Pages

Thursday, November 27, 2003

சமற்கிருதம் வாங்கலியோ சமற்கிருதம்...!

www.google.com என்ற தளத்திற்குச் சென்று 'sanskrit ' என்று சொல்லித் தேடினால், நூற்றுக் கணக்கான சமற்கிருதம் குறித்த பக்கங்களின் தகவல் நமக்கு வருகிறது. அவையாவுமே சமற்கிருத இலக்கியம் அல்லது இலக்கணம் குறித்தவை அல்ல என்பதும் தெரிகிறது. பெரும்பான்மையானவை இந்திய நாட்டுப் பற்றின் காரணத்தால் சமற்கிருதத்தையும் அதன் பெருமைகளில் ஒன்றாகச் செல்லமாக எழுதி வைத்திருக்கும் சில குறிப்புகளாகத் தென்படுகின்றன. முழுமையாக சமற்கிருதத்தில் ஆக்கப் பட்ட இணைய தளம் ஒன்றனை என்னால் காண முடியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக சொற்ப எண்ணிக்கையில் இருக்கக் கூடும் என்று குத்துமமாகத் தெரிகிறது.

இவை யாவிலும் இலக்கிய இலக்கணம் இருக்கிறதோ இல்லையோ, 'சூலை-1987 காலத்திய ஃபோர்ப்சு இதழில் கணினிக்கு ஏற்ற மொழி சமற்கிருதம், என்று வெளியிட்டிருந்தார்கள்; அதனால் சமற்கிருதத்தில் பெருமையைப் பாரீர் பாரீர் ' என்று கூடி மகிழ்ந்து கும்மாளம் இடுகின்றன பல இந்தியர்களின் இணைய பக்கங்கள்.

www.forbes.com என்ற தளமானது, முதலீடு முதலீட்டாளர்கள் பொதினம் பற்றிய நிதியியல் தளமாகும். இதில் யாரோ ஒருவர் 1987 ஆம் ஆண்டு, அதாவது இற்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்னர், சமற்கிருதம் கணினிக்கு ஏற்ற மொழி என்று ஒரு கட்டுரை எழுதினார்கள் என்று ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் இந்தியர்கள். அந்தத் தளத்தில் சமற்கிருதம் குறித்து மக்கள் பேசும் அந்தக் கட்டுரை கிடையவே கிடையாது.

ஒருவேளை, 1987 ஆம் ஆண்டில் இணையம் என்பது இல்லாமல் இருந்ததால் இந்தக் கட்டுரை அதில் பதியப் படவில்லையோ என்று எண்ணினாலும், நூற்றுக் கணக்கான பேர் குறிப்பிடும் அந்த வாசகத்தைக் கொண்ட சில பக்கக் கட்டுரை இணையத்தில் எங்கும் காணப் பட முடியவில்லை. சரி - அதைச் சுற்றிய பிற கட்டுரைகள் கிடைக்குமா என்று தேடினால் அவையும் கிடைக்க வில்லை. அப்படியே அந்தக் கட்டுரை இருந்தது என்று நம்பினாலும் அந்த ஒற்றைக் கட்டுரையை வைத்துக் கொண்டு எத்தனை கணிஞர்களும், வலைஞர்களும் பெருமிதம் கொண்டு பூரிக்கிறார்கள் என்று பார்த்தால் வியப்பாக உள்ளது.

என்ற தளத்தில், அப்படி ஒரு கட்டுரையை ஃபோர்ப்சு இதழ் வெளியிடவே இல்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் ஒன்றும் வெறும் வலைஞர்கள் அல்ல. புகழ்பெற்ற ஐ.ஐ.டி யின் கணினி மொழிப் பிரிவினர் அவர்கள்.

இந்தியர்களின் மகிழ்ச்சி, பெருமிதப் படவேண்டியதுதானே. நமக்கும் அது பெருமையாகவே தோன்றுகிறது. எனினும், சில வினாக்கள் நமது மனதில் எழாமல் இல்லை.

1987 ஆம் ஆண்டு என்பது இந்தியர்களைப் பொறுத்தவரையில் கணினித் துறை என்ற ஒன்றே ஏற்படாத காலம். பெரும் இந்தியக் குழுமங்களும் கணினி என்ற ஒன்றை பெரும் செலவாக, அதுவும் கடைசிச் செலவாகக் கொண்டிருந்த காலம். 2003ல் இந்தியக் கணிச் சந்தையானது 72000 கோடி உரூவாய் மதிப்புடையதாகும். இதே சந்தை 1987ல் சில நூறு கோடியில் இருந்தது என்பதும், கணினி விழிப்புணர்வும் அறிவும் அப்பொழ்துதான் பரவலாக முளைவிடத் தொடங்கிய காலம் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. ஆங்கிலத்தைத் தவிர பிறமொழிகளுக்கான தொடர்பு, சொல்லப் படுகின்ற அளவிற்கு ஏற்படாத காலம். அப்பொழுது இந்த மொழி சிறந்தது, அந்த மொழி சிறந்தது என்ற பேச்சுக்கே ஆள் இருந்திருக்க மாட்டார்கள்.

ஒரு மொழி கணினிக்கு ஏற்ற மொழி என்று சொன்னால் அது எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று அறியத் தரவேண்டும்.

கணினி என்பது ஆரம்ப காலத்தில் Vacuum Tube என்ற வெற்றிடக் குழலால் இயக்கப் பட்டு பின்னர் Transistor -ல் இயங்கி பிறகு அவற்றை ஒருங்கிணைத்த சில்லுகளாக மாறி இன்று கோடிக்கணக்கான Transistor களைக் கொண்ட சில்லுகளில் இயங்கி வருகின்றது.

இவை 'இருக்கு ', 'இல்லை ' என்ற இரு மின்னனு நிலைகளின் செயற்பாடாகும். (States of 1s and 0s). அங்கே மொழிக்கே வேலையில்லை. A, B, C, D ஆகட்டும், ஆனா ஆவன்னாவாகட்டும், Ja, Jaa, Ju, Juu ஆகட்டும், அல்லது 1,2,3 ஆகட்டும், அவையாவும் ஒன்றும் சுழியுமாக மாற்றப்பட்டுப் பின்னர்தான் கணிக்கப் படுகின்றன. இங்கே மொழி என்று ஏதுமே இல்லை; இரு நிலைகள் மட்டுமே.

ஆங்கிலமாகட்டும், சீனமாகட்டும், தமிழாகட்டும், சமற்கிருதமாகட்டும் எல்லாமே ஒன்றும் சுழியும்தான் கணினியில். அப்படியிருக்கையில் கணினிக்கேற்ற மொழி சமற்கிருதம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இல்லை, வேறு எந்த மொழியைத்தான் அப்படிக் கூற முடியும் ?

கணினியை உலகிற்குக் காட்டியவர்கள் அமெரிக்கர்கள். அவர்களின் மொழி ஆங்கிலம். அதனால் ஆங்கிலத்தில் கணினி நிரலிகளை எழுதினார்கள். பின்னர், ஆங்கிலத்தின் மேலே, அவரவர்களுக்கு ஏற்றாற்போல போர்வையைப் போட்டாற்போல, டச்சு, சீனம், சப்பானியம் போன்ற மொழிகளைப் போட்டு கணினிகளை இயக்கித் தாங்கள் புழங்கும் மொழியில் தத்தம் நாட்டில் பயன் படுத்துகிறார்கள்.

நாம் விரும்பினால் அது இந்தியிலோ, தமிழிலோ, சமற்கிருதத்திலோ, தெலுங்கிலோ மாற்றிக் கொள்ளலாம். நமக்குத் தெரிவது எந்த மொழியாயினும் உள்ளே கணிக்கப் படுவது, ஒன்று மற்றும் சுழியினால் மட்டுமே! அந்த இரு நிலைகள் மட்டுமே.

ஆங்கிலத்திலே காணக்கூடிய கணினி நிரலிகளை, கட்டளைகளை, எந்த மொழியில் வேண்டுமானாலும் மக்களுக்கேற்ற மாதிரி மாற்றி, கணினிகளை இயக்கலாம். அதைத்தான் செய்ய சென்னை ஐ.ஐ.டியும், பல்வேறு அமைப்புகளும் செய்து, மக்களைக் கணினி சென்றடைய முயன்று வருகிறார்கள்.

சமற்கிருதம் பேசுபவர்களுக்கு ஏற்ற கணினி மொழி சமற்கிருதம் என்று வேண்டுமானால் சொல்லலாம். டச்சு பேசுபவர்களுக்கும் சீனம் பேசுபவர்களுக்கும் முறையே டச்சும், சீனமும் கணினிக்கு ஏற்ற மொழிகள். தமிழில் கணினியை செலுத்தினால் தமிழர்களின் கணினிக்கு ஏற்ற மொழி தமிழ் மொழி.

ஆனால், எந்த அடிப்படையும் இல்லாமல், கணினிக்கு ஏற்ற மொழி சமற்கிருத மொழியே என்று ஃபோர்புசு இதழ் கூறுகிறது என்று சொன்னால் அதில் பொருளிருக்கிறதா என்பதை குறைந்த பக்கம் கணினியைப் படித்த கணினி அறிஞர்களாவது ஆய்ந்து நோக்க வேண்டாமா ?

அதுவும் ஃபோர்புசு என்பது ஒரு நிதியியல் இதழ். அது ஒரு நுட்ப/அறிவியல் இதழ் கூட இல்லை. ஒன்றையும் சுழியையும் வைத்து உலகை ஆட்டும் Intel, HP, IBM, AMD போன்ற கணினிச் சில்லுகள் செய்யும் யாராவது, அல்லது பல்வேறு நுட்ப இதழ்கள் இது பற்றி எழுதியிருந்தால் ஒரு வேளை அதில் பொருளிருக்கிறதா என்று பார்த்தல் தகும்.

1921 ஆம் வருடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 23 கோடி பேரில் சமற்கிருதம் பேசியவர்கள் 356 மட்டுமே. ( I mean three hundred and fifty six only). 1951 கணக்கெடுப்பின்படி 36 கோடி இந்தியர்களில் சமற்கிருதம் பேசியவர்கள் வெறும் 555 மட்டுமே. அதாவது ஒரு கோடிபேரில் 15.4 பேர் மட்டுமே சமற்கிருதம் பேசினர். அதேக் கணக்கை இன்று நாம் எடுத்துக் கொண்டால் 100 கோடி இந்திய மக்களில், 1540 பேர் மட்டுமே சமற்கிருதம் பேசக் கூடியவர்கள். ஆனால் இந்த 1540 பேர் பேசக் கூடிய, சமற்கிருதம், கணினிக்கு ஏற்ற மொழி, என்று சொல்வது, அதுவும் எந்த அடிப்படையும் இல்லாமல் சொல்வது, ஏதோ போலிப் பிரச்சாரம் போல அல்லவா தெரிகிறது ?!

ஈரோப்பிய, சீன, சப்பானிய நாடுகளில் எல்லாம் அவரவர்களின் தாய்மொழியில் கணினி இயங்குகிறது இவ்வாறுதான். ஆட்மெயில் போன்ற பல தளங்களுக்குச் சென்று பார்த்தால் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் ஆக்கப் பட்டு அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் சேவைகள் ஆற்றப் படுகின்றன. 1540 அல்லது அதற்கும் சற்று மேற்படக் கூடியோர்களுக்காக சமற்கிருதத்தில் கணினிச் செயல்பாடுகள் வந்தால் நல்லதுதான். ஆனால் அதற்காக அம்மொழியே கணினிக்கு ஏற்ற மொழி என்று பிரச்சாரம் செய்வதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்தியாவில் ஐந்தரை இலக்கம் கணிஞர்கள் (0.55 million software engineers) இருக்கிறார்கள். இவர்கள் இந்த 1540 பேர்களின் பிரச்சாரத்தைக் கேட்டுக் கொண்டுக் குழம்பித்தான் போகப் போகிறார்கள். அல்லது குனிந்துதான் போகப் போகிறார்கள்.

7+ கோடி தமிழர்கள், தமிழ் மொழிதான் கணினிக்கு ஏற்றது என்று சொல்லவில்லை. தெலுங்கர்களும் சரி, சீனர்களும் சரி, அரபிக்காரர்களும் சரி, எண்ணிக்கையில் நிறைந்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் புரிந்திருந்த கணினி இயக்கம் சமற்கிருதக் காரர்களுக்குப் புரியாததால் இம்மாதிரி எழுதுகிறார்களா ? பிரச்சாரம் செய்கிறார்களா ?

இப்படித்தான் 'சமற்கிருதம் தேவ மொழி ' என்று பிரச்சாரம் செய்து நம்ப வைத்தார்களோ ? என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ?!

கணினியில் தம் மொழி வேண்டும் என்றால், அதற்கான செயலிகளை ஆக்கி, பயன்படுத்த வேண்டியதுதான்; அதற்கான பயன்பாடு இருந்தால்.

அதைவிட்டு விட்டு, ஆதாரமும் இல்லாமல், அடிப்படையும் இல்லாமல், பிரச்சாரம் செய்வது போல, கணினிக்கு முன்னால் உட்கார்ந்து 'ஃபோர்புசு இதழே நமக!, அதிலும் சூலை 1987 இதழ் நமக, நமக! ' என்று மந்திரம் போட்டுக் கொண்டிருந்தால், கணினியில் இருந்து சமற்கிருதம் வராது; புகைதான் வரும்!!

அன்புடன்
நாக.இளங்கோவன்