Pages

Saturday, November 25, 2000

சிலம்பு மடல் 30

சிலம்பு மடல் - 30 சேரனின் சூளுரையும் போரும்!

வஞ்சி:
கால்கோள்காதை, நீர்ப்படுகாதை:

மலைவளம் கண்டு, மாபத்தினிக்குப் படிகம் பண்ண கல்லெடுக்க, கங்கைதாண்ட முடிவு செய்த மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மீண்டு அரசவையில் வீற்றிருக்க அமைச்சர்களும் படைத்தலைவர்களும் கூடியிருக்கின்றனர்!

வடக்காண்ட மன்னர்கள் 'தமிழரசர்கள், இமயத்தில் கொடிநாட்டியது, எம்போல் திறம் வாய்ந்த அரசர்கள் இல்லாத காலத்தில்' என்று நகையாடியதை, வடதிசையிலிருந்து வந்து அரசனைப் பார்த்துப் போன முனிவர்(தாபதர்) சேரனின் காதில் போட்டுவிட, கொதித்துப் போயிருந்தான் குட்டுவன்!

படிகத்துக்குக் கல் எடுக்கப் பயணம் போகும் எண்ணத்தோடு, பாடம் புகட்டும் எண்ணமும் சேர்ந்து கொள்ள, "நமக்குப் பொருந்தா வாழ்க்கை உடைய ஆரிய அரசர்களின் பழிச்சொற்கள் எம்மை மட்டுமல்ல, எம்போன்ற சோழ, பாண்டிய அரசர்களையும் பழிப்பதாகும்; ஆதலால், வட நாட்டு மன்னர்களை வென்று அவர்கள் (கனகன் விசயன்) தலையில் வைத்து கல் கொணர்வேன்; அப்படி இல்லையென்றால் நான் குடிகாக்கும் மன்னனல்லன்; என் குடிகளுக்குப் பழிச்சொல் வாங்கித்தந்த கொடுங்கோலன் ஆவேன்!" என்று சூளுரைத்தான்!"

"உயர்ந்துஓங்கு வெண்குடை உரவோன் கூறும்:
இமயத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅகது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்;

வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கல்கொண்டு அல்லது
வறிது மீளும்என் வாய்வாள் ஆகில்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயம்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆக!...."

சேரன் சினம் கண்ட ஆசான் எழுந்து "உன்னைப் பழித்திருக்க மாட்டார்கள், சோழனையும் பாண்டியனையும் பழித்திருப்பார்கள்;
நீ சினம் கொள்ளாதே" என்று சொல்லிப் பார்த்தான்;

இதற்கிடை, அரசவை நிமித்திகன் (சோதிடன்) எழுந்து "மன்னவா! இதுதான் உனக்கு மிகநல்ல நேரம், உடனே புறப்படு! வெற்றி உனக்கே!" என்று சாத்திரம் ஓத எழுந்த மன்னன் அமரவில்லை! ஆனையிட்டான் படைகளுக்கு!

கண்ணகியை உயர்த்திப்போற்ற, கங்கைதாண்டி இமமலைக் கல்லெடுக்கப் புறப்பட்ட மன்னனின் பயணத்தின் நோக்கம் படையெடுப்பாய் மாறிப்போனது!

"ஆறுஇரு மதியினும் காருக வடிப்பயின்று
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னர்எல் லாம்நின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்குஇது முன்னிய திசைமேல்
எழுச்சிப் பாலை ஆகஎன்று ஏத்த,....."

போருக்குப் புறப்படுமுன் படைத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு விருந்தளித்தான்! பனம்பூ மாலையை கழுத்தில் அணிந்து, பூவா வஞ்சியில் (அதாவது ,மலரல்ல ஊர்ஆதலால் பூவா வஞ்சி என்றார்) பூத்த வஞ்சியை (வஞ்சிமலர்) முடியில் சூடிக்கொண்டு நாட்டோ ர் வாழ்த்த இறையை வணங்கி யானைமேலமர்ந்தான்! புறப்பட்டான்!

புறப்பட்ட மன்னனுக்குத் திருவனந்தபுரத் திருமால் கோவில் சேடத்தைக் (பிரசாதம்) கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் குடிகள்!

படைகளோடு வஞ்சி நீங்கிய மன்னன் நீலகிரிமலை சேர்ந்தனன்.
படைகளுடன் பாடிவீட்டில் தங்கியிருந்தான்!

"பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து....

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்;
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கஎன
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின்று ஏத்தக்

(ஆடக மாடம் = திருவனந்தபுரம்)

"ஆலும் புரவி அணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத்து இறுத்துஆங்கு....."

நீலகிரியில் படைகளொடு இருந்த மன்னனைப் பலர் வாழ்த்த, வாழ்த்த வந்தவர்களில் சஞ்சயன் என்பான், அரசே, 'கங்கைக்கரையாளும் நமது நட்புக்குரிய நூற்றுவர் கன்னர், கடவுள் எழுதக் கல்லை அவர்களே கொண்டு தருவதாகக் கூறியனுப்பியுள்ளனர்' என்று கூற, குட்டுவனோ, 'சஞ்சயா, ஒரு விருந்திலே ஆரிய அரசர்கள் கனகனும் விசயனும், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல், தமிழரசர்களைப் பற்றி அறியாத புதிய அரசர்களுடன் அருந்தமிழரின் ஆற்றலைப் பழித்துப் பேசியிருக்கிறார்கள்!'. அவர்களுக்குப் பாடம் புகட்டவே இப்படை செல்கிறது'; இதை நூற்றுவர் கன்னரிடம் கூறி கங்கையைக் கடக்க படகுகளைத் தயார் செய்யச் சொல் என்று ஆனையிட்டான் குட்டுவன், தமிழரைப் பழித்தோரைப் பொறுக்காமல்!

"பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம்எனச்....."

நீலகிரியை விட்டு தன் படைகளொடு நீங்கிய சேரன் செங்குட்டுவன் எந்தவிதத் தடையும் இல்லாமல் கங்கையின் தென்கரைசேர்ந்து, அங்கு நூற்றுவர் கன்னர் அளித்த ஓடங்களில் கங்கையைக் கடந்து போர்க்களம் செல்கிறான்.

அருந்தமிழர் ஆற்றலைப் பார்த்துவிடுவோமே என்று உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்ற வடதிசை வேந்தர்கள் கனக விசயருக்குத் துணையாக சேரனை எதிர்த்தனர்.

"உத்தரன், விசித்திரன், உருத்திரன்,பைரவன்,
சித்திரன்,சிங்கன்,தனுத்திரன்,சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்எனக்
கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர...."

வேட்டைக்குப் போன சிங்கம் பெரும் யானைக் கூட்டத்தைக் கண்டு ஊக்கத்துடன் பாய்வதைப் போன்று போரிட்ட சேரன் வெட்டி சாய்த்த பகைவரின் உடல்கள் கொழுப்பு நிறைந்த இரத்த ஆற்றில் மிதந்தோட, எருமை ஏறி வரும் எமன் ஓர் பகலில் உயிர்க் கூட்டம் அனைத்தையும் உண்ணுவதைப் போலக் குட்டுவன் கொன்று சாய்ப்பதை ஆரிய அரசர்கள் நன்கு உணர்ந்தனர்!

யானைகளை எருதாகப் பூட்டி, வாளைத் தார்கோலாகக் கொண்டு நெற் போரில் கடா விட்டதைப் போன்று, பகை வீரர்களை உழவாடினான் சேரன்! வடவாரிய அரசர்கள் தோற்றனர்!

வாய்ப்பேச்சாலே வீரம் காட்டி வளமிகு தமிழரை இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் அய்ம்பத்திரு தேர் வீரர்களுடன் சிறைப்பட்டனர்!

"எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய...."

"கச்சையானை க் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி, வாள்கோல் ஆக
ஆள்அழி வாங்கி அதரி திரித்த
வாள்ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தித்........."

அமைச்சனும் படைத்தலைவனுமான வில்லவன் கோதையோடு, வெற்றிவாகை சூடிய சேரன், போர் முடித்த மறவர்கள் பலரை ஏவி இமயமலையிலே கண்ணகிக்கு சிலைவடிக்கக் கல்லைப் பெயர்த்து எடுத்துக் கொண்டான்.

"வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேல் தாளைப் படைபல ஏவிப்
பொன்கோட்டு இமயத்துப் பொருஅறு பத்தினிக்
கல்கால் கொண்டனன் காவலன் ஆங்குஎன்."

உலகில் பெரும்போர்கள் 18 ஆண்டிலோ, 18 திங்களிலோ, 18 நாளிலோ முடிந்திருக்க, 18 நாழிகையிலேயே தென்தமிழ் ஆற்றல் அறியா கனகன் விசயன் என்ற இரு ஆரிய மன்னர்களுடன் நிகழ்ந்த போரை வென்றான் சேரன்! (18 ஆண்டுகள் தேவர்-அரசர் போர், 18 திங்கள் இராம-இராவணப் போர் 18 நாளில் பாண்டவ-துரியோதணர் போர் என்று விளக்கம் கிடக்கிறது)

வென்று முடித்ததும் கல் பெயர்த்து அக்கல்லை கனக விசயரின் தலைகள் சுமக்கும் படி செய்து, கங்கையிலே நீராட்டி, படைகளுடன் கங்கையின் தென்கரை சேர்கிறான் சேரன் நூற்றுவர் கன்னர் அமைத்துக் கொடுத்த பாடிவீட்டில்!

"வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்
சினவேல் முன்பின் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தம் கதிர்முடி ஏற்றிச்

செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள,

வருபெறந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரைஅகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து......."

ஆங்கு தமிழரின் வெற்றிக்குப் போரிட்டு மாண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செய்தான்; காயம்பட்டோ ருக்கும் மற்றும் அனைவருக்கும் சிறப்பு செய்தான் சேரன்!

மாவீரர்களை வணங்குதல் தமிழர் மாண்பு! தமிழர் நிலத்திலும் மனத்திலும் மாவீரர்கள் என்றும் வாழ்வர்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
25-நவம்பர்-2000

No comments: