Pages

Thursday, March 04, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12

3 எழுத்துவடிவ மாற்றத்தின் பின்விளைவுகள்

1) 20 ஆம் நூற்றாண்டின் துவக்கில் தமிழரில் படிப்போர் தொகை 2 விழுக்காடு அளவிலேயே இருந்த நிலை, 21ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் ஏறத்தாழ 80 விழுக்காடாகியிருக்கிறது. தமிழ்மக்கள் தொகையும் பெருகியிருக்கிறது. ஆகவே மொழியின் பயன்பாடும் கடலெனப் பெருகி இருக்கிறது. அதில் 59 விழுக்காட்டுச் சொற்களை மாற்றினால் குழப்பம் பெருகி தமிழ் மொழியின் தரமும், வளர்ச்சியும் குன்றிப்போகும்.

2) இந்த மாற்றத்தைக் கற்பிக்கப் போகும் ஆசிரியர்களுக்குக் கற்பித்தலே மிகப் பெரிய இடையூறாகும். கொடுமுடியாரே, தனது நண்பரான கவிஞருக்கு இம்மாற்றம் பிடிபடவில்லை என்று எழுதியிருக்கிறார். பின்னை எங்ஙனம் ஆசிரியர்கள் தரமாக மாணாக்கருக்கு எடுத்துச் செல்வர்? அஃதன்றி, தற்போது 50 நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களுக்கெல்லாம் தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு இந்தளவு மாற்றத்தினை எங்ஙனம் கற்பிப்பது? தமிழ்நாட்டில் மட்டும் ஆசிரியருக்குக் கற்பித்தால் போதுமா? வளமான தமிழ்கற்பித்தலுக்கு வழிகுறைந்த வேளையிலே இம்மாற்றம் உலகளாவினால் தமிழ் குன்றிப்போகும் அன்றி பெருகாது.

3) “மாற்றம் என்பதே மாறாதது” என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், எவ்வகைப் பலனையும் தர வாய்ப்பில்லாத இந்த எழுத்துவடிவ மாற்றத்தினால் பயனில்லை. மாற்றம் என்பது வலிந்து திணிப்பதாய் இருக்கக்கூடாது. அஃது தாய்மொழி வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

4) தாய்மொழி எழுத்துகளைப் பிற நாடுகளில், பிற மாநிலங்களில் மாற்றியிருக்கிறார்கள் என்ற காரணத்தால் நாமும் செய்யலாம் என்பது பிழையான பார்வை. சீன, யப்பானிய எழுத்துச் சீரமைப்புகளை இம்மாற்றத்தோடு ஒப்பிடவே முடியாது. சீனம் பெருநாடாக 100 கோடி மக்களோடு கட்டி எழுப்பப்பட்ட முறையும் காலமும் அங்கே நிகழ்ந்த குமுக மாற்றத்தோடு ஒட்டி எழுந்த எழுத்துச் சீரமைப்பை, அப்படியே தமிழிற் செய்யவேண்டிய தேவை இல்லவேயில்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ள சீன மொழியை, 247 எழுத்துகளைக் கொண்ட தமிழோடு பொருத்திப் பார்த்துச் செயற்படுவது தவறு. அதே நேரத்தில், சீனா செய்த முதற்சீரமைப்புக்குப் பின், கொஞ்ச காலம் கழிந்து, மீண்டும் இன்னொரு சீரமைப்பை சீர்மையாளர் முன்வைத்த போது சீன அரசு தயங்கியதை நினைவு கொள்ளவேண்டும்.
முதல் சீரமைப்பைத் தீவிரமாக நடைப்படுத்தி வெற்றிகண்ட சீன அரசு, இரண்டாம் சீரமைப்பை ஏற்காது, “மொழி விதயத்தில் எச்சரிக்கை” என்றே முடிவெடுத்தது. அதாவது மாற்றம் நாடும் பொதுவுடைமைச் சீனம் கூட, ”எடுத்ததையெல்லாம் மாற்ற ஓடவில்லை.” ”தேவையானால் மாற்றம். இல்லையேல் வலிந்து திணிக்க மாட்டோம்” என்பதை சீனா உணர்ந்திருந்தது.

5) ”உலகம், அறிவியல், கணி, குழந்தை” என்ற கோணங்களில் எழுத்து மாற்றத்தை தமிழிக்குள் வலிந்து ஒருசிலர் திணிப்பது பொருத்தமேயல்ல, அது மிகையாய்ச் செயற்படுதலாகும் (Over enthusiastic).
பெரியாரைக் காட்டி வடிவமாற்றம் செய்யாமல், சீன அரசின் நிதானத்தைப் பின்பற்றி மாற்றத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமேயன்றி, சீனாவை மேற்கோள்காட்டி இதை இன்னும் மேலெடுப்பது ஆபத்தாகும்.

6) மலையாள மொழி ஒரு தமிழிய மொழிதான். நமக்கும் அவர்களுக்கும் உறவு உள்ளது தான். ஆனாலும், அங்கு உள்ள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களின் வழிப்பட்டவை. கிரந்தத்தின் அடிப்படை பெருமி எழுத்தைச் சார்ந்ததாகும். அங்கு நடந்த மாற்றம் அப்படியே தமிழுக்கு கைக்கொள்ளத் தகுந்ததன்று. அதோடு அங்கு எழுத்துமாற்றம் வந்தது நமக்குப் பெரியார் சீர்திருத்தம் ஏற்பட்டது போல், கணிநுட்பம் இல்லாத காலத்தில் ஆகும். இப்பொழுதோ, எதையும் செய்யக் கூடிய கணிநுட்பம் பழகும் காலத்தில் மலையாளச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் கொள்ளுவது சரியல்ல. தேவையான பொழுது மலையாள, வடமொழிகள் பால் பிணக்குச் சேர்ப்பதும், பின்னர் அவற்றை முன்மாதிரியாய் தமிழுலகம் எடுத்துக் கொள்வதும் தமிழருக்குப் பெருமை சேர்ப்பனவல்ல.

7) இம்மாற்றத்தினால் தாக்கமுறுவது ”மொழியியல், தமிழில் இருக்கும் அறிவியல் நூல்கள், படிப்பு, செய்தி ஏடுகள், இதழ்கள்” ஆகிய பல்வேறு துறைகள் ஆகும்., தவிர,
ஈழம், சிங்கை, மலேசியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களும் அலைபட்டுப் போவார்கள். காட்டாக, சிங்கப்பூரின் நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ்ச்சொல்/எழுத்தின் வடிவம் மாற்ற வேண்டியிருக்கும்..

8) அறிவியல், நுட்பியல் வளர்ச்சிக்கு இப்பொழுது முன்வைக்கும் எழுத்து வடிவ மாற்றம் உதவும் என்பது நகைப்புக்குரியதாகும். அறிவியலும், நுட்பியலும் தமிழில் சொல்லித்தரும் கல்வித் திட்டம் இன்று இல்லை. அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கற்பவர்களின் நூல்களைத் தவிர அறிவியற் கல்லூரிகளிலோ, ஆய்வுப் படிப்புகளிலோ, நுட்பியல், பொறியியற் படிப்புகளிலோ, அவற்றைப் படித்துப் பணிசெய்யும் தொழிலகங்கள், ஆய்வுக் கூடங்கள், வங்கிகள், நிதித்துறைகள், சொவ்வறைக்கூடங்கள், கணிச்சாலைகள் என எவற்றிலுமோ, தமிழ் இன்று இல்லை. தமிழில் நிறுவன நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பும் திட்டமும் கூட தமிழ்நாட்டில் இல்லை. இல்லாத ஒன்றை வளர்க்க எழுத்துவடிவ மாற்றம் தேவை என்பது, “ஆளே இல்லாத் தேனீர்க்கடையில் யாருக்கு தேனீர் ஆற்றுகிறோம்?” என்று ஒரு திரைப்படத்தில் வரும் நகையாடலையே நினைவூட்டுகிறது.

9) சிலர் இணைய வளர்ச்சி பெருகிவருகிறது, எனவே எழுத்துமாற்றம் தேவை என்பர். இதுவும் ஒரு வெற்றுவாதமாகும். இணையத்தை வளர்க்கும் நுட்பங்கள், முழுக்க முழுக்க பிற நாட்டினர் உருவாக்கியதாகும். தமிழ் மொழிக்கு என்று ஒருசிலர் உருவாக்கிய எழுத்துருக்கள், உள்ளீட்டு நிரல்கள், திரட்டிச் செயற்பாடுகள் தவிர, இணையத்தைச் செவ்வனே பயன்படுத்தும் சில படியாக்கச் சொவ்வறைகளைத் (application softwares) தவிர இணைய நுட்ப வளர்ச்சியில் யாரும் தமிழ்வழி செயலாற்றவில்லை. எழுத்துருவாக்கம், அதையொட்டிய சொவ்வறைகள், வெறும் 50 வெள்ளிச் செலவில் இணையத்தில் பல நூறுகள் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோர் எல்லாம் நம்மைப் போன்றோரே,
வெறுமே வலைப் பக்கங்களையும், இணைய தளங்களையும் உருவாக்கிவிட்டு, அவற்றில் கதை, கவிதை, துணுக்குகள், செய்திகள், திரைப்படக் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றிவிடுவதால் தமிழிணையம் என்பது ”ஏதோவொரு மாபெரும் தமிழறிவியல்” என்று கருதுதலும், தமிழால் உருவாக்கப் பட்டது என்று சொல்லிக் கொள்ளுதலும் பிழையான கருத்தாக்கமாகும்.. எழுத்து மாற்றம் பெற்றால் இணையத்தில் தமிழ் எங்கோ போய்விடும் என்பது நாமே நம் காதில் பூச்சுற்றுவதாகும்।

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html
பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

1 comment:

Indian said...

நூற்றுக்கு நூறு உண்மை.
இந்த வேண்டாத வேலைக்கு பதிலாக பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்குவதிலும், ஒருங்கு குறியை சீர்படுத்துவதிலும் தமிழக அரசு தன் நேரத்தைச் செலவிடலாம்.