Pages

Saturday, April 26, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 4 (FAQs part 4)

22) தமிழ்மொழியின் சரிவைச் சுருக்கமாக
எப்படிப் புரிந்து கொள்வது?
எப்படிச் சரி செய்வது?

இதனை நான் சொல்வதை விடப்
பேரறிஞர் பாவாணர் அவர்களின் வாயால்
கேட்பது சிறப்புடையதாகும்.

கீழே உள்ள அவரின் உரை 07/பிப்ரவரி/2001
திகதியிட்ட தமிழியக்கம் என்ற ஏட்டில்
இடம் பெற்றிருந்தது.

பாவாணர் உரை:

அறிஞர்காள்! அறிஞையர்காள்!
உடன்பிறப்பாளர்காள்!
உடன் பிறப்பாட்டியர்காள்!
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

தமிழ்மொழி, தொன்மையும், முன்மையும்,
எண்மையும், ஒண்மையும், தனிமையும்,
இனிமையும், தாய்மையும், தூய்மையும்,
செம்மையும், மும்மையும், கலைமையும்,
தலைமையும், இளமையும், வளமையும்,
முதுமையும், புதுமையும்
ஒருங்கே கொண்ட உயர்தனிச் செம்மொழியாகும்.

உலகில் முதன்முதற் பட்டாங்கு
நூன்முறையிற் பண்படுத்தப் பட்டதும்,
நல்லிசைப் புலவராற் பல்வேறு துறையில்
இலக்கியஞ் செய்யப்பெற்றுப் பல கலையும்
நிரம்பியதும், முத்தமிழ் என வழங்கியதும்
ஆன சித்தர் மொழியாம் செந்தமிழ்;
இன்று கலையிழந்தும் நூலிழந்தும், சொல்லிழந்தும்
இருப்பதுடன், இறவாது எஞ்சியிருக்கின்றனவும்
ஏனை மொழிகளினின்று கொண்ட இரவல்
என இழித்தும் பழித்தும் கூறப்படுவது,
இடைக்காலத் தமிழன் மடமையின் விளைவே.

மொழித்துறையில் ஆரியத்தினும் சீரியதென
அரியணையில் வீற்றிருந்த தமிழ், பின்பு
வடமொழிக்குச் சமம் எனக் கொள்ளப்பட்டு,
அதன்பின் அதுவுமின்றி
வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாததெனத்
தள்ளப்பட்டதினால் முறையே,
அது வடமொழியால் வளம் பெற்றதென்றும்,
வடமொழித் துணையின்றித் தனித்தியங்காததென்றும்,
வடமொழிக் கிளையென்றும்,
பிற திரவிட மொழிகட்குச் சமமென்றும்,
அவற்றினின்று தோன்றியதென்றும்
கருத்துக்கள் எழுந்து,

இன்று
மக்கட்குப் பெயரிடுதற்கும்

உயர்ந்தோரோடு பேசுவதற்கும்,
அச்சுப் பிழைதிருத்தற்கும்,
அலுவலகங்களில் வினவி விடை பெறுதற்கும்,
ஏற்காத தாழ்த்தப்பட்ட மொழியாகத்

தமிழ் வழங்கி வருகிறது.

இதனால், அது புலவர் வாயிலும்
கலப்பு மொழியாகவும்,
கொச்சை மொழியாகவும் இருந்து வருகின்றது.

இது பற்றி, அது இறந்தமொழியென்றும்,
இற்றைக்கு ஏலா மொழியென்றும்,
பலர் கொக்கரித்துக் கூவுகின்றனர்.

ஒரு நாட்டு மக்கட்கு *உரிமையாவணம்* போன்றது,
அந்நாட்டு வரலாறு.

1) தமிழ்மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றின் வரலாறு
மறைக்கப் பட்டிருப்பதால்,
அவற்றின் உண்மையான வரலாற்றை
முதற்கண் வரைந்து வெளியிடல் வேண்டும்.

2) மொழிப்புரட்சி போன்ற ஒரு தமிழியக்கம்
தோன்றல் வேண்டும்.

3) தமிழியக்கத்தின் பயனாய் அயன்மொழிச்
சொல்லாயிருக்கும் ஆட்பெயர்,
ஊர்ப்பெயர் அறிவிப்புச் சொல் அனைத்தும்,
இயன்றவரை *தனித்தமிழாக்கப் பெறல் வேண்டும்*.

4) தமிழ் மீண்டும் பெருமை பெறவேண்டுமெனின்
அது ஆட்சி மொழியாவதினும்,
கல்வி மொழியாவதினும் *கோயில் வழிபாட்டு*

மொழியாவதே முதன்மையாக வேண்டப்படுவதாகும்.

வடமொழி தேவமொழியன்று.
உலகில் தேவமொழி என்று ஒன்றில்லை.
ஒன்றிருப்பின் அது தமிழே.

சிவநெறியும் மால்நெறியும் தமிழர் மதங்களே!
மந்திர வலிமையும் மன்றாட்டு வலிமையும்
உள்ளத்தின் உரத்தைப் பொறுத்ததே
அல்லாமல் **ஒலியைப் பொறுத்தது அல்ல**.

வடமொழி வழிபாடே வலியுற்றதெனின்,
அதில் நடைபெறாத பிற நாட்டு
வழிபாடெல்லாம் பயனற்றவாதல் வேண்டும்.

அங்ஙனமாகாமை அறிக.

தமிழ் கெட்டதற்கும் தமிழர் தாழ்ந்ததற்கும்
தமிழனே காரணம்.

தன்மானமும் பகுத்தறிவும்
*நெஞ்சுரமும்* உள்ளவனே நிறைமகன்.

தமிழ் நலமும் தமிழர் நலமுங் கருதாது,
தன்னலமே கருதிக் கோடரிக் காம்புகளும்
இருதலைமணியன்களும் சுவர்ப்பூனைகளுமாயிருந்து
பாழ்செய்யும் முத்திற உட்பகைகளை, விலக்கல் வேண்டும்.

"எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருக்கும்
உணர்ச்சியற்ற மரக்கட்டைகளைத் திருத்தல் வேண்டும்.

பெரும்பதவிகளில் இருந்து பெருஞ்சம்பளம் பெறும்
பேராசிரியர்கள் எல்லாம் பேரறிஞரல்லர்.


**உண்மையுரைக்கும் ஆராய்ச்சியாளர்க்கு
இன்றியமையாத இயல்பு அஞ்சாமை**.

அஃதுள்ளாரைத்
திராவிடர் கழகத்தாரென்றும்,
மொழி(தமிழ்) வெறியரென்றும்,
நெறிதிறம்பிய ஆராய்ச்சியாளரென்றும்,
பிராமணப் பகைவரென்றும்,
வடமொழி வெறுப்பாளரென்றும்,
கூறுவது பேணத்தக்கதன்று.

தமிழன் பரந்த நோக்குடையவன்.
தமிழைப் பேணுவார் அனைவருந் தமிழரே!
தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க.
தமிழ்த் தொண்டர் படை திரள்க!

- ஞா.தேவநேயன்


தேவநேயப் பாவாணர் அவர்கள் எதனை
முதலில் மீட்டெடுக்க வேண்டும்
என்று சொல்வதும், இணைய உலகில்
பலருக்கும் உள்ள கவலைகளையும்
அவர் எடுத்துச் சொல்லும் விதமும்
நமக்குப் படிப்பினையாக இருக்கும்.

