Pages

Sunday, November 12, 2006

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.

2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.

3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.

5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.

6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.

இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.

7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.


கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

7 comments:

குமரன் (Kumaran) said...

என் மனதிற்கு நன்கு ஒத்துப் போகிறது உங்கள் கருத்து. மிக்க நன்றி.

prakash said...

இளங்கோவன் அய்யா, நல்ல தெளிவான கருத்துக்கள். இசை தவிர்த்த இளையராஜா மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. கவிதை/பாடல் என்ற பெயரில் எழுதி தொகுப்பாக வெளியிடுவது, சுந்தரமூர்த்தி, ரோசா வசந்த் பதிவில் குறிப்பிட்டுருந்ததைப் போல wannabe brahmin ஆக முயல்வது, முகத்துதிகளுக்கு மயங்கி சில சமயம் வகை தொகை தெரியாமல் பேசுவது என்று பல உண்டு. ஆனால், இம்முறை, அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார் என்பது என் அபிப்ராயம்.

'கடவுள்' என்கிற கடவுள் மறுப்பு கொள்கை பரப்பும் திரைப்படத்துக்கு அமைத்த அவர், இந்தப் படத்தை ஏன் மறுத்தார் என்று புரியவில்லை. ஒரு கலைஞனுக்கு, இது போன்ற சூழ்நிலைகள் தான் சவாலாக அமையும். ஒரு வேளை, நீங்கள் சொன்னது போல திருவாசகம் இசைக்கோர்ப்பு அளித்த 'தெளிவாக' இருக்கலாம்.

இந்த விவகாரம் இத்தனை தூரம் சர்ச்சைக்குள்ளானதுக்குக் காரணமே, இல.கணேசனின் விஷமத்தனமான மேற்கோள் காட்டல் தான். இல்லை என்றால், அவர் இஷ்டம் என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டிருப்பார்கள், இப்போது கொடி பிடிக்கிற அனைவரும்.

Sivabalan said...

நல்ல அலசல்

nayanan said...

அன்பிற்குரிய நண்பர்கள் குமரன், சிவபாலன் மற்றும் பிரகாசு,

தங்கள் கருத்துக்களுக்கும் இடுகைகளுக்கும்
மிக்க நன்றி.

nayanan said...

// prakash said...

'கடவுள்' என்கிற கடவுள் மறுப்பு கொள்கை பரப்பும் திரைப்படத்துக்கு அமைத்த அவர், இந்தப் படத்தை ஏன் மறுத்தார் என்று புரியவில்லை. ஒரு கலைஞனுக்கு, இது போன்ற சூழ்நிலைகள் தான் சவாலாக அமையும். ஒரு வேளை, நீங்கள் சொன்னது போல திருவாசகம் இசைக்கோர்ப்பு அளித்த 'தெளிவாக' இருக்கலாம்.

//

நண்பர் பிரகாசு,

எனக்கும் நிறைய யோசிக்க வைத்தது.
கல்வி என்பது தொடர்ச்சியானது.
கடவுள் படத்திற்கும் தற்போதைக்கும் ஆன
இடைவெளியில் அவர் பெற்ற கல்வியின்
விளைவாக இது இருக்கலாம் என்றே கருத முடிகிறது.

சிநேகிதன் said...

இளையராஜா தன்னை ஒரு தலித் என்று அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் தன் திறமையை கொண்டே தான் அடையாளம் காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.
ஒரு தலித் இவ்வளவு திறமையாக உயர்திருக்கின்றான் என்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கே.ஆர் நாராயணன் ஜனாதிபதியான போது கூட அவர் தலித் என்பதால்தான், தலித்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பாதால் தான் அவர் ஜனாதிபதியாக்கப்பட்டார் என்று பல மூடர்கள் சொல்லிகொண்டிருந்தானார். அதற்கு மேலாக அவரின் திறமையைப்பற்றி யாரும் பெரிதாக கூறவில்லை. அவரை ஏன் தலித் என்ற வகையில் அடையாளம் காணுகிறீர்கள். திறமையான ஒருவருக்கு உரிய பதவி கிடைத்துள்ளது என்று அவருடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கவேண்டியது தானே.

பொருளாதாரத்தில் உயர்ந்த பலரும் இன்னும் தன்னை தலித் என்று கூறி வறுமையில் வாடும் தலித்திற்கு கிடைக்கவேண்டிய சலுகைகளையெல்லம் அனுபவித்திக்கொண்டிருக்கிறார்களே அவர்களின் மத்தியில் இளையராஜா எவ்வளவோ மேல்.

தன்னை தலித் என்று சொல்லிக்கொள்வதில் அவர் அசிங்கப்படவில்லை ஆனால் தன் திறமையை தலித் என்கிற அடையாளத்துடன் காட்டுவதையே அவர் வெறுக்கிறார். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு யாரும் புரிந்துகொள்வதில்லை.

nayanan said...

சினேகிதரே வருக!

//
ஒரு தலித் இவ்வளவு திறமையாக உயர்திருக்கின்றான் என்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
//

நான் இந்தக் கருத்தை எழுதவில்லை; அல்லது இது மாதிரியான
பொருள்படும்படியும் நான் எழுதவில்லை.

உங்கள் கருத்துக்களோடு எனக்கு
முழு உடன்பாடு உண்டு. எனது எழுத்தில்
"இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்." என்று
கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

அதே நேரத்தில்
ஒரு அமுக்கத்தில் இருந்து எழுந்து கொண்டிருப்பவர்களுக்கும், இன்னும் அமுக்கத்தில் இருப்பவர்களுக்கும்
எழுச்சி தருவதற்காக "இவரும் நம்ம மாதிரி அமுக்கப் பட்டிருந்த குமுகத்தைச் சார்ந்தவர்தான்" என்று இளையராசாவினையும், நாராயணனையும்
மேற்கோள் காட்டுவதிலும் தவறில்லை.

சொல்லப்படும் இடமும் பொருளும் முக்கியம். அதைப் பொறுத்தே நோக்கங்கள்
அமைகின்றன.