Pages

Sunday, February 20, 2000

சிலம்பு மடல் 24

சிலம்பு மடல் - 24 கோவலனைக் கொன்றது யாது?
மதுரை:
கொலைக்களக் காதை:

வெள்ளை மலரொன்றைக் கிள்ளிச் சேற்றில் போட்டு, சற்றே மிதித்து காலெடுத்ததும் அம்மலரின் இதழ்கள் ஒன்றிரண்டு, நைந்து போயினும், மெல்ல அசையும். அப்படியே சில சிறு அசைவுகளோடு அமைதியானான் கோவலன்! இல்லை இல்லை!! அமைதியானது கோவலனின் உடலும் தலையும்.

உயிர் இருக்கும் வரை உடலும் மனமும் போட்டி போட்டு அலையும். உயிர் பறந்தபின்னே இரண்டும் ஒரே நேரத்தில் ஓய்ந்து விடுகின்றன!

"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."

பாண்டியனைத் தீராப் பழிக்கு ஆளாக்கி விட்டது கோவலனின் உயிரா ?

பாண்டியன் அரச கடமையைச் சரியாய் செய்தான்; காவற்துறைக்கு கட்டளையிட்டான்.

காவற்துறையும் கடமையைச் செய்தனர்: ஆயினும் அவர்களுள் ஒரு களிமகன்.

"கற்கக் கசடற!"
"நிற்க அதற்குத் தக!"

கல்லாமை அல்லது கற்றதன் பின் நில்லாமை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பிசகினாலும் விளைவது தீங்கே!

அதைத்தான் "கல்லாக் களிமகன்" என்ற இரண்டே சீர்களில் ஆசிரியர் விளம்பியுள்ளார்!

அவன் கல்லாதது யாது? அரச காவலனாயிருப்பவன் சிறிது கல்வி கற்றேயிருப்பான்.

ஆனால் அந்தக் கல்வி மந்திரத்திடம் மண்டியிட்டுவிட்டது!

அரசனும் கல்வி கேள்விகளில் சிறந்தவனே! அக்கல்வியும் கேள்வியும் மந்திரத்து முன்னே கேள்விக் குறியாகிப் போனது!

அரசனாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை! அவன் ஆளாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை!

அரசன் முதல் கடைநிலை ஊழியன் வரை மூடத்தனம் என்ற முக்காட்டுக்குள் பதிந்து போனவர்கள்!

சில ஆயிரம் அல்லது பல நூறாண்டுகட்கு முன்னர் மட்டும்தான் என்றில்லை!

இன்றும்தான்!

இலிங்க, விபூதி வித்தை மடத்தில் சிலர் கொல்லப்படுகின்றனர்; யாரும் காரணம் அறியார்! மந்திரத்துக்கு முன்னே காவற்துறை கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.

நூறு கோடி மாந்தருக்கு முதன்மையானவர்; அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்!

ஆயினும் அந்த மந்திர தந்திர வித்தைகளில் மயங்கி, ஆங்கு சென்று மந்திரவாதி முன் மண்டியிட்டு நிற்பதை நாம் வாழும் இந்தக் காலத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

பலகோடி மக்களுக்கு முதல்வர்! ஆட்சிப் போட்டியில் வெற்றிபெற வேள்வி நடத்துகிறார்.

ஊர் ஊராய்ப் போய் யாகவேள்வி செய்கிறார். வெற்றி பெற்றால் மீண்டும் வேள்வி! தோல்வி அடைந்தால் அதற்கும் வேள்வி!

மந்திரத்துக் கென்றே ஒரு மொழி; அம்மொழியின் சிறப்பே அதன் ஒலியாம்! சொல்கிறார் மனிதர், சோவென்று மழை பொழிந்தாற்போல்! மொட்டைப்பேச்சுக்கு மண்டையாட்டவே பெருங்கூட்டம்!

வேள்விக்கு வெண்சாமரம்; கேள்விக்கு கொடுவாள்!

குளத்தில் குளித்தெழுந்தால் ஒருவருக்கு புண்ணியமாம்! குளித்தெழுந்ததும், எழாதவர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு!

மந்திரம் மந்திரம் மந்திரம்; சமுதாயம் சீரழிய தந்திரம்!

இன்றல்ல நேற்றல்ல! சில ஆயிரம் ஆண்டுகளாக!

கல்வி என்பது அறியாமை என்ற இருளகற்றும் அறம்! அக்கல்வியைக் கற்றாலும், அதற்தகு இந்த தமிழ்க் குலம் நிற்றல் இல்லை பன்னூறாண்டுகளாக.

ஆதலின்தான் அன்றும் இன்றும் சமுதாயத்திற்கு கற்ற கல்வி பயன்படாமல் செப்படி வித்தைகளை நம்பி சீரழிந்து வருகிறது. செப்படி வித்தைகளே ஆன்மீகமாய் காட்டப்பட்டிருக்கிறது.

சிலையொன்று பால் குடிக்கிறது என்று செப்படி வித்தைக்காரன் ஒருவன் சொல்ல, இதையும் மதவியாபாரிகள் ஏற்றம் செய்ய இழிந்த மக்கள் கூட்டம், அலை அலையாய் சாரி சாரியாய், இரவு பகலாய், ஒரு நாடல்ல, உலக வாழ் அத்தனை நாடுகளிலும் மெத்தப் படித்தவர்கள் அனைவரும் அச்சிலைக்குப் பால் ஊட்டினார்கள்.

பால் ஊட்டி விட்டு ஒவ்வொருவரும் கோழி திருடியவர்போல் "சிலை பால் குடித்ததா இல்லையா" என்பதைத் தெளிவாய் சொல்ல இயலாமல் தலை சொறிந்த நின்ற காட்சி மிகப் பரிதாபம்!

அறிவு நிரம்ப பெற்றவர்கள் இந்திய விஞ்ஞானிகள்! ஆராய்ந்து சொன்னார்கள் அறிவியல் காரணங்களை. ஆனால் மத விவகாரங்களில் விஞ்ஞானிகள் தலையிடக் கூடாது என்று கொதித்து எழுந்தது செப்படிக் கூட்டம்! தேம்பி நின்றது விஞ்ஞானம்! இக் கூட்டத்திற்கு முகப்பாய் நின்றவர் தேர்தல் புரட்சி செய்த மெத்தப் படித்த அறிவாளி!

எங்கே போகிறது இந்த சமுதாயம்? கல்வியின் பயனை செப்படி வித்தைகள் மறைக்கின்றன, கால காலமாய்! இதை ஆராய்ந்து பார் என்று சொன்னவர்கள் பழிக்கப் படுகிறார்கள் நாட்டில்!

கல்வி கற்றும் பயனில்லா இந்த நிலைமையைத்தான் தெளிந்து நாலடிகளார் சொல்கிறார்:

"பொன் கலத்திலே அமுதை வைத்தாலும், நாய் அதை உண்டு விட்டு தெருவோர எச்சில் இலையை நக்கிப்பார்த்து மகிழ்வுறும்" அப்படிப்பட்டதுதான் இந்த கீழான மனிதர் பெறும் கல்வியும். இக்கல்வி கற்றோரால் சமுதாயத்துக்கு விளையும் பயனும் கீழானதே!

"பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்-அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்."
-- நாலடியார்

கல்வி என்ற பொன்கல அமுதை வயிறு நிரம்ப உண்டு விட்டு மெல்ல நழுவிப் போய், தெருவில் கிடக்கும் நரகல்களான மந்திரம் மாயம் செப்படி வித்தைகளில் மனம் தோய்ந்து நாலடி சொன்ன நாய் போல வாழ்வதே இந்த சமுதாயத்தின் கற்ற மிகப் பெரும்பாலானோர் நிலை! இவர்களால் விளையும் தீங்குதான் அன்று கோவலனைக் கொலை செய்தது!

வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தான், 'ஒருவன் நுண்ணிய நூல்கள் எத்தனை கற்றாலும் அவனிடம் வழிவழி பிறப்பொடு வந்த உண்மை அறிவே மேம்பட்டு நிற்கும்' என்கிறார். இச்சமுதாயம் ஆழக்கற்றது அறிவுக்கு ஒவ்வாததைத்தான்!

அதனால்தான், கற்ற சமுதாயமும் மந்திரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கிறது.

"நுண்ணிய நூற்பல கற்பினும், மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்"
-- குறள்

அதுவே இன்றும், வேள்வி, ஊழல், காட்டுமிராண்டித்தனம், அசுத்தம், கொளுத்தல்கள், சண்டைகள் அனைவற்றிலும் பொன்னான காலங்கள் வீணாகப் போவதற்குக் காரணம்!

சிலம்பிலே பாண்டியன் உள்ளிட்ட சமுதாயத்தை எந்த மந்திர மாயங்கள் மயக்கி வைத்திருந்தனவோ, அதே நிலைதான் இன்றைய சமுதாயத்துள்ளும்!

கடுகளவும் மாற்றமில்லை!

தமிழகத்திலே, யாரும் யாரையும் கொளுத்தச் சொல்லவில்லை! சொல்லியிருக்க மாட்டார்கள்! ஆனால் கொளுத்தப்பட்டனர் சில கல்லூரிப் பெண்மணிகள்!

அன்றந்தக் காவலக் கல்லாக் களிமகன், பாண்டியனுக்கு சினம் தீர்த்து நற்பெயர் பெற கோவலன் குறுக்கே கொடுவாள் எறிந்தான்! ஆராயா அறிவிலி!

இன்றும் அரசாண்டு அதை இழந்தவர்க்கு ஆபத்தோ என்று அஞ்சி அவர்தம் நற்பெயர் பெற கொளுத்திவிட்டனர் சிலரை!

அதே கோழையிலக்கணம்!

அச்சம், கொந்தளிக்கும் குறு மதி! சுயநலச் சூத்திரம்!

இந்த நிலையிலேயே பல நூறாண்டுகளை கழித்துவிட்டு புலம்பி நிற்கும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம்!

சில நூறே ஆண்டுகள்தான் நிலம் கண்டுபிடிக்கப் பட்டு! ஆயினும் அடிப்படை மனித வாழ்வு நிரம்பி நிற்கும் அமெரிக்கப் பெரு நாடு!

சில பத்தே ஆண்டுமுன்தான்! தீக்குண்டால் சீரழிந்தது சிறுநாடு யப்பான்! ஆனால் இன்று ?

ஆனால் பல நூறு/ஆயிரம் ஆண்டுகளைப் பார்த்துவிட்டும் பாழ்பட்டு கிடப்பது இத்தமிழ்நாடு!

மந்திரமருந்து, செப்படி வித்தை, மத/சாதி மாயங்கள் பால் பற்றும் பயமும்; அதைத் தாண்ட நெஞ்சுறுதி இல்லா கோழை நாடாக, தமிழ்த்திருநாடு!

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் அதன் நெஞ்சில் வாளால் கீறிவிட்டு புதைத்த வீர சமுதாயம், மூடத்தனத்தின் அடிநக்கி வாழ்வது இழுக்கல்லவா?

சுத்த கையாலாகாத கோழைச் சமுதாயமாய் ஆகிப்போனது தமிழ்ச்சமுதாயம்!

இதைத்தான் வெகு தெளிவாக சிலம்பாசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார்!

அவர் வெறுமே, "பாண்டியன் தேரான் ஆகி" என்று சொல்லி விடவில்லை!

"வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."

இவ்விடத்து இதன் உட்கருத்து "ஊழ் வினை" அதாவது முற்பிறப்பில் செய்த பாவம் என்று கொள்வது பொருந்தாது!

இப்பிறப்பின் அவனின் பாவம் என்றால் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணை நாடியதுதான்!

வேறொரு பெண்ணையும் நாடுவோர்க் கெல்லாம் கொலைபடுதல்தான் வினை விளைவிக்கும் பயன் என்றால் பெரும்பாலான ஆடவர் அதற்காகவே வாழ்விழந்திருக்கவேண்டும்! பரத்தமை இலக்கணமும் வாழ்ந்திருக்காது!

ஆனால் வள்ளுவ வழி ஊழைப் பார்த்தால் இளங்கோவடிகள் பாண்டியனைத் தேரான் என்றது தெளிவாகும்!

ஊழ் என்றால் உலகியற்கை! அதற்கொரு அதிகாரம் குறளிலே!

ஒன்றை இழக்கச் செய்தற்குரிய உலக இயற்கை உண்டாகும்போது அது அறியாமையில் ஆழ்த்தும்! பெருகச் செய்யும் உலக இயற்கை உண்டாகும் போது அறிவைப் அகலமாக்கும்!

"பேதைப் படுத்தும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
--குறள்

இழக்கச் செய்யும் ஊழ் (உலக இயற்கை) சமுதாயத்தில் பெருகியதால் அறியாமை பெருகியது! அதாவது மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகள் பெருகின. அதனால் கோவலன் கொலையுண்டான்!

ஆகவே, பாண்டியன் நீதி தவறவில்லை! ஆனால் நீதி தேவன் மயக்கமுற்றான் மந்திரம் என்ற வார்த்தௌ முன்பு! அந்த மயக்கம் அவனுக்கு மட்டுமல்ல!

அவன் காலத்து அத்தனை நிலைகளிலும் மந்திர மாய மயக்கம்! இந்நாளைப் போலவே!!

அன்புடன்
நாக.இளங்கோவன்
20-பிப்ரவரி-2000

No comments: