Pages

Wednesday, August 05, 2020

தெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.

 https://www.unicode.org/L2/L2020/20172.htm


தமிழ் எழுத்துகளை தெலுங்கில் சேர்க்க முடிவு செய்த ஒருங்குறிச் சேர்த்தியம், தற்போது அந்த முடிவை பின்னெடுத்துக் கொண்டது என்ற நல்ல செய்தி இன்று கிடைத்துள்ளது.

போன ஏப்பிரல் மாதம் தமிழின் ழ, ற எழுத்துகளை, தெலுங்கு ஒருங்குறிக்கு அதன் நெடுங்கணக்கில் சேர்க்க திரு,வினோதுராசன் முன்னீடு வைத்திருந்தார். ஒருங்குறிச் சேர்த்தியம் அதை ஏற்றுக்கொண்டு அறிவிக்கை செய்திருந்தது. தமிழக அரசின் தமிழ் இணைய கல்விக்கழகம் வல்லுநர் குழு அமைத்து அதை ஆய்வு செய்து, அந்த முன்னீட்டில் இருக்கும் பிழையான கூறுகளைச் சுட்டிக்காட்டி, தமிழெழுத்துகளைச் சேர்க்கக் கூடாது என்று ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு, எழுதியிருந்தது. தற்போது ஒருங்குறிச் சேர்த்தியம் தன் முடிவை மாற்றிக்கொண்டு, அவ்வெழுத்துகளை பின்னெடுப்பதாக அறிவித்திருக்கிறது.

தமிழிணைய கல்விக்கழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நன்றிகள்.

வல்லுநர்க்குழுவில் பங்காற்றிய பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இராசவேலு, முனைவர் இரமணசர்மா, முனைவர் சேம்சு அந்தோனி ஆகியோர் நன்றிக்குரியவர்கள். இவர்களோடு நானும் அக்குழுவில் பங்காற்றியிருந்தேன்.

மேலும் இவ்வாய்வுகள் செம்மையாக நடந்து அறிக்கைகள் சேர்த்தியத்திற்குச் செல்ல உதவியாக வழிகாட்டியாக இருந்த திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு மிக்க நன்றியுடையோம்.

நேரடியாகவும், பின்புலத்திலும் உதவியும், சான்றுகளும், ஆதரவும் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சில தெலுங்கு நண்பர்கள் செய்த மொழி சார்ந்த உதவிகள் பயன் தந்தன. அவர்களுக்கும் நன்றிகள்.

எளிதாக முடிந்திருக்க வேண்டிய இவ்விதயம், சிலர் மேம்போக்காக அந்த முன்னீட்டைப் பார்த்துவிட்டு, "தெலுங்குக்கு தமிழ் எழுத்துகள் போனால், அது தமிழுக்கு நல்லது" என்றும் "தமிழ் தெலுங்குக்குப் போவதை மறுக்க வேண்டியது தெலுங்கர்கள் உரிமை, நாம் ஏன் அலட்ட வேண்டும்" என்றும் முகநூலில் எழுதி குழப்பிவிட்டதால், பல இடங்களில் கடுமையான நெருக்கடிகளைத் தந்தது. ஆயினும் இறுதியில் நல்லபடியாக முடிந்ததில் எமக்கு/நமக்கு மகிழ்ச்சி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
05/08/2020

தெலுங்குக்கு தமிழ் எழுத்துகள் போகக்கூடாது என்ற ஆய்வறிக்கையின் தமிழ்வடிவத்தை இங்கே காணலாம்.
https://nayanam.blogspot.com/2020/06/blog-post.html…

#ஒருங்குறி #Unicode


Tuesday, July 14, 2020

புறநானூறு-281, 296: நோய் தீர தனிமைப்படுத்தல்(Quarantining in Sangam Period)

Image may contain: food


பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும்.


தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவன்.

மண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான்.

உடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும்? மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு.

மாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கி பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத்திலும் திமிர் இருக்க வேண்டும். ஆயினும் போர் முடிந்த பின்னர் கொடுமையாக புண்பட்ட உடல் வாடி வருந்தத்தானே செய்யும்!

அரசனைக் காப்பாற்றிய தலைவன், வீட்டில், உடல் வருத்தம் போக்கும் மருத்துவத்தில் இருக்கிறான். அவனைக்காண, பாடலை எழுதிய பெரும்புலவர் அரிசில் கிழார் வருகிறார். அரசன் பார்த்து வரச்சொன்னானோ தெரியவில்லை.

தலைவனின் மனைவி, தனது இல்லத்தின் இன்னொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது.

ஆழமான புண்கள். மருந்து போட்டிருக்கேன். ஆறவேண்டும்னா வெளியேயிருந்து தொற்று ஏதும் வந்துவிடக்கூடாது. நாமும் வெளியே போய் தொற்றிக் கொண்டு வரக்கூடாது.

வாசலின், இறவாணத்தில் வேப்ப இலைகளோடு, இரவந்தழைகளைச் செருகி வைக்கலாம். அவை வருவோருக்கு உள்ளே வரவேண்டாம் என்று செய்தியைச் சொல்லிவிடும். பேய் போன்ற வெருவிகள் (virus), பிறகிருமிகள் உள்ளே நுழையவும் விடாது.

மையென அரைத்த சாந்தினை வீட்டின் உள்ளே சுற்றி பூசிவிடுவோம். எறும்பு போன்றன ஊர்ந்து வந்து தலைவனின் புண்ணைத் தீண்டா.

தலைவனின் படுக்கையைச்சுற்றி வெண்கடுகை (ஐயவி) தூவி வைப்போம். அதைத்தாண்டி எந்தக் கிருமியும், பூச்சியும் பேயெனப் போக முடியாது.

இந்தப் பெரிய வீடு முழுதும், வெருவி போன்ற தொற்றுகளைக் (Infections) கடிந்து விரட்டுகிற/கொல்கின்ற மூலிகைப்பண்டங்களை இட்டு நறுமணப்புகை வீசச்செய்வோம் (கடிநறை).

இவை அவனின் உடலைக் காக்கும்.

கூடவே, பிள்ளைகளை விட்டு ஆம்பல் குழல்களை ஊதச்செய்வோம்! (அல்லிமலர்த் தண்டு, குழல் போல இருக்கும். அதை ஊதினால் ஓசை வரும்) பிள்ளைகள் ஊதும்போது வீடும் கலகலப்பாக இருக்கும், தலைவனின் மனதிற்கும் இதமாக இருக்கும்.

விரைவில் புண்கள் ஆறவேண்டும் என்றும், நோய்த்தொற்று புண்களைத் தீண்டி புரையோட விடக்கூடாது என்று வேண்டி, காஞ்சிப் பண் கூட்டிய பாடல்களைப் பாடுவோம்; ஒலிக்கும் மணியை அடிப்போம். பின்னர், ஆங்கு, கோட்டுயாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து இனிமையான இசையால் இல்லத்தை நிறைப்போம்.

தலைவனின் உடலில் உள்ள புண்களை மருந்தால் ஆற்றுவோம். மனதிற்கு, பாடலும் இசையும் கலகலப்பும் மருந்தாகட்டும்.

என்று அனைத்து முறைகளையும், தன் இல்லப்பெண்டிர் ஒருத்தியிடம் தலைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட புலவரான அரிசில் கிழார், "தலைவனின் வீட்டுக்குள் செல்ல வேண்டாம், சென்று மருத்துவத்திற்கு இடர் தரவேண்டாம்" என்று எண்ணி, திரும்பிப் போய்விட்டார்.

போனவர் தலைவி பேசிக்கொண்டிருந்ததை பாட்டாக எழுதி அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனாரோ என்னவோ! அரசக்குடி, அரசனின் உயிரைக் காத்த தலைவனைப் பற்றிய அந்தப்பாடலை வழிவழியாய்க் காப்பாற்றி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் நமக்கும் படிக்கத் தந்திருக்கிறது.

கொரொனா வெருவியால் உலகமே தனிப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையிலும், வேம்பைச் செருகி, வேம்புமஞ்சள் நீரில் கழுவி, நாற்புலன்களை கட்டி, வீட்டையும் பொருள்களையும் தம்மையும் தூய்மையாக்கிக் கொண்டு தனித்திருக்கும் இதே காட்சியை சங்க காலத்திலும் காணமுடிகிறது.

தனிமைப்படுத்தல் என்பதற்கு நமது தொன்மையான வாழ்வியலிலேயே இலக்கணம் உண்டு. அதைத்தான் புறம்-281ம், 296ம் சொல்கின்றன.

அதன் தொடர்ச்சியை அம்மை வார்த்த இல்லத்தில் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது தமிழ்க்குமுகம். வேம்பு, மஞ்சள், தூய்மை, கூழுணவு, மோர் போன்றவற்றோடு, மன வலுவிற்கு மாரியம்மன் தாலாட்டைப் பாடுவதுதான் தனிமைப்படுத்தப்பட்ட அம்மை மருத்துவம்.

வெண்கடுகை அகிலோடு கலந்து இல்லம் முழுதும் புகைக்க வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலேயே இன்றும் உண்டு.

காஞ்சித் திணையில், அரிசில் கிழாரின் 281ஆம் பாட்டு என்ன துறை தெரியுமா? தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன? பேய்/வெருவி ஒருத்தரை தொடாதிருக்க, தீண்டாதிருக்க, தனிமையில் இருக்க, Quarantine-ல் இருக்க ஒரு பாட்டுத்துறையே இருக்கிறதென்றால், தமிழ்க் குமுகத்தின் தொன்மத்தை அளக்க முடிந்தால் அளந்து கொள்ளுங்கள்!

புறம்-296ஐப் பற்றி விளக்கப்போவதில்லை. தொடர்பிருப்பதால், தொட்டுக்காட்டுகிறேன்.

வாகைத்திணையில் ஏறாண்முல்லைத்துறையில் பாடிய பாட்டில்,
"வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்று அவ்வே......"

"போரில் இருந்து திரும்பிய புண்பட்ட வீரர்களின் வீட்டிலெல்லாம் வேப்பந்தழையை பறிக்கவும், வெண்கடுகை இட்டு புகைக்கவும் (அகில்/சாம்பிரானி மாதிரி), காஞ்சிப்பண்னைப் பாடவுமாக இருக்கிறார்கள்; பேய்/நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க" என்பது அந்த மூன்று வரிகளின் பொருள்.

ஐயவி என்ற வெண்கடுகை, அகில் என்ற சாம்பிரானியுடன் (வேண்டுமானால் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து) வீட்டில் புகைப்பது கண்ணுக்குத் தெரியா வெருவிகள், கிருமிகள் போன்றவற்றிருந்து நமது உடலையும் மனதையும் பாதுகாக்கும் அருமருந்தென்று புறநானூறு சொல்லித்தருகிறது.

பாடல்: புறம்-281
பாடியவர்: அரிசில் கிழார் (காஞ்சித்திணை, தொடாக்காஞ்சித்துறை)
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

பொருள்:
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ = இனிமையான கனிகளைத் தரும் இரவமரத்தின் இலைகளோடு, வேப்பந் தழைகளையும் சேர்த்து வாசலில் இறவாணத்தில் செருகி.
யாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க = ஆங்கு, கோட்டு யாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து.
ஐயவி = வெண்கடுகு
கைபய = மெதுவாக கையை பெயர்த்து
மையிழுது = மை போன்ற சாந்து
இசைமணி = பூசை செய்யும் போது அடிக்கின்ற மணி போன்றது
காஞ்சி பாடி = காஞ்சிப்பண் கூட்டிய பாட்டைப் பாடி
நெடுநகர் = பெரிய வீடு
கடிநறை = நோய்விரட்டும் நறுமண புகை தரும் பொருள்
காக்கம் வம்மோ = காப்பாற்றலாம் வாம்மா
வேந்து உறு விழுமம் தாங்கிய = அரசனுக்கு ஏற்பட்ட இன்னலைத் தாங்கிய
பூம்பொறிக்கழல் = உயர்ந்த பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கழல்
நெடுந்தகை = உயர்ந்த வீரன்

அன்புடன்
நாக.இளங்கோவன்
11/சூலை/2020

புறநானூறு-263: வண்டு மேம்படூஉம்

Image may contain: one or more people, sky and outdoor



ஊருக்கு அவன் தலைவன். அறத்திலும் மறத்திலும் சிறந்தவன் அப்பொழுதெல்லாம் தலைவனாக இருக்க முடிந்தது. ஊரையும், சான்றோர் பலரையும் சிறப்பாக பேணி, புரந்து, காத்து வந்ததால் அவன் தலைவன். முல்லை நிலத்து ஊர் என்றால் காடுகள் சுற்றியிருக்கத்தானே செய்யும்!




மேளம், தவில், உடுக்கு, பறை உள்ளிட்ட முழவுக்கருவிகளில் பறை மட்டும் ஒரு வகையில் மாறுபடும். பறைக்கு ஒருபக்கம் மட்டுமே கண் இருக்கும். மறுபக்கம் வெற்றாக இருக்கும். பெரிய களிற்றின், அதாவது பெரிய ஆண் யானை, தனது பாதத்தைப் பதித்தால் வட்டம் வருமே, அதுதான் அந்தப்பறையின் அளவு. "பெருங் களிற்று அடியில் தோன்றும் ஒருகண் இரும் பறை" என்று இந்தப்பாடலாசிரியர் பறைக்கு அளவு கூறுவது வியக்கத்தக்கது.

அந்த ஒரு கண் பறையை, ஏந்திக்கொண்டு ஒருவன், காட்டுவழியே தலைவனைக் காண நடந்து வருகிறான். அவன் பாணனாக இருக்கக்கூடும். இரவலன் அவன். இரவலன் என்றால் இரந்துண்ண வருபவன் என்பது மட்டும் பொருளல்ல. ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைக் கொள்பவனும் இரவலனே. காட்டு வழியே வருவதால், விலங்குகளை பறையை முழக்கி விரட்டுவதற்காக, பாதுகாப்பிற்காக அதை ஏந்தி வருகிறான்.

ஊரை நோக்கி அவன் வருகையில்ம் பசுமையிழ்ந்த அந்தக்காட்டின் பாதையில், ஊரை விட்டு வெளிப்போகும் சான்றோராகிய இந்தப் பாடலின் ஆசிரியர் வருகிறார். இருவரும் சந்திக்கிறார்.

பாணன் கேட்கிறான்; "தலைவன் இருக்கிறானா? பார்க்கப் போகிறேன்"

சான்றோர் சற்றே தயங்குகிறார். பின்பு கூறுகிறார்:

சின்னாள் முன்னர், ஊரின் கால்நடைகளை எல்லாம் அயலூரார் வெட்சிப்போர் செய்து கவர்ந்து போயினர். மக்களின் கவலை தீர்க்க, இழப்பை நீக்க, தலைவன் கரந்தைப் படை திரட்டி ஆநிரை மீட்கச் சென்றான். கடுமையாக போரிட்டு ஆனிரையை (பசு உள்ளிட்ட கால்நடைகள்) மீட்டும் விட்டது படை. மீட்ட ஆனிரையை ஓட்டிக்கொண்டு வருகையில், வெட்சிப்படையினர் மீண்டும் திரண்டு வந்து கடுமையாக தாக்கினர்.

ஆனிரையைக் காக்கும்பொருட்டு கூடவந்த மறவர்களை முன்னால் ஆனிரையை ஓட்டிச் செல்லவைத்து, அவர்களுக்கெல்லாம் காவலாய் தலைவன் மட்டும் வெட்சிப்படையோடு போரிட்டான்.

கடுமையான போர். அவன்மேல் விழுந்த அம்புமழையில் மூழ்கினான்.
ஆயினும் பகைவரால் அவனைத்தாண்டி மீண்டும் ஆனிரையை கைப்பற்ற முடியவில்லை. வீரரொடு ஆனிரை மீண்டு ஊர் சேர்ந்தது. தலைவன் மட்டும் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தான்.

ஊரே துயரத்தில் மூழ்கியிருக்கிறது.

இன்றுதான், அவன் நினைவாக நடுகல் ஊன்றி, அதற்கு இறகுகள் சூட்டி, அவன் பெயர் பொறித்து, சான்றோரொடு ஊர்கூடி அவனை வழிபட்டு மரியாதை செய்துவிட்டு எனது ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்.

பாணனின் முகம் துயர் பட்டது.

கவனித்த சான்றோன், இதைக்கேட்ட பின்னும் நீ அவ்வூரைச் சென்று சேர்வாய் எனில், தலைவனுக்காய் சமைத்த நடுகல்லை வழிபடாமல் இருக்காதே. அவனை வழிபட்டால் இம்மண்ணில் வண்டு மேம்படும்!

சான்றோர் அறிவுரை கூறியதும் இருவரும் தம்வழியே சென்றனர்.

அது என்ன வண்டு மேம்படும்?

நடுகல்லாக நிற்கின்ற தலைவனை வழிபட்டால், இம்மண்ணில் மழை பெய்யும். மழைபெய்தால், பசுமை இழந்த இம்மண்ணில் செடி கொடி மரங்கள் துளிர்க்கும். துளிர்த்தவையெல்லாம் பூக்கும். மகரந்தங்களை தேனீக்கள் சேர்த்து வைக்கும். காடுகள் பசுமையாகி காய்க்கும், கனியும். மண்ணில் பூச்சி புழுக்கள் உயிர்பெறும். பயிர் வளம் செழிக்கும். பறவைகள் பெருகும். உணவுச்சங்கலி உயிர் பெறும். மக்களின் பசி தீரும்.

பூச்சி, புழு, தேனீ, வண்டு, பறவைகள் யாவையும் இங்கே வண்டு என்ற ஒற்றைச்சொல்லில் அடைபெற்றன. இவை மேம்படும் என்றால் நிலம் செழித்தது என்று பொருள்.

அட, இதைத்தானே நம்மாழ்வார் என்ற நமது கண்முன் வாழ்ந்த சான்றோரும் கூறினார்.

இரசாயன நஞ்சான உரம், பூச்சிக்கொல்லி, வளர்ச்சி ஊக்கி, உச்ச நஞ்சான களைக்கொல்லி என்ற இவற்றை மண்ணில் கொட்டியதால், மண் செத்தது. மண் செத்தது என்றால் நன்மை செய்யும் வண்டு, பூச்சி புழுக்கள் செத்தன என்று பொருள். பூச்சி புழுக்கள் செத்தன என்றால் காய், கனிகள் செத்தன என்று பொருள். காய், கனிகள் செத்தன என்றால் பறவைகள் செத்தன என்று பொருள். பறவைகள் செத்தன என்றால் உணவுச்சங்கிலி அறுந்தது என்று பொருள்.

நம்மாழ்வார் 30 ஆண்டுகளாக இந்த மண் முழுக்க அலைந்து திரிந்து சொன்னது எல்லாம், "வண்டு மேம்படூஉம்" என்று, 2000-2500 ஆண்டுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்க்குமுகத்தின், இயற்கை சார்ந்த வாழ்வியல் சிந்தனை மரபுதானே!

இப்பொழுது நம்மாழ்வாரின் இந்த விழியத்தை கேட்டுப்பாருங்கள்.

https://m.youtube.com/watch?v=xehvMPJfQ30

இந்தச் சான்றோரான நம்மாழ்வார்தான் சங்கச்சான்றோரா, அல்லது அந்தச் சான்றோர்தான் இந்த நம்மாழ்வாரா? வேறுபாடு தெரியவில்லை.

இந்த மண்ணின் இயற்கையை, சூழலை, வேளாண்மையைப் பேணுகின்ற தொன்மையான சிந்தனை மரபு, அறிவர் மரபு துளிகூட அற்றுப்போகவில்லை அல்லவா?

ஆனால் செயல் மரபு?

புறம்-263: பாடலாசிரியர்: தெரியவில்லை
திணை: கரந்தை, துறை: கையறுநிலை
மூலம்:
"பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே."

சீர்பிரித்து:
பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉம் இவ் அறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பொருள்:
"பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒரு கண் இரும் பறை" = பெரிய ஆண் யானையின் பாதச்சுவடளவுள்ள வட்டத்தை/கண்ணை உடைய பறை.
"இரவல சேறியாயின்" = இரவலனே, மேலும் நீ அவ்வூர் சென்று சேர்வாயெனில்
"தொழாதனை கழிதல் ஓம்புமதி" = தொழாமையைக் கழிதலை ஓம்புவாயாக (தொழுவாய் என்று சொன்னது).
"திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து" = ஆனிரை கொள்ளை போக, அதனை மீட்டு வந்து.
"கல்லா விளையர் நீங்க நீங்கான்" = கூட வந்த போர்மறவர் நீங்கினும் தான் பின்னால் நின்று நீங்காமல் நின்று போரிட்டான்.
"வில் உமிழ் கடுங்கணை மூழ்க" = விற்கள் உமிழ்ந்த எண்ணற்ற அம்புகளில் மூழ்கினான்.
"கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே" = இன்று நடுகல்லாய் நிற்கும் தலைவன், போர்க்களத்திலே, பாய்ந்து வரும் வெள்ளம் போல வந்த பகையை தனியொருவனாய் அடைத்து நின்றான். வெற்றிக்கு காரணமானான்.

பாடலாசிரியரின் பெயரை அறியமுடியவில்லை என்றால், பாட்டின் ஓரிரு சொற்களைச் சேர்த்து பாடலாசிரியரின் பெயர்க்குறிப்பாக சொல்வர். என்னால், அப்படியொரு குறிப்பை இப்பாட்டுக்கு காணமுடியவில்லை.

வண்டு மேம்பாட்டினர் என்று சொன்னால் பொருத்தம்தானே!

அன்புடன்
நாக.இளங்கோவன்

புறநானூறு-243 - இளமை நிலையாமை

Image may contain: one or more people



நான் சிறுவனாக இருந்த அந்த இளமைக்காலம் மிக இனிமையானது. மண்ணெடுத்து நீர்சேர்த்து திண்ணியதாய்க் குழைத்து அழகழகான பெண் பொம்மைகள் செய்வேன். ஓடிப்போய் பூக்கொய்து, தொடுத்த சரமாயும், தனிப்பூவாயும் பாவைக்கு சூடி அழகு பார்ப்பேன். பாவையின் அழகு என்னை ஈர்க்கும். அது என்னோடு பேசியதும் புன்னகைத்ததும் எனக்கு மட்டுமே புரியும்.

நீராட, கூட்டமாகப் போவோம். எனது தோழச் சிறுமிகள் என்னோடு கைகோர்த்து, குளிர்ச்சியான குளத்தில் ஆடிய காலத்தில் எங்களுக்கு பால் வேறுபாடே தெரியாது. அன்பும் களிப்பும் மிகுந்து, தூய நீரைப்போல தூய்மையா யிருந்தது. அந்தச் சிறுமிகள் என்னைத் தழுவிய போது தழுவி, அவர்களோடு போட்ட ஆட்டமும் பாட்டமும், கத்தலும், கூவலும், தண்ணீரில் வீழ்ந்த போது ஒருவரோடு ஒருவர் வீழ்ந்து எழுந்த பூரிப்பும் அளவிட முடியாதது.

குளத்தங்கரையில் பழைய மருத மரம். அதன் கிளைகளில் ஒன்று குளத்து நீரை காதலித்தோ என்னவோ, குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து நீண்டு திரண்டு கிடக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தையே கல்லாத, அறியாத என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அதில் ஏறி நடந்து ஆழமான இடத்திலே, பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச் சிதறுமாறு, பொத்தென்று குதித்து அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே காட்டும் போது அடைந்த களிப்பிற்கு இணையாய் ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

கள்ளமிலா நட்பும், மகிழ்ச்சியும், கல்வி கற்றிராத அந்த இளமையின் இயற்கை எனக்குத் தந்த கொடை; அஃது வாழ்வில் என்றைக்கும் திரும்பியதே இல்லை. தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த நீண்ட தண்டை ஊன்றி நடுங்கிக்கொண்டே நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது. எனது முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன். ஆயினும் அவரின் கண்களில் துயரம் இல்லை.

இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?

புறநானூறு-243, பாடியவர் பெயரில்லை.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

முதுமையின் இயலாமையில் சங்கப்புலவர் ஒருவர் பாடிய பாடல் இஃது. நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்த, உதிர்த்த புறநானூற்றுப் பாடல்வரிகள் இவை. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை என்ற நிலையாமை தத்துவத்தை திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலே தேடும் நமக்கு புறப்பாடலிலும் படிக்க முடிவது ஆதித் தமிழுலகின் தத்துவ வாழ்விற்குச் சான்று. பொதுவியல் திணையில், கையறு நிலை துறைப்பாட்டு.

பாடியவர் பெயர் கிட்டவில்லை ஆதலால், இப்பாடலாசிரியரை, அவரின் பாடல்வரியில் உள்ள சொற்றொடரை வைத்து "தொடித்தலை விழுத்தண்டினார்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

பொருள்:
திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

அன்புடன்
நாக.இளங்கோவன்

==============================================

Thursday, June 11, 2020

தமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்?




ஒருங்குறிச் சேர்த்தியத்தில் https://www.unicode.org/L2/L2020/20119-two-telugu-letters.pdf என்ற இந்தச்சுட்டியில், தமிழின் ற,ழ எழுத்துகளை தெலுங்கில் சேர்க்கக் கோரும் திரு.வினோதுராசனின் முன்னீட்டைக் (proposal) காணலாம். தமிழ் ஒருங்குறியைப் பற்றிய விதயம் என்பதால், தமிழிணைய கல்விக்கழகத்தின் ஒருங்குறி வல்லுநர் குழு 08-மே-2020 அன்று கூட்டப்பட்டு, மேற்கண்ட முன்னீடு ஆராயப்பட்டு, இம்முயற்சியை மறுக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் சுருக்கமும், விளக்கமும் தொகுக்கப்பட்டு, ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டடது. அந்த ஆவணத்தின் செய்திகளை தமிழில் வழங்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

சுருக்கம், பரிந்துரை:

1) தமிழ் ற, ழ எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் குறியேற்றம் செய்யக்கூடாது. மாறாக, ScriptExtensions.txt என்ற நுட்பத் தீர்வு இருக்கிறது. அவ்வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2) தெலுங்கு -கரத்திற்கும் (ற-கரம் u+0C31) தமிழ் ற-கரத்திற்கும் ஒரே ஒலிப்புதான். இரண்டுக்கும் ஒலிப்பு/உச்சரிப்பு வேறுபாடு இருக்கிறது என்று சொல்லி, தமிழ் எழுத்து ற-வை தெலுங்குக்குள் குறியேற்றம் கோருவது அடிப்படை பிழையாகும். தெலுங்கு கல்வெட்டுகளில் வேற்றுவடிவங்கள் காணப்பட்டாலும், அவை ஒரே ஒலியனின் கீற்றுவேறிகளாக (graphic variants) அல்லது மாற்றொலிகளாக (allophones) கொளல் வேண்டும்.

3) “ற்ற” என்ற உச்சரிப்பு தமிழர்களிடையேயே வேறுபடும். ஈழத்தமிழர்கள் நேர்த்தியாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சற்று பிசகி, “ட்ர/ற” என்று அழுத்தியும் உச்சரிப்பது வழக்கு; இதை மொழியியலார்  ஒலியன் ஒட்டு (phoneme joint) என்பர். பிசகிய “ட்ர/ற” ஒலிப்பே “ற்ற்”-வின் ஒலிப்பு என்று கருதி,  அதற்காக தெலுங்கில் கொண்டுபோய் தமிழ்-றவை சேர்க்க வேண்டும் என்பது திரு.வினோதுராசனின் தமிழ் அறியாமையும் தவறும் ஆகும். ஆகவே அவர் வைத்துள்ள முன்னீட்டின் ஆதாரம் பிழையானதாகிறது.

4) இந்தியா பலமொழிகள் புழங்கும் பெரியநாடு. இந்திய மொழிகளுக்குள் பல ஒட்டுறவுகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் அண்டை மொழியின் எழுத்துகளைக் கொண்ட சாதாரண எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்ட உரைகள்/இலக்கியங்கள் உண்டு. இப்படியான மிகச்சிறிய தேவைக்கெல்லாம் ஒருமொழியின் எழுத்துகளைக் கொண்டுபோய் இன்னொரு மொழியின் ஒருங்குறி நெடுங்கணக்கில் சேர்த்தால், நாளடைவில், இந்திய மொழிகளுக்கான ஒருங்குறி கட்டமைப்பு சிதைந்துவிடும்.

விளக்கம்:

தெலுங்கு ற, ழ வரலாறு

தெலுங்கிலும் கன்னடத்திலும் ழ-கர எழுத்தே துவக்கத்தில் கிடையாது. முதன்முதலில் பொ.பி 5 ஆம் நூற்றாண்டில், சாலங்காயனரின் கல்வெட்டில்தான் தெலுங்கு ழ-கர எழுத்து வடிவம் தென்பட்டது. சாலங்காயனர்கள், தென்னிந்திய பல்லவப் பேரரசை ஒட்டி, நட்பு நாடாக, சிற்றரசாக இருந்து வந்தனர். தெலுங்கும் கன்னடமும் பொ.பி 5 ஆம் நூற்றாண்டில் ஒரே எழுத்துகளைப் பயன்படுத்தி வந்தன என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்நிலையில், தெலுங்கு ழ-கரமானது, கீழைச்சாளுக்கிய வேங்கி நாட்டரசனும், பேரரசன் இராசராச சோழனின் பெயரனுமான இராசராச நரேந்திரன் ஆட்சிக்காலமான பொ.பி 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்குக் கல்வெட்டுகளில் இடம்பெற்றது. அந்தக் காலகட்டமானது, சோழர், மேலை கீழைச் சாளுக்கியர், பல்லவர் அரசுகளுக்கிடையே மிக அதிகமான தொடர்பாடல்கள் இருந்த காலமாகும். சோழர்களில், பேரரசுச் சோழர்கள் தமிழ் பேசுவோராகவும், இரேநாட்டுச் சோழர்கள் தமிழ், தெலுங்கு என்ற இரட்டை மொழி பேசுவோராகவும் இருந்தனர். இந்தத் தொடர்பாடல்களே தெலுங்கு மொழியில் ழ-கரப் பயன்பாட்டுக்குக் காரணமாயிருந்தன. ஆனால், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் அவர்கள் பயன்படுத்திய வரிவடிவமும், தமிழ்ப் பகுதிகளில் இருந்த வரிவடிவமும் வெவ்வேறாகவே இருந்தன.

தெலுங்கு ற-கரத்தைப் பொறுத்தவரையில், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் பொ.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் புழக்கத்தில் இருந்தது. ஆனால், தெலுங்குப் பகுதிகளில் பொ.பி 18 ஆம் நூற்றாண்டில் றகரப்புழக்கம் அற்றுப்போனது. ற-கரம் புழங்கிய காலத்திலும், ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் வரிவடிவம் வேறாகவும், தமிழ்ப்பகுதியில் வேறாகவும் இருந்தது வரலாறு.

தெலுங்கு ற-கர ழ-கர எழுத்துகள் கல்வெட்டில் காணப்பட்டாலும் தெலுங்கு இலக்கியங்களில் இந்த எழுத்துகளின் பயன்பாடு இல்லை. தெலுங்கின் முதல் இலக்கண நூல் உருவானதே பொ.பி 11 ஆம் நூற்றாண்டில்தான். தெலுங்கிற்கான இலக்கணம் எழுதப்பட்டது தெலுங்கு மொழியிலன்று. மாறாக சமற்கிருதத்தில் எழுதப்பட்டது. தெலுங்கில், புகழ்பெற்ற, “ஆந்திர மகாபாரதம்” என்ற நூலின் முதல் மண்டிலத்தையும் மூன்றாவது மண்டிலத்தையும் எழுதிய ஆதிகவி நன்னய பட்டாரகரே தெலுங்கு இலக்கண நூலையும் சமற்கிருதத்தில் எழுதினார். பொ.பி 11 ஆம் நூற்றாண்டில் எழுந்த அந்த இலக்கண நூலான “ஆந்திர சப்த சிந்தாமணி” யில் தெலுங்கு ற-கர, ழ-கரம் என்ற இரண்டு எழுத்துகளே இல்லை. இது தெலுங்கிற்கு ற-கர, ழ-கர எழுத்துகள் / ஒலிப்புகள் அயன்மையானவை என்பதையே காட்டுகிறது என்பர் அறிஞர். 
கன்னடத்தின் முதல் இலக்கண நூலான “கருநாடக பாசை பூசனா”,  பொ.பி 12 ஆம் நூற்றாண்டில், சமற்கிருதத்தில் எழுதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

கன்னடத்திலும் ற-கர ழ-கரத்திற்கு தெலுங்கைப்போலவே முறையே ಱ, ೞ  என்ற குறியீடுகளைப் பயன்படுத்தினார்கள். அவை முறையே 12, 18ஆம் நூற்றாண்டில் அற்றுப்போன பின்னர் ರ, ಳ   என்ற இவ் வரிவடிவங்கள் கன்னடத்தில் புழங்கின.

தெலுங்கு இலக்கண நூலை யாத்த நன்னய பட்டாரகர், தெலுங்கு ஒலிப்புடன் அயல்மொழி ஒலிப்புகளையும் கருத்தில் வைத்து, 36 தாய்மொழி (தெலுங்கு) எழுத்துகளையும், 19 அயன்மொழி (சமற்கிருதம்) எழுத்துகளையும் கொண்ட எழுத்திலக்கணத்தை உருவாக்கினார். ஆனால், அந்த இலக்கண நூலிலேயே ழ, ற, ன என்ற மூன்று ஒலிப்புகளும்/எழுத்துகளும் இல்லை. ஆங்காங்கு இவ் ஒலிப்புகள் தெலுங்கில் புழங்கியிருந்தாலும், தெலுங்கு அறிஞர்கள் சமற்கிருதத்திற்கு முக்கியத்துவம் தரும்பொருட்டு இவ் எழுத்துகள் இலக்கண / இலக்கியங்களில் இல்லாததை பொருட்படுத்தவும் இல்லை போலும்.

பேராசிரியர் பத்திரிராசு கிருட்டிணமூர்த்தி எழுதிய “The Dravidian Languages” (Cambridge University Press. 2003, on page 81) நூலில், ற-கரத்தை ஏற்கும் அதே வேளையில் ழ-கரத்தை பொருட்படுத்த-வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தெலுங்கு ஒருங்குறியின் வரலாறு

மேற்சொன்ன தெலுங்கு எழுத்துகளின் வரலாற்றின் அடிப்படையில், தெலுங்கு வரிவடிவத்தில் இருந்த ற-கர ழ-கரங்கள், கல்வெட்டு ஆவணங்களைப் படிக்க ஏதுவாக, தெலுங்கு ஒருங்குறியில் இடம்பெற வேண்டியது தேவையானது. ஆனாலும், தெலுங்கு இலக்கணத்திலேயே இல்லாததாலோ, அல்லது மக்கள் புழக்கத்தில் அதிகம் இல்லாததாலோ, தெலுங்கு வரிவடிவ ழ-கர எழுத்து மீண்டும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது. தெலுங்கு வரிவடிவ ற-கர ( RRA)  எழுத்து மட்டுமே 1991ல், உலகில் ஒருங்குறியின் முதல் வேற்றம் (version 1.0) வெளியானபோது, தெலுங்கு ஒருங்குறி நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது.

அதன்பின், ஏறத்தாழ 21 ஆண்டுகள் கழித்து, 2012ல்தான் தெலுங்கு வரிவடிவ ழ-கரம் ( LLLA) சேர்க்கப்பட வேண்டும் என்ற முன்னீடு அனுப்பப்பட்டது. இந்த முன்னீட்டை (L2/12-015) அனுப்பியவர்களுள் ஒருவர்தான் திரு.வினோதுராசன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், தெலுங்கு வரிவடிவ ற-கரத்தைப் ( RRA) போன்றே மெல்லிய வேறுபாட்டுடன் ஒரு எழுத்து வடிவம் கல்வெட்டில் காணப்பட்டது . இதன் ஒலிப்பு இன்னெதென்றே அறியாத நிலையில், அதை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாத நிலையில் தெலுங்கு-RRRA என்று பெயர் கொடுத்து அதையும் ஒருங்குறியில் சேர்க்க முன்னீடு (L2/12-016) அனுப்பி, அதுவும் தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. அதிலும் திரு.வினோதுராசனின் பங்கு உண்டு. ஒருங்குறி அட்டவனையில் “TELUGU LETTER RRRA - letter for an alveolar consonant whose exact phonetic value is not known” என்று குறிப்பிட்டு, அஃதாவது RRRA (  ) என்ற இந்த எழுத்தை எப்படி ஒலிப்பது என்று தெரியவில்லை என்றே குறிப்பிட்டு தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை “மூன்று” என்ற சொல்லில் வரும் ற-கர ஒலிப்புக்கு இணையாகக் கருதலாம் என்று முன்னீட்டில் சொன்னாலும் குறியேற்ற அட்டவனையில் ஒலிப்பில்லா குறியீடாகவே இருக்கிறது.

இந்தக்குறியீடான  (RRRA), தெலுங்கில் ஏற்கனவே இருக்கும் RRA-கரத்தின் கீற்று வேறுபாடுதான் என்று தொல்லியல் அறிஞர் கூறுகின்றார். இக் குறியீட்டை தக்க தொல்லியல் அறிஞர்களிடம் கலந்தாலோசித்திருந்தால், குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும் என்பது அறிஞர் கருத்து. ஆகவே தெலுங்கின் RRA ,  RRRA ஆகிய இரண்டும் தெலுங்கு ற-கரத்தின்  கீற்று வேறுபாடுதானே (glyphical difference) தவிர, அவற்றிற்கு எந்த ஒலிப்பு வேறுபாடும் கிடையாது (phonological difference).

 தமிழில் மூன்று, முற்றம், முறை என்ற மூன்று சொற்களில் வரும் ற-கரம், இருக்கும் இடத்திற்கேற்ப ஒலிப்பு மாற்றம் கொண்டிருக்கும் என்றாலும், அது ஒரே ஒலியன்தான். “மூன்று”-வில் வரும் ற-கரம் சற்றே அதிரொலியாக (voiced) ஒலிக்கும்;  “முற்றம்”-ல் வருவது சிறிது ஊதொலி (aspirate) ஆகவும், “முறை”-யில் சிறிது உரசொலி (fricative) ஆகவும் வரும். இவையாவும் ஒரே ஒலியனின் வெவ்வெறு சிறுமாறுபாடுகளே; தனி ஒலியனோ எழுத்தோ அல்ல. இதே ஒலிப்பு முறைதான் தெலுங்கிலும்.

ஆகையால், ஒவ்வொரு ஒலிப்புக்கும் ஒரு R எழுத்தை உருவாக்குவது அடிப்படைத்தவறாகும். கல்வெட்டுகளிலோ பிற ஆவணங்களிலோ கீற்று வேறுபாடு இருந்தாலும், அது ஒரே ஒலியனின் கீற்றுவேறி (graphic variant) என்றே கருதவேண்டும். அப்படியே கீற்றுவேறியைக் குறிப்பிட வேண்டுமாயினும் எழுத்துரு நுட்பத்தின் வழி தேடுவதே சரியாகும்.  அந்த வகையில், தெலுங்கு-RRRA குறியீட்டிற்கு 0C5A குறியெண்ணை தந்ததற்குப் பதிலாக, தெலுங்கு ற-கரத்தின் (RRA) கீற்றுவேறியாகக் கருதியிருக்க வேண்டும் என்றே தற்போதைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஒருங்குறிச் சேர்த்தியத்தின் கோட்பாடு, அடிப்படையில், கீற்றை (glyph) குறியேற்றம் செய்வதுதான். எழுத்தை அல்ல. இவ்வாறு ஒவ்வொரு கீற்றையும் வெவ்வெறு எழுத்தாகக் கருதி குறியேற்றம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

2012ல் ஆந்திர அரசின் சார்பாக, AP Society for Knowledge Networks என்ற நிறுவனம், தெலுங்கு ழ-கரத்தை ( LLLA u+0C34) தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்ப்பதை வரவேற்று, பாராட்டியதோடு, ஏற்கனவே இதனை செய்திருக்க வேண்டும் என்றும், இனி தெலுங்கு ழ-கரத்தைக் குறிப்பிட தமிழ் எழுத்துகளையோ, மீக்குறிகளையோ (diacritics) பயன்படுத்தத் தேவையில்லை என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தது. (பார்க்க: https://www.unicode.org/L2/L2012/12076-llla-approval.pdf ).  தெலுங்கு வரிவடிவில் ழ-கரத்தை தெலுங்கில் சேர்ப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளித்தது. (பார்க்க: https://www.unicode.org/L2/L2012/12079-india-input.txt ). தெலுங்கு நெடுங்கணக்கில் தாய்வரிவடிவ எழுத்துகளே (native characters) தேவை என்றும் அயல்மொழியின் எழுத்துகள் தேவையில்லை என்ற ஆந்திர அரசின் அறிவுரையை, தமிழின் ற,ழ எழுத்துகளை தெலுங்கில் சேர்க்கக்கோரும் (L2/12-119) திரு.வினோதுராசன் தவறவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், 2019ல், L2/19-401 என்ற முன்னீட்டின் வழியே உயிர்மெய்களுக்கு அடிப்புள்ளி (நுத்தா/nukta) இடும் தேவையொன்றும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களின் மொழித்தேவைக்காக உருவாக்கப்படும் நுத்தா எழுத்தைப்பற்றி நாம் கூற ஏதுமில்லை என்ற போதிலும், அந்த அடிப்புள்ளியிட்ட இன்னொரு தெலுங்கு ழ-கர 
எழுத்தும் () குறியேற்றம் பெறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ழ-கர பயன்பாடு குறைந்தது மூன்று வரிவடிவங்களில் காணப்படுகின்றன. 1) பழைய வரிவடிவமான ( u+0C34) 2) L2/19-401 வழியே முன்னிடப்பட்ட அடிப்புள்ளியிட்ட வரிவடிவம் ( u+0C3C à u+0C33) 3) பிற்கால கல்வெட்டுகளில் காணப்படும்  வரிவடிவம் (u+0C32 u+0C30).

இம்மூன்று வரிவடிவங்கள் தெலுங்கில் ழ-கரமாக பயன்படுகின்றன. இது போதாது என்று மேலும் தமிழின் வரிவடிவமான ழ வை அப்படியே தெலுங்கு எழுத்தாக தெலுங்கு நெடுங்கணக்கில்  சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை புதிராகவும் ஏற்க முடியாததாகவும் உள்ளது. முறையாக, பழமையான என்ற வரிவடிவத்தை புழக்கத்தில் கொண்டுவந்திருக்க வேண்டும். மக்களின் பயன்பாடு பெருகப்பெருகத்தான் ஒரு எழுத்து நிலைக்க முடியும். கல்வெட்டுக்கு ஒரு ழ-கரம், இறைப்பாடல்களுக்கு ஒரு ழ-கரம், இலக்கியத்துக்கு ஒரு ழ-கரம், மற்ற உரைகளுக்கு ஒரு ழ-கரம் என்றா ஒரு மொழியில் எழுத்துகளை உருவாக்குவார்கள்?

 திரு.வினோதுராசனின் ஆவணத்திற்காட்டப்பட்ட தமிழ்த் திருப்பாவையின் பாடல்கள் தெலுங்கில் சிலரால் எழுத்துப் பெயர்க்கப்பட்டு (Transliterated) தமிழெழுத்தான ற-கர ழகரத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் பயன்படுத்தி எழுதப்பட்டவை. இதை அப்படியே தெலுங்கு வைணவர்கள் எழுத, படிக்க வேண்டுமானால், இருவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி எளிதாகச் செய்யலாம். காட்டாக, தமிழில், பழையவேண்டுமானால், அதற்கென தனி எழுத்துருவை நாம் பயன்படுத்துகிறோம். திரு.வினோதுராசனே அப்படியொரு எழுத்துருச் செயலியை உருவாக்கியவர். அது போல, தெலுங்கு எழுத்துகளுக்கிடையே தமிழ் எழுத்து வரவேண்டுமானால், அதை எழுத்துரு மாற்றும் நுட்பத்தில் எளிதாகச் செய்யமுடியும். அப்படியான நுட்பத்தீர்வினையே நாம் பரிந்துரைக்கிறோம்; குறியேற்றம் தீர்வல்ல.

இன்னொரு தீர்வாக, தெலுங்கு எழுத்துரு ஆக்குநர் தமிழ் அட்டவனையில் இருந்து ழ வை எடுத்து, அதற்கு உயிர்க்குறியீடுகளை இட்டு தெலுங்கு எழுத்துருவில் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துப் பெயர்ப்புக்குள்ளான தமிழ் எழுத்துகளைக் கலந்த இலக்கியங்களை, இறைப்பாடல்களை நன்றாக எழுத படிக்க முடியும். எளிதான இந்த நுட்பியல் தீர்வுகளை நாம் மறுக்கவில்லை. ஆனால், தமிழின் எழுத்தை தெலுங்கின் எழுத்தாகவே ஒருங்குறி நெடுங்கணக்கில் நிலையாக குறியேற்றம் செய்வதைத்தான் மறுக்கிறோம்.

தெலுங்கு ற-கரமான (u+0C31), ஒலிப்பில், அப்படியே தமிழ் ற-கரத்திற்கு இணையானது. சிறிதும் வேறுபாடில்லை. அப்படியிருக்க, தெலுங்கில் “ற்ற” என்ற எழுத்தாட்சியின் ஒலிப்பும் உச்சரிப்பும், தெலுங்கு ற-கரமான வை பயன்படுத்தினால், தமிழ்-“ற்ற” வில் இருந்து மாறுபடும் என்பது மிகத்தவறான பார்வை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் “ற்ற”-வை சற்று அழுத்தி, “ட்ர/ட்ற” என்று ஒலிப்பார்கள். இதனை தவறான ஒலிப்பு வழக்கு என்பர் அறிஞர். ஆனால், ஈழத் தமிழர்கள் நேர்த்தியாக “ற்ற” என்றே ஒலிப்பார்கள். ஒலியளவி மூலம் ஒலிப்பை அளந்தால் இந்த வேறுபாடு நன்கு புலனாகும். (இந்த வழக்கு வேறுபாட்டை மொழியியலில் ஒலிப்பிணை (phoneme joint) என்று கூறுவார்கள்). “ற்ற”-வின் ஒலிப்பு தமிழர்களின் வழக்கிலேயே வேறுபட்டு இருக்கிறது. அதனால், தமிழர்கள் “ற்ற”-வை “ட்ர/ட்ற/ என ஒலிப்பது (தவறாக) போல தெலுங்கர்கள் “ற்ற”-வை ஒலிக்கவே, தெலுங்கு நெடுங்கணக்கில் தமிழ் வரிவடிவமான ற-வை சேர்க்க வேண்டும் என்பது தவறும் அறியாமையும் ஏரணமற்றதுமாகும்.

இது குறித்து எங்களில் சிலர், தெலுங்கு அறிஞர்களுடன் உரையாடிய போது, அப்படியே        “ற்ற”-வின் தவறான ஒலிப்பான “ட்ர/ட்ற”-வே வேண்டும் என்றால், தெலுங்கின்(ட்ற, u+0C1F u+0C31) என்ற தாய்வரிவடிவத்தை பயன்படுத்தலாமே, எதற்காக அயல்மொழியான தமிழின் ற-வை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்று வினா எழுப்புகிறார்கள். ஒருங்குறிச் சேர்த்தியமும், திரு.வினோதுராசனும் தெலுங்கு அறிஞர்களைத் தவிர்க்காமல், இதுகுறித்து கலந்து ஆலோசிப்பது தேவையானதாகும்.

திரு.வினோதுராசன், தனது முன்னீட்டில் (L2/20-119), தெலுங்கில் எழுத்துப்பெயர்ப்பான (Transliterated Telugu), தமிழின் திருப்பாவைப் பாடலொன்றை மேற்கோள் காட்டி, தமிழ்-ற, ழ இவற்றை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்கிறார். அந்த எடுத்துக்காட்டை படத்தில் காண்க.

ஆண்டாளின் தமிழ்ப்பாட்டை, யார் இப்படி  தெலுங்கில் எழுத்துகளைப் பெயர்த்து எழுதினார் என்று தெரியவில்லை.  அதில் தமிழ் ற-கரம் ழ-கரம் தென்படுவதைக் காண்க. இதே பாட்டை, இன்னொருவர் எப்படி தெலுங்கில் எழுதியிருக்கிறார் என்று கீழே உள்ள படத்தில் காண்க. (சான்று: https://www.youtube.com/watch?v=9ZGHDeEy_9I ). இதில் சிவப்பு வட்டமிட்ட எழுத்துகளில் முற்றிலும் மாறுபட்ட தெலுங்கு “ற்ற”-வை காணமுடிகிறது.

இப்படி, தாய்வரிவடிவத்தில் எழுத்துகள் இருக்கும்போது, அயல்மொழியான தமிழில் இருக்கும் எழுத்துகளை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்பது தேவையற்றது.
மேலும், அடிப்படைக் குறியீட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல், ஆளுக்கு ஆள் தெலுங்கில் (அல்லது பிறமொழிகளில்) வெவ்வேறு விதமாக எழுதிவரும் எழுத்துப்பெயர்ப்புகளுக்கெல்லாம் குறியேற்றம் வேண்டும் என்று சொன்னால், குறியேற்றம் கேள்விக்குறியாகும் என்பதில் ஐயமில்லை.

தெலுங்கில் ற-கர பயன்பாடு 4 முறைகளில் ஏற்கனவே காணப்படுகின்றன. 1) பழைய வரிவடிவமான  (RRA, u+0C31) 2)(RRRA u+0C5A) என்ற -வின் கீற்றுவேறி 3) “ற்ற”-வை “ட்ற” என்று ஒலிப்பதற்காக பயன்பாட்டில் ஏற்கனவே இருக்கும்என்ற வரிவடிவம் 4) இன்னொரு “ட்ற” வரிவடிவமான  (ட்ற, u+0C1F u+0C31). இப்படி 4 வகையான தாய்வரிவடிவமான ற-கரப் பயன்பாடுகளை வைத்துக்கொண்டு, தமிழ் ற-வையும் தெலுங்கில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதில் ஏரணமோ, தேவையோ இல்லை அல்லவா?


மேலே காட்டிய சான்றும், பிற செய்திகளும், ஏன் தமிழ்-ற,ழ எழுத்துகளை தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்க்கக்கூடாது என்பதை விளக்குகின்றன. தமிழ் எழுத்துகளைக் கலந்த தெலுங்கு எழுத்துப்பெயர்ப்பில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை ஆனாலும், அதற்கு, எழுத்துரு நுட்பவழி எளிதாக, தீர்வை அமைத்துக் கொள்ளமுடியும். ஆதலால் தமிழ்-ற,ழ எழுத்துகளை தெலுங்கு எழுத்துகளாகக் குறியேற்றம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தெலுங்கு ஒருங்குறி அட்டவனையில் காலியாக உள்ள இடங்களை வேறு தெலுங்கு எழுத்துகளைச் சேர்க்க முயலவேண்டும்.

முன்னீட்டை அனுப்பிய திரு.வினோதுராசனே, அவரின் முன்னீட்டில், ScriptExtensions.txt என்ற ஒருங்குறி உத்தியின்படி தமிழெழுத்துகளை பயன்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார். ஆகையால், அதனை இற்றித்து (update), கூடவே எழுத்துரு வழங்கிகளில் (rendering engine) தக்க மாற்றங்கள் செய்து, இது போன்ற பாடல்கள்/உரைகளை தெலுங்கில் பயன்படுத்த முன்வரவேண்டும். குறியேற்றத்தை கைவிடவேண்டும்.

மேலும், இந்தத் தேவையானது குறைவான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. (மேலே காட்டிய இரண்டு படங்களில் இருந்து ஒரே பாட்டை வெவ்வேறு எழுத்துகளில் படிக்கும் போக்கினை காட்டினோம்). அவர்களுக்காக தனியே எழுத்துரு செய்துகொள்வது எளிது. அதொடு, இந்தச் சிறிய பயன்பாட்டுக்காக, தெலுங்கு எழுத்துரு ஆக்குநர், பொதுப்பயன்பாட்டில் இருக்கும் தெலுங்கு எழுத்துருக்களை மாற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, தமிழின் தாய்வரிவடிவ எழுத்துகளை, தெலுங்கில் கொண்டு போய் ஒருங்குறியில் குறியேற்றம் செய்யக்கூடாது. மாறாக, மேலே விளக்கியிருக்கும் நுட்பவரிதியான தீர்வுகளை கைக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய பிற சான்றுகள்:


வல்லுநர் குழுவில் பங்குபெற்றவர்கள்: 1) பேராசிரியர்.பொன்னவைக்கோ 2) முனைவர் கிருட்டிணன் இராமசாமி (இராம.கி), 3) நாக.இளங்கோவன் 4) முனைவர் சு.இராசவேலு 5) முனைவர் சிரீரமணசர்மா 6) முனைவர் சேம்சு அந்தோணி.

……நிறைவு……