Pages

Sunday, January 21, 2018

ஆண்டாள் - மடல் 2: மரபின் திரிவும் திரிவின் விளைவும்.


மால் நெறியினரின் நாலாயிரத்தின் தொகுப்பிற்கும், சிவநெறியினரின் தேவாரத்தொகுப்பிற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

தேவாரம், அதன் முதலிகள் யாத்தவாறே, தலவரிசையாக அல்லது பண்/யாப்பு வரிசையாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். முதலியின் வரலாற்றை, சிறப்புகளை சுருக்கமாக நூன்முகப்பு தாங்கியிருப்பதை காணமுடியும். சில பதிப்புகளில் முதலிகளை போற்றியோ, அல்லது சைவத்தை போற்றியோ ஓரிரு பாடல்கள் தமிழில் இருக்கும். ஆனால், நாலாயிர நூல்களை காணும்போது, தமிழிலும் சமற்கிருதத்திலும் யாக்கப்பட்ட பாடல்கள் சிலவற்றை தனியன்களாக ஆழ்வார்களின் பாடல்களுக்கு முன்னர் வைத்திருப்பர். தனியன்கள் என்பன, பாயிரம் போன்றவை என்று சொல்லத்தக்கன. பாடல்களை யாத்தவரையோ பாடல்களின் பயனையோ பாராட்டி அந்த தனியன்கள் எழுதப்பட்டிருக்கும்.

ஆழ்வார்கள் எழுதிய செந்தமிழ்களை, முதன்முதலில் சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தனியன்கள் அணிந்துரைக்கும். அதாவது முதலில் வடமரபோடு இணைக்கப்படும். பின்னர் தமிழ்த்தனியன்கள் வியந்து போற்றும்.

சிவன்கோயிலில், இறைவனின் பெயர், ஏறத்தாழ முழுமையாக சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.  மூவர் முதலிகளின் பதிகங்களை படிக்கும்போது அதில் குறிப்பிட்டிருக்கும் இறைவனின் தமிழ்ப்பெயருக்கும், பாடப்பட்ட  கோயிலின் இறைவனின் தற்போதைய சமற்கிருதப்பெயருக்கும் எந்தத்தொடர்பும் இருக்காது. காட்டாக, ஆனைக்கா அண்ணல் என்று சம்பந்தரின் பதிகம் இசைக்கும். ஆனால், சம்புகேசுரர் என்பது வழக்கில் இருக்கும். பதிகத்தின் தமிழ்மரபுக்கும் இன்றைய வழக்கிற்கும் தொடர்பறுவது காண்க. திரிபின் விளைவு இப்படித்தான் இருக்கும். சிவப்பதிகத்திற்கும் தலத்திற்குமே தொடர்பு நீங்கிவிடுகிறதென்றால், அவற்றை ஆக்கிய அந்த செந்தமிழ்மரபை, செந்தமிழ் முதலிகளை எப்படி பேணியவர்களாவோம்? அதுபோலவே மாலவன் கோயில்களிலும், குறிப்பாக திவ்விய தேசம் என்று சொல்லப்படும் கோயில்களில் பலவற்றில் இறைவன் - இறைவி பெயர்கள் அமுதம் போன்ற தமிழ்ப்பெயர்களில் இருந்தாலும், பலவற்றில் பிறமொழிப்பெயர்களில் இருப்பதை காணமுடியும்.

"இந்தத்திரிவுகள் ஏற்பட்டது எந்த நாளோ அந்த நாளிலிருந்தே செந்தமிழ் முதலிகளான தேவாரத்தை தந்த நாயன்மார்களுக்கும், நாலாயிரத்தை தந்த ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கும் இம்மண்ணில் புறக்கணிப்பு தொடங்கிவிட்டது."

வரலாற்றின் முக்கிய மைற்கல்லான அந்த 7, 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மரபின் திரிவே இல்லையா என்று சிலர் கேட்கலாம். இருந்திருக்கின்றன; ஆனால், அந்த இரு நூற்றாண்டில் மறுமலர்ந்த தமிழின் அளவு கடல்போன்றது. அந்தத்தமிழ் ஆட்சியரசிலையே திருப்பிப்போட்டது. அதற்குப்பின் அப்படியொரு செந்தமிழ் மலர்ச்சியை இன்றுவரை தமிழகம் காணவில்லை. ஆகவே, அப்படியான மலர்ச்சி, பெரிய அளவில் சிதைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் போனதை அளவீடாக கொள்தல் எளிதும் தேவையுமாகும்.

தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்திகளும், ஆழ்வார்களில் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களும், தமது பதிகத்தை முடித்து, கடைசிப்பாட்டில் (கடைக்காப்பு) தமது செந்தமிழை இறைவர்க்கு படைத்ததால் வந்த பெருமிதத்தோடு, "இந்த பத்துத்தமிழ்களை படித்தாயென்றால் நீ நல்லாயிருப்பப்பா" என்று ஆணையிட்டும், அன்போடும் அருளிய அந்த அழகை படிக்கும் ஒவ்வொருவரும் கிறங்கிப்போவது இயல்பு. தமிழில் கரைந்து போவதும் இயல்பு.

"....வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் 
விட்டுசித்தன் சொன்னமாலை பத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்கு ஆளர் தாமே"..... பெரியாழ்வார்

"நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு  அருவினை அறுதல் ஆணையே"...... ஞானசம்பந்தர்

இன்றைக்கெல்லாம், "தமிழில் பேசுவது அவமானமல்ல - அடையாளம்" என்று பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கையில், தமிழை பெருமிதத்தோடு அன்று ஓதி, அனைவரும் ஓதத்தந்த தமிழ் ஞானமரபுதான் நாயன்மார்களும் ஆழ்வார்களும். அத்தகைய தமிழ்மரபு வீரமரபுமாகும். தமிழை பெருமிதத்தோடு மக்களிடையே மறுமலர்ச்சி செய்த அந்த மரபு சிதைக்கப்பட்டு, கோயிலில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டது.

மாலவன் கோயில்களிலேனும் சிறிது தமிழுக்கு இடமுண்டு. தாயார் கோயிலிலும், மாலவன் கோயிலிலும் ஒருசில பிரபந்தப்பாடல்களையாவது சன்னதியில் பாடுவோர் உண்டு. ஆனால், சிவன் கோயில்களிலும், புகழ்பெற்ற முருகன் கோயில்களிலும், சன்னதியில் முழுமையாக தமிழ்  புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, என்று சொல்லும் அளவிற்கு அவமானப்படுத்தப்படுகிறது.

மாணிக்கவாசகர் இயற்றியிருந்தாலும், தில்லை நடராசரே தன்கைப்பட எழுதியதுதான் திருவாசகம் என்று புகழப்படும் திருவாசகத்தையும் தேவாரத்தையும் தில்லை சிற்றம்பலத்தில் பாடமுடியாது. நடராசருக்கு 20-25 அடி தொலைவில் பள்ளத்தில் நின்றுதான் பாடமுடியும்.

பிற்காலத்தில் தோன்றிய சத்தி இலக்கியத்தில் தலைசிறந்தது அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி. அந்தப்பாடல்களை அண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் பாடமுடியாது. காலபூசையை வடமொழியில் 20 நிமிடங்கள் செய்துவிட்டு, கடைசியாக "தனந்தரும் கல்விதரும்..." என்ற அந்த ஒரு பாடலை மட்டும் சன்னதியை விட்டு வெளியே வந்து, தனது தலையை சுவற்றில் வைத்து மறைத்துக்கொண்டு ஒரு சிவாச்சாரியார் பாடுவார்; அல்ல அந்த தமிழ் சிவாச்சாரியாரை பாட வெளியே அனுப்புவார்கள். பாடுபவர் தமிழ் சிவாச்சாரியார் என்பது நன்றாகத்தெரியும். ஆனால் அவரை வெளியே விரட்டி பாடச்சொல்கிற அதிகாரம் எது? என்பதை இதுவரை யாரும் அறியமுற்பட்டதில்லை.

தமிழ்க்கடவுள் முருகன் என்று வானளாவ புகழும் தமிழ்நாட்டில், (சிவனும் மாலும் எங்கோ ஆர்க்கிடிக்கில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் பிதற்றுவர். அப்பிதற்றலை விடுக), அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைகறை பூசை நடக்கிறது;  வடமறை ஓதும் வேதவிற்பன்னர்கள் சுமார் 10 பேர் நின்று ஓதுகிறார்கள். 15-20 நிமிடம் கழித்து வெளிப்புறத்தை நோக்கி கைகாட்டுகிறார்கள். வெளியே எனக்கு இடப்புறம் முருகனின் மேல் பார்வை பட்டுவிடாமல் ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்த ஓதுவார் திடீரென பாடுகிறார் -  "ஆடும் பரிவேல் அணிசேவலென...." . ஒரு நிமிடம் அவர் பாடி முடிப்பதற்காக உள்ளே சன்னதியில் பூசை காத்துக்கொண்டிருக்கவில்லை.

(தில்லையிலும் அண்ணாமலையிலும் நான் சொன்னது உண்மைதானா என்று அறிய விரும்புபவர்கள் அங்கு உச்சிகால பூசைக்கு போய்வருக. செந்தூர் பற்றியறிய வைகறையில் செல்க.)

இதுபோன்ற காட்சிகளை திருக்கழுக்குன்றத்திலும் வேறு இடங்களிலும் நேரடியாக பார்த்து மனம் குமுறியவன் நான். அதன் வலியை யாரறிவார்? ஞானசம்பந்தர் தொடங்கி பாம்பன் சுவாமிகள் வரை 1300 ஆண்டுகளில் யாக்கப்பட்ட பல்லாயிரந்தமிழும் சன்னதிக்கல்ல - வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் மட்டும்தான் என்று எண்ணும்போது வருகின்ற வலியை துடைப்பவர் இங்கு யார்? கச்சேரியில் கூட இம்மி, சல்லி, தம்பிடி என்ற அளவே தமிழிசை இருக்கின்றன என்ற உண்மையை அறியாதவர் உளரோ? எம்.எசு.சுப்புலட்சுமி, உன்னிகிருட்டிணன், நித்தியசிரீ, இளையராசா போன்றவர்கள் ஒன்றிரண்டு பாடுவதற்கு மட்டும்தான், தமிழ் ஞானமரபு, பாடல்களை படைத்ததா?

சன்னதியில் எது பாடப்படுகிறது என்பதைவிட, எது புறக்கணிக்கப்படுகிறது, எது அவமானப்படுகிறது என்று புரிந்து கொள்ள முயலுகையில், எத்தனை பேருக்கு வலிக்கிறதோ அத்தனை பேரால் மட்டுமே இந்தத்திரிவில் இருந்து தமிழ்மரபை மீட்கமுடியும்.

எனக்கு வலிக்கின்றது.

தமிழர்களின் மெய்யியல் என்பது முன்னோர் வழிபாடு மட்டுமே என்றும், குலதெய்வ, ஊர்த்தெய்வ வழிபாடுகள் என்ற எல்லாமே அவ்வழி மட்டுமே என்று சொல்பவர்கள், அக்கோயில்களில் தமிழ் வழிபாட்டையும் வழிபாட்டு முறையையும் வைத்திருக்கின்றனரா? எங்கோ ஒன்றுமிரண்டுமாக நான் படித்த நினைவுண்டு. மற்றபடி எல்லாமே மௌனமாக மணியடிப்பது மட்டும்தான்.

கருப்பண்ணசாமி என்ற தமிழ்த்தெய்வம் பெரிய, சிறிய என்பதுபோன்ற முன்னொட்டுகள், பின்னொட்டுகளோடு கூடிய மெல்லிய வேறுபாட்டில்  குத்துமதிப்பாக 400க்கும் மேற்பட்டு இருக்கின்றன. அத்தனை சாமிக்கும் ஏதும் தமிழ் வழிபாடு, வழிபாட்டு முறை இருக்கின்றனவா? ஆனால், கடந்த சில வருடங்களில் இத்தனை சாமிக்கும் சமற்கிருத வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவும் கண்ணுக்கு முன்னால் நடக்கும் மரபின் திரிவு.

"முதலிலே, தமிழ் மெய்யியல் மரபு தமிழை மீட்டெடுத்த அந்த 7,8ஆம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி சிதைக்கப்பட்டு தமிழ் திரிந்தது. அடுத்ததாக கோயில்களில் இறைவன் பெயர்கள் திரிந்தன. பின்னர் இறைவன் சன்னதியில் இருந்து தமிழ் துரத்தப்பட்டது. மெய்யியலின் பெருநெறிகளைத்தொடர்ந்து, குலதெய்வ அல்லது குலநெறியும் இன்று திரிவுறுகிறது." 

இன்னார் மட்டுமே திரித்தார் என்று ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே எத்தனை நாளைக்கு பேசிக்கொண்டிருப்போம்? அப்படியே என்றாலும், இன்னாரைத்தவிர மற்ற எல்லாரும் அதிலிருந்து தமிழை மீட்டார்கள் என்ற  செய்தியை தர தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் இல்லை இன்றைய அளவில். பேசிக்கொண்டே இருப்பது சரியா அல்லது செயற்படுவது சரியா?

சரியாக சொல்ல முற்பட்டால், 800 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் தமிழரசு இல்லை என்பதும், கடந்த 50-60 ஆண்டு அரசியலுக்கு தமிழர் மெய்யியல் இலக்கியங்களின் மேல் சிறிதும் அக்கறை இல்லை என்பதும், தமிழர் அதை விடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே நாத்திக மெய்மரபு பேசுகிறது.

இந்த நிலையில், ஆண்டாள் மீது வைரமுத்து தொடுத்த வருணனை என்பது மரபுத்திரிவின் மற்றொரு கோடி. இதனை தமிழ் ஆராய்ச்சி மரபு என்றெல்லாம் சொல்வது இட்டுக்கட்டி பேசுவது ஆகும்.

தமிழகத்தின் நாத்திக மெய்மரபும் தொன்மையானதே. ஆனால், இன்றைய காலத்தைப்போல அது அரசியலில் ஆட்சி செலுத்திய காட்சிகளை வரலாற்றில் காணமுடியவில்லை.

மேலும், கடவுள் மறுப்பு என்று வரும்போது, தமிழர்களின் சில வகுப்பாரை மட்டும் ஒடுக்கிவைத்ததால், அவர்களால் பேசப்பட்ட நாத்திகத்தை, பிறர் பேசும் நாத்திகத்தோடு சம அளவில் வைத்துப்பேசுவதே படுபாவம். ஒடுக்கப்பட்டவர்கள் பேசிய நாத்திகம், அடிவாங்கின வலியில் வந்த ஓலம்; ஆனால் பிறவகுப்பார் பேசிய நாத்திகம் அப்படியில்லை; அதை சொல்லால் குறித்தால் நன்றாக இருக்காது. மாறாக, ஒரு ஒப்பீட்டில் கோடிட்டு காட்டுவது சரியாக இருக்கும்.

"கடவுளாவது ஒன்னாவது! - வெட்டுடா அவனை" என்று சொல்லும் வெட்டுநரின் கடவுள் மறுப்புக்கும், "கடவுள் இருந்திருந்தால் என்னை காப்பாற்றியிருப்பான்" - என்று வெட்டுப்பட்டு கையறு நிலையில் அழுபவன் பேசும் கடவுள் மறுப்புக்கும் இருக்கின்ற வேறுபாடுதான் அந்த நாத்திக வேறுபாடு. இவ்வேறுபாடு இன்றும் வாட்டுகிற சூழல், தமிழும் மரபும் பெருமளவு திரிந்திருக்கிற சூழல் என்று சொல்ல வேண்டியதில்லை.

63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தில்லையில் கோயிலுக்குள் புக முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வாசலில் கொளுத்தப்பட்டார் என்பது வரலாறு சொல்லும் உண்மை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், திரைப்படங்களும் எழுத்தாளர்களும் காட்டுவது போல, நந்தனார் ஒன்றுமறியா ஏமாளியாகவோ, கோழையாகவோ  இருந்தவரல்ல. அதற்கு தீண்டாமை காரணமல்ல. தமிழ்மரபு சிதைக்கப்பட்ட போது, தமிழ் மறுக்கப்பட்டபோது, பிறமரபுகள் தமிழ்க்கோயிலை கைப்பற்றியபோது கிளர்ந்தெழுந்து தில்லையை மீட்க போராடிய போராளி அவர். அவரைப்பிடித்து கொளுத்திவிட்ட போதும், தீயினால் உடல் வேகின்ற அப்போதும் எதிரிகளை மீறி கோயிலுக்குள் ஓடி சன்னதியின் முன்பு விழுந்து வெற்றியோடு உயிர்நீத்த மாபெரும் தமிழ்ப்போராளிதான் நந்தனார். பெரியபுராணத்தில் சேக்கிழாரின் திருநாளைப்போவார் புராணத்தை கூர்ந்து படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

அதற்கு சுமார் 1 நூற்றாண்டு முன்பு, இந்தக்கிளர்வுக்கு வித்தான ஞானசம்பந்தர் தனது 16 வயதுக்குள் அவர் யாத்த செந்தமிழ்ப்பாடல்களில், சுமார் 4200 இன்றைக்கும் தேவாரமாய் நிலைத்திருக்கின்றன. (16000 பாடல்களை யாத்தார் என்று சொல்லும் நூற்குறிப்புகள் உண்டு). அவரும் அப்பரடிகளும் உருவாக்கிய தமிழ் மலர்ச்சி, கிளர்ச்சியாய் பல்லவ பாண்டிய பேரரசுகளை தமிழ்வழிக்கு திருப்பியது. அப்பேர்ப்பட்ட சம்பந்தருக்கும், அரசினரொடு மக்களின் ஆதரவை பெற்றிருந்த அந்த மாபெரும் அந்தண அடிகளாருக்கும் நந்தனாருக்கு ஏற்பட்ட அதே முடிவுதான் ஏற்பட்டது.  இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளை தேடவிரும்புவோர், கருவூர்த்தேவர் எப்படி முத்தியடைந்தார் என்று தேடுதலும் அவசியம். அந்தணரான ஞானசம்பந்தரும், இன்று ஒடுக்கப்பட்டிருக்கும் குலத்தை சேர்ந்த அன்றைய நந்தனாரும் ஒரே காரணத்திற்காக, தமிழிற்காக போராடினார்கள் என்பது உண்மைதானே? ஒரே மாதிரியான முடிவைத்தான் அவர்கள் அடைந்தார்கள். இவர்களின் முடிவுக்கு புறமரபுதான் காரணம். ஒருவரின் மறைவை துயரமானதாக இன்று பேசுகையில், இன்னொன்றை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழ்மரபின் சிதைவுதானே? திரிவுதானே?

மேலும், 13 நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் மெய்யியல் மரபு கிளர்ந்தெழுந்தபோதே இப்பெரிய வன்முறைகளை தமிழுக்கெதிரானவர்கள், தமிழ்மரபை வளரவிடாமல் தடுத்த புறமரபினர் செய்தார்கள் என்பதையும், இன்றைக்கு தமிழ்மரபு விழிப்படையும் நிலையில், மிகக்கொடூரமாக நாக்கை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்று வெறியோடு எழுந்து இந்தித்துவ மரபை இந்துமரபாக கட்டியமைக்க துடிக்கிறார்கள் என்பதும் ஒப்புநோக்கத்தக்கனதானே? 

தமிழகத்தின் நாத்திக மெய்மரபு 1949ல் திராவிட அரசியலாக மாறியபின்னர், அது பெரிய உளவியல் முரணை ஏற்படுத்தியது. பொதுக்களத்திற்கு வந்தால் கோயில், இறை ஆகியவற்றின்பால் எள்ளலை உருவாக்கிவிட்டது. அது ஒரு வித கூச்சத்தை புழக்கத்தில்  விட்டது. இந்த எள்ளல் உளவியலில் உருவானதுதான் வைரமுத்தின் கட்டுரை. தமிழக அரசியலால் தமிழர்களின் மெய்யியல் தேவைகளை நிறைவாக செய்யமுடியாததற்கு இதுவே காரணம்.

"ஒருபுறம், வடமரபு இந்தித்துவ அரசியல் செய்யும் நா.க.மூ.க (நா.க.மூ.க = நாக்கு  மூக்கு கழுத்துவெட்டி கட்சி) தான் வெறுக்கும் தமிழுக்கு, தானழித்த தமிழுக்கு உரிமையாளர்கள் போல நடித்து வாளை சுழற்றும் சூழலுக்கும், மறுபுறம் அவர்களை எதிர்ப்பதுபோல எதிர்த்து, தமிழில் உள்ள எல்லா மெய்ஞான இலக்கியங்களையும் ஆரியம் என்று சொல்லி அவர்களிடமே தூக்கித்தரும் திராவிட அரசியலுக்கும் இடையே கிடந்து தமிழின் எல்லாமே நொறுங்கி நாசமாகிப்போகின்றன" என்ற புரிதலை, அந்த ஆண்டாள் தமிழர்களுக்கு தந்திருக்கிறாள் இப்போது என்பது புன்னைகையோடு வரவேற்கத்தக்கது.

எல்லாம் நொறுங்குதல் என்றால் என்ன? மெய்யியல் மரபு, சமஉரிமை, தன்மானம், தமிழ் மொழி, தமிழர் ஒற்றுமை, பெருமிதம், இன உணர்வு என்ற எல்லாமே இன்று சிதைந்தும் திரிந்தும்தானே போயிருக்கின்றன? ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முட்டுக்கொடுத்து எத்தனை நாள் வாழ்ந்துவிடமுடியும்?

இந்தித்துவத்திற்கு எதிர்ப்பு தமிழ்த்துவத்தில் இருந்துதான் பிறக்கமுடியுமே தவிர, நாத்திகத்துவத்தில் பிறக்கமுடியவில்லை என்று உணர்த்தியதுதான் ஆண்டாள் காட்டிய தெளிவு. தமிழ்த்துவமே நாத்திகந்தான் என்று காட்டமுனைந்து இழந்துபோவதைவிட, தமிழ்த்துவத்தை அனைத்து துறைகளிலும் மீட்டெடுக்கும் அரசியல்தான் சரியான ஆயுதமாக இருக்கும்.

தொன்மமான நாத்தீக கோட்பாடுகளும் இயக்கங்களாக செயல்படுவதில் பிரச்சினையேயில்லை. அதில் பலனிருந்தால் அது குமுகத்தை சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், எப்படி "ஆன்மீக அரசியல்" என்ற ஒன்று ஆபத்தானதாக கருதப்படுகிறதோ, அதேபோல முழுமையான "நாத்தீக அரசியல்" என்ற ஒன்றும் தமிழ்க்குமுகத்துக்கு ஆபத்தானதுதான். இரண்டுமே சமகேடுடையவை என்பதை எடுத்துக்காட்டத்தான் வைரமுத்து அந்தக்கட்டுரையை எழுதினார் போலும்!?

அந்தக்கட்டுரை தமிழர் அரசியலுக்கு பொருந்தாத இரண்டு முரணரசியலின் போதாமையை வெளிக்கொணர்ந்திருக்கிறது. உள்ளே கிடந்து தவிக்கும் பெரிய தமிழ்க்குடியின் இயலாமையையும்  வெளிக்கொணர்ந்திருக்கிறது.

வைரமுத்தின் அந்த முரண்பாட்டு எழுத்துகளையும், அந்தத்திரிவின் கோணங்களையும், அவரின் கட்டுரைப்பிழைகளையும் அடுத்த மடலில் அமைதியாக ஆயமுடியும் என்ற நம்பிக்கையில் இம்மடல் இதற்கு முந்தியகால திரிவுகளையும் திரிவுகளின் விளைவுகளையும் பார்வைக்கும் நினைவுக்கும் வைக்க முனைந்திருக்கிறது.

மேலும், "அன்றைய காலச்சூழல்" என்று சொல்லாட்சி நிரம்பி வழியும் இந்த வேளையில் நான் அன்றைய காலச்சூழலையும் தொடர்ச்சியையும் சற்று தொட்டுக்காட்டவேண்டியது கடமையல்லவா?

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
21/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/1.html

No comments: