Pages

Saturday, January 29, 2011

தமிழ் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடக்கும் தமிழ் மொழிப்படுகொலை!

உலக வரலாற்றில், மனித இனம் மொத்தமும்
சுற்றி நின்று, நித்தம் பல்லாயிரம் தமிழர்கள்
கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க,
தமிழ் இனப்படுகொலையைப் பற்றிய அக்கறையே
இல்லாமல் இருந்த தமிழ்க் குமுகம்,
நடந்து கொண்டிருக்கும் தமிழ்
மொழிப்படுகொலையையும்
அதைவிட நிதானமாக வேடிக்கை பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல
வேண்டும்.

இனப்படுகொலை முடிந்த கையோடு
ஒன்றன்பின் ஒன்றாகத் தமிழ் மொழியைச் சிதைக்க
நடக்கும் அடுத்தடுத்த முயற்சிகளை எண்ணுங்கால்,
"இனப்படுகொலைக்கே இந்தக்குமுகம்
தூங்கிக்கொண்டிருந்தது; மொழிக்காக எங்கே
எழப்போகிறது?" என்ற ஊக்கமே காரணமாக
இருக்கக் கூடும் என்று சொன்னால் மிகையல்ல.

5 அல்லது 6 நூறாண்டுகளாக வடமொழியை
நுழைத்து, தமிழைக் குற்றுயிரும் குலையுயிருமாய்
ஆக்கிச் சீரழித்து, அதற்கு "மணிப்பிரவாளம்"
என்று பெயர் கொடுத்து "மலையாளம்" போல
தமிழை ஆக்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

பின்னர் மறைமலையடிகளாரின் தனித்தமிழ்
இயக்கம் வீறுகொண்டு எழுந்து குற்றுயிராய்க்
கிடந்த தமிழுக்கு மருந்து போட்டு அதன்
சீரிளமையைத் தூக்கி நிறுத்தியது.

இந்த அழகில், "தமிழை யாராலும் அழிக்க முடியாது!"
என்ற வீரவசனத்திற்கு மட்டும் மேடைகளில்
குறைவேயிருக்காது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்,
மணிப்பிரவாளத்தை முறித்துப் போட்டு, தனித்தமிழ்
இயக்கம் தந்த தாங்கலை வேரறுக்கத் தருணம் பார்த்தது
போலவே இருக்கிறது இந்தியாவை ஆளுகின்ற
காங்கிரசு அரசு இன்றைக்கு அதே மணிப்பிரவாளத்தை
உருவாக்கத் தமிழர்க்கெதிரான பேராயுதமாகக்
கையில் எடுத்திருப்பது.

வடமொழியை எழுத 68 கிரந்த எழுத்துக் குறியீடு போதும்
என்ற நிலையிலும், கிரந்த ஆவணங்களை அதைக் கொண்டு
படிக்க முடியும் என்ற போதிலும், வேண்டும் என்றே
கிரந்தத்தில் தமிழைக் கலந்த மணிப்பிரவாள-ஒருங்குறியை
உருவாக்க முனைகிறது காங்கிரசு அரசு.

கிரந்தம் படிப்பதற்காக, ஒருங்குறியில்
உருவாக்கப்பட ஒருங்குறிச் சேர்த்தியத்தில்
முன்வைக்கப்பட்ட தனி-கிரந்த-ஒருங்குறியீட்டை
கவிழ்த்து விட்டு, தமிழை அழிக்கு முகத்தான்
அந்தத் தனி-கிரந்த-ஒருங்குறியில் தமிழெழுத்துக்களைக்
கலந்து சமற்கிருதமும் மணிப்பிரவாளமும் உருவாக்க
வகைசெய்யும் தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு தருக
என்று ஒருங்குறிச் சேர்த்தியத்தை இந்தியாவின்
காங்கிரசு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரசு அரசின் முன்மொழிவில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காண்க:

"The context of use for the proposed characters (type of use; common or rare)

Used for writing Sanskrit (including Vedic) both independently and as part of Tamil
Manipravalam.
"
தமிழ் இனப்படுகொலையைச் செய்த நாடுகள்
எப்படி ஈழக்கருணாவை உருவாக்கினார்களோ
அதே போல தமிழ் மொழிப்படுகொலைக்காக
கணேசன் என்பவர் உருவாக்கப் பட்டிருக்கிறார்.

கணேசன் என்பாரின் முன்மொழிவை அடியொற்றி,
காங்கிரசு அரசு இந்த மொழிப்படுகொலை
முன்மொழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கணேசன் இதனை இணைய உலகு முழுதும்
பெருமையாக உறுதி செய்திருக்கிறார்.
ஒரு குழுவில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"I am personally worried about safety of Grantha IT
followers including myself. Government of India and
UTC will implement my core design for Grantha Unicode,
so I don't have to write to draw attention."

இந்தியாவின் காங்கிரசு அரசின் பின்புலம்
இருக்கின்றதென்பதால் கணேசன்
இணையம் எங்கும் கிரந்தப் பரப்புரை செய்வதும்
தமிழை இழித்தும் பழித்தும் கீழறுப்பு வேலைகளைச் செய்தும்
வருகிறார் என்பதை இணைய மடற்குழுக்கள் பலவும் அறியும்.

இதற்கு எழும் எதிர்ப்புக்களை மங்கச் செய்யும்
வகையில், சிலர் "தமிழ் எழுத்துக்களை
பிற மொழிகள் எடுத்துக் கொள்வது தமிழுக்குப்
பெருமைதானே!", "நமது எழுத்துக்களைப்
பிற மொழிகள் கடன் வாங்குவது தமிழின்
பெருமையைத்தானே சொல்கிறது?" என்றெல்லாம்
திசை திருப்பி வரவிருக்கும் ஆபத்துகளை
எண்ணிப் பார்க்க விடாமல் பரப்புரை
செய்து வருகின்றனர்.

ஒரு புறம் கணி வல்லுநரும், தமிழ் வல்லுநரும்
இதனை எதிர்த்துக் குரல்தருகின்ற வேளையில்,
தமிழ்நாடெங்கும் உழவர் இயக்கங்களும்
இதனை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்ற காட்சியைக்
காணமுடிகிறது.

மொழிப்படுகொலையை தி.மு.க அரசு தடுத்து நிறுத்துமா?

தி.மு.க அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு ஆழச்
சிந்தித்துத் தடுக்குமா? இல்லை காணாநெறியில் நிற்குமா?

காங்கிரசுக்கு ஏன் தமிழர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு?

1965ல் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கப்
பலரைச் சுட்டுப் படுகொலை செய்தது காங்கிரசு அரசு.

இன்றைக்கு மணிப்பிரவாளத்தை மீண்டும்
திணிக்கிறது காங்கிரசு அரசு.

மணிப்பிரவாளத்தை எதிர்க்கப் போகும் தமிழ்நாட்டில்
என்ன செய்யக் காத்திருக்கிறது காங்கிரசு?

அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, January 10, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - பகுதி 11/11 நிறைவு

தொகுதி-5: பிற செய்திகளும் மேற்கொண்டு செய்ய வேண்டியனவும்

தற்காலக் கணிச் சூழலில் தமிழில் கிரந்த நுழைவு
என்பது ஒரு புதிய வழி. இப்படி ஒரு வழியும் சூழலும்
இருக்கிறது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க
வேண்டிய முக்கியமான பல விதயங்களில் இதுவும்
முகன்மையான ஒன்று என்பதையும் உணர வைப்பதாக
இந்த ஒருங்குறிச் சூழல் அமைகிறது. அதேபோல
இந்தக் கிரந்த நுழைவைத் தடுத்து விட்டால் இனி
இன்னலே வராது என்று சொல்லமுடியுமா என்றால்,
உறுதியாக,
“இல்லை; இன்னல்கள் பல வடிவங்களில் தொடரும்”
என்றே சொல்லலாம்.

கணி நுட்பத்தின் பல்வேறு வளர்வுகளும் பிற
அறிவியல், நுட்ப வளர்வுகளும் தொடர்ந்து
இன்னல்களைச் செய்து கொண்டே இருக்கும்
என்பதால் அதற்குத் தமிழ் உலகம் தன்னை
தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற
விழிப்புணர்வை இது ஏற்படுத்துவதாகக் கருதல் தகும்.

விழிப்பு என்பது எங்கேயாவது செய்தியைப்
படித்து விட்டு ”தமிழ் வாழ்க, கிரந்தம் ஒழிக”
என்ற அளவிலேயே அமைந்துவிடக் கூடாது.
இருக்கும் சூழலை பன்முகப் பார்வையுடன்
ஆய்ந்து முறையான அரண்களை அமைப்பதே
அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

• ஏழு கோடி பேர்கள் பேசும் மொழியின்
எழுத்துக்கள் எங்கே இருக்க வேண்டும்,
எங்கே கலக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்களில்
ஒருவர் அமெரிக்காவிலே பணி செய்யும் பொறிஞர்;
இன்னொருவர் தமிழ்நாட்டிலே முதுகலை படித்த மாணவர்.
இவர்கள் இருவரின் செயற்பாடுகளை மறுத்துப் பேச
தமிழ் ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும்,
அரசாங்கத்தாலும் எத்தனை நேரம்
வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று
எண்ணிப் பார்த்தல் தகும்.

• யாரோ ஒருவர் அவரின் விருப்பப்படி
தமிழ் எழுத்துக்களோடு கிரந்தத்தைக்
கலந்துவிடலாம்; என்ன வேண்டுமானாலும்
செய்து விடலாம் என்ற நிலை,
தமிழக அரசாங்கத்திலும் தமிழ்மக்களின்
பொதுமன்றங்களிலும் போதுமான
அரண்கள் இல்லாமையையே காட்டுகிறது.

• தமிழ் நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகம்,
செம்மொழி ஆய்வு நிறுவனம், மற்றும்
பல்வேறு மொழி, வரலாறு ஆராய்ச்சி
அமைப்புகள், ஆர்வலர் மன்றங்கள்
அனைத்துமே ஒருங்குறிச் சேர்த்தியத்துடனான
தொடர்பில் அற்றுப் போய் இருப்பதையே
காட்டுகிறது. இது, ஒருங்குறியில் உள்ள
தமிழ் எழுத்துக்களுக்கு யார் பொறுப்பாளர்?
என்ற வினாவினை ஓசையுடன் எழுப்புகிறது.

• அதேபோல, ஒருங்குறிச் சேர்த்தியம்
என்ற பன்னாட்டு அமைப்பும், தமிழ்
எழுத்துக்குறிகளில் ஏதேனும் மாற்றம் செய்யவோ
அல்லது புதியன புகுத்தவோ முன்மொழிவுகள் வந்தால்,

o “ஏன் அவர்கள் தமிழக அரசுக்குத் தெரிவிப்பதில்லை?
o தமிழுக்கென்று இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு
அவர்கள் ஏன் தெரிவிப்பதில்லை?
o இந்திய நடுவணரசாலும் தமிழக அரசாலும்
நடத்தப்படுகிற செம்மொழி ஆய்வு மையத்திற்கு
ஏன் தெரிவிப்பதில்லை?
o இந்தியாவில் இருக்கின்ற இரண்டு
செம்மொழிகளில் ஒன்றான தமிழ்
மொழியைப் பற்றிய விதயங்களை
ஏன் ஒருங்குறிச் சேர்த்தியம்
தமிழ்நாட்டு மன்றங்களுக்குத் தெரிவிப்பதில்லை?
என்ற வினாக்களுக்கு விடை காண வேண்டிய
முக்கியமான வேளை இது. இவற்றிற்கு
விடை காண்பதே நீண்டகாலத் தீர்வாக இருக்கும்.
இல்லாவிடில் இது யாரோ சில ஆர்வலர்களின்
“தமிழ் வாழ்க!” என்ற முழக்கம் என்றளவில்
கருதப்பட்டு தீர்விழந்து போகும்.

• தமிழ் நெடுங்கணக்கு வரைவு, தமிழ் எழுத்து,
மொழி பயன்படுத்தப் பட வேண்டிய முறை பற்றிய
செந்தரம் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கும்,
நடுவணரசுக்கும் தெரிவிக்கப்பட்டு என்ன
மாற்றமெனினும் அது தமிழக அரசுக்குத்
தெரியாமல் நடக்கக் கூடாது என்ற உறுதி
நிலை ஏற்படுத்த வேண்டும்.

• கணித்தமிழ்ப் பணிகளைச் செய்கின்ற
உத்தமம் (http://infitt.org) என்ற அமைப்பின்
பேச்சைக் கேட்டுத் தமிழ்நாட்டில் பல தமிழ்
இணைய மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்த உத்தமம் அமைப்பே ஒரு கிரந்த
எழுத்தைத் தமிழில் கலந்து வழிகாட்டியுள்ளது.

மேலே பகுதி-4ல் சொல்லப்பட்ட இடர்கள்
ஐந்தனையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே
பார்த்திருக்கிறது. இக்குழு கணியில் தமிழைப்
பாதுகாக்குமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

• தனியாரால் தமிழ் தொடர்புடைய
எந்த முன்மொழிவு சேர்த்தியத்துக்கு
அனுப்பப்பட்டாலும் அது தமிழக அரசின்
ஒப்புதலோடு மட்டுமே செல்லவேண்டும்
என்றும், அதுவல்லாத தமிழ் சார்ந்த
முன்மொழிவுகள் சேர்த்தியத்தால்
ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது என்றும்
முறைமை ஏற்படுத்தப்படவேண்டும்

• நிரந்தரமான, அரசு மற்றும் தனி அறிஞர்,
கல்வியாளர் உள்ளிட்ட குழுவை இணையத்
தமிழ் மற்றும் ஒருங்குறிக் கண்காணிப்பிற்குப்
பணிக்க வேண்டும்.

• பலரும் ஒருங்குறி, கிரந்தக் கலப்பு பற்றிப்
பேசிக் கொண்டிருக்க, ஆங்காங்கு இருக்கின்ற
சிலரோ தங்களுக்கு இருக்கும் ஒருங்குறியைப்
பற்றிய ஏட்டறிவு மட்டுமே கொண்டு அரசிற்கு
ஆலோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிற் பட்டறிவு கொண்டார் மிக மிகக் குறைவு.
இந்தச் சிக்கல் கிரந்தத்தால் மட்டுமன்றி வருங்காலத்தில்
எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால்,
ஒருங்குறி அறிந்த கணிஞர்கள் சிலரை அரசோ,
பல்கலக்கழகங்களோ மேற்கண்ட குழுவோடு
தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குப்
பணிக்க வேண்டும்.

• தமிழ்நாட்டின் கல்வெட்டு, வரலாறு, தொல்லியல்
போன்ற துறையினரோடு ஒருங்குறிக் கணிஞர்கள்
ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை
புழக்கத்தில் உள்ள மற்றும் பழஞ் சின்னங்கள் குறிகள்
எல்லாம் துறைவாரியாகச் சேர்க்கப்பட்டு
அவற்றை ஒருங்குறியில் கொண்டு சேர்க்கும்
முக்கியமான பணியைச் செய்யவேண்டும்.
இதுவே தமிழ் உரிமையாளர்களின் கடமையாக
இருக்க முடியும்.

• “ஒருங்குறித் தரத்தில் இன்ன திருத்தங்கள்
செய்ய வேண்டும்; இன்ன எழுத்துக்கள் மட்டும்
இருக்க வேண்டும். இந்த வரையில் உள்ள
எழுத்துக்களில் ஏதேனும் மாற்றமோ,
புது வடிவங்களோ கொண்ட கணிச் சொவ்வறைகள்,
செயலிகள், நிரலிகள் ஆகியன தமிழ்நாட்டில்
விற்கப்பட அனுமதி கிடையாது; என்ற தெளிவான
சட்ட அறிவிப்பே கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும்.

அதுவே ஒருங்குறிச் சேர்த்தியத்தையும்
தமிழக அரசைக் கண்டுகொள்ளச் செய்யும்.
சீனா இப்படித்தான் முறை வைத்திருக்கிறது.
மிகத் தெளிவாக சீன அரசு “GB18030” என்ற
தனது 2000மாம் ஆண்டின் அரசாணை வழியே
கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
(பார்க்க: http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm ).

இதை மீற எந்தக் கணிநிறுவனமும் முயலுவதில்லை.
இல்லாவிடில் பன்னாட்டு நிறுவனங்களைக்
கட்டுப்படுத்தவும் முடியாது; தனியார் செய்யும்
இடர்களுக்கும் அளவிருக்காது வருங்காலங்களில்.


நிறைவு:

தமிழ் வரலாற்றில் புதிய கிரந்த இன்னலான
இதனைப் பற்றிப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும்
அடிப்படையைத் தெளிவாக்க என்னால் இயன்றவரை
முயற்சித்திருக்கிறேன். புதிய இன்னலான இதன்
அடிப்படைகளை அறிய வாய்ப்பு குறைந்தோர்க்கு
இன்னல்களின் வேர்களையும் அதன் தன்மைகளையும்
எடுத்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.

இந்த ஆவணத்தில்
“கிரந்தத்தினால் விளையக் கூடிய தீமைகள்” என்ற
பகுதியை மட்டுமே தவிர்த்திருக்கிறேன்.

தமிழறிந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு
நூறு தீமைகளைப் பட்டியலிட முடியும்
என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள
வெள்ளையர் உள்ளிட்ட கல்வியாளர்
மன்றங்களுக்கு எல்லாம் சென்று
“இதோ பாருங்கள் – இந்தக் கலப்பினால்
எங்களுக்கு இப்படித் தீமைகள் வண்டி
வண்டியாக வந்துடுமுங்க” என்று
ஆதாரங்களை அடுக்கி,
தயவு செய்து தடுத்துவிடுங்கள்
என்று கெஞ்சும் நிலையில் நானில்லை;

எம்மக்களும் அப்படி இருக்க ஒட்டார்.
தமிழ் மொழி என் தாய்மொழி.
இதனை யாரிடமும் போய் கையேந்திக்
காக்கும் இழிநிலைக்குத் தமிழர் ஒட்டார்.

“தாய் பிறன் கைபட நாயென வாழேன்”
என்று ஆணையிட்டுக் கலப்புகளைத் துரத்துவோம்.

அதே நேரத்தில் இடர்களின் வேர்களை
அறிவார்ந்த முறையில் தெளிந்து
வலுவான அரண்களை அமைத்துக் கொள்வதுவே
அறிவார்ந்த செயலாகும்.

சீனன் ஒரு முறை பட்டான். அந்தப் பட்டறிவு
அவனுக்குத் திடம் அளித்திருக்கிறது.

தமிழன் அவனை விட அதிகமாகப் பட்டான்.
அவனுக்கு எந்த அளவு திடம் வந்திருக்கிறது
என்பதை அறியமுடியவில்லை.

இந்த ஆவணத்தில் எங்கேனும் விளக்கம்
வேண்டியிருப்பின் எனது nelango5@gmail.com என்ற
என் மின்வரிக்கு அஞ்சல் அனுப்பக் கேட்டுக்கொள்கிறேன்.

தாய்மொழி உணர்வோடு, கேடுகளைத் தடுக்கும்
அறிவார்ந்த அரண்களை வகுப்போம்; இணைவோம்;
வெல்வோம். நன்றி.

ஆதாரங்களும் மேலும் படிக்கத்தக்கனவும்:

• http://unicode.org
• http://www.unicode.org/charts/
• http://www.unicode.org/consortium/memblist.html
• http://valavu.blogspot.com/2010/11/1.html
• http://infitt.org
• http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm
• http://nayanam.blogspot.com/2010/12/13.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

இக்கட்டுரையின் பிற பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html
பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html
பகுதி 10: http://nayanam.blogspot.com/2011/01/10.html




.

Sunday, January 09, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 10

தொகுதி-4: ஒருங்குறியின் பிற இன்னல்கள்

ஒருங்குறியில் தமிழுக்கு ஊறு தரும்
கிரந்தக் கலப்பை மட்டும் தற்போது கவனித்து
வருகிறோம். ஆனால் அதில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும்
அடிப்படைப் பிசகுகள் களையப்பட வேண்டும்.

ஒருங்குறியில் வைக்கப்படும் ஒவ்வொரு
எழுத்துக்கும் ஒரு குறியெண் கொடுக்கப்படும்
என்று பார்த்தோம். கூடவே அதற்கு ஒரு பெயரும்
உண்டு. ஒரு எழுத்துக் குறியை வரையறுத்துச்
சொல்வதற்கு, குறிப்பெயரையும் (Code Name),
குறிஎண்ணையும் (Code Point) சேர்த்துச் சொல்வது
ஒருங்குறி மரபு.

ஒருங்குறி சார்ந்த எல்லா ஆவணங்களிலும்
இப்படித்தான் எழுதுவார்கள். காட்டாக,
“U+0B95 TAMIL LETTER KA “ என்பது “க”
என்ற தமிழ் எழுத்துக் குறிக்கான அடையாளம் ஆகும்.


33) இடர்-1:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில் தற்போது
இடம் பெற்றிருக்கும் 5 கிரந்த எழுத்துக்களுக்கு
கொடுக்கப் பட்டிருக்கும் பெயர்களைப் படத்தில் காண்க.

கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்கள் என்று அடையாளமிட்டிருப்பதை ஏற்க முடியுமா?

அரசாணையில் வந்துவிட்டதால் அதனை யாராவது தமிழ் எழுத்துக்கள் என்று சொன்னால் அது சரியா?

எதிர்காலத்தில் தமிழக, நடுவ, பன்னாட்டுப் பிற மன்றங்களில் இவ்வெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று சொல்லமுடியுமா?

ஒரு புறம் கிரந்த எழுத்துக்கள் என்று
சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம்
தமிழ் எழுத்துக்கள் என்று ஆவணமாக்கி
விடுதல் பிழையல்லவா? மேலும்,
நடுவணரசு முன்மொழிந்திருக்கும்
கலவைக் குறியீட்டில் அதே கிரந்த
எழுத்துக்களை கிரந்த எழுத்துக்கள்
என்றே குறிப்பிட்டிருப்பதைக் கீழே காண்க.












34) இடர்-2:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில் பல்வேறு
குறிகள் என்ற தலைப்பிலே ஏற்படுத்தப்
பட்டிருக்கும் குறிகளைக் காண்க.

அனுசுவரா என்று, தமிழ் எழுத்துக் குறி
எதற்கும் பெயருண்டா?

இல்லை என்றால் இது எப்படி ஏற்பட்டது?

அந்தக் குறிக்குக் கீழே
“இது தமிழில் பயனாவது இல்லை”
என்று எழுதப் பட்டிருக்கிறது.
தமிழில் பயனாகாத குறியை தமிழ்
அட்டவனையில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?

அதே போல தமிழ் ஆய்தக் குறிக்குப் பெயர்
விசாருகாவா?

இல்லை என்றால் TAMIL SIGN AYTHAM
என்று எழுதாமல் ஏன் TAMIL SIGN VISARGA
என்று ஆவணப்படுத்தப் பட்டுள்ளது?

இவற்றை நாம் இப்படியே விட்டால்
ஒரு காலத்தில் எது தமிழ் எது கிரந்தம்
என்று தெரியாமற்போவது மட்டுமல்ல
நம்முடையதையெல்லாம் தவற விட்டுவிட்டுப்
பின்னர் சிந்திப்பவர்களாக மாட்டோமா?


35) இடர்-3:
விராமா எனறால் என்ன? விராமா என்பது
தமிழ் மெய்ப்புள்ளிக்கு இருக்கும் தமிழ்ப் பெயரா?
விராமா என்பது தமிழா?

இல்லாவிடில் அது எப்படி TAMIL SIGN VIRAMA
என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது?

