Pages

Monday, January 10, 2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - பகுதி 11/11 நிறைவு

தொகுதி-5: பிற செய்திகளும் மேற்கொண்டு செய்ய வேண்டியனவும்

தற்காலக் கணிச் சூழலில் தமிழில் கிரந்த நுழைவு
என்பது ஒரு புதிய வழி. இப்படி ஒரு வழியும் சூழலும்
இருக்கிறது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க
வேண்டிய முக்கியமான பல விதயங்களில் இதுவும்
முகன்மையான ஒன்று என்பதையும் உணர வைப்பதாக
இந்த ஒருங்குறிச் சூழல் அமைகிறது. அதேபோல
இந்தக் கிரந்த நுழைவைத் தடுத்து விட்டால் இனி
இன்னலே வராது என்று சொல்லமுடியுமா என்றால்,
உறுதியாக,
“இல்லை; இன்னல்கள் பல வடிவங்களில் தொடரும்”
என்றே சொல்லலாம்.

கணி நுட்பத்தின் பல்வேறு வளர்வுகளும் பிற
அறிவியல், நுட்ப வளர்வுகளும் தொடர்ந்து
இன்னல்களைச் செய்து கொண்டே இருக்கும்
என்பதால் அதற்குத் தமிழ் உலகம் தன்னை
தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற
விழிப்புணர்வை இது ஏற்படுத்துவதாகக் கருதல் தகும்.

விழிப்பு என்பது எங்கேயாவது செய்தியைப்
படித்து விட்டு ”தமிழ் வாழ்க, கிரந்தம் ஒழிக”
என்ற அளவிலேயே அமைந்துவிடக் கூடாது.
இருக்கும் சூழலை பன்முகப் பார்வையுடன்
ஆய்ந்து முறையான அரண்களை அமைப்பதே
அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

• ஏழு கோடி பேர்கள் பேசும் மொழியின்
எழுத்துக்கள் எங்கே இருக்க வேண்டும்,
எங்கே கலக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்களில்
ஒருவர் அமெரிக்காவிலே பணி செய்யும் பொறிஞர்;
இன்னொருவர் தமிழ்நாட்டிலே முதுகலை படித்த மாணவர்.
இவர்கள் இருவரின் செயற்பாடுகளை மறுத்துப் பேச
தமிழ் ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும்,
அரசாங்கத்தாலும் எத்தனை நேரம்
வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று
எண்ணிப் பார்த்தல் தகும்.

• யாரோ ஒருவர் அவரின் விருப்பப்படி
தமிழ் எழுத்துக்களோடு கிரந்தத்தைக்
கலந்துவிடலாம்; என்ன வேண்டுமானாலும்
செய்து விடலாம் என்ற நிலை,
தமிழக அரசாங்கத்திலும் தமிழ்மக்களின்
பொதுமன்றங்களிலும் போதுமான
அரண்கள் இல்லாமையையே காட்டுகிறது.

• தமிழ் நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகம்,
செம்மொழி ஆய்வு நிறுவனம், மற்றும்
பல்வேறு மொழி, வரலாறு ஆராய்ச்சி
அமைப்புகள், ஆர்வலர் மன்றங்கள்
அனைத்துமே ஒருங்குறிச் சேர்த்தியத்துடனான
தொடர்பில் அற்றுப் போய் இருப்பதையே
காட்டுகிறது. இது, ஒருங்குறியில் உள்ள
தமிழ் எழுத்துக்களுக்கு யார் பொறுப்பாளர்?
என்ற வினாவினை ஓசையுடன் எழுப்புகிறது.

• அதேபோல, ஒருங்குறிச் சேர்த்தியம்
என்ற பன்னாட்டு அமைப்பும், தமிழ்
எழுத்துக்குறிகளில் ஏதேனும் மாற்றம் செய்யவோ
அல்லது புதியன புகுத்தவோ முன்மொழிவுகள் வந்தால்,

o “ஏன் அவர்கள் தமிழக அரசுக்குத் தெரிவிப்பதில்லை?
o தமிழுக்கென்று இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு
அவர்கள் ஏன் தெரிவிப்பதில்லை?
o இந்திய நடுவணரசாலும் தமிழக அரசாலும்
நடத்தப்படுகிற செம்மொழி ஆய்வு மையத்திற்கு
ஏன் தெரிவிப்பதில்லை?
o இந்தியாவில் இருக்கின்ற இரண்டு
செம்மொழிகளில் ஒன்றான தமிழ்
மொழியைப் பற்றிய விதயங்களை
ஏன் ஒருங்குறிச் சேர்த்தியம்
தமிழ்நாட்டு மன்றங்களுக்குத் தெரிவிப்பதில்லை?
என்ற வினாக்களுக்கு விடை காண வேண்டிய
முக்கியமான வேளை இது. இவற்றிற்கு
விடை காண்பதே நீண்டகாலத் தீர்வாக இருக்கும்.
இல்லாவிடில் இது யாரோ சில ஆர்வலர்களின்
“தமிழ் வாழ்க!” என்ற முழக்கம் என்றளவில்
கருதப்பட்டு தீர்விழந்து போகும்.

• தமிழ் நெடுங்கணக்கு வரைவு, தமிழ் எழுத்து,
மொழி பயன்படுத்தப் பட வேண்டிய முறை பற்றிய
செந்தரம் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கும்,
நடுவணரசுக்கும் தெரிவிக்கப்பட்டு என்ன
மாற்றமெனினும் அது தமிழக அரசுக்குத்
தெரியாமல் நடக்கக் கூடாது என்ற உறுதி
நிலை ஏற்படுத்த வேண்டும்.

• கணித்தமிழ்ப் பணிகளைச் செய்கின்ற
உத்தமம் (http://infitt.org) என்ற அமைப்பின்
பேச்சைக் கேட்டுத் தமிழ்நாட்டில் பல தமிழ்
இணைய மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்த உத்தமம் அமைப்பே ஒரு கிரந்த
எழுத்தைத் தமிழில் கலந்து வழிகாட்டியுள்ளது.

மேலே பகுதி-4ல் சொல்லப்பட்ட இடர்கள்
ஐந்தனையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே
பார்த்திருக்கிறது. இக்குழு கணியில் தமிழைப்
பாதுகாக்குமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

• தனியாரால் தமிழ் தொடர்புடைய
எந்த முன்மொழிவு சேர்த்தியத்துக்கு
அனுப்பப்பட்டாலும் அது தமிழக அரசின்
ஒப்புதலோடு மட்டுமே செல்லவேண்டும்
என்றும், அதுவல்லாத தமிழ் சார்ந்த
முன்மொழிவுகள் சேர்த்தியத்தால்
ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது என்றும்
முறைமை ஏற்படுத்தப்படவேண்டும்

• நிரந்தரமான, அரசு மற்றும் தனி அறிஞர்,
கல்வியாளர் உள்ளிட்ட குழுவை இணையத்
தமிழ் மற்றும் ஒருங்குறிக் கண்காணிப்பிற்குப்
பணிக்க வேண்டும்.

• பலரும் ஒருங்குறி, கிரந்தக் கலப்பு பற்றிப்
பேசிக் கொண்டிருக்க, ஆங்காங்கு இருக்கின்ற
சிலரோ தங்களுக்கு இருக்கும் ஒருங்குறியைப்
பற்றிய ஏட்டறிவு மட்டுமே கொண்டு அரசிற்கு
ஆலோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிற் பட்டறிவு கொண்டார் மிக மிகக் குறைவு.
இந்தச் சிக்கல் கிரந்தத்தால் மட்டுமன்றி வருங்காலத்தில்
எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால்,
ஒருங்குறி அறிந்த கணிஞர்கள் சிலரை அரசோ,
பல்கலக்கழகங்களோ மேற்கண்ட குழுவோடு
தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குப்
பணிக்க வேண்டும்.

• தமிழ்நாட்டின் கல்வெட்டு, வரலாறு, தொல்லியல்
போன்ற துறையினரோடு ஒருங்குறிக் கணிஞர்கள்
ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை
புழக்கத்தில் உள்ள மற்றும் பழஞ் சின்னங்கள் குறிகள்
எல்லாம் துறைவாரியாகச் சேர்க்கப்பட்டு
அவற்றை ஒருங்குறியில் கொண்டு சேர்க்கும்
முக்கியமான பணியைச் செய்யவேண்டும்.
இதுவே தமிழ் உரிமையாளர்களின் கடமையாக
இருக்க முடியும்.

• “ஒருங்குறித் தரத்தில் இன்ன திருத்தங்கள்
செய்ய வேண்டும்; இன்ன எழுத்துக்கள் மட்டும்
இருக்க வேண்டும். இந்த வரையில் உள்ள
எழுத்துக்களில் ஏதேனும் மாற்றமோ,
புது வடிவங்களோ கொண்ட கணிச் சொவ்வறைகள்,
செயலிகள், நிரலிகள் ஆகியன தமிழ்நாட்டில்
விற்கப்பட அனுமதி கிடையாது; என்ற தெளிவான
சட்ட அறிவிப்பே கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும்.

அதுவே ஒருங்குறிச் சேர்த்தியத்தையும்
தமிழக அரசைக் கண்டுகொள்ளச் செய்யும்.
சீனா இப்படித்தான் முறை வைத்திருக்கிறது.
மிகத் தெளிவாக சீன அரசு “GB18030” என்ற
தனது 2000மாம் ஆண்டின் அரசாணை வழியே
கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
(பார்க்க: http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm ).

இதை மீற எந்தக் கணிநிறுவனமும் முயலுவதில்லை.
இல்லாவிடில் பன்னாட்டு நிறுவனங்களைக்
கட்டுப்படுத்தவும் முடியாது; தனியார் செய்யும்
இடர்களுக்கும் அளவிருக்காது வருங்காலங்களில்.


நிறைவு:

தமிழ் வரலாற்றில் புதிய கிரந்த இன்னலான
இதனைப் பற்றிப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும்
அடிப்படையைத் தெளிவாக்க என்னால் இயன்றவரை
முயற்சித்திருக்கிறேன். புதிய இன்னலான இதன்
அடிப்படைகளை அறிய வாய்ப்பு குறைந்தோர்க்கு
இன்னல்களின் வேர்களையும் அதன் தன்மைகளையும்
எடுத்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.

இந்த ஆவணத்தில்
“கிரந்தத்தினால் விளையக் கூடிய தீமைகள்” என்ற
பகுதியை மட்டுமே தவிர்த்திருக்கிறேன்.

தமிழறிந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு
நூறு தீமைகளைப் பட்டியலிட முடியும்
என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள
வெள்ளையர் உள்ளிட்ட கல்வியாளர்
மன்றங்களுக்கு எல்லாம் சென்று
“இதோ பாருங்கள் – இந்தக் கலப்பினால்
எங்களுக்கு இப்படித் தீமைகள் வண்டி
வண்டியாக வந்துடுமுங்க” என்று
ஆதாரங்களை அடுக்கி,
தயவு செய்து தடுத்துவிடுங்கள்
என்று கெஞ்சும் நிலையில் நானில்லை;

எம்மக்களும் அப்படி இருக்க ஒட்டார்.
தமிழ் மொழி என் தாய்மொழி.
இதனை யாரிடமும் போய் கையேந்திக்
காக்கும் இழிநிலைக்குத் தமிழர் ஒட்டார்.

“தாய் பிறன் கைபட நாயென வாழேன்”
என்று ஆணையிட்டுக் கலப்புகளைத் துரத்துவோம்.

அதே நேரத்தில் இடர்களின் வேர்களை
அறிவார்ந்த முறையில் தெளிந்து
வலுவான அரண்களை அமைத்துக் கொள்வதுவே
அறிவார்ந்த செயலாகும்.

சீனன் ஒரு முறை பட்டான். அந்தப் பட்டறிவு
அவனுக்குத் திடம் அளித்திருக்கிறது.

தமிழன் அவனை விட அதிகமாகப் பட்டான்.
அவனுக்கு எந்த அளவு திடம் வந்திருக்கிறது
என்பதை அறியமுடியவில்லை.

இந்த ஆவணத்தில் எங்கேனும் விளக்கம்
வேண்டியிருப்பின் எனது nelango5@gmail.com என்ற
என் மின்வரிக்கு அஞ்சல் அனுப்பக் கேட்டுக்கொள்கிறேன்.

தாய்மொழி உணர்வோடு, கேடுகளைத் தடுக்கும்
அறிவார்ந்த அரண்களை வகுப்போம்; இணைவோம்;
வெல்வோம். நன்றி.

ஆதாரங்களும் மேலும் படிக்கத்தக்கனவும்:

• http://unicode.org
• http://www.unicode.org/charts/
• http://www.unicode.org/consortium/memblist.html
• http://valavu.blogspot.com/2010/11/1.html
• http://infitt.org
• http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm
• http://nayanam.blogspot.com/2010/12/13.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

இக்கட்டுரையின் பிற பகுதிகள்:
பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html
பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html
பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html
பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html
பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html
பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html
பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html
பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html
பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html
பகுதி 10: http://nayanam.blogspot.com/2011/01/10.html
.

6 comments:

தகடூர் கோபி(Gopi) said...

சீன அரசு போல தமிழக அரசு சட்டம் போட்டு தடுப்பது தேவையான ஒன்று எனினும், தமிழ் மொழி பன்னாட்டு மொழி என்பதால் தமிழக அரசு சட்டம் ஒட்டு மொத்த தமிழர்களையும் கட்டுப்படுத்தாது. ஒருங்குறி சேர்த்தியத்தை பொறுத்தவரை அது ஒரு தனியார் கூட்டமைப்பு என்பதால் தமிழ் தொடர்பாக "தமிழக அரசு" அனுமதியுடன் வரும் முன்மொழிவுகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளச் சொல்லி அவர்களை கட்டுப்படுத்த இயலாது.

ஒரு பன்னாட்டு தமிழமைப்பு ஏற்படுத்தி அந்த அமைப்பு மூலம் மட்டுமே ஒருங்குறித் தமிழ் சார்ந்த முன்மொழிவுகள் செய்யப்பட வேண்டும் என்று தமிழ் பேசும் அனைத்து நாடுகளிலும் சட்டத் திருத்தம் கொண்டு வருவது ஒரு தீர்வாக அமையும் எனினும் அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

அது வரை, இத்தகைய முன்மொழிவுகள் குறித்து முன்கூட்டியே அறியவும், தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்கவும் ஒருங்குறி சேர்த்தின் மடற்குழுமத்தையும், முன்மொழிவுகள் மற்றும் இதர கோப்புகளையும் பார்வையிட உரிமையை தமிழறிஞர்கள் பெற வேண்டும்.

இதற்காக ஒருங்குறி சேர்த்தியத்தின் வாக்களிக்கும் உரிமையுள்ள உறுப்பினர் கட்டணம் மிக மிக அதிகம் என்பதால், குறைந்த பட்சம் பல்கலைக் கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் கற்கும் மாணவர்கள் போன்றோர் ஒருங்குறி சேர்த்தியத்தின் ($75 ஆண்டுக் கட்டணம் கொண்ட) தனி உறுப்பினராக ஆக வேண்டியது தமிழ் மொழியின் இணைய வடிவத்தை காப்பாற்றத் தேவையானது.

nayanan said...

திரு.கோபி,

தங்களின் அஞ்சலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தங்களின் கருத்துக்கள் போல பல கருத்துக்களும் தோன்றி வாதங்கள் ஏற்பட வேண்டும்
என்பதே என் அடிப்படை எண்ணமாகும். வேறு சில கருத்துக்களையும் இதன் அடிப்படையிலேயே
எழுதியிருக்கிறேன்.

//சீன அரசு போல தமிழக அரசு சட்டம் போட்டு தடுப்பது தேவையான ஒன்று எனினும், தமிழ் மொழி பன்னாட்டு மொழி என்பதால் தமிழக அரசு சட்டம் ஒட்டு மொத்த தமிழர்களையும் கட்டுப்படுத்தாது. ஒருங்குறி சேர்த்தியத்தை பொறுத்தவரை அது ஒரு தனியார் கூட்டமைப்பு என்பதால் தமிழ் தொடர்பாக "தமிழக அரசு" அனுமதியுடன் வரும் முன்மொழிவுகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளச் சொல்லி அவர்களை கட்டுப்படுத்த இயலாது.
//

தமிழக அரசு எல்லா நாட்டுத் தமிழர்களையும் கட்டுப்படுத்த முடியாதெனினும், தமிழக அரசு
எடுக்கின்ற "நல்ல" முடிவுகள் எல்லாரிடமும் தாக்கத்தினை ஏற்படுத்தும்,

தாபு, தாம் எழுத்துருக்களை அரசு அறிவித்த போது பிற நாட்டுத் தமிழர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த முடிவு தவறான முடிவு என்பது என் கருத்து, மாறாக, தகுதரத்தை ஏற்றுக்
கொண்டிருந்தால் அது பெருந்தன்மையாக இருந்திருக்கும்.

இப்பொழுதும் ஒருங்குறி சார்ந்த விதயங்களில் அரசின் செயற்பாடுகள் பிற நாட்டுத் தமிழர்களை
வழிநடத்துமாறு இல்லை என்பதும் உண்மைதான்.

அதே வேளையில் பல நாட்டுத் தமிழர்களும் தமிழகத்தை உற்றுப் பார்த்தும் சார்ந்தும் இருக்க விரும்புகிற
சூழலே உள்ளதால், அரசின் செயற்பாடு நல்லதாக இருந்தால் அது நிச்சயம் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

ஒருங்குறிச் சேர்த்தியத்தைப் பற்றி தாங்கள் சொல்லியிருப்பது சரியே. ஆனாலும்,
பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு செயலைச் செய்யும் முன்னர் பிற நாட்டில் உள்ள உள்ளூர் விதயங்களை
ஒரு முறை அறிந்து கொண்டால் அதைப் பற்றி சற்றேனும் யோசிக்க செய்வார்கள்.
தேவையில்லாத விதயங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் சண்டித்தனம் செய்யாது. இதனால்
அவர்களுக்கு ஏதும் இழப்போ வேறொன்றுமோ இல்லை. வருமானத்தில் கைவக்கும் எதனையும்
தேவையில்லாமல் அவர்கள் வம்பிக்கிழுக்க மாட்டார்கள். அதேபோல ஏதேனும் தவறினை சேர்த்தியம்
செய்யுமானால், இந்தச் சட்டங்களின் அடிப்படையில் அறிஞர்களும் ஆர்வலர்களும் மறுக்க ஏதுவாகும்.
இந்தச் சட்டங்கள் ஒரு சிறு உளியாக, ஆயுதமாக நமக்கு உதவும்.
அதனையே நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

இன்றைக்கு நாம் பல மறுப்புகளைச் செய்ய வேண்டுமானால், (குறிப்பாக எனது கட்டுரையின் நான்காவது
தொகுதியைப் பாருங்கள்) எந்த அடிப்படையில் மறுப்பது என்ற நிலை இருக்கிறது. அதனை மாற்றுவதற்கு
ஆவன செய்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாகும்.

//
ஒரு பன்னாட்டு தமிழமைப்பு ஏற்படுத்தி அந்த அமைப்பு மூலம் மட்டுமே ஒருங்குறித் தமிழ் சார்ந்த முன்மொழிவுகள் செய்யப்பட வேண்டும் என்று தமிழ் பேசும் அனைத்து நாடுகளிலும் சட்டத் திருத்தம் கொண்டு வருவது ஒரு தீர்வாக அமையும் எனினும் அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.
//

உத்தமம் என்பது "பன்னாட்டுத் தமிழமைப்பு" என்பதாக,
கிட்டத்தட்ட இந்தத் தேவையைத்தான் நிறைவு செய்ய வந்ததோ என்ற எண்ணம்
எனக்கு வருவது உண்டு. ஆனால், அது திறம்படசெயல்பட்டிருந்தால்
இன்றைக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காது.

அப்படியே இப்படி ஒரு அமைப்பு செயல்பட்டாலும், தமிழக அரசின் சட்டங்கள் இருந்தால்
அதை அவர்கள் ஓர்ந்து பார்க்காமல் செயற்பட எளிதில் முடியாது.

மேலும் எந்த நாட்டுத் தமிழர்களுக்கும் தமிழ்க் கணிமை என்று வந்தால் அதற்கு மிகப் பெரிய சந்தை
தமிழகம்தான். அதனால் தமிழகச் சட்டத்தினை யாரும் மறுக்க மாட்டார்கள்.

மேலும் தொடர்வோம்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...
This comment has been removed by the author.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வினா-விடை பாணியில், மிகவும் பயனுள்ள தொடர், நாக இளங்கோவன் ஐயா!
இதை Pdf-க்கு மாற்றி, மின் நூலாகவும் வழங்கிப் பரப்ப வேணும்!

ஏன் ஏழு சிறப்புத் தமிழ் எழுத்துருக்கள், தமிழில் இருந்து கொண்டு, அங்கு வைக்கப்படக் கூடாது என்பதற்கு, அனைவருக்கும் புரியும் வகையில், சுருங்கச் சொல்லும் பதிவு ஒன்றும் வேணும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கிரேக்க/லத்தீன் எழுத்துருக்களைப் பல சமயம் ஆங்கிலத்திலும் எழுதுகிறோம் தான்!
You can also see this in Harry Potter too, with all those spells!

ஆனால் அதற்காக, கிரேக்க பிரத்யேக எழுத்துக்களை English character set-இல் கொண்டு வந்து வைக்கவில்லை அல்லவா? Epsilon என்ற எழுத்தை, இன்னொரு Character set-இல் இருந்து தான் எடுத்துக் கொள்கிறோமே அன்றி, ஆங்கிலத்தில் அதை வைப்பதில்லை அல்லவா? அது போல் கிரந்த BMP/SMP அமைக்க முடியாதா?

//Cayaamil Tiruppavai, Tiruvempavai//

இது உண்மையாகவே இருக்கட்டும், மறுக்கவில்லை! ஆனால் அறிஞர் தொ.பொ.மீ, திருப்பாவையைக் கிரந்தத்தில் எழுதிக் காட்டி விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களைக் கிரந்தத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமா?

திருப்பாவை கோதைத் தமிழ்ச் சொத்து தான்! என் ஆருயிர்த் தோழியின் எழுத்து தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் அதை கிரந்தவியலாரும் படிக்கட்டும் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களைத் தாரை வார்க்க வேண்டுமா? என்பது தான் என் நெருடல்!

Are we walking unnecessary miles? Why cant they use tamizh specific characters, when they have a real need? Like the way, we separately use alpha, gamma, theta, epsilon in English writing?

நாளை நானே ஒரு பெரும் தமிழறிஞர் ஆகி, அருணகிரியைத் தெலுங்கில்/French-இல் எழுதிக் காட்டினேன் வச்சிக்கோங்க, அப்போ சிறப்புத் தமிழ் எழுத்துக்களை, தெலுங்கிலும்/ஃபிரெஞ்சிலும் கொண்டு போய் வைப்போமா என்ன? :)

பிப்ரவரி-யில் அரசுக் கூட்டத்துக்கு யாரேனும் செல்லவிருக்கிறீர்களா?
Do we have a vote in the Unicode Consortium?
எது எப்படியோ, தமிழுக்கு நல்லது நடந்தால் சரி!

nayanan said...

அன்பின் நண்பர் இரவிசங்கர்,
வணக்கம்.

காலந்தாழ்ந்த மறுமொழிக்கு வருந்துகிறேன்.

//ஏன் ஏழு சிறப்புத் தமிழ் எழுத்துருக்கள், தமிழில் இருந்து கொண்டு, அங்கு வைக்கப்படக் கூடாது என்பதற்கு, அனைவருக்கும் புரியும் வகையில், சுருங்கச் சொல்லும் பதிவு ஒன்றும் வேணும்!
//

அவசியம் இந்தப் பதிவு ஒன்றனை ஏற்படுத்த முயல்கிறேன். நன்றி.


திருப்பாவை, நாலாயிரம், திருமுறைகள் யாவற்றையும் மொழி பெயர்த்து எழுதுவதே தவறு. மிகப் பெரும் பிழை. இதில் கிரந்தப் படுத்துதல் என்பது பெருங்கேடு.

சைவ விண்ணவ திருப்பதிகங்களின் சிறப்பு என்ன? என்று ஆழ்ந்து பார்க்கும்போது, எந்த மொழியில் இவற்றை மொழிபெயர்த்தாலும்
தமிழின் சொல்லும் பொருளும் கெட்டுவிடும். அப்பாடல்களின் தெய்வத்தன்மை போய்விடும்.
பிறகு எதற்கு இதனை மொழி பெயர்க்க வேண்டும்?

நாயன்மார்களும், ஆழ்வார்களும்
ஆக்கிய சொற்களுக்கு இணையான
சொற்களை எந்த மொழியிலும் தெய்வத்தன்மை பிறழாமல்
பெயர்த்து விட வல்லார் உண்டா?
என்ற வினாவெழுப்பி நாம் சிந்திக்க இருக்கிறது என்றே கருதுகிறேன்.

திருக்குறளைப் பல மொழிகளில் பெயர்ப்பது என்பது வேறு;
திருத்தமிழை பெயர்ப்பது வேறு.

இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் உள்ள வேறுபாடும் இங்கு நோக்கத் தக்கது.

மொழி பெயர்ப்பே கேடு எனும்போது
திருத்தமிழ் பாடல்களை கிரந்த எழுத்துக்களில் எழுதுவது என்று சொல்பவர்களின் புலமை தமிழுக்குப் பயன்படாப் புலமை என்பது என் கருத்து.

//திருப்பாவை கோதைத் தமிழ்ச் சொத்து தான்! என் ஆருயிர்த் தோழியின் எழுத்து தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் அதை கிரந்தவியலாரும் படிக்கட்டும் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களைத் தாரை வார்க்க வேண்டுமா? என்பது தான் என் நெருடல்!
//

இல்லை ஐயா. தாரை வார்க்கவே கூடாது. இப்படி நாம் நிறைய இழந்துவிட்டோம். பக்தி இலக்கியத்தில்
கைவைத்தால் திராவிட முன்னேற்றங்களின் ஒளிவெள்ளத்தில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று சிலர் சதி செய்து வருகிறார்கள்.

நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆண்டாளம்மையும் ஆக்கிய திருத்தமிழை குலைக்க விடக்கூடாது.

//
நாளை நானே ஒரு பெரும் தமிழறிஞர் ஆகி, அருணகிரியைத் தெலுங்கில்/French-இல் எழுதிக் காட்டினேன் வச்சிக்கோங்க, அப்போ சிறப்புத் தமிழ் எழுத்துக்களை, தெலுங்கிலும்/ஃபிரெஞ்சிலும் கொண்டு போய் வைப்போமா என்ன? :)
//

:-))))

கீழே இருப்பவை எழுத்து வடிவை மாற்றச் சொல்லியும் கிரந்தக்கலப்பு செய்யச் சொல்லியும் பரப்புரை செய்யும் அறிஞர் பற்றிய மடலில்
கீழ்க்கண்டவாறு எழுதினேன் :-))

**தமிழ்நாட்டில் இன்றைக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு மற்றொரு பெயர் "அறிஞர்".
அந்த வகையில் எப்படியும் 5 கோடிக்குக் குறைவில்லாத அறிஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
நீ என்னைச் சொறி; நான் உன்னைச் சொறிகிறேன் என்ற புரிதலில் அறிஞர்களின் எண்ணிக்கை
நாட்டில் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கு இணையாகப் பெருகி வருகிறது.**

இன்னொரு இடத்தில் ஒரு நண்பர் தமிழ்நாட்டில் நாலரை கோடி கவிஞர் இருக்கின்றார் என்றார்.

;-))

எழுதுங்கள் இரவி. உங்கள் வினாக்கள் ஞாயமானவை.

கிரந்தம் பற்றிய கூட்டம் நடக்கப் போவதாக சிறு முனகல் கூட கேட்கவில்லை. என்ன செய்யப் போகிறோமோ தெரியவில்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்