Pages

Friday, December 15, 2006

பாலசிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

பேராசிரியர் முனைவர் அண்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவு
உலகவாழ் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

உலக அரங்கில் "தமிழ் " என்ற சொல்லுக்கு முகவரியாய்
வாழ்ந்தவர் பாலசிங்கம்.

இவரின் இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது
தமிழகவாழ் தமிழர்களுக்கும் உலக வாழ் தமிழர்களுக்கும்
வேதனையைத் தந்துள்ளது.

தற்காலத் தமிழ் உலக அரங்கில் இருக்கக் கூடிய
பெரும் தலைவர்களில் பாலசிங்கம் அவர்களும் ஒருவர்.

பாலா அண்ணனை இழந்து வாடும் ஈழத்தமிழர்களின்
துயரத்தில் பங்கு கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தி பெறவும், தமிழர்களுக்காக
அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பு ஆல் போல் தழைத்து
தமிழ் மக்களைக் காத்திட வேண்டும் என்று இறைவனை
வேண்டுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, November 12, 2006

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.

2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.

3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.

5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.

6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.

இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.

7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.


கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, November 10, 2006

வாகரைப் படுகொலைகள்

தமிழ் ஈழத்தில், வாகரையில் மீண்டும் அப்பாவி அகதி மக்களின் மீது
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.

தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.

Thursday, October 05, 2006

மரபுகள் சமைக்க! (வெண்பா)

(சவுதித் தமிழர்களின் எழுத்துக்கூடம் என்ற மடற்குழுவில் நடைபெறும்
வெண்பாப் பட்டறையில் எழுதியது)


வெண்பா வரையும் கவிஞ, நிறைநண்ப!
அன்பால் வரைவன் சுவைத்தனனாய்;-புண்போல்ஆம்
தென்பால் வரைவில் மொழிக்கூட்டம்; முள்விலக்கி
தண்பா வரைதல் தலை!
(1)
மரபைச் சமைக்கவிஞ உந்தம் கவிதைச்
சரமென் மனத்தே மயக்கி - விரவி
விரல்களை ஈர்ப்பதேன்? நும்முயல்வே! மேல்நில்
தரஞ்சேர் தமிழே படை!
(2)
படிபடி பாரதி பாடிப் படிநீ
படிபடி பாரதி தாசன்! - படிக்கின்
படிப்படி ஏறிடும் சொல்லும் பொருளும்;
படித்தவர் சூக்குமம் கேள்!
(3)
திரிதிரி கோல்களைத் தூக்கித் திரிநீ
திரிதிரி பாக்களை யாப்புள் - கிரிபோல்
திரிதிரி தேனன கீதம் மறையே
திரிதிரி நுட்பமும் உள்!
(4)
நிகண்டொன்றை கையோடே நீகொள்வாய் அன்றேல்
அகராதி அக்குள் செருகி - புகழ்தக்க
மேகலையோ கம்பமோ ஒன்றில் நிலைத்திட
வேகமிகப் பாடுவாய் காண்!
(5)
மங்கையுடன் கூட்டத்தை மெய்மறந்தே யாத்திடவள்
அங்கையின் ஓர்வரியும் ஓர்பாட்டாம்! - நங்கையின்
கொங்கையும் நற்கொசுவம் உச்சிமயிர் ஒவ்வொன்றும்
உங்கவியில் ஏங்கிட வை!
(6)
ஆடவனின் தோள்வலியை ஆள்வலியைத் தீட்டுபெண்ணே!
கூடவரச் சாகசமேன் கேளுபெண்ணே! - வேடன்ஆய்
ஊடலையும் போக்குவித்த போகத்தை வார்க்கையிலுன்
வாடலையும் தேடலையும் சேர்!
(7)
குத்தாட்டம் போட்டாலும் கும்மாளம் போட்டாலும்
வித்தாகப் பாட்டில் தமிழேவை; - ஒத்திடுமோ
கொத்துக்குள் ஆங்கிலமும் ஆர்மொழியும்? அக்கூட்டை
பித்தமென்றே சொல்வர் நினை!
(8)
அரபிக் கவிதை, உருதுக் கதைகள்,
பரதேயப் பட்டாங்கும் செய்தமிழில் - ஊரர்
தரம்மேவு ஆக்கம் தலையிற் சுமந்தே
வரவேணும் தென்பாண்டி ஊர்!
(9)
கட்டுக்குள் கட்டுதலே கட்டல்ல! கட்டாக்கால்
கட்டிலிலே கட்டுதல்தான் கிட்டாதே! - கட்டுப்போல்,
கட்டிடுகக் கட்டிப்பொன் கொட்டுநிகர் கெட்டிப்பா;
கட்டினவர் கண்டார் சுகம்!
(10)

குறிப்பு: கிரி = மலை, அங்கை = உள்ளங்கை, பரதேயம் - பல/அயல நாடுகள்
பட்டாங்கு = சாத்திரம்/இயல்பு

அன்புடன்
நாக.இளங்கோவன்
01/அக்/06

கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு)

கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு!)


கதிரவனே!

என் மண்ணில் நீ தோன்றியபோதெல்லாம் தொழுத என் கரங்கள்,
அயல் மண்ணிலும் நீ தோன்றும் போது திகைத்து நிற்கின்றன!

தையிலே பொங்கலிட்டு நன்றியைத்தான் செய்து வைத்தேனே!
நன்றி மறந்துவிட்டு நாடு தோறும் கதிர்வீசும் கதிரவனே,
அயல் மண்ணைத் தொட்டதனால் நீயும் எனக்கு அயலவனே!

மேகத்தைக் காவலிட்டு காணாமல் போகிறாயோ? இல்லை
இருளை நீ ஏவி விட்டு இல்லாமல் போகிறாயோ?
நிலவை நீ நீந்தவிட்டு நில்லாமல் போகிறாயோ?
விண்மீன்கள் கண்சிமிட்டி சொல்வதெல்லாம் இதுதானோ?

வேரிலே நீரோடு, நிமிர்ந்துன்னை போற்றிடுமென்
பயிர்களும் உன்னைப் பழித்திடும் பகைவன் என்றே!

ஓடையிலே ஆடி முடித்து என் காதலிதன்
மேனியெல்லாம் பொன்னால் பூட்டிக் கொள்ளும் வரை
உன்முகம் விடியாமுகமாக இருக்கட்டும்! பொல்லாதவன் நீ!

கண்டு கொண்டேன் உன் செய்கை கடல் தாண்டி வந்ததுமே!,
ஓடிப்போ விழிக்காதே என் முகத்தில்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
கன்சாசு சிட்டி (அ.கூ.நா)
நவம்பர் 2000
(பழைய தொகுப்பில் இருந்து)

Thursday, September 21, 2006

மண்வாசனை!

தென்றல் உலாவத் தென்னை சென்றேன்
தலைக்கனம் மிகுந்து சற்றும் வளையா
நெடுநெடு தென்னை என்னை நோக்க
கொடுகொடு என்றேன் தென்னந் தண்ணீர் !
இந்தாப் பிடிஎடுத் தேக்குடி என்றே
இரண்டு இளங்காய் போட்ட துகேளீர் !

பொன்நிறச் சதையால் போர்த்தியக் காயுள்
பொன்னி நதியில் திருடிய தண்ணீர் !
தாகம் தீர தண்ணீர் பருக
மேகம் மோது தென்னை விலகி
பாதை அருகே பந்தலில் குந்தி
காயைப் பாங்குடன் இருகை ஏந்தி
வாயுடன் காயின் வாயிடம் வைத்து
தானுண்ட நீரைத் தலையில் தந்த
தென்னை போற்றித் தண்ணீர் குடித்தேன் !

தென்னை பார்த்து நன்றி சொன்ன
என்னை ஈர்த்த அந்தப் படமோ
என்சிறு நாய்ந னைத்தத் தடமே;
தென்னை அடியில் ஈரமுக் கோணம் !

சிரித்துக் கொண்டே திரும்பிப் போக
எறிந்தது தென்னை இன்னொரு காயை !
சொன்னது காதில் "சொல்லாதே வெளியில்" !
பொன்னியில் திருடிய தண்ணீர் மறைக்க
என்னிடம் தந்தது சிறுகை யூட்டு !
செந்தமிழ்த் தாய்மண் வளர்ந்ததென் னையதே !

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, September 09, 2006

Can I get a LIFT? - poem (Not for Contest)

முல்லைப் பந்தரை முகர்ந்து பார்க்க
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!

கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!

இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!

வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!

மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!

பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!

பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !

அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )

Monday, August 14, 2006

நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்

முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!

கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!

ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!

கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!

முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்தக் கோரச் சாவுகள் விபத்து!

ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.

தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.

இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?

இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?

கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!

எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!

தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.

இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.

இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.

இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?

நயனன் :-(

Saturday, July 08, 2006

இரட்டை மரணங்கள்!

மெல்லக் குனிகிறேன்.
என் கரங்கள் அவிழ்ந்து மண்ணை மிதிக்கின்றன.
பத்து விரல்களும் பக்கங்களில் விரிகின்றன.
அங்கை அவ்வளவாக அழுத்தவில்லை.
அதனால்தானோ என்னவோ சிறு மணல்களும் மெல்லியதாய்
குறுகுறுக்கக் கீறிவிடுகின்றன என் அங்கைகளை.
அங்கைக்கு அரணாக விரல் மேடுகள் இருப்பினும்,
இந்தச் சின்னஞ்சிறு மணல்கள் என்னைச் சீண்டித்தான் பார்க்கின்றன.

அங்கையின் அணைப்பிலே வாளையும் வேலையும்,
ஏன் குண்டுகளையும் வீச முடியும்!

கோழியின் குரல்வளையையும்,
போரிலே பகையின் குரல்வளையையும்
என் அங்கையின் அணைப்பிலேயே அற்றுவிடமுடியும்.

ஆனால் அந்தச் சின்னஞ்சிறு மணலை
என் அங்கையால் என்ன செய்து விட முடியும்?
எண்ணிப் பார்க்கையில் துக்கு மணல்
சற்று வெட்கநகைகலந்த சினத்தை அளித்து என்னை அதற்கு

இளையவனாக்கிவிட்டது!

ஒற்றைக் கல்லெடுத்து என்னால்
ஒரு மைலுக்கு வீசமுடியும்!

ஆனால் ஒற்றை மணல் எடுத்து வீச முடியுமா?
சிரிக்கிறேன்.

குண்டுக்கல்லைத் தூக்கி எறிந்து
ஒலிம்பிக் போட்டியில் ஆடுகின்றனர்.

ஒற்றை மணல் வீசும் போட்டி வைத்தால்
அது எப்படி இருக்கும் என்ற சிந்தனை
சில நொடித்துகள்களில் வந்து விட்டு
வணக்கம் சொல்லிச் சென்று விட்டது.

கைகளின் அணைவோடு தற்போது
என் உச்சி மண்ணை உரசுகிறது.

புழுதி என் மயிர்களின் முடிகளிலும்
நடுவுகளிலும் ஒட்டியிருக்கும் இந்நேரம்.
மனிதர் கூட்டத்திற்கு மயிர் என்றால் கோவம் வரும்.

முடியென்றால் உச்சி என்பார்.
தலையென்றாø உச்சி என்பார்.
ஆனால் வளர்ந்து விட்ட மயிரை வெட்டும்போது
முடியை வெட்டுகிறேன் என்பார்!

மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு!
அதை அசட்டையில் மறந்து விட்டு
மனித முடியையும் மயிரின் முடியையும் ஒன்றென்பார்!

மயிரின் அடியில் மனிதரின் முடி முடிகிறதா?
அல்லது மனித முடியில் மயிரின் முடியும் அடங்குகிறதா?
இந்த மயிரளவு மொழி எனக்கு விளங்கவில்லை.

மனிதர் தற்போது Hair dress பண்ணிக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.
சிலர் முடி திருத்துவார்களாம்.
மூளைக்குள் கையை விட்டுத் துழாவி கசடையெல்லாம்
வழித்து எறிந்து விட்டு மூடிவிடுகிறார்களா என்ன?

மயிரைச் சுருட்டி மடக்கி அறுத்துப் போடுவதற்கு
முடிதிருத்தம் என்று பெயராம்.

என் அண்டை வீட்டு அனல்மங்கை,
அவளின் அக்காளின் மயிரை அறுப்பேன் என்று
அடிக்கடிச் சண்டை போடுவாள்!

அடுத்த தெருவில் நான் நின்று கொண்டிருந்தாலும் காதில் விழும்
இந்தக் குரலின் போது ஏன் இவள் முடியை அறுப்பேன் என்று

சொல்வதில்லை என்று எண்ணிக் குழம்பிப் போய்விடுவேன்.

குழப்பம்தான் மிச்சம்.
குழப்பத்திலேயே, மேலும் அழுந்த என் மயிரின் அடியில்
சற்று வலிக்கிறது. மயிர்கள் மண்ணில் அழுந்தும்போது
வலிக்கவில்லை. இப்பொழுது வலிக்கிறது.

தற்போது கால்களை மெல்லத் தூக்குகின்றேன்.
அவை மேல் உயருகின்றன;
தலையிலும், கைகளிலும் அழுத்தம் அதிகமாகிறது.
"வலிக்கிறது ஆயினும், அது வலிக்கவில்லை";
பழக்கம் காரணமாக இருக்கக் கூடும்.
சற்றே நடுக்கம்.
கால்கள் கீழே வந்து விடும்படியான சின்னதொரு நடுக்கம்.
சமாளிக்கிறேன்.
மீண்டும் ஒரு சமாளிப்பு;
தற்போது நட்டமாக ஆனால் முடிகீழும், அடிகள் மேலுமாய் நான்.
மிக மெல்லிய சமாளிப்புடன் அமைதியாக!
மெல்லக் கால்களை விரிக்கிறேன், இரண்டு கிளைகளைப் போல!

என் மனதிலே அசைவில்லை.
உடலில் அசைவு மிகக் குறைவு. மெல்லிய நகை என் இதழ்களில்.

ஒரடி ஆழத்தில், மூவடிச் சதுரக்குழி.
இன்னும் சில மணித்துகள்களில் எல்லாம் மாறிவிடும்.
இதழ்களில் தவழும் இகழ்நகை இப்போது!

ஆண் ஆணாக மாறாத உலகத்தில்,
பெண் பெண்ணாக மாறாத உலகத்தில்,
ஆண் பெண்ணாக மாறி விடமுடிகிறது;
பெண் ஆணாக மாறிவிட முடிகிறது.

பெண்ணாகப் பிறந்து பெண்ணாகவே மாறிப்
பெண்ணாகவே பெருமையுடன் வாழ்ந்தால்,
பெரும்பண்பு படைத்திருந்தால்
பெண்ணைப் பிற்போக்கானவள் என்கிறார்கள்.
அவளின் சுவரொட்டியில் சாணம் வீசுகிறார்கள்.
பேனாவில் சாணத்தை ஊற்றிப் பத்திரிக்கையில் மெழுகுகிறார்கள்.
அதற்குப் பெயர் பெண்ணியம் என்கிறார்கள்.
விசாரித்த போதுதான் அறிந்தேன்,
பெருஞானப் பிரபுக்களாம் அவர்கள்.
அவர்களுக்கு சாணம் குதப்பித் தரும் குடுக்கைகள் ஆயிரம்.

பெண்ணாகப் பிறந்து பெண்ணாக மாறாவிடில்,
பெண்ணைத் தேவடியாள் என்று சொல்கிறார்கள்.
தேவர் அடி ஆள்களை, தேவடியாள்களாக ஆக்கிக்
காண்பித்திருக்கும் இந்தக் குமுகத்தில்,
நல்ல தேவடியாள் கெட்டத் தேவடியாள்
என்று இரு வகை வேறு உண்டு.
நாயாய்ப் பிறந்தாலும் தெருநாய் வேறு,
தேரில் போகும் நாய் வேறு அல்லவா! அது போல.

பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறுவதற்குப் பயம்.
முற்போக்கு பேசும் பிற்போக்குவாதிகளும்,
பிற்போக்குப் புரியாத முற்போக்குவாதிகளுக்கும்
இடையே கிடந்து நான் காணாமல் போய்விடுவேன்.

பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறாமல் இருப்பதற்கும் பயம்.
தெருநாயாய்ப் போவேனா அல்லது
தேரில் போவேனா என்று முடிவாகத் தெரியவில்லை.

பெண்ணாய்ப் பிறந்த எனக்கு ஆணாய் மாறிவிட பயமில்லை.
ஆனால், அருவெறுப்பு.
ஆணாய்ப் பிறந்தவன் ஆணாய் மாறாமல் கிடக்கையில்,
அவர்களிடையே நானும் ஒருவனாய் அல்லல்பட எனக்கு ஆசையில்லை.

பாரதி என்று ஒருவன் இருந்தான்.
காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்டான்.
பத்துப் பதினைந்து தென்னை மரம் கேட்டான்.
பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்றும் கேட்டான்.
அண்மையில் பயணித்த போது,
அவனை ஒரு மிகப் பெரிய படமாக்கி
சாலைச் சந்தி ஓரம் வைத்திருந்தார்கள்.
அற்புதமான படம். மகிழ்ந்து போனேன்.
பக்கத்தில் "காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்"
என்ற அவன் கவிதை வரியைத் தீட்டி வைத்திருந்தார்கள்.
மேலும் மகிழ்ந்தேன்.
பாலோடு தேன் கலந்தாற்போல மனதில் மகிழ்ச்சி.

மேலும் படித்தேன்.
இடைவெளி விட்டு சற்றுக் கீழே,
"வீடு மனை வாங்க விற்க அணுகவும்" என்று எழுதி முகவரியும்

எழுதியிருந்தார்கள்.

வீடு, மனை வாங்கி விற்கும் விளம்பரத்திற்குô
பாரதியும் பாரதியின் தமிழும் பயன்பட்டிருக்கின்றன
என்று எண்ணியபோது ஏனோ
பாலோடு தேன் கலந்த அதில் சிறிது
சயனைடும் கலந்தாற்போன்ற உணர்வு.

பாரதியின் பத்துப் பதினைந்து மரங்களில் ஒன்றாக மாறலாமா,
அல்லது பத்தினிப் பெண்ணாக மாறலாமா!
ஏதோ ஒன்றாய் மாறிவிட பேதைப் பெண் நான் துடிக்கின்றேன்.
மனிதத்தின் கழுத்து என்றும் அறுபட்டுக் கொண்டே இருக்கும்.

ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்
மாறிவிட முடிகின்ற உலகத்தில் மரமாய் மாறிவிட்டால்தான் என்ன?

பெண்ணாய்ப் பிறந்த நான் சிந்தித்தபோது,
மரமாய் மாறிவிட எடுத்த அந்த அற்புதமான முடிவு,
எனக்கு வெளிக்குள் வெளிகடப்பதைப் போன்ற உணர்வை,
குழிக்குள் குனிந்தென்னை ஊன்றிக் கொண்டபோது ஏற்படுத்தியது.
மனிதரை விட உயரமாகப் போகிறேன்!
முடிவொன்றை நிகழ்த்தியதில் மகிழ்ச்சிதான் எனக்கு!

முழுமையும் மரமாக மாறிவிட்டேன்.
ஒரு கன்று மரமாகத் தற்போது நிற்கிறேன்.
மரத்தின் அழகில் மகிழ்ந்து யாரோ குடம் தண்ணீர் விட்டது
மட்டும் ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகியும் என் நினவில் இருக்கிறது.

என்னைப் பல மாக்களின் மண்டைகளுக்கு உவமையாக்கி
என் இனத்திற்கு இழிவு தேடித் தந்தவர்களை
என்னால் இன்று மன்னிக்க முடிகிறது!

என் மயிர்களின் முடிகள் வேர்களாய் ஆழமாய்
அடியைத் தேடித் தேடிச் சென்றகாலங்கள் இனிமையானவை!

என் கால்கள், வளர்ந்து வளர்ந்து
உயரே, உயரே!
கிளைகளாய், கொம்பாய்!
வான் தழுவி நிற்கிறேன்.
ஆம், என்னிடம் கதை பேசிய எறும்புகள்
அப்படித்தான் சொல்லின!
மனிதனும் அப்படித்தான் சொல்கிறான்.

வான் உயர நிற்கிறேன் என்று
மனிதனும் சொல்கிறான்! எறும்பும் சொல்கிறது!

அன்னை பூமியின் அடிவயிற்றில்
அள்ளி அள்ளி உண்டதெல்லாம்
பாலாய்த் தேனாய்ப் பாகாய் இனித்தன.

உண்டு விட்ட மீதத்தை விட்டெறிந்த போது,
அது, காயாகக் கனியாக
இலையாகத் தழையாகப்
பூவாகத் தேனாக,
புவிமாந்தர் நாவிற்கு உணவானது!

செவியற்றப் புவிமாந்தர் பலரின் புகலிடமே நானாக இருந்தேன்.

விட்டெறிந்தது போதாது என்று,
இறைவனுக்கு நான் பெற்றுத் தந்ததையும்
பற்றிச் சென்ற கள்ளர் குழாம் மிகப் பெரியது!

சற்றே வியர்த்த போதெல்லாம்,
நான் கேட்காமலே,
என்னருகே நின்ற மரங்களெல்லாம்
எனக்கு வீசிவிட்ட அந்த உறவு உயர்ந்தது!

பக்கத்து மரத்திற்கு வியர்க்குமோ என்று
என்னையும் அறியாமல் நான் வீசிவிட்ட
அந்தத் தருணங்கள் எனக்கு உயர்ந்தன!

நாய்கள் சில அடிக்கடி என்னருகில் வந்து நீர் பெய்யும்!
மனிதர்களும் சில நேரங்களில் அப்படிச் செய்வார்கள்.

ஒவ்வொரு கனியையும் காயையும்,
மலரையும் இலையையும் மனிதன் கொய்த போது
பேறுகாலப் பெண்ணின் துன்பமாய் என்னை வாட்டியது உண்மை!

அடுத்த நாளிலேயே அவனை மன்னித்து விட்டபோது
நான் மேலும் உயர்ந்தேன் என்பதும் உண்மை.

சுவையான உணவை புவிஅன்னை அளிக்கிறாள்.
எனக்குச் சரவலே இல்லை.

நான் பேசுவதேயில்லை.
உறுதியாக அன்னை நிலத்தைப் பற்றி நிற்கிறேன்.

என் வாய் பேசுவதேயில்லை என்பதால்,
நான் உளறுவதும் இல்லை.

இந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன.
அதற்கொரு பற்றில்லை.
பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.
வேளைக்கொன்று கிளக்கின்றன.
பெரும்பாலும் உளறல்கள்.
இவர்களின் வாய்களில் துர்நாற்றம் வீசுகின்றதாம்.
ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,
இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே எபப்டி?

எனது தலை நிலத்தில், நிலவடியில்;
கால்கள் மேலே! வாய் இருப்பது தலையுள்ள இடத்தில்தானே!
நேரே நிற்கின்றேன் நான்.

இந்த மனிதர்களின் தலைகள் வானத்தில்!
கால்களில் மண்ணில்.

எப்படியிருக்கிறது? தலைகீழாக இவர்கள் வாழவேண்டும் என்று
ஆண்டவன் இவர்களுக்கு சாபமிட்டிருக்கிறான் போல!

இவர்கள் தலைகீழாக நிற்பதால்,
இறைவனையும் தலைகீழாக அமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் எல்லாமே தலைகீழ்!

ஒருவருக்கொருவர் பொல்லாதவர் என்று சொல்லிக்கொள்ளும்
புரட்சிக்காரர்கள் இந்த மனிதர்கள்! அதற்கு அறிவு என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

எங்கேயோ,
எனக்கு எட்டாத தூரத்தில்,
பல காதங்களுக்கு அப்பால்,
இருந்த மரங்களை யெல்லாம்
வெட்டி விட்டார்களாம் பல ஆண்டுகளாய்.
யாரோ பேசிக் கொண்டது எனக்கும் கேட்டது.

தேனீக்கள் எனக்கு எழுதரிய இன்பம் அளித்தன!

பறவைகள் என் பாதங்கள் பற்றி வாழ்ந்தன!
அங்கே அவைகள் மாட மாளிகைகள் கட்டி வாழ்ந்தன!

தினம் என்றன் சீரடிகளுக்கும்
திருப்பள்ளி எழுச்சி பாடிய அந்தப் பறவைகள்,
இன்றைக்கு என்னைக் கடந்து போகையில்
திரும்பிப் பார்க்கவும் மறந்து விடுகின்றன.
சிலவற்றின் பார்வையிலே பரிவில்லை!
பலவற்றில் பரிகாசம் நிரம்பியிருக்கின்றது.

போன புயல் சாய்த்த இரு கிளைகள் பேரிடி எனக்கு.
அதற்குப் பின்னும் தழைத்தபோது,
கிளைக்க முடியவில்லை நிறைய!

வயதாகினது எனக்குத் தெரிகிறது.

பூத்தபோது பூக்கள் குறைவே சில வருடங்களாய்.

வடுக்கும் போதே வீழ்ந்த காய்கள் வெம்பிக்கிடக்கின்றன
என்னைச் சுற்றி.

தப்பிக் கனிந்த கனிகள் சிலவே அதனால்
பறவைகள் வருவதும் குறைவே.

பற்பல ஆண்டுகளுக்கு முன்னால்
ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டது
என் நினவில் இருக்கிறது.

அவன் உயிரோடு இருந்த போது ஒரு
குட்டி நாய் கூட அவனைக் கண்டு மிரளாது.

அவன் செத்துப் போனதன் பின்னர்
அவனின் ஆவி சுற்றுவதாக
இந்த மனிதர்கள் சுற்றிக் கொண்டு திரிந்தார்கள்.

அந்த ஆவி சுற்றலில் பயந்து போய்த் திரிந்தார்கள்.
என் நிழலுக்கு அவர்கள் அண்டுவதே இல்லை.

"உள்ளூர்க்காரனுக்கு மரத்தைக் கண்டால் பயம்;
அசலூர்க்காரனுக்கு ஆற்றைக் கண்டால் பயம்"
என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல, அசலூர்க்காரர்கள்
யாராவது எப்பொழுதாவது என்னடியில் சற்று இளைப்பாறுவார்கள்.

சில ஆண்டுகளுக்குப்பின் மேலும் சிலர்
தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப்போனார்கள் கூட்டமாக.

இவர்களின் ஆவிக்கு மனிதர்கள் பயப்படவில்லை.
பயம் போய்விட்டதோ? அப்படித்தான் எண்ணினேன்!

மெல்லத்தான் புரிந்தது!
அவர்கள் பஞ்சம் பசி பட்டினியால்
தூக்குப்போட்டுக் கொண்ட விவசாயிகள்!

பட்டினியால் சாகும் உழவன்/ஏழையின்
பேய்க்கு யாரும் பயப்படுவதேயில்லை!

என் மர மண்டைக்கு ஏதோ உரைக்கின்றது.

உழவன் என்னைப் போல பல
பயிர்களையும் மரங்களையும் வளர்க்கின்றான்.
அதனால் அவன் மேல் எனக்குப் பாசம் அதிகம்.

ஆனால், மனிதக் குமுகத்தில்
அவன் வாழ்ந்தாலும் சரி மறைந்தாலும் சரி
அது ஒரு விசயமே இல்லை!

மேலும் மேலும் இப்பொழுதெல்லாம்
அடிக்கடி யாராவது வந்து தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.

என் பெயர் கெட்டுப் போனது; போகிறது!
என் நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தைத் தருகிறது.
பசுமையான காலங்கள் போய், ஊரும் நானும் மெல்ல
மெல்லக் காய்ந்து, காய்ந்து, சற்றே தீய்ந்தும் போவதாய் உணர்வு.

இப்பொழுதெல்லாம்
எப்பொழுதாவது சில இலைகள் முளைக்கின்றன.

நட்ட மரத்திற்கு
மொட்டை மரம் என்று பெயர் வைக்கிறார்கள்.

என் நெஞ்சு அடைக்கிறது!
குரல் கம்முகிறது!

ஆறுதலுக்காக,
அவ்வப்போது தள்ளித் தள்ளி நிற்கின்ற ஒரு சில மரங்கள்
காற்று வீசிக் களைப்பைக் குறைக்கின்றன.

வேர்கள் முட்டி மோதிப் பார்த்தும்
நீரைக் குடிக்க முடியவில்லை.
நீரிருந்தால் தானே!?

ஒவ்வொரு மதியமும் என் வேர்களைக் கொல்கின்றன.

ஒரே நேரத்தில் என் வேர்களுக்கெல்லாம்
தீ வைத்தாற்போன்ற வேதனை.

ஒவ்வொரு நாளும்! விடாமல்
என்னை யாரோக் கொல்கிறார்கள்!

தினமும் மதியத்தில்!

மீண்டும் மீண்டும் கொல்கிறார்கள்!!
இன்னும் நான் சாகவில்லை!

ஒரே நாளில் என்னைக் கொல்ல முடியவில்லை அவர்களால்!
நான்யார்? என் வரலாறு எத்தனை?

அதனால்தான், தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறார்களோ?

தள்ளாமையில் எனது கர்வம்!

எனக்குப் புரியவில்லை.
பூமியிலும் நீரில்லை!
அண்டை அயலில் மரங்களையும் காணவில்லை.

என் கழுத்து இறுகுகிறது போன்ற வேதனை.
மெல்ல மேலே பார்க்கிறேன்.
சுத்தமாக மொட்டையாகி குட்டையாய்த் தெரிகிறேன்.
மொட்டைக் கிளைஒன்றின் ஒரு பகுதியில் உளுத்துக் கொட்டுகிறது.

பறவைகள் மறந்து விட்டன!
பாம்பு கூட வருவதில்லை.
எல்லோருக்கும் ஏதோ புரிகிறது.

வெப்பம் என்னைக் கொல்கிறது!
அன்னை மடி வற்றி விட்டது!

தற்போது தூக்குப் போட்டுக்கொள்ளக் கூட
யாரும் வருவதில்லை!

மங்கையாக இருந்திருந்தால்
ஒரு நாள் மட்டுமே மஞ்சள் பறிபோயிருக்கும்.
எனக்கு ஒவ்வொரு நாளும் என் பச்சை பறி போகிறது!

பக்கத்து மரங்கள் பலவற்றையும் - "வந்தார்கள் வெட்டினார்கள்
கொன்றார்கள்"!. நான் தினம் தினம் காய்கிறேன்!
எனக்குப் புரியவில்லை.

ஆணி வேரின் அடிப்பகுதி வரை ஏறத்தாழக்
காய்ந்து விட்டது. அதன் முகப்பு
மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.
இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை?

இன்று கடுமையான மழை!
காற்றும் கூடவே அடிக்கிறது.
நிலத்துக்கு நிம்மதி! குடிகளுக்கு கும்மாளம்.

இதோ நான் பிழைத்துக் கொள்வேன்
என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
நிலத்துக்குக் கொஞ்சம் நிம்மதி!
குடிகளுக்குக் கும்மாளம்.

தண்ணீர் ஊறுகிறது; நிறைய நிறைய!
வேர்களுக்கு விழிப்பு வருகிறது. ஆயினும்
குட்டம் வந்த உடலைப் போல அவை குறுகிப்போயிருக்கின்றனவே!

காய்ந்து போன வேர்கள் அழுக ஆரம்பிக்கின்றன. ஓ...!

கொஞ்ச நஞ்சம் பச்சை இருந்த வேர்கள் மட்டும்
சற்றே முக்கி முனகுகின்றன. நம்பிக்கைக்கு மட்டும் குறைவேயில்லை.

வீசும் காற்றுக்கு நான் பிழைத்துக் கொள்வேன் என்று ஆனந்தம்!
மழை நின்றும் அது மட்டும் வீசி வீசி மகிழ்கிறது.

எனது மகிழ்ச்சியை அது அறிந்து கொண்டதால் எனக்கும் மகிழ்ச்சியே!

ஆயினும், என் இதயம் கடுமையாக வலிக்கிறது!
காற்றே கொஞ்சம் நிற்க மாட்டாயா? என் கெஞ்சல்
அதன் காதுகளில் விழவியேயில்லை.

மேலும் மேலும் ஊய் ஊய் என்று!

வலுவிழந்து போயிருந்த இடுப்பெனக்கு இப்போது வலிக்கிறது.
என்பால் கொண்ட அன்பில் காற்றுக் கூத்தாடுகிறது!

நிறுத்தச் சொல்லி என் எஞ்சிய சக்தியெல்லாம் கூட்டி
ஓ என்று ஓசையிடுகிறேன்!

அது இடுப்போடு நான் முறிந்து வீழ்ந்த ஓசையாகிப் போனது!!

காற்று மட்டும் மகிழ்ச்சி குறையாமல் இன்னும் வேகமாக வீசிக்

கொண்டேயிருக்கிறது.

தற்போது எனக்கு எல்லாமே புரியவில்லை!

அன்புடன்
நயனி.
08/யூலை/06

Friday, June 16, 2006

அர்செண்ட்டைனா - என்ன ஒரு ஆட்டம்!

அர்செண்ட்டைனா இன்று செர்பியா-மோண்ட் அணியை 6 கவல்கள் அடித்து
தூள் தூளாக்கியது ஒரு புறம் என்றால், அந்த அணியின் ஆட்டம் ஒப்பற்ற ஆட்டம்
என்பதில் அய்யமிருக்க முடியாது.

புள்ளி வைத்து கோலம் போட்டார் போல கடவுகள் அற்புதம். இது வரை நான் பார்த்த
கால்பந்தாட்டத்திலே இப்படி ஒரு ஆட்டம் பார்த்ததில்லை. இந்த அணியின்
கடவுகள் (passes)மாரடோனா காலத்தில் கூட இவ்வளவு அற்புதமாக இருந்ததில்லை.
1990 ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்டம் ஓரளவு இதனை ஒட்டியிருந்தது. இருப்பினும்,
இத்தனை அழகை நான் பார்த்ததேயில்லை.

அந்த இரண்டாவது கவலை (கவல் = Goal :நன்றி முனைவர் இராம.கி) 24 கடவுகளில்,
செர்பிய அணியினர் கால்கள் கட்டிப் போட்ட மாதிரி நின்று கொண்டிருக்க 24ஆவது கடப்பில்
கேம்பியாசு அதனை அடித்த அழகு கண்களை விட்டு அகலாது.

அந்த கவல் கேம்பியாசிற்கு சொந்தமல்ல; மொத்த அணிக்கே சொந்தம்.

அர்செண்ட்டைனாவின் இந்த ஆட்டத்தைப் பார்த்து பிரேசில் உள்பட
பல அணியினர்க்கும் கிலி பிடித்திருக்கும் என்பதி அய்யமில்லை.

மெசி யின் ஆட்டத்தைப் பார்க்க முடியாதோ என்று நினைத்த எனக்கு,
கடைசி 15 நிமிடங்களில் அவரும் வந்து ஒரு கவலுக்கு வழி வகுத்தும்,
ஒரு கவலை அவரே அடித்தும் இன்றைய மாலையை இனிமையாக்கி விட்டார்.

குழந்தை போல மாரடோனா குதித்துக் கூத்தாடியது இன்னும் மனதினை இனிமையாக்கியது.
(எனினும் மாரடோனாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் வாடி வதங்கவே செய்கிறது.)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Thursday, June 15, 2006

தேரா மன்னா! செப்புவது உடையேன்!

சன்னல் பதிவில் மாலன்:
(http://jannal.blogspot.com/2006/06/blog-post.html )

சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார்.
அதில் உள்ள பல கூறுகளைப் பெருமிதம் என்கிறார்.
காவுந்தி அடிகள் முதல், அக்காப்பியத்தில் வரும் புல் பூண்டு வரை எல்லாமே
பெருமிதம் என்கிறார் மாலன். எல்லாவற்றையும் விட அதன் ஆசிரியர்
இளங்கோவடிகளை மிகவும் போற்றுகிறார் மாலன். ஆனால் அக்காப்பியத்தின்
தலைவி கண்ணகி மட்டும் இவருக்கு ஆக மாட்டேன்கிறாள் :-)

முரண்பாடு!

இவரின் பார்வையில் கண்ணகி என்ற பாத்திரம் மோசம்! ஆனால்
அதனை ஆக்கிய படைப்பாளியும், காவுந்தியடிகள் முதல்
வேண்மாள், செங்குட்டுவன், கயவாகு வரையிலான கண்ணகியைப் போற்றும்
அத்தனைப் பாத்திரங்களும் மாலனுக்கு உயர்வு. முரண்பாடு!

>>மாலன் எழுதியது<<<
கவுந்தி அடிகள் குரல் அவரது குரல்தான் என்றால் அதில் காணப்படும்
முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்.
>>>>>>>>>>>>>>>>>>

காவுந்தி அடிகளாரை அவரின் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்
என்று சொல்கிறார் மாலன். உண்மைதான். அவர் ஒரு உயர்ந்த
கதாப்பாத்திரம். "காவுந்தி அடிகள் என்ற அந்த உயர்ந்த பெண்மணிதான்
கண்ணகி அம்மையை மிக உயர்வாகப் போற்றியவர்."
சிலம்பில் காவுந்தியாரின் குரல்தான் இது:

"இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;"

கண்ணகிக்கு "கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்" என்ற
வடிவத்தைக் கொடுப்பதே காவுந்தியாரின் குரல்தான்!

கண்ணகியின் உயர்ந்த குணநலன்களைக் கொண்டு,
அவளை கற்புக்கரசியாகவும், தெய்வமாகவும்
காப்பியத்தில் வடிவம் கொடுக்கும் இளங்கோவடிகளார்,
அதை முதலில் செய்தது, காவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின்
மூலம்தான்!

அதேபோல அவளுக்கு காவுந்தி அம்மையாரும், அடிகளாரும்
கற்புக்கரசி வடிவமும் தெய்வ வடிவும் கொடுத்தது, கோவலன்
மறைவுக்கு முன்னாடியே!

அப்பொழுது கண்ணகி நீதி கேட்டிருக்க வில்லை!
நெடுஞ்செழியன் மாண்டிருக்கவில்லை!
மதுரை எரிந்திருக்க வில்லை!
கண்ணகியும் மாண்டிருக்கவில்லை கோவலனும் மாண்டிருக்கவில்லை!

அப்படி கண்ணகியைத் தாங்கிய காவுந்தியார் உயர்ந்தவராம்;
உயர்ந்த காவுந்தியார் தாங்கிய கண்ணகி அப்படியெல்லாம்
இல்லையாம் - மாலன் சொல்கிறார். முரண்பாடு!

உயர்ந்தோர் ஏற்றுவது எப்பொழுதும் உயர்வையேதான்!
காவுந்தியம்மை உயர்ந்த குணம் உடையவர்.
அவரால் கண்ணகியை மிக உயர்வாகப் பார்க்க முடிந்திருக்கிறது.


படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது? என்று கண்ணகிக்கு பதில்
இளங்கோவடிகளைப் போற்றலாமே என்று பரிந்துரைக்கிறார்.
மணிமேகலைக்கு சிலை வைத்திருக்கலாமே என்றெல்லாம் புலம்புகிறார்.

மணிமேகலைக்கோ, இளங்கோவடிகளாருக்கு சிலைகள் வைத்தால்
போற்றினால் மேலும் மகிழ்ச்சிதான். ஆனால் கண்ணகிக்கு வைத்தது
தவறு என்ற இவரின் வாதம் முரண்பாடுகள் நிறைந்தது - அடிப்படைக்
குறைகள் கொண்டது.


>>>>மாலன் எழுதியது<<<<<<
கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று
பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை
விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஞாநி செய்த அதேத் தவறை மாலனும் செய்திருக்கிறார்.
கண்ணகியை விட்டு, கோவலன் "பல ஆண்டுகள்" பிரிந்திருந்ததாகச்
சொல்கிறார். அது தவறு என்றும் ஓராண்டுக்குக் கீழேதான் பிரிவின் காலம்
என்று திரு.ஞாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

முனைவர் இராம.கி ஐயா, பல படிகள் மேலே போய், ஒரு ஒப்பற்ற
சிலப்பதிகார ஆய்வை, பல தளங்களில் நின்று செய்து, மாதவியுடனான
வாழ்வு ஒரு வருடம் அல்லது அதற்கும் கீழே என்று விவரித்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தையும் கண்ணகியும் விமர்சிக்கும் முன்னர் ஒவ்வொருவரும்
valavu.blogspot.com டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.
மாலனும் ஞாநியும் இவ்வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.

கண்ணகியின் கணவன் கொலை செய்யப்பட்டதற்கு மதுரையில்
ஏன் அத்தனை பேர் சாவதற்குக் காரணம் ஆக வேண்டும் என்று
கவலைப்படுகிறார். அப்படிப் பட்டப் பெண்மணி மூர்க்கத்தனமானவள்
அல்லவா? என்கிறார்.

அசோகவனத்தில் சீதையை, தேடிக் கண்டுபிடித்து விடுகிறார் அனுமன்.
வாம்மா, தங்களைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன்
என்று சொல்கிறார் அனுமன்.

மாலன் மற்றும் பலரின் வினாவையும் ஒப்ப நாமும் வினா வைத்தால்,
இப்படித்தான் கேட்கத் தூண்டும்.

"ஏம்மா சீதா!, அனுமன் கூப்பிட்டானே, அவன் கூடப் போய்
இராமனைச் சேர வேண்டியதுதானே... "! என் கணவனின் வில்லுக்கு அது
இழுக்கு" என்று வசனம் பேசி விட்டு நீ பாட்டுக்கு
உட்கார்ந்திருந்ததால்தான் பல வானரங்கள், கரடிகள், மற்றும் இலங்கை
வாழ் அத்தனை பேரும் செத்தார்கள்?! இது ஞாயமா என்று கேள்வி
கேட்கத் தூண்டும். இப்படி யாரும் கேள்வி கேட்டு விட்டால் உடனே
அவர்களுக்குக் கருப்புச் சட்டை போட்டு விட்டு, திராவிடம், தமிழ்,
பெரியார், நாத்திகம், வெறி, என்று வாய்க்கு வந்தபடி கரித்துக்
கொட்டுவார்கள் பல எழுத்தாளார்கள்.

இளைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது கண்ணகியிடம்
என்று வினா வைக்கிறார் மாலன்!

மாலன், ஞாநி போன்ற முதிய/மூத்த தலைமுறைகள் சிலப்பதிகாரத்தைச்
சரியான தளங்களில் இருந்து பார்க்கத் தவறி,
பாண்டியன் நெடுஞ்ச்செழியனின் காவலர்கள் போல
"இளைய தலைமுறைக்கு ஒன்றுமேயில்லை
கண்ணகியிடம் இருந்து" என்று, சிலப்பதிகாரத்தைத் தீர ஆயாமல்,
தீர்ப்பை எழுதிவிடுவது நிற்குமானால் இளைய தலைமுறைக்கு
நிறைய பயனளிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கும் மாலன்,ஞாநி கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை
இதுதான். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் காவலர்கள்
தீர ஆயாமல், விசாரிக்காமல் கோவலனைக் கொன்று விடுகிறார்கள்.
மாலனும் ஞாநியும் சிலப்பதிகாரத்தைத் தீர ஆய்வு செய்யாமல்,
தவறான செய்திகளைத் தங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களுக்குச்
சொல்லி கண்ணகியைக் கொன்று விடுகிறார்கள்.

காவலர்கள் கோவலனைக் கொன்றது அக்காலம்!
எழுத்தாளர்கள் கண்ணகியைக் கொல்வது இக்காலம்!

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி "தீர ஆய்வு அல்லது தேவையான
ஆய்வு" என்பதனைச் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்!

மாணவர்கள் முதல், பெரியவர்கள் வரை சிலப்பதிகாரத்தைக் குறித்து
ஏதாவது பேசினால் உடனே வரும் சிலம்பு வரி,
"தேரா மன்னா! செப்புவது உடையேன்!".
அவ்வரியையே மாலன் அவர்களையும் ஞாநி அவர்களையும்
நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15/சூன்/06

Thursday, June 08, 2006

் ஞானியின் "கரடி"!! - An open letter to Mr.Gnani

அன்பின் திரு.ஞாநி,

தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த
http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html
சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக
வந்ததாகவும் அறிகிறேன்.

ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே
ஏற்கக் கூடியவை அல்லது ஏற்கப் படவேண்டியவை என்ற கருத்து
ஒரு சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளராகிய உங்களுக்கு இருக்காது
என்று நான் நம்புகிறேன்.

உங்களின் பலகட்டுரைகளில் ஒரு தரமான பார்வைத்தளம்
இருப்பதை நான் கண்டிருக்கிறேன். எல்லாக் கட்டுரைகள்
அல்லது கருத்துக்களும் சிறந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும்
ஒரு நல்ல தளத்தில் இருந்து உங்கள் பார்வைகள் பல
கட்டுரைகளில் வந்திருக்கின்றன.

ஆயினும் கண்ணகி சிலை வைப்பு தொடர்பானக் கட்டுரையில்
உங்களின் கருத்துக்கள் ஒரு தரமான தளத்தில் இருந்து
வந்ததாகத் தெரியவில்லை.

கண்ணகி சிலையை மீண்டும் வைத்தது தவறு என்பதை
வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதனை ஒரு தரமான
தளத்தில் இருந்து பார்க்கத் தவறி விட்டிருக்கிறீர்கள்.

கருணாநிதியின் மஞ்சள் துண்டு என்பது அவரின் தோளை மட்டும்
சுற்றியது. ஆனால் கண்ணகி சிலை என்பது அவரின் தோளில்
வைக்கப் பட்டிருந்த சிலை அல்ல. அதை அவரே முதலில்
நிறுவியிருந்தாலும் அது அவருக்கு மட்டும் சொந்தமானதும்
பிடித்தமானதும் அல்ல. எனினும், மஞ்சள் துண்டை ஒட்டிய
உங்களின் வாசகத்தில் இருந்த எழுத்துச் சுவை நன்றாகவே
இருந்தது; அதில் ஒன்றும் எனக்குப் பிணக்கு இல்லை.

கற்புக்கரசி, மற்றும் நீதி கேட்டுப் போராடியது என்ற
இரண்டிலும் பசை இல்லை என்று கூறிவிட்டிருக்கிறீர்கள்.
சரி அப்படியே இருக்கட்டும்! அது பற்றியதல்ல என் கவலை.

கண்ணகியை விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவலன்
பிரிந்திருந்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது தவறு!.

கதைப்படி கண்ணகியைப் பிரிந்து, மாதவியைச் சேர்கிறான்
கோவலன்; மாதவியோடு வாழ்கிறான்; பின்னர் மாதவியையும்
பிரிந்து, கண்ணகியைச் சேர்கிறான். இருவரும் மதுரை
சென்றடைகின்றனர். அப்போது மாதவிக்கு மணிமேகலை
என்ற பெண் குழந்தை பிறந்ததாக கோவலனுக்கு சேதி வருகிறது.

ஒரு கரு வளர்ந்து முழுமையடைய எவ்வளவு காலம் ஆகுமோ
அவ்வளவு காலம்தான் கோவலன் மாதவியோடு இருந்திருக்க
முடியும். பத்தாண்டுகள் அவளோடு இருந்தான் என்று என்
சிற்றறிவுக் கெட்டியவரை சிலப்பதிகாரத்தில் எங்கும்
செய்திகள் இல்லை. தாங்கள் அறிந்திருந்தால் அன்பு கூர்ந்து
சொல்லவும்.

மிஞ்சிப்போனால், ஒரு ஏழெட்டு மாதங்கள் அல்லது அதிக பக்கமாக
ஒரு வருடம் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன்
வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.

இங்குதான் உங்கள் கட்டுரையின் மேலான என் வருத்தம்!

>>>>>>.ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>

தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

பல சாதாரணப் பிஞ்சு எழுத்தாளர்களைப் போல, நல்ல தளத்தில்
நில்லாது நீங்களும் கற்பு என்பதனைக் கால் கவட்டியில்
தேடியிருக்கிறீர்கள்.

ஒருவருடத்திற்கும் கீழாக தலைவனும் தலைவியும் பிரிந்து
வாழ்வது ஒன்றும் பெரிய விதயமே இல்லை. சங்க காலம்
முதல் இன்றைய கணிக்காலம் வரை நாம் கண் கூடாகக்
கண்டு கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கும் திரவியம் தேட திரை கடல் ஓடி,
அதிக பக்கம் ஆண்டுக்கு ஒரு முறை மனைவியைத்
தேடி தாயகம் வரும் ஆடவர் இந்தத் தமிழகத்தில்
ஏன் இந்திய நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கில்,
இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும்
இக்கட்டுரை படிப்பவர்களும் நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள்
என்று நம்புகிறேன்.

கண்ணகி, கோவலனைப் பிரிந்திருந்தது மிகச் சாதாரண
ஒரு வருடத்திற்கும் குறைவான காலம். இதில்
கண்ணகி பிற ஆடவரை நாடாதது பெரிய விதயமும் இல்லை;
ஒரு வருட காலம் உடல் உறவை வைத்துக் கொள்ளாமல்
இருந்து விடுவது ஒன்றும் வியக்கத் தக்கச் சங்கதியும் இல்லை.

இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.

இன்றைக்கும் இலக்கக் கணக்கான தம்பதியினர் ஆடவன்
பொருள் தேடும் பொருட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டுதானுளர்.

துபாயைச் சேர்ந்த ஒருவர் தன் கவிதையில்,
பொருள் தேடி திரைகடல் ஓடி, "தாம்பத்தியத்தையும் தவணை முறையில்
பெறுகிறோம் நாங்கள்" என்று சொன்னதில் பெரும் சோகம் கப்பித்தான்
கிடந்தது.

கணவன் ஒரு குறைந்த காலம் பிரிந்திருக்கும் போது, மற்றொரு
ஆடவனை நாடாதது மட்டுமே கற்பு என்று நீங்கள் சொல்வீராயின்,
அந்தக் கற்பு ஆடவனுக்கும் உண்டு, பெண்டிருக்கும் உண்டு;
கண்கூடாகக் காண ஏராளமான சான்றுகளும் உண்டு. இதற்குக்
கண்ணகியைத் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், அப்படிப்பட்டக் கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
என்று நீங்கள் கூறுவது வியப்பை அளிக்கிறது! ஏற்கத்தக்கதாயில்லை.

வெளிநாடுகளில் வேலை செய்யும் திருமணமான ஒவ்வொரு
ஆடவனின் உயிர் நாடியே இந்த நம்பிக்கைதான்!

கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தால்,
கண்ணகியும் ஊர் மேய வேண்டும் என்றும், அப்படிச் செய்யாததால்
அவள் ஒரு முட்டாள் மற்றும் பிற்போக்கானவள் என்றும் கருதும்
மனப்போக்கு மனித நாகரிகம் அற்றது என்று ஒப்புக்கொள்வீர்
என்று நம்புகிறேன்.

அதேபோல, உள்ளூரிலேயே சம்பாதிக்கலாம்; ஆனால் வெளிநாடு போய்
ஆண்டு தாண்டி வந்தால் நான் இப்படித்தான் செய்வேன் என்று
பெண்டிர் சொன்னால் அது ஏற்புடையதா?

(((சேர்ந்திருந்தால் கூட ஆடவரிலும் பெண்டிரிலும் இருக்கும் சில
கழிசடைகளை நாம் பொருட் படுத்த வேண்டாம்)))

எனது காமத்திணவை தீர்த்து விட வேண்டியது உன் கடமை!
அதற்காகவும்தான் நான் உன்னை மணந்தேன்! ஆனால், நீ பிரிந்திருக்கும்
காலத்தில் எனக்குத் திணவெடுத்தால் அதைப் பிறரிடம் தேடிக்
கொள்வது என் உரிமை என்று ஒரு ஆடவனோ பெண்ணோ சொன்னால்
அது குமுகத்திற்கு ஏற்புடையதா?

அது குமுகத்திற்கு ஏற்புடையது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்
ஸொள்வோம்!

அப்பொழுதும் கூட அவ்வாறு ஒழுகாத ஆடவனையும் பெண்டிரையும்
தங்களின் கற்பு இலக்கணப்படி என்ன சொல்வீர்கள்?
முட்டாள் என்றா? பிற்போக்குத்தனம் என்றா?

கோவலன் கண்ணகியைப் பிரிந்ததுவும், திட்டமிட்டு மாதவி என்பாளை
எண்ணி, தேடி, கோவலன் சென்ற கதையல்ல சிலம்பு. ஆடவன்
இல்லத்தை எதற்கெல்லாம் விட்டு வெளியே செல்வானோ
அந்தக் காரணத்திற்காகத்தான் அவனும் சென்றிருக்கிறான்.
அவன் பொருள் தேடும் விசயமாகக் கூடப் போயிருக்கலாம்.

அப்படிப் போனவன் தவறிப்போனான் என்றவுடன் கண்ணகியும்
அப்படிச் செய்து விட வேண்டும் என்றோ, அல்லது அவனை
மீண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றோ ஒரு பெரிய
புரட்சித் தீர்ப்பைப் பேசி விடமுடியாது!

கண்ணகியைப் பிரிந்திருந்ததே ஒரு வருடத்திற்கும் கீழாக
என்று சொல்லும்போது ஏழாண்டு தம்பதிப் பிரிவுச் சட்டத்தை
எண்ண வேண்டிய அவசியம் எழவேயில்லை.

அப்படியே அதை எண்ணினாலும், ஏன் ஒரு சட்டம்,
ஏழாண்டுகள் வரைப் பொறுத்திருக்க வேண்டும் என்று
சொல்கிறது என்பதனையும் நீங்கள் தாழ்மையுடன்
சிந்திக்க வேண்டும்!

ஆறாண்டு போதாதா? ஐந்தாண்டு? நான்கு? ஏன் ஏழு?
என்ற சிந்தனை எழத்தான் செய்கிறது.

>>>>>>. ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>
அரசனுக்கெதிராக கண்ணகி பேதராடியது எந்த சமூகப்
பிரச்சினைக்காகவும் அல்ல. தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி
கேட்டுப் பேதராடிய முட்டாள்தனம்தான் அது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மன்னிக்கவும். கண்ணகி போராடியது அவளின் இழப்பிற்காகத்தான்!
இல்லை என்று சொல்ல முடியாது.

ஆனால், ஏன் அவள் போராடி
இருக்கக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? போராடினால்
ஒரு குமுகாயத்திற்காக மட்டுமே போராட வேண்டும் என்று
ஏன் கருத வேண்டும்?

தனிப்பட்ட இழப்பிற்கான போராட்டம் முடங்கிப்போகுமானால் குமுகப்
போராட்டம் என்பது இருக்கவே இருக்காது!

தனக்கு அநீதி செய்த தன் கணவனுக்காகப் போராடினாள்
என்பது முட்டாள்தனம் என்றால், உலகில் பல மென்மைகளும்
உயரிய பண்புகளும் கேலிக்குரியனவாக ஆகிவிடுகின்றன.

இதே போன்ற கேள்வியை, கோவலனே கண்ணகியைப்
பார்த்துக் கேட்பான் இறப்பதற்கு முன்னர். நான் இவ்வளவு
அநீதிகள் செய்திருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாயே; ஏன்?
என்று வினவுவான் கோவலன். அதற்கு கண்ணகி சொல்லும் பதில்
மிக உயர்ந்தது; ஒப்பற்றது. அவள் ஒன்றும் "கல்லானாலும் கணவன்

புல்லானாலும்
புருசன்" என்று எண்ணி உன் கூட வந்தேன் என்று சொல்லவில்லை.
அவளின் ஒப்பற்ற பதில் படித்து எண்ணத்தக்கது.

எனினும் நீளம் கருதி அதன் உள் தற்போது நான் செல்ல

விரும்பவில்லை.

அதனால் தங்களின் இந்தக் கேள்வி முழுமையானது அல்ல என்பதை
என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

அதேபோல, நல்ல சிந்தனையாளரான நீங்கள் கண்ணகி ஏதோ
தீப்பந்தத்தைச் சுமந்து வீடு வீடாகச் சென்று தீ வைத்துக்
கொளுத்தினாற் போல எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.

அப்படியெல்லாம் அந்த அம்மையார் செய்யவும் இல்லை. அப்படிச்
செய்திருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!
இதில் சற்று நீங்கள் ஆழத்தான் சிந்திக்க இருக்கிறது.

கம்பராமாயணத்தில் அனுமார் வாலில் தீப்பந்தம் ஏற்றி
இலங்காபுரியை இரசினிகாந்த சொல்வது போல "பறந்து பறந்து
கொளுத்துவார்"! அப்போ, அனுமாரை Terrorist என்று சொல்கிறீர்களா?

கண்ணகி கையில் தீப்பந்தம் ஏற்றவும் இல்லை. கூரைகளின்
மேல் பறந்து பறந்து தீ வைக்கவுமில்லை.

பறந்து பறந்து இலங்காபுரியைக் கொளுத்திய அனுமாரைக்
கோயில்களில் வைத்துக் கும்பிட்டால் குற்றமில்லை; ஆனால்,
கண்ணகிக்கு சிலை வைப்பதே பாவம் போல எழுதும்
ஆனந்தவிகடனையும், அதைப்போலவே அரைகுறையாக
சிந்திக்கும் பல வலைப்பதிவர்களையும் நினைத்தால்
சற்று நகைப்புதான் வருகிறது.

கட்டுரையின் ஆரம்பத்தில் மஞ்சள் துண்டு மர்மம் பற்றி
எழுதி தங்களின் எழுத்துச் சுவையைக் காட்டித்தான் இருந்தீர்கள்.

அதே போல இறுதியிலும், கரடி ஒப்புமை சொல்லி என்னை
மிகவும் இரசிக்க வைத்திருக்கிறீர்கள். கரடி பொம்மையோடு
உறங்கும் குழந்தையின் உவமை அற்புதம். அந்தக் குழந்தைக்கு,
கரடி பொம்மையின் மேல் இருக்கும் அன்பும் பற்றும் மென்மையானதும்,
மிக உண்மையானதும் ஆகும். அதே குழந்தை உள்ளத்தோடு,
மென்மையாகவும், உண்மையாகவும் கண்ணகியை நேசிப்பவர்,
கற்பு போன்ற விசயங்களைக் கடந்து, அவளின் குண நலன்களை
நேசிப்பவர் பல ஆயிரம் பேர் உண்டு.

தொடைக்கிடுக்குக் கற்பு நிலையைக் கடந்து எண்ணற்ற
பண்புகளைக் கண்ணகியிடம் காண பலரால் முடிகிறது.

ஆகவே, நீங்கள் காட்டிய அந்தக் கரடி பொம்மை ஒப்புமை
அற்புதம். அது சிறந்த எடுத்துக் காட்டு.

கருணாநிதியும் பிறரும் இதற்காக உங்களையும் விகடனையும்
ஏசியிருந்தாலும் எனக்கு இந்தக் கரடி சங்கதி மகிழ்வான விசயம்.

தங்களின் கரடி ஒப்புமையை நான் இரசிக்கும் அதே வேளையில்
தங்கள் கட்டுரையின் இடையில் நீங்கள் சொல்லியிருக்கும்
கருத்துக்களுக்கும், குறிப்பாக அந்தப் பத்தாண்டுப் பிரிவிற்கான
விளக்கத்தையும் சான்றையும் நீங்கள் அளிக்க வேண்டும்!

இல்லாவிடில், தங்களின் கட்டுரையும் கருத்தும் கண்ணகி பற்றி நீங்கள்
விட்ட கரடியாகத்தான் எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
8-சூன்-06

Sunday, May 07, 2006

பாரதிதாசன் மொழிபெயர்த்த தெலுங்குக் கீர்த்தனங்கள்!

தியாகராசர் கீர்த்தனைகளை மொழிபெயர்த்து தமிழ்க் கீர்த்தனங்கள் ஆக ஆக்கி,
தெலுங்கு, சமக்கிருதம் மட்டுமே கீர்த்தனை மொழிகள் என்ற மாயைப் போக்கிய
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய குறிப்பைத் தெரிந்தெடுத்துப் பதித்திருக்கிறார் முனைவர் இராம.கி.
காண்க: http://valavu.blogspot.com/2006/04/blog-post_23.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, May 02, 2006

பாவேந்தர் கவிதைகள் பற்றி புதுமைப்பித்தன்!

தமிழ்ப்பற்று மிகுந்திருந்த காரணத்தினாலேயே, பாவேந்தர் பாரதிதாசனைத்
தள்ளி வைத்திருந்த அவர்காலத் தமிழ்க்கவிக்்குமுகாயத்தினை
விமர்சிக்கிறார் புதுமைப்பித்தன்.

அதைத் தெரிந்தெடுத்துப் பதித்திருக்கிறார் தன் வலைப்பதிவில் நண்பர் வாசன்.
படிக்க வேண்டிய ஒன்று. காண்க http://vassan.kollidam.com/?p=24

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, April 28, 2006

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!

"கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே, உயர் குணம் மேவிய தமிழா!"

என்ற பாவேந்தர் பாரதிதாசனை,
அவ்வப்போது, தேவைப்படும்போது,
பயன்படுத்திக் கொண்டு,
பின்னால் சொகுசாக மறந்துவிடும் தமிழர்களே!
திராவிடர் முன்னேற்றத்திற்கான கழகங்களே!
பெரியாரின் பேரப்பிள்ளைகளே!
கவிஞர் பெருமக்களே! கவிதாயினிக் குயில்களே!
தமிழ் ஆசிரியர்களே! உழவர்களே, தொழிலாளிகளே!
தமிழ் இணைய மடற்குழுக்கள் மற்றும் வலைப்பதிவுகள்,
இதழ்கள் முதற்கொண்டு எல்லா மூலைகளிலும்
தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கும் எழுத்துப் புலிகளே!
என் உயிரினும் மேலான கோழைக் கூட்டங்களே!
இரத்தத்தின் இரத்தமான இழிகுலமே!
இனம் என்றொன்றிலாத இனமே!

இது கேளீர்!

இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள்! (29-ஏப்ரல்)
"உலகாள உனது தாய் உயிர் வாதை அடைகிறாள்,
உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா'

என்று ஒரு தடவையேனும் தமிழ் மக்களை எழுப்பி விட்டவர் பாவேந்தர்.

எழுப்பி விட்டும் எழாத,
எழும்பியும் மற்றவர்களை எழுப்பாத,
எழும்பியது போல் நடிக்கின்ற "தமிழர்களை என்ன சொல்வது?" என்று
யோசித்த போது, நினைவுக்கு வந்தவை மீண்டும் பாவேந்தரின் சொற்கள் மட்டுமே!

அவர் சொல்வார் தமிழர்களைப் பார்த்து!

"பள்ளம் பறிப்பாய்! பாதாளம் நோக்கி அழுந்துக அழுந்துக!,
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் பூச்சியே, தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்க வை!
ஈன உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி, அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து போ!
குனிந்து தரையைக் கெளவி, ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே, அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங்கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே!"

இந்த வரிகளைப் படிக்கும் போது, ஏதாவது ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் அல்லது அவரின் தொண்டர்
நினைவில் வருவர். அவரும் தமிழ், திராவிடர் என்றெல்லாம் குதிப்பவராக, குதித்தவராக
இருப்பர். குதித்து விட்டு மீண்டும் பாவேந்தரின் மேற்சொன்ன வரிகளுக்கு
ஒப்பாகிப் போவதும் நாம் கண்டு வருவது.

ஒரு தமிழ்நாட்டில் சாதீயமும், சழக்கும், சந்தர்ப்பவாதமுமே என்றும் அரசோச்சும்.
ஒரு தமிழ்நாட்டில் தமிழினத்தையே வேரோடு அழித்துக் கொண்டிருப்பார் பகைவர்.

தமிழர் தன்னையே அழித்துக் கொள்வர். பகைவராலும் அழிக்கப் படுவார். :-(

தமிழர்களின் பேனாக்களும் தட்டச்சுப் பலகைகளும் பஞ்சாரக் கோழிகளாகப் படுத்துத்
தூங்கும். மீறி வெளியே வந்தால் காற்றிலே வாள் வீசிக் களித்திருக்கும்!
நாக்குகள் நட்டுக் கொள்ளும்! குரல்கள் குன்றிப்போகும்!

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த/நினவு நாளிலே,
அவரை மறந்து விட்ட தமிழ் பேசும் அனைவரையும்
பாரதிதாசனின் மேற்கண்ட வருணனைகளோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதை ஒரு ஆய்வாகக் கொள்கிறேன்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
29-ஏப்ரல்-2006

Friday, April 21, 2006

எழிற் கொள்ளை! (செங்காந்தள் மலர்) - (உரை வீச்சு)

என் வீட்டு வாசலிலே என்னை வரவேற்கும்!
கொல்லையிலே கையும் குலுக்கும்.

உன் வீடு நான் வந்தால்,
அங்கேயும் என்னை வரவேற்கும்;

சாலையிலே நான் போயின், அங்கங்கே,
தன்னை என்னிடம் காட்டிக் கொள்ளும்;

கோயிலுக்குப் போயந்தக் குமரனைக் கும்பிட்டால்,
கும்பிட்ட கைகளில் குமரன் தருவான் அதை;
அது அவனுடையதாம்!

ஆறுமுகன் அள்ளித்தருவதில்
கொள்ளை ஆசை ஆருக்கில்லை?

இந்தக் கோடைகாலத்தில் கூதிர்கால நினைவுகள்!

கண் எட்டிய தொலைவு வரை ஒரே நிறம்.
காணும் திசைகளிலே பூரிப்பின் பொரிப்பு.

பச்சை வண்ணத்தின் மச்சியிலே செவ்வடுக்கு.
அதைக் கொஞ்சி விடத் துடிக்கின்ற என் குருதி!
அவற்றின் உச்சி முகர்கின்ற
உள்ளங்களின் முகங்களில் விதவிதமான ஒளி!

காலையில் பிறந்து மாலையில் மறைவதல்ல!
ஏழு மாலை மாறா வாழ்க்கை, மென்மை, உறுதி!

என் காதலியின் கண்வரிகளில் யான் கண்டு
கொள்ளை போன அதே நிறம்.
என் தாய் என்னைச் சிந்தியபோது சிந்திய அதே நிறம்.
என் மண்ணின் மைந்தர்கள், மண்ணில் கொட்டிய அதே நிறம்!

அழியாத வரலாற்றில்,

அத்தி சூடியவன் சோழன்;
பனை சூடிய சேரன்;
வேம்பு சூடிய பாண்டியன்;

"கார்த்திகை அழகன் காந்தள் சூடினன்!"

தமிழ்ப் பூவே! தமிழர்ப் பூவே!, தமிழ் நிலத்தின் பூவே!
செங்காந்தள் பூவே!
கவர்ந்திழுத்த கார்த்திகைப் பூவே!!

அன்றவள் கண்வரிகளில் கண்டபோது
களவு போய்த் தொலைந்தேன் - சொன்னேனன்றோ?!

"இன்றிவர் விதைத்ததெலாம் முளைப்பது" சொல்ல
ஏழு மாலை எழுந்து நிற்கும் இக்குலத்தின் பூவே!,
பூப்பது மென்மை! பூத்து நிற்பது வீரம்!

உன் எழிலை இன்று கொள்ளை கொள்கின்றேன் -
உன்னிடம் சொல்லிவிட்டே!

என் நெஞ்சள்ளும் கொள்ளையை எது தடுக்கும்?

"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே" என்றவன் பாவேந்தன்!

கார்த்திகை மலரே, காந்தள் குலமே,
"எங்கு பூப்பினும் எங்கும் நிறைகவே" என்றனன் கேள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏபரல்-2004

பாரதிதாசனுக்கு என் வீரவணக்கம்! (உரை வீச்சு)

தமிழனே, எம் மூச்சோடு கலந்து போனவனே,
பாரதிதாசனே,

எமது சொற்களுக்கு சாணை பிடித்துக் கொடுத்தவன் நீ!
தமிழின் காலமெல்லாம் உன் காலம்.

எமது கொம்புகளுக்குக் கூர் சீவியவன் நீ!
அவற்றில் வண்ணம் தீட்டாமல் விட்டு வைத்தனையே! புரிகிறது.

எமது சுண்டிப் போன குருதியையும் சுழியிட்டு ஓட வைத்தவன் நீ!
மதகுகள் அதற்கு மணல் மேடு.

எமது திசைகள் நூறெனினும், உன் திசையில் ஒன்றச் செய்தவன் நீ!
காண்கிறது தமிழ் மண் அவ்வப்போது.

எமது அகத்துக்கு முகம் கொடுத்தவன் நீ!
அங்கு வாழ்வது தீ!

எமது சிந்தைக்கு செயல் கொடுத்தவன் நீ!
தெளிவு கொண்டோ ம் யாம்.

எமது கரங்களில் வாள் தந்து சென்றவன் நீ!
இன்னும் உறை போகவில்லை அது.

எமது அறிவிற்கு, பகை அறியும் பாடம் தந்தவன் நீ!
களை அரியவும் கற்றுக் கொண்டோ ம் யாம்.

உன்னைக் கசடறக் கற்றவர் கையளவு;
கற்க வேண்டியோர் தமிழளவு.

கற்போர் தமிழர்;
கற்பார் தமிழர்!
நிற்பார் தமிழர்!
நிற்கிறேன் உன் திசை தொழுது!

விரைத்த என் விரல்கள் என் நெற்றிப் பொட்டிலே;
வீர வணக்கம் சொல்கின்றேன் உன் நாளில்! ஏற்றுக் கொள்.
வாழ்க நின் புகழ். வளர்க தமிழகங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-200

பாரதிதாசனின் குடியானவன் - பாரதிதாசன் வாரம் (April21-29)!

இந்தியாவின் பங்குச் சந்தைப் புள்ளி 12000த்தைக் கடந்து விட்டது.
பேராயக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட நடுவண் அரசு பதவி
ஏற்ற இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்புள்ளி 6000-7000 அளவில்
இருந்தது.

அசித் பிரேம்சிக்கு கடந்த 2005-6 ஆம் ஆண்டு நிகர இலாபம் மட்டும்
2205 கோடி உரூவாய். முகேசு அம்பானியின் ரிலையன்சு பெட்ரோலியத்தின்
பங்குச் சந்தை மதிப்பு நேற்று 143,000 கோடி உரூவாய்! அவர் தம்பி
அணில் அம்பானியின் சந்தை மதிப்பு 75,000 கோடிகளுக்கும் மேல்.

அமெரிக்க அதிபர் சியார்ச் புஃச், இந்தியர் சீனர் போல படியுங்கள்.
இல்லாவிடில் உங்கள் வேலையெல்லாம் அவர்களுக்குப் போய் விடும்
என்று பெருவிரலால் தனது மூக்கைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி
அமெரிக்க இளையர்களுக்கு பயங்காட்டியிருக்கிறார். இந்தியர்கள்
படிக்கும் சேவைப் படிப்பை தமது இளையரும் படிக்க வேண்டும்,
மேதாவிகளைப் போல புறந்தள்ளக் கூடாது என்பதே அதன் சாரம்
என்பது எனது கருத்து. ஆயினும் இந்தியப் படிப்பாளிகள், இதோ பார்
நாங்கள்தான் படிப்பாளிகள்; அமெரிக்காவே எங்களைப் போல படியுங்கள்
என்று சொல்கிறது என்று மார்தட்டி நமது பெருமையை மின்னஞ்சல்கள்
வாயிலாக பரப்பிக் கொண்டிருக்கக்கூடும்.

மிகவும் மகிழ்ச்சியான சேதிகள்தான்! மறுப்பதிற்கில்லை.

இவை இப்படியிருக்க, தமிழகத் தேர்தலில், அரசியல் கட்சிகள்
பல தம்மையும் அறியாமல் உண்மை பேசிக் கொண்டிருக்கின்றன.

ஒரு கட்சி உருவாய்க்கு அரைக்கிலோ அரிசி போடுவோம் என்கிறது.
இன்னொரு கட்சி 10 கிலோ பரியாய்த் தாரோம் என்கிறது.
இன்னொரு முளைக் கட்சி 15 கிலோ பரியாய்த் தருவன் என்கிறது.

இந்த அறிவிப்புகள் நாட்டில் பொருளாதாரத்தைக் கெடுக்கும் முட்டாள்தனம்
என்பது சிலரின் கருத்து.

இல்லை இல்லை, ஏழையின் வயிற்றிலும் புளி ஏப்பம் வரும் பார்!
இதுவன்றோ சீரும் சிறப்பும் என்று சமத்துவம் பேசுவோர் உண்டு.

ஆகா! ஏழையின் சிரிப்பில்தானே இறையைக் காணமுடியும்!
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரன்றோ? என்றுருகும்
ஆன்மீகர்கள் உண்டு!

ஆனால் உற்று நோக்கினால், இதில் கிடக்கும் ஞாய அஞ்ஞாயங்கள்
பல தளங்களிலும் பரந்து கிடக்கின்றன.

6.25 கோடி தமிழக மக்கள் தொகையில் ஏறத்தாழ 1.5 கோடி குடும்பங்கள்
உள்ளன. ஒரு குடும்பத்திற்கு 4 பேர் சராசரி என்று வைத்துக் கொண்டால்
6 கோடி மக்களும் குடும்ப அட்டைகளுள் உண்டு; கணக்கு ஏறத்தாழ
சரியாகவே வருகிறது.

கணக்குப் படி ஒவ்வொரு குடிக்கும் (குடிமகன்/குடிமகள்) 5 கிலோ அரிசி.
இதை 10 உரூவாய்க்குக் கொடுக்க ஒரு கட்சி, எட்டே முக்கால்
உரூவாய்க்கு கொடுக்க ஒரு கட்சி, 4.40க்கு கொடுக்க ஒரு கட்சி
இன்று முன் வந்திருக்கின்றன.

இப்படிக் கொடுக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லாருமே
கோடீசுவரர்கள்!

இதில் எது சிறந்தது என்று தீர்மானித்து வாக்களிக்க வேண்டியது
திருவாளர் வாக்காளார் என்று சொல்லப் படுகிற திருவாளர் குடிமகனின்
வேலை.

பொங்கலுக்குப் பொங்கல் மாட்டுப் பொங்கலும் வரும்.
மாட்டுப் பொங்கலன்று மாடுகள்தான் நாயகர்கள். அந்த மாடுகள்
குளிப்பதென்ன? கொம்புகளை சீவிக் கொள்வதென்ன? அதில்
வண்ணமும் சுண்ணமும் பூசிக் கொள்வதென்ன? முதலாளியையும்
சற்றே சீறிப் பார்ப்பதென்ன?!

அதைப்போலவே, அப்படியேதான், அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை
(இப்பொழுது அடிக்கடி வரும்) வரும் தேர்தல்களில் திருவாளர்
குடிமகன்தான் நாயகர். அவருக்கு அரசமரியாதை.

எல்லாப் பணக்காரர்களும் இக்குடிமகனின் பொற்பாதங்களை
வணங்கி வணங்கி அல்லது வணங்குவதாகச் சொல்லி சொல்லி
வாக்குக் கேட்பார்கள்.

பொற்பாதங்களை வணங்கி வாக்குக் கேட்க
நாவும் கூசாது! தன்மானமும் தடைசொல்லாது!
பெரியார் சீடர்களும் இதில் அடங்குவர் என்பது வெட்கக் கேடு!

ஞாயம் செய்பவர்கள் ஏன் வாக்காளர்களின் பொற்பாதங்களை
வணங்க வேண்டுமென்று எனக்குப் புரியவே மாட்டேன்கிறது!

நாளைக்கு 10 உரூபாய் சம்பளம் வாங்கும் உணவக மேசைத்
துடைப்பவன் கூட அவன் முதலாளியின் பொற்பாதங்களை
வணங்குவதில்லை.

அரசியலில் வருமானம் அதிகமாக அதிகமாக வறுமையிலும்,
புழுதியிலும் வாழும் மனிதன் இந்தப் ஆசைக்காரப் பிசாசுகளுக்கு
எசமானனாகி பொற்பாதங்களை நீட்டுகிறான் போலும்! விந்தை!

இந்தக் குடிமகன் தான் பாரதிதாசனின் குடியானவன்!
பாரதிதாசனின் "குடியானவன்" இன்றைக்கு
அரசர், செல்வர், எதிரி என்ற யாவரும் வணங்கும் மாவரசன்!

எல்லோருமே அவனின் ஒற்றை வாக்குக்காக அவன் காலடியில்!

இவனின் எட்டி உதைப்பில் மேற்சொன்னவர்கள் இவனைப்போல
தரித்திராண்டியாகப் போய்விடக் கூடும்!

சொல்ல மறந்துவிட்டேன் குடியானவனுக்கு மற்றொரு பெயர்
தரித்திராண்டி!

இந்தக் குடியானவனுக்கு இலக்கணமென்ன?

அவனின் உடலில் பரவிக் கிடக்கும் வியர்வையும், குருதியும், பூழ்தியும்
(புழுதியும்) இலக்கியமாகிக் கொண்டிருக்கும் பலரால்!

அவனின் இலக்கணம் என்று வரையறுத்தவர் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் மட்டுமே என்றால் அது மிகையல்ல!

// "ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை",
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
"கிடப்பவன்" பகலெல்லாம் கடுக்க "உழைப்பவன்"
"குடியானவன்" எனக்கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடியிலாச் செல்வரும்.

- பாரதிதாசன் கவிதைகள் - குடியானவன்
//

ஏலாது படுப்பார் எல்லோரும் இரவில்! எல்லோருக்கும் உடல்
எட்டு சாண் உயரம்தான்.

ஆனால், குடியானவனின் படுப்பிடத்தின் அகலம் நாலே சாண்!
நிழல்தருவதுவோ ஓலைக் குடிசை! வில்லென உடலை வளைத்து,
முழங்கால் மூட்டு முகத்தில் முத்தமிடச் சுருட்டிப் படுத்துக்
கொண்டிருப்பவன் குடியானவன்! இவன் பகலெல்லாம் கடுமையாக
உழைப்பான். அல்லது உழைக்க வைக்கப் படுவான்.

இந்த உழைப்புக் கூட்டத்தில் சின்ன சின்ன மாற்றங்கள்
இருக்கக் கூடும். ஓலைக் குடிசைக்குப் பதில், ஓட்டையும்
விரிசலும் ஆன, ஓடு அல்லது சிமிட்டித் தளம் போட்ட
வீடாக இருக்கலாம். நகரமாக இருக்கலாம் கிராமமாக இருக்கலாம்.
ஏன் வெளிநாடாகக் கூட இருக்கலாம். ஆனால், அவனுக்கு,
வீட்டிற்குள், எல்லோருக்குமாய் இடத்தைப் பிரித்துக்
கொடுத்து, கொசுவுக்கும் கொஞ்சம் இடம் போனதற்குப் பின் கிடைக்கக்
கூடிய இடத்தில் முழங்காலைச் சுருட்டிக் கொண்டுதான்
படுக்க முடிவதாய் இருக்கும்.

அந்தக் குடியானவனை நோக்கி அரிசிப் பைகள் நீட்டப் படுகின்றன.
இவனுக்கு மாட மாளிகைகள் கிடைக்கப் போவதில்லை. மாடு கூட
மற்றவரைச் சுமக்கும்போழ்துதான் அதனை ஓட்டும் இவனைச் சுமக்கிறது.

இன்றைக்கு இந்த அரிசிப் பைகள் வாக்குகளை வாங்கிக் குவிக்கும்
என்று சமர்த்தாக அரசியல் கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன என்றால்,
இது சிறப்பா? அல்லது சீரழிவா?

இந்த வழங்கலினால் வாக்குகள் ஏதோ ஒரு கட்சிக்குக் குவியும்
என்றால் அது அந்த நாட்டின் செல்வ நிலையைக் காட்டுமா
அல்லது வறுமை நிலையைக் காட்டுமா?

அந்த நாட்டில் செல்வ நிலை என்றால்,
யாருக்கு அரிசி ஓசியில் வேண்டும்? தேவையிருக்காதே!

இன்றைக்கும் வயிற்றுச் சோற்றுக்கு அரிசிக்கு ஆளாய்ப் பறக்க வேண்டிய
நிலையில் இருக்கும் குடியானவர்கள், வயல்வேலைகள்
மட்டும் செய்பவர்கள் அல்லர். பெட்டிக் கடை, சாலையோரக் கடை,
கறிகாய் விற்றல், புலால் விற்றல், சிறு வணிகர், சாலைப்பணியாளர்கள்,
வாசற்காவலர்கள், வாகன் ஓட்டிகள், சமையற்காரர்கள் என்று
எத்தனையோ வகை உண்டு.

எத்தனையோ கோடீசுவரர்கள் உருவாகும் நாட்டில்,
அரசோச்சுவர்களும், செல்வந்தர்களும் அண்டிப் பிழைப்பது
இந்தக் குடியானவர்களைத்தான் என்பதையே இத்தேர்தலும்
காட்டுகிறது!

இந்தக் குடியானவர்களை வைத்துத்தான் அரசராக முடியும்!
செல்வந்தர்களாக முடியும்! ஏன் போராட்டம் நடத்தினால்,
போர்கள் வருமானால் அங்கேயும் இம்மறக் குடிகள்தான்
போர்முனையில் நிற்க வேண்டி இருக்கும்! மெத்தப் படித்தவரும்,
பணக்காரரும் தங்கள் ஆதரவுகளை வலைப்பதிவுகளிலோ,
ஏடுகளிலோ எழுதிவிட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்! இயன்றால்,
சிறு நிதியளித்து விடுவர்; அல்லது இறைவனிடம் வேண்டிக் கொள்வர்
நாட்டைக் காப்பாற்ற!

பாரதிதாசன் குடியானவனின் உழைப்பைக் கண்முன் நிறுத்துவார் -
அது கண்ணை விட்டு அகலாது!

"விடியுமுன் எருதின் வால் அடி பற்றிப் பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடியானவன்......"

இப்படி வரும் குடியானவனிடம் போர் பற்றிச் சேதிவரும்! போருக்கு
அழைக்கப் படுவான்! போர் என்பது எதிரி நாட்டை எதிர்த்தோ
அல்லது உள்நாட்டு அரசியல் எதிரிகளைப் பொருதவோ இருக்கக்கூடும்.
உரிமைப் போராட்டமாகக் கூட இருக்கும்! அல்லது அரசியல் கட்சி
ஊர்வலமாகவோ, பொதுக் கூட்டமாகவோக் கூட இருக்கும்!
காசு கொடுத்தோ அல்லது ஓசியாகவோ போக வேண்டி இருக்கும்!

பாரதிதாசன் இருவரிகளில் இதைச் சொல்லும் போது பளீரென்று
அறைந்தால் போல இருக்கும்!

"எழும் அரசர், செல்வர், எதிரி இம்மூன்றுக்கு
உழைக்க வேண்டும் அவ் வோலைக் குடிசை.."

அப்படி உழைக்கும் குடிசையின் குடி, நாடு காக்க அல்லது செல்வந்தர்
காக்க, அல்லது உரிமை காக்க எழுகிறான்! எப்படியென்றால்,

"உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல் போல்,

அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,

அக்குடியானவனின் அழகிய தோளிலும்
விழியிலும் எழுந்து மின்ன .... எழுந்தான்! "

அப்படி எழுபவன் சற்றே தடுமாறி நிற்கிறான்! ஏன்? அதையும்
பாரதிதாசன் விளக்குகிறார்.

"..........அவனுக்கு, இதற்கு முன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை, அவன் காலை இழுத்தன கடித்து!"

இன்றுவரை உணவுக்கே அல்லல் பட்டு வாழ்ந்தவனின்
நிலை இழிந்து வறுமையில் வாடுகையில், நெஞ்சில்
புதைந்து கிடக்கும் மறக் கனல் வரும்போது
அந்த வறுமையில் விளைந்த இழிபயன் காலைக் கட்டி இழுக்கிறது!

நாளை சோற்றுக்கு என்ன செய்வார்கள் வீட்டில் என்ற நினைவு
வந்து விடக் கூடும் அல்லவா? கவிதையை நிறைவு செய்யும் போது
பாரதிதாசனார், அந்த வறுமையையும் இழிநிலையையும் கடந்து
மறத்தினைக் காட்ட போரிலே கலந்தான் என்று முடிப்பார்.

அது இன்றைக்கும் பொருந்துமன்றோ?

அரசோச்சியவர்களை ஆதரித்தோ, எதிர்த்தோ நடத்தும் போர்கள்,
அரசைப் பிடிக்க அரசியலார் செய்யும் தந்திரங்கள், வாக்குறுதிகள்
இவைகளை மட்டுமே நம்பி இவர்களுக்குப் பல்லக்குத் தூக்கி,
இவர்களைக் கோடீசுவரர்களாக்குவதே குடியானாவனின் பணியாக
காலகாலமாய் இருந்து வருகிறது.

சத்துச் சோறு, இலவச அரிசி, குறைந்த விலை உணவு என்பனவே
இந்நாட்டை ஆட்சி செய்கின்றன. ஏனெனில் இங்கே குடியானவர்கள்
மிக அதிகம். இந்தக் குடிகள் அரசர்கள், செல்வர்கள், அவர்களின்
எதிரிகள் என்ற மூவருக்காகவும் உழைக்கிறார்கள்.

அவர்களின் நிலையே நாட்டின் நிலை. அது தரித்திர நிலை.
12000 புள்ளிகளை அடைந்த சென்செக்சுக்கும் இவர்களின்
வயிற்றின் நிறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இருக்கப் போவதுமில்லை.

பொருளாதாரம், விஞ்ஞானம் போட்டி போட்டு வளர்ந்தென்ன?
இன்றைக்கும் கவர்ச்சிப் பொருளாக, இருப்பது "வயிற்றுச் சோறுதான்".
அதையே தேர்தல் களம் காட்டுகிறது. இது வறுமையின் தொடர் நிலை.

இதற்காக நான் அரிசி வழங்கல் பற்றிச் சொல்லும் எந்தக் கட்சியையும்
குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என்பது வேறுதளங்களில்
இருந்து பார்க்கப் பட வேண்டிய விதயம். ஆனால், கட்டாயம்
ஒரு உண்மை நம் கண் முன் கிடந்து தவிக்கிறது.

அது வறுமை. வயிற்றுச் சோற்றுக்குத்தான் இன்னும் இந்த நாட்டில்
பெரும்பான்மையினர் வாக்களிக்க வேண்டிய நிலை. உடல்நலம்,
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைக் கடந்த தேவைகளுக்கெல்லாம்
இன்னும் சிந்திக்க வாய்ப்பே வரவில்லை.

சம்பளக்கட்டுகள் அடுக்கிக் கொண்டே போனாலும், வயிற்றுக்கு
யார் சோறுபோடுவார்கள் என்ற நிலையில் நாட்டில் பெரும்பாலோனோர்!

நாடெங்கிலும் தனியாரும், அரசாங்கமும் அன்ன தானம் செய்து
புண்ணியம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை
அன்னதானத்திற்கு ஆள்கள் இல்லாவிடில் இந்தப் புண்ணியங்கள்
இவர்களுக்கு கிடைக்காதென்றே வறுமைகள் வளர்க்கப் படுகின்றனவா?

"வறுமையை ஒழிப்போம்!" என்று சொன்ன எத்தனையோ அரசர்களை
இந்நாடும் உலகமும் பார்த்திருக்கும்! நாம் பேசுவது அவர்களில்
வெகுசிலரை!

வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! "ஏனெனில் அதுவே
நாட்டை ஆள்கிறது - சில அரசர்களுக்கு பல்லாயிரங்கோடிகளைக்
கொட்டிச் சம்பளமாகக் கொடுத்து!"

வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! " ஏனெனில் அதுவே
பலரைச் செல்வந்தர்களாக்குகிறது - பலரை ஏழையாக்கித்தான்
சிலர் செல்வந்தராக முடியும்!"

வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! " ஏனெனில் படித்தவனும், பணக்காரனும்
கவிதை எழுதுவான் - வறுமையை ஒழித்து விட்டால் அரசனுக்கும்
செல்வந்தனுக்கும் எதிரியுடன் போரிட ஆள் கிடைக்க மாட்டார்கள்"

மாறாக, "எம்மை வள்ளலாக்கும் வறுமையாளர்கள் வாழ்க!" என்பர்.

மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு ஊட்டப்படும் பொங்கற்சோறு
போன்றது குறைந்தவிலை அல்லது பரியாய்த் தரப்படும் அரிசி.
அந்த மாடுகளுக்குப் பூசப்படும் வண்ணக் குழம்புகள் அல்லது பொட்டுகள்
போன்றது வண்ணத் தொலைக்காட்சி வழங்கல்கள் போன்ற அறிவிப்புகள்.
மீண்டும் அடுத்த தேர்தலில் அரிசி விலை புதிதாக நிர்ணயம் செய்யப்படும்.
வேறு ஒரு இலவசமும் திட்டமிடப்படும்.

அதற்குள் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் அரசியலாளர்களின்
சொத்துக்கள் பல நூறு அல்லது ஆயிரம் கோடிகளை எட்டி விடும்.

ஒரு நடிகனின் விலை பல நூறு கோடிகளாகிவிடும்!

வயிற்றுச் சோற்றுக்காக குடியானவன் மட்டும் மீண்டும்
இவர்கள் தரும் அரிசிப் பைகளில் வரையப்பட்டிருக்கும்
இவர்களின் படங்களைக் கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடும்!

அன்னதானம், இலவச அரிசி, காட்சிப் பெட்டி, செருப்பு, பல்பொடி,
சத்துசோறு, பாடப்புத்தகங்கள் போன்ற வழங்கல்களை எதிர்த்தோ
அல்லது எமக்கு இவையெல்லாம் சரவல் இல்லை என்ற அகத்தால்
ஏற்படும் அறிவாலோ அல்லது பொருளாதாரப் புலி என்ற நிலையிலோ
இதனை நான் எழுதவில்லை.

இவைகள் இன்றைக்கும், என்றைக்கும் பெருவாரியான மக்களுக்கும்
தேவை, தேவை என்ற நிலையே இருக்கிறதே, அதுவும் அரசாள்பவரின்
கடைக்கண்ணருளாலேயே இவை கிடைக்கும் நிலை இருக்கிறதே,
இன்னமும் இந்த அடிப்படைத் தேவை நிரந்தரமாகவில்லையே என்ற
நடைமுறையைச் சுட்டிக் காட்டுகிறேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாளில் அம்மாபெரும்
தமிழ்க்கவிஞனை வணங்குகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-2006

Sunday, March 05, 2006

கனவிலிது கண்டேன்!

சந்தவசந்தக் கவியரங்கில் கனவில் இது கண்டேன் என்ற தலைப்பில்
பங்கு கொண்ட கவிதை. தன் கனவில், மங்கை ஒருத்தி கனவு, காண்பதான
கற்பனையில் எழுதியது. அய்ந்தாம் பாடல் மட்டும் கற்பனை அல்ல. பொங்கல் காலத்தில்
ஈழ மகளிர் இராணுவம் அணி வகுத்து நிற்க, அதில் ஒரு மகள் கரண்டியால் பொங்கலைப் பொங்குவது போன்று
படம் ஒன்று ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. அதையொட்டி எழுந்தது அய்ந்தாம் பாட்டு.
- நயனன்.


கனவிலிது கண்டேன்
-----------------
நித்திரையில் நினைந்திருந்து, வஞ்சமிலா
நெஞ்சில் விளைந்தன வெல்லாம்
சித்திரை முழுநிலவுத் திரையதனில்
செழுக்கமல முகநல்லாள் முறுவலித்து
எத்திரையும் கண்டிராக் காட்சியெலாம்
எழுதியோடல் கண்டாள்; கனவெனவே!
முத்திரையாய்ப் பதிந்ததுவே மனதிலிணை
மற்றிலாதென் கனவிலிது கண்டேன். (1)


கார்முகிலின் கன்னத்தில் முத்தமிட்டுக்
கூந்தலையும் கோதிவிட்டு மலையன்னை
கூர்முகடு பேறுபார்த்துக் கொட்டிவிட்டத்
தூய்வெள்ளித் துளியெல்லாம் கூட்டாகி
ஊர்முழுக்க ஓடிடினும் ஆறெல்லாம்
ஓர்கறையும் ஏறாமல் வெள்ளியேபோல்
ஆர்கடலில் அப்படியே அடைக்கலமே!
ஆரணங்கின் கனவிலிது கண்டேன். (2)


ஆழிபோன பாதையெலாம் குன்றுகுழி;
ஆடியாடி, கழுத்தெலாம் உறுத்திடவே
ஊழிஊழி வண்டியிழுத் தமாடெல்லாம்
ஓர்வலியும் இலாமலே, செந்தரையில்
வாழிவாழி சொல்லியே பார்முழுக்க
ஓடினபல் உந்துகளை முந்தியே!
தாழிநிறைத் தண்ணீர்போல் தழும்பாதத்
தாமரையாள் கனவிலிது கண்டேன். (3)


காளையவன் வந்துவிட்டான்; விழிக்கடைக்
காட்சியதில் தெரிகின்றான்; விழுங்கினள்
வேளையது வந்ததனை கால்விரலால்
வேல்விழியாள் கோலமிட்டுச் சுட்டுகிறாள்;
பாளையது பிரிந்துபூ வந்ததுபோல்
பூமகளும் கசிந்துநீர் பூக்கின்றாள்!
மூளையது மும்மழைக்கு முத்தமிட
மாமகளின் கனவிலிது கண்டேன். (4)


கண்டனன் என்கனவில் அவள்கனவை
கலங்கமிலாப் பொன்னொத்த மேனியையும்;
பெண்ஒருத்தி, தன்னைப்போல் தானிருந்தாள்;
பசுங்கொடியாள், நல்லாள்; கரமொன்றில்
விண்திரும்பு வாளொன்றை வைத்திருந்தாள்
விடுக்கென்று உறையிலே குத்திட்டு
மண்திரும்பி, பொங்கலே பொங்கினாள்!
மங்கலத்தின் கனவிலிது கண்டேன். (5)


கண்ணகிக்கும் மாதவிக்கும் பன்னிரண்டில்
கல்யாணம்; காப்பியமும் ஆனதுவே;
பெண்குலமே பகையறுக்கப் போர்முனையில்
பிறவியெலாம் நிற்கிறதே, கவலையின்றி
மண்மகிழும் மங்கையராய் அணிமணியும்
மனைமகிழ்வும் கல்வியும் துறந்துவிட்ட
திண்மனவர் திசைனோக்கித் தேம்புகிறாள்;
தாயிவளோ? கனவிலிது கண்டேன்! (6)


சாதிமத பேதமெலாம் தரித்திரமே
சோதிவந்து சொன்னதுவோ யாரறிவார்?
ஊதிவிட்டு ஒன்றுகூடி உழைக்கிறது
ஓர்குமுகம்; வஞ்சம்பொய் மதுவில்லை;
தேதிஒன்றும் தெரிகிறது தளையறுக்க!
தீதெல்லாம் திரள்திரளாய்த் தொலைகிறது;
மேதினியில் தலைநிமிர்ந்து நிற்கிறது!
மாதவத்தாள் கனவிலிது கண்டேன். (7)


எண்திசையும் எங்கேயும் எல்லாமும்
இன்தமிழே எழுதிக் கிடக்கிறது
விண்திசையில் ஒருகருடன் வியாழம்
வெள்ளிசனி கடந்து இனுமுயர
'அண்டப் பகுதியின் உண்டை'என்ற
அழகுமொழி அட்டையில் எழுதிநின்றார்;
பண்ணொப்ப சிரித்தார் மணிவாசகர்!
பண்மொழியாள் கனவிலிது கண்டேன். (8)


பணங்காய்ச்சிப் பொறியெல்லாம் எங்குமிலை
பாலோடு சோறோ தேனோ
மணமோடு கலந்துதர பரிப்பொறிகள் (பரி=free)
மண்ணெங்கும் முளைத்திருக்கும்; மாந்தர்
குணமோடு குடியிருப்பர் பொன்கூரைக்
குடிலுக்குள்; பச்சைவயல் பக்கத்தில்
கிணம்கிணமாத் தண்ணீரும் எண்ணெயும்!
குமரியவள் கனவிலிது கண்டேன். (9)


ஆதவனின் அகங்கண்டு அடங்கிப்போய்
அடைந்துகொள் வெண்மதித் திரைமறைய
மாதவளின் இமைகளுக்குள் நெளிந்து
மெதுவே உதிக்கின்ற விழிகள்;
போதவளும் எழுகின்றாள்; நிறைநீறு,
பெருந்திலகம்; போற்றி என்றேன்!
ஈதவளோ, தமிழன்னை நானென்றாள்;
யானும் மலர்ந்தேன்; வாழிஎன்றேன். (10)


- நயனன்
01-பிப்ரவரி-2006