Pages

Sunday, February 13, 2000

சிலம்பு மடல் 23

சிலம்பு மடல் - 23 கொல்லன் சதியும்! பாண்டியன் மதியும்!
மதுரை:
கொலைக்களக் காதை:

காசு வரும் கண்ணகியின் காற்சிலம்பால் என்று சாவு வரும் திசை நோக்கி, சிந்தித்துக் காத்திருந்தான் கோவலன்;

அந்தப்புரம்:
அழகுப் பெண்டிர் அணிவகுக்கும்
அரசனின் ஆசைக் குடில்!

வகைவகையாய்ப் பெண்கள்!

அரசனின் ஆசையை அவ்வப்போது தீர்த்துவிட
எப்போதும் காத்திருக்கும் பெண்மந்தை!

அரச மண்டபம்:
அந்த ஆசையை அரசனுக்கு உருவாக்கும்
ஆடல்மேடை! அமைச்சரவையும் அங்கே!!

அந்த மேடையிலே பாண்டியன் நெடுஞ்செழியன்!

ஆடல் அரசிகளின் முட்டியவைகளின் வெட்டுதல்களைக் களித்துக் கொண்டே முட்டாதவைகளில் முயங்க மோகித் திருந்தானோ? என்று முகங்கோணுகிறாள் கோப்பெருந்தேவி!

பெண் பல ஆடவரை நினைத்தால் அருவருக்கும் சமுதாயத்தில், ஆடவன் எத்தனைப் பெண்டிருடன் சுற்றி விட்டு வந்தாலும் அவனைச் சிறு முனகலுடன் ஏற்றுக் கொண்டு விட்டு, கற்பென்ற காரணம் சொல்லும், முதுகெலும்பில்லா மூடப் பெண்களில் கோப்பெருந்தேவியும் ஒருத்தி!

ஒருவேளை பாண்டியன் மோகித்திருந்தானானால் அவனை அருவருத்து விட்டா இருக்கப் போகிறாள் ?

ஆடவனின் அளவுக்கும் அதிகமான ஆசையை அனுமதித்து விட்ட சமுதாயத்தில் கண்ணகி போன்ற பலருள் அவளும் ஒருத்திதான்!

தொலைக்காட்சியோ திரைப்படமோ இல்லாத காலத்தில் நேரடியாகவே கலைக்காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலை;

ஆடிய பெண்மணிகளின் அழகின் மேல் தேவி பொறாமைப் பட்டிருக்கவேண்டும்! தலை நோவென்று உள்கோபம் மறைத்து பாதியில் எழுந்து சென்று விட்டாள்.

பொய்க்கோபம் காட்டியிருந்தாள்!

பாண்டியன் ஏதும் தவறு செய்திருக்க மாட்டான் என்றுதான் கருதமுடிகிறது. அரசியின் மனம் வருந்துதலை அறிந்த உடனே அச்சமடைந்த பாண்டியன், தேவியோடு அன்பால் மலர்ந்த காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும்!

தேவியின் மனமுணர்ந்து சிறு அச்சமும் வருத்தமும் அவனுக்கேற்பட சற்றே குழப்பத்துடன் அவளிடம் தேடி நடக்கிறான்; அமைச்சரவை நீங்கி!

சிறு குழப்பம்தான்; தேவியிடம் அன்பைச் சொல்ல விரைகிறான்!

மன்னனின் விரைந்த கால்களின் வேகம் குறைத்தது கொல்லக்கயவன் வீழ்ந்து வணங்கி அவனைப் போற்றியது!

"ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதல் தேவி கூடாது ஏக,
சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புஉடைவாயில் கடைகாண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி!......."

மன்னா!

"அரசியாரின் சிலம்பொன்றைத் திருடியவன் யார் என்று கண்டுபிடித்தேன்!

கன்னக்கோலில்லை; குத்தும் கோலுமில்லை! மந்திரம் போட்டு காவலரை மயக்கி அரசியாரின் காற்சிலம்பை கவர்ந்தான் அக்கள்வன்!

இப்பொழுது அவனை என் இல்லத்தில் இருத்தியிருக்கிறேன்" என்றான் அந்தக் கொல்லக்கயவன்.

முதல் தகவல் அறிக்கையை அரசனிடம் சமர்ப்பிக்கிறான் கொல்லன்.

"கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்
துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயில் உறுத்துக்
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்என் பேர்ஊர்க் காவலர்க் கரந்துஎன்
சில்லைக் குடில் அகத்துஇருந் தோன்என...."

என்னடா உலகம் இது ?

மந்திரம் ஒன்றால் ,அரண்மனை வாயில்தோறும், வாசல்தோறும், வீதிதோறும் நிற்கும் காவலரை மயக்கி, அரசமாதேவியைச் சுற்றி இருக்கும் பெண்டிர் கூட்டத்தையும் மயக்கி, அரசியையும் மயக்கி, ஆங்கொரு சிலம்பைத் திருட முடியுமா? என்று
அரசன் நினைத்தானில்லை!

"மந்திரத்தால் இவ்வளவு முடியும் என்றால், அரசன் எதற்கு?
மந்திரவாதி போதுமே!

நாட்டைக் காக்க காவல் எதற்கு? எலுமிச்சையைக் கட்டி மந்திரம் போட்டு ஊரெல்லையில் வைத்துவிட்டால் பகைவர் வராமல் போய்விடுவரே!

நாடுபிடிக்க படைகள் எதற்கு? நான்கு மந்திரவாதிகள் போதுமே!"

அரசன் இதையெல்லாம் சிந்தித்தான் இல்லை!

கோழைகளின் பிழைப்பு மந்திரம்! அதையும் உணர்ந்தான் இல்லை.

ஆனால், பாண்டியன் கடமையிலிருந்து சிறிதும் தவறினான் இல்லை! இல்லவே இல்லை!!

மன்னவன் இல்லத் திருட்டாயினும், குடிகளிடம் களவு நடந்தாலும்
அதை ஆராய அதற்கென்ற காவலர் துறை இருக்கிறது!

இன்று பிரதமர் அல்லது அமைச்சர்களின் இல்லத்தில் களவு போனால், அதையும் காவல்துறையும் நீதித்துறையும்தான் ஆராய்கின்றன! ஆராயவேண்டும்; ஆராயமுடியும்.

பிரதமரோ அமைச்சரோ அந்த முதல் தகவல் அறிக்கையின் பால் ஆராயச் சென்றால் அது நகைப்புக்குரியது! அவ்வாறு அவர்கள் செய்தால் எத்தனைக் குற்றங்களுக்கு முறையான தீர்ப்பளிக்க முடியும்?

இதனை இதனால் இவன் செய்யும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடுதலே அரசனின் அல்லது தலைவனின் வேலை!

அதன்படியே பாண்டியனும் காவலரை அழைத்து விசாரிக்கச் சொல்கிறான்; விசாரனையில் தவறு கோவலனுடையது என்றால் அவனைக் கொல்லச் சொல்கிறான்!

இதில் யாதொரு பிழையும் பாண்டியனிடம் இல்லை! அவன் கடமையைத்தான் அவன் செய்தான்,

"ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்குஎன..."

கொல்லன் தன் வேலை எளிதில் முடிந்தது என்று அகமகிழ்ந்தான்;
காவலர்களை அழைத்துக் கொண்டு இல்லம் வந்து, சாவு வலை இறுகி வருவதை உணராத கோவலனைக் காட்டினான்;

கோவலனிடம் இருந்த சிலம்பைக் காவலரிடம் காட்டி இதுவே அரசியின் சிலம்பு என்று நம்பவைக்க முயன்றான், காவலர்களை தனியே அழைத்துச் சென்று!

வெட்டுதற்குக் கட்டப்பட்டிருக்கும் ஆட்டின் நிலையிலேயே கண்முன் நடப்பவைகளை அறியாதவனாய் கோவலன் சலனமில்லாமல் இருந்தான் அப்பொழுது!

காவலர் தலைவன் அவன் வேலையை முறைப்படியேதான் செய்தான்! கொல்லன் சொன்னதை உடனே நம்பி விடவில்லை;

இவனைப் பார்த்தால் களவு செய்பவன் போல் தெரியவில்லை என்றான் காவலர் தலைவன்!

காவல் பல கடந்து கடுங் களவு செய்பவர்களுக்குரிய தோற்றம் இல்லை என்று உணர்கிறான் காவலன்!

மேலும் ஆராய முற்படுகிறான்; ஆராய்கிறான்;

அவன் அனுபவம் சரியே!

செல்வச் சீமானாக வணிக குலத்தில் பிறந்தவன் வாழ்ந்த சூழலே வேறு. இடையர் தெருவில் நடந்த போது காளை ஒன்று சீறி எதிர் வருதல் துற்குறி என்று அவன் அறிந்திருக்க வில்லை;

காரணம் அச்சூழலே, அதாவது ஆடுமாடுகள் அலையும் இடையர் தெருக்களே அவன் அறியாதது என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார். அவனுக்குக் கள்ளத் தோற்றம் இல்லாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை! ஆயினும் நல்ல தோற்றம் கொண்டவர் எல்லாம் கள்ளர்கள் இல்லை என்று கொள்ள முடியாது.

"இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்
கொலைப்படு மகன்அலன் என்று கூறும்........"

ஆராய்ந்து தெளிதல் என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் ஆனால் கோழைகள் வாழ்வு கொடியேற வாய்ப்பே இல்லை! அதையும் கோழைகளும் நயவஞ்சகரும் நன்கு அறிந்தே இருப்பர்!

அடுத்தவர் வாழ்வை கெடுத்து வாழ்பவர்க்கும், மதம் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்த்து வாழ்வு செய்பவர்க்கும் இது பொருந்தும்.

எங்கே தீர ஆராயந்து விடுவரோ என்று அஞ்சினான் அந்தக் கொல்லக் கயவன்; ஆங்கு குழப்பினான் காவலர்களை;

காவலர்களை எள்ளி நகையாடினான்;

மந்திரத்தின் மகிமை அறியாதாராய் இருக்கிறீரே! இப்படிப்பட்ட கள்வர்கள் மந்திரத்தால் மருந்து வைத்துத் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்பதை அறியாத நீங்கள் காவலரா என்று இகழ் நகை செய்தான் கொல்லன், காவலரைப் பார்த்து!

இத்தகு மந்திரக் கள்வர்கள் இந்திரனின் மார்பில் அணியும் ஆரத்தினையும் கவர்ந்துவிடும் வல்லவர்கள் என்று வஞ்சக மொழி பகன்றான்!

ஆதாரமாக, கண்டறியப்படா களவுகள் சிலவற்றை எடுத்துக் கூறினான்; மந்திரத்தால் தந்திரமாக நடந்ததென்று அடித்துக் கூறினான்.

மனிதனின் அறிவுக்கெட்டாத அனைத்தும் மந்திரமாகவும் மாயமாகவும் தெரிகிறதல்லவா! அம்மந்திரங்களும் மாயங்களும் அறிவிலார்க்குப் பிழைப்புக் கருவிகளாகி விடுகின்றன.

அறிவு வளர்ந்த சமுதாயமே ஆக்கங்களை உலகில் ஏற்படுத்தக் காண்கிறோம். அறிவு கெட்ட சமுதாயம் மந்திரத்திலும் மாயங்களிலும் மனதைப் பறி கொடுத்து தேம்பி நிற்பதை இன்றளவும் நாம் கண்டு கொண்டே இருக்கிறோம்!

இளைய காவலருள் ஒருவனும் மந்திரக் களவொன்று குறித்து கதை ஒன்று சொன்னான்; அவன் தன்னால் பிடிக்க இயலாத கள்வன் ஒருவனை மந்திர மருந்துக் கள்வன் என்று சொல்லிக் கொண்டு தன் இயலாமையை தனக்குள் தேக்கிக் கொண்டவன்:

மந்திரம் என்ற சொல்லிடம் பயந்த அவன், அரசனிடமும் பயந்தான்; இவனைக் கொல்வதே அரசனின் சினத்தில் இருந்து காக்கும் என்று கருத்துக் கூறினான்.

அறிவற்ற கோழைகள் அனைத்திற்கும் பயந்தவர்கள் அல்லவா ?

காவலர் தலைவனின் மனம் மாறவில்லை!

அனைவரின் கூற்றையும் ஆராய்ந்து கொண்டே இருந்தான்!

இதுகாறும் கோவலனிடம் குற்றம் பற்றி ஒரு வார்த்தையும் யாரும் கேட்கவில்லை!

நடக்கும் கருத்துப் பறிமாற்றங்கள் சற்று தூரத்திலேயே நடக்கின்றன. காற்சிலம்பை மதிப்பிடுகிறார்கள் என்றே கோவலன் கருதியிருக்க வேண்டும்.

ஆனால், மந்திரத்தின்பால் இருந்த மயக்கத்தால், நம்பிக்கையால்,
ஆராயும் அறிவற்றவர்களிடம் இருக்கும் உணர்வு உந்தலினால், காவலர்களுள் "கல்லாக் களிமகன்" ஒருவன், மூடநம்பிக்கைப் பற்றினால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவசரப்பட்டான்;

மூடநம்பிக்கையால் ஆத்திரம் வந்ததும் அடுத்தவன் குடலை உருவ நினைத்த காட்டு மிராண்டி அந்தக் "கல்லாக் களிமகன்".

காவலர் தலைவனின் ஆணைக்கும் காத்திருக்கவில்லை! உருவிய வாளுடன் ஓடிப் பாய்ந்தான் கோவலன் மேல்!

கோவலனின் குறுக்கே கொடுவாள் எறிந்தான்!

சற்றே வளர்ந்து விட்ட பூஞ்செடி தன் உச்சியில் மலர்ந்த ஒற்றை வெண் பூவோடு காற்றடிக்கும் திசையெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதைப் போல, கோவலன் சலனமுற்று வாழ்ந்தவன்.

தற்போது மனமும் குற்றமற்று விடியல் நோக்கி அமைதியாக சிந்தித்துக் காத்திருந்தது, காற்சிலம்பிற்கு காசு வரும் என்று!

ஆனால் வந்தது வாள் அவன் உடலின் குறுக்கே! கோவலனின் தலை சற்றுத் தள்ளி வீழ்ந்தது!

"அரிதுஇவர் செய்தி அலைக்கு வேந்தனும்
உரியதுஒன்று உரைமின் உறுபடை யீர்எனக்
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்; விலங்குஊடு அறுத்தது."

வெள்ளை ரோசா மலருக்கு, தன்னைக் கொய்யப் போவது எப்படி தெரியாதோ அப்படியே கோவலன் நிலை.

கொய்யப்பட்டதும் கோவலனின் தலை சேற்றில் விழுந்த மலராய் குருதிச் சேற்றில் நனைந்தது.

"புண்உமிழ் குருதி பொழிந்துஉடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்."

கொல்லன் கயவன்; பொய்சொன்னான்!

பாண்டியன் ஆராய்ந்து கொல்ல காவலரை ஏவி கடமை செய்தான்!

காவலர் தலைவன் ஆராய்ந்தான்!

கல்லாக் காவலக் களிமகன் ஒருவன் தலைவனின் ஆணையும் இன்றி உணர்வுகளின் உந்துதலில், அவசரத்தில் கொலை செய்தான்!

இப்படியிருக்க இளங்கோவடிகள்
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி...."
என்று, பாண்டியன் தீர ஆராயாததை தெளிவிக்கிறார். பாண்டியனின் பிழை எங்கே? எங்ஙனம்?

ஆராய்வதில் தவறா? இல்லை யென்றால் வேறுயாது? விடை காண்போம்!

காரணமறியாமலேயே உடல் வேறு தலை வேறாகி சில துள்ளல்களோடு குருதிச் சேற்றில் குளிர்ந்து போனான் கோவலன்.

கழுத்து அறுபடும் போது அவன் அறத்தை நினைத்தானா? அல்லது வஞ்சக மறத்தை வெறுத்தானா?

கண்களில் நின்றவள் கண்ணகியா? மாதவியா? இருவருமா? தந்தை தாய் சுற்றம் நினைத்தானா ?

சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டில் மறைந்த கோவலனின் நேர்மைக்கு சாட்சி சொல்ல இருக்கும் இரண்டே மகளிர், என்றும் வாழும் காவிரியும் வையையும் ஆவர்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000

No comments: