Pages

Thursday, March 18, 2010

எழுத்துச் சீர்திருத்த மறுப்பு: தமிழ்மணத்திற்குப் பாரட்டுகள்! வாழிய!

தமிழி எழுத்துக்களின் வடிவங்களை மாற்றி அதனைச்
சீர்திருத்தம் என்று சொல்லும் நிலை தமிழ் அறிஞர்
உலகில் ஏற்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விதயம்.

காலங் கருதி அதில் தனது நிலைப்பாட்டைத்
தெளிவுறச் சொல்லியிருக்கும் தமிழ்மணத்தார்க்கு
என் மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ்மணம் நண்பர்களே,
எனக்கு "இரட்டை" மகிழ்ச்சி.

தமிழ்மணம் வாசிக்கத் தந்த சுட்டிகளில் விட்டுப்போன
ஒன்று. இதனையும் வாசியுங்கள்.

பேராசிரியர் செல்வாவின், எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html
அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, March 06, 2010

எழுத்துச் சீர்திருத்தம்: இரா.இளங்குமரனார் கடும் கண்டனம்

மலேசியாவில் 5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் நிகழ்ந்த கூட்டத்தில்முதுபெரும் தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார் எழுத்துச் சீர்திருத்தமுன்வைப்புகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும் படிக்க: http://thirutamil.blogspot.com/2010/03/blog-post_06.html

Thursday, March 04, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

4 நிறைவு:

4.1: கணிநுட்பம் கைவந்தபிறகு, தனித்தன்மை நிறைந்த தமிழ் எழுத்துகளில் இன்றல்ல, இனி என்றுமே கை வைப்பது சரியல்ல. அது மொழியை மட்டுமல்லாது, குடியின் கட்டமைப்பையே கெடுத்துவிடும்.

4.2: இத்தாலியினின்று இங்கு வந்து, குறுகிய காலத்தில் தமிழ் கற்று அறிஞராகிய வீரமாமுனிவர் உரைத்த சீர்திருத்தத்தின் தாக்கம் 6-7% அளவே ஆதலால் பெரும் பாதிப்பு இல்லாது போனது.

4.3: 1978ல் பெரியார் செய்த சீர்திருத்தம் 4% அளவிற்கே தமிழ்ச்சொற்களில் மாற்றம் விளைத்தது. அந்த மாற்றத்தினால் கல்வி கற்பதில் முன்னேற்றம், குழந்தைகட்கு நேரம் மிச்சமாகிறது என்று யாரும் கூறியதில்லை. கணியால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பெரியார் காலத்தில் இருந்திருந்தால் எழுத்துச் சீர்திருத்தம் வந்தேயிருக்காது. குழந்தைகளுக்கு, அறிவியலின் துணை கொண்டு, மேலான முறையில் தமிழ் கற்றுக் கொடுப்பதைக் குறிக்கோளாய்ப் பெரியார் கொண்டிருப்பார்.

4.4: முன்னே தமிழ் எழுத்துகளில் கைவைத்து விளைந்தனவெல்லாம் தமிழ்க்கல்விக்கும், பிள்ளைகளுக்கும், அறிவியலுக்கும் எந்த பங்களிப்பையும் செய்து விடவில்லை. தற்போது முன்வைக்கப் பட்டிருக்கும் சீர்திருத்தமும் அது போன்றதே. இந்த வடிவ மாற்றங்கள், அறிவியல் வகையாலோ, ஏரண வகையாலோ, குமுக வகையாலோ, குழந்தைக் கல்வி மேம்பாட்டு வகையாலோ, ஆசிரியர் மேம்பாட்டு வகையாலோ, மெய்யியல் வகையாலோ, கணி வகையாலோ, சிறிதும் ஆராய்ச்சி அடிப்படையற்றன. இந்தச் சீர்திருத்தத்தால், தமிழுக்கு இழப்பு வரும் வாய்ப்புகளே மிகுந்திருக்கின்றன.

4.5.: குழந்தைகளுக்கும், புலம்பெயர்ந்த தலைமுறைகளுக்கும் தமிழ்கற்பிக்க ஏதுவாக, ”கற்பித்தலில் பிழையா? கற்றுக் கொள்வதில் பிழையா?” என்று முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். கற்பித்தலில் உள்ள பிழைகளைப் புறந்தள்ளி, எழுத்து வடிவ மாற்றம் செய்யப் புகுவது, “பச்சைப் பிள்ளைகளின் மேல் பழிபோடும் செயலாகும்”. வள்ளுவனாரின் “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற மொழியை உணர்ந்து குழந்தைகளின் தமிழ்க்கல்வியைச் சரிசெய்ய வேண்டும்.

4.6: தமிழீழம், சிங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனி, பிரெஞ்சு, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்வோரின் தமிழ்ப்படிப்பிற்கு தமிழக மொழியுலகம் வேராக இருப்பது உண்மையானால், தமிழகத்தை விட பன்மடங்கு நாகரிகத்திலும், அறிவியலிலும் உயர்ந்திருக்கும் அந்த நாடுகளின் தன்மைகளை உணர்ந்து அங்கு வாழும் தமிழர் எதிர்பார்க்கின்ற தரத்தின் அடிப்படையில், மொழி கற்றலையும் பயன்பாடும் திட்டமிட்டுச் செய்யப்படவேண்டுமே தவிர, மேலோட்டமான கருத்துகளை உலகம் முழுதும் புகுத்தி உலகத் தமிழரின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து தமிழகம் பேரெடுத்துவிட முடியாது.

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.”

ஆதாரங்கள்:

1) தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
2) தமிழ் எழுத்துச் சீரமைப்பு --- பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
3) தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- முனைவர் கொடுமுடி சண்முகன் http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
4) Tholkaapiyam Reviewed --- முனைவர் கொடுமுடி சண்முகமன் http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
5) உரோமன் எழுத்து ஒழுங்கு: (எழுத்துக்களின் உயரவேறுபாடு)
http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html
http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html)
6) அரபி எழுத்து ஒழுங்கு: (எழுத்துக்களின் உயரவேறுபாடு)
http://www.guidedways.com/lessons/unit1_writing.php
7) தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - முனைவர் இராம.கிருட்டிணன்
http://valavu.blogspot.com/2006/11/5.html
http://valavu.blogspot.com/2006/11/6.html
http://valavu.blogspot.com/2006/12/7.html
8) Digital South Asia Library: Tamil Lexicon -- University of Madras http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex
9) தமிழ் இணையப் பல்கலைக்கழகம்:
http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511665.htm
10) தமிழ் எழுத்துமுறை: தமிழ் விக்கிப்பீடியா: தமிழ் எழுத்துமுறை">http://ta.wikipedia.org/wiki/தமிழ் எழுத்துமுறை
11) மொழி கற்றல்: ஆங்கில விக்கிப்பீடியா http://en.wikipedia.org/wiki/Language_acquisition
12) நன்னூல் இலக்கணம்
13) தொல்காப்பியம்
14) தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் [The Tamil Alphabet: Its Mystic Aspect] -- பொறிஞர் பா.வே.மாணிக்க நாயகர், (கழக வெளியீடு)
15) அமெரிக்கக் கல்வித் துறை -- http://www.ed.gov/
16) தமிழக அரசின் 2007 ஆம் ஆண்டின் கல்வித் திட்ட அறிவுறுத்தல்
17) தமிழக அரசு பாட நூல் நிறுவனத்தின் ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்: http://www.textbooksonline.tn.nic.in/Books/01/Tamil/Front%20Pages%20&%20Contents.pdf

பின்-இணைப்பு-1:

தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு வழங்கிய பாடத் திட்டம், கல்வி நேரத் திட்டம் ஆகியவை உள்ளடக்கிய அறிவுறுத்து நூலின் ஒரு பக்கம்:பாரதிதாசன் பல்கலையில் வழங்கிய இக்கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.
=====================================================================

இக்கட்டுரை எழுத்துச் சீர்திருத்த மறுப்பின் முதல்பாகம்.
சின்னாட்களில் இரண்டாவது பாகம் வெளிவரும்.
படித்தோர்களுக்கும் பின்னூட்டு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html

பகுதி-11: http://nayanam.blogspot.com/2010/03/1112.html

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12

3.1 எழுத்து வடிவம் மாறினால் தமிழ் எப்படியிருக்கும்?

தமிழ் மொழியின் திருவே கெட்டழியும் காட்சியைக் காணுக. ஊர், பேர், பண்பாட்டுத் தொன்மங்கள் என்ற அனைத்தும் சீரழிவதைக் காணுக! இது சீர்திருத்தமா? சீரழிப்பா?
(படத்தின் மேல் மூசியை வைத்துச் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்ம்)
(அடுத்த பகுதியொடு நிறைவுறும்)
முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-போஸ்ட்.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html

அன்புடன்

நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12

3 எழுத்துவடிவ மாற்றத்தின் பின்விளைவுகள்

1) 20 ஆம் நூற்றாண்டின் துவக்கில் தமிழரில் படிப்போர் தொகை 2 விழுக்காடு அளவிலேயே இருந்த நிலை, 21ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் ஏறத்தாழ 80 விழுக்காடாகியிருக்கிறது. தமிழ்மக்கள் தொகையும் பெருகியிருக்கிறது. ஆகவே மொழியின் பயன்பாடும் கடலெனப் பெருகி இருக்கிறது. அதில் 59 விழுக்காட்டுச் சொற்களை மாற்றினால் குழப்பம் பெருகி தமிழ் மொழியின் தரமும், வளர்ச்சியும் குன்றிப்போகும்.

2) இந்த மாற்றத்தைக் கற்பிக்கப் போகும் ஆசிரியர்களுக்குக் கற்பித்தலே மிகப் பெரிய இடையூறாகும். கொடுமுடியாரே, தனது நண்பரான கவிஞருக்கு இம்மாற்றம் பிடிபடவில்லை என்று எழுதியிருக்கிறார். பின்னை எங்ஙனம் ஆசிரியர்கள் தரமாக மாணாக்கருக்கு எடுத்துச் செல்வர்? அஃதன்றி, தற்போது 50 நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களுக்கெல்லாம் தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு இந்தளவு மாற்றத்தினை எங்ஙனம் கற்பிப்பது? தமிழ்நாட்டில் மட்டும் ஆசிரியருக்குக் கற்பித்தால் போதுமா? வளமான தமிழ்கற்பித்தலுக்கு வழிகுறைந்த வேளையிலே இம்மாற்றம் உலகளாவினால் தமிழ் குன்றிப்போகும் அன்றி பெருகாது.

3) “மாற்றம் என்பதே மாறாதது” என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், எவ்வகைப் பலனையும் தர வாய்ப்பில்லாத இந்த எழுத்துவடிவ மாற்றத்தினால் பயனில்லை. மாற்றம் என்பது வலிந்து திணிப்பதாய் இருக்கக்கூடாது. அஃது தாய்மொழி வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

4) தாய்மொழி எழுத்துகளைப் பிற நாடுகளில், பிற மாநிலங்களில் மாற்றியிருக்கிறார்கள் என்ற காரணத்தால் நாமும் செய்யலாம் என்பது பிழையான பார்வை. சீன, யப்பானிய எழுத்துச் சீரமைப்புகளை இம்மாற்றத்தோடு ஒப்பிடவே முடியாது. சீனம் பெருநாடாக 100 கோடி மக்களோடு கட்டி எழுப்பப்பட்ட முறையும் காலமும் அங்கே நிகழ்ந்த குமுக மாற்றத்தோடு ஒட்டி எழுந்த எழுத்துச் சீரமைப்பை, அப்படியே தமிழிற் செய்யவேண்டிய தேவை இல்லவேயில்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ள சீன மொழியை, 247 எழுத்துகளைக் கொண்ட தமிழோடு பொருத்திப் பார்த்துச் செயற்படுவது தவறு. அதே நேரத்தில், சீனா செய்த முதற்சீரமைப்புக்குப் பின், கொஞ்ச காலம் கழிந்து, மீண்டும் இன்னொரு சீரமைப்பை சீர்மையாளர் முன்வைத்த போது சீன அரசு தயங்கியதை நினைவு கொள்ளவேண்டும்.
முதல் சீரமைப்பைத் தீவிரமாக நடைப்படுத்தி வெற்றிகண்ட சீன அரசு, இரண்டாம் சீரமைப்பை ஏற்காது, “மொழி விதயத்தில் எச்சரிக்கை” என்றே முடிவெடுத்தது. அதாவது மாற்றம் நாடும் பொதுவுடைமைச் சீனம் கூட, ”எடுத்ததையெல்லாம் மாற்ற ஓடவில்லை.” ”தேவையானால் மாற்றம். இல்லையேல் வலிந்து திணிக்க மாட்டோம்” என்பதை சீனா உணர்ந்திருந்தது.

5) ”உலகம், அறிவியல், கணி, குழந்தை” என்ற கோணங்களில் எழுத்து மாற்றத்தை தமிழிக்குள் வலிந்து ஒருசிலர் திணிப்பது பொருத்தமேயல்ல, அது மிகையாய்ச் செயற்படுதலாகும் (Over enthusiastic).
பெரியாரைக் காட்டி வடிவமாற்றம் செய்யாமல், சீன அரசின் நிதானத்தைப் பின்பற்றி மாற்றத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமேயன்றி, சீனாவை மேற்கோள்காட்டி இதை இன்னும் மேலெடுப்பது ஆபத்தாகும்.

6) மலையாள மொழி ஒரு தமிழிய மொழிதான். நமக்கும் அவர்களுக்கும் உறவு உள்ளது தான். ஆனாலும், அங்கு உள்ள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களின் வழிப்பட்டவை. கிரந்தத்தின் அடிப்படை பெருமி எழுத்தைச் சார்ந்ததாகும். அங்கு நடந்த மாற்றம் அப்படியே தமிழுக்கு கைக்கொள்ளத் தகுந்ததன்று. அதோடு அங்கு எழுத்துமாற்றம் வந்தது நமக்குப் பெரியார் சீர்திருத்தம் ஏற்பட்டது போல், கணிநுட்பம் இல்லாத காலத்தில் ஆகும். இப்பொழுதோ, எதையும் செய்யக் கூடிய கணிநுட்பம் பழகும் காலத்தில் மலையாளச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் கொள்ளுவது சரியல்ல. தேவையான பொழுது மலையாள, வடமொழிகள் பால் பிணக்குச் சேர்ப்பதும், பின்னர் அவற்றை முன்மாதிரியாய் தமிழுலகம் எடுத்துக் கொள்வதும் தமிழருக்குப் பெருமை சேர்ப்பனவல்ல.

7) இம்மாற்றத்தினால் தாக்கமுறுவது ”மொழியியல், தமிழில் இருக்கும் அறிவியல் நூல்கள், படிப்பு, செய்தி ஏடுகள், இதழ்கள்” ஆகிய பல்வேறு துறைகள் ஆகும்., தவிர,
ஈழம், சிங்கை, மலேசியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களும் அலைபட்டுப் போவார்கள். காட்டாக, சிங்கப்பூரின் நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ்ச்சொல்/எழுத்தின் வடிவம் மாற்ற வேண்டியிருக்கும்..

8) அறிவியல், நுட்பியல் வளர்ச்சிக்கு இப்பொழுது முன்வைக்கும் எழுத்து வடிவ மாற்றம் உதவும் என்பது நகைப்புக்குரியதாகும். அறிவியலும், நுட்பியலும் தமிழில் சொல்லித்தரும் கல்வித் திட்டம் இன்று இல்லை. அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கற்பவர்களின் நூல்களைத் தவிர அறிவியற் கல்லூரிகளிலோ, ஆய்வுப் படிப்புகளிலோ, நுட்பியல், பொறியியற் படிப்புகளிலோ, அவற்றைப் படித்துப் பணிசெய்யும் தொழிலகங்கள், ஆய்வுக் கூடங்கள், வங்கிகள், நிதித்துறைகள், சொவ்வறைக்கூடங்கள், கணிச்சாலைகள் என எவற்றிலுமோ, தமிழ் இன்று இல்லை. தமிழில் நிறுவன நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பும் திட்டமும் கூட தமிழ்நாட்டில் இல்லை. இல்லாத ஒன்றை வளர்க்க எழுத்துவடிவ மாற்றம் தேவை என்பது, “ஆளே இல்லாத் தேனீர்க்கடையில் யாருக்கு தேனீர் ஆற்றுகிறோம்?” என்று ஒரு திரைப்படத்தில் வரும் நகையாடலையே நினைவூட்டுகிறது.

9) சிலர் இணைய வளர்ச்சி பெருகிவருகிறது, எனவே எழுத்துமாற்றம் தேவை என்பர். இதுவும் ஒரு வெற்றுவாதமாகும். இணையத்தை வளர்க்கும் நுட்பங்கள், முழுக்க முழுக்க பிற நாட்டினர் உருவாக்கியதாகும். தமிழ் மொழிக்கு என்று ஒருசிலர் உருவாக்கிய எழுத்துருக்கள், உள்ளீட்டு நிரல்கள், திரட்டிச் செயற்பாடுகள் தவிர, இணையத்தைச் செவ்வனே பயன்படுத்தும் சில படியாக்கச் சொவ்வறைகளைத் (application softwares) தவிர இணைய நுட்ப வளர்ச்சியில் யாரும் தமிழ்வழி செயலாற்றவில்லை. எழுத்துருவாக்கம், அதையொட்டிய சொவ்வறைகள், வெறும் 50 வெள்ளிச் செலவில் இணையத்தில் பல நூறுகள் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோர் எல்லாம் நம்மைப் போன்றோரே,
வெறுமே வலைப் பக்கங்களையும், இணைய தளங்களையும் உருவாக்கிவிட்டு, அவற்றில் கதை, கவிதை, துணுக்குகள், செய்திகள், திரைப்படக் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றிவிடுவதால் தமிழிணையம் என்பது ”ஏதோவொரு மாபெரும் தமிழறிவியல்” என்று கருதுதலும், தமிழால் உருவாக்கப் பட்டது என்று சொல்லிக் கொள்ளுதலும் பிழையான கருத்தாக்கமாகும்.. எழுத்து மாற்றம் பெற்றால் இணையத்தில் தமிழ் எங்கோ போய்விடும் என்பது நாமே நம் காதில் பூச்சுற்றுவதாகும்।

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html
பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Wednesday, March 03, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-9

2.7.6 தமிழ் கற்க நேரம் மிச்சப் படுமா? மிச்சம் என்றால் என்ன?

”உலகில் எல்லாமே இன்று விரைவாய் நடக்கின்றன” என்ற உந்தலில், ”எழுத்து வடிவங்களை மாற்றினால், குழந்தைகளின் தமிழ் கற்றலை விரைவாக்கலாம்” என்ற கோட்பாடு சீர்மை முன்வைப்புகளில் சொல்லப்படுகிறது. அதற்கு இற்றை மேலாண்மைத் துறை அறிவுரைகள் மேற்கோளாகவும் வைக்கப் படுகின்றன.

விரைதல் என்பது மாந்த இயல்பு. இது ஒன்றும் மேலாண்மைத் துறை சொல்லும் வியந்தை அல்ல!

எந்தக் காலத்தில் மெதுவே செயல்பட உலகம் சொன்னது?

விரைதல் என்பது மாந்தரின் வாழ்க்கைப் போட்டியில் இயல்பாய் நடப்பதே. ஆயினும், தமிழைக் கற்க முனையும் ஒன்றாம் வகுப்பு ஐந்து வயது இளம் பிள்ளையிடம் கொண்டு போய் எம்.பி.ஏ படிப்பில் சொல்லப் படும் வேகத்தைக் காட்டுவது எங்ஙனம் சரியாகும்?

தமிழி எழுத்துகளை மாற்றினால் கற்கும்நேரம் மிச்சமாகும் என்பது சரியான கூற்றா என்பதை நுணுகிப்பார்க்கின் அது பிழை என்பதும், உண்மை எங்குள்ளது என்பதும் தெரியும். இருமொழிகள் கற்கும் சீன, சப்பானிய நாடுகளுடனும், தாய்மொழியை மட்டுமே கற்கும் இங்கிலாந்துடனும் ஒப்பிட்டுக் காணுவமானால், தமிழ்க்கல்வி எப்படி அமையவேண்டும் என்பது விளங்கும்.


அட்டவணை-5: சிலநாடுகளில் மொழி கற்கும் அகவைகள்
அட்டவணை-5, நான்கு நாடுகளில் துவக்கப் பள்ளிப் பிள்ளைகளின் அகவையையும், மொழிகளின் எண்ணிக்கையையும் பார்வையிடத் தருகிறது। இதில் மழலையர் பள்ளிகளையும் அவற்றின் பாடங்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, தமிழகப் பிள்ளைகள் துவக்கப் பள்ளிப் படிப்பை 5 அகவை நிறைந்து, முதல்வகுப்பில் துவக்கினாலும், இங்கிலாந்து பிள்ளைகள் ஒரு மொழி கற்பதையும், தமிழகப் பிள்ளைகள் இரண்டு மொழிகள் கற்பதையும் கண்டு கொள்ள வேண்டும்.

சப்பான், சீனாவில் பிள்ளைகள் முதல் வகுப்பிற்குச் செல்வதே 6 அகவை நிறைந்த பின்னர்தான். அப்படிச் செல்லும் சீனப் பிள்ளைகள் 3 ஆம் வகுப்பில், அதாவது 8 அகவை நிறைந்த பின்னரே ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கத் தொடங்குகின்றன. தமிழ்ப் பிள்ளைகளோ 5 ஆண்டு நிறைந்தவுடனே தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளையும் இன்று கற்கின்றன.

சப்பானியப் பிள்ளைகள் 4 ஆம் வகுப்பு முடிக்கும் வரை ஆங்கிலமோ பிற மொழிகளோ கற்பிக்கப் படுவதேயில்லை. 5 ஆம் வகுப்பிலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாய் இல்லாமல் தேவையான பாடமாய்க் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

உலக நாடுகளில் அறிவியல் உள்ளிட்டப் பலதுறைகளில் உயர்ந்து நிற்கும் நாடுகளில் மொழி கற்பித்தல் இவ்வாறிருக்கையில், தமிழ்ப் பிள்ளைகளின் தலையில் இன்னும் எதை நுழைப்பது? இவ்வளவு இளமையில் 2 மொழிகள் படிப்பவர்கள் நமது பிள்ளைகள். முதல் வகுப்பு படிக்கும் 5 அகவைப் பிள்ளைகள் பயிலும் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி இன்னும் நேரத்தைக் குறைப்பதாகச் சொல்லி, அப்படிச் சேமித்த நேரத்தில் வேறெதை நுழைக்கப் போகிறோம்? அப்படி குறைக்கப் படும் நேரத்தின் அளவு என்ன? அதற்கான ஆராய்ச்சி என்ன? இந்தக் கேள்விகளுக்கு யாரும் விடைகள் சொல்லுவதில்லை. பேரா. வா.செ.குவின் கட்டுரையும் சரி, அவரின் கருத்தை ஒப்பும் பிறரும் சரி இவ்விதயத்தில் போதிய ஆராய்ச்சிகள் இன்றி கட்டுரை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அட்டவணை-6: சப்பான், தமிழகப் பள்ளிகளின் பாட நேர அளவு (ஆண்டிற்கு, மணிகளில்)

அட்டவணை-6, இரு மொழிகள் கற்றலை உடைய சப்பான் தமிழக நிலங்களில், பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை நான்காக வகைப்படுத்தி, அவற்றிற்காக அரசுகளால் பரிந்துரைக்கப் பட்டிருக்கிற கால அளவை பார்வையிடவும் ஒப்பிடவும் தருகிறது. சப்பான் நாட்டின் துவக்கப் பள்ளிக் கட்டகத்தையும், பாடத் திட்டத்தையும் (Primary School system and Syllabus) ஆய்வு செய்த அமெரிக்கக் கல்வித் துறை (U.S Department of Education, http://www.ed.gov ), மேற்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. (பார்க்க: http://www.ed.gov/pubs/ResearchToday/98-3038.html ).

தமிழகக் கல்வித்துறையின் துவக்கப் பள்ளிப் பாடத் திட்டமும், அரசின் பரிந்துரைகளும் நூலாக அச்சிடப்பட்டுப் பள்ளிகளுக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் அரசு, மடிக்குழைப் பள்ளிகளுக்கு (Matriculation schools) அளித்த திட்டத்தில் இருந்து தமிழகம் சார்ந்த தரவுகள் மேற்கண்ட அட்டவணையில் எடுத்தாளப் பட்டிருக்கின்றன. அதில் உள்ள அரசின் பரிந்துரைப் பக்கத்தினை பின்-இணைப்பு-1இல் பார்க்க. [மடிக்குழைப் பள்ளிகள் தேவையா என்ற வாதத்திற்குள் இப்பொழுது போகவேண்டாம்.]

மேற்கண்ட அட்டவணை-6 இல் இருந்து கிடைக்கின்ற தரவுகளும் செய்திகளும் பலவாகும். அவற்றிற் சில இவண் பொருத்தமாதலால் அவற்றைக் காணுவோம்.

1) தமிழக, சப்பான் கல்வியில் பிள்ளைகளின் முதல் ஐந்து நிலைகளில் பிள்ளைகள் வருடத்தில் மொத்தம் கல்விக்குச் செலவிடும் நேரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது:


அட்டவணை-7: முதல் ஐந்து வகுப்புக்களில் கல்விக்குச் செலவிடும் நேரங்கள்
சப்பானியப் பிள்ளைகளை ஒப்பிடும் போது, தமிழ்ப் பிள்ளைகள், முதல் வகுப்பில் 17.8 விழுக்காடு அதிக நேரமும், இரண்டாம் வகுப்பில் 9.9 விழுக்காடு அதிகநேரமும் கல்விக்குச் செலவிடுகின்றன. மிகவும் இளைய பிள்ளைகளுக்கு நாம் அதிகச் சுமையை ஏற்றுவது தெளிவு. அவர்களை விளையாட விடமாட்டேம் என்கிறோம். சப்பான் பிள்ளைகளுக்கு படிப்படியாய்ச் சுமையைக் கூட்டுகிற அழகு காணத்தக்கது. அதே வேளையில் ஐந்தாவது படிக்கிற 10 அகவைப் பிள்ளைக்கும், முதல்வகுப்புப் படிக்கும் 5 அகவைப் பிஞ்சிற்கும் ஒரேயளவாய் 1000 மணி நேரத்தைக் கல்வியில் நாம் ஒதுக்குவதில் ஏதேனும் ஏரணம் இருக்கிறதோ?

இவற்றையும் விட, சப்பான் பிள்ளைகள் இந்தக் காலத்தில் ஒரு மொழியை மட்டுமே கற்கிறார்கள் என்பது எண்ணிப் பார்க்க வேண்டியது. (குறைந்தது நாலாவது வரையிலாவது); ஆனால், தமிழ்ப் பிள்ளைகளின் தலையிலோ இரண்டு மொழிகள் புகுத்தப்படுகின்றன. ஆயினும், இன்னும் நேரத்தைக் குறைத்து, வேறெதையோ புகுத்துமாப் போல எழுத்து வடிவங்களை மாற்றப் புகுவது இன்னும் வேடிக்கை. இது எங்ஙனம் சரியாகும்?

2) அட்டவணை-6 இல் தாய்மொழிக்கு சப்பானியர் கொடுக்கும் நேரத்தில் சரி பாதி கூட, நாம் நம் பச்சிளம் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்..


படம்-10: தாய்மொழி கற்பிக்கும் நேரம் (மணிகள்/வருடம்)

தாய்மொழிக்கு சப்பானியர் அதிக காலம் ஒதுக்குவதையும், அதோடு முதல் இரண்டு வகுப்புகளில் பச்சிளங் குழந்தைகள் ஆழக் கற்கும் வகையில் அதிகமாகக் கொடுக்கப் படுதலையும், பின்னர் படிப்படியாக நேரத் தேவை குறைவதையும் படம்-10 விளக்குகிறது. அதே வேளையில் முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒரே அளவாக மிகக் குறைந்த நேரமான 150 மணிகளைத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாம் கொடுத்து அவர்களைப் பிழிந்து மனப்பாடம் பண்ணிக் கக்கும் பொறிகளாக மாற்றுதலையும் படம் விளக்குகிறது.

3) பிள்ளைகளுக்கு விரைந்து பாடம் சொல்லித் தருதல் நலந்தானே? - என்று கேட்டால், நமது பிள்ளைகளுக்கு இன்னும் நேரம் மிச்சப்படுத்தினால் அவர்கள் இன்னும் நிறைய படிக்கலாமே என்று கேட்டால், ”அவர்கள் கற்பதையும் நாம் காணத்தானே வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது.

சப்பானியப் பிள்ளைகள் முதல் வகுப்பில் கற்றுக் கொள்ளும் எழுத்துக்கள் மொத்தம் 80.(பார்க்க:- http://wiki.answers.com/Q/First_grade_japanese_kanji ) அவற்றைக் கற்க எடுத்துக் கொள்ளும் காலம்: 306 மணிகள். நிரவலாக ஒரு சப்பானிய எழுத்தைக் கற்க, ஒரு சப்பானிய முதலாம் வகுப்புப் பிள்ளைக்குக் கிடைக்கின்ற காலம் 3.825 மணிகளாகும். அதாவது 229.5 நுணுத்தங்கள் (minutes).

நம் தமிழ்ப்பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பில் 150 மணி நேரத்தைக் கொடுத்து 247 எழுத்துகளைப் பயிற்றுவிக்கிறோம். நிரவலாக ஒரு தமிழ் எழுத்தைக் கற்க முதலாம் வகுப்புத் தமிழ்ப் பிள்ளைக்குக் கிடைக்கின்ற காலம் 0.607 மணியாகும். அதாவது 36.44 நுணுத்தங்கள்.

உலக அரங்கில் சப்பானின் அறிவியல் திறனும், பொருளியல் திறனும், அரசியல் திறனும் ஓங்கி நிற்பதை படிக்காதவரும் அறிவர். அப்படியான நாடு தனது தாய்மொழியை மட்டுமே தனது பிள்ளைகளுக்கு நாலாவது வரையில் கற்றுக் கொடுக்கிறது; ஓர் எழுத்துக்கு 230 நுணுத்தங்களைக் கொடுத்து ஆழ்ந்த மொழிக் கல்வியைத் தந்து அதனூடாகப் பிற திறன்களை வளர்த்து விடுகிறது.

அதே வேளையில், உலக அரங்கில் சொல்லிக் கொள்ளுமாறு எந்த அறிவியல், பொருளியல், அரசியல் திறனையும் காட்டாத நாமோ, 37 நுணுத்தங்களிலேயே ஒரு தமிழ் எழுத்தைப் பிள்ளைகளுக்கு விரைந்து புகுத்துகிறோம். இப்பொழுதோ அந்த 37 நுணுத்தங்களையும் குறைப்பதற்காய், எழுத்து வடிவ மாற்றங்களைச் செய்யப் புகுவது வேடிக்கையில்லையா? மேலாண்மை என்ற பெயரில் வெளியாகும் கருத்துகளை வைத்து, பச்சைப் பிள்ளைகளை மேலாண்மை செய்வது எவ்விதம் மேலான கருத்தாகும்?

ஆங்கில மொழிகற்றலை நாலாம்வகுப்பிற்குப் பின் தொடங்கி, தாய்மொழிக்கு அதுவரை நிறைய நேரம் ஒதுக்கியதால், விளையும் சப்பானியப் பிள்ளைகளின் கணித அறிவியற் திறனை தம் பிள்ளைகளோடு ஒப்பிட்டு சப்பானியப் பிள்ளைகள் உயர்ந்திருப்பதைக் கண்டு அமெரிக்கா வியந்து நிற்கிறது.

அட்டவணை-8: TIMSS Rankings
http://www।ed।gov/pubs/ResearchToday/98-3038।html

ஆனால் நாமோ ஒரு மொழிக்கு இருமொழியாய் முதல் வகுப்பிலேயே திணித்து விட்டு, இன்னமும் மூன்றாம் மொழி சிக்குமா என்றும், தமிழி எழுத்து வடிவத்தை மாற்றி இன்னும் நேரம் குறைக்க முடியுமா என்றும் மேலோட்டமாய்ப் பேசி முடிவு காண முயல்கிறோம்.

ஆகவே, கொடிவழித் தொன்மங்களைக் கண்டுகொள்ளாது, அறிவியலின் அடிப்படை வலுவின்றி, ஆய்வும் விரிவாக இன்றி, கணி மாற்றங்களுக்கு ஏற்பத் தமிழியை மாற்றவேண்டும் என்று முனைவது எள்ளளவும் நமக்குப் பெருமை சேர்க்காது. வணக்கத்திற்குரிய முன்னாள் தமிழறிஞர்கள், தந்தை பெரியார் ஆகியோரெல்லாம் இப்பொழுது குறுகிய காலத்தில் வளர்ந்து விட்ட கணியறிவியல் கிடைக்கப் பெற்றிருந்தால் அவர்கள் பரிந்துரைத்த மாற்றத்தினை செய்ய ஒட்டாரன்றி வரவேற்றிருக்க மாட்டார்கள். வலுவான ஆதாரங்கள் இல்லாமல், மேம்போக்காக, சில பக்கங்களில் பச்சைப் பிள்ளைகளின் மேல் பரிவு காட்டுவதாய்ச் சொல்லிக் கொண்டு, வெளிப்புல மண்ணில் வாழ்வோரின் உண்மையான கற்றற் சரவல்களைக் களைய முற்படாமல், அவர்களின் திறமை மேல் பழி போடுமாப்போல எழுத்துச் சீர்திருத்தம் செய்யமுனைவது வருத்தப்பட வேண்டியதாகிறது.

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.हटमल

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.हटमल

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

அன்புடன்

நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8

2.7.1 தேற்றங்களும், குழந்தைகளின் கற்றலும்

“Tholkaapiyam Reviewed”(4) என்ற கட்டுரையில், கொடுமுடியார், “Once, I gave a script with modified letters to a friend of mine, who was a poet, writer and a printer. He found it very difficult to start reading. Immediately I asked his son who was in his eighth standard to read. He has done the job very quickly.” என்று தனது பட்டறிவினைப் பகிர்ந்து கொள்கிறார். இது ஓர் அருமையான உண்மைச் செய்தி. ஆயினும், இதில் ஆழ்ந்து பெறுகின்ற பொருட்பாடு எழுத்து வடிவ மாற்றத்திற்கு எதிராகவே இருக்கிறது.

1) எட்டாவது படிக்கின்ற பிள்ளை நிகழ் எழுத்துகளில் ஏற்கனவே பயின்ற பிள்ளை। அவன் அப்பாவும் நிகழ் எழுத்தில் பயின்றவர் தான். ஆனாலும் குழந்தைக்கு, எளிதில், புதுக்கிய எழுத்தைப் படிக்க முடிந்தது என்பது, “குழந்தை புதுவகைப் படியத்தை (pattern) சட்டென்று கற்கிறது, தந்தை பழக்கத்தின் கரணியமாய்த் தடுமாறுகிறார்” என்று காட்டுகிறதன்றி, எழுத்து வடிவ மாற்றத்தினால் நிகழ்ந்த வியந்தை அல்ல.

2) பத்தி 2।7.1ல் சொன்ன “குழந்தைக்குத் தாய்மொழியை எளிதில் கற்கும் திறன் இயற்கையிலேயே உண்டு” என்ற கொடிவழித் தேற்ற முடிவையே கொடுமுடியாரின் நண்பர் குழந்தை நிறுவுகிறது. அதற்கும் எழுத்து வடிவ மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை.

3) கொடிவழித் தேற்றத்தில் “கிடுக்குக் காலக் கருதுகோள்”(Critical Period Hypothesis) என்ற ஒன்று உண்டு. [“Linguist Eric Lenneberg stated, in a 1964 paper, that a critical period of language acquisition ends around the age of 12 years. He claimed that if no language is learned before then (see Feral children), it could never be learned in a normal and fully functional sense. This was called the "Critical period hypothesis."] அதன்படி ஒரு பிள்ளை 12 அகவைக்குள் தான், தாய்மொழியை உள்வாங்கி இயற்கையாய்க் கற்க முடியும். அக்காலம் தாழ்ந்தால், தாய் மொழியைச் செம்மையாகக் கற்க முடியாது. கொடுமுடியாரின் நண்பர்-பிள்ளை 12 அகவையை ஒட்டியவர். அவரிடம் கொடுத்தது தாய்மொழிப் பத்தியைத் தான். அதனால் அப்பிள்ளை இயல்பான விரைவில் கற்றுக் கொண்டது. மற்றபடி எழுத்து வடிவ மாற்றத்தின் வியந்தை ஏதும் அங்கு இல்லை.

குறிப்பாக வெளிநாட்டில் வளர்கின்ற பிள்ளைகளைகளின் தமிழ் கற்றலைப் பற்றி, கொடிவழித் தேற்றம், திகைநிலைத் தேற்றம் ஆகியவற்றின் வழி ஆய்ந்து, அறிவியல், நுட்பியல், வாழுஞ் சூழல் போன்ற வழிகளைச் சார்ந்த கற்பித்தலைக் கண்டு பிடிக்க வேண்டுமேயொழிய, எழுத்து வடிவ மாற்றத்தைச் செய்யப் புகுவது சரியான அணுகு முறையல்ல।

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam.blogspot.com/2010/02/blog-post.हटमल
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, March 02, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7

2.7. குழந்தைகளின் தமிழ் கற்றல் சரவலா?

அடுத்ததாய், “குழந்தைகள் கல்வி கற்க இற்றைத் தமிழி எழுத்துக்கள் சுமையாக உள்ளன” என்ற கருத்தும் பேரா. வா.செ.கு.வின் கட்டுரை, பிறர் கட்டுரைகள் வழியாக வெளியிடப்பட்டு வருகிறது.

மொழி கற்றல் (Language Acquisition) என்பதும், மொழி கற்பித்தல் (Language Teaching) என்பதும் ஒன்றிற்கொன்று இரு பக்கங்களாகும். ஆங்கில மொழி கற்பதில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கு இருக்கும் சரவலையும், நம்மைப் போல்தான் ஆங்கிலேயர்களும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி கற்றல் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் எத்தனை வகையான தேற்றங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்து அலசுகிறார்கள் என்று அறிவது வியப்பூட்டுவதாய் இருக்கின்றது. பார்க்க: http://en.wikipedia.org/wiki/Language_acquisition

கொடிவழித் தேற்றம் (Nativist Theory), புள்ளிவிவரத் தேற்றம்(Empirical/Statistical Theory), திகைநிலைத் தேற்றம் (Emergentist Theory) போன்ற தேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவைகளுக்குள் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து அவை ஏற்படுத்துகின்றக் கட்டமைப்புக்கு உட்பட்டுத் தேவைகளைச் செய்வதில் ஆங்கிலேய மொழி/யறிஞர் உலகம் முன்னிற்கிறது।

2.7.1 கொடிவழித் தேற்றம் (Nativist Theory)

“கருவில் முளைத்து வளரும் போதே, தன் தாய்மொழி கற்கும் திறனை ஒரு குழந்தை இயல்பாய்ப் பெற்றிருக்கிறது. அதுவே குழந்தை வளரும் பொழுது, விரைந்து தாய்மொழி கற்க ஏதுவாகிறது.” என்பதே கொடிவழித் தேற்றமாகும். “Nativist theories hold that children are born with an innate propensity for language acquisition, and that this ability makes the task of learning a first language easier than it would otherwise be.”

கொடிவழித் தேற்றத்திற்கு ஆங்கில அறிஞர் நோம் சோம்சுகியின் பங்களிப்பும் அவரின் கீழ்க்கண்ட கருத்தும் முகன்மையானவை. Noam Chomsky originally theorized that children were born with a hard-wired language acquisition device (LAD) in their brains.[2] He later expanded this idea into that of Universal Grammar; a set of innate principles and adjustable parameters that are common to all human languages. According to Chomsky, the presence of Universal Grammar in the brains of children allow them to deduce the structure of their native languages from "mere exposure".

http://en।wikipedia.org/wiki/Language_acquisition#Nativist_theories

2.7.2 புள்ளிவிவரத் தேற்றம்(Empirical/Statistical Theory)

தாய்மொழி கற்றல் பற்றிய இன்னொரு தேற்றம் புள்ளிவிவரத் தேற்றமாகும். இது பட்டறிவு கொண்டு அறிவியல் முறையில் புள்ளிவிவரங்களை அடிப்படையாய் வைத்து, கற்றற் சரவலுக்கு முடிவு காணும் வகையாகும். நிறைய ஆங்கிலநாட்டு அறிஞர்கள் ஆங்கில மொழி கற்றலுக்காகப் பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கொடிவழித் தேற்றத்தினைத் தற்பெருமை என்று கூறி,, அதற்குச் சான்றில்லை என்று மறுப்பவர்களும் கூட, இந்தத் தேற்றத்தை ஏற்கிறார்கள். பல ஆங்கில அறிஞர்களின் ஆய்வுகள் இத்தேற்றின் அடிப்படையில் இருக்கின்றன. “Some language acquisition researchers, such as Elissa Newport, Richard Aslin, and Jenny Saffran, believe that language acquisition is based primarily on general learning mechanisms, namely statistical learning. The development of connectionist models that are able to successfully learn words and syntactical conventions supports the predictions of statistical learning theories of language acquisition, as do empirical studies of children's learning of words and syntax.”

“Empiricist theories of language acquisition include statistical learning theories of language acquisition, Relational Frame Theory, functionalist linguistics, usage-based language acquisition, social interactionism and others.”

http://en।wikipedia.org/wiki/Language_acquisition#Empiricist_theories

2.7.3 திகைநிலைத் தேற்றம்(Emergentist Theory)

வெளிப்புறச் சூழலில் வாழ்வோருக்கு ஏற்படும் மொழி, உறவு, மதிப்பு, தேவை போன்ற அழுத்தங்களால் ஆன திகைப்பு நிலையில், தாய்மொழி கற்றல் எப்படி இருக்க வேண்டும் என்று பலவழிகளில் ஆய்வது இத்தேற்றமாகும்। வெளிநாட்டில் வளரும் தலைமுறையினர் பற்றிய அக்கறை கொண்ட நமக்கு இந்தத் தேற்றங்கள் பயன் விளைக்கக்கூடும். Emergentist theories, such as MacWhinney's Competition Model, posit that language acquisition is a cognitive process that emerges from the interaction of biological pressures and the environment. According to these theories, neither nature nor nurture alone is sufficient to trigger language learning; both of these influences must work together in order to allow children to acquire a language.
http://en।wikipedia.org/wiki/Language_acquisition#Emergentist_theories

२.7.4 நன்னூலார் இலக்கணமும் தமிழ் கற்பித்தலும்

மொழி கற்றல் எவ்வளவு முகன்மையானதோ, அவ்வளவு முகன்மையானது அதனைக் கற்பிப்பதும் ஆகும்। ஆங்கிலேயரின் அறிவியல் அணுகுமுறையைக் கண்ணுற்ற நாம், மொழி கற்பித்தல் பற்றி நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் கூறிய ”ஆசிரியர், ஆசிரியர் அல்லாதார்” இலக்கணங்களைக் கண்ணுறுவதும் பயனுள்ளதாகும். நல்லாசிரியருக்கு "உலகியல் அறிவொடு உயர்குணம் இணைய" என்றும் அல்லாருக்கு, "மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்" என்றசொற்களையும் நன்னூலார் சொல்லுவார்।

தமிழ் நாட்டிற் பிறந்த தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுள் பலரும் தமிழை நன்கு கற்காத நிலையில், தமிழைக் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறார்கள் என்பது உண்மை. ”தமிழ் சோறு போடுமா?” என்று கேள்வி எழும்பிக் கொண்டிருக்கும் காலத்தில், வேறுவழியின்றி தமிழ் கற்றோரே தமிழாசிரியராய் மாறிப்போன அவலம் கூடிவருங் காலத்தில், அதைக் கவனிக்காமல், தமிழ் எழுத்தைத் திருத்தினால் தமிழைக் கற்போர் கூடுவர் என்பது “ஊசியை விழுந்த இடத்தில் தேடாமல் ஒளியிருக்கும் இடத்தில் ஊசியைத் தேடுவது போல்” இருக்கிறது. தவிர, தமிழ் கற்பிக்கும் பள்ளிகள், தமிழால் கற்பிக்கும் பள்ளிகள் குறைந்து வருகின்றன என்பதும் உண்மை. தமிழ் பேசினால் தண்டம் உண்டு என்ற அச்சுறுத்தும் பள்ளிகளும் இருப்பதாய் அறிகிறோம். ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் 13,14 ஆங்கில வழி மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) இருந்த தமிழகத்தில் இன்று 4000 மடிக்குழைப் பள்ளிகள் புற்றீசலாய் எழுந்திருக்கின்றன. தமிழைப் பேசினால் சீந்துவார் இல்லை என்ற நிலையைக் கொண்டு வந்துவிட்டு, தமிழெழுத்துச் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கிறோம். கடைசியில் ”ஆடத் தெரியாமல் மேடை கோணல்” என்ற நிலைக்கு வரும் பெருஞ்சோகமான நிலை.

நன்னூலார் நவின்றதற்போல, “மொழிக்குணம் இல்லா” ஆசிரியரும், பள்ளிகளும் மாறாமல், எழுத்துகளில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான்; தமிழ் கற்றல் வளரப் போவதில்லை என்பதே திண்ணம். அதைப் போன்றே தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், “உலகியல் அறிவொடு” என்று நன்னூலார் அறைவதற்கேற்ப, உலகில் வளரும் நுட்பியல், கலைகள் பற்றிய அறிவுடையாராய் ஆகுதலாலும் ஆக்கப்படுதலாலும் மட்டுமே தமிழ்கற்றலை வளர்க்க முடியும். அதை விடுத்து, தமிழ் எழுத்துகளை மாற்றுவதால் பலனிருக்காது.

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६: http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6

2.6. எழுத்து வடிவங்களின் மேலேறும் எழுது பொருட் தாக்கம்:

இதுகாறும், எழுத்துச் சீர்திருத்தம் தரக்கூடிய சிக்கலின் பேரளவைப் பார்த்தோம். இனிப் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து வடிவங்களின் மேல் எழுதுபொருட்கள் கொண்ட தாக்கத்தையும், மாற்றங்களையும் பார்ப்போம். எழுத்து வடிவ மாற்றத்திற்கு முன்வைக்கப்படும் கரணியங்களுள் இந்தத் தாக்கமும் முகன்மையாகச் சொல்லப் படுகிறது.

தொடக்கத்தில் கல், மரம் போன்றவற்றில் உளியால் கீறிய பட எழுத்துக்களே இருந்து, பின் அவை எளிமையாகிக் குறைந்த கோடுகளில் தமிழி எழுத்துக்கள் நிலைபெற்றன. இவ்வெழுத்துக்களைத் ”திராவிட லிபி” என்று பாகதமொழி நூலான ”லலிதவிசுதார” என்ற நூல் வகைப்படுத்தும். மரம், கல்லை அடுத்து, பனையோலையில் எழுத்தாணியால் கீறினார்கள். இம்முறையில், எழுத்துக்கள் வட்டமாய் மாறின. இவற்றோடு ஓலைகளில் புள்ளி தவிர்க்கப்பட்டது. தமிழி வடிவங்கள் பின் செந்தரப் பட்டன. அதே பொழுது, ஒருசில எழுத்துக்களில் வடிவக் குழப்பம் இருந்தது.

2.6.1. அடிப்படை மெய்யெழுத்து, அகர, ஆகார உயிர்மெய்க் குழப்பம்:

அடிப்படை மெய்யெழுத்து, அகர உயிர்மெய், ஆகார உயிர்மெய் இவற்றினிடையே வடிவக் குழப்பம் நெடுநாட்கள் நிலவியது. [தமிழில் அடிப்படை எழுத்துக்கள் உயிரும், மெய்யும் ஆகும். உயிரும், அகரமேறிய உயிர்மெய்யும் அல்ல. அகரமேறிய உயிர்மெய்களை அடிப்படை என்னும் தவறான புரிதல் இன்று பல எழுத்தறிஞர்களிடமும் (scriptologists) மொழிக்கணிமையில் வேலைசெய்யும் கணிஞர்களிடமும் (computer experts working on language computing), குறிப்பாக ஒருங்குறியேற்றத்தில் வேலைசெய்பவர்களிடத்திலும் (persons who work on Unicode) பரவிக் கிடக்கிறது; இவர்களில் பலர் கல்வெட்டு எழுத்துக்கள் பற்றி அறியாததாலும், தமிழெழுத்து வளர்ச்சி பற்றிய வரலாற்று அறிவு கொள்ளாததாலும், ”அபுகிடா (abugida) தேற்றத்தை முன்மொழிந்து இந்திய எழுத்து மரபுகளைக் கணிப்படுத்துவதில், குறியேற்றத்தில், குழறுபடி செய்தபடி இருக்கிறார்கள் என்று “தொல்காப்பியமும் குறியேற்றங்களும்”(7) என்ற தன் ஆய்வுக் கட்டுரைத் தொடரில் தெளிவுற நிறுவுவார் முனைவர் இராம.கிருட்டிணன்.

தமிழாக்கங்களை தமிழியால் ஆவணப்படுத்திய வரை, மேலே சொன்ன வடிவக் குழப்பம் பெரிதாய் யாருக்கும் தோன்றவில்லை. ஏனெனில், தமிழ்ச் சொல்லின் எழுத்து வரையறைகள் பலருக்கும் தெரிந்திருந்தன. அதாவது சொல்லின் முதலில் இந்த எழுத்துக்கள்தாம் வரலாம், சொல்லின் கடையில் இவைதாம் வரலாம். சொற்களின் இடையில் இன்னின்ன எழுத்துக்கள் இந்த வரிசையில்தாம் வரலாம் என்ற ஒழுங்குகள் இருந்ததால், மொழியறிந்தோர், இந்தக் குழப்பத்தை உணராமலே இருந்தார்கள்.

காட்டாக, இரண்டு தகரம் தமிழில் அடுத்தடுத்து வந்தால், முதல் தகரம் மெய்யெழுத்தாகவும், இரண்டாவது அகர உயிர்மெய்யாகவும் கொள்ளப் பெறும். இதே போல நகரமும், தகரமும் அடுத்தடுத்து வந்தால், நகரம் மெய்யெழுத்தாகவும், தகரம் அகர உயிர்மெய்யாகவும் படிக்கப் பெற்றது. தமிழிற் சில எழுத்துக்கூட்டுகள் அடுத்தடுத்து வரவே முடியாது. காட்டாக, டகரமும், றகரமும் சேர்ந்து வந்தால் இரண்டுமே அகரமேறிய உயிர்மெய்யாய் இருக்கலாமேயொழிய முதலெழுத்து மெய்யாகவும், இரண்டாவது அகரமேறிய உயிர்மெய்யாகவும் இருக்கமுடியாது. அதாவது தமிழில் “ட்ற” என்ற ஒலிப்பு கிடையவே கிடையாது. இதுபோலப் பல்வேறு வகையான மெய்ம்மயக்கங்கள் பற்றிய ஒழுங்கு, இருந்ததால், குழப்பமின்றித் தமிழியை வைத்துத் தமிழை எழுதுவதும், படிப்பதும் முடிந்தது.

இதே போலப் பல இடங்களில் அகர உயிர்மெய்யும், ஆகார உயிர்மெய்யும் மாறி மாறிப் புழங்கினாலும் ஒரே பொருளைக் கொடுத்தன. பின்னால் பொருள் மாறிப் போகும் இடங்களில் அகரமேறிய உயிர்மெய்யை முதலில் எழுதிப் பக்கத்தில் இன்னொரு அகர உயிரை எழுதி ஆகார உயிர்மெய்யை உணர்வித்தார்கள். தமிழிக் கல்வெட்டுக்களில் ஆகப் பழங் கல்வெட்டுக்கள் இப்படி அகரத்தைப் பக்கத்தில் எழுதியே உயிர்மெய் ஆகாரத்தை உணர்த்தின.

என்றைக்குத் தமிழி எழுத்துமுறை வடபுல மொழிகளை எழுதப் போனதோ, அன்று தான் மேலே சொன்ன குழப்பம் பூதகரமாய் உருவெடுத்தது. ஏனெனில் வடபுல மொழிகளில் எந்த உயிர்மெய்யும், இன்னொன்றுக்கு அடுத்து வரலாம். எனவே முதலில் வருவது மெய்யெழுத்தா, அகரம் ஏறிய உயிர்மெய்யா, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யா என்பதைத் தெளிவாய்க் குறியீட்டில் தெரிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னால் தமிழில் வடசொற்கள் விரவிய போது, தென்புலத்திலும் இக்குழப்பம் தென்பட்டது. [வடபுலச் சமயங்களான வேதநெறி, செயினநெறி, புத்தநெறி, மற்றும் (தென்புல நெறியானாலும் வடக்கில் பெரிதும் பரவிய) ஆசீவக நெறி ஆகியவற்றில் பயன்பாடான வடசொற்களைத் தமிழி வழி குறிப்பது கி.மு.500 களில் இருந்தே பெருகிவிட்டது.]

இகர, ஈகார, உகர, ஊகாரச் சீர்திருத்தத்தை முன்வைக்கும் பலரும், அகர, ஆகாரம், அடிப்படை மெய் வடிவங்களில் ஏற்பட்ட பழங்குழப்பங்களையும், அவற்றின் தீர்வுகளையும் உணர்வதில்லை. அதை அறிவது, மென்மேலும் சீர்திருத்தம் தேவையா, இல்லையா என்று முடிவு செய்ய வழிவகுக்கும்.

2.6.2. மூன்றுவித எழுது முறைகளும், அவற்றின் மூன்றுவிதத் தீர்வுகளும்:
படம். 9. முவ்வேறு கல்வெட்டு எழுது முறைகளும், மூன்றுவகைத் தீர்வுகளும்
மேலுள்ள படத்தில் முதல் மூன்று முறைகளில் முன்சொன்ன குழப்பம் எப்படி இருந்தது என்பதையும், கீழுள்ள மூன்றில், தீர்வுகள் எப்படிக் குழப்பத்தைத் தீர்த்தன என்பதையும் தெளிவாய் உணரலாம்.

அடிப்படை மெய்க்கு மேலே ஒட்டினாற்போலச் சிறுகோடு ஒன்றைப் போட்டு அகரமேறிய உயிர்மெய்யும், சிறுகோடு இன்றி அடிப்படை மெய்யும், அகரமேறிய உயிர்மெய்க்கு அருகில் அகர உயிரை எழுதி ஆகார ஒலிப்பும் கொள்ளப் பட்டன. [பார்க்க: மேலே முதல் முறை.] பின்னால், ஏதோ காரணம் பற்றி அகர உயிரை அருகில் எழுதுவது குறைந்து போய், சிறுகோடு போட்ட அகர உயிர்மெய்யே, ஆகார உயிர்மெய்யையும் குறித்திருக்கிறது. [பார்க்க: மேலே இரண்டாம் முறை.] மூன்றாம் முறையில் சிறுகோடு போட்ட வடிவம் ஆகாரத்தை மட்டுமே குறிக்க, அடிப்படை வடிவம் மெய்யையும், அகரமேறிய உயிர்மெய்யையும் இடம், பொருள், ஏவல் கருதிப் பலுக்குவதாய் (இது அன்றேல் அது என்பதுபோல்) அமைந்தது. [பார்க்க: மேலே மூன்றாம் முறை.]

முதற் தீர்வில், அகர உயிர்மெய்யின் சிறுகோட்டை சற்றே திசைதிருப்பிக் கோணமாக்கி, ஆகார உயிர்மெய்க்குக் குறியீடு காட்டி, அடிப்படை வடிவம் மெய்யெழுத்தையும், சிறுகோட்டோடு உள்ள வடிவம் அகர உயிர்மெய்யையும், குறித்திருக்கின்றன. இந்தக் காட்டு ஆந்திரா பட்டிப்புரோலுவில் இருந்த கல்வெட்டாகும். இம்முறையில் முந்தையக் குழப்பம் தவிர்க்கப்பட்டு புள்ளியில்லாத் தீர்வு கிடைத்திருக்கிறது. [பார்க்க. மேலே 4 ஆம் முறை]

இன்னொரு தீர்வாக, வடபுலத்துப் பெருமி (brahmi) எழுத்து முறை புறப்பட்டிருக்கிறது. [பெருமி முந்தியது, தமிழி பிந்தியது என்ற தவறான புரிதல் நெடுநாட்களாய் வரலாற்றாய்வாளரைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்பொழுதுதான் பலரும், தமிழி முந்தியது, பெருமி பிந்தியது என்ற புரிதலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.] இதில் சிறுகோடு போட்ட வடிவம் ஆகார ஒலிப்பைக் குறிக்கும். அடிப்படை உருவங்களை ஒன்றின் கீழ் மற்றொன்றாய் எழுதி மேலுள்ளதை மெய்யாய் ஒலித்துக் கீழுள்ளதை அகரமேறிய உயிர்மெய்யாக ஒலிக்கும் கூட்டெழுத்து முறை வடபுலம் எங்கும் விரிந்து பரவியது. [பார்க்க: 5 ஆம் முறை]

இறுதி 6 ஆம் முறை தமிழில் ஏற்கப்பட்டதாகும் அடிப்படை உருவத்திற்குப் புள்ளியிட்டு மெய்யாகவும், அடிப்படை உருவத்தோடு சிறுகோடு இட்டு ஆகாரமாகவும், அடிப்படை உருவம் அகரமாயும் ஒலிக்கப்பட்டன. ஆனாலும் மொழியிலக்கணங்களில் எழுத்தின் அடிப்படை மெய்யெழுத்தென்றே சொல்லி வந்தார்கள். அகரமேறிய மெய் எனச் சொல்லவில்லை. இந்த முறை தொல்காப்பியர் காலத்தில் பரிந்துரைக்கப்பட்டு, அவரால் ஆவணப்படுத்தப்பட்ட முறையோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. [பார்க்க: 6 ஆம் முறை] ஆக முதன்முதலில் எழுந்த தமிழியில் புள்ளியிட்ட மெய்கள் எழவேயில்லை, புள்ளி ஒரு தீர்வாகப் புழக்கத்திற்கு வந்தது தொல்காப்பியர் காலத்தில் தான். [“தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - 6”(7)]


(நன்றி: தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - முனைவர் இராம.கி
http://valavu.blogspot.com/2006/11/5.html
http://valavu.blogspot.com/2006/11/6.html


http://valavu.blogspot.com/2006/12/7.html


இக்கருவூலம் ஊன்றிப் படிக்க வேண்டியது )2.6.3. மற்ற உயிர்மெய்களும், சிறப்பாக உகர, ஊகாரக் குறியீடுகளும்:


இனி மற்ற உயிர்மெய்களுக்கு வந்தால், ஒன்றோ, இரண்டோ சிறுகோடுகளை அடிப்படை மெய்யெழுத்தின் மேலும், கீழும், இடத்திலும், வலத்திலும், இட்டுப் பல்வேறு உயிர்ப்புகளை நம் முன்னோர் காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் கால், கொக்கி, சுழிக்கொக்கி, உகர, ஊகாரக் குறியீடுகள், கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, சிறகு போன்றவை பழந் தமிழி எழுத்தில் கிடையவே கிடையாது. இவையெல்லாம் 2000 ஆண்டுப் புழக்கத்தில் சிறுகோடுகளின் வெவ்வேறு திரிவுகளால் ஏற்பட்டவையாகும்.

ஓலையில் இருந்து தாளிற்கு மாறி, பின் அச்சிற்கு மாறி, இப்பொழுது கணிக்கு மாறிய நிலையில், மாற்றத்துக்குத் தக்கபடி எழுத்து வடிவத்தை மாற்ற வேண்டும் என்று சிலர் உரைக்கின்றனர். இன்றைக்கு 7 விதமாய்த் தெரியும் உகர, ஊகாரக் குறியீடுகள் அந்தக் காலத்தில் அடிப்படை எழுத்தில் கீழே ஒற்றைச் சிறுகோடு, அல்லது இரட்டைச் சிறுகோடாகவே இருந்திருக்கின்றன. காலவோட்டத்தில் 2 குறியீடுகள் 7 குறியீடுகளாய்ப் பெருகியிருக்கின்றன. [சீர்மை வேண்டுவோர் இன்று சொல்லுவது ”இரண்டாயிரம் ஆண்டு வளர்ச்சியை இனி மறந்து விடுவோம்”; மறந்துவிட்டு 7 இல் இருந்து மீண்டும் 2 _ இற்குப் போவாதாகப் பரிந்துரைப்பது தான்.]

ஆனால், விதயம் அவ்வளவு எளிதில்லை. 7 குறியீடுகள் என்பது ஒரு கணியைப் பொருத்தவரை கணித்திரைத் தோற்றம். இரண்டு குறியீடுகள் என்பதும் கணித்திரைத் தோற்றம் தான். கணியிற் செயல் நடப்பதற்கு மூன்று படிமுறைகள் உண்டு. ஒன்று உள்ளீடு (inputting), இரண்டாவது செயற்பாடும் (processing), சேமித்தலும் (storing), மூன்றாவது வெளிப்படுத்தல் (outputting); வெளியீடு என்பது கணித்திரையிலோ (monitor), அச்சியிலோ (printer), நெகிழ்தகட்டிலோ (floppy disc) அல்லது வேறு ஏதேனும் ஒன்றிலோ நடக்கவேண்டும்.)

2.6.4. கணிச்செயல்பாடும், வெளியீட்டுக் கணிநிரல்களும்:

உள்ளிடும் போது ஒவ்வோர் உயிர்மெய்யும் இரட்டைப் பொத்தான் அழுத்தம் பெற்று உள்ளே செல்கிறது. முதலில் மெய்யும், அடுத்து உயிரும் சேர்ந்து உள்ளிடப்படுகின்றன. இரண்டிரண்டு பொத்தான் அழுத்தங்களாய், உயிர்மெய்யைக் கணி அடையாளம் கண்டுகொள்கிறது. அதையே தன் நினைவகங்களில் சேமித்துக் கொள்கிறது. பின்னால் செயலிகளையும் இயக்குகிறது. முடிவில் தன் கணிப்பை நாம் சொல்லும் முறையில் வெளிப்படுத்துகிறது.

இந்த வெளிப்படுத்தல் வினையில் உகர, ஊகாரங்களுக்கு 2 குறியீடுகள் பயன்படுத்தினால் என்ன? 7 குறியீடுகள் பயன்படுத்தினால் என்ன? நாம் சொல்லுவதைக் கணி செய்யப் போகிறது. மைக்ரோசாவ்ட் “விண்டோசு” இயக்கத்தில் எழுத்துக்களை வெளிப்படுத்துவதற்கென்றே ”Uniscribe” என்ற Rendering engine (ஒரு கணிநிரல்) இருக்கிறது. மற்ற நிறுவனங்களின் இயக்கச் சட்டகங்களிலும் (operating systems) இதைப் போன்ற ஒரு கணிநிரல் இருக்கிறது. இப்படியான நிரல்கள் மிக சக்தி வாய்ந்தன. கடினமான எழுத்துக்களை திரையிலும் அச்சியிலும் தெரிவிப்பதற்குப் பல உத்திகளை அவை வைத்துள்ளன. Pre-base substitution, Below-base Substituion, Above-base substitution, Post-base subsrtitution உள்ளிட்ட பல உத்திகளைத் தன்னுள் கொண்டுள்ளன. அதாவது, ஒரு அடிப்படை மெய் அல்லது அகரமெய்யின் வடிவை அப்படியே போட்டு, பிற உயிர்மெய்களைக் குறிக்க சில குறியீடுகளை முன்னொட்டி அல்லது பின்னொட்டி அல்லது மேலொட்டி அல்லது கீழொட்டித் தருவதை கணிநிரல்கள் செவ்வனே செய்கின்றன. அந்த நிரல்களுக்கு “கு” எழுத்தைக் காட்ட ககரத்திற்குக் கீழ் சுற்றுக் குறியீடு போடு (Below-base Substitutiuon feature of Uniscribe) என்றால் போட்டுக் காண்பிக்கும். அதே போல சீர்மையை முன்வைப்பவர்கள் சொல்லும் குறியீட்டை ககரத்திற்குப் பின்னால் ஒட்டி விடு என்றால் அதனைச் செய்து நமக்குக் காட்டும் (Post-base Substitution feature of Uniscribe). இப்படி தேவையான எல்லா வல்லமைகளையும் யுனிகிரைப் போன்ற நிரல்கள் கொண்டிருக்கையில் சீர்மை முன் வைப்பாளர்கள் ஏதோ “கணிக்கு ஏற்றார் போல மாற்ற வேண்டும்” என்று சொல்வதும் “கணிக்கு நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும்” என்று பரப்புரை செய்வதும் பிழையான ஒன்றாகும். சீர்மை முன் வைப்புகளில் கண்டபடி தமிழி எழுத்துக்களை மாற்றினால் கணிக்கும் பயனில்லை அதன் பயனருக்கும் பயனில்லை. பிறகு எதற்கு இந்தச் சீர்மை?

யுனிகிரைப் போன்ற நிரல்களில், இல்லாத குறைகளை இருப்பதாகச் சொல்லி, அவற்றைச் சரிசெய்ய சீர்மை அவசியம் என்று பரப்புரை செய்து, 9 கோடி மக்களின் எழுத்தைச் சீர்திருத்தப் போகிறோம் என்று முன்னெடுப்பது முற்றிலும் வேடிக்கையாய் இருக்கிறது. ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்று அறிஞர்கள் சற்று ஓர்ந்து பார்க்க வேண்டும்.

அச்சுக் கோர்த்த காலத்தில் பழைய ”ணை, லை” வார்ப்புக் கட்டைகள் தேய்ந்து போகின்றன, முனை உடைந்து போகின்றன, என்று சொல்லி, இருக்கும் வார்ப்புக் கட்டைகளை வைத்தே ஒரு சில எழுத்துக்களைக் கோர்க்கலாமே என்று பெரியார் சீர்திருத்தம் செய்ததில் ஒரு சிறு ஏரணம் இருந்தது.

இன்றோ, எந்த வடிவங்களையும் பிணைத்துக் காட்டும் வல்லமை படைத்த Uniscribe என்னும் கணிநிரல் இருக்கிறபோது, ஏன் குழப்பம்? 7 உகர, ஊகாரக் குறியீடுகளை 2 குறியீடுகளாய்த் தமிழில் குறைத்துத் தாருங்கள் என்று மைக்ரோசவ்ட் நிறுவனம் கேட்டதா, என்ன? அல்லது மற்ற நிறுவனங்கள் தாம் கேட்டனவா? தமிழியில் என்ன எழுத்துக்கள் இருக்கின்றனவோ அதை வைத்துச் செயலாக்கம் செய்ய கணிநிறுவனங்கள் அணியமாகத் தானே இருக்கின்றன? அப்புறம் என்ன தேவையில்லாத சீர்திருத்தம்? வடிவ மாற்றம்? கணியில் தற்போதும் புழக்கத்தில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகாரக் குறியீடுகளை மாற்றுவதால், கணியைச் செயற்படவைக்கும் நிரல்களுக்கும், கணியைப் பயன்படுத்துபவருக்கும் என்ன பயன் விளையும்? இதில் எங்கே ஏரணம் இருக்கிறது?

அச்சுக் கோர்ப்புக் காலத்தில் சரவலாக இருந்த லை, னை யின் பழைய எழுத்துக்கள், அச்சு இயந்திரங்கள் கணியோடு இணைக்கப் பட்டு நுட்பியல் முதிர்ந்த இந்தக் காலத்தில் எந்த வகையிலும் சரவலாக இருப்பதில்லை என்பதும், 1978ல் கணி இருந்திருந்தால் பெரியார் சீர்திருத்தத்தைக் கூட நடைமுறைப் படுத்தியிருக்கத் தேவையில்லை என்ற கருத்தும் பலராலும் இன்று உணரப்படுகிறது.

ஆகவே, கணியைக் காரணம் காட்டி, கணியோடு இணைந்த வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு தமிழி எழுத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கூற முடியாது. கணி திறன்பட தமிழை ஏற்றிக் கொள்கிறது. கணிக்காக தமிழை எள்முனையளவும் மாற்ற வேண்டியதே இல்லை.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html


பகுதி-2:http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-: http://nayanam.blogspot.com/2010/02/5.html
அன்புடன்
நாக.இளங்கோவன்