Pages

Friday, February 26, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

எழுத்துச் சீர்மை முன்வைப்புகளில்
மறுக்கப்பட்டப் பார்வைகள்

--நாக.இளங்கோவன்

1 அறிமுகம்
1.1 எழுத்துச் சீர்மை முன்வைப்புகள்

• “ஒரு சில தமிழி எழுத்துக்களின் நிகழ்வடிவுகளை மாற்றுதலே எழுத்துச் சீர்மை” என்று பலராலும் சொல்லப்படுகிறது. [தமிழி என்ற பழஞ்சொல் இக்கட்டுரையெங்கும் தமிழெழுத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.] தமிழ் வரிவடிவச் சீரமைப்பு(1), தமிழ் எழுத்துச் சீரமைப்பு(2) என்னும் தலைப்புக்களில் சென்ற 2000, 2003 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப் பெற்ற பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் கட்டுரைகள் இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய் வடிவங்களை மாற்றுவதையே, சீர்மையாக முன்வைக்கின்றன.(1,2)

• அதே கருத்தை ஒத்து ”தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள்” என்ற தலைப்பில் முனைவர் கொடுமுடி சண்முகனின் முகன்மையான கட்டுரையும்(3) வெளிவந்தது.

• எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைக்கும் பலரும் இக்கட்டுரைகளை முன்வைத்தே பரப்புரை நிகழ்த்துகிறார்கள்.

இம் மூன்று கட்டுரை முடிபுகளையும், ஏரணங்களையும், இற்றைச் சூழலில் அலசிப் பார்த்து, ”எழுத்து வடிவ மாற்றங்கள் இனியும் தமிழி எழுத்துக்குத் தேவையா?” என்று மறுபார்வைக்குத் தூண்டுதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

2 சீர்மைக்காகச் சொல்லப்படும் ஏரணங்களும், அவற்றின் மறுபக்கங்களும்
2.1. எழுத்தின் உயரம்:

பேரா. வா.செ.குவின் கட்டுரைகளில், எழுத்துச் சீரமைப்பின் அடவுக் கோட்பாடாய் (design objective) இன்றையத் தமிழி எழுத்துகளின் உயரம் முன்வைக்கப் படுகிறது.

இளமையில் நாம் எல்லோரும் தமிழியை எழுதக் கற்கும் போது, எழுத்துப் பயிற்சிப் பொத்தகங்களில் ஒவ்வோர் எழுத்தையும், 4 கோட்டொழுங்கில், 3 பட்டைகளுக்குள், எழுதப் பழகியிருப்போம். [ஓலைகளில் கீறிய அறதப் பழங்காலத்தை இன்று எண்ண வேண்டாம்.] இந்தப் பொத்தகங்களில், எழுத்துக்களின் உடல் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள்ளும், தலைப்பகுதி முதல், இரண்டாம் கோடுகளுக்குள்ளும், அடிப்பகுதி மூன்று, நாலாம் கோடுகளுக்குள்ளும் அமையும். பொதுவாய், தமிழி எழுத்துக்கள் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள் மட்டுமே அமைவதில்லை. தங்கள் உயரங்களில் மாறுபட்டு, நாலு கோடுகளுக்கும் பரவுவது உண்டு. பேரா. வா.செ.கு அப்படிப் பரவும் எழுத்துகளைத் தனது கட்டுரையில் கீழ்க்காணும் படத்தினூடே (படம் 1) எடுத்துக் காட்டுகிறார்.


படம்-1, தமிழ் வரிவடிவச் சீரமைப்பு-வா।செ.கு


இது போன்ற ”கி,கு,ணூ” போன்ற எழுத்துக்கள் 4 கோட்டொழுங்கில் (3 பட்டைகளுக்குள்) வாராமல், 2 கோட்டொழுங்கிலேயே (ஒரு பட்டைக்குள்ளேயே) அமைந்து, கையெழுத்திலும், அச்செழுத்திலும் ஒருங்கே அமையவேண்டும் என்ற விழைவைச் சுட்டிக்காட்டி, சீர்மை வடிவுகளுக்கு பேரா.வா.செ.கு ஓர் அடவுக் கோட்பாட்டை (design objective) முன்வைப்பார்.

அதே பொழுது, இத்தகைய கோட்பாட்டை மற்ற எழுத்து மரபுகள் பின்பற்றுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது। உலகில் பெரிதும் பயன்படுவதும், சிறப்பித்துக் கூறப்படுவதுமான உரோமன் எழுத்துக்களும் இரு கோட்டொழுங்கில் அமைவதில்லை. உரோமன் கையெழுத்து வடிவங்களைக் கீழே காணும் படம்-2 ல் காணலாம். ஒரே உயரம் கொள்ளாது,
· நடுவாய் இரு கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: a,c,e),
· நடுவிருந்து உயர்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: b,d,t),
· நடுவிருந்து கீழ்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: g,j,p),
· நடு,மேல்,கீழ் என முப்பட்டைகளில் (அதாவது 4 கோடுகளில்) பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: f)

என ஒரு கலவையாய் உரோமன் எழுத்துக்கள் இருப்பதைக் காணலாம்। அதோடு, உரோமன் எழுத்துக்களில், கையால் கோர்த்தெழுதும் முறை, அச்செழுத்து முறை என இரு வடிவங்கள் உண்டு. இதை படங்கள் - 2, 3 என்பவற்றால் ஒப்பிட்டு அறியலாம். குறிப்பாக உரோமன் எழுத்துக்கள் ‘f’,’z’ ஆகியவை இருவேறாய் மாறுபட்டு எழுதப் படுவதைக் காணலாம்.




படம்-2: உரோமன் எழுத்துக்களைக் கோர்த்தெழுதும் முறையின் உயர வேறுபாடு(5)(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html)



படம்-3: உரோமன் எழுத்துக்களை அச்சு முறையின் உயர வேறுபாடு(5)
(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html

இவ்வாறு இரு கோடுகளுக்கும் மேற்பட்ட ஒழுங்கில், இயல்பான எழுத்துயர வேறுபாட்டில் எழுதுவது உரோமனில் மட்டுமல்லாது, மற்ற மரபுகளிலும் உண்டு. காட்டாக, அரபி எழுத்துகளின் வேறுபாடுகளைக் கீழே படம் - 4 இல் காணலாம்.



இப்படிப் பல்வேறு மரபுகளில் எழுத்துயர வேறுபாடுகள் இயல்பாய் ஏற்கப்படுகையில், தமிழி எழுத்து உயர வேறுபாடுகளைப் பெருங்குறையாய்ச் சொல்லி, புதிய அடவுக் கோட்பாட்டை முன்வைத்து, அதைச் சீரமைப்பு என்பது எங்ஙனம் சரியாகும்? எழுத்தின் உயரத்தை நறுக்குதல் எழுத்துச் சீர்மை ஆகுமோ?

(தொடரும்)

முந்தைய பகுதி : http://nayanam.blogspot.com/2010/02/1.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

3 comments:

செல்வா said...

தொடருங்கள் இளங்கோவன்! ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

//இப்படிப் பல்வேறு மரபுகளில் எழுத்துயர வேறுபாடுகள் இயல்பாய் ஏற்கப்படுகையில், தமிழி எழுத்து உயர வேறுபாடுகளைப் பெருங்குறையாய்ச் சொல்லி, புதிய அடவுக் கோட்பாட்டை முன்வைத்து, அதைச் சீரமைப்பு என்பது எங்ஙனம் சரியாகும்?//

//எழுத்தின் உயரத்தை நறுக்குதல் எழுத்துச் சீர்மை ஆகுமோ?//

எழுத்து வடிவத்தை வைத்து ஒரு மொழியின் ஏற்ற இறக்கங்களைச் அளவிடுவது அறிவாண்மையானதாகப் படவில்லை.

அடிப்படையற்ற இப்படி ஒரு காரணத்தை வலியுறுத்தி எழுத்துச் சீர்மையைத் 'திணிப்பது' கற்றோருக்கு இழுக்காகும்.

நீங்கள் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் நன்று.

தொடருங்கள்.

nayanan said...

//சுப.நற்குணன் said...

நீங்கள் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் நன்று.

//

ஐயா, சில கணிஞர்கள் கூட இந்தக் காராணத்தைச் சொல்லி மாற்றவேண்டும் என்று சில குழுக்களில் பேசினர் முன்பு.

அவர்களின் அந்தக் கருத்தியல் பிழையானது.

மிக்க நன்றி..

அன்புடன்
நாக.இளங்கோவன்