(தொடரும்)

இதன் முந்தையப் பகுதி :
http://nayanam.blogspot.com/2008/04/3-faqs-part-3.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 3 (FAQs part 3)

பிற நாடுகளில் மொழித்தூய்மை பற்றிய செய்திகள்:

20) உருசியாவில் இலெனின் போன்ற பிற
உருசியச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்:

நம்மிடையே பலரும் தூய தமிழ் எழுதுவது
பேசுவது என்பது ஏதோ அரசியல்க் கட்சிக்காரர்களின்
செயல் என்றும், பிழையானது என்றும், தமிழ்நாட்டில்
மட்டும்தான் இப்படியான செய்கைகளைச்
செய்கிறார்கள் என்றும் பரப்புரை செய்கிறார்கள்.
மொழிச்சரவல் பல நாடுகளுக்கும் இந்தியாவில்
உள்ள பல மாநிலங்களுக்கும் ஏறத்தாழ ஒன்றுதான்
என்பதனையும் பல நாடுகளிலும் இந்தச் சிந்தனை
நமக்கு முன்னரே முகிழ்த்து இருக்கிறது என்பதனை
அவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகவே இவற்றை
எடுத்து இங்கு சேர்க்கிறேன்.

எ.எசு.சுமரகோவ்:

"பிறமொழிச் சொற்களைக் கலப்பது
மொழியைக் கெடுத்து சீர்குலையச் செய்வதாகும்!"

நிகலாய் இலேசுகா:

"தூய உருசியச் சொற்கள் இருக்கும் போது
அவற்றையே பயன்படுத்தவேண்டும். கலத்தல்
கூடாது. கலத்தல், வளமான மொழியை
அழிப்பதாகும். இக்கலக்கல் தேசிய
முன்னேற்றத்திற்காகவும், நம் தேசிய
கோரிக்கைகளுக்காகவும் பாடுபடுவதாகக் கூறிக்
கொள்ளும் வெளியீடுகளிலேயே கேட்டுச் சூழலை
ஏற்படுத்துகிறது."

(தமிழ் தமிழ் என்று குரல் கொடுக்கும்
அரசியல்வாதிகளும்
ஏடுகள், எழுத்துக்கள், தொலைக்காட்சிகள்
பொன்றவற்றில் செய்கின்ற கேடுகளைத்தான்
உருசியாவிலும் நிகலாய் கண்டிருக்கிறார்.)

விசாரின் பெலின்சுகி:

"உருசிய மொழியின் தூய சொற்களை
விடுத்து பிற மொழிகளைக் கலத்தல் *பொது
அறிவையும், நல்ல பழக்கத்தையும்
அவமதித்தலாகும்*. உருசிய மொழியில்
சொற்பொழிவாற்றும் போது பிற மொழிச் சொற்களை
அள்ளி வீசுவது **அறிவுக்கும் நல்ல பழக்கத்திற்கும்
புறம்பானதாகும்*."

21) தனிப் பிரெஞ்சு இயக்கம் பற்றிய சிறு குறிப்பு:

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏனாதி டீகால்
என்பவர் பிரெஞ்சுநாட்டை தாம்
ஆண்டுகொண்டிருந்த காலத்தில்
"தனிப்பிரெஞ்சு இயக்கம்" கண்டார்.

அன்று அவர் தொடங்கிய இயக்கம்தான் பின்னாளில்
வளர்ந்து, அதாவது 1971 ஆம் ஆண்டில் பிரெஞ்சு
அரசு "பிரெஞ்சு மொழியில் நடைமுறையில் கலந்துள்ள
பிற மொழிச் சொற்களைக் களைந்து

அவற்றுக்குண்டான தனிப்பிரெஞ்சுச்
சொற்களை உருவாக்குங்கள்" என்று கட்டளை
இட்டு சட்டம் செய்தது.

தங்கிலீசு என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளும்
மொழியைப் போல "பிராங்லெய்சு" என்ற ஆங்கிலக்
கலப்பு மிகுந்த பிரெஞ்சின் அந்தக்காலப் புழக்கம்
ஒழிக்கப் படல் வேண்டும் எனலாயிற்று.

மொழியின் தூய்மையைப் பேணுவதற்கு 19-12-76 ல்
சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரான்சில்
அறிவிக்கப்பட்டது.

விளம்பரங்கள், அலுவலகக் கோப்புகள்,
வர்த்தக ஆவணங்கள் போன்றவற்றில்
பிரெஞ்சுமொழியே இருக்க வேண்டும். அவை
தூய்மையாக இல்லாமல் பிறமொழிச் சொற்களைக்
கலப்படம் செய்யப்பட்டிருந்தான் அதைச்
செய்தவருக்கு 160 பிராங்குகள் தண்டம்
விதிக்கப்படும் என்று சட்டம் செய்யப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பற்றிய குறிப்புகளை க.தமிழமல்லனார்
தர, பேராசிரியர் வையாபுரி அவர்கள் ஈரானியர்
பாரசீக மொழியில் இருந்து துருக்கி, அராபியச்
சொற்களை விலக்கி வருவதையும்
செருமானியர் மொழியைக் கலக்காமல்
பிற மொழிச் சொற்களை மொழிபெயர்த்து/ஆக்கி
பயன்படுத்துதலையும் குறிப்பிடுகிறார்.

(தொடரும்)

இதன் முந்தைய பகுதி இங்கே:
http://nayanam.blogspot.com/2008/04/2-faqs-part-2.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, April 25, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 2 (FAQs part 2)

முந்தைய கட்டுரையின் ( http://nayanam.blogspot.com/2008/04/1-faqs-part-1.html ) தொடர்ச்சி ....

13) தனித்தமிழ், தூயதமிழ் என்று நாம் பேசுவது
அரசியல் சார்புடையதா?


இல்லை. அரசியலுக்கும் இதற்கும் எப்படித் தொடர்பு
இருக்க முடியும்?

மக்களிடம் இதை விளக்குவதைப் போல அரசிலார்க்கும்
இதனை விளக்க வேண்டிய நிலையில்தான் அரசியல்
இருக்கிறது; இருக்கும்.

14) தமிழ்நாட்டில் மட்டும்தான் மொழியின் தனித்தன்மை
காக்கப் படல் வேண்டும் என்ற சிந்தனை தோன்றிற்றா?

இல்லை. இந்தியாவிலும் இவ்வாறு அவரவர் மொழிகளின்
தனித்தன்மை காக்கப் படல் வேண்டும் என்று
முனைந்திருக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும்
தனித்தமிழ் இயக்கம் போல பல இயக்கங்கள்
தோன்றியிருக்கின்றன.

உண்மையில் தமிழர்கள் மிகவும் காலத்தாழ்வாகவே
இதனைச் செய்தனர்!!


15) மொழியின் தனித்தன்மை பற்றி காந்தியாரின் கருத்து
யாது? (இந்தி மொழி பற்றி)

"கூடியமட்டும் இந்திமொழி அம்மொழியின் மூலச்
சொல்வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்வதே
அம்மொழி வளர்ச்சிக்கு உகந்தது;

பிறமொழிச் சொற்கள் புகுந்து விட்ட இடங்களிலும்,
இன்றியமையாது மேற்கொள்ளப்படவேண்டிய இடங்களிலும்
*இயைவித்தே* அவை மேற்கொள்ளல் வேண்டும்".
இக்கருத்தை 'வளரும்தமிழ்' என்ற நூலில் இருந்து
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் எடுத்துக்
கொடுக்கிறார்.

காந்தியாரின் அக்கருத்து எம்மொழிக்கும்
பொருந்துமல்லவா?

காந்தியாரின் இந்த எளிமையான அடிப்படையே
பல குமுகச் சிந்தனையாளர்களும் மொழியறிஞர்களும்
வரலாற்றாசிரியர்களும் பல நாடுகளிலும் சொல்கிறார்கள்.

16) தெலுங்கின் தனித்தன்மைக்காக எழுந்த இயக்கம் யாது?

தெலுங்கு தேசத்தில் "அச்சதெனுகு" எனப்படும் தூய
தெலுங்கு இயக்கம் 17 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி
விட்டது. தமிழருக்கும் முன்னால் சுமார் 200 ஆண்டுகளுக்கு
முன்னரே தூய தெலுங்கு போற்ற தெலுங்கர்கள் முனைந்து
எழுந்தனர்.

17) ஆங்கிலத்தில் மொழித் தூய்மை காக்க சிந்தனைகளும்
இயக்கங்களும் எழுந்தனவா?

ஆமாம்; ஆமாம். நிறைய செய்திருக்கிறார்கள்
வெள்ளையர்கள். தனி ஆங்கிலம், தூய ஆங்கிலம் பற்றிய
வெள்ளையர் குமுகத்தின் சிந்தனையாளர்கள் பலரும்
கூற்றும் சிறந்தவை.

முனைவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின்
தூய ஆங்கில இயக்கம் பற்றிய மேற்கோள்களை
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன் அவர்கள்
அழகுற விளக்குகிறார்.

ஆங்கிலன் நாட்டில் 1913ல் "Society for Pure English"
என்ற மொழித்தூய்மை இயக்கம் துவங்கப்பட்டது. இதைத்
தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அரசவைப்புலவர்.

அதற்கும் முன்னரே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே, வேற்றுமொழி, சொல் கலப்பினை
வெறுக்கும் கொள்கை தோன்ற ஆரம்பித்து விட்டது.
தெஃபோ (Defoe), திரைடன் (Dryden), அடிசன் போன்ற
அப்போதைய பெரும்புலவர்கள் பிறமொழிக் கலப்பை
வன்மையாகக் கண்டித்தனர்.

1711ல் அடிசன் தம் இதழில்
"நம்முடைய சட்ட அமைப்பில் சட்டங்கள் உரிமைகள்
வாணிகங்கள் முதலியவற்றைக் காக்க மேற்பார்வையாளர்
நியமிக்கும் விதி இருக்கின்றது. அங்ஙனமே வேற்று மொழிச்
சொற்கள் நம் மொழியில் வந்து கலவாமல் இருக்குமாறு
காக்க மேற்பார்வையாளர் நியமிக்கவும் விதி வேண்டும்"
என்று முழங்குகிறார்.

கேம்பெல் (Campbell) என்பார், "பிற துறைகளால் அழிவதை
விட, வேற்று மொழிச் சொற்களால் அழிவது நம்
மொழிக்குள்ள பெரிய அபாயம்" என்கிறார்.

சோமலே என்பார், அமெரிக்க ஆங்கிலத்தை மாசுற்ற மொழி
என்கிறார். அமெரிக்க ஆங்கில உச்சரிப்பிலும் பொருளிலும்
உள்ள மாற்றங்கள் அதிகம் வாதிக்கப் பட்டிருக்கின்றன.

18) ஆங்கிலர் மட்டும்தான் தம் மொழி போற்றினரா?
வேறு யாரும் இல்லையா?

ஏன் இல்லை. உருசியா, பிரான்சு போன்ற நாடுகளில்
தூய மொழி இயக்கங்கள் இருந்திருக்கின்றன.

அதைவிட பல நாடுகளில் அப்படி ஒரு தேவையே
எழாத அளவிற்கு தம் மொழிகளைப் பேணுகிறார்கள்.

செருமனி, ஆலந்து, அரேபியா போன்ற நாடுகளில்
மொழியின் மேன்மையும் தொன்மையும் பேணிக் காக்கப்
படுகின்றன. தம் மொழியை அவர்கள் சிதைக்கும்
பண்பாடே இல்லை.

அவ்வளவு ஏன், சமற்கிருதமே இதற்குச் சிறந்த சான்று.
சமற்கிருத மொழியை சமற்கிருதம் பேணுவோர்
சிதைத்திருக்கிறார்களா?

மாறாக, அவர்கள் அதனை தேவ மொழி என்றெல்லாம்
உயர்வான இடத்தைக் கொடுத்துப் பேணுவது நோக்கிக்
காணத் தக்கது.

சமற்கிருதம் என்றொரு மொழி தோன்றிய பின்னர்,
சமற்கிருதத்தில் ஆங்கிலச் சொல் அல்லது எழுத்து
கலந்து எழுதுவதோ, அல்லது அந்த மொழியை சிதைத்து
இன்புறுவதோ உண்டா?

அவர்களின் மொழி என்ற வகையில், சமற்கிருத
மொழியரின் இந்தப் பண்பு பாராட்டத் தக்கது.

அது போலத்தான் தமிழர், உருசியர், பிரெஞ்சுக்காரர்,
டச்சுக்காரர், அரேபியர், ஆங்கிலர், இந்திக்காரர், தெலுங்கர்
போன்று ஒவ்வொரு மொழியினரும் அவரவர்
மொழியினைக் காத்துக் கொள்வதற்கான முயற்சிகளைச்
செய்து அதன் தனித்தன்மையைக் காத்துக் கொள்கிறார்கள்.

ஆகையால் அப்படியான முயற்சிகளை எண்ணி
தமிழர்கள் நாணம் கொள்ளக் கூடாது.

கலப்புத் தமிழ் எழுதுவதைப் பெருமிதம் என்று
எண்ணும் தமிழர்கள் அப்படிச் செய்வது
ஒரு வகை கூச்சத்தினாலும் ஐயத்தினாலும்தான்.
அவற்றைக் களைந்து நமது முன்னோர்களின் சொற்களில்
இருந்து திடம் பெற வேண்டும்.

19) உருசியாவில் உருசிய மொழித் தூய்மை பற்றி
உருசியச் சிந்தனையாளர்கள் என்ன சிந்தனை
கொண்டிருந்தனர்?


உருசியாவைப் புரட்டிப் போட்ட தோழர் இலெனின்:

"நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டு
வருகிறோம். வேற்று மொழிச் சொற்களுக்கு
இணையாக உருசியத்தில் சொற்கள் வளமுடன்
இருப்பினும் அதை நாம் பயன்படுத்துவதில்லை.

செய்தித் தாள்களைப் படிக்கும் ஒருவன்,
அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
அவர்கள் பயன்படுத்தும் சொல்லையும் நடையையுமே
பழக வேண்டியதாகிறது!

வேற்று மொழிச் சொற்களால் செய்தி ஏடுகள்
மொழியைக் கெடுக்கின்றன.

செய்தி ஏடுகள் தரும் புதுச் சொற்களால்
ஒருவன் மகிழ்ச்சி கொண்டு அதையே நாட்டு

முன்னேற்றத்திற்கு ஏற்றது என்று சொல்லலாம்!

ஆனால் அது அவன் பிழையல்ல! பொறுப்பற்று
எழுதும் எழுத்தாளனின் பிழை!
அந்த எழுத்தாளனை மன்னிக்க முடியாது!.

இப்படி வேற்று மொழிச் சொற்களைப்
பயன்படுத்துவோரை எதிர்த்து நாம்
போராடவேண்டும்.

மொழிக்கலப்பைக் கண்டு நான் மிகவும்
மனம் நோகிறேன்.

சில ஏடுகள் முறையற்று செய்வதைக்
கண்டு நான் சீற்றம் கொள்கிறேன்.

இப்படிச் செய்வதால் உருசிய மொழி
சிதைவடைகிறது.

இப்படிச் செய்பவர்கள் மேல் போர்
தொடுக்கும் நேரம் வந்து விட்டது"

உருசியாவில் தோழர் இலெனின்,
இந்தியாவில் காந்தியார்,
ஆங்கிலர் நாட்டில் அடிசன்
தமிழ்நாட்டில் மறைமலையடிகளார்
என்ற
இந்த நான்கு சிந்தனையாளர்கள் மற்றும் குமுக
அக்கறையாளர்கள் சொற்களில் ஏதேனும்
அடிப்படை வேறுபாடுகளைக் காண முடிகிறதா?

இதழ்கள்/ஏடுகள் பற்றி இலெனினார்
கூறியவற்றைக் கூறாத, அக்கறைப்படாதவர்கள்
வலைப்பதிவு உலகிலும் இணைய உலகிலும் உண்டா?

அனைவரின் மொழி பற்றிய சிந்தனைகளின்
அடிநாதம் ஒன்றாக அல்லவா இருக்கிறது?

பிறகு என்ன தயக்கம்?

தெரிந்த தமிழில் தெரிந்த தமிழை எழுதுவது
எளிமைதானே!

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: தனித்தமிழ் இயக்கம் என்ற புலவர் இரா.இளங்குமரன் அவர்களின்
நூல் மிக அருமையான செய்திகளைக் கொண்டிருக்கிறது. அந்நூலுக்காக
அவருக்குப் பல நன்றிகளைச் சொல்லவேண்டும். அனைவரும் பயில வேண்டிய நூல்.

Thursday, April 24, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 1 (FAQs part 1)

இணைய/வலைப்பதிவுலகில் தமிழின் குறைகள் பற்றி
நிறைய பேசப்படுவது உந்துதல் அளிப்பதாக இருக்கிறது,
அதே நேரத்தில் ஆங்காங்கு சவலையான
மொழியில் எழுதப் படுகின்ற பதிவுகளைப் பார்க்கும்
போது கவலையும் பிறக்கிறது. தனித்தமிழ் பற்றிய புரிதலுக்காகவே இத்தொடர்.

1) தனித்தமிழ் என்றால் என்ன?

பிறமொழிக்கலப்பு தமிழ் மொழியில் ஏற்பட்டு
மொழியும் பேச்சும் சிதைந்து போகின்ற சூழல்
ஏற்பட்டுவிடாமல், மொழியின் தனித்தன்மை
குன்றாது தமது எழுத்தைக் காத்துக்
கொள்ளும் பண்புகள் தமிழுக்கு உண்டு. பிறமொழி துணயின்றி தனித்தியங்கும் வல்லமை உள்ள நமது தமிழ்மொழியை தனித்தமிழ்  என்று சிறப்பித்து கூறுகின்றனர்.


2) தமிழ் என்பதும் தனித்தமிழ் என்பதும் வேறு வேறா?

இல்லை. தனித்தமிழே தமிழ். தமிழ் என்றால் அது பிறமொழிக்கலப்பில்லா தமிழையே குறிக்கும். பிறமொழி, எழுத்துகள் கலந்திருப்பின் அவை தமிழ் ஆகா.

3) தமிழின் தனித்தன்மை குன்றினால் என்ன ஆகும்?


அ) செந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில்,
தொல்காப்பியம் தோன்றியசேரநாட்டில்,
திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ள
சேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றி
ஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்த
அப்போதைக்கு ஏலாததாலும், அரசியல்
மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும்
தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது,
அதன்விளைவு மலையாளம் என்ற மொழி
தோன்றியது 1100 ஆண்டுகளுக்கு
முன்னர். அது தனி நாடாகவும்
ஆகிப்போனது ஏறத்தாழ கி.பி 1300க்குப்
பின்னர். இந்த வரலாற்றை அறிந்திருந்தும்
அறியாததுபோல வாழ்ந்தால்
பிழை நம்மதுதானே?


ஆ) தனித்தன்மை குன்றினால் எந்த ஒன்றிற்கும்
பிற மொழிகளைச் சார்ந்தே வாழ வேண்டி இருக்கும்.
மனிதனுக்கு அடிமை புத்தி வருவதற்கு மூலமே இதுதான். காட்டாக, விபத்தில் சிக்கி கை கால் ஊனமுற்றவர்கள் வாழ்க்கை முழுதும் சரவல் பட்டு சார்ந்து வாழ்வதைப்போல, மொழியைக் குன்ற விட்ட குமுகமும் ஆகிவிடும். மூச்சு இருக்கும் வரை வாழ்விருக்கும்தான்.
ஆனால் ஊனத்துடன் வாழ்வது எவ்வளவு பேருக்கு இன்பம்?
4) தனித்தமிழ் என்றால் அகராதியில் இருக்கும்
சொற்களைப் பார்த்துப் பார்த்து,
வேர்ச் சொல் ஆய்ந்து ஆய்ந்து,
கலைச்சொல் கண்டு பிடித்துக்
கண்டு பிடித்து எழுதுவதா?

இல்லை.

அ) எளிமையாக இருக்கும் தமிழை எல்லோரும் அறிந்த
தமிழை நேர்த்தியாக எழுதுவதுதான் அடிப்படை.

ஆ) ஆங்கிலம், சமற்கிருதம் போன்ற அயல் மொழிகள்,
மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற, தமிழ்கெட்டு பிறவாக கிளைத்த கிளை மொழிகள் போன்றவற்றின் சொல்லும், எழுத்துக்களும்
தமிழில் பாவாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஆங்கிலம் சமற்கிருதம்
போன்றவை செய்யும் தீங்கு போதாதென்று,
மலையாளம், தெலுங்கு போன்றவற்றை அறிந்த
எழுத்தாளர்கள் அதனையும் சேர்த்துக்
குழப்பியடித்துத் தீங்கு செய்கிறார்கள்.


5) மலையாளம் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் பாதிப்பேதும் இல்லையே; பிறகு ஏன் கவலைப்படவேண்டும்?

மலையாளம் தோன்ற ஆரம்பித்துப்
பின்னர் நாடாக, தமிழ்த் தொடர்பை
அறுத்துக் கொண்ட 1300/1400க்கு
பின்னரான கால கட்டத்தில்
குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டிற்கும்
20 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலத்தில் மலையாளத்தைப் பின்பற்றி
தமிழகத்தில் மணிப்பிரவாளம்
என்ற மொழி ஏற்பட்டிருந்தது.

சமற்கிருதப் புலமையே புலமை, பண்டிதம்,
அறிஞம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மணிப்பிரவாள இலக்கியங்கள்
மிகுந்தன. சமற்கிருதமும் தமிழும் கலந்த
கலவையான மணிப்பிரவாளம்
பேசுவது எழுதுவது நாகரிகமாக ஆகி
சென்னை மாநிலம் மணிப்பிரவாள
மாநிலமாக இருந்தது.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால்
தமிழ்நாடு என்பது வரலாற்றில்
கரைந்து இருக்கும். இன்றைக்கு இந்த
அளவு கூட தமிழ் இருந்திருக்காது;
இன்றைய தமிழ்நாட்டுக்குள்
மணிப்பிரவாள மாநிலம் தோன்றியிருக்கும்.

தற்போது உலகில் ஓங்கி நிற்கும் ஆங்கிலத்தால் நமக்கு வேறுவழியில்லாததால் தீவினன ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதற்கு ஆங்கிலத்தைக் குற்றம் சொல்லமுடியாது.
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


6) தனித்தமிழ் இயக்கம்தான் தமிழ்நாட்டை
மற்றொரு பிரிவில் இருந்து காப்பாற்றியதா?
ஆமாம்.


7) காப்பாற்றுதல் என்றால் என்ன?

காப்பாற்றுதல் என்பதை இரு வகைப் படுத்துகிறார்
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன்.
அவரின் "தனித்தமிழ் இயக்கம்" என்ற நூலில்
இப்படிச் சொல்கிறார்:

காவற்கடமை:

"ஒன்று, வளர்ந்து செழிப்படைவதற்கு
வேண்டிய ஆக்கச் செயல் வகைகளையெல்லாம்
செய்தல். மற்றொன்று. பிறவற்றின் தாக்கம்,
அழிப்புகளில் இருந்து காத்தல்.


முன்னது அகக்காவல். பின்னது புறக்காவல்.
இருவகைக் காவலும் மேற்கொண்டால்

அல்லாமல் மக்கள் வாழ்வு சிறப்படையாது. "

அவ்வாறே மொழிவாழ்வும். அகக்காவலும் புறக்காவலும் இல்லாமல்
எடுப்பார் கை பிள்ளையாய் ஆகிப்போனது தமிழ்.

"மக்கள் இனக்கலப்பு தவிர்க்க இயலாமை போல,
மொழிக்கலப்பும் தவிர்க்க முடியாததே. ஆனால்,
தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில்
எப்படி ஓரினம் மாற்றம் ஆகிவிடக்கூடாதோ,
அப்படியே ஒருமொழியும் மாற்றம் ஆகிவிட
விட்டு விடக் கூடாது"

8) தனித்தமிழ் இயக்கம் என்பது என்ன? அது யாரால்
தோற்றுவிக்கப் பட்டது?

பெருகிவந்த மணிப்பிரவாளம் ஏறத்தாழ
தமிழின் குரல்வளையை
இறுக்கியபோது, அதன் கேடுகளையும்
வரலாற்றையும் உணர்ந்த
நமது முன்னோர்கள், தமிழை மீட்கவும்,
அதன் தனித்தன்மையை
நிலை நிறுத்தவும், தமிழர்கள் அடையாளம்
நிலைக்கவும் தோற்றுவித்த
இயக்கம் தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் இயக்கம்
தவத்திரு மறைமலை அடிகளாரால்
தோற்றுவிக்கப் பட்டது.

9) தனித்தமிழ் இயக்கம் தோன்ற முன்னோடியாக
இருந்தது யாது?

திருவிடர் கழகம் என்ற அமைப்பு.
இது குறித்து செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் கூறுவதாவது:

//
19-11-1908 இல் "திருவிடர் கழகம்" என்னும் அமைப்பு
தோற்றுவிக்கப்பட்டது. அதனை அமைத்தவர்
"மறைத்திருவன் விருதை சிவஞான யோகிகள்"
என்பவர் ஆவார். (திராவிடர் கழகம் வேறு,
திருவிடர் கழகம் வேறு). 99 யாண்டுகள்
உயிர்வாழ்ந்த அந்தப் பெருமகனார் பன்மொழிப் புலவர்.

குற்றாலத் தென்றலாய் தமிழுக்கு அமைந்த
இவ்வமைப்பு தோன்றியதும் குற்றாலத்தில்தான்.

இதன் தலைவராக திருவன் சீர்காழி கே.சிதம்பர
முதலியார் இருந்தார். துணைத்தலைவர்களாக இருந்த
மூவர் வருமாறு.

திருவன் பூவை.கலியாண சுந்தர முதலியார்
திருவன் ஏ.பால்வண்ண முதலியார்
திருவன் மு.ரா.கந்தசாமிக் கவிராயர்


இக்கழக உறுப்பினர்களாக 59 பேர் கொண்ட
பட்டியல் உள்ளது.

அவர்களில்
திருவன் இராவ்பகதூர் தியாகராச செட்டியார்,
திருவன் வெ.ப.சுப்பிரமணிய முதலியார்
திருவன் அரசஞ் சண்முகனார்
திருவன் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை
மறைத்திருவன் சுவாமி வேதாச்சலம்
(மறைமலை அடிகளார்)
திருவன் மு.கதிரேசச் செட்டியார்
திருவன் சோமசுந்தர பாரதியார் (நாவலர்)
ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடத்தக்கவையாக
குறிக்கப் பட்டுள்ளது.
//

திருவிடரின்(திராவிடர்கள்) பழைய
வரலாறுகளையும் மொழியையும்
(தமிழ்) ஆய்ந்து உண்மைச் சேதிகளை
வெளிக் கொணருதலை
இன்றியமையா குறிக்கோள்களில் ஒன்றாகக்
கொண்ட இந்தக் கழகத்தின்
குறிக்கோள்கள், கட்டளைகள், செயல்பாடுகள்
குறித்த பதிவுகளில்
காணப்படும் தமிழ்ச் சொற்கள்
அருஞ்சிறப்பு வாய்ந்தவை.

10) தனித்தமிழ் இயக்கத் தந்தை
தவத்திரு மறைமலை அடிகளாரைப்
பற்றிச் சிறிது அறிய முடியுமா?

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்,
பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆகியோரது
கீழ்க்கண்ட உரைகள் நமக்கு நிறைய அறியத்தருகின்றன.

அடிகளார் இளந்தைப் பருவத்தில்
நாகையில் வெசிலி கல்லூரியில் உயர்
பள்ளியில் கற்று வந்தார். பள்ளியில் தமிழ்
பயின்றதோடு, பொத்தகக் கடை
வாணிகராகவும் இருந்தார்.

பெரும் தமிழ்ப் புலமையாளர்
திருவன் நாராயணசாமி அவர்களிடம்
செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச்
செவ்வையாகக் கற்றார்.

ஒழுக்கத்துக்கு எவர்நடையைப் பின்பற்ற வேண்டும்? ஒழுங்கர்
நடையைத்தானே
?

மாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும்
எவ்வளவு இன்றியமையாததோ
அவ்வளவு இன்றியமையாதது,
மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.

அக்கட்டுப்பாட்டைக் கட்டாயம்
உண்டாக்க வேண்டும் என்ற அடிகளாரின்
பேருள்ளத்தில் உருவானதே தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் கண்ட அடிகளார்
உடலோம்பலில் தலை நின்றவர்;
உணவு, உடை,உழைப்பு, ஓய்வு, உறக்கம், உலாவல்
இன்னவற்றெல்லாம்
ஓர் ஒழுங்கர். இருப்பிடம் அலுவலகம்
தோட்டம் சூழல் இன்னவெல்லாம்
தூசு தும்பு மாசு மறுவின்றித் திகழத்
திட்டப்படுத்தி ஒழுங்குபடுத்திக்
கொண்ட கடமையர்.

எழுதும் எழுத்து, பேசும் பேச்சு, நடக்கும் நடை,
எடுக்கும் நூல், தொடுக்கும் மிதியடி இவற்றிலெல்லாம்
ஒழுங்குமுறை கடைப்பிடியர். அந்த
ஒழுங்குள்ளத்தில் தோன்றியதே தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறார் புலவர் இரா.இளங்குமரன்.
வ.சுப.மாணிக்கனார்
அவர்கள்,
"அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்
தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும்,
தமிழர் அறைபோகாதும் காத்தது.
தமிழின் வயிற்றிலிருந்து முன்பு பல
திராவிட மொழிகள் கிளைத்து
அதன் பரப்பைச் சுருக்கியது போல

மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய
திராவிட மொழி பிறந்து தமிழைக் குன்றிக்
குலையாதவாறு தடுத்தது"
என்று உரைக்கிறார்.

11) மறைமலை அடிகளார் தூயதமிழ்
போற்றுபவர்களிடம் இருந்து
"தமிழ் விடுதலை ஆகவேண்டும்" என்று

சொல்பவர்களையும், நல்ல தமிழ் செய்பவர்களைக்
கேலி பேசுபவர்களையும் பற்றி என்ன சொல்கிறார்?
மறைமலை அடிகளாரை அவர்காலத்தில் கிடுக்காத,
தாக்காத கீழ்மொழி தாசர்கள் குறைவு.
அவர் சந்திக்காத கிடுக்கல்கள்
கிடையாது. அது இன்றும் பொருந்தும்.

மறைமலை அடிகளார், தம் தமிழ்ப்பணியை
"கலிகாலக் கொடுமை"
என்று நகைத்தார்க்கு பதிலிறுக்கிறார்;

"பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும்
நம் தனித் தமிழ்த்தாயைப் பிறமொழிச் சொற்கள்
என்னும் கோடாரியினுள் நுழைந்து கொண்டு,
இத்தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க

முயல்வதுதான் *கலிகாலக் கொடுமை*!
இத்தீவினை புரியும் இவர் தம்மைத் தடுத்து,
எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க
முன்நிற்கும் எம்போல்வாரது நல்வினைச்

செயல் ஒருகாலும் கலிகாலக்
கொடுமை ஆகாது என்று

உணர்மின்கள், நடுநிலையுடையீர்"!

12) தமிழின் தனித்தன்மை பேணாமையால்
எய்திய கேடு என்ன என்று
அடிகளார் கூறுகிறார்?

மறைமலையடிகள் கூறுகிறார்:

"மக்களை விட்டு மொழியும், மொழியை விட்டு
மக்களும் உயிர்வாழ்தல் சிறிதும் இயலாது.

எனது விருப்பப்படிதான் யான் பேசும்
மொழியைத் திரித்தும், அயல்மொழிச் சொற்களோடு கலந்து
மாசு படுத்தியும் வழங்குவேன்;


அம்மொழியின் அமைப்பின்படி யான்
நடக்கக் கடவேன் அல்லன்' என்று
ஒவ்வொருவனும் தனது மொழியைத்
தன் விருப்பப்படி எல்லாம் திரித்துக் கொண்டு
போவானாயின் சிறிது காலத்தில்
ஒரு மக்கட் கூட்டத்தாரிலேயே ஒருவரை
ஒருவர் அறிந்து கொள்ள முடியாத
வகையாய் ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும்
ஒவ்வொரு புதுமொழி காலந்தோறும்
உண்டாகி அம்மக்களை ஒன்று சேரவிடாமல்
அவர்களைப் பல சிறு கூட்டங்களாகப் பிரித்து விடும்"
(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, April 22, 2008

கிச்சுக் கிச்சுத் தாம்பாலம்!

இருபதாம் நூற்றாண்டு பெற்றெடுத்த மாபெரும்
மாணிக்கங்களில் ஒரு மாணிக்கமான பாவாணர்,
தமிழரின் துறைகளில் ஆய்வு செய்து அடுக்கி வைக்காதத்
துறை எது என்று தேடத்தான் வேண்டும்.

நாம் குழந்தைப் பருவத்தில் ஆடிக்களித்த நாட்கள்
எத்தனையோ உண்டு! ஆடிய ஆட்டங்கள் எத்தனை,
எத்தனை? குழந்தைகள் மட்டுமா?
அரும்பு மீசைகள், மடந்தையர் மங்கையர்,
பெரியோர், முதியோர் ஆடிய விளையாட்டுகள்
எத்தனை எத்தனை?

"குலை குலையாய் முந்திரிக்காய்" என்று பாடாத பிஞ்சு
வாய்கள் இருந்திருக்குமா?

"கல்லா மண்ணா?", சில்லாக்கு, பல்லாங்குழி,
பச்சைக் குதிரை, பம்பரக்குத்து, கிட்டிப்புள், கோலி
என்று எவ்வளவோ ஆட்டத்தை நாம்
ஆடியிருக்கிறோமல்லவா?.

"தமிழ்நாட்டு விளையாட்டுகள்" என்ற, பாவாணரின்
நூல் அத்தனை விளையாட்டுகளையும், பதித்து
வைத்திருக்கிறது. அதைப் படிக்கும்போது என் உள்ளம்
மீண்டும் ஆடத் துடிக்கிறது
(நாம் எவ்வளவோ "டமில்ப் பனி" செய்து
கொண்டிருக்கிறோம். அதனாலேயே
பாவாணரின் பணி வியக்க வைப்பதாக இருக்கிறது.
ஊர் ஊராய் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்
என்று தேடித் தேடி அவர் எழுதியிருப்பது சிந்தனையை
வளர்ப்பதாக இருக்கிறது. )

அந்த ஆட்டங்களில் எவ்வளவோ ஆட்டங்களை நாம்
ஆடியிருக்கிறோமே என்று எண்ணும்போது மலரும்
நினைவுகளால் இறையம்(இதயம்) நிறைகிறது.

நகர்ப்புறங்களிலும் வெளிநாடுகளிலும்(!) காணமுடியாத/ஆடமுடியாத
இந்த விளையாட்டை எண்ணும்போது என் கண்கள் செருகுகின்றன.

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்":

ஓடி ஓடிக் களைத்த காவிரி சற்று ஓய்வு கொண்ட
வேனில் காலம்!

இரு கரைகளையும் அச்சுறுத்திய காவிரி சற்று அயர்ந்து
போய் ஆற்று மணலை எமக்கு ஆடுதற்குத் தந்த காலம்!

ஆடைகளில் கறையேறாதிருக்க, காவிரித்தாய்
தோய்த்துத் தோய்த்து தூய்மையாய்த் தந்த
ஆற்றுமணல் கருப்பஞ் சக்கரையாய் எம் கண்களுக்கு!

உள்ளங்கைகளில் அள்ளி உற்று நோக்கி மெல்ல
வியந்திருந்தோம்!

அப்படியே அமர்ந்து, அருமை மணலில்
கிச்சுக் கிச்சு தாம்பாலம் ஆடிய நாட்களை இன்றைக்குப்
பிள்ளைகளோடும் ஆர்வமுள்ளோரும் பகிர்ந்து
கொள்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி!
அதுவும் பாவாணரின் எழுத்துக்களை அடிப்படையாகச்
கொள்ளும்போது மகிழ்ச்சிப் பொங்கத்தான் செய்கிறது.

கிச்சுக் கிச்சுத் தம்பலத்தை இரண்டு பேர் மட்டுமே
ஆடமுடியும். சிறுமியர் சிறுவர் யார் வேண்டுமானாலும்
ஆடலாம். பெரும்பாலும் சிறுமியர் ஆடுவர்.
ஆடும் இருவருக்கும் தோழர்கள்/தோழியர்கள் உண்டு.

திறந்த வெளிகளில் ஆடப்படும் ஆட்டம்.
இதை ஆட, ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமுள்ள
மணற்கரை அமைப்பர்; அது ஒரு 4 அல்லது 5 அங்குல
உயரம் உள்ளதாக இருக்கும். அதில், அரை அல்லது ஒரு
அங்குல நீளம் உடைய மெல்லிய குச்சியை (சிறு
கிளிஞ்சல்/சங்கு/புளியங்கொட்டை/சிறு ஓடு/விலக்குமார்
குச்சி போன்றவற்றையும் பயன்படுத்துவர்)
போன்றவற்றை ஒருவர் மறைத்து வைக்க, மற்றவர் அதைக் கண்டு
பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பலம்.

மணற்கரையை ஆக்கி வைத்து, முதலில் யார் ஆடுவது
என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். யார் முதலில்
மறைத்து வைப்பது என்பதில் முடிவு ஏற்படாவிடில்,
காசெடுத்து பூவா தலையா போடுவதைப் போல,
ஓட்டாஞ்சில்லை எடுத்து, ஒரு புறத்தை ஈரமாக்கி
(நக்கி :) ) , "எச்சா மானமா" என்று கேட்டு,
வெல்பவர் முதலில் ஆட ஆரம்பிப்பார்.

ஆடு கருவியான குச்சியை, எதாவது ஒரு கையின்
இருவிரல்களில் பிடித்து (கட்டை விரல், ஆள்காட்டிவிரல்),
மணற்கரையின் ஒரு முனையில் அவ்விரல்களை நுழைத்து
வைத்திருப்பார். மற்றொரு கையில் அந்த இரு
விரல்களையும் மறுபுறத்தில் நுழைத்து வைத்திருப்பார்.

குறிப்பு: "தம்பலம்" என்று ஒலிக்காமல் "தாம்பாலம்"
என்று நீட்டி ஒலிப்பது வழக்கம். பாவாணர் தம்பலம்
என்று சொல்கிறார்.

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்
கீயாக் கீயாத் தம்பலம்
மச்சு மச்சுத் தம்பலம்
மாயா மாயாத் தம்பலம்"

என்று பாடிக் கொண்டே, திரும்பத் திரும்பப்
பாடிக் கொண்டே குச்சியை இரு கைகளுக்கிடையே
மாற்றியோ, மாற்றாமலோ, அந்த மணற்கரையின்
முழுநீளத்திற்கும்,முன்னும் பின்னுமாய் போயும் வந்தும்,
எதிரே அமர்ந்திருப்பவர் பார்த்துக்
கொண்டேயிருந்தாலும், மணலுக்குள் தெரியாதாதலால்,
ஏதோ ஒரு இடத்தில் குச்சியை மறைத்து வைப்பார்.
மறைத்து வைத்தும், முன்னும் பின்னும் போய் வந்து
போக்க்குக் காட்டுவது உண்டு; முன்னர் மறைத்த இடத்தில்
இருந்து திறமையாக மாற்றி வைப்பதும் உண்டு.

இப்படி மணலுக்குள் மறைத்து வைத்தபின், அடுத்தவர்
எந்த இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அந்த
இடத்தில், தன் இரண்டு கரங்களையும் பிணைத்து,
குச்சி இருக்கும் மணற்கரையின் இடத்தைப் பொத்த
வேண்டும்.

மறைத்து வைத்தவர், பாடிக் கொண்டே, முன்னும் பின்னும்
போய் வந்து கொண்டிருந்தபோது,
அவரின் கர அசைவுகள், உடல் அசைவுகள்,
முக அசைவுகள் இவற்றைக் கூர்மையாகக்
கவனித்தால்தான், மற்றவர் அதை எளிதில்
கண்டுபிடிக்க ஏதுவாகும்.

கரங்கள் பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால்,
எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர் வென்றார்.

வென்றவர் மீண்டும் மறைத்து வைப்பார்.
இப்படியாக ந்து அல்லது பத்து தடவை வென்றவர்,
ஆட்டத்தை வென்றவர் ஆகிறார்.

தற்போது, தோற்றவரின் கையைக் கூட்டி,
(ஏந்துமாறு வைத்து) அதில் மணலை அள்ளி வைத்து,
நடுவிலே அந்த சிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர்,
அவரின் கண்களைப் பொத்தி, அம்மணலை ஏந்தியவாறு,

நடந்து கொண்டே, "அம்மாயி வீடு எங்க இருக்கு?"
என்று கேட்க, வென்றவர், "ஆற்றுக்கு அங்கிட்டு" என்று
சொல்வார்;

இப்படியே, இடம் குறித்த சில கேள்விகளை திருப்பி,
திருப்பிக் கேட்டு, சிறிது தூரம் சென்றதும், அந்த ஏந்து
கை மணலையும், குச்சியையும் ஒரு இடத்தில் வைக்கச்
சொல்வார்; கண்கள் இன்னும் பொத்தப் பட்டிருக்கும்.

மேலும் சிறிது தூரம் சென்று, கண்களைப் பொத்தியபடியே,
இரண்டு மூன்று முறை, மணல் வைத்த இடம் தெரியாமல்
இருக்க, கண் பொத்தப் பட்டுள்ளவரை சுற்றி விடுவர்.

பின்னர் கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டு பி
டிக்க வேண்டும். அப்போது, தோழர் தோழியரின்
மகிழ்ச்சி பொங்கிப் பாயும்.

இப்படி ஆடுவதுதான் கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாட்டு.

யாருக்கும் இன்னல் இன்றி, குழுவினரோடு ஆடும் இந்த
விளையாட்டு, நகரத்தில் மற்றும் நாடுகள் தாண்டி
வாழ்பவர்க்கு ஏலவில்லை. அப்படியே இயன்றாலும்
அவ்விளையாட்டை நாம்/நம் பிள்ளைகள் ஆடுவதில்லை.

இது ஒரு சில்லறை விளையாட்டு - ஏழைகளின்
விளையாட்டு, என்ற கருத்தே நமக்குப் பெரும்பாலும்
தோன்றும். ஆனால் மிகவும் பொருள் பொதிந்த
விளையாட்டு.

1) மணற்கரையில் மறைத்த குச்சியை கண்டு பிடிக்கும்போது,
மறைத்து வைக்கும் சூக்குமத்தை மறைப்பவருக்கு
வளர்க்கிறது!

2) எடுக்க வேண்டியவருக்கோ, மறைத்து வைப்பவரின்
உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றை வைத்தே,
மறைத்து வைக்கும் இடத்தை உணரும் திறன் வளர்கிறது.

3)அதன் பின், விளையாட்டின் இறுதியில், கண் பொத்தி
சுற்றி விடப்பட்ட பின்,அம்மணலைத் தேடும்போது,
"திசையறியும்" திறன் வளர்கிறது.

இருவர் ஆடினும், மகிழ்ச்சி, கூடியுள்ளோர்
அனைவருக்கும்தான்.

திருச்சி பகுதியில் இப்படித்தான் விளையாடுவோம்;
விளையாடினோம். பாவாணர் அவர்களும்,
சோழ கொங்கு நாடுகளில் இப்படி பழக்கம்
என்கிறார்.

அதோடு பாண்டி நாட்டில், ஆடப்படும் விதம் நோக்கம்
எல்லாம் ஒன்றாகினும், பாடும் பாடலும், மறைக்கும்
கருவியும் வேறுபடுகிறதைச் சுட்டுகிறார்.
பாண்டி நாட்டில் சிறு குச்சிக்கு பதில் சிறு
துணித் திரியை பயன்படுத்துகிறார்களாம்.

பாண்டி நாட்டில் பாடப் படும் பாடல்:

"திரித் திரி பொம்முதிரி
திரிகாலடி பொம்முதிரி
காசுகொண்டு பொம்முதிரி
கடையிலே கொண்டும் பொம்முதிரி
நாலுகரண்டி நல்லெண்ணெய்
நாற்பத்தோரு தீவட்டி
கள்ளன் வாறான் கதவடை
வெள்ளச்சி வாறாள் விளக்கேற்று
வாறார் அய்யா சுப்பையா
வழிவிடம்மா மீனாட்சி."

(பாண்டி நாட்டுக் காரங்கதான் இதுபற்றிச் சொல்ல
வேண்டும்)

சோழ, கொங்கு, பாண்டி நாடுகளில் கண்ட
இந்த ஆட்டம் இன்றும் கிராமங்களில் சிறாரால்
விளையாடப்படுகிறது. கிராமம் விட்டு நகரம் வந்தோரும்,
நாடை விட்டு நாடு போனோர்களும்
இதனை மறந்து விட்டனர். மேலும் நகரங்களிலும் வெளிநாடுகளிலும் இம்மாதிரி விளையாடவியலாது.
தூய்மைக் காரணங்கள், திறந்த வெளிகளில் மணல்
கிடைக்காமை, அடுக்கு மாடி வீடுகளில் வாழ்க்கை
என்று பலகாரணங்கள் உள்ளன. தமிழர் தமிழரின்

பலவற்றை மறந்து வருகையில் இதையும்
மறக்க மாட்டார்களா என்ன? என்று இப்படியாக
சிந்தனைகள் போனபோது ஏன் இதனை விளையாட
முடியாது நகர்களில் என்றும் தோன்றியது.

தூய்மைக் குறைவான மணலை வைத்து விளையாடுவது
சரியல்ல! ஆனால் தூய்மையான மணலை வைத்து,
பிறருக்கு இன்னல் வராமல் இந்த விளையாட்டை
விளையாட ஏலும்.

ஒரு ஒன்னறை அடி/இரண்டடி நீளப் பெட்டியில் மணல்
பை வைத் திருக்க வேண்டும். அதில் சிறு குச்சி அல்லது
கிளிஞ்சல்,சோழி போன்றவற்றில் ஒன்றை வைத்திருக்கலாம்.
விளையாடும்போது, தரையில் கொட்டாமல் அந்தக்
கச்சிதமான சிறு மடிப்புப் பெட்டிக்குள்ளே கொட்டிக்
கொண்டு ஆசை தீர கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாடலாம் :-))))))

வீட்டில் மட்டுமல்ல, வெளியே பூங்காக்களில்
விளையாடலாம். கடற்கரைகளிலும் தூய்மை குன்றி
வருவதால் அங்கு கூட எடுத்துச் சென்று
இதை விளையாடலாம்.

பிள்ளைகளுக்கு, அறிவுத்திறனை வளர்க்கும் ஆட்டம்
இது; நினைவாற்றல் மற்றும் திசையறியும் ஆட்டம் இது;
முக்கியமாக ஓசையுடன் கூடிய பாடலோடு கூடிய
ஆட்டம் இது;

சொல்லையும் மொழியையும் நாவில் வளர்க்கும் ஆட்டம்
என்பதோடு மீட்டெடுக்கப் படக்கூடிய,
தக்க வைக்கக் கூடிய ஆட்டமாகத்தான் தோன்றுகிறது.

என்ன எப்படி இது.... என்று சிரிப்பு
வருகிறதா? :-)) இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி
ஒரு பேத்தலா? அதுவும் கணியுகத்தில் இப்படி ஒரு
கிறுக்கலா....! என்று நக்கலடிக்கத் தோன்றுகிறதா? :-))

ஏங்க, கடைகளிலே, "சைனாக்களிமண்" கிடைக்கிறதே
அதைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து
பொம்மைகள் செய்து விளையாடக் கொடுக்கிறோமே!?
அது மண்தானே!

நாம், களிமண்ணில் செய்து விளையாடியதைத்தானே
கடையில் தூய்மையான களியாய் வைத்திருக்கிறார்கள்!

அந்த மண்ணை நாம் தொட்டு விளையாடும்போது,
வேதிப் பொருள்கள் கலந்து ஒருவித முடையடிக்கும்.
அந்த மண்ணைத் தொட்டு விளையாடும்போது, ஒட்டிக்

கொள்ளாத தூய்மையான ஆற்று மணலில் சிறு மடிப்புப்
பெட்டிக்குள் வைத்து விளையாடலாம்தானே!

கடைகளிலும் கிச்சுக் கிச்சுத் தம்பல விளையாட்டுப்
பொருள்கள், சிறு பெட்டிக்குள் போட்டு விற்கப்
படலாம்தானே!

நமது விளையாட்டுகள் அத்தனையையும் நகர,
வெளிநாடுகளுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி அமைத்து
நாம் அதை விளையாடலாம்தானே!

மெய்யாலுஞ் சொல்கிறேன் - சீனாக்காரன் நம்ம
கிராமத்துப் பக்கம் போய்ப் பார்த்தான்னா
அழகான பெட்டி செய்து, அதுக்குள்ள மூனு படி ஆற்று
மண்ணைப் போட்டு, இரண்டு மின்கலன்கள் போட்டு,
வண்ண வண்ண விளக்குகள் போட்டு, கூடவே 'கிச்சுக்
கிச்சுத் தாம்பாலம்..." என்ற பாட்டையும் ஓடவிட்டு
49.95$ க்கு விற்று விடுவான் :-)) நம்ம ஊர்க்காரன்
அதுக்கு முகவர் ஆக அலைவான் ;-))))

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, April 20, 2008

பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2008

தமிழ்ப்பதிவுலகிற்கும், தமிழ்மணத்துக்கும் வணக்கம்.
தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர வாரம் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளான இன்று துவங்குவது, எனக்கு எழுதிட மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கியது.

பாவேந்தரின் காலம்: 29-ஏப்ரல்-1891 முதல் 21-ஏப்ரல்-1964 வரை.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்
நினைவு கூர அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

இன்று அவருக்கு நான் சூடும் தமிழ் மாலை இங்கே!
படிக்க! பாடுக!

தமிழாரம் உமக்கே!

அலைமேவு கரைஓரம் அனலாக நிமிர்ந்தே
... அலமந்த தமிழோர்க்குச் சுடராக விரிந்தாய்
மலைபோலுன் தமிழேந்திப் பகைமோதிப் பலநாள்
... முகமற்றப் பழையோரின் முதலாக மலர்ந்தாய்
வலைசூழ வகைமாறிப் பிழைபோன குடியோர்
... வழிஒன்றி வளமாக வளமார்த்த வளமே
தலைநீள நிலம்வாழ தமிழ்வாழ உழைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!

பிறபாடை குடைந்தாடி முறிவாகி நிலமும்
... பறிபோகப் பதைத்தோரின் பலமான பலமே,
அறநூலைப் புதைத்தாரின் அடையாளம் எழுதி
... அவக்காரம் அவைதீர விதையான விதையே,
மறமார்த்தக் குமுகாய மயக்காறு மடிய
... முடிவான முறையோதி முனையான முனையே,
திறலூற்றுத் திசைமேவி நெருப்பாக நிறைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!

---நாக.இளங்கோவன்


அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-2008