Pages

Friday, December 18, 2015

தமிழோற்பலம்::மடல் 2 - ஏல் ஓர் எம்பாவாய்!

மார்கழி மாதம். வருடமுழுதும் வெய்யில், மழை என பருவங்கள்
வேறுபட்டு வருகையில், பனிக்காலத்தின் தொடக்கமான மார்கழி
மனதுக்கும் உடலுக்கும் இனிமையான மாதம் என்பது
இந்நிலவமைப்பின் இயல்பு.

ஆண்டுமுழுதும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்,
நோன்புகள் எனப்பல கொண்டாட்டங்களையும் சிறப்புகளையும் கொண்ட
குமுகம்தான் தமிழ்க்குமுகமும். அது, பத்திக்கென்று ஒதுக்கிக்கொண்
ஒருதிங்கள் மார்கழி.தமிழ்ச்சைவமும் தமிழ்வைணவமும் கொஞ்சிமகிழும்
மாதம் மார்கழி.

பத்தி எனும்போது, இல்லத்தில் வழிபாடும், கோயிலுக்குச்சென்று
இறைதெரிசன வழிபாடும் செய்வதுமே பொதுமக்களின் மரபு.

கோயிலுக்குச்சென்று செய்யும் வழிபாடுகளில், தொலைவில் இருக்கும்
கோயில்களுக்குச்செல்வதற்கு மார்கழி மாதமும், தைமாதமும்தான்
மிக உகந்த மாதங்கள். மெல்லிய இதமான குளிரடிக்கும்
இரவுகளும், உடலை வருத்தாத வெயிலடிக்கும் பகல்களும் மார்கழியில்
தொடங்குகின்றன.

இன்றைய போக்குவரத்து வளர்ச்சியில், தமிழ்நாட்டின் எந்த ஓரிடத்திற்கும்
ஒருபகற்பொழுது அல்லது இரவுப்பொழுதில் சென்றுவிடலாம். ஆனால்
பழையகாலங்களில் அப்படியில்லை. நடைப்பயணமாகவும்,
மாட்டுவண்டிப்பயணமாகவும் சில நாள்களேனும் பயணிக்கவேண்டும்.
சென்னையிலிருந்து பழனி செல்லவேண்டுமானால்,
திருச்செந்தூர் செல்லவேண்டுமானால், அல்லது அங்கிருந்து திருமலைக்கோ
காளத்திக்கோ,தணிகைமலைக்கோ வரவேண்டுமானால் ஒருவார பயணமாகிவிடும்.
ஆக, நெடுந்தொலைவு செல்லும் திருத்தலப்பயணத்திற்கு உகந்த மாதம்
மார்கழியில் தொடங்குகிறது. மாசியிலும் பங்குனியிலும் சிறிது தொடர்கிறது.

ஆகவேதான் இயல்பாகவே மார்கழி சிறப்புப்பெற்று பத்திமாதமாகிவிடுகிறது.
இன்றைக்கும் சபரிமலை செல்பவர்கள் மார்கழி,தையில்தான் நோன்பிருக்கிறார்கள்.
தைப்பூச விழாவுக்கு முருகனைக்காண தைமாதத்தில்தான் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வடக்கேயும் மார்கழிக்கு
மார்கசீசம் என்றும், தையிற்கு தைசம் என்றும் வடமொழிப்பெயர்கள் உண்டு. இந்தமாதங்களைதான் அவர்களும் திருத்தலப்பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக கருதுவதை அருத்தசாற்றத்தில் காணமுடிகிறது. அவர்களின் மார்கழியும் தையும் சிலநாள்களின் முன்னரே தொடங்கிவிடும். பத்திக்காலத்துக்கும் பருவகாலத்துக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது. கயிலாயப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அக்தோபர் முதல் மார்ச்சு மாதம்வரை
பயணம் போவதில்லை. மழை, பனிக்கடுமைகளை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, பருவகாலம்தான் மார்கழியின் சிறப்பா? அல்ல.

"இறைவனை அண்டும் ஓர் ஆன்மா, இறையின் அருமையை துய்ப்பதற்கு
இன்னொரு ஆன்மாவையும் தூண்டி தன்னோடு இறைவனைக்காண
கூட்டணி கொள்ளும் அருமையான மாதம்தான் மார்கழி". இதுதான் அதன் சிறப்பு.
இதனாலேயே மார்கழி சிறப்புப்பெறுகிறது.

ஆமாம் - மனிதகுலம், தான் இன்பமாகக்கருதுவதை தன்னோடு சேர்ந்து
பிறரும் துயக்கவேண்டி ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டுறவே மார்கழி நோன்பு.

தமிழ்ச்சிவநெறி தமிழ்க்குமுகத்தை சாதிவேறுபாடின்றி ஏற்றத்தாழ்வின்றி
கட்டியமைக்க முற்பட்டதன் பதிவுகள்தான் மார்கழிப்பத்திமை.

வைதீக நெறியைப்போல சனாதன,வருணாசிரம கருத்துகளால் இறைவழிபாட்டில்
தீண்டாமையை நுழைக்கவில்லை. வைதீகம் ஒரேக்குமுக மக்களில் ஒருபகுதியை
கோயிலுக்குள்ளே வராதே என்றது. தமிழ்ச்சிவ நெறியோ அனைவரையும்
வா வா என்றது. வந்தவர்களை கைகூப்பி அடியாராக அணைத்துக்கொண்டது.
வைதீக நெறியின் ஊடாட்டத்தால் சிவநெறியினர் சிலபல வேளைகளில்
தவறுகளைச்செய்திருக்கிறார்களன்றி, "தமிழ்ச்சிவ நெறியில்" பிழையில்லை. 

தமிழ்ச்சிவநெறியில் "அடியார்க்கூட்டு","அடியார்க்குத்தொண்டு" என்பதற்கு உயர்ந்த மதிப்புண்டு. இதில் உணரவேண்டிய ஒன்றே ஒன்று - "அடியாரும் மக்களும்" வேறு வேறு அல்ல என்பதுதான். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் பாடியதெல்லாம் இறையடியாரை ஒன்று சேர்த்து சிறந்த குகத்தை கட்டியமைக்க வேண்டித்தான்.

மார்கழியில் நாம் பாடுகின்ற திரு எம்பாவையை மாணிக்கவாசகர் அருளியது அதற்காகத்தான்.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக்கேட்டேயும்,

வாள் தடங்கண் மாதே, வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்! கிடந்தாள்! என்னே! என்னே!!

ஈதே எந்தோழி பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்!

"....திருவெம்பாவை-1

பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் ஏது? அடியையும்
முடியையும் அறியமுடியாத நீள் நெடுஞ்சோதியாய் இவ்வுலகினரின்
அகத்துக்கும் புறத்துக்கும் ஒளியாய்த்திகழும் ஈசனை, போற்றி, நாங்களெல்லாம்
பாடி மகிழ்ந்து வருகையிலேயும், மாதே, உன் மனத்தின் உறக்கம் இன்னும்
கலையாமலிருப்பது என்ன விந்தையோ? இறைவன் என்ற உண்மையையும்
உன் செவிக்கு எட்டவிடாமல் உன்னை அழுத்தியிருக்கும் மாயை என்னவோ?

ஆங்கோர் வீதியில், எமது போற்றிகளோடும் புகழ்ச்சிகளோடும், நாங்கள்
நுழைகையிலேயே, அங்கொருத்தியின் கண் மட்டுமல்ல, உள்ளமும்
ஒருங்கே விழித்துக்கொண்ட வேகத்தை எப்படி எம்மால் விவரிக்கமுடியும்?
உள்ளம் விழித்துக்கொண்டதும், அவளின் நெஞ்சில் நிறைந்த சிவனன்பு,
விழித்த கண்களில் நீராய் ததும்பியதோடு, அன்பின் மிகையால்
தொண்டையையும் அடைத்ததோ அறியோம் - ஆனால் அவள் கண்களிலும்
நெஞ்சிலும், கம்மிய குரலிலும்  சிவமே நிறைந்திருக்க, என்ன செய்கிறோம்
என்று தெரியாமலேயே புரண்டு கீழே விழுந்தாள்.விழுந்தாளெனினும், அதுவும் அவளிடமிருந்து சிவத்தை கலைக்க முடியவில்லை.

தன்னை அண்டினோரை அன்பில் கரைத்து ஆட்கொண்டுவிடுவான்  இறைன். இது அவன் தன்மை. அப்படியிருக்க, அவனை அண்டாமல் உன்னைத்தடுக்கும் மாயை என்னவென்று யாமறியோம்?

அவன் கழல்களையும் கருணையையும் ஆழ்ந்து சிந்தித்துப்பார் என் தோழி!
அம் மாமாயையில் இருந்து விடுபட்டு நீ எழுந்தோடி வந்துவிடுவாய் என் தோழி!! நாமனைவரும் ஒன்றாகிவிடுவோம் என் தோழி!!

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும்
மற்றொரு ஆன்மாவை அன்போடு தூண்டி ஈர்த்துக்கொள்ளும் குமுக
ஒற்றுமைப்பாட்டு இஃது. இறையை முன்வைத்து குமுகத்தை கட்டியெழுப்பும்
பெருநெறியாகுமிது. குலதெய்வ வழிபாடுகள் உறவுகளை உறவுசேர்க்கிறது;
சைவப்பெருநெறி குமுக மக்கள் யாவரையும் உறவு சேர்க்கிறது.

சமயநெறிகள் மக்களை  வேறுபாடின்றி வா வா என்று அழைக்கும்போது, ஒற்றுமை பெருகி ஏற்றத்தாழ்வு குறைகிறது. வாசலிலேயே நில், உள்ளே வராதே என்றபோது குமுகம் பாழ்பட்டுப்போனது.

திருவெம்பாவையின் முதற்பாடலே மனதைக்கரைத்துவிடுகின்றது. சாமிப்பாட்டு
சாமிப்பாட்டு என்றளவிலேயே பலரும் புரிந்து கொள்கின்ற திருவாசகப்பாடல்கள்
ஆழ்ந்த அகப்பாடல்கள்.அந்த அகத்தின் அளவிற்கும் அடியுமில்லை முடியுமில்லை.

குறிப்பு: ஏல் = மீள்தல், (Reviving from a state)
                ஓர் = சிந்தி, ஆய், ஆராய்
 அன்புடன்
நாக.இளங்கோவன்
19/12/2015

No comments: