Pages

Thursday, January 14, 2016

தமிழோற்பலம்::மடல் 3-செஞ்சாலிதரு செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே!போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே
தேனடையால் வீடுகட்டி கூடிவாழுந் தேனீக்கள்
குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக,
ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு,
பழமரமும் தன்கனியை தான்பிழிய,
தேனோடு தீங்கனிச்சாறும்
ஒட்டி வெட்டி சொட்டி  அங்கே
கட்டி தரும் கரும்பு வயலுக்கு
வாய்க்காலாய் ஓடிவிழ,
கருப்ப வயலின் அண்டையிலே,
தடஞ்சாலி நெல்லெங்கும்
தளதளவென வளர்ந்திருக்க,
அதைத்தடுக்கும் களையதனை
களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின்
கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்கு
களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம்
ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும்,
புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போல
சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில் மயங்கிய
செஞ்சாலிநெல்லும் வரப்பைத்தாண்டி,
குனிந்து, குவளையை முத்தமிட முயன்றிருக்க,
குளமிருந்த மீன்களெல்லாம்,
நிறைநிலவின் அழகையெல்லாம் அப்படியே
அணிந்திருந்த களையெடுக்கும் அப்பெண்டிரின்
கண்களிலே தம்மைக்கண்டு துள்ளியெழுந்தாலும்,
அவர்களின் எழுந்திருக்கும் முதுகழகும்
வளைந்திருக்கும் இடையழகும், மீன்களை
இடறிவிட்டுக்கொண்டேயிருக்க,
மறுபுறத்தில், வளர்ந்திருந்த பாக்கு மரத்தின்
பிஞ்சுக்குலைகளை நோக்கி, தனது
நெற்கதிரை வளைத்து தொடமுனைந்ததென்னவோ,
வளப்பத்தில்,
செஞ்சாலிநெல்லின் திமிரெனவே சொலமுடியும்! திமிரெனவே சொலமுடியும்!
செஞ்சாலிதரு செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே!!
 
வளப்பமிக்க கஞ்சாறூரில்
செஞ்சாலியின் திமிர்சொல்லும்
சேக்கிழாரின் பொன்வரிகள் மயக்கந்தருவன:
 
“கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்  கமழ்சாறூர் கஞ்சாறூர்;”
 
“கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள்.”
 
“செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப;”
 
பீட்டாவும் மீத்தேனும் செஞ்சாலித்திமிர்தன்னை தீண்டாதிருக்கட்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
16/1/16

 

Friday, December 18, 2015

தமிழோற்பலம்::மடல் 2 - ஏல் ஓர் எம்பாவாய்!

மார்கழி மாதம். வருடமுழுதும் வெய்யில், மழை என பருவங்கள்
வேறுபட்டு வருகையில், பனிக்காலத்தின் தொடக்கமான மார்கழி
மனதுக்கும் உடலுக்கும் இனிமையான மாதம் என்பது
இந்நிலவமைப்பின் இயல்பு.

ஆண்டுமுழுதும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்,
நோன்புகள் எனப்பல கொண்டாட்டங்களையும் சிறப்புகளையும் கொண்ட
குமுகம்தான் தமிழ்க்குமுகமும். அது, பத்திக்கென்று ஒதுக்கிக்கொண்
ஒருதிங்கள் மார்கழி.தமிழ்ச்சைவமும் தமிழ்வைணவமும் கொஞ்சிமகிழும்
மாதம் மார்கழி.

பத்தி எனும்போது, இல்லத்தில் வழிபாடும், கோயிலுக்குச்சென்று
இறைதெரிசன வழிபாடும் செய்வதுமே பொதுமக்களின் மரபு.

கோயிலுக்குச்சென்று செய்யும் வழிபாடுகளில், தொலைவில் இருக்கும்
கோயில்களுக்குச்செல்வதற்கு மார்கழி மாதமும், தைமாதமும்தான்
மிக உகந்த மாதங்கள். மெல்லிய இதமான குளிரடிக்கும்
இரவுகளும், உடலை வருத்தாத வெயிலடிக்கும் பகல்களும் மார்கழியில்
தொடங்குகின்றன.

இன்றைய போக்குவரத்து வளர்ச்சியில், தமிழ்நாட்டின் எந்த ஓரிடத்திற்கும்
ஒருபகற்பொழுது அல்லது இரவுப்பொழுதில் சென்றுவிடலாம். ஆனால்
பழையகாலங்களில் அப்படியில்லை. நடைப்பயணமாகவும்,
மாட்டுவண்டிப்பயணமாகவும் சில நாள்களேனும் பயணிக்கவேண்டும்.
சென்னையிலிருந்து பழனி செல்லவேண்டுமானால்,
திருச்செந்தூர் செல்லவேண்டுமானால், அல்லது அங்கிருந்து திருமலைக்கோ
காளத்திக்கோ,தணிகைமலைக்கோ வரவேண்டுமானால் ஒருவார பயணமாகிவிடும்.
ஆக, நெடுந்தொலைவு செல்லும் திருத்தலப்பயணத்திற்கு உகந்த மாதம்
மார்கழியில் தொடங்குகிறது. மாசியிலும் பங்குனியிலும் சிறிது தொடர்கிறது.

ஆகவேதான் இயல்பாகவே மார்கழி சிறப்புப்பெற்று பத்திமாதமாகிவிடுகிறது.
இன்றைக்கும் சபரிமலை செல்பவர்கள் மார்கழி,தையில்தான் நோன்பிருக்கிறார்கள்.
தைப்பூச விழாவுக்கு முருகனைக்காண தைமாதத்தில்தான் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வடக்கேயும் மார்கழிக்கு
மார்கசீசம் என்றும், தையிற்கு தைசம் என்றும் வடமொழிப்பெயர்கள் உண்டு. இந்தமாதங்களைதான் அவர்களும் திருத்தலப்பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக கருதுவதை அருத்தசாற்றத்தில் காணமுடிகிறது. அவர்களின் மார்கழியும் தையும் சிலநாள்களின் முன்னரே தொடங்கிவிடும். பத்திக்காலத்துக்கும் பருவகாலத்துக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது. கயிலாயப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அக்தோபர் முதல் மார்ச்சு மாதம்வரை
பயணம் போவதில்லை. மழை, பனிக்கடுமைகளை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, பருவகாலம்தான் மார்கழியின் சிறப்பா? அல்ல.

"இறைவனை அண்டும் ஓர் ஆன்மா, இறையின் அருமையை துய்ப்பதற்கு
இன்னொரு ஆன்மாவையும் தூண்டி தன்னோடு இறைவனைக்காண
கூட்டணி கொள்ளும் அருமையான மாதம்தான் மார்கழி". இதுதான் அதன் சிறப்பு.
இதனாலேயே மார்கழி சிறப்புப்பெறுகிறது.

ஆமாம் - மனிதகுலம், தான் இன்பமாகக்கருதுவதை தன்னோடு சேர்ந்து
பிறரும் துயக்கவேண்டி ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டுறவே மார்கழி நோன்பு.

தமிழ்ச்சிவநெறி தமிழ்க்குமுகத்தை சாதிவேறுபாடின்றி ஏற்றத்தாழ்வின்றி
கட்டியமைக்க முற்பட்டதன் பதிவுகள்தான் மார்கழிப்பத்திமை.

வைதீக நெறியைப்போல சனாதன,வருணாசிரம கருத்துகளால் இறைவழிபாட்டில்
தீண்டாமையை நுழைக்கவில்லை. வைதீகம் ஒரேக்குமுக மக்களில் ஒருபகுதியை
கோயிலுக்குள்ளே வராதே என்றது. தமிழ்ச்சிவ நெறியோ அனைவரையும்
வா வா என்றது. வந்தவர்களை கைகூப்பி அடியாராக அணைத்துக்கொண்டது.
வைதீக நெறியின் ஊடாட்டத்தால் சிவநெறியினர் சிலபல வேளைகளில்
தவறுகளைச்செய்திருக்கிறார்களன்றி, "தமிழ்ச்சிவ நெறியில்" பிழையில்லை. 

தமிழ்ச்சிவநெறியில் "அடியார்க்கூட்டு","அடியார்க்குத்தொண்டு" என்பதற்கு உயர்ந்த மதிப்புண்டு. இதில் உணரவேண்டிய ஒன்றே ஒன்று - "அடியாரும் மக்களும்" வேறு வேறு அல்ல என்பதுதான். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் பாடியதெல்லாம் இறையடியாரை ஒன்று சேர்த்து சிறந்த குகத்தை கட்டியமைக்க வேண்டித்தான்.

மார்கழியில் நாம் பாடுகின்ற திரு எம்பாவையை மாணிக்கவாசகர் அருளியது அதற்காகத்தான்.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக்கேட்டேயும்,

வாள் தடங்கண் மாதே, வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்! கிடந்தாள்! என்னே! என்னே!!

ஈதே எந்தோழி பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்!

"....திருவெம்பாவை-1

பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் ஏது? அடியையும்
முடியையும் அறியமுடியாத நீள் நெடுஞ்சோதியாய் இவ்வுலகினரின்
அகத்துக்கும் புறத்துக்கும் ஒளியாய்த்திகழும் ஈசனை, போற்றி, நாங்களெல்லாம்
பாடி மகிழ்ந்து வருகையிலேயும், மாதே, உன் மனத்தின் உறக்கம் இன்னும்
கலையாமலிருப்பது என்ன விந்தையோ? இறைவன் என்ற உண்மையையும்
உன் செவிக்கு எட்டவிடாமல் உன்னை அழுத்தியிருக்கும் மாயை என்னவோ?

ஆங்கோர் வீதியில், எமது போற்றிகளோடும் புகழ்ச்சிகளோடும், நாங்கள்
நுழைகையிலேயே, அங்கொருத்தியின் கண் மட்டுமல்ல, உள்ளமும்
ஒருங்கே விழித்துக்கொண்ட வேகத்தை எப்படி எம்மால் விவரிக்கமுடியும்?
உள்ளம் விழித்துக்கொண்டதும், அவளின் நெஞ்சில் நிறைந்த சிவனன்பு,
விழித்த கண்களில் நீராய் ததும்பியதோடு, அன்பின் மிகையால்
தொண்டையையும் அடைத்ததோ அறியோம் - ஆனால் அவள் கண்களிலும்
நெஞ்சிலும், கம்மிய குரலிலும்  சிவமே நிறைந்திருக்க, என்ன செய்கிறோம்
என்று தெரியாமலேயே புரண்டு கீழே விழுந்தாள்.விழுந்தாளெனினும், அதுவும் அவளிடமிருந்து சிவத்தை கலைக்க முடியவில்லை.

தன்னை அண்டினோரை அன்பில் கரைத்து ஆட்கொண்டுவிடுவான்  இறைன். இது அவன் தன்மை. அப்படியிருக்க, அவனை அண்டாமல் உன்னைத்தடுக்கும் மாயை என்னவென்று யாமறியோம்?

அவன் கழல்களையும் கருணையையும் ஆழ்ந்து சிந்தித்துப்பார் என் தோழி!
அம் மாமாயையில் இருந்து விடுபட்டு நீ எழுந்தோடி வந்துவிடுவாய் என் தோழி!! நாமனைவரும் ஒன்றாகிவிடுவோம் என் தோழி!!

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும்
மற்றொரு ஆன்மாவை அன்போடு தூண்டி ஈர்த்துக்கொள்ளும் குமுக
ஒற்றுமைப்பாட்டு இஃது. இறையை முன்வைத்து குமுகத்தை கட்டியெழுப்பும்
பெருநெறியாகுமிது. குலதெய்வ வழிபாடுகள் உறவுகளை உறவுசேர்க்கிறது;
சைவப்பெருநெறி குமுக மக்கள் யாவரையும் உறவு சேர்க்கிறது.

சமயநெறிகள் மக்களை  வேறுபாடின்றி வா வா என்று அழைக்கும்போது, ஒற்றுமை பெருகி ஏற்றத்தாழ்வு குறைகிறது. வாசலிலேயே நில், உள்ளே வராதே என்றபோது குமுகம் பாழ்பட்டுப்போனது.

திருவெம்பாவையின் முதற்பாடலே மனதைக்கரைத்துவிடுகின்றது. சாமிப்பாட்டு
சாமிப்பாட்டு என்றளவிலேயே பலரும் புரிந்து கொள்கின்ற திருவாசகப்பாடல்கள்
ஆழ்ந்த அகப்பாடல்கள்.அந்த அகத்தின் அளவிற்கும் அடியுமில்லை முடியுமில்லை.

குறிப்பு: ஏல் = மீள்தல், (Reviving from a state)
                ஓர் = சிந்தி, ஆய், ஆராய்
 அன்புடன்
நாக.இளங்கோவன்
19/12/2015

Sunday, December 06, 2015

"குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?


மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி,
ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா?

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே
நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும். நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு
இது முக்கியமான காரணம். இதற்கு தீர்வு என்ன? தமிழரிடம் தீர்வு தெளிவாகவே இருந்தன.

 

மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு,
ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வாய்க்கால்களில் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும்.
இந்தக்குமிழிப்பொறியியலை புரிந்துகொள்ளவேண்டுமானால், பண்டிதர் மணி.மாறனின் "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" என்ற ஆய்வுக்கட்டுரையை படிக்கவேண்டும்.

பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் பண்டைய தமிழ்ப்பொறி "குமிழி" ஆகும். குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி
ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இந்த இடைவெளி. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும்.
கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும். ( 1:1 அல்லது M:1)

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய "நீரோடித்துளை" இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.

தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும் தூம்புக்கல்லை ( conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு. இதுவரை, குமிழி செய்வதெல்லாம் மேலைநாட்டு மதகைப்போலத்தான்.

படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே மூன்று துளைகள் இருக்கின்றன பாருங்கள், அதுதான் நமது சிறப்பு. அந்தச்சிறுதுளைகளுக்கு "சேறோடித்துளை" என்று பெயர்.

பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது என்னவாகும்? தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,
குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள் அல்லவா? ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீ சுழித்துக்கொண்டு ஓடுமல்லவா? ஏரிக்கடியில் சிறுதுளை என்றால் சுழலின் வேகத்தை கேட்கவா வேண்டும்? சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும்.

நீரோடித்துளை வழியே நீர் சுழித்தோடும் வேகத்தில், பக்கவாட்டில் உள்ள சேறோடித்துளைவழியே,
ஏரியின் அடிமட்டத்தில் இருக்கும் கலங்கியசேறு இழுபடும். இந்தச்சேறும் நீரோடு சேர்ந்து பாசனக்கால்வாய்க்குச்சென்றுவிடும்.

இந்தச்சேறு அடியிலேயே தங்கித்தங்கி வலுவடைவதாற்றான் ஏரி தூர்ந்துபோகிறது. நீரைவிட சேறு அடர்த்தியில் அதிகமென்பதால் அடியில் தங்குவது நாம் நன்கறிந்ததே. அதை அவ்வப்போது இழுத்து, தன்னியக்கமாக, இயல்பாக, நிகழ்நேரத்தில் வெளியேற்றுவதுதான் தமிழர்களின் குமிழிப்பொறியியல்.
(it is a real-time disilting system). எப்போது ஏரியிலே நீர் வற்றும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திராமல், அவ்வப்போது, தூரை வெளியேற்றிவிட்டதால் நீரும் வளமும் மிகுந்திருந்தன பண்டைய தமிழகத்தில்.

இந்த வண்டல், சேறு என்பன, வயலுக்கு உரமாகவும் பயன்பட்டன. குமிழிகள் மதகாகவும், சேறோட்டும் பொறியாகவும் பயன்பட்டன. ஆனால், மேலைநாட்டுமதகுகளில் மதிமயங்கிப்போனதால் குமிழிகளை ஒழித்துக்கட்டி புதுமை என்ற பெயரில் ஏரிகளிலும் மதகுகளை வைத்துக்கொண்டோம். விளைவு, ஏரி, குளம், கண்மாய், ஊரணி, குட்டை, ஏந்தல் போன்ற எல்லா நீர்நிலைகளும் தூரேறிப்போயின.

தூர்வாருதல் என்பதனை வருடாவருடம் செய்துகொண்டே இருக்கமுடியாது. அப்படியே செய்தாலும், ஒரு சிறு அளவிற்கு, வயலுக்கு வரப்பு வெட்டுவோமே (அல்லது சீர்படுத்தல்) அந்தளவில் பேணப்படுவதுவதாகவே இருக்கமுடியும். இன்றைக்குப்பெய்திருக்கும் மழையும், ஏரி, குளங்களை நீரால் மட்டும் நிரப்பவில்லை; சேறாலும்தான்?

இந்தச்சேற்றை எப்போது வெளியேற்றுவோம்? ஏரிகளிலும், குளங்களிலும் இருக்கும் மதகுகளை ஒழித்துவிட்டு, தமிழ்க்குமிழிகளை கட்டமைக்கவேண்டும்.

நீர்நிலைகளின், வெளிப்புறத்தை வீடுகளாலும், நிறுவனங்களாலும் கைப்பற்றினோம். நீர்நிலைகளின் அடிமட்டத்தில் இருந்த குமிழிகளை தொலைத்துக்கட்டினோம். கழிவுகளை நீர்நிலைகளில் செலுத்தினோம். நாகரிகத்தையும் இழந்தோம். தொன்ம அறிவையும் இழந்தோம். தொன்மத்தையாவது மீட்போம். இருக்கும் ஏரிகளைக்காப்போம். நமது பழம் அறிவியலை மீட்போம்.

கட்டுரை: நாக.இளங்கோவன். மூலமும், படமும்: "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" - ஆய்வுக்கட்டுரை, தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், சரசுவதிமகால் (வெளியீடும்)

Monday, November 09, 2015

தமிழோற்பலம்::மடல் 1 - பாலும் தெளிதேனும்!


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா."

பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனை புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று.

அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம்விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச்சொல்லி படையலிட்டு வணங்கி, நாம் நமது வேண்டலை அவனிடம் வைப்பதுதான் நமது வழக்கம். ஆனால், ஔவையாரோ, பாலையும் தேனையும் பாகையும் பருப்பையும் கலந்து "நான் தருவேன்" என்று கூறுகிறார். நீயெனக்கு மூன்றுதமிழைக்கொடுத்தால் உனக்கு இதனை நான் தருவேன் என்றுதான் கூறுகிறாரே தவிர, "நான் தந்தேன்" என்றோ, "இதோ தந்திருக்கிறேன்" என்றோ பாடவில்லை.

ஆனைமுகத்தனை வழிபட்டு பாடுகின்ற பாடலில் அவனுக்கு இந்த நான்கு பொருள்களை கலந்து படைக்காமல், பாடலைமட்டும் சொல்லிப்போகிறாரே ஔவையார். ஔவையாருக்கு தமிழையும் அறிவையும் ஏற்கனவே அள்ளித்தந்தவர் ஆனைமுகக்கடவுள்தானல்லவா? அப்புறம் இவருக்கு இன்னும் என்னதமிழ் வேண்டும்? அதற்கு ஏன் இவர், பால்,தேன்,பருப்பு, பாகு என்ற நான்கைத்தருவதாக சொல்கிறார்? இறைவனுக்கே ஆசை காட்டுகிறாரா? மாந்தகுலத்தின் படையல் வழிபாட்டை ஔவையும் செய்கிறாரே என்று நமக்கும் தோன்றி நம்மில் பலரும் அப்படித்தான் வழிபாடு செய்கிறோமோ?

பசுதருகின்ற பாலின் சுவையறியாதார் மண்ணில் இல்லை. தூயதேனின் சுவையையும் அறியாதார் இருக்க முடியாது. பாகு என்பது கருப்பஞ்சாற்றில் செய்யப்பட்ட வெல்லத்தை
காய்ச்சி எடுப்பது. அதன் சுவையையும் சொல்லி முடியாது. பருப்பு என்பது என்ன? சாதாரணமாக நாம் உணவில் பயன்படுத்தும் துவரம்பருப்பா? அதை காரமான உணவுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம். பாசிப்பயிறு அல்லது பச்சைப்பயிறைக்கொண்டு, கஞ்சி அல்லது பாயசமாக செய்வோம். அதை இனிப்புணவாக செய்வோம். இதுவும் தமிழ்மண்ணின்  தொன்மையான உணவு. ஆகையால் அதைத்தான் ஔவையார் பருப்பு என்கிறார். பாற்பாயசம் என்பது இன்றும் நாம் உண்ணும் இனிப்புணவு. ஆகவே, பாசிப்பயிற்றை மசித்து, பால் கலந்து, அதனுடன் தேனையும், வெல்லப்பாகினையும் சேர்த்துக்காய்ச்சிய பாற்பாயசம் எத்தனை சுவைமிகுந்ததாக இருக்கும்?

இங்கே சட்டென்று ஏனோ நமக்கு வள்ளல் பெருமான் நினைவுக்கு வந்துவிடுகிறார். வள்ளலாருக்கு  மாணிக்கவாசகர் நினைவுக்குவர, அவர் பாடுகிறார்:

"வான்கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை
 நான் பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து  பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே".

நற்கருப்பஞ்சாற்றில் இருந்துதான் பாகு எடுக்கிறார் ஔவையார். ஆக இருவருமே கருப்பஞ்சாற்றை கலந்துவிடுகின்றனர். தேன், பால், பாகு இவற்றை பருப்போடு கலக்கிறார் ஔவையார். வள்ளலாரோ, தேன், பால், கருப்பஞ்சாறு இவற்றை செழுமையான கனிகளுடன் கலக்கிறார்.

ஔவையாருக்கு பாற்பாயசம் சுவையாயிருக்கிறது. வள்ளலாருக்கோ பாற்கனி
சுவையாயிருக்கிறது. வள்ளலார் என்ன சொல்கிறார்!  "மாணிக்கவாசகப்பெருமானே, நீ எழுதிய திருவாசகத்தை நான் பாடும்பொழுது எப்படியிருக்கிறது தெரியுமா! கரும்புச்சாறு, தேன், பால் இவற்றை இனிக்கின்ற கனிகளோடு கலந்தால் எத்தனைச்சுவையாக, இனிப்பாக இருக்குமோ அப்படி இனிப்போ இனிப்பெனெ இனிக்கும் உன் திருவாசகப்பாடல்கள் என் உடலோடும் உயிரோடும் நான் பாடப்பாட கலந்து கொண்டேயிருந்தாலும், திகட்டாமல் இனிக்கின்றதையா! இத்தனைச்சுவையை எங்கிருந்து தந்தனை நீ? திகட்டாத இனிப்பாயவற்றை எப்படிப்படைத்தனை நீ? இந்தத்தமிழை எங்கிருந்து பெற்றனை நீ?" என்ற வியப்பையும் திகைப்பையும்  வெளிப்படுத்துகிறார், இறைவனிடம் இருந்து பெற்ற தமிழை, இறைவனிடம் இருந்து பெற்ற தமிழால் படித்த வள்ளலார். வள்ளலாரின் வரிகள், திருவாசக பாடல்களின் சுவை  பால்,தேன்,கரும்பு,கனி கலந்த இனிப்பை, சுவையைப்போன்றது என்று இயம்புகின்றன.

இறைவனுக்கு என்ன தேவை? அப்பரடிகள் பாடுகிறார்:

"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்,
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்.."

"குளிர்ந்த நீரிலாட்டி தூய்மை செய்வேன், ஆங்கு மணம் கமழ மலர்தூவுவேன், யாதுமுனையறிய விளக்கம் ஏற்றுவேன்; ஏற்றி, தமிழால் உன்னை போற்றிப்பாடுவேன்.
இவற்றை என்றைக்குமே நான் மறந்ததில்லையே அப்பா!"  என்று அப்பரடிகள் சொல்லும்போது, இறைவனுக்கு உண்ணத்தந்தது ஒன்றுமில்லையல்லவா?
தூய்மையும், இயற்கை மணமும், விளக்கமும், தமிழுமே அவனுக்கு தந்தாரல்லவா?
அப்பரடிகள்தான் தரவில்லை; ஆண்டவன்தான் கேட்டானா? அதற்குப்பதிற்சொல்லுவார் சுந்தரமூர்த்திகள்:

"எம்மைப்பெற்றால் ஏதும்வேண்டீர்; ஏதும் தாரீர், ஏதும் ஓதீர்...."

என்னையா இது? எம்மை படைத்தீர்; ஆட்கொண்டீர்; உம்மடியாராக அருளினீர்; எமக்கு யாவுமாய் நிற்பீர்; ஆனால், எம்மிடம் இருந்து ஒன்றும் பெற்றுக்கொள்வீர் இல்லை. உமக்குத்தேவை என்பதொன்றில்லையாதலால் யாம் உமக்குச்செய்ய எண்ணும் எவற்றுக்கும் நீர் எதனையும் தருவதுமில்லையோ?. "உனக்கு இதுதான், இப்படித்தான், இன்ன நாளில்தான்" என்று ஏதும் சொல்லவும் மாட்டீரே! என்று சுந்தரர் அன்புமீதூர, அதேவேளையில் "நம்மை ஆக்கிய நந்தலைவன் நம்மிடம் இருந்து எந்தச்சிறிய ஒன்றையும் கேட்கவேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறானே - இது இவன் தன்மை" என்று வியந்தும் வருந்தியும் சொல்வார்.

"செய்வகை அறியேன்....இது செய்க என்று அருளாய்" என்று வாதவூரர் புலம்பித்தவித்ததெல்லாம் சுந்தரரின் "ஏதும் ஓதீர்" என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கமாக அமைவதைக்காணமுடியும்.

இறைவனுக்கு, தான்படைத்த மனிதரிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏதும் இல்லை. சொல்லப்போனால், "உன்னால் எனக்குத்தர என்ன இருக்கிறது?" என்று  இறைவன் கேட்பதுபோல் தோன்றுகிறது. அப்படியே தந்தாலும், "தூய்மையையும், நறுமணத்தையும், நல்லொளியையும் தந்து தமிழால் என்னைப்பாடு - யாவருக்குமது பயனாய் அமையும்" என்றே உணர்த்துகிறான் இறைவன். தமிழாற்பாடுவது, தேனும், பாலும், கருப்பஞ்சாறும்,கனியும் கலந்த சுவையாகிறது; அல்லது தேனும், பாலும், பாகும், பருப்பும் கலந்த பாற்பாயசம் போன்ற சுவையாகிறது. தெவிட்டாத அல்லது திகட்டாத பாடல்களால் ஆனைமுகனை மேலும் பாடத்தான், இயலும் இசையும் கூத்தும் என்ற மூன்று தமிழறிவையும் செறிவையும் ஆழ ஆழ அள்ளித்தர வேண்டுகிறார் ஔவையார். அந்தப்பாடலை வரிசை மாற்றிப்படித்தால் அவரின் வேண்டல் ஒரு "ஞானவேட்கை" என்பது புரியும்.

"கோலஞ்செய்  துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
                        சங்கத்தமிழ் மூன்றும் தா;  (அவற்றைக்கொண்டு)
 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துனக்கு (அச்சுவை பொருந்திய பாடல்களாய்)
  நான் தருவேன்."

ஞானக்கடவுளான ஆனைமுகனுக்கு, ஔவைப்பிராட்டியார் நான்கு உணவுப்பொருள்களை கலந்து படையல் போடவில்லை; படையல் போட்டு பேரம் பேசவில்லை. ஆனைமுகனால் ஞானமும் தமிழும் அருளப்பெற்ற ஞானி அவர். மேலும் ஆழ்ந்த அறிவையும் செறிவையும் முத்தமிழில் தேடுகிறார்; அத்தேடலை இறைவனிடம் வைத்து வேண்டுகிறார். பருப்பொடு, பால், தேன், பாகு இவற்றை கலந்து சமைத்தால் கிட்டுகின்ற இனிப்பான சுவைதரும் "பொருள்நிறைந்த" தமிழ்ப்பாடல்களால் இறைவனைப்பாட; ஞாலம் பயனுற.

அன்புடன்
நாக.இளங்கோவன்
10/11/2015

Wednesday, November 04, 2015

நாயன்மார்களின் புடைப்புச்சிற்பங்கள் - மணற்கேணி ஆய்வுக்கட்டுரை

நாயன்மார்களின் சிற்பங்களில் உள்ள சித்திரிப்புகள்
பற்றிஅருமையானதோர் கட்டுரையை, கடந்த மணற்கேணி
இதழில் (ஆக/15) தேன்மொழி எழுதியிருக்கிறார்.
("வரலாற்றில் சைவ நாயன்மார்கள் புடைப்புச்சிற்ப சித்திரிப்புகள்:
ஒரு ஆய்வு" என்பது தலைப்பு.)

சைவம், நாயன்மார்கள், பெரியபுராணம் பற்றி பல்வேறு
கருத்துகளை சொல்லியிருந்தாலும், சித்திரிப்புகளின்
வேறுபாடுகளை  நுணுகிப்பார்த்திருக்கும் கட்டுரையாளரின் திறன்
பாராட்டுக்குரியது. பெரியபுராணத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நாயன்மார்களின் வரிசையிலேயே அமைக்கப்பட்ட
சித்திரிப்புகளை, பெரியபுராணத்தின் காலத்திற்கு
சற்றுமுன்னரும், பின்னருமாக உருவாகிய கோயில்களை
எடுத்துக்கொண்டு, அவர் ஆற்றியிருக்கும் ஆய்வு சிறப்பானது.
இதற்காகவே ஒருமுறை திருப்பனந்தாள், புரிசை, மேலக்கடம்பூர்,
தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களுக்கும் செல்லவேண்டும்
என்ற எண்ணத்தை கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பெரியபுராணத்தின் காலம் பற்றிய கேள்விக்குறியும்
சிந்திக்கவைக்கிறது.

புடைப்புச்சிற்பங்களை ஆக்கிய சிற்பிகளின் திறனை
எடுத்துக்காட்டுகிறது கட்டுரை. வாய்வழியாகவும், திருத்தொண்டர்
தொகையின் வழியாகவும் நாயன்மார்களைப்பற்றி மக்கள்
அறிந்திருந்த செய்திகளை நன்குணர்ந்து, இலக்கிய அறிவுமிக்க
சிற்பிகள் சிற்பங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பதை
கட்டுரை நுணுகிப்பார்த்து சொல்கிறது.

ஒவ்வொரு கோயிலிலுமுள்ள சிற்பங்கள் வெவ்வெறு காலத்தில்
வெவ்வெறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்
என்பதுதான் இயல்பு. அப்படிப்பார்க்கும்போது நாயன்மார்களின்
சிற்ப வடிவங்களுக்கு யாரோ  "முதன்மை வடிவம்" கொடுத்திருக்க
வேண்டும். அது யார்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இதற்கான விடையை கட்டுரையில் காணமுடியவில்லை.
எல்லா சிற்பிகளுக்கும் ஒரேமாதிரியான அடவு மனதில்
உருவாகியிருக்கும் என்று சொல்லமுடியாது. பெரும்பாலும்,
சித்திரிப்புகள் ஒன்றாக இருக்கையில், யாரோவொரு
சைவப்பெரியவரோ அல்லது மடமோ, ஒரு பெரிய சிற்பியை
வைத்து முதன்முதலில் நாயன்மார்கள் சிற்பங்களுக்கு வடிவம்
கொடுத்திருக்க வேண்டும் என்று கருத இருக்கிறது. சிற்பங்களை
ஆழ்ந்து ஆய்ந்திருக்கும் தேன்மொழி அவர்களிடம் "முதற்சிற்பி
யார்" என்பது பற்றிய கருத்துகள் இருப்பின் அறியவிழைகிறேன்.

அதேவேளையில், சிற்பங்களில் உள்ள காட்சிகளுக்கும்
பெரியபுராணம் சொல்லும் செய்திக்கும் உள்ள  முரண் பற்றியும்
இங்கே குறிப்பிடவேண்டும். கட்டுரையில், புரிசையில் உள்ள
எறிபத்த நாயனாரின் சிற்பக்காட்சியில் (படம் 10/3), இறைவன்
விடைவாகனராய் உமையோடு தெரிசனம் தருவதாக
அமைந்திருக்கிறது. ஆனால், பெரியபுராணத்தின்படி, எறிபத்த
நாயனார் புராணத்தில் "ஒளிவிசும்பில் எழுந்த ஒலியாக"
இறைவனின் காட்சி அல்லது அருள் அமைகிறது.

"கண்ணுதலருளால் வாக்குக்கிளரொளி விசும்பின்மேல்
 வந்தெழுந்தது பலருங்கேட்ப...." (47)
"இருவருமெழுந்து வானிலெழுந்தபேரொலியைப்போற்ற..." (50)
(இங்கு இருவரும் என்றது எறிபத்தரையும், புகழ்ச்சோழரையுமாம்)

பெரியபுராணத்தில் உமையொடும் விடைவாகனராய் இறுதியில்
தெரிசனந்தருவது அதிகமெனினும் மற்றும்பல வடிவங்களில்
இறைவன் எழுந்தருளுகிறான்.

ஆகவே, புரிசைச்சிற்பம், என்னுடைய சிற்றறிவுக்கு தவறான
சித்திரிப்பாகவே தென்படுகிறது. இது தவறா, சரியா என்பது
வேறுவிதயம். ஆனால், அது பெரியபுராணத்திற்கும் சிற்பங்களில்
நாயன்மார் சித்திரிப்புக்கும் உள்ள இடைவெளியை
தெளிவாகக்காட்டுகிறது.

அப்படியென்றால், பெரியபுராணத்திற்கு படிகள்/வேற்றங்கள்
(versions)உண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்றெனில், சித்திரிப்புகளில் சிற்பிகளின் புரிதல்கள், அல்லது
ஆலயமெழுப்பியவர்களின் புரிதல்களில் வேறுபாடு உண்டென
அறியமுடிகிறது.

சிவகாமியாண்டாரை பெண்மணியாக சில சித்திரிப்புகள்
காட்டுவதாக தேன்மொழி குறிப்பிடுவதொடு, மேற்சொன்ன
கருத்தையும் ஒட்டிப்பார்க்கவேண்டும். உண்மையில்,
கட்டுரைவாயிலாக, சிவகாமியாண்டாரை சித்திரித்தது பற்றி
அறிந்தது, மீண்டும் மீண்டும் சிவகாமியாண்டாரை
படிக்கத்தூண்டுகிறது.

"அரச ஆதரவு பெற்றிருந்த சைவமதத்தை மக்கள் ஆதரவு பெற்ற
மதமாக மாற்றும் முயற்சியில் இந்த நாயன்மார்கள்கதை
சித்திரிப்புகள் பங்காற்றியுள்ளன" என்ற கட்டுரையாளரின்
பார்வையும் எழுத்தும் சுருக்கமும் அழகும் நிறைந்தன. அதற்கு
அவர்  அளித்திருக்கும் சில விளக்கங்களும் ஏற்கத்தக்கவை.
குமுகத்தின் பலபிரிவுகளையும், வாழ்வியல் வேறுபாடுகளையும்
அரவனைத்தெழுந்ததாற்றான் அது  இயக்கம் எனப்பட்டது
எனக்கருதலாம். சைவத்தைப்பொறுத்தமட்டில், இந்தக்குமுக
அரவனைப்பு என்பது சேக்கிழார் காலத்திலோ, அல்லது பிற்கால
சோழ அரச ஆதரவிலோ மட்டும் நிகழ்ந்ததல்ல. சம்பந்தராலும்,
அப்பராலும் இடப்பட்டு அருமையான வித்துதான் அது.
சேக்கிழாருக்கு ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரே
விதைக்கப்பட்ட குமுகக்கட்டியல் அது என்றால் மிகையல்ல.
இதைச்சரியாக புரிந்துகொள்ள, ஞானசம்பந்தரின்
திருவானைக்கா பதிகம் (வானைக்காவில் வெண்மதி),
நமச்சிவாய பதிகம், பவனமாய்ச்சோடையாய் என்று தொடங்கும்
திருவாரூர்ப்பதிகம்போன்றவை கூர்ந்து நோக்கத்தக்கன.
அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரின் பல பாடல்களும்
குமுகக்கட்டியல் நோக்கில் பார்க்கத்தக்கன, நீள எழுதத்தக்கன.
அருமையானதொரு கட்டுரைக்கு மீண்டும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும் தேன்மொழி அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்


Thursday, October 22, 2015

Shift என்பதற்கு தமிழில்

Shift என்பதற்கு தமிழில் சொல்லென்ன என்று கேட்டிருந்தார் நண்பர் தமிழ்நாடன்.
Shift என்ற சொல், ஒரு குறிப்பிட்ட காலப்பொழுதையும், காலப்பொழுதின் மாற்றத்தையும்
தனது குணங்களாக கொண்டுள்ளது. தமிழில் பெரும்பொழுது, சிறுபொழுது என்ற
பகுப்புகள் இருப்பினும், அவை காலப்பகுப்பாக மட்டுமே காணப்படுகின்றன.
பணிக்காலத்தையும் அதன் மாற்றத்தினையும் உள்ளடக்கிய சொல்லை அவற்றிற்கு
வெளியேதான் தேடவேண்டியிருக்கிறது என்று கருதுகிறேன்.

தமிழிலே சாரி, சாரிகை என்ற சொற்கள் உண்டு. சாரி என்ற சொல்லிற்கு
மூன்று விதமான பொருள்கள் உண்டு. ஒன்று - அணி/வரிசை,
இரண்டு - பக்கம் (வலது சாரி, இடது சாரி என்ற தற்காலச்சொற்கள்.
அந்தரசாரி என்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்லுகின்றன)
மூன்று - வட்டமாக நகர்தல் (circular movement) என்று செ.ப.பேரகராதி கூறுகிறது.
காலத்தின் நகர்வு வட்டத்துள்தானே இருக்கிறது! ஒரு நிறுவனம், மூன்று Shift
ஓட்டுகிறது என்றால், அதனை 24-மணி வட்டத்துள் மூன்று சமபாகமாக (120 திகிரியில்)
பிரிக்கலாமல்லவா? ஆக, சாரி என்ற சொல் ஆழ்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று.
சாரிகை என்ற சொல்லை சேக்கிழார் பெருமான் ஆளுவார்.
"...வன்றுணை வாளேயாகச் சாரிகை மாறி வந்து
        துன்றினர் தோளுந் தாளும்..." என்று இயற்பகை நாயனார் புராணத்தில்
இயற்பகை நாயனாரின் வாளாற்றலை சிறப்பித்துச்சொல்லுவார் சேக்கிழார்.
இங்கே சாரிகை, என்பது இட-வல, வல-இட நிலைமாற்றங்களைக்குறிப்பிடுகிறது.
வலமாக நகர்ந்தவர், மின்னலைப்போல இடமாக திரும்பி வாள்வீசுதலைக்குறிப்பிடுகிறது.
சாரி என்றால் மாறுதல், கை என்பது இடத்து நிலை என்று சொல்வர் உரைகாரர்.
சாரியை என்ற கூறு புணர்ச்சியிலக்கணத்தில் வரும். ஒன்றனை
(விகுதியையோ, வேற்றுமையையோ சார்ந்துவருவதால் அது சாரியை
எனப்படுகிறது என்பர் புலவர். ஆனால், சாரியை செய்யும் வேலையைப்பார்த்தால்
அது சொல்லில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. (மரம் + ஐ = மரமை என்பது
பொருள் தராது என்பதால் அதனுடன் அத்து என்ற சாரியை சேர்த்து,
மரத்தை என்று பொருள்படவைக்கிறது. மரமை என்று இயல்பாக வரும் சொல்
பொருளுணர்த்தாது என்பதால் அத்து என்ற சாரியை சேர்ந்து சொல்லை மாற்றி
பொருளுளர்த்துகிறது, ஆகவே, சாரி என்ற சொல்லிற்கு மாற்றுந் தன்மை
உளதாகிறது.

ஆகவே, கால எல்லையையும், அதன் மாற்றத்தையும் குறிக்கின்ற ஆங்கிலச்சொல்லான
Shift என்பதனை, தமிழிலே, சாரி/ சாரிகை என்றே சொல்லலாம்.
சாரி = Shift, சாரிகை = Shift System என்று சொல்லலாம்.
ஆயினும், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஏற்படுத்தியிருக்கும் எண்ணப்பதிவுகளினால்,
சாரி என்ற சொல்லை விடுத்து சாரிகை என்பதனை மட்டும் புழக்கலாம்.
Shift, Shift System என்ற இரண்டிற்குமே சாரிகை பொருந்திவரும் சொல்லாகும்.
முதற்சாரிகை - 1st Shift
பகற்சாரிகை  - day shift
இராச்சாரிகை  - night shift
எண்மணிச்சாரிகை - 8 hour shift
பதுமணிச்சாரிகை - 10 hour shift
பன்னீர்ச்சாரிகை - 12 hour shift
நெடுஞ்சாரிகை - long shift / big shift (in driving profession or in process plants )
சிறுசாரிகை/குறுசாரிகை - small shift ( in part time jobs)
(அல்சாரிகை, எல்சாரிகை என்று சொன்னாலுந் தகும்)
புதிய அறிவியற்சொற்களுக்குத்தேவை இருக்கிறதென்றாலும்,
பல பொதுவான சொற்களை தொன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
மீட்டெடுக்க வேண்டிய சொற்கள் பல்லாயிரமாய் எண்ணிக்கையில்
கிடக்கின்றன.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, September 05, 2015

சங்க ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்

 

இன்று "சர்வ பள்ளி" ஆசிரியர் நாள் என்று ஒரே விழாக்கோலம். எனக்கு சங்கப்பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வந்தனர். கூடவே கண்ணன் பிறந்த நாள். சங்கப்பாடல்களை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களைப்பார்த்தால், கண்ணன் என்ற பெயரையோ, கண்ணன், கண்ண (கண்ணகன்) என்ற சொற்களை உள்ளடிக்கிய பெயர்களைத்தான் அதிகம் காணமுடிகிறது. என் தரவகத்தில் உள்ள ஆசிரியர்ப்பெயர்த்திரட்டு இன்னும் நிறைவடையாவிட்டாலும் சங்க, சங்க மருவிய காலப்புலவர்களின்... சுமார் 515 பெயர்கள் உள்ளன. இன்னும் சில திருத்தாமலும், கூடகுறையவோ இருக்கின்றன.  ஆயினும் இதனை tentative analysis எனலாம். இந்த எண்ணிக்கையில், 49 பெயர்கள் கண்ணனை உள் வைத்து இருக்கின்றன. (இதற்கு அடுத்தபடியாக கீர, கீரன் என்ற சொற்களை உள்ளடக்கிய பெயர்கள் 27 ஆகும்.) கிழார் என்ற பெயர் பெயரல்ல. அது அடை. அதனால் அதனை எண்ணிக்கை முதல் 5 இடத்தில் வந்தாலும் தவிர்த்துவிட்டேன். கண்ணன் என்ற பெயரைக்கொண்ட புலவர்களின் அப்பாக்களையும் கணக்கிலெடுத்தால் 60 பெயர்கள் (சுமார் 12%) வருகின்றன. கண்ணி என்ற பெயருடைய பெண்பாற்புலவர்கள் 7 பேர் வேறு இருக்கிறார்கள். இத்தனைப்பெயர்களில் கண்-ணன் ஏன் ஆட்சிசெய்கின்றான். மதுராபுரி கிருட்டிணன் எப்படி, எப்பொழுது தமிழ்நாட்டு கண்ணனானான்? என்ற கேள்வி எழவே செய்கிறது. கண்ணகியை அகண்ட கண்ணுடையவள் என்று சொல்வார்கள் (கண் + ண்+அகி?) கண்ணுக்கு, கண்ணனுக்கு சங்கத்தில் அதிக இடம் இருந்திருக்கிறது. கண்ணனுக்கும் சங்க ஆசிரியர்களுக்கும், அவர்களின் அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்.
(படத்தில் ஒட்டியிருக்கும் கண்ணன் படத்தை வரைந்தவர் கேசவ். இரவிக்குமார் முகநூலில் எடுத்தது)
அன்புடன்
நாக.இளங்கோவன்