Pages

Saturday, July 08, 2006

இரட்டை மரணங்கள்!

மெல்லக் குனிகிறேன்.
என் கரங்கள் அவிழ்ந்து மண்ணை மிதிக்கின்றன.
பத்து விரல்களும் பக்கங்களில் விரிகின்றன.
அங்கை அவ்வளவாக அழுத்தவில்லை.
அதனால்தானோ என்னவோ சிறு மணல்களும் மெல்லியதாய்
குறுகுறுக்கக் கீறிவிடுகின்றன என் அங்கைகளை.
அங்கைக்கு அரணாக விரல் மேடுகள் இருப்பினும்,
இந்தச் சின்னஞ்சிறு மணல்கள் என்னைச் சீண்டித்தான் பார்க்கின்றன.

அங்கையின் அணைப்பிலே வாளையும் வேலையும்,
ஏன் குண்டுகளையும் வீச முடியும்!

கோழியின் குரல்வளையையும்,
போரிலே பகையின் குரல்வளையையும்
என் அங்கையின் அணைப்பிலேயே அற்றுவிடமுடியும்.

ஆனால் அந்தச் சின்னஞ்சிறு மணலை
என் அங்கையால் என்ன செய்து விட முடியும்?
எண்ணிப் பார்க்கையில் துக்கு மணல்
சற்று வெட்கநகைகலந்த சினத்தை அளித்து என்னை அதற்கு

இளையவனாக்கிவிட்டது!

ஒற்றைக் கல்லெடுத்து என்னால்
ஒரு மைலுக்கு வீசமுடியும்!

ஆனால் ஒற்றை மணல் எடுத்து வீச முடியுமா?
சிரிக்கிறேன்.

குண்டுக்கல்லைத் தூக்கி எறிந்து
ஒலிம்பிக் போட்டியில் ஆடுகின்றனர்.

ஒற்றை மணல் வீசும் போட்டி வைத்தால்
அது எப்படி இருக்கும் என்ற சிந்தனை
சில நொடித்துகள்களில் வந்து விட்டு
வணக்கம் சொல்லிச் சென்று விட்டது.

கைகளின் அணைவோடு தற்போது
என் உச்சி மண்ணை உரசுகிறது.

புழுதி என் மயிர்களின் முடிகளிலும்
நடுவுகளிலும் ஒட்டியிருக்கும் இந்நேரம்.
மனிதர் கூட்டத்திற்கு மயிர் என்றால் கோவம் வரும்.

முடியென்றால் உச்சி என்பார்.
தலையென்றாø உச்சி என்பார்.
ஆனால் வளர்ந்து விட்ட மயிரை வெட்டும்போது
முடியை வெட்டுகிறேன் என்பார்!

மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு!
அதை அசட்டையில் மறந்து விட்டு
மனித முடியையும் மயிரின் முடியையும் ஒன்றென்பார்!

மயிரின் அடியில் மனிதரின் முடி முடிகிறதா?
அல்லது மனித முடியில் மயிரின் முடியும் அடங்குகிறதா?
இந்த மயிரளவு மொழி எனக்கு விளங்கவில்லை.

மனிதர் தற்போது Hair dress பண்ணிக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.
சிலர் முடி திருத்துவார்களாம்.
மூளைக்குள் கையை விட்டுத் துழாவி கசடையெல்லாம்
வழித்து எறிந்து விட்டு மூடிவிடுகிறார்களா என்ன?

மயிரைச் சுருட்டி மடக்கி அறுத்துப் போடுவதற்கு
முடிதிருத்தம் என்று பெயராம்.

என் அண்டை வீட்டு அனல்மங்கை,
அவளின் அக்காளின் மயிரை அறுப்பேன் என்று
அடிக்கடிச் சண்டை போடுவாள்!

அடுத்த தெருவில் நான் நின்று கொண்டிருந்தாலும் காதில் விழும்
இந்தக் குரலின் போது ஏன் இவள் முடியை அறுப்பேன் என்று

சொல்வதில்லை என்று எண்ணிக் குழம்பிப் போய்விடுவேன்.

குழப்பம்தான் மிச்சம்.
குழப்பத்திலேயே, மேலும் அழுந்த என் மயிரின் அடியில்
சற்று வலிக்கிறது. மயிர்கள் மண்ணில் அழுந்தும்போது
வலிக்கவில்லை. இப்பொழுது வலிக்கிறது.

தற்போது கால்களை மெல்லத் தூக்குகின்றேன்.
அவை மேல் உயருகின்றன;
தலையிலும், கைகளிலும் அழுத்தம் அதிகமாகிறது.
"வலிக்கிறது ஆயினும், அது வலிக்கவில்லை";
பழக்கம் காரணமாக இருக்கக் கூடும்.
சற்றே நடுக்கம்.
கால்கள் கீழே வந்து விடும்படியான சின்னதொரு நடுக்கம்.
சமாளிக்கிறேன்.
மீண்டும் ஒரு சமாளிப்பு;
தற்போது நட்டமாக ஆனால் முடிகீழும், அடிகள் மேலுமாய் நான்.
மிக மெல்லிய சமாளிப்புடன் அமைதியாக!
மெல்லக் கால்களை விரிக்கிறேன், இரண்டு கிளைகளைப் போல!

என் மனதிலே அசைவில்லை.
உடலில் அசைவு மிகக் குறைவு. மெல்லிய நகை என் இதழ்களில்.

ஒரடி ஆழத்தில், மூவடிச் சதுரக்குழி.
இன்னும் சில மணித்துகள்களில் எல்லாம் மாறிவிடும்.
இதழ்களில் தவழும் இகழ்நகை இப்போது!

ஆண் ஆணாக மாறாத உலகத்தில்,
பெண் பெண்ணாக மாறாத உலகத்தில்,
ஆண் பெண்ணாக மாறி விடமுடிகிறது;
பெண் ஆணாக மாறிவிட முடிகிறது.

பெண்ணாகப் பிறந்து பெண்ணாகவே மாறிப்
பெண்ணாகவே பெருமையுடன் வாழ்ந்தால்,
பெரும்பண்பு படைத்திருந்தால்
பெண்ணைப் பிற்போக்கானவள் என்கிறார்கள்.
அவளின் சுவரொட்டியில் சாணம் வீசுகிறார்கள்.
பேனாவில் சாணத்தை ஊற்றிப் பத்திரிக்கையில் மெழுகுகிறார்கள்.
அதற்குப் பெயர் பெண்ணியம் என்கிறார்கள்.
விசாரித்த போதுதான் அறிந்தேன்,
பெருஞானப் பிரபுக்களாம் அவர்கள்.
அவர்களுக்கு சாணம் குதப்பித் தரும் குடுக்கைகள் ஆயிரம்.

பெண்ணாகப் பிறந்து பெண்ணாக மாறாவிடில்,
பெண்ணைத் தேவடியாள் என்று சொல்கிறார்கள்.
தேவர் அடி ஆள்களை, தேவடியாள்களாக ஆக்கிக்
காண்பித்திருக்கும் இந்தக் குமுகத்தில்,
நல்ல தேவடியாள் கெட்டத் தேவடியாள்
என்று இரு வகை வேறு உண்டு.
நாயாய்ப் பிறந்தாலும் தெருநாய் வேறு,
தேரில் போகும் நாய் வேறு அல்லவா! அது போல.

பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறுவதற்குப் பயம்.
முற்போக்கு பேசும் பிற்போக்குவாதிகளும்,
பிற்போக்குப் புரியாத முற்போக்குவாதிகளுக்கும்
இடையே கிடந்து நான் காணாமல் போய்விடுவேன்.

பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறாமல் இருப்பதற்கும் பயம்.
தெருநாயாய்ப் போவேனா அல்லது
தேரில் போவேனா என்று முடிவாகத் தெரியவில்லை.

பெண்ணாய்ப் பிறந்த எனக்கு ஆணாய் மாறிவிட பயமில்லை.
ஆனால், அருவெறுப்பு.
ஆணாய்ப் பிறந்தவன் ஆணாய் மாறாமல் கிடக்கையில்,
அவர்களிடையே நானும் ஒருவனாய் அல்லல்பட எனக்கு ஆசையில்லை.

பாரதி என்று ஒருவன் இருந்தான்.
காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்டான்.
பத்துப் பதினைந்து தென்னை மரம் கேட்டான்.
பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்றும் கேட்டான்.
அண்மையில் பயணித்த போது,
அவனை ஒரு மிகப் பெரிய படமாக்கி
சாலைச் சந்தி ஓரம் வைத்திருந்தார்கள்.
அற்புதமான படம். மகிழ்ந்து போனேன்.
பக்கத்தில் "காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்"
என்ற அவன் கவிதை வரியைத் தீட்டி வைத்திருந்தார்கள்.
மேலும் மகிழ்ந்தேன்.
பாலோடு தேன் கலந்தாற்போல மனதில் மகிழ்ச்சி.

மேலும் படித்தேன்.
இடைவெளி விட்டு சற்றுக் கீழே,
"வீடு மனை வாங்க விற்க அணுகவும்" என்று எழுதி முகவரியும்

எழுதியிருந்தார்கள்.

வீடு, மனை வாங்கி விற்கும் விளம்பரத்திற்குô
பாரதியும் பாரதியின் தமிழும் பயன்பட்டிருக்கின்றன
என்று எண்ணியபோது ஏனோ
பாலோடு தேன் கலந்த அதில் சிறிது
சயனைடும் கலந்தாற்போன்ற உணர்வு.

பாரதியின் பத்துப் பதினைந்து மரங்களில் ஒன்றாக மாறலாமா,
அல்லது பத்தினிப் பெண்ணாக மாறலாமா!
ஏதோ ஒன்றாய் மாறிவிட பேதைப் பெண் நான் துடிக்கின்றேன்.
மனிதத்தின் கழுத்து என்றும் அறுபட்டுக் கொண்டே இருக்கும்.

ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்
மாறிவிட முடிகின்ற உலகத்தில் மரமாய் மாறிவிட்டால்தான் என்ன?

பெண்ணாய்ப் பிறந்த நான் சிந்தித்தபோது,
மரமாய் மாறிவிட எடுத்த அந்த அற்புதமான முடிவு,
எனக்கு வெளிக்குள் வெளிகடப்பதைப் போன்ற உணர்வை,
குழிக்குள் குனிந்தென்னை ஊன்றிக் கொண்டபோது ஏற்படுத்தியது.
மனிதரை விட உயரமாகப் போகிறேன்!
முடிவொன்றை நிகழ்த்தியதில் மகிழ்ச்சிதான் எனக்கு!

முழுமையும் மரமாக மாறிவிட்டேன்.
ஒரு கன்று மரமாகத் தற்போது நிற்கிறேன்.
மரத்தின் அழகில் மகிழ்ந்து யாரோ குடம் தண்ணீர் விட்டது
மட்டும் ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகியும் என் நினவில் இருக்கிறது.

என்னைப் பல மாக்களின் மண்டைகளுக்கு உவமையாக்கி
என் இனத்திற்கு இழிவு தேடித் தந்தவர்களை
என்னால் இன்று மன்னிக்க முடிகிறது!

என் மயிர்களின் முடிகள் வேர்களாய் ஆழமாய்
அடியைத் தேடித் தேடிச் சென்றகாலங்கள் இனிமையானவை!

என் கால்கள், வளர்ந்து வளர்ந்து
உயரே, உயரே!
கிளைகளாய், கொம்பாய்!
வான் தழுவி நிற்கிறேன்.
ஆம், என்னிடம் கதை பேசிய எறும்புகள்
அப்படித்தான் சொல்லின!
மனிதனும் அப்படித்தான் சொல்கிறான்.

வான் உயர நிற்கிறேன் என்று
மனிதனும் சொல்கிறான்! எறும்பும் சொல்கிறது!

அன்னை பூமியின் அடிவயிற்றில்
அள்ளி அள்ளி உண்டதெல்லாம்
பாலாய்த் தேனாய்ப் பாகாய் இனித்தன.

உண்டு விட்ட மீதத்தை விட்டெறிந்த போது,
அது, காயாகக் கனியாக
இலையாகத் தழையாகப்
பூவாகத் தேனாக,
புவிமாந்தர் நாவிற்கு உணவானது!

செவியற்றப் புவிமாந்தர் பலரின் புகலிடமே நானாக இருந்தேன்.

விட்டெறிந்தது போதாது என்று,
இறைவனுக்கு நான் பெற்றுத் தந்ததையும்
பற்றிச் சென்ற கள்ளர் குழாம் மிகப் பெரியது!

சற்றே வியர்த்த போதெல்லாம்,
நான் கேட்காமலே,
என்னருகே நின்ற மரங்களெல்லாம்
எனக்கு வீசிவிட்ட அந்த உறவு உயர்ந்தது!

பக்கத்து மரத்திற்கு வியர்க்குமோ என்று
என்னையும் அறியாமல் நான் வீசிவிட்ட
அந்தத் தருணங்கள் எனக்கு உயர்ந்தன!

நாய்கள் சில அடிக்கடி என்னருகில் வந்து நீர் பெய்யும்!
மனிதர்களும் சில நேரங்களில் அப்படிச் செய்வார்கள்.

ஒவ்வொரு கனியையும் காயையும்,
மலரையும் இலையையும் மனிதன் கொய்த போது
பேறுகாலப் பெண்ணின் துன்பமாய் என்னை வாட்டியது உண்மை!

அடுத்த நாளிலேயே அவனை மன்னித்து விட்டபோது
நான் மேலும் உயர்ந்தேன் என்பதும் உண்மை.

சுவையான உணவை புவிஅன்னை அளிக்கிறாள்.
எனக்குச் சரவலே இல்லை.

நான் பேசுவதேயில்லை.
உறுதியாக அன்னை நிலத்தைப் பற்றி நிற்கிறேன்.

என் வாய் பேசுவதேயில்லை என்பதால்,
நான் உளறுவதும் இல்லை.

இந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன.
அதற்கொரு பற்றில்லை.
பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.
வேளைக்கொன்று கிளக்கின்றன.
பெரும்பாலும் உளறல்கள்.
இவர்களின் வாய்களில் துர்நாற்றம் வீசுகின்றதாம்.
ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,
இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே எபப்டி?

எனது தலை நிலத்தில், நிலவடியில்;
கால்கள் மேலே! வாய் இருப்பது தலையுள்ள இடத்தில்தானே!
நேரே நிற்கின்றேன் நான்.

இந்த மனிதர்களின் தலைகள் வானத்தில்!
கால்களில் மண்ணில்.

எப்படியிருக்கிறது? தலைகீழாக இவர்கள் வாழவேண்டும் என்று
ஆண்டவன் இவர்களுக்கு சாபமிட்டிருக்கிறான் போல!

இவர்கள் தலைகீழாக நிற்பதால்,
இறைவனையும் தலைகீழாக அமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் எல்லாமே தலைகீழ்!

ஒருவருக்கொருவர் பொல்லாதவர் என்று சொல்லிக்கொள்ளும்
புரட்சிக்காரர்கள் இந்த மனிதர்கள்! அதற்கு அறிவு என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

எங்கேயோ,
எனக்கு எட்டாத தூரத்தில்,
பல காதங்களுக்கு அப்பால்,
இருந்த மரங்களை யெல்லாம்
வெட்டி விட்டார்களாம் பல ஆண்டுகளாய்.
யாரோ பேசிக் கொண்டது எனக்கும் கேட்டது.

தேனீக்கள் எனக்கு எழுதரிய இன்பம் அளித்தன!

பறவைகள் என் பாதங்கள் பற்றி வாழ்ந்தன!
அங்கே அவைகள் மாட மாளிகைகள் கட்டி வாழ்ந்தன!

தினம் என்றன் சீரடிகளுக்கும்
திருப்பள்ளி எழுச்சி பாடிய அந்தப் பறவைகள்,
இன்றைக்கு என்னைக் கடந்து போகையில்
திரும்பிப் பார்க்கவும் மறந்து விடுகின்றன.
சிலவற்றின் பார்வையிலே பரிவில்லை!
பலவற்றில் பரிகாசம் நிரம்பியிருக்கின்றது.

போன புயல் சாய்த்த இரு கிளைகள் பேரிடி எனக்கு.
அதற்குப் பின்னும் தழைத்தபோது,
கிளைக்க முடியவில்லை நிறைய!

வயதாகினது எனக்குத் தெரிகிறது.

பூத்தபோது பூக்கள் குறைவே சில வருடங்களாய்.

வடுக்கும் போதே வீழ்ந்த காய்கள் வெம்பிக்கிடக்கின்றன
என்னைச் சுற்றி.

தப்பிக் கனிந்த கனிகள் சிலவே அதனால்
பறவைகள் வருவதும் குறைவே.

பற்பல ஆண்டுகளுக்கு முன்னால்
ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டது
என் நினவில் இருக்கிறது.

அவன் உயிரோடு இருந்த போது ஒரு
குட்டி நாய் கூட அவனைக் கண்டு மிரளாது.

அவன் செத்துப் போனதன் பின்னர்
அவனின் ஆவி சுற்றுவதாக
இந்த மனிதர்கள் சுற்றிக் கொண்டு திரிந்தார்கள்.

அந்த ஆவி சுற்றலில் பயந்து போய்த் திரிந்தார்கள்.
என் நிழலுக்கு அவர்கள் அண்டுவதே இல்லை.

"உள்ளூர்க்காரனுக்கு மரத்தைக் கண்டால் பயம்;
அசலூர்க்காரனுக்கு ஆற்றைக் கண்டால் பயம்"
என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல, அசலூர்க்காரர்கள்
யாராவது எப்பொழுதாவது என்னடியில் சற்று இளைப்பாறுவார்கள்.

சில ஆண்டுகளுக்குப்பின் மேலும் சிலர்
தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப்போனார்கள் கூட்டமாக.

இவர்களின் ஆவிக்கு மனிதர்கள் பயப்படவில்லை.
பயம் போய்விட்டதோ? அப்படித்தான் எண்ணினேன்!

மெல்லத்தான் புரிந்தது!
அவர்கள் பஞ்சம் பசி பட்டினியால்
தூக்குப்போட்டுக் கொண்ட விவசாயிகள்!

பட்டினியால் சாகும் உழவன்/ஏழையின்
பேய்க்கு யாரும் பயப்படுவதேயில்லை!

என் மர மண்டைக்கு ஏதோ உரைக்கின்றது.

உழவன் என்னைப் போல பல
பயிர்களையும் மரங்களையும் வளர்க்கின்றான்.
அதனால் அவன் மேல் எனக்குப் பாசம் அதிகம்.

ஆனால், மனிதக் குமுகத்தில்
அவன் வாழ்ந்தாலும் சரி மறைந்தாலும் சரி
அது ஒரு விசயமே இல்லை!

மேலும் மேலும் இப்பொழுதெல்லாம்
அடிக்கடி யாராவது வந்து தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.

என் பெயர் கெட்டுப் போனது; போகிறது!
என் நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தைத் தருகிறது.
பசுமையான காலங்கள் போய், ஊரும் நானும் மெல்ல
மெல்லக் காய்ந்து, காய்ந்து, சற்றே தீய்ந்தும் போவதாய் உணர்வு.

இப்பொழுதெல்லாம்
எப்பொழுதாவது சில இலைகள் முளைக்கின்றன.

நட்ட மரத்திற்கு
மொட்டை மரம் என்று பெயர் வைக்கிறார்கள்.

என் நெஞ்சு அடைக்கிறது!
குரல் கம்முகிறது!

ஆறுதலுக்காக,
அவ்வப்போது தள்ளித் தள்ளி நிற்கின்ற ஒரு சில மரங்கள்
காற்று வீசிக் களைப்பைக் குறைக்கின்றன.

வேர்கள் முட்டி மோதிப் பார்த்தும்
நீரைக் குடிக்க முடியவில்லை.
நீரிருந்தால் தானே!?

ஒவ்வொரு மதியமும் என் வேர்களைக் கொல்கின்றன.

ஒரே நேரத்தில் என் வேர்களுக்கெல்லாம்
தீ வைத்தாற்போன்ற வேதனை.

ஒவ்வொரு நாளும்! விடாமல்
என்னை யாரோக் கொல்கிறார்கள்!

தினமும் மதியத்தில்!

மீண்டும் மீண்டும் கொல்கிறார்கள்!!
இன்னும் நான் சாகவில்லை!

ஒரே நாளில் என்னைக் கொல்ல முடியவில்லை அவர்களால்!
நான்யார்? என் வரலாறு எத்தனை?

அதனால்தான், தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறார்களோ?

தள்ளாமையில் எனது கர்வம்!

எனக்குப் புரியவில்லை.
பூமியிலும் நீரில்லை!
அண்டை அயலில் மரங்களையும் காணவில்லை.

என் கழுத்து இறுகுகிறது போன்ற வேதனை.
மெல்ல மேலே பார்க்கிறேன்.
சுத்தமாக மொட்டையாகி குட்டையாய்த் தெரிகிறேன்.
மொட்டைக் கிளைஒன்றின் ஒரு பகுதியில் உளுத்துக் கொட்டுகிறது.

பறவைகள் மறந்து விட்டன!
பாம்பு கூட வருவதில்லை.
எல்லோருக்கும் ஏதோ புரிகிறது.

வெப்பம் என்னைக் கொல்கிறது!
அன்னை மடி வற்றி விட்டது!

தற்போது தூக்குப் போட்டுக்கொள்ளக் கூட
யாரும் வருவதில்லை!

மங்கையாக இருந்திருந்தால்
ஒரு நாள் மட்டுமே மஞ்சள் பறிபோயிருக்கும்.
எனக்கு ஒவ்வொரு நாளும் என் பச்சை பறி போகிறது!

பக்கத்து மரங்கள் பலவற்றையும் - "வந்தார்கள் வெட்டினார்கள்
கொன்றார்கள்"!. நான் தினம் தினம் காய்கிறேன்!
எனக்குப் புரியவில்லை.

ஆணி வேரின் அடிப்பகுதி வரை ஏறத்தாழக்
காய்ந்து விட்டது. அதன் முகப்பு
மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.
இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை?

இன்று கடுமையான மழை!
காற்றும் கூடவே அடிக்கிறது.
நிலத்துக்கு நிம்மதி! குடிகளுக்கு கும்மாளம்.

இதோ நான் பிழைத்துக் கொள்வேன்
என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
நிலத்துக்குக் கொஞ்சம் நிம்மதி!
குடிகளுக்குக் கும்மாளம்.

தண்ணீர் ஊறுகிறது; நிறைய நிறைய!
வேர்களுக்கு விழிப்பு வருகிறது. ஆயினும்
குட்டம் வந்த உடலைப் போல அவை குறுகிப்போயிருக்கின்றனவே!

காய்ந்து போன வேர்கள் அழுக ஆரம்பிக்கின்றன. ஓ...!

கொஞ்ச நஞ்சம் பச்சை இருந்த வேர்கள் மட்டும்
சற்றே முக்கி முனகுகின்றன. நம்பிக்கைக்கு மட்டும் குறைவேயில்லை.

வீசும் காற்றுக்கு நான் பிழைத்துக் கொள்வேன் என்று ஆனந்தம்!
மழை நின்றும் அது மட்டும் வீசி வீசி மகிழ்கிறது.

எனது மகிழ்ச்சியை அது அறிந்து கொண்டதால் எனக்கும் மகிழ்ச்சியே!

ஆயினும், என் இதயம் கடுமையாக வலிக்கிறது!
காற்றே கொஞ்சம் நிற்க மாட்டாயா? என் கெஞ்சல்
அதன் காதுகளில் விழவியேயில்லை.

மேலும் மேலும் ஊய் ஊய் என்று!

வலுவிழந்து போயிருந்த இடுப்பெனக்கு இப்போது வலிக்கிறது.
என்பால் கொண்ட அன்பில் காற்றுக் கூத்தாடுகிறது!

நிறுத்தச் சொல்லி என் எஞ்சிய சக்தியெல்லாம் கூட்டி
ஓ என்று ஓசையிடுகிறேன்!

அது இடுப்போடு நான் முறிந்து வீழ்ந்த ஓசையாகிப் போனது!!

காற்று மட்டும் மகிழ்ச்சி குறையாமல் இன்னும் வேகமாக வீசிக்

கொண்டேயிருக்கிறது.

தற்போது எனக்கு எல்லாமே புரியவில்லை!

அன்புடன்
நயனி.
08/யூலை/06

6 comments:

murali said...

அற்புதம்....அற்புதம்
பிறர் சாபத்தால் கல்லாகிப் போனவள் கதை கேட்டதுண்டு.
தான் விரும்பி மரமாகிப் போன கதை
ரசித்தேன் இன்று.
நான் எனது வாழ்வில் நிறைய மரத்தோடு தோழமை கொண்டதுண்டு.
அவை அனைத்தயும் நினைக்க தூன்டிய பதிவு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Anonymous said...

//மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு!
இந்த மயிரளவு மொழி எனக்கு விளங்கவில்லை. //

அட...!

//நாயாய்ப் பிறந்தாலும் தெருநாய் வேறு,
தேரில் போகும் நாய் வேறு அல்லவா! //

:-) போற போக்கில் பெண்களின் வாழ்க்கை குழப்பங்களையும் ஒரு தட்டு தட்டிடீங்க!

//உண்டு விட்ட மீதத்தை விட்டெறிந்த போது,
அது, காயாகக் கனியாக
இலையாகத் தழையாகப்
பூவாகத் தேனாக,
புவிமாந்தர் நாவிற்கு உணவானது! //

அழகான வார்த்தைப் உபயோகங்கள்!


//இவர்கள் தலைகீழாக நிற்பதால்,
இறைவனையும் தலைகீழாக அமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் எல்லாமே தலைகீழ்!//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை! இக்கரைக்கு அக்கரை பச்சை!?


//பட்டினியால் சாகும் உழவன்/ஏழையின்
பேய்க்கு யாரும் பயப்படுவதேயில்லை!//

..

//அது இடுப்போடு நான் முறிந்து வீழ்ந்த ஓசையாகிப் போனது!!//

மிக மிக அருமை..!


---

வாழ்த்துக்கள்..! மரணம் என்றவுடன் மனிதர்களை மட்டுமே அல்லாமல் மரத்தின் பார்வையில் துவக்கம் முதல் மரணம் வரை சிந்தித்திருக்கிறீர்கள்.

குறைகள்...நீளம் அதிகம், முழுமையாக உட்கார்ந்து படிப்பது பலருக்கு திணரும். எத்தனையோ விடயங்களைத் தொட்டுப் பறக்கிறது எழுத்துக்கள். அதனால்தானோ என்னவோ பதிய மறுக்கிறது.


போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ilavanji said...

நயனி,

மீண்டும் ஒருமுறை பொறுமையாக படிக்கவேண்டும்போல் தோன்றுகிறது...மீண்டும் படிக்கையில் வேறொரு கோணத்தில் வேறொரு பொருள் கிடைக்கலாம்!

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!

nayanan said...

அன்பின் முரளிதரன்,

தங்கள் இடுகைக்கும், வாழ்த்துக்கும்
மிக்க நன்றி.
பயிர் பச்சைகள் மரங்களோடு தோழமை கொள்வது உயர்ந்த பண்பு.

அன்புடன்
நயனி

nayanan said...

அன்பின் இளவஞ்சி அவர்களுக்கும்,
பெயர் சொல்லாதவர்க்கும்
என் அன்பு கலந்த நன்றிகள்.

தங்கள் கருத்து சரியே. சற்று நீளம் என்பதை உணர்கிறேன்.

அன்புடன்
நயனி.

ILA (a) இளா said...

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!
மரணத்திற்கான எனது கவிதை