Pages

Tuesday, October 25, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2

கூடங்குள அணு உலை வேண்டாம் என்றால்
மின்சாரத்திற்கு மாற்று என்ன? என்ற கேள்வி
ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது இயற்கை.
அதே வேளையில் மாற்று பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல.

உயர்சக்தி துறையில் பணி புரியும் எல்லாப்
பொறிஞர்களும் அறிஞர்களும் அணு உலைகளுக்கு
மாற்று பற்றி மிகநன்றாஅறிவர்.
அவர்களால் மட்டுமே மிகத் துல்லியமாக, சிறப்பாக
மாற்றுக்களைக் கூறமுடியும்.

அப்துல் கலாமுக்கு அணுமின்னுக்கு மாற்று தெரியாதா?
கலாமைப் போன்ற புகழ்பெற்ற தமிழக அறிஞர்,
பொறிஞர் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாததா?

அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை
நிறுவச் சொன்னால் அருமையான மாற்றுத்திட்டங்களைச்
செய்யக் கூடியவர்கள்.

ஆனால் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும்
கூடங்குளம் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.
அரசாங்கப் பணி செய்து கொண்டு அரசாங்கத்தின் அரசியல்
விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்
குடியரசு நாட்டில் சொல்ல முடியாது.

அணு உலைக்கு மாற்றாகப் பலரும் கூறுவது,
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியையே. அது கதிரொளி,
காற்று, கழிவு, கடலலை போன்றவற்றைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவிடம்
மிக நீண்ட கடற்கரை உள்ளது. அதில் தமிழகத்தின்
கடற்கரை நீளம்தான் மிக அதிகம் (1076 கி.மீ).
மண்டலம் மண்டலமாகப் பிரித்து அந்தந்த மண்டலத்திற்குத்
தேவையான மின்சாரத்தைச் சிறிய சிறிய காற்றாலைகளில்
பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு/இந்தியா முழுவதும்
மின்சாரத்தை அனுப்புவதால் உண்டாகும் வழிஇழப்பையும்
தவிர்க்கலாம்.

ஒரு மெகாவாட்டு மின்சாரம் தயாரிக்கும் முனையலுக்கு
ஆகும் செலவென்ன தெரியுமா? 5 கோடி உரூவாய்.
இது ஒன்றும் ஆதாரமில்லாத வெற்றுத் தரவல்ல.
தமிழக அரசாங்கத்தின் காற்றாலைத் திட்டத்திற்கான
ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் தரவு.
(படிக்க வேண்டிய ஆவணம்)
http://www.tn.gov.in/citizen/teda.pdf

அப்படியென்றால், 2000 மெவா காற்றாலை
மின்சாரத்திற்கு ஆகக்கூடிய செலவு 10,000 கோடி
உரூவாய்.

கூடங்குளத்தில் 2000 மெவா அணு மின்சாரம் உற்பத்தி
செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் 1000 மெவா
அளவுக்கு மட்டுமே வேலை முடிந்திருக்கிறது.

அதற்குள் ஆகியிருக்கும் செலவு என்ன தெரியுமா?
யாருக்கும் தெரியாது. ஆனால், 2007ஆம்
ஆண்டுக்குள்ளாக 17,000 கோடி உரூவாய்
செலவாகிவிட்டது என்பது எல்லோருக்கும்
தெரியும்.

10,000 கோடி உரூவாயில் யாருக்கும் இன்னல்
இல்லாமல், ஒரே இடத்தில் என்று இல்லாமல்
பரவலாக அமைக்கக் கூடிய எளிமையான,
மாசுக்கேடு இல்லாத காற்றாலை மின்சாரத்தை
விட்டுவிட்டு, குறைந்தது 25,000 கோடி உரூவாய்
செலவாகக் கூடிய இன்னலும் இடரும் மிகுந்த
அணு உலைத் திட்டம் எதற்கு?

கடற்கரையில் மட்டும்தானா காற்று? தமிழ்நாட்டில்
மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் உள்ளன.
அதுவன்றி பல குன்றுகள் உள்ளன. இவையெல்லாம்
காற்றாலைக்கு மிகப் பொருத்தமான சூழல்கள்.

வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள்
என்றும் வளமையானவை காற்றாலைக்கு.

உள்ளூர் ஆதாரங்களைக் கணக்கில் கொன்டு
திட்டங்கள் செய்ய வேண்டும். கடனுக்குக்
கிடைக்கிறதே என்றும், பகட்டாக இருக்கிறதே என்றும்
வெளிநாட்டுக்கு ஓடி ஓடி இந்தியர்களின் பணம்
வீணடிக்கப் படுகிறது.

உலகிலேயே பெரிய காற்றாலை நிறுவனங்களில்
இந்தியாவின் சுசலான் நிறுவனமும் ஆகும்.
துவங்கி பன்னிரண்டாண்டு காலத்துக்குள் இந்தியா முழுதும்
5000 மெகாவாட்டு மின் உற்பத்தியை அவர்களின்
காற்றாலைகள் செய்கின்றன. கூடங்குளத்திலும்
ஒரு சுசலான் காற்றாலை உண்டு. உலகின்
ஆறாவது பெரிய காற்றாலை நிறுவனம் சுசலான்.
http://www.suzlon.com/images/Media_Center_News/185_SEL%20-%20SE%20Press%20Release%20%205%20GW%2024.9.2010.pdf

இந்தியா வருங்காலத்தில் 31,000 மெவா
உற்பத்தியை 30 அணு உலைகளைக் கொண்டு
செய்யவிருக்கிறது. 2,000 மெகாவாட்டுக்கே 25,000 கோடி
என்றால் இந்த 31,000மெகாவாட்டுக்கு எவ்வளவு
செலவு? எவ்வளவு காலம் பிடிக்கும் என்று
எண்ணிப் பார்க்க வேண்டாமா?

காற்றாலை நிறுவனங்களை மேலும்
வளர்த்துத் தேவையான மின்சாரத்தில்
கணிசமான பகுதியை காற்றாலைகளின்
மூலம் விரைவில் பெறலாமன்றோ?

காற்றாலை மட்டும் போதுமா? என்றால்
போதாதுதான். கதிரொளி, கழிவுகள் என்று
வேறும் வழிகள் எவ்வளவோ உண்டே!

அரசாங்கங்கள் மேலும் பொறுப்புடன்
செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்தான்.

இலவசங்களை வாரி வாரி வழங்கும்
அரசாங்கங்கள் அவைகளை எல்லாம்
கதிரொளியில் இயங்கும் அரவைகள்,
கதிரொளியில் இயங்கும் தொலைக்காட்சிகளாக
இலவசமாகக் கொடுக்கலாமே?

பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு காலை,
மதியம் என்று இரண்டு வேளை சோறுபோட்டு,
வீட்டுக்கும் இலவசமாக அரிசி கொடுக்கும் மடத்தனம்
இந்த நாட்டு அரசுகளுக்கு மட்டுமே உண்டு.

நன்கு சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பிள்ளைகள்
படிக்கிற 4 பேர் குடும்பம் என்றால், பிள்ளைகளுக்கு
இருவேளைச் சோறு பள்ளிக்கூடத்தில்.
அவர்களுக்கும் சேர்த்து வீட்டிற்குத் தேவைக்கு மேல்
இலவச அரிசி. தேவைக்கு மேலே உள்ள அரிசி
எங்கே போகும்?

பொருளாதார மேதைகள் ஆளும் நாட்டில் மட்டும்தான்
இந்தப் பொருளியல் கொள்கைகளுக்கு வாய்ப்பு உண்டு.

அரிசி இலவசம் கவர்ச்சியாக இல்லையென்றால்
கணி இலவசம்!

இப்படியெல்லாம் செய்வதற்குப் பதில்,
கதிரொளியில் இயங்கும் மின்விளக்குகள்,
மின்விசிறிகள் போன்றவற்றைப் பள்ளிப்
பிள்ளைகளுக்கு இலவசமாய்க் கொடுக்கலாமே?

மக்களுக்கு அந்தவகையில் மின்சாரம்
தரவேண்டிய கடப்பாடு குறைந்துவிடுகிறதல்லவா?

அணு உலைக்குக் கொட்டும் காசை
கதிரொளி மின்வளர்ப்பிற்குத் திருப்பலாமே?

குசராத்தில் சுடுகாட்டையே
கதிர்-மின்-சுடுகாடாக்கியிருக்கையில்
கதிர்-மின் ஆற்றலை எப்படியெல்லாம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்
என்று எண்ணிப் பார்க்க நிறைய இருக்கிறதே!

வெளிநாட்டு நிறுவனங்கள் என்றால் கையைக்
கட்டி வாயைப் பொத்தி மின்சாரத்தைத்
தடையின்றி தரும் தமிழக இந்திய
அரசாங்கங்கள் காற்றாலை வழியாக,
பெரிய இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்
அவரவர் மின்சாரத்தை அவரவர்
பார்த்துக் கொள்ளவேண்டும் என்று
சொல்லலாமே?

1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்
எந்த நிறுவனமாயினும் அவரவர் மின்சாரத்தை
அவரவரே தயாரித்துக் கொள்ள முடியுமே?

சிறிய நடுத்தர நிறுவனங்களை விட்டுவிட்டு
1000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு
மின்சாரத்தில் சிறு பகுதியை மட்டும்
கொடுத்து, பெரும் பகுதியை அவர்களையே
மரபுசாரா முறையில் தயாரித்துக் கொள்ளச்
செய்ய முடியுமே.

அதை விடுத்து அப்பாவி பொதுமக்களை
நாளைக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை இழந்து
வாடவைத்துத்தான் வல்லரசு ஆக முடியுமா?

பல்வேறு வகையானும் அறிவுக்கூர்மையுடன்
அரசாங்கங்கள் செயல்படாமல், மக்களை
வாட்டி வதைப்பதோடு அணு உலைகள்
போன்ற ஆபத்துகளையும் அருகே
குடியேற்றுவதில் ஞாயம் இல்லை!

ஒருங்கிணைந்த பன்முகத்திட்டத்தைச்
செய்யவேண்டுமேயன்றி, மக்களை
வாட்டி வதைத்து நாட்டை முன்னேற்றுவோம்
என்பது அரசுகளின் கையாலாகாத நிலையையே
காட்டுகிறது.

கடந்த 8/10 ஆண்டுகளாக அரசியலைக்
கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு பாராளுமன்ற, சட்டமன்றக்
கூட்டத் தொடராவது அடிதடியில்லாமல்
அசிங்கமில்லாமல் நடந்திருக்கின்றனவா?

இவர்களா அணு உலைகள் போன்றவற்றை
முறையாகப் பாதுகாக்கத் தக்கவர்கள்?

போபாலில் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம்
விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளியை
தனிப் பறனையில் இரகசியமாகத் தப்ப வைத்த
அரசாங்கங்களா நீண்ட நாளைக்கு அணு உலையில்
பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் நிற்கும்?

அம்மக்களுக்கு நீதி கிடைக்க 24 ஆண்டுகள் ஆயின.
24 ஆண்டுகள் கழித்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையை விட
சிறு கோயில் வாசலில் பிச்சையெடுத்து வாழும் பிச்சைக்காரன்
பன்மடங்கு சம்பாதித்திருப்பான்.

மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களை
எல்லாம் சமாதான ஏற்பாட்டிற்கு அனுப்புகிறார்களாம்.

கலாம் உள்ளிட்ட எந்தப் பெரிய அரசுப் பணி செய்த
பொறிஞராயினும், அறிவியல் அறிஞராயினும்
"போபால் விசவாயு விதயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது
சரியில்லை; அம்மக்களுக்கு 24 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கப்
பட்ட மிகச்சிறு பணம் ஞாயமற்றது", என்று அறிக்கை விடுக்க
துணிவு உடையவர்களா? அது போலச் செய்திருக்கிறார்களா?

கண்டுபிடிப்புகள், அல்லது கட்டி அமைத்தல் ஆகியவற்றை
மட்டும்தான் அரசாங்கப் பொறிஞர்கள் அறிஞர்கள் செய்ய முடியும்.
அதைத்தாண்டி குமுகத்தில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பேசமாட்டார்கள்.
அதற்குத் துணிவும் அவர்களுக்குக் கிடையாது.
ஆழ்ந்த அனுதாபங்களைக் கூட உயர் அரசுப்பணியாளர்களால்
சொல்ல முடியாது.

அப்படியென்றால், மக்களின் மனநிலைக்கு
எதிராக இவர்கள் சமாதானம் சொன்னால்,
இவர்கள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்
மக்கள் ஏன் கேட்கவேண்டும்?

அன்புடன்
நாக.இளங்கோவன்

7 comments:

மணி மு. மணிவண்ணன் said...

சம்மட்டி அடி!

Anonymous said...

நல்ல கட்டுரை

வலிப்போக்கன் said...

அரசாங்கப் பணி செய்து கொண்டு .ஓய்வு ஊதியம் பெற்று கொண்டு அரசாங்கத்தின் அரசியல் விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்
குடியரசு நாட்டில் சொல்ல முடியாதுதான்

Unknown said...

இனிய இணைய உறவுக்கு ஓர் அவசர வேண்டுகோள் நான் உங்களின் கருத்தாழ்மையை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன் மேலும் எனது பிளாக்கர்ஸ் யை http://kenakkirukkan.blogspot.com/ ஒரு முறை பார்க்கவும்,

நான் சொந்தமாக கணினி வைத்து ஆப்செட் பிளக்ஸ் போர்டு டிசைனிங் வீடியோ எடிட்டிங் செய்து வருகின்றேன்

மேலும் நான் கூடங்குளம் பாதிப்பு தொடர்பாக நம் பாமர மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் பல கேள்விகளை தயாரித்து இலவசமாக வினியோகிக்க உள்ளேன் இதர்கு பல கேள்விகள் தயாரிப்பதற்கு உங்களின் மேலான கருத்து எனக்கு தேவைப்படுகிறது,

நீங்கள் உடனே என்னுடைய 9047357920 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் நன்றி நன்பரே


http://kenakkirukkan.blogspot.com/
http://kenakkirukkan.blogspot.com/

nayanan said...

Dear Mr.Lenin, I am attending to an emergency situation and will not be reachable next couple of days. you may post me at nelango5@gmail.com and I shall get back asap.

Thanks.
Naga Elangovan

kankaatchi.blogspot.com said...

மனிதனுக்கு அழிவு பலவகையில்
ஆனாலும் தன்னைத்தானே அழித்து கொள்வதற்கும்
தான் வாழ பிறரை அழிப்பதற்கும் அவன் அஞ்சுவதேயில்லை.

Anonymous said...

கூடங்குளம் அணு உலை என்பது அயல்நாட்டில் இந்தியத் தலைவர்கள் பாசமும் நேசமும் கொண்டு அதன் கைக்கூலியாக மாறியதால் வந்த வினையே அது. ஒன்றைத் தொடங்குமுன் அப்பகுதி வாழ்மக்களிடம் கலந்தும் சிந்தித்தும் முறையாகவும் பணியாற்றவே மக்களாட்சியில் மக்களால் வேலைக்காரனாக அரசியலில் நாம் சிலரைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.அவர் சொன்னார், அப்துல் கலாமே சொன்னார் என்பதற்காக முடிவெடுப்பது எனில் அந்த ஒருவரே போதுமே. மேலும் ஏன் சட்டமன்றம்,பாராளுமன்றம் ஆகியவை.