Pages

Friday, April 28, 2006

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!

"கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே, உயர் குணம் மேவிய தமிழா!"

என்ற பாவேந்தர் பாரதிதாசனை,
அவ்வப்போது, தேவைப்படும்போது,
பயன்படுத்திக் கொண்டு,
பின்னால் சொகுசாக மறந்துவிடும் தமிழர்களே!
திராவிடர் முன்னேற்றத்திற்கான கழகங்களே!
பெரியாரின் பேரப்பிள்ளைகளே!
கவிஞர் பெருமக்களே! கவிதாயினிக் குயில்களே!
தமிழ் ஆசிரியர்களே! உழவர்களே, தொழிலாளிகளே!
தமிழ் இணைய மடற்குழுக்கள் மற்றும் வலைப்பதிவுகள்,
இதழ்கள் முதற்கொண்டு எல்லா மூலைகளிலும்
தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கும் எழுத்துப் புலிகளே!
என் உயிரினும் மேலான கோழைக் கூட்டங்களே!
இரத்தத்தின் இரத்தமான இழிகுலமே!
இனம் என்றொன்றிலாத இனமே!

இது கேளீர்!

இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள்! (29-ஏப்ரல்)
"உலகாள உனது தாய் உயிர் வாதை அடைகிறாள்,
உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா'

என்று ஒரு தடவையேனும் தமிழ் மக்களை எழுப்பி விட்டவர் பாவேந்தர்.

எழுப்பி விட்டும் எழாத,
எழும்பியும் மற்றவர்களை எழுப்பாத,
எழும்பியது போல் நடிக்கின்ற "தமிழர்களை என்ன சொல்வது?" என்று
யோசித்த போது, நினைவுக்கு வந்தவை மீண்டும் பாவேந்தரின் சொற்கள் மட்டுமே!

அவர் சொல்வார் தமிழர்களைப் பார்த்து!

"பள்ளம் பறிப்பாய்! பாதாளம் நோக்கி அழுந்துக அழுந்துக!,
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் பூச்சியே, தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்க வை!
ஈன உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி, அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து போ!
குனிந்து தரையைக் கெளவி, ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே, அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங்கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே!"

இந்த வரிகளைப் படிக்கும் போது, ஏதாவது ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் அல்லது அவரின் தொண்டர்
நினைவில் வருவர். அவரும் தமிழ், திராவிடர் என்றெல்லாம் குதிப்பவராக, குதித்தவராக
இருப்பர். குதித்து விட்டு மீண்டும் பாவேந்தரின் மேற்சொன்ன வரிகளுக்கு
ஒப்பாகிப் போவதும் நாம் கண்டு வருவது.

ஒரு தமிழ்நாட்டில் சாதீயமும், சழக்கும், சந்தர்ப்பவாதமுமே என்றும் அரசோச்சும்.
ஒரு தமிழ்நாட்டில் தமிழினத்தையே வேரோடு அழித்துக் கொண்டிருப்பார் பகைவர்.

தமிழர் தன்னையே அழித்துக் கொள்வர். பகைவராலும் அழிக்கப் படுவார். :-(

தமிழர்களின் பேனாக்களும் தட்டச்சுப் பலகைகளும் பஞ்சாரக் கோழிகளாகப் படுத்துத்
தூங்கும். மீறி வெளியே வந்தால் காற்றிலே வாள் வீசிக் களித்திருக்கும்!
நாக்குகள் நட்டுக் கொள்ளும்! குரல்கள் குன்றிப்போகும்!

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த/நினவு நாளிலே,
அவரை மறந்து விட்ட தமிழ் பேசும் அனைவரையும்
பாரதிதாசனின் மேற்கண்ட வருணனைகளோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதை ஒரு ஆய்வாகக் கொள்கிறேன்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
29-ஏப்ரல்-2006

3 comments:

குமரன் (Kumaran) said...

பாவேந்தரின் பிறந்த நாளைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி. பாவேந்தரின் வரிகளைப் படித்தாலே இப்படித் தான் சூடாக இருக்குமோ சொற்கள்? அநியாயத்திற்கு சுடுகிறதே!

Anonymous said...

good post

nayanan said...

அன்பிற்குரிய திரு.குமரன்,

தங்கள் இடுமறுமொழிக்கு நன்றி.

சில சூட்டுச் சொற்களுக்கு நான் பொறுப்பாளி. பாவேந்தரின் சொற்கள் சூடானவை என்பதை
விட அதி கூரானவை என்பது உண்மை.
அது அவரின் கவிதைப் பொருளைப் பற்றியது.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம்
சேர்க்க மாட்டாயா! என்ற அவரின் மென்மையான
பாடல்கள் போல பல உண்டு.

வாய்ப்பு வரும்போது பாரதிதாசனைப் பற்றி
மேலும் எழுதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்்