தமிழின் அடிப்படைக் குறிகளுக்கு இப்படிப்
பெயரிடுவதால் வடமொழியில் இருந்துதான்
தமிழ் வந்தது, கிரந்தத்தில் இருந்துதான்
தமிழ் எழுத்துக்கள் வந்தன என்று யாரும்
சொன்னால் எப்படி மறுக்க முடியும்?

36) இடர்-4:

தமிழ் ஒருங்குறி அட்டவனையில்
காலியிடமாக வைப்பில் இருக்கும்
இரண்டு இடங்கள் எதற்காக
வைக்கப்பட்டிருக்கின்றன என்று படத்தில் காண்க.

தேவநாகரி தண்டாக் குறிக்கும்,
இரட்டைத் தண்டாவுக்கும் ஏன் தமிழ்ப் பாத்தியில்
இடம் வைப்பில் இருக்கிறது?

கிரந்தம் மட்டுமல்ல தேவநாகரியையும்
கலக்க ஏதுவாகாதா?

37) இடர்-5:

ஒருங்குறிச் சேர்த்தியம், உலகின் பல
மொழிகளையும் தொகுத்து அவற்றின்
வகைகளைக் கூறுகிறது.
அதன்படி எழுத்துக்களைக் கணியிலும்
அச்சிலும் தோற்றுவிக்கிறது.
அகரமுதலி வகை, அபுகிடா வகை,
அபுசாட வகை, படவகை என்று பலவகைகளில்
மொழிகளைப் பிரிக்கிறது.

பெரும்பிழையாக, தமிழை அபுகிடா வகையென்று
வகைப்படுத்தி இருக்கிறது. ஒருங்குறிப் பிழைகளில்
எல்லாம் ஆகப்பெரிய அடிப்படைப் பிழை இதுவேயாம்.

“சிங்களம் உள்ளிட்ட இந்திய எழுத்து
முறைகள் எல்லாமே தேவநாகரி
அடிப்படையிலான அபுகிடா எழுத்துமுறை”
என்று வகைப்படுத்தியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய இலக்கணப் பிழை,
மரபுப் பிழை என்பதைப் பற்றி
முனைவர் இராம.கி தனது வலைப்பதிவிலே
(http://valavu.blogspot.com) குறியேற்றங்கள் பற்றிய
கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.

பேராசிரியர் செல்வக்குமார்,
தமிழ் அபுகிடா வகையல்ல என்பது பற்றி
செம்மொழி மாநாட்டிலே வழங்கிய
தனது ஆய்வுக் கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.

தமிழ் எழுத்துக்கள் தோன்றும் முறையையே
தவறாகச் சொல்லியிருக்கும் ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு யார் சொல்லி சரி செய்வது?

மேற்கண்ட இடர்களால் அடிப்படைத்
துல்லியம் மறைந்து விடுகின்றது.
இது நாளடைவில் மொழிக்கு ஊறாக மாறும்.
அவற்றையும் களைய நாம் ஆவண செய்யவேண்டும்.

தற்போது முகன்மையான கிரந்தக் கலப்பை
மறுத்த கையோடு விட்டுவிடாது, ஏற்கனவே
ஏற்பட்டிருக்கும் கேள்வி கேட்பாரின்றி
ஏற்படுத்தப்பட்ட பிசகுகளைக் களைய வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html
பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html

அன்புடன்
நாக.இளங்கோவன்




யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 9

31) மேற்சொன்ன ஒருங்குறிக் கிரந்தச் சிக்கல்களின் சுருக்கம்:



32) கிரந்தக் கலப்பு பற்றி நிலவுகின்ற தவறான புரிதல்:

கிரந்த நுழைவு பற்றிய ஒரு முக்கியமான புரிதல்
இங்கே அவசியமாகிறது. உலகில் உள்ள பல
இலக்கக் குறிகளை ஒருங்கு சேர்க்கும்
ஒருங்குறியில், தனியாக, “தமிழ் மொழியில்
கலக்காமல் கிரந்தக் குறிகளை தனிப்பாத்தியாக
துணைப்பன்மொழித் தளத்தில்” ஒருங்குறிச்
சேர்த்தியம் வைக்குமானால் அது பற்றி நாம்
கவலைப்பட ஒன்றுமேயில்லை.

தமிழ் எழுத்துக்களில் கிரந்தத்தை நுழைப்பதுவும்,
அதேபோல கிரந்தத்தில் தமிழைக் கொண்டு
போய் நுழைப்பதுவும் தான் மொழிப்படுகொலையாகும்.

ஒருங்குறியில் கிரந்தம் தனியாகக் குறியேற்றம்
செய்யப்பட்டால், அதையே தமிழிற்கு இருக்கும்
பாத்திகளில் கலப்பதாக எண்ணிச் சிலர்
கவலையுறுவதைக் காண முடிகிறது.
அந்தக் கவலை கைவிடப்பட வேண்டிய ஒன்று.

சீட்டுக்கட்டுக் குறிகள், இசைக்குறிகள்,
பழஞ்சின்னங்கள் போன்றவை தேடித் தேடிச்
சேர்க்கப்படும் இடத்தில் கிரந்தத்துக்கோ
வேறு எழுத்துக்களுக்கோ இடம்
ஒதுக்குவார்களெனின் அது தமிழ்நாட்டின்
கவலையாக இருக்க முடியாது.

அதைச் செய்யக் கூடாது என்று நாம்
மறுத்தால் அது அறியாமை என்று கருதப்பட்டு
நமது கருத்துக்கள் எதுவுமே செல்லுபடியாகாமல்
போய்விடும் பேராபத்து இருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவது ஒருபுறம்
தேவையெனினும் சூழ்க்குமாகவும்
அறிவுப்பூர்வமாகவும் அணுகவேண்டிய இடம் இது
என்று சொல்லவேண்டிய கடமையிருக்கிறது.

அதுமட்டுமல்ல நமது தமிழ்ப் பழஞ்சின்னங்கள்,
குறிகள் போன்றவற்றை வரும் காலங்களில்
ஒருங்குறியில் கொண்டுவரக் கோரும்
தார்மீகத் தகுதியை நாம் இழந்தவர்களாவோம்.
(17-தள சட்டகம் மற்றும் தளம் பற்றிய விளக்கங்களைக்
மீண்டும் காண்க)

அப்படியும் உணர்ச்சி மிகுதியால் யாரேனும்,
“தமிழில் கிரந்தம் கலக்கக் கூடாது;
கிரந்தம் தமிழில் கலக்கக் கூடாது” என்பது மட்டுமல்ல,
“கிரந்தமே ஒருங்குறித் தரப்பாட்டுக்குள் கொண்டு
செல்லப் படக் கூடாது” என்று போர்க்கொடி
தூக்குவார்களெனின்,

• அது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது
• தமிழர்கள் கிரந்தத்திற்கு உரிமையாளரா?

என்ற வினா வரும்! ஆம் என்று பதில் சொல்வோமெனின்
அது வெட்கக் கேடு; இல்லை என்று சொல்வோமெனின்
“உரிமை இல்லாதவர்களுக்கு இது பற்றிப்
பேச இடம் இல்லை” என்று சேர்த்தியம்
சொல்லிவிடும். இதுதான் நிலை.

ஆகவே, தமிழ்நாட்டரசும்,
“கிரந்தம் தமிழில் வந்து கலக்கக் கூடாது”,
“தமிழும் கிரந்தத்திற்குப் போய் கலக்கக் கூடாது”
என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கவேண்டுமே தவிர,
“ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்ளேயே
கிரந்தத்தை விடக்கூடாது” என்ற நிலை எடுக்கக் கூடாது.

(தொடரும்)

பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 8

27) கிரந்தத்திற்கென தனிக்குறியீடு முன்மொழிவு வைக்கப்பட்டதா?

ஆம்; தமிழைக் கிரந்தத்திற்காக நீட்ட வேண்டும்
என்று சொன்ன திரு.சிறீரமணசர்மா,
அம்முன்மொழிவின், தாராள நீளல் பகுதியைக் காட்டி
68 கிரந்தக் குறியீடுகளுக்கு ஒரு தனிப்பாத்தி கேட்கும்
இன்னொரு முன்மொழிவைத் தனியாக ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு அனுப்பினார்.

ஆக, தமிழ் வடிவொத்து மீயெண்கள் போட்ட
26 கிரந்தங்களுக்கு (படம் 3.1) தமிழ் நீட்சி
முன்மொழிவாகவும், கிரந்தக் குறிகள்
அனைத்தையும் (68) அதன் இயல்வடிவத்தில்
உள்ளடக்கிய கிரந்த எழுத்துக்களுக்கு
(படம் 3.2ல் ET-L வரிசை) தனி கிரந்த ஒருங்குறி
ஒதுக்கீடும் கேட்கும் முன்மொழிவாகவும்
இரண்டு முன்மொழிவுகளை சிறீரமணசர்மா
அனுப்பியிருக்கிறார்.

இது இப்படி வரட்டும்; அது அப்படி வரட்டும்
என்ற இரட்டை உத்தி போலும்.

கிரந்தக் குறிகள் 68ற்கு தனி ஒருங்குறி கேட்ட
விதயத்தில் ஊன்றிக் கவனிக்க வேண்டியன:

1) இதனை, திரு.சிறீரமணசர்மா, வாழ்மொழி
எழுத்துக் குறிகளை வைக்கின்ற முதன்மைப்
பன்மொழித் தளத்தில் கேட்கவில்லை.
பழம் மொழிகள், வழக்கொழிந்த மொழிகள்,
அதிகம் பயன்படாத சின்னங்கள் குறிகள்
பெருமளவும் வைக்கப் படுகின்ற துணைப்
பன்மொழித் தளத்தில் வைக்கக் கேட்டிருக்கிறார்.

2) உலகில் உள்ள குறிகள் சின்னங்களையெல்லாம்
ஒருங்கக் கூட்டுகிற ஒருங்குறித் தரப்பாட்டில்
கிரந்தக் குறிகளுக்கும் இடம்பிடிப்பது என்பது வேறு;

அந்த ஒருங்குறித் தரப்பாட்டில்
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இருக்கும்
நமது தமிழ்மொழிக் குறியீட்டில்
கிரந்த எழுத்துக்களைப் புகுத்துவதும் நீட்டிப்பதும் வேறு.



படத்தில், ஆபத்தைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்தில்
இருப்பது கிரந்தக்குறிகளை தமிழின் பெயரில்
நீட்டிக்க, சேர்க்கப்படக் கோரிய பாத்தி.

“68 கிரந்தக்குறிப் பாத்தி” என்பது ஒருங்குறியில்
கிரந்தக்குறிகளை சேர்க்கும் பாத்தி.
திரு.சிறீரமணசர்மாவின் இரண்டாவது
முன்மொழிவு ஒருங்குறியில் கிரந்தக்
குறிகளுக்குத் தனி இடம் பிடிக்க மட்டுமே
கோருகிறது. தமிழில் கலப்படம் செய்யக்
கோரவில்லை.

பின்னர் எங்கிருந்து கிரந்தக் கலப்பு வருகிறது?
அதனை அடுத்து பார்ப்போம்.

28) கிரந்தத் தனிக்குறியீட்டின் நிலை என்ன?

கிரந்தத்துக்கென்று இதுவரைத் தனிக்குறியீடு
ஒருங்குறியில் இல்லை. கிரந்தத்துக்கென்று
68 குறிகள் உள்ளன என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.
அந்த 68 குறிகளைக் கொண்டு எந்தத்
தமிழாவணத்தையும் உருவாக்க முடியாது.
அந்த 68 கிரந்தக் குறிகளுக்குத் தனிக்குறியீடு
கேட்ட திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு
தள்ளி வைக்கப் பட்டது.

29) கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவு ஏன் தள்ளி வைக்கப்பட்டது?

திரு நா.கணேசன், 68 கிரந்தக் குறிகளோடு,
தமிழ் எழுத்துக்களான “எ”, “ஒ”, “ழ”, “ற”, “ன”
என்ற ஐந்தனையும், தமிழ் உயிர்மெய்க் குறிகளான
“எகர உயிர்மெய்க் குறி”, “ஒகர உயிர்மெய்க் குறி”
என்ற இரண்டனையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை
கிரந்தத்துக்குள் நுழைத்து, 75 குறிகளைக் கொண்ட
தமிழ்-கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்க
வேண்டும் என்று முன்மொழிவு வைத்திருந்தார்.

நா.கணேசனுக்கும், சிறீரமணசர்மாவுக்கும்
இடையில் ஏற்பட்ட விவாதத்தால்
குழம்பிப் போன ஒருங்குறிச் சேர்த்தியம்
கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவைத்
தள்ளி வைத்தது.

இரண்டு வேறுபட்ட வாதங்களுக்கு நடுவில்
ஓர் பொதுமையை யார் கொண்டுவர முடியும்
என்று அது தேட முனைந்தது. அதோடு,
திரு.சிறீரமணசர்மா வேண்டியது போல
வழக்கொழிந்த அல்லது குறைந்த குறிகள்
வைக்கப் படும் துணைப் பன்மொழித் தளத்தில்
வைக்கக் கூடாது என்றும்,
75 கிரந்தக் குறிப்பாத்தியை வாழ்மொழிகள்
வைக்கப்படும் முதன்மைப் பன்மொழித்
தளத்திலேயே வைக்க வேண்டும் என்ற
திரு.கணேசனின் முன்மொழிவு ஒருங்குறிச்
சேர்த்தியத்தை வியப்படையவேச் செய்தது.

30) நடுவணரசு ஏன் தமிழ் கலந்த கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவை வைத்தது?


திரு.சிறீரமணசர்மாவுக்கும் திரு.நா.கணேசனுக்கும்
இடையே கிரந்தத்துக்குத் தொண்டு செய்ய நடந்த
போட்டியில் ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்,
திரு.சிறீரமணசர்மா கேட்கும் 68 குறிகள் கொண்ட
தனிக் கிரந்தக் குறியீடை ஏற்படுத்துவதா?
அல்லது திரு.நா.கணேசன் கேட்கும்
தமிழைக் கலந்த 75 கிரந்தத் தனிக் குறியீடை
வைப்பதா? என்ற குழப்பம் ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு ஏற்பட, அவர்கள் அது பற்றி
இந்திய நடுவணரசின் உதவியை நாடினார்கள்.

“கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவை விட,
“தமிழைத் தாரை வார்த்துக்
கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவே
நடுவணரசை ஈர்க்க, திரு.நா.கணேசன்
முன்மொழிவில் சிறு சிறு மாற்றங்கள்
செய்து “மணிப்பிரவாள மொழிக்காகவும்,
சமற்கிருத மொழிக்காகவும்”
தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை
ஏற்படுத்துங்கள் என்று நடுவணரசே
தனது முன்மொழிவாக ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது.

நடுவணரசின் முன்மொழிவானது மேற்சொன்ன
75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் வைத்து
மொத்தம் 89 குறிகள் கொண்ட
"தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு" ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் கேட்கப் பட்டுள்ளது.

இந்த முன்மொழிவில், “இந்தக் குறியீடுகள்
வழக்கொழிநது வரலாறு ஆனவை அல்ல;
அவை முதன்மைப் பன்மொழித் தளத்திலேயே
வைக்கத் தக்கவை என்றபோதிலும்
முதன்மைப் பன்மொழித் தளத்தில்
போதிய இடமில்லாததால் துணைப்
பன்மொழித் தளத்தில் வையுங்கள்”
என்று நடுவணரசால் சொல்லப் பட்டிருக்கின்றது.
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம்
இருந்திருந்தால் அங்கேயே வைக்கச்
சொல்லி நடுவணரசு கேட்டிருக்கும்
என்பதையே இது காட்டுகிறது.

இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க
2010 நவம்பர் மாதம் முதல்வாரத்தில்
ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த
போதுதான், தமிழ் ஆர்வலர்களும்
அறிஞர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

சிக்கல்கள் நிறைந்த இவ்விதயத்தை
முனைவர் இராம.கி, பேராசிரியர் இ.மறைமலை,
திரு.திருவள்ளுவன் ஆகியோர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து
எடுத்துக் கூறினார்கள். ஆசிரியரின்
முயற்சியால் தமிழக அரசாங்கமும்
இவ்விதயத்தை ஆழ்ந்து கவனித்து
அவசரக் கூட்டம் நடத்தி அறிஞர்களின்
கருத்துக்களைக் கேட்டது.

அதன்படி, தமிழக அரசு நடுவணரசிடம்
கிரந்தக் குறியீடு குறித்து உடனடியாக
முடிவெடுக்கக் கூடாது என்றும்
தமிழக அரசு ஆராய்ந்து கருத்துச்
சொல்ல 3 மாத காலம் வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டதன் பேரில்
2011 பிப்பிரவரி 7 வரை
தமிழறிஞர்களுக்கும் யுனிக்கோடு அறிஞர்களுக்கும்
ஆராய நேரம் கிடைத்திருக்கிறது.

தமிழைக் கிரந்தத்துக்குத்
தாரை வார்த்துக் கொடுக்கும்
இதுவே மூன்றாவது இன்னல் ஆகும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 7

23) ஒருங்குறிக்கு வந்த இரண்டாவது இன்னல் என்ன?

முதல் கிரந்த எழுத்து தமிழ் ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் நுழைந்து வழியேற்படுத்திக்
கொடுத்து, கிரந்த நேயர்களுக்கு ஊக்கமளிப்பதாக
அமைந்தது என்று சொல்லலாம். ஒருங்குறிச்
சேர்த்தியத்தின் மற்றொரு உறுப்பினரான
திரு.சிறீரமணசர்மா 26 கிரந்தக் குறிகளை
“ஒருங்குறித் தரப்பாட்டிற்குள் கொண்டு வந்து”
அதனை “தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்”
(Extended Tamil) என்று வழங்கவேண்டுமென
ஒரு முன்மொழிவை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு
அனுப்பினார். இதன் தேவை என்ன என்பதற்கான
விளக்கங்களில் மூன்றை திரு.சிறீரமணசர்மாவின்
மொழியிலேயே படித்தல் அவசியம்.

• “It is well known that the Tamil script has an insufficient character repertoire to represent the Sanskrit language. Sanskrit can be and is written and printed quite naturally in most other (major and some minor) Indian scripts, which have the required number of characters. However, it cannot be written in plain Tamil script….

• Finally I should say that I must also not forget the Saurashtra language, which also is written with Extended Tamil……….

• Therefore, an encoding of Extended Tamil as described above should also be able to support the writing of the Saurashtra language using Tamil characters.

மேலே திரு.இரமணசர்மா கூறுகின்ற கருத்துக்கள்
அவரின் தமிழ் நீட்டுக் குறிக்கோள்களை மேனிலையில்
புரியத் தருகிறது அல்லவா? சமற்கிருத, செளராட்டிர
மொழிகளுக்குத் தோதாகத் தமிழை நீட்டவேண்டும்
என்பதுதான் அவரின் வாதம்.

24) நீட்டித்த தமிழ் முன்மொழிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 26 கிரந்த எழுத்துக்களின் வடிவம் யாவை?


படம் 3.1 – 26 கிரந்த வடிவம்

பல கிரந்த ஓசைகளுக்கு இந்தப் படத்தில்
காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் போல
வடிவத்துடன் ஒருங்குறியில் இடம் கொடுத்து,
தமிழுக்கும் இவற்றுக்கும் தொடர்பே இல்லாத
நிலையில் இவற்றிற்கு நீட்டித்த தமிழ்
அல்லது தமிழ் நீட்சி என்று சொல்லவேண்டும்
என்பது அவர் பரிந்துரை. இந்த வகையான
எழுத்துக்கள் கிரந்தத்தில் முன்னர் பயனில்
இருந்ததாக அறிஞர் சொல்வர்.


25) நீட்டித்த தமிழை ஒருங்குறிச் சட்டகத்தில் எந்தத் தளத்தில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது?

(பகுதி-3 படம் 2.1 ஐயும் ஒருங்குறியின் உள்ளமைப்பில்
உள்ள தளங்களுக்கான விளக்கங்களையும் ஒத்து படிக்க.)

இன்ன தளத்தில் வைக்க வேண்டும் என்று
திரு.சிறீரமணசர்மா தன் முன்மொழிவிற்
பரிந்துரைக்கவில்லை. ஒருங்குறிச் சேர்த்தியத்தின்
வினவல் ஒன்று இப்படி வருகிறது:

“நீங்கள் பரிந்துரைக்கும் எழுத்துக்களை முழுமையாக
முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) வைக்கக்
கோருகிறீர்களா?”.

இந்த வினாவிற்கு “இல்லை” என்று பதிலளிக்கிறார்
திரு.சிறீரமணசர்மா. அந்த வினா-விடையை
அப்படியே கீழே காண்க:

After giving due considerations to the principles in the P&P document must the proposed characters be entirely in the BMP?
No.

முதன்மைப் பன்மொழித் தளம் (BMP) என்பது
வாழ்மொழிகளுக்கான இடம் என்று பார்த்தோம்.
துணைப் பன்மொழித் தளம் (SMP) என்பது
வழக்கொழிந்த அல்லது குறைந்த மொழி/ குறிகளுக்கான
இடம் என்றும் பார்த்தோம்.

அவரின் முன்மொழிவில் மூன்று கேடுகள்
அல்லது நெருடல்களை திரு.சிறீரமணசர்மா
ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

1) தமிழில் இல்லாத ஓசைகளுக்கு, தமிழல்லாத
குறிகளை(ஆனால் தமிழ் வரிவடிவத்தை ஒட்டியுள்ள
குறிகளை ) ஒருங்குறியில் சேர்க்கச் சொல்லி
அதற்குத் தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ் என்று
பெயர் கேட்பதே அடிப்படைக் கேடு.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று.
அடுத்தவர் முதலெழுத்தை ஒருவர் போட்டுக்
கொண்டு திரிவது போன்றதாகும்.

2) ஒருங்குறிச் சேர்த்தியத்தின் வினாவானது
வழுக்கலான வினா எனக் கருத இடம் இருக்கிறது.

அவர்கள் “இந்தக் குறியீடுகள் *முழுமையையும்*
முதன்மைத் தளத்தில் வைக்கக் கோருகிறீர்களா?
என்றவிடத்து, தேவைப்படுவனவற்றை விடுத்தோ
எடுத்தோ முதன்மைத் தளத்தில் வைக்கலாம் என்று
சேர்த்தியம் கருதினால் அதனைத் தடுக்குமாறு
யாதொன்றும் முன்மொழிவில் இல்லை.

அதுதவிர, திரு.இரமணசர்மா எங்கும் இன்ன
தளத்தில்தான் வைக்க வேண்டும்
என்று கூறவில்லை. அப்படியே கூறுவாரெனினும்
அதனைத் தமிழின் நீட்சி என்று சொல்வது புனைவாகும்.

3) மேற்சொன்ன கருத்து கருதப்படல் எதனாலெனின்,
நீட்டித்த தமிழை ஞாயப்படுத்த திரு.இரமணசர்மா
கையாண்டிருக்கும் அணுகுமுறையாகும்.
முதலிலே கிரந்தத்தோடு தமிழ்க்குறிகளை ஒப்பிட்டு,
பின்னர் நீட்டித்த தமிழ் எப்படி வேண்டும் என்று
இரண்டுவகையாகக் காட்டுகிறார்.

Extended Tamil – Liberal (ET-L),
Extended Tamil – Conservative (ET-C) என்று இரண்டு
வகையாகப் பிரித்து உரையாடலைச் செய்கிறார்
திரு.இரமணசர்மா. இவற்றை முறையே
இளகிய தமிழ் நீட்சி, இறுகிய தமிழ் நீட்சி என்று
சொல்லலாம். இளகிய என்பதற்குப் பதிலாகத்
தாராளத் தமிழ் நீட்சி என்றும் சொல்லலாம்.
இங்கே தாராளம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன்.

அதாவது கிரந்தக் குறிகளின் வடிவங்களை
அப்படியே எடுத்துக் கொண்டால் அதனைத்
தாராளத் தமிழ் நீட்சி என்றும், அப்படியில்லாமல்
தமிழ் எழுத்துக்கள் மேலே மீயெண்களைப் போட்டு
எடுத்துக் கொண்டால் அதனை இறுகிய-தமிழ் நீட்சி
என்றும் விளக்கம் தருகிறார் திரு.சிறீரமணசர்மா.
அந்த முன்மொழிவில் காணப்படுகிற தாராள,
இறுகிய நீட்சிகள் உள்ளடக்கியிருக்கும் அட்டவனைப்
படத்தினை இங்குக் காண்போம்.

படம் – 3.2: திரு.சிறீரமணசர்மாவின் தாராளத் தமிழ் நீட்சியும் இறுகிய தமிழ் நீட்சியும்

படம் 3.2ல் கிரந்தக் குறிகளின் பட்டியும், அவற்றைத்
தமிழ் நெடுங்கணக்கில் நீட்சியாக ஆக்கக் கோரி
தாராளத் தமிழ் நீட்சி (ET-L) பட்டியையும்,
இறுகிய தமிழ் நீட்சி (ET-C) பட்டியையும்
அளித்துள்ளமை காண்க.

இந்த அட்டவனை சொல்வது என்ன?
கிரந்தக் குறிகள் அப்படியே தாராள நீட்சியாக
வேண்டும் என்றாலும் கிரந்த வடிவங்களைப்
பிடிக்காதவர்கள் மறுக்கக் கூடும் என்பதால்
இறுகிய நீட்சியை இப்போது வழங்குக” என்பதே
திரு.சிறீரமணசர்மாவின் உளக்கிடக்கையாகும்.
அதனை அவர் மொழியாலேயே தெரிந்து கொள்தல்
அவசியமாகும்.

திரு.சிறீரமணசர்மா அவர்களின் கூற்று:
“This choice of ET-C-style glyphs would also avoid any problems
with those disliking Grantha-style glyphs being used in Tamil.”

மீயெண்களைப் போட்டு எழுதும் வடிவத்தைக்
காண்பித்து இது தமிழ் வடிவங்கள் போலவே
இருப்பதால் தமிழ் உலகம் தமிழின் நீட்சி
என்று ஏற்றுக் கொள்ளும் என்பதே
திரு.சிறீரமணசர்மாவின் எண்ணமாகும்.

படம் 3.1ல் இருக்கும் வடிவங்கள்தான் இவர்
சேர்க்க விரும்புவன என்றால் நீட்சியை
ஏன் தாராளம், இறுகல் என்று இரண்டாகப்
பிரிக்க வேண்டும் என்ற வினா எழுகிறதல்லவா?

அதுதான் திரு.சிறீரமணசர்மாவின் இருவழி உத்தியாக
இருக்கக் கூடும் என்று நமக்குத் தெரிகிறது.

அதாவது, இறுகல் நீட்சியை இந்த முன்மொழிவு
வழியாக அடையவேண்டும். அப்படி அடைந்து விட்டால்,
எழுத்துரு முறையில் கிரந்தக் குறிகளை அப்படியே
காட்டவும் முடியும்.

ஒரு வேளை இந்த முன்மொழிவு மறுக்கப்
பட்டுவிட்டால், மறுக்கப் பட்ட காரணத்தைக்
கொண்டே, ஒருங்குறிச் சேர்ந்த்தியத்திடம்
“இதோ பார் நான் இறுகிய நீட்சியைக் கேட்டேன்;
நீங்கள் தரவில்லை; அதனால் இந்தத் தாராள நீட்சியில்
இருப்பனவற்றைத் நீட்சியாகவோ அல்லது
தனிக் குறியீடுகளாகவோ தரவேண்டும்”
என்று பின் தொடரும் உத்தியையே
கையாண்டிருக்கிறார் என்பது திண்ணம்.

இதைத்தான் அவர் செய்திருக்கிறார்
என்று அறுதியிட்டுச் சொல்வது போலவே அமைகிறது
அடுத்த இன்னல். அதனைப் பின் வரும் பக்கங்களில் காண்போம்.

26) ஒருங்குறியில் தமிழ் நீட்டல் என்ற முயற்சியின் தற்போதைய நிலை என்ன?

2010 சூலை மாதம் 10 ஆம் தேதியிட்ட
திரு.சிறீரமணசர்மாவின் ”நீட்டித்த தமிழ்”
முன்மொழிவும் பிற இன்னல்களும்
கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார்
மற்றும் சிலரின் முயற்சியாலும் பலருக்கும்
தெரிய ஆரம்பித்து பொதுவிற்கு வந்தபோது
அகுதோபர் மாதத்தின் பிற்பகுதி ஆகியிருந்தது.

இந்த முன்மொழிவு பற்றிய கருத்துக்களை
தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் 25-10-2010
என்று அறியப்பட்ட போது அது பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியது. ஒருபுறம் தமிழ் ஆர்வலர்களும்
அறிஞர்களும் காலந்தாழ்ந்து எழுந்த போதிலும்
சடுதியில் தங்கள் கருத்துக்களையும்
மறுப்புக்களையும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு
அனுப்பினார்கள்.

மறுபுறம், யுனிக்கோடு அறிஞர்களான
மலேசியாவைச் சேர்ந்த திரு.முத்து நெடுமாறனும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.மணி.மு.மணிவண்ணனும்
நுட்ப வழியாக இதனை மறுக்க நுணுக்கமான
பணிகளைச் செய்தனர்.

திரு.முத்து நெடுமாறன், திரு.சிறீரமணசர்மா
வேண்டுவனவற்றை ஒருங்குறியில்
தமிழின் பெயரால் குறிகளை நீட்டாமலேயே
திரு.சிறீரமணசர்மா வேண்டுவனவற்றை
எப்படிச் செய்து கொள்ளலாம் என்று செய்து
காட்டினார்.

இப்படி, இவ்வளவு எளிதாகச் செய்யக் கூடுகையில்
எதற்குத் தமிழின் பெயரில் நீட்ட வேண்டும் என்று
விடுக்கப்பட்ட மறுப்பினை அடிப்படையாக வைத்து
ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் நீட்டல் என்ற அந்த
முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. இன்னும்
அது உறுதியான அலுவமுறையில் ஆவணப்
படுத்தப்படாவிட்டாலும் சேர்த்தியத்தை
அறிந்தவர்கள் இதனை நம்பலாம் என்றே
கூறுகிறார்கள்.

”தமிழ் நீட்டல்” என்ற சூழலை அறிந்த
விடுதலை ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள்
உடனடியாகச் செயல்பட்டு அரசினர்க்கு
விழிப்பை ஏற்படுத்தி அறிக்கையும் வேண்டுகோளும்
விடுத்திருந்தார். விடுதலை இதழிலும் அவரின்
அக்கறையும் உணர்வும் மிக்க அறிக்கை
வெளியாகி அனைவரையும் விழிப்படையச் செய்தது
காலத்தாற் செய்த ஒன்று. கிரந்த விதயத்தில்
அவரின் செயற்பாடு போற்றத்தக்கதாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 6

தொகுதி-3: கிரந்த இன்னல்கள்

17) தற்காலக் கிரந்த இன்னல் எப்பொழுது தொடங்கியது?

தற்காலக் கிரந்த இன்னல், ஒருங்குறி அல்லது
பிறவற்றில் தொடங்கியது என்று சொல்வதைவிட
எப்பொழுது தமிழக அரசாணை வழியே கிரந்த
எழுத்துக்களையும் தமிழ் நெடுங்கணக்கில்
சேர்த்தார்களோ அப்பொழுதே கிரந்த இன்னல்
கொஞ்சங் கொஞ்சமாய்த் தொடங்கிவிட்டது
என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
தமிழகத்தின் அறிவுலகமும் கல்வியுலகமும்
இதனைத் தடுக்க மறந்தது என்றே சொல்லவேண்டும்.

18) கணி எழுத்துருக்களிலும் தரப்பாடுகளிலும் கிரந்தம் எப்போது வந்தது?

HA, SA, JA, SSHA என்ற 4 கிரந்த எழுத்துக்களும்
ஒருங்குறி தோன்றியபோதே சேர்க்கப்பட்டு விட்டன.
அதேபொழுது, ஒருங்குறி பயனுக்கு வந்தது 2000மாம்
ஆண்டிற்குப் பின்னரேயாகும். ஒருவேளை, ஒருங்குறி
தோன்றிய போதே கிரந்தத்துடன் தோன்றியதற்குக்
காரணமாய் தமிழக அரசின் அரசாணை
இருந்திருக்கக் கூடும்.

ஒருங்குறிக்கு முன்னர் பயனில் இருந்த பிற
தரப்பாடுகளான தகுதரம் (TSCII), தாபு (TAB), தாம்(TAM)
என்ற எல்லாத் தரப்பாடுகளிலும் இந்த 4 எழுத்துக்கள்
இருந்தன. யாரும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்
என்று எண்ணியதாய்க் கூடத் தெரியவில்லை.

19) தமிழ்நாட்டில் அந்த 4 கிரந்த எழுத்துக்களின் புழக்கம்
அதிகமாக இருக்கிறதே – அதை எப்படித் தவிர்க்க முடியும்?

உண்மை. அவற்றை மெதுவேதான் நம் புழக்கத்தில்
தவிர்க்க முடியும். அப்படியே முடியாவிட்டாலும்,
அவற்றைத் தமிழக அரசு தன் அரசாணைக்குள்
கொண்டுவரவேண்டிய கட்டாயம் எதுவுமே இல்லை.
அரசின் அவ்வேற்பினால் இன்றைக்கு என்ன
சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று பார்த்தால்
ஒன்றும் இல்லை.

அரசாணையிலும் போட்டு பள்ளிக்கூடத்திலும்
சொல்லிக் கொடுத்துவிட்டு கிரந்தம் ஒழிக என்று
பாடிக்கொண்டு இருக்கும் நிலை புதிய
தலைமுறைக்குச் சற்றும் புரிவதில்லை.

ஆங்கிலத்தை அப்படியே எழுத மட்டுமே
அந்த எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றன.
வணிகப் பலகைகளைப் பார்த்தாலே இது புரியும்.
ஆக, கிரந்தத்தின் மூலக்கேடு அரசின் ஏற்பாகவே
இருக்க முடியும்.

20) ஒருங்குறியில் நிகழ்ந்த முதல் இன்னல் என்ன?

படத்தில் உள்ளது போன்ற
SHHHA என்ற ஓசையுடைய கிரந்த எழுத்து வலிந்து
நுழைக்கப் பட்டது. படத்தில் உள்ள இந்த வடிவத்தை
தமிழ்நாட்டு மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்
என்று தெரியவில்லை. ஒருங்குறியில்
வந்தபின்னர்தான், இப்படி ஒரு வடிவம் இருப்பதே
பலருக்கும் தெரிய வந்தது.

21) ஒருங்குறியில் இந்த முதல் இன்னல் எப்படி நிகழ்ந்தது?

கிரந்தத்தைத் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்;
அதனால் இந்த எழுத்து தமிழ் எழுத்துக்களோடு
அவசியம் சேர்க்கப்பட வேண்டும்” என்று ஒருங்குறிச்
சேர்த்தியத்திற்கு முன்மொழிவை அனுப்பியது
உத்தமம் அமைப்பாகும்.

இதற்குப் பெரிதும் தூண்டுதலாக இருந்தவர்களில்
முக்கியமானவர் திரு.நா.கணேசன் ஆகும்.
அப்படி முன்வைத்ததற்கு ஏதும் பெரிதாக மாற்றுக்
கருத்துக்கள் இல்லாததால் ஒருங்குறிச் சேர்த்தியமும்
ஏற்றுக் கொண்டு அதற்கு “TAMIL LETTER SHA”
என்று பெயரும் கொடுத்து U+0BB6 என்ற
குறியெண்ணையும் கொடுத்து, திருத்திய
தமிழ்த் தரப்பாட்டை வெளியிட்டு விட்டது.

22) இந்த “SHA அல்லது SHHHA” என்ற எழுத்தை யாரும் இணையத்தில் பயன்படுத்துகிறார்களா?

திரு.நா.கணேசன் பல நாள்களாக அரும்பாடு
பட்டு இதனை இணைய மடற்குழுக்களில்
பரப்புரை செய்ததன் பலனாக, அவரோடு மேலும்
ஒருவர் சேர்ந்து இவ்வெழுத்தை இணையத்தில்
அகமகிழ்வோடு பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

இந்த இருவரின் பயன்பாட்டுக்க்காக 7 கோடி
மக்களின் நெடுங்கணக்கு, ஒருங்குறியில்
மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த எழுத்தைப் புகுத்தி விட்ட பெருமையோடு,
மேலும் பலரைப் பயன்படுத்தச் சொல்லி
தொடர் பரப்புரைகளை திரு.நா.கணேசன்
செய்துவருகிறார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html

அன்புடன்
நாக.இளங்கோவன்



Saturday, January 08, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 5

(பகுதி-3 ல் உள்ள படங்கள் 2.1. 2.2 ஆகியவற்றை ஒத்துப் படிக்கவும்)

13) துணைப் படமொழித் தளம் (Supplementary Ideographic Plane - SIP) – தளம்-2:

படவெழுத்துக்கள் கொண்ட மொழிகளின்
நீட்சிக்கென்றே ஒரு தளத்தினை சேர்த்தியம்
ஒதுக்கியிருக்கிறது.

முதன்மைத் தளத்தில் சீன, கொரிய, யப்பானிய
மொழிகளுக்குத் தேவையான பன்னூறு
(5,6 ஆயிரம் இடங்கள் இருக்கும்) குறிகளுக்கான
இடங்களை, பாத்திகளை ஒதுக்கியது போக
மேலும் தேவைப்படுகின்ற முதன்மைக் குறிகளுக்கும்,
அவ்வப்போது சிறுபயன் அளிக்கும் குறிகளுக்கும்,
பழங்காலச் சீன-யப்பானிய-கொரியக் குறிகளைச்
சேர்ப்பதற்கென்றும் இத்தளம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

14) தளம்-3 முதல் தளம்-13 வரை:

இத்தளங்கள் எதிர்காலப் பயன்களுக்காகத்
திட்டமிடப்பட்டிருக்கின்றன. தளம்-3 ஐப் பற்றி
ஓரளவு செய்திகள் இருக்கின்றன. ஆனால்
அவை வழக்கிற்கு இன்னும் வரவில்லை.
ஒருங்குறியின் வளர்ச்சியில் இத்தளங்கள்
மெல்லப் பயனுக்கு வருவன ஆகும்.
நிரப்பப்படாத இடங்களில் பெரும்பான்மையும்
இங்கே இருக்கின்றன.

15) துணைச் சிறப்புக் குறித்தளம் ( Supplementary Special Purpose Plane - SSP) – தளம்-14:

சிறப்புக் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்
தளம் இது. சிறிய எண்ணிக்கையிலான
சில மொழிக்குறிகள் இருக்கின்றன.
இதன் பயன் பற்றி மேலும் ஆழமாக அறிய
வேண்டியிருக்கிறது. தற்போதைக்கு
இத்தளம் எவ்வகையானும் பயன் இல்லை
என்பதால் அதிக விளக்கம் இங்கு தரப்படவில்லை
என்றறிக.

16) தனிப்பயன் தளங்கள் 1 & 2 (Private Use Planes (1 & 2) – தளங்கள் 15 & 16:

இந்தத் தளங்கள் இரண்டும் ஒருங்குறிகளின்
முறைமை மற்றும் நெறிகளுக்கு அப்பாற்பட்ட
தேவைகளுக்காக, உலகில் உள்ள பிற முறைகள்
மற்றும் தனிப்பட்டத் தேவைகள் உடையோரின்
பயனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனவாகும்.

ஒருங்குறியைப் பயன்படுத்துகிற சொவ்வறைகள்,
நிரலிகள், செயலிகள் இந்தத் தனிப்பயன் தளங்களில்
பயனர் போட்டுக் கொள்ளும் குறிகளைச் சரியாகக்
காட்டும் என்ற உறுதியை ஒருங்குறிச் சேர்த்தியம்
தரவில்லை. இவற்றை ஒருங்குறிச் சேர்த்தியம்
நெறிப்படுத்தாது.

இங்குள்ள குறிகள் பிற கணிச் செயல்களோடு
ஒத்தியங்குவதாக இருக்காது என்றே சேர்த்தியம்
சொல்கிறது. இந்த இரு தளங்கள் போக
6400 இடங்களை முதன்மைத் தளத்திலும்
தனிப்பயனுக்காக சேர்த்தியம் ஒதுக்கியிருக்கிறது.
இவ்விடங்களை அரக்கு வண்ணத்தில் படம் 2.1 காட்டுகிறது.

இதுவரை ஒருங்குறியின் 17-தள கட்டமைப்பைப் பார்த்தோம். இனி அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 4

ஒருங்குறிக் கட்டமைப்பின் பல்வேறு
தளங்களைப் பற்றிய விளக்கம்!
(பகுதி-3 ல் உள்ள படங்கள் 2.1. 2.2 ஆகியவற்றை ஒத்துப் படிக்கவும்)

11) முதன்மைப் பன்மொழித் தளம் (Basic Multilingual Plane – BMP ) – தளம்-0:

பெயரே கூறுவது போல, இதுதான் ஒருங்குறித்
தரப்பாட்டின் முதற்றளம். இதனை அடித்தட்டு,
அடிப்படைத் தளம் என்றும் பலர் சொல்வர்.
இத்தளத்தில்தான், ஏறத்தாழ, தற்போது வழக்கில்
இருக்கும் எல்லா மொழிகளின் எழுத்துக் குறிகளும்
வைக்கப் பட்டு இருக்கின்றன. தமிழும் அதோடு
சேர்த்து இந்திய மொழிகள் அனைத்தும் இதிற்றான்
வைக்கப்பட்டிருக்கின்றன.

இத்தளம் மிக முகன்மையானது. ஏனெனில்
இத்தளம்தான் வழக்கில் இருக்கும் மொழிகளின்
எழுத்து முறைகளையும் அவற்றின் குறிகளையும்
உள்ளடக்கியிருக்கிறது. வழக்கில் இருக்கும்
எழுத்துக்கள்தானே நாம் எல்லோரும் அதிகம்
பயன்படுத்தப் படுவனவாகும். எழுத்துக் குறிகளோடு
அதிகம் பயன்படுத்தப்படும் எண்களின் குறிகள்,
சின்னங்கள், கணிதக் குறியீடுகள்,
மீக்குறிகள் (Diacritical marks) போன்றவையும்
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம்
பிடித்திருக்கின்றன.

அவையும் இருந்தாற்றானே மொழியை எளிதில்
புழங்க முடியும், இல்லையா? இத்தளத்தில்
உலகில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட
எழுத்து முறைகளுக்கான குறிகள் முதன்மைப்
பன்மொழித் தளத்தில் இடம் பெற்றுள்ளன.

65536 இடங்கள் கொண்ட இத்தளத்தில்
சில இடங்கள் நிரப்பப் படாமல் கூட
இருக்கின்றன. இதே தளத்தில் 6400 இடங்கள்
சொந்தப் பயன் அல்லது தனிப்பட்ட பயனுக்காக
என ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தளம் ஒருங்குறியின்
முதல் வெளியீட்டில் முதன்முதலாக
அமைக்கப்பட்டது.

பின்னர்தான் பிற தளங்கள் ஏற்படுத்தப்பட்டு
ஒருங்குறி மேலும் விரிவடைந்தது. அதனால்
இதனை அடித்தட்டு அல்லது அடித்தளம் அல்லது
அடிப்படைத் தளம் என்றும் கூறுவர்.

இத்தளத்தினை பன்மொழித் தளம் என்று
சொல்வதை விட வாழ்மொழித் தளம் என்று
கருதல் சாலப்பொருந்தும்.

12) துணைப் பன்மொழித் தளம் (Supplementary Multilingual Plane - SMP) – தளம்-1:

ஒருங்குறித் தளங்கள் ஒவ்வொன்றும்
65,536 குறிகளைப் பிடிக்க வல்லது என்று
முன்னரே கண்டோம்.

இந்தத் துணைப் பன்மொழித் தளமானது,
வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக்
குறிகளையும், எப்பொழுதாவது பயன்படக் கூடிய
எழுத்துக்களின் குறிகளையும், அதிக முக்கியத்துவம்
இல்லாத சின்னங்களையும் சேர்த்து வைத்துள்ளது.
இத்தளத்தின் முக்கிய நோக்கம் வரலாற்றுக்
காரணங்களாகும். இத்தளத்திலே தற்போது
இருக்கும் குறிகளின் விவரங்களைப் பார்த்தால்
அது தெளிவாகும்.

இத்தளம் கொண்டுள்ள குறிகளிற் சில வருமாறு:
• பழம்பார்சி
• பழம் இத்தாலி
• தெசரத்து (Deseret)
• பழங் கிரேக்க எண்கள்
• இலீனீயர் பி
• பழந் தென் அரபி
• பழந் துருக்கி
• பிராமி

இவையோடு மேலும் என்ன இருக்கிறது என்று
பார்க்கும் போது இதிற் சின்னங்கள் பலவும் இடம்
பெற்றுள்ளதை அறியலாம். காட்டாக, உணர்ச்சிக்குறிகள்
அல்லது சின்னங்களைச் சொல்லலாம்.

படத்தில் உள்ள உணர்ச்சிக் குறிகளை ஆங்கிலத்தில்
Emoticons என்று சொல்வார்கள். நாமெல்லாம்
மின்னஞ்சலிலும் மின்னரட்டைகளிலும் இந்த
உணர்ச்சிக் குறிகளைப் பார்த்திருக்கிறோம்.
பெரும்பாலும் சிரிப்புக்குறிகளை (Smileys) மட்டுமே
நம்மிற் சிலர் பயன்படுத்துவர். அந்த உணர்ச்சிக்
குறிகளையும் ஒருங்குறி உள்ளடக்கியிருக்கிறது
என்று அறிய வேண்டியது செய்தியாகும்.

ஒருங்குறியின் பரந்து பட்ட தன்மையை
இதன்வழி நம்மால் உணரமுடியும். இந்த
உணர்ச்சிக் குறிகளை “அதிக முகன்மையில்லாத
ஆனால் பயனில் இருக்கிற குறிகள்” என்ற வகையில்
ஒருங்குறிச் சேர்த்தியம் இந்தத் துணைத்தளத்தில்
வைத்திருக்கிறது என்று நம்பலாம். இன்னொன்றையும்
சொல்ல வேண்டும்;

இந்தக் குறிகளையெல்லாம் நாம் தற்போதுதானே
காண்கிறோம்! இவை புதியதன்றோ என்ற எண்ணம்
வரலாம். ஆனால் இது பற்றி ஆய்ந்த போது,
நாடு வாரியாக 19 ஆம் நூற்றாண்டில் இருந்து
பயனில் இருக்கிற உணர்ச்சிக் குறிகளைப் பார்த்த
போது வியப்பே ஏற்பட்டது. அந்தத் தொகுப்பிலே
1862லே ஆபிரகாம் இலிங்கன் தனது எழுத்திலே “;)”
என்ற உணர்ச்சிக் குறியைப் பயன்படுத்தியிருக்கிறார்
என்ற செய்தியும் அது உணர்ச்சிக் குறியா
எழுத்துப் பிழையா என்ற வாதமும் சுவையாக
இருந்தன.

சீட்டுக்கட்டைப் பார்த்திராதவர் குறைவு.
பார்த்திருப்பவர்களுக்கு அதில் உள்ள சின்னங்கள்
பற்றித் தெரியுமல்லவா? அந்தச் சின்னங்களும்
ஒருங்குறியில் சேர்க்கப்பட்டுத் தரப்பாடு
அளிக்கப் பட்டிருக்கிறது என்பது பலருக்கும்
செய்தியாகவே இருக்கக் கூடும்.

சீட்டுக்கட்டு சார்ந்த 59 சின்னங்கள் ஒருங்குறிகளாக
வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பாத்தி 128 இடங்கள்
கொண்டது என்று பார்த்தோம். பிற மொழிப்பாத்திகளும்
இந்த 128 அளவில் நிறைய இருக்கின்றன.

அதே அளவுள்ள பாத்தியே சீட்டுக் கட்டுக் குறிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளது ஒருங்குறியில். படத்திலே
காட்டப்பட்டுள்ளவையே ஒருங்குறியில் உள்ள சீட்டுக்கட்டுக் குறிகளிற்சிலவாகும். குறிகளுக்கு அருகே
எழுதப்பட்டுள்ளவை தரப்பாட்டுக் குறியெண்களாகும்.
இக்குறிகளும் அதிக முக்கியத்துவம் இல்லாத ஆனால்
புழக்கத்தில் இருக்கின்ற குறிகள் ஆகும்.

இக்குறிகளைப் போன்றே இசைக்குறிகளும்
ஒருங்குறியில், இதே துணைப் பன்மொழித்
தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சீட்டு விளையாட்டுக் குறிகள் போன்று
பல்வேறு விளையாட்டுக் குறிகளும் சேர்க்கப்
பட்டுள்ளன. தமிழ்நாட்டாரும் தமிழ் நாட்டில்
விளையாடப்படும் தாயம், பரமபதம், ஆடு-புலி,
போன்ற பட விளையாட்டுக்களை ஒருங்குறியில்
வைக்க எண்ணினால் தாராளமாக வைக்க முடியும்.

இசைக்குறிகள் என்று சொல்லுமிடத்து பண்டைய
இசைக்கும் கூத்துக்கும் சொந்தக்காரர்களான
தமிழ்மக்கள் தமது எண்ணற்ற இசைச் செல்வங்களை
சேர்த்து வைக்க ஒருங்குறியின் இந்தத்
துணைப் பன்மொழித்தளம் சரியான இடமாகும்.
கருணாமிர்தசாகரமும் சிலப்பதிகாரமும் இதற்கு
உதவக்கூடும்.

இதுபோன்று பல்வேறு பழஞ்சின்னங்களும்
பெரும்பாலும் சேர்க்கப்படும் இடம் இந்தத்
துணைப் பன்மொழித்தளமாகும். தமிழ்நாட்டார்
முயற்சிசெய்வாரெனின் பல பழஞ் சின்னங்களை
இங்கே கொண்டு வந்து சேர்த்து வைக்கலாம்.

ஒருங்குறியின் கட்டமைப்பு 17 தளங்களைக்
கொண்டு, குத்துமதிப்பாக 11 இலக்கத்திற்கும்
மேலான குறிகளைப் பிடிக்குமளவிற்குக்
கட்டியமைக்கப் பட்டிருக்கிறது என்று பார்த்தோம்.
அப்போது, எதற்கு இத்தனை இடத்தை
வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கக்
கூடும். தற்போது ஒருங்குறியின் பன்முகத்
தன்மையையும் பரந்துபட்ட தன்மையையும்
உணரும்போது இந்த 11 இலக்கத்திற்குப் பொருள்
இருப்பதாகவே படுகிறது அல்லவா?

இந்த 11 இலக்க இடங்களில் சொந்தப் பயனுக்கு
என ஒதுக்கியிருக்கும் 1,31,000 இடங்கள் போக
மீதியிருப்பவை 9,69,000 இடங்கள்.
இந்தளவு இடங்கள் ஒருங்குறிச் சேர்த்தியத்தின்
முழுக்கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்கும்.
காலம் கூடக் கூட இவ்விடங்களை நிரப்பும்
பணிகளிலே சேர்த்தியம் மூழ்கி இருக்கக் கூடும்.

இதுவரை நிரம்பியிருக்கும் இடங்கள்
எத்தனை தெரியுமா?

ஒருங்குறியின் ஆறாவது வெளியீடு
வந்திருக்கும் இவ்வேளையில் இதுவரை
நிரம்பியிருக்கின்ற இடங்கள் 1,11,563 ஆகும்.
அத்தோடு 1991 ஆம் ஆண்டு தன் பணியைத்
தொடங்கிய சேர்த்தியம், இதுகாறும் வாழ்மொழிகளின்
எழுத்துக்களில், அதாவது பயனில் இருக்கும்
மொழிகளின் எழுத்து முறைகளிலும் எழுத்துக்களிலும்
அதிக கவனம் செலுத்தி வந்ததையும்
தற்போது துணைத்தளங்களிலும் பிற குறிகளிலும்
பழமைகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருவதையும்
தெரிவிக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html

அன்புடன்
நாக.இளங்கோவன்


யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 3

தொகுதி-2: ஒருங்குறியின் அமைப்பு

10) ஒருங்குறியின் அடிப்படை அடவு எப்படியானது?
விளக்கம் கிட்டுமா?

ஒருங்குறியின் அடிப்படை அடவு மிகவும் எளிது.
சற்று ஆழ்ந்து பார்த்தால், யாராலும் நன்றாகவே
விளங்கிக் கொள்ள இயலும். மொழி தொடர்பாக
நீண்ட எதிர்கால ஆளுமையைக் கொண்டிருக்கிற
ஒருங்குறியின் அமைப்பையும் அடிப்படைக்
கட்டமைப்பும் புரிந்து கொள்வது மிக அவசியமும் கூட.
கீழே படம் 2.1 ஐ நோக்குக.

செவ்வகக் கட்டகத்துக்குள் இருக்கும்
நீளச் சட்டங்களைக் காண்க. இந்த நீளச் சட்டங்கள்
ஒவ்வொன்றும் ஒரு தனித் தளத்தைக் குறிக்கின்றன.
ஒருங்குறித் தரப்பாடு, இப்படியாக 17 தளங்களைத்
தன் கட்டமைப்பில் கொண்டுள்ளது.

ஒவ்வொரு தளத்திலும் சிறியதும் பெரியதுமாகப்
பல்வேறு பாத்திகளைக் (Blocks) கொண்டுள்ளது.
இந்தப் பாத்திகள் ஒவ்வொன்றிலும் ஓர் எழுத்து
முறை வைக்கப் பட்டுள்ளது.

அது எழுத்து முறையாக இருக்கலாம்,
அன்றித் துணைக்குறிக் கூட்டமாகக் கூட இருக்கலாம்,
அல்லது சின்னங்களின் தொகுப்பாக இருக்கலாம்,
அல்லது அறிவியல், கணிதக் குறிகளாக இருக்கலாம்.

அந்தப் பாத்திகளின் அளவு அந்த எழுத்து முறை
அல்லது குறிகளின் கூட்டத்தில் உள்ள
குறிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து
சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ,
மிகப் பெரியதாகவோ அமையும்.


தளங்களில் வண்ணமிடாத வெள்ளைப்
பாத்திகள் இன்னும் எவ்வகைக் குறித்தொகுப்பாலும்
நிரப்பப் படாமல் இருக்கின்றது என்பதனைக் எடுத்துக்
காட்டுகிறது.

ஒவ்வொரு தளத்திலும் 65,536 குறிகளைக்
குடி வைக்கலாம். இதனை 64 கிலோ பைட்டுகள்
என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒருங்குறிக்
கட்டகம் 17 தளங்களைக் கொண்டுள்ளதால்
(இது எதிர்காலத்தில் 21 வரைக்குங் கூட உயர்ந்து
கொண்டு போகலாம்.) (17 X 65,536 = 11,14,112) மொத்தம்
பதினொரு இலக்கத்து பதினாலாயிரத்தி நூற்றிப்
பன்னிரண்டு குறிகளை வைக்கும்படியாக
கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த ஒவ்வொரு தளமும் உயரத்தில்
16 உள் அடுக்குகளையும் நீளத்தில்
4096 உள் பிரிப்புகளையும் கொண்டதாக
அமைக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு உள் அறைக்கும் ஒவ்வொரு
குறி எண் உண்டு. ஒவ்வொரு மொழித்
தொகுப்பு அல்லது எழுத்து முறைக்கும்
அதில் உள்ள குறிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து
பிரிப்புகளைக் கொடுப்பார்கள்.

எல்லாத் தொகுப்புக்கும் 16 உயர அடுக்குகள்
நிலையானது. நீளத்தை மட்டும் எண்ணிக்கைக்கு
ஏற்றவாறு கொடுப்பார்கள். காட்டாக, தமிழுக்கு
உயரத்தில்16 அடுக்குகளையும் நீளத்தில் 8 பிரிப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆக, தமிழிற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் பாத்தியில்
உள்ள இடங்கள் 16 X 8 = 128 ஆகும். இதே போல
அரபி எழுத்து முறைக்கு 16 X 16 = 256 இடங்கள்
கொண்ட பாத்தி கொடுக்கப் பட்டிருக்கின்றது.
தெலுங்குக்கு 128 இடப் பாத்தியும்,
தேவநாகரிக்கு 128 இடப் பாத்தியும்,
சீன-யப்பானிய-கொரிய எழுத்து முறைகளுக்குப்
பல நூறு இடங்கள் கொண்ட பல பாத்திகளும்
ஒதுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்து
முறைக்கும் எவ்வளவு இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை மேலும்
அறிவதற்கு http://www.unicode.org/charts/
என்ற இந்த இணையவரியைச் சொடுக்குக.

படம் 2.2, ஒரு தளத்தின் உள்ளமைப்பு
விவரங்களைக் காட்டுகிறது.

இப்படித்தான் ஒருங்குறியின் கட்டகமும்
உள்ளமைப்பும் இருக்கின்றன. இப்படங்கள் கருத்தியல்
அடிப்படையை மட்டும் விளக்க வரையப்பட்டன ஆகும்.
இதே வரிசையில் எழுத்து முறைகள் இருக்காது.
அவை வேறுபடும் என்று அறிக.

குறிப்பு: படத்தைச் சொடுக்கினால் சற்று பெரிதாகக் காணலாம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html

அன்புடன்
நாக.இளங்கோவன்





யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 2

5) ஒருங்குறியை உருவாக்கிப் பேணுபவர்கள் யார்?

ஒருங்குறிச் சேர்த்தியம் (The Unicode Consortium)
என்ற பெயரில் அமெரிக்காவின் கலிபோர்னியா
மாநிலத்தில் இருக்கும் நிறுவனமே ஒருங்குறியை
உருவாக்கிப் பேணுபவர்கள் ஆகும். http://unicode.org என்ற,
சேர்த்தியத்தின் இணையவரியில் இதைப்பற்றி நிறையத்
தெரிந்து கொள்ளலாம்.


6) ஒருங்குறிச் சேர்த்தியம் தனியார் நிறுவனமா?

இல்லை. இது வருவாய் நோக்குள்ள நிறுவனம் அல்ல.
ஆனால் இது, பெரு வருவாய் ஈட்டுகின்ற உலகின்
ஆகப்பெரிய கணி நிறுவனங்கள் எல்லாம்
கூட்டாகச் சேர்ந்து, எழுத்துமுறைகளுக்கான
செந்தரம் உருவாக்க அமைத்த
நிறுவனமாகும். மைக்ரோசாவ்டு, ஐ.பி.எம்,
கூகிள், ஆரக்கிள் உள்ளிட்ட 8 பெருநிறுவனங்களை
முகன்மை உறுப்பினர்களாகவும், பல அடுத்த
நிலை நிறுவனங்களை துணை உறுப்பினர்களாகவும்
கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும்.

7) ஒருங்குறிச் சேர்த்தியத்தில் தனியர் உறுப்பியம் உண்டா?

உண்டு. கணிசார் திறனுடைய, மொழிசார்
திறனுடையர்களாக, அல்லது கணி, மொழி சார்
அமைப்புகளின் நியமன உறுப்பினர்களாக,
தனியர்கள் உண்டு. எண்ணிக்கையில் அதிகமாய்
கிட்டத்தட்ட 100 பேர் இருக்கக் கூடும்.
இது எதிர்காலத்தில் இன்னுங் கூடலாம்.

8) ஒருங்குறிச் சேர்த்தியத்தில் தமிழ்நாட்டைச்
சேர்ந்த தனி உறுப்பினர் உண்டா?

உண்டு. நானறிந்தவரை ஏழுபேர் தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது வரவேற்கப்
படவேண்டிய விதயம். அவர்களின் பெயர்கள் வருமாறு:

• பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, தமிழ்நாடு
• பேராசிரியர் சி.ஆர்.செல்வக்குமார், கனடா
• திரு.சு.பழனியப்பன், அமெரிக்கா
• திரு.வா.மு.செ.கவியரசன், அமெரிக்கா
• முனைவர் திரு.நாக.கணேசன், அமெரிக்கா
• திரு.சிறீரமணசர்மா, தமிழ்நாடு
• திரு.தில்லை குமரன், அமெரிக்கா
காண்க:http://www.unicode.org/consortium/memblist.html

9) ஒருங்குறிச் சேர்த்தியத்தில் அரசுகளின் உறுப்பியம் உண்டா?

உண்டு. அமைச்சக வழியாக இந்திய அரசு,
வங்காள தேச அரசு (Bangladesh),
மேற்கு வங்க மாநில அரசு ஆகியவை
உறுப்பினர்களாக இருக்கின்றன.

தமிழக அரசு இதற்கு முன்னர் உறுப்பினராக
இருந்தது. தற்போது சேர்த்தியத்தின் இணையத் தள
விவரப்படி, தமிழகம் உறுப்பினராக இல்லை.
மீண்டும் உறுப்பினர் கட்டணம் செலுத்தி
தமிழக அரசு உறுப்பினராக முயல்கிறது என்று
கேள்விப்படுகிறேன்.

இவற்றைத் தாண்டி பல்வேறுநாடுகளின்
தொடர்பாக அவர்களின் மொழி அல்லது
கணி அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும்
தொடர்பு உறுப்பினராக உள்ளன.

பன்னாட்டுத் தமிழ் அமைப்பான உத்தமம்
(INFITT – http://infitt.org ) என்ற அமைப்பும்
தொடர்பு உறுப்பினராக உள்ளது.

(தொடரும்)

முந்தைய பகுதி:
http://nayanam.blogspot.com/2011/01/1.html

அன்புடன்
நாக.இளங்கோவன்


Friday, January 07, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 1

தமிழ் உலகில் குறிப்பாகக் கடந்த 3 மாதங்களாக
நிலவுகின்ற, “தமிழ்-ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு”
பற்றிய விதயங்களை, பல் துறை சார்ந்தோர்க்கும்
அறியத்தரும் வண்ணம் இந்த ஆவணத்தை அமைக்க
முயன்றிருக்கிறேன். இது அடிக்கடி ஊடாடும்
வினாக்கள் (FAQ) முறையையும் கட்டுரை
விளக்க முறையையும் உள்ளடக்கியதாக அமைகிறது.
ஒருங்குறி அடிப்படைகள், அதன் கட்டமைப்பு,
கிரந்த நுழைப்பு முன்மொழிவுகள், கடந்த 3 மாதங்களில்
நிகழ்ந்தவை பற்றிய குறிப்புகள், தற்போது நிலவுகின்ற
குழப்பங்கள் ஆகியவற்றை விளக்குவதாகவும்,
தமிழ்ப் பற்றாளரும் தமிழக அரசும் மேற்கொள்ள
வேண்டிய பணிகளைப் பற்றிய பார்வை
காட்டுவதாகவும் இது அமைகிறது.

தொகுதி-1: ஒருங்குறி - அறிமுகம்

1) யுனிக்கோடு என்றால் என்ன?

கணியிற் பல்வேறு மொழி எழுத்துக்களை இப்பொழுது
எழுதவும், படிக்கவும் முடிகிறது. ஆனால் ஒருகாலத்தில்
உலகம் முழுவதிலும், ஆங்கிலத்தைத் தவிர,
பலமொழிகளின் எழுத்துக்களை எழுதுவதிலும்,
படிப்பதிலும் சிக்கல்கள் இருந்தன. தவிர ஒவ்வொரு
மொழியெழுத்துக்குள்ளும் பல்வேறு எழுத்துத்
தரப்பாடுகள் இருந்தன. தமிழிலும் ஒருகாலத்தில்
கணியில் எழுதப் படிக்கப் பல்வேறு எழுத்துத்
தரப்பாடுகள் புழங்கிக் கொண்டிருந்தன.

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த எழுத்துத்
தரப்பாட்டில் தமது இணையத் தளங்களையும்,
செய்தி ஏடுகள், மாத வார இதழ்களையும்
வெளியிட்டனர்.

ஒவ்வொரு இதழையும் இனையத்தளத்தையும்
படிக்க வேண்டுமானால் ஒவ்வொன்றுக்கும்
உரிய எழுத்துத் தரப்பாட்டையும்
எழுத்துருவையும் கணியில் இருத்த
வேண்டிய கட்டாயம் இருந்தது.

இல்லாவிட்டால் அவற்றைப் படிக்கவோ,
அச்சிடவோ, பறிமாறிக்கொள்ளவோ
முடியாதிருந்தது.அதனால் தமிழ்ப் படைப்புகள்
கணியிலும் இணையத்திலும் பல்லாயிரக்
கணக்கில் இருந்தாலும் அவை தனித் தனித்
திடல்களாகக் கிடந்ததால் அவற்றைப்
புழங்கும் பயனர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள்
இருந்தன. அவை மொழி வளர்ச்சிக்குத்
தடையாகவும் இருந்தன.

இதே நிலைதான் உலகில் இருக்கும் பல்வேறு
மொழிபேசும் மக்களுக்கும் இருந்தன.

ஆகவே, உலகில் உள்ள எல்லா மக்களும்
கணியில் எளிதில் புழங்க, உலகின் எல்லா
எழுத்து முறைகளையும் (Writing Systems)
உள்ளடக்கி ஒரு எழுத்துத் தரப்பாடு
(Character Encoding Standard) உருவாக்கப் பட்டது.
அதற்குப் பெயர் தான் ஒருங்குறி என்கின்ற
யுனிக்கோடு (Unicode) எழுத்துமுறையாகும்.

தமிழி எழுத்துமுறையை உள்ளடக்கிய
ஒருங்குறியின் உலகப் பயனை உணர்ந்த
தமிழ்க் கணிஞர்களும் பயனர்களும் அந்தத்
தரப்பாட்டுக்கு சிறிது சிறிதாக மாறினர்.
தமிழ்நாட்டரசும் 2010 சூன் மாதத்தில் நடந்த
செம்மொழி மாநாட்டில் ஒருங்குறிக்கு
ஏற்பளித்து அரசின் தரப்பாடாக அறிவித்தது.

2) யுனிக்கோடு அல்லது ஒருங்குறியில்
எத்தனை எழுத்து முறைகள் உள்ளன?

இதுவரை, தமிழ் உள்ளிட்ட ஏறத்தாழ
93 எழுத்து முறைகள் ஒருங்குறித்
தரப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
அரபி எழுத்துமுறை, சீன முறை, ஈபுரு,
இலத்தீனம், சிரில்லிக்கு, தமிழ், தேவநாகரி,
மங்கோலியம், தெலுங்கு, வங்கம் போன்றவை
இவற்றுள் சில எடுத்துக்காட்டுகளாகும்.

3) எழுத்துரு (Font) என்றால் என்ன?

கணித்திரையிலும் அச்சிலும் நாம் காணுகின்ற
எழுத்துக்களுக்கு வடிவ ஒழுங்கைத் தருவது
எழுத்துருக் கோப்பு (Font Files) ஆகும்.
இதனைச் சுருக்கமாக எழுத்துரு என்கிறோம்.
வடிவம், அடர்த்தி, பயன்பாடு ஆகியவற்றின்
அடிப்படையில் பல நிறுவனங்களும், தனியாரும்
அவரவர் தேவைக்கேற்ப எழுத்துருக் கோப்பை
உருவாக்கிக் கொள்ளலாம். பரணர், இலதா,
கண்ணகி போன்று பல நூறு எழுத்துருக்
கோப்புகளைத் தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள்.

4) எழுத்துத் தரப்பாடும்(Encoding) எழுத்துருவும்(Font) வெவ்வேறா?

ஆமாம்; இரண்டும் வெவ்வேறானவை.
எழுத்துத் தரப்பாடு என்பது ஒவ்வொரு எழுத்துக்
குறிக்கும் ஒரு குறியெண்ணைக் (Code Point) கொடுத்து
அதனைக் கணியின் செயற்பாட்டிற்குள் பொருத்திய
செந்தர வரைவாகும்(Standard Definition).
இந்தக் குறி எண்கள் பதினறும எண்கள் ஆகும்.

எடுத்துக்காட்டு:

U+0B85 என்ற குறியெண் தமிழ்க்குறியான “அ” வைக் குறிக்கும்.
U+0BBE என்ற குறியெண் தமிழ்க்குறியான கால் “ா” ஐக் குறிக்கும்.
U+0BB5 என்ற குறியெண் தமிழ்க்குறியான “வ” வைக்குறிக்கும்.
U+0041 என்ற குறியெண் ஆங்கிலக்குறியான “A” யைக் குறிக்கும்.

“வா” என்ற எழுத்தைத் திரையில் காட்ட
வேண்டுமானால் U+0BB5 என்ற குறியெண்ணுடைய
“வ” குறியையும், U+0BBE என்ற குறியெண்ணுடைய
“ா” என்ற காற் குறியையும் இணைத்துக்
காட்டுவார்கள். கணிக்குள் இந்தப் பதினறும
எண்கள் இரும எண்களாக மாற்றப்பட்டுச் செயல்படும்.

ஆகவே தமிழில் உள்ள பல அடிப்படைக் குறிகள்,
உயிர்மெய்க் குறிகள், தமிழ் எண்கள் போன்றவற்றின்
வடிவங்களை எண்ணுமைப் படுத்தும் தரமே
எழுத்துத்தரப்பாடாகும். தமிழ் அகரமெய்களும்,
உயிர்களும் அங்கு அ டிப்படைக் குறிகளாக உள்ளன.
அவை அப்படியே கணித்திரையிலோ, கணியச்சியிலோ,
எழுத்தாக வெளிவரும். பிற உயிர்மெய் எழுத்துக்கள்
வெளிவர வேண்டுமானால் அடிப்படைக் குறிகளையும்
தக்க உயிர்மெய்க் குறிகளையும் அடுத்தடுத்து
ஒட்டுப்போட்டுத்தான் பெறமுடியும்.

இந்தச் செந்தரக் குறியீடுகளைப் பயன்படுத்தி
நாம் விரும்பிய வடிவழகில் எண்ணற்ற எழுத்துருக்
கோப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஒருங்குறித் தரப்பாட்டை எல்லாக்கணிகளின்
கட்டமைப்பும் சொவ்வறைகளும் (Softwares),
நிரலிகளும் (Programs), செயலிகளும்(Applications)
உள்ளடக்கியிருக்கின்றன. அத் தரப்படிச்
செய்யப்படும் எழுத்துருக்கள் செந்தரத்தின்
பயனை அளிக்கின்றன.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்
அமைப்பாளர்,
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம்