Pages

Saturday, December 02, 2000

சிலம்பு மடல் 31

சிலம்பு மடல் - 31 கோவல கண்ணகி சுற்றங்களின் துயர்!

வஞ்சி:
நீர்ப்படைக்காதை:

பெரும் போரிலே எதிர்த்தவர்களை அழித்து, வெற்றிக்கு உடன் நின்ற தன் படைகளுக்கு சிறப்பு செய்து, செம்மாந்த சிங்கமாய் வீற்றிருந்தான் சேரன்!

கோவலனை மதுரைப் புறஞ்சேரியில் பார்த்து உரையாடி, பின்னர் புகார் சென்று கோவல கண்ணகியர் பற்றி அவர் உற்றார் உறவினரிடம் கூறிவிட்டு, கங்கை சென்று நீராடி வரச் சென்ற மாடலன் என்ற மறையோன், கங்கைக் கரையினில் சேரனை அவன் பாசறையிலே பார்த்து வணங்கினான்; வணங்கிய தலையை நிமிர்த்திக் கொண்டே, 'மாதவியின் கானல் வரிப்பாட்டு' வடமன்னர்களின் முடியையும் வென்றது' என மாடலன் சொல்ல, மன்னன் வியந்து நகைக்க, மாடலன் தான் மதுரையிலும் புகாரிலும் கண்டன கேட்டவற்றையெல்லாம் சேரனிடம் எடுத்துச் சொன்னான்.

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!..."

(கானல் வரி)

கோவலன் காவிரியைப் போற்றிப் பாடியதில் அய்யம் கொண்ட மாதவி, சினமுற்றுக் கோவலனை அய்யம் கொள்ளச் செய்யப் பாடிய அந்த கானல்வரிப் பாட்டு, அவர்கள் உறவை முறித்து, கண்ணகியை மீண்டும் கூட வைத்து, பின்னர் கோவலனைக் கள்வனாக பழியேற்றி, அவனையே பலி கொண்டு, மதுரை அரசனைப் பலி கொண்டு, அவன் மாதரசியைப் பலி கொண்டு, அந்நாட்டையே பலி கொண்டு, நாடுகள் தாண்டி சேரத்தில் கண்ணகியையும் காவு கொண்டு, சேர அரசனைக் கொண்டு வடவாரியரையும் அழித்து, அவர்களை கூனிக் குறுகிப் போகச் செய்த வரலாற்றை நினைவூட்டுமாறு சேரனிடம் மாடலன் கூறினான்;

"வாழ்க எங்கோ! மாதவி மடந்தை
கானல் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது;......"

மேலும், கண்ணகி கோவலர் துயரம் கேட்டு அவர்களின் உற்றார் உறவினரின் நிலை கூறினான்!

நெஞ்சம் பதை பதைக்கிறது!

காவுந்தி அடிகள் அடைக்கலமாய்த் தந்த கண்ணகி கோவலரைக் காக்கத் தவறினேனே!, என்று கடமை தவறியதாய் வெறுப்புற்று இடைச்சி மாதரி நடு யாமத்தில் தீக்குளித்து உயிர் நீத்தாள்!

பாண்டியன் தவறை அறிந்து சினமுற்ற காவுந்தி அய்யை அவன் உயிர் நீத்ததால் சினம் தணிந்தாலும், கோவல கண்ணகியரை என்னோடு தருவித்து தீப்பயன் விளைத்ததுவோ? என்று எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்!

"அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்,
குடையும் கோலும் பிழைத்த வோஎன
இடை இருள் யாமத்து எரிஅகம் புக்கதும்...."

"தவம்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
....
என்னோடு இவர்வினை உருத்த தோஎன
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்த்ததும்...."

கோவலன் மாய்ந்ததை சோழநாடு சென்று மாடலன் உரைக்க, அவன் தந்தை பெருஞ்செல்வச் சீமான் மாசாத்துவான் தன் செல்வத்தையெல்லாம் தானமாக அளித்துவிட்டு துறவறம் பூண்டான்!

கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி, மைந்தன் மருமகள் துயர் அறிந்து, பிரிவால் ஏங்கி ஏங்கி இன்னுயிரை விட்டார்!

மகள் கண்ணகி மருமான் கோவலன் மரணம் கண்ணகியின் தந்தை மாநாய்கனையும் முனியாய் ஆக்கியது! கோவலன் தாயார் ஏங்கி ஏங்கிச் சாக, கண்ணகியின் தாயார் சேதிகேட்ட மாத்திரம் மாண்டு போனார்!

"கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந் தானமா வான்பொருள் ஈத்துஆங்கு
.....
துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்,
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்துயிர் எய்தி இரங்கிமெய் விடவும்..."

"கண்ணகி தாதை கடவுளர் கோலத்து,
அண்ணல்அம் பெருந்தவத்து ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்துஅறம் கொள்ளவும்
தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி
நாள்விடூஉம் நல்உயிர் நீத்துமெய் விடவும்."

மாதவிக்கு சேதி கிடைத்ததும், தன் அன்னையிடம் தனக்கும் கோவலனுக்கும் பிறந்த குலக்கொழுந்து மணிமேகலையை குலத்தொழில் புரி கணிகையாய் ஆக்காதே என்று கூறிவிட்டு, தான் தன் கூந்தலைக் களைந்துவிட்டு புத்த முனிமுன் துறவறம் பூண்டாள்!

"மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நல்திறம் படர்கேன்;
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர்க் கோலம் காணாது ஒழிகஎன
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறம் கொள்ளவும்..."

அதோடு அச்சேதி கேட்டு வேறு பலரும் புகாரில் துன்புற்றச் சேதியினையும் சொன்ன மாடலனை, சேரன் பாண்டியநாட்டின் நிலை பற்றி கேட்க, பாண்டியநாட்டின் நிலையுரைத்தான் மாடலன்! சோழ நாட்டையும் பற்றியும் அறிந்து கொள்கிறான் சேரன்!

மதுரை மூதூர் தீயினால் வெந்து வீண்போன நிலையில், கொற்கையை ஆண்ட வெற்றிவேற்செழியன் என்ற அரசன், தெய்வமாய்ப் போன திருமாபத்தினியின் சீற்றம் குறைப்பதாய்க் கருதி, பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட பெருந்துயர் என்பதால், ஒரு பகற்பொழுதிலேயே ஓராயிரம் பொற்கொல்லரை உயிர்ப் பலி கொடுத்திருக்கிறான்! ஓராயிரவரைப் பலிகொடுத்த அவன், மதுரையை, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் ஆட்சி செய்திருக்கிறான்!

"கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி,
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்,...."

எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் காட்டுமிராண்டிச் செயலை வெற்றிவேல் செழியன் செய்திருக்கிறான்! கொல்லக் கயவன் கோவலனை 'மாயக்கள்ளன்', 'மந்திரக்கள்ளன்' என்று பொய் கூற, மந்திரம் மயங்கிய காவலரில் கல்லாக் களிமகன் ஒருவன் கொடுவாள் வீசிக் கோவலனைக் கொன்றதே, மடமை பூத்துக் குலுங்கிய மதுரையின் மூடநம்பிக்கையின் மொத்த விளக்கம்!

அதனால் ஏற்பட்ட தீங்கு மறைய இன்னும் ஒரு மூடச் செயலை செய்தான் வெற்றிவேல் செழியன் ஆயிரவரைக் கொன்று!

இது ஏதோ 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் பழமையில் நிகழ்ந்த பண்பாடற்ற செயல் மட்டுமல்ல!

மூடநம்பிக்கை மற்றும் முட்டாள் தொல்லைகள்!

சாதி, சமயம், கடவுள் என்ற பெயரால் இந்நாட்டை ஆட்சி செய்யும் அயோக்கிய செல்வங்கள்!

ஆண்டுகள் ஓடினாலும் அறிவேறாத, ஆத்திரமும் அகங்காரமும் நிறைந்த ஆணவ மலங்களின் அழிவுக் கொள்கைகளால் நிகழும் தீவினைகள்!

இந்த நாட்டில் அறிவு ஆட்சி செய்கிறது அல்லது செய்யும் என்று நம்பும் நன்மானிடர், '1800 ஆண்டுகட்கு முன்னாள்' பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட தீங்கொழிய 1000 பொற் கொல்லரைக் கொன்று போட்ட வெற்றிவேல் செழியனுக்கும், கி.பி 1984ல் இந்திரா காந்தி அம்மையார் சீக்கியன் ஒருவனால் கொல்லப் பட்டதற்குப் பழிதீர்க்க 3000 சீக்கியர்களைக் கொன்று போட்ட, இந்நாள் அரசியல் மற்றும் சமய வாதிகளுக்கும் என்ன வேறுபாடு கூறமுடியும் ?

காலங்களே ஓடி யிருக்கின்றன! காட்சிகள் மாறவில்லை!
படிப்பு வந்திருக்கிறது! பண்பாடு மட்டும் இல்லை!

ஆண்டுக்கேற்ற அறிவு வளர்ச்சி இன்றி, அழிவுக்குகந்த அறிவொடு வாழ நினைக்கும் அடிமாட்டுக் கூட்டமாய் இந்த மண்ணின் மாந்தர் பலர்!

பன்னூறாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாத முடச் சமூகமாய்க் கண்ணுக்குத் தெரிகிறது!

வஞ்சியை விட்டு நீங்கி முப்பத்திரண்டு திங்களில் வடநாட்டுப் படையெடுப்பை வெற்றியாய் ஆக்கிவிட்டு வஞ்சி திரும்பப் புறப்பட்ட சேரன், தனக்கு எல்லா சேதிகளையும் கூறிய மாடலன் என்ற மறையோனுக்கு தனது நிறையான அய்ம்பது துலாம் பொன் தானமாக வழங்கினான்!

மறைசெய்வோருக்கு நிறை நிறையாய் பொருள் கிடைப்பதுவும் சமுதாயத்தில் நாம் காணும் நிகழ்வு. ஆயிரமாயிரமாய் செய்தாலும் அந்த மறையால் மண்ணுக்கு வளம் சேர்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதே நாம் கண்டுகொண்டிருக்கிற சமுதாய நிகழ்வுகள்.

தன் நாடு திரும்புகிறான் சேரன்! கணவனைப் பிரிந்து 32 மாதங்கள் துயரத்துடன் காத்திருந்த வேண்மாளையும், நாட்டுக் குடிகளையும் சேர!

அன்புடன்
நாக.இளங்கோவன்
02-திசம்பர்-2000

No comments: