்மலர் கொடுதூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார்:

திருமண நிகழ்ச்சியில் இசைக்கப் படும் கருவிகளில் ஒன்றாக சங்கும் இருந்திருக்கிறது; தற்போது அக்க
ருவி உபயோகப் படுத்தப்படுகிறதா என்று தெரியவில்லை.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடைபெற்ற திருமணம் பெரும்பான்மையாக உள்ள இன்றைய வழக்கப்
படியே நடந்திருக்கிறது;

முது பார்ப்பனர் மறைவழிகாட்ட, தீ வலம் வந்தாலும், 'தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்', 'பூதகணங்கள்
வாழ்த்தின' போன்ற, சில இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் கதைகள் சிலம்பின் அடிகளில் கா
ணப்பட வில்லை.

கோவலன் மற்றும் கண்ணகி சமண சமயத்தைத் தழுவியவர்களாகக் காணப்படுகையில், அவர்தம் திரும
ணத்தை மாமுது பார்ப்பனர் ஒருவர் நடத்தி வைப்பது சமண சமயத்திலும் சடங்குகள் செய்து வைக்கும்
சமண பார்ப்பனர் இருந்திருக்கூடும் என்று எண்ணச் செய்கிறது.

பொருளதிகார இலக்கணத்தில் மண வாழ்வை எட்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம்,பைசாசம் என்பன அவை.
இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் முதலியவற்றைக் கைக்கிளை யென்கிறார்கள் ( ஒருதலைக்காமம்).

காந்தருவத்தை மட்டுமே ஐந்திணை ஒழுக்கத்தின் பாற்பட்ட திருமணம் என்கின்றனர் இலக்கண ஆசிரியர்
கள். மேலும் இதுவே தமிழரிடையே போற்றத் தக்கதாக விளங்கிய மணமுறையாக கூறப்பட்டிருக்கிறது.

'காந்தருவம்' என்றால் 'ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு கூடுவது, கூடிவாழ்வது'; அதாவது கா
தல் மணம். இந்த எண்வகை மணங்கள் எப்போதும் இருந்து வந்திருக்கையில் எத்தனையோ நூற்றாண்டு
களுக்குப் பின்னர் 'இந்த நூற்றாண்டில்' தந்தைப் பெரியார் ஏற்படுத்திய 'சுயமரியாதை' / சீர்திருத்தத் தி
ருமணத்தை ஒன்பதாவது மணவகையாய்க் கொள்தல் சரிதானே!

சீர்திருத்தத் திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருத்தலை நாம் கண்கூடாகக் கண்டு
கொண்டு இருப்பது, சில ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறாததை நடத்திக் காட்டிய தந்தை பெரியார்
அவர்களின் சாதனை என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியுமா ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
23-சனவரி-1999

Monday, January 18, 1999

சிலம்பு மடல் 1

சிலம்பு மடல் - 1: தலைவன் தலைவி!
புகார்க்காண்டம்:
மங்கல வாழ்த்துப் பாடல்.

காப்பியத் தலைவன் கோவலனும் தலைவி கண்ணகியும் காவிரிப் பூம்பட்டினப் பெரும்வாணிகர் மரபில் தோன்றியவர்கள்.

நெடிய சுவர்க்கத்திற்கும் (நாகநீள்நகர்), நாகர் உலகிற்கும் (நாகநாடு) ஒப்பாக நீண்ட புகழும் இன்பமும் பொருந்தி விளங்கியதாம் புகார் நகரம்;

ஆங்கு, வான்மழைபோல் வள்ளல் தன்மை கொண்ட மாநாய்கன் மகளாகத் தோன்றியவள், மின்னற்கொடி
போன்ற பொலிவுடைய, பன்னிரண்டு வயதுடைய, செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி (போதில் ஆர்
திருவினாள்) யின் அழகொத்த பெண்குலம் போற்றக்கூடிய சிறந்த குணங்களால் நிறைந்த கண்ணகி;

அப்புகாரிலேயே, அரசனொடு ஒப்பக் கூடிய குடியில் பிறந்த, நாளும் பெருக்கின்ற ஒப்பற்ற செல்வம் பொருந்திய, ஈட்டும் பொருளை ஈந்து வாழும் "மாசாத்துவான்" என்ற செல்வந்தனுக்கு மகனாகப் பிறந்தவன்,
மதிமுகப் பெண்களால், 'அழகில் முருகனுக்கு ஒப்பாகக் கருதப்பட்டு', அவர்களின் காதற் கண்களால் போற்றத்தக்க பெருமையுடைய கோவலன்; வயது பதினாறாம்!

புகாரையும், இணையவிருக்கும் கோவலன் கண்ணகியையும் அவர்களின் பெற்றோர்களையும் அறிமுகஞ்
செய்கிறார் சிலம்பாசிரியர்.

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் *ஈராறுஆண்டு* அகவையாள்
அவளுந்தான்
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ;
ஆங்கு
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்;
அவனுந்தான்
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.

இரண்டு குடும்பங்களுமே பெரும் செல்வக் குடும்பங்கள். ஏழைக்காதலும், ஏழைக்கற்பும் அல்ல; இது பண
க்காரக் காதல் மற்றும் கற்பு.

ஒரு வேளை பணக்காரராக இல்லாதிருந்து, பெருங்குடி பிறந்து தாழாமல் இருந்திருந்தால் இவர்களின் கதை காப்பியமாகியிருக்குமா ?

ஏழைக்காதலுக்கும் ஏழைக்கற்பிற்கும் எத்தனை புலவர்கள் பாட்டெழுத வருவார்கள்?

மாநாய்கனையும், மாசாத்துவானையும் முறையே "வான்மழைபோன்ற வள்ளல்தன்மை கொண்டவன்",
"ஈட்டும் செல்வத்தை ஈந்து வாழ்பவன்" என்று சொல்கிறார் இளங்கோவடிகள்.

மேலும் வாணிகர் என்று சொல்கிறார் மற்றும் சுட்டுகிறார்;

இக்காலத்தில் ஈட்டிய செல்வத்தை ஈந்து வாழும் வாணிக குலத்தினர் எத்தனைபேர் ?

கோவலனுக்கு பதினாறே வயது; கண்ணகிக்கோ பனிரெண்டுதான் வயது; அக்காலத்தில் இந்த வயதுடையார் உடலால் முதிர்ச்சியடைந்து வலுவாக இருந்திருக்கக் கூடும்! ஆனால் அறிவால் 12 வயதுடைய கண்ணகிக்கும், 16 வயதுடைய கோவலனுக்கும் போதிய மனமுதிர்ச்சி இருந்திருக்குமா ?

அல்லது நடைமுறை வாழ்விலே, 20க்கும் மேற்பட்ட அனைவரும் குடும்பவாழ்விலே, சமூக சிந்தனைகளி
லும், வீரத்திலும் மனமுதிர்ந்துதான் இருக்கிறார்களா ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
18-சனவரி-1999