Pages

Monday, February 28, 2000

சிலம்பு மடல் 25

சிலம்பு மடல் - 25 பூவின் புலம்பல்! புயலாய் எழுதல்!
மதுரை:
ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:

இடைச்சி மாதரி வீட்டில், உறையிட்ட பால் உறையவில்லை; உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை; ஆடுகள் சோர்ந்து கிடக்கின்றன; எருதுகளின் கண்களில் கண்ணீர்! பசுக்கள் நடுக்கத்துடன் கதறுகின்றன! அவைகளின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்கின்றன!

துயற்குறிகளாய் தெரிந்தது மாதரிக்கு; பதறுகிறாள்! என்னவென்று புரியவில்லை!

"குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின்
மடக்கண்நீர் சோரும்; வருவதுஒன்று. உண்டு

உறிநிறு வெண்ணெய் உருகா உருகும்
மறி,தெறித்து ஆடா; வருவதுஒன்று உண்டு

நான்முலை ஆயம் நடுங்குபு நின்றுஇரங்கும்
மான்மணி வீழும்; வருவதுஒன்று உண்டு;"

தன் ஆடுமாடுகளுக்கு என்ன துயரமோ ? அவை அறிந்தவை என்னவோ? என்று கலங்குகிறாள் மாதரி; அவளின் மக்களும்தான்! அவைகளை மகிழ்விக்கும் கூத்தை ஆடிப்பாட மகளையும் மற்ற மகளிரையும் அழைக்கிறாள்!

"மனம் மயங்காதே, மண்ணின் மாதர்க்கு
அணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில்
வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்,
என்றாள், கறவை கன்றுதுயர் நீங்குக எனவே!"

இடையர் குலத்துக் கடவுளாக சொல்லப்படுபவன் கண்ணன்;துயற்குறிகளாகக் கருதப்பட்ட மாடு கன்றுகளின் துயர் நீங்க, உற்சாகம் பெற, கண்ணன் தன் இளம்பருவத்தில் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை ஆடுகின்றனர் மாதரி சார்ந்த மகளிர் ஏழ்வர்;

சில ஆண்டுகளுக்கு முன்னர், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டால் பசு அதிகம் பால் கறக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது; அது சோதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி சொன்னது; ஒரு வேளை அது உண்மை என்றால் மாடு கன்றுகளுக்கு இடையர் குல மகளிர் குரைவையாடி மகிழ்வூட்டும் நிகழ்ச்சி, மாட்டுப் பொங்கலின் போது ஏற்படுத்தப்படும் ஒலிகள் மற்றும் மாடு கன்றுகளைப் போற்றுதல் போன்றவை அக்கால்நடைகளின் உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்து பவையாக இருக்கக் கூடும்!

"நாராயணா என்னா நா என்ன நாவே?"

என்ற கேள்வியோடு குரவைக் கூத்து நிறைவு பெற, துயர்களை நாராயணனிடம் விட்டுவிட்டு மாதரி நீராடப் போகிறாள்!

ஓடி வருகிறாள் ஒரு மங்கை! கோவலத்துயர் அறிந்தவள் அவள்!
கண்ணகியைக் கண்டு துயரைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள்!

"....ஓர் ஊர்அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்ஆடாள் சொல்ஆடாள் நின்றாள்!

தன்னைப்பார்த்து ஒரு நங்கை நாஅசைக்கா துயர முகம் தாங்கி நிற்கிறாள் என்றால், வெளிப் போன தன் கணவனுக்கு தீங்கு நேர்ந்திருக்குமோ என்று பதறுகிறாள் கண்ணகி! அந்நங்கையாலும் உடன் சொல்லஇயலவில்லை!

"எல்லாவோ!
காதலன் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்...
நண்பகல் போதே நடுக்குநோய் கைம்மிகும்...
தஞ்சமோ தோழீ! தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோதோழீ!"

கண்ணகி:

தோழீ! கணவன் வரக் காண்கிலேன் நடுக்குற்றேன்; அயலார் கூறியது உளவோ? உரைப்பாய்!

தோழி:

'அரசியின் அழகு மிக்க சிலம்பொன்றைக் கவர்ந்த கள்வன் கோவலன் என்று.....'

கண்ணகி:

என்று......?

தோழி:

'ஊர்க்காவலர் கோவலனைக் கொலை செய்யக் கருதினர்.....!'

"அரைசுஉறை கோயில் அணிஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-

கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-

குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே!

எனக்கேட்டு, அதிர்ந்தாள், அழுதாள், விழுந்தாள் கண்ணகி."

துயர்ச்செய்தியை முடிவாய்ச் சொல்லாமல் சற்று இழுத்தே சொன்னாள் தோழி! இருப்பினும் "சாகவில்லை" என்று, தோழி கூறவில்லை!

அவளின் முகக்குறிகள் கோவலன் மாண்டுவிட்டதை, கண்ணகிக்குப் புரியவைத்துவிட்டது! கண்கள் குளமானது!

கண்ணனைய கணவரே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று குமுறினாள் கண்ணகி!

"பொங்கி எழுந்தாள், விழுந்தாள்..
செங்கண் சிவப்ப அழுதாள்;தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்துஏங்கி மாழ்குவாள்;

தான் தந்த சிலம்பைக் கொண்டு சென்ற கோவலன் கள்வனென்று கொலையுறுவதா? அதிர்கிறாள்!

அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!

அவளின் நெஞ்சத்து மன்றம் பாண்டியனைப் பழித்தது.

சமுதாயத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு நாட்டின் அரசன்தான் முதலில் பதில் சொல்லவேண்டும்!

பாண்டியன் செய்த தவறினால் பறிகொடுத்தேன் என்கணவனை; 'அறக்கடவுள் என்ற அறிவற்றோய்!' நீயும் இருக்கிறாயா? நான் அவலம் கொண்டு அழிந்துபோவேன் என்று நினைத்தாயா ? மாட்டேன்! என்று பாண்டியனையும் அறக்கடவுளையும் பழித்தாள்; சூளுரைத்தாள்!

காப்பியத்தில் தென்றலாய்க் குளிர்ந்தவள் ஈங்கு தீமை கண்டு தீயாய்க் கொதிக்கிறாள்!

முற்பிறப்பின் பாவம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!

முன்வினை என்று எண்ணி கண்ணீர் மட்டும் சிந்தி மாரடித்து ஒப்பாரி அழுது அடங்கிப் போகவில்லை!

கணவனே போய்விட்டான்; இனி என்ன என்று பின்னால் நின்றாள் இல்லை!

அறக்கடவுளையும் 'அறிவற்றோய்' என்று அதட்டி தீமையை எதிர்த்து சூளுரைத்ததால் அவள் பெண்குலத்தின் திலகம் ஆகிறாள்!

"மன்னவன் தவறுஇழைப்ப
அன்பனை இழந்தேன்யான்; அவலம் கொண்டு அழிவலோ?

மன்னவன் தவறுஇழைப்ப
அறன்என்னும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?

தென்னவன் தவறுஇழைப்ப
இம்மையும் இசைஒரீஇ இனைந்துஏங்கி அழிவலோ?"

போற்றா ஒழுக்கம் புரிந்தவன் கோவலன் ஆயினும் மாற்றா உள்ளம் படைத்த மனவுறுதி மங்கை நல்லாள் கண்ணகிக்கு!

காதலெனும் நட்பால் நடந்துவந்தவள்! அன்பால் அவனைக் கரைத்தவள்!

நெஞ்சத்தின் நேர்மை பொங்கி, வஞ்சத்தை வீழ்த்திட உறுதி பூண்டது!

அருகில் உள்ள அனைவரும் அவளின் நிலை கண்டு வருந்த, அறத்தினையும், பாண்டியனையும் பழித்த கண்ணகி, கதிரவனையும் கேள்வி கேட்டாள்!

"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"

எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை! இவள் நிலை கண்டு வருந்தி, சுற்றி நின்ற மக்கட் கூட்டத்திலிருந்து இருக்கவேண்டும்! அந்தக்குரல் கூறிய செய்தி "உன் கணவன் கள்வனல்ல; கள்வன் என்று கூறிய இவ்வூர் நெருப்பிற்கு உணவாகும் என்று!"

அநியாயங்களைப் பார்த்து 'நாசமாகப் போகட்டும் இந்த ஊர்' என்று சொல்வதைப் போல!

ஒரு ஊரினையே அழிந்து போகச் சொல்லவேண்டுமானால் அந்த ஊரில் பேதமையும் குறைகளும் நிறைந்து இருக்கவேண்டும்!

"கள்வனோ அல்லன் கருங்கயல்கண் மாதராய்!
ஒள்எரி உண்ணும்இவ் வூர் என்றது ஒருகுரல்"

அதற்குமேலும் அங்கு நின்றாள் இல்லை! மற்றொரு சிலம்பைக் கையில் எடுத்தாள்; நடந்தாள் மதுரை மாநகருக்குள்;

அச்சிலம்பை அனைவரிடமும் காட்டி, நகருள் மகளிர் நோக்கி விளக்கம் சொல்லி நியாயம் கேட்டாள்;

'விலைமிக்க என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டு என் கணவனையும் கொலை செய்தான் பாண்டியன்' என்றாள்!

பாண்டியன் நீதி தவறினான் என்று மட்டும் கண்ணகி முதலில் பொங்கி எழவில்லை! பாண்டியன் தன் சிலம்பை திருடிவிட்டான் என்றும் அய்யப்படுகிறாள்! குற்றஞ்சொல்கிறாள்!!

ஏனெனில் அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!

"பட்டேன் படாத துயரம், படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதுஒன்று;

கள்வனோ அல்லன் கணவன் என் கால்சிலம்பு
கொள்ளும் விலைபொருட்டால் கொன்றாரே ஈதுஒன்று!..."

ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் அன்பர் செத்து விடும்போது வாழ்க்கையும் முடிந்துதான் போகிறது;

நேர்மையான நெஞ்சம், மாறா உள்ளம் படைத்த உறுதியான நெஞ்சம்;

காதலன் பால் அன்பு மழை பொழிந்து அவன்மேல் பூங்கொடியாய்ப் படர்ந்தவள்;

மதுரையம்பதியென்ற அறியா நாட்டில்
அநீதியால் விழைந்த அன்பின் சாவால்,
துக்கம் பெருகி,
உள்ளம் உலர்ந்து,
வண்ணச் சீறடி வன்மை கொள்ள,
அரற்றிப் புலம்பிப் புயலாய் மாறி,
தெருவெங்கும் தன்கதை கூறி,
இனியாள் விழியோ இமையாதாகி,
இமையா விழிகள் ஆறாய் பெய்ய,
அறவோன் அவனையும் அதட்டி,
அரசன் தனையும் பழித்து,
செம்பொன் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி,
சூளுரைத்து,
போர் தொடுக்க, சீறிச் சினந்து நடந்து வரும்
பெண்ணரசி கண்ணகியைக்
கண்ட மதுரை மக்கள் மயங்கினர்;

உணர்ந்தனர் உள்ளத்தால் உயர்ந்தவள் என்று!

கணவன் இறந்தமைக்காகப் புலம்பியும், அவன் அநீதியால் இறந்தமைக்காகச் சீறிச் சினந்து வந்தவள் கண்டு தெய்வமோ என்று அஞ்சினர்!

பெருமை மிக்க பாண்டியநாடு நீதி தவறிவிட்டதோ? இது ஏனோ என்று வருந்தினர்.

சிலர் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்டினர் கண்ணகிக்கு!;

"களையாத துன்பம் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது; இது என் கொல்?

..தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்?
..தண்குடை வெம்மை விளைத்தது; இது என்கொல்?

செம்பொன் சிலம்புஒன்று கைஏந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இது என்கொல்?

ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இது என்கொல்?

என்பன சொல்லி இனைந்துஏங்கி அரற்றவும்
மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட........"

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: