Pages

Tuesday, March 02, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6

2.6. எழுத்து வடிவங்களின் மேலேறும் எழுது பொருட் தாக்கம்:

இதுகாறும், எழுத்துச் சீர்திருத்தம் தரக்கூடிய சிக்கலின் பேரளவைப் பார்த்தோம். இனிப் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து வடிவங்களின் மேல் எழுதுபொருட்கள் கொண்ட தாக்கத்தையும், மாற்றங்களையும் பார்ப்போம். எழுத்து வடிவ மாற்றத்திற்கு முன்வைக்கப்படும் கரணியங்களுள் இந்தத் தாக்கமும் முகன்மையாகச் சொல்லப் படுகிறது.

தொடக்கத்தில் கல், மரம் போன்றவற்றில் உளியால் கீறிய பட எழுத்துக்களே இருந்து, பின் அவை எளிமையாகிக் குறைந்த கோடுகளில் தமிழி எழுத்துக்கள் நிலைபெற்றன. இவ்வெழுத்துக்களைத் ”திராவிட லிபி” என்று பாகதமொழி நூலான ”லலிதவிசுதார” என்ற நூல் வகைப்படுத்தும். மரம், கல்லை அடுத்து, பனையோலையில் எழுத்தாணியால் கீறினார்கள். இம்முறையில், எழுத்துக்கள் வட்டமாய் மாறின. இவற்றோடு ஓலைகளில் புள்ளி தவிர்க்கப்பட்டது. தமிழி வடிவங்கள் பின் செந்தரப் பட்டன. அதே பொழுது, ஒருசில எழுத்துக்களில் வடிவக் குழப்பம் இருந்தது.

2.6.1. அடிப்படை மெய்யெழுத்து, அகர, ஆகார உயிர்மெய்க் குழப்பம்:

அடிப்படை மெய்யெழுத்து, அகர உயிர்மெய், ஆகார உயிர்மெய் இவற்றினிடையே வடிவக் குழப்பம் நெடுநாட்கள் நிலவியது. [தமிழில் அடிப்படை எழுத்துக்கள் உயிரும், மெய்யும் ஆகும். உயிரும், அகரமேறிய உயிர்மெய்யும் அல்ல. அகரமேறிய உயிர்மெய்களை அடிப்படை என்னும் தவறான புரிதல் இன்று பல எழுத்தறிஞர்களிடமும் (scriptologists) மொழிக்கணிமையில் வேலைசெய்யும் கணிஞர்களிடமும் (computer experts working on language computing), குறிப்பாக ஒருங்குறியேற்றத்தில் வேலைசெய்பவர்களிடத்திலும் (persons who work on Unicode) பரவிக் கிடக்கிறது; இவர்களில் பலர் கல்வெட்டு எழுத்துக்கள் பற்றி அறியாததாலும், தமிழெழுத்து வளர்ச்சி பற்றிய வரலாற்று அறிவு கொள்ளாததாலும், ”அபுகிடா (abugida) தேற்றத்தை முன்மொழிந்து இந்திய எழுத்து மரபுகளைக் கணிப்படுத்துவதில், குறியேற்றத்தில், குழறுபடி செய்தபடி இருக்கிறார்கள் என்று “தொல்காப்பியமும் குறியேற்றங்களும்”(7) என்ற தன் ஆய்வுக் கட்டுரைத் தொடரில் தெளிவுற நிறுவுவார் முனைவர் இராம.கிருட்டிணன்.

தமிழாக்கங்களை தமிழியால் ஆவணப்படுத்திய வரை, மேலே சொன்ன வடிவக் குழப்பம் பெரிதாய் யாருக்கும் தோன்றவில்லை. ஏனெனில், தமிழ்ச் சொல்லின் எழுத்து வரையறைகள் பலருக்கும் தெரிந்திருந்தன. அதாவது சொல்லின் முதலில் இந்த எழுத்துக்கள்தாம் வரலாம், சொல்லின் கடையில் இவைதாம் வரலாம். சொற்களின் இடையில் இன்னின்ன எழுத்துக்கள் இந்த வரிசையில்தாம் வரலாம் என்ற ஒழுங்குகள் இருந்ததால், மொழியறிந்தோர், இந்தக் குழப்பத்தை உணராமலே இருந்தார்கள்.

காட்டாக, இரண்டு தகரம் தமிழில் அடுத்தடுத்து வந்தால், முதல் தகரம் மெய்யெழுத்தாகவும், இரண்டாவது அகர உயிர்மெய்யாகவும் கொள்ளப் பெறும். இதே போல நகரமும், தகரமும் அடுத்தடுத்து வந்தால், நகரம் மெய்யெழுத்தாகவும், தகரம் அகர உயிர்மெய்யாகவும் படிக்கப் பெற்றது. தமிழிற் சில எழுத்துக்கூட்டுகள் அடுத்தடுத்து வரவே முடியாது. காட்டாக, டகரமும், றகரமும் சேர்ந்து வந்தால் இரண்டுமே அகரமேறிய உயிர்மெய்யாய் இருக்கலாமேயொழிய முதலெழுத்து மெய்யாகவும், இரண்டாவது அகரமேறிய உயிர்மெய்யாகவும் இருக்கமுடியாது. அதாவது தமிழில் “ட்ற” என்ற ஒலிப்பு கிடையவே கிடையாது. இதுபோலப் பல்வேறு வகையான மெய்ம்மயக்கங்கள் பற்றிய ஒழுங்கு, இருந்ததால், குழப்பமின்றித் தமிழியை வைத்துத் தமிழை எழுதுவதும், படிப்பதும் முடிந்தது.

இதே போலப் பல இடங்களில் அகர உயிர்மெய்யும், ஆகார உயிர்மெய்யும் மாறி மாறிப் புழங்கினாலும் ஒரே பொருளைக் கொடுத்தன. பின்னால் பொருள் மாறிப் போகும் இடங்களில் அகரமேறிய உயிர்மெய்யை முதலில் எழுதிப் பக்கத்தில் இன்னொரு அகர உயிரை எழுதி ஆகார உயிர்மெய்யை உணர்வித்தார்கள். தமிழிக் கல்வெட்டுக்களில் ஆகப் பழங் கல்வெட்டுக்கள் இப்படி அகரத்தைப் பக்கத்தில் எழுதியே உயிர்மெய் ஆகாரத்தை உணர்த்தின.

என்றைக்குத் தமிழி எழுத்துமுறை வடபுல மொழிகளை எழுதப் போனதோ, அன்று தான் மேலே சொன்ன குழப்பம் பூதகரமாய் உருவெடுத்தது. ஏனெனில் வடபுல மொழிகளில் எந்த உயிர்மெய்யும், இன்னொன்றுக்கு அடுத்து வரலாம். எனவே முதலில் வருவது மெய்யெழுத்தா, அகரம் ஏறிய உயிர்மெய்யா, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யா என்பதைத் தெளிவாய்க் குறியீட்டில் தெரிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னால் தமிழில் வடசொற்கள் விரவிய போது, தென்புலத்திலும் இக்குழப்பம் தென்பட்டது. [வடபுலச் சமயங்களான வேதநெறி, செயினநெறி, புத்தநெறி, மற்றும் (தென்புல நெறியானாலும் வடக்கில் பெரிதும் பரவிய) ஆசீவக நெறி ஆகியவற்றில் பயன்பாடான வடசொற்களைத் தமிழி வழி குறிப்பது கி.மு.500 களில் இருந்தே பெருகிவிட்டது.]

இகர, ஈகார, உகர, ஊகாரச் சீர்திருத்தத்தை முன்வைக்கும் பலரும், அகர, ஆகாரம், அடிப்படை மெய் வடிவங்களில் ஏற்பட்ட பழங்குழப்பங்களையும், அவற்றின் தீர்வுகளையும் உணர்வதில்லை. அதை அறிவது, மென்மேலும் சீர்திருத்தம் தேவையா, இல்லையா என்று முடிவு செய்ய வழிவகுக்கும்.

2.6.2. மூன்றுவித எழுது முறைகளும், அவற்றின் மூன்றுவிதத் தீர்வுகளும்:




படம். 9. முவ்வேறு கல்வெட்டு எழுது முறைகளும், மூன்றுவகைத் தீர்வுகளும்
மேலுள்ள படத்தில் முதல் மூன்று முறைகளில் முன்சொன்ன குழப்பம் எப்படி இருந்தது என்பதையும், கீழுள்ள மூன்றில், தீர்வுகள் எப்படிக் குழப்பத்தைத் தீர்த்தன என்பதையும் தெளிவாய் உணரலாம்.

அடிப்படை மெய்க்கு மேலே ஒட்டினாற்போலச் சிறுகோடு ஒன்றைப் போட்டு அகரமேறிய உயிர்மெய்யும், சிறுகோடு இன்றி அடிப்படை மெய்யும், அகரமேறிய உயிர்மெய்க்கு அருகில் அகர உயிரை எழுதி ஆகார ஒலிப்பும் கொள்ளப் பட்டன. [பார்க்க: மேலே முதல் முறை.] பின்னால், ஏதோ காரணம் பற்றி அகர உயிரை அருகில் எழுதுவது குறைந்து போய், சிறுகோடு போட்ட அகர உயிர்மெய்யே, ஆகார உயிர்மெய்யையும் குறித்திருக்கிறது. [பார்க்க: மேலே இரண்டாம் முறை.] மூன்றாம் முறையில் சிறுகோடு போட்ட வடிவம் ஆகாரத்தை மட்டுமே குறிக்க, அடிப்படை வடிவம் மெய்யையும், அகரமேறிய உயிர்மெய்யையும் இடம், பொருள், ஏவல் கருதிப் பலுக்குவதாய் (இது அன்றேல் அது என்பதுபோல்) அமைந்தது. [பார்க்க: மேலே மூன்றாம் முறை.]

முதற் தீர்வில், அகர உயிர்மெய்யின் சிறுகோட்டை சற்றே திசைதிருப்பிக் கோணமாக்கி, ஆகார உயிர்மெய்க்குக் குறியீடு காட்டி, அடிப்படை வடிவம் மெய்யெழுத்தையும், சிறுகோட்டோடு உள்ள வடிவம் அகர உயிர்மெய்யையும், குறித்திருக்கின்றன. இந்தக் காட்டு ஆந்திரா பட்டிப்புரோலுவில் இருந்த கல்வெட்டாகும். இம்முறையில் முந்தையக் குழப்பம் தவிர்க்கப்பட்டு புள்ளியில்லாத் தீர்வு கிடைத்திருக்கிறது. [பார்க்க. மேலே 4 ஆம் முறை]

இன்னொரு தீர்வாக, வடபுலத்துப் பெருமி (brahmi) எழுத்து முறை புறப்பட்டிருக்கிறது. [பெருமி முந்தியது, தமிழி பிந்தியது என்ற தவறான புரிதல் நெடுநாட்களாய் வரலாற்றாய்வாளரைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்பொழுதுதான் பலரும், தமிழி முந்தியது, பெருமி பிந்தியது என்ற புரிதலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.] இதில் சிறுகோடு போட்ட வடிவம் ஆகார ஒலிப்பைக் குறிக்கும். அடிப்படை உருவங்களை ஒன்றின் கீழ் மற்றொன்றாய் எழுதி மேலுள்ளதை மெய்யாய் ஒலித்துக் கீழுள்ளதை அகரமேறிய உயிர்மெய்யாக ஒலிக்கும் கூட்டெழுத்து முறை வடபுலம் எங்கும் விரிந்து பரவியது. [பார்க்க: 5 ஆம் முறை]

இறுதி 6 ஆம் முறை தமிழில் ஏற்கப்பட்டதாகும் அடிப்படை உருவத்திற்குப் புள்ளியிட்டு மெய்யாகவும், அடிப்படை உருவத்தோடு சிறுகோடு இட்டு ஆகாரமாகவும், அடிப்படை உருவம் அகரமாயும் ஒலிக்கப்பட்டன. ஆனாலும் மொழியிலக்கணங்களில் எழுத்தின் அடிப்படை மெய்யெழுத்தென்றே சொல்லி வந்தார்கள். அகரமேறிய மெய் எனச் சொல்லவில்லை. இந்த முறை தொல்காப்பியர் காலத்தில் பரிந்துரைக்கப்பட்டு, அவரால் ஆவணப்படுத்தப்பட்ட முறையோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. [பார்க்க: 6 ஆம் முறை] ஆக முதன்முதலில் எழுந்த தமிழியில் புள்ளியிட்ட மெய்கள் எழவேயில்லை, புள்ளி ஒரு தீர்வாகப் புழக்கத்திற்கு வந்தது தொல்காப்பியர் காலத்தில் தான். [“தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - 6”(7)]


(நன்றி: தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - முனைவர் இராம.கி
http://valavu.blogspot.com/2006/11/5.html
http://valavu.blogspot.com/2006/11/6.html


http://valavu.blogspot.com/2006/12/7.html


இக்கருவூலம் ஊன்றிப் படிக்க வேண்டியது )



2.6.3. மற்ற உயிர்மெய்களும், சிறப்பாக உகர, ஊகாரக் குறியீடுகளும்:


இனி மற்ற உயிர்மெய்களுக்கு வந்தால், ஒன்றோ, இரண்டோ சிறுகோடுகளை அடிப்படை மெய்யெழுத்தின் மேலும், கீழும், இடத்திலும், வலத்திலும், இட்டுப் பல்வேறு உயிர்ப்புகளை நம் முன்னோர் காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் கால், கொக்கி, சுழிக்கொக்கி, உகர, ஊகாரக் குறியீடுகள், கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, சிறகு போன்றவை பழந் தமிழி எழுத்தில் கிடையவே கிடையாது. இவையெல்லாம் 2000 ஆண்டுப் புழக்கத்தில் சிறுகோடுகளின் வெவ்வேறு திரிவுகளால் ஏற்பட்டவையாகும்.

ஓலையில் இருந்து தாளிற்கு மாறி, பின் அச்சிற்கு மாறி, இப்பொழுது கணிக்கு மாறிய நிலையில், மாற்றத்துக்குத் தக்கபடி எழுத்து வடிவத்தை மாற்ற வேண்டும் என்று சிலர் உரைக்கின்றனர். இன்றைக்கு 7 விதமாய்த் தெரியும் உகர, ஊகாரக் குறியீடுகள் அந்தக் காலத்தில் அடிப்படை எழுத்தில் கீழே ஒற்றைச் சிறுகோடு, அல்லது இரட்டைச் சிறுகோடாகவே இருந்திருக்கின்றன. காலவோட்டத்தில் 2 குறியீடுகள் 7 குறியீடுகளாய்ப் பெருகியிருக்கின்றன. [சீர்மை வேண்டுவோர் இன்று சொல்லுவது ”இரண்டாயிரம் ஆண்டு வளர்ச்சியை இனி மறந்து விடுவோம்”; மறந்துவிட்டு 7 இல் இருந்து மீண்டும் 2 _ இற்குப் போவாதாகப் பரிந்துரைப்பது தான்.]

ஆனால், விதயம் அவ்வளவு எளிதில்லை. 7 குறியீடுகள் என்பது ஒரு கணியைப் பொருத்தவரை கணித்திரைத் தோற்றம். இரண்டு குறியீடுகள் என்பதும் கணித்திரைத் தோற்றம் தான். கணியிற் செயல் நடப்பதற்கு மூன்று படிமுறைகள் உண்டு. ஒன்று உள்ளீடு (inputting), இரண்டாவது செயற்பாடும் (processing), சேமித்தலும் (storing), மூன்றாவது வெளிப்படுத்தல் (outputting); வெளியீடு என்பது கணித்திரையிலோ (monitor), அச்சியிலோ (printer), நெகிழ்தகட்டிலோ (floppy disc) அல்லது வேறு ஏதேனும் ஒன்றிலோ நடக்கவேண்டும்.)

2.6.4. கணிச்செயல்பாடும், வெளியீட்டுக் கணிநிரல்களும்:

உள்ளிடும் போது ஒவ்வோர் உயிர்மெய்யும் இரட்டைப் பொத்தான் அழுத்தம் பெற்று உள்ளே செல்கிறது. முதலில் மெய்யும், அடுத்து உயிரும் சேர்ந்து உள்ளிடப்படுகின்றன. இரண்டிரண்டு பொத்தான் அழுத்தங்களாய், உயிர்மெய்யைக் கணி அடையாளம் கண்டுகொள்கிறது. அதையே தன் நினைவகங்களில் சேமித்துக் கொள்கிறது. பின்னால் செயலிகளையும் இயக்குகிறது. முடிவில் தன் கணிப்பை நாம் சொல்லும் முறையில் வெளிப்படுத்துகிறது.

இந்த வெளிப்படுத்தல் வினையில் உகர, ஊகாரங்களுக்கு 2 குறியீடுகள் பயன்படுத்தினால் என்ன? 7 குறியீடுகள் பயன்படுத்தினால் என்ன? நாம் சொல்லுவதைக் கணி செய்யப் போகிறது. மைக்ரோசாவ்ட் “விண்டோசு” இயக்கத்தில் எழுத்துக்களை வெளிப்படுத்துவதற்கென்றே ”Uniscribe” என்ற Rendering engine (ஒரு கணிநிரல்) இருக்கிறது. மற்ற நிறுவனங்களின் இயக்கச் சட்டகங்களிலும் (operating systems) இதைப் போன்ற ஒரு கணிநிரல் இருக்கிறது. இப்படியான நிரல்கள் மிக சக்தி வாய்ந்தன. கடினமான எழுத்துக்களை திரையிலும் அச்சியிலும் தெரிவிப்பதற்குப் பல உத்திகளை அவை வைத்துள்ளன. Pre-base substitution, Below-base Substituion, Above-base substitution, Post-base subsrtitution உள்ளிட்ட பல உத்திகளைத் தன்னுள் கொண்டுள்ளன. அதாவது, ஒரு அடிப்படை மெய் அல்லது அகரமெய்யின் வடிவை அப்படியே போட்டு, பிற உயிர்மெய்களைக் குறிக்க சில குறியீடுகளை முன்னொட்டி அல்லது பின்னொட்டி அல்லது மேலொட்டி அல்லது கீழொட்டித் தருவதை கணிநிரல்கள் செவ்வனே செய்கின்றன. அந்த நிரல்களுக்கு “கு” எழுத்தைக் காட்ட ககரத்திற்குக் கீழ் சுற்றுக் குறியீடு போடு (Below-base Substitutiuon feature of Uniscribe) என்றால் போட்டுக் காண்பிக்கும். அதே போல சீர்மையை முன்வைப்பவர்கள் சொல்லும் குறியீட்டை ககரத்திற்குப் பின்னால் ஒட்டி விடு என்றால் அதனைச் செய்து நமக்குக் காட்டும் (Post-base Substitution feature of Uniscribe). இப்படி தேவையான எல்லா வல்லமைகளையும் யுனிகிரைப் போன்ற நிரல்கள் கொண்டிருக்கையில் சீர்மை முன் வைப்பாளர்கள் ஏதோ “கணிக்கு ஏற்றார் போல மாற்ற வேண்டும்” என்று சொல்வதும் “கணிக்கு நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும்” என்று பரப்புரை செய்வதும் பிழையான ஒன்றாகும். சீர்மை முன் வைப்புகளில் கண்டபடி தமிழி எழுத்துக்களை மாற்றினால் கணிக்கும் பயனில்லை அதன் பயனருக்கும் பயனில்லை. பிறகு எதற்கு இந்தச் சீர்மை?

யுனிகிரைப் போன்ற நிரல்களில், இல்லாத குறைகளை இருப்பதாகச் சொல்லி, அவற்றைச் சரிசெய்ய சீர்மை அவசியம் என்று பரப்புரை செய்து, 9 கோடி மக்களின் எழுத்தைச் சீர்திருத்தப் போகிறோம் என்று முன்னெடுப்பது முற்றிலும் வேடிக்கையாய் இருக்கிறது. ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்று அறிஞர்கள் சற்று ஓர்ந்து பார்க்க வேண்டும்.

அச்சுக் கோர்த்த காலத்தில் பழைய ”ணை, லை” வார்ப்புக் கட்டைகள் தேய்ந்து போகின்றன, முனை உடைந்து போகின்றன, என்று சொல்லி, இருக்கும் வார்ப்புக் கட்டைகளை வைத்தே ஒரு சில எழுத்துக்களைக் கோர்க்கலாமே என்று பெரியார் சீர்திருத்தம் செய்ததில் ஒரு சிறு ஏரணம் இருந்தது.

இன்றோ, எந்த வடிவங்களையும் பிணைத்துக் காட்டும் வல்லமை படைத்த Uniscribe என்னும் கணிநிரல் இருக்கிறபோது, ஏன் குழப்பம்? 7 உகர, ஊகாரக் குறியீடுகளை 2 குறியீடுகளாய்த் தமிழில் குறைத்துத் தாருங்கள் என்று மைக்ரோசவ்ட் நிறுவனம் கேட்டதா, என்ன? அல்லது மற்ற நிறுவனங்கள் தாம் கேட்டனவா? தமிழியில் என்ன எழுத்துக்கள் இருக்கின்றனவோ அதை வைத்துச் செயலாக்கம் செய்ய கணிநிறுவனங்கள் அணியமாகத் தானே இருக்கின்றன? அப்புறம் என்ன தேவையில்லாத சீர்திருத்தம்? வடிவ மாற்றம்? கணியில் தற்போதும் புழக்கத்தில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகாரக் குறியீடுகளை மாற்றுவதால், கணியைச் செயற்படவைக்கும் நிரல்களுக்கும், கணியைப் பயன்படுத்துபவருக்கும் என்ன பயன் விளையும்? இதில் எங்கே ஏரணம் இருக்கிறது?

அச்சுக் கோர்ப்புக் காலத்தில் சரவலாக இருந்த லை, னை யின் பழைய எழுத்துக்கள், அச்சு இயந்திரங்கள் கணியோடு இணைக்கப் பட்டு நுட்பியல் முதிர்ந்த இந்தக் காலத்தில் எந்த வகையிலும் சரவலாக இருப்பதில்லை என்பதும், 1978ல் கணி இருந்திருந்தால் பெரியார் சீர்திருத்தத்தைக் கூட நடைமுறைப் படுத்தியிருக்கத் தேவையில்லை என்ற கருத்தும் பலராலும் இன்று உணரப்படுகிறது.

ஆகவே, கணியைக் காரணம் காட்டி, கணியோடு இணைந்த வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு தமிழி எழுத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கூற முடியாது. கணி திறன்பட தமிழை ஏற்றிக் கொள்கிறது. கணிக்காக தமிழை எள்முனையளவும் மாற்ற வேண்டியதே இல்லை.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html


பகுதி-2:http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-: http://nayanam.blogspot.com/2010/02/5.html
அன்புடன்
நாக.இளங்கோவன்

3 comments:

Indian said...

// இப்படி தேவையான எல்லா வல்லமைகளையும் யுனிகிரைப் போன்ற நிரல்கள் கொண்டிருக்கையில் சீர்மை முன் வைப்பாளர்கள் ஏதோ “கணிக்கு ஏற்றார் போல மாற்ற வேண்டும்” என்று சொல்வதும் “கணிக்கு நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும்” என்று பரப்புரை செய்வதும் பிழையான ஒன்றாகும். சீர்மை முன் வைப்புகளில் கண்டபடி தமிழி எழுத்துக்களை மாற்றினால் கணிக்கும் பயனில்லை அதன் பயனருக்கும் பயனில்லை. பிறகு எதற்கு இந்தச் சீர்மை?

யுனிகிரைப் போன்ற நிரல்களில், இல்லாத குறைகளை இருப்பதாகச் சொல்லி, அவற்றைச் சரிசெய்ய சீர்மை அவசியம் என்று பரப்புரை செய்து, 9 கோடி மக்களின் எழுத்தைச் சீர்திருத்தப் போகிறோம் என்று முன்னெடுப்பது முற்றிலும் வேடிக்கையாய் இருக்கிறது. ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்று அறிஞர்கள் சற்று ஓர்ந்து பார்க்க வேண்டும்.//

சரியான காரணம்.

nayanan said...

இந்தியர் அவர்களே வருக.
கருத்து கண்டு மகிழ்ச்சி. நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

. ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்று அறிஞர்கள் சற்று ஓர்ந்து பார்க்க வேண்டும்
...
சரியாகச் சொன்னீர்கள் . . . : )



வணக்கம்
தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத ஒரு புதிய வழி ! இலகுவான வழி !! உண்மையான தமிழ் வழி...!!!

இதோ . . . இங்கே போய் பாருங்கோ . . . !! : )
http://kilikeluthi.free.fr/

...