Pages

Thursday, June 01, 2000

சிலம்பு மடல் 27

சிலம்பு மடல் - 27 மதுரை அழிதல்! மானமும் கற்பும்!!
மதுரை:
வஞ்சின மாலை, அழற்படு காதை, கட்டுரை காதை:

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்" என்ற வள்ளுவத்தைக் கண்ணகியாள் கற்றிருந்தாள் போலும்!

அரண்மனை நீங்கும்போது, பாண்டியன் மேல் பிணமாய்ப் பதிந்து கிடந்த அவன் தேவியிடம் கண்ணகி பேசினாள்!

'யான் உலகம் அறியாதவள்! ஆயினும் முற்பகலில் ஒருவர்க்கு செய்த கேடு பிற்பகலில் தமக்கே வரும் என்பதை மட்டும் அறிந்தவள்! அதுவே உங்கள் முடிவுக்கு காரணமும்!

"கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்:"

புகழுடைத்த புகார் நகர் பல கற்புடை மகளிரால் சிறப்புற்றிருக்க யானும் அங்கு தோன்றியவள்தான்!

யானும் ஒரு கற்புடைப் பெண் என்பது உண்மையானால் என் கணவனோடு சேர்ந்து இப்போதே இறக்க மாட்டேன்! மன்னனொடு மதுரையையும் அழிப்பேன். என் ஆற்றலை நீ காண்பாய்!

"பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்!என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ....... "

சிறிதும் குறையா சீற்றத்துடன் சொன்னாள் கண்ணகி!'

சிலம்பிடம் தோற்ற மதுரை மன்னன் மாண்டது கேட்டு மதுரை மக்கள் நிலைகுலைந்தனர்.

நீதியை நாட்டிவிட்டு மதுரை வீதிகளில் வலம் வந்தாள் கண்ணகி!

சிலம்பால் வென்றவளைப் பார்த்தவர் பாதி! அவளைப் பற்றிக் கேட்டவர் மீதி!

வீதியெங்கும் அழுது புலம்பினாள் கண்ணகி வஞ்சினம் சிறிதும் மாறாமலே!

மதுரைநகர்ப் பெண்டிரே, ஆடவரே, வானத்து தேவரே, தவம் செய் முனிவரே!

'என் அன்புக்கினிய கணவனின் அநீதியான மரணம் அறிவீர்! மன்னன் மதியிழந்து எனக்கிட்ட அநீதியைக் காண்பீர்! குற்றமிழைக்கா என் கணவனைக் கொடுங்கோல் கொன்று போட கொடுஞ்சினம் கொண்டேன் யான்!'
கொடுஞ்சினம் கொண்டேன் யான்,
கொதிக்கும் நெஞ்சத்தின் குமுறல்களாலே!

மன்னன் மாண்டும், மன்னவன் தேவி மாண்டும் குறையாக் குமுறலால் மதிபோன மன்னவன் வளர்த்த மாநகர் மீதும் சினமுற்றேன்!

மதிமயங்கிய இம்மண்தானே என் கணவனைக் கொன்றது!? இம்மண்மேல் கொள்ளும் கோபம் குற்றம் ஆகாது!

கோவலனுடன் வாழ்ந்த காதலும் கற்பும் நட்பும், அவளின் இதயத்தை அனலாக்கிக் கொண்டேயிருக்க அனலின் வெம்மை தாங்கமாட்டாது அணைத்தாள் தன் இதயத்தை வலக்கரத்தால்!

காதலன் மாதவியுடன் ஓடிப்போனபோது துடித்த தன் இதயத்தைத் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்திய மென்கரத்தால் அவன் மாண்டபோது அமைதிப்படுத்த இயலவில்லை!

மாறாக மென்கரம் வன்கரமாகியது!

பொறுத்துக் கொள்ள இயலா இதயத்தின் அனலைப் போக்க நினைத்தது!

இதயத்தை மூடி அதன் மேல் ஏறி அமர்ந்திருந்த இடமுலையின் பாதியை அவளின் வலக்கரம் பற்றித் திருகிக் கிள்ளி எடுத்தது!

கிள்ளி எடுத்த பாதி முலையொடு மதுரையை மூன்று முறை சுற்றி விட்டாள்! கொல்லன் உலைக்களத்துத் துருத்தி போலச் சுடு மூச்சுவிட்டாள்: சுழன்று திரிந்தாள் வீதிகளில்!

அவளின் நெஞ்சத்து அனல், மீதி முலையில் இருந்து குருதியாய் வடிந்து கொண்டேயிருந்தது!

"நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்:

யான்அமர் காதலன் தன்னைத் தவறுஇழைத்த
கோநகர் சீறினேன் குற்றம்இலேன் யான்என்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்!"

பார்த்தவர் விழிகள் பார்த்தபடி பயந்திருக்க, பிய்த்த முலையும் தன் வலக்கையை சுட்டதோ என்னவோ தூக்கி எறிந்தாள் அதனை!

கண்ணகிக்கு நேர்ந்த கொடுமையையும், அவளின் சீற்றத்தையும் கண்ட மதுரை மக்களின் கண்களில் மாநகர் வானில் மெல்ல மெல்லத் தோன்றிய கரும்புகையும் சில நாழி தெரியவில்லை!

கரும்புகையின் மேலேறி செந்நா திறந்தபோது கண்டனர் மாந்தர், மதுரை மாநகர் சூழ்ந்த பெருந்தீயினை!

தீயின் வெம்மை தாங்காமல் மதுரை வாழ்ந்த தெய்வங்களும் பூதங்களும் கூட திகைத்து மதுரையை விட்டு வெளியேற மக்களில் பலர் மாண்டனர்! பலர் வெளிப்போய் மீண்டனர்!

மதுரையைக் காத்து நிற்கும் மதுராபதி தெய்வமும் வெம்மை தாங்க முடியாமல் கண்ணகி என்ற வீரபத்தினியின் முன் வர அஞ்சி
அவளின் பின்னாள் சென்று நின்றது!

"ஆர்அஞர் உற்ற வீரபத்தி னிமுன்
கொந்துஅழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதிஎன்.

ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள், பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறைஎன...."

வீணரபத்தினியின் முதுகில் மறைந்து அவளைத் தொடர்ந்த மதுராபதி தெய்வம், 'மாபத்தினியே, ஆடித்திங்கள் கிருட்டிண பக்கத்து அட்டமியும், கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, மதுரை எரியும் மன்னனும் மாள்வான் என்று யாம் அறிவோம்! என்று காரணங்கள் பல கூறி கண்ணகியை அமைதிப் படுத்தமுயன்றது!'.

"ஆடித் திங்கள் பேர்இருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகெடு உறும்எனும்
உரையும் உண்டே நிறைதொடி யோயே!..."

மதுரையை மெல்ல மெல்ல விழுங்கிவிட்டு பெருநாசம் செய்த தீயும் அவியத் தொடங்கியது!

இம்மதுரை மாநகருக்கு கணவனுடன் கீழ்த்திசையில் நுழைந்த கண்ணகி, கணவனை இழந்து, கொற்றவை கோயில் வாயிலில் தன் கைவளையல்களை உடைத்தெறிந்துவிட்டு மதுரையின் மேல்திசை வழியே வெளியேறினாள்!

கோவலன் மாண்டபின்னர், கோவலனையும் அநீதியையும் மட்டும்தான் நினைத்தாள் அன்றி, புகாரில் தன் சுற்றத்தை, நல்லோர், பெரியோர் யாரையும் நினைக்கவில்லை!

வாழ்வு வெறுமையாகிவிட பார்வையும் வெறித்ததாகி, காதலிலும் நேர்மையிலும் தான் கொண்ட கற்பென்ற மனவுறுதியால் தனியொருத்தியாக ஒரு மன்னனையே வென்றுவிட்டு, மடைமை பூத்துக் குலுங்கிய மாநகரை வென்றுவிட்டு, கல் எது முள் எது மேடு எது பள்ளம் எது என்று எதையும் அறியாதவளாய் கோவலனை மட்டுமே நினைத்து அழுதவளாய் பதினான்கு நாட்களாய் நடந்து கொண்டிருந்தவள் கோவலன் பால் கொண்ட நட்பாலும் காதலாலும் பிடித்து வைத்திருந்த தன் கடைசி மூச்சை விட்டாள், திருச்செங்குன்றம் என்ற மலைக்குன்றில்!

"எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்
தொழுநாள் இதுஎனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி
வாடா மாமலர் மாரி பெய்துஆங்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானஊர்தி ஏறினாள் மாதோ
கான்அமர் புரிகுழல் கண்ணகி தான்என்."

சிறிய காலடிகளை மண்மகளும் கண்டிராத செல்வ மகள், புகார் பிறந்த செல்வச்சீமான் மாநாய்கன் மகள், வாழ்க்கை தேடி வறியோளாய் மதுரை போன மகள், கணவனை ஆங்கு தொலைத்துவிட்டு, தொலைத்தவர்களை சீறிக் குறைத்துவிட்டு, காடு கழனி எங்கும் அலைந்து அழுது புலம்பி மதுரை நீங்கி சேரநாடு சேர்ந்து, திருச்செங்குன்றின் மீதேறி பூத்திருந்த புங்கை மர நிழலில் தேம்பி விட்டு அமைதியடைந்தாள்!

கற்பின் உறுதியால் பெண்டிர் "பெய்யெனப் பெய்யும் மழை" என்று வள்ளுவர் உரைத்தது பெண்டிர் கற்பென்ற மன உறுதியால் "செல்லெனச் செல்லும் உயிர்" என்பதைச் சுட்டுவதற்குத்தானோ?

உடல் என்பது வானம்! உயிர் என்பது மேகம்!

மேகம் ஓடும் வானம் போல், இயக்கத்தில் மனிதர் வாழ்வும்!

மழை பொழிந்ததும் வானம் மேகமற்று உயிரில்லா உடலாகிப் போகிறது!

மனவுறுதி கொண்ட மகளிர் பெய்யெனச் சொன்னால் தம் உடலென்ற வானத்திலிருந்து உயிரென்ற மேகம் மழையாய் உதிர்ந்துவிடுகிறது!

கோப்பெருந்தேவியின் மரணமும் அப்படியே! மன்னவன் மாண்டதும் தான் வாழ விரும்பாள்!

செல் எனச் சொன்னதும் சென்றது அவள் உயிர்! காதல் தீய்ந்த போது இதயத்தின் இயக்கத்தை தம் சொல்லால் நிறுத்தி விடுகிற இந்த மனவுறுதி என்ற கற்பு தமிழ் நிலத்தின் சிறப்பு.

கோப்பெருந்தேவி பாண்டியன் மேல் கொண்ட காதல் உயர்ந்தது; மாதவி கோவலன் மேல் கொண்ட காதலும் உயர்ந்தது! அந்த காதலும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

மடைமையில் மூழ்கிய காரணத்தால் நீதி வழுவியதுணர்ந்து, "கெடுக என் ஆயுள்" என்றதும் உயிர் பிரிந்த பாண்டிய மாமன்னனின் நேர்மையும் தூய்மையும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

கோவலனுடன் காதல் தொழுகை! அவன் மேல் அநீதியான பழி! காதற்கணவன் கொல்லப்பட்டபோது காதலாலும் நட்பாலும் அலைமோதுகிறாள்! ஆயினும் தன் உயிரைச் 'செல்லனச் சொல்லவில்லை'!

காதலன் மேல் வீழ்ந்த பழிதுடைக்க கடமை ஏற்கிறாள்! அக்கடமையை நிறைவேற்ற வீரம் கொள்கிறாள்! வீரமும் நேர்மையும் நிறைந்த சொல்லால் அடிக்கிறாள் அரசை! மன்னவன் மண்டபத்தில் நீதியைக் காக்கிறாள்! வெல்கிறாள்!

நீதி வழுவியதன் காரணத்தால் வெட்கிப் போகிறான் பாண்டியன்! தன் உயிரையும் விடுகிறான்!

நெஞ்சின் அனல் அடங்காத நிலையிலே மதுரையையே, தன் கணவன் மாண்டு கிடந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாள்! மடமை நிறைந்த அந்த மண் மீது சீற்றத்துடன்!

மன்னனை இழந்த அரசு உடனே பதட்டத்துக்கும் கலகத்துக்கும் உள்ளாகும் என்பது இந்நாளும் நாம் காணும் தமிழ் நில நிலையாகும்!

மக்களிடையே ஏற்பட்ட பதட்டத்தினாலோ, அப்பதட்டத்தினால் ஏற்பட்ட கவனக்குறைவினாலோ எங்கோ ஏற்பட்ட தீ, ஆடி மாதக் (முதுவேனில் காலம்) காற்றினால் மதுரைக்குப் பேரழிவைச் செய்திருக்க வேண்டும். அல்லது கலகக்காரர்கள் நாட்டிற்கு தீவைத்திருக்க வேண்டும். மக்களின் கவனம் எங்கோ இருக்க, இரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும்.

கோவலன் மாண்ட மண்ணும் தீக்கு இரையானதை அறிந்ததும், அதில் தன் கணவனின் உடலும் கரைந்து போயிருக்கும் என்று அறிந்ததும், தன் கை வளையல்களை உடைத்து எறிந்து விட்டு மதுரையை விட்டு வெளிப்போகிறாள் கண்ணகி!

மென்மை, பெண்மை, பொறுமை, நேர்மை, காதல், வீரம், அறிவு, கடமை, சீற்றம், ஈகை, அன்பு, பண்பு, மானம் என்ற அனைத்துக் குணங்களையும் ஒருங்கே கொண்ட வீரபத்தினி கண்ணகியார் தமிழ் மகளிர் திலகமாய் ஆகிறார்! அம்மையை வழிகாட்டியாய்க் கொள்ள தெய்வமாகவும் ஆக்கினர் மக்கள்!

கண்ணகி மனஉறுதி கொண்ட கற்புடைய பெண் மட்டுமல்ல! கற்புக்கு அரசியாகிறாள்! இதுவும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

போருக்குச் சென்ற மகன் புறங்காட்டி வந்தானோ என்று அய்யம் கொண்டு, அவனுக்குப் பாலூட்டிய மாரை அறுத்தெறிய முனைந்தாள் வீரத்தமிழத்தி!

மகவுக்கு தானூட்டும் பாலமுதில் வீரத்தை ஊட்டி வளர்த்தனர் தமிழ்ப் பெண்கள். அந்த வீரமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!.

தமிழின் சிறப்பு நெஞ்சில் வாழ்கிறது! ஏற்பட்ட இன்னல்கள் நெஞ்சின் கனலாக மாறும்போது மாரடித்து அழுகின்றது! கனல் மாரையும் பிய்த்து வெளிவருகிறது!

அந்நாளிலே,நீதிவழுவியதுணர்ந்து, தொடர்ந்து மானம் இழந்து வாழ ஒருப்படா பாண்டியனின் மனவுறுதியால் 'செல்லெனச் சென்றது அவனுயிர்'.

பகையின் கையில் சிக்கி மானமிழந்து சாவதற்கு ஒருப்படா தமிழர் "கெடுக என் ஆயுள்" என்று நஞ்சை விருந்தாய் உண்ண 'செல்லெனச் செல்லுதுயிர்'. அந்த மானமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!

அந்நாளிலே, நீதி வழுவிய போது சினந்து எழுந்ததனால் சிறப்புற்றாள் கண்ணகி! நீதிவழுவிய அரசன் தமிழனாக, மானமறவனாக, நெறியுடையவனாக இருந்ததால் ஓர்நொடியில் அவனை வென்றாள்!

நீதிவழுவிய நெறியற்ற அரசிடம் இருந்து மானம் காக்க, தம்மினம் காக்க, நிலம் காக்க, நீதிகாக்க, கல்வியை மறந்து, காதலை மறந்து காடுகளிலும் மலைகளிலும், கற்பென்ற மனவுறுதி கொண்டு தொடர்ந்து போராடி இண்ணுயிர் துறக்கும் அத்துனை மகளிரும் கண்ணகிகளே!

ஈராயிரம் ஆண்டுகளாய் அணையா விளக்காய் தமிழர் சிந்தையில் வாழும் கண்ணகியே உன்னை வணங்குகிறேன்!

உன்னை மட்டுமல்ல உன்னைப் போல உறுதி கொண்டு தமிழ் நிலம் காக்கும் கண்ணகியர் யாவரையும் வணங்குகிறேன்!

காதலும், வீரமும், பண்பும், மானமும் கொண்ட கண்ணகியர் வாழும்வரை தமிழ்நிலங்கள் வாழும்! தமிழ்நிலங்கள் வாழும்வரை கண்ணகியர் வாழ்வர்!

"வடஆரியர் படைகடந்து
தென்தமிழ்நாடு ஒருங்குகாணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனொடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று."

அன்புடன்
நாக.இளங்கோவன்
01-சூன்-2000

No comments: