2.7.1 தேற்றங்களும், குழந்தைகளின் கற்றலும்
“Tholkaapiyam Reviewed”(4) என்ற கட்டுரையில், கொடுமுடியார், “Once, I gave a script with modified letters to a friend of mine, who was a poet, writer and a printer. He found it very difficult to start reading. Immediately I asked his son who was in his eighth standard to read. He has done the job very quickly.” என்று தனது பட்டறிவினைப் பகிர்ந்து கொள்கிறார். இது ஓர் அருமையான உண்மைச் செய்தி. ஆயினும், இதில் ஆழ்ந்து பெறுகின்ற பொருட்பாடு எழுத்து வடிவ மாற்றத்திற்கு எதிராகவே இருக்கிறது.
1) எட்டாவது படிக்கின்ற பிள்ளை நிகழ் எழுத்துகளில் ஏற்கனவே பயின்ற பிள்ளை। அவன் அப்பாவும் நிகழ் எழுத்தில் பயின்றவர் தான். ஆனாலும் குழந்தைக்கு, எளிதில், புதுக்கிய எழுத்தைப் படிக்க முடிந்தது என்பது, “குழந்தை புதுவகைப் படியத்தை (pattern) சட்டென்று கற்கிறது, தந்தை பழக்கத்தின் கரணியமாய்த் தடுமாறுகிறார்” என்று காட்டுகிறதன்றி, எழுத்து வடிவ மாற்றத்தினால் நிகழ்ந்த வியந்தை அல்ல.
2) பத்தி 2।7.1ல் சொன்ன “குழந்தைக்குத் தாய்மொழியை எளிதில் கற்கும் திறன் இயற்கையிலேயே உண்டு” என்ற கொடிவழித் தேற்ற முடிவையே கொடுமுடியாரின் நண்பர் குழந்தை நிறுவுகிறது. அதற்கும் எழுத்து வடிவ மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை.
3) கொடிவழித் தேற்றத்தில் “கிடுக்குக் காலக் கருதுகோள்”(Critical Period Hypothesis) என்ற ஒன்று உண்டு. [“Linguist Eric Lenneberg stated, in a 1964 paper, that a critical period of language acquisition ends around the age of 12 years. He claimed that if no language is learned before then (see Feral children), it could never be learned in a normal and fully functional sense. This was called the "Critical period hypothesis."] அதன்படி ஒரு பிள்ளை 12 அகவைக்குள் தான், தாய்மொழியை உள்வாங்கி இயற்கையாய்க் கற்க முடியும். அக்காலம் தாழ்ந்தால், தாய் மொழியைச் செம்மையாகக் கற்க முடியாது. கொடுமுடியாரின் நண்பர்-பிள்ளை 12 அகவையை ஒட்டியவர். அவரிடம் கொடுத்தது தாய்மொழிப் பத்தியைத் தான். அதனால் அப்பிள்ளை இயல்பான விரைவில் கற்றுக் கொண்டது. மற்றபடி எழுத்து வடிவ மாற்றத்தின் வியந்தை ஏதும் அங்கு இல்லை.
குறிப்பாக வெளிநாட்டில் வளர்கின்ற பிள்ளைகளைகளின் தமிழ் கற்றலைப் பற்றி, கொடிவழித் தேற்றம், திகைநிலைத் தேற்றம் ஆகியவற்றின் வழி ஆய்ந்து, அறிவியல், நுட்பியல், வாழுஞ் சூழல் போன்ற வழிகளைச் சார்ந்த கற்பித்தலைக் கண்டு பிடிக்க வேண்டுமேயொழிய, எழுத்து வடிவ மாற்றத்தைச் செய்யப் புகுவது சரியான அணுகு முறையல்ல।
(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam.blogspot.com/2010/02/blog-post.हटमल
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
1 comment:
/வெளிநாட்டில் வளர்கின்ற பிள்ளைகளைகளின் தமிழ் கற்றலைப் பற்றி, கொடிவழித் தேற்றம், திகைநிலைத் தேற்றம் ஆகியவற்றின் வழி ஆய்ந்து, அறிவியல், நுட்பியல், வாழுஞ் சூழல் போன்ற வழிகளைச் சார்ந்த கற்பித்தலைக் கண்டு பிடிக்க வேண்டுமேயொழிய, எழுத்து வடிவ மாற்றத்தைச் செய்யப் புகுவது சரியான அணுகு முறையல்ல।//
இதனை நானும் வழிமொழிகிறேன்.
மலேசிய நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் உண்டும்.
தமிழ்க் கற்றலில் எழுத்து வடிவத்தினால் ஏற்படும் சிக்கல் எதுவும் கிடையாது. எங்கள் மாணவர்கள் இ, ஈ, உ, ஊ வரிசை எழுத்துகளைப் படிப்பதிலும் எழுதுவதிலும் அதன் குறியீடுகளை நினைவுப்படுத்துவதிலும் எவ்வித சிக்கலையும் எதிர்கொண்டது கிடையாது.
தமிழ்க் கல்வி இங்குச் சிறப்பாகவே உள்ளது. நல்ல தமிழ்க் கல்விக்கு அடிப்படை கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளும் துணைக்கருவிகளும் போதுமான நேரமும்தாம்.
இதைவிடுத்து 'நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாக்கு' என தமிழ்க் கற்பதற்கான போதிய ஏந்து(வசதி)களை ஏற்படுத்திக்கொடுத்து தமிழ்க்கல்வியை வளர்க்க வழி சொல்ல வேண்டிய 'கல்வியாளர்கள்' எழுத்தைக் குறைகூறிக்கொண்டு மண்வெட்டி தூக்கி குழிதோண்டுவது ஏன்? எதற்காக?
Post a Comment