Pages

Wednesday, November 15, 2000

சிலம்பு மடல் 28

சிலம்பு மடல் - 28 கற்பின் தெய்வமும்! குறமகளிரும்!

வஞ்சிக்காண்டம்:
குன்றக்குரவை:

இன்பம் துன்பம் காதல் நோதல்
பிரிவு முறிவு பரிவு அறிவு
நேர்மை பொய்மை கல்லாமை கயமை
மென்மை வண்மை பாசம் நேசம்
பண்பு அன்பு நாடு வீடு
வளமை வாழ்க்கை பெண்மை ஆண்மை
கற்பு நட்பு கலைகள் பிழைகள்,
இவையாவையும் இன்ன பிறவற்றையும் நெஞ்சிற்கும் சிந்தைக்குமாய் அள்ளித் தந்த புகாரையும் மதுரையையும் தாண்டி, புகாரின் நாயக நாயகியையும், மதுரையின் அரசன் அரசியையும் இழந்து விட்டு மதுரையையும் தீய்த்துவிட்டு வஞ்சிக்குள் வந்த போதும் கொஞ்சி நிற்க வைக்கிறது இந்தக் கவிப்பாட்டன் பாடிவைத்த காற்சிலம்பு!

வஞ்சி மலைக் குன்றில் வந்து மாண்ட மாபத்தினி கண்ணகியம்மாளைக் கண்ணுற்ற குறவர் குடிப் பெண்டிர் வணங்கி தெய்வமாகக் கொள்கின்றனர்!

"சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே!

நிறம்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நல்நிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!

கற்புக்கரசியாம் அந்த நல்லாளுக்குக் கோயில் கட்டி, சுற்றி மதில் எழுப்பி, வாயிலும் செய்து குறிஞ்சி நிலத்திற்கொப்பக் குறிஞ்சிப் பறை முழக்கி, கடமாக் கொம்பூதி, மணிகளை ஒலிக்கச் செய்து, குறிஞ்சிப் பண் பாடி, மணம் மிக்க அகிற்புகை ஏந்தி, மலர் கொண்டு அருச்சனை செய்து (பூப்பலி), நாடு என்றும் வற்றாது வளஞ்சுரக்க அருள் புரிய வேண்டி நிற்க முனைந்தனர் குறக்குடி மகளிர்! மாபத்தினியை வணங்கி நின்றனர்!

"தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்,
பெருமலை துஞ்சாது வளம்சுரக்க எனவே!..."

மகிழ்ந்தனர்! ஆடினர் குன்றத்திலே குரவை பாடி!

அருவி ஆடப் போன தலைவியின் ஆற்றாமையை என்ன சொல்ல?

தன் ஆடவனின் ஆளுகையில் அகப்பட்ட சிறுமலையின் கல்தீண்டி பொன்கலந்து மலர் சுமந்து ஓடிவந்த ஓர் அருவியின் வெள்ளி ஒத்த தண் நீரிலே ஆடிவிட்ட பிறமகளிரைக் கண்டு நெஞ்சு பதைக்கிறதே அவளுக்கு!

இது மகளிரின் காதலா? பொறாமையா? பொறாமையே காதலா?

"எற்றுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைக்
கல்தீண்டி வந்த புதுப்புனல்;
கல்தீண்டி வந்த புதுப்புனல், மற்றையார்
உற்று ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

என்ஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
பொன்ஆடி வந்த புதுப்புனல்;
பொன்ஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
முன்ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

யாதுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
போதுஆடி வந்த புதுப்புனல்;
போதுஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
மீதுஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே....."

அருவி அகற்றிவிட்டு சிறப்புற்ற செந்தூர், செங்கோடு, வெண்குன்றம் (சாமிமலை), ஏரகம் என்னும் இடங்களை எப்போதும் நீங்காத ஆறுமுக அழகனையும் அவன் கைவேலையும் குரவையிலே போற்றிப் பாடினர் மங்கையர்!

"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல்அன்றே
பார்இரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டுஒருநாள்
சூர்மா தடிந்த சுடர்இலைய வெள்வேலே.

அணிமுகங்கள் ஓர்ஆறும் ஈராறு கையும்
இணைஇன்றித் தான்உடையான் ஏந்தியவேல்அன்றே
பிணிமுகம்மேற் கொண்டுஅவுணர் பீடுஅழியும் வண்ணம்
மணிவிசும்பின் கோன்ஏத்த மாறுஅட்ட வெள்வேலே!..."

காமநோய் எனை வாட்ட அன்னைக்கு அது விளங்காது வேறு நோய் கொண்டேனோ என்றஞ்சி வேலனைக் கூட்டி வெறியாட்டு செய்து நோய் தீர்க்க முனைகிறாரே! இதை என்னென்று சொல்வேன்? என்று நகைக்கிறாள் தலைவி.

அன்னையின் அறியாமை எண்ணி! (முருகன் வந்த ஆடவன் மீதேறி ஆடுவதற்கு வெறியாட்டு என்று பெயர்; ஆடுபவனுக்கு வேலன் என்று பெயர்)

அன்னைக்குத்தான் என் நோய் விளங்கா அறியாமை!

ஆண்டவனுக்குமா?

வேலன் மேல் தெய்வம் வருங்கால் வேலன் அறிந்திருக்க வேண்டுமே என் நோய் என்ன வென்று?

அவனுக்கு அறிதல் இல்லாவிடினும் அவன் மேல் ஏறி வரும் ஆண்டவன் முருகனுக்காவது அறிதல் வேண்டுமே! அவனுக்கு மில்லையா ?

அப்படி முருகன் வருவானாகில் அந்த வேலனைவிடவும் அறியாமை உடையவன் ஆண்டவன் முருகன்!

எள்ளி நகையாடுகிறாள் தலைவி! அழகனைப் பாடிய வாயால் அவனை அறிவிலான் என்று எள்ளி நகையாடவும் செய்கிறாள் தலைவி!

மனதிலே காமநோய் என்றும் சொல்லவியலவில்லை! வேறுநோய் என்றும் சொல்ல மனமில்லை!

காமத்தால் தவிக்கும் உடலுக்கு காய்ச்சல் என்று சொல்லி மந்திரித்ததால் கடவுளும் நகையாகின்றார்! மடவனாகின்றார்!
காசு மட்டும் வேலனுக்கு!

"இறைவளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வருக என்றாள்.

ஆய்வளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்!
வருமாயின் வேலன் மடவன்! அவனின்
குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்!......"

ஆண்டவனைப் போற்றி அவனை நகையுமாடி. 'வள்ளிக்குறமகளின் அடிகளோடு ஆறுமுகக் கடவுளே உன் திருவடிகளையும் தொழுது நிற்கிறேன்!, என் காதலர் களவொழுக்கம் ஏதும் செய்யாது என்னைச் சேர்ந்திட அருள்செய்' என்று அவனையே வேண்டியும்நிற்கிறாள் தலைவி!

இறைவனைப் போற்றிய வாய் தூற்றுதற்கும் அஞ்சவில்லை! வேண்டுதற்கும் நாணவில்லை! அத்துனை நெருக்கம் ஆண்டவனிடம்.

ஆனால் அன்னையிடம் அஞ்சுகிறாள்! ஆடவந்த வேலனை அருவெறுக்கிறாள்!

ஆண்டவனிடம் அச்சமில்லை, ஆனால் மனிதனிடம் அச்சம் மனிதனுக்கு!

ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஆள்வரும்போது ஆண்டவனும் அந்நியனாகிறான்! அறியாதோனாகிறான்! வந்த ஆள் உண்டு கொழுப்பதுதான் உண்மை!

ஆண்டவனுக்கும் நன்மையில்லை; மடவனாகிப் போகிறான்! வேண்டிநின்றாருக்கும் நன்மையில்லை!

"குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவ!நின் அடிஇணை தொழுதேம்
துறைமிசை நினதுஇரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்; விடு பிழைமணம் எனவே!.."

அழகனைப் பாடி, கற்புக்கரசியையும் பாடி, அழகனிடம் வேண்டியதை அவளிடமும் வேண்டும் முறையினதாய் அமைத்து, இன்பமாய் நீடுழி வாழ சேரனை வாழ்த்தி குரவையை நிறைவு செய்தனர் மகளிர்!

"பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணஅணி வேண்டுதுமே!

" ......ஆனாது
உண்டு மகிழ்ந்துஆனா வைகலும் வாழியர்
வில்எ ழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே."

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-நவம்பர்-2000

No comments: