Pages

Sunday, September 21, 2014

இந்திரா பார்த்தசாரதியின் 'சிலப்பதிகாரச் சிக்கல்கள்' கட்டுரை - ஒரு பார்வை

சிலப்பதிகாரச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை - நாக.இளங்கோவன்
வெளியீடு - மணற்கேணி ஆய்விதழ் (மே-சூன் 2014)

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற கட்டுரையை 2001ல் படித்ததன் பின்னர், “சிலப்பதிகாரச்  சிக்கல்கள்” என்ற அவரின்  கட்டுரை, பகிர்தலில் படிக்கக் கிட்டியது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவரின் சிலப்பதிகாரக் கட்டுரையைப் படிக்கும்போது, அதில் பரந்து கிடக்கும் அவரின் சிந்தனைப் பரிமாணங்கள் என்னைப் போன்ற சிலப்பதிகார வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. “கண்ணகி என்ற கற்பு இயந்திரம்” என்ற அந்தக் கட்டுரைக்கு அப்போது நான் எழுதியிருந்த கருத்துகள், மறுப்புகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்களிடம் இருந்து மிகப்பண்பாடுடைய மறுமொழிகளும், ஏற்பும் அஞ்சலில் வந்தன. அவரின் அந்தப் பண்பாடும், சிலப்பதிகாரத்தைப் போற்றுகின்ற சிந்தனையும், பகிர்வில் வந்த இந்தக் கட்டுரையின்பால் கருத்துரை எழுத ஆர்வத்தைத் தூண்டின.

இக்கட்டுரை வெளிப்படுத்தும் உரத்த சிந்தனைகள் அகலத்திலும் ஆழத்திலும் எண்ணிக்கையிலும் மிகுந்துள்ளன என்பேன். இச்சிந்தனைகளில் சிலபலவற்றைத் தமிழகச் சிலப்பதிகார ஆய்வு உலகம் சிந்தித்தும் வருகையில், ஆசிரியர் இ.பா அவர்களும் மிகச் செழுமையான வினாக்களாக அவற்றை எழுப்புவது வரவேற்புக்குள்ளாகிறது.

“சிலப்பதிகாரம் சமற்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று” என்ற ஆசிரியரின் அழுத்தமான சிந்தனை, 2012ல் தமிழ்த் தொல்லியற்றுறையின் மேனாள் இயக்குநர் திரு.நாகசாமி, “வடமொழியின் பஞ்சதந்திரக் கதைகளை மூலமாகக் கொண்டது சிலப்பதிகாரம்” என்று கூறியதை அடிப்படையிலேயே மறுக்கிறது. ஆசிரியரைப் போன்றே, அக்கருத்தியலை ஆதாரங்களை அடுக்கி மறுத்தது, “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற முனைவர் இராம.கியின் கட்டுரை.(http://valavu.blogspot.in/2013/02/1.html).

“பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரம் பிரபலமாக இருந்திருக்கவில்லை –அதற்கு அதன் சமணச் சார்வு காரணமாக இருந்திருக்கூடும்” – என்ற இ.பாவின் கருத்து ஆழச்சிந்திக்க வைக்கிறது. 18-19 நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக்கூடிய “கோவலன் கதை” என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலில் உள்ள செய்திகள், சிலப்பதிகாரப் பெருவழக்குத் தமிழ்நாட்டில் மிக நெடுங்காலமாக இருந்திருக்க வேண்டும் என்றே கருத வைக்கிறது. (கோவலன் கதை – சுவடிப்பதிப்பு – முனைவர் சூ.நிர்மலாதேவி – உ.த.ஆ.நி பதிப்பு). கரிகாலன் கல்லணை கட்ட மாசாத்தன் நிதி அளித்தது, பாண்டிய நாட்டில் கொடுங்கோலாட்சி நடந்தது, மாதே(த)வி கோவலனைக் கொல்ல ஆற்றில் தள்ளியது, சிவச்சார்புக்காக சொக்கர்-மீனாட்சியை முன்னிலைப் படுத்தியது போன்ற செய்திகளை அதிற்காணமுடிகிறது. “தென்னவன் மகள் கண்ணகி” என்று சிலம்பு சொல்வதை, பாண்டிமாதேவியின் ஆற்றில் விடப்பட்ட மகள் கண்ணகி என்று “கோவலன் கதை” என்ற இந்த நாட்டுப்புறக் கதை சொல்கிறது. இதுபோல, கோவலன் கர்ணகி என்ற நாட்டுப்புறக் கதையும் காணத்தக்கது. இக்கதைகளின் தன்மைகளைப் பார்க்கும் போது, செவ்விலக்கியமாக இளங்கோவடிகள் தோற்றிய சிலப்பதிகாரம், கூத்துக்கலையாக, தமிழ்நாட்டின் உள்வழக்குகளில் பலவாகத் திரிந்து நெடுங்காலம் இருந்திருக்கும் வாய்ப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. (இதனை இ.பா அவர்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.)

சிலப்பதிகார ஆசிரியர் பெயர் பற்றிய கட்டுரை ஆசிரியரின் வினாக்கள் மிக அவசியமானவை. “ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்?” என்று வினவி, சிவனின் இடப்பக்கத்துறை பெண்மையோ என்று ஐயுறும் ஆசிரியரிடம் இருந்து, “வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பெருமாளையும் தாயாரையும் வைணவர்கள் வணங்குவது பற்றிய சிந்தனையையும் நான் எதிர்பார்ப்பேன். இடப்பக்கம் உள்ள இதயத்தின் குமுறலை, அனலை ஆற்றும்பொருட்டு, பொதுவாகவே வலப்பக்க/வலக்கர எழுச்சி கொண்ட தமிழர்களின் இயல்பான செயற்பாடு இடமுலையைத் திருகியது என்ற கருத்து (சிலம்பு மடல்-27 http://nayanam.blogspot.in/2000/06/27.html ) எனக்கு இருக்கும் போதிலும், வள்ளுவம் சொல்லும் உவமமான “முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று” என்பதை ஆழ்ந்து நோக்கவும் சொல்கிறது.

“பத்தினி வழிபாடு, சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்குதல்” பற்றிய ஆசிரியரின் சிந்தனை, விரிவாக விரும்பும் எனது மற்றொரு எதிர்பார்ப்பாகும். சிலப்பதிகாரத்தின் காலம் என்ன? என்ற வினா எனக்குப் பிடித்த முக்கிய வினாவாகும்.  சிலம்பின் காலம் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 2ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு, தற்போது 2ஆம் நூற்றாண்டு என பலராலும் கருதப்படுகிறது. இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், சிலம்பின் காலத்தை தமிழக, இலங்கை வரலாறுகளை மட்டும் வைத்து அதை 2ஆம் நூற்றாண்டு என்று சொல்கையில், தமிழகத்திற்கு வடக்கே சென்று, சாதவாகன்னர்(நூற்றுவர் கன்னர்) அரசியல், மகத ஆட்சி, தக்கணப்பாதை என்ற அடிப்படைகளை ஆழமாக வைத்து “கி.மு75 என்பதே சிலப்பதிகாரத்தின் காலம்” என்று சொல்லும் “சிலம்பின் காலம்” என்ற முனைவர் இராம.கியின் நூல் இன்று பலரால் கருதப்படுகிறது. “கனகவிசயர்” என்பது கனகன் விசயன் என்ற இருவரல்ல – கனகவிசயன் என்ற ஒருவரே என்று அந்நூல் நிறுவுவது கவனிக்கத்தக்கது. இதற்கு நேர் மாறாக, முனைவர் செ.கோவிந்தன் அவர்களின் “சிலம்பின்  காலம்” என்ற நூல், காலத்தை 9ஆம் நூற்றாண்டையும் கடந்து கி.பி11ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளிவிடுகிறது. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப்பேரரசு சேரநாட்டை அழித்ததால் மனம் நொந்த இளங்கோ, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேகனையும் அவன் மனைவியையும் வைத்துக் காவியத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் செ.கோ. அதோடு, செங்குட்டுவன் இளங்கோவின் தம்பி என்கிறார் செ.கோ. இதிலிருந்து சிலப்பதிகார ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் கருதுகோள்களும், ஆதாரங்களும் நுண்ணியமாக, வலுவாக இருக்கும்போது, அதன் காலம் கி.பி2ஆம் நூற்றாண்டை முந்திச் செல்வதும், வலுவற்ற கருதுகோள்களும் ஆதாரங்களும் சிலம்பின் காலத்தை மிகப் பிந்தியதாக்குவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஆசிரியர் இ.பா அவர்களின் விரிவான காலக்கணிப்பிற்கு அவர் எடுத்துக் கொள்ளும் கருதுகோள்களும் ஆதாரங்களும் தமிழக எல்லையைக் கடந்தும் செல்ல வேண்டுமே என்பதும் எனது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

பிற்சேர்க்கைகள் பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் கருதுகோள்களும் வாசகர்களையும் ஆய்வாளர்களையும் ஈர்ப்பதாக அமைகிறது. பதிகமும், வரந்தருகாதையும் பிற்சேர்க்கை என்றாலும், அவை கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து ஆய்வுக்குட்பட்டே வருகின்றன. இளங்கோவடிகள் எப்படிச் சமணராகக் கருதப்படுகிறார் என்ற வியப்பு எனக்கு உண்டு. மிக அவசர அவசரமாக அவருக்கு மொட்டை போட்டு சிலையாகவும் மெரீனா கடற்கரையில் வைத்துவிட்டார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. 

குணவாயிற்கோட்டம் என்பது சமணக் கோயில்; அங்கு இளங்கோஅரசு துறந்தார் என்ற உரைக்காரர்களின் கருத்தே நிலைத்துவிட்டது போல. குடநாட்டுக்குக் கிழக்குக் கோட்டையாக, அரணாக, வாயிலாக இருந்ததுதான் குணவாயிற்கோட்டம். சேரத்தின் மையநாடான குடநாட்டுக்குத் தெற்கெல்லையாக கோட்டயமும், கிழக்கெல்லயாக குணவாய்க்கோட்டமும், வடக்கெல்லையாக கோட்டக்கல்லும், மேற்கெல்லையாக கடற்கரையும் இருந்திருக்கின்றன; கோட்டம்=கோட்டை/அரண் என்ற பொருளில் அரணவாயிலாக  இருந்திருக்கின்றன என்பது எனது கருத்து. குணவாயிற் கோட்டத்தை குணவாயிற்கோயிலாகக் கொண்டால், கோட்டக்கல்லை கோயிற்கல்லாகவும், கோட்டயத்தைக் கோயிலையம் என்றும் கொள்வார்களா? ஆகவே, இளங்கோ சமணத்திற்கு வலிந்து தள்ளப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. 

ஆசிரியர் இ.பா அவர்களும் இளங்கோ சமணர்தானா என்று ஐயுறுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கோட்டம், இளங்கோவின் சமணம், பிற்சேர்க்கைகள் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னப்படுவது இந்தக் கோட்டம்=கோயில் என்ற கருதுகோளினாற்றான். அதொடு, அரசு துறப்பு என்பது, அரசைத் துறந்து துறவியானார் என்று ஏன் கொள்ளப்படவேண்டும்? இமயவரம்பனின் மகனான இளங்கோ, கிழக்கு வாசலின் மாதண்டநாயகனாக இருந்திருக்கிறான். பின்னர் அண்ணன் பட்டத்துக்கு வர அப்பணியை அண்ணணிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று கருத இடம் இருக்கிறது என்று நான் சொல்வேன்.

இன்னும் நிறைய கருத்துகளை, வினாக்களை உரக்கவே எழுப்புகிறார் ஆசிரியர். அவை மேலும் வாசகர்களுக்குத் தூண்டலாக அமைவது சிறப்பு. மேலும் எழுதினால் நீளும் என்பதால்,  ஒரு கருத்தோடு இக்கருத்துரையை நிறைவு செய்கிறேன். மதுரைக்காண்டம் முடிந்தவுடன் காவியத்தின் தன்மை, உணர்வு நெறி வெகுவாக மாறுவதை வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகிறது என்ற ஆசிரியரின் கருத்தோடு ஐயத்தோடு எனக்கு முழு ஒப்புமை உண்டு. ஆசிரியர் கூறுவது போல, சிலம்பு நாடகம் மதுரையோடு முடிகிறதோ என்ற ஐயம் தோன்றினாலும், சேர அரசியலை, நாட்டை முன்னிலைப்படுத்தும் முகமாக வஞ்சிக்காண்டம் காவியத்தில் முதலில் தோன்றி அதற்குப் பின்புலமாக புகாரும், மதுரையும் வைக்கப்பட்டதோ(as flash back) என்ற சிந்தனை எனக்குண்டு. ஆசிரியர் இக்கட்டுரையில் எழுப்பியிருக்கும் வினாக்களை ஐயங்களை விரிவாக விளக்குமுகமாக நூல் இயற்றினால் அந்நூலில் அதிக ஆவலோடு நான் எதிர்பார்க்கும் கருத்து இதுவாகவே இருக்கும். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கருத்துகள், ஆய்வுகள் நூலாக மலர வாழ்த்துகள்.

அன்புடன்

நாக.இளங்கோவன்