Pages

Saturday, April 28, 2007

பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து

பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து (29/ஏப்ரல்).

புதுவையில் பிறந்தவன் புலமையில்
புலன்களில் பழந்தமிழ்ப் பதித்தவனே!
புதுமையைப் புழங்கிடப் பொழிந்தனன்
புலர்தரு சுடரொளிக் கவிதைகளே!
புதுக்கிய தமிழினைப் பருகினர்
படர்ந்தனர் படையெனத் தமிழ்நிலமே!
புதுப்புதுக் கனவினைத் தொடக்கினை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!

மனிதரை மயக்கிய மடமைகள்
முழுதினை முகமற மிதித்தவனே!
குனிகொடு குணத்தினைக் குலத்தினில்
குலைத்திடக் குறைவறக் கொதித்தவனே!
இனிதுறு இயற்கையின் இயல்புகள்
இதமுடன் இலங்கிட இசைத்தவனே!
கனிமொழிக் களத்தினைக் கிளர்த்தனை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!

திரவிடம் தழைத்திடத் தமிழரைத்
திரட்டிய தமிழ்வழித் தளபதியே!
பரவியத் தமிழியம் பளிச்செனப்
பகைகளைப் பதைத்திடப் பழக்கினதே!
தரணியில் மகளிரைத் தடுக்கியத்
திரைகளை வெடுக்கெனத் துணித்தவனே!
திரவியக் குவியலை வெறுத்தனை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!

அன்புடன்
நாக.இளங்கோவன்
28/ஏப்ரல்/2007

Monday, April 09, 2007

சுடர்வழியே செய்தி: தொடர்ச்சி

4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப்
போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று
பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின்
கணிப்பு என்ன?

உள்ளுரும நுட்பியலைப் பொறுத்தவரை, என்றைக்கும் அதன்மேல் குமிழிகள்
இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அது சார்புடைய தொழில்.
அடிப்படையில் உள்ளுருமத் தேவைகள் பிற துறைகளின் ஏற்றத்தாழ்வையே
சார்ந்திருக்கும்.

இத்துறைகளின் உள்ளுருமத் தேவைகள் உள்ளூறினும் (Insourced),
வெளியூறினும் (Outsourced), நிறுவனங்களின் முதன்மைத் தொழிலின்
ஏற்றத்தாழ்வுகள் உள்ளுரும நுட்பக் குழுமங்களுக்கும் நுட்பியலாளருக்கும்
தாக்கத்தினை ஏற்படுத்தும். வெளியூற்றானது கரைக்குள் (onshore) ஆகினும்,
கரைகடந்தாகினும் (offshore) தாக்கம் எல்லா இடங்களிலும் இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு முறை பெருக்கத்தையும், ஒருமுறை
சுருக்கத்தையும் உ.நு துறை கண்டது. முதல் முறைப் பெருக்கம்,
2000 ஆவது ஆண்டை வரவேற்றது. அதைத் தொடர்ந்த சுருக்கமானது,
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தினால் ஏற்பட்டது.

அந்தப் பொருளாதாரத்தை நிலைக்குக் கொண்டுவரும் முனைப்பிலேயே
வெளியூற்றுகை அடிப்படை கையாளப்பட்டு இரண்டாவது பெருக்கம்
ஏற்பட்டது.

பெருமளவு கும்பனிகள் வெளியூற்றுகையை செயல்படுத்த எடுத்துக்
கொண்ட கடந்த 4 ஆண்டுகள் காலத்திலும் பெருக்கத்தின் முடுக்கம்
அதிகமாக இருந்தது இயல்பான ஒன்று.

குமிழி என்பதனை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும்.

1) பெருக்கத்தின் முடுக்கம் மேலும் வரும் வருடங்களில் அப்படியே
இருக்குமா? அதாவது முடுக்கம் குறைந்தால் அது குமிழின் வெடிப்பு
என்று கொள்ளப்படுமா?
2) சுருக்கம் ஏற்படுமா? அதாவது குமிழ் உடைந்து வெறுமை/வறுமை
ஏற்படுமா?

இவற்றை பல கோணங்களில் பார்க்க இருக்கிறது. செய்யும் சேவைகளின்
அளவு, நுட்பச் செறிவு, சேவைகளின் தரம், உலகப் போட்டிகளின் நிலை,
கொள்விலை அல்லது செலவு போன்ற பல்வேறு வகைகளில் இதனை அணுக
நிறையவே இருக்கிறது. இங்கு சுருக்கமாக எனது பார்வைகளைக் கூறுகிறேன்.
ஆயினும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது என்றே
எனக்குத் தோன்றுகிறது.

1) கடந்த முறை உலக அளவில் சுருக்கம் ஏற்பட்ட 2001/02, 2002/03
ஆண்டுகளின் போது, இந்தியாவைப் பொறுத்தவரை, முறையே 5%, 20%
வேலை வாய்ப்புகள் அதற்கு முந்தைய ஆண்டினை விட அதிகமாக இருந்தன.
அதாவது, 2000மாம் ஆண்டில் 47% வளர்ச்சி யடைந்த வேலை வாய்ப்புகள்
விகிதம் அதற்கு அடுத்த ஆண்டில் 5% ஆக குறைந்து போயின என்றாலும்
இருந்த வேலைகள் பறிபோய்விடவில்லை என்பதனை இது காட்டுகிறது.
சில உள் துறைகளில் வேலைகள் குறைக்கப் பட்டிருக்கலாம்.
ஆயினும், மொத்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை இழப்பு இல்லை.
இது இந்தியாவைப் பொறுத்தவரை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைப்
பொறுத்தவரை அங்கே நிறைய இழப்புக்கள் ஏற்பட்டது.

ஆக, உலகளாவிய அந்தச் சுருக்கத்திலும் இந்தியாவைப் பொறுத்தவரை
வேலைகளின் எண்ணிக்கை குறைவான அளவில் அதிகரித்தே இருந்தது.

2) புதிய வெளியூற்றுகைக் கொள்கையினால், 2003/04 ஆண்டில்
வேலைகளின் பெருக்கத்தின் முடுக்கம் 44% ஆக உயர்ந்தது. அதன் பின்னர்
தற்போது வரை ஏறத்தாழ சீரான 30% வருடாந்திர முடுக்கம் இருந்து
கொண்டே இருக்கிறது.

3) சொவ்வறைச் சேவைகள் ஏற்றுமதிக்கு இன்றைக்கு 650,000 பேர்கள்
உள்ளனர். இவர்கள் இந்த வருடம் $23பில்லியன் அளவு ஏற்றுமதியைச்
செய்துள்ளனர் (2006-2007). சொவ்வறை இயற்றுச் சேவைகளைப் (ites+bpo)
பொறுத்தவரை அதில் தற்போது 550,000 பேர் வேலையில் இருக்கின்றனர்,
இவர்கள் $8.3பில் ஏற்றுமதி செய்கின்றனர். (நான் கடுவறைச் சேவைகள் மற்றும்
உள்ளூர்ச் சேவைகளை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.)

மொத்த உ.நு துறையின் வருமானம் 48 பில்லியன் அமெ.வெள்ளியாக
இருக்கப் போகும் இந்த வருடத்தில் (2006-2007), சொவ்வறை மற்றும் அவை
இயற்று சேவைகளின் ஏற்றுமதி, 32பில்லியன்.

வரும் 2009/10 ஆம் ஆண்டில் இந்த இரண்டு துறையின் ஏற்றுமதியும்
32பில்லியனில் இருந்து 60பில்லியானக் ஆக எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் அப்படியே
இருந்ததால் இதனையும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

அதற்குத் தேவையான ஆள்கள் 850,000 சொவ்வறையர்கள் மற்றும்
1400,000 சொ.இ.சேவையர்கள் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.

இங்குதான் சரவல் தென்படுகிறது.

அண்மைய ஒவ்வொரு வருடமும் 30% பேர்களை புதிதாக வேலைக்குச்
சேர்க்கும் சொவ்வறைச் சேவை நிறுவனங்கள் அதே வேகத்தை தற்போதைய
2007/08 ஆம் ஆண்டிற்கும் எடுப்பர். அப்படித்தான் ஆள்சேர்ப்பு
நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படிச் செய்தால்,
2009/10ல் இலக்குத் தேவையான 850,000 பேர்களை நடப்பு 2007/08 லேயே
நிறைத்து விடுவர் (650*1.3 ~ 850).

பின்னர் 2008/09, 2009/10 ஆண்டுகளுக்கு புதிய சொவ்வறையரின் தேவை
குறையுமல்லவா?

இந்த நிலைக்கு முக்கிய காரணம் முன்னெச்சரிக்கையாக கும்பனிகள்
தங்கள் நிறுவனங்களில் தேவைக்கும் மேலே ஆள்களை எடுத்து
தற்போதே வைத்திருப்பதைத்தான் இது காட்டுகிறது.

முதல் நிலை, இரண்டாம் நிலை (Tier-1, Tier-2) கும்பனிகள்,
தங்கள் நிறுவனங்களில் ஏறத்தாழ 20-25% ஆள்களை வேலையில்லாமலேயே
பயிற்சி என்ற பெயரில் முன்னெச்சரிக்கையாக எடுத்து சும்மா வைத்திருக்கிறார்கள்.
அவர்களும் தினமும் கச்சேரிக்குச் சென்று வருவதைப் போல் போய்வருவார்கள்.
(பெரும்பாலும் இந்தக் கச்சேரிக் கூட்டம்தான் துறையின் ஆரவாரங்களுக்கு
'அதிகம்' சொந்தக்காரர்கள் என்பது வேறு விதயம்)

ஆக, உ.நு/சொவ்வறைத் துறையைப் (IT services)பொறுத்தவரையில்,

க) வரும் ஆண்டுகளில் சொவ்வறையர் ஆள் சேர்ப்பு குறையக்கூடும்.
உ) சொவ்வறைத் துறைக்கு முயன்றவர்கள் இயற்று சேவைகள் பால்
அதிகம் செல்ல நேரிடும்.

ஒரு வேளை உலகப் பொருளியல் இப்படியே சென்று கொண்டிருந்தால்,
மேலும் கும்பனிகள் ஆள்களை எடுக்கலாம்தானே என்று கேட்டால்,
ஆம் என்றுதான் சொல்ல முடியும்.

ஆயினும், அதனை அடுத்த ஆண்டுதான் சொல்லமுடியும்.

அமெரிக்கா மட்டுமே ஏறத்தாழ 60-65% சேவைகளை நுகர்கிறது
என்பதால் அந்நாட்டின் பொருளாதார, அரசியல் மாற்றங்களைப்
பொறுத்தே இதனை உறுதி செய்ய முடியும்.

இந்தக் கோணத்தில் பார்க்கும் போதும், கடந்த சுருக்கத்தினைக் கருத்தில்
கொள்ளும்போதும், ஒரு வேளை பொருளியல் மாற்றங்கள்
நிகழ்ந்தாலும், வேலைகளின் பெருக்க வேகம் அல்லது முடுக்கத்தில்
குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே தவிர, இன்றைக்கு இருப்பது பறிபோக

வாய்ப்புகள் குறைவு என்றே தென்படுகிறது.

தெய்வுச் சூழல் ஏற்படுமானால் அதைக் குமிழி உடைப்பு எனக்
கருதலாகாது என்பது என் கருத்து.

5) மேற்கண்ட இந்திய சொவ்வறைச் சேவைகளை தேசிய சொவ்வறைச் சேவையர்
சங்கத்தின் தலைவரான கிராண் கார்னிக், அவர் பொறுப்பேற்ற
காலத்தில் இவ்வாறு சொன்னார்.

"Indian software programming services are like a car mechanic repairing cars;
They can repair cars, but cannot design them! they are like roadside

mechanics"

நான் இதைப் படித்து இரண்டு நாள்கள் சிரித்து சிரித்து எனக்கு வாய் வலித்துப்
போனது. அவர் உ.நு/சொவ்வறை இயற்று சேவைகளைப் (ITES+BPO) பற்றி
என்ன சொல்லக்கூடும் என்று எண்ணிப் பார்த்தால் மேலும் சிரிப்புதான்
வருகிறது.

இந்தத் துறைக்கு உலகளாவிய போட்டி நிலவுவதாலும்,
CRM என்று சொல்லப் படுகின்ற நுகருறவாளல் என்பதனை, பயனரை
இம்சிக்க மட்டுமே பயனபடுத்துவதாலும், அப்படி இம்சித்து
நுகருறவாளுவதே CRM என்று நம்பப்படுவதாலும், தரக்குறைவு
என்பது பெரிதும் கண்டு கொள்ளப்படாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
(CRM நல்ல பயன்களைக் கொண்டது என்பதை மறுக்கவில்லை. ஆனால்
அதன் நடைமுறைப்பாடு என்பது முதிர்வானது என்று சொல்லமுடியாது.
அப்படி முதிர்வான உறவாளுதல் இருந்தால் விரைவான விற்பனை இருக்காது
என்று கருத இடமுண்டு)

பல காரணங்களால் நுகருறவாளல் என்பது பயனர்களுக்கு எரிச்சலைத்
தருகின்றவையாகவே இருக்கின்றன. இதை விரித்தால் நீளும். அந்த எரிச்சல்
இந்தியாவில் இருந்தால் என்ன? அமெரிக்காவிலேயே இருந்தால் என்ன?
இக்குறைபாடு எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற பொதுவான கருத்து.

அதனால் இந்தத் துறையும் இந்தியாவில் தொடரும் என்றாலும்,
பெருத்த கொள்விலைச் சரிவிற்குட்பட வேண்டி இருக்கும்.

சொவ்வறைச் சேவைகள் பல பொதினப் படிம (business model) மாற்றங்களைக்
கண்டுள்ளது. அதேபோல, அதன் இயற்று சேவைகளும் உலகளாவிய
போட்டிகளால், விலை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி
பொதினப் படிம மாற்றங்களைக் காணும்.

இந்த விலைக் குறைப்பிற்கு, உலகளாவிய போட்டிக்கு ஈடு கொடுக்கும்
வகையில் இந்திய நிறுவனங்களும் மலியத் தயங்க மாட்டார்கள் என்றே
எனக்குப் படுகிறது.

ஒரு புறம் விலைவாசியையும், மனைவிலைகளையும் ஏற்றி விட்டு விட்டு,
கொள்விலை குறைதலால் இந்தத் துறை சற்று அலங்க மலங்க ஆகக் கூடும்
என்பது ஒரு கண்ணோட்டம்.

ஆக, இந்தத் துறையும் போராடி, மலிந்து, தங்கும் என்பதாகவே எனக்குப்
படுகிறது.

அமெரிக்கப் பொருளியல் நிலைபாட்டிற்காக எடுக்கப் பட்ட இந்த
வெளியூற்றுக் கொள்கை மேலும் தொடரும் என்றுதான் கருத நிறைய
இடமிருக்கிறது. இதன் பயனைச் சுவைத்து, தமது பொதினப் படிமத்தை
மாற்றிக் கொண்ட வெளிநாட்டவருக்கு தற்போது இதனில் இருந்து
விடுபடுவதால் பயன்/பலன் இல்லை. அவர்களும் போட்டிகளுக்கு
ஆட்பட்டிருப்பதால் மேலும் கொள்விலைச் சரிவை ஏற்படுத்தித்
தங்களை நிலை நிறுத்திக் கொள்வர் என்பதாலும்,

இந்த வெளியூற்றுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்
இந்தியக் குழுமங்கள் மட்டுமல்லாமல், பன்னாட்டு நிறுவனங்கள்
பலவும் இருக்கின்றன என்பதாலும்,

இந்த வெளியூற்றுக் கொள்கையினால், இந்தியாவில் விற்பனையாகும்
வெளிநாட்டு (குறிப்பாக அமெரிக்க) இலத்திர & எண்மயப் பொருள்கள்
வெளிநாட்டவர்க்கு பெரும் வரும்படியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாலும்

இந்தத்துறை குமிழி உடைப்புக்கு ஆளாகாது என்றே எனக்குப் படுகிறது.

வேலைகளின் பெருக்கம் குறைந்து தற்போதைய அளவில்
அப்படியே போய்க் கொண்டிருக்கும் என்பது சொவ்வறைத் துறையிலும்,
அடிமாட்டு விலைக்கு சேவைகள் ஆற்றப்படும் என்பது
உள்ளுரும நுட்ப / சொவ்வறை இயற்றுச் சேவைத்துறையிலும் ஏற்படக்
கூடிய சூழல்களாகப் படுகிறது.

விளைவாக, அதிக நேரம் உழைத்தல், பகுதி நேர உழைப்பு,
மணிக்கு இவ்வளவு காசு என்றவாறான வேலைகள் பெருகும்.
முதல் நிலை வெளியூற்றுச் சேவையர் தங்களுக்குக் காசு கட்டுபடியாக
எடுத்த வேலையை மற்றொருவரை (அடுத்த நிலை வெளியூற்றுகை)
வைத்துச் செய்வது பெருகும். பல சிறிய நிறுவனங்கள் இந்தியாவிலேயே
இருக்கக் கூடிய பெரிய நிறுவனங்களுக்கு ஊழியம் பார்க்க வேண்டியது
மிகவும் பெருகும்.

வேலை பெருக்கத் தேய்வையும், மலிவையும் குமிழியாகக் கருதாமல்,
பொதினப் போக்கின் மாற்றமாக கருதக்கூடியதாக இருக்கும்
என்று எனக்குப் படுகிறது. அந்த மாற்றங்கள் சொவ்வறைத் துறையின்
சுவையைக் கூட்டுவதாக இருக்குமா, இல்லையா என்பதனை நாமே
புரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, April 03, 2007

சுடர்வழியே செய்தி

சுடர்வழியே செய்தி

முனைவர் இராம.கி ஐயா, சுடரைப் பிடித்துக்கொள் என்று தூக்கிப் போட்டவுடன்
சுடர் என்று ஒன்று தேன்கூட்டில் இருக்கிறது ஆனால் அப்படின்னா என்ன என்ற
தேடலுடன் அதனைப் படித்தேன். சுடர் நல்லதொரு முயற்சியாகப் படுகிறது.

இராம.கி ஐயா எனக்கிட்ட 5 வினாக்களும் மிகவும் சுவையானவை என்பதோடு
மிகச் செறிவானவையும் கூட. அதனாலும் இதனை எழுதுவதில் எனக்கு மிக்க
மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றிகள்.

இருப்பினும் அடுத்து சில நாள்களுக்கு என்னால் எழுத முடியாத சூழ்நிலை
இருப்பதால் 5 வினாக்களில் இரண்டரை வினாக்களை மட்டுமே தற்போது
முடிக்க முடிந்தது. ஒரு புதுக்கவிதையையும், வினா எண்கள் 4,5 ஐயும்
3/4 நாள்கள் கழித்து இதன் தொடராக எழுதுகிறேன். காலத்தாழ்விற்கு
மன்னிக்கவும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
--------------------------------------------------------------------------------------------------

1. நண்பர் சாகரனை அருகில் இருந்து பார்த்தவர்களில் நீங்கள் ஒருவர்.
அவருடன் நடந்த சுவையான நிகழ்வை நினைவு கூருங்களேன்.


கடந்த 2005-06ல் சில மாதங்கள் நான் சவுதி அரேபியாவின் அர்ரியாத் மாநகரில்
தங்கியிருக்க நேர்ந்த போது, அருமை நண்பர் கவிஞர் ஆசாத் வழியாக
அர்ரியாத்தில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில் ஒருவர் கல்யாண் என்கிற
சாகரன். கல்யாணை முதன்முதலாக அர்ரியாத்தில் நண்பர் இராசா அவர்களின்
இல்லத்தில் சந்தித்தேன். நண்பர் ஆசாத்தை நான் இணையத்தில் ஒரு சிறந்த
கவிஞராக அறிவேனாயினும் நேரில் பார்த்ததில்லை. அன்று, அவருடனும்
நண்பர்கள் இராசா, பாலராசன், கல்யாண் ஆகியோருடனும், இராசா அவர்களின்
இல்லத்தில் வாரவிடுப்பின் நள்ளிரவில் கூடி வெகு நேரம் அறிமுகத்தில் தமிழாடி

மகிழ்ந்த அந்த இரவு இனிமையானது. பின்னர் அடிக்கடி அந்த இனிமை
எமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

ஓரிருமுறை கல்யாணின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். அர்ரியாத்தின்
தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர், இலக்கிய ஆர்வலர்கள் பலர்
எனக்கு அறிமுகமானது முதலில் கல்யாண் இல்லத்தில் நிகழ்ந்த கூடுகையில்தான்.

கல்யாணுடன் பல சந்திப்புகள் இருந்த போதிலும், என் நினைவில் சட்டென
வருபவைகளுள் ஒன்று, ஒரு நாள் இரவில் நான், கல்யாண், பாலராசன் மற்றும்
இராசா என்று நால்வரும் பூங்கா ஒன்றில் (பெப்சி பூங்கா என்ற நினைவு) கூடி,

எறும்பே கடிக்காத புல்தரையில் அமர்ந்து நெடுநேரம் பேசி மகிழ்ந்தது.

நால்வருமே கணித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இணையத்தில் நிறையப்
புழங்கியவர்கள் என்பதாலும், தமிழார்வம் கொண்டவர்களானதாலும்,
சில அகவைகள் மூத்தவர்களான எனக்கும் நண்பர் பாலராசனுக்கும் குடும்பம்

சென்னையில் என்பதாலும், நிறைய நேரம் கழித்ததில்,
கரைபுரண்ட உரையாடல்கள் பல.

நான்கு பெண்கள் கூடிப் பேசினால், கேலியாக ஆடவர்
எப்படி கிசுகிசுப்பார்கள் என்பதனை எண்ணிப் பார்த்தபோதெல்லாம்,
நான்கு ஆண்கள் கூடிப் பேசுவதற்கும் பெண்டிர் பேசுவதற்கும்
என்ன வேறுபாடு இருந்து விடப் போகிறது? என்றே எனக்குப் பெரும்பாலும்
தோன்றும்.

நான்கு பேர் கூடினால், ஊர்வம்பு, கண்டது கேட்டது,
கதைகள் நகைகள், குறைகள் நிறைகள், பிடித்தவை(வர்) பிடிக்காதவை(வர்),
உள்/வெளிக்குத்துகள், கிசு கிசுக்கள், என்று இத்தனையும் பேசி, இதற்குள்
அரசியல்வாதிகளையும் இழுத்துப்போட்டு, இலக்கியத்தையும்
தொட்டுப் பார்த்து, சுவைத்துப் பார்த்த திரைப்படங்களையும்
பொய்யாகக் குறை சொல்லியெல்லாம் பேசாத பேச்சென்ன பேச்சு?

பெண்டிர் மட்டும் கூடினால் இதெல்லாம் தாண்டி இதற்கு மேல் என்ன
பேசிவிடப் போகிறார்கள்? என்று நான் "விளையாட்டாக" நினைப்பதுண்டு!

அத்தனையும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஏனோ பெண்களை
மட்டும் பேசவில்லை. அதோடு காலிப்பேச்சுக்களும் (empty tongue) எங்களுக்கு

"அப்போது" தெரிந்திருக்கவில்லை. அவ்விடங்களை இணையத்தமிழும்,
கலைச்சொற்களும், கொஞ்சம் நுட்பங்களும் பிடித்திருந்தன.

அரசியல்வாதிகள் யாரும் பேசக்கூடாது! - அத்தனையையும் அப்படியே எழுதிக்
கொடுத்துவிடவேண்டும் என்று சட்டம் போட்டால் நாடு எப்படி இருக்கும்
என்ற சிந்தனையை உங்களுக்கே விட்டு விடுகிறேன். குறைவான
நேரத்தில் நிறைய பேசி விட முடிகிறது; எமது அந்தச் சந்திப்பு
எனக்கு நினைவில் கலையாமல் இருந்தாலும் அத்தனையும் எழுதினால்
மிக நீளும் என்பதாலும், இணையத்திலே பலரும் அறிந்த, குறைந்தது
50 பேர்களைப் பற்றியாவது கதைத்திருப்போம் என்பதாலும், அவற்றை
அப்படியே எழுதினால் இணையம் என்ன ஆகும் என்ற கவலையினாலும்,
சிலவற்றை மட்டும் தொட்டுவிட்டு நான் அடுத்த வினாவிற்குள் செல்ல வேண்டும்.

தேன்கூடு என்ற திரட்டியை அன்றுதான் நான் அறிந்தேன்.
அதன் முதன்மைச் சிற்பி கல்யாண் என்றும் அவருக்குத் துணைச் சிற்பிகளாக

இருந்து அதன் சிறப்புகளுக்கு வலுவூட்டுபவர்களாக நண்பர்கள் இராசாவும்
பாலராசனும் இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.
தேன்கூடு வளர்ப்பில் கல்யாணின் எண்ணங்களை என்னால் எளிதில்
புரிந்து கொள்ள முடிந்தது. அடிப்படைத் திரட்டு, கதைப்போட்டி, கலைச்சொற்கள்

கொண்டு வருவது, குறியம் அமைப்பது போன்ற ஒவ்வொரு முனையலையும்
தெளிவாகவும், மிக நிதானமாகவும், அதேவேளையில் இயல்பாகவும்
திட்டமிருந்ததை என்னால் உணரமுடிந்தது. காலவரையறை என்னைக் கவர்ந்தது.

"yepe - thenkoodu project was a carefully planned "natural" approach of Kalyan
that was close to the approach of the technical process side of RUP (Rational
Unified Process) which is made up of evolutionary iterative and incremental
development model."

கல்யாண் தேன்கூடு பற்றி எனக்குச் சொன்ன போது இப்படித்தான் எனக்குப்
புரிந்தது. எதிலும் ஒரு ஏரணமும், திட்டமும் இருப்பின் அது அனைவரையும்
கவர்கிறது அல்லவா? அதனை இவரின் தமிழார்வத்தில் கண்டேன் - என்னையும்
கவர்ந்தது.

மேலே ஆங்கிலத்தில் எழுதிய நான்கு வரிகளுக்குக் காரணம் இருக்கிறது.
என்ன காரணம் என்கிறீர்களா? வேறொன்றும் இல்லை - எனக்கு அவ்வரிகளுக்குத்
தமிழ் தெரியவில்லை. என்னால் அவற்றைத் தமிழில் எழுத முடியவில்லை.
உண்மை; பொய்யில்லை. இதனைப் படிக்கும் நண்பர்கள் இதனைத் தமிழில்
ஆக்கித் தந்தால் மகிழ்வேன். (ஆனால் ஒரு கட்டு; இராம.கி ஐயா போட்டிக்கு
வரக்கூடாது :-) )

ஆக்க முனையும் நண்பர்கள் "இவன் இங்கிலீசே சரியில்லை -
இதைப்போய் எப்படித் தமிழாக்குவது என்றெல்லாம் சொல்லப்படாது :-).
இதையெல்லாம் ஏன் தமிழாக்கவேண்டும் என்று சொல்பவர்கள் இந்த
ஆட்டத்திற்கே வரப்படாது :-)

இப்படி நான் எழுதுவதற்கும் காரணம் உண்டு. அன்றைய கூடுகையில் (get
together) சொவ்வறைக்காரர்களாகிய நாங்கள் நால்வரும் கலைச்சொற்கள் மீட்பு,
கலைச்சொற்கள் காணல் பற்றிப் பேசும்போது, நாங்கள் புழங்கும் இப்படியான
பல வாக்கியங்களையும் சொற்களையும் தமிழாக்க முனைந்து பெருமளவும்
தோற்றுக் கொண்டிருந்தோம். நாம் தோற்கிறோம் என்று ஒப்புக் கொள்வதும்,
ஏனிதைத் தமிழாக்கவேண்டும் என்ற வினா எழும்பும்போது, வேண்டும் வேண்டாம்
என்ற குரல்களுக்கு இடையே இருக்கும் மிக மெல்லிய திரையை
உணர்வதும் முதிர்வான சிந்தனைக்களத்தைச் சேர்ந்தது அல்லவா? அந்த
முதிர்வினைக் கல்யாணிடம் கண்டேன்; மற்ற நண்பரிருவரிடமும் கண்டேன்.
அன்றிரவில் என்னைக் கவர்ந்த பல விதயங்களில் இரண்டாவதிது.

நீளம் கருதி, மூன்றாவதொன்றைச் சொல்லி அடுத்த வினாவிற்குச் செல்கிறேன்.

கடந்த திசம்பரில் கல்யாண் சென்னை வந்திருந்தபோது, "அராதா பார்க் இன்"
விடுதியில் நானும் நண்பர் பாலராசனும் கல்யாணுடன் மதியத்தை கழித்த போது
களித்த அந்த மூன்று/நான்கு மணிநேரங்கள் இனிமையானவை. இதிலும் பலவற்றைப்
பேசினாலும், நான் சொல்ல வந்தது அவரின் ஓர் கனவை.

"உலக இணையத்தில் ஆங்கிலச் சொவ்வறைகள், நிரலிகள் பல
பரியாகக் கொடுப்பது போல, தமிழில் அவை இருக்கும் அளவிற்கு யாரும்
கொடுப்பதில்லை. அவ்வாறு பரியாகக் கொடுப்பவர்கள் சிலர் மட்டுமே.

(மிஞ்சி மிஞ்சிப் போனால் எழுத்துருக்களை வாரி வாரிக் கொடுக்கிறார்கள்;
குறியீட்டையும்தான் ;-) - இது நான் சொன்னது )

நிரலிகள், சொவ்வறைகள் செய்வோர் முழுமையான செய்-நிரலிகளைக்
கொடுப்பதோடு விட்டு விடுகிறார்கள்.

ஆனால், அந்நிரலிகளைச் சமைக்கும் உள் ஏரணங்களும், உட் கூறுகளும்
(basic logics, some basic components, certain libraries, some routines) பெருஞ்
சூக்குமங்களைப் போல வைத்துக் கொள்கிறார்கள்.

சிறு சிறு நிரலிக் கூறுகளும் திறவூற்றில் இருந்தால், தமிழ் நிரலிகள்
செய்ய விழையும் ஒரு சொவ்வறையர் தமிழ் நிரலிகள் செய்யத் தேவையான
அடிப்படைகளை விரைவில் அறிந்து கொண்டு களத்தில் குதிக்கத் தூண்டுதலாக
அமையும்.
"
கல்யாணின் இந்த எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு உண்மையான
நுணுக்கமான கருத்து என்பது எனக்குத் தோன்றியது.

ஆமாங்க - தமிழ் எழுத்துருக்களைச் செய்வது எப்படி
என்ற ஒரு நூலை நான் தேடியபொழுது பார்த்ததில்லை. (தற்போது
ஒரு வேளை அங்கொன்று இங்கொன்றாக இருக்கலாம்.)

இன்றைக்கு ஒரு வலைப்பக்கத்தை யார் தயையும் இல்லாமல்,
இணையத்தில் பரியாகக் கிடைக்கும் வரைவுகளைக் கொண்டே அமைத்து
விடலாம். "எண்ணி"களை ஏற்றிக் கொள்ளலாம். பட்டிகளை வகை வகையாகத்
தேர்ந்தெடுக்கலாம்.

தமிழைப் பொறுத்தவரையில், இரட்டை-மொழிப் பயன்பாடு,
பல்-குறியீட்டு ஏற்புமை, இலக்கண அடிப்படைகள், சொற்திருத்தும் ஏரணங்கள்
போன்றவற்றை மூல நிரலிகள் அல்லது அவற்றைப் பற்றிய எழுத்துக்களை
வணிகமாகவும், பரியாகவும் செயல்படும் தமிழ்க் கணிஞர்கள்

பரப்புவார்களேயானால் நிறைய சொவ்வறையர் தமிழ் சார்ந்த நிரலிகள் எழுத முன்வருவார்கள் என்ற அவரின் சிந்தனை எனக்கு நல்லதாகப் பட்டது. நண்பர்கள் மீண்டும்
கவனிக்க வேண்டும் - முழுமூலத்தையும் கொடு அல்லது முக்கிய மூலத்தைக்
கொடு என்பதல்ல; பொது மூலமும் அடிப்படை மூலமும் பெருகின்
அவற்றைத் திரும்பத் திரும்ப ஒருவர் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை
அல்லவா? அது தமிழ்ப் பரி நிரலிகள் பெருக வாய்ப்பாக அமையும் அல்லவா?
தமிழ்ச் சந்தையும் அகலக் கூடுமல்லவா?

தேன்கூட்டில் இப்படியொரு களத்தை அவர் ஏற்படுத்தப் போவதாக
எங்களிடம் பகிர்ந்து கொண்டார். தேன்கூட்டை தற்போது நடத்துபவர்கள்
இதனைக் குறித்துக் கொண்டால் கல்யாணின் எண்ணம் ஒன்றிற்கு வடிவம்
கிடைக்க ஏதுவாக இருக்கும்.

தேன்கூட்டைத் தாண்டி, கல்யாண் நினைவாக இணையக் குமுகம் சார்பாக ஏதேனும் செய்ய முன்வருபவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளலாம். ஒரு அகண்ட திறவூற்றை ஏற்படுத்தி சி, யாவா, பிஎச்பி, மற்றும் தரவகங்கள் சார் நிரலிகளையும், நிரலி மூலங்களையும் கிடைக்கச் செய்யலாம். வழக்கமான நிதியுதவி, அறக்கட்டளை, ஏழைப்பிள்ளைகளுக்குக் கல்வி போன்றவற்றை விட இது பயன் அதிகம் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பது
எனது பரிந்துரை.

பெப்சி பூங்காவிலாவும் சென்னை விடுதியிலுமான எங்கள் நால்வரின் கூடுகை
நினைவில் நிற்கும் இனிமையானதொன்று.

-----------------------------------------------------------------------------------------

2. திராவிட அரசியல் நீர்த்துப் போய்விட்டது என்று நான் சொல்லுவதை முற்றிலும்
மறுக்காமல், அதே பொழுது ஏற்றுக் கொள்ளாமலும் நீங்கள் இருப்பீர்கள்.
இனிமேலும், திராவிடக் கட்சிகளின் அரசியல் நம்மூரில் எடுபடும் என்று
எண்ணுகிறீர்களா?

தெனாலி என்ற திரைப்படத்தில் கமலகாசன் வகைவகையான பயங்களைப்
பாட்டாகப் பாடுவார். அது போல தமிழகத்துக்கு இன்றெல்லாம்
முல்லைப் பெரியாறை நினைத்தால் கேரளபயம், பாலாறை நினைத்தால்
ஆந்திரபயம், காவிரியை நினைத்தால் கருநாடகபயம், கடற்கரையை நினைத்தால்
மீனவர் பயம், மீனவரை நினைத்தால் சிங்களபயம், சிங்களத்துக்கு வடக்கே
என்றால் என்னென்னவோ பயம் வருகின்றன. இந்த பயமெல்லாம் எதற்காக
என்றால் அங்கங்கே வாழும் தமிழர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று!

திராவிடக் கட்சிகள் குறிப்பாக பெரியார் காலத்திய தி.க மற்றும் தி.மு.கவினால்
சில பல நன்மைகள் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்டன என்பதனை
பெரும்பாலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில்,
முக்கியமான பலவற்றில் சலிக்கும் அளவிற்குப் பல குறைகள் காணப்படுவதே
இந்த அரசியல் தேவையா என்பதனை சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கல்வி, பண்பாடு, நேர்மை, தொலைநோக்குச் செயல்கள், ஒற்றுமை, மொழி, மாநில
உரிமை, சாதியம், வாழ்க்கைத் தரம் என்ற இவற்றில் பெரும்பிழைகளைச் சுமந்து
தமிழகம் போய்க் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தற்போதைய ஆட்சிகளின் பேரில் சினம் வரும்போதெல்லாம் மக்களுக்கு
மாற்று எண்ணம் வருகிறது. மாற்று எண்ணம் தேசியக் கட்சிகளை எண்ண
வைக்கிறது. அதே நேரத்தில் மாற்று என்ணம் தூய அல்லது மேலான
அரசியலையும் வேண்டுகிறது.

என்னைப் பொறுத்தவரையில் சரவலே அங்குதான். மாற்றுக் கட்சி
என்னவென்று பார்க்கலாமே தவிர, மேலான அரசியல் செய்யும் கட்சி
வேண்டும் அல்லது தூய கட்சி வேண்டும் அல்லது தூய அரசியல்வாதிகள்
வேண்டும் என்று கேட்டால் அது மிகையான எதிர்பார்ப்பாகவே இருக்கும்.

திராவிடக் கட்சிகள் திராவிடம் என்ற பெயரில் குமரிக்கும் சென்னைக்கும்
இடையே மட்டும் ஆட்சி செலுத்துகின்றன. அதற்குத் வடக்கே அணுவளவும்
திராவிடம் இருக்கிறார்ப்போல தெரியவில்லை.

திராவிடக் கட்சிக்கு முந்தைய தேசியக் கட்சியான பேராயம்
வடவேங்கடத்தையும் இன்ன பிற கருநாடக கேரள பகுதிகளையும்
வாரி இறைத்து விட்டது. அந்தத் தேசியக்கட்சித் தலைவர்களுக்கும்
ஏதோ ஒரு "பயம்".

திராவிட அரசியலால் இப்பகுதிகளை மீட்க முடியவில்லை என்று
குறைப்பட்டுக் கொள்கிற தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு திராவிட அரசியல்
சலிப்பைத் தந்தால், இந்தக் காரணத்திற்காக தேசியக் கட்சிகளை
எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற அய்யம் எழத்தான் செய்கிறது.

கல்வித்தரம் சீர்குலைந்து விட்டது என்பதும் அதற்கு முதன்மையான காரணங்கள்
திராவிடக் கட்சிகளின் கல்வித்தரகும், தாய்மொழிக் கல்வியை
ஏழைகள் கல்வியாக ஆக்கிவிட்டமையுமே ஆகும்.

இதற்காக தேசியக் கட்சி ஒன்றைப் பிடிக்கலாம் என்று பார்த்தால்,
அவை ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில்தான் நிறைய கல்விச்சாலைகள்
இருக்கின்றன என்றும் இங்குதான் கல்வித்தரம் அதிகம் என்றும் வெளிநாடுகளில்
எல்லாம் பேசி முடிவெடுத்து இங்கு வந்து வணிகம் துவங்குகிறார்கள் என்று
அறியும் போதும், வெளிமாநிலங்களில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு
அதிகம் உட்பட்ட மாநிலங்களிலும் கல்வித்தரம் தமிழகத்தை விட பெருமாண்டமாக
இல்லை என்பதனை உணரும் போதும் தேசியக்கட்சிகளை
ஏற்றுக் கொள்வதில் சற்று அய்யம் எழத்தான் செய்கிறது.

சாதி ஒழிக, சாதி ஒழிக என்ற திராவிடக் கட்சிகளின் குரல்கள் தமிழகத்தைச்
சீர்படுத்தும் என்று நம்பி இருந்து பின்னர் அது 'உன் சாதி ஒழிக' என்ற ஓசையாக
மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்; ஆயினும் அந்தக் குரலைக்கூட
விடாத தேசியக் கட்சிகளின் அமுக்குணித் தனத்தையும் அவர்களின்,
முன்நாள்களையும் தற்போதைய நாள்களையும் பார்க்கும்போது இந்தக்
காரணத்திற்காகவும் தேசியக் கட்சிகளை ஏற்றுக் கொள்வதில் சற்று அய்யம்
எழத்தான் செய்கிறது.

திராவிடக் கட்சிகளால், நடுவண் அரசிடம் இருந்து மாநிலத்திற்குத்
தேவையான பெரும் திட்டங்களைப் பெற முடியவில்லை என்று யோசிக்கையில்,
தான் ஆண்டால் எல்லாம் வரும் என்றும் தான் ஆளாவிட்டால் எதுவும்
கிடைக்காது போங்கள் என்று சொல்லாமல் சொல்லும் தேசியக் கட்சிகளை
ஏற்றுக் கொள்வதில் சற்று அய்யம் வரத்தான் செய்யும். அதோடு,
பேராயம் இந்தியா முழுதும் தன்னிகரில்லாமல் கோலோச்சிய காலத்திலும்,
தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் நடுவண் அரசில் வீற்றிருந்தனர்
என்று எண்ணும்போதும் ஏதோ ஒரு வெறுமை ஏற்படத்தான் செய்கிறது.
தமிழகம் தமிழர்கள் என்று வரும்போது ஏதோ ஒர் நெருடல் இருந்து
கொண்டே இருப்பதாகவேப் படுகிறது.

தனக்கு ஒப்பார் யாரும் இல்லை என்ற நிலையில், பெருங்களிறு போல
இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் பேராயம் ஆண்டபோது
இருந்த சில தன்மைகளை, தற்போது போட்டிகள் தரும் பல கட்சிகளோடு
எதிர்த்து நின்று அச்சில தன்மைகளை பேராயமோ வேறொரு கட்சியோ
தரும் என்று எண்ண முடியவில்லை.

காரணம் அவர்கள் மாநிலத்திற்கு ஒரு நிலையை எடுக்கிறார்கள்.
பொதுவுடைம, பா.ச.க, பேராயம் என்று எல்லோரும் இப்படித்தான்
இருக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளால்தான் ஊழல் பெருகி ஓடுகிறது என்ற எண்ணம்
நமக்கு ஏற்படுவது இயல்பு. அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும்
இம்மாதிரியான ஊழல், இதை விடக் கூட குறைய இருக்கும் ஊழல்களுக்கு
யார் காரணம் என்று பார்க்க வேண்டியதிருக்கிறது. இதை நான் வெறும்
ஒப்புமைக்காக சொல்லவில்லை. வக்காலத்து வாங்கவும் சொல்லவில்லை.

இந்த ஊரில் விலைமகள் பற்றாக்குறை என்றால் அண்டை ஊர்
அணி அணியாய் ஏற்றுமதி செய்வது போல, இங்கு ஊழல் பற்றாக்குறை
என்றால் அண்டையில் பொங்கும் ஊழல் இங்கே வழியும். இதற்கு ஒரு
முடிவு கிடைக்காது. ஏனெனில் இரண்டுமே விரைவில் பரவும் ஒழுக்கக் கேடுகள்.
இந்திய ஒழுக்கக் கேட்டின் பல பகுதிகள் தமிழகத்திலும் பரவியிருக்கின்றன.

தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசியவர்கள், இன்றைக்குத் தண்ணீர் வேண்டிக்
கெஞ்சுகிறார்கள்.

கல்வி கற்றால் சாதியம் குறையும் என்று கருதிய எல்லாச்
சிந்தனையாளார்களையும் முட்டாளாக்கிய நமது தமிழ் உயர் அதிகாரிகள்
எல்லாம் தத்தம் சாதிக்காக வரிந்து கட்டுவதை எல்லாம் பார்க்கும் போது
வேதனையாகத்தான் இருக்கிறது.

மகளிர் உரிமைக்காகப் போராடினார்கள். மகளிர் பலர் அரசியலில்
முன்னணியில் இருக்கிறார்கள் இந்தியா முழுதும். ஆனால், அவர்களின்
அரசியலைக் கூர்ந்து நோக்கினாலும் ஆடவர் அரசியலின் அதே
அழுக்கு அவர்களிடமும் இருக்கிறது என்பதனை மேடைப்பேச்சு,
அரசியல், நிர்வாகம், குமுகம் என்ற எல்லா நிலையிலும் அவர்களும்
காட்டி வருகிறார்கள்.

ஆக, குறிப்பிட்ட இயக்க அரசியல் காரணம் மட்டும் அல்லாமல்
வேறு ஏதோ பல "மூலக் கேடுகள்" இந்தியா முழுமையும் பரவி
இருப்பதாகவேத் தெரிகிறது.

ஒருபுறம் திராவிட அரசியல், தேசிய அரசியல் என்று பேசும்போது,
தமிழ் இயக்கங்கள் என்ற பெயரில் சில கட்சிகள் அரசியல் செய்வதைக்
கண்டிருக்கிறோம்.

இவர்களில் சிலர் கட்சியின் பெயரில் தமிழை வைத்துக் கொண்டு
தமிழர்கள் பயணம் செய்யும் இரயிலுக்கே குண்டு வைப்பார்கள். நமக்கு
இவங்க தத்துவம் ஒன்றுமே புரியாது. இல்லாவிடில் காட்டிலே கட்டைப்
பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருப்பார்கள்.

வன்முறை அரசியல் செய்யாமல், நல்ல சிந்தனைகளைக்
கொண்டு நயமான அரசியல் செய்வோரும் உளர்தான். ஆயினும், அவர்கள்
ஒன்றாய் இருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதான்.

கட்சியின் பெயரிலேயே தமிழ்த்தேசியம் இருக்கும்; ஆனால், மா.கோ.இரா என்ற
மலையாளிக்கு ஒவ்வொரு மேடையிலும் போற்றி பாடிக் கொண்டிருப்பார்கள்.
அதற்குத்தான் திராவிட அரசியல் இருக்கிறதே இவர்கள் வேறு எதற்கு என்று
கேட்கத் தோன்றுவதை தவிர்க்க முடியாது.

இதையெல்லாம் விட நகைச்சுவை கலந்த வேதனை என்னவெனில், ஆன்மீகம்
என்ற பெயரில் நடக்கும் அரசியல்தான். சங்கர மடத்தின் சார்பாக
சங்கராச்சாரியார் ஒரு அரசியல்வாதிக்குத் தேர்தலில் சுவரொட்டி ஒட்டினார்
என்றால், மதுரை ஆதீனம் அடுத்த தேர்தலுக்கு ஒட்டுவதை நாம்
கண்டிருக்கிறோம். பற்றற்ற(?) இந்தத் துறவிகளும் நமது அரசியல் பற்றை எடுத்து விடுகிறார்கள்.

எது எப்படியோ, தைலாபுரம் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும்,
போயசு தோட்டம் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும்,
கோபாலபுரம் ஒரு மாமண்டலமாகவும், ஆகி விட்டன.
கலிங்கப் பட்டியின் பொருளாதார மண்டலமும் பெயர் போனது.

சங்கரமடத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் சக்தி என்னவாக
இருந்தது?

ஒவ்வொரு சைவ ஆதீனமும் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம்தானே!
அங்கேயும் சாதியமும், அரசியலும் தறி கெட்டு ஓடத்தானே காண்கிறோம்.
(நான் எல்லோரையும் சொல்லவில்லை. சில பல ஆதினங்கள் அப்படித்தானே
இருக்கிறதா அறிகிறோம்)

சைவ ஆதீனங்கள், சங்கர மடங்கள் ஆகியவற்றின் சிறப்புப் பொருளாதார
மண்டலங்களிற்கு எந்த வகையில் வீரமான மணியாரின் சிறப்புப் பொருளாதார
மண்டலம் தாழ்ந்திருக்கிறது?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஓரளவேனும் புழக்கத்தில் இருக்கும்
இந்த மண்ணின் மதங்கள் நெறிகள் என்று பார்த்தால் சிவமதமும் விண்ணவ
மதமும்தான். சிவம் விண்ணவம் தவிர்த்த அனைத்து மதங்களும் அயல்நாட்டு
மதங்களே(வைதிக இந்து உட்பட). வைதிக இந்து மதம் உருவான காலக்கட்டத்திய
தமிழ்நாட்டிற்கு, வட நாடு அயல்நாடுதானே. அத்தனை அயல்நாட்டு
மதங்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன.

(வைதிக இந்து மதத்தின் படையெடுப்பை எதிர்க்க முனைந்தோர் யாவரும்
சிவ விண்ணவ நெறிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறார்களே, அதைப்
பற்றி மட்டுமே ஆயிரம் நூல்கள் எழுதலாம். வைதிக இந்து மதத்தின்
படைக்கலன்களில் ஒன்றான வடமொழியைக் கலந்து கலந்து எழுதி
அதே வேளையில் அதனை எதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் நிலை கண்டு
நான் பரிதாபப் படுவதுண்டு.)

இவர்களை எல்லாம் எண்ணுகையில் மூப்பனார் மற்றும் அவர் போன்ற
பேராயக்காரர்களின் பரம்பரை மண்டலங்களையும் எண்ணாமல் இருக்க
முடியவில்லை.

பழைய பணக்காரர்களின் பரம்பரைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின்
தன்மையும், பஞ்சத்தில் ஏற்பட்ட புதிய பணக்காரர்களின் சிறப்புப் பொருளாதார
மண்டலங்களின் தன்மையும், மத்திய அரசின் திட்டங்களின்படி வந்து
கொண்டிருக்கும் பன்னாட்டவரின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின்
தன்மைக்கும் யாதொரு வேறுபாடும் இருப்பதாக என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

இந்த மண்டலங்களின் பண்ணையார்கள் எல்லோரும்
ஒன்றாய்ச் சேர்ந்து கொள்வார்கள்; ஒற்றுமை என்பது நல்லதுதானே?!

திராவிடம், தேசியம், தமிழ் அரசியல் வாதிகள் யாவரிடமும் விரவிக் கிடக்கும்
ஒரு குணம் "ஓயாப்பகை", இந்தப் பகை இந்த மண்ணின் இயல்பு. இன்றைய
தமிழக அரசியல் பகைகளின் தன்மையும் போக்கும், சங்க காலத் தமிழகத்தின்
அரசியல் பகைகளின் தன்மைக்கும் போக்குக்கும் எனக்கு அவ்வளவாக
வேறுபாடு தெரியவில்லை.

பகை என்று வந்தால் "தமிழனுக்கு முன் தமிழன் தெரியமாட்டான்" என்பது
ஆயிரங்காலத்துப் பயிராக (களையாக) நம்மிடம் இருக்கிறது.
சங்ககாலப் போர் ஒன்றில் சேரன் பாண்டியக் குறுநில மன்னன் ஒருவனை
வெல்லுகிறான். அந்தச் சிற்றரசனின் கொடி மரத்தை வெட்டி, கோட்டை
கொத்தளங்களையெல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு , பேருவகையில் நாடு
திரும்புகிறான். அப்படித் திரும்புபவன் கொடி மரத்தைத் தன் நாட்டிற்கு
வெற்றிச்சான்றாக யானையில் (யானைகளில்) கட்டி இழுத்துச் செல்கிறான்.
அவன் அந்த மரத்தை யானையோடு கட்டியது கயிறால் அல்ல; மயிரால்.
போரில் தோற்ற மன்னனின் குலப் பெண்டிரின் மயிரால்!. தோற்ற மன்னனின்
குடி/குலப் பெண்கள் அனைவரையும் நிற்க வைத்து அவர்களின் கூந்தல்களை
அரிந்து அதனைப் பெரும் வடக்கயிறுகளாக ஆக்கி அதனை மரத்தோடும்,
யானையோடும் முடிந்து இழுத்துப் போகும் அவனின் உவகையின் வகையை
என்ன சொல்ல? (இந்தச் சேதி கொண்ட புறப்பாடலும், அதன் மன்னர்கள்
பெயரும் என் நினைவில் சற்றுக் குறைவாக உள்ளன. வரும் நாள்களில்
அதனைத் தேடி எடுத்து எழுதுகிறேன்)

இதில் நான் சொல்ல வருவது என்ன வெனில் வென்றவனும் தோற்றவனும்
தமிழன். வென்றவனுக்கு தோற்றவனின் பெண்டிர் மயிர் எதிரி மயிராகவேத்
தெரிந்திருக்கிறது. "தமிழச்சியின் மயிர்" என்ற உணர்வைத் தரவேயில்லை.

சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டே
அழிந்திருக்கின்றன. தமிழ் மண்ணிற்குப் போதிய முகவரி கிடைக்காமற்
போவதற்கு இந்த ஓயாப்பகை மிக முக்கிய காரணம்.

கங்கை கொண்டதிலும் கடாரம் கொண்டதிலும் எனக்கு ஏற்படும் உவகை
தலையானங்கானத்துப் போரில் ஏற்படுவதில்லை.

இது ஒரு ஒன்று படாக் குமுகமாகத் தெரிகிறது பல நேரங்களில் எனக்கு.
தற்போதைய அரசியல் மன்னர்களையும் சாதிகளின் ஆதரவுகளையும்
சரியாக ஆய்ந்து பார்த்தால் சங்க காலப் பகைகளின் தன்மைகளோடு
ஒப்பிட முடியும் என்று எண்ண இடமிருக்கிறது.

தற்காலங்களில் தமிழக நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழநாட்டுத் தமிழர்களுக்கும்
அரசியல் காரணங்களால் உறவு மிகக் குறைவாக இருக்கிறது. சட்டப்படியும்
பல இன்னல்கள் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணில் உள்ளது. இதைத்
தாண்டி அயல் நாடுகளில் ஒன்றாக வாழக் கூடிய சூழல் உள்ள இடங்களில்
இரு நாட்டுத் தமிழர்களுக்கும் ஒரு அணுக்கமான ஒற்றுமை உணர்வு
உண்டா, தமிழன் என்ற உணர்வு உண்டா என்று எண்ணும்போது
எனக்கு விடை தெளிவாகக் கிடைக்கவில்லை என்பது உண்மை.

"வெறும் மேடைத்தமிழில் வாழும் உறவுகளாகவே எனக்குப் படுகிறது".

இன்னொரு முக்கிய விதயம் சான்றோர்கள் பற்றியது. சங்ககாலப் பகைகளை
ஆற்றுப் படுத்துதலில் சான்றோர்களின் பங்கு ஓரளவு இருந்திருக்கிறது.
கோவூர் கிழார், அவ்வையார், கபிலர் போன்றோர் நிறையவே இருந்திருக்கிறார்கள்.
திராவிடம் வளர்வதற்கும் தமிழியச் சான்றோர்கள் துணை இருந்திருக்கிறது.
ஆயினும் தற்போதையச் சூழலில் சான்றோர்களும் இருக்கிறார்கள் என்று
ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், "சான்றோர் அரங்கு நிறைந்து இருப்பதாகக்
கருதமுடியவில்லை".

ஓயாத ஒழியாத உட்பகை, இந்திய சட்ட திட்டங்களுக்கும் அதன் வேகத்திற்கும்
கட்டுப்பட்ட தமிழ்க் குமுக ஒழுக்கம், புதுவடிவம் எடுத்துக் கொண்டுள்ள
சாதியம், இயன்நெறிகளை விடுத்து அயல் நெறிகளைப் புழங்கும் குமுகம்,
தம்மை விட அயலதுமேல் கொண்டுள்ள நிலைத்த ஆர்வம், என்ற இவையெல்லாம்
பார்க்கும் போது தமிழகத்தைப் பொறுத்தவரை 'திராவிட அரசியல்',
'தேசிய அரசியல்', 'தமிழிய அரசியல்' என்ற பல அரசியல் அடிப்படைகளும்
ஏறத்தாழ ஒரே தன்மையத்தன என்றே கருத முடிகிறது.

எடுத்துக் காட்டாக, அண்மையில் முளைத்த தே.மு.தி.கவின் செயல்பாடுகளைப்
பார்க்கவேண்டும். அக்கட்சிக்கு ஏதேனும் சித்தாந்தம் உண்டா?
அதே பகட்டு அரசியல், அதே தன்னல அரசியல், அதே பண அரசியல்,
அதே ஊழற்கூட்டுக்கள், திராவிட அரசியலும், தேசிய அரசியலும்
எப்படித் தேர்தலை எதிர்கொள்கின்றனவோ அதே பாணியில்தான்
அரசியல் செய்கிறது. மற்றவற்றின் மேல் உள்ள வெறுப்பால் இது வளர்கிறதே
தவிர, இதன் சித்தாந்தத்தில் மக்கள் மயங்கினதால் அல்ல.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் பலரையும்
மனமகிழ்வு கொள்ளச் செய்தது. ஆனால் எனக்கு முழுமையான
மன நிறைவு இல்லை. அரை நிறைவுதான். ஏனெனில், அர்ச்சனை
என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன.

ஒன்று, யார் அர்ச்சனை செய்யலாம் என்பது குறித்தது; இன்னொன்று
எப்படி அர்ச்சனை செய்வது அல்லது எதனால் அர்ச்சனை செய்வது
என்பது.

"யார் அர்ச்சனை செய்யலாம்" என்பது "உரிமை" குறித்தது.
அந்த உரிமையை திராவிடக் கட்சியான தி.மு.க பெற்றுத்
தந்துவிட்டது சட்டத்தின் மூலமாக. அந்த வரையில் திராவிட அரசியல்
காலங்கள் ஆயின போதிலும் அதனை அதன் வெற்றியாகக் கருதலாம்.

ஆனால், எதனால் அர்ச்சனை செய்வது என்பது "உணர்வு" குறித்ததும்,
நெறி குறித்ததும், பயன் குறித்ததும் ஆகும். இதற்கு இன்னும்
திராவிட அரசியலால் விடை காண முடியாதது
திராவிட அரசியலின் தோல்வி என்று கருதலாம்.

என்னைப் பொறுத்தவரையில், வடமொழியில் செய்யப்படும்
அர்ச்சனையை வைதிகப் பார்ப்பனர் செய்தால் என்ன?
பழந்தமிழ்ப் பறையனார் செய்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான்.

தமிழ் அர்ச்சனை வரைவுகள் செய்யப்பட்டு, அதுவே அர்ச்சனை
முறை என்று ஆக்கப்பட்டு அனைத்து சாதியினரும் அதனை
செய்யலாம் என்றால்தான் அது முழு வெற்றி. இல்லாவிட்டால்,
அது "முழுத்தோல்வி".

இன்றைக்கு வைதிகத்தை ஒழுகும் பார்ப்பனருக்கு மட்டும்
தெரிந்த வடமொழி பழந்தமிழ்ப் பறையனார் முதல் பண்டாரங்கள் வரைப்
பெருகி மேலும் தமிழ் நசியத்தான் இது பயன்படும்.

இந்தக் குறையை யார் மேலும் சுமத்திவிட முடியாது என்றுதான்
எனக்குத் தெரிகிறது. சில ஆதினங்களில் இதற்கான முயற்சிகள்
எடுப்பதாகத் தெரிகிறது. இவர்களின் முயற்சிகள் எப்படி
இருக்கின்றன் என்று பார்க்கவேண்டும். தமிழ் மட்டுமே என்ற
நிலையை இவர்கள் எடுக்காவிட்டால், தமிழ் + வடமொழி என்ற
ஒப்புறவை எடுத்தால், அல்லது வடமொழி என்ற நிலையை
எடுத்தால், அது மேலும் ஒரு தமிழ்ப்பேரழிவிற்கு வழிகோலும்.

திராவிட அரசியலின் வெற்றியும் தோல்வியும் இத்தகைத்தன.

ஆகவே, இன்றைய நிலையில் எல்லா அரசியலும் ஒரே மாதிரிதான்.
திராவிட அரசியல் வீழ்ந்தால் வேறொன்று இடத்தை நிரப்பும். தமிழகத்தில்
மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மாற்றுக்கள் மன நிறைவைக்
கொடுக்க வில்லை.

முனைவர் இராம.கி ஐயா வின் 'திராவிட அரசியல் எடுபடுமா நம்மூரில்?'
என்ற வினாவுக்கு, "வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் இந்த மாதிரி
அரசியல்தான் நம்மூரில் எடுபடுமாறு இருக்கிறதே" என்றுதான் சற்றுக்
கவலை தோய என்னால் சொல்ல முடிகிறது.

இந்த அரசியல் ஏறத்தாழ இந்தியாவில் புழங்கும் எல்லா இடத்திலும்
காணக்கூடிய அரசியல்-படிமத்தை ஒத்தே இருக்கிறது.
இதற்கான மூல காரணங்களுக்கு திராவிடத்தை மட்டுமே குறை
சொல்லி விட முடியாது. இந்தியாவைப் பீடித்திருக்கும் அனைத்து
பீடைகளும் திராவிட அரசியலில் கலந்து இருக்கிறது என்றும்
சொல்லவேண்டியுள்ளது.

அதே நேரத்தில் பகைகள் போக்கி, அறம், நெறி, வீரம் என்ற கூறுகளில்
நிலைத்து நீடு பயன் தரும் தமிழியச் சனநாயக அரசியல் சித்தாந்தம்
தோன்றி, இம்மண்ணின் இயல்புக்கேற்ப உருவான நெறிகளைக் காக்கும்
இயக்கம் தோன்றினால் தமிழும் தமிழர்களும் பெருமை படைத்தவர்களாக
ஆவார்கள். அது உடனடியாக நடக்காது. அந்தச் சித்தாந்தத்தை
தமிழியச் சான்றோர்கள் தோற்றுவித்து ஆழ மக்கள் மனதில் சேர்த்து
பல ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்து பெற்றெடுக்க வேண்டும்.
அதுவே நமக்குப் பெருமையாகும்.

பாடுபட்டுப் பிள்ளை பெற்றெடுப்பதில் இருக்கும் சுகம், பதியன் போட்டு (cloning)
பெறும் பிள்ளைகளில் கிடைக்காது. அது போன்று, "பதியன் அரசியல் மாற்றுக்கள்"
வாராமல் இருப்பின் அதுவே நல்லது. காட்டாக தேமுதிகவை பதியன் அரசியல்
என்று சொல்லலாம்.

அதற்காக ஒவ்வொரு தமிழரும் தம் சிந்தனை வளங்களால் வித்துக்களை
ஊன்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு இனைய மிடையம்
ஒரு நல்ல களமாகப் படுகிறது.

அதுவரை 'அரசியல்' இருக்கும்; அப்படியே இருக்கும்;
அதனைத் திராவிடம், தமிழியம், தேசியம் என்று வேறுபடுத்திப்
பார்க்க முடியாமல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

------------------------------------------------------------------------------

3. இயற்கை பற்றிய பாக்கள் உங்களிடம் இருந்து சிறப்பாக வந்திருக்கின்றன.
மரபில் ஒன்றும், புதுசில் ஒன்றுமாய் காட்சி வரையுங்களேன்.

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...
(அகவல்)

குன்றி ரண்டு குறுகி மெல்ல
ஒன்றை ஒன்று ஒத்திக் கொள்ளும்
கொல்லி வனத்துக் கூட்டைச் சுற்றி
மல்லி நிறமா லையிடுமீ ரருவி!
தென்றலொடு சந்தமிடும் சாதித் தேக்கமரம்
கொன்றையொடு கைகுலுக்கிக் கூடவரும் மூங்கிலுடன்
சந்தனத்தை முத்தமிட தவமியற்றும் மருதமரம்,
எந்தவத்தோர் இளைப்பாறும் முக்கனிபெய் முதுமரங்கள்!
இத்துனையும் காவலென் கொந்தமலர்த் தோட்டத்தில்;
அத்துனையும் அசைந்தாடும், அவளோடு நான்வந்தால்!
வகிடிட்ட வாடாமல்லி வரப்பிட்டே னவள்நடக்க,
முகிலையும் வாவென்பே னவளுக்குக் குடைபிடிக்க!;
சுற்றிநின்ற சூரியகாந்தி சூரியனை வேவுபார்க்க,
முற்றிவிட்ட மல்லிகையோ முத்தமிடு மவளுக்கு!
பச்சைஇக் கிளிகளையேப் பயிரிட்டு, அவர்மேல்
இச்சைகொள சேர்த்தனவோ வெள்ளைநிறக் கொண்டைகள்?,
மெச்சிஎனைக் கொண்டாள் கண்டாள் தூய
துச்சமது இல்லாதத் தும்பைச் செடிகளைத்தான்!
மெல்லிடைதான் காட்டி மெல்லவேக் குனிந்தனள்
சொல்லியதால், தும்பைகள் சிந்தினவே தூமலர்கள்!
சின்னஞ்சி றுமலர்கள் சிந்தலையேத் தங்கிய
சின்னவ ளங்கைதான் சிவந்ததையே நானறியேன்!
ஒருதும்பை ஓட்டைக்குள் மறுதும்பை செருகியவள்
இருதும்பை மாலைகளை ஒருநாழியில் கோர்த்திட்டு
ஒருதும்பை மாலைதனை என்றனுக்கு சூட்டிவிட்டு
மறுதும்பை மாலைக்கென் மங்கையவள் குனிந்தாளே!
மங்கையை மணந்ததால் கோவித்த கொழுஞ்சிப்பூ
எங்கையை இழுத்திட்டு இருநொடிகள் தானழுக,
தன்கையை தவளவிட்டு அதனழுகை வடியவிட்டாள்
அங்கையை பற்றுதற் காசையுடன் நானெருங்க,
துள்ளியோடி னளேதொட்டாற் சினுங்கித் தோட்டத்துள்!
இருகாணி மொத்தத்தில் என்சினுங்கித் தோட்டம்!
ஒருமானின் வெருக்கனவே ஓடினாள் குறுக்காக
ஒருகையில் பாவாடை, மறுகையில் மாராப்பு,
வருவேனா வெனப்பார்க்கும் கெண்டைகளின் பரபரப்பு!
"விண்நீலம் மறைத்திடவே விரைகின்ற மேகம்போல்
என்தோட்டம் சினுங்கியதே அவள்சென்ற பாதையெலாம்!!"
என்னவொரு காட்சியிது என்றேநான் களித்திருக்க,
சின்னவளின் சீறடியில் கோவிக்கும் கொலுசுசத்தம்!!
இதுகாறும் கேட்கலையே இப்பொழுது எப்படியே,
அதுதேடி நானெருங்கி அப்படியே திகைத்தேன்!
விரைந்தோடிப் போகையிலும் ஒலிக்காத மெல்லியலாள்
"சினுங்கிகள் சினுங்கையிலே சீண்டினவா மவள்கொலுசை!!"

(பஞ்சும் அஞ்சும் மெல்லடிகள் என்று சொல்வார்களே அது போல
தொட்டாற்சினுங்கிச் செடியின் மென்மைகூட காதலிக்கு கடினமானது
என்று சொல்லவந்த கவிதை)

4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப்
போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று
பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின்
கணிப்பு என்ன?

5. சிலம்பு மடல் எழுதிய போது, கண்ணகி கோயிலைத் தேடி ஒரு தடவை
போனீர்கள். அது போல, வேறு ஒரு வரலாற்றுத் தேடலை, தமிழ்த் தேடலை,
எங்களுக்குச் சொல்லுங்களேன்.

(முடிக்காத இந்த 4, 5 கேள்விகளோடு புதுக்கவிதை ஒன்றும் பாக்கி)

அன்புடன்
நாக.இளங்கோவன்


அடுத்து சுடரை ஏற்றிவைக்க நான் அழைப்பது
திரு.ஞானவெட்டியான் அவர்களை.

ஐந்து வினவல்கள்:

1) தமிழ் அர்ச்சனை சிவன் கோயில்களிலும், பல கோயில்களிலும்,
செய்யப் படாமல் இருப்பதற்கு வைதீகப் பழக்கத்தைத் தவிர
வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கக் கூடுமா?

2) தாங்கள் பல சைவ நெறிகளுக்கு பல இணைய தளங்கள் ஏற்படுத்தி,
பல ஆன்ம இலக்கியங்களை எழுதுகிறீர்கள். நிறைய எழுதுவதற்கான
உந்துசக்தி எப்படிக் கிடைக்கிறது?

3) கலைச்சொற்கள் ஆக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நீங்கள்
என்பதனை இணையத்தில் பலரும் அறிவர். கலைச்சொற்கள் ஆக்கம்
இணையத்தில் மீண்டும் நிறைய வர தங்கள் ஆலோசனைகளைப்
பகிர்ந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

4) இணையத்தின் போக்கு தமிழ் வளர்ச்சிக்கு எந்தவகையில்
எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கிறது என்பது பற்றிய
தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

5) உங்களுக்கு விருப்பமான உங்களின் ஒரு படைப்பை இந்தச் சுடரில் சேர்த்து
விடுங்களேன்.

நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...

குன்றி ரண்டு குறுகி மெல்ல
ஒன்றை ஒன்று ஒத்திக் கொள்ளும்
கொல்லி வனத்துக் கூட்டைச் சுற்றி
மல்லி நிறமா லையிடுமீ ரருவி!
தென்றலொடு சந்தமிடும் சாதித் தேக்கமரம்
கொன்றையொடு கைகுலுக்கிக் கூடவரும் மூங்கிலுடன்
சந்தனத்தை முத்தமிட தவமியற்றும் மருதமரம்,
எந்தவத்தோர் இளைப்பாறும் முக்கனிபெய் முதுமரங்கள்!
இத்துனையும் காவலென் கொந்தமலர்த் தோட்டத்தில்;
அத்துனையும் அசைந்தாடும், அவளோடு நான்வந்தால்!
வகிடிட்ட வாடாமல்லி வரப்பிட்டே னவள்நடக்க,
முகிலையும் வாவென்பே னவளுக்குக் குடைபிடிக்க!;
சுற்றிநின்ற சூரியகாந்தி சூரியனை வேவுபார்க்க,
முற்றிவிட்ட மல்லிகையோ முத்தமிடு மவளுக்கு!
பச்சைஇக் கிளிகளையேப் பயிரிட்டு, அவர்மேல்
இச்சைகொள சேர்த்தனவோ வெள்ளைநிறக் கொண்டைகள்?,
மெச்சிஎனைக் கொண்டாள் கண்டாள் தூய
துச்சமது இல்லாதத் தும்பைச் செடிகளைத்தான்!
மெல்லிடைதான் காட்டி மெல்லவேக் குனிந்தனள்
சொல்லியதால், தும்பைகள் சிந்தினவே தூமலர்கள்!
சின்னஞ்சி றுமலர்கள் சிந்தலையேத் தங்கிய
சின்னவ ளங்கைதான் சிவந்ததையே நானறியேன்!
ஒருதும்பை ஓட்டைக்குள் மறுதும்பை செருகியவள்
இருதும்பை மாலைகளை ஒருநாழியில் கோர்த்திட்டு
ஒருதும்பை மாலைதனை என்றனுக்கு சூட்டிவிட்டு
மறுதும்பை மாலைக்கென் மங்கையவள் குனிந்தாளே!
மங்கையை மணந்ததால் கோவித்த கொழுஞ்சிப்பூ
எங்கையை இழுத்திட்டு இருநொடிகள் தானழுக,
தன்கையை தவளவிட்டு அதனழுகை வடியவிட்டாள்
அங்கையை பற்றுதற் காசையுடன் நானெருங்க,
துள்ளியோடி னளேதொட்டாற் சினுங்கித் தோட்டத்துள்!
இருகாணி மொத்தத்தில் என்சினுங்கித் தோட்டம்!
ஒருமானின் வெருக்கனவே ஓடினாள் குறுக்காக
ஒருகையில் பாவாடை, மறுகையில் மாராப்பு,
வருவேனா வெனப்பார்க்கும் கெண்டைகளின் பரபரப்பு!
"விண்நீலம் மறைத்திடவே விரைகின்ற மேகம்போல்
என்தோட்டம் சினுங்கியதே அவள்சென்ற பாதையெலாம்!!"
என்னவொரு காட்சியிது என்றேநான் களித்திருக்க,
சின்னவளின் சீறடியில் கோவிக்கும் கொலுசோசை!!
இதுகாறும் கேட்கலையே இப்பொழுது எப்படியே,
அதுதேடி நானெருங்கி அப்படியே திகைத்தேன்!
விரைந்தோடிப் போகையிலும் ஒலிக்காத மெல்லியலாள்
"சினுங்கிகள் சினுங்கையிலே சீண்டினவா மவள்கொலுசை!!"