Pages

Sunday, February 13, 2000

சிலம்பு மடல் 22

சிலம்பு மடல் - 22 கண்ணகியின் கடைசி மனையறம்!
மதுரை:
கொலைக்களக் காதை:

அடைக்கலம் தந்த இடைச்சியின் சிறு வீட்டில், அவள் அளித்த காய்கறிகளைக் கொண்டு, வியர்க்க விறு விறுக்க தன் கண்ணாளனுக்கு உணவு செய்கிறாள் கண்ணகி, பல காலங்களுக்குப் பின்னர்!

மாதவியிடம் இருந்து மீண்டு வந்தும், கடமை கருதி உடன் நாடு நீங்கினரே அல்லாமல் வீடு வாழ்ந்தார் அல்ல!

அவளின் கடைசிச் சமையலை உண்ணத்தான் உயிர் வாழ்ந்தானோ கோவலன்? கடைசிச் சோறைக் காலம் தாழ்த்தி உண்ணத்தான் காதங்கள் பல கடந்து மதுரையம்பதி சேர்ந்தானோ?

செல்வச் சீமான் தன் கடைசி நாட்களை நாடோ டிக் கழித்திருக்கிறான் காதல் மனைவியுடன்! கடைசி நாளில் மனைவியின் கையால் தன் வாய்க்கு விருந்தளிக்கிறான்!

சிறு வெள்ளைப் பனம் பாயொன்றை சாணம் மெழுகிய தரையில் போட்டு அமரச்செய்தாள் அவனை! தூய நீரில் அவன் கால் அடிகளை துடைத்து விட்டு சற்றே தரைக்கு தண்ணீர் தெளிக்கிறாள்!; நடக்கப் போகும் கோவல-கண்ணகியின் மரணத்தை எண்ணி அஞ்சி மயக்கமுற்றுக் கிடந்த நிலமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புதல் போல!

ஈனா வாழையின் குருத்தொன்றை விரித்துப் போட்டு அன்னமிட்டாள்! அமுதென்று உண்டான்!

அவன் உணவுண்ணும் அழகில் ஆயர்பாடிக் கண்ணணைக் கண்டனர் இடைச்சி மாதரியும் அவள் மகள் ஐயையும்;

கோவலன் மனதிலே ஒரு அமைதி!

இழக்கப்போகும் தலைக்கு, இழந்த வாழ்க்கை திரும்பிய நிம்மதி!

"சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்குஒழிப் பனள்போல்
தண் ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து,
அமுதம் உண்க அடிகள் ஈங்கு'என......"

உண்ட இடத்தை சுத்தம் செய்து, வெற்றிலை நீட்டிய கண்ணகியின் கரத்தைப் பற்றி மெல்ல இழுத்து அணைத்துக் கொள்கிறான்!

பல காலம் முன்னர் படுத்துப் புரண்டிருந்தாலும், அப்பொழுது அணைத்துக் கொண்டபோது அரைவினாடி புதுமை நினைவு!

அடுத்த அரை வினாடியில் பல ஆண்டுகளை வாழ்ந்துவிட்ட உணர்வு!

அதற்கு மேல் பொறுக்கவில்லை கோவலனுக்குத் தான் செய்த குற்றங்கள்!

பருக்கைக் கற்கள் குத்திய வண்ணச் சீறடியின் வண்ண மாற்றத்தைக் கண்டு இரங்குகிறான்!

சாகப்போகுமுன் பாவக்கணக்கு சொன்னான் கண்ணகியிடம்; கண்கள் பனிக்க!

என் பெற்றோருக்கு, துயர் தந்தேன்! பரத்தமை சேர்ந்தேன்! பயனில் பேசுவர் சேர்ந்தேன்! ஏளனப்பட்டேன்! இகழ நடந்தேன்! பெரியோர் சொல் மறந்தேன்! சிறு வயதேயாயினும் அறிவிற் சிறந்த உனைத் தவிக்கவிட்டேன்! தத்தளித்தாய்! அதைத் தாங்கமுடியவில்லை இப்போது எனக்கு! புறப்படு என்றதும் புறப்பட்டாயே என் உயிரே, உனையாப் பிரிந்தேன்!?

குற்ற உணர்வினால் குறுகிப் போனான்! நாளைய கதி அறியாது,
நற்கதி வேண்டி ஏங்கினான்!

நிரந்தரமாய்ப் பிரிகையிலே, இடையிலே பிரிந்ததை எண்ணி வருந்தினான்!

அனைவருக்கும் துன்பம் தந்த போற்றா ஒழுக்கம் செய்தீராயினும் (உங்கள் சொல்) மாறா உள்ளம் படைத்த வாழ்க்கையை உடையவள் நான் ஆதலால் உங்களுடன் உடன் புறப்பட்டேன் என்றாள் செல்வக் கொழுந்து!

"போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றுஎழுந் தனன்யான் என்றுஅவள் கூற..."

மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

என்று, அன்று மனையறம் புகுந்த போது அவளைப் போற்றிய கோவலன் இன்று மரணம் புகும்போதும் போற்றுகிறான் அவளை!

"பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய் நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!...."

பெண்ணின்பத்திற்காகப் பேரலைச்சல் அலைந்தவன் கண்ணின் மணியாளின் காதலிலும் கற்பிலும் காலம் கடந்து கரைந்து கடைசி முறையாக அவள் மெய் முழுவதையும் தழுவிக் கொண்டு கண்ணகியின் காற்சிலம்பொன்றைக் கடன் பெறுகிறான்; காலமுழு காதல் வாழ்க்கைக்குப் பொருள் ஈட்ட!

"என்னோடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகஎனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ......."

இல்லம் தாண்டி தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான்! காளையொன்று பாய்ந்து வந்தது தீயகுறி என்பதை அறிந்திருக்காதவனாய் நடையைத் தொடர்கிறான்! கண்ணகிக்கும் அவனுக்கும் இடைவெளி தூரமாக ஆகிக்கொண்டேயிருக்க, அது நிரந்தர இடைவெளி என்று அறியாது, இருவரின் கண்களில் இருந்து இருவரும் மறைய, பல வீதிகளைக் கடந்து பொற்கொல்லர் வீதியில் நுழைந்தான்!

பல நுட்பங்கள் சமைக்கும் பொற்கொல்லர்கள் ஆங்காங்கிருக்க பலர் முன்னும் பின்னும் வர இவனோ 'சட்டை' அணிந்து துலாம் தூக்கி நடந்த கொல்லனைப் பார்த்து, அவனை அனுகுகிறான்!

மேலங்கி அணிந்திருந்ததாலேயே அவனை அரசனால் சிறப்புப் பெற்றவன் என்று எண்ணுகிறான்! ஏமாளி ஆகிறான்!

அயலூராரை அறியாத அப்பாவி!

'சட்டை' அல்லது மேலங்கி போட்டு நடந்தாலே அரசனால் மதிக்கத் தக்கவன் என்று இருந்த காலம் போலும்! ஏனைய கொல்லர்கள் மேலங்கி இல்லாதிருந்திருக்க வேண்டும்!

"நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவன்எனப் பொருந்திக்...."

பார்வையில் தோற்றான் கோவலன்!

நல் மக்களைப் போன்றே இருப்பர் கயவர்! அவர்களைப் போல நல் மக்கள் தோற்றத்தில் இருப்பவரை யாம் கண்டதில்லை என்று
திருவள்ளுவரே அஞ்சி ஒதுங்கிப் போகிறார்!

கயவரைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடும் திறன் சொல்லவில்லை குறள்!

ஆனால்
"மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"
என்று கூறிவிட்டு வள்ளுவம் வாய்மூடிக் கொள்கிறது!

கோவலன் என்ன செய்வான் பாவம்!

ஒரு காற்சிலம்பை மட்டும் விற்று தொழில் செய்து பொருளீட்டலாம் என்று ஒரு பெருந்தனக்காரன் நினைக்கிறான் என்றால் அச்சிலம்பு பொருள் மதிப்பு மிக்கதாக இருக்கவேண்டும்!

ஆடைப்பகட்டைப் பார்த்தவுடன் தன் மனையாளின் விலைமதிப்பு மிக்க சிலம்பை விற்க சரியான ஆள் என்று நினைத்தான்! ஏமாந்து விட்டான்;

தனக்கு ஒரு குறை உண்டானால் அதனைப் போக்கிட, தன்னை விற்று விடுவர் கயவர் என்று எழுத வள்ளுவர் எத்தனைக் கயவரிடம் ஏமாந்தாரோ தெரியவில்லை! அதனால்தான்

"எற்றிற் குரியவர் கயவர் ? ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து"

என்று எழுதிவைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்! இக்கொல்லக் கயவனும் அங்ஙனமே! தான் பாண்டியன் மனையில் சிலம்பு திருடிய சேதி வெளியாகாமல் இருக்க (அல்லது வெளியாகும் முன்), அதற்கொப்பாக இருந்த கண்ணகி சிலம்பைக் காட்டி, காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டான்!

பாண்டியன் பட்டத்தரசிக்கல்லது வேறு யாருக்கும் பொருத்தமுடையதல்ல இச்சிலம்பு; ஆதலில் என் இல்லத்தில் காத்திருப்பீர்! காட்டி வருவேன் வேந்தனிடம், என்று கூறி கோவலனை தன் இல்லத்தருகே இருக்கச் செய்கிறான்!

இவனும் அவன் குடிலருகே இருந்த தேவகோட்ட மதிலுக்குள்
சென்று தங்கினான்!

பொருள் தேடவந்தவன் அமைதியாகக் காத்திருந்தான்; சாவு வந்து கொண்டிருப்பதை எப்படி அறிவான் ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000

No comments: