Pages

Sunday, August 01, 1999

சிலம்பு மடல் 15

சிலம்பு மடல் - 15 சோழநாடு நீங்கி பிழைக்கப் போதல்!
புகார்:
நாடுகாண் காதை:

"பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டுமோ? பேசுதல்தான் கூடுமோ?" என்ற சொற்கள் பொய்த்திருந்தன; அங்கே கோவலனும் கண்ணகியும் சந்தித்தபோது! உணர்வுகளில் காலம் கழிக்கவில்லை;

செல்வத்தில் நடந்து, இன்பத்தில் திளைத்து, காமத்தில் புரண்டு வாழ்ந்த கோவலனுக்கு மாதவிபால் ஏற்பட்ட சந்தேகம், எத்தனை பாடத்தைக் கற்றுக் கொடுத்ததோ! வியக்க வைக்கிறது, கண்ணகியை மீண்டதும் பிழைப்பை மட்டும் அவன் நினைத்தது!

வான்நிலவும் வெப்பமாகப் பட, கணவனுடன் கலவியின்றி நலிந்து கிடந்த கண்ணகியும் அவனைக் கட்டிலுக்கு இழுத்தாளில்லை! ஒருகாற்சிலம்பெடுத்து கணவன் கை கொடுத்து உழைப்பைத் தொடங்கி வைக்கிறாள் கண்ணகி!

"வா என வந்து, இன்பம் அளித்ததும்
போ எனப் போனாள் மாதவி!"
அங்ஙனமே கண்ணகியும்
"வா என, நடந்தாள் கோவலனுடன்
வைகறையில், மதுரை தேடி!"

வா என்று சொல்லும் ஆடவன் போ என்று சொன்னாலும் போற்றி நிற்கும் பெண்களை என்ன சொல்ல?

அப் பெண்மையின் மென்மையையும் உண்மையையும் வியக்கிறேன்!

நெடுமால் வணங்கி, புத்தன் போற்றி, அத்தனைக் கோயிலையும் அவனுடன் சுற்றி புகார் நீங்குகின்றாள் கணவனுடன்! அத்தெய்வங்களை வணங்க மதங்கள் குறுக்கே நிற்கவில்லை!

அத்தனை தெய்வங்களும் "போ எனச் சொன்னதோ" !
"போய் வா என்று சொன்னதோ" ! யாருக்குத் தெரியும் ?

உற்றுப் பார்த்தனரோ புகார் வாயிலை? தெரியவில்லை! இனி பார்ப்போம் என்று நம்பித்தான் தம் மாளிகையை அந்நகரில் விட்டு விட்டு நீங்கினர்!

புகாரை நீங்கி, காவிரியின் வடகரையோடு மேற்கு நோக்கி நடக்கின்றனர்!

"குடதிசை கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்பொழில் நுழைந்து
காவதம் கடந்து கவுந்திப் பள்ளி.."

காததூரம் நடந்ததும், மதுரைக்கு இன்னும் "ஆறைங்காதம்" (முப்பது காதம்) நடக்கவேண்டியுள்ளதை எண்ணி மலைக்கிறாள் கண்ணகி! நடந்தறியா செல்வ மடந்தையின் வேதனை கண்டு துன்பச்சிரிப்பை சிந்துகிறான் கோவலன்.

ஆங்கு காவுந்தி அய்யையைக் கண்டு அடி தொழுது, அவ்வடிகளும் அவர்களுடன் புறப்பட மூவருமாய் மேற்கு நோக்கி நடக்கின்றனர்!

நாளுக்கொரு காதமாய் நடந்தனர்! நடந்தனர்! அடைந்தனர் "இருகரைப்பட்ட திருவரங்கத்தை"!

அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும், ஒரு சீரென செதுக்கிவைத்தானோ புலவன் என்று திகைக்கவைக்கும் அளவிற்கு, காவிரி வழி நெடுக இயற்கையைப் பாடி மகிழ்ச்சியூட்டுகின்றார் இளங்கோவடிகள்;

கரிகால் பெருவளத்தான் காலத்திற் பின்னான சிலப்பதிகாரத்தில் அவன் ஆக்கி வைத்த கல்லணை பற்றிய குறிப்பேதும் இவ்விடத்து இல்லாதது சிந்தனையைத் தூண்டுகிறது! காப்பிய நாயகர்கள் நடந்து வந்த காவிரியின் வடகரைப் பாதை முழுதையும் பாடி வைத்த புலவர், அரங்கத்துக்குக் கிழக்கே 15/20 மைல் தொந
லவில் காவிரியை மறித்து நிற்கும், தமிழர் பெருமை கூறும் கல்லணையை இவ்விடத்துக் குறித்து வைக்காதது சிந்திக்கச் செய்கிறது.

அரங்கம் சேர்ந்தவர் அரங்கத்தானை போற்றி அங்கிருந்த சாரணர்களைத் (முனிவர்கள்/அடிகள்) தொழுது காவிரியின் தென்கரைக்கு பரிசல்/படகு மூலம் செல்கின்றனர்.

இன்று கூட அரங்கத்துக்கு மேற்கு உள்ள ஊர்கள் பரிசல் மூலமாய் தென்கரை சேர்வதைக் காணமுடியும். (அப்பரிசல்களில் பல தடவை நான் பயணித்ததும் உண்டு!)

திருவரங்கக் காவிரிக்கரையில் அம்மா மண்டபம் என்று ஒரு இடம்
உண்டென்பதை அறியாதார் இருக்க மாட்டார் அப்பகுதி மக்கள்!
அவ்விடத்து நேர் எதிர்புறத்தில், சற்றே மேற்புறத்தில் குடமுருட்டி என்ற ஒரு ஆறு வந்து காவிரியில் கலக்கும்! அவ்வாற்றின் கீழ்க்கரை, நேரே கோழி (உறையூர்) சென்று சேர்க்கும்!

சிலம்பின் குறிப்புகள் கொண்டு பார்க்கின் கோவல, கண்ணகி, காவுந்தி ஐயை மூவரும் அவ்வழியே உறையூர் சென்று சேர்கின்றனர்.

(சாண்டில்யனின் யவனராணியிலே, கரூரில் தீயால் கால் கருகி குணம் பெற்று, உறையூர் திரும்பிய கரிகாலனும் இவ்வழியேதான் உறையூர் சென்று தன் காதலி அல்லியைச் சந்திக்கிறான்; அவன் குடமுருட்டி வரை காவிரியின் தென்கரையில் வருகிறான். என் மண் வழியே இவர்களும் போயிருக்கின்றனர் என்று நிந
னக்கும் போதெல்லாம் சிலிர்ப்பதுண்டு! அவ்வழி போகும் போதெல்லாம் இவர்களை நினைப்பதுண்டு!)

கோழி சேரும் முன்னே, காவிரி தென்கரையில் கோவல-கண்ணகியரைப் பழித்த வம்பரை காவுந்தியடிகள் நரிகளாக்குகின்றார். அது கண்டு வருந்திய கோவல-கண்ணகியர்

"நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்.."

என்று கூறுதல் சிறப்பான ஒன்றாகும். காவுந்தி அடிகள் என்ற பெண்முனிக்கு சினம் வர, சாதாரன மாந்தரான கோவல-கண்ணகி
அறம் குறிப்பிடுவது படிக்கவே அழகான ஒன்றாகும்;

அம்மையே! நெறியில் நீங்கிய அவர்கள் எங்களைப் பழிப்பது அறியாமைதான்!! அவர்களுக்கு சாபவிடை தாருங்கள் என்று இறைஞ்சுகின்றனர் அய்யையை.

பின்னர் தொடர்ந்தனர் நடையை! சேர்ந்தனர் கோழி (உறையூர்)!

சோழரின் அறனும், மறனும், ஆற்றலும், புகாரின் பண்பு மேம்பாடும், விழாச் சிறப்புக்களும் இன்பமிக்கு வாழ்ந்த சோழக் குடிமக்களின் வாழ்க்கையும், அவரின் மாண்பும், சோற்று வளமும், காவிரியின் அழகும் சிறப்பும், கலைகளில் அரங்கின் இயல்பு முதற்கொண்டு ஆடல், பாடல், கூத்து கானல்வரிகள், இசை, பண்
முதலான அனைத்தின் சிறப்பும் அமைப்பும், ஊரழகும் சிறப்பும் இங்கு சொல்லாத பலவின் தன்மைகளையும் சொல்லும் "புகார்க் காண்டம் முற்றிற்று!".

".....தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒருபரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று."

( வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

கடல் என்ற அகழியால் சூழப்பட்ட இப்பூமிக்கு மாலை போல அமைந்த காவிரிப்பூம்பட்டினம், ஞாயிறும் (கதிரவன்), திங்களும் (நிலவு) நிலைபெற்று வாழ்வதுபோல் என்றென்றும் புகழ்பெற்று நிலைப்பதாகுக!; என்றியம்பிய இளங்கோவடிகளுடன் நாமும் சேர்ந்து புகாரை, சோழமண்ணைப் போற்றுவோம்!
வாழ்த்துவோம்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
01-ஆகத்து-1999

No comments: