Pages

Friday, December 15, 2000

சிலம்பு மடல் 33

சிலம்பு மடல் - 33
கண்ணகியின் வரமும்! இளங்கோவடிகளின் அறிவுரையும்!

வஞ்சி: வரம்தருகாதை:

வாழ்த்திய கடவுளின் கோயிலை மும்முறை வலம்வந்து முன் நின்றான் சேரன்! அச்சமயம் கோயில்விழாவில் கலந்து கொண்ட, சிறையில் இஆருந்த விடுவிக்கப்பட்ட ஆரியர்களும், அதன் முன்னரே சிறையிருந்து விழாமுன்னிட்டு விடுவிக்கப்பட்ட பிற அரசரும், குடகுநாட்டுக் கொங்கரும், மாளவ நாட்டு மன்னரும், கடல் சூழ்ந்த ஆஇலங்கை அரசனான கயவாகு மன்னனும், 'ஒவ்வொரு வருடமும் சேரன் செய்யும் இந்த அரிய விழாவின் போது எம் நாட்டிலும் யாம் செய்வோம்; எமக்கும் வந்து அருள் செய்வாய்!' என்று வேண்ட, கண்ணகியும் 'அங்கனமே வரம் தந்தேன்' என்று கூற அனைவரும் வீட்டின்பம் பெற்றோர் போலானாராம்! ஈழ நாட்டிலே கண்ணகிக்கு கோயில் எடுத்தான் கயவாகு. இன்றும் இஆருக்கிறது.

"வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் நின்றோன் முன்னர்,
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் ஆலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட்டு ஆங்கண் ஆஇமைய வரம்பனின்
நல்நாள் செய்த நாள்அணி வேள்வியில்
வந்துஈக என்றே வணங்கினர் வேண்ட,
'தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒருகுரல்...."

சேரமன்னனுக்குக் காட்சி, சேரமகளிருக்கு அன்பழைப்பு, ஏனைய பல மன்னர்களுக்கு வரம் அளித்துப் பூரித்துப் போன கண்ணகியார், அவ்வேளை அங்கிருந்த நூலாசிரியர் இளங்கோவடிகளிடமும் பேசினாராம் தேவந்தி என்ற பெண்மணி மேல் தெய்வமாய் ஏறி நின்று! அதை அடிகளார் கூறுகிறார்,

'யானும் (ஆஇளங்கோவடிகளாகிய நானும்) கண்ணகி கோயிலுள் சென்றேன்; என் எதிரே பத்தினித் தெய்வம் தேவந்தி மேல் விளங்கித் தோன்றி, "வஞ்சியிலே, அரண்மனை அத்தாணி மண்டபத்திலே, உன் தந்தையின் அருகிலே அமர்ந்திருந்த உன்னை ஒரு நிமித்திகன் பார்த்து, அரசனாக வீற்றிருக்கும் அழகிய இலக்கணம் உனக்கு உண்டு என்று கூற, உன் அண்ணனான குட்டுவன் மனம் வருத்தமடைய, அம்மனவருத்தம் அவனுக்கு ஒழிய துறவியாய் ஆனாய்; துறவியாய் ஆகி, வீட்டுலக அரசினை ஆளும் மன்னவன் ஆனாய்" என்று என் வரலாற்றினை உரைத்தாள்' என்று.

"யானும் சென்றேன் என்எதிர் எழுந்து
தேவந்தி கைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக்
கொங்குஅவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன்செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்ஆஇடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தம்ஆஇல் ஆஇன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என்திறம் உரைத்த ஆஇமையோர் இளங்கொடி...."

கண்ணகியம்மை இஆளங்கோவடிகளாருக்கு தேவந்தி வாயிலாக உரைக்க, நமக்கும் நம்முன்னோருக்கும் பின்னோருக்கும் அழியாச் செல்வத்தை விட்டுப் போன சிலம்பரசர் இளங்கோவடிகளார், நமக்கும் சில அறிவுரைகளையும் விட்டுப் போகிறார்! ஒப்பற்ற அவை நம் பழம் பண்பாடு கூறுகிறது!

'கண்ணகித் தெய்வத்தின் சிறப்பினை விளக்கிய நல்லுரையைத் தெளிவுறக் கேட்ட மேன்மை மிக்க நல்லவர்களே! வளங் கொழிக்கும் ஆபெரிய உலகில் வாழும் மக்களே!'

"தன்திறம் உரைத்த தகைசால் நல்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!"

பிறர்க்குக் கவலையும் துன்பமும் செய்யாது நீங்குங்கள்;
தெய்வம் உண்டென உணருங்கள்;
பொய்பேசாதீர்கள்! புறங்கூறாதீர்கள்!
ஊன் உண்ணாதீர்கள்; கொலைசெய்யாதீர்கள்;
தானமிடுங்கள் தவம் செய்யுங்கள்;
செய்நன்றி என்றும் மறவாதீர்கள்;
தீயோர் நட்பை விலக்குங்கள்;
பொய்ச்சாட்சி சொல்லாதீர்கள்!
நல்லோர் அவை நாடுங்கள்;
தீயோர் அவை தப்பிப் பிழையுங்கள்!
பிறர் மனை விரும்பாதீர்கள்.
துன்பப்படும் உயிர்களுக்கு உதவி செய்யுங்கள்!
இல்லறம் விரும்புங்கள்; பாவம் புரியாதீர்!
கள், களவு, காமம், பொய், பயனில சொல்தல் ஒழியுங்கள்.

இளமையும், செல்வமும், உடலும் நிலையற்றவை! உள்ளநாள் குறையாது; உங்களை வந்து சேரக்கடவன சேராது நீங்கா! அறம் செய்யுங்கள்!!

"பரிவும் ஆடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன்ஊண் துறமின்; உயிர்க் கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு ஆகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழைஉயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
ஆளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேயத்து உறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்."

திருத்தகு நல்லீர் என்று நம்மை விளித்து நமக்கு நல்லுரைகள் கூறி, காப்பியத்தை நிறைவு செய்கிறார் இளங்கோவடிகள். என்னே ஒரு கடமை யுணர்வு!!

புறத்துறை வழி நின்று போர்த்துறைகளை செய்து முடித்து கங்கை கடந்து சென்று வென்று வந்த வேந்தன் செங்குட்டுவன் சிறப்பு கூறும் வஞ்சிக்காண்டம் நிறைவுற்றது.

"புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்குஆரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டிக்
கங்கை பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனொடு ஒருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம்முற் றிற்று."

வஞ்சிக் காண்டம் மட்டும் நிறைவுறவில்லை! நம் நெஞ்சில் என்றும் நீங்காது வாழும் கண்ணகி, கோவலன், மாதவி, பாண்டியன், பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன், புகார், மதுரை, வஞ்சி என்று பல சிறப்பினைப் படிக்கத் தந்த இந்த சிலம்புக் காப்பியமும் நிறைவு பெறுகிறது.

'தமிழ் மரபாலே கண்ணாடியில் உயர்ந்த பெரிய மலையைக் காட்டுவார் போலக் கருத்துகளைத் தோற்றுவித்து, மணிமேகலை என்னும் காப்பியத்தில் உரைக்கப்படும் பொருளுடன் தொடர்புடையதாகிய சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுப் பெற்றது'
என்று சிலம்பின் நூல் கட்டுரை உரைக்கும்போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது. நம் நெஞ்சை அள்ளிக் கொண்ட இந்த சிலப்பதிகாரம் நிறைவடைகிறது.

"......தெரிவுறு வகையால் செந்தமிழ் ஆயற்கையில்
ஆடிநல் நிழலின் நீடுஆருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்."

நிறைவு பெறும்போது இந்த காப்பியத்தை இன்னும் எத்தனை தடவை படித்தாலும் நான் அள்ளிக் கொள்ள ஆயிரமாயிரம் கருத்துக்கள் புதையலாய் கொட்டிக் கிடக்கின்றன! எத்தனை முறை படித்தாலும் என்னை அள்ளிச் செல்லும் இந்த காப்பிய மடல்களை நிறைவு செய்யும்போது என் உணர்வுகள் சற்றே அசைகின்றன.

சிலம்பு மடல்கள் முற்றும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-2000

சிலம்பு மடல் 32

சிலம்பு மடல் - 32 கண்ணகி கோயில்!

வஞ்சி:
நடுகல் காதை, வாழ்த்துக் காதை;

முப்பத்திரண்டு திங்கள்கள் வீட்டையும் நாட்டையும் பிரிந்து பெரும்போர் செய்து வெற்றியோடும், சிலை வடிக்க கல்லொடும் வந்த சேரப்படையினரில், போர்க்களத்திலிருந்து வாராதவர் எத்தனை பேரோ ?

மீண்டு வந்தவர் வீட்டில் எல்லாம் மகிழ்ச்சி!

மாண்டு போனவர் வீட்டில் எல்லாம் துயரம்தான் ஆஇருந்திருக்கும்; இதோ வந்துவிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலேயே பலருக்கு சில நாட்கள் கழிந்திருக்கக் கூடும்! பின்னர் புரிந்திருக்கக் கூடும்.

மீண்டு வந்த ஆடவனை அணைத்துக் கொண்ட அவன் காதலியின் கொங்கைகள், அவன் விழுப்புண்களுக்கு ஒத்தடம் கொடுக்க அவ்வாடவனுக்கு அதை விட வேறு மருந்து என்ன வேண்டும்? இணைந்த காதலர்கள் இஆன்பத்தைக் கொண்டனர்! கொடுத்தனர்!

"வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர்
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டுஎழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பகமும்
மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுஉறீஆ...."

வஞ்சி திரும்பும் வழியில், தான் அடக்கிப் பிடித்து வந்த கனகனையும் விசயனையும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொண்டு காட்டச் சொல்லியிருந்தான் நீலன் என்பானிடம் சேரன்!

அரண்மனையும், நாடும் மகிழ்ச்சியில் களித்திருக்க, அரசவையிலே மன்னன் சேரன் செங்குட்டுவன்! அவன் முன் நீலன் என்பான்! அவனுடன் வந்தவன் மறையோன் மாடலன்.

சேரனின் வெற்றியை, கனக விசயர்களை இழுத்துக் கொண்டு சோழனிடமும் பாண்டியனிடமும், நீலன் சென்று கூற, அப்போது 'எதிர்த்து நின்று போராட வலுவில்லாமல், வாளையும் வெண்கொற்றக் குடையையும் போட்டுவிட்டு சாதலுக்கு அஞ்சி தவக்கோலம் கொண்டு உயிர்தப்பி ஓடிய இஆந்த ஆரியர்களைச் சிறைபிடித்து வந்தது சேரனின் பெரிய வீரமா?' இஆல்லை என்றான் சோழன்! நான் கேட்டது இல்லை; புதிது எனக்கு என்றான் பாண்டியன்! எள்ளி நகையாடினர் இருவரும்!

சேரனுக்கு சினம் ஏற்பட்டிருக்கலாம்! ஆனால் தமிழர்கள் என்று பார்க்கும்போது, சேரனுக்கும், சோழனுக்கும், பாண்டியனுக்கும், வடநாடும் அதன் ஆரிய அரசர்களும் ஒரு துரும்பாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்ற சேதியைத்தான் தமிழர்க்கு சிலம்பு சொல்கிறது.

தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்கு ஏற்பட்டபோது சேர சோழ பாண்டியர்கள் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை! இந்நாளில் தமிழர் என்று சொல்லிக்கொள்ளவே அய்யம் கொண்ட தமிழர் போல் அந்நாள் தமிழர் இஆல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

"அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க,
நீள்அமர் அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக்
கொல்லாக் கோலத்து உயிர்உய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றுஎனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்....

அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோ ர் தம்மேல்
கொதிஅழல் சீற்றம் கொண்டோ ட் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேல் செழியன்;என்று
ஏனை மன்னர் ஆருவரும் கூறிய..."

இதை நீலன் சேரனிடம் சொல்ல, சேரன் சினம் கொண்டான்! சோழ பாண்டியர்கள்பால் வெறுப்புற்றான்! வெறுப்பு போராக ஆகிடுமோ என்று அய்யுற்று, சினம் கொண்ட சேரன் சினம் தவிர்க்க, ஆட்சிக்கு வந்து அய்ம்பது ஆண்டுகள் ஆன சேரனே, மறக்கள வேள்வியிலேயே ஆண்டுகளைக் கழித்த சேரனே, அறக்களவேள்வியினைச் செய்வாயாக! சோழ பாண்டியர்கள் மேல் சினங்கொள்ளாதே! சினந்து மீண்டும் படையெடுக்காதே! வேண்டாம் விட்டுவிடு, என்று பலவாறு எடுத்துரைத்தான் மாடலன்.

"வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந்து ஆரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை!..."

அறிவுரைகள் பல கேட்ட மன்னன் சினம் தவிர்த்து அறவேள்விகள் செய்தான்! சிறையில் இருந்த ஆரிய அரசர்களை விடுவித்தான்! அவர்களுக்குப் பரிவுடன் ஆவன செய்தான் வில்லவன் கோதை கொண்டு! சிறையில் இருந்த வேறுபல கைதிகளையும் விடுவித்தான், கண்ணகிக்கு கோயில் கண்ட விழாவினிலே!

இந்நாளிலும், சில முக்கிய விழாக்களின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப் படுவதைப்போலே!

சிற்றரசர்கள் கப்பம் கட்ட வேண்டாம் என்று அறிவித்தான், அமைச்சர் அழும்பில் வேள் கொண்டு!

இக்காப்பியத்தில் சோழநாட்டில் இந்திரவிழா வின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், சேரநாட்டில் கண்ணகி கோயில் மங்கலம் செய்தபோது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், தமிழர்களின் மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ண ஓட்டத்தை அறியத்தருகிறது.

புறம்போகும் ஆடவரை முறை செய்யாவிடின் நாட்டில் கற்பு சிறவாது என்று சோழனுக்கும், செங்கோல் தவறின் உயிர் வாழாமை நன்று என்று பாண்டியன் மூலம் உலகிற்கும், தமிழர் பால் பழிகூறின் வஞ்சினம் தீர்க்காமல், குடிகாக்கும் மன்னவன் சினம் தீராது என்பதை குட்டுவன் மூலம் வடவருக்கும் உரைக்கக் கண்ணகி காரணமானதால் தெய்வமாகிறாள்!

அத்தெய்வத்திற்குப் பத்தினிக் கோட்டம் செய்தான் சேரன்! இமமலைக் கல் கொண்டு சிலை செய்து, கோயிலெடுத்து மங்கல விழாச் செய்தான், குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக வைத்து ஆண்ட இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் பட்டத்தரசி சோழமகள் நற்சோனைக்கும் மைந்தனாகப் பிறந்த செங்குட்டுவன்.

"வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறுஎன்...."

"குமரியொடு வடஆமயத்து ஒருமொழி வைத்து உலகுஆண்ட
சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன்மகள் ஈன்ற
மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்
பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்......."

கண்ணகிக்கு கோயில் கட்டி விழாச் செய்த மறுநாள், கோயில் விழாவுக்கு வந்திருந்த மன்னர்கள் செலுத்திய காணிக்கைகளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த குட்டுவனை, தேவந்தி சிலரொடு வந்து வணங்கி, கண்ணகியின் சிறப்பு பற்றி கூறி புலம்புகிறாள்!

அப்போது சேரன் செங்குட்டுவன் வியப்புற்று, உணர்ச்சி வயமாகிறான்!

பொன்னால் சிலம்புகட்டி, கொடியாய் மேகலை புனைந்து, வளைபூட்டி, வயிரத் தோடு அணிந்து, பொன்னாலும் பிறவாலும் அணிமணி கூட்டி, மின்னெலெனக் கண்ணகியார் வானில் உயர்ந்து, சேரனுக்குத் தெரிந்தாராம்!

சிரித்த முகத்தோடு சொன்னார் சேரனிடம், 'பாண்டியன் குற்றமற்றவன்! எனக்குப் புகழ் சேர்த்ததனால் நான் அவனுக்கு மகளானேன்!' என்று.

காலகாலத்துக்கும் புகழ்சேர்த்துவிட்ட பூரிப்பு அம்மைக்கு!; சேரப் பெண்களை,'திருமுருகன் குன்றினிலே, எப்போதும் விளையாட நான் வருவேன் தோழியரே! என்னோடு வந்தாடுக' என்று அழைத்தபோது!

"என்னேஆஇகது என்னேஆஇகது என்னேஆஇகது என்னேகொல்
பொன்னஞ் சிலம்பின் புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொந்தோட்டு நாவல்அம் பொன்ஆழைசேர்
மின்னுக் கொடிஒன்று மீவிசும்பில் தோன்றுமால்....."
(வானில் கண்ணகி கண்ட சேரனின் வியப்பு)

"தென்னவன் தீதுஆலன்; தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான்; நான் அவன் தன்மகள்;
வென்வேலான் குன்றில் விளையாட்டு யான்அகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்."
(கண்ணகியம்மன் கடவுளாய் சேரனுக்கும்
பெண்களுக்கும் கூறியது)

சேரனுக்குக் காட்சிதந்து சேரமகளிரை விளையாட அழைத்தும் விட்டு, சேரன் செங்குட்டுவனை நீடுழி வாழ வாழ்த்துரைக்கிறார் கண்ணகியார்!

"ஆங்கி, நீள்நிலமன்னர் நெடுவில் பொறையன்நல்
தாள்தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ்ஒளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள், நீடூழி
செங்குட் டுவன்வாழ்க என்று."

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-2000

Saturday, December 02, 2000

சிலம்பு மடல் 31

சிலம்பு மடல் - 31 கோவல கண்ணகி சுற்றங்களின் துயர்!

வஞ்சி:
நீர்ப்படைக்காதை:

பெரும் போரிலே எதிர்த்தவர்களை அழித்து, வெற்றிக்கு உடன் நின்ற தன் படைகளுக்கு சிறப்பு செய்து, செம்மாந்த சிங்கமாய் வீற்றிருந்தான் சேரன்!

கோவலனை மதுரைப் புறஞ்சேரியில் பார்த்து உரையாடி, பின்னர் புகார் சென்று கோவல கண்ணகியர் பற்றி அவர் உற்றார் உறவினரிடம் கூறிவிட்டு, கங்கை சென்று நீராடி வரச் சென்ற மாடலன் என்ற மறையோன், கங்கைக் கரையினில் சேரனை அவன் பாசறையிலே பார்த்து வணங்கினான்; வணங்கிய தலையை நிமிர்த்திக் கொண்டே, 'மாதவியின் கானல் வரிப்பாட்டு' வடமன்னர்களின் முடியையும் வென்றது' என மாடலன் சொல்ல, மன்னன் வியந்து நகைக்க, மாடலன் தான் மதுரையிலும் புகாரிலும் கண்டன கேட்டவற்றையெல்லாம் சேரனிடம் எடுத்துச் சொன்னான்.

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!..."

(கானல் வரி)

கோவலன் காவிரியைப் போற்றிப் பாடியதில் அய்யம் கொண்ட மாதவி, சினமுற்றுக் கோவலனை அய்யம் கொள்ளச் செய்யப் பாடிய அந்த கானல்வரிப் பாட்டு, அவர்கள் உறவை முறித்து, கண்ணகியை மீண்டும் கூட வைத்து, பின்னர் கோவலனைக் கள்வனாக பழியேற்றி, அவனையே பலி கொண்டு, மதுரை அரசனைப் பலி கொண்டு, அவன் மாதரசியைப் பலி கொண்டு, அந்நாட்டையே பலி கொண்டு, நாடுகள் தாண்டி சேரத்தில் கண்ணகியையும் காவு கொண்டு, சேர அரசனைக் கொண்டு வடவாரியரையும் அழித்து, அவர்களை கூனிக் குறுகிப் போகச் செய்த வரலாற்றை நினைவூட்டுமாறு சேரனிடம் மாடலன் கூறினான்;

"வாழ்க எங்கோ! மாதவி மடந்தை
கானல் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது;......"

மேலும், கண்ணகி கோவலர் துயரம் கேட்டு அவர்களின் உற்றார் உறவினரின் நிலை கூறினான்!

நெஞ்சம் பதை பதைக்கிறது!

காவுந்தி அடிகள் அடைக்கலமாய்த் தந்த கண்ணகி கோவலரைக் காக்கத் தவறினேனே!, என்று கடமை தவறியதாய் வெறுப்புற்று இடைச்சி மாதரி நடு யாமத்தில் தீக்குளித்து உயிர் நீத்தாள்!

பாண்டியன் தவறை அறிந்து சினமுற்ற காவுந்தி அய்யை அவன் உயிர் நீத்ததால் சினம் தணிந்தாலும், கோவல கண்ணகியரை என்னோடு தருவித்து தீப்பயன் விளைத்ததுவோ? என்று எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்!

"அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்,
குடையும் கோலும் பிழைத்த வோஎன
இடை இருள் யாமத்து எரிஅகம் புக்கதும்...."

"தவம்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
....
என்னோடு இவர்வினை உருத்த தோஎன
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்த்ததும்...."

கோவலன் மாய்ந்ததை சோழநாடு சென்று மாடலன் உரைக்க, அவன் தந்தை பெருஞ்செல்வச் சீமான் மாசாத்துவான் தன் செல்வத்தையெல்லாம் தானமாக அளித்துவிட்டு துறவறம் பூண்டான்!

கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி, மைந்தன் மருமகள் துயர் அறிந்து, பிரிவால் ஏங்கி ஏங்கி இன்னுயிரை விட்டார்!

மகள் கண்ணகி மருமான் கோவலன் மரணம் கண்ணகியின் தந்தை மாநாய்கனையும் முனியாய் ஆக்கியது! கோவலன் தாயார் ஏங்கி ஏங்கிச் சாக, கண்ணகியின் தாயார் சேதிகேட்ட மாத்திரம் மாண்டு போனார்!

"கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந் தானமா வான்பொருள் ஈத்துஆங்கு
.....
துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்,
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்துயிர் எய்தி இரங்கிமெய் விடவும்..."

"கண்ணகி தாதை கடவுளர் கோலத்து,
அண்ணல்அம் பெருந்தவத்து ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்துஅறம் கொள்ளவும்
தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி
நாள்விடூஉம் நல்உயிர் நீத்துமெய் விடவும்."

மாதவிக்கு சேதி கிடைத்ததும், தன் அன்னையிடம் தனக்கும் கோவலனுக்கும் பிறந்த குலக்கொழுந்து மணிமேகலையை குலத்தொழில் புரி கணிகையாய் ஆக்காதே என்று கூறிவிட்டு, தான் தன் கூந்தலைக் களைந்துவிட்டு புத்த முனிமுன் துறவறம் பூண்டாள்!

"மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நல்திறம் படர்கேன்;
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர்க் கோலம் காணாது ஒழிகஎன
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறம் கொள்ளவும்..."

அதோடு அச்சேதி கேட்டு வேறு பலரும் புகாரில் துன்புற்றச் சேதியினையும் சொன்ன மாடலனை, சேரன் பாண்டியநாட்டின் நிலை பற்றி கேட்க, பாண்டியநாட்டின் நிலையுரைத்தான் மாடலன்! சோழ நாட்டையும் பற்றியும் அறிந்து கொள்கிறான் சேரன்!

மதுரை மூதூர் தீயினால் வெந்து வீண்போன நிலையில், கொற்கையை ஆண்ட வெற்றிவேற்செழியன் என்ற அரசன், தெய்வமாய்ப் போன திருமாபத்தினியின் சீற்றம் குறைப்பதாய்க் கருதி, பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட பெருந்துயர் என்பதால், ஒரு பகற்பொழுதிலேயே ஓராயிரம் பொற்கொல்லரை உயிர்ப் பலி கொடுத்திருக்கிறான்! ஓராயிரவரைப் பலிகொடுத்த அவன், மதுரையை, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் ஆட்சி செய்திருக்கிறான்!

"கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி,
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்,...."

எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் காட்டுமிராண்டிச் செயலை வெற்றிவேல் செழியன் செய்திருக்கிறான்! கொல்லக் கயவன் கோவலனை 'மாயக்கள்ளன்', 'மந்திரக்கள்ளன்' என்று பொய் கூற, மந்திரம் மயங்கிய காவலரில் கல்லாக் களிமகன் ஒருவன் கொடுவாள் வீசிக் கோவலனைக் கொன்றதே, மடமை பூத்துக் குலுங்கிய மதுரையின் மூடநம்பிக்கையின் மொத்த விளக்கம்!

அதனால் ஏற்பட்ட தீங்கு மறைய இன்னும் ஒரு மூடச் செயலை செய்தான் வெற்றிவேல் செழியன் ஆயிரவரைக் கொன்று!

இது ஏதோ 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் பழமையில் நிகழ்ந்த பண்பாடற்ற செயல் மட்டுமல்ல!

மூடநம்பிக்கை மற்றும் முட்டாள் தொல்லைகள்!

சாதி, சமயம், கடவுள் என்ற பெயரால் இந்நாட்டை ஆட்சி செய்யும் அயோக்கிய செல்வங்கள்!

ஆண்டுகள் ஓடினாலும் அறிவேறாத, ஆத்திரமும் அகங்காரமும் நிறைந்த ஆணவ மலங்களின் அழிவுக் கொள்கைகளால் நிகழும் தீவினைகள்!

இந்த நாட்டில் அறிவு ஆட்சி செய்கிறது அல்லது செய்யும் என்று நம்பும் நன்மானிடர், '1800 ஆண்டுகட்கு முன்னாள்' பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட தீங்கொழிய 1000 பொற் கொல்லரைக் கொன்று போட்ட வெற்றிவேல் செழியனுக்கும், கி.பி 1984ல் இந்திரா காந்தி அம்மையார் சீக்கியன் ஒருவனால் கொல்லப் பட்டதற்குப் பழிதீர்க்க 3000 சீக்கியர்களைக் கொன்று போட்ட, இந்நாள் அரசியல் மற்றும் சமய வாதிகளுக்கும் என்ன வேறுபாடு கூறமுடியும் ?

காலங்களே ஓடி யிருக்கின்றன! காட்சிகள் மாறவில்லை!
படிப்பு வந்திருக்கிறது! பண்பாடு மட்டும் இல்லை!

ஆண்டுக்கேற்ற அறிவு வளர்ச்சி இன்றி, அழிவுக்குகந்த அறிவொடு வாழ நினைக்கும் அடிமாட்டுக் கூட்டமாய் இந்த மண்ணின் மாந்தர் பலர்!

பன்னூறாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாத முடச் சமூகமாய்க் கண்ணுக்குத் தெரிகிறது!

வஞ்சியை விட்டு நீங்கி முப்பத்திரண்டு திங்களில் வடநாட்டுப் படையெடுப்பை வெற்றியாய் ஆக்கிவிட்டு வஞ்சி திரும்பப் புறப்பட்ட சேரன், தனக்கு எல்லா சேதிகளையும் கூறிய மாடலன் என்ற மறையோனுக்கு தனது நிறையான அய்ம்பது துலாம் பொன் தானமாக வழங்கினான்!

மறைசெய்வோருக்கு நிறை நிறையாய் பொருள் கிடைப்பதுவும் சமுதாயத்தில் நாம் காணும் நிகழ்வு. ஆயிரமாயிரமாய் செய்தாலும் அந்த மறையால் மண்ணுக்கு வளம் சேர்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதே நாம் கண்டுகொண்டிருக்கிற சமுதாய நிகழ்வுகள்.

தன் நாடு திரும்புகிறான் சேரன்! கணவனைப் பிரிந்து 32 மாதங்கள் துயரத்துடன் காத்திருந்த வேண்மாளையும், நாட்டுக் குடிகளையும் சேர!

அன்புடன்
நாக.இளங்கோவன்
02-திசம்பர்-2000

Saturday, November 25, 2000

சிலம்பு மடல் 30

சிலம்பு மடல் - 30 சேரனின் சூளுரையும் போரும்!

வஞ்சி:
கால்கோள்காதை, நீர்ப்படுகாதை:

மலைவளம் கண்டு, மாபத்தினிக்குப் படிகம் பண்ண கல்லெடுக்க, கங்கைதாண்ட முடிவு செய்த மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மீண்டு அரசவையில் வீற்றிருக்க அமைச்சர்களும் படைத்தலைவர்களும் கூடியிருக்கின்றனர்!

வடக்காண்ட மன்னர்கள் 'தமிழரசர்கள், இமயத்தில் கொடிநாட்டியது, எம்போல் திறம் வாய்ந்த அரசர்கள் இல்லாத காலத்தில்' என்று நகையாடியதை, வடதிசையிலிருந்து வந்து அரசனைப் பார்த்துப் போன முனிவர்(தாபதர்) சேரனின் காதில் போட்டுவிட, கொதித்துப் போயிருந்தான் குட்டுவன்!

படிகத்துக்குக் கல் எடுக்கப் பயணம் போகும் எண்ணத்தோடு, பாடம் புகட்டும் எண்ணமும் சேர்ந்து கொள்ள, "நமக்குப் பொருந்தா வாழ்க்கை உடைய ஆரிய அரசர்களின் பழிச்சொற்கள் எம்மை மட்டுமல்ல, எம்போன்ற சோழ, பாண்டிய அரசர்களையும் பழிப்பதாகும்; ஆதலால், வட நாட்டு மன்னர்களை வென்று அவர்கள் (கனகன் விசயன்) தலையில் வைத்து கல் கொணர்வேன்; அப்படி இல்லையென்றால் நான் குடிகாக்கும் மன்னனல்லன்; என் குடிகளுக்குப் பழிச்சொல் வாங்கித்தந்த கொடுங்கோலன் ஆவேன்!" என்று சூளுரைத்தான்!"

"உயர்ந்துஓங்கு வெண்குடை உரவோன் கூறும்:
இமயத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅகது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்;

வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கல்கொண்டு அல்லது
வறிது மீளும்என் வாய்வாள் ஆகில்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயம்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆக!...."

சேரன் சினம் கண்ட ஆசான் எழுந்து "உன்னைப் பழித்திருக்க மாட்டார்கள், சோழனையும் பாண்டியனையும் பழித்திருப்பார்கள்;
நீ சினம் கொள்ளாதே" என்று சொல்லிப் பார்த்தான்;

இதற்கிடை, அரசவை நிமித்திகன் (சோதிடன்) எழுந்து "மன்னவா! இதுதான் உனக்கு மிகநல்ல நேரம், உடனே புறப்படு! வெற்றி உனக்கே!" என்று சாத்திரம் ஓத எழுந்த மன்னன் அமரவில்லை! ஆனையிட்டான் படைகளுக்கு!

கண்ணகியை உயர்த்திப்போற்ற, கங்கைதாண்டி இமமலைக் கல்லெடுக்கப் புறப்பட்ட மன்னனின் பயணத்தின் நோக்கம் படையெடுப்பாய் மாறிப்போனது!

"ஆறுஇரு மதியினும் காருக வடிப்பயின்று
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னர்எல் லாம்நின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்குஇது முன்னிய திசைமேல்
எழுச்சிப் பாலை ஆகஎன்று ஏத்த,....."

போருக்குப் புறப்படுமுன் படைத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு விருந்தளித்தான்! பனம்பூ மாலையை கழுத்தில் அணிந்து, பூவா வஞ்சியில் (அதாவது ,மலரல்ல ஊர்ஆதலால் பூவா வஞ்சி என்றார்) பூத்த வஞ்சியை (வஞ்சிமலர்) முடியில் சூடிக்கொண்டு நாட்டோ ர் வாழ்த்த இறையை வணங்கி யானைமேலமர்ந்தான்! புறப்பட்டான்!

புறப்பட்ட மன்னனுக்குத் திருவனந்தபுரத் திருமால் கோவில் சேடத்தைக் (பிரசாதம்) கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் குடிகள்!

படைகளோடு வஞ்சி நீங்கிய மன்னன் நீலகிரிமலை சேர்ந்தனன்.
படைகளுடன் பாடிவீட்டில் தங்கியிருந்தான்!

"பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து....

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்;
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கஎன
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின்று ஏத்தக்

(ஆடக மாடம் = திருவனந்தபுரம்)

"ஆலும் புரவி அணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத்து இறுத்துஆங்கு....."

நீலகிரியில் படைகளொடு இருந்த மன்னனைப் பலர் வாழ்த்த, வாழ்த்த வந்தவர்களில் சஞ்சயன் என்பான், அரசே, 'கங்கைக்கரையாளும் நமது நட்புக்குரிய நூற்றுவர் கன்னர், கடவுள் எழுதக் கல்லை அவர்களே கொண்டு தருவதாகக் கூறியனுப்பியுள்ளனர்' என்று கூற, குட்டுவனோ, 'சஞ்சயா, ஒரு விருந்திலே ஆரிய அரசர்கள் கனகனும் விசயனும், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல், தமிழரசர்களைப் பற்றி அறியாத புதிய அரசர்களுடன் அருந்தமிழரின் ஆற்றலைப் பழித்துப் பேசியிருக்கிறார்கள்!'. அவர்களுக்குப் பாடம் புகட்டவே இப்படை செல்கிறது'; இதை நூற்றுவர் கன்னரிடம் கூறி கங்கையைக் கடக்க படகுகளைத் தயார் செய்யச் சொல் என்று ஆனையிட்டான் குட்டுவன், தமிழரைப் பழித்தோரைப் பொறுக்காமல்!

"பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம்எனச்....."

நீலகிரியை விட்டு தன் படைகளொடு நீங்கிய சேரன் செங்குட்டுவன் எந்தவிதத் தடையும் இல்லாமல் கங்கையின் தென்கரைசேர்ந்து, அங்கு நூற்றுவர் கன்னர் அளித்த ஓடங்களில் கங்கையைக் கடந்து போர்க்களம் செல்கிறான்.

அருந்தமிழர் ஆற்றலைப் பார்த்துவிடுவோமே என்று உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்ற வடதிசை வேந்தர்கள் கனக விசயருக்குத் துணையாக சேரனை எதிர்த்தனர்.

"உத்தரன், விசித்திரன், உருத்திரன்,பைரவன்,
சித்திரன்,சிங்கன்,தனுத்திரன்,சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்எனக்
கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர...."

வேட்டைக்குப் போன சிங்கம் பெரும் யானைக் கூட்டத்தைக் கண்டு ஊக்கத்துடன் பாய்வதைப் போன்று போரிட்ட சேரன் வெட்டி சாய்த்த பகைவரின் உடல்கள் கொழுப்பு நிறைந்த இரத்த ஆற்றில் மிதந்தோட, எருமை ஏறி வரும் எமன் ஓர் பகலில் உயிர்க் கூட்டம் அனைத்தையும் உண்ணுவதைப் போலக் குட்டுவன் கொன்று சாய்ப்பதை ஆரிய அரசர்கள் நன்கு உணர்ந்தனர்!

யானைகளை எருதாகப் பூட்டி, வாளைத் தார்கோலாகக் கொண்டு நெற் போரில் கடா விட்டதைப் போன்று, பகை வீரர்களை உழவாடினான் சேரன்! வடவாரிய அரசர்கள் தோற்றனர்!

வாய்ப்பேச்சாலே வீரம் காட்டி வளமிகு தமிழரை இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் அய்ம்பத்திரு தேர் வீரர்களுடன் சிறைப்பட்டனர்!

"எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய...."

"கச்சையானை க் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி, வாள்கோல் ஆக
ஆள்அழி வாங்கி அதரி திரித்த
வாள்ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தித்........."

அமைச்சனும் படைத்தலைவனுமான வில்லவன் கோதையோடு, வெற்றிவாகை சூடிய சேரன், போர் முடித்த மறவர்கள் பலரை ஏவி இமயமலையிலே கண்ணகிக்கு சிலைவடிக்கக் கல்லைப் பெயர்த்து எடுத்துக் கொண்டான்.

"வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேல் தாளைப் படைபல ஏவிப்
பொன்கோட்டு இமயத்துப் பொருஅறு பத்தினிக்
கல்கால் கொண்டனன் காவலன் ஆங்குஎன்."

உலகில் பெரும்போர்கள் 18 ஆண்டிலோ, 18 திங்களிலோ, 18 நாளிலோ முடிந்திருக்க, 18 நாழிகையிலேயே தென்தமிழ் ஆற்றல் அறியா கனகன் விசயன் என்ற இரு ஆரிய மன்னர்களுடன் நிகழ்ந்த போரை வென்றான் சேரன்! (18 ஆண்டுகள் தேவர்-அரசர் போர், 18 திங்கள் இராம-இராவணப் போர் 18 நாளில் பாண்டவ-துரியோதணர் போர் என்று விளக்கம் கிடக்கிறது)

வென்று முடித்ததும் கல் பெயர்த்து அக்கல்லை கனக விசயரின் தலைகள் சுமக்கும் படி செய்து, கங்கையிலே நீராட்டி, படைகளுடன் கங்கையின் தென்கரை சேர்கிறான் சேரன் நூற்றுவர் கன்னர் அமைத்துக் கொடுத்த பாடிவீட்டில்!

"வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்
சினவேல் முன்பின் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தம் கதிர்முடி ஏற்றிச்

செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள,

வருபெறந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரைஅகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து......."

ஆங்கு தமிழரின் வெற்றிக்குப் போரிட்டு மாண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செய்தான்; காயம்பட்டோ ருக்கும் மற்றும் அனைவருக்கும் சிறப்பு செய்தான் சேரன்!

மாவீரர்களை வணங்குதல் தமிழர் மாண்பு! தமிழர் நிலத்திலும் மனத்திலும் மாவீரர்கள் என்றும் வாழ்வர்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
25-நவம்பர்-2000

Monday, November 20, 2000

சிலம்பு மடல் 29

சிலம்பு மடல் - 29 குட்டுவனும் சாத்தனும்!
வஞ்சி:
காட்சிக்காதை:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன், வஞ்சியைத் தலைநகராய்க் கொண்ட சேரநாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன்!

அரசமாளிகையில் அரசி வேண்மாளுடனும் தம்பி இளங்கோ வுடனும் அமர்ந்திருக்கையிலே மலைவளம் காண ஆவல் கொள்கிறான் குட்டுவன்.

"...விளங்குஇல வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாள் உடன்இருந்து அருளித்
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்எனப்...."

நீலநிறப் பெருமலையின் குறுக்கிட்டோ டிய பேரியாறு திருமாலின்(நெடியோன்) கழுத்தின் ஆரமாய்க் கிடக்க, மலையிலே குரவையாடுவோர் கூட்டிய ஒலி ஒரு புறம், கொடிச்சியர் பாடிய பாடல் ஒலி ஒரு புறம்,
வேலன் ஆடிய வெறியாட்டத்தின் ஒலி ஒரு புறம்,
கூலம் உண்ண வந்த பறவைகளை மகளிர் ஓட்டும் ஒலி ஒரு புறம், தேன் கூட்டைப் பிரித்துத் தேனெடுத்த குறவர் ஒலி ஒரு புறம், அருவியில் இருந்து கொட்டும் தண் நீரின் பறையொலி ஒரு புறம், புலியுடன் யானைப் பொருதிப் பிளிரும் ஒலி ஒரு புறம்;

மேலும் இது போன்ற பல்வேறு ஒலிகளால் மலைப்புறம் மனத்தை ஆட்கொள்ள பேரிஆறு ஒதுக்கிக் குவித்த நுண்மணல் பரப்பிலே தன் துணைகளோடு குட்டுவன் ஒருங்கிருக்கிறான்.

"நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை
இடுமணல் எக்கர் இயைந்துஒருங்கு இருப்பக்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக்குறு வள்ளையும், புனத்துஎழு விளியும்
நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்
பறைஇசை அருவிப் பயம்கெழும் ஓதையும்
...............
இயங்குபடை அரவமோடு யாங்கணும் ஒலிக்க......"

மலைக்கு வந்த மன்னனைக் கண்டு போற்ற மலைக்குறவர்கள் மலைவளம் யாவையும் கொண்டுவந்தனரோ என்று எண்ணும்படியாக, யானையின் தந்தம், மான்மயிர்ச் சாமரம், தேன், சந்தனக்கட்டை, சிந்துரக்கட்டை, நீலக்கற்கள், கத்தூரி, மா, பலா, வாழை, கரும்பு, பூங்கொடிகள் செடிகள், பாக்கு, சிங்க புலி கரடி குரங்கு மான் பூனை ஆட்டுக் குட்டிகள், மாடு யானைக் கன்றுகள் கீரிப்பிள்ளை, கிளி மற்றும் இன்ன பிறவற்றை சுமந்து வந்து காணிக்கையாக குட்டுவன் முன் இட்டு வணங்கினர்!

வளமுடன் வாழ்கிறோம் நாங்கள், உன் அரச நீதி வாழ, வாழ்க நீ பன்னூறாயிரம் ஆண்டுகள் என்று போற்றி உரைத்தனர் அவனிடம் வியப்புடன்,
"வண்ணம் குழைந்து
வாடி வதங்கி
இடமுலை இழந்தவளாய்
ஆறாத்துயருடன்
அழுகை வற்றிப்போய்
வந்தபெண்ணொருத்தி
வேங்கை மர நிழலில் நின்றாள்!
நீத்தனள் தம்முயிரை!
எந்நாட்டினளோ யார்மகளோஅறியோம்!
நிந்நாட்டில் யாம் கண்டதில்லை; வியப்பு! என்று.."

"கான வேங்கைக் கீழ்ஓர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்.
எந்நாட் டாள்கொல் ? யார்மகள் கொல்லோ ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;..."

தண்டமிழ் ஆசான் சாத்தனார் சேரன் அருகிருந்தார்; அவர் நோக்கினார் மன்னன்பால்!

'தன் காற்சிலம்பை விற்க வந்த கணவனைப் பாண்டியன் தீர ஆராயத்தவறினன்; கள்வனென்று காவலர் தலைகொய்தனர்!

கோவலன் மனைவி கண்ணகி தன் காதலும் வாழ்வும் தீய்ந்து போக, கோவலன் கள்வனல்ல என்ற நீதியை சிலம்புடைத்து நிறுவினாள் பாண்டியன் முன்.

மானம்காக்க மன்னன் நெடுஞ்செழியன் மாண்டான்; மாண்ட மன்னனின் உயிரைத் தேடிக் கொண்டு சென்றது போல் கோப்பெருந்தேவியின் உயிரும் சென்றது!

கண்ணகி சூளுரைத்தாள் மதுரையை எரிப்பேன் என்றும்! மதுரையையும் எரித்தெறிந்தாள் மங்காச் சினத்துடன்.

பாண்டிய நாட்டின் கொடுங்கோலை எடுத்துரைக்க தன் சோழ நாடு திரும்பாமல், உன் சேரநாட்டுச் செங்கோலிடம் முறையிட வந்தாள் போல வந்து, வானகம் சென்று விட்டாள் மாதரசி!' என்று
சாத்தனார் சேரனிடம் கண்ணகி பற்றிக் கூற,

"மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண்தமிழ் ஆசான் சாத்தன்இகது உரைக்கும்...

கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி இறைக்குஉரைப் பனள்போல்
தன்நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள்
நின்நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று....."

சேரன் வியப்புற்றான்! வருந்தினான் பாண்டியன் மறைவு கேட்டு!

செங்கோல் தவறிய சேதி எம்போல் அரசர்க்கு எட்டும் முன் தம்முயிர்ப்பிரிந்த சேதியை சென்றடையச் செய்து உயர்ந்து விட்டான் பாண்டியன்!

கோவலத்தீர்ப்பால் வளைந்த செங்கோலை தன்னுயிர் நீக்கி நிமிர்த்தி விட்டான் பாண்டியன்! என்று கூறி, சேரன் பாண்டியனைப் போற்றிய மனிதநேயம் (அரசநேயம்?) நெஞ்சில் குறிக்கத் தக்கதாகும்! மாற்றான் தோட்ட மல்லிகையாயினும், மணம் பெற்றதல்லவா?

நல்லவனை மதிப்பது நல்லோர் பண்பு! திறமையை மதிப்பது திறமையானோர் பண்பு.

"எம்மோர் அன்ன வேந்தர்க்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்குஎன
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது...."

மாற்றரசனைப் போற்றியது மட்டுமல்ல, நாட்டிலே மழை பொய்ப்பின் அரசனுக்கு அச்சம், ஏதாகின் ஒன்றினால் மக்கள் துயருறின் அரசனுக்கு அச்சம்! குடிகளைக் காக்கும் தொழில் ஆன அரச தொழில் துன்பத்தைத் தருவதேயல்லாமல் போற்றத்தக்கதன்று என்ற ஒரு தத்துவ உண்மையை உணர்த்துகிறான் சேரன்.

"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்என...."

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரிகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

இன்று சந்திரபாபு நாயுடு, "நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்" என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம்!

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே "நான் அரசன் என்ற தொழிலாளி" என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைம் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்!

பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற அய்யத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்!

சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற அய்யம் தோன்றாமலில்லை!

மதுரையம்பதியில் நடந்தவை கேட்டு வியப்புற்ற சேரனுக்கு சிறு குழப்பம்!;

பாண்டியன் உயிரை தேடத் தன்னுயிரை அனுப்பிய கோப்பெருந்தேவி சிறந்தவளா ?

காதலனின் மானம் காக்க கடமையேற்று, பிழையாய்ப்போன நீதியை மீட்டு, மடமையில் திளைத்த பாண்டிய நாட்டை தீய்த்து
பின்னர் மாய்ந்த கண்ணகி சிறந்தவளா ?

சேரன் தன் பட்டத்தரசி வேண்மாதேவியை நோக்கினன்! சேரமாதேவியிடம் தெளிவு பெறல் கருதி, இருவரில் வியக்கத்தக்க சிறப்புடையவர் யார் என்று வினவினன்!

பெண்ணரசிகளில் பேரரசி யாரென்று சேரப் பாரரசியிடம் கேட்டான்!

தன்கணவன் உயிர்துறந்ததும் பொறுக்க முடியாது செல் எனச் சொன்னதும் சென்ற கோப்பெருந்தேவியின் உயிர் உயர்ந்தது! அவள் உயர்ந்தவள்! பெருஞ்சிறப்பு பெறட்டும் பாண்டிமாதேவி!

ஆயினும், தன் கணவனின் மானத்தைக் காத்து, மன்னவனிடம் நியாயத்தைப் போராடிவென்று, நாட்டில் மடமை அழியப் போர்தொடுத்து, காதல், வீரம், மானம் போற்றி, நம் நாடு தேடிவந்து அழியாப் புகழ் கொண்ட அந்தப் பெண்ணரசி கண்ணகி வழிபடத்தக்கவளாவாள்; என்றனள் வேண்மாள்!

சேரப்பெண் சோழப்பெண்ணைப் பாண்டிப்பெண்ணினும் வழிபடத் தக்கவளாய்த் தன் கணவனுக்குத் தெளிவுபடுத்துகிறாள்!

"காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு உறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்என,..."

தன்னரசி சொன்ன கருத்தை விரும்பி ஏற்ற சேரன், அமைச்சர் பெருமக்களைப் பார்த்தனன். அவர்கள் கருத்தும் அதாகவிருக்க, கற்புக்கரசிக்குக் கற்சிலை வடிக்கவேணும்! பொதியைக்கல் அல்லது இமயக்கல் பொருத்தமாய் இருக்கும்! பொதியைக்கல்லாயின் பொன்னியிலும், இமயக்கல்லாயின் கங்கையிலும் நீராட்டிப் படிமம் (சிலை) செய்ய வேண்டும், என்று அமைச்சர்கள் அறிவுறுத்தினர்!

பக்கம் இருக்கும் பொதியை எடுத்தல் நீள்வாள் ஏந்திய மறக்குடிக்குப் பெருமை அன்று ஆதலின் இமயம் சென்று கல் கொணர்தலே கண்ணகிக்கும் சிறப்பு; எமக்கும் சிறப்பு! என்று முடிவெடுத்தனன் மன்னன்!

"மாலைவெண்குடை மன்னவன் விரும்பி
நூல்அறி புலவரை நோக்க ஆங்குஅவர்
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்துஎன,
பொதியில் குன்றத்துக் கல்லால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்துறைப் படுத்தல்
மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று:..."

மாபத்தினிக் கடவுள் கண்ணகிக்குப் படிமம் செய்ய யான் வேண்டுவதெல்லாம் இமமலைக்கல்லொன்று. அதைப் பெறுவேன்! எதிர்ப்பவர் மறுப்பவர் யாராயினும் வெல்வேன்! இமயக்கல்லைக் கொணர்வேன்! என்று உரைத்தான் வஞ்சிக்கோன்!

அமைச்சன் வில்லவன் கோதை எழுந்தான், 'வாழ்க நீ! வெல்க நீ!' என்றான்; போற்றினான்!.

மேலும், சோழனையும், பாண்டியனையும் முன்னாள் வென்றவன் நீ!
கொங்கனர், கங்கர், கலிங்கர், கொடிய கருநாடர், வங்காளர் மற்றும் பல்வேல் கட்டியர் ஆகியோர், வட ஆரிய மன்னர்களோடு கைகூடி வந்து உன்தமிழ்ப் படையோடு போரிற்றுத் தோற்றோடியது என் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை!

பன்னூறாயிரம் ஆண்டுக்கும் முன்னரே கருநாடர்களை "கொடுங்கருநாடர்" என்று இளங்கோவடிகள் குறிப்பது கவனிக்கத்தக்கது.

கங்கை ஆற்றங்கரையில் உன்னை எதிர்த்த ஆயிரம் ஆரிய மன்னர்களை நீ ஒருவனே கொன்று குவித்ததைப் பார்த்த கூற்றுவனும் வியப்புற்றான்!

கடவுள் எழுத கல் வேண்டுமெனில் அதை மறுப்பார் இல்லை! எதிர்ப்பார் இல்லை! முடங்கல் அனுப்பி, கொண்டு வரலாம் என்றான் வில்லவன் கோதை!

வில்லவன் கோதையை அடுத்து, அமைச்சன் அழும்பில் வேள் எழுந்து, வடதிசை மன்னர்களின் ஒற்றர்கள் எப்பொழுதும் நம்நாட்டைச் சுற்றிக் கொண்டே உள்ளனர். "கல் கொணர வடதிசைப் பயணம்" என்று பறையொலித்திடு அது போதும்; அவ்வொற்றர்களே சென்று சொல்லிவிடுவர்! என்றான்.

மன்னன் சேரனும் வடதிசைப் பயணம் சென்று கல் கொணர முடிவெடுத்து வஞ்சி மாநகரம் முழுதும் அது குறித்துப் பறையொலித்து அறிவித்தான்!; படைகளையும் திரட்டினான்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
20-நவம்பர்-2000

Wednesday, November 15, 2000

சிலம்பு மடல் 28

சிலம்பு மடல் - 28 கற்பின் தெய்வமும்! குறமகளிரும்!

வஞ்சிக்காண்டம்:
குன்றக்குரவை:

இன்பம் துன்பம் காதல் நோதல்
பிரிவு முறிவு பரிவு அறிவு
நேர்மை பொய்மை கல்லாமை கயமை
மென்மை வண்மை பாசம் நேசம்
பண்பு அன்பு நாடு வீடு
வளமை வாழ்க்கை பெண்மை ஆண்மை
கற்பு நட்பு கலைகள் பிழைகள்,
இவையாவையும் இன்ன பிறவற்றையும் நெஞ்சிற்கும் சிந்தைக்குமாய் அள்ளித் தந்த புகாரையும் மதுரையையும் தாண்டி, புகாரின் நாயக நாயகியையும், மதுரையின் அரசன் அரசியையும் இழந்து விட்டு மதுரையையும் தீய்த்துவிட்டு வஞ்சிக்குள் வந்த போதும் கொஞ்சி நிற்க வைக்கிறது இந்தக் கவிப்பாட்டன் பாடிவைத்த காற்சிலம்பு!

வஞ்சி மலைக் குன்றில் வந்து மாண்ட மாபத்தினி கண்ணகியம்மாளைக் கண்ணுற்ற குறவர் குடிப் பெண்டிர் வணங்கி தெய்வமாகக் கொள்கின்றனர்!

"சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே!

நிறம்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நல்நிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!

கற்புக்கரசியாம் அந்த நல்லாளுக்குக் கோயில் கட்டி, சுற்றி மதில் எழுப்பி, வாயிலும் செய்து குறிஞ்சி நிலத்திற்கொப்பக் குறிஞ்சிப் பறை முழக்கி, கடமாக் கொம்பூதி, மணிகளை ஒலிக்கச் செய்து, குறிஞ்சிப் பண் பாடி, மணம் மிக்க அகிற்புகை ஏந்தி, மலர் கொண்டு அருச்சனை செய்து (பூப்பலி), நாடு என்றும் வற்றாது வளஞ்சுரக்க அருள் புரிய வேண்டி நிற்க முனைந்தனர் குறக்குடி மகளிர்! மாபத்தினியை வணங்கி நின்றனர்!

"தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்,
பெருமலை துஞ்சாது வளம்சுரக்க எனவே!..."

மகிழ்ந்தனர்! ஆடினர் குன்றத்திலே குரவை பாடி!

அருவி ஆடப் போன தலைவியின் ஆற்றாமையை என்ன சொல்ல?

தன் ஆடவனின் ஆளுகையில் அகப்பட்ட சிறுமலையின் கல்தீண்டி பொன்கலந்து மலர் சுமந்து ஓடிவந்த ஓர் அருவியின் வெள்ளி ஒத்த தண் நீரிலே ஆடிவிட்ட பிறமகளிரைக் கண்டு நெஞ்சு பதைக்கிறதே அவளுக்கு!

இது மகளிரின் காதலா? பொறாமையா? பொறாமையே காதலா?

"எற்றுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைக்
கல்தீண்டி வந்த புதுப்புனல்;
கல்தீண்டி வந்த புதுப்புனல், மற்றையார்
உற்று ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

என்ஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
பொன்ஆடி வந்த புதுப்புனல்;
பொன்ஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
முன்ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

யாதுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
போதுஆடி வந்த புதுப்புனல்;
போதுஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
மீதுஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே....."

அருவி அகற்றிவிட்டு சிறப்புற்ற செந்தூர், செங்கோடு, வெண்குன்றம் (சாமிமலை), ஏரகம் என்னும் இடங்களை எப்போதும் நீங்காத ஆறுமுக அழகனையும் அவன் கைவேலையும் குரவையிலே போற்றிப் பாடினர் மங்கையர்!

"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல்அன்றே
பார்இரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டுஒருநாள்
சூர்மா தடிந்த சுடர்இலைய வெள்வேலே.

அணிமுகங்கள் ஓர்ஆறும் ஈராறு கையும்
இணைஇன்றித் தான்உடையான் ஏந்தியவேல்அன்றே
பிணிமுகம்மேற் கொண்டுஅவுணர் பீடுஅழியும் வண்ணம்
மணிவிசும்பின் கோன்ஏத்த மாறுஅட்ட வெள்வேலே!..."

காமநோய் எனை வாட்ட அன்னைக்கு அது விளங்காது வேறு நோய் கொண்டேனோ என்றஞ்சி வேலனைக் கூட்டி வெறியாட்டு செய்து நோய் தீர்க்க முனைகிறாரே! இதை என்னென்று சொல்வேன்? என்று நகைக்கிறாள் தலைவி.

அன்னையின் அறியாமை எண்ணி! (முருகன் வந்த ஆடவன் மீதேறி ஆடுவதற்கு வெறியாட்டு என்று பெயர்; ஆடுபவனுக்கு வேலன் என்று பெயர்)

அன்னைக்குத்தான் என் நோய் விளங்கா அறியாமை!

ஆண்டவனுக்குமா?

வேலன் மேல் தெய்வம் வருங்கால் வேலன் அறிந்திருக்க வேண்டுமே என் நோய் என்ன வென்று?

அவனுக்கு அறிதல் இல்லாவிடினும் அவன் மேல் ஏறி வரும் ஆண்டவன் முருகனுக்காவது அறிதல் வேண்டுமே! அவனுக்கு மில்லையா ?

அப்படி முருகன் வருவானாகில் அந்த வேலனைவிடவும் அறியாமை உடையவன் ஆண்டவன் முருகன்!

எள்ளி நகையாடுகிறாள் தலைவி! அழகனைப் பாடிய வாயால் அவனை அறிவிலான் என்று எள்ளி நகையாடவும் செய்கிறாள் தலைவி!

மனதிலே காமநோய் என்றும் சொல்லவியலவில்லை! வேறுநோய் என்றும் சொல்ல மனமில்லை!

காமத்தால் தவிக்கும் உடலுக்கு காய்ச்சல் என்று சொல்லி மந்திரித்ததால் கடவுளும் நகையாகின்றார்! மடவனாகின்றார்!
காசு மட்டும் வேலனுக்கு!

"இறைவளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வருக என்றாள்.

ஆய்வளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்!
வருமாயின் வேலன் மடவன்! அவனின்
குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்!......"

ஆண்டவனைப் போற்றி அவனை நகையுமாடி. 'வள்ளிக்குறமகளின் அடிகளோடு ஆறுமுகக் கடவுளே உன் திருவடிகளையும் தொழுது நிற்கிறேன்!, என் காதலர் களவொழுக்கம் ஏதும் செய்யாது என்னைச் சேர்ந்திட அருள்செய்' என்று அவனையே வேண்டியும்நிற்கிறாள் தலைவி!

இறைவனைப் போற்றிய வாய் தூற்றுதற்கும் அஞ்சவில்லை! வேண்டுதற்கும் நாணவில்லை! அத்துனை நெருக்கம் ஆண்டவனிடம்.

ஆனால் அன்னையிடம் அஞ்சுகிறாள்! ஆடவந்த வேலனை அருவெறுக்கிறாள்!

ஆண்டவனிடம் அச்சமில்லை, ஆனால் மனிதனிடம் அச்சம் மனிதனுக்கு!

ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஆள்வரும்போது ஆண்டவனும் அந்நியனாகிறான்! அறியாதோனாகிறான்! வந்த ஆள் உண்டு கொழுப்பதுதான் உண்மை!

ஆண்டவனுக்கும் நன்மையில்லை; மடவனாகிப் போகிறான்! வேண்டிநின்றாருக்கும் நன்மையில்லை!

"குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவ!நின் அடிஇணை தொழுதேம்
துறைமிசை நினதுஇரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்; விடு பிழைமணம் எனவே!.."

அழகனைப் பாடி, கற்புக்கரசியையும் பாடி, அழகனிடம் வேண்டியதை அவளிடமும் வேண்டும் முறையினதாய் அமைத்து, இன்பமாய் நீடுழி வாழ சேரனை வாழ்த்தி குரவையை நிறைவு செய்தனர் மகளிர்!

"பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணஅணி வேண்டுதுமே!

" ......ஆனாது
உண்டு மகிழ்ந்துஆனா வைகலும் வாழியர்
வில்எ ழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே."

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-நவம்பர்-2000

Thursday, June 01, 2000

சிலம்பு மடல் 27

சிலம்பு மடல் - 27 மதுரை அழிதல்! மானமும் கற்பும்!!
மதுரை:
வஞ்சின மாலை, அழற்படு காதை, கட்டுரை காதை:

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்" என்ற வள்ளுவத்தைக் கண்ணகியாள் கற்றிருந்தாள் போலும்!

அரண்மனை நீங்கும்போது, பாண்டியன் மேல் பிணமாய்ப் பதிந்து கிடந்த அவன் தேவியிடம் கண்ணகி பேசினாள்!

'யான் உலகம் அறியாதவள்! ஆயினும் முற்பகலில் ஒருவர்க்கு செய்த கேடு பிற்பகலில் தமக்கே வரும் என்பதை மட்டும் அறிந்தவள்! அதுவே உங்கள் முடிவுக்கு காரணமும்!

"கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்:"

புகழுடைத்த புகார் நகர் பல கற்புடை மகளிரால் சிறப்புற்றிருக்க யானும் அங்கு தோன்றியவள்தான்!

யானும் ஒரு கற்புடைப் பெண் என்பது உண்மையானால் என் கணவனோடு சேர்ந்து இப்போதே இறக்க மாட்டேன்! மன்னனொடு மதுரையையும் அழிப்பேன். என் ஆற்றலை நீ காண்பாய்!

"பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்!என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ....... "

சிறிதும் குறையா சீற்றத்துடன் சொன்னாள் கண்ணகி!'

சிலம்பிடம் தோற்ற மதுரை மன்னன் மாண்டது கேட்டு மதுரை மக்கள் நிலைகுலைந்தனர்.

நீதியை நாட்டிவிட்டு மதுரை வீதிகளில் வலம் வந்தாள் கண்ணகி!

சிலம்பால் வென்றவளைப் பார்த்தவர் பாதி! அவளைப் பற்றிக் கேட்டவர் மீதி!

வீதியெங்கும் அழுது புலம்பினாள் கண்ணகி வஞ்சினம் சிறிதும் மாறாமலே!

மதுரைநகர்ப் பெண்டிரே, ஆடவரே, வானத்து தேவரே, தவம் செய் முனிவரே!

'என் அன்புக்கினிய கணவனின் அநீதியான மரணம் அறிவீர்! மன்னன் மதியிழந்து எனக்கிட்ட அநீதியைக் காண்பீர்! குற்றமிழைக்கா என் கணவனைக் கொடுங்கோல் கொன்று போட கொடுஞ்சினம் கொண்டேன் யான்!'
கொடுஞ்சினம் கொண்டேன் யான்,
கொதிக்கும் நெஞ்சத்தின் குமுறல்களாலே!

மன்னன் மாண்டும், மன்னவன் தேவி மாண்டும் குறையாக் குமுறலால் மதிபோன மன்னவன் வளர்த்த மாநகர் மீதும் சினமுற்றேன்!

மதிமயங்கிய இம்மண்தானே என் கணவனைக் கொன்றது!? இம்மண்மேல் கொள்ளும் கோபம் குற்றம் ஆகாது!

கோவலனுடன் வாழ்ந்த காதலும் கற்பும் நட்பும், அவளின் இதயத்தை அனலாக்கிக் கொண்டேயிருக்க அனலின் வெம்மை தாங்கமாட்டாது அணைத்தாள் தன் இதயத்தை வலக்கரத்தால்!

காதலன் மாதவியுடன் ஓடிப்போனபோது துடித்த தன் இதயத்தைத் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்திய மென்கரத்தால் அவன் மாண்டபோது அமைதிப்படுத்த இயலவில்லை!

மாறாக மென்கரம் வன்கரமாகியது!

பொறுத்துக் கொள்ள இயலா இதயத்தின் அனலைப் போக்க நினைத்தது!

இதயத்தை மூடி அதன் மேல் ஏறி அமர்ந்திருந்த இடமுலையின் பாதியை அவளின் வலக்கரம் பற்றித் திருகிக் கிள்ளி எடுத்தது!

கிள்ளி எடுத்த பாதி முலையொடு மதுரையை மூன்று முறை சுற்றி விட்டாள்! கொல்லன் உலைக்களத்துத் துருத்தி போலச் சுடு மூச்சுவிட்டாள்: சுழன்று திரிந்தாள் வீதிகளில்!

அவளின் நெஞ்சத்து அனல், மீதி முலையில் இருந்து குருதியாய் வடிந்து கொண்டேயிருந்தது!

"நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்:

யான்அமர் காதலன் தன்னைத் தவறுஇழைத்த
கோநகர் சீறினேன் குற்றம்இலேன் யான்என்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்!"

பார்த்தவர் விழிகள் பார்த்தபடி பயந்திருக்க, பிய்த்த முலையும் தன் வலக்கையை சுட்டதோ என்னவோ தூக்கி எறிந்தாள் அதனை!

கண்ணகிக்கு நேர்ந்த கொடுமையையும், அவளின் சீற்றத்தையும் கண்ட மதுரை மக்களின் கண்களில் மாநகர் வானில் மெல்ல மெல்லத் தோன்றிய கரும்புகையும் சில நாழி தெரியவில்லை!

கரும்புகையின் மேலேறி செந்நா திறந்தபோது கண்டனர் மாந்தர், மதுரை மாநகர் சூழ்ந்த பெருந்தீயினை!

தீயின் வெம்மை தாங்காமல் மதுரை வாழ்ந்த தெய்வங்களும் பூதங்களும் கூட திகைத்து மதுரையை விட்டு வெளியேற மக்களில் பலர் மாண்டனர்! பலர் வெளிப்போய் மீண்டனர்!

மதுரையைக் காத்து நிற்கும் மதுராபதி தெய்வமும் வெம்மை தாங்க முடியாமல் கண்ணகி என்ற வீரபத்தினியின் முன் வர அஞ்சி
அவளின் பின்னாள் சென்று நின்றது!

"ஆர்அஞர் உற்ற வீரபத்தி னிமுன்
கொந்துஅழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதிஎன்.

ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள், பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறைஎன...."

வீணரபத்தினியின் முதுகில் மறைந்து அவளைத் தொடர்ந்த மதுராபதி தெய்வம், 'மாபத்தினியே, ஆடித்திங்கள் கிருட்டிண பக்கத்து அட்டமியும், கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, மதுரை எரியும் மன்னனும் மாள்வான் என்று யாம் அறிவோம்! என்று காரணங்கள் பல கூறி கண்ணகியை அமைதிப் படுத்தமுயன்றது!'.

"ஆடித் திங்கள் பேர்இருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகெடு உறும்எனும்
உரையும் உண்டே நிறைதொடி யோயே!..."

மதுரையை மெல்ல மெல்ல விழுங்கிவிட்டு பெருநாசம் செய்த தீயும் அவியத் தொடங்கியது!

இம்மதுரை மாநகருக்கு கணவனுடன் கீழ்த்திசையில் நுழைந்த கண்ணகி, கணவனை இழந்து, கொற்றவை கோயில் வாயிலில் தன் கைவளையல்களை உடைத்தெறிந்துவிட்டு மதுரையின் மேல்திசை வழியே வெளியேறினாள்!

கோவலன் மாண்டபின்னர், கோவலனையும் அநீதியையும் மட்டும்தான் நினைத்தாள் அன்றி, புகாரில் தன் சுற்றத்தை, நல்லோர், பெரியோர் யாரையும் நினைக்கவில்லை!

வாழ்வு வெறுமையாகிவிட பார்வையும் வெறித்ததாகி, காதலிலும் நேர்மையிலும் தான் கொண்ட கற்பென்ற மனவுறுதியால் தனியொருத்தியாக ஒரு மன்னனையே வென்றுவிட்டு, மடைமை பூத்துக் குலுங்கிய மாநகரை வென்றுவிட்டு, கல் எது முள் எது மேடு எது பள்ளம் எது என்று எதையும் அறியாதவளாய் கோவலனை மட்டுமே நினைத்து அழுதவளாய் பதினான்கு நாட்களாய் நடந்து கொண்டிருந்தவள் கோவலன் பால் கொண்ட நட்பாலும் காதலாலும் பிடித்து வைத்திருந்த தன் கடைசி மூச்சை விட்டாள், திருச்செங்குன்றம் என்ற மலைக்குன்றில்!

"எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்
தொழுநாள் இதுஎனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி
வாடா மாமலர் மாரி பெய்துஆங்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானஊர்தி ஏறினாள் மாதோ
கான்அமர் புரிகுழல் கண்ணகி தான்என்."

சிறிய காலடிகளை மண்மகளும் கண்டிராத செல்வ மகள், புகார் பிறந்த செல்வச்சீமான் மாநாய்கன் மகள், வாழ்க்கை தேடி வறியோளாய் மதுரை போன மகள், கணவனை ஆங்கு தொலைத்துவிட்டு, தொலைத்தவர்களை சீறிக் குறைத்துவிட்டு, காடு கழனி எங்கும் அலைந்து அழுது புலம்பி மதுரை நீங்கி சேரநாடு சேர்ந்து, திருச்செங்குன்றின் மீதேறி பூத்திருந்த புங்கை மர நிழலில் தேம்பி விட்டு அமைதியடைந்தாள்!

கற்பின் உறுதியால் பெண்டிர் "பெய்யெனப் பெய்யும் மழை" என்று வள்ளுவர் உரைத்தது பெண்டிர் கற்பென்ற மன உறுதியால் "செல்லெனச் செல்லும் உயிர்" என்பதைச் சுட்டுவதற்குத்தானோ?

உடல் என்பது வானம்! உயிர் என்பது மேகம்!

மேகம் ஓடும் வானம் போல், இயக்கத்தில் மனிதர் வாழ்வும்!

மழை பொழிந்ததும் வானம் மேகமற்று உயிரில்லா உடலாகிப் போகிறது!

மனவுறுதி கொண்ட மகளிர் பெய்யெனச் சொன்னால் தம் உடலென்ற வானத்திலிருந்து உயிரென்ற மேகம் மழையாய் உதிர்ந்துவிடுகிறது!

கோப்பெருந்தேவியின் மரணமும் அப்படியே! மன்னவன் மாண்டதும் தான் வாழ விரும்பாள்!

செல் எனச் சொன்னதும் சென்றது அவள் உயிர்! காதல் தீய்ந்த போது இதயத்தின் இயக்கத்தை தம் சொல்லால் நிறுத்தி விடுகிற இந்த மனவுறுதி என்ற கற்பு தமிழ் நிலத்தின் சிறப்பு.

கோப்பெருந்தேவி பாண்டியன் மேல் கொண்ட காதல் உயர்ந்தது; மாதவி கோவலன் மேல் கொண்ட காதலும் உயர்ந்தது! அந்த காதலும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

மடைமையில் மூழ்கிய காரணத்தால் நீதி வழுவியதுணர்ந்து, "கெடுக என் ஆயுள்" என்றதும் உயிர் பிரிந்த பாண்டிய மாமன்னனின் நேர்மையும் தூய்மையும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

கோவலனுடன் காதல் தொழுகை! அவன் மேல் அநீதியான பழி! காதற்கணவன் கொல்லப்பட்டபோது காதலாலும் நட்பாலும் அலைமோதுகிறாள்! ஆயினும் தன் உயிரைச் 'செல்லனச் சொல்லவில்லை'!

காதலன் மேல் வீழ்ந்த பழிதுடைக்க கடமை ஏற்கிறாள்! அக்கடமையை நிறைவேற்ற வீரம் கொள்கிறாள்! வீரமும் நேர்மையும் நிறைந்த சொல்லால் அடிக்கிறாள் அரசை! மன்னவன் மண்டபத்தில் நீதியைக் காக்கிறாள்! வெல்கிறாள்!

நீதி வழுவியதன் காரணத்தால் வெட்கிப் போகிறான் பாண்டியன்! தன் உயிரையும் விடுகிறான்!

நெஞ்சின் அனல் அடங்காத நிலையிலே மதுரையையே, தன் கணவன் மாண்டு கிடந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாள்! மடமை நிறைந்த அந்த மண் மீது சீற்றத்துடன்!

மன்னனை இழந்த அரசு உடனே பதட்டத்துக்கும் கலகத்துக்கும் உள்ளாகும் என்பது இந்நாளும் நாம் காணும் தமிழ் நில நிலையாகும்!

மக்களிடையே ஏற்பட்ட பதட்டத்தினாலோ, அப்பதட்டத்தினால் ஏற்பட்ட கவனக்குறைவினாலோ எங்கோ ஏற்பட்ட தீ, ஆடி மாதக் (முதுவேனில் காலம்) காற்றினால் மதுரைக்குப் பேரழிவைச் செய்திருக்க வேண்டும். அல்லது கலகக்காரர்கள் நாட்டிற்கு தீவைத்திருக்க வேண்டும். மக்களின் கவனம் எங்கோ இருக்க, இரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும்.

கோவலன் மாண்ட மண்ணும் தீக்கு இரையானதை அறிந்ததும், அதில் தன் கணவனின் உடலும் கரைந்து போயிருக்கும் என்று அறிந்ததும், தன் கை வளையல்களை உடைத்து எறிந்து விட்டு மதுரையை விட்டு வெளிப்போகிறாள் கண்ணகி!

மென்மை, பெண்மை, பொறுமை, நேர்மை, காதல், வீரம், அறிவு, கடமை, சீற்றம், ஈகை, அன்பு, பண்பு, மானம் என்ற அனைத்துக் குணங்களையும் ஒருங்கே கொண்ட வீரபத்தினி கண்ணகியார் தமிழ் மகளிர் திலகமாய் ஆகிறார்! அம்மையை வழிகாட்டியாய்க் கொள்ள தெய்வமாகவும் ஆக்கினர் மக்கள்!

கண்ணகி மனஉறுதி கொண்ட கற்புடைய பெண் மட்டுமல்ல! கற்புக்கு அரசியாகிறாள்! இதுவும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

போருக்குச் சென்ற மகன் புறங்காட்டி வந்தானோ என்று அய்யம் கொண்டு, அவனுக்குப் பாலூட்டிய மாரை அறுத்தெறிய முனைந்தாள் வீரத்தமிழத்தி!

மகவுக்கு தானூட்டும் பாலமுதில் வீரத்தை ஊட்டி வளர்த்தனர் தமிழ்ப் பெண்கள். அந்த வீரமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!.

தமிழின் சிறப்பு நெஞ்சில் வாழ்கிறது! ஏற்பட்ட இன்னல்கள் நெஞ்சின் கனலாக மாறும்போது மாரடித்து அழுகின்றது! கனல் மாரையும் பிய்த்து வெளிவருகிறது!

அந்நாளிலே,நீதிவழுவியதுணர்ந்து, தொடர்ந்து மானம் இழந்து வாழ ஒருப்படா பாண்டியனின் மனவுறுதியால் 'செல்லெனச் சென்றது அவனுயிர்'.

பகையின் கையில் சிக்கி மானமிழந்து சாவதற்கு ஒருப்படா தமிழர் "கெடுக என் ஆயுள்" என்று நஞ்சை விருந்தாய் உண்ண 'செல்லெனச் செல்லுதுயிர்'. அந்த மானமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

அந்நாளிலே, நீதி வழுவிய போது சினந்து எழுந்ததனால் சிறப்புற்றாள் கண்ணகி! நீதிவழுவிய அரசன் தமிழனாக, மானமறவனாக, நெறியுடையவனாக இருந்ததால் ஓர்நொடியில் அவனை வென்றாள்!

நீதிவழுவிய நெறியற்ற அரசிடம் இருந்து மானம் காக்க, தம்மினம் காக்க, நிலம் காக்க, நீதிகாக்க, கல்வியை மறந்து, காதலை மறந்து காடுகளிலும் மலைகளிலும், கற்பென்ற மனவுறுதி கொண்டு தொடர்ந்து போராடி இண்ணுயிர் துறக்கும் அத்துனை மகளிரும் கண்ணகிகளே!

ஈராயிரம் ஆண்டுகளாய் அணையா விளக்காய் தமிழர் சிந்தையில் வாழும் கண்ணகியே உன்னை வணங்குகிறேன்!

உன்னை மட்டுமல்ல உன்னைப் போல உறுதி கொண்டு தமிழ் நிலம் காக்கும் கண்ணகியர் யாவரையும் வணங்குகிறேன்!

காதலும், வீரமும், பண்பும், மானமும் கொண்ட கண்ணகியர் வாழும்வரை தமிழ்நிலங்கள் வாழும்! தமிழ்நிலங்கள் வாழும்வரை கண்ணகியர் வாழ்வர்!

"வடஆரியர் படைகடந்து
தென்தமிழ்நாடு ஒருங்குகாணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனொடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று."

அன்புடன்
நாக.இளங்கோவன்
01-சூன்-2000

Sunday, March 26, 2000

சிலம்பு மடல் 26

சிலம்பு மடல் - 26 வழக்காடலும்! வஞ்சினமும்!!
மதுரை:
ஊர்சூழ் வரி, வழக்குரை காதை:

கணவனைக் கட்டித்தழுவி கையில் சிலம்பைக் கொடுத்தனுப்பி கண் நிறைய பார்த்தனுப்பிய கண்ணகியின் கண்கள், கணவனின் வெட்டுண்டு கிடந்த உடலில் உறைந்து போனது!

கணவனின் பூமாலையில் ஓர் பூவை உருவி தன் தலையின் கருமயிரில் சூடிக் கொண்டு கைகூப்பி அனுப்பி வைத்தவள், அதன்பின் குருதிச் சேற்றில் தலையில்லா உடலாய்க் குளிர்ந்து போய்க் கிடந்த கோவலனின் மார்பை தன் மார்பில் தேக்கி வைத்து கண்ணீர் சிந்தினாள்!

'கட்டிய கணவனின் துன்பம் பொறுத்துக் கொள்ள பெண்னால் இயலுமா? கடவுளே உனக்கு கண்ணில்லையா?' என்று, இயலா நிலையின் கண்ணீர் கொப்பளிக்க, புலம்புகிறாள்!

"பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?

என்ற இவை சொல்லி அழுவாள் கணவன்தன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள..."

இணைந்திருந்த நெஞ்சங்கள் இரண்டும் பிரிவின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கவேண்டும்.

உலகமே எனைக் கள்வனென்று கூறினும் உனக்குத் தெரியும் கண்ணகி, நான் கள்வனல்ல என்று! என்று கோவலன் நெஞ்சம் அவளின் நெஞ்சத்திடம் நீதி கேட்டிருக்க வேண்டும்!

உனைச் சேர்ந்து, வாழாத வாழ்வையெல்லாம் வாழ வந்தபோது என் கழுத்தை அறுத்து விட்டார்களேஎ......!, என் செய்வேன் என்று அவன் நெஞ்சம் அழுதிருக்க வேண்டும்!

காதலன் தவறு செய்யவில்லை! வாழத்துடித்த காதலனின் தலையைக் கொய்தவன் அரசன்! தலையைக் கொய்தவன் சிலம்பையும் பறித்துக் கொண்டான்! அவன் கழுத்தரிந்த களிமகனையும், கொல்லக் கயவனையும் கண்ணகி அறியாள்!

இறந்த கணவனைக் கடைசியாக மெய்தழுவிக் கொண்டிருந்தவளின் சோகம் சினமாக வலுவெடுக்க, கண்ணகியின் நெஞ்சத்து நீதிமன்றம், காதலனுடன் தானும் சாவதைத் தள்ளிப்போட்டது!

அப்படிச் செத்தால் கோவலன் கள்வனென்றே ஆகிப் போவானே என்று நினைக்கையில் சினம் கடுஞ்சினமாக மாறியது!

காதலன் பிரிந்த பின்னர் வாழ நினைக்கவில்லை! அப்படி சாக நினைத்த போதும் பழி நீக்கிட வேண்டிய கடமை சுமையாய் சேர்ந்து கொள்ள கடுஞ்சினம் செஞ்சினமாய் மாற

"காய்சினம் தணிந்துஅன்றிக் கணவனைக் கைகூடேன்"

என்றாள்; எழுந்தாள்! சூளுரைத்தாள்!
நின்றாள்; நினைந்தாள்!
நெடுங்கயல் கண் நீர் துடையாச் சென்றாள்;
பாண்டியன் அரன்மனை வாயில் முன்!

கொடுஞ்சினம் கொண்டு பாண்டியனைக் காண கண்ணகி செல்ல, தான் கண்ட தீக்கனாவைப் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி கலக்கத்துடன்.

கண்ணகி:
வாயிற்காப்போனே! வாயிற்காப்போனே........!

வாயிற்காப்போன் திரும்பிப் பார்க்கிறான்; கூப்பிட்ட குரலின் அதிர்வைக் கண்டு சற்று திகைக்கிறான்!

அறிவு முற்றுமாய் அகன்று போய், அறம் என்ற உள்ளம் அற்றுப் போன அரச நீதி தவறிய மன்னனின் வாயிற்காப்போனே......!

எடுத்த எடுப்பில் நாடாளும் மன்னனை எறும்பின் கீழாய் ஆக்கி சொல்லால் அடிக்கும் சினம் சுமந்த கண்ணகியைக் கண்டு நடுக்குற்றான் வாயிலோன்!

செம்பொன் சிலம்பொன்றை ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் நிற்கிறாள்...! என்று மன்னனிடம் சென்று சொல்வாய்! சொல்வாய்!

"வாயி லோயே! வாயி லோயே!
அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!

இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள்என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே!

ஆணையிட்டுச் சொன்னவளின் அகங்கண்டு திகைத்து அரசன்முன் ஓடிச் சென்றான் வாயிற்காப்போன்!

"வாழி எம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி......"

வணங்கிவிட்டுச் சொன்னான் வாயிலோன்;

மன்னவா!,

கொற்றவை போல் நிற்கிறாள்! ஆனால் கொற்றவை அல்ல! கோலமோ காளி! ஆனால் காளியும் அல்ல!

பெரும்பகையோடு வந்திருக்கிறாள் வாயில்முன்னொருத்தி! கையில் ஒரு சிலம்பேந்தி நிற்கிறாள்!

கலக்கம் தரும் கடுஞ்சினம் கொண்டாள்!
கணவனை இழந்தவளாம்!

அழைத்து வா என்றான் அரசன்! அழைத்து வந்தான் வாயிலோன் கண்ணகியைக் காவலன் முன்!

"வருக மற்றுஅவள் தருக ஈங்குஎன,
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-

கண்ணீர் பெருக வந்து நிற்கும் இளங்கொடியே, "நீ யார் ?"; கேட்டவன் மன்னன்!

"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்என; "

அகன்று உயர்ந்த அரச மண்டபம்; பொன்னும் மணியும் பதித்த தூண்கள். உயர்ந்த மேடை; அரியாசனம் ஆங்கு!

கவரி வீசும் காற்றின் சுகத்திலே அரசியோடு அரசனும் ஆங்கு!

அவர்க்குக் கீழே அமைச்சர்கள் வரிசை!

சுற்றி நிற்கும் பட்டுக் கட்டிய பணிவிடைக் கூட்டம்!

கண்ணகியின்
கலைந்து கிடக்கும் நீண்ட நெடுமயிர்கள்!
விரிந்து வெறித்த பார்வை!
ஆறு பொங்கும் கண்கள்!
புழுதி படிந்த உடைகள்!
உயிரற்ற கூடாய்த் தெரியும் உடல்!

சுற்றியிருந்த அத்தனைக் கண்களும் அவளின் மேல்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!

ஆனால் சிறுதுரும்பாய்த் தெரிந்தனர் அத்தனை பேரும் அவளுக்கு!

நிமிர்ந்து பார்த்தாள்! நெஞ்சத்து உறுதி அகலாமல்; கண்ணகியின் வெறித்த கண்கள் வெறித்தபடியே நிலைத்து நின்றன மன்னனின் கண்களில்!

நிலைத்த பார்வையின் திண்மை கண்டு மண்டபம் முழுவதும் அமைதியானது!

'அறிவிலா மன்னா!' - விளித்தாள் மன்னனை!

நாடாளும் மன்னவன் இடத்திலே அவன் முன் நின்று அவனை விளித்த அந்த வார்த்தைகள் பாண்டியனை மருளச் செய்தது!

கூடல் வேந்தன் கூடு போன்றவன் ஆயினன்! சுற்றியிருந்தோரையும் கலங்கச் செய்தது!

உன்னிடம் கூற வேண்டியது உளது; அதற்கு முன் யாரெனக் கேட்டாய்; கூறுவேன் கேள்!

பறக்கும் புறாவிற்கு இட்ட துன்பத்திற்காக புறாவிற்கும் நீதி வழங்கினான் சிபி என்ற அரசன்!

கண்ணீருடன் பசு ஒன்று ஆராய்ச்சி மணி ஒலிக்க, அதன் குறை அறிந்தான் மனுநீதிச் சோழன்!

அதன் கன்றைக் கொன்ற அவன் மகனை அதேத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் அச்சோழன்.

மனித இனமற்ற பறவைக்கும், பசுவுக்கும் அரசநெறி கொண்டு நீதி வழங்கிய நெறிதவறா அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என் ஊர்....!

பழியில்லாப் பெருஞ்செல்வ வணிகக் குடியிலே பிறந்த மாசாத்துவான் மகனான கோவலனை மணந்து,
அவனுடன் செல்வம் தேடி உன் நாடு வந்து,
என் காற்சிலம்பை விற்க வந்தபோது,
உன்னால் கொலை செய்யப்பட்டானேஎ கோவலன்ன்...
அவன் மனைவி நான்! கண்ணகி என் பெயர்!

சொல்லி முடித்த அவளின் கண்களில் நீர் மட்டும் இன்னும் வற்றவில்லை!

"தேரா மன்னா! செப்புவது உடையேன்
எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என்பதியே; -

அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச்

சூழ்கழல் மன்னாநின்நகர்ப் புகுந்துஈங்கு
என்கால் சிலம்புபகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பதுஎன் பெயரே........"

கள்வனைக் கொன்றேன்; குறை கூறி நிற்கிறாளே இவள்! சிந்தித்தான் பாண்டியன்;

கள்வனைக் கொல்வது தானே அரச நீதி! எடுத்துரைத்தான் வேந்தன்.

"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என..."

எடுத்துரைத்த வேந்தனை சொல்லால் அறைந்தாள் அணங்கு! 'நல்திறம் கொண்டு ஆராயாக் கொற்கை வேந்தேஎ...!' என் கால் சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது!

சினத்துடன் சற்று இகழ்ச்சி அவள் உதடுகளில்!

"நல்திறம் படராக் கொற்கை வேந்தே!
என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே..."

இப்பொழுது ஆராய்கிறான் மன்னன்!

அம்மை சொன்னது அறிந்தோம்! எம் அரசியின் சிலம்பது முத்துப் பரல்கள் உடைத்தது.

கொண்டுவா என்றான் அரசியின் சிலம்புகளை! அவையில் வைத்தான்;

"தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி
யாம் உடைச் சிலம்பு முத்துஉடை அரியே;
'தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப!

முத்தென்று சொன்னான்! முத்தைக் காட்டினான்!
பிரிதொன்றைப் பார்த்தான் மாணிக்கம் கண்டான்!

மாணிக்கத்தைக் காட்டென்று சொன்னான் கண்ணகியிடம்!

ஒற்றைச் சிலம்பை பெருவாழ்வு வாழ கணவனிடம் கொடுத்து மற்றைச் சிலம்பை தன் செல்வக் குடி சிறப்பின் நினைவாய் வைத்திருந்த கண்ணகி, காதலன் கள்வனல்ல என்ற சான்று பகர புறப்படும்போது கழற்றிக் கையில் பிடித்த அச் சிலம்பை அடித்தாள் மண்மேல்! உடைந்து தெறித்தன மாணிக்கப் பரல்கள்;
அவை முழுதும்!

மன்னனின் சிந்தனையை செயலாக்கிய உதட்டிலும் ஒன்று!

நீதி தவறிய அரசனே! பார் இந்த மாணிக்கப் பரல்களை! என்றாள் வெறுப்புடன்;

உடைத்த மாத்திரம் உண்மையை ஓங்கச் செய்துவிட்ட நேர்மையின் ஆணவம் அவள் குரலில்!

ஒரு சிலம்பால் ஒப்பற்ற காதலன் உயிரை சாவுக்கு அனுப்பிவிட்ட ஏமாற்றப் பார்வை!

ஆறுதல் கொள்ளாத இதயத்தின் குமுறல் நெஞ்சை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.

மருண்டான் பாண்டியன் மாணிக்கம் கண்டு; உணர்ந்தான் உண்மை இணை அதுவென்று!

நடந்து முடிந்த செயல்கள் ஓர் நொடியில் சிந்தையில் தோன்றி மறைய நடுங்கிப் போனான். சிந்தித்தான்!

பிழைசெய்தேனே நான்! என் காவல் பிழை போனதே!

மதியின் வாழும் மனித வாழ்க்கையில்
மந்திரம் மயங்கி மதி இழந்தேனே!

மந்திரப் பித்தத்தால் என் மதி மயங்குங்கால்
என் மக்களின் மதி என்னவோ ?

அறிவால் ஆராயாமல் மந்திரம் கேட்டு
கோழையாகிப் போனேனே யான்!

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பகறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கோள் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வழி வந்தவன் நான்!

மலையையும் கடலையும் பகையையும் ஆண்ட
கல்வியும் செல்வமும் வீரமும்,
மந்திரம் என்ற சிறு நரிமுன் தோற்றுப் போனதே!

பாண்டியநாடு மடமையில் மூழ்க விட்டேனே!
பாண்டியநாட்டில் மடமை வளர விட்டேனே!
என் வெண்கொற்றக் குடை தாழ்ந்து போனதே!
என் செங்கோல் கொடுங்கோல் ஆனதே!
அறமும் நெறியும் அகன்று போனதே!
என் வாழ்வு முடியட்டும்!
மனிதருள் ஒருவர் தனியொருவராக வந்து
இன்னமும் நீதிகேட்க முடியும் பாண்டியநாட்டில்!
ஆதலின் பாண்டிய நாட்டில் மடமை அழிந்து
நல்அறமும் திறமும் வளரட்டும்!
உயிர்வாழேன் நான்; கெடுக என் ஆயுள்!

என்றனன் மன்னன்; மயங்கி வீழ்ந்தான் மண்மேல்! பாண்டியன் உயிர் பிரிந்தது!

உலகின் இயற்கை (ஊழ்) மதியின் மாறுபட்டு பித்தம் கொண்டபோது, நீதி தோற்ற முதற்காலை வாழ்வைப் பிரிந்து வழிவிட்டான் வளத்துக்கு பாண்டிய நெடுஞ்செழிய மன்னன்!

"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!என
மன்னவன் மயங்கி வீழ்ந் தனனே...."

காதல் வாழ்க்கை கண்ணகிக்கு மட்டுமா சொந்தம் ? அன்பு அவளுக்கு மட்டுமா சொந்தம்? காதலனுடன் அருமந்த நட்பு அவளுக்கு மட்டுமா வாய்த்தது?

குலைந்தனள்! நடுங்கினள்!; கோப்பெருந்தேவி.

என் இதயத்தின் மன்னவன் போன பின் யான் வாழ்வேனா? யான் வாழ்ந்துதான் என்ன? எங்கே கணவனைக் காண்பேன் நான்? தேம்பினாள் பாண்டிமாதேவி!

தவறை உணர்ந்த உடன் உயிர் விட்ட என் காதலனுக்குத் துணை செல்வேன் யான்! கோவலக் கொலைப்பழியை ஏற்று உயிர் விட்ட என் மன்னவனின் இதயத்தில் இடம் பெற்ற நானும் வாழேன்!

என் சிலம்பை எவரோ பறிக்க,
உயிர்விட்டான் கண்ணகியின் கணவன்!

கண்ணகி சிலம்பை காவலன் பறிக்க
உயிர்விட்டான் என் கணவன்!

அறம் பிழைக்கப் பழியை
ஏற்றுக் கொண்டான் என் கணவன்!

என் சிலம்பால் நேர்ந்த பிரிவிற்கு
ஆறுதல் சொல்ல அவனொடு சேர்வேன்!
என்று கோப்பெருந்தேவி நினைத்திருக்க வேண்டும்!
வீழ்ந்தனள் பாண்டியன் மேலே! மாண்டனள் தேவி!

உயிர்..!

யார் சொன்னார் கைகளில் இல்லை என்று ?

வாழ வேண்டியபோது வாழ்ந்தும், வீழ நினைத்த போது காற்றைப் பிடுங்கி விட்டாற்போல் உயிரைத் தூக்கி எறிந்த இந்த மனித சக்தி ஒழுக்கம் நிறைந்தது! நேரிட்ட வாழ்வையும் மனஉறுதியையும் கொண்டது!

கற்பென்ற இந்த மனத்தின் உறுதி கோப்பெருந்தேவிக்கு மட்டுமல்ல வழுவிய போது உயிர் விலகிய பாண்டியனுக்கும் தான்!

மென்மையாள் கண்ணகி, கணவன் துயர் அறிந்து
வன்மையாள் ஆகி தன் மனத்
திண்மையால் வென்றாள் மன்னனை!

சில வினாடிகளுக்குள் அரசனை வென்றாள்! அரச மன்றத்தை வென்றாள்! நீதியை வென்றாள்!

இறந்து கிடந்த பாண்டியனையும் பாண்டிமாதேவியையும் நின்று நிலைத்துப் பார்த்தாள் கண்ணகி!

பாண்டியன் மேல் பிணமாய் பாண்டிமாதேவி!

சாவிலே ஒன்று சேர்ந்து விட்ட அவர்களின் காதல் வாழ்க்கை கண்ணகியையும் ஆட்கொண்டிருக்க வேண்டும்.

'மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!....
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!....'

என்று, அவளில் இதயத்தில், கோவலன் தன்னைப் போற்றியதெல்லாம் அன்பு மழையாய்ப் பொழிந்து கொண்டேயிருந்தது!

இனி அவளின் காதோடு காதாக அவன் பேசுவானா? காதலில்லா வாழ்க்கை உயிரில்லா உடலல்லவா ? மனிதவாழ்வின் மையமே அதுதானே! மையம் இல்லாது எது வாழும் மண்ணில்!
அதுதானே உணர்வின் உந்து சக்தி! உறவின் பாலம்!

அந்த பாலம் அறுந்துபோனதை சிறிதும் பொறுத்தாள் இல்லை!

பாண்டியன் உயிர் விலகியும்
அவன் தேவி உயிர் விலக்கியும்
அவள் சினம் எள்ளளவும் குறையவில்லை!

மாறாக, திடமாகச் சொன்னாள்!
தீங்கு செய்த பாண்டியனின் மனைவியே, 'கடுமையான தீங்கிற்கு ஆளாகியிருக்கும் நான் இனிச் செய்யப் போவதையும் காண்பாய்!'

என்று மேலும் கடிந்து, அனைவரும் நடுநடுங்க, வஞ்சினச் சீற்றத்துடன் அரசவையில் களிநடம் புரிந்த கண்ணகி அரன்மனை நீங்கினாள்!

"அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம்என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதுஅன்றே-பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி!
கடுவினையேன் செய்வதூஉம் காண்."

அன்புடன்
நாக.இளங்கோவன்
26-மார்ச்-2000

Monday, February 28, 2000

சிலம்பு மடல் 25

சிலம்பு மடல் - 25 பூவின் புலம்பல்! புயலாய் எழுதல்!
மதுரை:
ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:

இடைச்சி மாதரி வீட்டில், உறையிட்ட பால் உறையவில்லை; உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை; ஆடுகள் சோர்ந்து கிடக்கின்றன; எருதுகளின் கண்களில் கண்ணீர்! பசுக்கள் நடுக்கத்துடன் கதறுகின்றன! அவைகளின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்கின்றன!

துயற்குறிகளாய் தெரிந்தது மாதரிக்கு; பதறுகிறாள்! என்னவென்று புரியவில்லை!

"குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின்
மடக்கண்நீர் சோரும்; வருவதுஒன்று. உண்டு

உறிநிறு வெண்ணெய் உருகா உருகும்
மறி,தெறித்து ஆடா; வருவதுஒன்று உண்டு

நான்முலை ஆயம் நடுங்குபு நின்றுஇரங்கும்
மான்மணி வீழும்; வருவதுஒன்று உண்டு;"

தன் ஆடுமாடுகளுக்கு என்ன துயரமோ ? அவை அறிந்தவை என்னவோ? என்று கலங்குகிறாள் மாதரி; அவளின் மக்களும்தான்! அவைகளை மகிழ்விக்கும் கூத்தை ஆடிப்பாட மகளையும் மற்ற மகளிரையும் அழைக்கிறாள்!

"மனம் மயங்காதே, மண்ணின் மாதர்க்கு
அணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில்
வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்,
என்றாள், கறவை கன்றுதுயர் நீங்குக எனவே!"

இடையர் குலத்துக் கடவுளாக சொல்லப்படுபவன் கண்ணன்;துயற்குறிகளாகக் கருதப்பட்ட மாடு கன்றுகளின் துயர் நீங்க, உற்சாகம் பெற, கண்ணன் தன் இளம்பருவத்தில் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை ஆடுகின்றனர் மாதரி சார்ந்த மகளிர் ஏழ்வர்;

சில ஆண்டுகளுக்கு முன்னர், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டால் பசு அதிகம் பால் கறக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது; அது சோதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி சொன்னது; ஒரு வேளை அது உண்மை என்றால் மாடு கன்றுகளுக்கு இடையர் குல மகளிர் குரைவையாடி மகிழ்வூட்டும் நிகழ்ச்சி, மாட்டுப் பொங்கலின் போது ஏற்படுத்தப்படும் ஒலிகள் மற்றும் மாடு கன்றுகளைப் போற்றுதல் போன்றவை அக்கால்நடைகளின் உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்து பவையாக இருக்கக் கூடும்!

"நாராயணா என்னா நா என்ன நாவே?"

என்ற கேள்வியோடு குரவைக் கூத்து நிறைவு பெற, துயர்களை நாராயணனிடம் விட்டுவிட்டு மாதரி நீராடப் போகிறாள்!

ஓடி வருகிறாள் ஒரு மங்கை! கோவலத்துயர் அறிந்தவள் அவள்!
கண்ணகியைக் கண்டு துயரைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள்!

"....ஓர் ஊர்அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்ஆடாள் சொல்ஆடாள் நின்றாள்!

தன்னைப்பார்த்து ஒரு நங்கை நாஅசைக்கா துயர முகம் தாங்கி நிற்கிறாள் என்றால், வெளிப் போன தன் கணவனுக்கு தீங்கு நேர்ந்திருக்குமோ என்று பதறுகிறாள் கண்ணகி! அந்நங்கையாலும் உடன் சொல்லஇயலவில்லை!

"எல்லாவோ!
காதலன் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்...
நண்பகல் போதே நடுக்குநோய் கைம்மிகும்...
தஞ்சமோ தோழீ! தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோதோழீ!"

கண்ணகி:

தோழீ! கணவன் வரக் காண்கிலேன் நடுக்குற்றேன்; அயலார் கூறியது உளவோ? உரைப்பாய்!

தோழி:

'அரசியின் அழகு மிக்க சிலம்பொன்றைக் கவர்ந்த கள்வன் கோவலன் என்று.....'

கண்ணகி:

என்று......?

தோழி:

'ஊர்க்காவலர் கோவலனைக் கொலை செய்யக் கருதினர்.....!'

"அரைசுஉறை கோயில் அணிஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-

கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-

குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே!

எனக்கேட்டு, அதிர்ந்தாள், அழுதாள், விழுந்தாள் கண்ணகி."

துயர்ச்செய்தியை முடிவாய்ச் சொல்லாமல் சற்று இழுத்தே சொன்னாள் தோழி! இருப்பினும் "சாகவில்லை" என்று, தோழி கூறவில்லை!

அவளின் முகக்குறிகள் கோவலன் மாண்டுவிட்டதை, கண்ணகிக்குப் புரியவைத்துவிட்டது! கண்கள் குளமானது!

கண்ணனைய கணவரே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று குமுறினாள் கண்ணகி!

"பொங்கி எழுந்தாள், விழுந்தாள்..
செங்கண் சிவப்ப அழுதாள்;தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்துஏங்கி மாழ்குவாள்;

தான் தந்த சிலம்பைக் கொண்டு சென்ற கோவலன் கள்வனென்று கொலையுறுவதா? அதிர்கிறாள்!

அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!

அவளின் நெஞ்சத்து மன்றம் பாண்டியனைப் பழித்தது.

சமுதாயத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு நாட்டின் அரசன்தான் முதலில் பதில் சொல்லவேண்டும்!

பாண்டியன் செய்த தவறினால் பறிகொடுத்தேன் என்கணவனை; 'அறக்கடவுள் என்ற அறிவற்றோய்!' நீயும் இருக்கிறாயா? நான் அவலம் கொண்டு அழிந்துபோவேன் என்று நினைத்தாயா ? மாட்டேன்! என்று பாண்டியனையும் அறக்கடவுளையும் பழித்தாள்; சூளுரைத்தாள்!

காப்பியத்தில் தென்றலாய்க் குளிர்ந்தவள் ஈங்கு தீமை கண்டு தீயாய்க் கொதிக்கிறாள்!

முற்பிறப்பின் பாவம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!

முன்வினை என்று எண்ணி கண்ணீர் மட்டும் சிந்தி மாரடித்து ஒப்பாரி அழுது அடங்கிப் போகவில்லை!

கணவனே போய்விட்டான்; இனி என்ன என்று பின்னால் நின்றாள் இல்லை!

அறக்கடவுளையும் 'அறிவற்றோய்' என்று அதட்டி தீமையை எதிர்த்து சூளுரைத்ததால் அவள் பெண்குலத்தின் திலகம் ஆகிறாள்!

"மன்னவன் தவறுஇழைப்ப
அன்பனை இழந்தேன்யான்; அவலம் கொண்டு அழிவலோ?

மன்னவன் தவறுஇழைப்ப
அறன்என்னும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?

தென்னவன் தவறுஇழைப்ப
இம்மையும் இசைஒரீஇ இனைந்துஏங்கி அழிவலோ?"

போற்றா ஒழுக்கம் புரிந்தவன் கோவலன் ஆயினும் மாற்றா உள்ளம் படைத்த மனவுறுதி மங்கை நல்லாள் கண்ணகிக்கு!

காதலெனும் நட்பால் நடந்துவந்தவள்! அன்பால் அவனைக் கரைத்தவள்!

நெஞ்சத்தின் நேர்மை பொங்கி, வஞ்சத்தை வீழ்த்திட உறுதி பூண்டது!

அருகில் உள்ள அனைவரும் அவளின் நிலை கண்டு வருந்த, அறத்தினையும், பாண்டியனையும் பழித்த கண்ணகி, கதிரவனையும் கேள்வி கேட்டாள்!

"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"

எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை! இவள் நிலை கண்டு வருந்தி, சுற்றி நின்ற மக்கட் கூட்டத்திலிருந்து இருக்கவேண்டும்! அந்தக்குரல் கூறிய செய்தி "உன் கணவன் கள்வனல்ல; கள்வன் என்று கூறிய இவ்வூர் நெருப்பிற்கு உணவாகும் என்று!"

அநியாயங்களைப் பார்த்து 'நாசமாகப் போகட்டும் இந்த ஊர்' என்று சொல்வதைப் போல!

ஒரு ஊரினையே அழிந்து போகச் சொல்லவேண்டுமானால் அந்த ஊரில் பேதமையும் குறைகளும் நிறைந்து இருக்கவேண்டும்!

"கள்வனோ அல்லன் கருங்கயல்கண் மாதராய்!
ஒள்எரி உண்ணும்இவ் வூர் என்றது ஒருகுரல்"

அதற்குமேலும் அங்கு நின்றாள் இல்லை! மற்றொரு சிலம்பைக் கையில் எடுத்தாள்; நடந்தாள் மதுரை மாநகருக்குள்;

அச்சிலம்பை அனைவரிடமும் காட்டி, நகருள் மகளிர் நோக்கி விளக்கம் சொல்லி நியாயம் கேட்டாள்;

'விலைமிக்க என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டு என் கணவனையும் கொலை செய்தான் பாண்டியன்' என்றாள்!

பாண்டியன் நீதி தவறினான் என்று மட்டும் கண்ணகி முதலில் பொங்கி எழவில்லை! பாண்டியன் தன் சிலம்பை திருடிவிட்டான் என்றும் அய்யப்படுகிறாள்! குற்றஞ்சொல்கிறாள்!!

ஏனெனில் அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!

"பட்டேன் படாத துயரம், படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதுஒன்று;

கள்வனோ அல்லன் கணவன் என் கால்சிலம்பு
கொள்ளும் விலைபொருட்டால் கொன்றாரே ஈதுஒன்று!..."

ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் அன்பர் செத்து விடும்போது வாழ்க்கையும் முடிந்துதான் போகிறது;

நேர்மையான நெஞ்சம், மாறா உள்ளம் படைத்த உறுதியான நெஞ்சம்;

காதலன் பால் அன்பு மழை பொழிந்து அவன்மேல் பூங்கொடியாய்ப் படர்ந்தவள்;

மதுரையம்பதியென்ற அறியா நாட்டில்
அநீதியால் விழைந்த அன்பின் சாவால்,
துக்கம் பெருகி,
உள்ளம் உலர்ந்து,
வண்ணச் சீறடி வன்மை கொள்ள,
அரற்றிப் புலம்பிப் புயலாய் மாறி,
தெருவெங்கும் தன்கதை கூறி,
இனியாள் விழியோ இமையாதாகி,
இமையா விழிகள் ஆறாய் பெய்ய,
அறவோன் அவனையும் அதட்டி,
அரசன் தனையும் பழித்து,
செம்பொன் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி,
சூளுரைத்து,
போர் தொடுக்க, சீறிச் சினந்து நடந்து வரும்
பெண்ணரசி கண்ணகியைக்
கண்ட மதுரை மக்கள் மயங்கினர்;

உணர்ந்தனர் உள்ளத்தால் உயர்ந்தவள் என்று!

கணவன் இறந்தமைக்காகப் புலம்பியும், அவன் அநீதியால் இறந்தமைக்காகச் சீறிச் சினந்து வந்தவள் கண்டு தெய்வமோ என்று அஞ்சினர்!

பெருமை மிக்க பாண்டியநாடு நீதி தவறிவிட்டதோ? இது ஏனோ என்று வருந்தினர்.

சிலர் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்டினர் கண்ணகிக்கு!;

"களையாத துன்பம் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது; இது என் கொல்?

..தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்?
..தண்குடை வெம்மை விளைத்தது; இது என்கொல்?

செம்பொன் சிலம்புஒன்று கைஏந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இது என்கொல்?

ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இது என்கொல்?

என்பன சொல்லி இனைந்துஏங்கி அரற்றவும்
மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட........"

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, February 20, 2000

சிலம்பு மடல் 24

சிலம்பு மடல் - 24 கோவலனைக் கொன்றது யாது?
மதுரை:
கொலைக்களக் காதை:

வெள்ளை மலரொன்றைக் கிள்ளிச் சேற்றில் போட்டு, சற்றே மிதித்து காலெடுத்ததும் அம்மலரின் இதழ்கள் ஒன்றிரண்டு, நைந்து போயினும், மெல்ல அசையும். அப்படியே சில சிறு அசைவுகளோடு அமைதியானான் கோவலன்! இல்லை இல்லை!! அமைதியானது கோவலனின் உடலும் தலையும்.

உயிர் இருக்கும் வரை உடலும் மனமும் போட்டி போட்டு அலையும். உயிர் பறந்தபின்னே இரண்டும் ஒரே நேரத்தில் ஓய்ந்து விடுகின்றன!

"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."

பாண்டியனைத் தீராப் பழிக்கு ஆளாக்கி விட்டது கோவலனின் உயிரா ?

பாண்டியன் அரச கடமையைச் சரியாய் செய்தான்; காவற்துறைக்கு கட்டளையிட்டான்.

காவற்துறையும் கடமையைச் செய்தனர்: ஆயினும் அவர்களுள் ஒரு களிமகன்.

"கற்கக் கசடற!"
"நிற்க அதற்குத் தக!"

கல்லாமை அல்லது கற்றதன் பின் நில்லாமை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பிசகினாலும் விளைவது தீங்கே!

அதைத்தான் "கல்லாக் களிமகன்" என்ற இரண்டே சீர்களில் ஆசிரியர் விளம்பியுள்ளார்!

அவன் கல்லாதது யாது? அரச காவலனாயிருப்பவன் சிறிது கல்வி கற்றேயிருப்பான்.

ஆனால் அந்தக் கல்வி மந்திரத்திடம் மண்டியிட்டுவிட்டது!

அரசனும் கல்வி கேள்விகளில் சிறந்தவனே! அக்கல்வியும் கேள்வியும் மந்திரத்து முன்னே கேள்விக் குறியாகிப் போனது!

அரசனாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை! அவன் ஆளாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை!

அரசன் முதல் கடைநிலை ஊழியன் வரை மூடத்தனம் என்ற முக்காட்டுக்குள் பதிந்து போனவர்கள்!

சில ஆயிரம் அல்லது பல நூறாண்டுகட்கு முன்னர் மட்டும்தான் என்றில்லை!

இன்றும்தான்!

இலிங்க, விபூதி வித்தை மடத்தில் சிலர் கொல்லப்படுகின்றனர்; யாரும் காரணம் அறியார்! மந்திரத்துக்கு முன்னே காவற்துறை கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.

நூறு கோடி மாந்தருக்கு முதன்மையானவர்; அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்!

ஆயினும் அந்த மந்திர தந்திர வித்தைகளில் மயங்கி, ஆங்கு சென்று மந்திரவாதி முன் மண்டியிட்டு நிற்பதை நாம் வாழும் இந்தக் காலத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

பலகோடி மக்களுக்கு முதல்வர்! ஆட்சிப் போட்டியில் வெற்றிபெற வேள்வி நடத்துகிறார்.

ஊர் ஊராய்ப் போய் யாகவேள்வி செய்கிறார். வெற்றி பெற்றால் மீண்டும் வேள்வி! தோல்வி அடைந்தால் அதற்கும் வேள்வி!

மந்திரத்துக் கென்றே ஒரு மொழி; அம்மொழியின் சிறப்பே அதன் ஒலியாம்! சொல்கிறார் மனிதர், சோவென்று மழை பொழிந்தாற்போல்! மொட்டைப்பேச்சுக்கு மண்டையாட்டவே பெருங்கூட்டம்!

வேள்விக்கு வெண்சாமரம்; கேள்விக்கு கொடுவாள்!

குளத்தில் குளித்தெழுந்தால் ஒருவருக்கு புண்ணியமாம்! குளித்தெழுந்ததும், எழாதவர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு!

மந்திரம் மந்திரம் மந்திரம்; சமுதாயம் சீரழிய தந்திரம்!

இன்றல்ல நேற்றல்ல! சில ஆயிரம் ஆண்டுகளாக!

கல்வி என்பது அறியாமை என்ற இருளகற்றும் அறம்! அக்கல்வியைக் கற்றாலும், அதற்தகு இந்த தமிழ்க் குலம் நிற்றல் இல்லை பன்னூறாண்டுகளாக.

ஆதலின்தான் அன்றும் இன்றும் சமுதாயத்திற்கு கற்ற கல்வி பயன்படாமல் செப்படி வித்தைகளை நம்பி சீரழிந்து வருகிறது. செப்படி வித்தைகளே ஆன்மீகமாய் காட்டப்பட்டிருக்கிறது.

சிலையொன்று பால் குடிக்கிறது என்று செப்படி வித்தைக்காரன் ஒருவன் சொல்ல, இதையும் மதவியாபாரிகள் ஏற்றம் செய்ய இழிந்த மக்கள் கூட்டம், அலை அலையாய் சாரி சாரியாய், இரவு பகலாய், ஒரு நாடல்ல, உலக வாழ் அத்தனை நாடுகளிலும் மெத்தப் படித்தவர்கள் அனைவரும் அச்சிலைக்குப் பால் ஊட்டினார்கள்.

பால் ஊட்டி விட்டு ஒவ்வொருவரும் கோழி திருடியவர்போல் "சிலை பால் குடித்ததா இல்லையா" என்பதைத் தெளிவாய் சொல்ல இயலாமல் தலை சொறிந்த நின்ற காட்சி மிகப் பரிதாபம்!

அறிவு நிரம்ப பெற்றவர்கள் இந்திய விஞ்ஞானிகள்! ஆராய்ந்து சொன்னார்கள் அறிவியல் காரணங்களை. ஆனால் மத விவகாரங்களில் விஞ்ஞானிகள் தலையிடக் கூடாது என்று கொதித்து எழுந்தது செப்படிக் கூட்டம்! தேம்பி நின்றது விஞ்ஞானம்! இக் கூட்டத்திற்கு முகப்பாய் நின்றவர் தேர்தல் புரட்சி செய்த மெத்தப் படித்த அறிவாளி!

எங்கே போகிறது இந்த சமுதாயம்? கல்வியின் பயனை செப்படி வித்தைகள் மறைக்கின்றன, கால காலமாய்! இதை ஆராய்ந்து பார் என்று சொன்னவர்கள் பழிக்கப் படுகிறார்கள் நாட்டில்!

கல்வி கற்றும் பயனில்லா இந்த நிலைமையைத்தான் தெளிந்து நாலடிகளார் சொல்கிறார்:

"பொன் கலத்திலே அமுதை வைத்தாலும், நாய் அதை உண்டு விட்டு தெருவோர எச்சில் இலையை நக்கிப்பார்த்து மகிழ்வுறும்" அப்படிப்பட்டதுதான் இந்த கீழான மனிதர் பெறும் கல்வியும். இக்கல்வி கற்றோரால் சமுதாயத்துக்கு விளையும் பயனும் கீழானதே!

"பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்-அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்."
-- நாலடியார்

கல்வி என்ற பொன்கல அமுதை வயிறு நிரம்ப உண்டு விட்டு மெல்ல நழுவிப் போய், தெருவில் கிடக்கும் நரகல்களான மந்திரம் மாயம் செப்படி வித்தைகளில் மனம் தோய்ந்து நாலடி சொன்ன நாய் போல வாழ்வதே இந்த சமுதாயத்தின் கற்ற மிகப் பெரும்பாலானோர் நிலை! இவர்களால் விளையும் தீங்குதான் அன்று கோவலனைக் கொலை செய்தது!

வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தான், 'ஒருவன் நுண்ணிய நூல்கள் எத்தனை கற்றாலும் அவனிடம் வழிவழி பிறப்பொடு வந்த உண்மை அறிவே மேம்பட்டு நிற்கும்' என்கிறார். இச்சமுதாயம் ஆழக்கற்றது அறிவுக்கு ஒவ்வாததைத்தான்!

அதனால்தான், கற்ற சமுதாயமும் மந்திரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கிறது.

"நுண்ணிய நூற்பல கற்பினும், மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்"
-- குறள்

அதுவே இன்றும், வேள்வி, ஊழல், காட்டுமிராண்டித்தனம், அசுத்தம், கொளுத்தல்கள், சண்டைகள் அனைவற்றிலும் பொன்னான காலங்கள் வீணாகப் போவதற்குக் காரணம்!

சிலம்பிலே பாண்டியன் உள்ளிட்ட சமுதாயத்தை எந்த மந்திர மாயங்கள் மயக்கி வைத்திருந்தனவோ, அதே நிலைதான் இன்றைய சமுதாயத்துள்ளும்!

கடுகளவும் மாற்றமில்லை!

தமிழகத்திலே, யாரும் யாரையும் கொளுத்தச் சொல்லவில்லை! சொல்லியிருக்க மாட்டார்கள்! ஆனால் கொளுத்தப்பட்டனர் சில கல்லூரிப் பெண்மணிகள்!

அன்றந்தக் காவலக் கல்லாக் களிமகன், பாண்டியனுக்கு சினம் தீர்த்து நற்பெயர் பெற கோவலன் குறுக்கே கொடுவாள் எறிந்தான்! ஆராயா அறிவிலி!

இன்றும் அரசாண்டு அதை இழந்தவர்க்கு ஆபத்தோ என்று அஞ்சி அவர்தம் நற்பெயர் பெற கொளுத்திவிட்டனர் சிலரை!

அதே கோழையிலக்கணம்!

அச்சம், கொந்தளிக்கும் குறு மதி! சுயநலச் சூத்திரம்!

இந்த நிலையிலேயே பல நூறாண்டுகளை கழித்துவிட்டு புலம்பி நிற்கும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம்!

சில நூறே ஆண்டுகள்தான் நிலம் கண்டுபிடிக்கப் பட்டு! ஆயினும் அடிப்படை மனித வாழ்வு நிரம்பி நிற்கும் அமெரிக்கப் பெரு நாடு!

சில பத்தே ஆண்டுமுன்தான்! தீக்குண்டால் சீரழிந்தது சிறுநாடு யப்பான்! ஆனால் இன்று ?

ஆனால் பல நூறு/ஆயிரம் ஆண்டுகளைப் பார்த்துவிட்டும் பாழ்பட்டு கிடப்பது இத்தமிழ்நாடு!

மந்திரமருந்து, செப்படி வித்தை, மத/சாதி மாயங்கள் பால் பற்றும் பயமும்; அதைத் தாண்ட நெஞ்சுறுதி இல்லா கோழை நாடாக, தமிழ்த்திருநாடு!

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் அதன் நெஞ்சில் வாளால் கீறிவிட்டு புதைத்த வீர சமுதாயம், மூடத்தனத்தின் அடிநக்கி வாழ்வது இழுக்கல்லவா?

சுத்த கையாலாகாத கோழைச் சமுதாயமாய் ஆகிப்போனது தமிழ்ச்சமுதாயம்!

இதைத்தான் வெகு தெளிவாக சிலம்பாசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார்!

அவர் வெறுமே, "பாண்டியன் தேரான் ஆகி" என்று சொல்லி விடவில்லை!

"வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."

இவ்விடத்து இதன் உட்கருத்து "ஊழ் வினை" அதாவது முற்பிறப்பில் செய்த பாவம் என்று கொள்வது பொருந்தாது!

இப்பிறப்பின் அவனின் பாவம் என்றால் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணை நாடியதுதான்!

வேறொரு பெண்ணையும் நாடுவோர்க் கெல்லாம் கொலைபடுதல்தான் வினை விளைவிக்கும் பயன் என்றால் பெரும்பாலான ஆடவர் அதற்காகவே வாழ்விழந்திருக்கவேண்டும்! பரத்தமை இலக்கணமும் வாழ்ந்திருக்காது!

ஆனால் வள்ளுவ வழி ஊழைப் பார்த்தால் இளங்கோவடிகள் பாண்டியனைத் தேரான் என்றது தெளிவாகும்!

ஊழ் என்றால் உலகியற்கை! அதற்கொரு அதிகாரம் குறளிலே!

ஒன்றை இழக்கச் செய்தற்குரிய உலக இயற்கை உண்டாகும்போது அது அறியாமையில் ஆழ்த்தும்! பெருகச் செய்யும் உலக இயற்கை உண்டாகும் போது அறிவைப் அகலமாக்கும்!

"பேதைப் படுத்தும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
--குறள்

இழக்கச் செய்யும் ஊழ் (உலக இயற்கை) சமுதாயத்தில் பெருகியதால் அறியாமை பெருகியது! அதாவது மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகள் பெருகின. அதனால் கோவலன் கொலையுண்டான்!

ஆகவே, பாண்டியன் நீதி தவறவில்லை! ஆனால் நீதி தேவன் மயக்கமுற்றான் மந்திரம் என்ற வார்த்தௌ முன்பு! அந்த மயக்கம் அவனுக்கு மட்டுமல்ல!

அவன் காலத்து அத்தனை நிலைகளிலும் மந்திர மாய மயக்கம்! இந்நாளைப் போலவே!!

அன்புடன்
நாக.இளங்கோவன்
20-பிப்ரவரி-2000

Sunday, February 13, 2000

சிலம்பு மடல் 23

சிலம்பு மடல் - 23 கொல்லன் சதியும்! பாண்டியன் மதியும்!
மதுரை:
கொலைக்களக் காதை:

காசு வரும் கண்ணகியின் காற்சிலம்பால் என்று சாவு வரும் திசை நோக்கி, சிந்தித்துக் காத்திருந்தான் கோவலன்;

அந்தப்புரம்:
அழகுப் பெண்டிர் அணிவகுக்கும்
அரசனின் ஆசைக் குடில்!

வகைவகையாய்ப் பெண்கள்!

அரசனின் ஆசையை அவ்வப்போது தீர்த்துவிட
எப்போதும் காத்திருக்கும் பெண்மந்தை!

அரச மண்டபம்:
அந்த ஆசையை அரசனுக்கு உருவாக்கும்
ஆடல்மேடை! அமைச்சரவையும் அங்கே!!

அந்த மேடையிலே பாண்டியன் நெடுஞ்செழியன்!

ஆடல் அரசிகளின் முட்டியவைகளின் வெட்டுதல்களைக் களித்துக் கொண்டே முட்டாதவைகளில் முயங்க மோகித் திருந்தானோ? என்று முகங்கோணுகிறாள் கோப்பெருந்தேவி!

பெண் பல ஆடவரை நினைத்தால் அருவருக்கும் சமுதாயத்தில், ஆடவன் எத்தனைப் பெண்டிருடன் சுற்றி விட்டு வந்தாலும் அவனைச் சிறு முனகலுடன் ஏற்றுக் கொண்டு விட்டு, கற்பென்ற காரணம் சொல்லும், முதுகெலும்பில்லா மூடப் பெண்களில் கோப்பெருந்தேவியும் ஒருத்தி!

ஒருவேளை பாண்டியன் மோகித்திருந்தானானால் அவனை அருவருத்து விட்டா இருக்கப் போகிறாள் ?

ஆடவனின் அளவுக்கும் அதிகமான ஆசையை அனுமதித்து விட்ட சமுதாயத்தில் கண்ணகி போன்ற பலருள் அவளும் ஒருத்திதான்!

தொலைக்காட்சியோ திரைப்படமோ இல்லாத காலத்தில் நேரடியாகவே கலைக்காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலை;

ஆடிய பெண்மணிகளின் அழகின் மேல் தேவி பொறாமைப் பட்டிருக்கவேண்டும்! தலை நோவென்று உள்கோபம் மறைத்து பாதியில் எழுந்து சென்று விட்டாள்.

பொய்க்கோபம் காட்டியிருந்தாள்!

பாண்டியன் ஏதும் தவறு செய்திருக்க மாட்டான் என்றுதான் கருதமுடிகிறது. அரசியின் மனம் வருந்துதலை அறிந்த உடனே அச்சமடைந்த பாண்டியன், தேவியோடு அன்பால் மலர்ந்த காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும்!

தேவியின் மனமுணர்ந்து சிறு அச்சமும் வருத்தமும் அவனுக்கேற்பட சற்றே குழப்பத்துடன் அவளிடம் தேடி நடக்கிறான்; அமைச்சரவை நீங்கி!

சிறு குழப்பம்தான்; தேவியிடம் அன்பைச் சொல்ல விரைகிறான்!

மன்னனின் விரைந்த கால்களின் வேகம் குறைத்தது கொல்லக்கயவன் வீழ்ந்து வணங்கி அவனைப் போற்றியது!

"ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதல் தேவி கூடாது ஏக,
சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புஉடைவாயில் கடைகாண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி!......."

மன்னா!

"அரசியாரின் சிலம்பொன்றைத் திருடியவன் யார் என்று கண்டுபிடித்தேன்!

கன்னக்கோலில்லை; குத்தும் கோலுமில்லை! மந்திரம் போட்டு காவலரை மயக்கி அரசியாரின் காற்சிலம்பை கவர்ந்தான் அக்கள்வன்!

இப்பொழுது அவனை என் இல்லத்தில் இருத்தியிருக்கிறேன்" என்றான் அந்தக் கொல்லக்கயவன்.

முதல் தகவல் அறிக்கையை அரசனிடம் சமர்ப்பிக்கிறான் கொல்லன்.

"கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்
துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயில் உறுத்துக்
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்என் பேர்ஊர்க் காவலர்க் கரந்துஎன்
சில்லைக் குடில் அகத்துஇருந் தோன்என...."

என்னடா உலகம் இது ?

மந்திரம் ஒன்றால் ,அரண்மனை வாயில்தோறும், வாசல்தோறும், வீதிதோறும் நிற்கும் காவலரை மயக்கி, அரசமாதேவியைச் சுற்றி இருக்கும் பெண்டிர் கூட்டத்தையும் மயக்கி, அரசியையும் மயக்கி, ஆங்கொரு சிலம்பைத் திருட முடியுமா? என்று
அரசன் நினைத்தானில்லை!

"மந்திரத்தால் இவ்வளவு முடியும் என்றால், அரசன் எதற்கு?
மந்திரவாதி போதுமே!

நாட்டைக் காக்க காவல் எதற்கு? எலுமிச்சையைக் கட்டி மந்திரம் போட்டு ஊரெல்லையில் வைத்துவிட்டால் பகைவர் வராமல் போய்விடுவரே!

நாடுபிடிக்க படைகள் எதற்கு? நான்கு மந்திரவாதிகள் போதுமே!"

அரசன் இதையெல்லாம் சிந்தித்தான் இல்லை!

கோழைகளின் பிழைப்பு மந்திரம்! அதையும் உணர்ந்தான் இல்லை.

ஆனால், பாண்டியன் கடமையிலிருந்து சிறிதும் தவறினான் இல்லை! இல்லவே இல்லை!!

மன்னவன் இல்லத் திருட்டாயினும், குடிகளிடம் களவு நடந்தாலும்
அதை ஆராய அதற்கென்ற காவலர் துறை இருக்கிறது!

இன்று பிரதமர் அல்லது அமைச்சர்களின் இல்லத்தில் களவு போனால், அதையும் காவல்துறையும் நீதித்துறையும்தான் ஆராய்கின்றன! ஆராயவேண்டும்; ஆராயமுடியும்.

பிரதமரோ அமைச்சரோ அந்த முதல் தகவல் அறிக்கையின் பால் ஆராயச் சென்றால் அது நகைப்புக்குரியது! அவ்வாறு அவர்கள் செய்தால் எத்தனைக் குற்றங்களுக்கு முறையான தீர்ப்பளிக்க முடியும்?

இதனை இதனால் இவன் செய்யும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடுதலே அரசனின் அல்லது தலைவனின் வேலை!

அதன்படியே பாண்டியனும் காவலரை அழைத்து விசாரிக்கச் சொல்கிறான்; விசாரனையில் தவறு கோவலனுடையது என்றால் அவனைக் கொல்லச் சொல்கிறான்!

இதில் யாதொரு பிழையும் பாண்டியனிடம் இல்லை! அவன் கடமையைத்தான் அவன் செய்தான்,

"ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்குஎன..."

கொல்லன் தன் வேலை எளிதில் முடிந்தது என்று அகமகிழ்ந்தான்;
காவலர்களை அழைத்துக் கொண்டு இல்லம் வந்து, சாவு வலை இறுகி வருவதை உணராத கோவலனைக் காட்டினான்;

கோவலனிடம் இருந்த சிலம்பைக் காவலரிடம் காட்டி இதுவே அரசியின் சிலம்பு என்று நம்பவைக்க முயன்றான், காவலர்களை தனியே அழைத்துச் சென்று!

வெட்டுதற்குக் கட்டப்பட்டிருக்கும் ஆட்டின் நிலையிலேயே கண்முன் நடப்பவைகளை அறியாதவனாய் கோவலன் சலனமில்லாமல் இருந்தான் அப்பொழுது!

காவலர் தலைவன் அவன் வேலையை முறைப்படியேதான் செய்தான்! கொல்லன் சொன்னதை உடனே நம்பி விடவில்லை;

இவனைப் பார்த்தால் களவு செய்பவன் போல் தெரியவில்லை என்றான் காவலர் தலைவன்!

காவல் பல கடந்து கடுங் களவு செய்பவர்களுக்குரிய தோற்றம் இல்லை என்று உணர்கிறான் காவலன்!

மேலும் ஆராய முற்படுகிறான்; ஆராய்கிறான்;

அவன் அனுபவம் சரியே!

செல்வச் சீமானாக வணிக குலத்தில் பிறந்தவன் வாழ்ந்த சூழலே வேறு. இடையர் தெருவில் நடந்த போது காளை ஒன்று சீறி எதிர் வருதல் துற்குறி என்று அவன் அறிந்திருக்க வில்லை;

காரணம் அச்சூழலே, அதாவது ஆடுமாடுகள் அலையும் இடையர் தெருக்களே அவன் அறியாதது என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார். அவனுக்குக் கள்ளத் தோற்றம் இல்லாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை! ஆயினும் நல்ல தோற்றம் கொண்டவர் எல்லாம் கள்ளர்கள் இல்லை என்று கொள்ள முடியாது.

"இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்
கொலைப்படு மகன்அலன் என்று கூறும்........"

ஆராய்ந்து தெளிதல் என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் ஆனால் கோழைகள் வாழ்வு கொடியேற வாய்ப்பே இல்லை! அதையும் கோழைகளும் நயவஞ்சகரும் நன்கு அறிந்தே இருப்பர்!

அடுத்தவர் வாழ்வை கெடுத்து வாழ்பவர்க்கும், மதம் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்த்து வாழ்வு செய்பவர்க்கும் இது பொருந்தும்.

எங்கே தீர ஆராயந்து விடுவரோ என்று அஞ்சினான் அந்தக் கொல்லக் கயவன்; ஆங்கு குழப்பினான் காவலர்களை;

காவலர்களை எள்ளி நகையாடினான்;

மந்திரத்தின் மகிமை அறியாதாராய் இருக்கிறீரே! இப்படிப்பட்ட கள்வர்கள் மந்திரத்தால் மருந்து வைத்துத் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்பதை அறியாத நீங்கள் காவலரா என்று இகழ் நகை செய்தான் கொல்லன், காவலரைப் பார்த்து!

இத்தகு மந்திரக் கள்வர்கள் இந்திரனின் மார்பில் அணியும் ஆரத்தினையும் கவர்ந்துவிடும் வல்லவர்கள் என்று வஞ்சக மொழி பகன்றான்!

ஆதாரமாக, கண்டறியப்படா களவுகள் சிலவற்றை எடுத்துக் கூறினான்; மந்திரத்தால் தந்திரமாக நடந்ததென்று அடித்துக் கூறினான்.

மனிதனின் அறிவுக்கெட்டாத அனைத்தும் மந்திரமாகவும் மாயமாகவும் தெரிகிறதல்லவா! அம்மந்திரங்களும் மாயங்களும் அறிவிலார்க்குப் பிழைப்புக் கருவிகளாகி விடுகின்றன.

அறிவு வளர்ந்த சமுதாயமே ஆக்கங்களை உலகில் ஏற்படுத்தக் காண்கிறோம். அறிவு கெட்ட சமுதாயம் மந்திரத்திலும் மாயங்களிலும் மனதைப் பறி கொடுத்து தேம்பி நிற்பதை இன்றளவும் நாம் கண்டு கொண்டே இருக்கிறோம்!

இளைய காவலருள் ஒருவனும் மந்திரக் களவொன்று குறித்து கதை ஒன்று சொன்னான்; அவன் தன்னால் பிடிக்க இயலாத கள்வன் ஒருவனை மந்திர மருந்துக் கள்வன் என்று சொல்லிக் கொண்டு தன் இயலாமையை தனக்குள் தேக்கிக் கொண்டவன்:

மந்திரம் என்ற சொல்லிடம் பயந்த அவன், அரசனிடமும் பயந்தான்; இவனைக் கொல்வதே அரசனின் சினத்தில் இருந்து காக்கும் என்று கருத்துக் கூறினான்.

அறிவற்ற கோழைகள் அனைத்திற்கும் பயந்தவர்கள் அல்லவா ?

காவலர் தலைவனின் மனம் மாறவில்லை!

அனைவரின் கூற்றையும் ஆராய்ந்து கொண்டே இருந்தான்!

இதுகாறும் கோவலனிடம் குற்றம் பற்றி ஒரு வார்த்தையும் யாரும் கேட்கவில்லை!

நடக்கும் கருத்துப் பறிமாற்றங்கள் சற்று தூரத்திலேயே நடக்கின்றன. காற்சிலம்பை மதிப்பிடுகிறார்கள் என்றே கோவலன் கருதியிருக்க வேண்டும்.

ஆனால், மந்திரத்தின்பால் இருந்த மயக்கத்தால், நம்பிக்கையால்,
ஆராயும் அறிவற்றவர்களிடம் இருக்கும் உணர்வு உந்தலினால், காவலர்களுள் "கல்லாக் களிமகன்" ஒருவன், மூடநம்பிக்கைப் பற்றினால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவசரப்பட்டான்;

மூடநம்பிக்கையால் ஆத்திரம் வந்ததும் அடுத்தவன் குடலை உருவ நினைத்த காட்டு மிராண்டி அந்தக் "கல்லாக் களிமகன்".

காவலர் தலைவனின் ஆணைக்கும் காத்திருக்கவில்லை! உருவிய வாளுடன் ஓடிப் பாய்ந்தான் கோவலன் மேல்!

கோவலனின் குறுக்கே கொடுவாள் எறிந்தான்!

சற்றே வளர்ந்து விட்ட பூஞ்செடி தன் உச்சியில் மலர்ந்த ஒற்றை வெண் பூவோடு காற்றடிக்கும் திசையெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதைப் போல, கோவலன் சலனமுற்று வாழ்ந்தவன்.

தற்போது மனமும் குற்றமற்று விடியல் நோக்கி அமைதியாக சிந்தித்துக் காத்திருந்தது, காற்சிலம்பிற்கு காசு வரும் என்று!

ஆனால் வந்தது வாள் அவன் உடலின் குறுக்கே! கோவலனின் தலை சற்றுத் தள்ளி வீழ்ந்தது!

"அரிதுஇவர் செய்தி அலைக்கு வேந்தனும்
உரியதுஒன்று உரைமின் உறுபடை யீர்எனக்
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்; விலங்குஊடு அறுத்தது."

வெள்ளை ரோசா மலருக்கு, தன்னைக் கொய்யப் போவது எப்படி தெரியாதோ அப்படியே கோவலன் நிலை.

கொய்யப்பட்டதும் கோவலனின் தலை சேற்றில் விழுந்த மலராய் குருதிச் சேற்றில் நனைந்தது.

"புண்உமிழ் குருதி பொழிந்துஉடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்."

கொல்லன் கயவன்; பொய்சொன்னான்!

பாண்டியன் ஆராய்ந்து கொல்ல காவலரை ஏவி கடமை செய்தான்!

காவலர் தலைவன் ஆராய்ந்தான்!

கல்லாக் காவலக் களிமகன் ஒருவன் தலைவனின் ஆணையும் இன்றி உணர்வுகளின் உந்துதலில், அவசரத்தில் கொலை செய்தான்!

இப்படியிருக்க இளங்கோவடிகள்
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி...."
என்று, பாண்டியன் தீர ஆராயாததை தெளிவிக்கிறார். பாண்டியனின் பிழை எங்கே? எங்ஙனம்?

ஆராய்வதில் தவறா? இல்லை யென்றால் வேறுயாது? விடை காண்போம்!

காரணமறியாமலேயே உடல் வேறு தலை வேறாகி சில துள்ளல்களோடு குருதிச் சேற்றில் குளிர்ந்து போனான் கோவலன்.

கழுத்து அறுபடும் போது அவன் அறத்தை நினைத்தானா? அல்லது வஞ்சக மறத்தை வெறுத்தானா?

கண்களில் நின்றவள் கண்ணகியா? மாதவியா? இருவருமா? தந்தை தாய் சுற்றம் நினைத்தானா ?

சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டில் மறைந்த கோவலனின் நேர்மைக்கு சாட்சி சொல்ல இருக்கும் இரண்டே மகளிர், என்றும் வாழும் காவிரியும் வையையும் ஆவர்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000

சிலம்பு மடல் 22

சிலம்பு மடல் - 22 கண்ணகியின் கடைசி மனையறம்!
மதுரை:
கொலைக்களக் காதை:

அடைக்கலம் தந்த இடைச்சியின் சிறு வீட்டில், அவள் அளித்த காய்கறிகளைக் கொண்டு, வியர்க்க விறு விறுக்க தன் கண்ணாளனுக்கு உணவு செய்கிறாள் கண்ணகி, பல காலங்களுக்குப் பின்னர்!

மாதவியிடம் இருந்து மீண்டு வந்தும், கடமை கருதி உடன் நாடு நீங்கினரே அல்லாமல் வீடு வாழ்ந்தார் அல்ல!

அவளின் கடைசிச் சமையலை உண்ணத்தான் உயிர் வாழ்ந்தானோ கோவலன்? கடைசிச் சோறைக் காலம் தாழ்த்தி உண்ணத்தான் காதங்கள் பல கடந்து மதுரையம்பதி சேர்ந்தானோ?

செல்வச் சீமான் தன் கடைசி நாட்களை நாடோ டிக் கழித்திருக்கிறான் காதல் மனைவியுடன்! கடைசி நாளில் மனைவியின் கையால் தன் வாய்க்கு விருந்தளிக்கிறான்!

சிறு வெள்ளைப் பனம் பாயொன்றை சாணம் மெழுகிய தரையில் போட்டு அமரச்செய்தாள் அவனை! தூய நீரில் அவன் கால் அடிகளை துடைத்து விட்டு சற்றே தரைக்கு தண்ணீர் தெளிக்கிறாள்!; நடக்கப் போகும் கோவல-கண்ணகியின் மரணத்தை எண்ணி அஞ்சி மயக்கமுற்றுக் கிடந்த நிலமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புதல் போல!

ஈனா வாழையின் குருத்தொன்றை விரித்துப் போட்டு அன்னமிட்டாள்! அமுதென்று உண்டான்!

அவன் உணவுண்ணும் அழகில் ஆயர்பாடிக் கண்ணணைக் கண்டனர் இடைச்சி மாதரியும் அவள் மகள் ஐயையும்;

கோவலன் மனதிலே ஒரு அமைதி!

இழக்கப்போகும் தலைக்கு, இழந்த வாழ்க்கை திரும்பிய நிம்மதி!

"சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்குஒழிப் பனள்போல்
தண் ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து,
அமுதம் உண்க அடிகள் ஈங்கு'என......"

உண்ட இடத்தை சுத்தம் செய்து, வெற்றிலை நீட்டிய கண்ணகியின் கரத்தைப் பற்றி மெல்ல இழுத்து அணைத்துக் கொள்கிறான்!

பல காலம் முன்னர் படுத்துப் புரண்டிருந்தாலும், அப்பொழுது அணைத்துக் கொண்டபோது அரைவினாடி புதுமை நினைவு!

அடுத்த அரை வினாடியில் பல ஆண்டுகளை வாழ்ந்துவிட்ட உணர்வு!

அதற்கு மேல் பொறுக்கவில்லை கோவலனுக்குத் தான் செய்த குற்றங்கள்!

பருக்கைக் கற்கள் குத்திய வண்ணச் சீறடியின் வண்ண மாற்றத்தைக் கண்டு இரங்குகிறான்!

சாகப்போகுமுன் பாவக்கணக்கு சொன்னான் கண்ணகியிடம்; கண்கள் பனிக்க!

என் பெற்றோருக்கு, துயர் தந்தேன்! பரத்தமை சேர்ந்தேன்! பயனில் பேசுவர் சேர்ந்தேன்! ஏளனப்பட்டேன்! இகழ நடந்தேன்! பெரியோர் சொல் மறந்தேன்! சிறு வயதேயாயினும் அறிவிற் சிறந்த உனைத் தவிக்கவிட்டேன்! தத்தளித்தாய்! அதைத் தாங்கமுடியவில்லை இப்போது எனக்கு! புறப்படு என்றதும் புறப்பட்டாயே என் உயிரே, உனையாப் பிரிந்தேன்!?

குற்ற உணர்வினால் குறுகிப் போனான்! நாளைய கதி அறியாது,
நற்கதி வேண்டி ஏங்கினான்!

நிரந்தரமாய்ப் பிரிகையிலே, இடையிலே பிரிந்ததை எண்ணி வருந்தினான்!

அனைவருக்கும் துன்பம் தந்த போற்றா ஒழுக்கம் செய்தீராயினும் (உங்கள் சொல்) மாறா உள்ளம் படைத்த வாழ்க்கையை உடையவள் நான் ஆதலால் உங்களுடன் உடன் புறப்பட்டேன் என்றாள் செல்வக் கொழுந்து!

"போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றுஎழுந் தனன்யான் என்றுஅவள் கூற..."

மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

என்று, அன்று மனையறம் புகுந்த போது அவளைப் போற்றிய கோவலன் இன்று மரணம் புகும்போதும் போற்றுகிறான் அவளை!

"பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய் நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!...."

பெண்ணின்பத்திற்காகப் பேரலைச்சல் அலைந்தவன் கண்ணின் மணியாளின் காதலிலும் கற்பிலும் காலம் கடந்து கரைந்து கடைசி முறையாக அவள் மெய் முழுவதையும் தழுவிக் கொண்டு கண்ணகியின் காற்சிலம்பொன்றைக் கடன் பெறுகிறான்; காலமுழு காதல் வாழ்க்கைக்குப் பொருள் ஈட்ட!

"என்னோடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகஎனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ......."

இல்லம் தாண்டி தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான்! காளையொன்று பாய்ந்து வந்தது தீயகுறி என்பதை அறிந்திருக்காதவனாய் நடையைத் தொடர்கிறான்! கண்ணகிக்கும் அவனுக்கும் இடைவெளி தூரமாக ஆகிக்கொண்டேயிருக்க, அது நிரந்தர இடைவெளி என்று அறியாது, இருவரின் கண்களில் இருந்து இருவரும் மறைய, பல வீதிகளைக் கடந்து பொற்கொல்லர் வீதியில் நுழைந்தான்!

பல நுட்பங்கள் சமைக்கும் பொற்கொல்லர்கள் ஆங்காங்கிருக்க பலர் முன்னும் பின்னும் வர இவனோ 'சட்டை' அணிந்து துலாம் தூக்கி நடந்த கொல்லனைப் பார்த்து, அவனை அனுகுகிறான்!

மேலங்கி அணிந்திருந்ததாலேயே அவனை அரசனால் சிறப்புப் பெற்றவன் என்று எண்ணுகிறான்! ஏமாளி ஆகிறான்!

அயலூராரை அறியாத அப்பாவி!

'சட்டை' அல்லது மேலங்கி போட்டு நடந்தாலே அரசனால் மதிக்கத் தக்கவன் என்று இருந்த காலம் போலும்! ஏனைய கொல்லர்கள் மேலங்கி இல்லாதிருந்திருக்க வேண்டும்!

"நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவன்எனப் பொருந்திக்...."

பார்வையில் தோற்றான் கோவலன்!

நல் மக்களைப் போன்றே இருப்பர் கயவர்! அவர்களைப் போல நல் மக்கள் தோற்றத்தில் இருப்பவரை யாம் கண்டதில்லை என்று
திருவள்ளுவரே அஞ்சி ஒதுங்கிப் போகிறார்!

கயவரைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடும் திறன் சொல்லவில்லை குறள்!

ஆனால்
"மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"
என்று கூறிவிட்டு வள்ளுவம் வாய்மூடிக் கொள்கிறது!

கோவலன் என்ன செய்வான் பாவம்!

ஒரு காற்சிலம்பை மட்டும் விற்று தொழில் செய்து பொருளீட்டலாம் என்று ஒரு பெருந்தனக்காரன் நினைக்கிறான் என்றால் அச்சிலம்பு பொருள் மதிப்பு மிக்கதாக இருக்கவேண்டும்!

ஆடைப்பகட்டைப் பார்த்தவுடன் தன் மனையாளின் விலைமதிப்பு மிக்க சிலம்பை விற்க சரியான ஆள் என்று நினைத்தான்! ஏமாந்து விட்டான்;

தனக்கு ஒரு குறை உண்டானால் அதனைப் போக்கிட, தன்னை விற்று விடுவர் கயவர் என்று எழுத வள்ளுவர் எத்தனைக் கயவரிடம் ஏமாந்தாரோ தெரியவில்லை! அதனால்தான்

"எற்றிற் குரியவர் கயவர் ? ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து"

என்று எழுதிவைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்! இக்கொல்லக் கயவனும் அங்ஙனமே! தான் பாண்டியன் மனையில் சிலம்பு திருடிய சேதி வெளியாகாமல் இருக்க (அல்லது வெளியாகும் முன்), அதற்கொப்பாக இருந்த கண்ணகி சிலம்பைக் காட்டி, காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டான்!

பாண்டியன் பட்டத்தரசிக்கல்லது வேறு யாருக்கும் பொருத்தமுடையதல்ல இச்சிலம்பு; ஆதலில் என் இல்லத்தில் காத்திருப்பீர்! காட்டி வருவேன் வேந்தனிடம், என்று கூறி கோவலனை தன் இல்லத்தருகே இருக்கச் செய்கிறான்!

இவனும் அவன் குடிலருகே இருந்த தேவகோட்ட மதிலுக்குள்
சென்று தங்கினான்!

பொருள் தேடவந்தவன் அமைதியாகக் காத்திருந்தான்; சாவு வந்து கொண்டிருப்பதை எப்படி அறிவான் ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000