Pages

Saturday, January 08, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 4

ஒருங்குறிக் கட்டமைப்பின் பல்வேறு
தளங்களைப் பற்றிய விளக்கம்!
(பகுதி-3 ல் உள்ள படங்கள் 2.1. 2.2 ஆகியவற்றை ஒத்துப் படிக்கவும்)

11) முதன்மைப் பன்மொழித் தளம் (Basic Multilingual Plane – BMP ) – தளம்-0:

பெயரே கூறுவது போல, இதுதான் ஒருங்குறித்
தரப்பாட்டின் முதற்றளம். இதனை அடித்தட்டு,
அடிப்படைத் தளம் என்றும் பலர் சொல்வர்.
இத்தளத்தில்தான், ஏறத்தாழ, தற்போது வழக்கில்
இருக்கும் எல்லா மொழிகளின் எழுத்துக் குறிகளும்
வைக்கப் பட்டு இருக்கின்றன. தமிழும் அதோடு
சேர்த்து இந்திய மொழிகள் அனைத்தும் இதிற்றான்
வைக்கப்பட்டிருக்கின்றன.

இத்தளம் மிக முகன்மையானது. ஏனெனில்
இத்தளம்தான் வழக்கில் இருக்கும் மொழிகளின்
எழுத்து முறைகளையும் அவற்றின் குறிகளையும்
உள்ளடக்கியிருக்கிறது. வழக்கில் இருக்கும்
எழுத்துக்கள்தானே நாம் எல்லோரும் அதிகம்
பயன்படுத்தப் படுவனவாகும். எழுத்துக் குறிகளோடு
அதிகம் பயன்படுத்தப்படும் எண்களின் குறிகள்,
சின்னங்கள், கணிதக் குறியீடுகள்,
மீக்குறிகள் (Diacritical marks) போன்றவையும்
முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம்
பிடித்திருக்கின்றன.

அவையும் இருந்தாற்றானே மொழியை எளிதில்
புழங்க முடியும், இல்லையா? இத்தளத்தில்
உலகில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட
எழுத்து முறைகளுக்கான குறிகள் முதன்மைப்
பன்மொழித் தளத்தில் இடம் பெற்றுள்ளன.

65536 இடங்கள் கொண்ட இத்தளத்தில்
சில இடங்கள் நிரப்பப் படாமல் கூட
இருக்கின்றன. இதே தளத்தில் 6400 இடங்கள்
சொந்தப் பயன் அல்லது தனிப்பட்ட பயனுக்காக
என ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தளம் ஒருங்குறியின்
முதல் வெளியீட்டில் முதன்முதலாக
அமைக்கப்பட்டது.

பின்னர்தான் பிற தளங்கள் ஏற்படுத்தப்பட்டு
ஒருங்குறி மேலும் விரிவடைந்தது. அதனால்
இதனை அடித்தட்டு அல்லது அடித்தளம் அல்லது
அடிப்படைத் தளம் என்றும் கூறுவர்.

இத்தளத்தினை பன்மொழித் தளம் என்று
சொல்வதை விட வாழ்மொழித் தளம் என்று
கருதல் சாலப்பொருந்தும்.

12) துணைப் பன்மொழித் தளம் (Supplementary Multilingual Plane - SMP) – தளம்-1:

ஒருங்குறித் தளங்கள் ஒவ்வொன்றும்
65,536 குறிகளைப் பிடிக்க வல்லது என்று
முன்னரே கண்டோம்.

இந்தத் துணைப் பன்மொழித் தளமானது,
வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக்
குறிகளையும், எப்பொழுதாவது பயன்படக் கூடிய
எழுத்துக்களின் குறிகளையும், அதிக முக்கியத்துவம்
இல்லாத சின்னங்களையும் சேர்த்து வைத்துள்ளது.
இத்தளத்தின் முக்கிய நோக்கம் வரலாற்றுக்
காரணங்களாகும். இத்தளத்திலே தற்போது
இருக்கும் குறிகளின் விவரங்களைப் பார்த்தால்
அது தெளிவாகும்.

இத்தளம் கொண்டுள்ள குறிகளிற் சில வருமாறு:
• பழம்பார்சி
• பழம் இத்தாலி
• தெசரத்து (Deseret)
• பழங் கிரேக்க எண்கள்
• இலீனீயர் பி
• பழந் தென் அரபி
• பழந் துருக்கி
• பிராமி

இவையோடு மேலும் என்ன இருக்கிறது என்று
பார்க்கும் போது இதிற் சின்னங்கள் பலவும் இடம்
பெற்றுள்ளதை அறியலாம். காட்டாக, உணர்ச்சிக்குறிகள்
அல்லது சின்னங்களைச் சொல்லலாம்.

படத்தில் உள்ள உணர்ச்சிக் குறிகளை ஆங்கிலத்தில்
Emoticons என்று சொல்வார்கள். நாமெல்லாம்
மின்னஞ்சலிலும் மின்னரட்டைகளிலும் இந்த
உணர்ச்சிக் குறிகளைப் பார்த்திருக்கிறோம்.
பெரும்பாலும் சிரிப்புக்குறிகளை (Smileys) மட்டுமே
நம்மிற் சிலர் பயன்படுத்துவர். அந்த உணர்ச்சிக்
குறிகளையும் ஒருங்குறி உள்ளடக்கியிருக்கிறது
என்று அறிய வேண்டியது செய்தியாகும்.

ஒருங்குறியின் பரந்து பட்ட தன்மையை
இதன்வழி நம்மால் உணரமுடியும். இந்த
உணர்ச்சிக் குறிகளை “அதிக முகன்மையில்லாத
ஆனால் பயனில் இருக்கிற குறிகள்” என்ற வகையில்
ஒருங்குறிச் சேர்த்தியம் இந்தத் துணைத்தளத்தில்
வைத்திருக்கிறது என்று நம்பலாம். இன்னொன்றையும்
சொல்ல வேண்டும்;

இந்தக் குறிகளையெல்லாம் நாம் தற்போதுதானே
காண்கிறோம்! இவை புதியதன்றோ என்ற எண்ணம்
வரலாம். ஆனால் இது பற்றி ஆய்ந்த போது,
நாடு வாரியாக 19 ஆம் நூற்றாண்டில் இருந்து
பயனில் இருக்கிற உணர்ச்சிக் குறிகளைப் பார்த்த
போது வியப்பே ஏற்பட்டது. அந்தத் தொகுப்பிலே
1862லே ஆபிரகாம் இலிங்கன் தனது எழுத்திலே “;)”
என்ற உணர்ச்சிக் குறியைப் பயன்படுத்தியிருக்கிறார்
என்ற செய்தியும் அது உணர்ச்சிக் குறியா
எழுத்துப் பிழையா என்ற வாதமும் சுவையாக
இருந்தன.

சீட்டுக்கட்டைப் பார்த்திராதவர் குறைவு.
பார்த்திருப்பவர்களுக்கு அதில் உள்ள சின்னங்கள்
பற்றித் தெரியுமல்லவா? அந்தச் சின்னங்களும்
ஒருங்குறியில் சேர்க்கப்பட்டுத் தரப்பாடு
அளிக்கப் பட்டிருக்கிறது என்பது பலருக்கும்
செய்தியாகவே இருக்கக் கூடும்.

சீட்டுக்கட்டு சார்ந்த 59 சின்னங்கள் ஒருங்குறிகளாக
வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பாத்தி 128 இடங்கள்
கொண்டது என்று பார்த்தோம். பிற மொழிப்பாத்திகளும்
இந்த 128 அளவில் நிறைய இருக்கின்றன.

அதே அளவுள்ள பாத்தியே சீட்டுக் கட்டுக் குறிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளது ஒருங்குறியில். படத்திலே
காட்டப்பட்டுள்ளவையே ஒருங்குறியில் உள்ள சீட்டுக்கட்டுக் குறிகளிற்சிலவாகும். குறிகளுக்கு அருகே
எழுதப்பட்டுள்ளவை தரப்பாட்டுக் குறியெண்களாகும்.
இக்குறிகளும் அதிக முக்கியத்துவம் இல்லாத ஆனால்
புழக்கத்தில் இருக்கின்ற குறிகள் ஆகும்.

இக்குறிகளைப் போன்றே இசைக்குறிகளும்
ஒருங்குறியில், இதே துணைப் பன்மொழித்
தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சீட்டு விளையாட்டுக் குறிகள் போன்று
பல்வேறு விளையாட்டுக் குறிகளும் சேர்க்கப்
பட்டுள்ளன. தமிழ்நாட்டாரும் தமிழ் நாட்டில்
விளையாடப்படும் தாயம், பரமபதம், ஆடு-புலி,
போன்ற பட விளையாட்டுக்களை ஒருங்குறியில்
வைக்க எண்ணினால் தாராளமாக வைக்க முடியும்.

இசைக்குறிகள் என்று சொல்லுமிடத்து பண்டைய
இசைக்கும் கூத்துக்கும் சொந்தக்காரர்களான
தமிழ்மக்கள் தமது எண்ணற்ற இசைச் செல்வங்களை
சேர்த்து வைக்க ஒருங்குறியின் இந்தத்
துணைப் பன்மொழித்தளம் சரியான இடமாகும்.
கருணாமிர்தசாகரமும் சிலப்பதிகாரமும் இதற்கு
உதவக்கூடும்.

இதுபோன்று பல்வேறு பழஞ்சின்னங்களும்
பெரும்பாலும் சேர்க்கப்படும் இடம் இந்தத்
துணைப் பன்மொழித்தளமாகும். தமிழ்நாட்டார்
முயற்சிசெய்வாரெனின் பல பழஞ் சின்னங்களை
இங்கே கொண்டு வந்து சேர்த்து வைக்கலாம்.

ஒருங்குறியின் கட்டமைப்பு 17 தளங்களைக்
கொண்டு, குத்துமதிப்பாக 11 இலக்கத்திற்கும்
மேலான குறிகளைப் பிடிக்குமளவிற்குக்
கட்டியமைக்கப் பட்டிருக்கிறது என்று பார்த்தோம்.
அப்போது, எதற்கு இத்தனை இடத்தை
வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கக்
கூடும். தற்போது ஒருங்குறியின் பன்முகத்
தன்மையையும் பரந்துபட்ட தன்மையையும்
உணரும்போது இந்த 11 இலக்கத்திற்குப் பொருள்
இருப்பதாகவே படுகிறது அல்லவா?

இந்த 11 இலக்க இடங்களில் சொந்தப் பயனுக்கு
என ஒதுக்கியிருக்கும் 1,31,000 இடங்கள் போக
மீதியிருப்பவை 9,69,000 இடங்கள்.
இந்தளவு இடங்கள் ஒருங்குறிச் சேர்த்தியத்தின்
முழுக்கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்கும்.
காலம் கூடக் கூட இவ்விடங்களை நிரப்பும்
பணிகளிலே சேர்த்தியம் மூழ்கி இருக்கக் கூடும்.

இதுவரை நிரம்பியிருக்கும் இடங்கள்
எத்தனை தெரியுமா?

ஒருங்குறியின் ஆறாவது வெளியீடு
வந்திருக்கும் இவ்வேளையில் இதுவரை
நிரம்பியிருக்கின்ற இடங்கள் 1,11,563 ஆகும்.
அத்தோடு 1991 ஆம் ஆண்டு தன் பணியைத்
தொடங்கிய சேர்த்தியம், இதுகாறும் வாழ்மொழிகளின்
எழுத்துக்களில், அதாவது பயனில் இருக்கும்
மொழிகளின் எழுத்து முறைகளிலும் எழுத்துக்களிலும்
அதிக கவனம் செலுத்தி வந்ததையும்
தற்போது துணைத்தளங்களிலும் பிற குறிகளிலும்
பழமைகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருவதையும்
தெரிவிக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html

அன்புடன்
நாக.இளங்கோவன்


No comments: