Pages

Monday, November 20, 2000

சிலம்பு மடல் 29

சிலம்பு மடல் - 29 குட்டுவனும் சாத்தனும்!
வஞ்சி:
காட்சிக்காதை:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன், வஞ்சியைத் தலைநகராய்க் கொண்ட சேரநாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன்!

அரசமாளிகையில் அரசி வேண்மாளுடனும் தம்பி இளங்கோ வுடனும் அமர்ந்திருக்கையிலே மலைவளம் காண ஆவல் கொள்கிறான் குட்டுவன்.

"...விளங்குஇல வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாள் உடன்இருந்து அருளித்
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்எனப்...."

நீலநிறப் பெருமலையின் குறுக்கிட்டோ டிய பேரியாறு திருமாலின்(நெடியோன்) கழுத்தின் ஆரமாய்க் கிடக்க, மலையிலே குரவையாடுவோர் கூட்டிய ஒலி ஒரு புறம், கொடிச்சியர் பாடிய பாடல் ஒலி ஒரு புறம்,
வேலன் ஆடிய வெறியாட்டத்தின் ஒலி ஒரு புறம்,
கூலம் உண்ண வந்த பறவைகளை மகளிர் ஓட்டும் ஒலி ஒரு புறம், தேன் கூட்டைப் பிரித்துத் தேனெடுத்த குறவர் ஒலி ஒரு புறம், அருவியில் இருந்து கொட்டும் தண் நீரின் பறையொலி ஒரு புறம், புலியுடன் யானைப் பொருதிப் பிளிரும் ஒலி ஒரு புறம்;

மேலும் இது போன்ற பல்வேறு ஒலிகளால் மலைப்புறம் மனத்தை ஆட்கொள்ள பேரிஆறு ஒதுக்கிக் குவித்த நுண்மணல் பரப்பிலே தன் துணைகளோடு குட்டுவன் ஒருங்கிருக்கிறான்.

"நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை
இடுமணல் எக்கர் இயைந்துஒருங்கு இருப்பக்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக்குறு வள்ளையும், புனத்துஎழு விளியும்
நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்
பறைஇசை அருவிப் பயம்கெழும் ஓதையும்
...............
இயங்குபடை அரவமோடு யாங்கணும் ஒலிக்க......"

மலைக்கு வந்த மன்னனைக் கண்டு போற்ற மலைக்குறவர்கள் மலைவளம் யாவையும் கொண்டுவந்தனரோ என்று எண்ணும்படியாக, யானையின் தந்தம், மான்மயிர்ச் சாமரம், தேன், சந்தனக்கட்டை, சிந்துரக்கட்டை, நீலக்கற்கள், கத்தூரி, மா, பலா, வாழை, கரும்பு, பூங்கொடிகள் செடிகள், பாக்கு, சிங்க புலி கரடி குரங்கு மான் பூனை ஆட்டுக் குட்டிகள், மாடு யானைக் கன்றுகள் கீரிப்பிள்ளை, கிளி மற்றும் இன்ன பிறவற்றை சுமந்து வந்து காணிக்கையாக குட்டுவன் முன் இட்டு வணங்கினர்!

வளமுடன் வாழ்கிறோம் நாங்கள், உன் அரச நீதி வாழ, வாழ்க நீ பன்னூறாயிரம் ஆண்டுகள் என்று போற்றி உரைத்தனர் அவனிடம் வியப்புடன்,
"வண்ணம் குழைந்து
வாடி வதங்கி
இடமுலை இழந்தவளாய்
ஆறாத்துயருடன்
அழுகை வற்றிப்போய்
வந்தபெண்ணொருத்தி
வேங்கை மர நிழலில் நின்றாள்!
நீத்தனள் தம்முயிரை!
எந்நாட்டினளோ யார்மகளோஅறியோம்!
நிந்நாட்டில் யாம் கண்டதில்லை; வியப்பு! என்று.."

"கான வேங்கைக் கீழ்ஓர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்.
எந்நாட் டாள்கொல் ? யார்மகள் கொல்லோ ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;..."

தண்டமிழ் ஆசான் சாத்தனார் சேரன் அருகிருந்தார்; அவர் நோக்கினார் மன்னன்பால்!

'தன் காற்சிலம்பை விற்க வந்த கணவனைப் பாண்டியன் தீர ஆராயத்தவறினன்; கள்வனென்று காவலர் தலைகொய்தனர்!

கோவலன் மனைவி கண்ணகி தன் காதலும் வாழ்வும் தீய்ந்து போக, கோவலன் கள்வனல்ல என்ற நீதியை சிலம்புடைத்து நிறுவினாள் பாண்டியன் முன்.

மானம்காக்க மன்னன் நெடுஞ்செழியன் மாண்டான்; மாண்ட மன்னனின் உயிரைத் தேடிக் கொண்டு சென்றது போல் கோப்பெருந்தேவியின் உயிரும் சென்றது!

கண்ணகி சூளுரைத்தாள் மதுரையை எரிப்பேன் என்றும்! மதுரையையும் எரித்தெறிந்தாள் மங்காச் சினத்துடன்.

பாண்டிய நாட்டின் கொடுங்கோலை எடுத்துரைக்க தன் சோழ நாடு திரும்பாமல், உன் சேரநாட்டுச் செங்கோலிடம் முறையிட வந்தாள் போல வந்து, வானகம் சென்று விட்டாள் மாதரசி!' என்று
சாத்தனார் சேரனிடம் கண்ணகி பற்றிக் கூற,

"மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண்தமிழ் ஆசான் சாத்தன்இகது உரைக்கும்...

கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி இறைக்குஉரைப் பனள்போல்
தன்நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள்
நின்நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று....."

சேரன் வியப்புற்றான்! வருந்தினான் பாண்டியன் மறைவு கேட்டு!

செங்கோல் தவறிய சேதி எம்போல் அரசர்க்கு எட்டும் முன் தம்முயிர்ப்பிரிந்த சேதியை சென்றடையச் செய்து உயர்ந்து விட்டான் பாண்டியன்!

கோவலத்தீர்ப்பால் வளைந்த செங்கோலை தன்னுயிர் நீக்கி நிமிர்த்தி விட்டான் பாண்டியன்! என்று கூறி, சேரன் பாண்டியனைப் போற்றிய மனிதநேயம் (அரசநேயம்?) நெஞ்சில் குறிக்கத் தக்கதாகும்! மாற்றான் தோட்ட மல்லிகையாயினும், மணம் பெற்றதல்லவா?

நல்லவனை மதிப்பது நல்லோர் பண்பு! திறமையை மதிப்பது திறமையானோர் பண்பு.

"எம்மோர் அன்ன வேந்தர்க்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்குஎன
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது...."

மாற்றரசனைப் போற்றியது மட்டுமல்ல, நாட்டிலே மழை பொய்ப்பின் அரசனுக்கு அச்சம், ஏதாகின் ஒன்றினால் மக்கள் துயருறின் அரசனுக்கு அச்சம்! குடிகளைக் காக்கும் தொழில் ஆன அரச தொழில் துன்பத்தைத் தருவதேயல்லாமல் போற்றத்தக்கதன்று என்ற ஒரு தத்துவ உண்மையை உணர்த்துகிறான் சேரன்.

"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்என...."

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரிகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

இன்று சந்திரபாபு நாயுடு, "நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்" என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம்!

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே "நான் அரசன் என்ற தொழிலாளி" என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைம் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்!

பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற அய்யத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்!

சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற அய்யம் தோன்றாமலில்லை!

மதுரையம்பதியில் நடந்தவை கேட்டு வியப்புற்ற சேரனுக்கு சிறு குழப்பம்!;

பாண்டியன் உயிரை தேடத் தன்னுயிரை அனுப்பிய கோப்பெருந்தேவி சிறந்தவளா ?

காதலனின் மானம் காக்க கடமையேற்று, பிழையாய்ப்போன நீதியை மீட்டு, மடமையில் திளைத்த பாண்டிய நாட்டை தீய்த்து
பின்னர் மாய்ந்த கண்ணகி சிறந்தவளா ?

சேரன் தன் பட்டத்தரசி வேண்மாதேவியை நோக்கினன்! சேரமாதேவியிடம் தெளிவு பெறல் கருதி, இருவரில் வியக்கத்தக்க சிறப்புடையவர் யார் என்று வினவினன்!

பெண்ணரசிகளில் பேரரசி யாரென்று சேரப் பாரரசியிடம் கேட்டான்!

தன்கணவன் உயிர்துறந்ததும் பொறுக்க முடியாது செல் எனச் சொன்னதும் சென்ற கோப்பெருந்தேவியின் உயிர் உயர்ந்தது! அவள் உயர்ந்தவள்! பெருஞ்சிறப்பு பெறட்டும் பாண்டிமாதேவி!

ஆயினும், தன் கணவனின் மானத்தைக் காத்து, மன்னவனிடம் நியாயத்தைப் போராடிவென்று, நாட்டில் மடமை அழியப் போர்தொடுத்து, காதல், வீரம், மானம் போற்றி, நம் நாடு தேடிவந்து அழியாப் புகழ் கொண்ட அந்தப் பெண்ணரசி கண்ணகி வழிபடத்தக்கவளாவாள்; என்றனள் வேண்மாள்!

சேரப்பெண் சோழப்பெண்ணைப் பாண்டிப்பெண்ணினும் வழிபடத் தக்கவளாய்த் தன் கணவனுக்குத் தெளிவுபடுத்துகிறாள்!

"காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு உறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்என,..."

தன்னரசி சொன்ன கருத்தை விரும்பி ஏற்ற சேரன், அமைச்சர் பெருமக்களைப் பார்த்தனன். அவர்கள் கருத்தும் அதாகவிருக்க, கற்புக்கரசிக்குக் கற்சிலை வடிக்கவேணும்! பொதியைக்கல் அல்லது இமயக்கல் பொருத்தமாய் இருக்கும்! பொதியைக்கல்லாயின் பொன்னியிலும், இமயக்கல்லாயின் கங்கையிலும் நீராட்டிப் படிமம் (சிலை) செய்ய வேண்டும், என்று அமைச்சர்கள் அறிவுறுத்தினர்!

பக்கம் இருக்கும் பொதியை எடுத்தல் நீள்வாள் ஏந்திய மறக்குடிக்குப் பெருமை அன்று ஆதலின் இமயம் சென்று கல் கொணர்தலே கண்ணகிக்கும் சிறப்பு; எமக்கும் சிறப்பு! என்று முடிவெடுத்தனன் மன்னன்!

"மாலைவெண்குடை மன்னவன் விரும்பி
நூல்அறி புலவரை நோக்க ஆங்குஅவர்
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்துஎன,
பொதியில் குன்றத்துக் கல்லால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்துறைப் படுத்தல்
மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று:..."

மாபத்தினிக் கடவுள் கண்ணகிக்குப் படிமம் செய்ய யான் வேண்டுவதெல்லாம் இமமலைக்கல்லொன்று. அதைப் பெறுவேன்! எதிர்ப்பவர் மறுப்பவர் யாராயினும் வெல்வேன்! இமயக்கல்லைக் கொணர்வேன்! என்று உரைத்தான் வஞ்சிக்கோன்!

அமைச்சன் வில்லவன் கோதை எழுந்தான், 'வாழ்க நீ! வெல்க நீ!' என்றான்; போற்றினான்!.

மேலும், சோழனையும், பாண்டியனையும் முன்னாள் வென்றவன் நீ!
கொங்கனர், கங்கர், கலிங்கர், கொடிய கருநாடர், வங்காளர் மற்றும் பல்வேல் கட்டியர் ஆகியோர், வட ஆரிய மன்னர்களோடு கைகூடி வந்து உன்தமிழ்ப் படையோடு போரிற்றுத் தோற்றோடியது என் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை!

பன்னூறாயிரம் ஆண்டுக்கும் முன்னரே கருநாடர்களை "கொடுங்கருநாடர்" என்று இளங்கோவடிகள் குறிப்பது கவனிக்கத்தக்கது.

கங்கை ஆற்றங்கரையில் உன்னை எதிர்த்த ஆயிரம் ஆரிய மன்னர்களை நீ ஒருவனே கொன்று குவித்ததைப் பார்த்த கூற்றுவனும் வியப்புற்றான்!

கடவுள் எழுத கல் வேண்டுமெனில் அதை மறுப்பார் இல்லை! எதிர்ப்பார் இல்லை! முடங்கல் அனுப்பி, கொண்டு வரலாம் என்றான் வில்லவன் கோதை!

வில்லவன் கோதையை அடுத்து, அமைச்சன் அழும்பில் வேள் எழுந்து, வடதிசை மன்னர்களின் ஒற்றர்கள் எப்பொழுதும் நம்நாட்டைச் சுற்றிக் கொண்டே உள்ளனர். "கல் கொணர வடதிசைப் பயணம்" என்று பறையொலித்திடு அது போதும்; அவ்வொற்றர்களே சென்று சொல்லிவிடுவர்! என்றான்.

மன்னன் சேரனும் வடதிசைப் பயணம் சென்று கல் கொணர முடிவெடுத்து வஞ்சி மாநகரம் முழுதும் அது குறித்துப் பறையொலித்து அறிவித்தான்!; படைகளையும் திரட்டினான்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
20-நவம்பர்-2000

No comments: