Pages

Friday, June 16, 2006

அர்செண்ட்டைனா - என்ன ஒரு ஆட்டம்!

அர்செண்ட்டைனா இன்று செர்பியா-மோண்ட் அணியை 6 கவல்கள் அடித்து
தூள் தூளாக்கியது ஒரு புறம் என்றால், அந்த அணியின் ஆட்டம் ஒப்பற்ற ஆட்டம்
என்பதில் அய்யமிருக்க முடியாது.

புள்ளி வைத்து கோலம் போட்டார் போல கடவுகள் அற்புதம். இது வரை நான் பார்த்த
கால்பந்தாட்டத்திலே இப்படி ஒரு ஆட்டம் பார்த்ததில்லை. இந்த அணியின்
கடவுகள் (passes)மாரடோனா காலத்தில் கூட இவ்வளவு அற்புதமாக இருந்ததில்லை.
1990 ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்டம் ஓரளவு இதனை ஒட்டியிருந்தது. இருப்பினும்,
இத்தனை அழகை நான் பார்த்ததேயில்லை.

அந்த இரண்டாவது கவலை (கவல் = Goal :நன்றி முனைவர் இராம.கி) 24 கடவுகளில்,
செர்பிய அணியினர் கால்கள் கட்டிப் போட்ட மாதிரி நின்று கொண்டிருக்க 24ஆவது கடப்பில்
கேம்பியாசு அதனை அடித்த அழகு கண்களை விட்டு அகலாது.

அந்த கவல் கேம்பியாசிற்கு சொந்தமல்ல; மொத்த அணிக்கே சொந்தம்.

அர்செண்ட்டைனாவின் இந்த ஆட்டத்தைப் பார்த்து பிரேசில் உள்பட
பல அணியினர்க்கும் கிலி பிடித்திருக்கும் என்பதி அய்யமில்லை.

மெசி யின் ஆட்டத்தைப் பார்க்க முடியாதோ என்று நினைத்த எனக்கு,
கடைசி 15 நிமிடங்களில் அவரும் வந்து ஒரு கவலுக்கு வழி வகுத்தும்,
ஒரு கவலை அவரே அடித்தும் இன்றைய மாலையை இனிமையாக்கி விட்டார்.

குழந்தை போல மாரடோனா குதித்துக் கூத்தாடியது இன்னும் மனதினை இனிமையாக்கியது.
(எனினும் மாரடோனாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் வாடி வதங்கவே செய்கிறது.)

அன்புடன்
நாக.இளங்கோவன்

5 comments:

டிசே தமிழன் said...

இளங்கோவன், நீங்கள் குறிப்பிட்ட்மாதிரி அருமையான ஆட்டந்தான். பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆர்ஜெண்ரீனா நண்பனும், 'ஆரம்பத்திலேயே டிபென்ஸ் விளையாடத் தொடங்கிவிட்டார்கள் ஆகவே ஆட்டம் சுவாரசியமாய் இருக்கும்' என்றான். அவன் கூறியமாதிரியே ஆட்டம் அற்புதமாய் இருந்தது. ஆனால் சென்ற உலகக்கோப்பைப்போட்டியில் கூட 5-0 என்றெல்லாம் ஆரம்ப ஆட்டங்களில் அபார ஆட்டமாடி பிறகு அடுத்தடுத்த சுற்றுக்களில் கோட்டைவிட்டதும் நினைவுக்கு வருகின்றது. இறுதிப்போட்டிக்கு பிரேசிலும் ஆர்ஜென்ரீனாவும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .

nayanan said...

அன்பின் தமிழன்,

உண்மையில் உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். கருத்திடுகைக்கு மிக்க நன்றி.

பிரேசில் அணியின் தடுப்பு மிக வலுவாக இருக்கிறது.
ஏனோ ரொனால்டோ கடந்த ஆட்டத்தில் சரியாக
ஆடவில்லை.

அர்செண்ட்டைனாவின் ஆட்டத்தில்
மைய களத்திலும், முன்களத்திலும் இருந்த
வேகம் பிரேசிலை விட கூட என்றே தோன்றுகிறது.

அர்செண்ட்டைனா, பிரேசில், செர்மனி என்ற
இந்த மூன்று அணிகளும் அரையிறுதிக்கு வந்து
விடுவார்கள் போலத் தெரிகிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்

ராபின் ஹூட் said...

//அர்செண்ட்டைனா, பிரேசில், செர்மனி என்ற
இந்த மூன்று அணிகளும் அரையிறுதிக்கு //

எனக்கு ஒரு சந்தேகம். ஒரு கால்பந்துப் போட்டியில இரண்டு அணிகள் தானே விளையாட முடியும். அப்புறம் எப்படி அர்செண்ட்டைனா, பிரேசில், செர்மனி என்ற
இந்த மூன்று அணிகளும் அரையிருதியில் ஆட முடியும்.

nayanan said...

இராபின், புரிகிறது :-)

ஆனால் இரண்டு அரையிறுதிகள் இருக்கின்றனவே :)
இன்னும் ஒன்றைப் பிடித்துப் போடவேண்டியிருக்கு.
அன்புடன்
இளங்கோவன்

பொன் said...

ஆர்ஜன்ரீனாவின் ஆட்டம் அற்புதம். கவல்களுக்கு காத்திருக்கும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார்கள். பிரேசிலிடம் எதிர்பார்த்ததை ஆர்ஜென்ரீனியர்கள் வழங்கினார்கள். ஜேர்மனி , ஆர்ஜன்ரீனா (அல்லது இங்கிலாந்து) ஆகியவற்றில் ஏதோ ஒன்று தான் இறுதிப்போட்டிக்கு செல்லமுடியும். பிரேசிலுக்கு இத்தாலி பிரச்சனையாக இருக்கக்கூடும். எனினும் இறுதிப்போட்டி தென் அமெரிக்க நாடுகள் இரண்டுக்கு இடையே நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.